சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது. இரண்டுக்கும் நடுவே அடர்ந்த புதரும், அதனடி நீரும், விஞ்ஞான அதிசயமாக தவளையும் கொசுவும் ஒன்றாய் இனவிருத்தி செய்யும் இடம். அதனை ஒட்டியதோர் அகலமான நடைபாதை. அதன் கீழ் பெருங்கால்வாய். இரவில் திறந்திருக்கும் ஒரு சில மூடிகளைத் தள்ளிக் கடக்கையிலேயே கொதிகலத்தின் சூட்டோடு, நாற்றமும் முகத்திலறையும்.
அந்தப் பாதையின் ஒரு முன்னூறு மீட்டர் தூரத்தில் ஓர் உலகம். தினமும் மாலை ஏழிலிருந்து எட்டேகால் வரை நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் பல சமயங்களில் என் மனதில் பெரும் தாக்கத்தையும், பல கேள்விகளையும் எழுப்பும் ஓர் உலகம். அதிலும் புதன் கிழமை எனக்கு பெரும் நரகம் அக்காட்சிகள்.
ஆம்! தெலுங்கு பேசும் குறவர்கள் என நினைக்கிறேன். என்ன வேலை செய்கிறார்கள். என்ன பிழைப்பு. எதுவும் தெரியாது. சில நாட்கள் கட்டு கட்டாய் புற்கள் இருக்க துடைப்பம் செய்வார்கள். சில நாட்களில் ஒட்டடைக்குச்சிகள் கட்டுவார்கள். பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு.
முப்பது குடும்பங்கள் இருக்கலாம். ஒரு பார்வையற்ற மூதாட்டி குத்துக்காலிட்டு, பழைய புல்புல்தாராவில் இசைக்கும் ‘ப்யார் க்யாதோ டர்னா க்யா’வும், ஒன்பது அல்லது பத்து வயதான சிறுமி உச்சக் குரலில் சுருதி தப்பி தன் தம்பி தங்கைகளுக்கு ஒரு இத்துப்பொன ஆர்மோனியத்துடன் சொல்லிக் கொடுக்கும் ‘ஏடு கொண்டல சாமி எக்கடுன்னாவையாவும்’ தாண்டிவருவதென்பது பெரும் ப்ரயத்தனம். பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம். ஒன்றல்ல இரண்டல்ல அத்தனைக் குடும்பத்திலும் இத்தகைய குழந்தைத் தாய்கள் குழந்தைகளுடன்.
அழுக்கு லுங்கியும் அதைவிட அழுக்கான சட்டையும் தாடியும் தலைமுடியும் கொண்ட கணவன்மார். தவறாமல் ஒரு செல்ஃபோன். எப்படி சிம்கார்ட் கிடைக்கும்? எந்த முகவரி அத்தாட்சி கொடுத்திருப்பார்கள்? எங்கே சார்ஜ் செய்வார்கள் என்ற குறுக்குக் கேள்வி குடைந்தாலும், சில நாய்கள் குடித்துவிட்டு தட்டில் அன்னமிட்டு, குழம்பு ஊற்றி நீட்டும் மனைவியை ஒரு கையில் தட்டை வாங்கியபடி மறுகையால் ‘முக்கலெக்கடவே லஞ்சா!’ என அறைகையில் எட்டி மிதிக்கத் தோன்றும்.
இவையொன்றும் அறியாமல் அசந்து தூங்கும் பெருசுகள். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் எப்படியோ நான்கு கம்பி நடுவில் நட்டு கட்டி வைக்கும் கொசுவலைகள் அல்லது சீலைத் தடுப்புகள். கும்பலாய் அழுக்காய் விளையாடும் குழந்தைகள். வெள்ளிக் கிழமைகளில் இரந்து கொண்டுவந்த நீரில் குளியல். எதிர்ப்புறமிருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தடியில் படுக்கக்கூடாது என்ற விஞ்ஞானம் மறைந்த ‘முசலோள்ளு மாட்ட’(மூத்தோர் சொல்) அறிந்தவர்களுக்கு கால்வாய் மூடியருகில் உறங்கக் கூடாது என்ற மெய்ஞ்ஞானம் சொல்வது யார்?
குல்ஃபி ஐஸ் விற்பவன் தவலையை உலுக்கி, கரைந்த ஐஸ் நீரை கீழே ஊற்ற விடாமல் உப்பு கலந்திருந்தாலும் ‘அன்னையா! தீண்ட்லோ பொய்’ (அண்ணா! இதிலே ஊற்றுங்கள்) என்று குழம்பு வைத்த சட்டியை தூக்கிக் கொண்டு வந்து கெஞ்சும் குழந்தைகள். சில நேரம் இரக்கமற்ற இயற்கை இவர்கள் சமைக்கும் நேரம் மழையாய் வருகையில் உழைத்த காசுக்கு வாங்கிய அரிசி நனையாமல் சுற்றியெடுத்து, ஜீவா இரயில் நிலைய நடைமேடையில் அழும் குழந்தைகளோடு அடைக்கலம் புகும் இந்தக் குடும்பங்கள்.
