Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Thursday, October 28, 2010

ஃபாரின் ரிட்டன் பதிவரின் பரபரப்பு பேட்டி


(பதிவர் சிங்கம், சமூக ஆர்வலர், தில்லு தொர எங்கள் அண்ணன் கதிர் வெற்றிகரமாக கொழும்பு சென்று வந்திருக்கிறார். இது பற்றி அவருக்கே தெரியாமல் நடந்த உரையாடலைப் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். உரையாடலில் பங்கேற்பவர்கள் பழமை, ஆரூரன், பாலாசி அப்புறம்.. அப்புறம்..நானில்லாமலா?)

வா.பா.:வணக்கம் மேயர் சார் 

கதிர்: ‘ஆய் போவான்’


ஆருரன்: அட! அதுக்கென்னங் சொல்லிகிட்டு. போய்ட்டு வாங்க.


வா. பா: அட இது அது இல்லீங்க மொதலாளீ. சிங்களத்துல வணக்கம் சொல்றாராமா. 

ஆருரன்: அட கண்றாவியே.

வா.பா. சரிங் சார். உங்களுக்கு ரெண்டு நாட்டுக்கு போக வாய்ப்பு கிடைச்சது. அந்த இன்னோரு நாட்டுக்கு ஏன் போக விருப்பமில்லைன்னு தெரியும். இதுதான் உங்க முதல் வெளிநாட்டு பயணமா?

கதிர்: இந்த வில்லங்கம்தானே வேணாங்கறது. ஆமாங்க! இதான் முதல் பயணம்.

வா.பா.:ச்சும்மா தில்லா சிங்கம் மாதிரி போய்ட்டு வந்திருகீங்க. பாராட்டுகள்.

பாலாசி: இங்காருங்க. நீங்க திரும்ப திரும்ப ஏன் சிங்கம் சிங்கம்னு சொல்றீங்கன்னு புரியுது. பின்பக்கம் மட்டும் முடியிருக்குன்னு எங்க மேயரை கிண்டல் பண்றது நல்லால்ல.

பழமை: சரிங் மாப்பு! மீனம்பாக்கம் விமான நிலையத்துல காபி சாப்பிட்டீங்களா?

கதிர்: அட இல்லைங்களே ஏன்?

பாலாசி: அந்த காபிக் கடை பொண்ணு உங்களுக்கும் கலியாணமாயிருச்சான்னு பழமை பேசிச்சான்னு ஒரு பொறாமைதான் வேற என்ன?

பழமை: இஃகி இஃகி.

கதிர்: இல்லைங்க. அந்த விடியகாத்தால அம்பது வயசிருக்கும் ஒரு அம்முணி, தரைய தொடைச்சிகிட்டிருந்தது வந்து ‘அண்ணே! கொஞ்சம் நவுந்து நில்லுன்னிச்சி’ அவ்வ்வ்

ஆரூரன்: ஏன்? நான் அண்ணனா? யூத்துன்னு சண்டைக்கு போலாம்ல. எங்கள மட்டும் கலாய்க்கிறீங்க

வா.பா: நல்லா குடுக்குறாருப்பா அகுடியா. அது காதுல ‘ஊத்து’ன்னு விழப்போய் பினாயில் தண்ணிய ஊத்தவா?

பாலாசி: அத விடுங்க! விமானத்துல பறந்த முதல் அனுபவம் எப்படி இருந்திச்சி.

கதிர்: அட! அந்த கண்றாவிய ஏன் கேக்குற. நம்ம ஊர் பொருட்காட்சில ஜயண்ட்வீல்ல சுத்தினாலே கொஞ்ச நேரம் வானத்தில இருந்திருக்கலாம். இங்க புறப்படப் போகுது பெல்ட கட்டுன்னாங்க. அதுங்கூட மல்லுக் கட்றப்பவே எறங்கப் போறோம் திரும்பக் கட்டுங்கறாங்க.

பாலாசி: அய்ய! அப்படின்னா உண்டிவில்ல கல்ல வச்சி எறிஞ்சாமாதிரின்னு சொல்லுங்க. அந்த சித்த நேரத்துல டீ வேணும், தண்ணி வேணும்னு கஸ்ஸ்ஸ்ஸிஞ்சீங்களா?

கதிர்: அதெல்லாம் உன்ன மாதிரி சில்லுவண்டு பண்றவேல. நான் பெல்ட் எப்படி கட்றதுன்னு மல்லுக்கட்றதுக்குள்ள ஊரு வந்திருச்சிங்கறேன்.

ஆரூரன்: நாட்டாமை! எனக்கு கம்ப ராமாயணத்துல
'முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை;  இந்த பாட்டு கவனம் வருதுங்க.


கதிர்: அடியே! காலைல நாலு மணிக்கு முழிப்பு வந்து டீ குடிக்க போனா நாய் தொறத்தும்னு பயந்து அஞ்சரை வரைக்கும், கண்டதையும் படிச்சி இடுகை தேத்தினா இதுவும் கவனம் வரும். இன்னும் என்னல்லாமோ வரும். அடிங்..

பாலாசி:அட! இதானா விஷயம். நாங்கூட மொதலாளி செந்தமிழ் மாநாட்டுக்கப்புறம் தமிழ்க்கடல்ல முங்கி முத்தெடுக்குறாருன்னுல்ல நினைச்சிட்டேன்.

வா.பா. அட சிங்கத்த பேச விடுங்கப்பா. நீங்க சொல்லுங்கண்ணே. கொழும்புல வரவேற்க யாரு வந்திருந்தாங்க.

கதிர்: ராஜபக்ஸே

வா.பா: என்னாது? இதெல்லாம் ஓவர் பீலா.

கதிர்: அட வெளிய வந்ததில இருந்து எங்க போனாலும் கையை கூப்பிக்கிட்டு அந்தாளு ஃப்ளெக்ஸ் பேனர்னு சொல்ல வந்தங்க. ஹி ஹி..

பழமை: அங்க உங்க அனுபவத்த சொல்லுங் மாப்பு.

கதிர்: ஹி ஹி. என்ன பாத்தா எப்புடி தெரியுது. அத வச்சி நாலு இடுகை தேத்தமாட்டமா.

பழமை: அடங்கொன்னியா!ச்சேரி ச்சேரி. அங்கால சனங்களோட கதைக்கிறதில உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லைதானே.

கதிர்: அதெல்லாம் ஒன்னுமில்லீங்.

