Showing posts with label கேரக்டர். Show all posts
Showing posts with label கேரக்டர். Show all posts

Tuesday, January 10, 2012

கேரக்டர் : வைத்தி மாமா

வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு.

வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம்.

பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள்.

வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும்.

பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார்.

‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது.

பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று.

வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு.

மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும்.

அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார்.

சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று.

திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.

Friday, September 30, 2011

கேரக்டர் - அப்துல்லா குட்டி

அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று கூடத் தோணலாம். எனக்குமே கூட அந்த வயதில் அவரின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததாக உணர்வில்லை. ஆனாலும் அவரில் ஏதோ ஒன்று இருந்தது. இல்லையெனில் பதவிக்காகவேயன்றி ஒரு மனிதனாக அத்தனை பேரின் நேசிப்புக்கும் ஆளாயிருக்க முடியாது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு குட்டியை நான் வேறு விதமாக புரிந்துக் கொள்ள முடிகிறது. குட்டி அப்படி ஒன்றும் கவர்ச்சியான மனிதனும் இல்லை. நல்ல உயர அகலம். அதற்குச் சற்றும் பொருந்தாத சிறிய வட்டமுகம், பெரிய வாய், கருத்துத் துருத்திய கனத்த உதடுகள், பரந்த மூக்கு, பரந்த நெற்றியில் மேலேறித் தொடங்கும் சுருள் சுருளான முடிகள் என்று ஒரு கற்கால மனிதனை நினைவூட்டக் கூடும் உருவம். ஆனாலும், கலகலவென்ற பேச்சும், நொடிக்கு நொடி பகடியும் சிரிப்புமாக சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் மனிதன்.

முதல் சந்திப்பின் அறிமுகத்திலேயே அவரின் வயிற்றுக்கு சற்றே உயர்ந்திருந்த என்னை கிண்டல் செய்தபடிதான் அறிமுகமானார். பதவியில் எனக்கு அடுத்த உயர்நிலையானாலும், அதிகாரத்தில் எனக்கு கட்டுப்பட வேண்டிய நிலை. ‘சாரே! நிங்கட ஹைட்டுக்கு எனிக்கு உக்காந்து குட்மார்னிங் சொன்னா போறே! ஆனா அது மரியாதையில்லை கேட்டோ. பின்னே ஞான் சார்னு பிள்ளார்னு தூக்குன்னது மாதிரி தூக்கி கொஞ்சி குட்மார்னிங் பறயட்டே’ என்றால் சிரிக்காமலா இருக்க முடியும்? முதல் சந்திப்பில் முதல் டீயோடு மனைவியும், முதலாண்டு இஞ்சினியரிங் படிக்கும் மகனும் ‘நாட்டில்’ இருப்பதாகச் சொன்னார்.

குட்டி சார் வந்தால் அலுவலகம் கலகலப்பாகிவிடும். ஒவ்வொருவராக போய் வம்பிழுத்து சிரிக்கவைத்து எல்லோரோடும் ஒரு அன்னியோன்னியத்தை உருவாக்கியிருந்தார். பலரின் உடல் மொழியில் ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவருடைய அலுவலர்கள் மத்தியில் அவர் ஒரு தேவன். குளிர் பிரதேசம். பெரும்பாலும் அந்தக் காட்டைச் சேர்ந்த மக்கள். குடி என்பது அவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. சில நேரம் போதையில் விபத்துக்கு ஆளாவார்கள். ரூல் படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும், குடிபோதையில் பணியில் இருந்ததற்காக வேலை போகும் அபாயமும் உண்டு. குட்டி அப்படியான தண்டனைகளை நிகழவிட்டதே இல்லை என்பார்கள். அவசர சிகிச்சைக்குப் பின், மைசூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டரிடம் பேசி இஞ்சுரி ஆன் டூட்டி கொடுத்துவிடுவார். தேறி வரும் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். 

என் தனிப்பட்ட உதவிக்காக இருந்த நஞ்சப்பன் கூறிய தகவல்கள் இவை.  ‘சார், கல்யாணம் வச்சிருக்கேன்னு போய் நின்னா போதும் சார். அவங்க அவங்களுக்கு ஏத்தாமாதிரி தேவையானது கிடைக்கும். கலியாணத்துக்கு முதல் நாள் கூப்பிட்டு என்னவாச்சும் வேணுமான்னு கேப்பாரு. அண்ணன் தம்பி இல்லைன்னே கவலை இல்ல சார். ஆளுங்கள கூப்புட்டு நீ இது பண்ணு, அந்த வேலை பாருன்னு சொல்லீடுவாரு. பேச்சு வார்த்தை இல்லாதவன் கூட குட்டி சார் சொன்னா செய்யாம இருக்கமாட்டான். ஒரு அஞ்சாரு வருஷம் இருக்கும் சார். குட்டி சாருக்கு ட்ரான்ஸ்ஃபர் போட்டாங்க. கூலி வேலை செய்யறவன் கூட வரலை சார். ஒரு நாள் முழுக்க வேலை செய்யாம கேன்ஸல் பண்ண வச்சிட்டோம்.’

ஆனாலும் குட்டியை இரண்டு பேருக்கு மட்டும் பிடிக்காது. தன்னைத் தவிர மற்றவரெல்லாம் ’அரிசிக்கரே கள்ளரு’ என்ற அபிப்பிராயம் கொண்ட அக்கவுண்ட்ஸ் லக்ஷ்மி நரசிம்மன், லட்சம் என் அப்பா சேர்த்தது, அதுக்காக நான் சம்பளத்தை மட்டும் நம்ப முடியுமா என்றிருந்த டைப்பிஸ்ட் கிருஷ்ண மூர்த்தி. எல்லாம் திருடனுங்க. பினாமில காண்ட்ராக்ட் எடுத்து நம்மளுக்கு ப்ரஷர் குடுப்பாங்க என்ற சலிப்பு லக்ஷ்மி நரசிம்மனுக்கு என்றால், பில், அக்ரிமெண்ட் டைப் பண்ண 50ரூபாய்க்கு மேல் தருவதில்லை என்ற கடுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு. 

லக்‌ஷ்மி நரசிம்மனின் பார்வையில், ’குடித்தான்ரீ அவனு! கிளப்பினல்லி ஹோகி, சன்னாகி குடுதுபிட்டு பாக்கி ஆடுத்தான. லோஃபர் நன்ன மகா.. கேஷுவல் லேபர் ஹுடுகிகளு லீவ் பேக்கு சாரந்த்ரே ரெஸ்ட் ஹவுசிகெ பாந்த ஹேள்தான. அவனு சகவாசா பேடாரீ நிம்மகே (குடிப்பாங்க அவன். க்ளப்பில் போய் குடித்துவிட்டு, சீட்டு ஆடுவான். பெண் பித்தன். தினக்கூலிப் பெண்கள் லீவ் கேட்டால் ரெஸ் ஹவுசுக்கு வான்னு சொல்லுவான். அவன் சகவாசம் உங்களுக்கு வேண்டாம்) என்றார். 

பின்னொரு நாள், ராமன் நாயர் கடை வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மூன்று பெண்கள் வந்தனர். கேஷுவல் லேபர்கள்தான். குட்டி சாருக்கு வணக்கம் சொன்னதும், எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி, வழக்கமான இடிச்சிரிப்போடு,  ‘சினிமால நடிக்கப் போறீங்களா? மேக்கப்பெல்லாம் பலமா இருக்கு?’ என்றவருக்கு நாணிக் கோணி,  ‘இல்லா சார்,  சினிமாக ஹோக்திவி சார். லீவ் பேக்கு சார்’ (சினிமாக்கு போகிறோம் சார். லீவ் வேண்டும் சார்) என்றார்கள். ‘ஹோகாணா ஹோகாணா! ரெஸ்ட் ஹவுஸிக ஹோகுரி பர்த்தினி’ (போலாம் போலாம் ரெஸ்ட் ஹவுஸுக்கு போங்க வரேன்) என்று அனுப்பிவிட்டு, உடலை முறுக்கி ‘பின்ன நோக்காம் சாரே. நன்னாயிட்டு ஒரு மஸாஜ் எடுத்து குளிச்சிட்டு, வீட்டினு போயால், மீன் கறியும், கோழியும் இருக்கும்’ என்று கண் சிமிட்டிவிட்டுப் போனார். சரிதான். லக்ஷ்மி நரசிம்மனுக்கு காமாலைக் கண் இல்லை போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.

பின்பொரு நாள் டவுனில், குட்டியின் ஸ்கூட்டரில் ஒரு இளம்பெண்ணோடும் நான்கு வயது சிறுவனோடு பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி ‘சாரோட சின்ன வீடு’ என்று அறிமுகம் செய்தான். குட்டி சார் இன்னும் இரண்டு படி கீழிறங்கினார். வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகியும், குவார்ட்டர்ஸ் கிடைக்காமல் சமைக்க முடியாமல் மழையில் மெஸ்ஸுக்கு போவதும் முடியாமல், நஞ்சப்பன் கொண்டு வரும் ஆறிப்போன சாப்பாடுமாய் இருந்த நிலையில் ஒரு குவார்ட்டர்ஸ் கிடைத்தது. கிருஷ்ணமூர்த்தியும் பேச்சிலர் என்பதால் ஷேர் செய்து கொள்வது வசதியாக இருந்தது. அடுத்த குவார்ட்டர்ஸ் குட்டியின் நெருங்கிய நண்பரான ராமச்சந்த்ரன் நாயருடையது.

அது கட்டுமான அலுவலகம் என்பதால், எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர் காலையில் சைட் இன்ஸ்பெக்‌ஷன், அது இது என்று அலைந்து விட்டு அலுவலகம் வருவதே பெரும்பாலும் மாலை ஐந்து மணி ஆகிவிடும். அதன் பிறகுதான் அலுவலகம் வேலை தொடங்கி இரவு ஒன்று இரண்டு என்று நடக்கும் என்பதால், பகல் போதில் அவரவர் வசதிக்கு வந்து வேலை பார்ப்பது வழக்கம். பெரும்பாலும் பக்கத்து குவார்ட்டர்சில் சீட்டுக் கச்சேரி காலை பத்து மணிவாக்கில் தொடங்கிவிடும். சும்மாவே அதிரச் சிரிக்கும் குட்டி சாரின் குரல், சரக்கும் சேர்ந்துவிட்டால் குவார்ட்டர்ஸ் அதிரும். முன்னூரு ரூபாய் அதிகம் வருமென்று இந்தக் காட்டிற்கு ப்ரோமோஷனில் வந்த எனக்கு, ஒரு ஆட்டத்துக்கு 200, 500 என்று ஆட்டம் நடப்பது நம்ப முடியாததாகவிருந்தது.

அதிக பட்சம் 50ரூ கேம் ஆடுவான் கிருஷ்ணமூர்த்தி. ஒரு நாள் இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது குட்டி சாரின் கிளப் கதையோடு சின்ன வீட்டின் கதையும் சொன்னான். நகரின் பெரிய பணக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப் அது. ரெஸ்ட் ஹவுஸ் குட்டி சாரின் பராமரிப்பில் இருந்ததாலும், மத்திய அரசின் ஒரு மூத்த அதிகாரி என்ற சலுகையும் அவரை உறுப்பினராக்கியது. சீட்டாட்டம் என்பது அங்கே வெறும் ஆட்டம் மட்டுமில்லை. அந்தஸ்தோடு சேர்ந்த விஷயம். பிஸினஸ் போலவே அங்கும் நாணயம் முக்கியம். குறைந்த எண்ணிக்கை சீட்டு எடுப்பவர் போடுவதுதான் பந்தயம். முடியாது என்று எழுந்திருந்தால் ஒரு மாதம் சஸ்பெண்ட் என்பதோடு, இன்ஸால்வென்ஸி கொடுத்ததற்குச் சமமான சமூக மதிப்பு. கையில் காசில்லை என்றால் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தால் போதும். பணம் கொடுக்க அடுத்த நாள் வரை டயம் தருவார்கள். தவறினால் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பதான காட்டு விதிகளுடன் கூடிய க்ளப்பாம். 

சபிக்கப்பட்ட ஒரு நாளின் இறுதியில் குட்டிசாருக்கு ரூ 50000 கடன் ஆனது. அடுத்த நாள் கொடுத்தாக வேண்டுமாம். வங்கியிலும் இருப்பில்லை. செய்வதறியாது வீட்டில் இருந்தவரை வீட்டுச் சொந்தக்காரரின் மகள் காரணம் கேட்டிருக்கிறாள். போதையில் நடந்ததைச் சொல்லி அழுதவரை தன் நகைகளைக் கொடுத்து விற்றுக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாளாம். அவள் ஒரு செக்ஸ் ஒர்க்கராக இருந்தாள் என்றும் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. நகையை விற்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, மிகுந்த பணத்தில் சீட்டாட உட்கார்ந்த குட்டியின் மடியில் அதிர்ஷ்டதேவதையும் அமர்ந்தாள் போலும். அன்றைய ஆட்டத்தின் முடிவில் குட்டியின் வெற்றி தந்த பரிசு இரண்டரை லட்சமாம். தான் அந்த ஊரில் இருக்கும் வரை தன்னோடு மட்டுமே இருக்க வேண்டும் என்ற உடன் படிக்கையில் அந்தப் பெண்ணுடன் இருப்பதாகச் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. 

சோம்பலான ஒரு ஞாயிறன்று ராமன் நாயர் கடைக்கு காலை டிஃபனுக்குப் போனபோது பத்து மணியிருக்கும். ’தோசா இல்லா சாரே. இரிக்கு. அஞ்சு மினிட்டில சப்பாதி தரும்’ என்று  காத்திருந்தபோது ‘எடோ நாயரே!’ என்ற குட்டியின் குரல். அதிகபட்ச போதை. கையில் ஒரு பை. வழக்கமான, இடி சிரிப்புடனான குட் மார்னிங் டி.ஏ. சார் இல்லை. நான் இருப்பதைக் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘இதில் கரி மீனும், கோழியும் உண்டு. ச்சோறு இவிடதன்னே. கேட்டோ. ஞான் இப்பத்தன்னே வராம்’ என்று கொடுத்துவிட்டுப் போனார்.

என்ன ராமண்ணா, காலையிலயே இன்னைக்கு என்றேன். எண்ட குருவாயூரப்பண்ட களி சாரே. இன்னு ஞான் மாட்டி. எப்பவோ செத்திருக்கணும் இந்தாளு. போயிருந்தா நன்னாயிட்டிருக்கும். பெரிய ப்ரிட்ஜிலிருந்து விழுந்து கால் மட்டும் உடையுன்னது இப்படி ஜீவிக்கான் வேண்டியோ சாரே. ரண்டு வாரம் ஊர் முழுக்கத் தேடி சாரே. பின்னே நொண்டி நொண்டி வந்தது ஆளு. காட்டிலிருக்குன்ன ஜனங்கள் வைத்தியம் பார்த்தது கொண்டாணு ஆயாளு ஜீவிச்சு. பின்னே கொறே விஷயம் நடந்து போயி.

உடம்பு முழுக்க ரோகம் சாரே. ரண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்நு. குடலும் கெட்டுப் போயி. பீப்பீ, சக்கரா எல்லாமுண்டு. உப்பு கூடாது, சக்கரை கூடாது. மாமிசம் கூடாது. குடிக்கக் கூடாது. சொன்னாக் கேட்டாதானே. ‘பின்னெந்தாடா ஜீவிக்கணும்’ என்னு களியாக்கும் சாரே. நாட்டிலிருந்து மோன் வந்திருக்கும். காசு வேண்டி. அதாணு இப்பமே ஆரம்பிச்சு. இனி வந்து குடியும் அழுகையும் எண்டே ஈஸ்வரா. சாரு அறியுமல்லே. இவிட உள்ள பெண்குட்டி சார்னு சின்ன வீடுன்னு பறையும் மக்களு. அதல்லா சாரே நிஜம். அது ஒரு பாவப்பட்ட குடும்பம். பெரிய மோளுக்கு தீராத்த ஒரு ரோகம். இவள் சின்ன வயசிலேயே தெற்றிப் போயி. அச்சனுக்கு சுகக்கேடாணு. குட்டி சார் இவிட வரும்போ என்னொத்த பிராயம். 

ஆபீசு பணியல்லல்லே. எப்பவோ போகும். எப்பவோ வரும். தாமசிக்கான், சோறுண்ணான் வேண்டி அவருடே வீட்டில் கேறி. சாரு அறியுல்லே குட்டி சாரிண்டே சீட்டுக் களியிண்டே பிரபாவம். அது நிஜமாணு. பின்னே ஆ பெண்ணு யாரோடோ கர்ப்பமாயி. அவளுக்கு அபார்ஷன் செய்யானு வழியில்லான்னு பறஞ்சு டாக்டர்மாரு. இவனுக்கெந்தா பற்றி சாரே. மணிப்பாலிலே கொண்டு எத்தி. ப்ராந்தணாணு சாரே இவன். கலியாணம் கழிச்சில்லா. அவளினு கூட்டிக் கொண்டு போய் ஒரு வீடு உண்டாக்கி கொடுத்து அவிடயா தாமசிக்குண்ணு. இவிட எல்லாரும் பேசுன்னது ஆயாளு அறியும். பின்னே யாரும் நேரே சம்சாரிக்கானில்லல்லோ. அத்தர பயமா குட்டி சாருனு கண்டெங்கில். பின்னே நூறு கதை சம்சாரிக்கும். தூ. 

