Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, May 22, 2011

பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..

மதிப்பிற்குரிய கலஞ்ஜர் அவர்களுக்கு,

    கலஞ்ஜர் என்பது உங்களைக் கிண்டல் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல. கட்சி கட்சி என்று கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் உங்களைப் பாசமுடன் அழைக்கும் சாமானியத் தொண்டனால் அப்படித்தான் அழைக்கப்படுகிறீர்கள். வெள்ளிக்கிழமை உங்களை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது வருத்தத்தை விட கோபம் மேலோங்கியது. இன்று உங்கள் வழக்கமான பாணி சுய கேள்வி பதிலைப் படித்ததும் உங்களுக்கு வேண்டியதுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்த புகழ்பெற்ற பராசக்தி வசனத்திலிருந்தே இரு வரிகளைக் கடனாக எடுத்துக் கொள்கிறேன், இதற்கும் காசு எதிர்பார்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு.

    //உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். //

    ஓட்டுப் போடும் வயது வரும் முன்னரே ‘சூரியன் சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா ஓட்டு’ என்று நாலு தெரு சுத்தி, நடுமுதுகில் அடிவாங்கி ஒரு வேளை சோறு மறுக்கப்பட்டவன். உங்கள் ‘இதயத்தைத் தந்திடண்ணாவை’க் கேட்டுக் கேட்டு அழுதவன். திமுக படிப்பகத்தில் கலைந்து கிடக்கும் பத்திரிகைகளை அடுக்கி வைத்துக் காத்தவன். உங்கள் அரைநாள் உண்ணாவிரதம், மற்றும் காங்கிரசுக்கு கட்சியை தாரை வார்த்த கொடுமைகளைச் சகிக்காமல் கடந்த இரண்டு தேர்தல் தவிர திமுகவுக்கே ஓட்டளித்தவன். எல்லாவற்றையும் விட குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரை உள்ள தர்பைப் புல் சம்மந்தமுடைய பார்ப்பான்.

    நெஞ்சுக்கு நீதி ஐந்து பாகங்கள் எழுதிவிட்டேன். இது அடுத்த பாகத்துக்கான முன்னுரை அல்லது ‘மன ஓலம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏப்ரல் 27க்குப் பிறகு நீங்கள் எழுதவேண்டியதெல்லாம் ‘நெஞ்சுக்கு அநீதி’ என்பதை எப்போதாவது உணராமல் இருந்திருக்கமாட்டீர்கள். இந்த நிலையிலும் உங்கள் தோல்விக்கு வேறெதுவும் காரணமில்லை, தேர்தல் கமிஷன் எனும் பிரம்மராட்சச பூதமே என்பீர்களேயானால், உங்கள் நெஞ்சுக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி உழைத்த தொண்டனுக்குமே அநீதி செய்கிறீர்கள்.

    //பதினான்கு வயதில் ‘பனகல் அரசரைப் படித்து....வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான் தொடும் மாளிகைக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை.//

    இதை எழுதும்போது உதட்டை ஒரு ஓரமாக சுழித்து குறும்புத்தனமாக சிரிப்பீர்களே அது ஏனோ கவனத்துக்கு வந்து தொலைகிறது. இது அரசியல் வியாதியின் பாலபாடமல்லவா? டாஸ்மாக் சரக்கில் மட்டையான நிலையிலும் கூட உங்கள் விசுவாசத் தொண்டனாயினும் இதற்கு என்ன பதில் வரும் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என நம்ப முடியவில்லை.

    //அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டுகாலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டுகாலம் ஆட்சிக்கு முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் எதுவுமே சம்பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு //

இப்படி ஒரு கேள்வி எழுப்பி புளுகத் துணிவில்லை; சம்பாதித்தேன் என்று சொல்லி அதற்காக திரைப்படங்களில் சம்பாதித்ததாக ஒரு கணக்குக் கொடுத்தீர்கள் பாருங்கள், அட அட!! இப்போது கூட உங்களுக்காக கூவி ஒடுங்கிப் போன வடிவேலுவின் ‘இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது’ என்ற வசனம் கவனம் வரவில்லையா?

பொருளாளராக இருப்பதற்கும், தலைவராக இருப்பதற்கும் கூடவா தனித்தனியாக கட்சியில் இருந்து சம்பளம் தருகிறார்கள்?