வா.பா. தோடா! யாரோ  ‘கதிரை’ ரெண்டு போடுங்கோன்னா அய்யாங் நானில்லைன்னு கட்டில் கீழ போய் ஒளிஞ்சிகிட்டு, அப்புறம் கதிரைன்னா நாற்காலின்னு சமாதானப் படுத்தி வெளிய கொண்டு வரதுக்குள்ள மூச்சு முட்டிப்போச்சுன்னு கேள்வி. பந்தாவப் பாரு.

பழமை: ஊரெல்லாம் வடிவாப்பார்த்து கெனக்க படமெல்லாம் புடிச்சீங்களா?

கதிர்: அட நீங்க வேற. வானம்பாடி பஞ்சாப்ல படம் புடிச்சி மாட்டினா மாதிரி நான் மாட்டவா? மரம் மட்டைய புடிக்கிறதுன்னாலும் காக்கா குருவி இல்லாத மாதர பார்த்துதான் புடிச்சேன். அப்புறம் சிங்களக் காக்காவ புடிச்சான்னு வில்லங்கம் வந்தா?

ஆரூரன்: அது சரிதாங் மாப்பு. அப்புறம் நாட்டாமையவே கைய புடிச்சி இளுத்தியான்னு ஒரு நாட்டாமை வந்தா வில்லங்கம்தானுங்களே. சரி! எந்தெந்த ஊருக்கெல்லாம் போனீங்க.

பாலாசி: என்னது? ஊருக்கெல்லாம் வேற போனாரா? ரயில்ல போகலையே?

கதிர்: ஏன் ராசா?


பாலாசி: இல்லீங். ரயில்ல ஏறினமா, படுத்தமா, இறங்கி போனமான்னு இல்லாம வடக்கால படுத்தேன், கிழக்கால போச்சுது, மேக்கால இறங்கினாலும் மனசு குபேர மூலைன்னு நினைக்குதுன்னு வாஸ்து கவிதை எழுதுனீங்கன்னா பின்னூட்டம் போடணும்ல. அதான். 


ஆரூரன்: நீங்க சொல்லுங்க. அந்தூருல யாரும் நாட்டாமைக்கு கூப்புட்டாங்களா?

கதிர்: அட ஆமாங். சொம்பு எங்கீங்னு கேட்டனுங். சொம்பெல்லாம் கெடயாதாமா. யாழ்ப்பாணம் தேங்கா குடுவைதான்னாங்க. நாட்டாமையே இல்லாம வேணும்னாலும் தீர்ப்பு சொல்லலாம் நசுங்குன சொம்பில்லாம சொல்லுற தீர்ப்பு செல்லாதுன்னு சொல்லிபோட்டனுங் கறாரா.

ஆரூரன்: அப்புடி போடு. அதான் நாட்டாம. அது சரிங் மாப்பு! ஃபேஸ் ஃப்ரெஸ்ஸா இருந்தாலும் கண்ணுல ஒரு பீதி தெரியுதே ஏன்?

வா.பா.: அதொண்ணுமில்லீங் மொதலாளி. புரட்டாசி முச்சூடும் கறி திங்காம காயப் போட்டதுல அவுங்கூட்டு கோழிக்கெல்லாம் கொண்டாட்டமா போயிடுச்சாம். ஐப்பசி வரட்டும்டி இருக்குன்னு இருந்தாரு. அது இந்த பயணத்தால தப்பிச்சிருச்சி. இப்புடி முழிச்சா வேப்பிலை அடிச்சி கெடாவே வெட்டுவாங்கன்னு சீன் போடுது பயபுள்ள.

கதிர்: ஏண்டி பேசமாட்டீங்க. ஊட்டுக்கு வந்ததும் வராததுமா பாப்பா வந்து அப்பா தமிழ் சொல்லிக் குடுங்கப்பான்னு அதிசயமா கேட்டதும் ஆடிப்போனது எனக்குல்ல தெரியும். ச்செரி ச்செரி. எனக்கு ஒரே ஜெட்லாக்கா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். (நாள பின்ன அந்த மாப்புக்கு மட்டும் ஜெட்லாக் வருது. இந்த மாப்புக்கு வரலைன்னு மட்டமா நினைச்சிறப்படாதில்ல)

வா.பா: சரிங். நீங்க ரெஸ்ட் எடுங்க. ஆனா ஒரு விஷயம். இன்னும் எத்தன நாட்டுக்கு போனாலும் சரி. சூட்கேசுல ஒட்டின ஒரு ஸ்டிக்கர் கூட பிய்க்காம சூட்கேசே மறையற வரைக்கும் அப்படியே வச்சிருந்து டமிலர் பண்பாட்டைக் காப்பாத்தணும் சரியா?

பாலாசி: அண்ணா! ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் இப்போது நாடு கடந்தும்’னு மாத்தணுங்ணா.

வா.பா: கூடிய சீக்கிரம் கோபால் பல்பொடியாக வாழ்த்துகள்

பழமை: அதென்னங் பாலாண்ணே.

வா.பா.:ஒன்னுமில்லிங்க. சிங்கப்பூர் மலேசியா போய்ட்டு வந்தார்னா, கோபால் பல்பொடி மாதிரியே இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரசித்தி பெற்றன்னு சொல்லலாம்ல.

பழமை: அஃகக்ஃகா


ஆரூரன்: ச்சேரி. அப்ப நீங்கள்ளாம் கெளம்புங்கண்ணா. நானு இப்புடியே இவர ஒரு வாக்கிங் கூட்டிட்டு போய்ட்டு ஈரோடு கதிரை ‘பீரோடு கதிர்’ ஆக்கி ஊட்ல உட்டுட்டு போறேன்.

பழமை, வா.பா. பாலாசி: வாரமுங். வணக்கம்.