இரக்கம் இத்துப் போன இப்பூமியிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் இவர்களுக்காய், இச்சமயங்களில் இட்டிலி பொட்டலம் கொண்டுவருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கும். ஒரு குடும்பத்தின் மொத்த உடமைகளையும் ஓரிரு சிமெண்ட் பைக்குள் அடக்கி விடுவார்கள். காலையில் விடிவதற்குள் இடம் சுத்தமாகிவிடும். ஆம்! படு சுத்தமாகிவிடும். சமைத்ததோ, உறங்கியதோ, குடித்துவிட்டு கக்கியதோ ஒரு அடையாளமும் இருக்காது. எதிர்ப்புறம் கைக்குழந்தைக்காரக் குழந்தைகள் ஒரு சிலர் மட்டும் சோள ரொட்டி சுட்டு அடுக்கிக் கொண்டிருப்பார்கள் ஒரு அழுக்குத் துணியில். பதினாறாய் மடித்து மெத்தென ஒரு மார்க்கமாய்க் கட்டிய தூளியில் கருவிலிருப்பதாய் முடங்கி உறங்கும் பிஞ்சு.
சனி ஞாயிறுகளில் கள்ள இரயிலோ, நல்ல இரயிலோ ஏறி ஊருக்குச் சென்றுவிடுவார்கள் போலும். அந்த நேரம், அதிலும் ஞாயிறுகளின் மாலைகளில், உண்டோ இல்லையோ அது ஒரு புறமிருந்தாலும் இருக்கிறதென நம்பி குழந்தைகளுடன் இவர்கள் வசிக்கும் இடத்தில், சூனியம் வைப்பவர்கள், கழிப்பு எடுப்பவர்கள், நகையும் நட்டுமாய் வந்திருந்து இந்த எழவெடுத்து படையலுக்கு வைத்த பிரியாணியும், கறிக்குழம்பும் அதே இடத்தில் தின்று கழித்து, குடித்து, குட்டிச்சாத்தான் பொம்மை, மயிர்க்குப்பை, கோழிரத்தம், இத்தியாதி கழிசடைகளை விட்டுப் போகும். இந்த வீடுள்ள நாய்களுக்குத் தெரியுமா? இந்தக் கழிசடைகளை சுத்தம் செய்து இங்கே உண்டு உறங்க வானம்பார்த்த குடிகள் வருமென்று?
பிறந்த ஊரில் (அப்படி ஒன்று இல்லாமலா போய்விடும்?) பிழைக்க வழியின்றி எந்த நம்பிக்கை இவர்களுக்கு வாழ வழி சொல்கிறது? எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா? பெருந்தனக்காரர்களா?
நிற்க! புதன் கிழமை நரகம் எனக்கு எனக் குறிப்பிட்டது இவர்களைத் தாண்டி ஒரு ஒரு ஐம்பது சதுரடிக்குள் தவறாமல் கட்டப் பட்டிருக்கும் எருதுகள். ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு குடும்பத்துக்கு உழைத்து ஓடாய்த் தேய்ந்து, கடனுக்கோ, கலியாணத்துக்கோ காசாகி, தரகனிடம் கைமாறி, மைல் கணக்கில் நடந்து வந்து அடுத்த நாள் வெட்டுப்பட காத்திருக்கும் ஜீவன்கள்.
பிரித்துப் போட்ட புற்களை மேய்ந்தபடி நிற்கும் இவைகளின் கண்ணில் தெரியும் சோகம் என் கற்பனையா? மிருகங்களுக்கு உள்ளுணர்வு அதிகமாமே? இல்லாவிடினும் தன் வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வு தோன்றாமலா போய்விடும்? இதோ இவகைகளை வாரா வாரம் வாங்கி வந்து அடிக்குக் கொடுத்து, குடித்து உருள்கிறார்களே நான்கைந்து பேர்.
சக்கியடிப்பவனுக்கான சாப விமோசனம் இவர்களுக்கு உண்டா? இதோ இப்போது தூங்கிவிடுவார்கள் அல்லது மயங்கிவிடுவார்கள். புல்தின்ற இவைகளுக்கு இந்த வெக்கையில் தாகமெடுக்காதா? காலையில் விடியுமுன் காசு பார்க்கும் அவசரத்தில் ஓட்டிச் செல்வார்களே. அப்போது ஏதும் கொடுப்பார்களா இவைகளுக்கு? ஒரு நாளும் அம்மா என்ற குரல் இவைகளிடம் கேட்டதில்லை. ஒரு பெருஞ்சோகம் சூழ்ந்திருப்பதாய்த் தோன்றும்.
இன்று ஒரு கூழைக் காளை பார்வையில் கொன்றது என்னை! வெள்ளைக் காளை. துளி அழுக்கில்லை. கண்ணைச் சுற்றி மட்டும் மையெழுதினாற்போல் ஒரு கருப்பு. பசுவின் சாயலில் அழகானதோர் முகம். கடந்து வருகையில் ஓரிரு நிமிடம் நான் நிற்க, அது புல்லுண்பதையும் நிறுத்திப் பார்த்த பார்வை இதயத்தின் உள்வரை ஊடுருவி வலித்தது. நாளை காலை அலுவலகம் செல்கையில் ஏதோ ஒரு மூன்று சக்கர வண்டியில் தோலிழந்து போகும் இதைக் கடக்கலாம். இன்னோர் வண்டியில் போகும் தோலில் ஒன்று இதனோடதாயிருக்கலாம். ஆட்டுத் தொட்டி தொடங்கி படாளம் வீதிகளில் அடிக்கொரு கடைவாசலில் ‘சுவையான சூடான பீஃப் பிரியாணியில்’ துண்டாயிருக்கலாம்.
வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?
(சக்கியடிப்பவன்=சிறைச்சாலையில் தூக்குத் தண்டனைக் கைதி நிற்கும் பலகையை இழுப்பவன். )