‘தாய் சேய் நலவிடுதி’ கட்டினீர்கள் சரி. பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்பு விழா நடத்தினீர்கள் சரி. இந்தத் தராசில் வைத்துப் பார்த்தால் இதைவிட பன்மடங்கு செலவிட்டு நூற்றுக் கணக்கில் தொழிற்கல்விக் கல்லூரிகள் கட்டியவர்கள் பெரிய தியாகிகள். அந்த முதலீடுகள் மக்களுக்காகவே.

அதென்ன தலைவரே 1940களில் வாங்கிய சம்பளத்துக்கு அப்புறம் 2004-2005க்கு போய்விட்டீர்கள்? சரி உங்கள் சம்பாத்தியம், உங்கள் கணக்கு. ஒரு பேச்சுக்கு 1940முதல் 2003 வரை உங்கள் வருமானமும், உங்களைச் சார்ந்தவர் வருமானமும் எவ்வளவு என்று சொல்ல முடியுமா? நிஜமாக சொல்லுங்கள், கடன் வாங்கிப் படம் எடுப்பவன் அல்ல சொந்தப் பணம் சுரண்டல் பணமேயானாலும், பெண் சிங்கத்துக்கும், இளைஞனுக்கும் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்ட பணம் தகுமா?

//கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள் உயிரினும் மேலான உடன் பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். //

அருமை அருமை தலைவரே. ஆம் ஆயிரம் ஆயிரம்தான். கூடவே கட்சிக்கு ஒரு துரும்பும் சம்பந்தமற்ற குடும்பம் கிள்ளியெடுத்த கோடிகளை ஒப்பிட முடியுமா?

//ஈழத் தமிழர் நிவாரணத்துக்காக நிதி திரட்டப்பட்டபோது சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை//

இதயம் இனிக்கிறது. கண்கள் பனிக்கிறது. கூடவே குமட்டிக் கொண்டும் வருகிறது.

இந்தக் காலகட்டங்களில் கதை எழுதியே இத்தனை சம்பாதித்தேன் என்றால், அதிலும் கொடுத்தது போக இவ்வளவு இருக்கிறதென்றால் ஆச்சி மனோரமா பாதி தமிழ்நாட்டை வாங்கியிருக்கலாம். குதிரையில் விட்டார். குடித்து அழித்தார் என்றெல்லாம் கூட சொல்ல முடியாது.

அந்தக் கணக்கை வடிவேலு மாதிரி அப்படியே திருப்பிச் சொல்லு என்றால் உங்களாலும் சொல்ல முடியாது எனத் தெரியும்.

//என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள//

அதெப்புடிங்க எசமான் வருமானம்னு வரும்போது மட்டும் உங்கள் சம்பாத்தியமும், உங்கள் கொடைத்திறனும் மட்டும் சொல்வீர்கள். ஊழல் என்று வரும்போது, தோல்வி என்று வரும்போது மட்டும் குடும்பம் வந்து சேர்ந்து கொள்ளும். ஒன்று வஞ்சம் தீர்க்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். அல்லது ஒரு தனிமனிதனாக கட்சியை இழுக்காமல் அந்த ஊழலுக்கு சப்பை கட்டுவதோ எதிர்ப்பதோ செய்யுங்கள்.

நேற்று ஒரு தோழர் பட்டாசு வெடித்தவர்கள் சாதிவாரி கணக்கெடுத்தாற்போல் சொன்ன கருத்தை ஒரு நேர்மையான உடன் பிறப்புடன் வருத்தத்துடன் சுட்டியபோது தெரியவில்லை. இன்று உங்கள் ‘தர்பைப் புல்’ புலம்பலைப் பார்த்ததும் புரிந்தது. தலைவன் எவ்வழி? தொண்டன் அவ்வழி!!.

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே வசதிக்கு பதில் எழுதும் வித்தகர் நீங்கள். முடிந்தால் இந்தக் கேள்விகளையும் நீங்களே எழுதி பதில் சொல்லுங்களேன்.

