Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Sunday, May 22, 2011

பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..

மதிப்பிற்குரிய கலஞ்ஜர் அவர்களுக்கு,

    கலஞ்ஜர் என்பது உங்களைக் கிண்டல் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல. கட்சி கட்சி என்று கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் உங்களைப் பாசமுடன் அழைக்கும் சாமானியத் தொண்டனால் அப்படித்தான் அழைக்கப்படுகிறீர்கள். வெள்ளிக்கிழமை உங்களை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது வருத்தத்தை விட கோபம் மேலோங்கியது. இன்று உங்கள் வழக்கமான பாணி சுய கேள்வி பதிலைப் படித்ததும் உங்களுக்கு வேண்டியதுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்த புகழ்பெற்ற பராசக்தி வசனத்திலிருந்தே இரு வரிகளைக் கடனாக எடுத்துக் கொள்கிறேன், இதற்கும் காசு எதிர்பார்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு.

    //உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். //

    ஓட்டுப் போடும் வயது வரும் முன்னரே ‘சூரியன் சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா ஓட்டு’ என்று நாலு தெரு சுத்தி, நடுமுதுகில் அடிவாங்கி ஒரு வேளை சோறு மறுக்கப்பட்டவன். உங்கள் ‘இதயத்தைத் தந்திடண்ணாவை’க் கேட்டுக் கேட்டு அழுதவன். திமுக படிப்பகத்தில் கலைந்து கிடக்கும் பத்திரிகைகளை அடுக்கி வைத்துக் காத்தவன். உங்கள் அரைநாள் உண்ணாவிரதம், மற்றும் காங்கிரசுக்கு கட்சியை தாரை வார்த்த கொடுமைகளைச் சகிக்காமல் கடந்த இரண்டு தேர்தல் தவிர திமுகவுக்கே ஓட்டளித்தவன். எல்லாவற்றையும் விட குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரை உள்ள தர்பைப் புல் சம்மந்தமுடைய பார்ப்பான்.

    நெஞ்சுக்கு நீதி ஐந்து பாகங்கள் எழுதிவிட்டேன். இது அடுத்த பாகத்துக்கான முன்னுரை அல்லது ‘மன ஓலம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏப்ரல் 27க்குப் பிறகு நீங்கள் எழுதவேண்டியதெல்லாம் ‘நெஞ்சுக்கு அநீதி’ என்பதை எப்போதாவது உணராமல் இருந்திருக்கமாட்டீர்கள். இந்த நிலையிலும் உங்கள் தோல்விக்கு வேறெதுவும் காரணமில்லை, தேர்தல் கமிஷன் எனும் பிரம்மராட்சச பூதமே என்பீர்களேயானால், உங்கள் நெஞ்சுக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி உழைத்த தொண்டனுக்குமே அநீதி செய்கிறீர்கள்.

    //பதினான்கு வயதில் ‘பனகல் அரசரைப் படித்து....வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான் தொடும் மாளிகைக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை.//

    இதை எழுதும்போது உதட்டை ஒரு ஓரமாக சுழித்து குறும்புத்தனமாக சிரிப்பீர்களே அது ஏனோ கவனத்துக்கு வந்து தொலைகிறது. இது அரசியல் வியாதியின் பாலபாடமல்லவா? டாஸ்மாக் சரக்கில் மட்டையான நிலையிலும் கூட உங்கள் விசுவாசத் தொண்டனாயினும் இதற்கு என்ன பதில் வரும் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என நம்ப முடியவில்லை.

    //அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டுகாலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டுகாலம் ஆட்சிக்கு முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் எதுவுமே சம்பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு //

இப்படி ஒரு கேள்வி எழுப்பி புளுகத் துணிவில்லை; சம்பாதித்தேன் என்று சொல்லி அதற்காக திரைப்படங்களில் சம்பாதித்ததாக ஒரு கணக்குக் கொடுத்தீர்கள் பாருங்கள், அட அட!! இப்போது கூட உங்களுக்காக கூவி ஒடுங்கிப் போன வடிவேலுவின் ‘இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது’ என்ற வசனம் கவனம் வரவில்லையா?

பொருளாளராக இருப்பதற்கும், தலைவராக இருப்பதற்கும் கூடவா தனித்தனியாக கட்சியில் இருந்து சம்பளம் தருகிறார்கள்?

‘தாய் சேய் நலவிடுதி’ கட்டினீர்கள் சரி. பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்பு விழா நடத்தினீர்கள் சரி. இந்தத் தராசில் வைத்துப் பார்த்தால் இதைவிட பன்மடங்கு செலவிட்டு நூற்றுக் கணக்கில் தொழிற்கல்விக் கல்லூரிகள் கட்டியவர்கள் பெரிய தியாகிகள். அந்த முதலீடுகள் மக்களுக்காகவே.

அதென்ன தலைவரே 1940களில் வாங்கிய சம்பளத்துக்கு அப்புறம் 2004-2005க்கு போய்விட்டீர்கள்? சரி உங்கள் சம்பாத்தியம், உங்கள் கணக்கு. ஒரு பேச்சுக்கு 1940முதல் 2003 வரை உங்கள் வருமானமும், உங்களைச் சார்ந்தவர் வருமானமும் எவ்வளவு என்று சொல்ல முடியுமா? நிஜமாக சொல்லுங்கள், கடன் வாங்கிப் படம் எடுப்பவன் அல்ல சொந்தப் பணம் சுரண்டல் பணமேயானாலும், பெண் சிங்கத்துக்கும், இளைஞனுக்கும் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்ட பணம் தகுமா?

//கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள் உயிரினும் மேலான உடன் பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். //

அருமை அருமை தலைவரே. ஆம் ஆயிரம் ஆயிரம்தான். கூடவே கட்சிக்கு ஒரு துரும்பும் சம்பந்தமற்ற குடும்பம் கிள்ளியெடுத்த கோடிகளை ஒப்பிட முடியுமா?

//ஈழத் தமிழர் நிவாரணத்துக்காக நிதி திரட்டப்பட்டபோது சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை//

இதயம் இனிக்கிறது. கண்கள் பனிக்கிறது. கூடவே குமட்டிக் கொண்டும் வருகிறது.

இந்தக் காலகட்டங்களில் கதை எழுதியே இத்தனை சம்பாதித்தேன் என்றால், அதிலும் கொடுத்தது போக இவ்வளவு இருக்கிறதென்றால் ஆச்சி மனோரமா பாதி தமிழ்நாட்டை வாங்கியிருக்கலாம். குதிரையில் விட்டார். குடித்து அழித்தார் என்றெல்லாம் கூட சொல்ல முடியாது.

அந்தக் கணக்கை வடிவேலு மாதிரி அப்படியே திருப்பிச் சொல்லு என்றால் உங்களாலும் சொல்ல முடியாது எனத் தெரியும்.

//என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள//

அதெப்புடிங்க எசமான் வருமானம்னு வரும்போது மட்டும் உங்கள் சம்பாத்தியமும், உங்கள் கொடைத்திறனும் மட்டும் சொல்வீர்கள். ஊழல் என்று வரும்போது, தோல்வி என்று வரும்போது மட்டும் குடும்பம் வந்து சேர்ந்து கொள்ளும். ஒன்று வஞ்சம் தீர்க்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். அல்லது ஒரு தனிமனிதனாக கட்சியை இழுக்காமல் அந்த ஊழலுக்கு சப்பை கட்டுவதோ எதிர்ப்பதோ செய்யுங்கள்.

நேற்று ஒரு தோழர் பட்டாசு வெடித்தவர்கள் சாதிவாரி கணக்கெடுத்தாற்போல் சொன்ன கருத்தை ஒரு நேர்மையான உடன் பிறப்புடன் வருத்தத்துடன் சுட்டியபோது தெரியவில்லை. இன்று உங்கள் ‘தர்பைப் புல்’ புலம்பலைப் பார்த்ததும் புரிந்தது. தலைவன் எவ்வழி? தொண்டன் அவ்வழி!!.

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே வசதிக்கு பதில் எழுதும் வித்தகர் நீங்கள். முடிந்தால் இந்தக் கேள்விகளையும் நீங்களே எழுதி பதில் சொல்லுங்களேன்.

1) எத்தனை வருடமாக மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்? ஏன்? அணியச் சொன்னவர் ‘தர்பையை’த் தொடாதவரா?
2. பிரார்த்தனை என்று உங்கள் குடும்பத்தார் ஏன் தர்பைக் கோவிலுக்கே போகிறார்கள்? ஒரு சொள்ள மாடனுக்கோ, அய்யனாருக்கோ பொங்கல் வைத்ததாகவோ, கெடா வெட்டோ பத்திரிகையில் வரவில்லையே?
3. இன்னும் என்ன தர்ப்பை எழவு. நீங்கள் தோற்கும்போதெல்லாம் அடிப்பதற்கு என்றே இருக்கிறதே பார்ப்பன இனம். அதன் பாலான உங்கள் காழ்ப்பு உங்கள் சொந்த வெறுப்பா கட்சியின் கொள்கையா? அப்படியானால் திமுகவில் பார்ப்பனர்களுக்கு அடிப்படை உறுப்பினராகக் கூட சேரும் உரிமையில்லை. இதுவரை கட்சிக்காக உழைத்த பார்ப்பனர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். தேர்தலில் பார்ப்பனர்களின் ஓட்டுத் தேவையில்லை எனச் சொல்ல என்ன கஷ்டம்?
4. சொந்தக் கருத்தே எனினும், உங்கள் வைத்தியத் தேவைக்கோ, வக்கீல் தேவைக்கோ, உங்கள் குடும்பத்தினரின் பிஸினஸ் தொடர்பு கூட பார்ப்பனர் அல்லாதவரோடு மட்டுமே என்று சொல்ல முடியுமா?
5. அட குறைந்தபட்சம் பார்ப்பனத் தலைவர் அல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டு என்றாவது சொல்லுவீர்களா?

ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

உண்மையாகவே நீங்கள் வேண்டிப் பெற்ற அண்ணாவின் இதயத்துக்கு மதிப்பிருந்தால், கோடானு கோடி தொண்டர்களை நினைத்தாவது கட்சித் தலைமையை ஸ்டாலினிடம் ஒப்படைத்து ஒதுங்கி இருங்கள். பேராசிரியர் போன்ற ஒரு சிலரின் வழிநடத்தலில் தி.மு.க. தழைக்கும். இல்லையேல் உங்களுக்கு நம்பிக்கையான ஒரு தர்ப்பையைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்சிக்கு எள்ளும் தண்ணியும்  விடுங்கள்.


இப்படிக்கு
இத்தனை காலம் உங்களுக்கு வாக்களித்த ஒரு தர்ப்பை.

Thursday, April 21, 2011

சாரா! சாரா!

கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?

சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.

இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.

பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள்.

சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.

உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள்.

முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன்.

சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.

நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள்.

எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?

ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.

இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?

இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?

இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?

இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன்.

இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும்.

இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்
வானம்பாடிகள்.

சாராவின் கடிதம்.


--:::--