கதிர்: ‘ஆய் போவான்’!!!!!!
~~~~/\~~~~

Tuesday, October 19, 2010

பாராக் கதைகள் - நம்பிக்கை

கலியாணத்துக்கே உண்டான கலகலப்புடன் இருந்தது அந்த மண்டபம். சிரிப்பும்,பேச்சுமாய் மகிழ்ச்சியான சூழல் மாறி மெது மெதுவே கிசு கிசுப்பும் அமைதியும் படரத் தொடங்கியது. ஆசீர்வாதத்துக்கு கொண்டுவந்த தாலியைக் காணவில்லை. தேடலுக்கும் வேண்டுகோளுக்குப் பிறகும் கிடைக்காததால் எல்லாரையும் பரிசோதிப்பது என்று முடிவானது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தவரை அழைத்தபோது

‘யோவ்! என்னைப் பார்த்தா வரிசையில நிக்கச் சொல்ற. உன் ஜூஜூபி தாலி எனக்கு எதுக்குய்யா. நான் யார் தெரியுமா? ......... டெக்ஸ்டைல்ஸ் ஓனர்’ என்றார்.

மெதுவான புன்சிரிப்புடன் அந்த இளைஞன்

‘உங்களுக்கு தெரியாததா முதலாளி. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆஃபீசரானாலும் சரி, உங்களை மாதிரி பெரிய வியாபாரியானாலும் சரி, எங்களை மாதிரி அன்னாடங்காச்சியா இருந்தாலும் சரி, கையில வேற பை இருந்தா புடுங்கி வச்சிகிட்டு டோக்கன் குடுத்துதானே உங்க கடைக்குள்ள அனுப்பறீங்க? எங்கள வச்சி பிழைக்கிற நீங்களே எங்களை நம்ப மாட்டிங்கறீஙளேன்னு நாங்க கேக்குறமா? சந்தேகத்துக்கு முன்னாடி முதலாளி என்ன கூலிக்காரன் என்னங்க? வாங்க செக் பண்ணனும் என்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~

நகரத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் மேல்மாடி தனி ஸ்யூட்டில் மதுவருந்தியபடி அமர்ந்திருந்தனர் ஆளும்கட்சி, எதிர்கட்சித் தலைவரும், அந்த மிகப் பெரிய தொழிலதிபரும். சமீபத்தில் லைசன்சுக்கு விட்ட கல்குவாரியில் கொஞ்சம் வைரமும் கிடைப்பதால் மூச்சுக்காட்டாமல் ஆட்டையைப் போட பேரம் முடிந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் தலைவரே! என்னைக்குனாச்சும் ஜனங்களுக்கு ரோசம் வந்து, உங்களை நம்பித் தேர்ந்தெடுக்குறோம். எங்களுக்காடா துரோகம் பண்றீங்கன்னு பொங்கிட்டா நம்ம கதி..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என்று சிரித்தது எதிர்கட்சி.

‘அடப் போய்யா! முதல் தேர்தல்ல இருந்து இன்னைவரைக்கும் நம்மள நம்பித் தேர்ந்தெடுக்குறவன நாம நம்பாம விரல்ல மை தடவித்தானே அனுப்புறோம். அதுக்கே ரோஷம் வரலை. இதுக்கெல்லாமா ரோஷப்படுவானுங்க. அடுத்த ரவுண்டு ஊத்துய்யா’ என்று சிரித்தது ஆளும்கட்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

அலுவலகத்திலிருந்து வந்து ப்ரீஃப் கேஸ் ஒரு புறம், ஷூ சாக்ஸ் மறுபுறம் என்று வீசிவிட்டு அமர்ந்தான் ராஜு. கடும் கோபத்திலிருப்பதை அறிந்த அவன் மனைவி அமைதியாக டீ கொண்டு வந்து வைத்துவிட்டு அமர்ந்தாள்.

‘சே! எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ஆனந்துக்கும். ஒரு அவசரத்துக்கு இருவத்தஞ்சாயிரம் கேட்டால், நம்பிக்கையில்லாம ப்ரோநோட் எழுதி கையெழுத்து கேக்குறான். இவனெல்லாம் நண்பனா?’ என்று வெடித்தான் ராஜு.

‘விடுங்க! நான் உங்க மனைவிதானே. உங்களை நம்பி வாழ வந்தவள்தானே. நீங்க கூடத்தான் வாராவாரம் செலவுக்கு என்ன வேணுமோ கொடுத்துட்டு கப்போர்டைப் பூட்டி சாவியை கொண்டு போறீங்க. எதிர்பாராத செலவுக்கு காசு கேட்டா அன்னைக்குதானே முன்னூறு கொடுத்தேன். என்ன செலவுன்னு கணக்கு கேக்குறீங்க. நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, October 8, 2010

ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...



(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)

வலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி!! தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும்  ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி!! காணத்தவராதீர்கள்..

வா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.

கதிர்: வணக்கம்.

வா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.

கதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா?

வா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.

கதிர்:ரொம்பத் தேவை. கேளுங்க

வா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா?

கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.

வா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.

கதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.

வா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா?

கதிர்: (யோவ்! மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா?

வா.பா.
:யப்பா! தாங்கல சாமி! அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?

கதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.

வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்?

கதிர்:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ?

வா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க?

கதிர்: (அடப்பாவிங்களா! இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.

வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.

கதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.

வா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.

வா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.

(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)

வா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்களை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர்! அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா?

கதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.

வா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.

கதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.

வா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா?

கதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா?

வா.பா.
அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது? அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்?

கதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.

வா.பா.
இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.

கதிர்:
பேப்பர் கப் உபயோகிக்கலாமே.

வா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.

கதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.

வா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.

கதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.

இன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ!  ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.

வா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா?

கதிர்:
ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.

வா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.

கதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா? நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.  
~~~~~~~~~~~

Tuesday, October 5, 2010

நாமார்க்கும் குடியல்லோம்...

"செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்”
அந்த மார்கழிமாத ஒடுக்கும் குளிரிலும் பிசிறின்றி வெள்ளி மணியாய் ஒலிக்கிறது கோப்பெருந்தேவியின் குரல். அவளுக்கேயான பிரத்தியேக நேரம் அது. கண்ணனோடு மனதால் குறை சொல்லி, வாயால் பாடி ஆரத்தி எடுத்து சேவித்து எழுந்தாளானால், திரும்ப மாலை விளக்கேற்றும் வரை அவள் கடமைகளே அவளுக்கு ஆராதனை. ஒரு விரல் நுனி வெண்ணையும், பாலும் நைவேத்தியம் காட்டி, ஹாரத்தி எடுத்து, வணங்கி முடித்த பின் பூஜை மண்டபத்தில் எல்லாவற்றையும் சீராக்கி அடுக்களை புகுந்தாள்.