1) எத்தனை வருடமாக மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்? ஏன்? அணியச் சொன்னவர் ‘தர்பையை’த் தொடாதவரா?
2. பிரார்த்தனை என்று உங்கள் குடும்பத்தார் ஏன் தர்பைக் கோவிலுக்கே போகிறார்கள்? ஒரு சொள்ள மாடனுக்கோ, அய்யனாருக்கோ பொங்கல் வைத்ததாகவோ, கெடா வெட்டோ பத்திரிகையில் வரவில்லையே?
3. இன்னும் என்ன தர்ப்பை எழவு. நீங்கள் தோற்கும்போதெல்லாம் அடிப்பதற்கு என்றே இருக்கிறதே பார்ப்பன இனம். அதன் பாலான உங்கள் காழ்ப்பு உங்கள் சொந்த வெறுப்பா கட்சியின் கொள்கையா? அப்படியானால் திமுகவில் பார்ப்பனர்களுக்கு அடிப்படை உறுப்பினராகக் கூட சேரும் உரிமையில்லை. இதுவரை கட்சிக்காக உழைத்த பார்ப்பனர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். தேர்தலில் பார்ப்பனர்களின் ஓட்டுத் தேவையில்லை எனச் சொல்ல என்ன கஷ்டம்?
4. சொந்தக் கருத்தே எனினும், உங்கள் வைத்தியத் தேவைக்கோ, வக்கீல் தேவைக்கோ, உங்கள் குடும்பத்தினரின் பிஸினஸ் தொடர்பு கூட பார்ப்பனர் அல்லாதவரோடு மட்டுமே என்று சொல்ல முடியுமா?
5. அட குறைந்தபட்சம் பார்ப்பனத் தலைவர் அல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டு என்றாவது சொல்லுவீர்களா?

ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

உண்மையாகவே நீங்கள் வேண்டிப் பெற்ற அண்ணாவின் இதயத்துக்கு மதிப்பிருந்தால், கோடானு கோடி தொண்டர்களை நினைத்தாவது கட்சித் தலைமையை ஸ்டாலினிடம் ஒப்படைத்து ஒதுங்கி இருங்கள். பேராசிரியர் போன்ற ஒரு சிலரின் வழிநடத்தலில் தி.மு.க. தழைக்கும். இல்லையேல் உங்களுக்கு நம்பிக்கையான ஒரு தர்ப்பையைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்சிக்கு எள்ளும் தண்ணியும்  விடுங்கள்.


இப்படிக்கு
இத்தனை காலம் உங்களுக்கு வாக்களித்த ஒரு தர்ப்பை.

Friday, March 25, 2011

தேர்தல் 2011 - ஒரு சமூக அக்கறைப் பதிவு.

தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் குறித்தான ஊகங்கள், சரி, தப்பு, சொம்பு, ஜமுக்காளம், அரசமரம் எல்லாம் அயற்சி தருவனவாயிருக்கின்றன. ‘தம்பி! டீ இன்னும் வரலை’ ரேஞ்சுக்கு சொன்னாலும் யாரும் டி.வி. தரப்போறதில்லை என்ற வருத்தம் ஒரு புறம். மகள் படிப்பு முடியறதுக்குள்ள காண்ட்ராக்ட் போட்டு லேப்டாப்பாவது வருமா என்ற ஏக்கம் ஒரு புறம். ‘அரை நாள் உண்ணாவிரதம்’, அந்தர் பல்டி ‘தனி ஈழம்’ எல்லாம் கடந்து முதலில் ஹிந்துவை ஒழித்தாலும், ஓசிப்பேப்பருக்கு ஒட்டக் காத்திருந்த காலமும், அரசியல் தவிர்த்து ‘சதக்! சதக்! என்று கத்தியால் குத்தினான், கணியூரைச் சேர்ந்தவர் பேபி, வயது 63, அழகி’ போன்ற முக்கியமான தகவல்களின் ஈர்ப்பினாலும் ‘தினத்தந்தி’ மட்டும் தொடர்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் அரசியல் பதிவிடாவிட்டால், கும்மிப் பதிவர், சமூக சிந்தனையற்றப் பதிவர் போன்ற அவச்சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதாலும், யார் ஜெயித்து வந்தாலும் தேர்தல் குறித்து ஒரு இடுகையாவது இட்டவர்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு சலுகை என்ற அறிவிப்பு வருமேயானால் ‘வட போச்சே’ என்று சொல்லாமல் தவிர்ப்பதற்காகவும் ஒரு இடுகை போட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் கொள்ளலாம்.

