எப்போதாவது சினிமா நோட்டீஸ் தரும் மாட்டு வண்டியும், ராலே சைக்கிள் வைத்திருந்த ரெண்டு பணக்கார மாமாக்கள் வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் மட்டுமே வண்டியோடிய சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டிலிருந்து, வாசல் படி தாண்டி கால் வைத்தாலே பத்திரம் எனப் பதறும் அளவுக்கு, சைக்கிளும், காரும், லாரியும் பறக்கும் வீதியொன்றுக்கு புலம் பெயர்ந்தபோது வயது எட்டு. பீதியிலேயே நடந்து, வீதி கடந்து, பள்ளிக்குச் சென்று வந்து பழகி, பராக்குப் பார்த்தபடி நடக்க ஆரம்பிக்க ஒரு வருடம் பிடித்ததெனக்கு.
அப்படிக் கடக்கையில் கண்டதுதான், கந்தன் டூஷன் நிலையம். 8க்கு 8 அடி ரூமில் நெருக்கியடித்தபடி உட்கார்ந்து, அறஞ்செய விரும்பு,அணில், ஆடு, இலை,எட்டோன் எட்டு, எண்ணிரண்டு பய்னாறு,நல்லார் ஒருவர் உளரேல்.... என்று கலந்தாங்கட்டியாகப் படித்துக் கொண்டிருப்பவர்களை ஒரு கண்ணாலும், வெளியில் போட்ட சேரில் அமர்ந்து வீதியை ஒரு கண்ணாலும் பார்த்துக் கொண்டு, நொச்சித் தழைக் குச்சியை எதிரில் இருந்த ஒன்னரைக்கு ரெண்டு டேபிளில் தட்டிக் கொண்டிருந்தார் புரேட் (Private) சார்.
அடுத்த நாள் பள்ளியில் நண்பனிடம் டூஷன் நிலையம் பற்றி கேட்டபோது தெரிந்து கொண்டதுதான் புரேட் சார் என்பது. அப்படி என்றால் என்ன என்று கேட்ட போது புரேட் தெரியாதாடா என்று கேட்ட த்வனியில் இருந்த எள்ளல் கூட புரியாத வெள்ளந்தியாய் இருந்தேன். புரேட் பற்றிய அறிவு அவன் மூலம் புரிந்தபோது, பள்ளி நேரம் தாண்டி அங்கு தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லித் தருவது புரிந்தது. கூடவே தானும் புரேட் படிப்பதாகவும், தன்னுடைய புரேட் மிகப் பிரசித்தமென்றும் சொன்னதோடு, காம்பஸ் விசிட்டுக்கும் அழைப்பு விடுத்தான்.
பள்ளி முடிந்து அவன் மீண்டும் என் வீதி முனையில் விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன், 2 தெரு தள்ளி உள்ள அவன் புரேட் இஸ்கோலுக்கு போனபோது மணி வாத்தியார், வாசல் கூட்டி, நீர் தெளித்துக் கொண்டிருந்தார். நண்பன் வீட்டில் போய், பள்ளிப் பையை எறிந்து விட்டு, கை கால் கழுவி, துண்ணூறு வைத்துக் கொண்டு, தமிழ், கணக்கு புத்தகம், ட்யூஷன் நோட் புத்தகத்தோடு கிளம்பி புரேட்டுக்கு முன்னாடியே கழட்டிக் கொண்டு நேரா போய் சோத்தாங்கைக்கா திரும்பினா ரெண்டாத் தெருடா உன்னுது என்று ஓடிய போது திகைப்பாய் இருந்தது.
ஆனாலும், கை கட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிய படி, பாஞ்சோண் பாஞ்சு வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்த அக்காவைத் தொடர்ந்து அத்தனை பேரும் பாஞ்சோண் பாஞ்சு சொல்வது ஒடிப்போய் உட்கார்ந்து பாஞ்சோண் பாஞ்சு சொல்லத் தோன்றியது. வீட்டுக்கு வந்து மெதுவே அம்மாவிடம், அம்மா நானும் புரேட்டுக்கு போறேன் என்றதும் திகைப்பூண்டை மிதித்தாற்போல் திகைத்து, அப்பாவிடம் போட்டுக் கொடுத்து, புரேட் என்பது முட்டாள்களுக்கானது என்று மனதில் விதைக்கப்பட்டது.
