Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, October 19, 2010

பாராக் கதைகள் - நம்பிக்கை

கலியாணத்துக்கே உண்டான கலகலப்புடன் இருந்தது அந்த மண்டபம். சிரிப்பும்,பேச்சுமாய் மகிழ்ச்சியான சூழல் மாறி மெது மெதுவே கிசு கிசுப்பும் அமைதியும் படரத் தொடங்கியது. ஆசீர்வாதத்துக்கு கொண்டுவந்த தாலியைக் காணவில்லை. தேடலுக்கும் வேண்டுகோளுக்குப் பிறகும் கிடைக்காததால் எல்லாரையும் பரிசோதிப்பது என்று முடிவானது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தவரை அழைத்தபோது

‘யோவ்! என்னைப் பார்த்தா வரிசையில நிக்கச் சொல்ற. உன் ஜூஜூபி தாலி எனக்கு எதுக்குய்யா. நான் யார் தெரியுமா? ......... டெக்ஸ்டைல்ஸ் ஓனர்’ என்றார்.

மெதுவான புன்சிரிப்புடன் அந்த இளைஞன்

‘உங்களுக்கு தெரியாததா முதலாளி. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆஃபீசரானாலும் சரி, உங்களை மாதிரி பெரிய வியாபாரியானாலும் சரி, எங்களை மாதிரி அன்னாடங்காச்சியா இருந்தாலும் சரி, கையில வேற பை இருந்தா புடுங்கி வச்சிகிட்டு டோக்கன் குடுத்துதானே உங்க கடைக்குள்ள அனுப்பறீங்க? எங்கள வச்சி பிழைக்கிற நீங்களே எங்களை நம்ப மாட்டிங்கறீஙளேன்னு நாங்க கேக்குறமா? சந்தேகத்துக்கு முன்னாடி முதலாளி என்ன கூலிக்காரன் என்னங்க? வாங்க செக் பண்ணனும் என்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~

நகரத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் மேல்மாடி தனி ஸ்யூட்டில் மதுவருந்தியபடி அமர்ந்திருந்தனர் ஆளும்கட்சி, எதிர்கட்சித் தலைவரும், அந்த மிகப் பெரிய தொழிலதிபரும். சமீபத்தில் லைசன்சுக்கு விட்ட கல்குவாரியில் கொஞ்சம் வைரமும் கிடைப்பதால் மூச்சுக்காட்டாமல் ஆட்டையைப் போட பேரம் முடிந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் தலைவரே! என்னைக்குனாச்சும் ஜனங்களுக்கு ரோசம் வந்து, உங்களை நம்பித் தேர்ந்தெடுக்குறோம். எங்களுக்காடா துரோகம் பண்றீங்கன்னு பொங்கிட்டா நம்ம கதி..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என்று சிரித்தது எதிர்கட்சி.

‘அடப் போய்யா! முதல் தேர்தல்ல இருந்து இன்னைவரைக்கும் நம்மள நம்பித் தேர்ந்தெடுக்குறவன நாம நம்பாம விரல்ல மை தடவித்தானே அனுப்புறோம். அதுக்கே ரோஷம் வரலை. இதுக்கெல்லாமா ரோஷப்படுவானுங்க. அடுத்த ரவுண்டு ஊத்துய்யா’ என்று சிரித்தது ஆளும்கட்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

அலுவலகத்திலிருந்து வந்து ப்ரீஃப் கேஸ் ஒரு புறம், ஷூ சாக்ஸ் மறுபுறம் என்று வீசிவிட்டு அமர்ந்தான் ராஜு. கடும் கோபத்திலிருப்பதை அறிந்த அவன் மனைவி அமைதியாக டீ கொண்டு வந்து வைத்துவிட்டு அமர்ந்தாள்.

‘சே! எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ஆனந்துக்கும். ஒரு அவசரத்துக்கு இருவத்தஞ்சாயிரம் கேட்டால், நம்பிக்கையில்லாம ப்ரோநோட் எழுதி கையெழுத்து கேக்குறான். இவனெல்லாம் நண்பனா?’ என்று வெடித்தான் ராஜு.

‘விடுங்க! நான் உங்க மனைவிதானே. உங்களை நம்பி வாழ வந்தவள்தானே. நீங்க கூடத்தான் வாராவாரம் செலவுக்கு என்ன வேணுமோ கொடுத்துட்டு கப்போர்டைப் பூட்டி சாவியை கொண்டு போறீங்க. எதிர்பாராத செலவுக்கு காசு கேட்டா அன்னைக்குதானே முன்னூறு கொடுத்தேன். என்ன செலவுன்னு கணக்கு கேக்குறீங்க. நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, October 17, 2010

ராஜி-2


பூக்களைச் சீராகக் கட்டிமுடித்த ராஜி, கோமதியை அழைத்தாள்.

‘மச மசன்னு நிக்காம எல்லாரையும் கிளம்பச் சொல்லுடி. வண்டி சொல்லியிருந்ததெல்லாம் வந்தாச்சோ? முருகன கூப்புடு. சாமானெல்லாம் ஏத்தி வைக்கச் சொல்லு. அசமஞ்சமாட்டம் அவன் பண்ணுவான்னு இருக்காம, ஒருத்தர் லிஸ்ட் எழுதுங்கோ’

உத்தரவுகள் உட்கார்ந்த இடத்திலிருந்து பறந்தன. பல முறை பார்த்ததுதான். ஆனாலும் விசுவுக்கு பிரமிப்பாகவும், புதுமையாகவும் இருந்தது. பண்டிகையோ, சாதாரண விருந்தாளியோ, கல்யாணமோ யாருக்கும் கவலையில்லை. ராஜி சொல்வதைச் செய்தால் போதும். கனகச்சிதமாக குறைவின்றி நிறைவேறும்.

ஒரு வழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு கிளம்பினார்கள். மண்டபத்துக்கு வந்து சேர்ந்ததும் சிரித்த முகத்துடன் சூழ்ந்து கொண்டனர் பெண்வீட்டார். பார்த்து இறங்குங்கோ பாட்டி என்று கார் கதவைத் திறக்க வந்தார் பெண்ணின் தாயார்.

‘ஏண்டிம்மா! கோலத்துக்கு செம்மண் பூச வேண்டாமோ? காண்ட்ராக்டுக்கு குடுத்தேளா?’ என்றாள் ராஜி.

‘மன்னிச்சிக்கோங்கோ பாட்டி. இதோ!’ என்று அடுத்த சில நொடிகளில் செம்மண் பூசியான பிறகு, ‘ஹாரத்தி எடுத்து அவாளையெல்லாம் அழைச்சிண்டு போடிம்மா!’ என்றாள் ராஜி.

கடைசியாக இறங்கி மண்டபத்தைச் சுற்றிவந்தாள். மேடையில் கோலம் சின்னது, அது இதுவென சிறு சிறு குறைகளைச் சுட்டியபடி சுற்றிவந்தாள். ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த விசுவுக்கு புதிதாய் இருந்தது. ஒரு ரவுண்டு அடித்து முடித்து

‘என்னடா பார்க்கிறாய்!’ என்றபடி அருகில் இருந்த நாற்காலியில் கூனோடு அமர்ந்தாள் ராஜி.

‘இல்லை ராஜி! சம்பந்தி ஜம்பம் பிரமாதமா பண்றியே! இதெல்லாம் நோக்கு எப்படி முடியறதுன்னு பார்க்கிறேன்’ என்றார் விசு.

‘பாட்டி! நானே காஃபி போட்டு கொண்டு வந்திருக்கேன் தனியா உங்களுக்காக. எடுத்துக்கணும்’ என்று பவ்யமாய் வந்து நின்ற பெண்ணின் தாயாரிடம் ஒன்றும் பேசாமல் காஃபியை வாங்கிக் குடித்தாள். என்ன வருமோ என்ற கலவரம் முகத்தில் தெரிந்தது பெண்ணின் அம்மாவுக்கு. ஒன்றும் சொல்லாமல் காஃபியைக் குடித்தபிறகு டம்ப்ளரைக் கொடுத்தவளிடம்

‘பாட்டி! ராத்திரிக்கு பலகாரமா? என்ன வேணும் சொல்லுங்கோ. ஆத்தில பண்ணி கொண்டு வந்துடறேன்’ என்றாள்.

‘ரண்டு வாழைப்பழம் போறும். நோக்கு தலைக்கு மேல வேலையிருக்கும். அவசரம், மறந்துபோச்சின்னு சொல்லாம குறையில்லாம பண்ணும்மா. போ!, என்றாள் ராஜி.

தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூமுக்குப் போய் ஒவ்வொன்றாய்ச் சரிபார்த்து, மெதுவாய் சமையற்கட்டுக்குப் போனாள். ராஜியைப் பார்த்ததும் ஓடிவந்தார் சமையல்காரர்.

‘பாட்டிக்கு ராத்திரிக்கு என்ன வேணும். பூவாட்டம் இட்லி, உப்புமா, கேசரி என்ன வேணுமோ சொல்லுங்கோ’ என்றார்.

‘ஒன்னும் வேணாண்டாப்பா. அது ஆச்சு கொள்ளைகாலம். ராத்திரி ரண்டு வாழைப்பழம்தான். சும்மா பார்க்கவந்தேன். சமையல் அருமையா இருக்கணும். பார்த்துக்கோ. மனசு வச்சி பண்ணா நன்னா வரும்’ என்று நகர்ந்தாள்.

‘நீங்கதான் மாப்பிள்ளையோட பாட்டியா?’ என்று கேட்டபடி வந்தாள் ஒரு பெண்மணி.

‘கொள்ளுப்பாட்டி. நீ யாரும்மா?’ என்றாள் ராஜி.

‘கல்யாண பொண்ணோட ஒன்னுவிட்ட அத்தை முறை மாமி! எங்கண்ணா கெட்டிக்காரன். நல்ல இடமாத்தான் பார்த்திருக்கான் பொண்ணுக்கு. அவனுக்கு ஒரு தங்கையிருக்கா. அவளுக்கு காயத்ரியை அவ பிள்ளைக்கு பண்ணிக்கணும்னு ஆசை.  என்னதான் தங்கைன்னாலும், முறைப்பையன்னு பொண்ணைத் தள்ளி விடமுடியாயிதில்லையா. சின்ன வயசுல இருந்தே அவனுக்குதான் அவள்னு பேசிண்டத வச்சிண்டு தன் பிள்ளைக்குத்தான் குடுக்கணும்னு சண்டையெல்லாம் போட்டா முடியுமா? அந்தப் பையனும் காயு காயுன்னு காயத்ரி மேல அன்பா இருப்பான். எங்க போனாலும் ஒன்னாத்தான் போயிண்டு வருவா. பசங்க ஆசைப்படறதுன்னு பண்ணிட முடியுமோ. பொண்ணைப் பெத்தவன்னு கடமையிருக்காயில்லையா. அவள் சண்டை போட்டுண்டு போய்ட்டா. கலியாணத்துக்கு கூட வரலை. ரெண்டு மூணு வரன் பார்த்து அப்புறம் அவாளுக்கு விஷயம் தெரிஞ்சி வேணாம்னுட்டா.’

‘என் பிள்ளை பேங்க்ல ஆஃபிசராயிருக்கான். கை நிறைய சம்பளம். ஜாதகம் நன்னா பொருந்தியிருந்தது. ஒறவுல வேணாங்கான்னு சொன்னா புரிஞ்சிக்கணுமா இல்லையா. பைத்தியம் மாதிரி ஒறவே வேண்டாம்னு போயும், அவளாலதான் கல்யாணம் தடையாறதுன்னு அண்ணாக்கு கோவம். என்னமோ, நீங்க நல்ல மனுஷாளா இருக்கக் கொண்டு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கறது. காயு ரொம்ப அதிர்ஷ்டசாலி. அப்புறம் வந்து...வந்து..ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு சொல்லிட்டேன். யாருக்கும் இதெல்லாம் நான் சொன்னேன்னு தெரிய வேண்டாம். நான் வரேன் பாட்டி’ என்று போனாள்.

மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பிக்க சுரத்தில்லாமல் அமர்ந்திருந்த ராஜியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் விசு.

‘என்னக்கா? டல்லாருக்க. உடம்பு முடியலையா. ராத்திரி ஆத்துக்கு போய்க்கலாமா. கார்த்தால கிளம்பி வந்தாப் போச்சு’ என்றார்.

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கொஞ்சம் அசதி. அவ்வளவுதான். நீங்கள்ளாம் சாப்பிடப் போங்கோ. நான் ரூம்ல போய் கொஞ்சம் கட்டையைச் சாய்க்கிறேன்’ என்று போனாள்.

சாப்பாட்டுக் களேபரமெல்லாம் முடிந்து, அறையிலும் ஹாலிலுமாய் கிடைத்த இடத்தில் அவரவர் படுத்திருந்தனர். அரவமடங்கி மெதுவாக பெண்ணின் பெற்றோர் வந்தார்கள். புரண்டு புரண்டு படுத்தபடியிருந்த ராஜியிடம் மெதுவாக வந்து அமர்ந்தாள் பெண்ணின் தாயார்.

‘தூங்கலையா பாட்டி?’ என்றாள்

‘ம்ம்! புது இடம்னா தூக்கம் பிடிக்காதுடியம்மா. நீ தூங்கு போ’ என்றவளிடம் தயங்கித் தயங்கி ‘பாட்டி, ஒரு நிமிஷம் தனியா வரேளா. அவர் ஏதோ பேசணுமாம்’ என்றாள்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் ராஜி.

‘வரச்சொல்லும்மா. தனியா என்ன? எதுவானாலும் தெளிவா பேசிட்டா கஷ்டமில்லை. விசு! க்ருஷ்ணாவை கூட்டிண்டு வா’ என்று கணீரென்று வந்த குரலுக்கு படுத்திருந்தவர்கள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தனர்.

பதறியபடி வந்த பெண்ணின் தந்தையிடம், காயத்ரியையும் கூப்பிடுங்கோ என்றாள் ராஜி.

காய்த்ரியும், க்ருஷ்ணாவும் வந்து சேர ‘ம். இப்போ சொல்லுங்கோ. என்ன சொல்லணும்?’ என்றாள்

பாவமாக தொண்டையடைக்க ‘மாமி. மறைக்கணும்னு இல்லை. என் தங்கைக்கு தன் பிள்ளைக்கு காயத்ரியைப் பண்ணிக்கணும்னு ஆசை. நான் வெளி சம்பந்தம் பார்க்கறது அவளுக்கு பிடிக்கலை. ரெண்டு மூணு இடம் பெண்ணைப் பார்த்துட்டு போய் என்னாச்சோ பதிலே சொல்லலை. எப்படியோ என் தங்கைதான் காரணம்னு தெரியவந்தது. தெய்வாதீனமா, இந்தச் சம்பந்தம் தடையில்லாம நடந்தது. அவளுக்குச் சொல்லலை. நான் முன்னாடியே உங்களுக்கும் சொல்லியிருக்கணும். தயவுபண்ணி, மாப்பிள்ளை அழைப்பெல்லாம் ஆற வரைக்கும் காத்துண்டிருந்து சொல்றான்னு நினைக்க வேண்டாம்....’

பேசவிடாமல் கை உயர்த்தி நிறுத்தினாள் ராஜி. ’

‘இதெல்லாம் சொல்ல வேண்டாம். வாழப்போறவள் அவள். அவள் விருப்பத்துக்கு மாறா உங்க அந்தஸ்து, இதர லௌகீகம்னு வேற மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணேளா? என்றாள்.

‘அவளுக்கே அதில் விருப்பமில்லை பாட்டி. நீங்களே அவளைக் கேட்டுக்கலாம்’ என்று சொல்வதற்குள் பொங்கிவந்தது அழுகை.

ராஜி, க்ருஷ்ணாவைப் பார்த்தாள்.

க்ருஷ்ணா ‘ராஜி! கார்த்தால ஆறுக்கு முகூர்த்தம். அந்தப் புகைல சும்மாவே கண்ணுல தண்ணியா கொட்டும். தூங்கலைன்னா இன்னும் கஷ்டம். நான் தூங்கப் போகட்டுமா?’ என்றான்.

ராஜி, காயத்ரியைப் பார்த்தாள். கடுகடுவென்று நின்றுக் கொண்டிருந்தவள் ‘இப்ப என்ன பாட்டி? எனக்கு உங்க பேரனைத்தான் பிடிச்சிருக்கு. எனக்கு வாழ்க்கை குடுங்கோன்னு நாங்கள்ளாம் உங்க கால்ல விழணுமா? அப்படி எதிர்பார்த்தா சாரி! எனக்கு அப்படி ஒரு கலியாணம் அவசியமில்லை..’