முதல் முதலான தேர்தல் அனுபவம் வருடம் நினைவு கொள்ளத் தக்கதல்ல. விக்கியில் தேடி தேதி போடும் அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் அல்ல. கஞ்சி போட்டு கத்தி விரைப்பாக இஸ்திரி செய்த டவுஜர், அது நழுவி விடாமல் பட்டி, கோழிக் கூடு மார்பும், பாக்கட்டில் ரெண்டு கையும் சொருகியபடி படி தாண்டா பாலகனாக இருந்த நாட்களில், சினிமா நோட்டீசுக்கு மட்டுமே வரும் செனாயும், மேளமும் முழங்க ஒரு 30 பேர் சூழ கை கூப்பியபடி வரும் வேட்பாளர், அதற்கு முன்னால் வினியோகிக்கப் படும் நோட்டீசு (கப்பல்,கத்திக்கப்பல், பறக்கும் கப்பல், இங்க் பாட்டில், ராக்கெட்டு செய்ய உதவும். ரஃப் நோட்டில் கிழித்தாலும் டங்குவார் அறுந்துடும்) இவற்றையும் தாண்டி

பாட்டம் அறுக்கப்பட்ட கெரஸின் அளக்கும் பாத்திரம் போன்ற ஒன்றை வாயில் வைத்து ‘காளைச் சின்னத்தப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு!’ , ‘நமது சின்னம் காளைச் சின்னம்’ போன்ற கலை நயமிக்க பாடல்களால் ஈர்க்கப் பட்டு பராக் பார்த்த காலத்தில் ஆரம்பிக்கிறது கொசுவத்தி.

அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியபோது மக்கிய அரிசி, நாத்த அரிசிகளால் கடுப்புண்ட காலத்தில் உணவுப் பஞ்சத்தால் விவசாயிகள் வயல் எலிகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கேட்ட கேள்விக்கு ‘எலியில் ப்ரோட்டீன் அதிகம்’ என்று நக்கலாய் பதில் சொன்னதற்காக சி. சுப்பிரமணியம் கழகக் கண்மணிகளிடம் நாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் விட இன்னும் தமாஷாக

‘பக்த வத்சலக் குரங்கே! பதவிய விட்டு எறங்கே’
‘காமராஜர் அண்ணாச்சி! காப்பி வெல என்னாச்சி’
’பூவராகன் அண்ணாச்சி! பூவா துன்னு நாளாச்சி’
’வெற்றி எங்கள் லட்சியம்! படி அரிசி நிச்சயம்!’
‘நமது சின்னம் சூரியச் சின்னம்’

என்று குதித்து குதித்துக் கத்திக் கொண்டு போவதும், எம்.ஜி.ஆர். வரார் ஓட்டுக் கேட்க புரளியும், கழகக் கண்மணிகளின்பால் ஈர்ப்புக்கு காரணமாயிற்று. முக்கியமாக ‘ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.’ என்று தமிழ் வளர்த்த பாங்கும் ஒரு காரணம்.

தேர்தல் என்றால் எதிர்ப்பார்ப்பு அதிகமானதற்குக் காரணங்கள் வேறு. கலர்க் கொடிகள் கிடைக்கும். சில நேரம் துணிக் கொடியும் கூட. அங்கங்கே வைக்கப் பட்டிருக்கும் தண்ணீர்ப் பந்தலில் தாக சாந்தி செய்துக் கொள்ளும் போது, ஓய்விலிருக்கும் மெகா ஃபோனில் ’ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.வும், நமது சின்னம் காளைச்சின்னம்’ கத்த ஒரு வாய்ப்பு.

ஆவினுக்கு முன்னால் தமிழ்நாடு பால் வள நிறுவனத்தின் அலுவலகம் வேப்பேரி வெடரினரி காலேஜுக்கு முன்னால் இருந்த ஒரு இத்துப் போன கட்டிடத்தில் இயங்கியது. அங்குதான் போய் பால்கார்ட் வாங்க வேண்டும். ஒரு ரூபாய் 5 காசுக்கு அரை லிட்டர் டோண்ட் மில்க், அதையும் வாங்கிய கையோடு குலுக்கிய படியே வந்தால், திரளும் வெண்ணையை ஸ்பூன் பிடியில் வழித்துச் சேர்த்தால் ஒரு வாரத்தில் அடுத்த வாரத்துக்கான நெய்யும், நெய் காய்ச்சிய வாணலியில் கேசரியும் போனஸ். அதற்காக அயனாவரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் வேப்பேரிக்கு போகத்தான் வேண்டும்.