எனிக்கறிஞ்சி பின்ன ஒரே ஒரு தரம் நாட்டிக்கு போயி சாரே. எந்தாயி, ஏது சமாச்சாரம் ஒன்னும் பறையில்லா ஆயாளு. ‘நாயரே. இனி ஞான் நாட்டிக்கு போகுல்லடே’ன்னு மாத்ரமா பறஞ்சது. பின்னே ஆரம்பிச்சதாணு தினம் குடி. மோன் வரும். வெறும் ஃபீஸ், ட்ரெஸ்ஸுக்கு மாத்திரம் அம்மை சொன்ன எமவுண்ட் வேண்டிப் போகும். சொந்த மகனல்லே. அவன் வந்நு போயால் இவிடத்தன்னே சாரிண்டே களி. நீ போய்க்கோ சாரே. ஒரு பாடு ஜோலியுண்டு. வரும்போ மீன் கறி ரெடியாட்டிருக்கணும் என்றனுப்பி வைத்தார்.

பின்னெப்போதும் குட்டி சாரை தரக்குறைவாக நினைக்கத் தோன்றியதில்லை. ட்ரான்ஸ்ஃபரில் கிளம்பி வரும்போது, ஸ்டேஷனுக்கு வந்து கிளம்பும் சமயம் இறுகக் கட்டிக் கொண்டு, ‘சாரே! என்னே மாத்ரம் மறக்கரிது கேட்டோ! வி ஹேட் அ நைஸ் டைம்’ என்றபோது உடைந்துவிட்டேன். ‘இதெந்தினா அய்யே! சாரு வரும்போ செறிய குட்டியாணு. இப்போ கல்யாணம் கழிஞ்சல்லே சார்னு. அழுன்னது கண்டால் பெண்டாட்டி சிரிக்கும்’ என்று இடிச்சிரிப்போடு அனுப்பி வைத்தார்.

நஞ்சப்பன் மட்டும் வரும்போதெல்லாம் சந்திப்பான். இரண்டு வருடம் கழித்து சந்தித்தபோது வழக்கம் போல் குட்டி சாரை விசாரித்தேன். ‘தேவுரு இல்லா சாரே. சாரு சத்தோகிபிட்ரு’ என்றான். சாவா அது. பெரிய பாலத்திலிருந்து விழுந்து காப்பாற்றிய உயிரை இப்படிப் பறிக்கத்தானா? மோட்டார் ட்ராலியில் சரிவில் போகும்போது ஒரு ஜெர்க்கில் வீசி எறியப்பட்ட குட்டி சாரையும், அவரைக் காப்பாற்றப் பாய்ந்த ராமச்சந்திரன் நாயரையும் கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிற கரும்பு மாதிரி சிறுகச் சிறுக சிதைத்ததாம் ட்ராலி. . ‘சார் மாடித்து ஏனில்லா சாரே. குட்டி சார் ஹெண்த்தி பந்தவரே. செட்டில் மெண்ட் ஹணா மொத்தம் இவளிக கொட்டோகிபிட்ரு சார்’(சார் பண்ணினது ஒன்னுமில்லை சார். அவர் மனைவி கிடைத்த செட்டில்மெண்ட் பணம் மொத்தம் இந்தம்மாவுக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க சார்). கம்பாஷ்னேட் அப்பாயிண்ட்மெண்ட்டு பேடாந்துபிட்ரு சார் (அவர்களுக்கோ பையனுக்கோ அனுதாப அடிப்படையில் வேலை கூட வேண்டாமென்று விட்டார்கள் சார்)’ என்றான்.

அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? இத்தனை வெறுப்பு ஏன்? குட்டிக்கு ஏன் இப்படி ஒரு முடிவு? இப்படி ஒரு வாழ்க்கை? ஒரு வேளை ‘தேவுரு இல்லவா சாரே?’

Friday, July 1, 2011

கேரக்டர் மீனாட்சி.


அறைக்கு வெளியே சிவப்பு விளக்கைப் போட்டுவிட்டு மதிய உணவிற்குப் பின் சாய்ந்திருந்தேன். மெதுவே கதவைத் தட்டும் ஓசை. சற்றே திறந்த கதவிடுக்கில் எட்டிப் பார்த்தது ஒரு பெண் முகம். மலர மலர தொந்தரவு பண்ணிட்டேனாடா கோந்தே! ஒன்னாம்படையாளப் பார்த்தேன். இங்க இருக்கன்னு சொன்னா. பார்க்காம போக மனசு வரலை என்றபடி மூச்சிரைக்க வந்தார் மீனாட்சி மாமி. 

மீனாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் பெரிய போராட்டமே நடக்கும். பேசும்போதே ஒரு குற்ற உணர்ச்சி தொத்திக் கொள்ளும். இந்த வாத்ஸல்யம் காட்டக் கூடியவனா நான் என்ற குறுகுறுப்பு வந்தடையும்.

14 வயதில் அந்தத் தெருவில் குடி போனபோது ஒரு மாமிச மலை போல் வீட்டின் வாசற்படியருகில் உட்கார்ந்த மாமி கேட்டார், “புதுசா வந்துருக்கேளாடா அம்பி?”. அம்மாவிடம் வந்து சொன்னபோது நான் வைத்த பெயர் குண்டு மாமி. குண்டு மாமியின் பெரிய மகள் மீனாட்சி மாமி. அப்பாவின் அலுவலகத்தின் இன்னோரு ப்ரான்ச்சில் டைப்பிஸ்டாக இருந்தார். 4 வயதிலும் ஒரு வயதிலும் மகள்கள். அவர் தங்கை கல்யாணி என் பள்ளியில் ஒரே வகுப்பு. இரண்டு தம்பிகள். இரண்டாவது மகள் பிறந்து ஒரு வாரத்தில் மார்பில் வலி வர தனக்கு இதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது மீனாட்சிக்கு.

திருவல்லிக்கேணியில்தான் புகுந்தவீடு. கூட்டுக் குடும்பம். மாமியார், விதவை நாத்தனார், அவர் மகன், கலியாணமாகாத இன்னோரு நாத்தனார். கணவரும் ரயில்வேதான். குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துப் போனவர். புண்ணியாசனத்துக்கூட வரவில்லை. இருதய நோய். ஹார்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும். குழந்தை பிறந்திருப்பதால் 3 மாதம் கழித்துச் செய்யலாம் என்பது மருத்துவரின் முடிவு.

எங்கே வந்தால் ஒரு வேளை ஆபரேஷனில் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு பெண்களைத் தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்தாரோ அல்லது அம்மாவின், நாத்தனாரின் அட்வைஸோ தெரியவில்லை. வரவேயில்லை. பெற்றோர் போய் அழைத்தபோது சீக்காளிப் பெண்ணைத் தலையில் கட்டிவிட்டதாக மாமியாரும் நாத்தனாரும் போட்ட கூப்பாட்டில் நொறுங்கிப் போய் வந்தார்கள் பெற்றவர்கள். 

மகளிடம் சொல்லவும் முடியாமல், அறுவைச்சிகிச்சைக்கு முடிவெடுக்கவும் முடியாமல் தவித்த தவிப்பு யார் அறியக்கூடும். வெள்ளந்தியான மனுஷியானாலும் கட்டினவளுக்குத் தெரியாதா கணவனின் அந்தரங்கம்? உறங்க முடியாத ஒரு இரவில் அப்பாவைக் கேட்டாளாம். நோவாளிப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாளாப்பா? விடுப்பா, பகவான் இருக்கான். போய்ச் சேரணும்னு விதியிருந்தா ஒனக்கு காலம் கெட்ட காலத்துல இன்னும் ரெண்டு கொழந்தைன்னு வளர்த்து விடுப்பா. எப்படியும் என் பென்ஷன் வரும். அதுக்காவது யாராவது வளர்த்து விடுவா என்று பொட்டுக் கண்ணீரில்லாமல் பேசறா மாமி என்று குண்டு மாமி அழுதாள். 

ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளே வாழ்க்கையாய் இருந்தாள். போய்விடும், வேறு பெண்ணைக் கட்டலாம் என்று காத்திருந்த ஏமாற்றமோ, அம்மா மண்டையைப் போட்டதும் சொந்த வீட்டை விற்று பங்கு வேண்டும் என்று மல்லுக் கட்டிய சகோதரி மேல் வெறுப்போ, ஏழு வருடங்களுக்குப் பிறகு தேடிவந்தான் புருஷன்.

தனியாகப் போகும் வரை வீட்டோடு இருக்கவும் சம்மதம் என்று வந்தபோது இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது மகளின் வாழ்க்கையில் வசந்தம் என்ற பூரிப்பில் இருந்தனர் பெற்றவர்கள். இரண்டு மாதம்தான். சாயம் வெளுத்தது. ரேஸில் கடன். சம்பளம் வட்டிக்குப் போதவில்லை. பிரிந்த சோகத்தை சேர்த்து வைத்து கொட்டிய பிரியத்தில், மீனாட்சி மீண்டும் கர்ப்பமானாள். தாலி ஒன்றை விட்டு மொத்த நகையும் அடமானத்துக்கு என்று கொண்டு சென்றவன் சென்றவன்தான்.

ஏமாந்தோம் என்பதை விட, காலம் கெட்ட காலத்தில் வயிற்றில் பிள்ளையோடு என்ன செய்வாள் மீனாட்சி? இதய அறுவைச்சிகிச்சை ஆன உடம்பு. முதிர்ந்த வயது கர்ப்பம். பிரசவிப்பதில் ரிஸ்க் கம்மி என்பது டாக்டர்களின் அறிவுரை. அதையும் தாங்கியது அந்த இதயம்.

பிள்ளை பிறந்தான். ஒற்றை ஃபோனில், ஒரு ரூபாய் காசில் புருஷனைக் காலரைப் பிடித்து உலுக்கலாம். அதிகாரிகளிடம் முறையிடலாம். டைவர்ஸ் கேஸ் போடலாம். எதற்கும் தயாரில்லை அவள். பொறுப்பான பிள்ளைகள். நன்கு படித்தார்கள். மூத்தவளுக்கு போர்ட் ட்ரஸ்டில் வேலை கிடைத்தது. அடுத்தவள் ப்ளஸ் ஒன் போனாள். பையனும் பள்ளியில். 

கடன் கட்ட வேறு வழியின்றி வீட்டை விற்று அக்காளின் அடாவடிக்கு மீதியைக் கொடுத்து திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூமில் இருந்தவருக்கு பெண்டாட்டி பிள்ளைகள் கவனம் வந்தது. சிகரட்டின் பரிசாக டி.பி.யும் வந்து போயிருந்தது. வீடு தேடி வந்து அழுதார். நகைக்காக வந்திருந்தா சாரி! பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா. அவ சம்பளத்த சேர்த்து வச்சி கரையேத்தணும். அவ சம்பளத்துக்கும் சேர்த்து ஆசைப்பட்டு வந்திருந்தா இப்படியே வெளியே போங்கோ என்று அவ்வளவு நிதானமாக பேசினாள் மீனாட்சி.

என்னவானாலும் பெண்தானே. நொறுங்கிப் போய் அழுதவனை உள்ளே போங்கோ என்றாள். கஷ்டகாலம் தொலைந்தது என்று விட்டால் கடவுள் இருப்பதை யார் நினைப்பார்? இரண்டாவது மகள் ப்ளஸ் டூ வந்தும் வயதுக்கு வரவில்லை. எத்தனை ஹார்மோன் ஊசி, மருந்து எதுவும் பலிக்காமல் இன்னோரு குண்டுமாமியாக வளர்ந்தாள் அவள். மூத்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தாலும் இவள் பெரிய பாரமாகிவிட்டாள். இரண்டு வருடத்தில் கணவனும் போய்ச் சேர்ந்தான். கருணை அடிப்படையில் சின்னவளுக்கு வேலை கிடைத்தது. 

இப்படி ஒரு சூழலில்தான் என்னைத் தேடி வந்தார். கணவனின் பென்ஷனோடு கொடுத்த அகவிலைப்படி தவறு என்று பெரிய தொகையை பிடித்தம் செய்து வந்தார்கள். அதை எதிர்த்து மனு கொண்டு வந்தார். பிடித்தம் செய்யக் கூடாது என்று ஆணை வழங்கும் இடத்தில் நான். எத்தனை நம்பிக்கை இருந்திருக்கும்? எத்தனை சுலபமான வேலை என்று வந்திருக்கக் கூடும்.

நான் பெரிய ரூல் புடுங்கி என்று பெயரெடுத்திருந்த காலம் அது. தேவையே இன்றி வக்கீல் குமாஸ்தாபோல் சுப்ரீம் கோர்ட் கேஸ்களைப் படித்து பெட்டிஷன் நம்பர், யார் வாதி, என்ன ஜட்ஜ்மெண்ட் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டலும் சொல்லும் திமிர். என் மேதாவித்தனத்தை மீனாட்சி மாமியிடம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம். என் வேலைக்கு உண்மையாய் இருப்பதா, மீனாட்சி மாமியின் கஷ்டம் உணர்ந்து கண்ணடைத்துக் கொள்வதா என்ற ஒரு நிலை. 

ஒரு சுப்ரீம் கோர்ட் ஆணையின் அடிப்படையில் ரூல் இருந்தது. மனைவி தன் முயற்சியால் வேலை தேடி அதே மத்திய அரசில் பணியில் இருந்தால், அகவிலைப் படி கொடுக்கலாம். கணவன் மூலமாக கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால் கொடுக்கக் கூடாது என்று இருந்தது. மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தது எனக்குத் தெரியும். என் இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ஆனாலும், ஆவணங்களில் வேலை கொடுத்த விபரங்கள் இருக்கும்.

தவித்துத் தவித்து ‘சாரி மாமி! எனக்கு வேற வழி தெரியலை. என் கடமை எனக்கிருக்கில்லையா? ரூலை மறைக்க முடியாது. அதே நேரம் எனக்குத் தெரியும் என்றும் சொல்லமாட்டேன். வேறு யாருக்கும் வேலை பெறவில்லை என்று ஒரு சர்டிஃபிகேட் இருந்தால் கண்ணை மூடிக் கொள்கிறேன். இல்லையென்றால் ஒரு கேஸ் போட்டு மேஜர் மகளுக்கு வேலை கொடுத்தால் என் பென்ஷனில் எப்படிப் பிடிக்கலாம் என்று வாதாடலாம்’ என்று சொன்னபோது, கொஞ்சமும் சுணங்காமல், ‘புரியறதுடா கோந்தே. இனிமே கேஸ் போட்டு எப்போ வரும் அது? விதின்னு இருக்க வேண்டியதுதான்’ என்று தளர்ந்து போனபோது என் மேல் எனக்கே கோபம் வந்தது.

வேண்டிய யாருக்கோ உதவுவதற்கு, கொடுக்கக் கூடாது என்று கேஸ் போட்டு வென்ற அரசாங்கம், கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தாலும் அகவிலைப்படி கொடுக்கலாம் என்று பல்டி அடித்து ஆர்டர் வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக அவர் மகளை அழைத்து அவரை வரவழைத்து, அப்ளிகேஷன் வாங்கி உத்தரவைக் கொடுத்தபோது அதே வாஞ்சையுடன் ‘நன்னாருப்பேடா கோந்தே. எத்தனையோ வேலை நடுவில இதப் பண்ணிக் கொடுத்தியே’ என்று வாழ்த்திவளை என்ன சொல்ல?

ஆயிற்று பதினைந்து வருடங்களுக்கு மேல். இப்போது மருத்துவப்படி நிறுத்தி விட்டார்கள் என்று மனு கொண்டு வந்திருந்தாள். கொடுத்திருக்கேன். நிறைய வேலை இருக்காம். ரெண்டு வாரம் கழித்து வரச் சொன்னார்கள். உன்னைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். பையனுக்கு கலியாணம் ஆயிடுத்து. ஒன் கொழந்தேள் என்ன பண்றா என்று பேசிக் கொண்டிருந்தார். அவருக்கே தெரியாமல், ப்யூன் மூலம் சிட்டை எழுதி அனுப்பி, ஆர்டர் காப்பியைக் கொடுத்தபோது கண்கள் விரிய எப்படிடா கோந்தே என்ற போது, ஒரு பிராயச்சித்தம் செய்த நிம்மதி. 

Friday, May 13, 2011

கேரக்டர் - சீனுமாமா

சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக் கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல் தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான். ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்‌ஷன் ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார்.  

சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக் கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும். விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு. அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும். பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ் ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும் சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும்.  

எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும் ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும் மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும் சீண்டுவார்.  

இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன். இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில் வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம். எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன் அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப் போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார். வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும் வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை செய்வார்.  

ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம். சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல் என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது.  

சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின் சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள். 

மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய் கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம் நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார். அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன் இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு வித்தியாசமான சீனுவானார்.  

திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில் புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில் அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன் பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள். கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற? அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன் இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய வைத்தோம்.  

திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா. அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு, இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி வாங்கோ என்று வழிந்தார்.  

வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக் கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள் ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில் ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ. கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர் ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று மிரட்டிவிட்டார்.  

வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு. கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும் இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன் சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’ என்றேன்.  ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?  

ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன் செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும், அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை.  

அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப் பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான் பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார். பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு.  ‘மாமா நிஜம்மா சொல்லு. உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச!  பூனைய மடியில கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார்.  

சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும் அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே. 
-:{}:-

Friday, April 22, 2011

கேரக்டர் - ராவணதாஸ்

1975. எப்போதடா ஜூன் வரும், 18 வயது நிறையும், கருணை அடிப்படையில் வேலைக்கு மனு செய்யலாம் என்று காத்திருந்த காலம். அம்புட்டு சீக்கிரமாவா உன்னோடான என் விளையாட்டு முடிஞ்சிடும் என்று விதி சதி செய்தது. எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை என்ற இடி வந்து விழுந்தது. கலங்கிப் போய் அப்பாவின் அலுவலகத்தில் போய் அவர் நண்பர்களிடம் வழி கேட்டபோது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலைமை அதிகாரியைப் போய்ப் பார். கலாசியோ, ப்யூனோ, ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் ஊற்றுகிற வேலையோ, ஏதோ ஒன்றுக்கு வழியிருக்கும் என்ற ஆலோசனை கிடைத்தது. 

தயங்கித் தயங்கி அந்தப் பெரிய அறையில், யாரோ சொல்ல கலாசி வேலையாவது தரும்படி மனுவை எடுத்துக் கொண்டு கால்கள் தொய்ய ஒரு ஒல்லியான குள்ள உருவம் கலாசி வேலைக்கு மனுவை நீட்டினால் அந்த அதிகாரிதான் என்ன செய்வார்? நமட்டுச் சிரிப்போடு 7 அடிக்கு 5 அடி டேபிளை அறை மூலைக்கு இழுத்துப் போடமுடியுமா என்று கேட்டபோது நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  ‘சரி, நீ போப்பா கடிதம் வரும்’ என்றபோது ஆவலோடு காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அதிகம் காக்க விடாமல் அக்டோபரில் என் பிறந்தநாள் அன்று(ஷ்ஷ்ஷ் அக்டோபரில் எப்படி என்று எல்லாம் கேக்கப்படாது) பரிசாக கேஷியருக்கு பணப்பெட்டி தூக்கும் ப்யூனாக உத்தியோக நியமனம் வந்தது.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு போய் வேலையில் சேரப் போய் எல்லாம் முடிந்து வேலையில் சேர்ந்தபோது பெட்டி தூக்க வேண்டாம், தபால் வாங்கும் பிரிவில் வேலை பார் என்று சொன்னார்கள். என்னைப் போன்றே நிறையப் பேர்கள் இருந்தாலும், அநேகம் பேரின் முகத்தில் ஒரு அசூயையும், எங்கு திரும்பினாலும் என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்வியுமாகவே இருந்தது. இரண்டாவது நாளே அதற்கான காரணமும் புரிந்தது. 


பி.எஸ்.ஸி ஜூலாஜியும், பி.ஏ. எகனாமிக்சும், பி.எஸ்.ஸி ஸ்டாடிஸ்டிக்சும் யாரோ ஒரு அதிகாரிக்கு ப்யூனாய், ஃப்ளாஸ்கில் டீ வாங்கிக் கொண்டும், டீ கப்பும், சாப்பிட்ட தட்டு கழுவும் வேலையிலும், ஆஃப்டர் ஆல் ஒரு பி.யூ.சி. தபால் பிரிவில் இருப்பதும் அவமானமாக உணரப்பட்டது. எதிர்ப்பதற்கு சுலபமாக ஒரு காரணமும் கிடைத்தது. போஸ்டிங் போடுபவரும், நானும் பார்ப்பனர் என்ற காரணம் கிடைத்தது. எதிர்ப்பதற்கு ஜாதி ஒன்று போதாதா என்ன?

இருப்பதிலேயே சீனியர், தைரியமாக இதையே காரணம் சொல்லிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார் அதிகாரி. உடனடியாக அவர் இடத்தில் என்னை வேலைப் பார்க்கச் சொல்லி உத்தரவாயிற்று. ரொம்பவும் பெருமையாக ‘தைரியமாக கேட்டாதான் நியாயம் கிடைக்கும்’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த அதிகாரியிடம் இன்றிலிருந்து இவந்தான் உங்களுக்கு ப்யூன். நான் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

கனிவான முகம். ஐந்தரை அடிக்கு மேல் உயரம். அகன்ற மார்பு. திரண்ட தோள்கள். மீசையின்றி நட்பாய்ப் புன்னகைக்கும் உதடுகள். பசுவைப் போல் கருணை ததும்பும்  கண்கள். காதை மூடிய, நடுவில் வகிடு தெரியாமல் பிரித்த தலை முடி ஸ்டைல். நட்பாய்ப் புன்னகைத்து, பெயர் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார். 


என் சீனியருக்கோ வாய் கொள்ளாச் சிரிப்பு. கப் எங்கே கழுவ வேண்டும், சாப்பாடு எங்கே இருந்து கொண்டு வர வேண்டும். மிகுந்திருக்கும் சாப்பாட்டை கேரியரில் போட்டு சாப்பாடு கொண்டு வரும் பெண்மணியிடம் எப்போது கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

தான் சாப்பிடப் போகுமுன், என்னை விசாரித்து, சாப்பிட்டுவிட்டு வரச் சொல்லி ராவணதாஸ் சாப்பிடப் போனார். அள்ளி அடைத்துக் கொண்டு, அவர் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தேன். பெல் அடித்து, ’சாப்பிட்டாயிற்று, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கேரியரைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அவர் சாப்பிடும் மறைவுக்குப் போய் பார்த்தபோது குழப்பம் வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கிருந்தவற்றில் முட்டைமட்டுமே எனக்கு அடையாளம் தெரியும். மீனிலும், கறியிலும் எது எறிய வேண்டியது? எதை திரும்ப டிஃபன் கேரியரில் வைக்க வேண்டியது என்பது ஒன்றும் பிடிபடவில்லை.

திரும்பவும் சீனியரிடம் ஓடி, ‘சாமி எனக்கு எது என்னாண்ணு தெரியல. கொஞ்சம் வந்து சொல்லிக் கொடு’ என்று நின்றேன். அவனுக்கோ படு குஷி. என்னையும் அழைத்துக் கொண்டு, உள் நுழைந்து, ‘அய்யரு பையன். எது என்னான்னு தெரியலை. சொல்லிக் கொடுக்கிறேன்’ என்றவனை பதறித் தடுத்தார். இன்னைக்கு நீயே எல்லாம் க்ளீன் பண்ணி கொடுத்துவிடு என்றவர் ‘சாரி! தம்பி. சைவம்னு சொல்லியிருக்கலாமே? நீங்க போங்க’ என்றவர் சீனியரிடம் என் அதிகாரியைக் கூப்பிடச் சொன்னதும் அடி வயிறு கலங்கியது.

சீனியருக்கோ ‘சிக்கினாண்டா சின்ராசு’ என்ற களிப்பு. என் அதிகாரியிடம் போய் ’ஐயா கூப்டுறாரு. இவன ப்ளேட் எடுக்கச் சொன்னா என்னைக் கூப்பிட்டான். ஒன்னும் தெரியலை’ என்று மொட்டையாக ஒரு பிட்டைப் போட்டு பெருமையாய் என்னைப் பார்த்தான். பயத்தில் கலங்கிப் போய் தின்ன சோறு வெளியே வந்துவிடுவேன் என்று பயம்காட்ட, ‘என்னடா பண்ணித் தொலஞ்ச?’ என்ற அதிகாரியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் நின்றேன்.  வெற்றி வீரனாய் சீனியரும், பூசாரியாக அதிகாரியும், பலியாடாக இன்னமும் குறுகி நடுங்கி நானும் போய் நின்றோம்.

மிகவும் சாந்தமாக ‘அந்தப் பையன் சைவம்னு உங்களுக்கு தெரியுமா?’ என்றார்.

’தெரியும் சார். ப்ராமின் பாய். வேலைக்குன்னு வந்தப்புறம் அதெல்லாம் பார்த்தா முடியுமா? புதுசு சார். பழகிக்கணும்’ என்று சொன்னவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தார்.

‘சாரிங்க பத்மநாபன். நாம எல்லாரும் இந்த வயத்துக்காகதான் வேலை பார்க்கிறோம். அவருக்குப் பழக்கமில்லாத ஒன்னை அவர் செய்ய நேரிடும்னா அது பழகும்னாலும் மனசு வருத்தம் இருக்கும். எனக்கு அப்படி யாரையும் வருத்தி சாப்பிட அவசியமில்லை. என் கூட உட்கார்ந்து உங்களால இயல்பா சாப்பிட முடியுமா? அவரு அடிமை இல்லைங்க என்றவர், என்ன தம்பி படிச்சிருக்கீங்க’ என்றார். 

அழமாட்டாக் குறையாக, ‘சார்! எனக்கு எது என்னாண்ணு தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புன்னா மன்னிச்சிருங்க சார். பழகிக்குவேன் சார்’ என்று சொல்லும்போதே இதோ அழுதுவிடுவேன் போல் ஆகிவிட்டேன். சட்டென்று எழுந்தவர், தோளை அழுத்தி, ’என்ன படிச்சிருக்கீங்க தம்பி’ என்றார்.

‘பி.யூ.சி. சார். மூனு டிஸ்டிங்க்‌ஷன் சார்’ என்று சொல்லி வாய் மூடுமுன், அந்த சாந்தமான முகத்தில் ஒரு சிடு சிடுப்பு. ’யூஸ் ஹிம் ப்ராபர்லி ஐ சே. க்ளெரிகல் போஸ்டுக்குதான் ஆளில்லாம இருக்குல்ல. இந்த மாதிரி பசங்களுக்கு சின்ன சின்ன வேலை கொடுத்து பழக்கலாம். டெஸ்பாட்ச்ல போடுங்க, என்றவர்  சீனியரைப் பார்த்து ‘இன்னைக்கு ஒரு நாள் க்ளீன் பண்ணிடுங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. அதனால நீங்க இருக்கணும்னு சொல்லமாட்டேன். வேற யாராவது கிடைச்சா போடுங்க. இல்லாட்டி நானே பார்த்துக்கறேன்’ என்றார்.

இப்போது சீனியருக்கு நடுக்கம் தொற்றிக் கொண்டது. ’இல்லை சார். நானே இருக்கிறேன் சார்’ என்றவரை இடை மறித்து ‘எனக்கு கோவம் இல்லைங்க பாபு. விருப்பமில்லைன்னு தெரியும்போது நான் கட்டாயப் படுத்த விரும்பலை’, என்று அமர்ந்தார். ‘சாரிங்க தம்பி என்று மீண்டும் என் தோள் பிடித்தழுத்தி, ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பி வைத்தவர்தான் ராவணதாஸ்.

எளிமையென்றால் அப்படி ஒரு எளிமை. நேரம் தவறாமை. நேர்மை. அவரின் ஆங்கிலத்துக்காகவும், பண்புக்காகவுமே அந்தகாலத்து ஆட்கள் வெள்ளக்காரனுக்கப்புறம் இப்படி ஒரு மனுசன பார்த்ததில்லை என்று பெருமைபடச் சொல்லுவார்கள். பந்தாவாக ஆங்கிலத்தில் ஆரம்பித்த சக அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் முதல் பதிலில் அப்பீட்டாகி தமிழுக்கோ இந்திக்கோ தாவி விடுவார்கள். நடையா அது? நிதானமாக ஆனால் ஒரு சிங்கத்தின் நடைபோல் அப்படி ஒரு கம்பீரம்.

பாரிச வாயு வந்த தகப்பனார். தன் வீட்டில் பணி செய்ய ஒரு ப்யூன் இருந்தபோதும், காலையில் எழுப்பி குளிப்பாட்டுவது முதல், பத்திரிகை படித்து செய்தி சொல்லி, உணவூட்டி, மாலை பங்களா லானில் வீல் சேரில் சுற்றி வந்து, திரும்பவும் குளிப்பதோ உடல் துடைப்பதோ கைப்படச் செய்து, இரவு உணவு கொடுத்து, டி.வி. முன்னால் அமர்த்தி, தான் டென்னிஸ் உடையணிந்து கிளம்பும்போது மாலை மணி 7 என்று கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

அவருக்கு மாற்றல் வந்தபோது ‘நல்லது. அப்பா இருந்திருந்தா கஷ்டம்’ என்றாரே தவிர அதை மாற்றிக் கொள்ள முயற்சித்ததே இல்லை. அது அப்படி ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. காரணம் கடைசி வரியில். பல வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதற்கடுத்த பதவியில் அதே அலுவலகத்துக்கு வந்தபோது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.

ஒரு சக ஊழியர் பாவப்பட்டவர். ஒரு கிட்னி பழுதாகி மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர். போதாததற்கு இடுப்பெலும்பு நொறுங்கும் நிலையில் இருந்ததால் ஏதோ ஒரு தொண்டார்வ நிறுவனத்தின் மூலம் ஸ்விட்ஜர்லாந்தில் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டது. திரும்ப வந்தவருக்கு பொருத்தப்பட்ட கிட்னியும் செயலிழந்து போக ஒரு கிட்னிக்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் நிலையில் ஒரு சகோதரன் கிட்னி தானம் அளித்தார். ஒவ்வாமை நீக்க மருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணம் கூட வரவு செலவு திட்டத்தில் இருக்கும்.

அது ஒரு திரவ மருந்து. இளம் சூடான வென்னீரில் கலந்து அருந்த வேண்டும். அப்போது சிறுநீரக மாற்றுக்கு சி.எம்.சி தான் போக வேண்டும். அப்போது புதிதாக இந்த மருந்துக்கு பதில் மாத்திரை வந்திருந்ததாகக் கேள்விப்பட்டு, மனைவியுடன் வந்து பார்த்தார். அந்த மருந்துக்கு பதில், மாத்திரையாக வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தார் மனைவியை. மிகவும் பொறுமையாக, ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும், மாத்திரையை விட மருந்து உடனடியாக உதவும் என்று சொன்னபோது, அந்தம்மிணி, அடிக்கடி கை தவறி உடைந்து விடுவதாக ஒரு காரணம் சொன்னார்.

முதன் முறையாக ராவணதாசிடம் கோவத்தைப் பார்க்க முடிந்தது. ’அது மருந்தில்லீங்க. ஒரு மனுசனோட உசிருன்னு கவனமிருந்தா அதெப்படிங்க கை தவறும்? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தாதான் நேரத்துக்கு மருந்து வந்து சேரும். என்ன பேசறீங்க’ என்றவுடன் ஓவென அழத்தொடங்கிவிட்டது அந்தம்மணி.

5 நிமிடம் அமைதியாக இருந்தார். மருத்துவ அதிகாரிக்கு ஃபோன் செய்தார். ஆர்டரைக் கேன்ஸல் செய்ய முடியுமா என்று உறுதி செய்து கொண்டார். அவரிடமே சி.எம்.சி. டாக்டர்களிடம் பேசி மாத்திரைக்கும் வழி செய்தார். அந்தம்மணி காலில் விழப்போனபோது தானும் சக மனிதந்தான் என்றும் காலில் விழவேண்டிய அவசியமென்னவென்றும் கோவப்பட்டார். அடுத்த நொடி சாந்தமாகி, உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வரலாம் என்று சொன்னபோது அவருக்கேயான சாந்தமும் அமைதியும் நிறைந்திருந்தது.

பல கோடி ரூபாய் திட்டங்களையும், செயலாக்கத்தையும் கண்காணித்தவர். திறமையான அதிகாரி. எல்லாவற்றையும் விட உன்னதமான மனிதர். விதிக்கு இதைவிட விளையாட வேறு ஆள் கிடைப்பார்களா என்ன? ரிட்டையர் ஆன பிறகு, அந்த காலத்தில் மிகவும் பிரசித்தமாக இருந்த, தேக்கு, சந்தனம், எலுமிச்சை வகையறா முதலீட்டில் தானும் பார்ட்னராகி, கூட்டாளி ஓடிவிட கையிலிருந்து அனைவருக்கும் கொடுத்து முடித்தார். ஒருவருக்கும் குறைவில்லை.

ஏதோ ஒரு நாள் அவர் இறந்துபோன தகவல் வந்தது. கடைசி வரியில் காரணம் சொல்கிறேன் என்றேனே. திரு ராவணதாசின் மாமியார் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமாயிருந்த திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்.

Friday, March 18, 2011

கேரக்டர் - யூனியன் ராமமூர்த்தி.


சில மனிதர்களின் பரிச்சயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தடாலடியாக நடந்துவிடும். சில நிமிடமோ, சில மணி நேரமோ, சில நாட்களோ பரிச்சயமிருப்பினும், ஆழ்மனத்தில் ஆழமாக ஒரு தடம் விட்டுச் செல்வார்கள். அப்படி வந்த ஒருவர் யூனியன் ராமமூர்த்தி.