படபடவென பொறிந்து தள்ளியவளை ’காயத்ரி! என்னம்மா இது’ என்று பதறியபடி தடுக்கப் பாய்ந்தார் பெண்ணின் அப்பா.

ராஜி ‘நீ சும்மா இருப்பா. நான் பேசிக்கறேன் அவள் கிட்டே. இங்க பாரு காயத்ரி. ஒரு வேளை அப்படி கண்ணைக் கசக்கிண்டு அழுதிருந்தா என்ன ஆயிருக்குமோ தெரியாது. இப்போ நீ பேசின பாரு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நான் எங்கப்பாட்ட பேசின மாதிரி இருக்கு. ப்ச்! என்ன! கொஞ்சம் அனாவசியமா வார்த்தையைக் கொட்டுற. என் பேரனைப் பார்த்தியோ! கார்த்தால ஆறு மணிக்கு முகூர்த்தம்னு எவ்ளோ தீர்மானமா சொன்னான். அவன் என் பேரன்!’ என்று சிரித்தாள்.

‘அப்போ நான் மட்டும் யாராம்?’ என்றாள் காயத்ரி

‘இப்படி பேசறவ எதுக்கு ஊரைக் கூட்டணும்னு அதுக்கும் கத்தாதே. இதை மறைச்சு வச்சு என்னாகப் போறது. சில நல்ல ஜென்மங்கள் இதை புரளி கிளப்பிண்டு, வந்திருக்கறவா வாய்க்கு அவல் கொடுத்துண்டிருக்கும் மெல்ல. இப்போ அதுக்கு வேலையில்லை பாரு. சம்மந்தி! சும்மா பொம்மனாட்டியாட்டம் அழாம போய் தூங்கும். கார்த்தால வேணப்பட்ட வேலையிருக்கு’ என்றாள் ராஜி.

‘ராஜி! நீ மடின்னு யாரையும் தொடவிடமாட்டியா? எனக்கு இப்போ உன்னை இறுக்கிக் கட்டிக்கணும்னு இருக்கே. சாரி! கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். அப்புறம் நீ குளிச்சி திரும்ப மடியாகிப்பியாம் என்ன?’ என்று இறுகக் கட்டிக் கொண்டாள் காயத்ரி.

‘மட்டு மரியாதையில்லாத கழுதை. சொல்லச் சொல்லக் கட்டினுடுத்து. ஆத்துக்கு வாடி! அந்தக் கையை முறிக்கிறேன்’ என்று பதிலுக்கு இறுகக் கட்டிக் கொண்டு சிரித்த ராஜியில், பல வருஷங்களுக்கு முன் சிரிப்பும் துள்ளலுமாய் பாண்டியாடிய ராஜி தெரிந்தாள் விசுவுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, October 14, 2010

ராஜி -1


ஹாலில் நட்டநடுவில் சாய்மானமின்றி ஒரு கால் மேல் மற்றொரு காலிட்டு அமர்ந்திருந்தாள் ராஜி அத்தை. பெண்களுக்கு மாத்திரமேயான வரமது. நழுவும் முக்காட்டை முன்னுக்கு இழுத்துவிட்டபடி, ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மல்லி மொட்டுக்களைத் தொடுத்து சரமாக்கிக் கொண்டிருந்தாள். இரண்டிரண்டாக தலையும் வாலுமாய் மொட்டடுக்கி சுற்றிச் சுற்றி நாலு ஜோடி வைத்து, பொட்டல நூலால் ரெண்டு எட்டு போட்டிழுத்தால் ஒரு மொட்டு உதிராது. அதெப்படி கணக்குத் தெரியுமோ, சீராக முக்காலடிக்கு ஒன்று என்று பதினைந்துக்கும் மேல் கட்டி அடுக்கியிருந்தாள்.

கலகலவென்றிருந்தது வீடு. ராஜியின் தம்பி விசுவின் பேரனுக்கு கலியாணம். பக்கத்தில் சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விசு


‘பூக்காரனண்ட சொல்லி வாங்கியிருக்கலாமேக்கா. இடுப்பொடிய எதுக்கு நீ உட்கார்ந்து பண்ணிண்டிருக்க? போதும்! இத்தன பொம்மநாட்டிக இருக்கா. ஆரானா வராளா ஒத்தாசைக்கு. கோமுவை கூப்பிட்டு மிச்சத்தைக் கட்டச் சொல்லு’ என்றார்.

‘அசடு மாதிரி பேசாதே கோந்தை.ஆசை ஆசையா வச்சிண்டு, அழகாருக்கா அத்தை? தாங்க்ஸ்னு சந்தோஷமா காமிச்சிட்டு போற சந்தோஷத்துக்கு முன்னாடி, இதெல்லாம் கஷ்டமாடா? மாத்ரையெல்லாம் எடுத்து வச்சிண்டியோ? சலவக்காரனண்ட குடுத்து விசிறி மடிப்பா அங்கவஸ்த்ரம் இஸ்திரி பண்ணி வச்சிருந்தேன். மறக்காம எடுத்துக்கோ. நாளைக்கு சபையில ஜம்முன்னு ராஜா மாதிரி அதப் போட்டுண்டு உக்காந்திருக்கறப்போ நேக்கு அப்பா தெரியணும்’ என்றபடி தொடர்ந்தாள்.

வாஞ்சையாய்ச் சிரித்த விசுவின் மனது ஒரு கணம் பிரமித்தது. எப்படி முடிகிறது இவளால், இத்தனை காலம் சென்றும் அப்பாவை நேசிக்க? வீம்பைத் தவிர அந்த மனிதரிடம் என்ன இருந்தது? ஒரு வேளை அந்த மனிதர் மற்றவர்களைப் போலிருந்தால் அக்கா இப்படி இருந்திருக்க வேண்டாமோ? தொடர்ச்சியாக வந்து விழுந்த எண்ணங்கள் அயர்ச்சியைத் தர, ரிமோட்டை எடுத்து டி.வி.யை அணைத்து நினைவில் முழுகிப் போனார்.

ராஜிக்கு பத்து வயசு. விசுவுக்கு ஏழு. உலகமே அக்காதான். மற்ற பிள்ளைகள் கோலி, கிட்டிப் புள்,பம்பரம் என்று விளையாட விசு அக்கா மற்றும் தோழிகளோடு பாண்டியும், பல்லாங்குழியும் ஆடுவான். அதிகாலையில், அப்பா சந்தியாவந்தனம் முடித்து, கணேரென்ற குரலில் ருத்ரம் சமகம என்று பூஜையறையில் சொல்லிக் கொண்டிருக்க, ஹாலில், சுருதிப்பெட்டி அடித்தபடி, அக்கா கீதம் வர்ணம் என்று சாதகம் செய்வதை பார்த்தபடியிருப்பான்.

‘ஆம்பளைப் பிள்ளையா லட்சணமா, அப்பாவோட ஸ்லோகம் சொல்லத் தோண்றதா பாரு. அக்கா அக்கான்னு அவ பாவாடையை பிடிச்சுண்டு அலையறது. மூணு நாலு வருஷத்தில அவ புக்காம் போனாத்தான் இது உருப்படும்’ என்று பெருமையாய் சலித்தபடி போகும் அம்மாவின் வார்த்தைக்கு அர்த்தம் சீக்கிரமே புரிந்தது.

‘மாசிப் பூணூல் பாசிப் படரும்பாளே,  விசுவுக்கும் ஏழு வயசு.
ஆச்சு ராஜி கல்யாணத்தோட பூணூல் போட்டுட்டா என் கடமை முடிஞ்சது’ என்று ஒரு நாள் மதிய தூக்கம் முடிந்து எழுந்து, பூணூல் திரித்தபடி திண்ணையில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் பகீரென்றானது விசுவுக்கு.

கொல்லையில், பசுமாட்டுக்கு புல் போட்டு, தொழுவத்தைக் கூட்டிக் கொண்டிருந்த ராஜியிடம் ஓடி வந்தான்.

‘ராஜி! நோக்கு கல்யாணமா? நேக்கு பூணூலா? அப்பா சொல்லிண்டிருக்காளே. அப்போ ஸ்கூல் போமுடியாதாடி? நீ அத்திம்பேராத்துக்கு போய்டுவியாம். நான் வேத பாடசாலைக்குப் போணுமாம். அம்பி சொல்றான். நீ போகாதே ராஜி. நாம படிக்கலாம் ராஜி’ என்று உதடு விம்ம நின்றதை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லி இப்போதும் சிரிப்பாள் ராஜி.

கனவு போல் இருக்கும் விசுவுக்கு இப்போதும். திப்பிராஜபுரத்திலிருந்து யார் யாரோ வருவதும் போவதுமாய் இருந்து ஒரு நாள் ராஜி துளசி மாடத்தின் பின் ரகசியமாய் விசுவின் கை பிடித்து அழுதாள்.

‘விசு! நேக்கு கலியாணமாம். நீ என் கூட வந்துடுவியோன்னோ. நான் அம்மாட்ட கேக்கறேன். அப்பா அம்மாவோடதான் இருப்பேன்னா உன்னோட டூ’ என்று அழுதாள்.

கிராமமாதலால் சுற்றி சுற்றி அக்ரஹாரத்தில் உறவுகள் வீட்டில் தினமும் பொங்கியிடுவதிலும், விருந்து கேளிக்கையிலும் திருமணநாளும் பூணூலும் வந்தேவிட்டது. கலியாணம் முடிந்து, 13 வயது அனந்தராமன் ‘டீ ராஜி! நான் எங்காத்துக்கு போய்ட்டு வரேன். விசு! தீர்த்தம் கொண்டு வாடா என்றபோது கோவம் வந்தது. வேண்டா வெறுப்பாய் கொண்டு வந்தபோது, வருஷப் பிறப்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அக்கா வெட்கப்பட்டுக் கொண்டு ம்... ம்... என்று தலையாட்டிக் கொண்டு ரொம்ப அழகாய் இருந்தாள்.

எல்லாரும் கிளம்பிப் போய் வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது. அடுத்த நாள் பள்ளிக்குக் கிளம்பியபோது விழுந்தது இடி. ராஜி! நீ ஸ்கூலுக்கு போவேண்டாம். விசு நீ கிளம்பு என்றாள் அம்மா!

‘அக்கா வரலைன்னா நானும் போமாட்டேன்’ என்றவனின் முதுகில் பளாரென அறை விழுந்தது.

’அவளுக்கு கலியாணமாயிடுத்து. நீ அடுத்த வருஷம் வேத பாடசாலைக்கு போகணும். அதுக்குள்ள ரெண்டு அட்சரம் கத்துக்கோ’ என்று தரதரவென இழுத்துப் போய், சுப்ரமணியம் வாத்தியாரிடம் ஒப்படைத்தாள் அம்மா.

வாழ்க்கை சுவாரசியமற்றுப் போனது விசுவுக்கு. திடீரென ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் கூட்டமும், பெண்டுகள் அழுதுகொண்டே போவதுமாய் இருந்தது. ஓடிப்போய் பார்த்தான். அப்பா திண்ணையில் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பையை திண்ணையில் எறிந்துவிட்டு ஓடினான் விசு. 



‘ஒன்ன மோசம் பண்ணிட்டு போய்ட்டானேடி, அல்பாயுசுல. பொண்ணாறதுக்குள்ள வைதவ்யம் வாய்க்குமாடி நோக்கு’ என்று ஆளாளுக்கு கட்டிப் பிடித்து அழுகையில் மலங்க மலங்க உட்கார்ந்திருந்த ராஜி மனசுக்குள் உறைந்து போனாள்.

‘அம்மா! வேண்டாம்மா, என் ஜடைம்மா’ என்று அழுதவளை கட்டிக் கொண்டு கதறக் கதற மொட்டையும், காவியுமாய் மூலையில் முடக்கியபோது அப்பா பிடிக்காமல் போனார். ஆவணிஅவிட்டத்துக்கு வேத பாட சாலைக்குப் போவதாக அப்பா சொன்னதைச் சொல்லி ராஜியிடம் அழுதான் விசு.

‘நீ படிடா! நன்னாப் படி. நான் இருக்கேன் நோக்கு. டாக்டருக்குப் படிடா’ என்றாள் ராஜி

அப்பாவிடம் போனாள். கோந்தைய வேத பாடசாலைக்கு அனுப்ப வேணாம். அவன் டாக்டருக்குப் படிக்கப் போறான் என்றாள். ராஜியில்லை அவள். ராஜியின் குரலல்ல அது. அப்பாவிடம் தொண்டையே வராது அவளுக்கு. வெண்கலக் குரலில் அவள் சொன்ன உறுதியில் உறைந்து போனார் அப்பா. அன்று இரவு ராஜியைக் கட்டிக் கொண்டு அழுதாள் அம்மா.

அப்பாவுடனான பேச்சு என்பதே குறைந்து போனது ராஜிக்கு. அக்காவின் வாக்கைச் சிரமேற்கொண்டு படித்து டாக்டரானான் விசு. என்னவானால் என்ன? ராஜிக்கு கோந்தை அவந்தான். படிப்பு முடிந்து வீடு திரும்பி,

‘ராஜி! நீதான் ஹெல்ப் பண்ணனும் ராஜி. மேல் படிப்புக்கு லண்டன்ல இடம் கிடைச்சிருக்கு ராஜி. அப்பா ஒத்துக்க மாட்டார். எப்படியாவது ஒத்துக்க வைக்கணும் ராஜி. உன்னைத்தான் நம்பியிருக்கேன்’ என்றான்.

‘நீ ஆகவேண்டியதைப் பார். நான் பேசறேன் அப்பாவிடம்’ என்றவள் மீண்டும் வென்றாள்.

‘நாசமாப் போச்சு குடும்பம். கால காலமா வேத சம்ரக்ஷணை பண்ண குடும்பம் என்னோட போயுடுத்து. பண்ண பாவம் போறாதுன்னு கடல் தாண்டி வேற போயாகணுமாம். நான்னாருக்கு பொம்மனாட்டி ராஜ்ய பாரம்’ என்று எகிறினார் அப்பா.

’அவன் படிச்சிட்டு வரட்டும். ஒங்க வேதத்துல அதுக்கும் பரிகாரம் இருக்கு பார்த்து வைங்கோ’ என்று நிறுத்தி நிதானமாக உறுதியாய்ச் சொன்னாள்.

‘நேக்கு அவன் கொள்ளி போடப்பிடாது. எக்கேடு கெட்டுப் போகட்டும்’ என்றார். அம்மா முந்தானையால் முகத்தை மூடியபடி அழுதாள்.

‘நேக்கு? நேக்கு யாருப்பா போடுவா? நோக்கு பிள்ளை கொள்ளிப் போடப்படாதுன்னு  பிடிவாதமா சொல்ல முடியறது. நேக்கு யாரு கொள்ளி போடணும்னு நீ சொல்ல முடியுமாப்பா? தோ! சந்தியாவந்தனம் பண்ண ஆத்துக்கு போனான் என் ஆம்படையான். வெள்ளம் கொண்டு போயிடுத்து. யாரு போட்டா கொள்ளி. தேகம் கூட கிடைக்கல. இத்தன வருஷம் வேத சம்ரக்ஷணைல த்வேஷம்தான் கத்துண்டதுன்னா, அந்த வேதம் நாசமா போகட்டும்.  ஆம்பளப் பையனா பொறந்துட்டான். இல்லைன்னா என்ன மாதிரி ஒரு மொட்டச்சியா வீட்டோட இருக்கலாம்பா. விதிச்ச வரைக்கும் வீடு, இல்லைன்னா வீதின்னு. அவன் படிக்கப் போறான் அவ்வளவுதான்’ என்றாள்.

அன்றோடு பேச்சு அறுந்ததோடன்றி ஆசைப்படியே விசு கொள்ளி வைக்க முடியாத படிக்கு, அவன் படிப்பு முடியுமுன்னரே போய்ச் சேர்ந்தார். படிப்பு முடிந்து திரும்பி, சென்னையில் ப்ராக்டிஸ் ஆரம்பித்தான் விசு. அன்று வந்தவள்தான் ராஜி. இன்று வரை அவளின் ராஜ்ஜியம்தான். அவளைச் சுற்றியேதான் இந்தக் குடும்பம். என்றைக்காவது அவள் கொஞ்ச நேரம் சுணங்கியிருந்தால் வீடு சகிக்காது. அன்பால் கட்டியிருந்தாள் அனைவரையும். இதோ, விசுவின் பேரன் க்ருஷ்ணாவுக்கு கலியாணமும் அவள் டைரக்‌ஷனில்தான்.

தொடரும்...

Tuesday, October 5, 2010

நாமார்க்கும் குடியல்லோம்...

"செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்”
அந்த மார்கழிமாத ஒடுக்கும் குளிரிலும் பிசிறின்றி வெள்ளி மணியாய் ஒலிக்கிறது கோப்பெருந்தேவியின் குரல். அவளுக்கேயான பிரத்தியேக நேரம் அது. கண்ணனோடு மனதால் குறை சொல்லி, வாயால் பாடி ஆரத்தி எடுத்து சேவித்து எழுந்தாளானால், திரும்ப மாலை விளக்கேற்றும் வரை அவள் கடமைகளே அவளுக்கு ஆராதனை. ஒரு விரல் நுனி வெண்ணையும், பாலும் நைவேத்தியம் காட்டி, ஹாரத்தி எடுத்து, வணங்கி முடித்த பின் பூஜை மண்டபத்தில் எல்லாவற்றையும் சீராக்கி அடுக்களை புகுந்தாள்.

காஃபிக்கு வெந்நீர் வைத்தபடி, சன்னக் குரலில் ‘ஜகத்தோத்தாரண ஆடிசிதள யசோதா’ தவழத் துவங்கியது. மெல்லிய மயிலிறகால் வருடினாற்போல் சேஷனுக்கு உறக்கம் கலைந்தது. காதுக்குள் ரம்மியமாக வந்து கண்ணன் மனசை நிரப்பினான். உள்ளங்கையால் கண்களை வருடி, உள்ளங்கையில் பார்த்து க்ருஷ்ண க்ருஷ்ண என்று மெதுவே எழுந்து பாயைச் சுருட்டி வைத்தார். துண்டோடு, பாத்ரூமில் நுழைந்தாரென்றால் பல் விளக்கி, காலைக் கடன் முடித்து, குளித்து வெளியே வந்து, மடியுடுத்தி, திருமண் சாத்தி,  சந்தியாவந்தனம் முடிக்கவும், கோப்பு எனும் கோப்பெருந்தேவியின் கைப்பாகத்தில் மணக்க மணக்க  காஃபி தயாராயிருக்கும்.

கோப்புக்கு என்னமோ மனதில் குறை இன்னைக்கு என்று அநிச்சையாக உணர்ந்தார் சேஷன். இன்று ரொம்பவும் குழைந்து கண்ணனைச் சீராட்டிக் கொண்டிருக்கிறாள் பாட்டில் என்ற நினைப்பு தோன்றியது. அடுக்கடுக்காய் குழைவாய் வகை வகையாய் கண்ணனைப் பாடப் பாட, ஜபம் செய்ய விடாமல் மனது கொஞ்சம் அலைக்கழிந்தது. பாட்டென்றால் கொள்ளைப் பிரியம் கோப்புவுக்கு. மாமனாரிடம், மெட்ராஸில் அவளுக்குப் பாட்டுச் சொல்லித்தர ஏற்பாடு செய்வதாய் கொடுத்த வாக்குறுதியும், இரண்டாவது மாதமே கோப்பு பிள்ளையுண்டானதில் அது குறித்து மறந்தே போனதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், எப்போதாவது ஓய்ந்திருக்கையில், ‘கோப்பு! ஜயதி ஜயதி பாரதமாதா பாடுடீ’ என்று கேட்டு, சிலிர்த்து, கண்ணோரம் கசியவிருக்கும் நீரை அடக்கி,  ‘மாமாக்கு உனக்கு பாட்டு கத்து குடுக்கறேன்னு வாக்கு குடுத்தேனேடி. பண்ண முடியலையே. குறையோடயே போய் சேர்ந்திருப்பார். இப்போ கத்துக்கறயா சொல்லு, விசாரிக்கட்டுமா?’ என்பார்.

‘நன்னாருக்குன்னா! கெடக்கறதெல்லம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மணையில வைன்னு இப்போ போய் பாட்டு கத்துக்கறதாம். ஆச்சு, நப்பின்னைக்கு ஆறு வயசாயிடும் இந்த அப்பசிக்கு. விஜய தசமிக்கு அவள சேர்த்துவிட்டு ஒங்க ஆசைப்படி அவளுக்கு சொல்லிக் கொடுங்கோ’ என்று எழுந்து போவாள். ஏனோ இன்று இவையெல்லாம் கவனம் வந்து ஜபம் செய்யவிடாமல் கோப்புவின் பாடல் மனதைப் புரட்டிப் போட்டது.

சந்தியாவந்தனம் முடித்து, பஞ்சபாத்திர தண்ணீரை துளசிக்கு வார்த்து, ஸூக்தம் சொல்லி, மந்த்ர புஷ்பம் சொல்லி முடித்து சேவித்து எழுந்தார். பொத்தென்று பேப்பர்க்காரன் வீசிய ஹிந்து ஹாலுக்குள் விழுந்தது.


‘கட்டேல போறவன்! எத்தனவாட்டி சொன்னாலும், க்ரில்லுல சொருக மாட்டான்’ என்றபடி பேப்பரை குனிந்து எடுத்தார். பித்தளை டபரா டம்ப்ளரில் மணக்க மணக்க காஃபியைக் கொண்டு வந்தாள் கோப்பு.

‘மொழக்க மொழக்க ஸ்லோகம் சொல்லி முடிச்சி, இப்படிச் சபிக்கணுமா அந்தப் பையனை. என்ன மனுஷனோ’ என்று நொடித்துக் கொண்டு நப்பின்னைக்கு குரல் கொடுத்தாள்.

மணி ஆறு. ஏழுக்கு கிளம்பினால்தான் ஆஃபீசுக்கு நேரத்துக்கு போகமுடியும். அவள் குளித்த பிறகு அவள் தம்பி ஸ்ரீதரன் ரெடியாக வேண்டும் காலேஜுக்கு. ஒரு கையில் காஃபியும் தரையில் விரித்த பேப்பருமாய் அடுத்த கட்ட தவத்திலிருந்தார் சேஷன். 


‘சனியனே! குளிக்காம தளிகையுள்ளில வராதேன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். புக்காத்தில, பொண்ண வளர்த்திருக்கா பாருன்னு நான்னா சீப்படப் போறேன்’ என்று சலித்துக் கொண்டால் கோப்பு. அதை சட்டை செய்யாமல் கிசு கிசு குரலில்  ‘அப்பாவை கேட்டியாம்மா?’ என்றாள் நப்பின்னை.

‘நீ சித்த ஹாலுக்கு போறியா? காஃபி கொண்டு தரேன். குடிச்சிட்டு குளிக்கிற வழியப்பாரு. நன்னா மாட்டிண்டு முழிக்கிறேன் உங்க ரெண்டு பேருட்டயும்’ என்று சலித்தபடி விரட்டினாள். உர்ரென்று ஹாலுக்கு வந்து உட்கார்ந்த மகளை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘என்ன அவகிட்ட குசுகுசு? என்ன வேணும் நோக்கு?’ என்றார்.

ஒரு கண்ணால் பூஜை மண்டப கண்ணனுக்கு இறைஞ்சி, ‘ஏன்னா!கத்தாதேங்கோ. கோந்த ரொம்ப சிரமப் படறான்னா. வேற என்னன்னாலும் பரவால்லன்னா. பஸ்ல கண்ட காலியும் கயவாளித்தனம் பண்றாம்மா, கூசிப்போறதும்மான்னு அழற குழந்தைகிட்ட, பொறுத்துகோடின்னு அம்மாவா எப்படிச் சொல்றது? அவ ஆஃபீஸ்ல லோன் கிடைக்குமாம்னா. ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறேம்மான்னு கெஞ்சறது குழந்தை. சரின்னு சொல்லுங்கோன்னா’ என்று தயங்கித் தயங்கிச் சொல்லி, மகளைப் பார்த்த பார்வையில், என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்ற கழிவிரக்கம் தெரிந்தது.
 

‘இங்க பாரு கோப்பு, நோக்குதான் லோகம் தெரியாது. இவள் எப்படித்தான் வேலைக்குப் போறாளோ தெரியலை. வண்டி இருந்தா மட்டும், கயவாளிக சும்மா இருக்காங்கறயா. விரட்டிண்டு போறதும், நாய் கத்தறா மாதிரி ஹாரன் வச்சிண்டு பக்கதுல வந்து பயமுறுத்தறதும், எத்தன குழந்தைகள் கீழ விழுந்து அடி பட்டுண்டு, நாராயணா! என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியலைடி.’

‘தோ! எழுந்து விறு விறுன்னு ரெடியாகி, அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்பினா டெர்மினஸ்க்கு போய்ட்டு உக்காந்துண்டு போலாமேடி. பகவானேன்னு வரன் குதிர்ந்து இவள ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தாச்சுன்னா அவன் பாடு அவள் பாடுன்னு, இன்னும் சித்த ஸ்லோகம் சொல்லிப்பேன், எங்கொழந்தைக்கு ஒன்னும் ஆகப்படாதுன்னு.’

‘அவளை மடமடன்னு குளிச்சிட்டு சாட்டு கெளம்பற வழியப்பார்க்கச் சொல்லு’ என்றார்.

சப்தம் கேட்டு விழித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.

‘சார் வாளுக்கு, பைக் வேணுமோ? இப்போ அதானே ஃபேஷன். காலேஜ் சேர்ந்த கையோட புக் வாங்கியாறதோ இல்லையோ பைக் வாங்கியாகணுமே ’ என்றார். 

‘ம்க்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸில சேர்த்துட்டு லேப்டாப் வேணும்னு கேட்டா, மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிக்கிறதுக்கு தினம் ஒரு பிணம் வேணும்னு கேப்பியான்னு கேட்ட மனுஷன்கிட்ட பைக் வேணும்னு கேக்கற அளவுக்கு நானொண்ணும் லூசு இல்லை’, என்று பாத்ரூமுக்குள் நுழைந்தான் ஸ்ரீதர்.

ஹிந்துவை மனது ஒட்டாமல் புரட்டியபடி இருந்தவர், ‘தளிகையாயிடுத்துன்னா! சாப்பிட வரேளா என்றவளிடம் பதில் சொல்லாது, பேப்பரை மடித்து வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். ஆஃபீஸில் இன்று டெண்டர் ஓப்பனிங். பெரிய டெண்டர். இன்னைக்குள் முடிச்சி அனுப்பிடணும். கையில் வைத்திருந்தால், காண்ட்ராக்டர் தொல்லை தாளாது. புதுசா வந்திருக்கிற அதிகாரி வேறு அவ்வளவு சரியில்லை என்று கேள்வி என்று மனதுக்குள் ஆஃபீஸ் வந்து உட்கார்ந்து கொண்டது.
 

ஆஃபீஸ் போய் சேர்ந்து, எல்லாம் தயார் படுத்திக் கொண்டு டெண்டர் பாக்ஸ் அருகே போனார். காத்திருந்த டெண்டரர்களிடம் சீல் உடைபடாமல் இருக்கிறது என்று சாட்சிக் கையெழுத்து வாங்கி, பெட்டியைத் திறந்து, வந்திருந்த டெண்டர்களை அள்ளிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து, முறைப்படி ஒவ்வொன்றாகப் பிரிக்கத் தொடங்கினார். 

முதல் டெண்டரைப் பார்த்ததுமே சலிப்பு வந்தது. நாசமாப் போறவன். இந்த கோபால் ரெட்டிக்கு என்ன தெரியும்னு இந்த டெண்டரை கேக்கறான். ஜல்லி சப்ளை பண்ற கடங்காரனுக்கு ஆப்டிக் ஃபைபர் காண்ட்ராக்ட் எழவு எப்படி முடியும், என்று நினைத்தபடியே, ரேட்டைச் சுழித்து கையொப்பமிட்டபடி வந்தவரின் கண்ணில் அந்தப் பக்கத்தின் அடியில் கையொப்பமிடாதது கண்ணில் பட்டது.

அப்பாடா! தப்பிச்சேன். இல்லைன்னா எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, க்ரெடென்ஷியல் சரியில்லைன்னு எழுதப் போய், பணத்தால் அடிக்கப் பார்ப்பான். மேல இருக்கிறவன் ஒரு வேளை மடிஞ்சிட்டான்னா என் பாடுன்னா திண்டாட்டமாப் போகும். ஆச்சு! இன்னும் ரெண்டு வருஷம் தள்ளியாச்சின்னா, போதுண்டா சாமின்னு ரிடையராயிடலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சு நிலைக்கவில்லை.

சுருட்டு நாத்தமும், வியர்வை நாத்தமுமாய் ஒருத்தன் வந்து, ரெட்டிகாரு கார்ல இருக்குது சார். சார்னு கொஞ்சம் ரம்மன்னாரு சார் என்றான். கண்கள் சிவக்க அடித்தொண்டையில், ரெட்டியில்லை, என்னப்பன் நாராயணனே டெண்டர் போட்டிருந்தாலும், எனக்கு அவன்கிட்ட போக வேண்டிய அவசியமில்லைன்னு போய்ச் சொல்லு என்றார். சற்று நேரத்தில் ரெட்டியே இளித்துக் கொண்டு வந்தான். 


‘பாகுன்னாரா ஸாமி? ஏமண்டி பாப்பக்கு ஒக பண்டி கொனீய குடுது? பஸ்ஸுக்கு ஓடி போய் அந்த கும்பல்ல ஏறி அவஸ்தை பட்டதை பார்த்தேன் காலைல. அல்லாரும் பொறுக்கி பசங்க சாமி. ’

'இண்ட்லோ கம்ப்யூட்டர் கூட லேதுனு கேள்வி பட்டேன். '

'பையன் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் சதுவுத்துன்னாடண்டா. மவுண்ட்ரோடுல ரெட்டி மோட்டார்ஸ் நம்மளதுதான் சாமி.'
'பாப்பாக்கு கூட்டினு போய் ஏ பண்டி காவாலோ செலக்ட் மட்டும் பண்ண சொல்லு.'
'நாளைக்கே டெலிவரி பண்ணிடலாம்.’
‘லேப்டாப் சாயந்திரம் நம்ம மேனேஜர் ஊட்டாண்ட கொண்டு வந்துடுவான்.’

'நீ ஒன்னும் செய்யொத்து சாமி. '

'ஆ, லஞ்சா கொடுக்கு மேனேஜர் சேசின பனி.'
'சரியா பார்க்காம டெண்டர் போட்டுட்டான்.'
'நேத்தே பார்ட்டில உங்க பாஸ் கிட்ட பேசியாச்சி. ஒன் அவர்ல அவர் ரூம்ல இருப்பேன்.'
'நீ ஒன்னும் எழுதாத டெண்டர் ஃபாரம் உள்ள அனுப்பினா போதும் 'என்றான். 

ரெட்டியை கண்ணுக்குள் பார்த்தபடி, ரெட்டி நோக்கு காண்ட்ராக்டும் தெரியலை. காண்டக்டும் சரியில்லை. மரியாதையா எழுந்து போறியா? விஜிலன்ஸுக்கு ஃபோன் பண்ணவா என்றபடி ஃபோனை அருகில் இழுத்தார்.
 

'புத்திலேனி வெதவா!  சம்பளம் தீஸ்கோனி ஏம் பதுகுதாவைய்யா. ச்ச்சாவு போ!'
'ரெட்டி எவரனி நீக்கு சூபிஸ்தானு'
என்று கருவியபடி வெளியே போனான் ரெட்டி. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் டெண்டர் ஃபார்மை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்தார். ஆவணங்களைத் தயார் செய்து, ப்ரோஸீடிங் எழுதி, அதிகாரியின் ரூமுக்கு கொண்டு செல்லும்போது மணி ஒன்றாகி விட்டிருந்தது.  சாரி சார்! லஞ்ச் டைம். லாக் பண்ணி வச்சிட்டு போங்கோ என்று கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.

சேஷனை ஒரு கேலியான பார்வையோடு கடந்தான் ரெட்டி. சற்று நேரத்தில் அதிகாரியும் அவனும் வெளியே கிளம்பினர். ரெண்டரை மணியளவில் இரைதின்ற பாம்புபோல் வீங்கிய வயிற்றைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு அதிகாரியும் ரெட்டியும் மீண்டும் வந்தனர்.

அடுத்த கட்ட வேலையில் மும்முரமாயிருந்த சேஷனை, அதிகாரி அழைப்பதாகப் ப்யூன் வந்து சொன்னான். என்ன எழவெல்லாம் வந்து சேருமோ தெரியலையே க்ருஷ்ணா, என்றபடி அதிகாரியின் அறைக்குச் சென்றார் சேஷன். 

‘என்ன சேஷன் சார்? என்னமோ நீங்க ரொம்ப சின்சியர்னு கேள்வி பட்டிருந்தேன். சார் உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு.'

'ரிடையர் ஆகப் போற நேரத்துல உங்க புத்தி இப்படி கெட்டு போகணுமா சார்?’ ‘நீ ஜல்லி சப்ளை பண்ற ஆளு, உனக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சம்மந்தம்?’