பஸ்ஸில் போனால் பத்தும் பத்தும் 20 பைசா போய்விடும் என்பதால், பொடிநடையாக போய் வரலாம். தேர்தல் காலங்களில் வெயிலோ, நடந்த களைப்போ இராது. காரணம் சுவரெங்கும் நக்கலும் நையாண்டியுமாக கரியில் வரைந்த கார்ட்டூன் படங்கள். பாவம், வாலில்லாத பக்தவத்சலத்தைப் பார்க்கவே முடியாது. பதிலுக்கு அண்ணாவை தொப்பையும், பீரங்கி மூக்குமாக காங்கிரஸ்காரர்கள் வரைந்திருப்பார்கள். முண்டாசு கட்டியபடி மூணு எலியைக் கையில் பிடித்தபடி ‘இன்னைக்கு எங்கூட்ல விருந்து’ என இளிக்கும் சி.சு., ‘கஞ்சிக்கு வழியில்லங்கேன். இவன் காப்பிக்கு வெலை கேக்குதாண்ணேன்’ என்ற காமராசரும், செய்திகளை காமெடியாக்கி, தேர்தல் அறிக்கையை நக்கலடித்து சுவர் நிறைத்திருக்கும் கார்ட்டூன்கள்.

முக்கியமானது படிப்பகங்கள். தெருவுக்கு தெரு பத்தடிக்குப் பத்தடி எதிரும் புதிருமாக பந்தல் போட்டு காங்கிரஸ் பதிப்பகங்கள் (சுதேசமித்திரன், தினமணி, நவசக்தி) திமுக(தினத்தந்தி, முரசொலி, விடுதலை, நாத்திகம், மாலை முரசு) கம்யூனிஸ்டு (ஜனசக்தி, சோவியத் யூனியன், ஸ்புத்னிக்) இப்படி ஓசிப் பேப்பர் படிக்க எங்கே கிடைக்கும் வாய்ப்பு? நம்ம ஸ்பீடுக்கு படிக்க முடியாமல், காஆஆஆம ராஆஆஆஆஆசர்..... இன்ன்ன்ன்ன்ன்ன்ன்று.....கட கட கட கடக்கரையில் (ற் எப்புடி சொல்றதுன்னு குழப்பம்) என்று கூட்டிப் படிக்கும் கடுப்புப் பேர்வழியும், ஒரு வரி செய்தியைப் படித்துவிட்டு அதற்கு ஒன்னரை மணி நேரம் பேப்பரையும் தராமல் தோழரிடம் விவாதிக்கும் பன்னாடையையும் பொறுத்து பேப்பர் படிக்கும் சுகமே சுகம்.

கணக்குக் கேட்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க ஆரம்பித்த புதிதில் நாத்திகம் பத்திரிகையில் அவர் குறித்த கட்டுரையும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் ‘சரோஜாதேவி’ இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தது. கம்யூனிஸ்ட் தொண்டர்களின் சைக்கிள் ஊர்வலத்தை காப்பியடித்து, கழகத்தின் சைக்கிள் ஊர்வல பிரம்மாண்டமும், அதில் செய்யும் சர்க்கஸ் வேலைகளும் பெரிய ஈர்ப்பு தந்தது. டாப்பில்லாத ஜீப்பில் புகுந்து கை கூப்பியபடி வரும் கலாச்சாரமும் அப்போதுதான் பார்த்த கவனம்.

தேர்தல் நாளில் அப்பாவுடனும், அம்மாவுடனுமாய் எந்த வரிசை முன்னால் போகிறதோ அங்கு ஓடி ஓட்டுப்போட்ட பிறகு, க்யூவில் நிற்கும் தோழனுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக ‘டேய்! எங்கம்மா காங்கிரசுக்கு போட்டாங்கடா. எங்கப்பா சூரியனுக்கு குத்தினாருடா’ என்றலறி முடிக்கும் முன் நடு முதுகில் விழும் பேயறையும், பேயறைந்தார் போல் அவர்களின் முகமும் அப்போது புரிந்ததில்லை.

ரேடியோ, டி.வி. கட்சிப் பத்திரிகை, கட்சி சேனல் என்றான பிறகு இந்த சுகமெல்லாம் போயே போச்சு. இதுல என்னாத்த தேர்தலைப் பத்தி சொல்றது. ஆட்டோ வரும்னு பயப்படுறதா, உன் மூஞ்சிக்கு ஆட்டோ வேறையான்னு கிண்டலுக்கு பயப்படுறதா? எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி.
 

