Thursday, December 31, 2009

2010 புத்தாண்டு வாழ்த்துகளும் பலனும்...


இந்த டி.வி.காரங்க சுத்த மோசம். ஓர வஞ்சனை பண்ணுவாங்க. அதென்னங்க தமிழ் புத்தாண்டுன்னா மட்டும் பஞ்சாங்க பலன், பல்லி விழுந்த பலன், புத்தாண்டு பலன்னு ராசிக்கல்லு மோதிரம் கட்டை விரலுக்கு கூட போட்டுகிட்டு ஒரு சேனல் விடாம ஜோசியம் சொல்றானுங்க. ஆங்கிலப் புத்தாண்டு மட்டும் என்னா பண்ணிச்சி. அதான் நம்ம சேனல்ல நான் சொல்லிக்கிறேன். ராசிக்கல்லு மோதிரமெல்லாம் இல்லிங்கோ.
"பாரப்பா போன‌த‌ப்பா ஒன்ப‌தாண்டு
ப‌டுத்தும‌ப்பா வ‌ர‌ப்போற‌ ப‌த்தாமாண்டு
சூதான‌மா இருந்தாலே சுக‌ம்தான‌ப்பா
சுருட்டன்னே எத்த‌னை பேர் இருக்கான‌ப்பா
"


குடும்ப‌ஸ்த‌ சித்த‌ர் 250 வ‌ருச‌த்துக்கு முன்னாடி எழுதி வெச்ச‌ பாட்டு

பொதுப்பலன்
: சந்திர கிரகணம் வேற வரதால ஒரு கட்டிங்குக்கு பேஸ்மென்ட் வீக்காற கேஸெல்லாம் உசாரா இருக்கணும். வைகுண்ட ஏகாதசி வந்துட்டதால, கிரகணத்துனால கோவில் தொறக்காட்டியும் வருமானத்துக்கு குறையில்லை. முன்ன பின்ன அட்ஜஸ்ட் பண்ணி கலக்ஷன் கட்டலாம். அவங்க அவங்க கட்டம் சரியா இருந்தா இருக்குற ஏரியாக்கு ஏத்தபடி புது வருச கலெக்‌ஷன் சிறப்பா இருக்கும்.

பதினோரு மணிக்கு மேல வெளிய போகாம இருக்கிறது நல்லது. அப்புடியே போறதுன்னாலும் அவுங்கவுங்க வீட்டில ஒரு நாலு ரவுண்டு நடந்து தள்ளாடாம இருக்கிறமான்னு முடிவு பண்ணிக்கணும். வழக்கத்த விட அதிகமா பேஸ்ட் வச்சி எகிறுல ரத்தம் வந்தாலும் பரவால்லன்னு தேய்ச்சி, குடல கழுவிட்டு போறது நல்லது. இல்லைன்னா ஊதுறப்ப நாறி அந்த கடுப்பில ஜட்டியோட உக்கார வேண்டிய அபாயம் ஏற்படலாம்.

ச்ச்ச்சும்மா டமாசுக்குன்னு சுத்த போறதுன்னாலும் சட்ட பாக்கட்ல ஒரு 50ரூ வெச்சிகிட்டு போறது நல்லது. வாச்சு, மோதிரம், மைனர் செயினு, ப்ரேஸ்லெட்லாம் அவிழ்த்து வெச்சிட்டு போறது உத்தமம். அந்த 50ரூ உங்க செலவுக்கு இல்லைங்கறத மறக்காம இருக்கணும். வழியில மறிச்சி என்ன வெச்சிருக்க எடுன்னு கேக்குறப்ப ஒன்னுமில்லாட்டி, நீயெல்லாம் ஏன்டா வெளிய சுத்துறன்னு கீறாம இருக்குறதுக்கு.

5ரூபாய்க்கு ஆட்டுகால் சூப்பு, கோழிக்கால் சூப்பு, நூடில்சுன்னு முளைக்கிற கடையில ராத்திரி குளிருக்குன்னு ஒரு கட்டு கட்டாத இருந்தா ஆரோக்கிய விரயத்துல இருந்து தப்பலாம். வைகுண்ட ஏகாதசி, கிரகணம்னு விக்காத போன அயிட்டம்லாம் வெந்தப்புறம் தெரியாதுன்னு கலப்படம் நடக்கலாம்.

செல்ஃபோன் வெச்சிருக்கிறவங்க எல்லாம் உசாரா இருக்கணும். குறுந்தகவல் கணக்கில்லாம அனுப்பிட்டு வட போச்சேன்னு அழுது புண்ணியமில்லை. முகம் தெரியாத ஆளுங்க கிட்டல்லாம் யேப்பி ந்யூ இயர்ன்னு கை நீட்ட வேணாம். முக்கியமா பெண்கள் உசாரா இருக்கணும். போன வருசம் நடந்ததெல்லாம் நினைவில இருக்கணும்.

கர்ம பலன்:
விலை வாசி பிச்சிகிட்டு ஏறும். அனியாயத்துக்கு லாபமடிக்க பாக்குறானுங்கன்னு புலம்பிக்கிட்டே எல்லாம் வாங்கணும். வயத்த கட்டி வாய கட்டி சேர்த்து வச்ச காசெல்லாம் ரூ 50000 3 வருசத்துக்கு கட்டினா போதும். மாசா மாசம் 10000ரூக்கு போஸ்ட் பேய்ட் செக் குடுத்துடுவோம்னு சொல்ற கம்பெனில போடுறது, 1.5 லட்ச ரூ காந்த சக்தி பெட் வாங்கினா கான்ஸர் கூட காணாம போயிடும், 80 வயசானாலும் அதுல படுத்தா ஆந்திரா கவர்னர் மாதிரி உற்சாகம் வரும்னு எல்லாம் ஏமாறாம உசாரா இருக்கணும். சேர்த்து வச்ச காசெல்லாம் கொட்டிக் கொடுக்கன்னே தி.நகர்ல இருக்கிற கடைகள மறக்காம இருக்கணும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: எப்பவும் போல இந்த வருடமும் ஆடித் தள்ளுபடி, பொங்கல் சிறப்புத் தள்ளுபடி, அட்சய த்ருதியை, ரம்பா துவாதசின்னு புதுசு புதுசா வர செலவினங்களுக்கு சிக்கனமா சேர்த்து வைங்க. இல்லாட்டி துப்பு கெட்ட மனுசான்னு தங்கமணி துப்பறத தாங்க வேண்டி வரலாம். பக்கத்து வீட்ல எல்லாம் ப்ளாஸ்மா டிவி இருக்கு நம்ம வீட்டில எல்சிடி டிவி கூட இல்லன்னா எப்படின்னு புதுப் பிரச்சன வரலாம். ஒன்னாந்தேதி ஸ்பூன் கூட வாங்கலைன்னா குடும்பம் விளங்காதுன்னு புதுவருசத்தன்னிக்கு திட்டு வாங்காம உசாரா இருக்கப் பாருங்க. நிஜம்மாவே காசில்லைன்னா யாருக்கும் தெரியாம வெங்காயத்த நறுக்கி கம்முகட்டுக்குள்ள வெச்சிகிட்டு ஜுரம் வந்தா மாதிரி அனத்திக்கிட்டு படுத்து கிடக்கிறது நல்லது.

மாணவர்களுக்கு:
ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா கொண்டாடுறேன்னு முதல் நாளே போலீஸ் ஸ்டேஷன் போகிற துர்பலன் சம்பவிக்கலாம். கட்டம் சரியில்லாதவங்களுக்கு கதிர் இடுகையில எழுதினா மாதிரி கபால மோட்சம், குறிப்பா பெண்களுக்கு ஈவ் டீசிங் போன்ற கண்டங்கள் இருக்கிறதால ஊட்டோட இருக்கிறது நல்லது.

பெண்களுக்கு:
போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல. வெந்தது வேகாததுனு எதப்போட்டாலும் முனகினா அந்த சீரியல்ல கதாநாயகிக்கு அவ மாமியார் நாய் சாப்பிட்டு மிச்சம் வச்ச சோத்த போடுது. நான் அப்படியான்னா மொத்த குடும்பத்தாரின் அன்புக்கும் பாத்திரமாய்டுவீங்க. என்னதான் புருசன்காரன் இடுக்கி வச்சாலும் சிறுவாடு சேர்த்து, மப்பில வரப்ப மிச்சம் மீதி லவட்டி தேவையில்லாத பொருளெல்லாம் வாங்க நல்ல வாய்ப்பாக அமையும். கிரகங்கள் உச்சத்தில இருக்கிறவங்களுக்கு அக்கம் பக்கத்துல சீட்டு கட்டி அவன் எஸ்ஸாகி அய்யோ போச்சேன்னு வழக்கு சம்பந்தமா பிரச்சனை உருவாகலாம்.

வியாபாரிகளுக்கு:
அமோகமான வருசமா அமையும். நீங்க வச்சதுதான் விலைங்கறதால 15ரூபாய்க்கு அரிசிய வித்துட்டு அதே விவசாயி 50ரூக்கு உங்க கிட்ட வாங்குவாரு. கலப்பட பொருள் வியாபாரம் அமோகமா இருக்கும். புதுசு புதுசா உடனடி உணவு எல்லாம் வர சாத்தியமிருப்பதால அரிசி, பருப்பு வியாபாரம் கொஞ்சம் தடுமாறலாம். வீட்டுக்கு தேவையில்லாத எலக்ட்ரானிக் சாமான் விக்கிறவங்களுக்கு அமோகமான வருசமா இது அமையும். செல்ஃபோன், கம்ப்யூட்டர் வியாபாரிகளுக்கு புது புது வெளிநாட்டுல விக்காம போன அயிட்டமெல்லாம் குவியுங்கறதால கொள்ளை லாபம் அடிக்கலாம். கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சா வரி கட்டுறதில இருந்து தப்பிக்கலாம்.

மருத்துவர்களுக்கு:
புதுசு புதுசா நோய் உண்டாகும். இல்லாட்டியும் பழைய நோவுக்கே புது பேரு வச்சிடலாம். பரிசோதனைக் கூடத்தோட மருத்துவ மனை இருக்கிற வைத்தியருக்கு விபரீத ரோக யோகத்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இந்த வருஷத்துக்குள்ளயே 3 மாடி கட்டலாம். தாது புஷ்டி லேகியம் விக்கிற வைத்தியர்கள் உசாரா இருக்கணும். மருந்து கடைக்காரர்களுக்கும் செல்வம் கொழிக்கும் வருடமாக இது அமையும்.

அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு:
வாரிசுங்க‌ளுக்கு வ‌ழிகாட்டும் வ‌ருச‌மா அமையும். முன்னைய‌ விட‌ அதிக‌மா கொள்ளைய‌டிக்க‌ வேண்டி வ‌ர‌லாம். தேர்த‌ல் விர‌ய‌ம் அதிக‌மாகும். ஜ‌ன்ம‌ஸ்தான‌த்துல‌ ம‌ர‌ணாதிப‌தி இருந்தால் ஒதுங்கி இருக்கிற‌து ந‌ல்ல‌து. போட்ட‌ காசு தேத்துமுன்ன‌ இடைத் தேர்த‌ல் வ‌ர‌லாம். க‌ள‌த்திர‌ ஸ்தான‌ம் வீக்கா இருக்கிறவங்க‌ டி.வி.டி. டி.வில‌ வ‌ந்து ப‌த‌வி ப‌றிபோக‌லாம். குறிப்பா ந‌டிப்புத் துறையில‌ இருக்கிற‌வ‌ங்க‌ள‌ ச‌ந்திக்கிற‌ப்ப‌ பீச், பார்க்குன்னு பொது இட‌த்தில‌ ச‌ந்திக்கிற‌து ந‌ல்ல‌து.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்:
எல்லா நாட்களும் எல்லா மாசமும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வண்ணங்கள்: காக்கி, கருநீலம், வெள்ளை, சிவப்பு
ராசிக்க‌ல்:பொங்'க‌ல்'

மேலே குறிப்பிட்டுள்ள‌வை பொதுப்ப‌ல‌ன்தான். அவ‌ர் அவ‌ர் ஜாத‌க‌த்தில் கிர‌க‌ங்க‌ளின் இட‌த்துக்கேற்ப‌ கூட‌வோ குறைய‌வோ ப‌ல‌ன்க‌ள் உண்டாகும். வ‌ந்த‌து வ‌ர‌ட்டும் விதின்னு இருக்கப் பாருங்க‌. க‌ண்ட‌ விள‌ம்ப‌ர‌ம் பார்த்து 3 கேள்விக்கு 1000ரூனு போய் ஏமாறாதீங்க‌.


எல்லோருக்கும் மேற்ப‌டி ச‌ங்க‌ட‌ங்க‌ள் அற்ற‌ இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக‌ள்.


Wednesday, December 30, 2009

செவிக்குணவில்லாத போது..

