டோனி! டோனி! டோண்ட் ப்லே இன் த வெயில்!
நோமா! ஐம் ப்லேயின் இன் புள்யா மரம் நெழல் மா!
வாட் அண்ணாச்சி! ஆஃப் கிலோ கத்ரிக்கா டென் ருப்பீஸ் சொல்து. எட் ரூபாதான். வெங்காயம் ஆஃப் கிலோ போடு. ஓ மை காட்! இட்ஸ் எய்ட் ஓ க்லாக் ஆல்ரெடி. தொர கத்தும்.
ஏங்க சிரிக்கிறீங்க? இதென்னா மொழின்னா?
ஆப்பக்காரங்கன்னு நாம நக்கலா பேரு வச்சிருக்கோமே ஆங்கிலோ இந்தியர்கள், அவங்க பேசுறதுதான்.
ஹேய்! வாட்டாபன் டூ யூயா! நோ கால், நோ மெசேஜ், நோ மெயில்? எங்க தொலஞ்ச? ஹான்?
அட போ மச்சி! உனக்கு எல்லாம் ஃபந்தான். இஃப்யூ வெர் இன் மை பொசிஷன் இன்னேரம் மெண்டல் ஹாஸ்பிடலோ இல்ல சங்கோதான் யூ நோ!
அட ஏங்க சிரிக்க மாட்டேங்குறீங்க. இது என்ன மொழின்னு கேக்க மாட்டீங்குறீங்க. இது டமில்னு சுலபமா கண்டு பிடிச்சிட்டீங்கல்ல.
ஆங்கிலோ இந்தியர், தாய் மொழி ஆங்கிலம்னாலும் நம்ம மொழி கலந்து பேசினா சிரிக்கிறமே, நாம இப்புடி ஆங்கிலம், இந்தின்னு கலந்து பேசினா அவுங்க சிரிப்பாங்களேன்னு நமக்கு ஏங்க தோண மாட்டங்குது?
இப்படி பேசலைன்னா நம்மள மதிக்க மாட்டங்குறாங்களே, அந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது. ஒரு வாக்கியத்துல குறைந்தது ரெண்டு ஆங்கில வார்த்தை கலந்தோ அல்லது ஆங்கிலத்துல ஒரு வாட்டி தமிழ்லையும் சொல்லாமலோ பேசிப் பாருங்க. நீங்க டமில் மீடியமான்னு கேட்டுடுவாங்க. அது என்னமோ கொலக்குத்தம் மாதிரி.
இப்ப பாருங்க நீங்கல்லாம் ஏதேதோ நாட்டில் இருந்தாலும், ஒரு தமிழ்ப்பள்ளி ஆரம்பிச்சி, புள்ளைங்களுக்கு தமிழ் கத்துக் குடுக்கிறீங்களா இல்லையா? அதும் ஸ்விஸ் நாட்டுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முன்னாடி என்ன பண்ணனும்னு ஒரு கையேடு பார்த்தனுங்க. உங்க தாய் மொழி எதுவானாலும் குழந்தைகிட்ட அதில பேசுங்க. நிறைய தாய்மொழி வார்த்தை தெரிஞ்சாதான் அன்னிய மொழி கத்துக்க முடியும்னு போட்டிருந்துச்சு.
இங்க குழந்தை பிறந்ததும் இயல்பா வர ம்மா, ப்பா வந்தாலும் அதோட மல்லுக்கட்டி மம்மி சொல்லு, டாடி சொல்லுன்னு அதுங்கள கெடுக்கறமே. இயல்பா வராம, தமிழ்ல யோசிச்சி ஆங்கிலத்துல மொழிமாற்றம் செஞ்சு திக்கித் திக்கின்னாலும் ஆங்கிலத்துல பேசுறமே. இதுல வேற புள்ள அப்பதான் சுலுவா ஆங்கிலத்துல பேசும்னு வேற ஒரு மாயை எப்படிங்க வந்துச்சு?
ஆங்கிலோ இந்தியர்னு சொன்னேனே, அவங்கள்ள இளைய தலைமுறையெல்லாம் அதென்ன இந்தக் கூட்டத்துல நாங்க சிறுபான்மையா இருக்கிறதுன்னு அவங்க வேரைத் தேடி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துன்னு போய்ட்டாங்க. வயசாளிங்க, அங்க போக வழியில்லாதவங்க இந்தியாவை விட்டு போக மனசில்லாதவங்கன்னு ரொம்பக் கொஞ்சப் பேரு இருக்காங்க இன்னும்.
இரயில்வேயில் மிகத்திறமையான டிரைவர்கள், கார்டுகள்(தொழிற்பெயருங்க) இவர்கள். அலுவல் நிமித்தம் அவர்களுக்குள்ளே, அலுவலகத்திலோ, தேவாலயங்களிலோ ஒரே ஒரு வார்த்தை தமிழ் கலப்பின்றி பேசுபவர்கள் இவர்கள். சாமானிய மக்களூடன், அங்காடிகளில் பேசும்போது மட்டுமே கூடிய வரை இப்படித் தமிழ் கலந்து பேசுவார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழியானதால் இவர்கள் பிள்ளைகளுக்குத் தமிழையே முதல் மொழியாகப் படிப்பித்தவர்கள்.