‘எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு எழுதுவேன், க்ரெடென்ஷியல் இல்லைன்னு எழுதுவேன்.’
‘நான் எழுதறதுதான்.’
‘மேல இருக்கற மடப்பயலுக்கு எங்க என்ன பார்க்கணும்னு கூட தெரியாது. பணம் வாங்க மாட்டேன்.’
‘ஒரு ஸ்கூட்டியும் ஒரு லேப்டாப்பும் வாங்கி வீட்டுக்கு அனுப்புன்னு கேட்டிங்களாமே!’  
‘சேஷனாவது அப்படியெல்லாம் கேக்கறதாவதுன்னு திட்டிட்டேன். ’
‘சாப்பிட்டு வந்து, நீங்க குடுத்த பேப்பரை பார்த்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவு கேவலமா நடந்துட்டிருக்கீங்கன்னு.’
‘மொட்டைக் கையெழுத்து போடுவேன்னு நினைச்சீங்களா?’
‘அதெப்புடி சார், கையெழுத்து போட்ட ஒரு டாகுமெண்ட்ல கையெழுத்து இல்லை, செல்லாதுன்னு எழுதி சார் டெண்டரை விட்டுட்டு மத்ததை ரெகமண்ட் பண்ணுவீங்க? ’
‘நான் உங்கள நம்பி கையெழுத்து போட்டிருந்தா என் வேலை போயிருக்குமா இல்லையா?’
‘இங்க பாருங்க, கையெழுத்து இருக்கா இல்லையா?’
‘ஏன் சுழிக்காம விட்டு, கையெழுத்து இல்லைன்னு நோட் எழுதுனீங்க?’

திகைத்துப் போனார் சேஷன். அவர் சர்வீஸில் இப்படி ஒரு ஆளைக் கண்டதில்லை. 

‘புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.'
'போங்க சார். கொண்டு போய் வேற மாத்தி எழுதி கொண்டு வாங்க.'
'இங்க பாருங்க கம்ப்ளெயிண்ட். '
'நீங்க அது சரியில்லை, இது சரியில்லைன்னு எழுதினா, எனக்கு வேற ப்ரூஃபே வேணாம். இந்த கம்ப்ளெயிண்ட்டே போதும். ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும் என்றார். '

நிற்க முடியாமல் உதறியது சேஷனுக்கு. 

'சார்! அதிகாரியாச்சேன்னு பார்க்கிறேன். என் லீவ் சர்வீஸ் இருக்காது உங்களுக்கு.'
'என்னையா மிரட்றீங்க? '
'ஏதோ ஒரு டவுட் வந்துதான், நான் இந்தாளு ஃபார்மை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கேன். இப்போவே விஜிலன்சுக்கு கொடுக்கிறேன். ஆனதைப் பார்த்துக்குங்க' என்றார் சேஷன்.

'சாரி மிஸ்டர் சேஷன். இவ்வளவு மோசமா பிஹேவ் பண்ணுவீங்கன்னு நினைக்கலை.'

'ஐ ஹேவ் நோ அதர் கோ!'
'ஐ ஹேவ் டு ஸஸ்பெண்ட் யூ.'
'நீங்க இப்படியே வீட்டுக்கு போலாம். '
'உங்க டேபிள்ள உங்க பெர்சனல் திங்ஸ் இருந்தாச் சொல்லுங்க, ஐ வில் விட்னஸ் அண்ட் ஹேண்ட் ஓவர் டு யூ.'
'யூ ஷுட் நாட் டச் எனி அஃபிஷியல் டாகுமெண்ட்ஸ். '
'இந்தாங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். '


'உட்கார்ந்து  நிதானமா சார்ஜ் ஷீட் படிச்சி பார்த்து அக்னாலட்ஜ் பண்ணுங்க.' 

'மீன் வைல் ஐல் கெட் யுவர் திங்ஸ்'
என்று வெளியே சென்றவன் ஜெராக்ஸ் காபி ஃபார்மை மட்டும் கொண்டு வந்தான். படிக்கப் படிக்க மயக்கம் வரும் போலிருந்தது சேஷனுக்கு. இத்தனை வருட சர்வீஸில் இப்படி ஒரு பேச்சு வாங்கியதில்லை. அதுவும் நேர்மையாய் இருந்தும் எவ்வளவு கேவலமாக பேசிவிட்டான். லஞ்சப் பேர்வழி என்ற பேர் போதாமல், ப்ளாக் மெயில் செய்ததாக வேறு ஜோடித்தால் என்ன செய்வது?

'ஓக்கே ரெட்டி. ஹியரீஸ் த ஜெராக்ஸ்.'

'உங்க கம்ப்ளெயிண்ட் மட்டும் இருக்கட்டும்.' 
'சாலா தேங்க்ஸண்டி. ஈவினிங் பார்ட்டில மீட் பண்ணுவோம் 'என்றான். ரெட்டி, 


'அய்காரு! இப்புடு சூச்சுகுன்னாவா?'
'செப்பின மாட்ட கேக்க மாட்டய்யா மீரு.'
'ஒக சின்ன தப்பு நடந்து போச்சின்னு வந்து கேட்டா சரினி சொல்லாம இப்புடி அசிங்கப்பட்டு நிக்கறியேய்யா. '
'உன்ன மாதிரி எவ்வளவு பேரை பார்த்திருப்பேன். பொழைக்க தெரிஞ்சிக்க ஸாமி' என்று கிளம்பினான்.


'அட, குடு சார் அந்த சார்ஜ் ஷீட்டை. என்னமோ மினிஸ்டர் கிட்ட இருந்து அப்ரிஸியேஷன் பண்ணி வந்தா மாதிரி இந்த டென்ஷன்லையும் அத படிச்சிக்கிட்டு' என்று வெடுக்கென பறித்துக் கொண்டு நடந்தான்.  

அதிகாரி, 'நீங்க அரை நாள் லீவ் போட்டுட்டு போங்க சேஷன். நான் வேலையை முடிச்சிடுறேன்'என்றார். 