சமிபத்திய பெருமழையில் வழமை போலவே இட்டு நிரப்பிய தார் ரோடு  பிச்சிக்கிட்டு போக, கரண்டி சைசில இருந்து பெருங்குழி வரைக்கும் ரகம் ரகமான பள்ளங்கள் வீதியெங்கும். மண்ணு, சவுடுன்னு கொட்டி நிரப்பி, பெட்ஷீட் கனத்துக்கு ஒரு ரோடு போட்டு முடியற வரைக்கும் பிசியோ தெராபிஸ்டுங்களுக்கு கொள்ளை லாபம். (ஆமாம் இந்த ரோடு போடுற கான்ட்ராக்டருக்கு, பிசியோ தெராபி, டயர்கம்பனி காரங்களெல்லாம் கட்டிங் குடுக்கிறதா ஒரு குருவி சொல்லுச்சே, அது நிஜமா நிஜாம்?)

இந்த அழகுல டூ வீலர்ல போறவங்க அதும் டிஸ்க் ப்ரேக் வச்சிருக்கிற பைக் மாப்பிள்ளைங்க பண்ற அழிம்பு இருக்கே சொல்லி மாளாது. பத்து மீட்டர் வீதி சுத்தமா காலியா இருந்தா போதும், விட்டு ஒரு தூக்கு தூக்குவாங்க. ஸ்பூன் சைஸ்ல ஒரு குழி வந்துச்சோ, அடிப்பாரு ஒரு ப்ரேக். விளம்பரத்துல வரா மாதிரி சும்மா கச்சுன்னு நிப்பாட்டி அப்புடி 2 இன்ச் முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிக்காட்டிட்டு ஒரு சின்ன ட்விஸ்ட் குடுத்துட்டு கேப்ல பறந்துடுவாரு.

இவரு பின்னாடி வந்த டிவிஎஸ் 50 கேசு தரைல கெடக்கும்,இல்லாட்டி ஆட்டோ மேல கார் முட்டிக்கிட்டு நிக்கும். இந்த சனியன் போறாதுன்னு என்னமோ இன்டர்நேஷனல் கான்ட்ராக்ட் போய்டுங்கற மாதிரி காதில ஹெட்ஃபோன், ஹெல்மெட்குள்ள செல்ஃபோன்னு அந்த ராவடி வேற.

போன வாரம் ஒரு பொண்ணு ஸ்கூட்டில சேத்து தண்ணில ரேஸ் போச்சு. கடந்து போகையில பார்த்தா காதில வேறுகிரக பொண்ணு மாதிரி பெரிய வண்டு சைஸ்ல ஒரு ப்ளூடூத். அம்முணி ஒரு கட் அடிச்சி ஒரு பெரிய குழில விட்டு ஏத்தினதில ப்ளூடூத் தெரிச்சி விழுந்திடுச்சு. பின்னாடி வந்த பைக் ஏறி நொறுங்கியும் போச்சு.

அந்தம்மணி தீடீர்னு ப்ரேக் அடிச்சதில பின்னாடி வந்த ஆட்டோக்காரரும் மயிரிழையில் ப்ரேக் போட வேண்டியதா போச்சு. ஆனால் ஆட்டோவைத் தொடர்ந்த ஒரு மாருதி இடிச்சதுல ஆட்டோ குலுங்கி ஒரு அடி முன்ன போக, ஸ்டேன்ட் போட்டுக் கொண்டிருந்த ஸ்கூடி பிச்சிகிட்டு அப்போது தான் கடந்த சைக்கிள் காரரை முட்டித் தள்ளிடுச்சு.

பப்பரப்பேன்னு கெடக்கற அவன கவனிக்கல, ஆட்டோ போச்சேன்னு பின்னாடி பார்த்துட்டிருக்கற அட்டோக்காரர கவனிக்கல, ஹெட்லைட் நொறுங்கிப் போன கார் ட்ரைவர கவனக்கல அந்தம்மணி. பாய்ஞ்சி, என்னமோ சூப்பர்மேன் மாதிரி பைக்காரன் வண்டிய புடிச்சிகிட்டு, இடியட்! கண்ணு தெரியாதா உனக்குன்னு ப்ளூடூத்துக்கு கத்தினப்ப அப்பலாம் போல வந்தது.

பீ பீன்னு ஊதிக்கிட்டு வந்துட்டாரு கலெக்டரு. அட நம்ம ட்ராஃபிக் போலீசுங்க. முட்டி பேந்த சைக்கிள் காரன், நெளிஞ்சி போன சைக்கிள நொண்டிகிட்டு தள்ளிகிட்டு போய் ஓரம் நிக்க, சொட்டையான ஆட்டோக்காரரும், கார் காரரும் பட்டிமன்றம் வைக்க, மறிச்சி கட்டிகிட்டு தமிழ், இங்கிலீசுன்னு ஒருத்தர் பொறப்ப மத்தவருன்னு அசிங்கமா அலசி ஆராய்ஞ்சிட்டிருந்த இதுங்க கிட்ட வந்தாரு.

மொத பிட்டு, ஏய் மிஸ்டர் எதுனாலும் இறங்கி நின்னு பேசுய்யா! வண்டிய விட்டு இறங்க மாட்டீங்களோன்னு  சொல்லிட்டு அம்மணிய பார்த்து ஒரு லுக்கு. அப்புறம், சித்தப்பா மாதிரி என்னாச்சிம்மான்னு பாசமா ஒரு கேள்வி. அம்முணி சொல்லுது ரேஷா ஒட்டிட்டு வந்து ப்ளூடூத்த நொறுக்கிட்டானாம்.

இன்னோரு பைக்கில இருந்த ஆளு திடீர்னு இந்தம்மா ப்ரேக் போட்டாங்க அது தெறிச்சி விழ, அடுத்த நொடியில ப்ரேக் அடிச்சும் இப்படி ஆய்டுத்துன்னு சொன்னா, அந்தம்மா கண்ணுல கொலவெறியோட யூ ஷட்டப்புங்குது. எங்க வட போய்டுமோன்னு போலீசுகாரரு, யோவ்! நாந்தான் கேட்டுட்டிருக்கேன்ல நீ போய் அந்த ஓரம் நில்லு வரேன்னு மிரட்ட, கிடைச்ச கேப்ல அந்தாளு விசுக்குன்னு ஓட்டிட்டு போய்ட்டாரு.

சரி சரி, வண்டிய ஓரம் கட்டுங்கன்னு (ரெண்டு பக்கமும் தேத்ததான்)வழி பண்ணி குடுக்க நம்ம பொழப்ப பார்க்க கிளம்பிட்டம் அங்க இருந்து. எத்தன செய்தி வந்தாலும், இந்த வண்டியோட்டுறப்ப, ட்ராக் தாண்டி போறப்ப, வீதிய கடக்குறப்ப கூட பேசுறது,பாட்டு கேக்குறது தப்பாது. அதும் ஹெல்மட் போட்டா பின்னாடி, அக்கம் பக்கதுல வர வண்டியோட ஹார்ன் சத்தம் கேக்கறதே கஷ்டம் இதில அதுக்குள்ள விட்டு, ஹெட்ஃபோன் வேற மாட்டிக்கிட்டு வண்டியோட்டுறது.

சில பன்னாடைங்க ஹெட்ஃபோன் மாட்டாம, ஹெல்மட் சரியா கட்டாம, அதுக்குள்ள அலைபேசிய சொருகிக்கிட்டு பேசிக்கிட்டே சர்க்கஸ் காட்டுவானுங்க. போற போக்கு பார்த்தா இன்னும் பத்து வருசத்துல பல் மருத்துவமனை மாதிரி, காதுக்குன்னு தனியா மருத்துவமனை கட்டணும் போல அரசாங்கம். அதான் சாப்பாடு இருக்கோ இல்லையோ சைனீஸ் செல்ஃபோனாவது இருக்கே நம்மாளுங்க கிட்ட. நாசமா போங்கடே!

Tuesday, December 29, 2009

ஐஸ்க்ரீம் காதல்..

கட்டம் கட்டமான விதிபோல்
தொட்டியில் இரு மீன்கள்
காதல் கடலில் நீந்தி இருந்தன..
வலையென விதியால்
பெண் மீன் அடுத்த தொட்டி சேரும்வரை!

முட்டி மோதி அடையத் தவிக்கிறது ஆண் மீன்
துவண்டு, காணப் பொறாமல் முகம் தவிர்க்கிறது பெண் மீன்
தவிப்புத்  தாங்காமல் போடா என்கிறது ஆணை!
ஆணுக்குத் தெரியும் பெண் மீன் தொட்டியில் உப்புக் கரிப்பது!
பெண் மீன் அறியும் ஆண் மீன் தொட்டியில் நீர் மட்டம் உயர்வது!

இதோ நாளையே
வலை
விதி மாற்றும்
ஆணோ பெண்ணோ
மீண்டும் தன்னுடன் சேரும்!
தொட்டியே மீண்டும் கடலாய்! காதலால்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


  
சொன்னால் கேட்கிறாயா நீ
ரோஜாச் செடி அருகில் போகாதேயென்று!
இப்போது பார்! உன் உதட்டோடும்
கன்னத்தோடும் போட்டியிட்டு
இரண்டுமாய் குழம்புகிறது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 


நீயும் நானும் ஒரே ஐஸ்கிரீம் தானே வாங்கினோம்
என்னுடையது பாறையாயிருக்க
உன்னைப் பார்த்ததும் உன் ஐஸ்கிரீம்
எப்படி உருகி  தளர்ந்திருக்கிறது பார்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னோடு வெளியில் செல்லும் போதெல்லாம்
மனம் வேண்டும்..
திடீரென மழை பெய்யாதாவென!
சட்டென்று முந்தானை போர்த்து
அணைத்துச் செல்வாய் அல்லவா
யார் பார்த்தாலும் கவலையின்றி...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, December 27, 2009

அரேஞ்ட் லவ்வு!

(இன்று முதல் ஒரு வாரம் வலைச்சரம் ஆசிரியராகவும் இருக்கிறேன். அங்கயும் ஒரு லுக்கு விடுங்க மக்கா. டாங்க்ஸ்:)))
ஈரோடு பதிவர் சந்திப்புக்காக 20ம் திகதி காலை கோவை விரைவு வண்டியில் பதிவு செய்திருந்தேன். ஏ.சி. சேர்காரில் சன்னலோர இருக்கை என்பதே கொஞ்சம் நடுங்க வைத்தது என்றாலும், மார்கழிக் குளிரும், 3 பேர் இருக்கையில் சன்னலோரம் ஏ.சி. முழுதும் மேலடிக்கையில் அடிக்கடி டாய்லட் போக வேண்டிய அவஸ்தை வேறு இன்னும் படுத்தியது.

வண்டி கிளம்பியதும், எதிர் சீட் ஆட்கள் வரிசையாக சீட்டைச் சரித்ததும் 30 டிகிரி பாகையில் வளைந்து கழிப்பறை போவதென்பதே சர்கஸாயிற்றே என்ற கலக்கம் வேறு. மனுசனுக்கு கஷ்டம் சிங்கிளா வராது தானே. எனக்கும் வந்திச்சி. பக்கத்து சீட் பயணி மூலம்.

அய்யா, மலேசியா வழியா சிங்கப்பூர் போயிருக்கிறார். அங்கு லோக்கல் சிம் கார்ட் மாத்தினாராம். இங்கிருக்கும் கார்டுக்கு கால் டைவர்ட் போட்டாராம். இங்கு வந்த பிறகு அலைபேசியில் கால் டைவர்ட் எடுக்கலையாம். மச்சானுக்கு கால் போட்ட போது அந்தாளு கிழிச்சி தொங்கவிட்டு, உன் மனைவி அழுது தவிக்கிறார் என்ற போது தான் தெரிந்ததாம்.

பிடிச்சது போறாத காலம். காலை ஆறு மணிக்குள் எழுந்து ஓடி வண்டி பிடித்து விட்ட தூக்கத்தை தொடர வழியின்றி,  ங்கொய்யால எழுதி வெச்சது படிக்கிறா மாதிரி ஒரு வார்த்தை மாறாமல் ஒன்று இவர் பேசுவார். அல்லது வரும் அழைப்பில் சொல்லுவார்.

குளிர் ஒரு புறம், கொசுக்கடி(அய்யா ஃபோன் பேசுறதுதான்)ஒரு புறம் இருந்தாலும் எப்படியோ அரை மயக்கத்தில் தூங்கி வழிந்து, குளிரில் வடிவேலு ஆகாமல் இருக்க வேண்டி சர்க்கஸ் செய்த படி டாய்லட் போகின்றபோது பார்த்தால் திருவள்ளூர்.

அரை மயக்கத்திலேயே வந்து துண்டு எடுத்து போர்த்துக் கொண்டு கண் மூட, இத்தனை நேரம் கேட்டதில் அவரின் போன் பேச்சு தாலாட்டு மாதிரி பழகிவிட்டிருந்தது. அவரும் கண்மூட, ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது. அதற்கு அவசியமின்றி ஒரு அழைப்பு வர அவசரமின்றி அவர் ஆரம்பிக்க நான் அவசரமாய்த் தூங்கத் துவங்கினேன்.

திரும்பவும் வடிவேலு மணியடிக்க, விழித்த போது காட்பாடி நெருங்கிவிட்டிருந்தது. சர்வர் சுந்தரம் நாகேஷ் போல் சாய்ந்தபடியே கழிப்பறை சென்று திரும்ப, ஓர சீட்டில் ஒரு பெண். இது வேறயா என்றவாறே 26.5 பாகையில் எப்படியோ போய் சீட்டில் உட்கார்ந்தேன்.

