Showing posts with label வலிகள். Show all posts
Showing posts with label வலிகள். Show all posts

Friday, January 22, 2010

உணர்வு மறக்கும் உறவுகள்.

ஆறேழு மாதமிருக்கும். ஒரு நாள் உரக்க என் பெயர் கூறி அழைத்தவாறே என் அறைக்குள் வந்தார் அந்த நப்ர். உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்குடா என்ற ஆத்மார்த்த சிரிப்புடன் கை கொடுத்தார். நீர்க்காவி வேட்டி. தோளில் மூக்குப் பொடி கறையுடன் ஒரு காசித் துண்டு. அழுக்கான சட்டை. கையில் ஒரு துணிப்பை.

ஆடை மட்டுமே அழுக்கு. நெடுநெடுவென்ற உடல்வாகு. மெலிந்த தேகம். மணக்கும் திருநீற்றுடன் 20வயது வாலிபனின் துடிப்போடு இருந்தவருக்கு வயது 80க்கு சமீபம் அல்லது கூட இருக்கலாம்.

தும்பைப்பூ வேட்டியும், ஆர்மிக்காரன் மடிப்பில் மடிப்பு கலையாத ஸ்லாக் ஷர்ட்டும், காலரில் அழுக்குப் படாமல் கைக்குட்டை வைத்தபடி கும்பகோணம் வெற்றிலையும், மூக்குப் பொடி வாசனையும், சித்தநாதன் விபூதியுமாய் மணந்தவரா இவர்?

மைப் பேனா தாண்டி, பால்பென் வந்த காலத்திலும் கட்டைப் பேனாவில் மைப்புட்டிக்குள் விட்டு தோய்த்து காலிக்ராஃப் மாதிரி  எழுதும் அச்சடித்த எழுத்துக்களின் சொந்தக்காரர். ஒரு அடித்தல், திருத்தல், பிழையிருக்காது.

ரிடையரானபின் வேறு ஊரில் இருந்தவர் மகனின் வற்புறுத்தலால் மகனுடன் வந்து விட்டதாகவும், மனு எழுதிக் கொடுப்பது, பத்திரிகையாரிசியருக்கு கடிதம், கன்ஸ்யூமர் கோர்ட் விவகாரங்கள் என்று சோம்பலின்றி உழைப்பதாகச் சொன்னார்.

யாராவது தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்களான்னு வந்தேன். நீயே இருக்க. சிரமம் பார்க்காமல் இதெல்லாம் கொஞ்சம் அட்டெஸ்ட் பண்ணிக் கொடுடா என்று 50-60 காகிதங்களை நீட்டினார். மகன் எப்படி பொறுப்பின்றி வீட்டு வரி, தண்ணீர் வரியெல்லாம் கட்டாமல், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட் கேட்காமல் இருக்கிறான் என்று செல்லமான வாஞ்சையுடன் கடிந்து கொண்டார். அதற்காகத்தான் இவ்வளவும் என்றார்.  எல்லாம் முடிந்து ஆசி கூறி கிளம்பியவரில் தந்தைக்கான ஒரு கர்வமிருந்தது.

இன்று டாய்லெட் சென்று வருகையில் காரிடாரில் மீண்டும் அவர். அருகில் சென்று வணக்கம் கூறியதும் வாடா என்றவரின் குரலில் நடுக்கம். கண்ணில் நீர் கோர்க்க, உதடு துடிக்க, போன 8ம் தேதி சூசைட் பண்ணிண்டிருப்பேண்டா. அரை மணி யோசிச்சேன். இருந்தவரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கலை. செத்துப் போய் போலீஸ் கேசுன்னு என்னால எதுக்கு கஷ்டம்னு இருந்துட்டேன் என்றபோது அதிர்ந்து போனேன்.

எம் பையன் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிட்டாம்பா. நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்காம். வயசான காலத்தில ஒரு மூலையில இல்லாம, எப்போப் பாரு எழுதறேன், படிக்கறேன்னு வீடு முழுக்க பேப்பர். இறைஞ்சி கிடக்காம். ஊர சுத்திண்டு வரன்னு சண்டை போட்டான். வீடு போறலை, மாடிக்கு ஏன் போறன்னு எல்லாம் சண்டை போட்டான்.

கட்டின வேட்டி, பனியனோடு வெளியே தள்ளிவிட்டான். காசு, என் பேங்க் பாஸ்புக், எல்லாம் எடுத்துக்கறேன். மாத்து துணி கூட இல்லாம எங்கடா போவேன்னு கேட்டா உள்ள வந்தா பெல்டால அடிப்பேன்னு பேரனை கூப்பிட்டு பெல்ட் கொண்டுவான்னு சொன்னாண்டா என்று கதறிவிட்டார்.

என் உயரத்துக்கு குறுகி, தோளில் சாய்ந்து கதறுபவரை என்ன சொல்லி நான் தேற்ற? ஏதும் பேசாமல் முதுகை நீவி விட்டபடி குரல் உடைய அழாதீங்க சார். புரிஞ்சிப்பாங்க என்ற போது மெதுவே தலை தூக்கி, போடா! அவன் புரிஞ்சிண்டு என்னாகப் போறது. என் வலி புரிஞ்சதே உனக்கு. உன் ஆறுதல் போறும் போடா.

நான் திரும்ப ஊருக்கு போறேன். வைஃப் பிள்ளையோடதான் இருப்பேன்னுட்டா. நான் 4 பேருக்கு சமைப்பேன். சாமி, பட்டா தர அலைய விடறான் சாமின்னு யாரோ வருவான். என் காலம் போய்டும். திரும்ப உன்னைப் பார்ப்பேனோ தெரியாது. 

தலையில் அடிபட்டு, சித்த சுவாதீனமில்லாத மகள் இருக்கிறாள். பென்ஷனுக்கு நாமினேஷன் கொடுத்துட்டேன். புக்குல எண்ட்ரி போடுன்னா, அந்த நேரம் வரும்போதுதான் மெடிகல் செக்கப் பண்ணி போடுவானாம். டிபார்ட்மெண்ட் ஆஃப் பென்ஷன், ரயில்வே போர்ட், ப்ரெசிடெண்ட்னு எழுதி கிழிக்க மாட்டேன்?

வயசான காலத்தில என்னமா அல்லாட விடறானுங்கடா. எப்பவாவது பேச தோணினா பேசறேன், செல் நம்பர் கொடு என்று வாங்கிக் கொண்டு நடந்தவரின் நடையில் அந்த மிடுக்கும் கர்வமும் காணவில்லை. தன்னம்பிக்கை மட்டும் குறையவேயில்லை.

நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.


Wednesday, November 18, 2009

அழுவாச்சி காவியம்



யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் சுட்டப்பட்டது


ஏங்க நான் மௌனமா அழுறது உங்களுக்கு கேக்குதாங்க. ம்கும். கேட்டுட்டாலும். ரஜனிக்கும் கமலுக்கும் விருது குடுக்கற வேலையெல்லாம் இருக்கு. டி.வில பார்த்தாவணும். உங்களுக்கு இருக்கிற வேலையில என் அழுகைய வேற தேடி கேக்கப் போறீங்களாகும். நானே சொல்லிடுறேங்க. முடிஞ்சா சேர்ந்து அழுங்க. இல்லாட்டி மா.ஆட..பாருங்க, யூ டியூப்பில.

பேப்பர் படிக்காதடா வானம்பாடின்னு பட்சி சொல்லிச்சி. கேட்டாதானே. எழவெடுத்த பேப்பர படிச்சாதான் காலைல ஒழுங்கா போவுது. மனசுக்குள்ள என்னால்லாம் வில்லங்கமா கேள்விங்க வருது?

  1. எங்க தலீவரு எவ்வளவு நிதானமா எல்லாம் யோசிச்சி வருத்தப் பட்டு அழுதா, ந்ங்கொய்யால பரதேசி மனசு கேக்குது, தலீவர கேட்டு சொல்லவாம். சகோதரன் கணக்கு கேட்டா வெளிய தள்ளுனதாலதான அவரு கட்சி ஆரம்பிச்சி, ஆதரவு குடுத்து இத்தினி வருஷம் போராடினாங்க. சமாதானமா போய் இருந்தா, தலீவரே சி.எம். ஆ இருந்திருப்பாரு. வேற வழி இல்லாம பிரபாகரன் இவரு சொல்றத கேட்டு போடுங்கம்மா ஓட்டுன்னு போராடி இருப்பர்லடா வானம்பாடி. கேளுங்குது நான் யார போய் கேக்க?
  2. மாத்தையா மேட்டரு நியாயம்தானடா மனசாட்சிங்குறேன், போடா வெண்ண, போனவாரம் தினத்தந்தில ஈழ வரலாறில வந்திச்சேடா. கிட்டு கத என்னான்னு கேள்றாங்குது.
  3. ரனில் சொன்னததானடா தலீவரு சொல்றாருங்கரேன். அவன் இருந்தப்ப என்னாடா கிழிச்சிட்டான் கேள்றா புறம்போக்குன்னு திட்டுதுங்க.
  4. சரிடா. போனது போவட்டும், எதிராளி பலம் துல்லியமா தெரிய வேணாமான்னு கேட்டது நியாயம்தானடான்னா, ஏண்டா பேமானி, ஆளுங்க போனது, ராடார் குடுத்தது, ஆயுதம் குடுத்தது உண்மைதான்னு பேப்பர்ல வருது இதெல்லாம் உங்க தலைவருக்கு தெரியுமா தெரியாதான்னு கேள்றாங்குது. 
  5. ரனில் தோத்ததால செத்தாங்களா, ராஜஎச்சைக்கு பிச்ச போட்டு இடுப்பு புடிச்சதால செத்தாங்களா கேள்றா மாங்கொட்ட மண்டையாங்குது.
  6. அட சீ! மனசாட்சியாடா நீ. கொஞ்சமாவது ஈரம் இருக்கா. இப்புடி பேசுறியேன்னா, வாணாம்பா, எனக்கு ஈரம் இல்லன்னே வெச்சிக்க. அரைநாள் உண்ணாவிரதத்துக்கு அப்புறம் எத்தினி குழந்தைங்க, பொண்ணுங்க, கிழடுங்க செத்துச்சே எல்லாமே போராடிதான் செத்துச்சா. சகோதர கட்சி கூட இணக்கமாதானே இருந்தாங்க. இப்புடி எல்லாரையும் போட்டு தள்ளாதீங்க. அதுங்கள வர விடுங்கன்னு எதுனா சொன்ன கவனம் இருக்கான்னு துப்புது.

    அதெல்லாமாவது பரவால்லைங்க. கடசியா கேட்டுது பாருங்க கேள்வி. ஏண்டா வட்டப்பாற மண்டையா, அத்தினி பேரு செத்தது தெரியல, விழாம போன ஓட்டு கணக்குதானடா தெரியுது. அதனாச்சும் கேள்றாங்குது.

    அதனால, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி நான்பாட்டுக்கு விருது நிகழ்ச்சில கேட்வாக் பார்த்து அவரை (அட மனசாட்சிங்க) தேத்திக்கிறேன். வர்ட்டா


    Monday, October 12, 2009

    பெற்ற பிள்ளையா? தத்துப் பிள்ளையா?

    பார்த்து தான் தீருவேன் என்றால் சொடுக்குங்கள்.