சர்வமும் தளர்ந்து குறுகிப் போய் அமர்ந்திருந்தார் சேஷன். சுற்றி நடப்பதும் இருப்பதும் ஏதுமறியாமல் ஒரு வெறுமை. சம்மந்தமின்றி எங்கிருந்தோ மென்மையாக கோப்புவின் குரலில்  ‘ஜயதி ஜயதி பாரதமாதா’ கேட்டது.
~~~~~~~~~~~~~~~~~~

Sunday, August 8, 2010

இரண்டாம் நிழல் - 6


பாகம் : 6

துப்பாக்கியை பார்த்ததும் கயிறு மேல் நடப்பவன் கால் தவறியதை போல சங்கரப் பெருமாளின் கறுத்த முகம் மேலும் கறுத்து அவசரமாக சுருங்கி விரிந்தது. மூக்கழிந்து முடி உதிர்ந்து கண்கள் வெளித்தள்ளி நாக்கு நீண்ட பேயை நேரே பார்த்தவன் போல அவரது வாய் திறந்து வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டும் அங்கு விலாஸ் புகையிலையும் ஏறிக் கறுத்த அவரது பற்கள் வெளித் தெரிந்தன. இவன் செக்கா சிவலிங்கமா? 

காக்கிச்சட்டையில் இருக்கும் இவன் யார்? எங்கோ தவறு! மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் போலிருக்கிறது. காமம் கொண்ட எருமை போல எண்ணங்கள் ஓட அவரது கைகள் அனிச்சையாக உயர்ந்தன. “லே! மயிராண்டி! பேசிட்ருக்கும் போது என்னலே இது? கோட்டிக்காரப் பயலா இருக்க. நாஞ் சொல்லுதேன், கீழ போடுல அத. பேசிக்கிடலாம். பொசக்கட்ட பய. பொசுக்குன்னு துப்பாக்கிய காட்டுதான். ஒனக்க எவன்ல போலீஸ் வேலைக்கு எடுத்தவன்?”

காற்றில் அதிரும் கொடியைப் போல பிரசன்னா வேகமாக தலையசைத்தான். அவன் கன்னத்து தசைகள் உயர்ந்து கண்கள் விரிந்து இரண்டு கைகளும் இணைந்து துப்பாக்கியை உறுதியாக பிடித்திருந்தன. “ஸாரி ஸார்! என்னை மன்னிச்சிருங்க. நானும் போலீஸ்காரன் தான சார். என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். ரகசியமா வச்சிக்கலாம்னு நீங்க அப்ரூவர் ஆக்குவீங்க. அதை எவனாவது லீக் பண்ணுவான். சென்னை அழகி பயங்கரவாதிகளின் தலைவியான்னு எவனாவது நியூஸ் போடுவான்.

ஊரு ஒலகத்துல எல்லாரும் யோக்யம் மாதிரி இதைப் பத்தியே பேசுவானுங்க. டேபிள்ல‌ ஒக்காந்துக்கிட்டு துப்பறியும் நிருபர்னு ஸ்பெஷல் எடிஷன் கூட கொண்டு வருவானுங்க. ஒங்க பொண்டாட்டிக்கோ பொண்ணுக்கோ இப்படி ஆனா சும்மா இருப்பீங்களா சார்? மாட்டீங்க! ஆனா ஸ்ருஷ்டி உங்களுக்கு யாரோ ஒருத்தி தான். அதனால செய்வீங்க. அப்ரூவர் ஆக்குவீங்க. என்னால முடியாது சார். அவ எனக்கு பொண்டாட்டி இல்லாட்டியும் ஆகப் போறவ. உங்களுக்கு உங்க கேஸ் முக்கியம். எனக்கு என்னோட ஸ்ருஷ்டி முக்கியம். என் பொண்டாட்டிய காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை” சொல்லிவிட்டு சங்கரப் பெருமாளைப் பார்த்துக் கொண்டே பிரசன்னா துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.

ஸ்ஸ்ஸ்ஷ்ஷிக்க்க்க்...நீர் கிழித்து எழும் பெருமீன் போல சைலன்ஸர் வழி வெளியேறிய முதல் குண்டு ஐ.ஜி சங்கரப் பெருமாளின் இடது தோள்பட்டையை துளைத்து வெளியேறியது. அடுத்த குண்டு அவரின் நெற்றியில் பட்டு தலையை ஊடுருவி பின்பக்கம் வெடித்து வெளியேறி சங்கரப் பெருமாள் சாய்ந்திருந்த சுவற்றின் சிமெண்ட்டை பெயர்க்க சங்கரப் பெருமாளின் கை தோள்பட்டையை இறுக்க பிடித்த நிலையில் கண்கள் திறந்திருக்க ஒரு புறமாக சரிந்தார். தலை வெட்டப்பட்ட ஆடு போல‌ உயிரில்லாத அவரது கண்கள் துப்பாக்கியுடன் நின்ற பிரசன்னாவையே பார்த்துக் கொண்டிருக்க, சங்கரப் பெருமாளை சுற்றிலும் ரத்தம் பரவ ஆரம்பித்தது.

=====================

பிரசன்னா துப்பாக்கியை பின்பக்கம் சொருகிக் கொண்டு அதிர்ச்சியில் விழி விரித்து எழுந்து நின்றிருந்த‌ ஸ்ருஷ்டியிடம் வந்தான். சன்னதம் வந்தவளைப் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்க கைகள் முகத்தை இறுக்கி தேய்த்துக் கொண்டிருந்தது. அவனது சூடான கைகள் அவளது கன்னங்களை அழுத்தி தடவியது... “ஸாரிடா...நீ இது பார்த்திருக்க வேண்டாம். சங்கரப் பெருமாளைப் பத்தி உனக்கு தெரியாது. உன்னை விட மாட்டார். ஆனா எனக்கு நீ வேணும். என்னோட ஸ்ருஷ்டி எனக்கு வேணும். அதான்! வேற வழி தெரியலை. நீ கெளம்பு, நான் பாத்துக்கிறேன்.” அவளது தோள்களுக்கிடையில் கை கொடுத்து பிரசன்னா இறுக்கிக் கொண்டான்.

எம்.பி.ஏ. லண்டன் பிஸினஸ் ஸ்கூல். இன்டியாவின் பவர்ஃபுல் சி.ஈ.ஓ. டாட்டா, அம்பானி வரிசையில் ஸ்ருஷ்டி. எத்தனை கனவுகள், பந்தயக்குதிரையின் காலில் கட்டிய கயிறு போல. ஒரே ஒரு சின்ன தவறுக்காக வலையில் மாட்டி, ஒரே இரவில் அத்தனையும் மாறி, பயங்கரவாதிகளின் சென்னை தலைவி! நோ! ஐயம் இன்னசன்ட். சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை.

கரை உடைத்த நதியில் மூழ்கும் போது கடைசியாய் சிக்கிய கிளையை இறுக்குவது போல ஸ்ருஷ்டி அவனை இறுக்கிக் கொண்டாள். எனக்காக எத்தனை பெரிய ரிஸ்க். பாவம் அந்த ஐஜி,அவரை சுட்டிருக்க வேண்டாம். அவளுக்கு ஒரே நேரத்தில் கரை உடைந்த நதி போல காதலும், நண்பனின் முதுகில் குத்தியவன் போல துக்கமும் எழுந்தது “எங்கே? எங்கே போறது? எப்படி பிரசன்னா?”

பிரசன்னா அவளை மேலும் இறுக்கிக் கொண்டான். ஸ்ருஷ்டியின் சூடு அவன் மேல் படர்ந்தது. “நீ உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு மெட்ராஸ் கெளம்பு. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட ஃப்ரண்ட்டை வரச் சொல்லிருக்கேன். பாண்டிச்சேரிக்காரன். அவனுக்கு விஷயம் எதுவும் தெரியாது. அவன் காரில ஏறி நீங்க மெட்ராஸ் போயிடுங்க. யாராவது கேட்டா கும்பகோணம் குல தெய்வம் கோவிலுக்கு ஒரு நேர்த்திக்கடனா போயிட்டு வந்தோம்னு சொல்லுங்க.”

ஸ்ருஷ்டி அவனுடன் அழுந்திக் கொண்டாள். அவளது மூச்சு திணறலுடன் வர‌ மார்பகங்கள் கரை மீது மோதும் அலை போல வேகமாக ஏறி இறங்கியது.“எனக்கு பயமாருக்கு....நீ...நீ எப்படி சமாளிப்ப பிரஸன்னா?”

பிரஸன்னாவின் உதடுகள் அவளது கன்னம் தடவி மூக்கு காது மடலில் உரசியது. அவன் குரல் கடும் போதையான கஞ்சா போல வழுக்கியது. “நான் யோசிச்சிட்டேன். நீ இங்க இருந்தது ஐ.ஜி, எஸ்.ஐ ஜெயராமன் அப்புறம் உங்களை கடத்திய ஒரு இன்ஸ்பெக்டர்  தவிர யாருக்கும் தெரியாது. உன்னோட கார் உன் வீட்லயே நிக்குது. உன்னையும் உங்க அப்பாவையும் சங்கரப் பெருமாள் கார்ல தான் கடத்திருக்காங்க. ஸோ, நீ இங்க இருந்ததுக்கு எந்த எவிடன்ஸும் இல்லை.

கேசு விஷயமா நாங்க பேசிட்டிருந்தப்ப குடிச்சிட்டு சண்டை வந்து எஸ்.ஐ. ஜெயராமன் எல்லாரையும் தாறுமாறா சுட்டுட்டு  பயத்துல அவரும் சூய்ஸைட் பண்ணிக்கிட்டாருன்னு நான் ஐவிட்னஸ் கொடுத்துடறேன். ஐ.ஜி பார்த்துக்கிட்டிருந்த கேஸ் அடுத்து என்கிட்ட தான் வரும். அதை நான் ஹாண்டில் பண்ணிக்கிறேன். அதனால நீ பயப்படாம போ” பிரஸன்னாவின் விரல்கள் ஸ்ருஷ்டியின் கூந்தலில் அளைந்தன.

ஸ்ருஷ்டி அவனைத் தள்ளிவிட்டு பின்வாங்கினாள்.“அப்போ ஜெயராமன்?”

பிரஸன்னா அவளை பார்க்காது முகம் திருப்பிக் கொண்டான்.

“ஆமா! ஜெயராமனையும்! ஸாரி ஸ்ருஷ்டி, எனக்கு வேற வழியே இல்லை. இது அவர் ரிவால்வர் தான்.”

வீட்டின் வெளியே மெல்லிய இருளில் கரையில் ஏறும் முதலை போல‌ அந்த கார் வந்து நின்றதை பார்த்ததும் பிரசன்னா வெளியே வந்தான். ட்ரைவர் சீட்டில் இருந்தவன் காரை விட்டிறங்கி ட்டட்ட்ப் என்ற மெல்லிய சத்தத்துடன் கார் கதவை மூடி விட்டு காரை சுற்றி வந்து பிரசன்னாவிடம் “ஸார்!” என்றான்.

தூக்கமும் குழப்பமும் ஏறிய முகத்துடன் கசங்கிய இலை போல ஸ்ரீதரன் வெளியில் வந்து காரில் ஏறிக் கொள்ள ஸ்ருஷ்டி தொடர்ந்து வந்து பிரசன்னாவை மெல்ல அணைத்துக் கொண்டாள். “எனக்கு பயமாருக்கு பிரசன்னா, எதும் பிரச்சினை வராதுல்ல?”

பிரசன்னா பதில் சொல்லாது இறுக்கிக் கொண்டான். ‘ஸ்ருஷ்டி, நிழல்... அல் கயால்... வெறும் நிழல்... இயக்கம் உன்னைப் போன்றவர்களை உபயோகப்படுத்தும். ஆனால் ஒரு போதும் நம்புவதில்லை. அதனால் தான் உன்னை சுற்றி எப்பொழுதும் நான். நிழலின் நிழல்! இரண்டாம் நிழல்! சங்கரப் பெருமாள் நிழலை பிடிப்பதில் கவனமாக இருந்தாரே தவிர இரண்டாவதாக ஒரு நிழல் இருக்கலாம் என்று அவருக்கு தோன்றவில்லை. சங்கரப் பெருமாளையும் ஜெயராமனையும் உனக்காக கொல்லவில்லை. நிழலை தொட்டு இரண்டாம் நிழலை நெருங்கலாம். நெருங்குபவர்களை அழிப்பது தவிர வேறு வழியில்லை.’

இருள் பிரியாத அந்த அதிகாலையில் மஞ்சளான விளக்கொளியில் ஸ்ருஷ்டியின் நிழல் தரையில் படர்ந்தது. அதை இறுக அணைத்து பிரசன்னாவின் நிழல், இரண்டாம் நிழல்.

=======================================

ஸ்ருஷ்டியையும் ஸ்ரீதரனையும் ஏற்றிக் கொண்டு கார் போய்விட பிரசன்னா கதவை மூடி விட்டு உள்ளே வந்தான். ஸ்ருஷ்டிக்கு எதிரான ஆதாரங்களை மறைக்க வேண்டும். பாண்டிச்சேரிக்கு போயிருக்கும் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் யாரென்று தெரியவில்லை.வரட்டும். அவனுக்கு பாண்டிச்சேரியில் பழைய காதலி. சைல் ஹுட் ஸ்வீட் ஹார்ட். ரொம்ப நல்லதாக போயிற்று. அவள் விவரம் வாங்கி விட்டு அவனது கதையையும் முடித்து விட வேண்டியதுதான். பழைய காதலியை தப்பாக பேசியதில் மூவருக்கும் சண்டை. குடி போதையில் அடித்துக் கொண்டு எஸ்.ஐ. ஜெயராமன் தாறுமாறாக சுட்டதில் ஐ.ஜியும் இன்ஸ்பெக்டரும் பலி. பயத்தில் எஸ்.ஐ. தற்கொலை. நம்ப மாட்டார்கள். பிரசன்னா இடது காலை தூக்கி தொடையைப் பார்த்தான். காலில் சுட்டுக் கொள்ள வேண்டியது தான்.

எழுதப் போகும் ஐ விட்னஸ் ரிப்போர்ட் பிரசன்னாவின் மனதில் வேகமாக ஒடியது. ஸ்ருஷ்டி முக்கியம். நிழல் இல்லாமல் இரண்டாம் நிழல் இல்லை. அவளை வைத்து இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் வெளியே போன அந்த இன்ஸ்பெக்டர் வரும் வரை ஒன்றும் செய்ய முடியாது. காத்திருக்க வேண்டியது தான். யோசித்துக் கொண்டே பிரசன்னா ஃப்ளாஸ்க்கில் மீதி இருந்த காஃபியை ஊற்றிக் கொண்டு சிகரெட்டை பற்ற வைத்தான். ஐ.ஜி. சங்கரப் பெருமாளின் சிகரெட்.

வெளியே மெதுவாக விடிய ஆரம்பிக்க ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் பிரசன்னாவின் நிழல் வளர்ந்து வளர்ந்து சிகரெட் புகை சூழ்ந்த அறை முழுவதும் படர ஆரம்பித்தது.

===================== முற்றும்=================

இன்னைக்கும் கண்டு பிடிங்க மக்கா. நாளைக்கு யாருன்னு பார்ப்பம்.

1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

Saturday, August 7, 2010

இரண்டாம் நிழல் - 5

பாகம் : 5

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஐ.ஜி சங்கரப் பெருமாள் பிரஸன்னா பார்த்ததும் சிரிக்க முயற்சித்தார். நீண்ட நாளான சிகரெட்டால் கறுப்பான பற்கள் லேசாக தெரிந்து இன்னமும் விடியாத அறையின் மெல்லிய இருட்டில் அவரை மேலும் கறுப்பாக காண்பித்தது. இவர் எப்பொழுது வந்தார்? பிரஸன்னா நினைக்கும் போதே ஊருக்கு போனா அங்குலாஸ் பொகையில போடுவார் அவரு பேரே அங்குலாஸ் ஐ.ஜி..வழுவழுப்பான ப்ளாஸ்டிக் பாக்கெட்டில் மஞ்சள் பச்சை நிற லோகோ ஒட்டி உள்ளே அழுக்கான கரும் பழுப்பு நிறத்தில் கசங்கும் புகையிலை. தேவையில்லாமல் அங்குவிலாஸ் புகையிலை பொட்டலம் நினைவுக்கு வந்து போனது. மேலுக்கு ஒரு கசங்கிய சட்டையை போட்டு அழுக்கான லுங்கியை முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டியிருக்க அவரது செருப்பில்லாத கால்கள் நடுவில் வளைந்த உலக்கை போல தரையில் வலுவாக ஊன்றியிருந்தன.

"என்னடே பிரசன்னா...ஒனக்க ஃப்யான்ஸி என்ன சொல்லுதா கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் பிரசன்னாவின் தோளில் கைவைத்து மெலிதாய் விலக்கி விட்டு ஸ்ருஷ்டியிடம் கை நீட்டி உக்காரும்மா" என்றார். விலக்கி நகர்ந்தவரின் வலது பின்னிடுப்பில் துப்பாக்கி துருத்திக் கொண்டிருந்தது.

ஸ்ருஷ்டி அவரை வெறித்துப் பார்த்து விட்டு பிரசன்னாவை பார்த்தாள். பிரசன்னாவின் கண்கள் மன்னிப்பு கேட்பது போல கீழே குனிந்து கொண்டான். ஸ்ருஷ்டி அவனையும் சங்கரப் பெருமாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

இவளுக்க நடவடிக்க பத்தி இவனுக்கு தெரியும்னு பேச விட்டா இவனுக்கு எதுவும் தெரியாது போலருக்கு...செக்குன்னு நினைச்சா பய சிவலிங்கமா இருக்கானே...சங்கரப் பெருமாள் கட்டிலில் உட்கார்ந்திருந்த ஸ்ருஷ்டியை பார்த்துக் கொண்டே பேசினார்.

“என்னம்மா அப்படி பாக்க? இவன் யாரு, இப்படி பேசுதான்னு பாக்கியா? நம்ம மக்க மனுசங்க கிட்ட நம்ம வழக்குல பேசாட்டி என்ன எளவுக்கு நாம பேசுதோம்? வாயில கொஞ்சம் மண்ணள்ளி வச்சிக்கிட்டு பேயாது இருக்கலாமில்லா? நான் பிரசன்னாவுக்கு மேல் ஆபிஸரு, ஐ.ஜி. சங்கரப் பெருமாள்னு சொல்வானுவ. பேப்பர்ல கூட ஃபோட்டாவோட‌ நியூஸ் பாத்திருப்பியே. வேலைக்கு சேர்ந்தன்னிக்கு எடுத்த ஃபோட்டோ. நீ எங்க படிச்சிருப்ப. ஒன்ன பாத்தா இங்கிலீசு பேப்பர் படிக்கிறவா மாதிரில்லா இருக்கு. எந்திரிக்காண்டாம், ஒக்காரு ஒக்காரு.”

எழ ஆரம்பித்த ஸ்ருஷ்டியை ஒற்றை விரலால் உட்கார சைகை காட்டி விட்டு சங்கரப் பெருமாள் வலது காலை மடித்து சுவரில் நன்றாக சாய்ந்து கொண்டு தொடர்ந்தார்...

“ஒன்ன பாத்தா எம்மவ மாதிரி இருக்கு. ஆனா, டூட்டின்னு ஒண்ணு இருக்கில்லா? இப்ப சொல்லுதேன். ஒனக்க மேல எந்த டவுட்டும் இல்ல. ஒண்ணு ஒன்ன மாட்ட வச்சிருக்கானுவ. இல்ல அவனுவ யாருன்னு தெரியாம நீ மாட்டிக்கிட்ட.”

பேசிக் கொண்டே சங்கரப் பெருமாள் கையிலிருந்த கவரை பிரித்தார்.

