Friday, July 31, 2009

இந்தியனா இருந்தாலும் தப்பாங்க ?

பொதுவா எல்லாருக்கும் அரசு ஊழியர் என்றாலே ஒரு கடுப்புதேன். அதுலயும் சட்டவிதி எல்லாம் காசக் கண்டா காணாம போயிடும்னு மொத்த ஜனமும் ஒண்ணாக் குர‌ல் கொடுப்பாங்க. இந்தியன் மாதிரி சட்டப் படி நடக்குற சிலத சொல்லுறேன். அப்புறமும் கத்தினா நடக்கறதே வேற.

விதி : கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதற்கான மனுவுடன் அவர்கள் உயிரோடிருப்பதற்கான அத்தாட்சி படிவத்தை இணைக்க வேண்டும்.

தலைவிதி:
ஏதோ காரணத்தால் மே மாதம் ஓய்வூதியம் பெற வராத ஒருவர் ஜூன் மாதம் இரண்டு மாதத்துக்கான விண்ணப்பம் மற்றும் அத்தாட்சிப் படிவத்தைக் கொடுக்கிறார்.
எழுத்தர்: மே மாதம் ஓய்வூதியம் வாங்கலையா?
முதியவர்: இல்லைங்க. ஊருக்கு போயிருந்தேன். சேர்த்து வாங்கிக்கலாம்னு.
எழுத்தர்: ஜூன் மாதம் உயிரோட இருந்ததுக்கு அத்தாட்சி இருக்கு. மே மாதத்துக்கு ஏன் வைக்கல?
முதியவர்: (இல்லாத பல்லைக் கடித்துக் கொண்டு) ஏங்க ஜூன்ல உசிரோட வந்துருக்கேன்? மேல போயிருந்தா எப்படிங்க வருவேன்?
எழுத்தர்:(சட்ட விதியை படித்துக் காட்டி) நானா கேக்குறன். அரசாங்கம் கேக்குது.
முதியவர்: சரி அரசாங்கமே வெச்சிக்கட்டும். ஜூன் ஓய்வூதியம் மட்டும் கொடுங்க போதும்.
எழுத்தர்: பெரியவரே. நீங்களும் அரசாங்கத்தில பணி புரிந்து ஓய்வு பெற்றவர் தானே? நாளைக்கு தணிக்கையில மே மாதம் ஓய்வூதியம் பெறாத, சான்றிதழ் தராத ஒருத்தருக்கு எப்படி ஜூன் ஓய்வூதியம் தந்தீங்கன்னு எனக்கு ஓய்வூதியம் இல்லாத பண்ணிடுவாங்க. நீங்க உங்க பென்ஷன் ஆபீசர போய் பாருங்க.

இந்த இந்தியன எதாவது பண்ண முடியுமா? சட்டப் படிதானே நடக்குறாரு.

தளர்ந்து தலையில் அடித்துக் கொண்டு நடக்கும் முதியவரிடம் வருகிறார் பியூன். பெர்சு. இன்னா? ஒரு மாசம் பென்சன் வாங்கலையா? அங்க பாரு மர்த்தாண்ட குந்தினு இருக்காரே. அவரு டாக்டரு. 50ரூ குடுத்தா 2 மாசத்துக்கும் சர்டிபிகேட் குடுப்பாரு. வாங்கியாந்து குட்தா மேட்டரு ஓவரு. இதுக்கு போய் பேஜாராய்க்கினியே. கடவுளே வந்து வரம் குடுத்தாற் போல் சொன்ன அவருக்கு ஒரு 5ரூ கொடுத்து (ஹி ஹி. அதுக்கும் ரூல் இருக்குங்க) சந்தோஷமாக ஓய்வூதியம் பெற்றுச் செல்கிறார்.

சத்தியமா சட்ட விதி மீறலையே?

விதி: அரசு ஊழியரோ அவரது வாழ்க்கைத் துணைவியோ குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நாளிலிருந்து குறிப்பிட்ட ஊக்கத் தொகை வழங்கப் படும். கு.க. மேற்கொள்ளும் ஆணுக்கு 55 வயதும் பெண்ணுக்கு 50 வயதும் தாண்டி இருக்கக் கூடாது.

தலைவிதி:

மனைவி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால் ஊக்கத் தொகை பெறும் ஒருவர் மனைவி இறந்த காரணத்தால் மறுமணம் செய்து கொள்கிறார். சம்பளம் போடும் எழுத்தர் விளக்கம் கேட்டதன் மூலமா தலைவிதி எப்படி மாறிப் போகுது பாருங்க.
  1. முதல் மனைவிதான் குடும்பக் கட்டுப்பாடு செய்தவர். அவர் உயிருடன் இல்லை. மறுமணம் செய்தவர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் செல்லுமா?
  2. இல்லை என்றால் ஊக்கத் தொகையை எந்த தேதியில் இருந்து நிறுத்துவது?
  3. திருமணம் செய்த தேதியா?
  4. ஒரு வேளை மறுமணம் செய்தவருக்கு குழந்தைப் பேறு உண்டாகுமானால் அந்த தேதியிலிருந்தா? (இதுக்கு அத்தாட்சி வேற கேப்பாங்க. பிரமன் தான் தரணும்) அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்தா?
  5. அப்படி பிறக்கும் பட்சத்தில் முதல் மனைவி குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தாலும், ஊழியர் ஊக்கத் தொகை பெற்றதனால் இப்பொது குழந்தை பிறந்ததனால் விதியை மீறியதாகக் கருதி இது நாள் வரை வழங்கிய ஊக்கத் தொகையை பிடித்தம் செய்வதா?

நியாயமான கேள்வி தானுங்களே? வேலையே வேணாம்னு சன்னியாசியா போகலாம் போல வருமா வராதா? என்னப்பா இப்படி எல்லாம் கேக்குறியேன்னா நீ இந்த இடத்துல இருந்தா கேப்பியா மாட்டியா சொல்லும்பான்.

இதே பிரிவில என்னல்லாம் விதி இருக்கு பாருங்க:

விதி: இரண்டு குழந்தைகள் உள்ளவர்கள் கு.க. செய்து கொண்டால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும்.

கேள்வி: ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பிறந்தால் ஊக்கத் தொகை உண்டா?

அரசு விளக்கம்: இயற்கை வினோதமாகையால் கொடுக்கலாம்.

கேள்வி: முதல் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை உயிரோடு இருக்கையில் இரண்டாம் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்றவர் கு.க. மேற் கொண்டால் ஊக்கத் தொகை உண்டா?

அரசு விளக்கம்: பிரசவ எண்ணைக்கை தாண்டவில்லையாதலாலும் ஊழியரின் கட்டுப்பாட்டிலில்லாத நிகழ்வாகையாலும் கொடுக்கலாம்.

கேள்வி: முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற ஒருவர் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு கு.க. மேற்கொண்டால் ஊக்கத் தொகை வழங்கப் படுமா? (மேற் குறிப்பிட்ட விளக்கப் படி குடுக்க வேண்டியதுதானே? ஏண்டா நோண்ட்றான்னு கேக்குறீங்களா?)

அரசு விளக்கம்: மாட்டாது. முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பதால் தெரிந்தே விதிமுறைகளை மீறிய காரணத்தினால் தகுதி இழக்கிறார்.

சிரிக்க மாட்டீங்களா? விடுறதில்ல உங்கள. உங்களுக்காச்சி எனக்காச்சி. இத படிங்க:

புராதனப் பொருள் மாதிரி வருசம் போக போக மதிப்பு உயரும் அருவம் என்னா சொல்லுங்க பாப்பம்?
திறமையை ஊக்குவித்தால் அது நியாயம். திறமையை காட்டாம இருக்க ஊக்குவிக்கிற இதுதான்.
அது தான் அரசு ஊழியரின் இனப் பெருக்கத் திறன்.

யானை இறந்தாலும் ஆயிரம் பொன் மாதிரி குழந்தை பெறும் திறன் போனா மதிப்பு ஏறிக் கொண்டே போகும். எப்படின்னு கேக்குறீங்களா? குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட தேதியில் அவர் வாங்கும் சம்பளத்தில் ஒரு இன்கிரிமென்ட்டுக்கு சமமான ஊதியம் ஊக்கத் தொகையாக மாதா மாதம் வழங்கப் பட்டது. சம்பளக் கமிசன் வரும்போதெல்லாம் ஊதியம் மாறும்போது இதுவும் ஏறிடும். தாடைய சொறிய வேணாம். 90ல தங்கமணி கு.க. அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது அதுக்கு ஊக்கத் தொகை ரூ 50. எனக்கு ரூ. 75. எனக்கு அதிகம். அதனால நான் வாங்கிட்டேன். ஐந்தாவது சம்பள கமிஷன்ல அதோட மதிப்பு ரூ.225 ஆச்சு. இப்போ ஆறாவது சம்பளக் கமிஷன்ல ரூ 450 மாசத்துக்கு.

ஹி ஹி. யாருங்க அது. ரொம்ப கவனமா படிச்சிட்டு அதான் 55 வயசு ஆணுக்கு 50 வயசு பொண்ணுக்குன்னு விதி இருக்குதே. அது தாண்டினப்புறம் ஏண்டா குடுக்கணும்? இத கேக்க மாட்டிங்களாடான்னு சவுண்ட் விட்றது? மாட்டமே ! மொத்த பேருக்குமில்ல ஆப்பு? யானை தன் தலையில மண்ண வாரி போட்டுகிட்டா மாதிரி ஆய்டும்ல?
***

Thursday, July 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 83

போர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் தகவல்

நாறுது நாராயணா! அந்தாளு வாயே தொறக்க மாட்டாரே. எல்லா வண்டவாளமும் வரத்தான் போகுது.
_______________________________________________________
ஈழத் தமிழர்கள் தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும்: செல்வராஜா பத்மநாதன் நம்பிக்கை

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல?
_______________________________________________________
போர் வெற்றிக்கு வழிசெய்த 3 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

வாயடைக்க வேணாமா? என்னா செட்டப்புடா சாமி. அவன் ஏதாவது புத்தகம் எழுதி மானம் போயிடும்ல?
_______________________________________________________
“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்

அவங்க விரும்பி ஆவறதென்னா? நீங்க விரும்பினது என்னாங்கிறதுதான் முக்கியம்.
_______________________________________________________
கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் இந்தியாவின் வர்த்தக வலயங்கள்

ஆஹா. துண்டு போட்டுட்டானுவளா? இதான் இப்போ ரொம்ப அவசியம். யாருப்பா ஓனரு?
_______________________________________________________
அதிகார பரவலாக்கம் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல

இவருகிட்ட வந்து சொன்னாங்களா? வேற எதுக்காம் இவ்வளவு உயிர் போனது?
_______________________________________________________
வடக்கில் 60 ஆயிரம் படையினரின் குடும்பங்களை குடியேற்றத் திட்டம் தயாரிப்பு

ஆஹா. அந்த காணாம போன 60 ஆயிரம் படையினரா? சூப்பரப்பு.
_______________________________________________________
இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க மாட்டோம்: பாகிஸ்தான்