அய்யாவை கூட்டிப்போக ஏற்பாட்டுக்கு அழைப்பு மாறி, அந்த விடயம் பரிமாறப்பட, அடுத்த தாலாட்டில் தூங்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் ஒரு மார்க்கமாகிப் போனேன். அப்புறம் ஆரம்பித்தது எனக்கு புது அனுபவம்.

அந்தப் பெண் தன்னுடைய அலைபேசியை எதிர் சீட் ட்ரே மீது வைக்க, ஐய்யா மாடல் பேர் சொல்லி நல்லா இருக்கா என்று முதல் பிட்ட போட்டாரு. அந்தம்முணி பரவாயில்லை என்று குறை நிறை சொல்ல, இப்போ புது மாடல்ல என்று ஆரம்பித்து தான் செல்ஃபோன் கடை ஒன்றும் வைத்திருப்பதை வெளியே விட்டார்.

கொஞ்ச நேரம் செல்ஃபோனைச் சுற்றிய அரட்டை மாறி, நீங்க இங்க படிக்கிறீங்களா என்ற ஒற்றை பிட்டில் ஆரம்பித்து, எந்த கோர்ஸ், என்ன பண்ணப் போகிறார், வாரா வாரம் போய் வருவாரா, விடுமுறையில் மட்டுமா?, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஹாஸ்டலில் இருந்தது முதல் அத்தனை விவரமும் வரவைத்து விட்டார்.

மெதுவாக தன் மனைவி எப்படி வீட்டுப் புறா, காலேஜ் போவதற்கே என்ன பாடு, திருமணம் முடித்து கரெஸில் பட்டப் படிப்பு முடித்தது எல்லாம் சத்தமாகக் கூறி, லவ் மேரேஜ்தாங்க என்றும் சொன்ன போது என்ன இது என்று தூக்கிப் போட்டது.

மேலதிகமாக, சொந்தம்தான், நம்ம ஜாதிதான். பார்க்கிறோம் இல்லிங்களா? வேற ஜாதின்னா குடும்பத்தில பிரச்சன, லவ் ஃபெயிலியூராயிடும். அதனால அதுல நான் தெளிவா இருந்தங்க. அந்தஸ்தும் ஒன்னும் குறையில்லங்க அதுனால பிரச்சனையில்லங்க என்று காதலுக்கு புது விளக்கமளித்தார்.

அடங்கொன்னியா! யாருன்னே தெரியாத பொண்ணுகிட்ட இப்புடியெல்லாமா பேசுவாங்க? ஏப்பா அந்த கட்டம் போட்ட கடுதாசி பிரச்சனயில்லையான்னு கேக்கணும் போல வந்திச்சி. மனசப் படிச்சவன் மாதிரி, நல்ல காலங்க அதுலயும் பிரச்சனயில்லைன்னு சொன்னதும் சிப்பு சிப்பா வந்தாலும் அமுக்கிட்டு இருந்தேன்.

அம்முணி சர்வ சாதாரணமா நானும் லவ் பண்றேன்னது ஒரு அதிர்ச்சின்னா, எனக்கும் தெரியுமுங்க இப்புடி வேற ஜாதின்னா தகறாரு, ஒறவுல அசிங்கம்னு. என் லவரும் நம்ம ஜாதிதான், வசதியானவங்கதான்னு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபர் கிட்ட விளக்கமா சொன்னது பேரதிர்ச்சி.


20-25 வருஷத்துக்கு முன்னாடி  ”கணக்கு பார்த்து காதல் வந்தது..கச்சிதமா ஜோடி சேர்ந்ததுன்னு ” கங்கை அமரன் எழுதுன பாட்டு கவனம் வந்திச்சி. இப்புடி லவ்வரதுதானா அது! வெவரமாத்தான்யா இருக்காங்க.

அதுக்குள்ள என்னாண்ணே எங்க இருக்கீங்க? காவேரி தாண்டியாச்சான்னு கதிர் கால் பண்ணவும், அய்யா! சாமி! நான் சர்க்கஸ் பண்ணி அங்கால போறேன்,கொஞ்சம் பைய குடுங்க சாமிகளான்னு நடைய கட்டி கதவண்டை போனேன்.

Saturday, December 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.9

நான்காம் கட்ட ஈழப்போரின்போது விடுதலைப்புலிகள் 5 கப்பல்கள் கொள்வனவாம்.

அந்த 10 விமான கதை என்னாச்சி. இப்போ கப்பலா? நல்ல பொழப்புடா உங்களது.
_________________________________________________________________________________________________________
செட்டிகுளம் தடுப்பு முகாமில் சிறீலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் 3 சிறுவர்கள் - 2 பெண்கள் படுகாயம்

மிஸ்டர் ஐ.நா. அண்ட் பிள்ளே! அடிச்சது லக்கி ப்ரைஸ். ரொம்ப நாளாச்சில்ல கோரிக்கை விட்டு. விடுங்க கவலை தெரிவித்து விள்ள்ள்ள்ள்ள்ள்ளக்கம் கேக்கலாம். தூ.
_________________________________________________________________________________________________________
பிரதிவாதிகளினால் தம்மீது பூசி வரும் சேற்றை சுமந்து கொண்டேனும், நாட்டைத் தூய்மைப்படுத்த தயார் என ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா

ஆமாம். இப்படி எதையாவது பூசினாலும் ரத்தக் கறை மறையுமா?
_________________________________________________________________________________________________________
போர்க் குற்றச் செயல்களில் எவரும் ஈடுபடவில்லை எனவும்,போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தாம் மன்னிப்பு வழங்கவும் தயாரில்லை எனவும் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

உனக்காவது புரியுதா? நீ லூசா நாங்க லூசா பன்னாடயே!
_________________________________________________________________________________________________________
தமிழ்மக்கள் "குழப்பம்" அடையத்தேவையில்லையாம்: இரா.சம்மந்தன்

அப்புறம் எப்படி குழம்பின குட்டைல மீன் புடிக்கறது! முதல்ல நீங்க தெளிவா இருக்கீங்களா? டீல் முடிஞ்சதா?
_________________________________________________________________________________________________________
இடம்பெயர்ந்த யாழ். குடாநாட்டு மக்களுக்கு பாவனைக்கு உதவாத அரிசி

இதுக்கே கோடி கோடியா தரானுங்களே!
_________________________________________________________________________________________________________
இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி

எந்த ஏரியா வித்தான் சப்ப!
_________________________________________________________________________________________________________
ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு பணிகளில் ஈடுபட இலங்கை அரசாங்கம் ஆட்சேபம்

இப்பவாச்சும் ஏண்டான்னு கேக்க மாட்டானுவளே. சுத்தி விட்ட கோழி மாதிரியே திரிவானுங்க.
_________________________________________________________________________________________________________
தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி

நடந்தப்புறம் கண்டனம் தெரிவிக்கப்படும். சுய விசாரணை குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்படும். டொட்டடொய்ங்.
_________________________________________________________________________________________________________
தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்!

எவன் சொன்னான். இந்தியாவையே ஆளலாம் மருத்துவரைய்யா! ஆசைக்கென்ன காசா பணமா?
_________________________________________________________________________________________________________
தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்னது வெளிநாட்டு அறிஞர்தான்: கலைஞர்

தமிழை செம்மொழியா வச்சிருக்கறதும் வெளி நாட்டு தமிழர்கள்தானே அய்யா?
_________________________________________________________________________________________________________
கிறிஸ்தவர்களைப் போல இஸ்லாமியர்கள் நடந்து கொள்ள வேண்டும்: இல.கணேசன்

அடுத்தவனுக்கு சொல்றதுன்னா அண்ணன் சண்டப் பிரசண்டன்.
_________________________________________________________________________________________________________
பாலியல் புகாரில் சிக்கிய ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வந்துடுச்சா. 87 வயசுல கஷ்டமாச்சே! தேவையா இதெல்லாம்?
_________________________________________________________________________________________________________
தெலுங்கானா எரியும்: சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

சாம்பல எடுத்து நெத்தில பூசிட்டு போவியா? இருக்கற வீட்டை எரிக்கிறதில என்னா திமிரு பாரு.
_________________________________________________________________________________________________________

Friday, December 25, 2009

கணக்கும் வழக்கும்

ஒரு கணக்கு:

2001ம் ஆண்டு கணக்குப் படி மத்திய அரசில் பெண் ஊழியர்கள் 40 லட்சம் பேர்.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பணி மூப்பு பெற்றோர், 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடையவர்கள், திருமணமாகாதவர்கள்,ஆகியோரை விடுத்து, புதிதாக பணி நியமனம் செய்யப் பட்டவர்களையும் விடுத்து வெறும் 40000 (1 சதவீதம்) பேர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுவோம்.

ஒரு கடை நிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ 10000. இதர வகுப்பில் உள்ள பெண் ஊழியரின் அதிகபட்ச  அடிப்படைச் சம்பளம் மட்டும் ரூ 37,000. படியுடன் சேர்த்து இது இரு மடங்காகும் எனினும் கணக்குக்காக இது ரூ 20000 என வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் ஊழியர் ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் செல்வார்களேயானால் அரசுக்கு வருடம் ஒன்றுக்கு செலவு ரூ 2.4 லட்சம். 40000 பேருக்கு 960 கோடி ரூபாய்.  இது போக மறைமுகமாக வரியிழப்பு 3 சதவீதம் என வைத்துக் கொண்டாலும் 1000 கோடி ரூபாய். படியுடன் சேர்ந்து இது குறைந்த பட்சம் 1250 கோடியாவது வரும்.

எதற்கு இப்படிப் புலம்பல் என சலிப்பவர்களுக்கு இதோ

ஒரு வழக்கு:

மேற்படித் தொகை பதினெட்டு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லாத பட்சத்தில், (சிக் லீவ் கணக்கில் வராது), குழந்தைப் பேறுக்கான ஆறு மாத முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மேலதிகமாக, தேவைப்படும் நேரமெல்லாம், குழந்தை வளர்ப்புக்கோ, அவர்கள் படிப்புக்கு உதவவவோ, அட ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போக என்றே வைத்துக் கொண்டாலும், அவர்கள் பணிக்காலத்தில் 730 நாட்கள் படியுடன் கூடிய முழுச்சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

ஆணோ பெண்ணோ அந்த ஊழியர், பணியில் எதிர் கொள்ளும் விபத்தில் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கோ அல்லது கோமாவிலோ கிடந்தாலும் 4 மாதங்களுக்கு மட்டுமே முழுச்சம்பளத்துடன் கூடிய விடுப்பு உண்டு.

விடுமுறையே எடுக்காமல், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வருடத்திற்கு 30 நாட்களை (Earned Leave) அதிகபட்சம் 300 நாட்கள் மட்டுமே சேமித்து பணி மூப்பின் போது சரண்டர் செய்து பணமாகப் பெறமுடியும்.

ஆனால் 2 குழந்தைகள் இருந்தால் போதும், முழுச்சம்பள விடுமுறையும் எடுத்துக் கொண்டால் போதும், 730 நாட்கள் சம்பளம் இனாம். இந்த விடுமுறை பணிக்காலமாக கணக்கிடப்பட்டு இன்கிரிமெண்ட், பென்ஷன் உட்பட எல்லா சலுகையும் உண்டு.

உலகில் வேறெந்த நாட்டிலாவது, குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் கூட இந்தச் சலுகை இருக்கிறதா? ஒரு ஒப்பீட்டில் பார்த்தால், சொந்த விடுமுறையை பார்த்து பார்த்து பயன் படுத்தியவர்கள், இந்த சட்டம் வந்த பிறகு முதலில் அதைத் தீர்த்து, இந்த விடுமுறைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

அதிலும், குழந்தைக்கு 16 வயதாகிவிட்டது. என் சலுகையை மறுக்க உங்களுக்கு என்ன அதிகாரம் என்று 2 வருடங்கள் விடுமுறை எடுக்கிறவர்களும் உண்டு. இல்லாவிடினும், மறுக்கும் பட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு உண்டாகும்.

குழந்தை நலனுக்கு என்று வைத்துக் கொண்டால், மனைவியை இழந்து மறுமணம் செய்யாத ஆணுக்கு இந்தச் சலுகை கிடையாதாம்!

வசதிக்கு வேலைக்கு வந்து, வேலைகளைத் தேக்கி வைத்து, அவசர வேலை இருக்கும் நேரம் அடாவடியாக விடுமுறை கோரி, மற்ற ஆண் பெண் ஊழியர் ஒத்துழைக்க மறுத்து அரசு இயந்திரத்தில் மேலதிக திறமையின்மையையும் இது உண்டாக்குகிறது.

தரமான கல்விச் சாலைகளில் படிக்க வாய்ப்பு, தரமான மருத்துவ மனைகளில் சிகிச்சை (இது ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்ட மருத்துவ மனைகளில் இருந்தாலும் கூட) என்ற சலுகையே போதுமே! இந்தியா போன்று ஒரு அடிப்படை கட்டமைப்புக்கே போதாக் குறையான ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் அவதிப்படும் நாட்டில், விவசாயம் பொய்த்து தற்கொலைக்கு வழிகோலும் நாட்டில், இப்படி ஒரு சாராருக்கு மட்டும் சலுகை வழங்கும் நிலையிலா இருக்கிறது நாடு?