“இன்னா இந்த போட்டா. இதுல டின்னர் டேபிள்ல ஒக்காந்து இருக்கவ நீ தான நீ? பெரிய எடத்து புள்ளைல்லா? ரொம்ப ஹோட்டல்ல சாப்ட்ருப்ப. மறந்து போயிருக்கும். நல்லா பாத்துச் சொல்லு. இது ஸஃபாரு ரெஸ்டாரண்ட். துபாய் ஏர்போர்ட் உள்ள இருக்கது. நீ போன மாசம் லண்டன் போற வழியில துபாய்ல மூணு மணி நேரம் ஸ்டே பண்ணினல்லா? அங்க எடுத்தது. நான் எங்க துபாய் வந்தேன்னு பாக்குதியா? நான் எங்க அங்கன வந்தேன். தின்னவேலிக்காரகாரனுவளுக்கு திரும்பின பக்கமெல்லாம் ஆளு உண்டு. எனக்கு அந்த ஃபோட்டாவுல இருக்கவ நீயான்னு தான் தெரியணும். கூட இருக்க பய யாருன்னு ச்சொல்லாண்டாம். அவனை எங்களுக்கு ரொம்ப நாளாவே தெரியும். சிக்கினாம் பய சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் ஆயிடுவான்.”

ஸ்ருஷ்டி பதில் சொல்லாமல் உட்கார்ந்திருக்க சங்கரப் பெருமாள் அவள் கையில் சில ஃபோட்டோக்களை திணித்தார். பிரசன்னா எதுவுமே சொல்லத் தோன்றாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தெரிந்த வரை துபாயில் போலீஸ் ஏஜென்ட் யாரும் இல்லை. சங்கரப் பெருமாளின் இந்த முகம் அவனுக்கு புதிது. புகையிலை கறை படிந்த பற்கள், கொச்சையான பேச்சு, கசங்கிய உடை, அங்குலாஸ் ஐஜியை அவன் குறைவாக எடை போட்டு விட்டான். இந்த மனிதனின் கரங்கள் எவ்வளவு நீளம்?

சங்கரப் பெருமாள் அவனை கவனிக்காது அடுத்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினார். “இந்தா இது ஒனக்க பேங்க் அக்கவுண்ட் ஸ்டெட்மென்ட்.அக்கவுண்ட் பேரு தான் வேற பேரு. லட்சுமி செல்வநாயகம். ஸ்ரீதரன்னு சமஸ்கிருதத்தை செல்வநாயகம்னு மாத்திட்டா தெரியாதா?

போன மாசம் மூணாம் தேதி முப்பத்தேழு லட்சத்து பண்ணெண்டாயிரது ஐநூத்தி பத்து எங்கருந்து வந்திருக்கு தெரியும்லா? சேஸ் மன்ஹாட்டன், நியூயார்க். அப்புறம் ஏழாம் தேதி அறுவத்தேழு லட்சத்து இருவத்திரண்டாயிரம் சொச்சம். அது ஹபீப் பேங்க் செஷல்ஸ். இன்னும் படிக்கவா? பெரிய லிஸ்டே இருக்கு குட்டி. மொத்தமா போன வாரம் வரைக்கும் ஒனக்கு வந்த பணம் ஏழு கோடி சொச்சம்.”

சங்கரப் பெருமாள் பேப்பரை ஸ்ருஷ்டி உட்கார்ந்திருந்த கட்டிலில் எறிந்தார்.அது ஸ்ருஷ்டியின் அருகில் மெல்லிய த்த்த்தட்டென்ற ஒலியுடன் விழுந்தது.

ஸ்ருஷ்டி வியர்க்கும் கரங்களால் கட்டிலின் நுனியை பிடித்துக் கொண்டு அவரையே பார்த்தாள். கட்டிலில் கசங்கியிருந்த போர்வை விலகி குளிர்ந்த இரும்பு அவள் கையில் சில்லென்றது.

சங்கரப் பெருமாள் மேல் சட்டையில் தேடி எடுத்து சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்.

“இப்பச் சொல்லு, போலீஸ்காரனா நினைக்காண்டாம். ஒனக்க அப்பனா நெனச்சிக்க. இவனுவ கூட நீ பேசினதெல்லாம் என்கிட்ட இருக்கு. ஆனா கூட்டத்துல நீ இருப்பன்னு நான் நம்பலை. ஒன்ன ஏதோ ஒரு வெசயத்துல மெரட்டி வச்சிருக்கானுவ. அது கூட எனக்கு வேணாம். இவனுவளுக்கு இங்க லோக்கல் கமாண்டர் ஒருத்தர் இருக்கணும். அவன் யாரு? இந்த கும்பல்ல இங்கத்தியனுவ யாரெல்லாம் இருக்கா? ஒங்க அப்பனுக்கு இதுல என்ன கனெக்சனு? இத மட்டும் சொல்லு. ஒனக்க பேரும் ஒனக்க அப்பன் பேரும் வெளிய வராம நான் பாத்துக்கிடுதேன்.”

சொல்லிவிட்டு சங்கரப் பெருமாள் சிகரெட்டை ஆழமாக இழுத்து அழுக்கு நீலத்தில் புகைவிட்டு அவளையே பார்த்தார்.

“ஸ்ருஷ்டி கீழே குனிந்து முகத்தை பொத்திக் கொண்டாள். ஸாரி! ஸாரி ஸார்! நான்..நான்...எங்க அப்பாவுக்கு இதுல எந்த லின்க்கும் இல்லை. என்னால மாட்டிக்கிட்டார். ப்ளீஸ்! அவரை விட்டுடுங்க.” ஸ்ருஷ்டியின் குரல் முகம் மறைத்த விரல்களினிடையே திணறி கசிந்தது.

நுனியில் உட்கார்ந்திருந்தவள் தலை நிமிர்த்தாது பின்னோக்கி நகர்ந்து ஓரமாய் இருந்த சுவரில் சாய்ந்து கொள்ள யாரும் எதுவும் பேசாது இருளில் முகம் மூடும் கறுப்பு போர்வை போல நிசப்தம் சூழ்ந்தது.

=======================
நின்று கொண்டிருந்த பிரஸன்னாவுக்கு கால் வலித்தது. சில நேரங்களில் நிழலும் விலக வேண்டியதுதான். மெளனத்தை கலைத்து “ஸார்! நான் இருக்கேன்னு சொல்ல கஷ்டப்படறா போலிருக்கு. நீங்க விசாரணை பண்ணுங்க. நான் இவ அப்பா என்ன பண்றாருன்னு பார்த்துட்டு வர்றேன். எஸ்.ஐ. ஜெயராமனை எழுப்பி எதாவது வாங்கிட்டு வரச் சொல்லவா சார் என்றான்.

“சங்கரப் பெருமாள் அவனை பக்கம் திரும்பாது தலை குனிந்திருந்த ஸ்ருஷ்டியை பார்த்துக் கொண்டே ம்ம். சரிடே” என்றார்
=========================
பிரஸன்னா திரும்பி வந்த போது பாண்டிச்சேரியின் கடற்காற்று அறையின் ஜன்னல்களை தட்டிக் கொண்டிருக்க கவர்ச்சி நடிகையின் சேலை போல‌ மெலிதாய் விடிய ஆரம்பித்திருந்தது. ஸ்ருஷ்டி அதே நிலையில் தலை குனிந்து உட்கார்ந்திருக்க சங்கரப் பெருமாள் தரையில் உட்கார்ந்து கையிலிருந்த பேப்பர்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

பிரசன்னா கையில் இருந்த ஃப்ளாஸ்க்கில் இருந்து காஃபியை ப்ளாஸ்டிக் கப்பில் ஊற்றி சங்கரப் பெருமாளிடம் நீட்டிக் கொண்டே கேட்டான். “என்ன சார் சொல்றா? இவளுக்கு சம்மந்தம் இருக்குன்னு ஒத்துக்கிட்டாளா? இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? ”

சங்கரப் பெருமாள் தரையில் உட்கார்ந்தவாறே கையை உயர்த்தி கழுத்தை நொடித்து ரிலாக்ஸ் செய்துவிட்டு அவன் நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டார். “அவளுக்கும் கொடு பிரசன்னா. ஆமா.! அவளுக்கு தெரிஞ்ச வரையிலும் சொல்லிருக்கா. இவ தான் அவங்க தலைவனோட நிழல். அல் கயால்! ஆனா இவளுக்கு எதுவும் தெரியலை. அங்க இருந்து வர்ற கமாண்டை ரிசீவ் பண்ணி அடுத்து ரிலே பண்றது. நிழல் மாதிரி அங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே இங்க ரிலே பண்றது தான் இவ பொறுப்பு. இவளை யூஸ் பண்ணிருக்காங்க. இவ அப்பனுக்கு இதுல தொடர்பு எதுவும் இருக்கா மாதிரி தெரியலை. ஆனா இவ மேல அவருக்கும் என்னவோ சந்தேகம் போலருக்கு. அதான் நான் நிழல்னு சொன்னதும் அப்படி வேர்த்து போயிருக்காரு.”

பிரசன்னா ஃப்ளாஸ்க்கை கீழே வைத்து விட்டு “இப்போ என்ன சார் செய்யலாம்? ” என்றான்.

கீழே உட்கார்ந்திருந்த சங்கரப் பெருமாள் அவனை நிமிர்ந்து பார்த்தார். யோசிக்கணும் “பிரசன்னா! இது வரைக்கும் இந்தக் கேசை நானும் ஜெயராமனும் மட்டும் தான் டீல் பண்ணிக்கிட்டு இருக்கோம். அந்த திண்டுக்கல் இன்ஸ்பெக்டருக்கு கூட முழுசா எதுவும் தெரியாது. இவளோ நீயோ இதில சம்மந்தப்பட்டது டிஜிபிக்குக் கூட இன்னும் சொல்லலை. நேத்து அவனுகளை அள்ளிப்போட்டது வரைக்கும் தான் டிஜிபிக்குத் தெரியும். ஃபுல்லா தெரிஞ்சிக்கிட்டு ரிப்போர்ட் பண்ணலாம்னு இருந்தேன். இப்போ அவனுவளை அரெஸ்ட் பண்ணியாச்சி. கோர்ட்ல ப்ரட்யூஸ் பண்ணனும். இவளை அப்ரூவர் ஆக்கிடலமான்னு யோசிக்கிறேன். ஜட்ஜுக்கிட்ட பேசி தண்டனை கம்மியா வாங்கிடலாம். நீ என்ன சொல்ற? ”

அவனுக்கு இது போன்ற பயங்கரவாதிகள் விஷயத்தில் சங்கரப் பெருமாளைப் பற்றி நன்றாகவே தெரியும். என்கவுண்டர் செய்யவும் தயங்காத ஆள். ஆனாலும் கடைசியாக ஒரு முறை பிரசன்னா தலை குனிந்திருந்த ஸ்ருஷ்டியை பார்த்துக் கொண்டே சொன்னான். அவனது குரல் கெஞ்சியது. “ஸார்! ஸ்ருஷ்டி அந்த மாதிரி பொண்ணு இல்லன்னு இப்ப உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். தெரியாம மாட்டிக்கிட்டா போல. வேணாம் ஸார்! ப்ளீஸ்! எனக்காக விட்ருங்க.”

கீழே உட்கார்ந்திருந்த சங்கரப் பெருமாள் நிமிர்ந்து பார்த்து சிரித்தார்.உதடுகள் விரிந்து கறுப்பான பற்கள் மீண்டும் தெரிந்து மறைந்தது. “அதாக்கும்டே ! அதாக்கும் புருசன்காரன் பேச வேண்டிய பேச்சு. அப்படிச் செய்யலாந்தான் ஆனா கேசு நிக்காதுடே. மீன்பிடிக்க வந்தோம் கடல்ல வழி மாறிட்டு. போட்டுல இருந்த குண்டு, துப்பாக்கில்லாம் போலீசு வச்சதுன்னு அவனுவ வக்கீல் சொல்லுவான். பெனிஃபிட் ஆஃப் டவுட்டுன்னு ரெண்டு மாசம் தண்டனை கொடுத்து வெளிய அனுப்பிருவானுவ. அந்த தாயளி திருப்பி வந்து குண்டு வைப்பான். வேற வழியில்லடே! ஒனக்க ஃப்யான்சிய கோர்ட்ல நிறுத்தத்தான் வேணும். வெளிய நியூஸ் வராதமாதிரி பாத்துப்போம்”

“அப்போ எனக்கும் வேற வழியில்ல சார்.” சொன்ன பிரசன்னாவின் கைகளில் துப்பாக்கி நீண்டிருந்தது.
தொடரும்
==================

இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

Friday, August 6, 2010

இரண்டாம் நிழல் - 4


பாகம் : 4

பிரஸன்னாவுக்குச் சற்றுமுன் திரையிற் கேட்ட மொழி திடீரென்று பரிச்சயமானது போல் தோன்றியது.. சங்கரப்பெருமாள் பேசுவது வேற்றுமொழி போன்று வெறித்துப் பார்த்தான்… கையில் திரிசூலக முத்திரை பிடித்து மேல் நெற்றியில் வைத்து வலிக்க அழுத்தி நெற்றிப்பொட்டு வரை கோடிழுத்தான்… மோதிர விரலை மடக்கி.. நெற்றிப்பொட்டில் ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஊன்றி முகத்தின் சதைகள் அனைத்தையும் இழுத்துச் சுருக்கிக் கண்களை இறுக மூடித் திறந்தான்.. நெற்றியிலழுந்தியிருந்த விரல்களை அப்படியே திருப்பித் துப்பாக்கியாக்கி சங்கரப்பெருமாளின் நெற்றிப் பொட்டிற்குக் குறி வைத்துப் பார்வையைக் கூர்மையாக்கினான்… சிகரெட் புகையினூடே தெரிந்த முகம்.. பார்த்தசாரதி கோயிலில் தூபப் புகையினிடை தெரியும் மூலஸ்தானப் பெருமாள் போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது… நீட்டிய கை தொய்ந்து இறங்கியது…

“என்னடே.. திருதிருன்னு முழிக்க... இதுதான் பூலோகமான்னு..அவ எப்படி இங்க வந்தான்னு கேக்குதியாக்கும்....ஒனக்க அந்த செயராமன் மருந்து ரொம்ப அடிச்சிட்டான் போல....நீ மந்தமா இங்க வந்து நிக்க...எல...ஒன்ன இங்க கொண்டு வந்தது எஸ்.ஐ. செயராமன்...ஒனக்கு மருந்து அடிச்ச அதே காலத்துல ஒனக்க கெட்டிக்கப் போறவளையும் அவளுக்க அப்பனையும் திண்டுக்கல்லு இன்ஸ்பெக்டரு தூக்கிட்டான்...நமக்கு ஒறவு மொறக்காரனாக்கும்...நாம சொன்னா பய கேப்பான்ல..." 

டி.நகர் எஸ்.ஐ. ஜெயராமன்...திண்டுக்கல் இன்ஸ்பெக்டர்...இன்னும் யாரெல்லாம் இதில்...எத்தனைப் பேருக்கு இந்த திட்டம் தெரியும்....பிரசன்னா சுற்றிலும் பார்த்து விட்டு கேட்டான்...அவங்கள காணோமே சார்...

சங்கரப் பெருமாள் சிகரெட் புகையுடன் சிரித்தார்... அந்த கதைய ஏன் கேக்குத...அது செம காமெடி... அந்த பய அஞ்சாப்புல லவ் பண்ண பொண்ண இங்கன பாத்தானாம்... பாத்து இருவது முப்பது வருசமாச்சி... போய்ட்டு வாரேன் சார்னு ஒத்த கால்ல நின்னான்...போய்த் தொலைடேன்னுட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.... 

செயராமன் இந்தா வர்றேன் சார்னு சொல்லிட்டு பக்கத்து ரூம்ல தூங்கிட்டு இருக்கான்...இப்ப எழுந்துக்குவான்...விடியற நேரமாச்சுல்லா...அது கெடக்கட்டும்டே.. நீ போ… போய்ப் பேசு..”.. வாயில் எஞ்சியிருந்த புகையை மூக்கு வழியாக ஊதினார்… உதட்டை மடித்து.. வலது பக்கம் நீண்டிருந்த மீசையை இடது கையால் நீவி விட்டார்… வலது கையை நீட்டிக் கையிலிருந்த சிகரெட்டால் பக்கத்து அறையின் சுவற்றைச் சுட்டிக் காண்பித்தார்…

ப்ரஸன்னா தமிழ் சினிமாவில் வில்லனிடம் மூன்றாவது தடவையாக அடி வாங்கி விழுந்தெழும் கதாநாயகன் போல் தலையைச் சிலுப்பினான்… லேசாகத் தள்ளாடி நடந்து சென்று அந்த அறையின் கதவின் பித்தளைக் குமிழைத் திருகினான்… கதவு தாளிடப் பட்டிருப்பதை உணர்ந்து… திரும்பினான்… பக்கத்து அறையிலிருந்து சங்கரப் பெருமாள் எறிந்த கீ் அவன் காலடியில் விழுந்தது… தடுமாறிக் குனிந்து அதை எடுத்தான்… சாவித்துவாரத்தைத் தேடி… நடுங்கிய விரல்களால் கீயை நுழைத்துத் திருகினான்…

“..போலீஸ்காரனா போற... ஸ்ருஷ்டியோட ஃபியான்ஸியா போகலை...”.. சங்கரப்பெருமாளின் குரல் காதில் இரைந்தது… உணர்ச்சிகள் சுழன்று சுழன்று அடித்தன… ஸ்ருஷ்டியைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்புத் தெம்பளித்தது… “..அவனுங்களோட லோக்கல் பாஸ்...”..  இதயப்புள்ளியில் கை வைத்துத் தேய்த்துக் கொண்டான்… கனமான கோட்டை வாயிற்கதவை அசைத்துத் திறப்பது போல்... அந்த மரக் கதவை மெதுவாகத் தள்ளித் திறந்தான்…
 ***********************
சுவர் இடுக்கில் அடங்கி ஒடுங்கும் பல்லி போல சங்கரப் பெருமாளும் பிரசன்னாவும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு பக்கத்து அறையில் படுத்திருந்த எஸ்.ஐ ஜெயராமன் ஜெயராமன் சங்கரப் பெருமாளை நெருங்கினார். “என்ன சார் ஏசி சாரை அங்க தனியா அனுப்பறீங்க?” 

திரும்பிய சங்கரப் பெருமாள் கண்களை இடுக்கி ஜெயராமனைக் கூர்ந்து பார்த்தார். ‘இம்புட்டுத்தானா உன் போலீஸ் மூளை?’ என்பதாக இருந்தது அவர் பார்வை. கையிலிருந்த ரிமோட்டில் ஒரு பட்டனைத்தட்டவும், ஸ்ருஷ்டி இருக்கும் அறை அந்த தட்டைத் திரையில் விரிந்தது.

“போலீஸ் நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்னல...எல்லா எடத்திலயும் நக்கணுமாக்கும்...இவன் அவக்க பாய்ஃப்ரண்டு...இந்த பய மேலயும் எனக்கு ஒரு சம்சயமுண்டு.....அதைக் கொண்டில்லா இவன போலீஸ்காரன்னு சொல்லி அனுப்பிச்சுருக்கேன்... இவன் உட்கையா இருந்தான்னு வையி... இப்ப போயி போலீஸ்காரனாட்டும் பேசினா அவ சண்டை போடுவாள்லா? இப்ப ரெண்டு பேரும் என்ன பேசுதாங்கன்னு பாத்தாத் தெரிஞ்சிப்புடுமில்லையா?”

ஜெயராமன் சங்கரப் பெருமாளை மலைப்பாகப் பார்த்தார்.
*************************
அறையின் மூலையில்... கட்டிலில் ஒரு கால் நீட்டி மறுகால் மடித்துச் சரிந்து... அலங்கோலமாகப் படுத்திருப்பது... ஸ்ருஷ்டி..?.. ஓடிப்போய்த் தூக்கி நிமிர்த்த வேண்டும் போலெழுந்த உணர்ச்சியை... இறுக மூடிய முஷ்டிக்குள் அடக்கினான்... “அவங்க லோக்கல் கமாண்டர் யாரு...?..”  தலையை உலுக்கினான் .. காதைப் பொத்திக் கொண்டான்...  