மதியத்திற்குள் கையொப்பமிடவேண்டிய அவசியத்தில் சட்டைத் துணி பண்டல்போல் இழுக்க இழுக்க வந்தபடியிருந்த கம்யூட்டர் செக்கில், நெருப்புக் கோழிபோல் தலை கவிழ்ந்தபடி கையொப்பம் பறந்து கொண்டிருந்த ஒரு வேனில் மதியம். பாதி சமாதியான அனார்கலிபோல் சுற்றிலும் ஃபைலும், பில்லும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

திடீரென்று சப்தமில்லாமல், கதவு திறந்தது கூட தெரியாமல் திறந்து ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஷ்ண ஷ்ண, ராமராம, ந்னப்பா முருகா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சப்தம் வந்தால் என்ன செய்ய? கையிலிருந்த பேனா தெறிக்க வெல வெலத்துப் போய் பதறி எழுந்தவனை, சாம்பல் ரெக்ஸின் பை தொங்கவிட்ட ஒரு கையும், கை வளைவில் குடை தொங்க விட்ட ஒரு கையும் ஒரு சேர்ந்து ‘நமஸ்காரம்’, என்றது. ‘நீ ஏம்பா எழுந்து நின்னுண்டு. மரியாதை மனசில இருந்தாப் போறும்’ என்ற போது பொத்துக் கொண்ட வந்த சிரிப்பை எப்படி அடக்கிக் கொண்டேன் என்று இப்போதும் வியப்பாய் இருக்கும். நம்ம சிரிப்பு அப்படி.

ஐந்தடி மூன்றங்குல உயரமிருக்கும். சற்றே பூசினாற் போன்ற உடல் வாகு. என்னையும் விட அடர்த்தியாகவே வெண்பஞ்சுத் தலை. களைத்த முகம் மீறிய தேஜஸ். வாழ்நாள் முழுதும் கண்ட சோகத்தைக் கோடு காட்டியும் ஏதோ ஒரு நெருக்கம் உண்டாக்கும் முகம். நிம்மதியாக சாப்பிட்டு வீட்டில் ஈஸிச் சேரிலோ, ஊஞ்சலிலோ அல்லது திண்ணையிருந்தால் அங்கோ சாய்ந்து ஓய்வெடுக்கும் வயது. அந்த மதிய வெயிலின் அயற்சி முழுதும் கண் காட்டியது. சற்றே சாய வாய்ப்பிருப்பின் தூங்கக் கெஞ்சும் தளர்ச்சி. 

துவைத்துச் சுத்தமான இஸ்திரி போடாத கசங்கலுடன் கூடிய முழுக்கைச் சட்டை. குனியமுடியாமலோ, கிடக்கிறது போ என்றோ மூன்றாவது பட்டனுக்கு இரண்டாவது கண்ணில் நுழைத்து கோணல் மாணலாக போட்டிருந்த சட்டை. முழுக்கையை மடிக்காமல், பட்டனும் போடாமல் விட்டிருந்தார். சட்டை பாக்கட்டைப் பிதுக்கிக் கொண்டு காகிதக் கற்றை அடைந்திருந்தது. ஏற்ற இறக்கமாகவே அள்ளிச் சுருட்டிக் கட்டிய நாலு முழ வேட்டி. மழையில் நனைந்தாற் போல் தலையும் முகமும் வியர்வை வழிந்தது. 

அமரச் சொல்லி, ப்யூனை அழைத்து தண்ணீர் கொடுக்கச் சொன்னதும் விகசித்தது முகம். வென்னீர் வேண்டுமா என்றேன். ‘ஐஸ் வாட்டர்’ என்று குழந்தையைப் போல அவசரமாக சொல்லிவிட்டு, திரும்பவும், உஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ் என்று மூச்சு வாங்கிக் கொண்டார். காலர் கர்ச்சீஃபை உருவி, முகம் தலை என்று துடைத்து, தண்ணீர் அருந்தி மீண்டும் உஸ்ஸ்ஸ்ஸிய பிறகு அமைதியாய் அமர்ந்திருந்தார்.

‘என் பேர் ராமமூர்த்தி. இங்கதான் சீனியர் க்ளார்க்கா ரிட்டயர் ஆனேன். முரளியெல்லம் என்னிட்ட வேலை கத்துண்ட பையன். அவன பார்க்கலாம்னு வந்தேன். லீவாம். அதான் உன்னைப் பார்க்க வந்தேன்’ என்றார்.
(முரளி என் அதிகாரி)

‘காஃபி, ஜூஸ் எதாவது சாப்ட்ரீங்களா?’ என்றேன்.

‘ஒன்னும் வேண்டாம்பா. கார்த்தால சாப்பிட்டுதான் வந்தேன். கார்த்தால ஒரு காஃபி, ஒரு வேளை சாப்பாடு, ராத்திரிக்கு கஞ்சி, தலை வலிச்சா மதியான காஃபிக்கு ஒரு சாக்கு. அல்மோஸ்ட் தினமும் தலவலி வந்துடும்’ என்று சிரித்தார்.

‘நான் ஏதாவது உதவ முடியுமா’ என்றேன்.

‘என்ன கேழ்விடாப்பா கேக்கற? எனக்கு நீங்கள்ளாம் ஹெல்ப் பண்ணாம யாரு பண்ணுவா?’ என்று முடிப்பதற்குள் ஆயாசம் கண்ணைச் சொக்கியது அவருக்கு.

‘நான் ஹார்ட் பேஷண்ட். ஸ்பெஷல் மாத்திரை டாக்டர் எழுதிருக்கான். பார்மஸிஸ்ட் அது இல்லைன்னு மாவு மாத்திரை நீட்ரான்.  லோக்கல் பர்ச்சேஸ் பண்ணிக் குடுன்னா, ஓவரா பேசரான். இதுங்கள்ளாம் போய்ச் சேராம மாத்திரை மருந்துனே தின்னு உசிர எடுக்குதுங்கன்னு முனகினான். கெழவனுக்கு காது டும்முன்னு நெனச்சிண்டான் போல’

‘என்னடா நினைச்சிண்டிருக்க நீ. கெழவன்னா எளப்பமா போச்சா? குடுக்க முடியாதுன்னா எழுதிக் கொடு. நீ பெரியவனா, டாக்டர் பெரியவனான்னு பார்க்கறேன்னு வாசப்படில உக்காந்துட்டேன். ஆடிப் போயிட்டான் ஆடி. ஆனாலும் ஈகோ. குடுத்துட்டு போ. ரண்டு நாள் கழிச்சி வந்து பாருன்னான். மாத்ர போடாட்டா மார் வலி வந்துடும்டா எனக்கு. மடிப்பாக்கத்துல இருந்து வரேன்னா, சரி சாமி, போய் டாக்டர் கிட்டயே லோக்கல் பர்ச்சேஸ்னு எழுதி வாங்கிண்டு வான்னு விரட்டிட்டான். அதான் முரளிய தேடிண்டு வந்தேன். நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் என்றார்.’

இதைச் சொல்லும் வரையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதராய் இருந்தார் அவர். சட்டென்று ஒரு வாலிபனின் மிடுக்கும், போராட்ட குணமும் தொற்றிக் கொண்டு ’ஹெல்ப் பண்ணேன்’ என்றபோது காணாமல் போயிருந்தது. டாக்டரிடம் பேசி, சீட்டை வாங்கி அனுப்பிவிட்டு மெதுவே ‘இந்த வயசுல இவ்வளவு கோவப்படலாமா? ஹார்ட் பேஷண்டுன்னு சொல்றீங்க? என்றேன். 

‘சட்டென்று மீண்டும் கண்ணில் ஒரு மின்னல். முடியாமல் ‘ஹூம்’ என்றதிலும் ஒரு கம்பீரம். 

‘அப்போ நீ படிச்சிண்டிருந்திருப்ப. ஐ.பி.எம் மெயின் ஃப்ரேம் கொண்டு வரான். எத்தன பேருக்கு வேலை போகுமோ? எத்தனை பேருக்கு வேற வேலைன்னு தொறத்தறானோன்னு ஒரு பதைப்பு. தலைவரு மயிராண்டி எனக்கென்னன்னு இருக்கான். வேலை எல்லாம் போகாது. மாற்றலுமிருக்காதுன்னு உறுதி வாங்கணும்னு முடிவு பண்ணா லெட்டர் எழுதிட்டு உக்காந்திருக்கான்.’ 

’நான் காத்தால காபி சாப்டுட்டு தயிர்சாதம் கட்டிண்டு வந்துடுவேன் எட்டுக்கெல்லாம். நம்ம வேலையை முடிச்சி வச்சசாதானே நாம நாலு தொழிலாளி பிரச்சனைக்கு போய் பேசலாம். கப்பல்ல இருந்து பெரிய ட்ரெயிலர்ல கொண்டு வரான். ஸ்பெஷலா ட்ராஃபிக் ப்ளாக் வாங்கி ஜி.ஹெச். வழியா வந்து நம்ம அவுட்கேட் வழியா உள்ள வரான்னு தெரிஞ்சது.’

‘சரியா காத்துண்டிருந்தேன். ட்ரெயிலர் லாரி மெமோரியல் ஹால் தாண்டி மிண்ட் ஸ்ட்ரீட் எண்டர் ஆரான். வெளிய படுத்தா போலீஸ் புடிச்சிண்டு போயிடுவான். ஆஃபீசுக்குள்ள படுத்தா ஆர்.பி.எஃப். தூக்கிண்டு போயிடுவான். பாதி உள்ளையும் பாதி வெளியவுமா கேட் நடுவுல படுத்துட்டேன். தொழிலாளரின் வேலைக்கு உத்தரவாதம் கொடு. இயந்திரமயமாக்காதேன்னு கத்திட்டு கண்ண மூடிண்டு படுத்துட்டேன்.’ 

‘போலீசுக்கும், ஆர்.பி.எஃபுக்கும் தகராரு. மந்திரி, ஜட்ஜெல்லாம் வர நேரம். ட்ராஃபிக் அடைக்குது. இழுத்து போடுய்யாங்கறான் போலீஸ். வெளிய கெடக்கான் நீ தூக்கி போட்டுட்டு போய்யாங்கறான் ஆர்.பி.எஃப். மட மடன்னு ந்யூஸ் பரவி, யூனியன் ஆளெல்லாம் வந்து கோஷம் போட்டாங்க. அப்புறம் குசு குசுன்னு தலைவர் ஜி.எம். கிட்ட பேசப் போறார். நீ இப்படி பண்ணா தப்பு. எழுந்து வாங்கறான்.’

‘அட போடான்னு, ஜி.எம். வரணும். இங்க வாய் மொழி உறுதி கொடுக்கணும். அப்பதான் எழுந்திருப்பேன். ஆனதைப் பாருன்னு கெடந்தேன். வந்தாண்டா பையா! ஜி. எம். தேடிண்டு வந்து சொன்னான். யாருக்கும் வேலை போகாது. புரியாம போராட வேண்டாம். பேசலாம் எழுந்திருன்னு கூப்புட்டான்.’

‘ஒத்தை ஆளா யூனியனுக்கு சொல்லாம போராடினது தப்பாம். தலைவருக்கு கோவமாம். வந்து பார்க்கச் சொல்றார்னு சொன்னானுவ. போடா மயிராண்டிகளா. நான் வாழ்கன்னு கத்திண்டேனா. இல்ல போட்டி சங்கம் ஆரம்பிச்சேனா. அதே யூனியன். அதே தலைவன் வாழ்கன்னு தானே கத்திண்டு வந்தேன். முடிஞ்சா வெளியேத்தச் சொல்லு. நான் எவனையும் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.’ 

‘எந்த மீட்டிங்குக்கும் போறதில்லை. வருஷா வருஷம் சந்தா வாங்கி கட்டணும். எவன் குடுக்கறான் தானா? நான் போய் கெஞ்சிண்டிருக்க மாட்டேன். பாதி பேரு தருவான். மீதிய நான் கட்டிண்டிருந்தேன். இப்ப அதும் லாபம். நம்ம ஆஃபீஸ்ல இருந்து பத்து பைசா பேறலை. டிபார்ட்மெண்ட் வித்தியாசம் இல்லாம எல்லாருக்காகவும் போய் பேசுவேன். அடாவடி கேசுக்கெல்லாம் காசு வாங்கிண்டு போக ஆரம்பிச்சானுங்க. நம்ம கிட்ட அந்த வேலையெல்லாம் கிடையாது.’

‘ஜெனூயின் கேஸ்னா போய் சொல்லுவேன். பெரும்பாலும் என்னைத் தெரியும். உடனே முடிச்சி குடுப்பாங்க. தெரியாம எவனாவது சீண்டினா செத்தான். பாத்ரூம் போனாலும் பின்னாடியே போய் பேசுவேன். வாசப்படில உக்காந்து பதிலச் சொல்லிட்டு போன்னா பதறிண்டு பண்ணிக் குடுப்பான்.’ என்று சிரித்தார்.

‘பசங்க என்ன பண்றாங்க? என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன். காற்றுப் போன பலூனாகிவிட்டார். இன்னும் இரண்டு வயதும் இரண்டு மடங்கு ஆயாசமும் கூடிவிட்டது. ப்ச். யூனியன் யூனியன்னு இருந்துட்டேன். ஒரு பையன். எஸ்.எஸ்.எல்.சி. தாண்டலை. சமத்து போறாது. உடம்பு வேற அடிக்கடி படுத்தும். 32 வயசாறது. வேலை வெட்டிக்கு போகணும்னே தோணலை. ரெண்டு மூணு இடத்துல சொல்லி வேலை வாங்கி குடுத்தேன். தலைய வலிக்கறதுன்னு சேர்ந்த அன்னிக்கே பாதில வந்துடுவான்.’

‘இந்த வயசுல, பகவானே, இந்த மாத்திரை மருந்தெல்லாம் வேண்டாமேன்னு போய்ச் சேரலாமேன்னு தோணும். பாதி பென்ஷன் போயிடுமே. வர காசுல ஒத்தப் பொம்பளைக்கு காணுமா. இதுல பையன் வேற. அவளுக்கு லோகாதயம் தெரியாது. புள்ளைக்கு கலியாணம் பண்ணா சரியாயிடுவான்னு என்னைத் திட்டிண்டிருப்பா.நான் போனப்புறம் இவனுக்கு சோறு போடவே முடியாதுடி உன்னால . இதுல இன்னொரு பொண்ணு வயத்தெரிச்சலும் சேரணுமான்னு சண்டை வரும், என்று உடைந்து அழுதுவிட்டார்.’

அதற்குள் மாத்திரை வந்துவிட பல முறை நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். நடு மதிய வெயிலா இருக்கே. கொஞ்சம் வெயில் தாழப் போகலாமே ஸார் என்றேன். கிழவி வாசலுக்கும் உள்ளுக்குமா அல்லாடிண்டிருப்பாடா காணோமேன்னு. நான் மெதுவா போயிடுவேன் என்று கிளம்பினார். 

துணைக்கு ஒரு ஆளை அனுப்பி ஆட்டோவில் ஏற்றி பார்க் ஸ்டேஷனில் ரயிலேற்றி விடுவது மட்டுமே என்னால் அந்த சுயநலமற்ற தொழிற்சங்க நண்பருக்கு செய்ய முடிந்த மரியாதை. கழுத்துப் பட்டியுடன் கதவு வரை போய் அரை மார்போடு திரும்பி, ‘தாங்ஸ்டா அம்பி. வரேன்’ என்று கையாட்டிய முகம் நினைவை விட்டகலாது. 
  -:o:-

Wednesday, February 16, 2011

கேரக்டர் - அய்யர்.

அய்யரை நீங்கள் பார்த்திருக்கலாம். ஐந்தடி ரெண்டங்குலம் உயரம். கட்டையான சுமாரான பருமன். நல்ல நிறம். சிலர் நகம் வளர்ப்பார்கள். சிலர் மீசை வளர்ப்பார்கள். அய்யருக்கு மூக்கிலும், காதிலும் முடி வளர்ப்பதில் தனி ஈடுபாடு. காதில் உள்ளே வெளியே என்று பொசு பொசுவென்று காதை அடைத்துக் கொண்டு அப்படி ஒரு முடியென்றால் மூக்கில் ஷேவிங் ப்ரஷ்ஷை சொருகினார்போல் இருக்கும்.

பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம். இறுக்கி இறுக்கி தடித்த உதடுகள். மினுமினுக்கச் சிரிக்கும் கண்கள். மீசை வைத்தால் ஷேவிங் பிரஷ்ஷை மறைக்கும் ஷூ பாலிஷ் போடும் ப்ரஷ் போல் இருக்கும் என்பது போல் அகலமாக மூக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடைவெளி.

பொதுவாக சிலர் வெற்றிலை போடுவார்கள். சிலர் மூக்குப் பொடி போடுவார்கள். இதிலும் நம்ம அய்யர் தனி. ரெண்டும் உண்டு. அந்தக் காட்டுக்குள் மூச்சு போய் வருவதே கஷ்டம். இதில் பொடி வேறு எப்படி உள்ளே போகிறது என்ற சந்தேகத்துக்கே விடை தெரியாதபோது, வெற்றிலை குதப்பி இடுக்கிக் கொண்டு உம்ம்ம்ம்ம் மென்றிருக்கையில் வாயிலும் இல்லாமல் மூக்கிலும் இல்லாமல் மீன் போல் காதினாலும் இல்லாமல் எப்படித்தான் சுவாசிக்கிறார் என்ற கேள்விக்கு விடையேயில்லை.

பொதுவாக வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள் உம்மணா மூஞ்சிகளாக இருப்பது வழக்கம். புகையிலை எச்சில் ஊற ஊற கன்னம் கொள்ளாமல் பிதுக்கிக் கொண்டு, வாயோரம் கசியாமல் உதடு கூட்டிக் கொண்டு எழுதுவதும், ஏதாவது கேட்டால் அமாவாசை இரவில் ஊளையிடும் நரி போல் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ‘அடெல்லாம் எழ்ழ கேட்டா டெரியாடு! அங்ஙடாழ் இழுக்கும் டேழு’ என்ற பதில் வரலாம். தானாக ஜோக் அடிப்பதோ அடிக்கப்படும் ஜோக்குக்கு சிரிப்பதோ இயலாத காரியம்.

