Friday, June 15, 2012

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

நல்லாருக்கியா! நான் நல்லாருக்கேன்! அப்படின்னு கடிதம் எழுதற பாவத்த பண்ணாம நீ போற வரைக்கும் கூட இருந்துட்டன்னு சந்தோஷப் படறதா? இல்ல, ஒரு வேளை அப்படி அமைஞ்சிருந்தா சேர்ந்து இருக்க வாய்ச்சிருக்கக் கூடிய நாள்ள இன்னும் க்ளோசா, சண்டையெல்லாம் இல்லாம இருந்திருப்பமான்னு புரியல.

எப்பவாவது அது எப்பவோ எப்பவாவதுதான் மடில புதைஞ்சிக்கிறப்ப ‘என்ன திடீர்னு அம்மா பாசம் பொங்கறது’ன்னு கை புடிச்சி தள்ளினாலும் மனசு இழுத்து புடிக்குமே அப்படி தோணிப்போச்சு இன்னைக்கு. இந்த நினைப்பு வந்தப்ப நீ பண்ற பருப்பு துகையலுக்கு மனசு ஏங்கித்து. இப்ப ரொம்ப நிஜம்மா நாக்குலயும் அந்த சுவை எப்படி வந்ததுன்னு தெரியல.

டி.யு.சி.எஸ்ல விடியக் கார்த்தால பாலுக்கு போகிறப்ப க்யூல செங்கல் வெச்சிட்டு வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு காஃபி குடிச்சிட்டு புக்கத் தூக்கிண்டு போய் க்யூல நின்னு பத்து பதினோரு மணிக்கா ரேஷன் அரிசி வாங்கி, வரும்போதே பாலிஷ் புடிச்சி அது நாத்த அரிசின்னா இன்னோரு பாலிஷ் அப்புறம் குடம் குடமா அலசி கெரசின் ரேஷனுக்கு போதாதுன்னு சாதம் மட்டும் வெங்கலப் பானையில கும்மட்டி அடுப்புல வைப்பியே. பிடிவாதமா நீ சமைக்கிற வரைக்கும் அப்பா திவசத்துக்கு கூட அதானே. அதெப்புடிம்மா குழையவும் குழையாம விரை விரையாவும் இல்லாம சாதம் வடிச்ச? அது ஒரு ரூபா ரேஷன் அரிசியோ இல்ல பின்னாள்ள கிலோ 12ரூபாயாம்னு சலிச்சிண்ட மூட்டை அரிசியோ அப்படி ஒரு ருசி.

இப்ப மூட்டை ரூ 1800ன்னு பளபளா குக்கர்ல இண்டக்‌ஷன் ஸ்டவ்லயோ கேஸ்லயோ ரண்டு விசில் கணக்குக்கு இறக்கிட்டு அத சாதம்னு சாப்டா சாதம் மாதிரி இல்லையே!

ரசம் பொங்காத ஒரு கண்ணு வச்சிக்கோன்னு சொல்லிட்டு போய் ஆழாக்கோ உழக்கோ துவரம்பருப்பு வாங்கிண்டு வந்து ரண்டு தேங்கா பத்தையோட சேர்த்து மொற மொறன்னு அம்மில ஒரு பருப்பு துகையல் அரைப்பியே. துகையல் சாதம் போக ரசத்துக்கும் மோருக்கும் அதையே தொண்டுட்டு கடைசியா அசடு வழிய ‘ம்ம்மா! கொஞ்சூண்ண்ண்டு துவையல்மா’ன்னு வழிச்சி நக்குவேனே.

டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல ப்ரீமியம் பருப்பு வாங்கி நெய்ல வருத்து மிக்ஸில தாராளமா தேங்கா வச்சு அரைச்சாறது. பார்க்க அதே மாதிரிதான். அதே மொற மொறப்புதான். வாசனையும் ப்ரமாதம்தான். ப்ச்! என்னமோ அந்த டேஸ்ட் வரல!

நாலே நாலு சாம்பார் வெங்காயம், புளி கரைச்சுன்னா கரைச்சுதான் (அந்த வெளுத்துப் போன மிச்சத்த விளக்கு தேய்க்கன்னு எடுத்து வைப்பியே) அதுல என்னத்தச் சேர்ப்பியோ தேன் மாதிரி ஒரு வத்தக் குழம்பு, அந்த டேஸ்டுக்கு கொஞ்சம் கிட்டக்க வருதுன்னு இப்ப கொள்ள காசு குடுத்து க்ராண்ட் ஸ்வீட்ல வத்தக் குழம்பு பொடி வாங்கறேன்.