    போன வாரத்தில் ஒரு காலை நாளிதழில் வந்த கலங்கடிக்கும் செய்தி இது. தூத்துக்குடி அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவர் மனைவியும் அவரின் தாயும் கழுத்தைத் திருகி கொன்றிருக்கிறார்கள்.

    குறைப் பிரசவமானாலும் கிட்டத்தட்ட 2 கிலோ எடையுடன் இன்குபேட்டரில் இருந்த குழந்தைகளை பாலூட்ட அனுமதித்த போது முதலில் ப்ளேடால் அறுத்துக் கொல்ல முயன்று பிறகு இப்படிக் கொன்றார்களாம். காரணம் அவர்கள் பெண் குழந்தைகள்.

    கருவிலிருக்கும் குழந்தை பெண் எனத் தெரிந்தால் கருக்கலைப்புச் செய்வதால் குழந்தைகளின் பால் குறித்த தகவல் சொல்லப் படக்கூடாது என்ற சட்டம் சரியாக இருக்கலாம். பிறந்த பிறகு இப்படிக் கொடூரமாக கொல்லத் துணிவார்களேயானால் அந்தச் சட்டம் எதிராகவல்லவா இருக்கிறது?

    தாய் சேய் நலத்துறை கருவுற்ற/பிரசவித்த பெண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப் படுகிறதேயல்லாமல் இந்த மாதிரி பெற்றும் வளர்க்கத் தயாரில்லாத பெற்றோர்களிடமிருந்து குழந்தையைக் காக்க ஏதும் அமைப்பிருக்கிறதா தெரியவில்லை.

    மேலை நாடுகளில் தந்தையின் குடிப்பழக்கம் அல்லது தாயின் இயலாமையினால்  குழந்தை வளர்ப்பில் குறைபாடுகள் இருப்பின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் குழந்தையை உரிய முறையில், சகல வசதிகளுடனும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுப் பாதுகாக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இங்கு அதற்கான எந்த வழிகாட்டலும் அமைப்பும் இல்லாத நிலையில் இத்தகைய அறைகுறை சட்டங்களால் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?

    அரசு காப்பகங்கள், மற்றும் தனியார் காப்பகங்களில் கொடுத்து விட்டால், வருமானம் இருக்கிற பெற்றோர் இதற்கான கட்டணத்தைச் செலுத்த சட்டம் வேண்டும். அதற்கும் வழியற்றவர்களுக்கு அரசே மானியம் வழங்கலாம். இந்தக் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்துக் கொள்ள வழியிருப்பதால், அந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்படும் வரையிலான காலத்துக்கு கட்டணமோ மானியமோ தேவைப்படும்.

    த‌த்தெடுப்ப‌து குறித்தும் இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன்னால் ப‌த்திரிகையில் ஒரு செய்தி வ‌ந்த‌து. மும்பையைச் சேர்ந்த‌ ஒரு ந‌டிக‌ர் த‌ம்ப‌திக‌ளுக்கு ஒரு பெண் குழ‌ந்தை இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் த‌த்தெடுத்த‌ இர‌ண்டாவ‌து குழ‌ந்தை ச‌ட்ட‌ பூர்வ‌மான‌து என்ற‌றிவிக்க‌க் கோரி மும்பை உய‌ர்நீதி ம‌ன்ற‌த்தில் தொடுத்த‌ வ‌ழ‌க்கில் அவ‌ர்க‌ளுக்குச் சாத‌க‌மாக‌ தீர்ப்பு என்ப‌து.

    ஒரு ந‌டிக‌ருக்கு இன்னொரு பெண் குழ‌ந்தை த‌த்தெடுத்து வ‌ள‌ர்ப்ப‌தில் என்ன‌ பெரிய‌ ச‌ட்ட‌ச் சிக்க‌ல் இருக்கிற‌து என்று தேடிய‌ போது விழி பிதுங்கிப் போனது. இந்து த‌த்தெடுப்பு ம‌ற்றும் ப‌ரிபால‌ன‌ச் ச‌ட்ட‌ம் 1956 (மொழி பெய‌ர்ப்பு ச‌ரியா தெரிய‌வில்லை) பார்த்த‌ போது அதிர்ந்து போனேன்.


    அர‌த‌ப் ப‌ழ‌ச்சான‌ இந்த‌ச் ச‌ட்ட‌ம் சொல்வ‌து என்ன‌?

    விதி 11 (1) ஆண் குழ‌ந்தையை தத்தெடுக்க விரும்பினால் அந்தத் தந்தைக்கோ தாய்கோ மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ சட்டபூர்வமான இரத்த உறவிலோ அல்லது தத்தெடுத்ததன் மூலமோ இருக்கக் கூடாது.

    விதி 11(2)பெண் குழந்தையானால் அந்தத் தந்தைக்கோ தாய்க்கோ இன்னொரு பெண் அல்லது மகனுக்கு பெண் இரத்த உறவிலோ அல்லது தத்து மூலமாகவோ இருக்கக் கூடாது.

    இந்த இரண்டாவது விதியை எதிர்த்துத்தான் வெற்றி. கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்வமற்ற குழந்தைப் பேறு, மற்றும் பெண் சிசுக் கொலை என்று இவ்வளவு நடந்தும் 52 ஆண்டுகளாக ஒரு சட்டம் நடைமுறைகேற்ப எந்த மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது பெரிய அதிர்ச்சி.

    இப்பொழுது கூட இது ஒரு தனிமனிதனின் வெற்றியே தவிர சட்டத் திருத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுமா என்பது கேள்விக் குறியே. பெரிய பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

    தெருவோர வாசிகளில் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தாயிழந்த ஒரு பிள்ளை அழுது கொண்டிருக்க, அதன் தந்தை குடித்துவிட்டு மயங்கி கிடக்க, ஒரு தாய், தோ அழுவுது பாரு, அதக் கூட்டியா. அவங்கப்பன் எப்போ தெளிஞ்சி அதுக்கு நாஷ்டா குடுக்குறது என்று தண்ணி சோற்றை ஊட்டி விட்டார். அவர்களுக்கும் இது பிரச்சனையில்லை. அவன் விட்டு ஓடினால் கூட யாரோ வளர்த்து விடுவார்கள்.

    சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.

    இதில் இவ்வளவு சட்டச் சிக்கல் இருந்தால் எப்படி? இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

    Friday, October 9, 2009

    உங்களுக்கு என்ன பெயர்?

    உடைக்காய்
    உணவுக்காய்
    உறவுக்காய்
    உள்ளம் கொன்று உடல் விற்றாளாம்!

    கைது செய்கையில் கதறினாளாம்!
    பெற்றவளும் அவள் பெற்றதும்
    பேசாமல் நின்றார்களாம்!
    எத்தனை வக்கிரம் எழுத்துக்குள்

    கறுப்புத் துணி கொண்டு
    கண் மறைத்தாளாம்
    கண்டனம் தெரிவிக்கும்
    கனவான்கள்..

    சீருடை அணிந்த சிங்கள நாய்கள்
    கருவறுத்து உடை கிழித்து
    சீரழித்த போது எங்கே போனதடா
    உங்கள் பத்திரிகை தர்மம்.

    சுதந்திரத்தின் குரல்
    நெறிக்கப் படுகிறதாம்!
    இப்படித்தானே கதறினார்கள்?
    என்ன செய்தாய் நீ?

    எச்சில் இலைக்கு நீ
    ஏங்கித் தவித்து
    இனம் விற்றதை விடவா
    அவள் உடல் விற்றது அவலம்?

    அவளுக்குப் பெயர் விலைமகள்.
    காசு செலவின்றி
    காமம் விற்று கஜானா நிரப்பும்
    உங்களுக்கு என்ன பெயர்?

    ______

    Saturday, September 19, 2009

    வாத்தி வேலைக்குப் போறதுக்கு வாத்து மேய்க்கலாம்.

    காலையில் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். வெளியில் தொங்கிய போஸ்டரிலேயே வெடிகுண்டு மாதிரி செய்தி. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் டீச்சர் திட்டியதால் தற்கொலைன்னு. பக்கத்துலயே டீக்கடை. அங்க நிக்கிறவங்க முன்னாடியே பேப்பர் வாங்கி படிச்சிகிட்டு அதுல ஒரு ஆளு திட்டுன திட்டு இருக்கே. செய்தி படிக்காததால அப்பொழுது கோபம் வந்தாலும், பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கிற மாணவனுக்கு தற்கொலை பண்ற தைரியம் எப்படி வந்தது?

    வீட்டுக்கு வந்ததும் முதல்ல செய்தியைப் படித்தேன். 4வது முடிந்து இப்போது தான் காலாண்டு பரீட்சை முடிந்திருக்கிறது.  ஆசிரியை சொன்னாராம் சரியாகப் படிக்கவில்லை என்றால் திரும்ப நான்காவது வகுப்புக்கே அனுப்பிவிடுவேன் என்று. பயபுள்ள அழுதுகிட்டே மதியம் வீட்டில் வந்து சொன்னானாம். அம்மாக்காரி நான் ஆசிரியை கிட்ட கேக்குறேன்னாங்களாம் எப்படி அப்படி சொல்லலாம்னு. இவருக்கு சாப்பாடு வாங்க(?) கடைக்குப் போக இவரு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்து விட்டாராம். ஆசிரியை தற்கொலைக்குத் தூண்டினார்னு அம்மாக்காரி போலீசில் புகார் கொடுத்தார்களாம். அதன் அடிப்படையில் ஆசிரியர் கைதாம்.

    மேலோட்டமாக ஏதோ என்று விடும் விஷயமாகத் தோன்றவில்லை எனக்கு. சரியாக படிக்காத ஒரு சிறுவனை இதை விடக் குறைந்த பட்சமாக என்ன சொல்லிவிட முடியும்? எந்த விதத்தில் இது தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்? ஆசிரியர் ஊக்குவித்திருக்க வேண்டும் என ஒரு கட்சி வாதிடலாம். பொறுங்கள். அந்தக் குழந்தை வந்து இப்படிச் சொல்கிறார்கள் எனக் கூறியதற்கு தாய் கூறிய பதில் என்ன? நான் ஆசிரியையைக் கேட்கிறேன் என்றால், தன் பிள்ளை படிக்காதது பெரிய விடயமில்லை என்றுதானே அர்த்தம்?

    ஆசிரியை மிரட்டியது தவறு என்ற எண்ணம் அல்லவா அந்தப் பிஞ்சு நெஞ்சில் பதிந்திருக்கிறது. நீ ஏன் படிக்கவில்லை? படிக்கவில்லை என்றால் என்னாகும், நன்றாகப் படித்தால் ஏன் நான்காவது வகுப்புக்கு அனுப்பப் போகிறார்கள். இனிமேலாவது கவனமாகப் படிக்க வேண்டும் என்று அந்த அம்மா ஏன் சொல்லவில்லை? தற்கொலைக்குத் தூண்டியதாக யாரையாவது சுட்ட வேண்டுமானால் அந்த அம்மாவைத்தான் சுட்ட வேண்டும்.

    ஐந்தாவது படிக்கும் மாணவனுக்கு தற்கொலை என்பதோ அதன் விளைவோ தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருக்கும் என்றால், தீக்காயம் எவ்வளவு கொடுமை என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்து திரும்ப நான்காவது போவதை விட சாவது மேல் என அவன் தீர்மானம் செய்யுமளவுக்கு தெளிவானவனா? அப்படியானால், சரியாகப் படித்தால் போதும் என்றல்லவா தீர்மானித்திருக்க வேண்டும்.