ஆனால் அய்யர் அப்படியில்லை. ஒட்டகம் நீரைச் சேமிப்பதுபோல் புகையிலை நீரை சேர்த்து வைக்க தனி பை இருந்திருக்குமோவென்ற சந்தேகம் எப்போதும் உண்டு. காதைத் தீட்டிக் கொண்டு சுற்றிலும் நடப்பதைக் கேட்டுக் கொண்டு சிரிப்பு வந்தால் தேன் தடவிய குழந்தை போல் உதட்டைக் கூட்டிச் சுழித்து உப்பென்று நின்றால் கண்கள் கலகலவென சிரிக்கும்.

புகையிலை நீர்ப்பையில் பதுக்கினாற்போல் பெரும்பாலும் புகையிலை உருண்டை மட்டும் அடங்கி புடைத்த கன்னத்தோடு பளிச்சென வெடிச்சிரிப்பு கமெண்ட் அடித்து வாய் கூட்டிய மறு நொடி இரண்டு கன்னமும் உப்பிக் கொள்ளும்.

சாப்பிட்டுவிட்டு ஆஃபீஸ் வந்ததும் ஒரு முறை கொப்பளித்த கையோடு வெற்றிலை போட்டால் காஃபி வரும் வரை தாங்க முதல் கச்சேரி. வெற்றிலை போடுபவர்கள் சாதாரணமாக மேம்போக்காக காம்பு நீக்காமல், சீவல், பின்னால் ரெண்டு வெற்றிலை காம்பு கிள்ளி சுண்ணாம்பு அப்பி இடுக்கிக் கொண்டு, ஒரு உருண்டை பன்னீர் புகையிலை திணித்துக் கொள்வார்கள். அய்யருக்கு அது தவம்.

நெய் சீவல் இருந்தால் முகத்தில் தெரியும் வாஞ்சையே தனி. இல்லாவிட்டாலும் சீவலை விரலால் எடுக்கும்போதே அளவாய் வரும். ‘பாப்பான் நண்டு பிடிக்கிறார்போல்’ என்ற சொலவடை செல்லாது. சரியான அளவில் விரல் பிரிந்து சரியான அளவை அள்ளும். ஒரு முறை போட்டால் இன்னும் கொஞ்சம் என்ற பேச்சே இல்லை. அப்புறம் ரோஸ் சுண்ணாம்பை வழித்து ஆள்காட்டி விரல் முனையில் வைத்துக் கொண்டு துளிர் வெற்றிலையாக எடுத்து ஒரு உதறு. பிறகு ஒன்றொன்றாக முன்னும் பின்னும் பார்த்து சட்டையிலோ உட்கார்ந்திருந்தால் பேண்டிலோ துடைப்பார்.

துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.

அந்த கேப்பில் விரலிடுக்கில் வெற்றிலையை வைத்துக் கொண்டு கட்டளைகள், விளக்கங்கள் சொல்லி ஒன்றொன்றாய் உள்ளே அனுப்புவதற்குள் சீவல் ஊறி பதமாய் இருக்கும். வெற்றிலை உள்ளே போனதும் புகையிலை உருட்டுவதெல்லாம் கிடையாது. அது ஒரு சீராக அரைபட்டு சீவலோடு கலந்தபிறகு, கண்ணாடித்தாள் பையிலிருந்து பன்னீர் புகையிலை அளவாக விரலிடுக்கில் சிக்கும். உள்ளேயே உருட்டி பந்தாக்கி வாய்க்குள் போட்டால் ஆலாபனை முடிந்த கச்சேரிபோல் முகத்தில் ஒரு எக்ஸ்டஸியோடு அமைதியும் சேரும்.

அந்த சுகத்தில் கொஞ்சம் திளைத்து விரல் சுண்ணாம்பைத் துடைத்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து திணித்த பிறகு மூலை மடித்த கர்ச்சீப்பால் மூக்கு ப்ரஷ்ஷுக்கு பாலிஷ். சன்னதம் வந்தவர் போல் ஆகிவிடுவார்.

அய்யர் குள்ளம் என்பதால் பெரும்பாலும் நின்றபடியேதான் வேலை செய்வார். நெடிய நோட் எழுத வேண்டும் என்றால் மட்டும் உட்காருவார். அரியர்ஸ் பில், மட்டமடித்ததால் சம்பளம் போடாத கேசுகளுக்குத் தெரியும். இந்த முயக்கத்தில் அய்யரிடம் போய் நின்றால் வரம்தான் என்று.

இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார். அப்படி ஆட்களையெல்லாம் நிறையச் சொல்லியாகிவிட்டது. அய்யரின் ஸ்பெஷாலிடி வேறு.

என்னதான் பேரை மாத்தி வச்சிக்கோ எனக்கென்ன போச்சு என்று இராயப்பேட்டையை கொலைகாரன் பேட்டை என்றுதான் சொல்லுவார். தன் பதின்ம வயதில் யாரோ யாரையோ வெட்டத் துரத்தி வந்ததற்குப் பயந்து தில்லகேணி வரை ஓடி திரும்பி வர வழி தெரியாமல் திகைத்த கதை எத்தனை கேட்டாலும் அலுக்காது. அலுவலக வேலையில் மூழ்கி லேட்டான காலங்களில் அடிவயிறு கலங்க வீடு திரும்புகையில் நம்ம அய்யருடா என்று ஆறுதல் அளிக்கும் குரல் பலத்தில் ஓடிப் போய் வீடு சேரும் காமெடியை புகையிலை எச்சையோடு மற்றவர் புரையேறச் சிரித்தாலும் கண்ணால் சிரித்தபடி சொல்லும் கலைஞர்.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த வடக்கத்தியான் கோஷ்டியை  “உன் ஜர்தா என்ன பெரிய கொம்பா? இதைப் போடு” என்று பன்னீர்ப் புகையிலை பீடா கொடுத்து, கடைசி நாளில், வந்ததற்கு ரெண்டு பேராவாவது எழுதணுமே அய்யர் என்று கண்கள் கலங்க கெஞ்சி அவர் விருப்பத்துக்கு ரெண்டு ஜுஜூபி அப்ஜக்‌ஷன் எழுத வைத்தவர். 

சோதனைபோல் ப்ரமோஷனில் பெங்களூரு கண்டோன்மெண்டில் போட்டுவிட்டார்கள். சவம் பெங்களூர் மெயிலில் 365 நாளும் கூட்டம்தான். அதனால், சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பினால் ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் முன்னதாக வந்து மேலே படுத்துவிடலாம். ஜோலார்பேட்டில் இறங்கி ஒரு பால் சாப்பிட்டு முடிக்க ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் காலியாக வரும். தூக்கம் தொடரலாம். திரும்பும் போதும் இப்படியே. வெள்ளி இரவு கிளம்பி சென்னை வந்து ஞாயிறு இரவு கிளம்பி பெங்களூர் சேருவது வழக்கம்.

அப்படி ஒரு முறை திரும்பும்போது ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் பாய்ந்து இடம் போட்டு ஏறியும் வண்டி கிளம்பவில்லை. கக்கூசில் தண்ணியில்லை என்று செயினை இழுத்ததால் நீர் நிரப்பும் வேளையில், ஆயில் துடைத்த துணிப்பந்தத்தைக் கொளுத்தி கோச்சின் அடியில் ப்ரேக் கட்டையை சரி பார்ப்பதை எண்ணெய்ப் புகையும் நெருப்பு வெளிச்சமும் பீதியைக் கிளப்ப, ‘அய்யய்யோ, வண்டியில் நெருப்பு’ என்று முதலில் பாய்ந்தவர் நம்ம அய்யர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் கோச்சில் இருந்தவர்கள் முழுதும் ப்ளாட்ஃபார்மில்.  அது நெருப்பில்லை, ப்ரேக் செக்கிங் எனத் தெரிந்து ஆசுவாசமாவதற்குள் விசில் ஊத அனைவரும் பாய்ந்தேறிய பிறகு பார்த்தால் நிற்க இடமில்லாமல் நின்றிருந்த அய்யர் லக்கேஜில் படுத்திருந்தார்.

படுத்திருந்தவர்கள் எல்லாம் நின்றபடியும், நிற்க இடமில்லாதவர்கள் வசதியாகவும் ஒரு நொடியில் மாற, ‘யார்யா சவுண்ட் விட்டது’ என்ற எரிச்சல் கேள்விகளுக்கு புகையிலை அடக்கியபடியே அய்யரால் மட்டும்தான் வெடிச்சிரிப்பு சிரிக்காமல் இருந்திருக்க முடியும்.

அய்யருக்கு இன்னோரு ஸ்பெஷாலிட்டியும் உண்டு. மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடித்துவிடும் என்றபயம். ஒரு நாளும் கையால் ஸ்விட்ச் போட்டதோ அணைத்ததோ இல்லை. இருப்பா! நானும் கிளம்பிட்டேன் லைட்டை அணைத்துவிடு என்று கிளம்புவார். வேறு வழியில்லை எனில் இதற்காகவே பதுக்கி வைத்திருக்கும் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு.

கொடுமை கொடுமை என்று அய்யரைப் பழிவாங்கவே அடிக்கடி ஜல்ப் என்னும் ஜலதோஷம் பிடித்து ஆட்டும். மூக்குப் பொடியும் போட முடியாமல், புகையிலை எச்சையும் அடக்க முடியாமல் தும்மிக் கொண்டே இருந்தால் மனுசனுக்கு வேறே நரகம் என்ன இருக்கிறது? அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில்தான் ப்ராந்தி கிடைக்கும். அதுவும் ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்க வேண்டும். அவுன்ஸ் க்ளாசில் ஊத்தி ராவாக கொடுப்பார்கள். அதை சிரப்பு என்று என்று நம்பிக் குடித்தவர் அய்யர்.

பெங்களூர் குளிருக்கு ஜல்பின் தொல்லை அதிகமாக ப்ரிஸ்க்ரிப்ஷனோடு மருந்துக் கடைக்குப் போனபோதுதான் அது சிரப்பில்லை ப்ராண்டி எனத் தெரிந்து கொண்டு, ஜல்பா ப்ராண்டியா என்று பட்டி மன்றம் நடத்தி ஒரு வாய் ஊற்றிக் கொண்டு மிச்சத்தை அப்படியே வைத்து விட்டு  வருவதை சொன்னதற்கு சிரிக்கவா? அல்லது  ‘அதுவரைக்கும் எனக்கு போதைன்னே தோணினதில்லை! ப்ராண்டிக் கடையில் குடித்தால் மட்டும் பறக்கறாமாதிரி கால் பின்னும்’ என்று குழந்தை மாதிரி சொல்வதற்கு சிரிக்கவா?

எட்டாம் நம்பர் சாராயக் கடையில் 50 மில்லி வாங்கி பன்னீர் சோடாவில் கலந்து மிளகு போட்டுக் கொண்டு வரச்சொல்லி அதை ஃபாரின் சிரப்பு என்று ஏமாற்றிக் கொடுத்து அய்யரின் அலம்பல் தாங்காமல் அவர் நண்பர் நொந்து போனது வேறு காவியம்.

இப்படிக் குழந்தையாகவே இருந்து ரிட்டையர் ஆகி கொஞ்ச வருடங்களுக்கு முன் இறந்து போனார் அய்யர்.
-:o:-

Sunday, January 2, 2011

கேரக்டர் - ஹரி..

படைப்பின் விசித்திரம் பல நேரம் கற்பனைக்குள் அடங்காது. ஏன் ஏன் இப்படி என நம் மனதை பதைக்க வைக்கும் படைப்புக்களைக் கண்டே வந்திருக்கிறோம். பல நேரம் இவர்கள் முன் நான் எம்மாத்திரம் எனக் கூசும்படியான பலரை நான் சந்தித்திருக்கிறேன். சில நேரம் இவர்களை இன்னும் கொடுமையாகப் படுத்தும்போது கடவுளே உனக்கு வேறு யாருமா கிடைக்கவில்லை என நொந்துக் கொண்டதும் உண்டு.


அப்படி ஒருவன்தான் ஹரி. அலுவலகத்திலிருந்து எட்டு பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து சொகுசாக வண்டியில் நிதானமாக கிளம்பி ஒன்பதேகால் அலுவலகத்துக்கு பத்தே முக்காலுக்கு வந்து ‘ஒரே ட்ராஃபிக்’ என்றும், 9.45 ரயில் 20 நிமிஷம் லேட் என்றும், 5.15 வண்டியில்தான் உட்கார இடம் கிடைக்குமென்றும், 5.30கு கிளம்பினால்தான் ஆறறைக்குள் வீடு சேரலாம் என்றும் இருக்கும் மெஜாரிட்டியில் நேரத்தே அலுவலகம் வந்து அலுவலக நேரம் முடிந்து கிளம்பும் ஊழியன் அவன்.

வந்து டேபிள் துடைத்து, வாடிக்கையாக சிலருக்கு தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு ஹிந்து பேப்பரைப் பிரித்தான் என்றால் வரி விடாமல் படிப்பான். அவன் அப்பாவைப் போலவே. சில நேரம் துவண்டு போய் தூங்கிவிடவும் செய்வான். சோம்பேறித்தனமல்ல. அவன் எடுத்துக் கொள்ளும் மருந்தின் வினை. ‘ஹரி! இது அர்ஜண்ட்டுப்பா. எல்லா செக்‌ஷனிலும் கொடுத்துவிட்டு வருகிறாயா? என்றால் குடுங்க சார்’ என்று உற்சாகமாய்ப் போவதுண்டு பெரும்பாலும்.  ‘எனக்கு முடியலை! வைங்க அப்புறம் போறேன்’ என்று சொல்லும்போது சரி என்று விட்டால் ஐந்தாம் நிமிடம் வந்து கொண்டு போவான். மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியா இருக்கிறோம்? ஒரு சிலருக்கு ஈகோ தலை விரித்தாடும்போது, ’யோவ் சொல்றேன் அர்ஜண்டுன்னு, அப்புறம் போறியா’ என்றால் போச்சு. ஹரி விசுவரூபம் எடுப்பான். அந்தக் கடிதம் அவனால் கொடுக்கப்பட மாட்டாது.

யார் அந்த ஹரி என்று தோன்றுகிறதா? ஐந்தடி மூன்றங்குலம் இருப்பான். கட்டை குட்டையான உருவம். சில நாட்கள் எண்ணை வைத்து அழகாக வாரினாலும் பெரும்பாலும் எண்ணெய் காணாமல் கலைந்து பின்னியிருக்கும் சுருட்டை முடி. வாரம் ஒரு முறையோ பதினைந்து நாட்களில் ஒரு முறையோ, சில நேரம் அடிக்கடியோ மனம்போல மாற்றும் உடை. சற்றே கருப்புதான். கொஞ்சம் அழுக்கான தோற்றம்தான். சற்றே கூன் விழுந்த முதுகு. முற்றிய முகம். உருண்டைக் கண்கள். கட்டுப்பாடின்றி ஈரம் கசியும் உதடுகள். பிதுங்கித் தொங்கும் கீழுதடு. சிரிக்கும் போது அப்படியொரு வெள்ளந்தியான குழந்தைச் சிரிப்பு. பெரும்பாலும் ‘உர்’ என்று உதடு குவித்தபடி கர்ச்சீப்பால் அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளும் மேனரிசம்.

ஆமாம். மாற்றுத் திறனாளி என்று திறனற்ற நாம் பெயர் சூட்டிய ஒரு திறமைசாலி. சம்பந்தமில்ல்லாமல் ஹரியின் அறிமுகத்துடன் ஆஃபீஸ் நேரம் பற்றிய அளப்பு எதற்கு என்கிறீர்களா? ஹரி தினமும் திருப்பத்தூரிலிருந்து வருகிறான். காலை 3.30க்கு கிளம்பி, மாலை அலுவலகம் முடிந்து சரியான நேரத்தில் போனால் சேரும் நேரம் 10.30. அங்கு இறங்கி பஸ் பிடித்து வீட்டிற்குப் போக வேண்டும். அந்த ஒரு வேளை சோறும், கொஞ்ச நேர தூக்கமும் போக வாழ்க்கை முழுதும் ஏலகிரி எக்ஸ்பிரஸில்தான்.

சொந்த ஊர். விலைவாசி பரவாயில்லை. ஹவுசிங் போர்டில் ஒரு சிறிய வீடு கிடைத்தது என்பது தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. முடிவெடுத்தவரும் கூட அவன் தந்தை. இப்படியானவர்களுக்கென்றே சற்றே பொறுப்பான, புத்திசாலி மனைவிமார்களும் படைப்பினால்  உருவாக்கப் படுகிறார்கள். அப்படி ஒரு நல்ல பெண் மனைவியானாள். சூட்டிகையான ஒரே பெண். காலையில் அலுவலகம் வந்ததும், தன் வேலை முடித்து கேண்டீனுக்கு போவதோ, நண்பர்கள் யாராவது கொடுக்கும் டிஃபனோ சாப்பிட்டு தன் இடம் விட்டு நகராமல் இருப்பார்.

மதியம் ஒரு நண்பர் சாப்பாடு சேர்த்து கொண்டுவந்து விடுவார். மற்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட பொறுமை இராது பெரும்பாலும். மோர் இல்லையா? சரி பரவாயில்லை என்று தன் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். எத்தனையோ உசாராக இருந்தாலும், யாராவது ஒருவர் மதியம் பார்ட்டி அல்லது வேலை என்று தன் சாப்பாட்டைக் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிட்டு விடுவார். சில நேரம் இரண்டு மூன்று அப்படி சாப்பிட்டுவிடுவார். கொடுத்த கொடுமை போறாதென்று செரிப்ரல் பால்சியுடன் காக்காய் வலிப்பும் வந்துவிடும்.