Saturday, December 4, 2010

நறுக்னு நாலு வார்த்த V5.5

போர்க்குற்றவாளி ஒருவர் தப்பிவிட்டார்: பிரிட்டிஸ் டெஸ்லி காடியன். 

மத்தவைங்கள புடிச்சி தொங்க விட்டாச்சு. ஒருத்தருதான் சிக்கலையாம். போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாமல் தோற்றிய பரீட்சைத் தாள் முன்கூட்டியே வெளியானது: அப்பன் ஆட்சியில் மகன் தப்புத்தாளம். 

ஒரு ஜனாதிபதி மகன் கேள்வித்தாளை முன்னாடியே பார்த்து கஷ்ட்ட்ட்டப்பட்டு எழுதியிருக்கே. அந்த நேர்மையப் பாராட்டுங்கப்பா. லெக்ச்சரர விட்டு எழுதச் சொல்லைலைல்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் சுயாதீன விசாரணைக்குட்படுத்த வேண்டும்: அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

இதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம். பதிலுக்கு அவனும் கேப்பான்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல் 

அப்பப்ப உசிரோடதான் இருக்கோம்னு காட்டிக்க இது ஒரு பொழப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரித்தானிய இலங்கை தூதுவராலயத்தில் மகிந்த தஞ்சம் - ஈழத்தமிழர்கள் முற்றுகை

இப்பவாச்சும் இந்தக் கொடுமை எப்படின்னு உணர்ந்திருப்பானா நாதாரி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலைஞர் வீட்டு வசதி திட்டம்: மதுரையில் மு.க.அழகிரி தொடங்கி வைக்கிறார்

கலைஞர் வீட்டு வசதி எவ்வளவுன்னு  குத்து மதிப்பான்னாலும் எல்லாருக்குமே தெரியுமே. திரும்பவும் அடுத்த ரவுண்டா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை, திருச்செந்தூர் கோயிலில் எடியூரப்பா வழிபாடு

ஆஹா! நேர்த்திக்கடன் ரவுண்டு ஆரம்பிச்சிடுச்சா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயலலிதாவுக்கு ஊழல் பற்றி பேச தகுதி உண்டா? பொன்முடி கேள்வி

அதானே. அதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சு வேணாம்? உங்க லெவலுக்கு முடியுமாங்கோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியதே நாங்கள் தான்: கலைஞர்

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா. நாளைக்கு 3 வேளை பேரைச் சொல்லிகிட்டா வயிறு நிரம்பிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்

அதானே! வாங்கினப்ப வாய் பார்த்துட்டிருந்துட்டு குடுக்குறப்ப தடுக்குறது கேவலமாயில்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அருண்ஷோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? திருமாவளவன் ஆவேசம்! 

‘குடுக்கப் போற சீட்டுக்கு மேல கூவறாண்டாங்கொய்யாலே’ன்னு ராசாவே சிரிப்பாருங்ணா!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஜக ஊழல்களை மக்கள் மறக்கவில்லை: காங்.

பரதேசிங்களா! பத்து ரூபாயை கீழ போட்டுட்டு காசு விழுந்துடுச்சின்னு காட்டி பையில இருக்கிற காசுக்கு ஆட்டய போடுறவன மாதிரியே பொழப்பாப் போச்சடா உங்களுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விவாதம் நடத்த தயார்: பிரணாப் முகர்ஜி

ம்கும். நீங்க பேசி, அது மத்தவனுக்கு புரிஞ்சி விவாதம் வேற நடந்துடுமோ? தூங்கிடுவானுங்கன்னு தில்லு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குஜராத் கலவரம்: நரேந்திர மோடி மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையாம்!