பெரும்பாலும் மத்திய அரசு ஊதிய விகிதத்தையும் சலுகைகளையும் பின்பற்றும் மானிலங்களும் இதே சலுகையை வழங்குகின்றன. அந்தச் செலவுக்கு எங்கே போவார்கள்? வரி விதிப்புதானே? அதிகாலை கிளம்பி பொழுது சாய வீடு திரும்பும் சாமான்யனின் குழந்தைக்கு மதிய உணவு மட்டுமே (அதுவும் விடுமுறை நாளில் இருக்காது)தரும் அரசு, தன் ஊழியரில் ஒரு சாராருக்கு மட்டும் தாராளமாக சம்பளமும் தந்து இப்படி கொடையும் வேறு தருகின்றதே!

ங்கொய்யால. நாம் இருவர் நமக்கு ஒருவர்னு அங்கங்க சொல்லிக்கிட்டு இருக்கிறத அரசு ஊழியருக்கு மட்டும் ரெண்டுன்னு சொல்லிடுங்கய்யா!

Thursday, December 24, 2009

செத்தும்...உச்சி வெயில் போதில்
உருகும் தார்ச் சாலையில்
உருட்டித் தள்ளி
என் காலுக்கு லாடம்..

ஓரமாய் மர நிழலில்
ஊசியால் குத்துப் படும்
என் தாத்தனின்  தோல்
என் எஜமானனுக்கு செருப்பு..

செத்தும் கொடுத்தான்
எனப் பார் புகழ‌
நாங்களென்ன
மனிதர்களா?
***
தாரை, தப்பட்டை
போஸ்டர், சாராயம்
பூத்தேர், புதுப்புடவை

புதை குழியருகில்
பசியால் மரித்த பாட்டிக்கு
வாய் கொள்ளா அரிசி

துண்டு விரித்த காசில்
துக்கம் சுமந்த கூட்டமென்றறியாமல்
பாலூற்ற அழைக்கிறான்
புதைப்பவன் காசுக்காக..
*****

Wednesday, December 23, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.8

அரசியல் பிரிவு தலைவர்களை படைத்தரப்பு சுடவில்லையாம் - சவீந்திர சில்வா

பின்ன யாரு 'கருணை' காட்டினது இந்த மனிதாபிமான இழவில. நாய்ங்களா!
____________________________________________________________________________________________________________
கோகன்னாவே விடுதலைப்புலிகளின் தலைவர்களை வெள்ளைக்கொடியுடன் சரணடைய கூறியவர்: கொழும்பு ஊடகம்

மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சா? ஆடு அலறினா தெரிஞ்சிடும் யாருன்னு.
____________________________________________________________________________________________________________
படையினர் வெளிநாடு சென்றால் அங்கு கைது செய்யப்படும் ஆபத்து!அமைச்சர் ஜி.எல்.ப்ரீஸ்

யாருமே போடாம வலயம் விழுந்திடுச்சா? ரைட்டு. இப்படி பயந்தே சாவுங்க!
____________________________________________________________________________________________________________
அலரி மாளிகை விருந்துபசாரங்களுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது : மங்கள சமரவீர

அதிபர் நிவாரண நிதின்னு எழுதிடுவானுங்க.
____________________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளின் கப்பல் வலையமைப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன : சிங்கள ஊடகம்

எல்லாத்தையும் முடிச்சிட்டேன்னு அலட்டிட்டு என்னா வலையெல்லாம் பின்னுறானுங்க பரதேசிங்க.
____________________________________________________________________________________________________________
நிவாரணம் வழங்க வேண்டிய பணம் சூறையாடப்படுவதை தடுக்கும் நோக்கிலே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தேன் : சரத் பொன்சேகா

பங்கு கொடுக்காமல்னு சேர்த்துப் படிச்சிக்கணுமாய்யா?
____________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நாவின் கடிதத்தை அரசு பரிசீலனை

ம்கும். ஆமாங்க சாரின்னு சொல்லிடப் போறானுங்க.
____________________________________________________________________________________________________________
வவுனியா- யாழ்ப்பாணம் புகையிரத பாதையை புனரமைக்க ரூ2125 கோடி இந்தியா நிதியுதவி

ஏனுங். யாருமே இல்லாத ஊருக்கு யாருக்குங்க ரயிலுடப் போறீங்க. கம்பெனி வருதோ?
____________________________________________________________________________________________________________
தவறு செய்துவிட்டேன்: ராஜபக்சே புலம்பல்

உப்பு தின்னா தெரியாம தின்னுட்டேன்னா முடியுமா பிச்ச. தண்ணி குடிச்சிதான் ஆவணும்.
____________________________________________________________________________________________________________
கொழும்பு செல்லும் தமிழர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை: பாசில் ராஜபக்சே

ஆமாம். அப்போதானே தடயமே இல்லாம முடிச்சிடலாம். இவன் பாய்சன் ராஜபக்சே.
____________________________________________________________________________________________________________
கலைஞர் உழைப்புக்கு மக்கள் தந்த பரிசு: தங்கபாலு

ப‌ரிசுன்னாலும், விருதுன்னாலும் வாங்கீற‌லாம் போல‌யே.
____________________________________________________________________________________________________________
2011 தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி

எவ்ளோ ப‌ட்ஜெட்?
____________________________________________________________________________________________________________
தமிழகத்திற்கு மேலும் பல ரயில்வே பாதைகள்: மம்தா பானர்ஜிக்கு கலைஞர் வேண்டுகோள்

இருங்க‌. இல‌ங்கைல‌ முடிச்சிட்டு காசிருந்தா அறிவுப்பு வ‌ரும்.
____________________________________________________________________________________________________________
வாழ்வதற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் – நாமல் ராஜபக்ஷ

யார் வாழ‌! ங்கொய்யால‌.எத்த‌னைன்னு க‌ண‌க்கு கூட‌ இல்லாம‌ கொன்ன‌துக்கு பேரு வாழ‌ சுத‌ந்திர‌மாம்.
____________________________________________________________________________________________________________
என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை: கலைஞர்

அதுக்கொரு விருது பார்ஸேஏஏஏஏஏஏஏல்.
____________________________________________________________________________________________________________
டிவி நடிகையுடன் இருந்த கேரள மாநில காங். பொதுச்செயலாளருக்கு தர்ம அடி: விபச்சார வழக்கும் பதிவு

இளைஞ‌ர் அணிக்கு ஆள் சேர்க்க‌ பேசிட்டிருந்திருப்பாங்க‌ளோ?
____________________________________________________________________________________________________________

Tuesday, December 22, 2009

ஈரோடு பதிவர் சங்கமம்-சில ஒலித்தொகுப்புகள்.

சென்ற இடுகையில் நிகழ்ச்சிகளைக் குறித்து விரிவாக எழுதுவதாகக் கூறியிருந்தேன். தம்பி செந்தில் வேலன்,கார்த்திகைப் பாண்டியன், முனைவர் குணசீலன் ஆகியோர் மிகச் சிறப்பாகத் தன் வலைப்பூக்களில் தொகுத்துள்ளனர். அதைவிடச் சிறப்பாக கூற ஒன்றுமேயில்லை. எனவே, நிகழ்ச்சியின் நாயகர்களின் பேச்சை வழங்க விழைகிறேன்.

ஓரளவு கேட்கக்கூடிய அளவில் இருக்கிறது. அரங்கில் சில சலசலப்புக்கள் பேச்சையும் மீறி ஒலித்தமையால் நீக்கப் படவேண்டியதாயிற்று. குறையிருப்பினும், நேரிடையாக நாம் கேட்க முடிந்ததும் இப்படித்தான் என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சியே. 

திரு ஆரூரனின் வரவேற்புரை:     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திரு அகநாழிகை வாசுதேவன்:


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திரு பட்டர்ஃப்ளை சூர்யா


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


வலைச்சரம் திரு  சீனா அவர்கள்:


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


(ரொம்ப வெள்ளச்சாமி மாதிரி இருக்காருன்னு சதி பண்ணிட்டாய்ங்களோ)
திரு பழமைபேசி.     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திருமதி சுமஜ்லா அவர்கள்     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திரு காசி அவர்கள்


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   திரு செந்தில்வேலன்.     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   

___/\___

Monday, December 21, 2009

ஈரோடு பதிவர் சங்கமம் - ஒரு சாதனைத் தொகுப்பு!

பிரமாதம். அசத்தல். சாதிச்சிட்டீங்க  என்பது போன்ற வார்த்தைகளைத் தனியாகச் சொன்னாலும் மொத்தமாகச் சொன்னாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், முதன் முறையாக ஒரு பதிவர் கூடலை மிக அழகான ஓர் மாலைப் பொழுதில் மிக மிக அருமையாக நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர்களைப் பாராட்ட வார்த்தைகளைச் செதுக்குவதைவிட பட்டென்று மனதில் தோன்றுவதை சொல்லுவது தவிர வேறு வழியில்லை.

கூட்டுமுயற்சி, பங்கேற்பு, பங்களிப்பு, நிர்வகித்தல், விருந்தோம்பல் இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் எடுத்துக் காட்டாக இந்த நிகழ்ச்சி  இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. சந்திப்பின் முத்திரைச் சின்னத்தில் மோட்டோ எனும் முது மொழியாக 'அட நீங்கதானா" எனப் போட்டிருக்கலாம் போல்.


பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் நேசக்கரம் குலுக்கி கேட்ட முதல் கேள்வி இது. கிட்டத் தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சந்தேகமற நிரூபணமானது வாக்குகளையும் பின்னூட்டங்களையும் தாண்டி, நீங்கள் எல்லோராலும் படிக்கப்படுகிறீர்கள் என்பது. ஒரு பதிவருக்கு, இதைவிட ஊக்கமோ, தன்னம்பிக்கையோ வேறெப்படி தரவியலும்.

ஈரோடு பதிவர் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் மறைமுகமான இந்தத் தலைப்பு இருந்திருக்கிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், மற்ற பதிவர்கள் சார்பிலும் என் நன்றி. 

சுவையான தேநீருக்குப் பின், சரியாக 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, திரு. கதிர் அழைக்க திரு ஆரூரன் வரவேற்பு உரையாற்றினார். பதிவு என்பதின் முக்கியத்தை கலிங்கன் காளிங்கனாகவும் கம்ப நாடன் கம்ப நாடாராகவும் திரிந்ததை நகைச்சுவையோடு கூறிடினும், பதிவின் அவசியத்தை, பொறுப்புணர்ச்சியை உணர்த்தியது பாராட்டத் தக்கது.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்”  பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி(நானு நானு), அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் துவக்கப் பட்டது.

கலந்துரையாடல் நேரம் நிகழ்ச்சியின் மகுடம் எனலாம்.  இதனை நிர்வகிக்க  லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோர் குழு பொறுப்பேற்க அனானிகள் குறித்த விவாதம் சூடு பிடித்தது எதிர்பாராத சுவாரசியம். அவ்வப்போது தோழமையான, நகைச்சுவையான மட்டறுப்புகளுடன், வெகு சிறப்பாக அமைந்துவிட்டது.

விழா முடிந்ததும், செவிக்குணவில்லாத காரணத்தால், சிறிதன்றி பெரிதாகவே கொங்குநாட்டின் விருந்தோம்பல் அழைத்தது. சுவையான உணவு வாழைமட்டை(பாக்கு?) தட்டிலும், அளவான வாழையிலையில் பரிமாரப் பட்டமையில் கூட அமைப்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்பட்டது.

விளக்கமாக எழுத எண்ணியிருப்பதாலும், கூடியவரை உரைகளை ஒலிப்பதிவில் தர எண்ணியிருப்பதாலும், சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.

இந்த என் 300வது இடுகையை,  ஒரு மிகச் சிறந்த பதிவர் சங்கமத்தின் நிகழ்வுகளைத் தாங்கி வருவதோடு, என்னை குறைந்தது எழுபது சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும், அவர்களை எனக்கும் நேரடியாக சந்திக்க வாய்ப்பளித்த திரு கதிர், திரு ஆரூரன், பாலாஜி, வால்பையன் மற்றும் இதர ஒருங்கிணைப்பாளர்களுக்கும், என் எழுத்தை வாசிக்கும் இதர அன்பர்களுக்கும் என் நன்றியைப் பகிர வழிவகுத்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.