எப்பப்பாரு வாழைப்பூ உசிலியான்னு சண்டை போட்டிருக்கேனே! சாதத்துக்கும் இதே, ரசத்துக்கும் இதேவான்னு சண்டை போட்டு அப்புறம் மோருக்கும்  அதே போடுன்னு வெக்கமில்லாம கேட்டிருக்கேன். சில நாள் வாழைப்பூ கடலப் பருப்பு கூட்டு, சில நாள் அதோட பெலாக் கொட்டை இல்லன்னா கருவடாம்னு சேர்த்து போட்டு ஈன்னு இளிப்போட கலவை கலந்தா, வண்டிக்காரன்மாதிரி குழைக்காதன்னு பொட்டுன்னு துடையில அடி விழும்.

இப்பல்லாம் வாழைப்பூவ பார்த்தா சோகமா நழுவிடுவேன். அதென்னமோ உசிலல பருப்பு அதிகமா இல்லன்னா பூ சக்கையான்னு அமைஞ்சு சண்டைதான் வரும்.

லீவு நாள் வந்தா சாயந்திரம் நாலு மணிக்கு அநேக நாள் உன்ன நினைக்காம முடியலம்மா. வேலைக்குப் போற வயசில்ல. எப்பவும் அடி வயத்துல தீயா பசிக்கிற வயசு. போக வர எதாவது தின்னக் கிடைக்குமான்னு அலையற மனசு. ஒரு மணிக்கு ரெண்டாம் வேளை மோர்சாதம் குழைச்சா மாதிரியா பிசைஞ்சு கைல குடுத்து தூங்கினா 3 மணிக்கு காஃபி வாசனைக்குதானே எழுந்திருக்கேன்.

அந்தக் கிறக்கத்துலயே வாய் நம நமன்னு டிஃபனுக்கு ஏங்கும்! ரண்டு கை புழுங்கரிசி போட்டு வறுக்கறப்ப என்ன பண்ணப் போறயோன்னு ஒரு தவிப்பா இருக்கும். அப்புறம் ஒரு கை உளுந்து தனியா வறுத்து கல் இயந்திரத்துல கட்டைய அடிடான்னு ஆர்டர் போட்டு அதை அரைச்சு தனியா சம்புடத்துல எடுத்து வச்சிட்டு ஒம்பாட்டுக்கு வாசல்ல போய் உக்காந்துடுவ. பசின்னு கேக்கவும் தயக்கம். அப்புறமா எழுந்து வந்து வறுத்த புழுங்கல் அரிசில ஒரு ஸ்பூன் நெய்யும் ரண்டு ஸ்பூன் சக்கரையும் ஒரு கப்புல போட்டு இந்தான்னு குடுக்கறதோ இல்லன்னா உளுந்து மாவுல வெல்லத்தையும் சுக்கையும் பொடிச்சி போட்டு அளவா ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி உருண்டை பிடிச்சி ரண்டுதான்னு சொல்லிட்டு தப்பா மூணு குடுப்பியே. அதத் தின்னா அப்புறம் ரண்டு மூணு டம்ப்ளர் தண்ணி கேக்கும். வயறு திம்முன்னு ஆயிடும்.

ஏழேகால் ந்யூஸ் முடிஞ்சதும் ரண்டு தோசைக்கு மேல திங்க முடியாது. வெயில் காலம்னா 4 மணில இருந்து தண்ணி ஊத்தி குளுகுளுன்னு ஆக்கின வீட்டு வாசல் தரையில, குளிர் காலம்னா பனி இறங்காம பெட்ஷீட்ட நாலு மூலைல கட்டி அதுங்கீழன்னு ஒரு தூக்கம் வருமே. பெட் இருக்கு! ஏஸி இருக்கு. புழுங்கல் அரிசி உளுந்தும் இருக்கு. எழவு அந்த பசியும் இல்ல. நீ பண்ணின படிக்கே பண்ணாலும் அந்த ருசியும் இல்ல. அப்புடி தூங்கின தூக்கமும் இல்ல.