    ஆக, நான் பள்ளியில் சேர்ப்பேன். கட்டணம் செலுத்துவேன். என் குழந்தை படிக்கிறதோ இல்லையோ. கண்டிக்கக் கூடாது. அப்படி ஒரு வேளை ஃபெயிலாகி விட்டால் அப்பொழுதும் ஆசிரியரைத்தான் கிழிப்பார்கள். சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை என்று. மறு புறம் பள்ளிக்கு அழுத்தம். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கைது செய்வது; பிறகு தான் பொறுப்பில்லை என விடுதலை ஆனாலும், எந்த பத்திரிகையும் ஆசிரியை நிரபராதி என செய்தி வெளியிடப் போவதில்லை. அந்த ஆசிரியைக்கு மாணவர் மேல் என்ன அக்கறை இருக்கும்? என்ன வேண்டுமானாலும் எழுது. நீ பாஸ் என்று தானே இருப்பார்கள்?

    எழவெடுத்த சீரியலும் அதை உட்கார்ந்து பார்க்கும் வீட்டுப் பெரியவர்களும் தான் தூண்டியவர்கள். கலகலப்ரியா வாயிலாக குழந்தை வளர்ப்புக்கான பெற்றோருக்கு அயல் நாட்டினர் வெளியிட்ட (தமிழில்!) ஒரு கையேடு காண நேர்ந்தது. வயது வாரியாக குழந்தைகளை ஊடகங்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று. வன்முறைக் காட்சிகளே நீண்ட நாள் நினைவில் குடிகொள்ளும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் இங்கே, அத்தை சாப்பாட்டுத் தட்டை எறிந்து திட்டினாள் என்ற சொத்தைக் காரணத்துக்காக மருமகள் சமையலறையில் மண்ணெண்ணெய் டின்னை பார்ப்பதில் தொடர் முடியும்.

    பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் கொளுத்திக்கப் போறா என்று அத்தையை திட்டுவதும், மாட்டாள் என்று மாறாகவும் வாதம் செய்துக் கொண்டிருப்பார்கள். அடுத்த நாள் காத்திருந்து விலேவாரியாக  மண்ணெண்ணெய் எப்படி ஊற்றிக் கொள்ள வேண்டும், யாரும் காப்பாற்றி விடாமல் சன்னல், கதவு எல்லாம் எப்படி தாளிட வேண்டும், எப்படிக் கொளுத்திக் கொள்ள வேண்டுமென செய்முறை விளக்கம் காணலாம். ஒரு க்ராஃபிக்ஸில் நெருப்பும், மற்றவர்கள் பதறி கதவைத் திற என அலறுவதும் மட்டுமே காண்பிக்கப் படும்.

    பார்ப்பவர்களுக்கு, எரிகிற உயிரின் வலியோ அவஸ்தையோ மறைக்கப் படும். அதைப் பார்க்கும் அந்த வயது சிறுவனுக்குப் புரிதல் எந்த அளவில் இருக்கும்? நான் கொளுத்திக் கொண்டால் மற்றவர்கள் பதறுவார்கள். எனக்காக அழுவார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். இது ஒரு மிரட்டலாக பின்விளைவை அறியாமல் செய்யத் தூண்டி இருக்க வேண்டும்.

    மகிழ்ச்சியாக இருக்கிற மனநிலை உள்ளவன் இப்படி எழவெடுத்த அழுகை சீரியல் பார்க்கப் போவதில்லை. மனம் குமைந்துக் கொண்டிருப்பவர்களும் என் கதையே பெரிய எழவாப் போச்சு. இதுல இத வேற பார்த்து அழணுமா என்று பார்க்கும் மன நிலையில் இருக்கப் போவதில்லை. இதிகாச படங்கள், நாடகங்கள், காலட்சேபங்கள் இருந்த நாட்களிலும் மக்கள் போய் பார்த்து பிழியப் பிழிய அழுது கொண்டு வந்தாலும், கடவுளுக்கே இவ்வளவு கெரகம் புடிச்சி ஆட்டி இருக்கு. நாம எம்மாத்திரம்? சரியாயிடும் என்ற மனோநிலை இருந்தது. இப்போதோ சின்ன மனத் தாங்கலுடன்  தொலைக்காட்சி சீரியல் பார்த்தாலுமே இப்படித் தூண்டுதலாக அமையுமோ எனத் தோன்றுகிறது.

    சீரியலுக்கு ஏன் தணிக்கை இல்லை? வன்முறை என்பது மிகப் பரந்த வட்டத்துக்குள் வந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்தில் ஊடகத் தணிக்கை மிக அவசியமென்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம், எழவு என்று எவனாவது கிளம்பினால், குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும். விளம்பரக் காசிலேயே குறியாய் இருக்கும் நாய்களுக்கு தன் வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் இது உறைக்கப் போவதில்லை. ஒட்டு மொத்தமாக அத்தனை உயிர்கள் போனதை எதிர்க்கத் துணிவில்லாத, கைக்கூலி ஊடகங்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசஎன்ன தகுதி இருக்கிறது?

    இப்படியே போனால், வாத்தி வேலைக்குப் போகிறத விட வாத்து மேய்த்து பிழைக்கலாம் என்று ஆகி விடும். விவசாயம் போயாச்சு. கல்வியும்  கடனே என்றானால் விளங்கிடும் எதிர்கால சந்ததி. 

    Tuesday, September 15, 2009

    வலிகளும் சுகமே..

    வார்த்தைகளுக்கு இங்கே வேலையில்லை. வலிகளும் சுகமே:

    Sunday, September 13, 2009

    உக்காந்து யோசிப்பாய்ங்களோ?..

    இந்தியாவின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் குப்பை பொறுக்கி பிழைக்கும் சிறுவர்களிடமும், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவர்களிடமும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பெருமைப் பட முடியவில்லை.

    உங்கள்ள டூ வீலர் வெச்சிருக்கிறவங்க மெகானிக் ஷாப்ல சர்வீசுக்கு விடும்போது பார்த்திருப்பீங்க. பெட்ரோல் டாங்க்ல இருந்து பெட்ரோல் எடுக்க வாண்டுப் பசங்க போட்டி போட்டுகிட்டு ஓடி வருவாங்க. விஷயம் என்ன தெரியுமா? பெட்ரோல் உரியறதில ஒரு ட்ரிக் கண்டு பிடிச்சிருக்குங்க பரதேசிப் பயபுள்ளைங்க. உசுக்குனு உரியறபோதே கொஞ்சம் ஆவியாகி நுரையீரலுக்குள்ள போறா மாதிரி உறிஞ்சா, போதை வருமாம். அதுக்குத்தான் போட்டா போட்டி. ஏண்டா இப்புடின்னா மெகானிக் அண்ணன் ஸ்பேன்னர்ல அடிக்கிற வலி. வேல செய்யிற வலி தெரியாம இருக்கவாம். இந்த போதைல 12ம் நம்பர் ஸ்பேன்னர் கேட்டா 14 குடுத்துட்டு அதுக்கும் வாங்குவானுங்க.

    ஃபெவி பாண்ட்னு ஒன்னு. சைகிள் டியூப், ஓட்ட ஒடசல் ஒட்றதுக்கு கண்டு பிடிச்சது. கண்டு பிடிச்சவன் நினைச்சிருப்பானா. இந்தப் பய புள்ளைங்க இதுலயும் போதை வர வைப்பானுங்கன்னு. இன்னைக்கு தினத்தந்தில ஃபோடோ  கூட செயல் முறை விளக்கம். ஒரு 12 வயசு பயபுள்ள அண்ணா நகர்ல நடு வீதில ஒரு பாலிதீன் கவர்ல ஃபெவிபாண்ட் பசைய பிதுக்கி கசக்கி அப்பப்ப வாய வெச்சி உறிஞ்சி கொஞ்ச நேரத்துல போதை தலைக்கேற தானே பேசிண்டு பாடிண்டுன்னு இருந்திச்சாம். நம்மூர்லதான் காகா கரண்ட் கம்பில அடிபட்டு விழுந்தாலே நாட்டாமைய கூட்டி நாள் கணக்கா கூட்டம் போட்டு பேசுவமே. அப்படி இவனையும் சுத்திகிட்டாங்களாம்.

    அய்யா போதை தெளிஞ்சி டெமோ பண்ணி காண்பிச்சி விளக்கினாராம். வீட்டாண்ட 8, 9 வயசு பசங்க கத்து குடுத்தாங்களாம். கோட்டர் காசு அதிகமாம். பசங்களுக்கு குடுக்க மாட்டாங்களாம். இது சீப்பாம். போதை அதிகமாம். கைல ரேஷன் கார்டு வச்சிருந்தானாம். அது எதுக்குடான்னு ஒரு மண்டையனுக்கு குடைச்சல். கேட்டதுக்கு பயபுள்ள சொல்லி இருக்கு. அம்மா ரேஷன் வாங்க சொல்லி காசு குடுத்திச்சாம் 100 ரூ. 20 ரூபாய்க்கு ஃபெவிபாண்ட் வாங்கிட்டானாம். ரேசன் வாங்க மாட்டானாம். கேட்டா தொலைஞ்சி போச்சின்னு பொய் சொல்லிக்குவானாம். வர்ட்டான்னு சொல்லாம போய்ட்டானாம்.

    இனிமே ஃபெவிபாண்ட் பிச்சிக்கும். பான்பராக்கும், கைனியும் தடை செய்யப்பட்டதுன்னு சொல்லியும் 5 வயசு பையன்ல இருந்து எல்லாரும் அதோடயே அலைறாங்க. மாவா கடை ஒண்ணுதான் லோகத்துலயே போர்ட் இல்லாம நடக்குறது போல. கார் டியூப்ல கண்ட கசமாலத்தையும் போட்டு வரட்டு வரட்டுன்னு தேய்ச்சி, சவரன் கணக்கா குடுக்குறான். போலிசுக்காரங்களுக்கு தனி பேக்கேஜ் ரெடியா எடுத்து வைக்கிறான். ஓசிக்கே, டாய், சும்மா ஏதோ கலக்குறியா? சப்பையா இருக்குன்னு ஓபனா மிரட்டல் விட்டு வாங்கிக்கிறானுங்க.  போற போக்க பார்த்தா அரசாங்கமே இப்படி கண்டதையும் உபயோகிச்சி பசங்க கெட்டு போகுதுங்க,அதனால சின்ன பசங்களுக்குன்னே டாஸ்மாக் ஜூனியர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்.
    ****

    Sunday, August 30, 2009

    வெற்றிடம்.