இவர்களுக்காகத் தனியே ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் அங்கீகாரத்துடன் இருந்தாலும், ஃப்ரெஞ்ச், இலத்தீன், இந்தி இவற்றோடு தமிழும் ஒரு விருப்ப மொழியாக வைத்ததோடன்றி பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மொழியை விரும்பிக் கற்கவும் வழி வகை செய்தார்கள்.
ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்தாலும், பதினொன்றாம் வகுப்பில் சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஃப்ரெஞ்ச் என்று மாணவர்கள் இன்று தமிழ்நாட்டில் மாறும் நிலை இருக்கிறதே! அடிப்படையில் எழுத்துக்களில் இருந்து ஆரம்பித்து வேற்று மொழியை இரண்டே வருடத்தில் கற்று அதிலும் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களால் முடிகிறதென்றால் அவர்கள் திறமையில் குறையொன்றுமில்லை அல்லவா?
பின் ஏன், பத்து வருடம் படித்த தமிழைத் தொடராமல், வேற்று மொழியை நாடுகிறார்கள்? தமிழ் மொழியில் மதிப்பெண்கள் பெறுவது கடினம். மொத்த மதிப்பெண் குறைந்துவிடும் எனப் பயப்படுகிறார்கள்? தமிழ் தனக்கு நன்றாகத் தெரியும் என்ற மனத்திடம் இருக்குமானால் என் மதிப்பெண் ஏன் குறையப் போகிறது என்றல்லவா இருப்பார்கள்?
தகுந்த அடிப்படிக் கல்வியளிக்காமல், விடைத்தாள்களைத் திருத்துகையில் மதிப்பெண்களைக் குறைத்தே போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் புறந்தள்ளினாலும், மாணவர்களுக்கு தன் தாய் மொழியில், பத்து வருடங்கள் கற்ற மொழியில் ஒரு தேர்வை எதிர்கொண்டு, சிறந்த மதிப்பெண் பெற முடியுமென்ற தன்னம்பிக்கையை விட, இரண்டே வருடத்தில் வேற்று மொழியைக் கற்று தாய் மொழியை விட அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இந்திப் ப்ரசார் சபா மூலம் தேசிய அளவில் சிறுவயதில் இருந்தே பள்ளிக் கல்வி தவிர்த்து பல நிலைகளில் இந்தி கற்க வாய்ப்பிருக்கிறதே. பல தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. வெளி நாடுகளில் இன்னும் சிறப்பாக தமிழ்ப் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. தமிழ் நாட்டில் இருக்கிறதா?
இங்கு இந்தி கற்பிக்கப்படும். ஃப்ரெஞ்ச் கற்பிக்கப்படுமென வீதிக்கு ஒரு பெயர்ப்பலகை தொங்குகிறதே. தமிழ் கற்பிக்கப்படும் என்று ஒரு பலகையாவது பார்த்திருக்க முடியுமா? அடிப்படைக் கல்வி கற்காவிடினும், திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் படிக்க எழுதத் தெரிந்தவர்கள் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படிக்கலாம் என்ற வழி வகை இருக்கிறது.
இவர்களுக்குக் கூட எத்தனை ஆர்வமிருப்பினும், தனியாகத் தமிழ் பயில வாய்ப்பில்லை என்றுதான் கூற வேண்டும். செந்தமிழ் மாநாடு நடக்கப் போகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் பல அறிஞர்கள் அங்கும் பங்கேற்கக் கூடும். விழா மலரில் கட்டுரைகள் எழுதக் கூடும்.
இந்தி ப்ரசார் சபா போல் குறைந்த பட்சம், தமிழ்நாட்டில் மட்டுமாவது எல்லா ஊர்களிலும் தமிழ் கற்க மானியம் கொடுத்தாவது ஒரு மத்தியப் பயிற்சி நிலையத்தின் கீழ் சிறு பயிற்சி நிலையங்கள் அமைத்திட வேண்டிய அவசியத்தை உணர்த்துவீர்களா? எளிமையான ஆர்வமூட்டும் பாடத்திட்டம், திறமையான ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன், ஊக்கத் தொகை கொடுத்தாவது தமிழின்பால் ஆர்வத்தை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இல்லையேல் டாடி மம்மி வீட்டிலில்ல, தட போட யாருமில்லன்னு குத்தாட்டம் போடும் குழந்தையை ஸோ க்யூட் யார்? எப்புடி ஆடுறா பாரேன்னு கொஞ்சிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். நல்லா படிச்சி அது தொழில் முறையாகவோ மேற்படிப்புக்கோ வெளிநாடு வரும்போது இப்படி விழாவில் பங்கேற்று தமிழ் ஆர்வம் கொள்ளும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை. தலைப்புக்கு உதவிய கலகலப்ரியாவுக்கும், விழா மலருக்கும், ஊக்குவித்த சகோதரி திருமதி தேவகி செல்வம் அவர்களுக்கும் நன்றி. நண்பர்கள் பழமைபேசி, கதிர், பாலாசி ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. பாராட்டுகள்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழா நிகழ்ச்சிகள் தமிழ்மணம் முகப்பிலும், www.fetna.org தளத்திலும் நேரடி ஒளிபரப்பு நடைபெறுகிறது.
-----::-----