ப்ரஸன்னாவின் கால்கள் தயங்கின.... பார்வையைச் சுழற்றினான்....அழுக்கான போர்வை கசங்கியிருந்த ஒரு பழைய இரும்புக் கட்டில்...மேல் பூசிய வர்ணம் உதிர்ந்து ஆங்காங்கே துருப்பிடித்த இரும்பு மேலும் துருவேறிக் கொண்டிருந்தது... சுவரோரத்தில் இருந்த‌ கட்டிலைத் தவிர பளிச்சென்று துடைத்து விட்டது போலிருந்த அறையைப் பார்த்துப் பல்லைக் கடித்தான்.. 

“ப்ளடி.. போலீஸ் புத்தி...”.. மெதுவாக நடந்து.. ஸ்ருஷ்டியை நெருங்கினான்... முடிந்த அளவு குரலில் நிதானத்தை வரவழைத்து... “ஸ்ருஷ்டி..” என்றழைத்தபடி பக்கத்தில் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான்... குனிந்து அவள் முகம் பார்த்தவன் திகைத்தான்...  அவள் சலனமில்லாது அவனை வெறித்துக் கொண்டிருந்தாள்... அந்தப் பார்வையில் இது வரை அவனுக்குத் தெரியாத ஒரு அந்நியம் தெரிந்தது...

”ஸ்ருஷ்டி... ஆர் யூ ஆல்ரைட்..” என்றான் சமாளித்துக் கொண்டு...
“.....................”
“என்ன நடக்குது இங்க....?”

“அத நீதான் சொல்லணும் ப்ரஸன்னா... என்ன இதெல்லாம்..?.. ’திருடன நம்பினாலும் போலீஸ்காரன நம்பாத’ன்னு டாட் சொல்லிட்டிருப்பார்... வாட் அ ஃபூல் ஆம் ஐ..” நிதானமாக உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் கசப்பும், வெறுப்பும் வழிந்தது....

ப்ரஸன்னாவுக்கு இது அதிர்ச்சி ட்ரீட்மெண்ட்... ‘இவளை விசாரிக்கலாமென்று வந்தால்... இவள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்... என்னையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துறாளே..’

”வாட் டு யூ மீன் ஸ்ருஷ்டி.. என்ன சொல்ல வர்ற..?”

“தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பலாம்... உன்னை எழுப்ப முடியாது..”
ப்ரஸன்னா பல்லைக் கடித்தான்...

“இங்க பாரு ஸ்ருஷ்டி... நான் ஏற்கனவே ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன்.. கொஞ்சம் தெளிவாப் பேசறியா...? ப்ளீஸ்... ஐ வில் பி க்ரேட்ஃபுல்..”

“என்ன தெளிவா பேசணும் ப்ரஸன்னா..? பக்கத்து ரூம்ல உன் கூடப் பேசிக் கொண்டிருந்தது யார்..? இதுதான் உங்க ஸ்டேஷனா..? இப்டி எத்தன பேருக்கு மயக்க மருந்து கொடுத்து இங்க கொண்டு வந்திருக்கீங்க? வாட் டு யூ எக்ஸ்பெக்ட் ஃப்ரம் மீ..?”

“வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்..... கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு... வாட் மேக்ஸ் யூ திங்க் லைக் திஸ் வே?”

“இங்க என்னை ரூம்ல அடைச்சு வச்சிருக்காங்க... உன்னோட கைல கீ இருக்கு... காண்ட் யூ ஸீ தட்..?” பலவீனத்தை மீறிக் குரல் சீறியது...

”ஓ... அது..” ப்ரஸன்னா தடுமாறினான்... தலையைக் கோதி விட்டுக் கொண்டான்...

சற்று முன் சங்கரப் பெருமாள் சொன்ன போலீஸ் என்ற வார்த்தையை ஒதுக்கி... ”எல்லாம் பேசலாம்... நீ முதல்ல எழுந்திரு..” என்று கை நீட்டினான்...

அவன் கையில் நரகல் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல்... அருவெறுப்புடன் பார்த்தாள்... சட்டென்று விலகி,... நகர்ந்து.. எழுந்து.. சுவற்றுடன் சாய்ந்து அமர்ந்தாள்... நாலு நாள் பட்டினி கிடந்தவள் போல் மெலிவாகத் தெரிந்தாள்...

’ஏதாவது சாப்டறியா..’ என்று தொண்டை வரை வந்ததை விழுங்கினான்... இதைக் கேட்டால் துப்புவாள்... ’அல் கயால்.. நிழல்..’ ம்ம்.. “உனக்கு அரபிக் தெரியுமா..?” என்றான்..

ஸ்ருஷ்டி விருட்டென்று நிமிர்ந்தாள்... “வாட்...?... எதுக்கு இது..?”

அது அவனுக்கே தெரியாது... ஏதோ கேட்க வந்து இதைக் கேட்டு விட்டான்... இப்படி யோசிக்காது தன்னிச்சையாக வந்து விழும் விதிவச வார்த்தைகளால்.. எத்தனை வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன...

“.. தெரியுமா ஸ்ருஷ்டி..?”

பக்கத்து அறையில்... க்ளாசில் திரவம் ஊற்றப்படும் ஒலியும்... லைட்டர் பற்றவைத்த சத்தமும் கேட்டது...

”.. தெரியும்.. கொஞ்சம் பேச மட்டும்... ஏன்?!”.. முறைத்தாள்... ”நீ என்னை என்கொயரி பண்றியா ப்ரஸன்னா..?” புருவம் உயர்த்தினாள்...

”வெல்... ஐ ஆம் ட்ரையிங் டு கெட் அ பிக்சர்.. அரபிக் எப்போ கத்துக்கிட்ட...?.. உன்னைப் பற்றித் தெரிஞ்சுக்க இன்னும் நிறைய மேட்டர் இருக்கும் போலருக்கே” அவன் குரலில் சந்தேகம் வெளிப்படையாகத் தெரிந்தது...

“ம்ம்... ஃபைவ் இயர்ஸ் அகோ.. யூ.கே.ல ஒரு சிக்ஸ் மந்த்ஸ் கோர்ஸ் பண்ணேன்... அங்க ஓமர்ன்னு ஒரு ஃப்ரண்ட் ஃப்ரம் சவுதி அரேபியா... அவன் கிட்ட கத்துக்கிட்டேன்..”

”ஐ ஸீ... டஸ் ஹி கீப் இன் டச் வித் யூ..?”

“....”

“டஸ் ஹி..? ஸ்ருஷ்டி..?”

“உனக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியல.. ஏதாவதுன்னா கண்ணைப் பார்த்து டைரக்டா கேளு..” நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தாள்... சலனமின்றிப் பார்த்தாள்...

ப்ரஸன்னா அவள் கண்களில் எதையோ தேடினான்... அரை நிமிடம் கழித்துப் பெருமூச்சு விட்டான்... கால் மடித்து அவளுக்குச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்... ”ஸ்ரீதரன்...” என்ற பெயர் இடது மூளையில் எங்கோ நெருடியது... ’ஸ்ரீதரன் என்ன ஆனார்..’.. ஆஃபிஸ் போய் காத்திருந்து ஏமாந்திருப்பாரா..? ’சுத்தமா ப்ளாக் அவுட்... காட் டாமிட்..’

குரலைத் தழைத்து ”ஸ்ருஷ்டி.. என்னை நம்பு.. நான் உன்னைச் சந்தேகப்படல... நீ இப்போ இருக்கிற அதே நிலமைதான் எனக்கும்... எல்லாரும் ஒவ்வொரு பக்கத்துக்கு இழுத்தா எதுவும் செய்ய முடியாது... ஸ்ரீதரன் அங்கிள் கிட்ட சமீபத்தில ஏதாவது மாற்றம் தெரிஞ்சதா..?..”

”ம்ம்...... ..................... இல்ல... அப்டி எதுவும் தெரியல... நேற்று நாலு தடவை ஃபோன் பண்ணிப் பேசினாரு.....” கொஞ்சம் யோசனையாக ஆரம்பித்து... சாதாரணமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தவள்... சடாரென்று நிமிர்ந்தாள்...

 ”ஓ... வெய்ட்... ஆமா டாட் அநாவசியமா ஃபோன் பண்ண மாட்டாங்க... ரெண்டு, மூணு நாளா... சும்மா சும்மா ஃபோன் பண்ணி... எங்க இருக்க... இன்னைக்கு என்ன ப்ளான்னு எல்லாம் பேசினாங்க... எனக்கு அப்போ எதுவும் தோணலை... ரெண்டு நாள் முன்னாடி ஆஃபீஸ்ல ஒரு கான்ஃபரன்ஸ்ல இருந்தேன்... செல்ஃபோன கார்ல மறந்து வச்சிட்டேன்..கால் அட்டெண்ட் பண்ணலைன்னதும்..  நேர ஆஃபீஸுக்கே வந்துட்டாங்க.. அப்போ கொஞ்சம் ஆச்சரியமா இருந்திச்சு...” என்று நிறுத்தி... அவனைப் பார்த்தாள்...

“ஆமா யூ ஆர் ரைட்... டாட் வழக்கத்த விட அதிகமா... ரொம்ப அதிகமாவே என் மேல அக்கறை எடுத்துக்கிட்டாங்க... பை த வே... இதெல்லாம் ஏன் கேக்கற ப்ரஸன்னா... எனக்குப் பயமா இருக்கு... என்னைச் சுத்தி என்ன நடக்குது..?! என்ன இதெல்லாம்..”

அவள் சொன்னதைக் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தவன்... தலையைப் பிடித்துக் கொண்டான்... ஏதோ பிடிபடுவது போலவும்... ஒன்றும் பிடிபடாதது போலவும் ஆட்டம் காட்டியது... மண்டைக்குள் பெருச்சாளி குடைந்தது... மண்டையோடு அரித்தது... பின் மண்டையில் எதுவோ துளைத்தது... திரும்பினான்...

கதவு நிலையில் சாய்ந்தபடி சங்கரப்பெருமாள் நின்று கொண்டிருந்தார்...

தொடரும்
******************************

இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

Thursday, August 5, 2010

இரண்டாம் நிழல்-3.


பாகம் 3:
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.....வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மாநிறம்...மேடு பள்ளம்....நகரம், கிராமம், காடு எல்லாம் மாறினாலும் விதம் விதமாக வண்ணம் காட்டினாலும் மாறாமல் இருப்பது....கடல்...குண்டான பெண் உடுத்திய நீல சேலை போல..... இந்தியப் பெருங்கடலும், ஆர்க்ட்டிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும், பசிஃபிக் பெருங்கடலும் ஒன்று தான்...மிகப்பெரிய உப்பு கரைசல்.... சென்னை கடற்கரையும் பாண்டிச்சேரி கடற்கரையும் ஒரே காற்று... உப்புக் காற்று...

ஃபோட்டோவுக்கு சிரிக்கும் புது மனைவி போல கொஞ்சமாய்த் திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த பாண்டிச்சேரியின் கடல் காற்றை ஆழமாய் உள்ளிழுத்ததில் பிரசன்னாவுக்கு உப்புக் கரித்தது....அவன் முகம் வண்ணான் துறையில் வெளுத்தெடுத்த வேட்டி போல ரத்தம் இழந்து கசங்கிப் போய் இருக்க‌....நீண்ட நேரமாய் உட்கார்ந்திருந்தில் கால்களில் ரத்த ஓட்டம் தடை பட்டு முழங்காலுக்கு கீழே லேசாய் அரிப்பெடுத்தது..

ஒரே நாளில்.....இல்லை....ஒரே மாலையில் எத்தனை நடந்திருக்கிறது...தவறு.....என்ன நடக்கிறது என்றே புரியவில்லை...நேற்று மாலை ஸ்ருஷ்டியை பார்க்க மல்டிப்ளக்ஸ் போனது ஞாபகம் இருக்கிறது.....அங்கு ஸ்ருஷ்டியை காணாமல் ஸ்ரீதரன் அங்கிள் போன் செய்தது, ஆபிஸுக்குப் போகும் வழியில் ஜெயராமனை பிக்கப் பண்ணியது ஞாபகம் இருக்கிறது. ஆஃபிஸ் போவதாக ட்ரைவ் பண்ண ஆரம்பித்தது... .திடீரென்று மூச்சு திணறல்...இப்பொழுது எங்கே இருக்கிறேன்....ஜெயராமன் எங்கே...ஸ்ருஷ்டி எங்கே...என்ன எழவு தான் நடக்கிறது....

எரிச்சலுடன் தூக்கமும் குழப்பமுமான கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் அறையை சுற்றிப் பார்த்தான்...

இன்னமும் விடியாத மெல்லிய இருட்டு...சின்ன அறை....மிக சாதாரணமான ஸோஃபா...டீ டேபிள்...அதன் மேல் நிரம்பியிருக்கும் ஆஷ் ட்ரே...பாதி விஸ்கியுடன் பீங்கான் மதுக் கோப்பைகள்.....அவனுக்கு எதிரே சிறிய ஃபிலிப்ஸ் ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி...இவன் முகத்தை பார்த்துக் கொண்டு நேர் எதிரே.....
கண்டிப்பாக இது கனவு...யாரையும் நம்ப முடியாத ஒரு போலீஸ்காரனின் வெளியில் சொல்ல முடியாத அந்தரங்க பயம்...பிரசன்னா கண்களை மீண்டும் கசக்கிக் கொண்டான்.

அவரை இரவு உடையில் பிரசன்னா இது வரை பார்த்ததில்லை...கை இல்லாத பழுப்பேறிய முண்டா பனியன்...கழுத்தில் தொங்கும் கறுப்பு கயிற்றில் ஏதோ ஒரு டாலர்....திருச்செந்தூர் முருகனாக இருக்கலாம்...கொஞ்சம் தொப்பை விழுந்த‌ வயிறு வரை ஏற்றி கட்டிய அழுக்கான கட்டம் போட்ட‌ லுங்கி....சுருளும் இல்லாது நேரும் இல்லாத அந்த இடைப்பட்ட கோரை முடி...ஒரு பக்கம் வழக்கம் போல சரியாக நறுக்கப்படாத மீசை...தென் கோடி தமிழகத்தின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு மூக்கு...
இவன் முகத்தையே பார்த்துக் கொண்டு ஐஜி சங்கரப் பெருமாள்...
===============================
இவன் விழிப்பதை பார்த்ததும் சங்கரப் பெருமாள் கையிலிருந்த சிகரெட்டை ஆழமாக இழுத்து விட்டு, “ஸாரி பிரஸன்னா...ஜெயராமன் மயக்க மருந்து டோஸ் ரொம்ப அடிச்சிட்டான் போலருக்கு...அவனுக்கு இதுக்கு முன்னாடி பழக்கம் இல்ல என்றார்...”

பிரஸன்னாவுக்குள் பயம், குளிர்ந்த வாள் போல அறுத்தது.. ஒருவேளை...இல்லை..இருக்காது... “என்ன ஸார் இது...என்ன நடக்குது... என்னை எதுக்கு கடத்தணும்? இது எந்த ஊரு... நீங்க என்ன பண்றீங்க... ஸ்ரீதரன் எங்கே? ஸ்ருஷ்டி எங்கே?” வேகமாய் எழுந்த அவனை சங்கரப் பெருமாளின் வலுவான கைகள் கீழே அழுத்தியது.

ஒக்காரு ஒக்காரு...சொல்லுதேன்...அதுக்கில்லா ஒன்ன இங்க கொண்டு வந்தது...தப்புதான்...சொல்லாம அள்ளிப் போட்டுக்கிட்டு வந்தது தப்பு தான்...ஆனாக்க எனிக்கு வேற வழி ஒண்ணும் இல்லையாக்கும்...நாஞ் சொல்றத கேட்டா நீயும் சரின்னு சொல்லுவ பாரு.

பிரசன்னா வெட்டத் தயாராகும் ஆடு போல குறுக்காக தலையசைத்தான்.. “மொதல்ல நான் எங்க இருக்கேன்னு சொல்லுங்க ஸார்...இது எந்த ஊர்...இது யார் வீடு...”

சங்கரப் பெருமாள் ஆஷ் ட்ரேயில் இருந்த சிகரெட்டை எடுத்து இழுத்து விட்டு "எங்கருக்கோம்... யாரு வீடு...ம்ம்ம்.....குறிச்சிக் குப்பம்..பாண்டிச்சேரி...இங்க இருந்து அரை மைல்ல கடலு.......எனக்க ஃபெரண்டு வீடாக்கும்...அவன் அறதளி போய்ச் சேந்து அது கொள்ள நாளாச்சு.....எப்பிடி செத்தான்னு கேக்கியா...குடிகாரப்பயல்லா அவன்...குடிச்சி குடிச்சி கொடலு வெந்து பொறத்தால ரெத்தம் வந்து போய்ச் சேந்துட்டான்...இப்பத்தைக்கு இந்த வீடு எனக்க கண்ட்ரோல்ல உண்டு...."

கையூன்றி எழ முயன்ற பிரசன்னாவின் முன் சிகரெட் நீட்டப்பட்டது..."இந்தா....நீ தம்மடிப்பன்னு எனக்கு தெரியும்லா...இங்கின என்ன பண்ணுதோம்னு கேக்குதியாக்கும்..அதொண்ணுமில்லா...இந்தா இந்த வீடியோ போடுதேன்...பாரு...."
=========================
சங்கரப் பெருமாள் ரிமோட் கண்ட்ரோலை தட்ட ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியில் தெளிவில்லாமல் காட்சிகள் விரிந்தன....

ஏதோ ஒரு கடற்கரை...தூரமாக நிற்கும் கப்பல்களில் கொரிய கொடிகள்....சென்னை துறைமுகத்தில் நிறைய கொரிய கப்பல்கள் ஞாபகம் இருக்கிறது...சென்னையாக இருக்கலாம்.....கேமராவின் ஃபோகஸ் குறுகிக் கொண்டே வந்து இப்பொழுது ஒரு படகு தெரிகிறது....சாதாரண உடை உடுத்திய மனிதர்கள்....நான்கைந்து பேர் இருக்கலாம்...குறுக்கும் நெடுக்குமாக நடப்பதில் சரியாக தெர்யவில்லை....மீன்பிடி படகு? ஏதோ பேசுகிறார்கள்...புரியாத மொழி...இல்லை....இது மீன்பிடி படகு இல்லை..த்தா பாடு....சென்னை மீனவர்களின் மொழி பிரசன்னாவுக்கு தெரியும்...

