Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, July 19, 2011

தலைப்பில்லாக் கவிதைகள்

துளிர்த்த பச்சையின் சிலிர்ப்பில்
பழுத்த இலையுதிர்வின் வலியை
உணராதா மரம்?
உதிரினும் 
மண் புகுந்து
தன் உயிர்கலக்கும்...


***
ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கேக்
என்றாள் குழந்தை

ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கண்
என்றிருந்தது எனக்கு..



****


குடை ராட்டினமாய்
மேலும் கீழுமாய்
அலைபாய்கிறது மனது
படி, எழுது, படம் பார்,
நட, ஓடு,
ஏதாவது செய்
என்றார்கள்..
ஆறோ, குளமோ,
ஏரியோ, கடலோ
எங்கு எறிந்தாலும்
கரையொதுங்கும்
கட்டைபோல்
மனமொதுங்குகிறது
நினைவு..



****


குடுவையில் அடைபட்டிருந்தேன்
இறுக்கம் உணர்ந்ததில்லை
அல்லது பழகிவிட்டிருந்தது
உன் விரல் தொட்டுத் திறந்தாய்
மென் மொழியால்
வெளி காட்டினாய்
உள்ளும்..
பரந்து விரிந்திருந்ததென் உலகம்
மொழியற்று
வழியற்று
திசை தப்பி
மீண்டும் குடுவைக்குள் நான்
இறுக்கம் திணறடிக்கிறது
வெளியில்லை
உள்ளும்..



****
அழுதழுதலைபாய்ந்து
அணைத்த கையொடுங்கி
ஆவலாய் முலையுண்ணும்
குழந்தையின்
முதல் ’ம்’க்கும்
உண்டபிறகான
’ஹா’வுக்கும் ஈடாக
நன்றிக்கும்
நிறைவுக்குமான
வார்த்தைகள்
எந்த மொழியிலும் இல்லை

***