    காலை எழுந்திருக்கும் போதே மனது சரியில்லை.
    குடித்த தேநீர் சூடில்லை.
    பத்திரிகை வரவில்லை
    குளிக்கையில் பாதியில் நீரில்லை.
    நேரமானதில் காலை உணவில்லை.
    அவசரத்தில் கைபேசி எடுக்கவில்லை.
    புகுந்து போகவில்லையென ஆட்டோக்காரன் ஏசியது உறைக்கவில்லை.
    அலுவலகத்தில் சொன்ன காலை வணக்கத்தில் உற்சாகமில்லை.
    வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை.
    வேலை சேருமே என்ற பதைப்பில் பொறுமையில்லை.
    நைந்த மனதில் மதிய உணவும் செல்லவில்லை.
    கொடுத்த ஆணையை மறந்து எகிறும் அதிகாரியை எதிர்க்கத் துணிவில்லை.
    முடியாத இலக்கை நிர்ணயிக்கும்போது பொங்க முடியவில்லை.
    அவசரப் பணி இருந்தும் ஐந்து நாள் விடுமுறை கேட்பவனை அறையவில்லை.
    களைத்துச் சலித்து வீடு திரும்புகையில் உட்கார இடமில்லை.
    மௌனமாய் உணவுண்டு கண்மூடித் துயில முயல்கையில் நித்திரை வரவில்லை.

    மனது கேட்கிறது!
    எத்தனை முறை இப்படி இருந்திருக்கிறேன்?
    சுயநல உலகில்
    பர்கின்ஸன்ஸால் நினைவழிந்து
    கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
    ஊசலாடிய உணர்விலும் கூட‌
    கடந்து போகையில் கை பிடித்து
    தவறாமல் என் வலியுணர்ந்து
    ஏனடா? ஏதோ மாதிரி இருக்கிறாய்
    என்று கேள்வியடுக்கிய என் அம்மாவுக்கு
    சலிப்பாய் சொன்ன பதில் எல்லாம்
    தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? தூங்கு என்பதுதான்.

    பாவி மனது இப்போது பரிதவிக்கிறது
    ஒன்றும் சொல்லாமல்
    மூப்பும் நோவும்
    மருந்தும்,அம்மாவுமாய்
    கலவையான‌ வாசனையில்
    அவள் மடி புதைந்து
    மீண்டும் குழந்தையாக
    வழியிருந்தபோது தொலைத்த நாட்கள்!

    அம்மா இல்லை!
    ஆறுதல் இல்லை
    தொலைத்த வலியோ
    தொலையவில்லை!
    _________________________________

    Friday, August 21, 2009

    ஞானக் கிணற்றிலோர் அஞ்ஞானக் குழி..

    (இந்த இடுகை யாரையும் புண்படுத்தவோ, அவர்களின் நம்பிக்கையைகொச்சைப் படுத்தவோஎழுதப்படவில்லை. மிகச் சிறுவயதிலிருந்துகிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பார்த்து அனுபவித்தவலிகளின் வெளிப்பாடு. குற்றஉணர்ச்சியைக் காசாக்கும் கேவலம் தந்த வலி. கடமையை காசால்அடிக்கும்கயமைத்தனத்தைப் பார்த்த வலி. கை பிடித்து வழி நடத்தும் புனிதத்தொழிலை காசுக்குவிற்கும் அவலத்தினை அனுபவித்து எனக்குள் புதைத்தவலி. நான் நாத்திகன் அல்ல. இந்த வலிதாங்காமல் என்னதான் இது எனத்தேடித் தேடிப் படித்து, பலரைக் கேட்டறிந்த பின் இந்தக்கயமையை தாங்காதவலிகள். )

    யாகத்துக்கு கறுப்புப் பூனை தேடிய சாமியார் கதை தெரியும் தானே. (தெரியலைன்னா அதில ஒரு இடுகை போடுவோம்ல )

    இன்றைக்கு நாம் செய்யும் சடங்குகளும் இப்படித்தான் ஆகிவிட்டது. சென்னையைச் சுற்றிலும் புற்றீசல் போல் பெருகிவரும் புறநகர்க் குடியிருப்புக்களிலும், நகருக்குள்ளேயும் (எத்தனை கோடி விலை) சமீபத்தில் கார்ப்போரேட் பாணியில் பெருகி வருபவை ஞான வாபி எனும் நீத்தார் கடன் செய்யும் மையங்கள். கொடுமை என்ன தெரியுமா. ஞான வாபி என்னும் வட சொல்லுக்கு அறிவுக் கிணறு, ஞானக் கிணறு என்று பொருள். இங்கு வருபவர்களின் அஞ்ஞானத்தைக் காசாக்கும் மையம் இது. ஆம். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசதிக் குறைவு, தனி வீடாயினும் நீத்தார் கடன் என்பது ஒரு அசுப காரியம் என்ற எண்ணப் போக்கில், காசு கொடுத்து விட்டால் எல்லாமும் கிடைக்கும். பிக்னிக் மாதிரி போய் நடத்திவிட்டு வரலாம் என்ற சுகம் தேடும் போக்கும் காரணமான படியால், இது ஒரு தவிர்க்க முடியாத சமாசாரமாகி விட்டது. புரோகிதத்தில் வரும், மிதமிஞ்சிய, வரி என்ற பேச்சுக்கே இடமில்லாத வருமானம், நமக்கே இப்படி ஒரு இடம் சொந்தமாகிவிட்டால், தின வாடகை, இதர வாடகை என்று கொழிக்கலாம் என்ற பேராசையால் காசுக்கு ஏத்த படி காரியம் என்ற நிலை வந்தாகி விட்டது.

    பொய்யில்லை நண்பர்காள். முழுதாக மொட்டையடிக்கப் படும் NRI களும் கார்பொரேட் அதிகாரிகளையும் பார்க்கப் பாவமாய் இருக்கும். வயதான தாயோ தந்தையோ இறந்த பிறகு கெஞ்சிக் கூத்தாடி லீவ் எடுத்து, வயதான காலத்தில் தாம் பராமரிக்கவில்லை என்ற‌ அடைத்து வைத்திருந்த தான் ஆடாவிட்டாலும் பாசத்தால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி பலிகடாவாக மாறியவர்கள் இவர்கள். தகனம் முடிந்தவுடன் ( இதற்கு வரும் புரோகிதர் வேறு. கொஞ்சம் மட்டம்) சுபகாரியங்கள் ஸ்பெஷலிஸ்ட் அப்புறம்தான் வருவார். தனக்கு இதில் எதுவுமே விருப்பமில்லாதது போல் சாஸ்திரம் சொல்றத நான் சொல்றேன். மத்தது உங்கள் வசதிக்கு எப்படி பண்ணலாம் என்பதும் சாஸ்திரத்தில் இருப்பது போல் சொல்றேன். அப்புறம் உங்கள் இஷ்டம் என ஆரம்பிக்கும்போதே இந்தக்காலத்தில இப்படியும் ஒரு தெய்வம் உண்டுமா என கட்டிப் பிடித்து அழத் தோன்றும்.

    அம்மா அப்பாவை வயதான காலத்தில் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என புராணத்திலிருந்து ஒன்றிரண்டு பிட்டுக்களுடன் தொடங்கும் மூளைச்சலவை. செய்ய வேண்டிய காரியங்கள், அதற்குண்டான விளக்கங்கள் எல்லாம் சொல்லி ஒரு ஆழம் பார்த்தல் நடைபெறும். பார்ட்டி கண் கலங்க கேட்டுக் கொண்டு சரி சரி என்று மண்டையாட்டினால் ஒரு விதம், சொறிந்து கொண்டு மதில்மேல் பூனை என்றால் ஒரு மாதிரி, சட்டு புட்டுன்னு சொல்லித் தொலை மாதிரி இருந்தால் அதற்கு வேறு மாதிரி என்று தேர்ந்த சேல்ஸ்மேன் மாதிரி பேச எந்த பிஸினஸ் ஸ்கூலிலும் சொல்லித் தர முடியாது.

    கடைசியில் வரும் பகற்கொள்ளைதான் இந்த இடுகைக்கு கரு. பத்து நாள் காரியம் முடிந்த பிறகு இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய பல தானங்கள் சொல்லி இருக்கு. எல்லாம் பண்ணனும்னு இல்லை. முக்கியமான தானங்கள் பண்ணத்தான் வேண்டும். மற்றது வசதிப்படி பண்ணா நல்லது என்று இழுக்கும் போதே முதல் வகை கண்ணைக் கசக்கிக் கொண்டு, காசு பத்தி பிரச்சனையே இல்லை. அம்மா/அப்பா ஆத்மாக்கு குறை இல்லாம முறைப்படி என்ன பண்ணனுமோ அதான் முக்கியம் என வலையில் விழும். இந்த காலத்தில இவ்வளவு சிரத்தையா பண்றவங்க ரொம்ப கம்மி. செலவுதான் பார்ப்பாங்க என்று போட்ட போடில் ஐயா மட்டையாய் ரெடியா இருப்பார். என் தலை உன்கிட்ட. அடிச்சிக்கோ வசதிப்படி என்று. ரொம்ப அழகாக, சரி நான் என்னன்ன வாங்கணும்னு லிஸ்ட் தரேன் வாங்கிட்டு சொல்லு என்பார்.

    சுகவாசியா இருந்து பழகியாகிவிட்டது . இதுக்கெல்லாம் யாரு அலையுறது? அதும், மாடு, செருப்பு, கைத்தடி, சொம்பு என்று என்னல்லாமோ இருக்கும். அலறி அடிச்சி அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்களே பார்த்துக்குங்க. எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க. பணம் தறேன் என்று வகையாய் மாட்டிக் கொள்ளும். ரொம்ப பிகு பண்ணிக்கொண்டு குத்து மதிப்பாக ஒரு தொகை வாங்கிக் கொண்டு பில் அப்புறம் தரேன் பார்த்துக்கலாம் என்று சொல்லி ஒரு ஃபோன் பறக்கும். அது அது அவங்க வீட்டில கொடுத்துடுவாங்க பெரிய சாமான்லாம். கையோட குடுக்கறது அங்க வந்துடும் என்று சொல்லி விடுவார். கட்டில், மெத்தை, பீரோ (டி. வி, ட்விடி ப்ளேயர், டிஷ் கனெக்ஷன்லாம் என்ன பாவம் பண்ணிச்சோ) எல்லாம் அங்கே வந்து நிற்கும். சொம்பு, கைத்தடி, தட்டு, குடை, வெள்ளி, தங்கக் காசு மட்டும் தானே கொண்டு வருவார்கள்.

    ஒரு வேனில் இதெல்லாம் நிற்கும் ஞான வாபியின் முன். எல்லாம் பழைய ஐட்டங்கள். ஏன் என்று கேட்கக் கூச்சம். அந்தக் கேள்விக்கே இடம் வைக்க மாட்டார்கள். புதுசு அங்க இங்கன்னு தூக்கிக் கொண்டு அலைஞ்சா டெலிவரிசார்ஜ் எங்கயோ போயிடும்.(அடங்கொய்யா? என்னா அக்கறை). இங்க பாவனையா தாரை வார்த்து கொடுத்தால் போதும். இவர் போன் நம்பர் தருவார். பொருள் வந்துடுச்சன்னு கேட்டுக்கலாம் என்ற பிட்டுக்கு அப்புறமும் சந்தேகப் பட முடியுமா? பாவம் தானம் என்று வாங்கியவருக்கு ரூ 200 அல்லது அதிக பட்சம் ரூ 500 போனால் அதிகம். அந்த ஒரே வேனைக் காட்டி ஐந்தாறு அப்பா அம்மா ஆத்மாவை சாந்தி அடைய வைப்பதை யாரு பார்க்கப் போறாங்க. எனக்குத்தான் மண்டைக் குடைச்சல். ஐயோ பாவிகளா என்று அலறத் தோன்றும்.

