Showing posts with label அழைப்பு. Show all posts
Showing posts with label அழைப்பு. Show all posts

Thursday, December 16, 2010

இந்த நாள்..இனிய நாள்..

சிறு பூந்தூறல், ஒரு நொடி சில்லென முகம் தழுவிப் போகும் காற்று, உயர்தர செண்டை ஓரம் கட்டும் உழைப்பின் வியர்வை வாசம், நகர இறுக்கமோ கிராமத்தின் அமைதியோ விசுக்கென மரம்தாவும் கிளி ,களைத்த மனத்தை கண நேரம் களிப்புறச்  செய்ய தவறியதேயில்லை இவை.

ஆல விருட்சம் போல் தலைமுறை கலந்த ஒரு வீட்டின் திருமண விழா பார்த்திருக்கிறீர்களா? உறவு யார், நட்பு யார், ஊர்க்காரர் யார் ஒன்றும் தெரியாது. அவரவருக்கும் யாரும் எதுவும் சொல்லாமலே ஏதோ ஒரு கடமையில் ஒன்றுகூடி சிறப்பிக்கும் நிகழ்வு அது. ஒன்றிரண்டு சலம்பலையும் ‘விட்றா மாப்ள. நம்மூட்டுக் கலியாணம். நம்ம பஞ்சாயத்த அப்புறம் பார்க்கலாம். எலையப் போடலாமான்னு பாரு போ’என்று நீர்த்துப் போகச் செய்யும் லாவகம்.

சற்றும் புறமாய் உணரவிடாமல், ஆத்மார்த்தமாய் கை பிடித்து எங்களில் ஒருவன் நீ என செயலால் உணர்த்தும் மாயம்.

எழுத்தைப் படித்து எண்ணத்தில் வரைந்த கோட்டோவிய மனிதர்கள் சற்றும் ஒத்துப் போகாமல் புதிய பரிமாணத்தில் இதயம் புகும் இன்ப அதிர்ச்சி.

மொக்கையோ, மொண்ணையோ, அறச்சீற்றமோ, அரைவேக்காடோ, இலக்கியமோ, இலக்கணமோ, கும்மியோ, கருத்துப் பரிமாற்றமோ  உள்ளங்கை பொத்தி உற்றுக் கண்பார்த்து நட்பாய், உரிமையாய், உறவாய்ச் சிலாகிக்கும்/கண்டிக்கும்/நெறிப்படுத்தும் உணர்வு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நேரம்.

ஆம்! இதில் எதுவொன்றையும் திட்டமிட்டுச் செய்யமுடியுமா? அந்த நொடியின் நிகழ்வல்லவா அவை? எத்தனை வருடமானாலும் நினைவோடும் தருணங்களில் அதே சிலிர்ப்பைத் தரத் தவறுமா அவை? வாய்க்க வேண்டும். வாய்த்திருக்கிறது.

ஈரோடு பதிவர் சங்கமம் 2010ன் அழைப்பிதழைக் கண்டவுடன் என் அனுபவத்தின் நனவோடை இது. ஒரு இனிய விழாக்கால விடுமுறையை கூடினோம்,பேசினோம், பிரிந்தோம் என்றில்லாமல் பயனுள்ளதாக, பொறுப்புள்ளதாக அமைத்திருக்கும் பாங்கைப் பயன்படுத்திக் கொள்ளக் கசக்குமா என்ன? 

சங்கத்தினரின் அழைப்பிதழ் இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்

கடந்த ஆண்டு இதே மாதத்தில் எழுத்தால் மட்டும் சந்தித்து மகிழும் நண்பர்களை நேரில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தில் உருவான சங்கமம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மிக அழகிய வெற்றியை ஈட்டித் தந்தது.

இப்பொழுதுதான் கைகள்
பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.
சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.

ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்
நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்


காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர்கூடி இழுக்கும் தேர் இது.

சந்திப்போமா?