நடு வீட்டில வந்து எல்லாம் நடத்திட்டு அப்புறம் என்னாடா மூக்க நுழைக்கிறது.
_______________________________________________________
225 வருடங்களின் பின் 10 லட்சம் மலையக மக்கள் அரசின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்

இத்தனை வருஷம் பொறுப்பில்லாம இருந்திருக்கானுங்களா அரசாங்கம்?
_______________________________________________________
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் முழு அடைப்பு

இறையாண்மைக் காவலர்களுக்கெல்லாம் இந்த சொரணையே இருக்காதே? திருவள்ளுவர் கர்னாடகா போனா அவங்க இறையாண்மை பாதிக்காதாம்பாங்க.
_______________________________________________________
என்னை கட்சியிலிருந்து நீக்கியதால், நான் M.L.A., பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை: S.V. சேகர்

இப்பதான் சம்பளம் ஏத்தி இருக்காங்க. இதென்னா வேலையா? இத விட்டு வேற தேட. நீ தொங்கிக்கோ சேகரு.
_______________________________________________________
மன்னிப்பு கேட்டால் திமுகவுடன் மீண்டும் கூட்டணி:தா.பாண்டியன்

இப்டியே போய்க்கிருந்தா தா. பாண்டியன்னா தாவுற தா. பாண்டியன்னு ஆய்ரும்.
_______________________________________________________
கள்ள நோட்டு அச்சப்பட தேவையில்லை: ரிசர்வ் வங்கி

ஏன்? நல்ல நோட்டா மாத்தி குடுப்பீங்களா?
_______________________________________________________
சாமி அருகில் தரிசனம் செய்ய சாதாரண பக்தர்களுக்கு சலுகை வழங்க முடியாது: திருப்பதி தேவஸ்தானம்

சாமியாடா சொல்லிச்சி நாய்ங்களா? பக்தர்ல சாதாரண பக்தர் வேற‌யா? கேடி பக்தர்கள்தான் அருகில் போகலாமாம்.
_______________________________________________________
டி.வி. நடிகையை சித்ரவதை செய்த தாய் மீது வழக்கு

சீரியலுக்கு மாமியார் ரோலுக்கு ஒத்திகை பார்த்திருப்பாங்கப்பா.
_______________________________________________________
நடிகை கன்னத்தை கடித்தார் ஹீரோ: ரத்தம் கொட்டியதால் ஷூட்டிங்கில் பரபரப்பு

ஹீரோக்கு பிரியாணி இல்ல தயிர்சாதம்னு சொல்லிட்டாங்களா? இல்ல குடைச்சல் குடுத்த ஹீரோயின டைரக்டர் பழி வாங்கிட்டாரா?
_______________________________________________________
மொட்டை போட்ட நடிகைகள்: நக்கீரன் டாக்கீஸ்

தயாரிப்பாளருக்கோ?
லொள்ளு இங்க : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=193
***

Wednesday, July 29, 2009

ஆத்தா மனமிறங்கு

ஆடி பிறந்ததடி
அடிமனசு தவிக்குதடி
அந்த நாள் நினைப்பினிலே
அடி வயிறு கலங்குதடி..

கஞ்சி குடிச்சாலும்
கந்தையுடுத்தாலும்
பொன்னாத்தா உனக்கு
பொங்க வெக்க மறந்ததுண்டா?

வேப்பிலையுடை உடுத்தி
வேல் அலகு தான்குத்தி
வெறுங்காலில் தீமிதித்து
வெண்பொங்கல் தான் படைச்சோம்.

தமிழ்காத்த மறவனவன்
தயவில் இருக்கையிலே
தப்புனதே இல்லையடி
தாயுனக்கு பொங்கலிட‌

உண்ண உணவில்ல‌
உறங்கிடக் கூரையில்ல‌
உடுக்க மறைவில்ல‌
உனக்கெங்க பொங்க வைக்க‌?

பாவிச் சிங்களவன்
பாசாங்குதான் நம்பி
பாரெல்லாம் அவன் பக்கம்
பாவமெமக்காரிருக்கா?

மகிசாசுர வதம் செய்த‌
மாரியாத்தா உனக்கு
மகிந்த வதம் செய்ய‌
மனமில்லயே தாயி.

அம்மான்னு அலறுனப்போ
ஆதரவாய் ஏன் வரல?
அழிச்சதெல்லாம் போதாதா
அம்மையாய் ஏன் வார?

உனக்கும் பயமாடி
உருப்படாத சிங்களவன்
உன்னையும் துகிலுரிச்சி
உள்ளார வைப்பான்னு?

அதனால் தானோ
அப்பாவி எங்களையே
அலக்கழிக்க மனம்கொண்டு
அம்மையாய் நீ வார?

வெட்ட வெளியினிலே
வேப்பிலைக்கு வழியுண்டா
மானம் போய் நிக்குறப்போ
மஞ்சளுக்கு வழியுண்டா

சுற்றமெல்லாம் போய்
சுடுகாடாய் இருக்குதடி
சுத்த பத்தமாய் இருக்க‌
சுருக்கமாய் வழிசொல்லு.

நாலும் தெரிஞ்சவ நீ
நானென்ன சொல்லுறது
நாங்க இருந்தாத்தான்
நீ சாமி தெரிஞ்சிக்க!
***

நறுக்குன்னு நாலு வார்த்த - 82

யாழ்ப்பாணத்தில் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் :மகிந்த

அங்க புடிச்சதா சனியன்? உசிரோட இருந்தா தானே செலவுன்னு நினைக்கிறானா?
____________________________________________________________
இடம்பெயர் மக்களுக்காக ஐ.நா அமைப்பினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் தரமற்றவை – ரிசாட் பதியூதீன்

கூடாரமா குடுத்துட்டாங்க. காசு பார்க்க முடியலைன்னு கடுப்பு.
____________________________________________________________
விடுதலைப் புலிகளின் வான் படைத் தளபதி ஒருவர் கைது : சிங்கள ஊடகம் தெரிவிப்பு

சொல்லிக்க வேண்டியது தான். எந்த அப்பாவி மாட்டிச்சோ?
____________________________________________________________
வவுனியா முகாம்களில் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை உணர முடிகிறது – எரிக் பி ஸ்க்வாட்ஸ்

அது எல்லாம் தான் உணர்ரோம். அதுக்கென்ன பண்ணப் போரம். அப்பப்ப இப்படி அறிக்கை விடுறது தவிர.?
____________________________________________________________
மணலாற்றுப்பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றத் திட்டம்

இதே பொழப்பாப் போச்சேடா உங்களுக்கு. எண்ண தடவிட்டு உருண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும்.
____________________________________________________________
அநுராதபுர தாக்குதல் காணொளி கிளிநொச்சிக்கு நேரலையாக அனுப்பப்பட்டது: நீதிமன்ற விசாரணையில் தகவல்

பிச்ச ராடார்லாம் வெச்சிட்டு கூட இது தெரியாம கெடந்தது அரசாங்கமாம். வெக்கமா இல்லை?
____________________________________________________________
தந்திரிமலையில் விடுதலை புலிகள் தாக்குதல்? : இரண்டு படையினர் பலி

ரெண்டே பேருதானா? அப்ப அவனுங்களே சுட்டுட்டிருப்பானுவ.
____________________________________________________________
அரசின் ஊடக அடக்குமுறை தொடருகின்றது – பன்னாட்டு ஊடக மையம்

அவன் சொன்னபடி எல்லாம் ஆடினப்ப இனிச்சதோ?
____________________________________________________________
மேற்குலக சமூகம் இலங்கையை தமது கட்டுப்பாட்டில் கீழ் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது: அரசு

பிச்சைக்கு போகிறப்ப இதெல்லாம் தெரியாதோ? காசு கைல வந்ததும் சவடால்.
____________________________________________________________
ஊவாவுக்கு முதலமைச்சராக ராஜபக்ஷவின் வாரிசு நிறுத்தப்பட்டதன் காரணம் என்ன?

சோனியா மாதிரி தலீவரு மாதிரி தானும் இருக்கலாமேன்னு தான்.
____________________________________________________________
பெரியார் தி.க. ராமகிருஷ்ணன் மீதான தே.பா.ச. ரத்து

தெரிஞ்சே தானே பண்ணது. எத்தனை பட்டாலும் திருந்த மாட்டானுவ. தும்மினதுக்கெல்லாம் தே.பா.ச. (தேவையின்றி பாயும் சட்டம்)
____________________________________________________________
கடன் இலங்கைக்கு வழங்கப்படாவிட்டால், அது ஏற்கனவே உள்ள தனது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படும்:ஐ.எம்.எஃப்

தோடா. யாருக்கெல்லாம் குடுக்கணுமோ அந்தக் கடனை அடைக்கிறேன்னு சொல்லிப்பாரு. வேணாம் போய்யான்னு போவான். நல்லா குத்தறானுவப்பா காது.
____________________________________________________________
அதிமுக புறக்கணித்த பின் இடைத்தேர்தல் தேவையா:ஜெ.

ஏன்? ரெண்டு கழகத்துக்கும் தமிழ்நாட்ட வித்துட்டாங்களா என்ன?
____________________________________________________________
வேட்பாளர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிகள்:தேர்தல் கமிஷன்

இது தவிர ஏதாவது பண்ணி ஜெயிச்சிக்கோ. இதெல்லாம் பண்ணா மாட்டிப்பன்னு எச்சரிக்கிறாங்க போல.
____________________________________________________________
தங்கபாலு ஆதரவாளரை எதிர்த்து வாசன் ஆதரவாளரர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்பிச்சிட்டானுகடா. தாங்கிப் பிடிக்க ஆளில்லாட்டி தானே காணாம போவானுங்க. கோமா கேஸ கூட்டு சேத்துகிட்டு இப்படி குடைச்சல் குடுக்க வைக்குதுங்க ரெண்டு கழகமும்.
____________________________________________________________
தமன்னாவும், நயன்தாராவும் தங்கம் என்றால், நான் பிளாட்டினம்: ஸ்ரேயா

அதான் அதிகம் காணோமா?
____________________________________________________________

Tuesday, July 28, 2009

கத கேளு கத கேளு - 11


கொள்ள‌ நாளாச்சில்ல கதை கேட்டு. இன்னைக்கு கேப்பம்.

ஒரு ஊர்ல ஒரு அண்ணாச்சி இருந்தாங்க. வியாவாரத்துல ரொம்ப நல்ல பேரு. ஆனா பாருங்க அகராதில கஞ்சம் = அண்ணாச்சின்னு போடலாம். ஊருக்குள்ள ஒருத்தருக்கும் தெரியாது. பந்தாவா இருப்பாரு. வாரத்துல ஒரு நாள் ஒரு வேள தான் அரிசிச் சோறு. அதும் விலை கம்மியான அரிசியில. மத்த நேரமெல்லாம் கம்பங்கூழு, வடி கஞ்சி, கேப்பங்கூழுன்னு அளவாத்தேன். விருந்தாளிக வந்துட்டாமட்டும் நல்லா சமைச்சி சாப்புடுவாங்க. போனப்புறம் அந்த வாரத்துல ஒரு நாள் சோத்துக்கும் வேட்டு வெச்சிருவாரு.