இது அவர்களின் மொழியில்லை.....என்ன மொழி இது...பிரசன்னா யோசிக்கும் போதே படகின் தரையில் உட்கார்ந்திருந்த ஒருவன் புரியாத மொழியில் என்னவோ சொல்ல நின்று கொண்டு இருந்த ஒருவன் என்னவோ சொல்லி அல் ஜிஹாத் என்றான்...அவன் முகம் தெரியவில்லை...திரும்பி நின்றதில் முதுகும், கால்களும், கலைந்த தலை முடியும் மட்டுமே தெரிகிறது.....கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்த அடுத்தவன் ஏதோ கேட்க முதலில் பேசியவன் அல் கயால் என்றான்...கேமரா நின்று கொண்டிருந்தவனின் முகத்தை படம் பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும்...படகு கடல் அலை பட்டு அலைந்ததில் கேமரா கோணம் தப்பி நீலமான‌ கடல் மட்டுமே திரையில் வந்தது....
=====================
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னாவுக்கு அறையில் அடித்த மெல்லிய கடற்காற்றையும் மீறி வியர்த்திருந்தது... பயங்கரவாதிகள்... ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி. கடல் அலைகளில் உறைந்திருக்க, கண்களை விலக்கி “ஸார்....இவங்க....”

சங்கரப் பெருமாள் கறுப்பாய் இருந்த திரவத்தை கோப்பையில் முழுதுமாக கவிழ்த்து பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு “தாயோளிங்க... ஆமா...பிரஸன்னா... அவனுங்க தான்...அவனுங்க யாரு எப்படி பிடிக்கிறதுன்னு நீ கவலைப்பட வேண்டியதில்லை.....காலையில புழல் ஜெயில்ல பாத்துக்கலாம்...நேத்தி நைட்டே அவனுவளை அள்ளியாச்சி...எல்லாப் பயலுவளும் காஜா பீடி சரியில்லைன்னு அரபில கம்ப்ளைண்ட் பண்ணிட்டுருக்கானுவ....”

சொல்லிவிட்டு சங்கரப் பெருமாள் பிரசன்னாவை உற்றுப் பார்த்தார்....

“அப்போ...அப்போ...நான்...என்னை எதுக்காக சார் இங்க...."

அவனை பார்க்க விரும்பாதவர் போல சங்கரப் பெருமாளின் முகம் தூரமாக அந்த இருளில் வெறித்தது... “ப்ரஸன்னா....எங்க அப்பாரு ரொம்ப ஷோக்கான ஆளு.... போற எடம் பொண்டாட்டி...வாற எடம் வைப்பாட்டி....அதுல ஒன்னு கேரளாவுல தங்கிட்ட அரபிக் குடும்பம்..மூணாம் தலைமுறைதான்......ஆனா எனக்கு சித்தி மொறை. அவனுவ அல் கயால்னு சொல்றனுங்க... கவனிச்சியா? அதுக்கு அரபில நிழல்னு அர்த்தம்...எனக்கு அரபி தெரியாது...ஆனா, அவனுங்க தலைவனுக்கு ஈடா இங்க யாரோ இருக்காங்க. அது யாருன்னு அவனுங்களை முட்டிக்கு முட்டி தட்டியும் ஒண்ணும் தெரியலை ....அதான்...”

பிரஸன்னாவுக்கு கடல் காற்றை மீறி காது மடல்கள் வேர்த்தது....இவர் சொல்வது...ஸ்ருஷ்டியை காணவில்லை...அப்படியானால் ஸ்ருஷ்டி? என்ன சொல்ல வருகிறார்...இவருக்கு என்ன தெரியும்...எவ்வளவு தெரியும்...

சங்கரப் பெருமாள் கோப்பையில் இருந்த கறுப்பு திரவத்தை ஆழமாக குடித்தார்.....அந்த இருட்டில் சிரங்கு பிடித்தவன் நாட்டு மருந்து குடிப்பது போல அவர் முகம் கோணல்மாணலாகியது... “ஸாரிடே பிரசன்னா...அந்த அல் கயால்...அவனுவளோட‌ லோக்கல் பாஸ்...அந்த குட்டி...உன்னோட ஃபியான்ஸி... ஸ்ருஷ்டியா இருக்கலாம்னு எனக்கு ஒரு சம்சயம்... என்ன தான் இருந்தாலும் நீ கெட்டிக்க போறவள்லா...அவளை போலீசுக்காரனுவ விசாரிக்க மாதிரி விசாரிக்க எனக்கு பிரியமில்லா..ஒன்னை வரச்சொன்னா வருவியாக்கும்? அதான் ஜெயராமனை விட்டு மருந்தடிச்சி தூக்கி வரச் சொன்னேன்....”

சங்கரப் பெருமாள் முடிக்காமலே மீண்டும் குடிக்க ஆரம்பிக்க பிரஸன்னா அவரையே வெறித்து பார்த்தான்....எப்படி....இது போலீஸ் புத்தி...இந்த சங்கரப் பெருமாள் குறி வைக்கிறார்...வெறுமனே தூண்டில் வீசி மீன் சிக்குமா என்று பார்க்கிறார்....ஸ்ருஷ்டிக்கு எதிராக இவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது...இருக்க வாய்ப்பில்லை...என்னேரமும் நிழல் போல‌ அவள் கூட இருக்கும் எனக்கு தெரியாது எதுவும் நடக்க வாய்ப்பில்லை...

“இருக்காது ஸார்....கண்டிப்பா இருக்காது...உங்களுக்கு ஸ்ருஷ்டி பத்தி தெரியலை....ஒரு சின்ன பூனைக்கு அடிப்பட்டா கூட ரொம்ப கஷ்டப்படுவா... கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டா கூட ஒரு வாரம் என்கிட்ட பேச மாட்டா..அவ போய் எப்படி சார் இந்த மாதிரி தீவிரவாதின்னு...உங்களுக்கு என்ன பிரச்சினை சார்?அவங்க அப்பா கூட காசு பிரச்சினையா இல்லை என் கூட பிரச்சினையா...என்ன ஆதாரம் சார் வச்சிருக்கீங்க....”

பிரசன்னா சூடாக குரல் உயர்த்தி பேச ஆரம்பிக்க‌ சங்கரப் பெருமாள் மதுக் கோப்பையை குறுக்காக ஆட்டினார்...பாதியாக நிறைந்திருந்த கறுப்பு மது ஆடியது....

“அவ குத்தஞ் செஞ்சான்னு நான் எப்பலே சொன்னேன்? ஆனாக்க‌....அவளை யார்னா ப்ளாக் மெயில் பண்ணலாம்ல? அவங்க அப்பனுக்கு நான் ஒரு கால் பண்ணேன்...அனானிமஸா...நிழல்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன்.... அதுக்கே அவனுக்கு வேர்த்திருச்சு....சோ! என்னவோ தப்புடே....நீ தான் கேக்கணும்..நல்ல புள்ளையா எதமா பேசிக் கேக்கணும்...அதுக்கு தான் உன்னை வர வைச்சிருக்கேன்...”

இந்த கறுப்பு மனிதனுக்குள் எத்தனை கணக்குகள்....பிரசன்னா நம்ப முடியாமல் பார்த்து விட்டு எழுந்து கொண்டான்.... “ஒக்கே ஸார்....நான் பேசறேன்.. ஸ்ருஷ்டிக்கிட்ட நான் பேசிக் கேட்கிறேன்.... மொதல்ல இப்ப அவ எங்க இருக்கா? சொன்னீங்கன்னா உடனே கிளம்ப நான் ரெடி....”

சங்கரப் பெருமாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார்...."பேசுலே..நமக்கு உம்ம தெரியஞ்சாகணும்..அவனுவ‌ பிளான் என்ன?யாரெல்லாம் அவனுவ நெட்வொர்க்ல இருக்கானுவ‌...முக்கியமா லோக்கல் கமாண்டர் யாரு.... ஆனாடே...நீ ஒரு போலீஸ்காரனா போற...ஸ்ருஷ்டிய கெட்டிக்க போறவனா போகலை..ஞாபகம் வச்சிக்க.....”

பிரஸன்னாவின் உடம்பு நிமிர்ந்தது... “தெரியும் ஸார்....அவ எங்க இருக்கான்னு சொல்லுங்க...இப்பவே போறேன்...”

சங்கரப் பெருமாள் தேடி எடுத்து மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்... “நீ எங்கயும் போக வேணாம்டே பிரசன்னா...ஒனக்க‌ பியான்ஸி பக்கத்து ரூம்ல தான் இருக்கா....”

பிரசன்னா இதை எதிர்பார்க்கவில்லை...எழுந்த நிலையில் அப்படியே நின்றான்.....என்னையும் ஸ்ருஷ்டியையும் கடத்தி ஒரே வீட்டில் அடைத்து... என்ன நடக்கிறது......என்னைக் கடத்தியது எஸ்.ஐ. ஜெயராமன்...அப்படியானால் ஸ்ருஷ்டியை யார் கடத்தியது? ஐ.ஜியா இல்லை வேறு யாராவதா?

இந்த மனிதனின் கணக்கு என்ன?இதில் எத்தனைப் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்?
சுவர் கண்டு விழிக்கும் கன்று போல பிரசன்னா ஐ.ஜி. சங்கரப் பெருமாளையே பார்த்துக் கொண்டு அசையாது நின்றான்....
தொடரும்
=================
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

Wednesday, August 4, 2010

இரண்டாம் நிழல் - 2

பாகம்- 2
ஸ்ருஷ்டி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெரிய அலங்கார வளைவுக்குப் பின்னால் அந்தத் தொழிற்சாலை அரவமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. தொழிற்சாலையின் இடதுபக்கமிருந்த குளிர் சாதனம் பொறுத்தப்பட்ட அந்தக் கண்ணாடிக் கட்டிடத்தின் முன் அலங்காரமாக மெர்சிடிஸ் பென்ஸ் 'இ' கிளாஸ் கறுப்பு கலரில் நின்றுக் கொண்டிர்ந்தது. வெள்ளைச் சீருடையணிந்த டிரைவர் காக்கியுடைக் காவலாளியுடன் தீவிரமாக மதராஸப்பட்டிணத்தின் நாயகியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.


உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன். இண்டர்காமை எடுத்து இரண்டு எண்களை அழுத்தி காதில் வைத்து, “மாலா! ப்ரொடெக்‌ஷன் மானேஜரை உடனே என்னைப் பாக்கச் சொல்லு” என்றார்.
”...”
“ஃபேக்டரியில இருந்தா பேஜ் பண்ணு. ஹி ஷுட் பி ஹியர் எனி மொமண்ட்” என்று குரைத்துவிட்டு போனை வைத்தார்.

அவர் போனை வைப்பதற்காகவே காத்திருந்ததைப் போல அவர் செல்ஃபோன் அலறியது. எடுத்துப் பார்த்தார். புது நம்பர். யாராக இருக்கும் என்று யோசித்துவிட்டுச் சிவப்புப் பொத்தானை அழுத்தி கட் செய்தார். மீண்டும் அலறியது. அதே நம்பர். இந்த முறை பச்சைப் பொத்தானை அழுத்தி மெஜெஸ்டிக்காக “ஸ்ரீதரன் ஹியர்” என்றார்.

எதிர்முனை சொன்ன செய்தியைக் கேட்டதும் ஏசி அறையிலும் குப்பென்று வியர்த்தது.

“ஹூ ஆர் யு? வாட் டு யு வாண்ட்?” 
“...”

“ஹே! !ஹே ஹே!” என்று அவர் கத்தக் கத்த கட் ஆனது. பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து வழுக்கைத் தலையை அழுந்தத் துடைத்துக் கொண்டார். செல்ஃபோனில் இருந்த மகளின் நம்பரை டயல் செய்தார். “தி சப்ஸ்க்ரைபர் யு ஆர் ட்ரையிங் டு ரீச் இஸ் கரண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்” என்ற குரலைக் கேட்டதும் அவர் முகம் கருத்தது. 

சில நிமிடங்கள் கம்ப்யூட்டர் திரையையே வெறித்தார். திடீரென்று நினைவுக்கு வந்தவராய் செல்ஃபோனில் இன்னொரு எண்ணைப் பொதிந்தார். 
*************************
பிரசன்னா மல்டிப்ளெக்ஸின் வாசலில் இறங்கிக் கொண்டு “நீங்க போயிட்டு வாங்க ராஜன். நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு ஐ.ஜியைப் பாக்க பீச்சுக்குப் போகணும். 5:30க்கு வீட்டுக்கு வந்துடுங்க” என்று டிரைவரை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தான்.

வழக்கமாக அவள் நிற்கும் காப்பூச்சினோ கடை வாசலில் அவளைக் காணவில்லை. மறுபடியும் அவள் எண்ணைத் தொடர்பு கொண்டான். மீண்டும் ஸ்விட்ச்ட் ஆஃப் செய்தி. வெறுப்புடன் ஷூக்காலை தரையில் உதைத்துக் கொண்டான்.

“குட் ஈவினிங் சார். அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போனாங்க. நீங்க இப்ப வந்திருக்கீங்க?” வாலட் மாணிக்கம் நின்றிருந்தார். 

“என்ன மாணிக்கம் சொல்றீங்க? ஸ்ருஷ்டி போயிட்டாளா? எப்போ?”

“நான் அப்போ இல்லை சார். முத்து தான் திருப்பி எடுத்துக் கொண்டுவந்தான். ஏய் முத்து?” என்று தூரத்தில் நின்ற கட்டைத் தடியனைக் கை தட்டி அழைத்தார். 

ஓடி வந்த முத்து, “என்னண்ணே?” என்றான்

“அந்த ஸ்கோடால வந்த அம்மா எத்தனை மணிக்குப் போனாங்க?” 

“ஒரு அரை மணி நேரம் இருக்குமுங்கய்யா” பவ்யமாய்.

“ஷிட்” தன்னையே நொந்து கொண்டான் பிரஸன்னா. அப்போது அவன் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹல்லோ அங்கிள். எப்படியிருக்கீங்க?”
“...”
“வாட். நானும் அவளும் மல்டிப்ளெக்ஸ்ல சினிமா போறதா இருந்தது. நான் வரக் கொஞ்சம் லேட் ஆயிடுத்து. அவ கோவிச்சிட்டுக் கிளம்பிப் போயிட்டான்னு நினைச்சேன்”
“...”
“ஓக்கே அங்கிள். நீங்க அங்கருந்து கிளம்பி என் ஆஃபீஸ் வாங்க. அங்கதான் ட்ரேஸ் பண்ணக்கூட வசதியிருக்கு”
“...”
“உங்கள அங்க மீட் பண்றேன் அங்கிள்”

போனை கட் செய்தவன் உடனே இன்னொரு நம்பரை டயல் செய்தான். எதிர்முனை எடுத்ததும், “ராஜன். சாரி ராஜன். திரும்ப மல்டிப்ளெக்ஸ்கே வந்திருங்க. நான் ஆஃபிஸ் போகணும் மறுபடி”
“...”
“இல்லை. என் கிட்ட காரைக் குடுத்துட்டு நீங்க வீட்டுக்குப் போயிருங்க”
“...”
ராஜனுக்காகக் காத்திருந்த நேரத்தில் இரண்டு சிகரெட்டுகளைக் கொலை செய்தான். 

கார் மல்டிப்ளெக்ஸின் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் மிதித்தான். ராஜன் காரைஅவனுக்கருகில் நிறுத்திவிட்டு இறங்கி கதவைத் திறந்து பிடித்தார். டிரைவர் சீட்டில் தாவி ஏறியவன் அதே வேகத்தில் காரை வெளியே கிளப்பினான்.

மூன்றாவது திருப்பத்தில் சிக்னலில் நிற்கும் போது கண்ணாடியை யாரோ விரலை மடக்கித் தட்டினார்கள். திரும்பினான். ‘ஜெயராமன்’.

கண்ணாடியை இறக்கி, “என்ன ஜெயராமன். இந்தப் பக்கம்?”

“சார் நீங்க ஆஃபீஸ் போறீங்கன்னா, நானும் ஏறிக்கட்டுமா சார். ரொம்ப நேரமா நிக்கிறேன் ஆட்டோ எதுவும் கிடைக்கலை”

“ஏறிக்கோங்க ஜெயராமன். நோ ப்ராப்ளம்” 

ஜெயராமன் ஏறுவதற்கும் சிக்னல் விழுவதற்கும் சரியாக இருந்தது. முதல் கியரை மாற்றி காரை விருட்டென்று எடுத்தான் பிரசன்னா.
******************************
நீலாங்கரைக்கு அந்தப்பக்கம் கடலில் சற்று உள்ளே தள்ளி அந்த மீன்பிடிப் படகு நின்றிருந்தது. படகின் கம்பத்தில் இந்திய தேசியக் கொடி லேசாகக் கிழிந்து பறந்து கொண்டிருந்தது. படகு அலையில் வேகத்தில் மேலும் கீழும் ஆடிக் கொண்டிருந்தது. 

உள்ளே அவர்கள் ஆறு பேரும் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். மீன்களைக் கொட்டும் பெரிய பெரிய பெட்டிகள் அவர்களுக்கு முன்னால் திறந்து இருந்தன. மீன்களுக்குப் பதில் 8 கலாஷ்னிக்காவ்கள் அந்தப் பெட்டிகளை நிரப்பி இருந்தன. இன்னொரு பெட்டியில் அம்மோ க்ளிப் க்ளிப்பாகக் குவிக்கப்பட்டிருந்தன.

“அண்ணே போட்டை ஒரு இடத்துலயே நிறுத்தி வச்சிருந்தா கோஸ்ட் கார்ட்க்கு டவுட் வந்திரும். கொஞ்சம் மத்த படகு இருக்கிற எடத்துக்கு போகலாம்ணே” என்றான் அந்த கந்தல் சட்டை அணிந்த மாலுமி. சரி சரி என்பது போல கையை மட்டும் அசைத்தான்

அவர்களின் சற்றே உயரமாக இருந்தவன் கரகரத்த குரலில் பாடுவதைப் போன்ற இனிமையான அரபியில் பேச ஆரம்பித்தான். 

“நாம் அனைவரும் இங்கே எதற்காக வந்திருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறதா?”

மற்ற அனைவரும் மத்தியமாகத் தலை அசைத்தனர்.

“நாம் வந்திருப்பது ஒரு புனிதப் போருக்கு. நாம் செய்யும் இந்த செயல்கள் அல்லாவுக்கு பணிவிடை செய்வதற்குச் சமம். நம்மில் எத்தனை பேர் ஊருக்குத் திரும்பிப் போக முடியும் என்பது தெரியாது. ஆனால் நாம் செய்ய வந்த கடமையை முடிக்காமல் ஊருக்குப் போகக் கூடாது. புரிகிறதா?”


“புரிகிறது”

“அல்-ஜிஹாத் ஃபி சபில் அல்லாஹ்” 

“அல்-ஜிஹாத் ஃபி சபில் அல்லாஹ்” 

“நமக்கு உள்ளே இருந்து தகவல் வரவும் நாம் புறப்படத் தயாராக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தகவல் வரலாம்”. வெளியே சூரியன் தன் ட்யூட்டியை முடித்துக் கொண்டு கிளம்பத்தயாரானான். 
*********************************
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்