காஃபிக்கு வெந்நீர் வைத்தபடி, சன்னக் குரலில் ‘ஜகத்தோத்தாரண ஆடிசிதள யசோதா’ தவழத் துவங்கியது. மெல்லிய மயிலிறகால் வருடினாற்போல் சேஷனுக்கு உறக்கம் கலைந்தது. காதுக்குள் ரம்மியமாக வந்து கண்ணன் மனசை நிரப்பினான். உள்ளங்கையால் கண்களை வருடி, உள்ளங்கையில் பார்த்து க்ருஷ்ண க்ருஷ்ண என்று மெதுவே எழுந்து பாயைச் சுருட்டி வைத்தார். துண்டோடு, பாத்ரூமில் நுழைந்தாரென்றால் பல் விளக்கி, காலைக் கடன் முடித்து, குளித்து வெளியே வந்து, மடியுடுத்தி, திருமண் சாத்தி,  சந்தியாவந்தனம் முடிக்கவும், கோப்பு எனும் கோப்பெருந்தேவியின் கைப்பாகத்தில் மணக்க மணக்க  காஃபி தயாராயிருக்கும்.

கோப்புக்கு என்னமோ மனதில் குறை இன்னைக்கு என்று அநிச்சையாக உணர்ந்தார் சேஷன். இன்று ரொம்பவும் குழைந்து கண்ணனைச் சீராட்டிக் கொண்டிருக்கிறாள் பாட்டில் என்ற நினைப்பு தோன்றியது. அடுக்கடுக்காய் குழைவாய் வகை வகையாய் கண்ணனைப் பாடப் பாட, ஜபம் செய்ய விடாமல் மனது கொஞ்சம் அலைக்கழிந்தது. பாட்டென்றால் கொள்ளைப் பிரியம் கோப்புவுக்கு. மாமனாரிடம், மெட்ராஸில் அவளுக்குப் பாட்டுச் சொல்லித்தர ஏற்பாடு செய்வதாய் கொடுத்த வாக்குறுதியும், இரண்டாவது மாதமே கோப்பு பிள்ளையுண்டானதில் அது குறித்து மறந்தே போனதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், எப்போதாவது ஓய்ந்திருக்கையில், ‘கோப்பு! ஜயதி ஜயதி பாரதமாதா பாடுடீ’ என்று கேட்டு, சிலிர்த்து, கண்ணோரம் கசியவிருக்கும் நீரை அடக்கி,  ‘மாமாக்கு உனக்கு பாட்டு கத்து குடுக்கறேன்னு வாக்கு குடுத்தேனேடி. பண்ண முடியலையே. குறையோடயே போய் சேர்ந்திருப்பார். இப்போ கத்துக்கறயா சொல்லு, விசாரிக்கட்டுமா?’ என்பார்.

‘நன்னாருக்குன்னா! கெடக்கறதெல்லம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மணையில வைன்னு இப்போ போய் பாட்டு கத்துக்கறதாம். ஆச்சு, நப்பின்னைக்கு ஆறு வயசாயிடும் இந்த அப்பசிக்கு. விஜய தசமிக்கு அவள சேர்த்துவிட்டு ஒங்க ஆசைப்படி அவளுக்கு சொல்லிக் கொடுங்கோ’ என்று எழுந்து போவாள். ஏனோ இன்று இவையெல்லாம் கவனம் வந்து ஜபம் செய்யவிடாமல் கோப்புவின் பாடல் மனதைப் புரட்டிப் போட்டது.

சந்தியாவந்தனம் முடித்து, பஞ்சபாத்திர தண்ணீரை துளசிக்கு வார்த்து, ஸூக்தம் சொல்லி, மந்த்ர புஷ்பம் சொல்லி முடித்து சேவித்து எழுந்தார். பொத்தென்று பேப்பர்க்காரன் வீசிய ஹிந்து ஹாலுக்குள் விழுந்தது.


‘கட்டேல போறவன்! எத்தனவாட்டி சொன்னாலும், க்ரில்லுல சொருக மாட்டான்’ என்றபடி பேப்பரை குனிந்து எடுத்தார். பித்தளை டபரா டம்ப்ளரில் மணக்க மணக்க காஃபியைக் கொண்டு வந்தாள் கோப்பு.

‘மொழக்க மொழக்க ஸ்லோகம் சொல்லி முடிச்சி, இப்படிச் சபிக்கணுமா அந்தப் பையனை. என்ன மனுஷனோ’ என்று நொடித்துக் கொண்டு நப்பின்னைக்கு குரல் கொடுத்தாள்.

மணி ஆறு. ஏழுக்கு கிளம்பினால்தான் ஆஃபீசுக்கு நேரத்துக்கு போகமுடியும். அவள் குளித்த பிறகு அவள் தம்பி ஸ்ரீதரன் ரெடியாக வேண்டும் காலேஜுக்கு. ஒரு கையில் காஃபியும் தரையில் விரித்த பேப்பருமாய் அடுத்த கட்ட தவத்திலிருந்தார் சேஷன். 


‘சனியனே! குளிக்காம தளிகையுள்ளில வராதேன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். புக்காத்தில, பொண்ண வளர்த்திருக்கா பாருன்னு நான்னா சீப்படப் போறேன்’ என்று சலித்துக் கொண்டால் கோப்பு. அதை சட்டை செய்யாமல் கிசு கிசு குரலில்  ‘அப்பாவை கேட்டியாம்மா?’ என்றாள் நப்பின்னை.

‘நீ சித்த ஹாலுக்கு போறியா? காஃபி கொண்டு தரேன். குடிச்சிட்டு குளிக்கிற வழியப்பாரு. நன்னா மாட்டிண்டு முழிக்கிறேன் உங்க ரெண்டு பேருட்டயும்’ என்று சலித்தபடி விரட்டினாள். உர்ரென்று ஹாலுக்கு வந்து உட்கார்ந்த மகளை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘என்ன அவகிட்ட குசுகுசு? என்ன வேணும் நோக்கு?’ என்றார்.

ஒரு கண்ணால் பூஜை மண்டப கண்ணனுக்கு இறைஞ்சி, ‘ஏன்னா!கத்தாதேங்கோ. கோந்த ரொம்ப சிரமப் படறான்னா. வேற என்னன்னாலும் பரவால்லன்னா. பஸ்ல கண்ட காலியும் கயவாளித்தனம் பண்றாம்மா, கூசிப்போறதும்மான்னு அழற குழந்தைகிட்ட, பொறுத்துகோடின்னு அம்மாவா எப்படிச் சொல்றது? அவ ஆஃபீஸ்ல லோன் கிடைக்குமாம்னா. ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறேம்மான்னு கெஞ்சறது குழந்தை. சரின்னு சொல்லுங்கோன்னா’ என்று தயங்கித் தயங்கிச் சொல்லி, மகளைப் பார்த்த பார்வையில், என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்ற கழிவிரக்கம் தெரிந்தது.
 