சாப்பாட்டு வேளையில யாராவது வந்துட்டா, வாங்க சாப்பிடங்கற பேச்செல்லாம் கிடையாது. கடை மூடுறப்ப சிந்திக் கிடக்கிற அரிசிய கூட்டி வாரி ஒரு பைல குப்பையோட கொண்டு வருவாரு. தங்கமணி அத புடைச்சி சுத்தம் பண்ணி அரிசிய மட்டும் தனியா எடுத்து வைக்கும். அதுலயும் சீரகச் சம்பா அரிசி தனியா எடுத்து வச்சி ஒரு கைப்புடி அரிசி கங்குலயே வேகவெச்சி சோறாக்கி வைக்கணும். அண்ணாச்சி கஞ்சி குடிச்சாலும் வாய கழுவிட்டு அந்த சோத்துல ஒண்ணு ரெண்டு பருக்கை எடுத்து மீசைல ஒட்ட வெச்சிகிட்டு பெருசா ஏப்பம் விட்டுகிட்டு வந்து உக்காருவாரு. பார்க்கிறவங்க அண்ணாச்சி தினம் சீரகசம்பா அரிசி சோறுதான் சாப்பிடுவாங்கன்னு நினைக்கணுமாம் .

ஒரு நா வ‌ட்டுல வடிகஞ்சியும் தொட்டுக்க வெங்காயமும் வெச்சிகிட்டு சாப்பிட போக, யாரோ ஒரு ஆளு பார்க்க வந்துட்டாங்க . சாப்பிட்டுகிட்டிருக்கேன், அப்படி உக்காருங்கன்னு சொல்லிட்டு சாப்பிட்டு வந்தாரு. வந்தவர பார்த்து, என்னாதான் சொல்லுங்க. சீரகசம்பா அரிசில சோறாக்கி, கத்திரிக்கா குழம்பு காரமா , நல்லெண்னை ஊத்தி கலந்து அடிச்சா அது ருசியே வேறன்னு ஜம்பமா பேசிக்கிட்டிருக்கறப்ப அவரு பையன் ஓடியாந்தான். யப்பா பூனை உன் சோத்த திங்குதுப்பான்னு அலறினான். அண்ணாச்சி டம்பமா சாப்பிடட்டும் விடுடா. வாயில்லா ஜீவன்னு பிட்ட போட்டாரு. பையனுக்கு நம்ப முடியல. ஆசையா நான் தின்னா டின்னு கட்டுற ஆளு, திங்கட்டும்னு சொல்லுதான்னு. திரும்பவும், யப்பா! நீ கஞ்சி குடிச்சிட்டு மீசைல ஒட்டிக்க வச்சிருந்த சோத்த பூனை திங்குதுப்பான்னு அலறினான். அண்ணாச்சிக்கு மானம் போச்சு.

பய புள்ளைய இப்படியே விட்றப்படாதுன்னு ரொம்ப கண்டிசனா வளக்க ஆரம்பிச்சாரு. பள்ளிக்கோடம் போக மிச்ச நேரம் கடையில வேல செய்யணும்னு சொல்லிட்டாரு. ஒரு நா யாரோ வாடிக்கைக் காரவுங்க வீட்டில மளிகை சாமான் பட்டியல் வாங்கிட்டு வர பையன அனுப்பினாரு. தெரியும் கொஞ்ச தொலைவுன்னு. ஆனாலும் வெரசா வரணும்டே. பராக்கு பார்த்துகிட்டு வந்தா பிச்சிபோடுவேன்னு சொல்லிட்டு வேலைல இருந்தாரு. பையன் எப்போ போனான் எப்போ வந்தான்னே தெரியாம சிட்டா போய் வாங்கிட்டு வந்துட்டான். அண்ணாச்சியால நம்ப முடியல. ஒரு வேளை கடைல இருந்து காச எடுத்துட்டு பஸ்ல போய்ட்டு வந்துட்டானோன்னு திகிலா போச்சி. எப்படிடா இவ்வளவு வெரசா வந்தன்னாரு.

பையன் பெருமையா நம்ம முனியன் சைக்கிள்ள போனானா. அவன் பின்னாடியே தொரத்திக்கிட்டு போய்ட்டு வந்துட்டேன்னான். வந்திச்சி அண்ணாச்சிக்கு கோவம். இப்படி ஒரு புள்ள இருப்பியா? எத்தினி பஸ்ஸு, எத்தினி ஆட்டோ ஓடுது. அதில ஒரு பஸ் பின்னாடியோ ஆட்டோ பின்னாடியோ ஓடிப்போய் வந்திருந்தா எவ்வளவு காசு மிச்சம். சைக்கிள் பின்னாடி ஓடி என்னாடா லாபம்னு அடி பின்னிட்டாரு.

கொஞ்ச வருசம் போச்சி. ஒரு நா வரி ஆபீஸிக்கு போயாக வேண்டிய நிலமை. பயந்து பயந்து பையன கடையில விட்டு, ஆயிரம் எச்சரிக்கை சொல்லி கிளம்பி போனாரு. திரும்பி வர மதியம் தாண்டிடிச்சி. இவரு வந்து பையனை வீட்டுக்கு சாப்பிட அனுப்பிட்டு ராத்திரி வீடு திரும்பினாரு. உள்ள வரவுமே குழம்பு வாசனை தூக்குச்சி. அண்ணாச்சிக்கு அடிவயறு கலங்கிபோச்சு. யாருடா விருந்துக்கு வந்து செலவு வெச்சதுன்னு. தங்கமணி பார்த்த பார்வையும் சரி இல்ல. ஒண்ணும் பேசாம சாப்பிட உக்காந்தாரு. கேப்ப களியும் கொழம்பும் கொண்டு வந்து வைச்சது தங்கமணி. ஒரு வாய் சாப்டாரு. குழம்பு ருசின்னா அப்படி ஒரு ருசி. கோவம் வந்திருச்சி. என்னாதான் விருந்துன்னாலும் இப்படி உப்பு உரைப்பா வெச்சா கட்டுப்படி யாகுமா? கூட ஒரு கவளம் உண்டுட்டு போமாட்டாங்களா? யாரு சொத்துன்னு.

அடியே! யாருடி விருந்துக்கு வந்தது. இவ்வளவு ருசியா கொழம்பு வெச்சிருக்கிற. எனக்கு கூட மிச்சமில்லாம சோத்த தின்னுட்டு போய்ட்டாங்களா? குடும்பம் விளங்குமான்னு கத்துனாரு. தங்கமணி வந்து துப்பாத குறையா பார்த்து, விருந்துமில்ல ஒன்னுமில்ல. எம்புள்ளைய எப்பவும் உதவாக்கரைன்னு கரிச்சி கொட்டுவீங்களே. அவன் என்னா பண்ணான் தெரியுமா. கடையில இருந்து வர நான் களியாக்கிட்டிருந்தேன். யம்மா குழம்பு பாத்திரத்தில தண்ணி கொண்டான்னான். கொண்டாந்தேன். அதுக்குள்ள கைய உட்டு அளைஞ்சான். என்னாடா இதுன்னேன். யம்மா! காலைல இருந்து எத்தன பேருக்கு புளி, மஞ்ச தூள், மொளகா, உப்புன்னுன்னு எடுத்த கையி. ருசி எல்லாம் ஒட்டி இருக்கில்ல. கழுவியெடுத்தா கொழம்புக்காச்சி. நீ ஏன் தனியா எல்லாம் செலவழிக்கணும்னான். அசந்துபோய்ட்டேன். அதில வெச்ச குழம்புதான். பாவி மனுசா. இத்தினி வருசம் இது தெரியாம நீ குடுக்கிற சுண்டக்கா புளி, சிட்டிகை மஞ்சள், மிளகாப் பொடில குழம்பு வெச்சி நாக்கு செத்துப் போச்சுன்னு புள்ளைய பெருமையா பார்த்தா. நீ இப்பிடி வெவரமா இருந்திருந்தா இத்தினி வருசத்துல ஆன காசுக்கு இன்னும் ரெண்டு கடைய வெச்சிருக்கலாம்னா.

எளுந்தாரு அண்ணாச்சி. பையன போட்டு அடி பின்னிட்டாரு. மொத்த கையும் ஏண்டா இன்னைக்கே கழுவின. இன்னைக்கு விரலு நாளைக்கு உள்ளங்கையின்னு கழுவி இருந்தா ரெண்டு நாளைக்கு குழம்புக்கு ஆகியிருக்கும். பொறுப்பில்லாம திரியிரான்னு. அதே வேகத்துல தங்கமணிக்கு ஒரு அறை. அவந்தான் சின்னபுள்ள. உனக்கெங்கடி போச்சி அறிவு. பாதி தண்ணியில குழம்பு வெச்சி மீதி தண்ணியில நாளைக்கு ரசம் வெச்சிருக்கலாம்லடின்னு கத்தினாரு.

மனசுக்குள்ள நினைச்சாராம். பாவி மக்கா. இது தோணாம போச்சே. அதான் கடையில வேல செய்யிற பையன் மதியம் சாப்பாட்ட தொறந்தா அந்த வாசனையா? பரவால்ல. புலிக்கு பிறந்தது பூனையாகல. பையன வெவரமாத்தான் வளத்திருக்கேன். கடை பையன நிறுத்திட்டு பையன முழு நேரம் கடையில வேலைக்கு வெச்சிட்டா, அந்த சம்பளம் வேற மிச்சமாச்சேன்னு கொள்ள சந்தோஷமா உறங்கிப் போனாராம்.

Monday, July 27, 2009

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் ..

வாழ்க பாரதம்.

மூளை வடிகால் (Brain Drain) [என்ன மொழி பெயர்ப்பு எழவுன்னு தலைல அடிச்சிக்க வேணாம் கீழே வாழ்க தமிழ் படிச்சுக்குங்க ஏன்னு புரியும்], இந்திய மக்கள் வரிப்பணத்துல படிச்சிட்டு அயல்நாட்டுல காசு தேட போறாங்க. நாட்டுப் பற்றில்லன்னு எல்லாம் சீறும் தேசிய வாதிகள் பதில் சொல்லட்டும்.

