‘கருப்பு நிலாக் கதைகள்”. கவிதைத் தலைப்புக்கேற்ற கவித்துவமான புகைப்படம். புத்தகத் திருவிழாவிற்கு நாளை போகலாம் என்றிருந்தபோது தோழர் காமராஜின் பதிவில் அதற்காகக் காத்திருப்பதாக படித்ததும், நான் உங்களுக்கு முன் வாங்கிவிடுவேன் என்று அலட்டிக் கொண்டு போய் வாங்கிப் படிக்கவும் ஆரம்பித்தாயிற்று. இடையே திருச்செங்கோடு பயணமிருந்ததால் மாதொருபாகனை அங்கு போவதற்குள் படித்தாக வேண்டும் என்ற முனைப்பில் இது தள்ளிப் போயிற்று.
வாசிப்பனுபவம் என்று ஒன்றிரண்டு எழுதினாலும், இந்தப் புத்தகம் தந்த அனுபவத்தை எழுதச் சற்றே தயக்கம் தட்டியதற்குக் காரணம் உண்டு. இது வாழ்விலிருந்து நினைவில் புடம் போட்டு வந்த அனுபவ எழுத்து. மண்ணுக்குரிய சாமானியனின் எழுத்து. கதையின் காலக் கட்டத்துக்கு நம்மை உருமாற்றி, அவர்களோடு நம்மையும் ஒருவராய் உணர்த்திக் கதை சொல்லும் எழுத்து.
அமைதியாக அசைபோடும் பசுவின் முதுகில் ஒரு ஈ அமர்ந்தால் ஒரு சிலிர்க்குமே, ஒரு புழுக்கமான மாலையில் எதிர்பாராது முகத்தில் விழும் மழைத்துளி, கோவில் மணி டங் டங் என்றே முழங்கினாலும் அதில் ஏதோ ஒரு டங் ஒலி உள்ளுக்குள் பாய்ந்து ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வைத்தருமே அப்படி ஒரு இடத்தில் உலுக்கும் திறன் காமராஜுக்கு கைவந்த கலை.
இது என்னைப் போல சாமானியனுக்காக ஒரு சாமானியன் எழுதிய கதைகளின் வாசிப்பனுபவம். ஏதோ ஒரு ஸ்வரத்தில் என் கண் கசிந்தால் அது எனக்குப் போதும். இது கல்யாணியா, காம்போஜியா என்ற விசாரம் எனக்கில்லை. மேலாண்மை பொன்னுச்சாமியின் விமரிசனத்தை விடவா சொல்லிவிட முடியும்? ஆனாலும் என் அனுபவத்தைப் பகிராமல் முடியுமா என்ன? அதுவும் கரிசல் மண்ணின் மணத்தோடான பேச்சு வழக்கில் சொல்லப்படும் கதைகள் வாசிப்பு மட்டுமல்ல வாழும் அனுபவமுமாயிற்றே!
"கருப்பு நிலாக்களின் கதைகள் " சமூகமென்கிற ஒரு அக்கப்போர் கூட்டம் சபிக்கப்பட்ட ஒருவளின் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தைக் கொண்டு வந்துவிடுகிறது? கோனார்க் கோவில் அருகில் இளநீர் விற்கும் பெண்ணாக, ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஓங்கிச் சிரிக்கும் சாந்தியாக மாறிய அவளுக்கு கண்ணகியென்று எத்தனை பொருத்தமாகப் பெயர். சபாஷ் காமராஜ். கண்ணகி சாந்தியான கோலம்தான் கதை.
"மருளாடியின் மேலிறங்கியவர்கள்" இதேபோல் சபிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிறப்பாலிழிந்தவளென்று ஒதுக்கி, பெண்டாள மட்டும் அதை மறந்தவர்கள் நிறைந்த இச் சமூகத்தின் முகத்திரையை அவள் ஒரு சாமியார் என்று கொண்டாடும்படியாக கிழித்தெறியும் பாங்கு அற்புதம். போலியின்றி வார்த்தைகள் கிழித்துக் குதறுவது சரஸ்வதி என்கிற சச்சியை மட்டுமா? நம் மனத்தையும்தான்.
"சிறு பிள்ளைகள் என்னருகே வரத் தடை செய்யாதிருங்கள்", குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் கூறும் கதை. போலியாய் ஒரு சட்டம். அதை செயல்படுத்தாத அரசுகள் என்று அத்தனையும் ஒரு சொல்லின்றி நம் மனதில் கொண்டுவந்து சேர்க்கும் கதை.
"பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய்" ஒரு அருமையான கதை. ஒரு பாழ்மண்டபத்தின் இருட்டில் தெய்வமான ஒரு பகுத்தறிவு வாதியின் கதை எனச் சொல்லலாமா காமராஜ்?
"முளைப்பாரிகள் மீண்டும் வயலில், பாட்டுக்காரி தங்கலச்சுமி, குழந்தையாக்குபவள் " மூன்றும் அனுபவப் பகிர்வுக் கதைகள். குழந்தையாக்குபவளின் நாயகி போன்றோ தங்கலச்சுமி போன்றோ வெள்ளந்தியாகவே இருந்துவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் கதைகள்.
"சம்பாரி மேளத்தின் உச்சமும் சில இழப்புக்களின் மிச்சமும் " தோழர்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு நேர்மையான தொழிற்சங்கத் தோழரின் தனிப்பட்ட இழப்பையும் சாதனையும் சொல்லும் கதை. “ஆனால் ஒரே ஒரு பார்வையில், தோளில் சாய்கையில் தலை கோதுவதில்” ஏனைய தகப்பன் பிள்ளைகள் பெறும் சந்தோஷ உலக இழப்பை மீட்டெடுக்கும் சம்பத்தும் மகள் வெண்மணியும் நம்மையறியாமல் ஒரு ரெட் சல்யூட் வைக்கச் சொல்லும் பாத்திரங்கள்.
பதினான்கு முத்தான கதைகள். அழகான அட்டை, அச்சு எல்லாம் இருந்தாலும் ப்ரூஃப் ரீடிங்கில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. வம்சி மட்டுமல்ல இன்னும் சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இப்படித்தான் இருக்கின்றன. படைப்பாளிக்குச் செய்யும் அவமரியாதை இது. அடுத்த முறை இது நிகழக் கூடாது. உதவ நாங்கள் இருக்கிறோம் காமராஜ்.
ஒரு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி.
-:o:-