‘இங்க பாரு கோப்பு, நோக்குதான் லோகம் தெரியாது. இவள் எப்படித்தான் வேலைக்குப் போறாளோ தெரியலை. வண்டி இருந்தா மட்டும், கயவாளிக சும்மா இருக்காங்கறயா. விரட்டிண்டு போறதும், நாய் கத்தறா மாதிரி ஹாரன் வச்சிண்டு பக்கதுல வந்து பயமுறுத்தறதும், எத்தன குழந்தைகள் கீழ விழுந்து அடி பட்டுண்டு, நாராயணா! என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியலைடி.’

‘தோ! எழுந்து விறு விறுன்னு ரெடியாகி, அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்பினா டெர்மினஸ்க்கு போய்ட்டு உக்காந்துண்டு போலாமேடி. பகவானேன்னு வரன் குதிர்ந்து இவள ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தாச்சுன்னா அவன் பாடு அவள் பாடுன்னு, இன்னும் சித்த ஸ்லோகம் சொல்லிப்பேன், எங்கொழந்தைக்கு ஒன்னும் ஆகப்படாதுன்னு.’

‘அவளை மடமடன்னு குளிச்சிட்டு சாட்டு கெளம்பற வழியப்பார்க்கச் சொல்லு’ என்றார்.

சப்தம் கேட்டு விழித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.

‘சார் வாளுக்கு, பைக் வேணுமோ? இப்போ அதானே ஃபேஷன். காலேஜ் சேர்ந்த கையோட புக் வாங்கியாறதோ இல்லையோ பைக் வாங்கியாகணுமே ’ என்றார். 

‘ம்க்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸில சேர்த்துட்டு லேப்டாப் வேணும்னு கேட்டா, மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிக்கிறதுக்கு தினம் ஒரு பிணம் வேணும்னு கேப்பியான்னு கேட்ட மனுஷன்கிட்ட பைக் வேணும்னு கேக்கற அளவுக்கு நானொண்ணும் லூசு இல்லை’, என்று பாத்ரூமுக்குள் நுழைந்தான் ஸ்ரீதர்.

ஹிந்துவை மனது ஒட்டாமல் புரட்டியபடி இருந்தவர், ‘தளிகையாயிடுத்துன்னா! சாப்பிட வரேளா என்றவளிடம் பதில் சொல்லாது, பேப்பரை மடித்து வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். ஆஃபீஸில் இன்று டெண்டர் ஓப்பனிங். பெரிய டெண்டர். இன்னைக்குள் முடிச்சி அனுப்பிடணும். கையில் வைத்திருந்தால், காண்ட்ராக்டர் தொல்லை தாளாது. புதுசா வந்திருக்கிற அதிகாரி வேறு அவ்வளவு சரியில்லை என்று கேள்வி என்று மனதுக்குள் ஆஃபீஸ் வந்து உட்கார்ந்து கொண்டது.
 

ஆஃபீஸ் போய் சேர்ந்து, எல்லாம் தயார் படுத்திக் கொண்டு டெண்டர் பாக்ஸ் அருகே போனார். காத்திருந்த டெண்டரர்களிடம் சீல் உடைபடாமல் இருக்கிறது என்று சாட்சிக் கையெழுத்து வாங்கி, பெட்டியைத் திறந்து, வந்திருந்த டெண்டர்களை அள்ளிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து, முறைப்படி ஒவ்வொன்றாகப் பிரிக்கத் தொடங்கினார். 

முதல் டெண்டரைப் பார்த்ததுமே சலிப்பு வந்தது. நாசமாப் போறவன். இந்த கோபால் ரெட்டிக்கு என்ன தெரியும்னு இந்த டெண்டரை கேக்கறான். ஜல்லி சப்ளை பண்ற கடங்காரனுக்கு ஆப்டிக் ஃபைபர் காண்ட்ராக்ட் எழவு எப்படி முடியும், என்று நினைத்தபடியே, ரேட்டைச் சுழித்து கையொப்பமிட்டபடி வந்தவரின் கண்ணில் அந்தப் பக்கத்தின் அடியில் கையொப்பமிடாதது கண்ணில் பட்டது.

அப்பாடா! தப்பிச்சேன். இல்லைன்னா எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, க்ரெடென்ஷியல் சரியில்லைன்னு எழுதப் போய், பணத்தால் அடிக்கப் பார்ப்பான். மேல இருக்கிறவன் ஒரு வேளை மடிஞ்சிட்டான்னா என் பாடுன்னா திண்டாட்டமாப் போகும். ஆச்சு! இன்னும் ரெண்டு வருஷம் தள்ளியாச்சின்னா, போதுண்டா சாமின்னு ரிடையராயிடலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சு நிலைக்கவில்லை.

சுருட்டு நாத்தமும், வியர்வை நாத்தமுமாய் ஒருத்தன் வந்து, ரெட்டிகாரு கார்ல இருக்குது சார். சார்னு கொஞ்சம் ரம்மன்னாரு சார் என்றான். கண்கள் சிவக்க அடித்தொண்டையில், ரெட்டியில்லை, என்னப்பன் நாராயணனே டெண்டர் போட்டிருந்தாலும், எனக்கு அவன்கிட்ட போக வேண்டிய அவசியமில்லைன்னு போய்ச் சொல்லு என்றார். சற்று நேரத்தில் ரெட்டியே இளித்துக் கொண்டு வந்தான். 


‘பாகுன்னாரா ஸாமி? ஏமண்டி பாப்பக்கு ஒக பண்டி கொனீய குடுது? பஸ்ஸுக்கு ஓடி போய் அந்த கும்பல்ல ஏறி அவஸ்தை பட்டதை பார்த்தேன் காலைல. அல்லாரும் பொறுக்கி பசங்க சாமி. ’

'இண்ட்லோ கம்ப்யூட்டர் கூட லேதுனு கேள்வி பட்டேன். '

'பையன் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் சதுவுத்துன்னாடண்டா. மவுண்ட்ரோடுல ரெட்டி மோட்டார்ஸ் நம்மளதுதான் சாமி.'
'பாப்பாக்கு கூட்டினு போய் ஏ பண்டி காவாலோ செலக்ட் மட்டும் பண்ண சொல்லு.'
'நாளைக்கே டெலிவரி பண்ணிடலாம்.’
‘லேப்டாப் சாயந்திரம் நம்ம மேனேஜர் ஊட்டாண்ட கொண்டு வந்துடுவான்.’