நடக்கும் போதோ, உட்கார்ந்த நிலையிலோ தடாலென விழுந்து நுரை தள்ள வெட்டி வெட்டி இழுத்து மருத்துவ மனைக்கு தள்ளிச் சென்று ஊசி போட்டு ஆசுவாசமாக உயிர் போய் வரும். இது எல்லாருக்கும் உள்ளதுதானே. இவருக்கென்ன இவ்வளவு சிலாகிப்பு என்கிறீர்களா? ஒரு முறை ஒரு உயர் அதிகாரியின் இன்கம்டாக்ஸ் கணக்கை என்னிடம் சரிபார்க்க இவர் மூலம் கொடுத்திருக்கிறார்கள். வரும் வழியில் வந்து சேர்ந்ததது வலிப்பு. வெட்டி இழுத்து நுரைதள்ளி மயங்கிய நிலையிலும் கையில் உள்ள காகிதத்தைப் பறிக்க இயலவில்லை. தண்ணீர் தெளித்து, அரை மயக்க நிலையில் வீல் சேரில் இருந்தபடி ஒரு நண்பரிடம் ‘இதை பாலாஜி சாரிடம் தரணும்’ என்று சொல்லி மயங்கிவிட்டார்.

மருத்துவமனை சென்று, அவசர சிகிச்சை முடித்து, ஆசுவாசமாகி, தள்ளாடியபடி அலுவலகம் வந்ததும் என்ன செய்தார் தெரியுமா? நேரே என்னிடம் வந்து இன்னாரிடம் இவருடைய பேப்பர் கொடுத்தேன். ’கொடுத்துட்டாங்களா சார். ஃபிட்ஸ் வந்துடுத்து சார். நனைஞ்சு போச்சா, சரியா இருக்கா? தேங்க்ஸ் பாலாஜி சார். ஒரே கேரா இருக்கு சார்’ என்று நழுவும் பேண்டை இழுத்து விட்டுக் கொண்டு சென்றவனை எப்படி பாராட்டினால் தகும்.

இப்படியான நாட்கள் தவிர விடுமுறை எடுப்பது அபூர்வம். இப்படி ஒரு ஜீவனை ஏமாற்றவோ பலிகடா ஆக்கவோ இன்னொரு மனிதனால் முடியுமா? அந்தக் கொடுமையும் நடந்தது. மகளின் திருமண நேரம் பார்த்து, அட்வான்ஸும்,  வாடகைப் படியை விட வாடகை அதிகம் தருகிறேன். குவார்ட்டர்ஸ் உன் பேரில் வாங்கிக் கொள் என்று வாங்க வைத்து, வாடகை கேட்டபோதெல்லாம் மிரட்டி, அட்வான்ஸ் பணத்தோடு ஏமாற்றியும் விட்டு, அந்த வீட்டை சட்ட விரோதமான சிலருக்கு மேல் வாடகைக்கு விட்டு, போலீஸ் கேசாகிப் போனது. அரசு வீட்டை சட்ட விரோதப் பயன்பாட்டுக்காக வாடகைக்கு விட்ட பெருங்குற்றமாகி இருக்க வேண்டியது.

ஹரியைப் பார்த்ததுமே ‘இவரையா ஏமாத்தினான் அந்த நாதாரி’ என்று போலீசாரே இரக்கப்படும் அதிசயமும் நிகழ்ந்தது. தெரியாமல் ஏமாறிப்போய் செய்தாலும் தவறு தவறுதானே. நிர்வாக ஒழுங்குச் சட்டத்தில் தண்டனை கிடைத்தாலும் வேலை பிழைத்தது. பெண்ணின் திருமணத்துக்கு முன் மனைவியுடனும், மகளுடனும் என்னிடம் வந்தார்.

என்னால முடியல பாலாஜி சார். மெடிகல் அன்ஃபிட் வாங்கிட்டு மகளுக்கு வேலை வாங்கிடலாம்னு பார்க்கிறேன். யாரோ வாங்கித் தரேன்னு சொன்னாங்க. நீங்க சொல்லுங்க சார் என்று வந்து நின்றார். முழு பென்ஷனும் வராது. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த பின் வரும் பென்ஷன் சோத்துக்கே சரியாகிவிடும். இப்படி உடல் நிலையை வைத்துக் கொண்டு வயதான காலத்தில் இரயில்வே மருத்துவமனையை நாடி இருத்தல் இயலாத ஒன்று.

மகளுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் அவள் இவரைப் பராமரிக்க வேண்டும் என்பது எப்படிச் சாத்தியம்? சம்பளமும் குறைவு. மெதுவாக எடுத்துச் சொல்லி, அப்படி வேலை வாங்குவது எவ்வளவு சிரமம், பத்தாவது படித்த அந்தக் குழந்தைக்கு எங்கே வேலை கிடைக்குமோ அங்கு போய் குடித்தனம் வைக்கும் யதார்த்தமற்ற நிலமை, அவள் திருமணத்துக்குப் பின்னான நிலமை, வரவிருக்கும் சம்பள கமிஷன்களின் சலுகைகள் என்று எடுத்துச் சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் காலை தேடி வந்து, யோசிச்சேன் சார். வீட்லயும் பேசிட்டேன். நான் வேலைக்கே வரேன் சார். ரொம்ப தேங்க்ஸ் என்று போனார். ஐந்தாம் ஆறாம் சம்பளக் கமிஷன் கடந்துவிட்டது. தினமும் வணக்கம் சொல்வதும், கடிதம் கொடுக்க வரும்போது சவுக்கியமா இருக்கேன் சார். பேத்தி பிறந்திருக்கா சார். கடன் எல்லாம் அடைச்சிட்டேன் சார் என்று சொல்லிவிட்டுப் போவார். தவறாமல் தண்ணீர் பாட்டிலில் பாதி தண்ணீர் இருந்தால், தண்ணி கொண்டு வரேன் சார் என்று கொண்டு கொடுப்பார். வயதான காலத்தில் ஆரோக்கியமாவது அவருக்கு நல்லபடி அமைய வேண்டும் என்ற நினைப்பே மேலோங்கியிருக்கும்.  