கணக்கில் எண்பது வாங்கிய ஒரு டெஸ்டுக்காக, இவன் உருப்படமாட்டான், மானம் கெட்டு புரேட்டுக்கு போகட்டும் என்ற போது வேணாம் வேணாம் என்று கதறியது நன்றாய் நினைவிருக்கிறது. காலங்கள் உருண்டோட, என்ன ஐடியா? பையன ஐ.ஐ.டி கோச்சிங்ல போட்டிருக்கியா? இல்லைன்னா ப்ரைவேட் கோச்சிங்கா? மேத்ஸ் க்ரூப்னா அண்ணாநகர் வசதி. 10வது ஹால்ஃப் இயர்லி ப்ராக்ரஸ் வந்ததுமே போய் காண்பிச்சி பேர் பதிஞ்சிடு.
மார்க்ஷீட் வந்ததும், நேர கொண்டுபோய் காட்டி, புக் பண்ணி விட வேண்டும். இல்லையெனில் வெயிட்டிங்லிஸ்ட், பரிந்துரை என அல்லாட வேண்டியிருக்கும் என்ற ட்யூஷனில், அவமானமாகக் கருதப்பட்ட ஒன்று கவுரவச் சின்னமாய் மாறி விட்டிருந்தது தெரிந்தது. பிற்பாடு இலங்கையில் ட்யூஷன் என்பது பள்ளி வகுப்புக்கு மாணவரை முன்பே தயாராக்கும் களம் என்பது தெரிந்தபோது வியப்பாய் மாறியது. பின்னுமொரு நாள் மணிக்கு 400ரூ முதல் எண்ணூறு ரூபாய் வரை வாரம் ஒரு முறை இரண்டரை மணி நேரம், வசதிப்பட்ட நேரத்துக்கு வந்து வகுப்பெடுக்கும் வசதியும் இருப்பது தெரிந்த போது வருத்தமாய் இருந்தது.
சமீப காலமாக மதிப்பெண் குறைவு என ஆசிரியர் திட்டியதால், ஐந்தாம் வகுப்புப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறப்பதும், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் பெண் பள்ளிக் கழிவறையில் பிள்ளை பெற்று விட்டு விட்டுப் போனதும் அதிர்ச்சியாய் இருக்கிறது.
பாஞ்சோண் பாஞ்சு காலத்திலிருந்து பள்ளியிறுதி மாணவி பிரசவம் பார்த்துக் கொள்ளுமளவு மாறிவிட்ட இக்காலத்திலும் மாறாத ஒன்று இருக்கிறதென்றால் அது மதிப்பெண் ஒன்று மட்டுமே. வேறு எதுவும் பொருட்டல்ல. அட! ஏம்பா அந்த ஸ்கூல்ல போட்ட? கொஞ்சம் காசு கூடன்னாலும் இந்த ஸ்கூல்ல நல்ல பெர்செண்டேஜ். எக்ஸ்ட்ரா கோச்சிங் எல்லாம் உண்டு, என்று குற்ற உணர்ச்சியைத் தூண்டித்தான் நமக்குப் பழக்கம்.
இவ்வளவுதானா? இவ்வளவுதானா ஒரு மாணவனின் உலகம்? அவன் எதிர்காலம்! அவனுக்கென்று ஒரு குறிக்கோள், அவனுக்கியைந்த ஒரு வாழ்வு, அவனுக்குப் பிடித்த ஒரு படிப்பு இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா? மதிப்பெண் மட்டுமேதானா?
இந்த வார விடுமுறையில் இன்னுமொரு பாடம் படிக்க முடிந்தது. ஆசியர் பயிற்சி, முதியோர் கல்வி ஆகியவற்றில் தேர்ந்த ஓர் ஆசிரியரின் உரையின் தொகுப்புக் கையேட்டைப் படிக்க வாய்த்தது.
அவ்ர் கேட்டிருந்த கேள்விகளைப் படியுங்கள். இதற்கு முன் நமக்காய் நம் பெற்றோரோ, நம் பிள்ளைகளுக்காய் நாமோ இதைக் கேட்டிருக்கிறோமா?
• உங்கள் குழந்தைகளின் திறமைகளைச் சரிவர அறிந்திருக்கிறீர்களா?
• பள்ளியறிக்கை மட்டுமே ஒரு மாணவருக்குண்டான ஆற்றல் மற்றும் அவர் சாதிக்கக் கூடியதைக் கூறுமா?
• பள்ளியில் வெற்றி பெறுவது சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்கான உத்தரவாதமாகுமா?
• உணர்வார்ந்த அறிவு என்பதன் அர்த்தமென்ன ? குழந்தைகளின் தினசரி வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?
• இசையறிவின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் எத்தகையது?
• ஒரு மனிதன் என்ன திறமைகளைக் கொண்டுள்ளான் என்பதை விட அதை வைத்து அவனால் என்ன சாதிக்க முடியும் என்பதே முக்கியமானது.