'நீ ஒன்னும் செய்யொத்து சாமி. '

'ஆ, லஞ்சா கொடுக்கு மேனேஜர் சேசின பனி.'
'சரியா பார்க்காம டெண்டர் போட்டுட்டான்.'
'நேத்தே பார்ட்டில உங்க பாஸ் கிட்ட பேசியாச்சி. ஒன் அவர்ல அவர் ரூம்ல இருப்பேன்.'
'நீ ஒன்னும் எழுதாத டெண்டர் ஃபாரம் உள்ள அனுப்பினா போதும் 'என்றான். 

ரெட்டியை கண்ணுக்குள் பார்த்தபடி, ரெட்டி நோக்கு காண்ட்ராக்டும் தெரியலை. காண்டக்டும் சரியில்லை. மரியாதையா எழுந்து போறியா? விஜிலன்ஸுக்கு ஃபோன் பண்ணவா என்றபடி ஃபோனை அருகில் இழுத்தார்.
 

'புத்திலேனி வெதவா!  சம்பளம் தீஸ்கோனி ஏம் பதுகுதாவைய்யா. ச்ச்சாவு போ!'
'ரெட்டி எவரனி நீக்கு சூபிஸ்தானு'
என்று கருவியபடி வெளியே போனான் ரெட்டி. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் டெண்டர் ஃபார்மை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்தார். ஆவணங்களைத் தயார் செய்து, ப்ரோஸீடிங் எழுதி, அதிகாரியின் ரூமுக்கு கொண்டு செல்லும்போது மணி ஒன்றாகி விட்டிருந்தது.  சாரி சார்! லஞ்ச் டைம். லாக் பண்ணி வச்சிட்டு போங்கோ என்று கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.

சேஷனை ஒரு கேலியான பார்வையோடு கடந்தான் ரெட்டி. சற்று நேரத்தில் அதிகாரியும் அவனும் வெளியே கிளம்பினர். ரெண்டரை மணியளவில் இரைதின்ற பாம்புபோல் வீங்கிய வயிற்றைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு அதிகாரியும் ரெட்டியும் மீண்டும் வந்தனர்.

அடுத்த கட்ட வேலையில் மும்முரமாயிருந்த சேஷனை, அதிகாரி அழைப்பதாகப் ப்யூன் வந்து சொன்னான். என்ன எழவெல்லாம் வந்து சேருமோ தெரியலையே க்ருஷ்ணா, என்றபடி அதிகாரியின் அறைக்குச் சென்றார் சேஷன். 

‘என்ன சேஷன் சார்? என்னமோ நீங்க ரொம்ப சின்சியர்னு கேள்வி பட்டிருந்தேன். சார் உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு.'

'ரிடையர் ஆகப் போற நேரத்துல உங்க புத்தி இப்படி கெட்டு போகணுமா சார்?’ ‘நீ ஜல்லி சப்ளை பண்ற ஆளு, உனக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சம்மந்தம்?’

‘எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு எழுதுவேன், க்ரெடென்ஷியல் இல்லைன்னு எழுதுவேன்.’
‘நான் எழுதறதுதான்.’
‘மேல இருக்கற மடப்பயலுக்கு எங்க என்ன பார்க்கணும்னு கூட தெரியாது. பணம் வாங்க மாட்டேன்.’
‘ஒரு ஸ்கூட்டியும் ஒரு லேப்டாப்பும் வாங்கி வீட்டுக்கு அனுப்புன்னு கேட்டிங்களாமே!’  
‘சேஷனாவது அப்படியெல்லாம் கேக்கறதாவதுன்னு திட்டிட்டேன். ’
‘சாப்பிட்டு வந்து, நீங்க குடுத்த பேப்பரை பார்த்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவு கேவலமா நடந்துட்டிருக்கீங்கன்னு.’
‘மொட்டைக் கையெழுத்து போடுவேன்னு நினைச்சீங்களா?’
‘அதெப்புடி சார், கையெழுத்து போட்ட ஒரு டாகுமெண்ட்ல கையெழுத்து இல்லை, செல்லாதுன்னு எழுதி சார் டெண்டரை விட்டுட்டு மத்ததை ரெகமண்ட் பண்ணுவீங்க? ’
‘நான் உங்கள நம்பி கையெழுத்து போட்டிருந்தா என் வேலை போயிருக்குமா இல்லையா?’
‘இங்க பாருங்க, கையெழுத்து இருக்கா இல்லையா?’
‘ஏன் சுழிக்காம விட்டு, கையெழுத்து இல்லைன்னு நோட் எழுதுனீங்க?’

திகைத்துப் போனார் சேஷன். அவர் சர்வீஸில் இப்படி ஒரு ஆளைக் கண்டதில்லை. 

‘புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.'
'போங்க சார். கொண்டு போய் வேற மாத்தி எழுதி கொண்டு வாங்க.'
'இங்க பாருங்க கம்ப்ளெயிண்ட். '
'நீங்க அது சரியில்லை, இது சரியில்லைன்னு எழுதினா, எனக்கு வேற ப்ரூஃபே வேணாம். இந்த கம்ப்ளெயிண்ட்டே போதும். ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும் என்றார். '

நிற்க முடியாமல் உதறியது சேஷனுக்கு. 

'சார்! அதிகாரியாச்சேன்னு பார்க்கிறேன். என் லீவ் சர்வீஸ் இருக்காது உங்களுக்கு.'
'என்னையா மிரட்றீங்க? '
'ஏதோ ஒரு டவுட் வந்துதான், நான் இந்தாளு ஃபார்மை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கேன். இப்போவே விஜிலன்சுக்கு கொடுக்கிறேன். ஆனதைப் பார்த்துக்குங்க' என்றார் சேஷன்.

'சாரி மிஸ்டர் சேஷன். இவ்வளவு மோசமா பிஹேவ் பண்ணுவீங்கன்னு நினைக்கலை.'

'ஐ ஹேவ் நோ அதர் கோ!'
'ஐ ஹேவ் டு ஸஸ்பெண்ட் யூ.'
'நீங்க இப்படியே வீட்டுக்கு போலாம். '
'உங்க டேபிள்ள உங்க பெர்சனல் திங்ஸ் இருந்தாச் சொல்லுங்க, ஐ வில் விட்னஸ் அண்ட் ஹேண்ட் ஓவர் டு யூ.'
'யூ ஷுட் நாட் டச் எனி அஃபிஷியல் டாகுமெண்ட்ஸ். '
'இந்தாங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். '


'உட்கார்ந்து  நிதானமா சார்ஜ் ஷீட் படிச்சி பார்த்து அக்னாலட்ஜ் பண்ணுங்க.' 