‘வரேன் சார்! மணி 5 ஆயிடுத்து. இதெல்லாம் கொடுக்கணும். எல்லாரும் சீக்ரம் போய்ட்டா பெண்டிங் ஆயிடும்’ என்று ஓடுகிறார் ஹரி. ஆமாம். கொடுத்த வேலை முடித்துவிட வேண்டும் அவருக்கு..
~~~~~

Saturday, December 25, 2010

கேரக்டர்-தலைவர்...

தானே உட்கார்ந்த தானைத் தலைவர்னு ஒரு காமெடி பீஸ் பார்த்து சிரிச்சோம்ல. அப்படி தன்னைத் தானே தலைவர்னு சொல்லிக் கேட்க ஆசைப்பட்ட மனுசன் நம்ம தலைவர். வில்லங்கமான காமெடி பீசு. ஒரு புரியாத புதிரும் கூட.

‘அந்தக் காலத்துல நான் ரோட்ல எறங்கி நடந்தா நான் தெரு முனைக்கு போவுற வரைக்கும் பார்ப்பாளுங்க. ‘சார்பட்டா’ பரம்பரை குத்துச் சண்டை வீரன். பாடி அப்படி இருக்கும். அப்படியே அடிச்சி பார்ப்பாங்க’ என்று அலப்பறை செய்யும்போது ஆறடிக்கும் மேலான உருவம். அகலமான முகம். எண்ணை தடவி பஃப் எடுத்து வாரிய முடி. முள்ளம் பன்றி முதுகு போல் முடியடர்ந்த காதுகள். பூதக்கண்ணாடியை கண்ணில் மாட்டினாற்போல் கனமான கண்ணாடி. ‘பாதி பரமசிவம்’ வேறு. பாக்ஸிங்கில் நசுங்கி காதுக்கும் காதுக்கும் பரந்த மூக்கு. மீசை மழித்திருந்தாலும், ஷேவிங் ப்ரஷ் சொருகினார்போல் முடியடர்ந்த மூக்கு. தடித்துப் பருத்த உதடுகள். நெற்றியில் சாந்து வைத்து அதன் மேல் அளவாக வைத்த குங்குமம்.

காலர் இருப்பதால் கழுத்தென்று ஒன்று இருக்கலாம் என ஊகிக்கலாம். பானை வயிறு. ஒரு கை அரை மடித்து மறுகை அவிழ்ந்து பட்டன் போடாத முழுக்கை சட்டை. வேட்டி. யானை அடியெடுத்து வைப்பது போல் நிதானமான வித்தியாசமான நடை. தமிழ் ஆர்வலர். அலுவலகத்தின் இரண்டு தொழிற்சங்கங்களில் ஒரு சாத்வீக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். ஆனால் தலைவர் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆசை.

 மிகவும் நிதானமான பேச்சு. தொழிலாளர் பிரச்சனைகளைக் குறித்த ஆர்வம் அதிகம். ஆனால் பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்ற குறைக்கு மட்டும் உடனே கிளர்ந்து எழுந்து விடுவார் தலைவர். ‘வாங்கம்மா! அதிகாரியும் பெண் தானே! போராடினால்தான் இதற்கு விடிவு என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அணி திரட்டிக் கொண்டு செல்வார். அதிகாரியின் அறை வாயிலில் நிறுத்திவிட்டு, முதலில் நான் போய் சொல்கிறேன். பிறகு அழைக்கிறேன் என்று தான் மட்டும் செல்வார்.

 உள்ளே நுழைந்ததும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, கத்தைக் கடுதாசி அடங்கிய மேற்சட்டைப் பையில் தேடி, மஞ்சள் ஊறிய ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். காஞ்சீவரம், அல்லது மதுரை அல்லது ஏதோ அம்மனுக்கு பிரசித்தமான ஊர் பேர் சொல்லி, அங்கு போயிருந்தேன். உங்கள் பேரில் அர்ச்சனை செய்த பிரசாதம்மா, என்று நீட்டுவார். ‘அடிங்கொய்யால’ என்று நினைத்தாலும் வேண்டாமென்றா சொல்ல முடியும். பிறகு தொழிற்சங்க தலைவராவார். ஆரோக்கியம்,அது இது என்று ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டு, அம்மா நிர்வாகத்தில் தொழிலாளர் எல்லாம் ‘குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா’ மன நிலையில் இருக்கிறார்கள்.

 பெண்கள் கழிப்பறையில்தான் சில நேரம் தண்ணீர் வருவதில்லை. நீங்களும் ஒரு பெண் என்பதால் அந்த கஷ்டம் புரியும்மா. பார்த்து சரி பண்ணனும்மா. வரட்டுங்களா என்று கிளம்புவார். எப்போது வந்தாலும் இந்தப் பிரச்சனையே சொல்லுவதாலோ என்னமோ அதைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் இழு இழு என்று இழுத்துவிட்டு வெளியே வந்து, ‘கோவிச்சிக்கிட்டாங்க. ஏன் தினம் வந்து பார்க்கறதில்லைன்னு. நம்ம மேல ஒரு தனி மரியாதை. காஃபி சாப்பிட்டுதான் போகணும்னு கம்பெல் பண்ணாங்க. பிரச்சனைய சொல்லிட்டேன். அவங்களே தலைமை எஞ்சினியரை கூட்டிட்டு வந்து பார்த்து சரி பண்றேன்னு சொல்லிட்டாங்க என்பார்.

 அது என்னமோ நடக்கிற போதுதான் நடக்கும். ஆனாலும், போட்ட போட்டில் அரண்டு போய் சரி பண்ணிவிட்டதாக அலட்டிக்காமல் சொல்லுவார். அவர் செக்‌ஷனில் பெண்கள் அதிகம். அவ்வப்போது ஒரு ரவுண்ட் வந்து நூறு ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா என்று கேட்டு டரியலாக்குவார். இருந்தாலும் இல்லவே இல்லை என்று மறுத்து விடுவார்கள். அசந்து மறந்து இருக்கு என்றுவிட்டால், படக்கென வேஷ்டியை ஒதுக்கி பட்டாபட்டி நிஜாருக்குள் 100ரூ தேடும் எழவை யார் சகிப்பார்கள்?

 தபால் வாங்கி அனைத்து எழுத்தர்களுக்கும் கொடுக்கும் வேலை இவருடையது. அய்யா ரிஜிஸ்டருடன் எழுந்தாலே ஒருவருக்கு ஒருவர் கூப்பிட்டு உஷாராகிக் கொள்வார்கள். வேலை மும்முரத்தில் இருந்தால் கண் தெரியாத சாக்கில் கன்னத்தில், மார்பில் இடித்துவிடுவார். இதற்காகவே, அவர் தபாலை எடுக்கும்போது ரிஜிஸ்டரில் இருக்கும் மற்ற தபால்களை உருவி விட்டு விடுவார்கள். அது காற்றுக்கு பறக்காமல் ஓடி ஓடி இவர் பிடிப்பதற்குள் சம்பந்தப் பட்ட எழுத்தர் அவர் தபாலுக்கு கையொப்பமிட்டு விடுவார்.

 எல்லார் டேபிளிலும் இப்படி நடந்தாலும் இது எப்படி சாத்தியம் என்று யோசித்ததே இல்லை. தமிழ்ப் பாடல்களில் கூட அபிராமி அந்தாதி மாதிரி பெண் தெய்வங்களின் பாடல்கள் அத்துப்படி.ஆனாலும் பேசுகையில் மனைவி குறித்து மிகவும் சிலாகித்து, ஒரு பெரிய கொடுப்பினை என்ற அளவில் பேசுவதால் நல்ல மரியாதையும் இருந்தது. பல இலக்கிய கூட்டங்களில் ப்ளேடு போட்டாலும், ஒரு திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசிய பேச்சுக்கு ஈடு இணையே இல்லை.

 விடாப் பிடியாக மைக்கைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துரை என்ற போதே அவரவர்க்கும் கழுத்து தொங்கிவிட்டது. கலியாண வீட்டில் அரசியல் வியாதிகள் பேசுகிறேன் பேர்வழி என்று எதிர் கட்சியைக் கிழித்து ஒட்டி எப்படியோ ஒரு லிங்கில் அதைப்போல் மணமக்கள் என்று முடிப்பார்களே அதெல்லாம் இதற்கு முன் கால் தூசி பெறாது.

 ‘பெரு மதிப்பிற்குறிய அதிகாரிகளே, சக ஊழியர்களே, சகோதர சகோதரிகளே, மற்றும் பெரியோர்களே தாய்மார்களே! செல்வன்....திருநிறைச் செல்ல்வி.... அவர்களின் இந்த இனிய திருமண நாளில் அவர்களை வாழ்த்தி உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்........மணமக்கள் மனமொத்த தம்பதிகளாக வாழவேண்டும். இதற்கு எடுத்துக் காட்டாக என் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கு கூற ஆசைப்படுகிறேன். என் முதல் மனைவி அவர்கள் இறக்கும் தறுவாயில் என் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார்கள்.’

‘என்னிடம், தனக்குப் பிறகு தனியாக இருக்கக் கூடாது. உடனடியாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு உயிர் நீத்தார். அவருக்கு கொடுத்த வாக்குப்படியே நானும் அவர் இறந்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துக் கொண்டேன். என் இரண்டாவது மனைவியும் சிறந்த குடும்பத் தலைவியாக அன்னியோன்னியமாக இருந்து வருகிறோம். எங்களைப்போலவே மணமக்கள் ஒருவரை ஒருவர் மதித்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்’ என்று முடித்து ஏன் யாரும் கைதட்டவில்லை என்று பார்த்த பார்வை இருக்கிறதே, அட அட.

பொதுவாக ஊழியரின் வாரிசு ஒருவருக்கு வேலை என்பது தொழிற்சங்கங்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளில் ஒன்று. தன் மகனை எப்படியோ பளுதூக்கும் பயிற்சியில் மாவட்ட அளவில் வென்றதை வைத்து ஒரு ப்யூன் வேலை வாங்கிய தலைவர் இவர். ரிட்டையரான பிறகும் அடிக்கடி அலுவலகம் வந்து தொழிலாளர் குறை கேட்டு, தான் இருக்கும்போது எப்படி உடனடியாக மேலதிகாரிகளிடம் பேசி குறை தீர்த்தார் என்பதையும், இப்போது உள்ளவர்கள் சுயநலமாக இருப்பதையும் குறித்து வருந்தும்போது சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனாலும், முடியாததை முடித்துத் தருகிறேன் என்ற வெற்று வாக்குறுதியோ, பணம் சம்பாதிக்கும் நோக்கமோ அற்ற நேர்மையான தலைவர். 


இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!!

Wednesday, December 15, 2010

கேரக்டர் - ராஜன்...

உழைத்துக் கரம்பேறிய உலக்கைக் கைகளும், முரட்டு முகமும், சாராய வாடையுமாய் ஒருவன் அவரை நெருங்குகிறான். அவர், கிள்ளியெடுக்க சதையின்றி, கொஞ்சம் அதி வெளிச்சமான ஆர்க் லேம்ப் போட்டால் ஸ்கேனிங் இல்லாமலே உடலுறுப்புக்களைப் பார்க்கலாம் போன்ற செக்கச் சிவந்த ஒல்லியான தேகம். துறுத்தி நிற்கும் நெஞ்சுக்கூட்டில் ஒற்றை ருத்திராட்சம். தாடி என்றே குறிப்பிடும் அளவுக்கு அடையாளமான வெண் தாடி. தலைமுடியை இறுக்கி பின்னிழுத்துப் போட்ட ரப்பர் பேண்ட். ஆண்களில் அதிகம் காணமுடியாத செக்கச் சிவந்த உதடுகள். தீர்க்கமான நாசி. அதைவிட ஊடுருவித் துளைக்கும் பார்வை. நெற்றியில் காமாட்சி குங்குமம். பார்க்கும் யார்க்கும் கும்பிடத்தோன்றும் உருவம்.

‘சாமி! ஃபி எப் போட்டுக்குறேன் சாமி. ஐந்நூறு ரூபாய்தான். வந்துகினே கீது சாமி. கொய்ந்தைக்கி பீஸ் கட்டணும். ஆப் டே சி.எல். போட்டுக்கிறேன். மன்ஸு வை சாமி’ என்கிறான்.

நெற்றிக் குங்குமம் மாதிரியே சிவந்த முகத்துடன் “த்தா! ஏண்டா என் தாலியறுக்கறீங்க. மனுஷனா மாடா. வந்ததையெல்லாம் செக் போட்டு கொண்டு கொடுத்துட்டு இப்பதானே உக்கார்றேன். ஃபீஸ் கட்றானாம் குடிகார நாயி. ஒரு நிமிஷம் நின்னா பளார்னு அறைஞ்சிடுவேன்” என்ற பதிலுக்கு அந்தச் சண்டியனின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

முகமெல்லாம் மலர, ‘டாய்ங்ஸ் சாமி! மச்சான் போலாம். வா! சாமி கெட்ட வார்த்தைல திட்டிடிச்சி. ஒரு டீ சாப்டு வந்தா துட்டு வாங்கிக்கலாம்’ என்று போவான். தலை எழுத்துடா என்று குழந்தை மாதிரி சிரித்தபடி மதிய உணவைப் புறம் தள்ளித் தேடிப்போவார். ‘ஒரு செகண்ட்ல திட்டிட்டேன். பாவம். நம்பிண்டு போறான். போட்டுக் கொடு’ என்று கேட்டு வாங்கி, செக் எழுதி, கேஷியரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்து சாப்பிடுவார். அவர்தான் ராஜன்.

நாலு முழக் கதர்வேட்டி, அண்ணன் மகன்கள் போதவில்லை என்று கொடுத்த சட்டை, தடியான இங்க் பேனா, பாக்கட் கொள்ளாக் காகிதங்கள், செக் எழுது்ம் நேரம் தவிர ஓய்வின்றி நடையும் உழைப்பும். செங்கல்பட்டில் வீடு. காலை முதல் பேசஞ்சரில் வந்துவிடுவார். இரவு  பாண்டியனில் திரும்பினால்  சீக்கிரம். அப்போதும் பை நிறைய பில்லும், செக்கும், ஸ்டேட்மெண்டுமாய் வேலை பார்த்தபடி போவார். ராஜனிடம் பில் போனால் செக் நிற்காது என்று நம்பிப் போவார்கள்.

இரவு ஏழரை மணிக்குக் கிளம்புவார். டேபிள் அடிகளில் ஏதாவது செக் தாள் பறந்திருக்கிறதா என்று பார்த்து, காந்தி படத்தின் முன் கை கூப்பி வணங்கி ‘ராமச்சந்திர மூர்த்தி! கிளம்பலாம்’ என்று கிளம்பி பறக்க பறக்க வண்டி பிடிக்க ஓடுவார். ராஜன் திட்டினார் என்று ஒரு முகம் சுணங்கியதில்லை. சாரி சொல்லிவிட்டுப் போவார்கள். சம்பளப் பட்டுவாடாவுக்கு  விரட்டி விரட்டி பில்லை பாஸ் செய்ய வைத்து இரண்டு நாள் முன்பாகவே செக்கை அனுப்பிவிட்டு, மலர்ந்த முகத்துடன் எல்லா செக்கும் அனுப்பியாச்சுப்பா. நம்பிண்டு போய் சம்பளம் வரலைன்னா கஷ்டம் என்று போவார்.

சில நேரங்களில் கடவுளையே நீ இருக்கிறாயா என்று கேட்கத் தோன்றும் தருணங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும். இவர் விஷயத்தில் ரொம்பவே அப்படியான தருணங்கள் அமைந்தது. வாய் ஓயாமல் ஸ்லோகம் சொல்லிக் கொண்டு, கீர்த்தனங்கள் பாடிக் கொண்டு, செய்யும் தொழிலில் நேர்மை, அன்பு, இடையறா உழைப்பு என்று இருக்கும் ஒருவனை விட வேறே மனிதனை எங்கே தேட? லக்ஷ்மணனைப் போல அண்ணன் மீது அவ்வளவு மரியாதை. பாசம். அவரின் குழந்தைகளைத் தன் பிள்ளைகளாக வளர்த்தார் என்றோ அவருக்கு பிள்ளை இல்லாமல் போகும்?

மனைவிக்கு மன நலம் அவ்வளவு சரியில்லை. சுயமாக ஒன்றும் செய்யத் தெரியாது. பயந்த நாட்களில் அறையை விட்டு வெளியே கூட வரமாட்டார். காலையில் எழுந்து, பூஜை புனஸ்காரங்களோடு சமையலும் செய்து, மனைவிக்குச் சாப்பிடக் கொடுத்து, மதியத்துக்கும் எடுத்து வைத்து, அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளச் சொல்லி முதல் காஞ்சிவரம் பாஸஞ்சர் பிடித்து ஒன்பதரைக்கு ஆஃபீஸில் இருக்க முடியுமா? ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 35 வருடம் இந்த நெறியில்தான் வாழ்க்கை என்றால் மனிதனுக்கு சலிப்பு தட்டாதா?


ரிடயராகி பத்து வருடமிருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தேன். வெளியுருவில் சற்றும் மாற்றமில்லை. முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். கையைப் பிடித்துக் கொண்டு ‘எப்படி இருக்க பாலு’ என்ற நொடியில், ஒரு நல்ல சங்கீதத்தில், கோவில் ஹாரத்தியின் போது, அமைதியான ஒரு நொடியில் அலை அலையாய் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுமே! உடலின்றி கனமின்றி பரப்பது போல், கனவா நனவா என்று ஒரு உணர்வு வருமே, அப்படி வந்தது. மனமெல்லாம் துடைத்துவிட்டது போல் இருந்தது. அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு.

நீங்க எப்படி இருக்கீங்க சார் என்று கேட்கவே தொண்டையடைத்தது.  ‘ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாயிருக்கேண்டா. பூஜை கோயில்னு போயிடுறது பொழுது. இனி என்ன தேவையிருக்கப் போறது சொல்லு’ என்று ஆசி கூறிப் பிரிந்தார்.
 

எத்தனையோ உருப்படாத கேஸ்களுக்கு சற்றும் தகுதியில்லாவிடினும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து உதவ முடிந்திருக்கிறது. உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை.

செய்யக் கூடியவர்கள் ‘ப்ச்! ரூஊஊஊல் அப்படி இருக்கிறது என்பதற்கு மேல் செய்யத் தயாரில்லை. தீர்வாணையத்தில் ஒரே ஹியரிங்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு பெறக்கூடிய எளிய கேஸ். இத்தனைக்கு அவரின் உறவினர் அங்கே குமாஸ்தா. பல தேர்ந்த வழக்கறிஞர்களும் அனுமதி கட்டத்திலேயே தீர்ப்பாகிவிடும் என்று சொன்ன வழக்கு. ஒரு பகல் போதில் அரசு ஆணை! விசாரணைக்குத் தகுதியற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்ட போது அதிர்ந்து போனேன். உயர் நீதி மன்றத்துக்குப் போகலாம் சார் என்று எவ்வளவோ சொன்னேன்.
என் பெரிய தோல்வி இதிலிருக்கிறது.

தளர்ந்த மனதுடன்,  ‘இது எனக்கு இல்லை பாலு. நீ சொன்னாய். அத்தனை வக்கீல்மாரும் சொன்னார்கள். அப்படியும் இப்படி ஆகிறதென்றால் எனக்கு இது விதிக்கலைடா. எனக்குப் போராட தெம்பில்லைடா. என்ன ஒரு அம்பது ரூபா பென்ஷன்ல வருமா? உழைச்ச உழைப்பை இல்லைடான்னு பதினஞ்சாயிரம் என் வயித்தில அடிச்சானா? இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, December 6, 2010

கேரக்டர் - அவன்..

கேரக்டர் எழுத ஆரம்பித்ததிலிருந்து இவரை எழுதுவதா வேண்டாமா என்று ஒவ்வொரு முறையும் ஒரு சின்னப் போராட்டமே நடைபெறும் என்னுள். அப்படி ஒரு மனிதன். அவனின் சாதனை என்பதை விட இப்படி ஒருவனை கணவனாக வரித்து பிள்ளைகளை உன்னதமாக ஆளாக்கிய அந்தச் சகோதரியை சொல்லாமல் போனால் இவன் முழுமையில்லை. அதற்கு இவன் குறையையும் சொல்லியாக வேண்டிய நிர்பந்தம். பெயர் சொல்லிப் பாராட்டமுடியாத நிலை. மன்னித்துக் கொள் நண்பனே.

அவன் என் செக்‌ஷனுக்கு மாற்றலாகி வருமுன் அவனைப் பற்றிய விவரம் மாற்றலாகி வந்தது. என் அதிகாரி, என்னிடம், இவனை உன் கண்ட்ரோலில் வைத்துக் கொள். ரேஸ் பைத்தியம். அந்த மூத்த அதிகாரி சொன்னார். எங்கேயும் சுத்தவிடாடாதே. ஸ்ரிக்டா இருக்கணும். ஏதாவதுன்னா என்னிடம் சொல்லு என்றார். கண்டிப்புக்கும் எனக்கும் வெகுதூரம். நட்பாய்ச் சொன்னால் எல்லாம் நடக்கும் பாலிசி நம்முடையது. எனக்கு வந்ததடா வில்லங்கம் என்று ஒரு பூதத்தை எதிர் நோக்கியிருந்தேன்.

என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம். களையான சிரித்தமுகம். செக்கச் சிவக்க ஒற்றைத் திருமண். கருகருவென அடர்த்தியாய் அலையலையாய் வாரிய கூந்தல். வெற்றிலை பாக்கு புகையிலை மென்று பல் என்பது வெள்ளை நிறம் என்று ஒரு முறை கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். ஒரு காற்றுக்குப் பறந்து விடுவேன் என்பது போன்ற ஒல்லியான உடல்வாகு. சிரித்த முகத்துடன் வந்து அறிமுகம் செய்து கொண்டு ஆர்டரை நீட்டிய போது தெரியாது இவன் என்னை எப்படி பாதிக்கப் போகிறானென்று.