கைநாட்டு அரசியல் வாதிக்கு கைகட்டி நின்னாலும் நம்ம நாட்டுல கலக்டர்னா ஒரு கெத்து தானே. அதை ஒரு குறிக்கோளா வெச்சி தாயாராகிற‌வங்கள பார்த்திருக்கீங்களா? தவம்னா அப்படி ஒரு தவமுங்க. சாப்பாடு, தூக்கம், பொழுது போக்கு எல்லாம் தொலைச்சி, நூலகம் நூலகமா அலைஞ்சி, இலவச ஆலோசனை, காசு குடுத்து பயிற்சின்னு உலகத்துல இது ஒண்ணுதான்னு இருப்பாங்க. அப்படி இருந்தும் தேர்ச்சி அடையறது ரொம்ப கொஞ்சம். தேறினதுல சிலது ஐ. ஏ.எஸ் வரல ஐ.பி.எஸ் குடுத்தான்னு திரும்ப எழுதி ஊத்திக்கும்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மணிராம் சர்மா ஒண்ணில்ல மூணு தரம், 2005, 2006 மற்றும் 2009ம் வருடங்களில் தேர்ச்சி அடைந்தும் வேலைக்கு தகுதி இல்லையாம். காரணம் அவருக்குக் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருக்காம். காரித்துப்ப தயாரா எச்சி கூட்டி வெச்சிருப்பீங்களே. இருங்க இன்னும் இருக்கு கேவலம். 2005 ல தேறி நேர்முகத்தேர்வுக்குப் போகிற போது இந்த மாதிரி ஆளுங்கள என்ன பண்ணுறதுன்னு சட்டமே இல்லையாம். (காதுகேக்காம, கண்ணு தெரியாம இருக்கிறவனெல்லாம் கலக்டராவரதான்னு திமிரா தெரியல). அதுக்கப்புறம் மகா மேதாவிகள் மண்டைய குடைஞ்சி 70% க்கு குறைவா காது கேக்காட்டி பரவால்ல குடுக்கலாம்னு சட்டம் போட்டாங்களாம். 2006 ல தேறினப்ப இவருக்கு 100 சதம் கேட்கும் திறன் குறைவுன்னு காரணம் காட்டி கை விரிச்சிட்டானுவளாம்.

மனுசன் அசராம கிட்ட தட்ட 7.5 லட்சம் செலவு பண்ணி கோஷ்லியர் கருவியை காதுக்குள்ள பதிஞ்சி 2009 ல தேர்ச்சியான 791 பேரில முதல் ஐம்பதுக்குள்ள தேர்வானார். 220/300க்கு மதிப்பெண். அதுவும் முதல் இரண்டு முறையும் நேர்முகத் தேர்வில் விடியோ மூலம் கேள்விக்கு பதில் சொன்ன இவர் இந்த முறை நேரடியாக கேள்விக்கு பதில் கூறி தேர்ச்சி அடைந்தவர். விட்ருவமா? மருத்துவ சோதனையில தேவைக்கு அதிகமா 70% சதவீதம் கேக்கலன்னு சொல்லவே தேர்ச்சியில்லைன்னு சொல்லிட்டாங்களாம். இத விட கொடுமை பணத்த வாங்கிகிட்டு அறுவை சிகிச்சை செய்த RML ஆசுபத்திரி இப்போ 100 சதவீதம் கேக்காதுன்னு சான்றிதழ் தராங்களாம். ராஜஸ்தான் மாநிலத்தில அமைக்கப் பட்ட காது மூக்கு தொண்டை மருத்துவர் குழு மீள் பரிசோதனை செய்ய அரசு ஆசுபத்திரியில வசதி இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். கேட்டது காதில விழாமலா இவ்வளவு மதிப்பெண் வாங்க முடியும்?

தெரியாமதான் கேக்குறேன். ஒரு மேட்சுல செஞ்சுரி போட்டவன், மூணாவது ஓடினது தடுக்கி விழுந்ததால வெண்கலப் பதக்கம் வாங்கினது, அரசியல் காரணமா பாதி தேசம் புறக்கணிச்ச போட்டியில சொத்த அணியை வென்று பரிசு வாங்கின குழுவில துண்டு நீட்டிகிட்டு நின்னது, தண்ணில விழுந்தா கைய கால உதைச்சி முங்காம பிழைச்சத எல்லாம் அரசுத் துறை, வங்கித்துறைன்னு போட்டி போட்டுகிட்டு அதிகாரி ஆக்குவாங்க. அவன் சொந்ததில கோச்சிங்னு போய்ட்டு காசு பார்த்து ஒரு நாள் அலுவலக வேலைபார்க்க மாட்டான். திறமை இருக்கோ இல்லையோ காசு குடுத்து வேலை வாங்கலாம். மந்திரி மண்ணாங்கட்டின்னு ஆளு அம்பு இருந்தா என்ன வேணும்னாலும் நடக்கும். திறமைக்கு மட்டும் மதிப்பில்லை.

அப்படியே வேலை குடுத்தா என்ன? கோப்பு அல்லது மனு அதை வச்சுத் தானே நடவடிக்கை எடுக்க முடியும்? கலைக்டரைய்யா காப்பாத்துன்னு அலறினாலும் மனு குடுய்யான்னு தானே விரட்டுவானுவ. அப்புறம் என்னய்யா கேக்காம போனா? கனவு காணச் சொன்ன கலாம் ஐயா. கனவு கண்டதுக்கு பலன் இதுதான். காது கேக்க முடிஞ்சும் கேட்டுறப்படாதுன்னு தலைப்பாகையில மறைச்சிருக்கிற மன்மோகன் சிங் ஐயா. உங்க காதில விழ வேணாம். கண்ணில படாமலா போயிருக்கும். குடுத்துதான் பாருங்களேன்.

மாட்டானுவ. இப்படி திறமை சாலிய எல்லாம் விட்டுடுவானுங்க. குடி கெடுக்கிற சவ சங்கரன், நாராயணன் எல்லாம் பதவிக்காலம் முடிஞ்சாலும் சங்கூதற வரைக்கும் இவனுங்கள விட்டா ஆளில்லை. பதவி நீட்டிப்புன்னு எவ்வளவு வருடம் வேணும்னாலும் குடுப்பானுவ. வாழ்க பாரதம்!


வளர்க தமிழ்:

Deadline: படைத்துறை சிறைச் சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டு வீழ்த்துவதற்குரிய கோடு

Chairman: தூக்கு நாற்காலியை சுமந்து செல்பவர்

kidney: உட்காருமிடத்தில் வரும் கட்டி

Arrest: பின் துறத்திச் செல்.

நான் நக்கலடிக்கலைங்க. சென்னைப் பல்கலைக் கழகம் சென்ற வாரம் வெளியிட்ட ஆங்கிலத் தமிழகராதியில இருக்குதாம் இப்படி. நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தி. இதுக்கு வியாக்கியானம் வேற. 1911 ல வெளியான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியை அடிப்படையா வெச்சி 1950ல வந்த சுருக்கமான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் மறு பதிப்பாம். நாளுக்கொரு புது வார்த்தை வரும்போது 59 வருடமா இந்த இழவைப் படிச்சி தமிழன் உருப்படுறது எங்க? பல்கலைக்கழக பதிப்பாச்சே தப்பாவா சொல்லப் போறாங்கன்னு தானே நம்புவோம்? இந்தக் கட்டுரையில பஞ்ச் நக்கல் வேற. ரஜினி சொன்னா மாதிரி டாக் இங்கிலீஷ், வாக் இங்கிலீஷ், லாஃப் இங்கிலீஷ் பண்ற தமிழனுக்கு கஷ்டமாம். மு.வ. சொன்ன அமாவாசை விருந்து சாமியாருங்க இன்னும் மாறலை பாருங்க.

Sunday, July 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 81

தமிழ் சகோதரர்கள் முன்னரைவிட சிறப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதே" என் பாரிய சவால் : மகிந்த ராஜபக்ஷ

அதுக்குதான் வலைக்குள்ள அடைச்சீரோ. நாள பின்ன நடுத்தெருவில விட்டாலும் வலைய விட வீதி சிறப்புன்னு சொல்லிக்கலாம்.
_______________________________________________________
இராணுவத்திலிருந்து தப்பியோடிய 65000 பேர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் - அரசாங்கம்

போய் சேர்ந்ததுக்கெல்லாம் கணக்கு காட்ட இந்த பம்மாத்து வேலையா?
_______________________________________________________
படையினரிடம் சரணடைந்த பொதுமக்களில் 50000 பேர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு?

அட மொத்தப் பேரும் தான். எல்லாம் தமிழர்தானே. இதில என்ன 50000 பேர் மட்டும்.
_______________________________________________________
வன்னி அகதி முகாம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது என கூறிய 'இந்து" ராம் அவர்களைக் கண்டித்து தமிழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அந்தாளு இலங்கை ராம் ஆகி ரொம்ப காலமாச்சு. அங்கையும் பதிப்பு வெளியிட கால நக்குறான் போல.
_______________________________________________________
ஜென்ரல் சரத்பொன்சேகாவுக்கான பாதுகாப்பு தீடீரெனக் குறைப்பு

நியாயம் தானப்பா. தன்னையே காக்க முடியாதவன் நாட்ட எங்க காக்கப் போறான்னு நினைச்சிருக்கலாம்.
_______________________________________________________
தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம் : வைகோ

கிழிச்சிடுவோம். கதவ மூடிகிட்டு அடிவாங்குற கவுண்டமணி சவுன்ட் விட்டத விட கேவலமா இருக்கு.
_______________________________________________________
மீளக்குடியமர்த்த அதிக காலம் தேவை - ரோகித போகொல்லாகம

நீ குடியமர்த்தினாதான் போவோம்னு தவமா இருக்காங்க. வலைய தூக்கு. தானே அமர்ந்துகிடுவங்க.
_______________________________________________________
முகாம்களில் தமிழர்களை விருப்பமின்றி தங்க வைப்பதா? இலங்கை ஐகோர்ட்டு கண்டனம்

எல்லாரும் கண்டனம் விட்டாச்சு. இவங்கதான் பாக்கி.
_______________________________________________________
விடுதலைப்புலிகளின் தலைவர் செல்வராஜா பத்மநாதன் மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடம் முறைப்பாடு?

ஏன். பீதில காய்ச்சல் வந்துடுச்சோ? பிரித்தானியாவே புலிகளுக்கு ஆதரவுன்னு சொன்ன பரதேசிதானே.
_______________________________________________________
இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இரணமடுச்சந்தியில் நேரடி மோதல்

எல்லாம் ஒழிச்சாச்சின்னு அலட்டினானுவளே. இப்போ ஆவியா வந்து அடிக்கிறாங்களோ?
_______________________________________________________
பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை: ராஜபட்ச உறுதி

அடப்பாவிங்களா. இதையேதான் அப்படியே ப்ரணாப்பு சொன்னாரு 2 நாள் முன்னாடி. சவசங்கரன் நகல் குடுத்தத படிச்சாரோ?
_______________________________________________________
இலங்கைக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தவுள்ளது:

ஆமாம்ல. காசாவும் குடுத்து பொருளாவும் குடுக்கிற நிலமைலயா இருக்கு அமெரிகா? வாங்கிக்கிறுவானுங்க.
_______________________________________________________
காலம் தாழ்ந்து வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்:கலைஞர்

ஈழத் தமிழருக்கு இது பொருந்தாது:‍ சொல்லாம விட்டது.
_______________________________________________________
தமிழ்நாட்டின் பெருமை:கலைஞர் பேச்சு

அது வேற இன்னும் வாழுதா? சிறுமைன்னு சொன்னா சரியா இருக்கும். காங்கிரசும் கழகமும்னு சொல்லிக்கலாம்.
_______________________________________________________

Saturday, July 25, 2009

அடல்ட்ஸ் ஒன்லி (பயப்படாம படிங்க)

தலைப்பை பார்த்துவிட்டு வில்லங்கமா இருக்கும் என்றோ என்ன கேடு இவனுக்குன்னோ அவசரப்பட்டு வஞ்சிராதிய. ஒரு பிஞ்சு மனசுல விழுந்த அடியோட சோகம் இது.

வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில மேலதிகாரி நம்ம அதிகாரிய கூப்பிட்டு தெருவில கோலி விளையாடுற புள்ளைங்களுக்கெல்லாம் வேலை குடுக்கிறமா இப்போன்னு கேக்கிற அளவு நம்ம உருவ அமைப்பு. மீசைன்னு ஒண்ணு வருவனான்னு கோவப்பட்டுகிட்டு எம்மேல வஞ்சம் தீர்த்த காலம் அது.

அப்போல்லாம் சென்னையில ஆங்கிலப் படம் மட்டுமே ஓடும் திரையரங்கங்கள் அதிகம். காசினோ, தேவி, குளோப், கெயிட்டி, சஃபையர், புளுடயமன்ட், உமானு ரொம்ப பிரசித்தமான திரையரங்கங்கள் இருந்தன. அதிலயும் மினர்வா, காசினோ எல்லாம் ஒழுக்கத்துக்கு பெயர் போனது. மினர்வால கள்ள டிக்கட், லுங்கி கட்டின ஆளுங்க, பிகிலடிக்கிறதெல்லாம் கேள்விப் படாத விஷயம். கெயிட்டி, உமா, குளோப்பில எல்லாம் எந்த படம் வேணும்னாலும் போடுவாங்க. Three Muscteers (மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள்), The man from Istanbul (இஸ்தான்புல் இளசுகள்)னு எல்லாம் தலைப்பு மாறி போஸ்டரடிக்கிறது.

பதினொண்ணாப்பு படிக்கிறப்ப தமிழ் திரையுலகத்தில பெரும் புரட்சி ஏற்பட்டுச்சி. முதல் முதலா வயது வந்தவர்களுக்கு மட்டும்னு படம் வர ஆரம்பிச்சது. தோ ரஹா (இரண்டு பாதை) என்று ஒரு ஹிந்திப் படமும், மஞ்சுளா நடிச்ச ஒரு படம் (மறுபிறவியோ என்னமோ). அம்புடுதேன். தமிழ் பத்திரிகை உலகில் கற்பழிப்பு என்ற வார்த்தை காணாம போயிட்டுது. விமரிசனம் பார்த்தா கதாநாயகியை வில்லன் தோரஹா செய்ய முயற்சிக்கும் போதுன்னு அந்த பதத்த ஒரு வார்த்தையாவே உபயோகிப்பாங்க. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படத்துக்கு எதிரா சிவாஜி படம், கமல் படத்துக்கு போட்டியா ரஜனி படம் மாதிரி பாலசந்தர் படத்துக்கு போட்டியா கே. எஸ். கோபால கிருஷ்ணன் படம்னு வரும்.

நம்ம பக்கத்துல இருக்கிற நண்பர் நல்லா நெடு நெடுன்னு வளர்ந்து மனுசனா இருப்பாரு. ஆங்கிலப் பட பிரியர். உமா தியேட்டரில வாரம் ஒரு படம் போடுவாங்க. தவராம போய்ட்டு வருவாரு. வந்து கதை வேற சொல்லுவாரு. இத்தனைக்கு உமாவில ரொம்ப பிரபலமான படமாத்தான் அதிகம் போடுறது. நாம பாட்டுக்கு வெள்ளந்தியா இருந்தோம். நம்ம போறாத காலம் பாலசந்தரின் அரங்கேற்றமும், கோபால கிருஷ்ணனின் வாழையடி வாழையும் வந்திச்சி. ரெண்டுமே அடல்ட்ஸ் ஒன்லி. விமரிசனம் ஆகா, அபாரம். தமிழ்த்திரையுலகம் எங்கயோ போயிடுத்துன்னு வந்திச்சி. கூடவே அடல்ட்ஸ் ஒன்லி கொடுத்தது அனியாயம்னு வேற. ஆனா இதுக்காகவே படம் ஓடும்னொ என்னமோ அப்படியே விட்டாங்க. வகுப்பில யார பார்த்தாலும் நீ பார்த்துட்டியா? என்னாமா எடுத்திருக்காங்கன்னு சொல்ல சொல்ல மனசு கேக்கல. சரி போவம்னு போனது.

முன்னாடியே போனாதான் டிக்கட் வாங்க முடியும். அதனால ஒண்ணர மணி காட்சிக்கு 11 மணிக்கே போய் நிக்க கதவு திறக்கல. ஒரு வழியா 11.45 கு மேல காவல் காரர் கதவ ஒருக்களிச்சி கவுண்டரில மிச்ச தவம் கிடக்க அனுமதிச்சாரு. நம்ம மனசில டிக்கட் வாங்கிட்டா விட்ருவான்னு நினைப்பு. ரெண்டு பேருக்குள்ள மறைஞ்சி மறைஞ்சி நகர காலர புடிச்சி இழுத்து உனக்கு அனுமதியில்லைன்னுட்டாங்க. மத்த பேரெல்லாம் கேவலமா பாக்க தலைய குனிஞ்சிகிட்டு நகர்ந்தா நம்ம வகுப்பு தோழர் ஒரு ஆளு பார்த்து தொலைச்சதோட இல்லாம தெம்பா உள்ள போனாரு. ஆளு வளர்த்தி அப்படி. அடுத்த நாள் வகுப்பில டேய் இவனெல்லாம் அரங்கேற்றம் படம் பார்க்க வந்தான்டா. குழந்தைங்க பார்க்க கூடாதுன்னு விரட்டி விட்டங்கடான்னு தண்டோரா போட, மானம் போச்சி. அழமாட்டாக் குறையா உர்ருன்னு இருந்தது.

பியூசி முடிச்ச கையோட அரசுப் பணி கிடைக்கவும் அதுல சேர்ந்தாச்சி. ஐ.சி.எப். மனமகிழ் மன்றத்தில சனி, ஞாயிறு திரைப்படம் காட்டுவாங்க. கீழ் வீட்டில இருந்த ஒரு மலையாளத்து அண்ணாவோட உறுப்பினர் அட்டைய வாங்கி டிக்கட் வாங்கி வெச்சிடணும். நல்ல படம்னா செவ்வாய் கிழைமையே டிக்கட் கிடைக்காது. நம்மள சோதிக்கன்னே அங்க அரங்கேற்றம் படம் போட்டாங்க. இப்பதான் மேஜராயிட்டமே . எவன் தடுக்கிறதுன்னு ஆறு மணி ஆட்டத்துக்கு டிக்கட் வாங்கியாச்சு.

சனிக்கிழமை அலுவல் முடிச்சி பஸ்ஸ புடிச்சி தெம்பா ஓடி, டிக்கட்ட நீட்டினா டிக்கட் கிழிக்கிற ஆளு இழுத்து விட்டாரு. சின்னபசங்களுக்கு அனுமதி இல்லையாம். ண்ணா ண்ணா நான் கவருமென்டுல வேல பாக்குறன். 18 வயசாயிடிச்சின்னு கிசு கிசுக்க டேய், உன்னமாதிரி எத்தன பேர பார்த்திருக்கேன் ஓடி போயிடுன்னு இறைச்சலா சொல்ல, ரொம்ப‌ கூசி குறுகி போச்சி. அடையாள அட்டை காட்டியா படம் பார்க்கணும்னு ரோசம். நொந்து நூலாகி திரும்பற நேரம்.

அது ஒரே கதவில ஆண் பெண் வரிசை தனியா இருந்தாலும், ஆண்கள் டிக்கட் ஒண்ணு பெண்கள் டிக்கட் ஒண்ணுன்னு அனுப்பறது. ரொம்ப கொடூரமா பெண்கள் வரிசைல கீழ் வீட்டு அக்கா மகள். பத்தாம்பு போன புதுசு. நம்ம கிட்ட டியூசன் வேற படிச்சது. தாவணி போட்ட ஒரே காரணத்துக்காக அத வயசுக்கு வந்ததுன்னு நினைச்சாரோ இல்ல பொம்பள கிட்ட வயசு கேக்கிறது தப்புன்னு நினைச்சாரோ தெரியல. மனுசன் டிக்கட்ட கிழிச்சி உள்ள விட அது பார்த்த பார்வை இருக்கே. மனுசன் தாங்க முடியுமா சொல்லுங்க. ரொம்ப நாள் அந்த புள்ள எதிர்ல வராம நான் பம்மின கொடுமை தனி கதை.

சினிமாவோட சண்டை போட்டுகிட்டு ஒரு மூணு நாலு வருஷம் படம் போனதே இல்ல. இப்படி அடிமேல அடியா வாங்கி அந்த தழும்பு மெதுவா ஆறி ஒரு மாதிரியா மறந்தும் போச்சு. இந்த கடவுளுக்கு என்ன கோவமோ தெரியல. ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை இந்தியத் தொலைக்காட்சியிலேயே முதன் முதலாக பாலச்சந்தரின் காவியம் அரங்கேற்றம் காட்டுனாங்க. ஏழாப்பு படிக்கிற என் பையனும் மூணாம்பு படிக்கிற பெண்ணும் ஹால்ல உக்காந்து பார்க்குதுங்க.

அடல்ட்ஸ் ஒன்லி தரம் தான் மாறிப் போச்ச்சா இல்ல புள்ளைங்க விவரமாயிட்டாங்களா? என்ன கொடுமை சரவணா இது? எப்படியோ தொடர்ந்து என்ன நோவடிக்கன்னே வந்த அந்தப் படத்த இது வரைக்கும் பார்க்கல.