    இதெல்லாமாவது உள்குத்து. அப்புராணிங்களுக்கு புரியாது. பாவம் பால் வத்திப் போன பசு மாடு. தானம் கொடுக்கிறேன் பேர் வழி என்று, ஆயிரக்கணக்கில் கணக்கெழுதி நிற்கும் மாடுகளில் ஒன்றிடம் கொண்டு போய் கயிற்றைக் கையில் பிடித்துக் கொடுக்க வைத்து சூடு வேறு போடுவார்கள். மாட்டுக் காரனுக்கு பால் வற்றியும் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த வாயில்லா ஜீவன். ஒரு தானத்துக்கு அவனுக்கும் ரூ 200 கிடைக்கும். சூடாவது போடமாட்டேன் என்று சொல்லித் தொலைங்களேன்னு வருமா இல்லையா ? தாய்ப் பால் குடித்ததை விட ஆவின் பால் குடித்துத் தானே வளர்ந்தோம் என்று நினைப்பாவது இருந்தால் உறுத்தும்.

    இவ்வளவுதான் பட்ஜெட் என்பவருக்கோ, லிஸ்ட் குடுங்க நான் பார்த்துக்கறேன் என்பவருக்கோ அதற்கேற்றார் போல் காரியம் செய்து வைப்பார்கள். (பின்ன இதே மாதிரி இன்னோரு பிசுனாரி கேஸ் நடத்தி வைத்தால் தானே வருமானம்). முதலாமவருக்கு 3 மணி நேரம் பிடித்தால் இவர்களுக்கு பாதி நேரம்தான்.

    அப்புறமும் மத்திய கைலாஷில் பணம் கட்டினால் வருடா வருடம் திதியன்று தவராமல் திவசம் செய்து ப்ராசாதம் அனுப்பிடுவாங்க. ரெகமண்டேஷன் வேணுமென்றெல்லாம் காசு பார்க்க வழி உண்டு. என் கோரிக்கை இதுதான்.

    யார் நம்பிக்கைக்கும் யாரும் தடை போட முடியாது. வசதி இருக்கிறதா யோசியுங்கள். சுத்த ஃப்ராடு. நான் ஏமாற மாட்டேன் என்பவர்களும் யோசியுங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அல்லது யாரும் இன்றி கவுரவமாக உழைத்துப் பிழைக்கும் முதியவர்களை தத்தெடுத்துக் கொள்ள முடியும். Helpage India இதற்கான திட்டம் வைத்திருக்கிறது. ஒரு பாட்டியையோ தாத்தாவையோ ஒரு வருடத்திற்கு தத்தெடுக்க வெறும் ரூ 6000 தான். வசதிக்கு தகுந்தபடி உதவ முடியும். இறந்த ஆத்மா வாழ்த்துகிறதா என்பது தெரியாது. இருக்கும் ஜீவன் நிச்சயம் வாழ்த்தும். மனமிருப்பவர்கள் பாருங்களேன் : http://www.helpageindia.org/

    Friday, April 24, 2009

    மன்னித்து விடு தேவதையே!


    அகிலமெங்கும்
    உன் பெயர் குழந்தை
    அடிமை நாட்டில்
    நீ ஓர் தீவிரவாதி!

    ஆம் நீ ஓர் தீவிரவாதி!
    பார்வைக் கணையால்
    பதைக்க வைக்கும்
    நீ ஓர் தீவிரவாதி

    பறக்கு முன்னே உன்
    இறகொடித்த பின்னும்
    பார்வையால் கொல்லும்
    நீ ஓர் தீவிரவாதி!

    மனிதம் இழந்த‌
    மனிதர் மத்தியில்
    மனம் தேடும்
    நீ ஓர் தீவிரவாதி!

    அப்படிப் பார்க்காதே அன்பே
    அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை
    மன்னித்து விடு தேவதையே
    இது மானிடர் வாழும் பூமி!

    தேவதைகளுக்கு
    இங்கே இடமில்லை!
    இல்லாத இறைவைனின்
    இறையாண்மை இங்கு வேதம்!

    அரசியல் சட்டமென்றோர்
    அரக்கச் சட்டையணிந்த‌
    அசுரர் வாழும்
    அவனியிப் பூமி!

    தமிழனாய் பிறந்ததால்
    தன்மானம் இருப்பதால்
    சுடப்பட்டாய் நீ
    சுதந்திரம் கேட்டதால்!

    தடைகளை உடைத்தித்
    தரணியில் ஓர் நாள்
    தமிழினம் வெல்லும்
    தமிழீழம் மலரும்

    அது வரை...

    மன்னித்து விடு தேவதையே
    இது மானுடம் மறந்த பூமி!
    _________________________________________________

    Wednesday, March 25, 2009

    பதில் கேள்வி

    சிறிது நாட்களாக நம் தமிழினக் கோவலர் சாதுர்யமாக மற்றவர்களைக் கேட்கவிட்டால் சங்கடம் என்று தானே வசதிக்கு கேள்வி கேட்டு தானே அருமையாகபதிலும் சொல்லி காவடிப் பத்திரிகைகளில் போட்டு காதில் பூ சுத்தி வருகிறார். மூத்த தலைவர் என்ற நினைப்பு சிறிதுமின்றி எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போகமுடியுமோ அவ்வளவும் பேசும் இவரின் இன்றைய கேள்வி பதிலைப் படிக்கும்துர்பாக்கியம் நமக்கெல்லாம் வாய்த்தது. பண்பு நாகரிகம் குறித்து பேசுவதற்குஎன்ன தகுதி இதற்கு மேலும் இருக்க முடியும். நீங்களே பாருங்கள்.

    1. இறையாண்மையை காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை அலட்சியப்படுத்த நானும் சரி- தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை

    வாஸ்தவம். அலட்சியப் படுத்த வேண்டுமென்றால் அது குறித்து ஒரு உணர்வாவது வேண்டும்.

    2.இறையாண்மை, ஒருமைப்பாடு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத் தான்- அவற்றுக்கு மாறாக செயல்பட்டாலோ, பேசினாலோ, எழுதினாலோ சட்டம் கொட்டும் என்று ஒரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதால்....

    ஆமாம். காவிரி நீர் தர மறுப்பவனுக்கு மட்டும் இவை இல்லை. அங்கு யாராவது ஒருமைப்பாட்டுக்கு இறையாண்மைக்கு எதிராக தண்ணீர் தர மறுப்பது தவறு என கைது செய்யப்பட்டிருக்கிறார்களா. இங்கு கூவும் தொங்க பாலு இது இறையாண்மைக்கு மாறில்லை எனக்கூறி ஓட்டு கேட்கட்டும். அவரெதற்கு ? நீங்கள் சொல்லலாமே? இதைக் கேட்டவர்கள் தான் சிறையில்.

    3. இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள தளகர்த்தர்கள், சேனாதிபதிகள், வழிகாட்டிகள்- இவர்கள் எல்லாம் இப்போது சமீப காலமாக இலங்கையிலே உள்ள முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை.

    பிரமாதம். ஐயா. இப்போது சாவதெல்லாம் புதுக்குடியிருப்பில். நீங்கள் சொல்லுமிடமெல்லாம் உங்கள் கூட்டணி தயவில் பிடித்து விட்டதாக( ஓர் இரு நாய்கள் தவிர ஏதுமில்லை அங்கே). இதிலிருந்தே நீங்க எவ்வளவு தூரம் அக்கரையாக கவனிக்கிறீர்கள் எனத் தெரிகிறது.

    4. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா?

    நாளைக்கு தானே நல்ல நாள் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சனை வராமலா போகப் போகிறது?

    5. மேடையேறி பேசுகின்றவர்களையெல்லாம் "இறையாண்மை'' மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழ்நாட்டில் யாரும் கைது செய்யப்படவில்லை. சொல்லப் பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் "வேசி மக்கள்'' என்றும்- இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.

    இவ்வளவு பச்சையாக இல்லாவிடினும் அந்த பதிவிரதை அறிக்கை இறையாண்மை மீறல் இல்லையா?
    புடவைகட்டிய முசோலினி இறையாண்மை மீறல் என்றால் அம்மையாரை அர்ச்சித்ததெல்லாம் மீறல் இல்லையா?
    உங்கள் கருத்துப்படி மரணதண்டனை என்று சொன்னது இறையாண்மை மீறல். சரி. இந்திரா அம்மையார் மரணத்தைத் தொடர்ந்து சீக்கியர்கள் கொல்லப் பட்டபோது ராஜீவ் சொன்ன ஆலமர உதாரணம் என்ன? ஆக ஆளும் கட்சிக்கு எதிராக சொல்லப் படும் கருத்துக்கள் இறையாண்மைக்கு மாறு. அவ்வளவுதானே?

    6. இவர்கள்தான் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றும் அந்த கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள்- முழங்கட்டுமே முரசம்- கொட்டட்டுமே பேரிகை. இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?

    அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

    உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா. இப்படி கேலி பேசும் விடயமா இது. ஏன் அப்போது கூட நாங்களும் வரத் தயார் என சொல்ல முடியாதா? களிப்பீர்கள். கை தட்டுவீர்கள். எவ்வளவு அழகான திட்டம். ஒரே போட்டில் தமிழுணர்வாளர்களையும் சேர்த்து ஒழிக்க. ஓட்டு போடவாவது மக்கள் வேண்டும் ஐயா. அய்யா அய்யகோ. முடியுமானால் மேற்சொன்னவற்றை ஒரு முதல்வராக, மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் உறுதியோடு நீங்கள் போங்கள். ஒன்றும் செய்ய மாட்டோம். திரும்பி வந்தால் எப்படி போனீர்கள் என்ற கேள்வியுமிருக்காது என்று உறுதி மொழியாக கூறிப் பாருங்கள். போஸ்டர் ஒட்ட உங்கள் கட்சியிலே கூட தொண்டர்களிருக்க மாட்டார்கள்.
    எல்லோரும் அங்கே இருப்பார்கள்.
    வேண்டாம். ஐயா. ஏதாவது செய்ய முடியும் நிலையில் இருந்தும் செய்ய மறுப்பது பெரும்பாவம். முடியுமானால் அந்த அவலங்களை வலைமனையில் பார்க்க மனதைரியமிருந்தால் பாருங்கள். இதோ. உங்களை வாழ வைக்கும் தமிழிலேயே அந்த அவலத்தை கேளுங்கள். இப்படி பேசியதற்கு அழுங்கள்.

    Tuesday, March 10, 2009

    மானுடம் பழகுவோமா?