'மீன் வைல் ஐல் கெட் யுவர் திங்ஸ்'
என்று வெளியே சென்றவன் ஜெராக்ஸ் காபி ஃபார்மை மட்டும் கொண்டு வந்தான். படிக்கப் படிக்க மயக்கம் வரும் போலிருந்தது சேஷனுக்கு. இத்தனை வருட சர்வீஸில் இப்படி ஒரு பேச்சு வாங்கியதில்லை. அதுவும் நேர்மையாய் இருந்தும் எவ்வளவு கேவலமாக பேசிவிட்டான். லஞ்சப் பேர்வழி என்ற பேர் போதாமல், ப்ளாக் மெயில் செய்ததாக வேறு ஜோடித்தால் என்ன செய்வது?

'ஓக்கே ரெட்டி. ஹியரீஸ் த ஜெராக்ஸ்.'

'உங்க கம்ப்ளெயிண்ட் மட்டும் இருக்கட்டும்.' 
'சாலா தேங்க்ஸண்டி. ஈவினிங் பார்ட்டில மீட் பண்ணுவோம் 'என்றான். ரெட்டி, 


'அய்காரு! இப்புடு சூச்சுகுன்னாவா?'
'செப்பின மாட்ட கேக்க மாட்டய்யா மீரு.'
'ஒக சின்ன தப்பு நடந்து போச்சின்னு வந்து கேட்டா சரினி சொல்லாம இப்புடி அசிங்கப்பட்டு நிக்கறியேய்யா. '
'உன்ன மாதிரி எவ்வளவு பேரை பார்த்திருப்பேன். பொழைக்க தெரிஞ்சிக்க ஸாமி' என்று கிளம்பினான்.


'அட, குடு சார் அந்த சார்ஜ் ஷீட்டை. என்னமோ மினிஸ்டர் கிட்ட இருந்து அப்ரிஸியேஷன் பண்ணி வந்தா மாதிரி இந்த டென்ஷன்லையும் அத படிச்சிக்கிட்டு' என்று வெடுக்கென பறித்துக் கொண்டு நடந்தான்.  

அதிகாரி, 'நீங்க அரை நாள் லீவ் போட்டுட்டு போங்க சேஷன். நான் வேலையை முடிச்சிடுறேன்'என்றார். 