Saturday, December 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.7

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிரம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.
__________________________________________________________________________________________________
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க. நிஜம்மா புட்டுகிச்சின்னா நின்று கொல்லும் சரி.
__________________________________________________________________________________________________
இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த

பிரபாகரனின் பெற்றோர் எங்கனே எவனும் கேக்க மாட்டங்குறாங்களே?
__________________________________________________________________________________________________
தேர்தலுக்கு ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வேன்: ராஜபக்ஸே

ஏன். அடிச்சதெல்லாம் புள்ளைங்களுக்கு அழுத்திட்டு, அவன் கோவணத்துல முடிஞ்சத புடுங்கவா பிச்ச.
__________________________________________________________________________________________________
மாபெரும் யுத்த வீரர் தேசத்துரோகியானார்! பொன்சேகா மீது பொரிகிறது ஹெல உறுமய

மொத்த துரோகத்துல இது ஒரு சொத்தைத் துரோகம். நட்டதுதானடா அறுக்க முடியும்.
__________________________________________________________________________________________________
ஜெனரல் சரத் பொன்சேகா தனது சொத்து விபரங்கள் கையளிப்பு

சம்பளத்துல பிடித்தமெல்லாம் போக பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒன்னரைலட்ச ரூபாய் கடன்னு குடுத்தானா? போங்கடே!
__________________________________________________________________________________________________
தமிழ் தேசிய ஐக்கியத்தை சிதைக்காமல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்: தமிழ் கூட்டமைப்பிற்கு மனோ மீண்டும் பகிரங்க அழைப்பு

எத்தனை பட்டாலும் திருந்த மாட்டீங்களா? அழைச்சிகிட்டே இருங்க தேர்தல் முடிஞ்சப்புறமும்.
__________________________________________________________________________________________________
பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை  வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது :பிரிகேடியர் உதய நாணயக்கார

ஒரு அறிக்கையாவ‌து உண்மையா விட்டிருக்கியா ப‌ர‌தேசி.
__________________________________________________________________________________________________
மன்மோகனின் ஆலோசனையின் பேரிலேயே சரத் பொன்சேகா பதவி நீக்கப்பட்டார் என்ற செய்திக்கு இந்திய அரசு பதில் வழங்கவில்லை

என்னாத்த‌ச் சொல்லுற‌து. சொல்லிக் குடுக்க‌லையா நாராய‌ணா?
__________________________________________________________________________________________________
மனுத்தாக்கல் செய்யும்போது ஆரவாரம் இல்லை மகிந்த படுகோபம்

குடுத்த‌ காசுக்கு மேல‌ கூவ‌ அவ‌ன் என்ன‌ த‌மிழ‌னா?
__________________________________________________________________________________________________
கருணா – பிள்ளையான் குழு மோதல்

ரைட்டு!
__________________________________________________________________________________________________
தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோடி உதவி

ஆஹா. குடுங்க‌ப்பா. தேர்த‌ல் செல‌வுக்கு.
__________________________________________________________________________________________________
தமிழ்நாட்டை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை: தங்கபாலு

ச‌த்திய‌மூர்த்தி ப‌வ‌ன் ப‌ங்கு போட‌ வேண்டி வ‌ருமே!
__________________________________________________________________________________________________
வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்

இடைத்தேர்த‌லுக்கும் பிரியாணி போட்டா க‌ட்டுப்ப‌டியாகுமா?
__________________________________________________________________________________________________
இடைத்தேர்தல்: மதுக்கடைகள் மூடப்பட்டன

ஸ்டாக் தீந்துடுச்சா?
__________________________________________________________________________________________________
நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு: அத்வானி

ம்கும். தெரியும்டி. இழுத்துகிட்டிருந்தாலும் எல‌க்ஷ‌ன்னு காதில‌ விழுந்தா ப‌ட‌க்குன்னு எழும்பி உக்காருவீங்க‌!
__________________________________________________________________________________________________
விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?
__________________________________________________________________________________________________

Friday, December 18, 2009

காதலும் மோதலும்..


நன்றி விகடன்.

கார்குழல் வகிடு கொஞ்சி
காற்பிறை நெற்றி கொஞ்சி

வில்லொத்த புருவம் கொஞ்சி
வீர வாள் மூக்கைக் கொஞ்சி

விரற்கடை கீழிறங்கி
வியர்த்த மேலுதடு கொஞ்சி

கருவிழி முத்தைக் காக்கும்
கவின்மிகு இமைகள் கொஞ்சி

சிவந்த உன் கன்னம் கொஞ்சி
சிரிக்கும் உதட்டோரம் கொஞ்சி

சங்குப் பூ காது கொஞ்சி
சங்கு போலுன் கழுத்தும் கொஞ்சி

துறுத்திய முகவாய் கொஞ்சி
துடிக்கும் கீழ் உதடும் கொஞ்சி

அணைத்து உன் அதரபானம்
ஆவலாய் உண்ணும்காலே

அமரனே வந்து நின்று
அமுதம் ஈந்திடினும் வேண்டேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

த‌னக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடியாமல்
வளர்த்துச் சீராட்டி
வார்த்தைக் குழந்தையாய்
பெற்றெடுத்து
பதிவுலகில் வளைய வரவிடும்
ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.

Thursday, December 17, 2009

கல்யாணம் என்பது..


அன்றாட வாழ்க்கையின்
அவ்வப்போதய‌ ஏமாற்றங்கள்
குமைந்து குமைந்து
ஆவியாகிச்
சேர்ந்து சேர்ந்து
அழுத்த‌ ம‌ண்ட‌ல‌மாய்த்
தீவிரமடைந்து
மனம் கடக்கும் தருணங்களில்
கோபப் புயலாய்
பொருட்கள் சிதைத்து
இடியாய் மனைவி
குழந்தைகள் மேல்
விழுந்து
கண்ணீர் வெள்ளத்துக்கு
காரணமாயினும்
வலுவிழந்த அழுத்தத்தால்
பத்து ரூபாய் மல்லியிலும்
பொம்மையிலும்
வாழ்க்கையை
சகஜ நிலைக்குத் திருப்பும்
சாமானிய‌த் த‌க‌ப்பன்..

ஆயிரந்தான் இருந்தாலும்
அடிச்சாலும் உதைச்சாலும்
ஆசையா 'அதுக்கு'
உன்னைத்தானடி தேடி வாரான்!
புரிஞ்சி நடந்துக்கடி என்று
த‌லைமுறை சொன்ன‌
சுக‌வாழ்வு சூத்திர‌த்தை
நினைவிறுத்தி
இன்னும் வ‌லித்த‌
இடுப்பைத் த‌ட‌விய‌ப‌டி
முக‌ம் க‌ழுவிப் பொட்டிட்டு
க‌ண் அவ‌னுக்காய்
காத்திருக்கும் தாய்..

அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

___/\___

Wednesday, December 16, 2009

அய்யோ! வட போச்சே!

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து பல்வேறு நையாண்டிகள் பேசப்படுகின்றன. இனப்படுகொலையின் போது உருப்படியாக எதுவும் பெரியண்ணன் என்ற முறையில் செய்யவில்லை என்பது நம் மனதில் உறுத்திக் கொண்டுதான் இருக்கும்.

இந்த நோபல் பரிசின் லட்சணம்தான் என்ன என்று கூகிளாண்டவரிடமும், விக்கியிடமும் கெஞ்சியதில் இரண்டு துரதிர்ஷ்டங்கள் குறித்து அறிய முடிந்தது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து முறை 1937 முதல் 1948 வரை பரிந்துரைக்கப்பட்ட போதும் அவருக்கு வழங்கப்படவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு நோபல் பரிசுக் கமிட்டி தன் தவற்றை ஒப்புக்கொண்டது.

எனினும், 1948ம் ஆண்டு காந்திஜி இறந்த வருடம், உயிருடன் இருக்கும் எவரும் இந்தப் பரிசுக்குத் தகுதி பெறவில்லை என்ற அறிவிப்போடு இந்தத் துறைக்கான பரிசு வழங்கப்படவில்லை. ஆனால், டக் ஹெம்மர்ஸ்க்ஜோல்ட் என்ற ஸ்காண்டிநேவியருக்கு 1961ம் ஆண்டு அவருடைய இறப்புக்குப் பிறகு வழங்கப்பட்டது. அதற்காகச் சொல்லப் பட்ட சப்பைக் கட்டுக் காரணம், பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் உயிரோடிருந்தார் என்பதாகும்.
எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன். கோட்டயத்தில் 1931ல் பிறந்த இவர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர். பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் பௌதிகத்தில் குறிப்பாக க்வான்டம் பிஸிக்ஸ் எனப்படும் சக்திச் சொட்டுப் பௌதிகவியலில் பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்தவர்.

இவரது கண்டுபிடிப்பான V-A கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஃபெயின்மேன் மற்றும் மர்ரேக்கு 1963ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டதே ஒழிய சுதர்சனுக்குக் கொடுக்கப்படவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் வெளிப்படையாகவே அறிவியல் உலகில் இந்தக் கண்டுபிடிப்பு சுதர்சனால் கண்டுபிடிக்கப்பட்டு, மற்ற இருவரால் பிரபலப்படுத்தப்பட்டது என்றே பேசப்பட்டது.

1979ல் இவர் 29 வயது இளைஞராக இருந்தபோது கண்டுபிடித்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெயின்பெர்க், க்ளாஷோ, சலாம் ஆகியோருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்ட போது ஒரே ஒருமுறை தன் அதிருப்தியை இவ்வாறு வெளிக்காட்டினார் சுதர்ஷன்:

"ஒரு கட்டிடத்துக்கு பரிசளிக்கப் படுமேயானால் தரைத்தளத்தைக் கட்டியவரை விட்டு இரண்டாம் தளத்தை கட்டியவருக்கு மட்டும் கொடுப்பது முறையா?" என்று.

பட்ட காலிலே படும் என்பது போல் மீண்டும் ஒரு முறை 2005ம் ஆண்டு,க்வாண்டம் ஆப்டிக்ஸ் துறையில் இவரது கண்டு பிடிப்பை அடிப்படையாகக் கொண்டு க்ளாபர் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது குறித்து பல அறிவியல் அறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நோபல் பரிசுக் கமிட்டி கண்டு கொள்ளவேயில்லை.

என்னதான் விஞ்ஞானியாக, காந்தியாக இருந்தாலும் நோபல் பரிசு வாங்க  கட்டம் சரியா இருக்கணும் போல. இல்லை அமெரிக்கனா இருக்கணுமோ?

இதுக்கு பேசாம கட்சித் தலைவரா இருந்தா தனக்குத் தானே அப்பப்போ சாதனையாளர் விருது கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

Tuesday, December 15, 2009

மதுரைக்குப் போலாமடி...

தமிழ்நாடு சுற்றுலாத் துறையினர் மிக நேர்த்தியுடன் தமிழகத்தின் முக்கியமான கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், இயற்கைப் பூங்காக்கள், படகுத் துறைகள் ஆகியவற்றினை 360 பாகையில் ஒலியுடன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக தந்திருக்கிறார்கள்.

மிகத் துல்லியமாக எடுக்கப்பட்ட படங்கள் நாம் அங்கிருப்பது போல் உணர வைக்கின்றன. மிகச் சிறப்பான இந்தக் காணொளிகளை முழுத்திரையில் கண்டு களிக்கலாம். அம்புக்குறியிட்ட இடங்களை சுட்டுவதன் மூலம் நாம் உண்மையிலேயே சுற்றிவருவது போன்ற உணர்வைத் தருவனவாக அமைந்துள்ளன.

சிலவற்றில் வரை படங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளைச் சுட்டுவதன் மூலம் அக்காட்சிக்கு செல்லலாம். சிவப்பு அம்புக்குறி கொடுக்கப்பட்டிருக்கும் இடங்களைச் சுட்டுவதன் மூலம் அடுத்த காட்சிக்குச் செல்ல முடியும். 

கோவில்கள்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தஞ்சை பெரிய கோவில் 
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் 
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்     
கன்னியா குமரி கோவில்
விவேகானந்தர் பாறை 


நீர் வீழ்ச்சிகள் :(எங்க போனாலும்  தண்ணியக் கண்டா நம்மளுக்கு துணி துவைச்சே ஆவணும் போல. திருந்த மாட்டானுங்க)

குற்றாலம் மெயின் அருவி
ஐந்தருவி
பழைய குற்றாலம்
கொல்லி மலை சிற்றருவி     
 
மேலதிகப் படங்களுக்கு

(நன்றி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை)

Monday, December 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.6

பிரபாகரன், பொட்டம்மன் இறப்புச் சான்றிதழ் இலங்கை சட்டத்துறை நிபுணர்கள் பரிசீலனையில் உள்ளதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆமாம் பின்ன. மருத்துவ ஆதாரமில்லாம, டுபாக்கூரு சான்றிதழ்னா பலதும் யோசிக்க வேணாமா?
__________________________________________________________________________________________________________
கொடுங்கோலன் ராஜபக்ச, திருப்பதி வழிபாடு: ஆந்திர முதல்வர் பலி! இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம்: வைணவ துறவி

ஆமாம். இவ்வளவு நாள் ஈழம் எரிஞ்சது. இப்போ ஆந்திரா. இத மொதல்லயே எச்சரிக்கப்படாதா துறவி.

__________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை: அரசாங்கம்

எப்புடி பகிரங்கமா மிரட்டுரான் பாரு! இவனுங்க வெச்சதே சட்டமாச்சே!
__________________________________________________________________________________________________________
சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா

அட பக்கி நாயே! ஒருத்தனாவது ஒன்னு சொன்னா அது படி நிக்க மாட்டீங்களா. இந்த எழவுல உன் வாக்குறுதிய நம்பி ஓட்டு வேற போடணுமா?
__________________________________________________________________________________________________________
மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச

அட அதானா! ஃபொன்சேகா வடிவேலு ஆயிட்டாரு. 'ங்', ஆனாலும் நீ மிருகம்னு ரொம்ப ஏத்தம்டா!