ராஜபிச்சகூட இப்புடித்தான் சொல்றான். ஆமா ஆமான்னு சொல்றாய்ங்கல்ல காங்கிரசு..பாஜக மட்டும் எளப்பமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போர்க்குற்றம் தொடர்பான வீடியோ:ஐநா அதிர்ச்சி

தாயத்து கட்டுங்கப்பா. ஜன்னி கண்டுடப் போகுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும்: வனிதா

பாவம்யா. ஏதோ சீரியல் டயலாக்க சொல்லிட்டுது போல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அப்படின்னா கல்விக் கட்டணத்தைக் கண்டுக்கப்பிடாது, ச்செரியா# பள்ளி வைத்து கொள்ளையடிப்போர் சங்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, April 17, 2010

டமிலன் என்றொரு இனமுண்டு

மீண்டும் ஒரு முறை (இரு?) டமிலன் என (ப்+எ)ருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். (சொரணையத்துப் போனப்புறம் ‘ப்’ ஒரு கேடா). வந்தாரை வால வைக்கும் டமிலகம் இனி டமிலனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடாவென மார்பிலல்ல மண்டையில் அடித்துக் கொள்ளலாம். செந்டமில் மாநாட்டில் ‘குடுத்த காசுக்கு மேலயே கூவுறாண்டா கொய்யா’ என்ற சொற்றொடருக்கு தகுந்த மதிப்பளித்து அரசின் தலையாய கொள்கையாக அறிவித்தலும் வேண்டும்.

என்னமோ கள்ளத்தோணி, கள்ள ரயில், லாரியில் வந்தாற்போல் மத்திய அரசு கொடுத்த விசா இருந்தும், உடல் நலமற்ற ஒரு மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், டமிலனின் செஞ்சோற்றுக்கடன் செம்மையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இதற்கொரு விழாவும் எடுக்கலாம். 

சற்றும் எதிர்பாரமல் திடீரென நடந்த ஒரு விடயமாயிருக்க முடியாது. குறைந்த பட்சம், இங்கு வந்தால் விசா இருந்தாலும் அனுமதிக்க முடியாத சூழ்நிலை என்று விளக்கியிருந்தாலாவது அலைச்சலாவாது அந்த மூதாட்டிக்கு இல்லாமல்  இருந்திருக்கும். 

மருத்துவத் தேவைக்கு என்று வந்தவரை திருப்பி அனுப்பி டமிலரின் பண்பாட்டை நன்றாகவே  காப்பாற்றிவிட்டோம். மனதிருந்தால் மார்க்கமில்லாமலா போயிருக்கும்?

ஒரு வேளை முதல்வர் அறியாமல், அல்லது அவரை மீறிய செயெலெனில் இந்த ஒரு மனிதாபிமான செயலுக்காவது அனைவரையும் ஒன்று திரட்டி தமிழீன்ற தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தலாம். செந்தமிழுக்குமே கூட.

அடுத்ததாக டமிலரின் பண்பாடான பதிவிரதை சர்டிஃபிகேட். கூடிய விரைவில் அரசு பதிவிரதை சர்டிஃபிகேட் கட்டாயமாக்கலாம். பகுத்தறிவு, சுயமரியாதை மண்ணாங்கட்டி எல்லாம் ஒன்றுமே கிடையாது. பதிவிரதைக்கான கையேடு வழங்கும் விழா வெகு விரைவில் நடைபெறக் கூடும். இனி டமில் பெண்கள், காலையில் கணவனின் பாதத்தைக் கும்பிட்டு, பாத பூஜை செய்து, எச்சில் தட்டில் சாப்பிட்டு, டாஸ்மார்க் சரக்கு கலந்து கொடுத்து பதிவிரதை சர்டிஃபிகேட் வைத்திருக்க வேண்டும். (பதி டிக்கட் வாங்கின கேசுக்குன்னு யார்பா நக்கலடிக்கிறது?)

டமில் நாட்டில் பெண்களுக்கு எவ்வளவு உயரிய மரியாதை வழங்கப் பட்டிருக்கிறது, ஈனம் மான காவலரால். குறைந்த பட்சம் நண்பர் நண்பர் என்று தேவைப்படும்போது சொல்லிக் கொண்டதற்காவது இறந்தவரைத் தரக்குறைவாகப் பேசாமல் இருந்திருக்கலாம். 

ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்’

வயது முதிர்ந்த ஒருவர், ஒரு இனத்தின் காவலன் எனக் கூறப்படும் ஒருவர், ஒரு முதல்வர், தேவையேயில்லாமல் ஒரு பெண்ணை இப்படிப் பேசுவது டமிலனின் சிறப்பில்லாமல் வேறென்ன? டமில்நாட்டில்தான்  இது நடக்கும்.

விரைவில் என் தலைவன் சொல்லட்டும்டி நீ பதிவிரதைன்னு என்று டாஸ்மாக் ஏற்றிக் கொண்டு உதைத்தால் போலீசுக்கு கூட போகமுடியாது என்னும் நிலை வரலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~