ஒன்றுக்காவது நேர்மையாக நம்மால் பதில் சொல்ல முடியுமா? அம்மா மார்க் கொடுத்தார்கள் என்று நீட்டும் பேப்பரை வாங்கிப் பார்க்கு முன்னரே ராஜு எத்தனாவது ரேங்க், ரம்யா கணக்கில எவ்வளவு? இப்படித்தானே கேட்போம்? கேட்கப்பட்டோம்.பிள்ளை புத்திசாலிங்க அல்லது உருப்படாதுங்களுக்கு மேல் என்ன தெரியும் நமக்கு?
புத்திசாலித்தனத்துக்கு பன்முகம் இருக்கிறதாம். மொழித்திறன், கணிதம்-தர்க்கம், பார்வை-பரிமாணம், இசை, சமூக அறிவு, தன்னை அறிதல், இயற்கை அறிவு, உடலசைவு என எண்முகமாம் அதற்கு. இவை யாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றனவாம். “மாணவர்கள் தங்கள் புத்தியின் அதி ஆற்றலைப் பயன்படுத்தும் பட்சத்தில் கற்றல் மிக உற்சாகமாக இருப்பதோடு, நோக்கங்கள் துரிதமாக நிறைவேறும்” என்கிறார்.
“ஒரு குழந்தையின் பலங்களை மேலும் பலப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அது தன் பலவீனத்தைச் சரி செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்” என்கிறார் அவர்.
இப்படியெல்லாம் செப்பனிட்டும் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுத்தும் கொடுக்கும் கல்வியல்லவா எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்துக் கொடுக்கும் சொத்து. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் தமிழர்தானே. இங்கிருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் அவர் மகன் அவருக்குள் இருக்கும் திறமையான, அவருக்குப் பிடித்த செல்லோ இசைக்கலையைக் கொன்று புதைத்து ஒரு மருத்துவராகவோ, எஞ்சினியராகவோ, இரசாயனத்துறை விரிவாளராகவோ ஆகியிருக்கக் கூடும், . இங்கில்லாததால் தானோ அவரின் திறமையை மதித்து, அவரை செல்லோக் கலைஞராக வளரவிடும் மனப்பாங்கு அவர் பெற்றோர்களுக்கு இருக்கிறது?
இதை தட்டச்சும் நேரம், மனதில் ஒரு நனவோடை. சற்றேரக் குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் ஷெல் சத்தங்களுக்கு நடுவே, மேச்சட்டையின்றி, விழும் குண்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற விரக்தியுடன், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற நிருபரின் கேள்விக்கு அழுதபடி அந்தக் குழந்தை என்ன கேட்டிருக்கும் என ஊகிக்க முடியுமா உங்களால்? வீடு கேட்கவில்லை. உணவு கேட்கவில்லை. உடை கேட்கவில்லை. “ஒன்பது ஊர் மாறி மாறி இங்க நிக்கிறம். எங்கயும் இருக்க விடுறாங்கள்ள. எல்லா இடத்திலும் செல்லடிக்கிறாங்கள். எனக்குப் படிக்கணும் அண்ணை என்று அழுதபோது உதடு விம்ம என் அழுகை அடங்க வெகு நேரமாகியது.
இந்த ஆர்வத்தை, இந்த உணர்வை, அதற்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்கென ஒரு திறமை இருக்கிறது, அதற்கு இருப்பதில் போதிய வாய்ப்புமிருக்கிறது என்ற உணர்வின்றி மதிப்பெண்ணிலும், ஓர் வேலையிலும், திருமணத்திலும் அடைக்கத்தான் போகிறோமா? தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறோம். செய்வோம்.
காரணம், இருக்கும் சூழ்நிலை இப்படித்தான் கொடுக்கப்படுகிறது நம் கல்வியாளர்களால். நம் அரசால். நாமாவது கேட்போமே.
(டிஸ்கி:சாத்தான் ஓதும் வேதம் என உணர்ந்தே வெட்கத்துடன் எழுதினேன். என் பிள்ளைகள் படிக்கும் காலத்தில் நான் இதை உணர்ந்திருந்தாலும் இப்படி யோசித்திருப்பேன் என உறுதியாய்ச் சொல்லவியலாது. இது முற்றிலும் புதிய சிந்தனை. புதிய சூழல். என்றோ ஒரு நாள் வந்தே தீர வேண்டிய மாற்றம். என்னால் முடிந்தது, இப்படியும் பிள்ளைகளுக்குக் கல்வியை ஆராதிக்கிறார்கள் என்ற ஒரு புரிதலுக்காகவே)
தகவல் மற்றும் விளக்கத்துக்கு நன்றி ப்ரியா
தகவல் மற்றும் விளக்கத்துக்கு நன்றி ப்ரியா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~