__________________________________________________________________________________________________________
இலங்கை தொடர்பாக இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என மஹிந்த அச்சம்

அதுக்கொரு கோவிலு. அங்க ஒரு சாமி இருக்கும் வந்து வேண்டிக்கடா எச்சபிச்ச!
__________________________________________________________________________________________________________
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலையீடில்லாமையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரச்சினைகள்

இப்ப புலம்பி என்ன புண்ணியம். பட்டும் திருந்த மாட்டானுங்களே. அப்புடியா ஒரு பதவி வெறி?
__________________________________________________________________________________________________________
பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்

எங்க‌? மேலுல‌க‌த்துக்கா? இப்ப‌வே இன்னைக்கொன்னு நாளைக்கொன்னு பேசுறான். இவ‌னுக்கு இவ‌ரு வ‌க்கால‌த்து!
__________________________________________________________________________________________________________
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்: சரத் பொன்சேகா

ந‌ம்பீட்ட‌ம்! இதுக்கா இந்த‌ பாடு!
__________________________________________________________________________________________________________
அதிகாரப் பகிர்வுத் திட்ட அடிப்படையை இந்தியாவிடம் கையளித்தது இலங்கை

ரைட்டு!
__________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவுடன் தொலைக்காட்சி விவாததிற்கு வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஜே.வி.பி சவால்

ந‌ல்ல ப‌கிடியா போச்சுடா உங்க‌ளோட‌!
__________________________________________________________________________________________________________
தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: கலைஞர்

அதெப்புடீ. மின்சார‌ம்னா சும்மாவா. ஷாக் அடிச்சிடாது.
__________________________________________________________________________________________________________
தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ்

ஜாதிய‌ தூக்கிட்டாரா! ம‌ர‌ங்க‌ளுக்கெல்லாம் க‌ட்ட‌ம் ச‌ரியில்ல‌ போல‌.
__________________________________________________________________________________________________________
சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்

உங்க‌ள‌ வெச்சி என்னா ப‌ண்ற‌து! உங்க‌ பேர்ல‌ அக்க‌வுண்ட் கூட‌ இருக்காதே! ந‌ல்லா வாழ்ந்துடும் ச‌முதாய‌ம்.
__________________________________________________________________________________________________________
அர்ச்சகர் தேவநாதன் ஜெயிலை விட்டு வர தயக்கம்!

பின்ன‌! கொஞ்ச‌மா? என்னா அடி!

__________________________________________________________________________________________________________
நள்ளிரவில் பிராந்தி பூஜை:ஊரையே போதையில் மிதக்க வைத்த ஜோதிடருக்கு அடி உதை

ஜாத‌க‌ம் ச‌ரியில்லையா! ச‌ர‌க்கு ச‌ரியில்லையா?
__________________________________________________________________________________________________________
காவல் நிலையம் அருகே நகைக்கடையில் கொள்ளை

அட‌ க‌ட‌மைய‌ ஒழுங்கா செய்யிறாங்க‌ளான்னு டெஸ்டு ப‌ண்ணியிருப்பாங்க‌ப்பு!
__________________________________________________________________________________________________________

Sunday, December 13, 2009

எந்த ஊர் என்றவனே...

உங்களுக்கு சொந்த ஊர் எது சார்?  மிகச் சாதாரணமாக எல்லோராலும், அறிமுகமாகையில் கேட்கப்படும் கேள்வி. பளிச்சென்று ஏதோ ஒரு ஊரைச் சொல்வதும், கேட்பவர் அதே ஊராயின் அப்படியா? அங்கு எங்கே என்று மேலே தொடர்வதும் என் மனதுள் வெகுவான ஏக்கத்தை உண்டாக்கும்.

என் மனதுக்குள் பெரும் போராட்டத்தை உண்டாக்கும் கேள்வியாகிவிட்டது இது! ஆமாம்! சொந்த ஊர் என்பது என்ன? சொந்தமாய் எனக்கு வீடோ, நிலமோ இருந்து அங்கே வாழ்ந்தோ, பிழைப்புக்கு என்று வேறிடத்துக்கு வந்திருப்பினும் என் வேர் இங்கே என்ற ஓர் அடையாளம் இருப்பது சொந்த ஊரா? என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த ஊரா? அல்லது என் சொந்தங்களெல்லாம் இருக்கும் ஊரா?

3 வருடங்கள் கழித்து ஊருக்கு போய் இருந்தேன். சொந்தக் காரங்களைப் பார்க்கிறதுக்கே நேரம் போதவில்லை. வீட்டில் இருந்தா மாதிரியே இல்லை என்று வருந்துவதும், ஊரில மழை பெய்ததா? விளைச்சல் எப்படி என்று கேட்பதாய்ப் படிக்கும் போதும் இது இன்னும் உறுதிப்படுகிறது.

ஒரு வேளை தான் பிறந்து வளர்ந்த ஊர்தான் சொந்த ஊரா என்றாலும் பிறந்தது ஒரு இடம் வளர்ந்தது வேறே ஊர் என்றால் எதைச் சொல்வது? அல்லது நான் ஒரு ஊரிலும், என் உடன் பிறந்ததுகள் வேறு வேறு ஊரிலும் பிறந்தால் அவரவருக்கும் மாறுமா என்ன?

ஏண்டா குழப்பறன்னு அடிக்க வராதீங்க சாமிகளா! காரணமிருக்கு. வீட்டில் விசேஷமென்று வரும்போது சாஸ்திரம், சம்பிரதாயம் என்ற இரண்டும் கூடவே வரும். சாஸ்திரத்துக்காவது  விதிவிலக்கிருக்கலாம். சம்பிரதாயத்துக்கு கிடையவே கிடையாது.

கலியாணமா? எந்த ஊரு. வட ஆற்காடா, தென் ஆற்காடா, திருநெல்வேலியா என்று கேட்டு ஊர் வழக்கப்படி, வீட்டு வழக்கப் படி தாலியில் ஆரம்பித்து சீர் வரை, விருந்து பரிமாறுவதில் பொரியல் இங்கே, பச்சடி அங்கே, உப்பு வைக்கிறது, வைக்காம விடுறதில தொடங்கி, சாப்பிட்ட பிறகு இலை மடிக்கும் விதம், எடுப்பதா விடுவதா என்று எத்தனை சம்பிரதாயங்கள்?

மனுசன் போனப்புறம் கூட ஊர் வழக்கம், சம்பிரதாயம் என்பது தொடர் கதையாகிறாதே. அப்படியானால் சொந்த ஊர் மாறிக்கொண்டே இருக்குமாயின் சம்பிரதாயம் மாறுமா? அப்படியானால் இத்தனை தலைமுறையாய் தொடர்ந்து இவை இருப்பதற்கு காரணம் ஊர்விட்டு ஊர் பிழைப்புக்கு என்று வராமல் போனதுதானே?

இப்போதுதான் எல்லாம் தொலைத்து விட்டு உறவுகள் ஊருக்கு ஒன்று, நாம் பிழைப்புக்கு என்று ஒரு பக்கம் என்று ஆனப்புறமும் இந்த சம்பிரதாயம் மட்டும் மாறாமல் ஒட்டிக்கொள்வது எப்படி? அடுத்த தலைமுறைக்கு இது தெரியாமல் போகலாம். போக வேண்டும்.

சரி இவ்வளவு புலம்பலுக்கு என்ன காரணம் என்கிறீர்களா? எந்த ஊர் என்றால் சென்னை என்று சொல்லிப் பார்த்தேன். சென்னைன்னா எங்கன்னா நான் என்னங்க சொல்றது? பிறந்ததையா? படித்ததையா? பிழைப்பதையா?

சரி சரி. என் குழப்பம் என்னோட. கண்ணதாசன் ஒருத்தன் காதல் தோல்வியில் ஊரை சொல்லி சொல்லி பாடுறத கேட்டு ரசிங்க.

          __/\__

Saturday, December 12, 2009

தண்ணி படும் பாடு!சென்னையில் ஒன்பது ‍ பத்து வருடங்களுக்கு முன்பு தண்ணீர்ப் பஞ்சமும், எலிக்காய்ச்சலும் சற்றேறக் குறைய ஒன்றாய் புகுந்த காலத்தில் வேறு வழியின்றி மினரல் வாட்டர் என்று மிகச் சிலராலும் என்னவென்றே தெரியாமல் பிசில்ரி என்று பலராலும் அழைக்கப்படும் குடிநீர் வியாபாரம் மெல்லச் சூடு பிடித்தது.

ஆரம்பத்தில் பிஸ்லெரி, அக்வா ஃபினா என்ற தரம் வாய்ந்த குடிநீர்க் கேன்கள், பாட்டில்கள் விற்பனைக்கு இருந்தாலும், டெபாசிட் தொகை, தேவைக்கேற்ற அளவில் விநியோகமில்லாமை ஆகியவற்றின் காரணமாக புற்றீசல் போல் பல மினரல் வாட்டர் கேன்கள் வியாபரத்தில் வந்திறங்கின.

மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி, நீர்த்தட்டுப்பாடும் சேர லேபில் கூட இல்லாமல், புற்றீசலாய் பரவிய இந்த வியாபாரம் குடிசைத் தொழில் மாதிரி நன்றாக வேரூன்றியது. வட சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள கம்பெனிகளில் இரவு நேரப் பணியாளர்கள் கடைகளிலிலிருந்து காலிக் கேன்களை சைக்கிளில் கொண்டு போய் சுத்தமான சுவையான நிலத்தடி நீரை பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, கேனுக்கு 5ரூ பெறுவதும், அதை நமக்கு கேனுக்கு 15 முதல் 20 ரூ வரை விற்றதும் நான் கண்ணால் கண்டிருக்கிறேன்.

எந்தத் தரக்கட்டுபாடுமின்றி, லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் தற்போது பெருமளவில் 20 லிட்டர் கேன்கள் மட்டுமே சந்தையில் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. நடுவில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் மட்டுமே விற்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும், காந்தி நோட்டு அடிக்கிறவர்களுக்கு இந்த முத்திரை அடிப்பதா கஷ்டம்.

ஆரம்பத்தில் சந்தையைப் பிடிப்பதற்காக பில்செரி, அக்வா ப்யூரா, அக்வா புண்ணாக்கு என்றெல்லாம் பெயரோடு வந்தாலும், இவன் நல்லவன் எல்லாம் தாங்குவான் என்ற மனோபாவத்தில் ப்ளூ, மவுன்டன் ஃபால்ஸ், சுகுணா, இன்ன பிற பெயர்களிலும் வரத் தொடங்கிவிட்டன. தண்ணீர் பஞ்சம் போயும், தாராளமான குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படினும், குடிசை வீடுகளில் கூட மினரல் தண்ணீர் பயன்படுத்துதல் ஒரு அந்தஸ்தான விடயமாகிவிட்டது.

பல நேரங்களில் என் வீட்டில் வரும் கேன்களுக்கு லேபில் கூட இருக்காது. கேட்டால், தண்ணி இல்லிங்களா, கொண்டு வாரயில பிச்சிக்குது என்ற பதில் வரும். சில நேரங்களில் வாசம் வருகிறது என்று ஃபோன் செய்தால், உடனே மாத்திடுறேங்க. புது சப்ளையர் கிட்ட வாங்கினேன் என்ற நொண்டிச் சாக்குதான் வருகிறது.

குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பலகோடி ரூபாயில் விநியோகிக்கப்படும் நீர் துணி துவைக்க, குளிக்க என்ற பயன்பாட்டுக்கே உபயோகிக்கப்படுகிறது. சில குடிசைப் பகுதிகளில் அடிகுழாயில் தானாகவே நீர் வழிந்தோடுவதைப் பார்க்கையில் பதை பதைக்கும்.

தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய அரசின் துறை என்ன செய்கிறது? மக்கள் நலம் இரண்டாம் பட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் முறையான லைசன்ஸ் வழங்க வேண்டிய துறை, விற்பனை வரித்துறை ஆகியவை என்ன செய்கின்றன? அரசிடம் தமிழ்நாட்டில் முறையான லைசென்ஸ் பெற்று தரக்கட்டுப்பாட்டுடன் செயல் படும் நிறுவனங்கள் எத்தனை என்ற தகவலாவது இருக்கிறதா?

மாதம் ஒருமுறை கடைகளில் திடீர் சோதனை நடத்தினால் எத்தனை நிறுவனங்கள் பில் கூட இல்லாமல் எத்தனை லட்ச ரூபாய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது என்பது தெரியுமே. இதற்கெல்லாமா அதிகாரிகள் இருக்கிறார்கள். மொத்த விற்பனைக் கடைகளில் கலெக்ஷன் கட்டவே நேரம் போதாதே!