Friday, July 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 80

வன்னி மக்களை நிதிபெறும் ஊடகமாக அரசு பயன்படுத்துகின்றது

இது தெரியாமலா போட்டி போட்டுகிட்டு கொட்டிக் குடுக்கறாங்க. என்னமோ உள்குத்து இருக்கும் போல.
_________________________________________________________
ஐனாதிபதியின் மகன் மீது சேறு வீசியதாக வெளியான படம் 'கிராபிக்ஸ்' விளையாட்டு : ஊடகத்துறை அமைச்சர்

நீங்க காட்டதா பிலிமா.
_________________________________________________________
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக மீளக் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அப்புறம் காசு தேத்துறது எப்படி. விடாம இங்க மந்திரி என்ன சொல்லுறாரோ அதுக்கு மறுப்பறிக்கை வருதே. இதுங்களுக்கு உறைக்குதா?
_________________________________________________________
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பௌத்த பிக்குகளிடம் ஆலோசனை கோரப்படும் - மிலிந்த மொரகொட

இவனுங்க நாட்டில மட்டும் பிக்குகள் துறவிகள் இல்லை போல. தமிழன் ரத்தம் பட்டே காவியான பாவிங்கள கேளுங்க ராசா. இன்னும் எப்படி எல்லாம் கொடுமை பண்ணலாம்னு சொல்லுவாங்க.
_________________________________________________________
ஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பான சிடியை வெளியிட நீதிமன்றம் அனுமதி

மனசாட்சியே இல்லையா? தாமதமான நீதி மறுக்கப் பட்ட நீதின்னு என்னமோ சொல்லுவாங்களப்பு.
_________________________________________________________
எனது காலத்திற்கு பிறகு, நான் வசிக்கும் வீடு------:கலைஞர் உருக்கமான பேச்சு

வாயால சொல்லுறது தானே. இப்பவே பதிஞ்சிடலாமே?
_________________________________________________________
கலப்புதிருமணம் செய்தால் வீட்டுக்கு இலவசமின்சாரம்

சம்சாரம் அது மின்சாரமா?
_________________________________________________________
தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் பிரச்சினையில்லை: எடியூரப்பா

சந்தனம் மிஞ்சிடிச்சி போல. தேக்கி வெச்சா கர்னாடகா காணாம போயிடும். தமிழன் பயிரை அழிக்க என்னா தாராளம்.
_________________________________________________________
திருச்சி:நாடக நடிகை கடத்தல்

அதுவும் நாடகமா? நிஜமா?
_________________________________________________________
ஈழத்தமிழர்களை காக்க ஆக.20ல் புதிய பிரகடனம்: ராமதாஸ்

அது வரைக்கும் விட்டு வைப்பானா?
_________________________________________________________
சிங்களப் படத்தில் த்ரிஷா

டாமில் பிரச்சனே வேறே. ப்ரோபெஷன் வேறனு பேட்டி குடுக்கும். அதுக்கும் கை தட்டுவோம்.
_________________________________________________________

நறுக்குன்னு நாலு வார்த்த - 79

வீடிழந்த 3 லட்சம் இலங்கை தமிழர்களை 180 நாளில் குடியமர்த்த இலங்கை உறுதி: எஸ்.எம். கிருஷ்ணா

பாவம். போர் நிறுத்தம் போல யாரோ எழுதிக்குடுத்தத படிச்சாரு போல வெண்ணை. சாரி. கிருஷ்ணா.ச‌ரி என்னைல‌ இருந்து 180 நாள்? கில்லாடி கிருஷ்ணா.

___________________________________________________________
புலிகளை ஒழிக்கும் வரை தமிழர்கள் ஊர் திரும்ப முடியாது: இலங்கை அரசு

இதுக்கென்ன சொல்லப் போராரு முந்திரி? அட மந்திரி.

___________________________________________________________
ஈழப்பிரச்சினையில் முறையாகச் செயற்படவில்லை என பான் கி மூன் மீது குற்றச்சாட்டு

மூக்கை நுழைச்ச‌ யார்தான் முறையா செய‌ல்ப‌ட்டாங்க‌. போங்க‌டா.

___________________________________________________________
இலங்கை முகாமிலிருந்த பிரபாகரனின் பெற்றோரைக் காணவில்லை?

ப‌டுபாவிங்க‌ வெறி பிடிச்சி அலையுறானுவ‌.

___________________________________________________________
இலங்கைக்கு கடன் வழங்கக் கூடாது - மனித உரிமை கண்காணிப்பகம்

உங்க‌ க‌ட‌மைய‌ நீங்க‌ ஒழுங்கா ப‌ண்ணீங்க‌ளா? நீங்க‌ க‌ண்ட‌ன‌ம் ப‌ண்ண‌தோட‌ க‌டமை முடிஞ்ச‌துன்னு போனா அவ‌ன் க‌ண்டிச‌ன் போட்ட‌தோட‌ க‌ட‌மை முடிஞ்ச‌துன்னு குடுப்பான்.

___________________________________________________________
யுத்த இடம்பெற்ற இறுதிகட்டத்தின் போது நீரோ மன்னனை போன்று கருணா செயற்பட்டதாக அவரது மனைவி குற்றச்சாட்டு

இவ‌ரு ஜால்ரா அடிச்ச‌த‌ சொல்றாங்க‌ போல‌. எட்ட‌ப்ப‌னுக்கு இது ச‌க‌ஜ‌ம‌ம்மா.

___________________________________________________________
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் : சீமான்

தமிழர் பகுதி இப்போதைக்கு கம்பி வேலிக்குள்ளதானே. அங்க குடியேற்றட்டும்.

___________________________________________________________
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது - அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

அதனாலேயே இது அசாத்தியமானதும் தான் கொடுமை.
___________________________________________________________

நகரசபைஅலுவலகத்துக்கு பூட்டுபோட்ட காங்.கவுன்சிலர்

நல்ல தொடக்கம். எல்லாரும் பின் பற்றினா நாடு உருப்படும்.
___________________________________________________________

எங்கள் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் ப.சிதம்பரம்தான் பொறுப்பு: லாலு பிரசாத், முலாயம் சிங் எச்சரிக்கை

தோடா. எத்தனையோ உயிர் போனதுக்கே அவரு பொறுப்பில்லையாம். இதுக்கு மட்டுமா?

___________________________________________________________
சட்டசபையில் பாம்பு: அவை ஒத்தி வைப்பு

ஒரு உரையில ரெண்டு கத்தி இருக்க முடியாதில்ல.

___________________________________________________________

Thursday, July 23, 2009

சுவாரசிய பதிவர் விருது

சுவாரசிய பதிவர் விருது நம்மளுக்கும் கிடைச்சிருக்கு. கொடுத்தவங்க சக்தி. இப்பொழுது என் கடமையை நான் செய்தாகணும். ஆறு பேருக்குதான் தரணுமாம். அவங்க மூலம் மத்தவங்களுக்கு சேரும் என்ற நம்பிக்கையுடன் நான் பகிரும் பதிவர்கள் இதோ:
1:ராஜ நடராசன்: தெளிவான நடை, பரவலான விஷயங்கள், தீர்மானமான கருத்துக்களின் பதிவு இவருடையது.
2: மகேஸ்வரன்:அத்தி பூத்தாற்போல் எழுதினாலும் நச்சென இருக்கும் இடுகைகள். நிறைய எழுதவேண்டும் என்ற கோரிக்கையுடன்.
3: சுப்பு: தல விசிறி. கல கலப்பான இடுகைகள்
4:கிரி:இது அதுன்னு வளையத்துக்குள்ள இல்லாம எல்லாத்துலயும் அசத்தும் இடுகைகளின் பிரம்மா.
5:மயாதி: கவிதையில் கலக்கியவர். இப்போது உரைநடையிலும். எனக்குத் தகுதி இருக்கிறதா என்ற பயத்துடன்.
6: யூர்கன் க்ரூகியர்: அசத்தல் பதிவர்

இதுல ஒரு ரகசியம். இவங்க போற பதிவுக்கெல்லாம் நானும் போவேன். விட்டுப் போனவங்களுக்கு இவங்க குடுக்கிரப்போ இன்னும் பெருமை சேரும்ல.
மீண்டும் ஒரு முறை சக்திக்கு நன்றியுடன்..
(படத்தைச் சேமித்து உங்கள் பதிவில் ஒட்டிக்கிடுங்க)


Wednesday, July 22, 2009

செல்லாப்பு

மனுசனுக்கு எங்கல்லாம் ஆப்பு இருக்குமோ தெரியல. மாச சம்பளம் வாங்கி பிதுக்கி பிதுக்கி செலவு பண்ணி கடைசி நாள் வெறுஞ்சட்டைய உதறி போட்டுகிட்டு போய் காசாளார் வருவாரான்னு காத்திருந்து சம்பளம் வாங்கினதும் முகத்தில வரும் பாருங்க ஒரு வெளிச்சம். அலுவலக வாசல்ல அல்வாகாரன்ல இருந்து அண்டர்வேர் விக்கிறவன் வரைக்கும் கடைய போட்டு, கடன் குடுத்த ஆளுங்க ஒளிஞ்சி நின்னு கப்னு பிடிச்சி உதறின்னு களேபரமா இருக்கும். எல்லாம் போச்சி. சம்பளமெல்லாம் வங்கிலதான்னு வந்திச்சி ஆப்பு. கடன்னா காததூரம் ஓடின பயபுள்ளைகள புடிச்சி இந்தியாவே கடன் வாங்கறப்ப குடிமகன் நீ கடனில்லாம இருக்கலாமான்னு கடன் அட்டைய நுழைச்சாங்க பாருங்க. அது அடுத்த ஆப்பு. ஃபோன்னாலே யாரோ மண்டைய போட்டுட்டாங்களான்னு கலங்கி போன காலம் போய், மாப்ள கணக்கா இருக்கான் பயபுள்ள பைத்தியம் புடிச்சி போச்சேன்னு பார்த்தா அப்புறம் தெரியுது அவரு ப்ளூடூத்ல தனக்கு தானே பேச்சிட்டு போறது . இப்படி அலைபேசி ஆப்பு கூட சேர்ந்திச்சி. கடைக்கு போனா பொருள வாங்கி முடிச்சா காசா, அட்டையான்னு கேட்டு, அட்டைன்னா மேலையும் கீழையும் பார்த்து அந்தப் பக்கம் நில்லுன்னு விரட்டி, காக்க வெச்சு பில் குடுத்த காலம் போய், காசுன்னா, நீயெல்லாம்னு ஒரு புழுவ மாதிரி பார்க்கிற கொடுமைய எங்க போய் சொல்ல? எதுக்கும் மசியாம கைமேல காசு வாய் மேல தோசைன்னு வாழ்க்கைய ஓட்டிகிட்டுதான் இருந்தேன். காலத்தின் கட்டாயம், கட்டத் துணி இல்லைன்னாலும் பரவால்ல கடனட்டை இல்லாதவன் மனுசனே இல்ல, ஆடை இல்லாம இருந்தாலும் பரவால்ல அலைபேசி இல்லாதவன் மனுசனான்னெல்லாம் புது மொழி வர அளவுக்கு ஆகிப் போச்சு. போதாக் குறைக்கு இணைய வர்த்தகம் நான் என்ன பாவம் பண்ணேன்னு தன் பங்குக்கு ஆப்பு கொண்டு வர, காசை வைத்துக் கொண்டு நேரா போய் மதுரைக்கு விமான கட்டணம் எவ்வளவுன்னா சொறிஞ்சி சொறிஞ்சி ரூ3,400ங்கறாங்க. வீட்டில உக்காந்து கணினில தட்டி கடனட்டை நம்பர் குடுத்தா ரூ1800ங்கற நிலைமைல அடிக்கிற அலைக்கு எதிர்நீச்சல் போட்டா வாழ முடியாதுன்னு அலைபேசி, கடனட்டை, இணைய இணைப்புன்னு ஆப்பு மேல ஆப்பா சந்தோசமா ஏத்துக்க வேண்டியதா போச்சு.