    முன்பெப்போதும் இல்லாத அளவு ஈழ மக்களின் வேதனைகளும் வலிகளும் பாமர மக்களை வெகுவாகவே பாதித்திருக்கிறது. ஏன், எதற்கு என்பது குறித்த விழிப்புணர்வு வந்து விடாமல் பல கட்சிகளும் தங்கள் ஆதாயங்கள் தேட ஆதரித்து அல்லது எதிர்த்து என்ற ஒரு நிலைப்பாட்டிலும் ஊடகங்கள் தங்களுக்கு தேவையான போது மட்டுமே பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று கூவி தங்கள் பங்குக்கு இருட்டடிப்பு செய்தும், தொலைக்காட்சியில் தமிழன் தொலைக்காட்சி தவிர எப்போதோரு முறை இலங்கை அரசாங்கம் சொல்லும் அல்லது தரும் பாரபட்சமான செய்திகளை ஒளி பரப்பிடினும் மாணவர்கள், பொதுமக்களிடையே சீமான், மணி, நெடுமாறன் அய்யா போன்றோரின் முயற்சியில் ஓரளவு புரிதல் வந்திருக்கிறது.
    வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழுணர்வாளர்கள் இரு வேளை உண்ணாவிரதமிருக்க தமிழக மாணவரமைப்பின் முயற்சி பெருமை கொள்ளத்தக்கதாகும். மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு இந்த அரசியல் வாதிகளின் சுயலாபச் சண்டை தலைகுனிவை ஏற்படுத்துகிறது. பார்க்கப்போனால் நேற்று ஜெயலலிதா வர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் அவரின் அறிவிப்பு மற்றவர்களின் நிலைப் பாட்டையே கொண்டிருப்பினும், இது நாள் வரை அவரின் நிலைப்பாட்டிலிருந்து ஓரளவு விலகி மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையே ஒத்திருப்பது தெளிவு. ஒரு இனத்தின் தலைவர் என அனைவராலும் எதிர் பார்க்கப்படும் ஒரு பழுத்த அரசியல் தலைவர், பொறுப்பான முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரிடம் ஒரு சாதாரண மனிதன் ஏக்கத்துடனெதிர் பார்ப்பதெல்லாம், வேறுபாடின்றி (ஒப்புக்காகவேனும் காங்கிரசும் கூட) மக்களின் அவலம் உணர்ந்திருக்கும் இந்த வேளையில் மத்திய ஆட்சியாளர்களின் தோழமைக் கட்சித் தலைவரின் செயல் பாடு குறைந்த பட்சம் போர் நிருத்தமென்ற அளவிலாவது முதன்மைப் படுத்தப் பட்டிருக்க வேண்டுமென்பது. ஆனால் கடந்த சில நாட்களாக தரக் குறைவான முறையில் பேசுவதும், எதிர் கட்சியின் தலைவி என்பதற்காகவே எதிர்ப்பதும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. பதில் கூற முடியாத கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்கள் கூறுவது கூட நகைப்புக்குரிய ஒன்றாயினும், இன்றைய பத்திரிகையில் தன்னுடைய சுகக்கேடு குறித்தும்
    அந்த நேரத்தில் கூட ஜெ அவர்கள் தினம் ஏதோ கேள்வி எழுப்பி அதற்கு தான் எப்பாடு பட்டு பதிலளித்தார் என்பதையும் ஈழப் பிரச்சினையை விட நீளமாக விவரித்த அழகு கூசச் செய்கிறது.

    வலி மனிதனுக்கு கடவுள் அளித்ததே மற்றவர்களின் வலியையும் உணர்வதற்குத் தானோ என்று நினைக்கிறேன். பேச எது தடையாய் இருப்பினும் அங்கு நடக்கும் விடயங்கள் மக்களின் அவலங்கள் சாதாரண மனிதனுக்கு தெரிந்திருக்கும் நிலையில் ஒரு முதலமைச்சருக்கு தெரியாமலிருக்க காரணமில்லை. ஒரு வேளை இந்த அவலங்களைப் பார்த்தால் எங்கீ சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் போகுமோ என்று தவிர்த்திருக்கலாம். ஒரு கண்ணொளி பார்க்க நேர்ந்தது. தெரு ஓரம் இறந்தவர்களைப் புதைத்து பக்கத்து மைதானத்தில் லாரியில் தவிடு கொட்டப் படுகிறது. அந்த தவிட்டைப் புடைத்து அதில் மிஞ்சிய குருணை தவிட்டோடு சேர்ந்து தான் அதில் களியோ கூழோ. இது தான் சாப்பாடு. குடிக்கத் தண்ணீர் கூட இல்லை.காகிதம் ஆயுதம் என‌ப் பேசும் பெரிய மனிதர்கள் இதைப் பார்க்காமலா இருப்பார்கள்.



    பச்சிளம் பிஞ்சு வலி என்றால் என்ன என்று கூடத் தெரியாது. இவருக்கும் வலிதான். ஆனாலும் இதன் வலிக்கு முன்னால் எம்மாத்திரம். ஆ என்றால் மருந்துடன் மருத்துவர். ஆடையின்றி அலறும் அந்த பிஞ்சுக்கு அம்மா என்ன தருவாள்? ஓடி விழுந்தாலுமே ஊரைக்கூட்டி அழும் வயதில் அந்த முகத்தில் எத்தனை வெறுமை. இந்தப் பிஞ்சு வளர்ந்து அதன் மனதில் மானுடம் இருக்குமா. வலி மறந்தவன் மனிதனாய் இருக்க முடியுமா? மனிதனுக்கு அழகா இது.
    மனிதநேயம் இல்லை எனில் இறைவன் எங்கே? இறையாண்மை எங்கே. ஒரு மாதமாக இதுகுறித்து பேசக்கூட மனமின்றி பேசுபவர்களை நையாண்டி செய்து சாதிக்கப் போவதென்ன.

    ஒரு சுனாமி வந்தது. அது பாடம். காரில் வந்து நடந்தவனும், தூங்க இடமின்றி மணலில் தூங்கியவனும் ஒன்றாய்தான் மரித்துப் போனார்கள். இப்போது கூரையின்றி இப்படி குண்டடி பட்டு நிற்பவர்களில் பணக்காரர் யார்? ஏழை யார். ஜாதி இருக்கிரதா இங்கே? வலி வலி வலி மட்டுமே? உலகத்தில் எல்லாரையும் போல்தானே நானும் பிறந்தேன். எனக்கேன் இந்த அவலம் என இவர்களின் வயிறு எரியாமல் போகுமா? அதற்கு விலை நாம் தான் தரவேண்டும்.

    யாராவது இந்த இடுகையும் படிக்கலாம். 13ம் திகதி இவர்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் என படித்திருக்கலாம். ஆனால் அது மட்டுமே எந்த கையாலாகத அரசியல் வாதியின் தாக்கமும் இல்லாமல் நாம் செய்யக் கூடியது. வலி தாங்க மாட்டோம். என்றோ ஒரு நாள் இவர்களைத் தேர்ந்தெடுத்த பாவத்துக்கு நமக்கும் இப்படி நேரலாம். குறைந்த பட்சம் பசி தாங்கவாவவது பழகுவோமா நண்பர்களே? நம் குழந்தைகளிடமிருந்தாவது மானிடம் கற்போம். உண்ணாமல் இருப்போமா அந்த ஒரு நாள்?

    Monday, March 2, 2009

    S.O.S

    கலைஞர் அய்யா அவர்களுக்கு,

    பைத்தியக்காரப் பாமரன் எழுதும் விண்ணப்பம். இன்னைக்கு ஒரு தகவல் பார்த்து ஆடிப் போய்ட்டங்கையா. ஏற்கனவே நம்மள பைத்தியமாதான் நீங்க உள்பட நினைக்கிறீங்க. இருந்தாலும் அடிக்கிற சாமின்னாலும் அவன் கிட்ட தானுங்களையா கேக்க முடியும். இந்த மகிந்தா மிருகத்துக்கு நாம எவ்வளவோ ஆதரவா முடிஞ்ச அளவு உதவி பண்ணி அவனுக்கே தெரியாத இறையாண்மை எல்லாம் சொல்லிக் குடுத்து அவன் இப்போ நிஜமாவே யோவ் நிறுத்துன்னா சும்மா தான சொல்றிங்க. அடிக்கறது போறலைன்னு தானே நக்கலுன்னு இன்னும் வேகமா அடிக்கிறான்.

    ஆனாலும் பாருங்கய்யா. நெம்ப நாளைக்கப்புறம் பிரணாப் அய்யா போரை நிறுத்துகனு உங்களுக்கு தென்றல் வீசினாங்கள்ள. நீங்க சொன்னா உடனே 48 மணி நேரம் நோ ஃபைடிங்னு சொல்லுவாங்கள்ள. அய்யோ! பயப்படாதீங்க. உங்க சங்கடம் புரியுது. போரை நிரந்தரமா நிறுத்த சொல்லுங்கன்னோ, ஈழம் மலர வழி பண்ணுங்கன்னோ கேட்ர மாட்டனுங்க. அது அவங்க பார்த்துக்குவாங்க. நாள பின்ன நேர்ல பார்த்து துப்பறா மாதிரி கேட்டாலும் ஒரு அய்யகோ போடமாட்டமா. அதெல்லாம் வேணாம்யா.

    அது வந்து என்னா தகவல்னா இந்த மகிந்த அய்யாக்கு நம்ம நாட்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் எமிரைடஸ் பேராசிரியர் பட்டம் குடுத்து இருக்காம்யா. அதுவும் மனித உரிமைக்கான போராட்டங்களுக்கு. அரசியல் வேறைய்யா! அது மறந்துடுவம். நாளைக்கே உங்களுக்கு புத்தி மாறி ஈழம் பிறக்க வேண்டும்னு எங்கள எல்லாம் உசுப்பி விட்டு அது தானா கிடைக்கறப்பன்னாலும் என்னாலதான்னு சொன்னா ஆமாம் ஆமாம்னு சொல்லுவோம்யா. ஆனா இது அனியாயம் இல்லைங்களா. வரும் தலைமுறைல ஏதோ ஒண்ணு இத்த ஆராய்ச்சி பண்ணி இவனுக்கு போய் இத குடுத்தாங்களே! இது எல்லாம் என்னனு கேட்டா நம்ம பேரபுள்ளைங்க எங்கள மாதிரி இல்லாம மான ரோசமா இருந்து நாண்டுக்குமில்லிங்களா?

    அதாம்யா. நம்ம பிரணாப் அய்யா சொன்னா இலங்கை அரசாங்கமே கேக்குறப்போ அவங்க ஊரு பல்கலைக் கழகம் கேக்க மாட்டாங்களாய்யா? அந்த பட்டத்த புடுங்க சொல்லுங்கையா! டொனேசன் குடுத்தான் குடுத்தம். திரும்ப கேட்டான்னு கேள்வி வந்தா? மானமாச்சே. விட்ரமாட்டம்யா. ஆளுக்கு ஒரு எட்டணா ஒரு ரூவான்னு குடுப்பம்யா. புடுங்க சொல்லுங்கையா. வேதனைல்லாம் ஒரு பக்கம் கெடாசிட்டு சாதனைன்னு கொண்டாடுவம்யா. இப்பிடியாவது கொஞ்சம் நம்ம இறையாண்மைய காப்பாத்தலாம்ங்கையா.

    எப்பவும் போல நம்பி
    பாமரன்.

    Monday, February 23, 2009

    மறக்க முடியுமா?

    மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய கலைஞர் அவர்களுக்கு,

    தமிழினக் காவலர் என்று உங்களைக் கொண்டாடும் தமிழ்க்குடியில் ஒரு குடி. என்னைப் போல் பலரின் மனதிலும் இந்த வருத்தம் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. சாதனையாளர் பட்டம் ஏற்க மறுத்துப் பின்பு வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்ட போதும் இலங்கை குறித்த உங்கள் ஆதங்கம், அந்த இயலாமை, ஏதாவது செய்ய வேண்டுமே என்ற வெளிப்பாடு, அதன் பிறகு சட்ட சபையில் தீர்மானம் என்ற நிகழ்சிகள் பிரமிக்க வைத்ததும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்ததும் உங்களைக் குறித்த பெருமிதம் நிஜம். அதன் பிறகு எங்கே காணாமல் போனீர்கள். எங்கு தொலைத்தீர்கள் கொள்கைக்காக வளைந்து கொடுக்கா உங்கள் தனித் தன்மையை.

    நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில் வலுவான ஒரு அழுத்தமான வேண்டுகோள் ஆம் வேண்டுகோள் மட்டுமே போதும் இன்று எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கக் கூடும். கூட்டணித்தலைவர்களின் போக்கு குறித்து வருந்திய நீங்கள் அது சொன்ன செய்தியை ஏன் உணரவில்லை. உங்களோடு இணைந்து உங்கள் வழி காட்டுதலில் செயல் பட ஒப்புக்கொண்ட பிறகு தனியாக ஏதோ செய்கிறார்கள் என்றால் அது உங்கள் செயல்பாட்டில் அவர்களுக்கிருக்கும் நம்பகமற்ற தன்மையின் வெளிப்பாடு என்பது உங்களுக்கு புரியாமலா இருக்கும். அப்போதாவது நீங்கள் ஏன் ஒரு தீர்மானமான முடிவெடுக்க வில்லை. காங்கிரசின் குரலாக ஏன் மாறிப் போனீர்கள். மூலத்தை விட்டு வெளிப்பாட்டைக் கண்டிப்பதால் என்ன பயன்.

    அங்கு நடக்கும் போராட்டம் நியாயமானதென்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் கேட்பதெல்லாம் என்ன. எங்களையும் சமமாக நடத்து. எங்களை இரண்டாம் தரக்குடிமகனாக நடத்த வேண்டாம் என்பது தானே? இதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும். ஆயுதம் காகிதம் என்றெல்லாம் பேசாமல், நாம் சொன்னால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யத் தயாராய் இருக்கும் ஒரு அதிபரிடம், அவர்கள் கேட்பது இது, இதில் உங்களுக்கென்ன பிரச்சினை, இல்லை என்றால் என்ன தர முடியும் (இதில் குறைத்து கொடுப்பது என்றாலே தமிழர்கள் அங்கு மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை என்று தானே அர்த்தம்) என்று கேட்டிருக்க முடியாதா? அடிப்படை உரிமைகள் வழங்கப்படும் என்ற உறுதி மொழி எத்தனை தடவை கிழித்தெறியப்பட்டது. இருந்தாலும் அப்படி ஒரு உறுதியை பெற நாம் என்ன செய்தோம். அது கிடைத்திருந்தால் போர் ஏன் தொடரப்போகிறது. அது கிடைக்கும் பட்சத்தில் ஆயுதத்திற்கு அவசியமென்ன. மக்களே எதிர்ப்பார்களே? என்னைப்போல் பாமரர்கள் பத்திரிகைகளைத் தானே பார்க்கிறோம். ஒரு நாள் ராடார் கொடுக்கிறோம் என்கிறார்கள். மற்றொரு நாள் டாங்கிகள் அனுப்புகிறோம் என்று புகைப்படம் வருகிறது. நீங்கள் ஏன் இது குறித்து எதுவும் சொல்வதில்லை. இவை உண்மை யிலை என்ற ஒரு உறுதியாவது ஏன் பெற‌ப்படவிலை. வங்காள தேசம் குறித்த ஒரு நேர்காணலில் இந்திரா அம்மையாரின் முகபாவம் பாருங்கள். வலை மனையில் இருக்கிறது. அந்த மனித நேயம் எங்கே? கலியாணம் விசாரிக்கிறார் போல் பூரிப்போடு அந்தக் கொலைகாரனின் கைகோர்த்த படி வந்த புகைப்படம் ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?

    அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
    ஆறுதல் வழங்க யாருமே இல்லை
    ஏழைகள் வாழ இடமே இல்லை
    ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

    தாயின் மடியும் நிலைத்திடவில்லை
    தந்தையின் நிழலும் காத்திட வில்லை
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    அம்மா எங்களை அழைத்திடு தாயே

    இந்த வரிகள் கவனமிருக்கிறதா ? ஆம்! மறக்க முடியுமா? உங்கள் கைவண்ணத்தில் உருவாகிய மறக்க முடியுமா படத்தின் பாடல். உலகத்தின் சோகமெல்லாம் ஒன்று திரட்டி எழுதிய பாடல். இப்படித்தானே எம்மினம் அங்கு தவிக்கிறது. இந்த நிலையிலும் மத்திய அரசை வாழ விடுங்கள் என்று எப்படி பேசுகிறீர்கள். நீங்கள் முன்னெடுத்தால் மொத்த தமிழினமும் உங்கள் பின் நிற்காதா? நீங்களுமா தமிழரை நம்பவில்லை. எங்களை விடுங்கள். நாளை உங்கள் கொளுப் பேரனோ பெயர்த்தியோ உங்கள் முன் நின்று பக்கத்துக் குழந்தை சொன்னது. உன் தாத்தா ஏதாவது செய்திருந்தால் ஈழத்தில் இன்று நம் போல் எத்தனையோ பேர் படித்துக் கொண்டிருப்பார்கள். செய்யவில்லை. அதனால் மடிந்து போனார்கள் என்று. நிஜமா என்று கேட்டால் கண் பார்த்து என்ன சொல்லுவீர்கள்.

    இன்னும் உங்களில் எங்கள் நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா? இல்லை எனில்

    கோலம் போட்டு கொடிகளும் ஏற்றி
    தேரையும் பூட்டி தீயையும் வைத்தான்
    காலமும் பார்த்து நேரமும் பார்த்து
    வாழ்வையும் தீர்த்து வதைக்கவும் செய்தான்.

    ஆம் இதுவும் அதே பாடல்தான். தமிழரென்று யாராவது மீதமிருந்தால் இப்படித்தான் நின்று போவீர்கள்

    இப்படிக்கு
    பாமரன்


    Wednesday, February 18, 2009

    மானுடம் பிழைக்குமா




    பேரன்பு மிக்க பெரியோர்களே தாய்மார்களே! உள்ளூர் தலைவர்களே! உலகத் தலைவர்களே! எங்களைக் காப்பீர்கள் என நாங்கள் நம்பும் கலியுகக் கடவுள்களே! மானுடம் என்றால் என்ன என்ற சந்தேகம் வந்ததால் தெளியத் தேடியதில் கிடைத்தது இது.

    A humane society may be a group that aims to stop human or animal suffering due to cruelty or other reasons, although in many countries it is now used mostly for societies for the prevention of cruelty to animals (SPCA's). ...
    en.wikipedia.org/wiki/Humane

    தமிழினக் காவலர்களுக்காக தமிழில்
    மனித நேயம் என்பது மனிதர்களுக்கோ அல்லது மிருகங்களுக்கோ வன்முறையாலோ அல்லது வேறு காரணங்களாலோ உண்டாகும் பாதிப்புக்களை தடுக்கும் நோக்கம் கொண்ட ஒரு குழுவாக இருப்பினும் பல நாடுகளில் இப்போது மிருகங்களுக்கான வதைத் தடுப்புச் சங்கத்தைக் குறிக்கிறது.

    இப்படி நம்பித்தானே இவர்களும் இருக்கிறார்கள். எம் சக உயிருக்கு குரல் கூட ஒன்றாகக் கொடுக்க இயலாமல் யார் எதைப் போட வேண்டும் என்ற பட்டிமன்றமும், அப்போதே சொன்னேனே கேட்டிருந்தால் சவடால்களும், குரல் கொடுக்கிறோம் பேர்வழி என்றமைந்த குழுக்களிலும் போட்டிக் குழுவமைத்து போராடும் நல்லோரே. நாளை எங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என நம்புவது? உலகமெல்லாம் ஒடி ஒடி ஒரு மனிதனாவது இருக்க மாட்டானா? எமக்கு குரல் கொடுக்க மாட்டானா எனத் தத்தளிக்கிறதே ஒரு இனம் ? என்ன சொல்லப் போகிறீர்கள். சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம் அய்யா. என் தாத்தன் சொல்லி இருக்கிறான். செய்ய வேண்டாம். சொல்லவாவது செய்யுங்கள் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள். இங்கே வராதீர்கள். மிருக வதை தடுப்புக் குழுவிடம் சொல்லுங்கள் என்றாவது சொல்லுங்களேன்.

    வாழ்ந்ததும் வாழ இருப்பதும் சிந்திய ரத்தத்தில் கதறும் அழுகையில் தெரியும் வலியில் ஆறு வித்தியாசம் கண்டு பிடியுங்கள். அப்போதாவது இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு வலி தெரிகிறதா பார்ப்போம்.


    மெத்தைப் படுக்கை வேண்டாம் மேலொரு கூரையும் வேண்டாம் கட்டாந்தரையில் கயிறு கட்டி உயிர்த் திரவம் பெறக்கூட உதவ மாட்டீர்களா அய்யா?


    கடவுளே என்று கதறி நிற்கிறோம். ஆம். அவர்களாவது காப்பாற்றுவார்களா என்று. நரகம் பூமியி ல் இருக்கிறதாம். கடவுளரும் அங்குதான் இருக்கிறார்கள். சொர்க்கத்தில் இருக்கிறோம் என நீங்கள் இருங்களைய்யா. இதோ ஒரு தேவதை. தாய்மையே உருக்கொண்டு குண்டோ எறிகணையோ எதுவும் நினைவின்றி இதோ ஒரு அன்னை தெரசா. சபிக்கப் பட்டவர்கள் இவர்கள் என்றால் சபித்தவர்கள் நாசமாய்ப் போக. இரண்டே இரண்டு பெண்கள். ஆம். அடிக் கோடிட்டுக் கொள்ளுங்கள் . பெண்கள். தாய்கள் அவர்கள். அன்னை இந்திராவும் தெரசாவும் இருந்திருந்தால் மானுடம் இருந்திருக்கும்.

    ஒன்று செய்யுங்கள் சான்றோர்களே. எதற்கெல்லாமோ மெரினாவில் கூட்டம் போடுவீர்களே. அதாவது வேறுபாடில்லாமல் ஒன்றாய் போடுங்கள். ஒரு இரங்கல் கூட்டம். மானுடம் செத்ததற்காக. செயம்மறி ஆட்டுக் கூட்டமாய் பொடா தடா பயமின்றி ல்லாரும் திரள்வோம். சுனாமி விட்டு வைத்தால் அவரவர் வேலை பார்ப்போம். சீ.