இதுவரை, முறையற்ற நிறுவனங்களைக் கண்டறிய எதாவது நடவடிக்கையாவது எடுத்திருக்கிறதா? எனக்குத் தெரிந்து இல்லை. தெருவோர தூசி படிந்து, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து அவன் கொடுக்கும் கிணற்று நீர் வியாபாரம் பலகோடி பெறும்.

ஆவின் மாதிரி, தமிழ்நாடு குடிநீர் வாரியம், அரசு மானியத்துடனோ, ஒப்பந்தம் மூலமோ கடுமையான தரக் கட்டுப்பாட்டுடன் மினரல் வாட்டர் வியாபாரத்தைச் செய்ய முடியாதா? கண்டிப்பாக முடியும்.

நியாயமான விலையில் வழங்கப்படின் ஒட்டு மொத்த மக்கள் ஆதரவு கிடைக்குமென்பதில் சந்தேகமேயில்லை. மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசுக்கும், வாரியத்துக்கும் வருமானம் பெருகும். மக்களுக்குத் தேவையான இன்ன பிற கட்டமைப்புகளை உருவாக்க முடியும். செய்வார்களா?

Friday, December 11, 2009

ஞானும், சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் - 2!

முந்தைய இடுகைகளுக்கு வந்த பின்னூட்டத்திலிருந்து ஒன்று தெளிவானது. நான் சிறுவயதில் மிகுந்த சேட்டைக்காரப் பிள்ளையாக இருந்திருக்கக் கூடும் என்ற அபிப்பிராயம் தோன்றியிருக்கிறது. உண்மையில் சிறு வயதில் நான் அதிகம் விளையாடியது கூட இல்லை.

எப்பொழுதாவது திடீரென்று ஒரு உந்துதலில் நடந்தவைதான் இவ்வளவும். சில நேரம் வேடிக்கை பார்க்க ஆட்கள் சேர்ந்தால் நான் என்ன பண்ண முடியும்? ஒரு தீபாவளிக்கு, ஃபண்டில் பட்டாசு வந்தது. அப்போதெல்லாம் கோபுரம் மார்க் பட்டாசும், அணில் மார்க் பட்டாசும்தான் வெடிக்கும். மயில்மார்க் புஸ்ஸுன்னு போய்டும். அந்த முறை வந்தது அனைத்தும் மயில்மார்க் பட்டாசும், வைரம் பட்டாசும்.

பாதுகாப்புக்காக, பட்டாசு திரி முனையில் இருக்கும் காகிதத்தை கொஞ்சமாக பிய்த்துவிடுவது என்பது எல்லாச் சிறுவர்களாலும் பயன்பாட்டில் உள்ள விதி. இந்த எழவு பட்டாசில் திரி கையோடு வந்துவிடும். அந்த முறை சேதாரம் அதிகமாகவே திரி போன பட்டாசுகளையெல்லாம் எறியாமல் வைத்திருந்து பார்த்ததில் கணிசமாக சேர்ந்தது.

கமலுக்கு மண்டையில் கொம்பு முளைத்து சிவப்பு விளக்கு எரியுமே, அந்த எஃபெக்ட் இன்றி இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன். ஒரு காலிகாட் பல்பொடி டப்பாவில் எல்லாப் பட்டாசையும் உரித்து மருந்தைக் கொட்டினேன். வெடிக்காமல் புஸ்ஸான ஒரு டபுள்ஷாட் கண்ணில் பட்டது என் போறாத காலம்.

அதைக் குடைந்து காலி செய்து, அதற்குள் இந்த மருந்தைக் கொட்டியதில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமாக சேர்ந்தது. திரும்பவும் எல்லாம் கொட்டி, கேப் பட்டாசும் கலந்து திரும்பக் கொட்டினாலும் திரி வைத்தால் எங்கேயோ போனது. எப்படி கொளுத்துவது?

டபுள்ஷாட்டில் திரி வைத்திருந்த ஓட்டை வழியே இருப்பதில் மிக நீளமான திரியைச் சொருகியும் அது எங்கேயோ நின்றது. திறந்திருந்த பக்கம் ஒரு காகிதத்தை ஒட்டி தலைகீழாக வைத்து தட்டினால் நன்றாக திரி மருந்துக்குள் பதிந்துவிடும் என்று யோசித்து, நடைமுறைப் படுத்தியுமாயிற்று. அண்ணா என்ன வெடிண்ணா என்று ஒரு ரசிகர்கூட்டம் வேறு சேர்ந்துவிட்டது.

பந்தாவாக, வீதியில் வைத்து, சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் வரவில்லை என்ற முன்னெச்சரிக்கையெல்லாம் கவனமாக மேற்கொண்டு கொளுத்தப் போகையில் கேள்விக்கு பொறந்த வாண்டு ஒன்று கேட்டது பாருங்கள் கேள்வி அண்ணா இது வெடிக்குமா, புஸ்வாணமா என்று! எனக்கே தெரியாதே நான் என்ன சொல்லுறது?  கம்னு பாரு என்றபடி கொளுத்திவிட்டேன்.

வெளியிலிருந்த‌ திரி எரிந்து காணாம‌ல் போன‌து. அத‌ன் பின் அமைதி. மெதுவே அனைவ‌ரும் அருகில் ப‌ம்மி ப‌ம்மி போக‌ க்முக் என்ற‌ என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் ய‌ம்மா என்ற‌ ஒரு அல‌ற‌லும் சேர்ந்த‌து. சுற்றியிருந்த‌ அனைவ‌ரும், திருப்பதி சாலையில் அலுமினிய பெயின்ட் அடித்துக் கொண்டு காந்திசிலை மாதிரி இருப்பாரே ஒரு ஆள் அப்படி ஆகிப் போனோம்.

ஏதோ ஒரு கொஞ்ச‌ம் வெடிம‌ருந்து ப‌ற்றிக்கொள்ள‌ கீழே ஒட்டியிருந்த‌து வெறும் காகித‌ம் என்ப‌தால், மீதி ம‌ருந்து ப‌ற்றிக் கொள்ளுமுன் இது மேலெழும்பி ம‌ருந்தைச் சித‌ற‌டித்து ஒரு வாண்டுவின் நெற்றியில் அடித்து விட்ட‌து.என்ன‌மோ நான் அல்‍கொய்தா மாதிரி அவ‌ன் அம்மா வ‌ந்து திட்டி, ஒரு நோப‌லை நோவ‌டித்து விட்டார்க‌ள்.

ப‌ள்ளியிறுதி வ‌குப்பு முடிந்து பி.யூ.சி சேர்ந்த‌தும், முத‌ல் நாள், இர‌ண்டாம் வ‌குப்பு பிஸிக்ஸ் செய‌ல்முறை வ‌குப்பு என்று அட்ட‌வ‌ணை பார்த்த‌தும் ப‌ர‌ ப‌ர‌வென்றாகிய‌து. த‌வ‌ளைக்கும் எலிக்கும் காலைக் க‌ட்டிய‌ க‌தையாக‌, மைலாப்பூர் கான்வென்ட் பீட்ட‌ரும் நானும் ஒரு குழுவானோம். சாக்பீஸ் ட‌ப்பியில் சுருட்டி போட்டிருந்த‌ துண்டுச்சீட்டை எடுக்க‌,குவிய‌த்தூர‌ம் க‌ண்டுபிடிக்கும் சோத‌னை வ‌ந்த‌து. அதோடு என‌க்கு வேதைனையும் வ‌ந்த‌து.

பீட்டர் போய் டேபிளில் நின்றுகொண்டு, கோ அன் கெட் த லென்ஸஸ்னு ஆர்டர் போட்டான்.  ஒரு வழியா விசாரித்துப் போய் லேப் அஸிஸ்டன்டிடம் பதிவில் கையொப்பமிட்டு ஒரு குழியாடி, ஒரு குவியாடி வாங்கிக் கொண்டு வந்தேன். பீட்டர், க்க்க்கேய். நவ் யூ ஸ்டேன் அன் வாச் அப்படின்னான். ஹோல்டரில் அவன் ஒரு ஆடியை பொருத்த நான் மற்ற ஆடியைப் பொறுத்த முயற்சிக்கையில், நோ யூ டோன் டச்னான்.

பெரிய இவன் மாதிரி கருப்பு ஸ்க்ரீன் நகர்த்துறதும்,  விளக்கை நகர்த்துறதும். என்னடா பண்ற சொல்லுடான்னா ஒண்ணும் சொல்லமாட்டங்குறான். ரெண்டு மூனு வாட்டி கேட்டா வெய் மேனுங்கறான். நான் என்ன கேனையா? வெடுக்குன்னு மாட்டி இருந்த ஆடியை புடுங்கிட்டேன். மொதப்பந்துல போல்டானா பேட் வச்சிருக்கிறவன் நான் ஆட்டத்துக்கு வரலைம்பானே, அப்புடி.

நானே பண்ணிக்கிறேன் போஓஓடான்னு அடுத்த டேபிள் தாவ, நோட்டுப் புத்தகத்தைத் தூக்கினேன். எழவு, அது மேல வச்சிருந்த மத்த ஆடியை மறந்துட்டன். அது தரையில விழுந்து சிதறிடிச்சி. யாருடா முதல் நாள் போணி வான்னு வந்தூட்டான் லேப் அஸிஸ்டன்ட்.

பலியாடு மாதிரி போனேன். பேருக்கு நேரா சிவப்பு இங்க்ல சுழிச்சி, நாளைக்கு 50ரூ ஆஃபீஸ்ல கட்டிட்டு ரசீது கொண்டு வந்து குடுன்னு ஒரு பில்லைக் கொடுத்து விட்டான். அதோடு ஒரு சர்.சி.வி.ராமனும் காணாமல் போய்விட்டார்.

காலம் உருண்டோடி, வேலைன்னு போய் சம்சார சாகரத்தில் முழுகி தத்தளித்த போதும் நம் பங்களிப்பில்லாமல் விஞ்ஞானம் எப்படியெல்லாமோ வளர்கிறதே என்ற வருத்தம் அவ்வப்போது தோன்றும். 1998ல் தொகுப்பு வீடு வாங்கி, முழுதாய் எல்லாம் முடியுமுன், வாடகை மிச்சமானால் வீட்டுக் கடனுக்கு சரியாகும் என்ற நிர்பந்தத்தில் குடி வந்தபோதுதான், விஞ்ஞானம் அப்படி ஒன்றும் வளர்ந்துவிடவில்லை என்ற உண்மை புரிந்தது.

மின்சார‌க் க‌னெக்ஷ‌ன் முழுமையாக‌க் கொடுக்க‌ப் ப‌டாம‌ல், மோட்டாருக்கு ச‌ர்வீஸ் க‌னெக்ஷ‌னிலிருந்து வ‌ரும் ஒய‌ரை ஃப்யூஸ் கேரிய‌ரில் சொருகினால் ஓடுமாறு கொடுத்திருந்தார்க‌ள். வாச்மேன் ஊருக்குப் போகிறேன் என்று ஒற்றைக் குடித்த‌ன‌மான‌ என‌க்கு எங்கு சொருக‌ வேண்டும் என‌ச் சொல்லிவிட்டு போய்விட்டான். நானும் அடுத்த‌ நாள் சொருக‌ப் போக‌ த‌டித்த‌ செப்புக் க‌ம்பி உடைந்துவிட்ட‌து.

நாம‌ யாரு! டெஸ்ட‌ரைக் கொண்டுவ‌ந்து ஃப்யூஸ் கேரிய‌ரைக் க‌ழ‌ற்றிவிட்டு (உசாருல்ல‌) டெஸ்ட‌ர் வைத்துப் பார்த்த‌தில் எரிய‌வில்லை. அப்பாடா மின்க‌சிவில்லை என‌ உறுதி செய்து கொண்டு (கனெக்ஷன் குடுத்தப்புறம்தானே மின்சாரம் வரும்), தேர்ந்த‌ எல‌க்ட்ரீசிய‌ன் மாதிரி, ஒய‌ரைக் க‌டித்து கொஞ்ச‌ம் மேலிருக்கும் ப்ளாஸ்டிக் க‌வ‌ரை நீக்க‌ முய‌ன்றேன். அந்த‌க் கொஞ்சூண்டு க‌ம்பி நாக்கில் ப‌ட்ட‌தை உண‌ர்ந்த‌ அடுத்த‌ நொடி இரும்புக்கை மாயாவியாகிப் போனேன்.

அது ஒன்றுமில்லை. அப்ப‌டியே க‌ட்டை போல் விழுந்த‌தில் பின்புற‌ச் சுவ‌ற்றில் ம‌ண்டை அடி வாங்கி, கீழே விழுந்த‌ போது இன்னோரு அடி வாங்கி, முழு பிர‌க்ஞையுட‌ன் கத்துகிறேன், ச‌த்த‌ம் வ‌ர‌வில்லை, வாயெல்லாம் உல‌ர்ந்து, நீர்ச்சத்து போனவன் போல் ஆகி, எழுந்திருக்க முயல வலதுகை இரும்பு போல் கனத்தது.

அப்புறம் ஒருவாறு நானே எழுந்து திரும்ப ப்ளையர் வைத்து நறுக்கி கனெக்ஷன் கொடுத்தேன். ஆனால் பாருங்கள், 75ம் வருடமும் மின்சாரம் ஷாக் அடித்தது. 98ம் வருடமும் ஷாக் அடித்தது.

இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல. மனுசனுக்கு எது முக்கியமோ அதை விட்டு செவ்வாய் கிரகத்தில தண்ணியிருக்கான்னு கண்டு பிடிக்கிறாங்களாம்.

இப்புடி உருப்படாத கூட்டத்துல ஒன்னா இருக்கிறத விட பதிவராகி, தினம் நாலு மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல வாங்குறது பெரிய விஷயமா இல்லையா?

(ஹி ஹி. இரண்டாவது ஓட்டு சென்னையிலிருந்து. எடுத்துக் கொண்ட நேரம் 3 நிமிடத்துக்கு குறைவு. இதனால் தெரிவது என்னவெனில் நேராக வலைமனைக்கு வந்து மைனஸ் போட்டு வெளியேறத் தேவை மூன்று நிமிடங்களுக்கு குறைவு. )


(ஹி ஹி. இவரு நம்ம கோயமுத்தூர் அபிமானி. கனெக்சன் ஸ்லோ போல 3 நிமிசம் தாண்டிடிச்சி. நம்ம கோட்டா ஓவர். நாலு மைனஸ்.)Wednesday, December 9, 2009

ஞானும், சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும்!

பிரபலங்களிடம், நீங்கள் நடிக்க வராமலிருந்தால் அல்லது இருக்கும் துறை தவிர்த்து வேறு என்னவாக இருந்திருப்பீர்கள் என்று கேட்பார்கள் அல்லவா? அப்படி என்னை நானே (ம்கும். இல்லாட்டி பி.பி.சில வந்து கேட்டுடுவாய்ங்க)கேட்டுக் கொண்டதன் விளைவு இது.

ஆறு வயதிருக்கலாம். வீட்டில் பம்ப் ஸ்டவ் புழக்கத்திலிருந்த காலம். அப்பாவுக்கு பாத்திரத்தில் கரி பிடிக்கக் கூடாது. தீச்சுவாலை நீல நிறத்தில் எரிய வேண்டும். ஸ்டவ் தங்கம் மாதிரி பள பளவென்றிருக்க வேண்டும். ஞாயிறுகளின் மதியம் இதனுடைய பராமரிப்பில் போகும்.

தேய்த்து, காய வைத்து, அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி, அதன் வாஷர்களுக்கு தேங்காய் எண்ணைக் குளியல் நடத்தி, பம்ப் அடிக்கையில் காற்று கசியாமல் இருக்கிறதா, மண்ணெண்ணெய்த் தாரை ஊசி மாதிரி வருகிறதா என்ற அவரின் பராமரிப்பு சோதனைகளைப் பார்வையிடுவதுதான் பொழுது போக்கு நமக்கு.

டேங்கில் நீர் ஊற்றி, பர்னர் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி, பம்ப் அடிக்கும் இடத்தில் வாய் வைத்து ஊதி(ஊதுனதுன்னு அப்புறம் தான் தெரியும்) கையை டக்கென எடுக்கையில் பம் என்ற சத்ததோடு காற்றுப் போகும்.

ஒரு நாள் இந்தச் சோதனை முடிந்து, மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துவிட்டு, எதற்கோ அவர் எழுந்து போக, சுற்றுமுற்றும் பார்த்தபடி, நான் கை வைத்து அடைத்துக் கொண்டு, ஊதாமல் உறிஞ்சியபடி, கை எடுக்க,மண்ணெண்ணெய் புறையேறக் குடித்துவிட்டேன். அடுத்த சில நொடிகளில் மயங்கியபடி (போதை) உளறியபடி, குடித்ததைக் கக்கி கழிப்பறை(ங்கொய்யாலே, தெருவோரக் கால்வாய்க்கு பேரு கழிப்பறை. பந்தாவப் பாரு) போகவேண்டிய உந்துதல்.

விழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த அம்மா, ஒரு அடி, ஒரு ஆச்சா, ஒரு அடி, ஒரு ஆச்சா என்று லயம் பிசகாமல் செய்த கச்சேரியும், அதற்கு அழாமல் கண்கள் சொருக கிக்கிக்கீ என்று சிரித்ததும், அம்பத்தூர் பட் டாக்டரிடம் தூக்கிக் கொண்டுபோய் அழுதபடி கெரசனைக் குடிச்சிட்டான் என்றதும் லேசாக நினைவில் இருக்கிறது.

வாந்தி எடுத்தானா, கக்கூஸ் போச்சா (இது மாதிரி நிறைய பார்த்திருப்பாரோ)என்று கேட்டு, கவனப் பிசகாக இருந்ததற்கு அவர்களைத் திட்டி, ஒன்னும் பயமில்லை, கொஞ்ச நேரம் தூங்குவான் சரியாகிவிடும் என்று சொல்லி ஃபீஸ் கூட வாங்காமல்(பொழைக்கத் தெரியாத டாக்டர்) அனுப்பியதாக பின்னாளில் அடிக்கடி படிக்கப்படும் குற்ற அறிக்கையில் தெரிய வந்தது.

அதன் பிறகு தீவிர கண்காணிப்பின் பயனாக, காற்றழுத்தம் குறித்த மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட முடியாமல் ஒரு எதிர்கால ந்யூட்டனின் வாரிசு தடுக்கப்பட்டது   சரித்திரமானது. இதற்கெல்லாம் மனம் தளராமல், ஐந்தாவது படிக்கையில், எங்கோ பொட்டலம் கட்டி வந்த பேப்பரில், பல்பின் மேல் காசை வைத்து ஹோல்டரில் பொருத்தி, ஸ்விட்சைப் போட்டால் மெயின் ஃப்யூஸ் போய்விடும் என்ற தகவலைப் படித்ததில் நிஜ‌மா என்று பார்க்க‌ ஆர்வ‌மாய் இருந்த‌து.

உயரம் காரணமாக, மேசை விளக்கில் சோதனை செய்ய முடிவெடுத்து, ஒரு நான்கு அணாக் காயினை லவட்டி பல்பின் மேல் வைத்து பொருத்த எடுத்த பிரயத்தினத்தில், அது வழுக்கி வழுக்கி விழுந்து வெறுப்பேற்ற, மேசை விளக்கைத் தலை கீழாகப் பிடித்து, ஹோல்டருக்குள் காசை வைத்து பல்ப் மாட்டிவிட்டேன்.

ஸ்விட்சைப் போட்டதும் பல்ப் எரியவில்லை. அதே நேரம் ஃப்யூசும் போகவில்லை. பார்த்ததில் பல்பின் ஒரு பக்கக் கம்பி ஹோல்டருக்குள் பொருந்தாமல் பல்ப் கோணிக் கொண்டிருந்தது. ஸ்விட்சை அணைக்க மறந்து, பல்பைக் கழற்றி பார்த்தால் காசு நட்டுகுத்தாக கம்பிகளுக்கிடயில் இருந்தது.

அதை எடுக்கும் பிர‌ய‌த்த‌னத்தில் இர‌ண்டுவிர‌ல்க‌ளும் ஹோல்ட‌ர் க‌ம்பியை அழுத்த‌, மின்க‌சிவாகி ப‌டார் என்ற‌ ச‌ப்த‌ம் கேட்ட‌துதான் தெரியும். வெட்டிய‌ ம‌ர‌மாய் விழுந்த‌தில் என் ம‌ண்டை த‌ரையில் ப‌ட்ட‌ ச‌ப்த‌மா, ஃப்யூஸ் போன‌ ச‌ப்த‌மா என்ற‌ குழ‌ப்ப‌த்தில் கிட‌க்க‌, க‌ட்டையில‌ போற‌வ‌ன் க‌ர‌ண்டு கூட‌வெல்லாம் விளையாடுறானே என்று அல‌றிய‌ப‌டி அம்மா ஓடி வ‌ந்து தூக்கிச் சாத்தின‌தும் கொஞ்ச‌ம் தெளிந்து கேட்ட‌ முத‌ல் கேள்வி, ஃப்யூஸ் போச்சா என்று! இனிமே ஸ்விட்ச் ப‌க்க‌ம் போனியோ கையை உடைத்து விடுவேன் என்ற‌ நிர‌ந்த‌ர‌த் த‌டாவினால் என்னுள் இருந்த‌ ஜூல்சும் எடிச‌னும் காணாம‌ல் போனார்க‌ள்.

ஒன்பதாவது படிக்கையில்,வீட்டில் கோபால் பல்பொடிதான் பாவிப்பது என்ற பாலிசி டெசிஷன் காரணமாக, குப்பைப் பொறுக்கும் ஆட்கள் மாதிரி வீதியோரம் நோட்டமிட்டபடி போவதும் வருவதுமாய் இருந்து ஒரு நாள், இதற்கு மேலும் பிதுக்க முடியாது என்ற நிலையில் கிடைத்த ஒரு பற்பசை பொக்கிஷத்தைக் கண்டெடுத்தேன்.

வீட்டுக்கு வந்து, அந்தச் சுருட்டலை நீவி விட்டு மூடியபடி, சுவாமி விளக்கில் சூடு காட்ட, உள்ளிருந்த காற்று விரிவடைந்து முழு பற்பசை ட்யூப் மாதிரி விரிவடைந்தது. அதற்குள் பாதிக்குக் குறைவாய் நீர் நிரப்பி, அம்மாவிடம் கெஞ்சி அரைக்கரண்டி மண்ணெண்ணெய் வாங்கி, இங்க் போத்தலில் ஊற்றி, மூடியில் ஓட்டை போட்டு காடா விளக்கு செய்துக் கொண்டேன். ஒரு முழு செங்கலை நெடுக்காக நிறுத்தி, ஒரு அரைச் செங்கலை அதன் மேல் நிறுத்தினேன்.

பச்சைத் தென்னை ஓலை ஒன்று கிழித்து, அதன் ஈர்க்கில் மூன்றங்குலத்துக்கு உடைத்து, நடுவில் இரண்டாக உடைத்து 'வி' வடிவத்தில் இரண்டு கற்களுக்கு இடையில் சொருகியாயிற்று. அந்த 'வி'க்கு இடையே பதமாக பற்பசை ட்யூபை தொங்கவிட்டேன்.(அல்ல்லோ! ராக்கெட் லாஞ்சிங் பேடுங்க). இனி, காடா விளக்கைப் பொருத்தி ட்யூபின் கீழ் வைத்தால் சரி.

அம்மா, வெண்ணை, அக்கம் பக்கத்து வாண்டுகள் முன்னிலையில் வான்வெளி விஞ்ஞானி வானம்பாடியின் சோதனையோட்டம் தயார். காற்றில் சுவாலை ஆடுவதால் சூடு பிடிக்கத் தாமதம் என்று சிறு சிறு சீரமைப்புகள் எல்லாம் செய்தும் நேரம்தான் ஓடிக்கொண்டே இருந்ததே தவிர ராக்கெட் கிளம்பக் காணோம். ஒருவரையொருவர் பார்த்து நக்கலாய்ச் சிரித்ததும், இது தேறாது என்று கூட்டம் கலையப் பார்த்ததும் மானப் பிரச்சனையாகிவிட்டது.

இருங்கோ இருங்கோ இதோ கிளம்பிடும் என்று விளக்கை நகர்த்தி நகர்த்தி சுவாலையக் காட்டியபடி, ஒரு கண் ட்யூபின் கீழ் மடிப்பு நீராவியின் அழுத்தத்தில் பிரிவைதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தவாறும், மறுகண்ணில் ஒரு பார்வையாளரைக் கூட என் சாதனையைக் காணாமல் போகவிடுவதில்லை என்ற உறுதியுடனும் இருந்தபடி ஏமாந்த ஒரு தருணத்தில், கொதிக்கும் நீராவியையும், நீரையும் என் கையில் கொட்டியபடி ராக்கெட் கிளம்பியேவிட்டது.

பயத்தில் விளக்கைக் கீழேபோட்டதில் மண்ணெண்ணெய் பற்றிக்கொண்டு தன்பங்குக்கும் கையைச் சுட்டதில், ஒரு பாட்டில் இங்க் ஊற்றியும் எரிய எரிய கொப்புளமும், சாப்பிடமுடியாமல் பட்ட அவஸ்தைகளும் மீண்டும் ஒருமுறை என் அறிவியல் ஆர்வத்துக்கு தடையானதில் அடுத்தொரு அப்துல் கலாமும் அட்ரஸில்லாமல் போனார்.

துபாயிலிருந்து வந்த கடமை வீரர். வந்தாரு. தமிழ்மணத்தில ரெண்டாவது மைனஸ் போட்டாரு போயீட்டாரு. எடுத்துக் கொண்ட நேரம் 3 நிமிடத்துக்கும் குறைவு.
(டிஸ்கி: இதுக்கே கண்ணக் கட்டுதேன்னு அலப்பறை பண்ணுவீங்கன்னு தெரியும். போணியாச்சின்னா மீதி. இல்லன்னா விஞ்ஞானி உருவாகாம தடுத்தது கூட பெரிசில்ல அந்த அவலத்தைக் கேக்கக்கூட மனுசாளில்லையேன்னு போய்க்கிட்டே இருப்போம்ல)