அட்டையும் இணையமும் பரவால்லைங்க. கொத்து குண்டு மாதிரி அலைபேசி ஆப்புல இருந்து கிளம்புது பாருங்க வகை வகையா ஆப்பு. தாங்க முடியலைங்க. 500 ரூபாய்க்கு ஏதோ வாங்கினா வருது ஒரு அழைப்பு. ரூபாய் 60,000 என்னை நம்பி கடன் குடுக்க தயாரா இருக்கிற வங்கி 500 ரூபாய மாசா மாசம் தவணையா கட்டுறியான்னு கேக்க கூசிப் போச்சு . ஆத்தா அப்பன் கூட கொஞ்சி இருக்காத குரல்ல கொஞ்சி, நாங்க உன்ன கடனாளியாக்குறதா முடிவு பண்ணி ரூபாய் மூணு லட்சம் ஒப்புதல் பண்ணியாச்சி. மஞ்ச தண்ணி தெளிச்சி மாலைய போட்டுகிட்டு எப்ப வந்து கழுத்த நீட்டுவ அறுக்கங்கறத ஒத்த வரில எப்போ வேணுமோ இந்த நம்பருக்கு அழைச்சா போருங்கன்னு சொல்றதுக்கு மசியாம இருக்கணும்னா என்னா மனத் திடம் வேணும் தெரியுமா? காரு வாங்கறியா, கருவேப்பிலை வாங்கறியான்னு குறுஞ்செய்தி தாக்குதல் வேற. குழம்புக்கு அரைச்ச அம்மியில கோவணம் கட்டிகிட்டு உக்காந்தவன் மாதிரியே கடுப்பில இருக்கிற அதிகாரி கிட்ட சிக்கி சின்னா பின்னமாகாம பேசிட்டிருக்கிறப்போ இவனுகளுக்கு எப்படி தெரியுமோ? தவறாம வரும் அழைப்பு. அவ்வளவு நேரம் பட்ட அவஸ்தையும் அம்போன்னு போக அந்தாளுட்ட கிழிபட்டு சாவணும். தூங்கறப்போ கொசு கடிச்சா தூக்கத்துலயே ஒரு தட்டு தட்டுறாப்புல இந்த அவஸ்தைல்லாம் பழகிதான் போச்சுன்னு இருக்க வந்துச்சுங்க ஒரு ஆப்பு போன மாசம்.

காலையில அலுவலகத்துக்கு போற அவசரத்துல ஒரு அழைப்பு. ஒரு அம்மணி ரொம்ப மரியாதையா நம்ம அலைபேசி எண்ணை சொல்லி அதானுங்களேன்னிச்சி. இல்லைன்னா எப்படி பேசப்போறன்னு கேக்க வந்தாலும் காலைலயே பொறுமை இழந்தா கஷ்டமேன்னு ஆமாம்மான்னு சொல்லி வெச்சேன். பேர சொல்லி நீங்கதானான்னுச்சி. ஆமாம்னேன். அன்னிய வங்கி பேர சொல்லி அவிங்க கடனட்டை வெச்சிருக்கீங்கல்லன்னிச்சி. மெதுவா வயறு கலங்க ஆமாம்னேன். இந்த கடனட்டைய தவறா பயன் படுத்தாம பாதுகாவலா ஒரு இன்சூரன்சு, அப்படி காணாம போனாலோ அத வெச்சி யாராவது உனக்கு நாமம் போட்டா அதுக்குண்டான பணத்த இன்சூரன்சு கட்டும்னு சொல்லி புரியுதுங்களான்னிச்சி. இந்தக் கலிகாலத்துல இப்படி கூட பாசக்கார பயலுவ இருக்கானுவளே. தேவையோ இல்லையோ க‌டனயும் குடுத்து காணாம போய் கள்ளத் தனம் நடந்தா பாதுகாப்பும் தரானுவளேன்னு ஆகா நல்லா புரியுதுங்கன்னேன். ரெண்டு நிமிடம் சார். அதோட இல்ல இது கூட மருத்துவ வசதியும் தராங்கன்னிச்சி. லேசா, அடி மனசுல உசாருடா வெண்ணன்னு அலாரம் அடிக்க, சொல்லுங்கன்னேன். ஆரம்பமே அசத்தலா, உங்களுக்கு ஹார்ட் அட்டாக், கேன்ஸர்னு பயமுறுத்தி இதெல்லாம் வந்தா இந்தியால எங்கன்னாலும் 2000 கு மேல ஆஸ்பத்திரில போய் அட்டைய நீட்டிட்டு ஆயுசிருந்தா விசிலடிச்சிட்டே வெளிய வரலாம். எவ்ளோ நாள் படுக்கைல இருக்கியோ நாளைக்கு இவ்வளவு ரூபாய் காசா கிடைக்கும்னு சொன்னப்போ அலாரம் கூடி, மாமனார் இருந்தா கூட இப்படி எல்லாம் அள்ளி வீசுவாரான்னு உசாராகி, சொல்லுங்க வேலைக்கு போணுங்கன்னா. திரும்ப ஒரு வாட்டி பேரு, பொறந்த நாளு, முகவரி எல்லாம் சொல்லி கடனட்டை எண் சொல்லுங்கன்னிச்சி. நான் பயணத்துல இருக்கேன் அப்புறம் பார்க்கலாம்னேன். இருங்க சார் நான் நம்பர் சொல்லுறேன் சரியா சொல்லுங்கன்னிச்சி. விட்டா போரும்டா சாமின்னு சரின்னேன். அதோட மூடிட்டு அப்புறம் அந்த நம்பர்ல இருந்து அழைப்பு வரப்போல்லாம் எடுக்காம விட்டேன் கிட்ட கிட்ட 10 வாட்டிக்கு மேல.

அந்தம்மா சினந்துகிட்டே செஞ்சதோ சிரிச்சிகிட்டே செஞ்சதோ தெரியல. வங்கில இருந்து ரூபாய் 1200 கிட்ட கட்டுங்கன்னு பில்லு வருது. அய்யோன்னு அலறி எதுக்குன்னே தெரியலயேடா பாவின்னா இன்சூரன்சு கம்பெனிகாரனுக்கு குடுத்திருக்கேன் அங்க கேளுங்கறான். பதறிப் போய் இ‍‍ மெயில்ல அழுது மிரட்டி நான் யாருன்னு அவனுக்கு தெரியாது, அவன் யாருன்னு எனக்கு தெரியாது. இப்படி நடந்துச்சி விசாரி. நான் பணம் கட்ட மாட்டன்னா பதில் வருது. வாயால சரின்னு சொன்னியேவாம். கொலை வெறியோட கோர்டுக்கு போவேன் ஒளுங்கா கேன்சல் பண்ணு. ஃப்ராடு வேலை பண்றியான்னு மெயில் பண்ணிட்டு இருந்தா குறுஞ்செய்தி அனுப்புறாரு இன்சூரன்சு காரரு. உன்னோட கோரிக்கைய இந்த நம்பர்ல பதிஞ்சிருக்கோம். ஒரு வாரத்துல தகவல் வரும்னு. நீ யாருன்னே தெரியாதேடா. நான் எங்கடா கோரிக்க வெச்சேன். இந்த வங்கிக்காரன் கிட்ட அல்லாடிக்கிட்டிருக்கேனே அவனா நீயின்னு வடிவேலு மாதிரி அவ்வ்வ்வ்வ்னு அழுது, பாரு ராசா இந்த தில்லாலங்கிடி வேலைல்லாம் வேணாம். பாலிசி கீலிசின்னு வந்தா நடக்கறதே வேறன்னா, பார்க்கரோம்னு மெயில் வருது. பின்னாடியே குறுஞ்செய்தில பாலிசிய கேன்சல் பண்ணதுல மனசுடைஞ்சு போய்ட்டோம். தண்டனை பணம் போக 324 ரூபாய் உனக்கு அனுப்பறோம்னு வருது. அய்யா சாமி நான் ஒரு பைசா கட்டல. எனக்கு ஒரு காசும் நீ தரவேணாம். எவன் கட்டினானோ அவனுக்கு மொத்தமா அனுப்பு. எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லைன்னு மெயில் பண்ணா கடனட்டை வங்கில இருந்து உன் கடன் தொகையை கேன்சல் பண்ண சொல்லிட்டோம்னு பதில் வந்துச்சு. அப்பாடான்னு இருந்தா, இன்சூரன்சு காரன் விடாப்பிடியா செக் கூரியர்ல அனுப்பிட்டேன்னு அலம்பல் பண்ணுறான்.

உசாரு சாமிகளா. அலைபேசில சரி, ஆமாம், புரியுதுனு எல்லாம் தெரியாதவங்க கிட்ட பேசிறாதிங்க. படுபாவி பயலுவ எப்படிடா மாட்டி விடலாம்னு உக்காந்து யோசிப்பாங்களோ?
***

Sunday, July 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 78

இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்?

ஏன் போனவங்க திரும்பலையா? அங்க புடுங்கிங்க யாருமில்லையா?
__________________________________________________________
மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்கள் தொடர்பாக பிரித்தானியா அழுத்தம்

நீங்களும்தான் அழுத்திட்டே இருக்கீங்க. அவன் நடத்திட்டே இருக்கான். என்னா நாடகமோ.
__________________________________________________________
இலங்கை விவகாரம் குறித்து ஹிலாரி இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்

எங்க இப்போ சொல்லட்டும். ஐயோ அவன் இறையாண்மை போயிடும். நாம என்ன பண்ணன்னு. அவன் விவகாரத்த அங்க ஏங்க பேச முடியல.
__________________________________________________________
சிறிலங்காவிற்கான கடனுதவியை தடுக்குமாறு அமெரிக்க அமைச்சின் கோரிக்கை

அண்ணனே கடனுக்கு சாவரப்போ இவரு சொல்றத யாரு கேக்க போறா. கோரிக்கைய தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது.
__________________________________________________________
ஜூன் 2வது வாரத்தில் புலிகளைத் தேடிப்போன 150 ராணுவத்தினரில் 125 பேருக்கு மேல் சாவு. தப்பியவர்கள் படுகாயம். அதிர்ச்சியில் ராணுவம்: செய்தி

5000 பேரை அனுப்பக் காரணம் இதுவா?
__________________________________________________________
தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம்ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை

மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவிக்கலையா இன்னும். இதத்தான் காலம் காலமா பண்றானே.
__________________________________________________________
விடுதலைப் புலிகளின் சொந்தத் தயாரிப்பான நீர்மூழ்கி வாகனம் நேற்று கண்டுபிடிப்பு: ராணுவம்

நாள பின்ன கடலுக்கடியில் புலிகள் அரண்மனை கண்டுபிடிப்புன்னு கூட வரும். பன்னாடைங்க. கடன் வாங்கி வாங்கி சுடத்தெரியாம அதுக்கும் ஆளு வேணும். பாருங்கடா ஒரு வசதி இல்லாம என்னல்லாம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு சாவடிக்கணும்.
__________________________________________________________
எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல

எவனோ சண்டை போட்டு எவனோ செத்தா இவனுங்க பண்ணுற அலம்பல் தாங்கலடா சாமி.
__________________________________________________________
இனவிகிதாரசாரத்திற்கு ஏற்ப பிரதேசங்கள் பிரிக்கப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்

ஆமாம். அண்ணன் தம்பிங்களுக்குள்ள பிரிச்சிக்கிறதுக்கு இதெல்லாம் எதுக்கு?
__________________________________________________________
இராணுவத்திலிருந்து தப்பியோடி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு ? :கோத்தபாய‌

வெக்கம் கெட்ட கூட்டம். இதுக்கு ராணுவம்னு பேரு வேறயா?
__________________________________________________________
திமுக-காங்கிரஸ்தான் கூட்டணிக்கு இலக்கணம்: கலைஞர்

அதாவது காட்டிக் குடுக்கிறது தான் இலக்கணமா?
__________________________________________________________
கள்ள நோட்டுக்களைக் கொடுத்து ஆடுகளை வாங்கி நூதன மோசடி

விற்ற‌ ஆடுங்கள் திருடினதா இருக்கும்.
__________________________________________________________
திருமலையில் ஸ்ரேயா சாமி தரிசனம்

பக்தர்களுக்கு ஸ்ரேயா தரிசனம். கோவிந்தா கோவிந்தா.
__________________________________________________________
பன்றி கூட்டத்தில் புகுந்த கிங் பிஷ்ஷர் விமானம்

பன்றிக்காய்ச்சலை ஒழிக்க இப்படி பண்ணாங்களோ?