வேலைக்கெல்லாம் போய் கொஞ்சம் வசதி ஆனதும் நீ மோசமாயிட்டம்மா. உளுந்து அப்பளம், அரிசி அப்பளம்லாம் கடைல வாங்க ஆரம்பிச்சிட்ட. உளுந்து அப்பளம் பண்றப்போ, அரிசி அப்பளம் பண்றப்போ, வடாம் போடுறப்போன்னு அந்த மாவ ஆட்டைய போட்டு தின்றப்ப திட்டினாலும் அந்த வேளைக்கு சோத்து செலவு மிச்சம்தானே. அட செலவ விடு உளுந்து அப்பள மாவு மேல் அண்ணத்துல ஒட்டிக்க நாக்கால எடுக்க முடியாம விரல விட்டு வழிச்சி ‘கடா மாடு வயசாச்சு! எச்சை பண்ணுவியான்னு’ பளீர்னு முதுகுல விழுந்தாலும், லேசா அந்த விளக்கெண்ணெய் கசப்பும், சீரகமும் உப்புமா அந்த டேஸ்டும், வடாத்து மாவோட புளிப்பு காரமும் எத்தனை கொட்டிக் கொடுத்தாலும் க்ராண்ட் ஸ்வீட்ல கூட கிடைக்காதே!

தட்டைன்னு ஒன்னு பண்ணுவியே. வேஷ்டிய விரிச்சி போட்டு அதுல தட்டி பொரிச்சு எடுத்தா கடிக்கறப்பவே கரைஞ்சு போகுமே. அதுல வெடுக் வெடுக்குன்னு வேர்க்கடலையும் கடலப் பருப்புமா.  ம்ஹூம். அதென்னமோ பால்கவர் பின்னாடி தட்டின வரட்டியை தட்டைன்னு திங்க மனசு ஒப்பல.

அப்பா திவசத்தன்னைக்கு ராத்திரி பலகாரம்னு எப்பவாவது பண்ணி இருக்கியா? நீ பண்ண எள் உருண்டை, ரண்டு வடை, நாலு அதிரசம். ‘சனியனே! தின்னதும் வயத்த தடவாதன்னா கேக்கறியா’ன்னு அடி வாங்குவேனே. என்னமோ! நானும் காசு பாக்காம சமையல்காரிய வச்சுதான் பண்றேன். உன் திவசத்துக்கு எள் உருண்டை, அதிரசம்னு இலைல வைக்கிறப்ப என்ன அறியாம சாரிம்மான்னு சொல்லிப்பேன். அதிரசம் நான் திங்கறதே இல்லைம்மா இப்ப.

என்னன்னமோ சுக்காங்கீரை பருப்பு, புளியம் பிஞ்சு துவையல், புளியந்துளிர் பருப்பு, புளிச்சக் கீரை பருப்பு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ், குஸ்கா, புலாவ், குருமான்னு அது ஒரு ருசியாத் தின்னாலும் இப்படி ஏங்க வைக்கிறதில்லை.

சின்ன வயசுல சில ஸ்பெஷலான மாசக் கடைசில கதம்ப சாதம்னு ஏமாத்தி குழம்பு சாதம், ரசம் சாதம், மோர்சாதம்னு கலந்து வச்சிண்டு இதுக்கு அது தொட்டுக்க அதுக்கு இது தோட்டுக்கன்னு மாத்தி மாத்தி காம்போ வச்சி கைல போட்டு தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு கேள்வியே வராதபடிக்கு போடுவியே. வேலைக்கு போன அப்புறம் தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு சண்டை போட தோணித்தே தவிர இப்படி போடுமான்னு கேக்க தோணலையே.

ரொம்ப வருஷம் கழிச்சி நீ போய் சேர்ந்து ஒரு வருஷத்துல ஒரு நாள் ப்ரியாம்மா இங்க வந்தப்ப சமைச்சு அப்படி சாப்பாடு குடுத்தா.குருடனுக்கு கண்ணு தெரிஞ்சி திரும்ப குருடானா மாதிரி இருக்கு.  அப்புறம் ரண்டு வாட்டி வந்தும் அந்த பக்கிக்கு இதுக்கு ஒழியல.

இந்த காசு, பணம், பதவி, பவுசு எல்லாம் என்னத்துக்கு? திரும்ப ஒருவாட்டி உனக்கு பிள்ளையா பிறந்து ஓட்டு வீட்டுல இப்படி ரேஷன் அரிசின்னாலும் பத்தியும் பத்தாம ருசியா சாப்டு அதே சந்தோஷத்துல போய் சேர்ந்துடணும்போல இருக்கு.

வித் லவ்

உம்புள்ள