    போடோ: நன்றி தமிழ் வின்

    Tuesday, February 17, 2009

    பத்திரிகை (அ) தர்மம்

    இந்த பத்திரிகை தர்மம்னு ஒரு வார்த்த இருந்திச்சிங்க தமிழ்ல. அத ரொம்ப நாளா காணல்லை. யாராவது கண்டா சொல்லுங்கோ.
    இந்த வாத்திமார்கள சொல்லணும். பாடம் படிக்கிறதே பெரும்போக்கா இருக்கைல, பத்திரிகை படிடா. அறிவு வளரும்னு பிராணன எடுத்தாங்க. அப்போவே கேக்கணும்னு வந்திச்சி. அப்போ பாடம் படிக்கிறது எதுக்குன்னு. இப்போ மாதிரி சட்டமெல்லாம் வராத காலமாச்சா. வயசு பாராம டவுசர களத்தி வெயில்ல நிக்க வெச்சிடுவாங்க. கொசுறா பிரம்பு முறிய அடி விழும். (பிரம்பு வேற அடுத்த நாள் வாங்கி கொண்டு வரணும். அதுக்கு தனியா அடி பின்னூட்டம்). இந்த எளவெல்லாம் எதுக்குன்னு பத்திரிகை படிக்கிற கெட்ட பழக்கத்துக்கு ஆளாயிட்டோம். காலைல வந்த பேப்பரை படிக்க நேரமில்லாம ஆபீசுல படிக்கலாம்னு கொண்டு போய் அங்க நைஞ்சு நூலாகி ராத்திரி தூங்க போகைல புரட்டலைன்னா தூக்கம் வராது சில பேருக்கு. சிலருக்கு காஃபி சாப்டு கக்கத்துல இடுக்கிண்டு கக்கூசில போய் படிச்சாதான். அதென்னாங்கடா கனெக்ஷன்னு புடி படவே இல்ல. அப்புறம் ஒரு ஊகமா செரி. இவங்க பூஞ்சை மனசு போல. பத்திரிகைல வர வெட்டு குத்து அடி தடி இதெல்லாம் பார்த்தா இந்த வரூஊஊஊஊஉம் ஆனாஆஆஆஆஆஅ வராஆஆஆஆஆஆஆது கேஸ்ங்களுக்கு பெரீய ரிலிஃப்னு முடிவு. இப்போல்லாம் ராத்திரி விடிய விடிய நெட்ல நியூஸ் பார்க்குறமா. காலைல பேப்பர் பார்த்தா ஏதே பழைய பேப்பர் பார்த்த ஃபீலிங். வேற என்னங்க. திரும்ப திரும்ப ஒரே நியூஸ். சாம்பிளுக்கு கொஞ்சம்

    • மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம். நேத்து தானடா படிச்சோம். இன்னைக்கு என்னான்னு பார்த்தா அது சீமானுக்கு. இன்னைக்கு திருமாவுக்காம்.
    • ஆட்சியைக் கவிழ்க்க சதி. ஐயோ இதுவும் நேத்து வந்திச்சேன்னு பார்த்தா அதுகருணாநிதி அய்யா. இது ஸ்டாலின்
    இதென்னாங்கடா. வலைமனை பத்திரிகைள்ள படம் போட்டு கொத்து கொத்தா இத்தனை பேரு சாவுன்னு வந்திச்சே. இதைக் காணோமேனு யார போய் கேக்க. ப்ரிட்டானியா ஆள அனுப்பறாங்களாம். ஒபாமா யோசிக்கறாங்களாம். பிரான்சில ஊர்வலமாம். சுவிஸ்ஸில உண்ணாவிரதமாம். இதெல்லாமும் காணோமேன்னு திகைப்பா இருக்கு. அப்புறம் அட விதேசி மோகம் நல்லதில்லை. நம்ம ஊர்லயே எவ்ளோ விஷயமிருக்க இதுக்கெல்லாம் ஆளம்புன்னு செலவு மிச்சம்னு விடுறாங்க போலன்னு ஒரு சமாதானம். சில பத்திரிகை இருக்கே சிலுமிஷம் தாளலை. அதிலையும் காலை மாலைன்னு ஒரே பத்திரிகைல மாலை பத்திரிகை எதிர் கட்சின்னா காலை பத்திரிகை ஆளும் கட்சி. இதில்லாம கட்சி சார்பு பத்திரிகை. இது கொஞ்சம் தேவலாம் ரகம். ஏன்னா இதில க‌ட்சி கூட்டம். தலைவர் பேச்சுன்னு ஒரு மாதிரியா போயிடும்.

    சில பத்திரிகை இருக்கு. ஆளும் கட்சி கடும் கண்டனம்னு நியூஸ் இருந்தா ஒரு ஓரமா சிங்கள ராணுவம் வெறியாட்டம். ஒன்னுக்கிருந்த ஒரு ஆள் உட்பட ஒரு ஓணான், ஒரு நாய், ஒரு பசு படுகொலைன்னு வரும். அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு உடன் பட வேண்டுமென அறிகைன்னு வர ராமேஸ்வரத்தில் ஒரு கட்டை கரை சேர்ந்தது. கரும்புலிகள் ஊடுருவலான்னு ஒரு கேள்வி. இல்லாட்டி இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சி. புலியா? இவரை சோதனையிட்டதில் காது இடுக்கில பாதி எரிஞ்ச பீடி துண்டொன்னு, கோவணத்துக்குள்ள செல் போனு, பிசிலெரி பாட்டில்ல மண்ணெண்ணை போன்ற பயங்கர ஆயுதங்கள் கை பற்றி இருப்பாங்க.

    செத்துட்டாங்கன்னு ஃபோடோ போட கொண்டு போனா எரிச்ச அல்லது புதைச்ச அத்தாட்சி கேக்குற பத்திரிகை கூட தேவைன்னா ஊகமா செய்தி போடும். உருப்படியா என்ன நடக்குது. ஏன் நடக்குது. சொல்லவே மாட்டாங்க. மவனே. ரென்டு பத்திரிகை வாங்கி என்னதான் சொன்னாங்கன்னு பார்க்கலாம்னா இவன் போட்டதுக்கு நேர்மாறா இருக்கும். இந்தக் கருத்துக்கணிப்புன்னு ஒரு கூத்து. இதோட அர்த்தமே மக்களோட மன நிலை என்னன்னு ஆட்சியாளர்களுக்கோ பொறுப்பானவங்களுக்கோ உதவியா இருக்குமேன்னு தான். இப்போ இது பெட்டிங்கு உதவும். இல்லன்னா நமீதாவா நயன்தாராவா...இதுக்கு ஒரு கணிப்பு. இது போக அடிச்சிகிட்டு சாவ வழி தேடுற செய்திகள். எங்கெங்க என்னென்ன வில்லங்கமா நடக்குது..விலாவரியா போடோ அட்ரஸ் எல்லாம் போடுவாங்க.

    கொடுமை தெரியுமாங்க. ஒரு நாள் வாத்திய கடைவீதில பார்த்தன். எல்லா எரிச்சலும் சேர்த்து வெச்சி போய் கேட்டன். அய்யா பத்திரிகை படி அறிவு வளரும்னு அப்பிடி ஒரு அடி அடிச்சி இந்த கெட்ட பழக்கத்த விடவும் மாட்டாம இந்த எழவெல்லாம் சகிக்கவும் மாட்டாம என்ன ஒரு பிழைப்பு இதுன்னு. வில்லங்கம் புடிச்ச பெருசு சொல்லிச்சி. இப்பல்லாடா தெரியுது. படிச்சிருந்தா அறிவு வளர்ந்திருக்கும். அறிவு வளர்ந்திருந்தா பேப்பர் படிப்பியாடா? இவ்வளவு வயாசாச்சி ச எதுக்குடா பூமிக்கு பாரமாவாம்.



    Monday, February 16, 2009

    வக்கிரங்களுக்கு வடிகாலா வவுனியா?

    வலைமனைகளில் கண்ட செய்தி கலக்கமளிக்கிறது. கொந்தளிக்கச் செய்கிறது. என்ன நடக்கிறது. எத்தனை அமைப்புக்கள். எத்தனை போராட்டங்கள். எத்தனை உயிரிழப்புக்கள். எதுவும் எனக்கு கவலையில்லை. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்போடு மனித உயிர்களை வகை வகையாய் கொண்று குவிக்கும் இறுமாப்பு. ஊடகங்களுக்குத் தடை. தொண்டு நிறுவனங்கள் விரட்டல். தடை செய்யப்பட்ட தளபாடங்கள். பிஞ்சோ முதிர்ந்ததோ எல்லாம் எனக்கு புலி தான் என்ற கொக்கரிப்போடு கொலை. நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் அவலம். வலயம‌மைத்து வளைத்துக்கட்டி குவியலாய் பிணங்கள். இந்த நூற்றாண்டிலா இப்படி. சரித்திரம் படித்துக் கற்றுக் கொண்டதென்ன. எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம். மொத்த மனித இனத்துக்கும் சவாலாய் ஒன்றிரண்டு மிருகங்கள் கொலை வெறியை கட்டவிழ்த்து விடுவதை வேடிக்கை பார்க்கவா ஏதேதோ நிறுவனங்கள்.

    பாருங்க‌ள் ம‌க்க‌ளே! வ‌ன்னியிலிருந்து வ‌வுனியா வந்த‌ தாய்மார்க‌ள். ஒன்றல்ல‌ இர‌ண்ட‌ல்ல‌ 500 பேருக்கு க‌ருக் க‌லைப்பாம். ப‌ள்ளிக‌ளை ஒழித்துக் க‌ட்டி த‌ங்க‌ வைக்க‌ ஏற்பாடாம். அதுவும் முட்க‌ம்பி வேலிக்குள் வெளிச்சிறை. இவ‌ர்க‌ள் மிருக‌ங்க‌ளா? ம‌னித‌ர்க‌ள் தாமே? ஏன் யாருக்கும் எதுவும் செய்ய‌ முடியாம‌ல் போகும். நீ செய்கிறாயா? நான் செய்வ‌தா என்று கூட‌ பேச்சில்லையே? ப‌ய‌ண‌த்தில் தூங்கி வ‌ழிந்து நெற்றி இடித்த‌தும் திடுக்கிட்டாற்போல் ஒரு க‌ண்ட‌ன‌ம். திரும்ப‌த் தூக்க‌ம். பேச‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் பேசுவ‌தில்லை. ஓர் இர‌வில் மூன்று வ‌ல்ல‌ர‌சுக‌ள் ச‌தாம் உசேனை துவ‌ம்ச‌ம் செய்த‌தே? அப்ப‌டிக்கூட‌ வேண்டாம். என்ன‌தான் ந‌ட‌க்கிற‌து. நேரில் பார்க்க‌ வ‌ருகிறோம் என்று சொன்னால் எத்த‌னை உயிர் பிழைக்கும்.

    இருக்கிற‌ த‌லை குனிவு போதாதென்று செத்த‌ க‌ண‌க்கெடுக்க‌வோ, சிறைக் க‌ண‌க்கெடுக்க‌வோ இந்தியாவின் இன்ஃபொசிஸ் நிறுவ‌ன‌த்திற்கு அழைப்பாம். இப்ப‌டியுமா வியாபார‌ம் செய்ய‌ வேண்டும்.

    சிறுபான்மையின‌ர் என்றால் ம‌னித‌ர்க‌ள் இல்லையா? சிங்க‌ள‌வ‌ன் சிங்கார‌த்திலிருக்க‌ உழைத்த‌ த‌மிழ‌ன் உற‌ங்கிய‌தால் வ‌ந்த‌ வினையா? க‌ல்வி க‌ல்வி என்று த‌மிழ‌ன் அலைய‌ க‌ல‌வி க‌ல‌வி என்று சிங்க‌ள‌ன் இருந்த‌த‌ற்கு வ‌ர‌மா? கால‌ம் ப‌தில் சொல்லுமோ? கால‌ன் ப‌தில் சொல்லுவானோ?