***

இங்கிவளை யான் பெறவே...

ரொம்ப வருடங்கள் கழித்து நான் பார்த்த திரைப்படம் நாடோடிகள். அதில வரும் வசனம் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி இவங்கள்ளாம் அவங்களா மட்டுமே இருக்க முடியும். நண்பந்தான் எல்லாமுமா இருக்க முடியும்ங்கறா மாதிரி. கிட்டத்தட்ட 5 வாரம் அதை அனுபவிக்கிற வரம் கிடைத்தது எனக்கு.

பரீட்சைக்கு போகும் அவசரம். சிற்றுண்டிச் சாலையில் கொறித்து காஃபி சாப்பிட்டு கிளம்பும் நேரம் அந்த அவசரத்திலும் மேசையில் சிந்திய காஃபியை காகிதத் துவாலையில் துடைத்து, நாற்காலியை மேசை அடியில் தள்ளிவிட்டு சர்வரைப் பார்த்து நன்றி சொல்லி கிளம்பிய போது அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியில்

குற்றாலத்தில் வயதான பாட்டி முறுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்குவார் எவருமில்லை. ஓடிச் சென்று 10 ரூபாய் நீட்டி அவர்களின் உழைப்பை மதிக்கும் விதமாய் ஒரே ஒரு முறுக்கு எடுத்துக்கறேன் என்று நகர்ந்தபோது அந்த கிழவியின் முகத்தின் வியப்பில்

தென்காசியில் ஒரு உணவு விடுதியில் தனியாக வேறு மேசையில் உணவருந்த உட்கார்ந்த ஆட்டோ ஓட்டுனரை எங்கள் மேசையில் அமர வைத்து என்ன வேணுமோ சாப்பிடுங்க என்ற போது அவர் முகத்தில் தோன்றிய பெருமிதத்தில்

தெருவோரம் 3 கொய்யா பத்து ரூபாய் என்ற பெண்ணிடம் நாலு தர பேரம் பேசிய போது கடிந்து கொண்டு கடைகளில் கேட்ட விலை கொடுத்து வாங்குவீங்க. ஒரு கொய்யா கம்மியா கொடுத்து அந்தம்மா கோட்டை கட்டப் போகுதா என்று என்னைக் கிழித்த போது மனிதம் போதித்த ஆசானாய்

திருத்தணி மலையில் கோவில் யானைக்கு காசு கொடுக்க நடுங்கி நெட்டித் தள்ளாத குறையாய் தள்ள யானையே இது சரி வராது என்று ஒரு அடி முன் வைத்து தலையைத் தொட நடுங்கிய படி நின்று கனிவாய் பார்த்து பாவம் இப்படி பண்ணி வெச்சிருக்காங்க என்று நெகிழ்ந்த போது

குமுளி சாலையோரம் மாம்பழத் தோப்புக்குள் இருந்த நாய்க்குட்டியை தூக்கலாமா என்று கேட்டு அள்ளி அணைத்து நாம் கொண்டு போய்டலாமா என்று தவியாய் தவித்து அரை மனதாய் விட்டு வந்த போது

மெரினாவில் குதிரைக்காரன் சத்தியம் பண்ணாத குறையாய் குதிரைக்கு வலிக்காது என்று சொல்லியும் வற்புறுத்தலில் ஏறி ஒரு நிமிடம் உட்கார்ந்து இறங்கிய மறு நொடி அதை மன்னிப்பு கேட்காத குறையாய் தடவிக் கொடுத்து, பாவம் வலிச்சிருக்கும் என்று சுணங்கிய போது தேவதையாய்

தேக்கடியில் படகில் போகும்போது தூங்கி வழிந்த என்னை புகைப்படம் எடுத்துக் காட்டி சிரித்த போது

குற்றாலத்தில் விடுதியில் சாரல் மழையை கையிலேந்தி சின்ன வயது நினைவைச் சொன்ன போது

ஈர மணலில் கால் பதித்து அது காய்வதற்குள் புகைப்படம் எடுத்த போது

வலது புறம் பார்த்துப் பார்த்து கார் கதவைத் திறந்து இற‌ங்கி நடக்க மோட்டார் சைக்கிளில் போன ஒரு ஆள் தேவையே இல்லாமல் ஏதோ சொல்ல யோவ் போய்யா என்று சத்தம் வராமல் சொல்லி ஓடி வா திரும்பி வந்து திட்டப்போறாங்க என்ற போது

காரையாரில் படகில் இருந்து தண்ணீரில் அளைந்த படி வந்த போது குழந்தையாய்

கவனக் குறைவாய் எங்கேயோ கிரீஸ் என் சட்டையில் பட்டிருக்க ஸ்பென்சர் ப்ளாசாவில் ஒரு டி சர்ட் தேடி எடுத்து வாங்கி போடவைத்த போது

ஆசை ஆசையாய் வகை வகையாய் சமைத்து வாழை இலையில் சாப்பிடலாம் என்று கனிவோடு பரிமாரியபோது

சாப்பிடும் போது மேலே சிந்தாமல் சாப்பிட மாட்டிங்களா என்று கடிந்த போது

நேரமில்லாம போய்டுத்து. பச்சைக் கரை வேட்டி வாங்கிக்கோங்க அந்த டி சர்ட் கூட போட நல்லா இருக்கும் என்று சொன்ன போது என் அம்மாவாய்

எதற்கோ என் மகளைக் கடிந்து கொள்ள நேர்ந்த போது அப்படி பண்ணாதீங்க, அவளுக்கு வலிக்கும் என்ற போது

சாரல் மழையில், மலைப் பாதையில் மனம் விட்டுப் பேசி நடந்த போது

மகாபலிபுரம் நாமக்கல் என்று மலைக் கோவில்களில் வியந்தபோது தோழியாய்

காரில் இருந்த படி இரண்டு இளநீர் சாப்பிட அந்த மூதாட்டியை யாரோ அலக்கழித்த போது நீங்க குடுங்க நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்று சிறுமை கண்டு பொங்கிய ரௌத்திரம் பழகும் அவள் தன் கூட்டுக்குத் திரும்பும் நாள்.

விமான நிலையத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்த படி அவள் செல்கிறாள். சொல்லாமல் விட்டது எத்தனையோ. மனம் கனக்க கண் தளும்ப வெளியில் வருகையில் அவளுக்குப் பிடித்த பாரதியின் வரிகள், சீர்காழியின் குரலில், என் மனதில்..

இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..

***

Friday, July 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 77

கொசோவோவின் உருவாக்கம் சர்வதேச ஒத்துழைப்புக்கு அச்சுறுத்தல் -ஜனாதிபதி மஹிந்த

என்ன ஒத்துழைப்பு? மொத்தமா அழிக்கிறதுக்கும், அடைத்து வைக்கவுமா? அவங்களாவது பிழைச்சு போகட்டுமே ராசா.
_________________________________________________
சிறிலங்கா படைகளைவிட்டு 65,000 பேர் தப்பியோடியுள்ளனர்

உசிருக்கு பயந்தா மன சாட்சிக்கு பயந்தா? அப்ப சண்ட போட்டதாரு? இரவல் படையா?
_________________________________________________
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேசத்தின் கண்ணோட்டமும் கருத்தில் கொள்ளப்படும்

அவனவனும்தான் போட்டி போட்டு குடுக்கறாங்களே. எதற்கிந்த கண்துடைப்பு?
_________________________________________________
முகாம்களிலுள்ள மக்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஐ.நா. பான் கீ மூனிடம் ராஜபக்ஷ

அந்தாளு ஏன் பண்ணலைன்னு கேக்கவா போறாரு.
_________________________________________________
புலிகளை எதிர்ப்பதில் சில நாடுகள் நேர்மையாகச் செயற்படவில்லை: அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி

அட அட நேர்மைக்கு உதாரணம் இவருகிட்டதான் கத்துக்கணும்.
_________________________________________________
மீக நீண்ட காலத்திற்கு பின்னர் வன்னி மக்கள் உண்மையான சுதந்திரத்தை தற்போது அனுபவித்து வருகின்றனர்: கருணா

அட நாயே! வாலாட்டுறதுக்கும் அளவில்லையா? அங்கால போய் பாரு. உனக்கு சுதந்திரம் கிடைச்சுடும்.
_________________________________________________
மீளக்குடியமர்த்தும் பணியின் முன்னேற்றத்தை நேரில் கண்டறிய பான் கீ மூன் இலங்கை விஜயம்

நம்பிட்டோம்ல. ஐ. நா. ஆளுங்கள விட்டுடு ராசா புண்ணியமா போயிடும்னு கால நக்க போகுது போல.
_________________________________________________
மோசமான சூழ்நிலையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்களைப் பெற முடியவில்லை: பான் கி மூன்

சாகடிக்க விட்டதை பற்றி கவலை இல்லை. செத்த கணக்கு தெரியலைன்னு அழுகையா?
_________________________________________________
இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளின் குறைகளை போக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் கண்டிப்புடன் தெரிவித்ததாக மன்மோகன் சிங்.

பண்றங்கையா. கோவிச்சிக்கிறாதிங்கன்னு பக்சே கெஞ்சல்னு சேர்த்து சொல்லி இருந்தாலும் நம்புவம்ல.
_________________________________________________
ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணபதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது: ஹிலாரி கிளிண்டன்

ஆமாம் பின்ன. கொஞ்சம் மிஞ்சி இருக்கில்ல. உங்க பங்கு என்ன?
_________________________________________________
அனைத்துலக விதிகளை மீறும் இலங்கை: ஐ.நா. பணியாளர்கள் சங்கம் குற்றச்சா‌ற்று

அட. இப்போதான் கண்டு பிடிச்சிருக்காங்கையா.
_________________________________________________