தேனீதான். பரபரவென்று சுற்றிச் சுழன்று வேலை செய்வான். கையெழுத்து கோழி கிண்டினாற் போலிருக்கும். கேட்டுக் கேட்டுச் செய்வான். பரோபகாரி. யாராவது முதியவர் பென்ஷன் விஷயமாக அல்லது அட்ரஸ் கேட்டு வந்தால், இருக்கும் வேலையை விட்டுவிட்டு அவருக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான்.

கொஞ்ச நாளிலேயே மிகவும் நம்பிக்கைக்குரியவனாகி விட்டிருந்தான். நெருக்கமும் கூட. ஒரு நாள் தேனீர் அருந்துகையில் ரொம்பவும் யதார்த்தமாக, தன்னுடைய ரேஸ் பழக்கத்தைச் சொன்னான். ரொம்ப அழிஞ்சிட்டேன் சார். பெரிய ஆஃபிஸர் கிட்ட கூட போட்டு பார்த்துட்டாங்க. எக்மோர் பின்னாடி ஆஃபீஸா. மச்சான் கொஞ்சம் பாத்துக்கடா லெட்ரீன் போய்ட்டு வரேன்னு ஒரு வண்டி பிடிச்சி மாம்பலம் இறங்கி புக்கியிடம் பணம் கட்டிவிட்டு அடுத்த வண்டியில் வந்துவிடுவேன். இப்போதுதான் திருந்தி நன்றாக இருக்கிறேன் என்று சொன்னபோது கொஞ்சம் பெருமையாய்த்தானிருந்தது.

நாதாரி சார் நானு. நினைச்சா ச்சீன்னு சாவணும் போல வரும்சார். அர்பன் பேங்க் லோன் போட்டு ஆயிரக் கணக்கில கையில இருக்கும். பொண்டாட்டி புள்ளதாச்சி. காலைல ஒரு பன், டீ வாங்கி குடுத்துட்டு க்ளப்புல மொத்த துட்டும் தொலைச்சிட்டு போயிருக்கேன் சார். ராத்ரி வரைக்கும் ஒன்னும் சாப்பிடாம தூங்கியிருப்பா சார் என்று சொல்லும்போது கண்கலங்கும். கொஞ்சம் கடன் இருக்கு சார். அது முடிச்சிடலாம் என்ற போது நம்பிக்கையும் வந்தது.

திருவேங்கடம், ஜனா வகையறாவுடன் மங்காத்தா ஆடுவான். வெறும் பத்து ரூபாயோடு. பல நேரம் மொத்தம் உருவி விடுவான். ஆட்டம் முடிந்ததும், டமாஷ்கு ஆடினதுய்யா. இந்தா புடி என்று பெருந் தொகையை கொடுத்து விடுவான். இவனால் பல்ப் வாங்கிய சமயம் பல உண்டு. எலுமிச்சம் சாதம், காண்ட்ராஸ்டாக வெண்டைக்காய் பொரியல். ஒரு தீய்ந்த அடையாளம் இன்றி பச்சு பச்சென்று இருக்கும். சாதம் முழுதும் பரவலாக முந்திரிப் பருப்பு. பெரிய ராஜ பரம்பரை இவரு. முந்திரி கேக்குதோ என்றால், அட சை, 2 ரூ குடுத்தா இவ்வளவு முந்திரி குடுப்பான். இதுக்கு ராஜாவா இருக்கணுமா என்றதை நம்பி, ஒரு பண்டிகையன்று என் அம்மா பக்கதுக் கடையில் முந்திரி வாங்கி வரச்சொன்னபோதுதான் தெரிந்தது 5ரூபாய்க்கு 5 முந்திரி என்று. அப்படியொரு தில்லாலங்கிடி ஆசாமி.

‘த்தா’ இல்லாமல் பேச வராது. ஆனால் நெற்றியில் ஒத்தையை நம்பி, சில நேரம் ஏதோ விசேஷத்துக்கு கூப்பிட வருபவர்கள் இது பழைய பஞ்சாங்கம் என்று ‘அந்த’ பாஷையில் பேசினால் நொந்து நூலாகிப் போவார்கள். யாராவது இறந்தால் முதல் வருட திதியை ‘வருஷாப்திகம்’ என்று சொல்வார்கள். குழந்தை பிறந்து முதல் வருட பிறந்த நாளை ‘ஆயுஷ் ஹோமம்’ என்பார்கள். ஒரு பெரியவர் தன் பேரனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு அழைக்க வருகிறேன் என்று ட்ரெயினில் சொல்லும்போது ‘ஆயுஷ் ஹோமம்’ என்று சொன்னதை மறந்து, பத்திரிகை கொண்டு வந்தவரிடம் ‘என்ன மாமா! பேரனுக்கு வருஷாப்தின்னு சொன்னீங்களே. அந்த பத்திரிகையா என்றதும் அவர் பதறின பதறல் இருக்கிறதே.

எம்.ஜி.ஆர் மறைந்த தினம். சம்பள பில் போயாக வேண்டும். ஊரெங்கும் கடையடைப்பு. கல் வீச்சு. ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். சார் போலாமா என்று. பயந்து பயந்து டபுள்ஸ் போய், ஓட்டேரியில் கல்வீச்சில் சிதறி ஓடி, எப்படியோ சேர்ந்து நடந்தே போனோம். அடுத்த நாள் சைக்கிளும் வேண்டாம் நடந்தே போகலாம் என்று வந்துவிட்டான். மொத்த பில்லும் முடித்து, அடுத்த செக்‌ஷன் பில்லும் பெரும்பாலும் முடித்துப் போட்டோம் இருவரும். அடுத்த வேலை நாளில், சம்பளம் பெரிய பிரச்சனையாய் பேசப்பட்டு, எல்லாருக்குமே கேஷிலும், ஆடிட்டிங் பிறகு செய்து கொள்ளலாம் என்று அதிகாரி சொன்னபோது மொத்த பில்லும் ரெடி என்றதில் அசந்து போனார்.

ஜாதி என்னய்யா ஜாதி. என்னமொ பொறந்துட்டோம். எங்கப்பன் பூணூல் போட்டு விட்டான். ஒத்தை போடாட்டி என்னமோ போல இருக்கும். செத்தா அரணாக் கயிறைக் கூட அறுத்துட்டுதானே அனுப்பறாங்க என்பது அவரின் தத்துவம். மூலக் கொத்தளச் சாவுக்கு தப்பாட்டத்துடன் ஜோதியாவான். பிணத்தைத் தூக்குவதிலோ, குழிக்குள் வாங்க மற்றவர் தயங்குகையில் முதலில் குதிப்பதோ கொஞ்சமும் தயக்கமிருக்காது. ‘மொகம் பாக்கறவங்க பார்க்கலாம், மூடப் போராங்கவும், உடன் பாலேய் உடன் பலேயிலும்’ அதகளம் பண்ணுவான். பார்ப்பனர் வீட்டு சாவில் தர்ப்பை வாங்கி பேண்டில் சொருகிக் கொண்டு ரொம்பவும் ஐதீகமாக எல்லா சாங்கியமும் செய்வான்.

திரும்பவும் ஆள் அவ்வபோது காணாமல் போக ஆரம்பித்ததும், கேட்கும் போதெல்லாம் அங்கே போனேன் இங்கே போனேன் என்று சாக்கு வரும். ஒரு நாள் கேட்டேவிட்டேன். ஆரம்பிச்சாச்சா திரும்ப என்று. ‘இனியும் ரேசுக்கு போறதை விட’ என்று மோசமான ஒரு வாசகம் சொன்னான். டீக்கு போகையில் ஒரு சக ரேசரை பார்த்த ஆர்வ மிகுதியில், ‘இன்னா மாமா! நேத்து செம அடியாமே’ என்று கேட்க அவர் நீ எங்க முதல் ரேசுக்கப்புறம் ஆளைக் காணோம் என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அப்படியும் அவர் சும்மா சொல்றார் சார் என்றாலும் கடன், வீட்டுக்கு சரியாக சம்பளம் போவதில்லை என்பது தெரிய வந்தது.

ஒரு கட்டத்தில் எப்படியோ வசதியான வேறொரு அலுவலகத்துக்கு மாற்றலாகிப் போனதும் தொடர்பில்லாமல் போனது. சில காரணங்களினால் மனவருத்தமும் கூட. ஆனாலும் அங்கேயும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல் வேலையில் அவ்வளவு நல்ல பெயர். எப்போதாவது பார்த்தால் தயக்கமின்றி பேச முடிந்தாலும் அந்த வலி மறையாமல் ஊமையாய் வலிக்கும்தான்.

கடைசியாக, ஒரு அதிகாரியின் தாயின் இறப்பில் பார்த்து ஒன்றாய்க் கிளம்பியபோது மகன் எஞ்சினியரிங் முடித்து எம்.பி.ஏ. படிப்பதும், மகள் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பதும் பெருமையாகச் சொன்னபோது அந்தச் சகோதரியைக் கும்பிட வேண்டும்போலிருந்தது. இல்லையென்றால் இப்படி ஒரு நாதாரியுடன் வாழ்ந்து இது சாத்தியமா?

இப்போதும் அன்று பார்த்தார்போல் அதே உருவம், ஒரு நரைமுடியில்லை, மூப்பு தட்டாத அதே இளம் முகம். மனுஷனுக்கு வீக்னெஸ் இருந்தால் என்ன ? இப்படி மனுஷனாய் எல்லோருடனும் ஒட்டுறவாய்ப்  பழக முடிந்து, எதானாலும் பார்த்துக்கலாம் என்ற மனோதிடமும் இருந்தால் மூப்பு வராதோ?

Friday, November 26, 2010

கேரக்டர் சிட்நாநா...

சில நேரம் ஒரு மனிதரை ஒரு பருவத்தில் கண்டிருப்போம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரைச் சந்திக்கும்போது அந்தப் பருவத்துக்கான புரிதலில் ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அதிலும் மிக அபூர்வமாக ஒரு சிலர் நம் மனதில் இருக்கும் உருவத்தை விசுவரூபமாக்கி மெய் சிலிர்க்கச் செய்வார்கள். அந்த அனுபவம் அலாதியானது. ‘சிட்நாநா’(சிட்டி நாயனா என்கிற சித்தப்பா) அத்தகையதோர் அற்புத மனிதர்.

முதன் முறை அவரைச் சந்தித்தபோது எனக்கு 11 வயது. மனிதர்களைப் பிடிக்கும் பிடிக்காது என்பதற்குப் பெரிய காரணங்கள் ஏதும் இருந்துவிட முடியாது. பழகும் விதம், குழந்தைகளோடான அந்நியோன்னியம், பரிசுகள் போன்றவையே அவற்றைத் தீர்மானிக்கும். அதையும் தாண்டிய ஏதோ ஒன்றை உணர்வது வெகு சிலருக்கு வாய்க்கும். அது என்னவென்று புரியாமல் இருக்கலாம். ஆனால் அதனாலெல்லாம் அந்தத் தாக்கம் குறைந்துவிடப் போவதில்லை. அவர்களின் ஒரு குணம், ஏதோ ஒரு சிறப்பு நம்மையறியாமல் நம்மை வழிநடத்தும் விதையாக அமர்ந்துவிடும்.

நான் 11 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் 19 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் புற மாற்றங்கள் இருந்தனவே தவிர பெரியதாக அவரிடம் ஒன்றும் மாற்றமில்லை. ஆனால் என் வயதின் முதிர்ச்சி, அனுபவம், மனிதர்களைப் படித்த சற்றே விரிந்த மன விசாலம்,அந்த மனிதரில் புதிய கோணங்களைக் காட்டத் தவறவில்லை. மீண்டும் என்னைச் செதுக்கிக் கொள்ள ஒரு பெரிய நிகழ்வு அது.

எங்கள் வீட்டு மாடியில் புதியதாய் விசாலமான ஒரு அறையும், ஒரு ஓரம் கழிப்பறை/குளியலறையும் கட்ட ஆரம்பித்தபோதுதான் என் தோழன் ‘பெத்த நானாவின்’ மகன் முரளி சொன்னான், இது ‘சிட்நாநா’வுக்கென்று. பரபரவென வேலை முடிந்து மேலே தளத்துக்குப் பதில் அஸ்பெஸ்டாஸ் போடப்பட்டதும் அந்த வயதுக்கேயான புரிதலில் சிட்நாநா மற்றவர்களை விட கொஞ்சம் வசதி குறைந்தவர், அல்லது ஏழை என்ற ஓர் எண்ணம்.

சிட்நானாவும், தீபாவளியும் ஒன்றாய் வரும் நாள் நெருங்கியது. பெத்தநாநாவின் பிள்ளைகள், ஹரி, முரளி, சுந்தருடன் இன்னொரு சிட்நாநாவின் மகன்களுக்கு சிட்நாநாவின் வருகை தீபாவளியை விட அதிக எதிர்பார்ப்பைத் தந்தது. இவர்கள் ஒவ்வொருவர் மூலமும் கிடைத்த தகவலின் படி சிட்நாநா பம்பாயிலிருந்து வருகிறார், பெரிய பணக்காரர், நல்ல செல்வாக்குள்ளவர், குடும்பம் இல்லை, அவருடை வீடுதான் நாங்கள் குடியிருக்கும் தொகுப்பு, சென்னையில் அவருக்கு 15க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் ஓடிக் கொண்டிருப்பது, எல்லாம் விட வரும்போதெல்லாம் சொந்தம் மட்டுமின்றி மற்ற குழந்தைகளுக்கும் பரிசோ, அவை தீர்ந்து விட்ட தருணத்தில் காசோ, எல்லாம் விட மாலைகளில் அவர்களுடன் விளையாட்டுப் பேச்சோ கதைகளோ கதைப்பது போன்ற அரிதான குணம் கொண்டவர் என்பது அவருக்காகக் காத்திருப்பவர்களை விட, இப்படி ஒரு மனிதர் எப்படியிருப்பார் என்ற எதிர்பார்ப்பை என்னிடம் உருவாக்கியது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன் ஒரு அதிகாலைப் பரபரப்பில் காலை மெயிலில் சிட்நாநா வந்துவிட்டதை அறிய முடிந்தது. அவருக்காக ஃப்ளாஸ்கில் காஃபி கொண்டு சென்ற சுந்தர், ‘சிட்நாநா’ வந்துட்டாங்கடா என்று ஓடியபோது நானும் ஓடினேன். பெத்த நாநாவைப் போன்று அலை அலையான முடி, கோதுமை நிறம், ஒரு வேளை பணக்காரர் என்பதால் குண்டாக இருக்கலாம், பம்பாய் என்பதால் பைஜாமா ஜிப்பா இப்படியாக இருந்தது நான் வரைந்திருந்த மன ஓவியம்.

உள்ளே அமர்ந்திருந்த மனிதரைக் கண்டதும் பெரிய அதிர்ச்சி. ஒரு பயம். திகைப்பு. ‘பரிகெத்தொத்துரா நான்னா. படுதாவு. எவரிதி?’ (ஓடி வராதே, விழுவாய், யார் இது) என்ற கேள்வியைத் தொடர்ந்த ஒரு சிரிப்பு இன்றும் என் மனதில் பசுமையாய் நினைவிருக்கிறது. என்னையறியாமல் கை கூப்பி வணங்கியது அவரை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். ‘நீ பேரேமிடிக்கு’ நாக்கு புரள மறுத்தது. சுந்தர்தான் பேரைச் சொன்னான்.

ஆஜானுபாகுவான உடலும் உயரமும். தும்பைப்பூ வேட்டியில் வெள்ளை முழுக்கைச் சட்டையுடன் அமர்ந்திருந்தார் மனிதர். கருத்துச் சிவந்து மினுமினுத்த பெரிய காது. தடித்த இமைகளும், உதடும். மடிப்பு மடிப்பாய் செதில் செதிலான முகம். மூக்கு உள்ளடங்கி துளை மட்டும் வித்தியாசமாக இருந்தது. உதவியாளன் ஆற்றிக் கொடுத்த காஃபியை இரண்டு கரங்களால் பற்றிய போது கரிக்கட்டைகளாய் விறைத்து நுனி சற்றே வளர்ந்த விரல்கள். அத்தனையும் அந்த வயதில் ஒரு பயம் தந்திருக்க வேண்டும். மாறாக வாத்ஸ்ல்யமான குரலும், அந்த தடித்த உதடுகளில் தவழ்ந்த புன்னகையும், நெற்றியில் ஸ்ரீசூர்ண ஒற்றையும், அதையும் மீறிக் கண்ணில் இருந்த ஏதோ ஒன்றும் கட்டிப் போட்டது.

பிள்ளைகளுக்காக மாலையில் வந்திறங்கிய பட்டாசும், இனிப்புப் பாக்கட்டுகளும், தீபாவளி இனாமும்( ஹி ஹி வாழ்க்கையில் முதன் முதலில் எனக்கெ எனக்காக ஒரு பத்துரூபாய்த் தாள்) விட ‘இப்புடு வீடு’ (இப்போது இவன்) என்று ஒன்றொன்றாக ஒரு பிள்ளைகளையையும் விடாமல் முறைவைத்து குழந்தைகளோடு குழந்தையாய் வேட்டு விட்டதும், ரசித்ததும் மறக்கவே மறக்காது. பட்டாசு வெடிப்பதை விட நான் அவரை உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

தீபாவளியன்று அதிகாலையில் தன் உதவியாளருடன் ஒவ்வொரு குடித்தனமாக வந்து வெளியே நின்றபடியே உதவியாளர் மூலம் இனிப்பைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துச் சொல்லி விறைத்த கைககளைக் கூப்பியபோது நெகிழ்ந்து போகாதவர் யார்? ஒரு சிலர் உள்ளே அழைத்தபோதும், அந்த அழகிய சிரிப்புடன் மறுத்து அடுத்த வீட்டுக்கு நகர்ந்தபோது அவர் பின்னால் ஒரு வாண்டுப் படையே போனது. பட்டாசாவது மண்ணாவது.

மதிய உணவுக்கு பெத்தம்மா கேரியரில் கொண்டு வந்து, ‘வத்து வதினாவை’ (வேண்டாம் அண்ணி) புறந்தள்ளிப் பரிமாரியபோதும், சாப்பிட வாகாக உள்ளங்கையில் உருட்டி வைத்தபோதும், பெத்தம்மாவின் முகம் எப்போதையும் விட கொள்ளையழகு. அதைவிட அழகு, போதுமென வாய் சொல்ல நீண்ட கையுடன் சிட்நானாவின் கண்கள். அதன் பிறகு நாங்கள் வீடு மாறிப் போனதும் பிறகு எனக்கு வேலை கிடைத்தபின் அதே வீட்டில் குடி வந்ததும் ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.

ஹரி மெர்ச்சண்ட் நேவியில், முரளி படிப்பை நிறுத்தி ஏதோ கடையில், சுந்தர் கல்லூரியில். எங்கள் நட்போ ஹாய், ஹலோவில். இந்த முறை சிட்நாநா வருவதை பெத்தநாநாதான் சொன்னார். கேட்டதும் மனதில் எப்படி இருக்கிறாரோ என்ற ஒரு வருத்தம் தோன்றியது. டாக்ஸியில் வந்து இறங்கிய சிட்நாநாவுக்குப் பின்னே ஒரு யுவதியும், ஒரு குழந்தையும். இன்னொரு டாக்ஸியில் உதவியாளர்கள் வந்திறங்கினர். ரொம்பவே மாறியிருந்தார் சிட்நாநா. புருவம் அறவே இல்லை. இமைகளோ ஒரு கோடாய். மூக்கிருந்த இடத்தில் இரு துவாரங்கள். கூப்பிய கைகளில் ஓரிரண்டு விரல்கள் மட்டும். ஆனால், அந்தச் சிரிப்பும், கண்ணும் மாறவேயில்லை.

‘அரேரே! பாலாஜிகாதுரா நுவ்வு? பாகுன்னாவா?’ என்ற விசாரிப்பில் அதிர்ந்துபோனேன். வெறும் இரண்டு நாள், அதுவும் எட்டு வருடங்களுக்கு முன் கூட்டத்தில் ஒரு சிறுவனை கவனம் வைத்துக் கொள்வது பெரியது. அதிலும் இன்னார் என அடையாளம் காணமுடிவது பெரிய ஆச்சரியம். அன்றைக்கு பெத்த நாநாவின் மகள் கஸ்தூரி அக்காவின் மூலம் சின்நாநாவின் முழுப் பரிமாணமும் புலப்பட்டது.

சிறு வயதில் வீட்டில் காசு திருடியதற்காக தாத்தையா அடித்த அடியில் மும்பைக்கு ஓடியவர். ஓடியவருக்குப் புகலிடம் வேறென்ன? எப்படியோ வாலிபத்திலேயே தமிழர் வாழும் ஒரு பகுதிக்கு தாதா. கடவுள். பல பிள்ளைகளுக்கு கல்வி, திருமணங்கள், மருத்துவ உதவி. மதம் மொழி வேறுபாடின்றி தந்த ‘நாராயண் பாயி’ கடவுள். செல்வாக்கான மனிதர். அவர் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் ‘கண்பதி’ ஊர்வலமோ, சந்தனக் கூடோ, குருத்தோலை ஊர்வலமோ சிட்நாநாதான் ஸ்பான்ஸர்.

சிட்நானாவுடன் வந்திருப்பவர் அவருடைய உதவியாளர் ஒருவரின் காதலி. மதம் வேண்டாமே. இந்த நாய் அவளுக்குக் குழந்தையை கொடுத்துவிட்டுத் தலை மறைவானது. வீட்டை விட்டும் விரட்டப் பட்டிருக்கிறாள். இதெல்லாம் அறியாமலே ஓடியவனைத் தேடும் மும்முரத்தில் இருந்தவருக்கு அவன் வேறொரு குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏதோ கேஸில் சிக்கி ஜெயிலுக்கும் போய்விட்ட நிலையில் இவளைப் பற்றியத் தகவல் தெரிந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாம். ஒரு சேரியில் ஒரு தடுப்பில், கூலி வேலை, வீட்டு வேலை செய்து பிழைப்பதை அறிந்திருக்கிறார்.

பணக்காரர். தாதா. அவளை ஏமாற்றியவனும் இவருடனில்லை. யாருக்கான வாழ்வையோ யார் மூலமோ அமைக்கிறதே விதியோ, தெய்வமோ ஏதோ ஒன்று. பெற்றவர்கள் விரட்டியவளுக்கு தந்தையானார். பிறந்த பெண் குழந்தையை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். மனிதம் மொத்தமாகப் போய் விடவில்லையே. இவளுக்கு வாழ்வாதாரம் தர சிட்நாநா என்றால், அங்கம் சுருங்கி, அவயங்கள் இற்று விழ முடங்கிப் போன சிட்நாநாவுக்கு இவள் தாயானாள்.

சொந்த அண்ணன் வீட்டில் கூட நுழையாமல், தனித் தட்டு, டிஃபன் கேரியர் சாப்பாடு, அஸ்பெஸ்டாஸ் கூரையில் தங்கல் என்றிருந்தவரை யாரோ ஒரு பெண் தொட்டுத் துடைக்க, உணவூட்ட அனுமதித்திருப்பாரா என்ன? போராடி வென்றிருக்கிறாள் அவரை. ஒரு மாலை வேளையில், அவளையும் அவள் பிள்ளையையும் ‘நா கூதுரம்மா. நா மனவராலு’ (என் பெண்ணம்மா. இது என் பெயர்த்தி) என்று பெருமையோடு அறிமுகம் செய்தது அற்புதம். அந்தப் பெண்ணின் முகத்தில் ‘என் அப்பா’ என்ற பெருமை.

அடுத்த வருடம் சிட்நாநா இறந்து போனார். எப்போதும் சிரித்திருக்கும் பெத்தநாநா கண்கலங்கியது அந்த ஒரு முறைதான். அந்தக் குழந்தை டாக்டராக இருப்பதாக சில வருடங்களுக்கு முன் தன் மகனின் திருமணத்துக்கு அழைக்க வந்த கஸ்தூரி அக்கா சொன்னார். 
 ~~~~~~~~~~~~~