சர்வமும் தளர்ந்து குறுகிப் போய் அமர்ந்திருந்தார் சேஷன். சுற்றி நடப்பதும் இருப்பதும் ஏதுமறியாமல் ஒரு வெறுமை. சம்மந்தமின்றி எங்கிருந்தோ மென்மையாக கோப்புவின் குரலில்  ‘ஜயதி ஜயதி பாரதமாதா’ கேட்டது.
~~~~~~~~~~~~~~~~~~

Sunday, September 19, 2010

ரங்கு

பசித்தது ரங்குவுக்கு. எட்டரைக்கெல்லாம் கொதிக்க கொதிக்க ஊதி ஊதி நுனிவிரலால் சாப்பிட்டுப் பழக்கம். அதிகாலையிலிருந்தே அலைச்சல். ஓட்டத்தின் நடுவே யாரோ காஃபி கொடுத்தார்கள். அம்மா போடும் காஃபி மாதிரி இல்லை. பசிக்கிறதென யாரிடம் சொல்வது? மெதுவே வாசலுக்கு வந்தான். மெதுவாக, ஒரு பூந்தளிர் கரம் கை பிடித்து இழுத்தது. ரங்கு மம்முடா என்றான் ரவி.

ரங்குவுக்கும் என்ன செய்யவென்று தெரியவில்லை. இது முதல் முறையில்லை. மணி ஒன்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. வந்துவிடுகிறேன் என்று சொன்ன பெரியப்பாவைக் காணோம். வாசலுக்கு ஓடி வந்துவிட்டாரா என்று பார்த்து பார்த்து கால் வேறு வலித்தது. அப்பாவைப் பார்த்தான்.

எப்போதும் விட அழகாய் இருந்தார். குழைத்து இட்டிருந்த விபூதியும், லேசான சிரிப்போடு கண்மூடிக் கிடந்ததுவும், மூக்கிலிருந்த பஞ்சும், தலைக்கட்டும் தாண்டியும் அழகாய் இருந்தார். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா அவ்வப்போது வெடித்து அழுவதும் ஓய்வதுமாய் இருந்தாள். இவளிடம் எப்படிக் கேட்பது பசிக்கிறதென்று. மெதுவே அப்பாவிடம் போய் அமர்ந்தான். வெற்றிலைப் போட்டாற்போல் உப்பியிருந்த கன்னத்தைத் தடவினான். வாயோரம் நீர் வழிய, பஞ்சால் துடைத்தான்.

அம்மா இழுத்துக் கட்டிக் கொண்டு அழுதாள். அதைப்பார்த்து ரவியும் ஓடிவந்து மடியில் அமர்ந்து அழுதான். பிஞ்சுக் கரம் கொண்டு கண்ணீர் துடைத்து அம்மா அயாத! மம்மும்மா என்றான். இன்னும் அழுதாள். சற்று ஓய்ந்து தள்ளாடி எழுந்து, காசு எடுத்துக் கொடுத்தாள் ரங்குவிடம். போம்மா. ஹோட்டலில் ரெண்டு இட்டிலி வாங்கி ஊட்டி விடு. நீ சாப்பிடக்கூடாதும்மா. கொள்ளி போடணுமேடா என்று வெடித்து அழுதாள்.

கொஞ்சம் நடந்து கொஞ்சம் தூக்கி என்று கூட்டிக் கொண்டு போய் நான்கு வயது ரவிக்கு இட்டிலி ஊட்டி கூட்டிக் கொண்டு வந்தும் பெரியப்பாவைக் காணோம். இன்னோரு ஆண்டி காஃபி கொண்டு வந்து கொடுத்தார்கள். தயங்கித் தயங்கி, மாமி, புள்ளைங்களுக்கு எங்க வூட்டு இட்டிலி கொடுக்கலாங்களா என்றார். இல்லம்மா! சின்னவனுக்கு வாங்கிக் கொடுத்துட்டான். ரங்கு சாப்பிடக்கூடாது என்று அடுத்த பாட்டம் அழுதாள்.

காபின்னா குடிம்மா என்று கொடுத்த காஃபியும் குமட்டிக் கொண்டு வந்தது. ரெண்டு மணியிலிருந்து அலைச்சல். தூக்கமா, பசி மயக்கமா என்று தெரியாமல் களைப்பாய் இருந்தது ரங்குவுக்கு. அம்மாமேல் சாய்ந்துக் கொண்டு உறங்கிப் போனான். எப்போதோ பார்க்கவரும் அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்து வெடிக்கும் அழுகுரல் மீறி உறங்கிப் போனான்.

சற்று நேரத்தில் மெதுவே உலுக்கினாள் அம்மா. கண்ணா! அப்பா ஆஃபீஸ்ல போய் சுதர்சனம் மாமா, சுப்பாராவ் மாமாக்கெல்லாம் சொல்லிட்டு வந்துட்டும்மா. பார்த்துப் போ. பராக்குப் பார்க்காம சீக்கிரம் வரணும் என்று அழுதாள்.

வயிறு லேசாக வலிக்க ஆரம்பித்திருந்தது. பசியென்று சொல்லத் தோன்றவில்லை. கொள்ளி வைக்கிறதுன்னா என்ன என்று யோசனை வேறு வந்தது. தளர்வாய் நடந்து அலுவலகம்போய், சுதர்சனம மாமாவைப் பார்த்தான். எப்போதும் போல் சிரித்த முகத்துடன் ‘என்ன ராஜா! அப்பாக்கு உடம்பு முடியலையா?’ என்றார்.  ‘அப்பா காலையில செத்து போய்ட்டார் மாமா. சுப்பாராவ் மாமாக்கும் சொல்லிட்டு வீட்டுக்குப் போகணும்’ என்றான்.

விலுக்கென்று ஆஜானுபாகுவாய் எழுந்து இழுத்துக் கட்டிக்கொண்டார். கண்கள் கலங்க ‘நீ ஏன் ராஜா வந்த? எதாச்சும் சாப்பிட்டியா?’ என்றார்.  ‘கொள்ளி போடணுமாம் மாமா. சாப்பிடக்கூடாதாம்’ என்று அழாமல் சொன்னவனை விக்கித்துப் பார்த்தார். மெதுவே பிடித்து அமர்த்தி, யாரையோ கூப்பிட்டு ஒரு பழரசம் வாங்கிக் கொடுத்து,  ‘இது சாப்பிடலாம்டா. இந்த அண்ணன் கூட போ. நாங்க வரோம்’ என்று அனுப்பி வைத்தார்.

சைக்கிளில் கொண்டுவந்து விட்ட அந்த அண்ணனும், பார்த்து அழுதான். பெரியப்பாவைக் காணோம். மாமாக்கள், பெரியம்மா எல்லாம் வருவார்களா தெரியவில்லை. அக்கா வரமுடியாது என்று அம்மா சொன்னாள். சற்று நேரத்தில் சுதர்சனம் மாமா, சுப்பா ராவ்மாமா என்று அப்பாவின் நண்பர்கள் வந்தார்கள். கதறல் வெடித்தது. சுதர்சனம் மாமா மட்டும் மெதுவே ஒரு பேப்பரில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார்.

மெதுவே ரங்குவை இழுத்து,  ‘சொந்தக்காரங்களுக்கு தந்தி குடுக்கணும்பா. அட்ரஸ் வேணுமே. அக்கா முகம் பார்க்ககூட முடியாதுப்பா. உங்க பெரியப்பா இங்க இருக்காருன்னு அப்பா சொல்லுவாரே, எங்கே என்றார். வந்துடுவாங்க மாமா’ என்றான் ரங்கு. வந்தவர்கள் எல்லாரும் கிளம்பிப் போய்ச் சற்று நேரத்தில் வந்தார்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும்.

அழுகையெல்லாம் ஓய்ந்த பின், தந்தி, ஆஃபீஸ் நண்பர்கள், உங்க அண்ணா தம்பி என்று என்னமோ பேசிக் கொண்டிருக்க, மெதுவே மீண்டும் ரவி, ரங்கு மம்முடா என்றான். எழுந்து வந்த பெரியப்பா, பக்கத்துல வர வழியில ஹோட்டல் பார்த்தேன். ஒரு தயிர்சாதம் வாங்கிண்டு வா என்று ஐந்து ரூபாய் தந்தார். பெரியப்பா பசிக்குது என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது. கூட ஒரு ரூபாய் கொடுத்து நீ ஒரு காஃபிமட்டும் சாப்பிடலாம்டா. கொள்ளி போடணும். நிறைய வேலையிருக்கு சீக்கிரம் வா என்று அனுப்பினார்.

யாரோ ஊட்டிவிட, சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தான் ரவி. பெரியப்பாவுடன், புரோகிதர் வீடு, ஆஃபீஸில் முன்பணம் என்று அலைந்து திரிந்து களைத்து, ஒரு வழியாய் ஈமக்கிரியை முடித்து வர, பசி இன்னும் காந்தியது. சலூனில் வேணாம் பெரியப்பா என்று அழ அழ, தலைமுடியை ஒட்ட வெட்டி, பின்புறம் ஒரு கொத்து முடி மட்டும் வெட்டாமல் விட்டு வீடு திரும்பினார்கள். வாசலிலேயே குளித்து உள்ளே நுழைய பெரியம்மா சமையல் முடித்திருந்தாள்.

அம்மா, பசிக்கறதும்மா என்று முதல் முறை ஈனமாய்ச் சொன்னபோது ஓவென்று கட்டிக் கொண்டு அழுதாள் அம்மா. சாதம் கலந்து பெரியம்மா முதல் உருண்டை கொடுக்கவும் தொண்டையை அடைத்தது. சுவரோரம் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அம்மா. உன் பிள்ளையைப்பார் எவ்வளவு தைரியமாய் அழாம தானே ஓடி எல்லாம் பண்ணி ராஜா மாதிரி அனுப்பி வச்சான் அப்பாவை, மனச தேத்திண்டு ஒரு வாய் சாப்பிடு என்றார் மாமா.

ரங்குவுக்கு அப்போதுதான் உறைத்தது. ஆமாம் எனக்கு ஏன் அழுகை வரவில்லை? அப்பாவுக்கு நெருப்பு சுடாதா? நாளைக்கு காலையிலேயே போக வேண்டும் என்றார்களே. கொளுத்திய பிறகு அங்கு போய் என்ன செய்வது? அப்பா இல்லாமல் எப்படி? ஸ்கூல்? அய்யோ ஸ்கூலில் சொல்லவில்லையே. நாளைக்குப் போய் சொல்லணும். ஸ்கூல் திறந்து ஒரு வாரம்தான் ஆச்சு. புது வாத்தியார் மட்டம் போட்டதுக்கு அடிப்பாரோ? ம்ஹூம்! அழுகை வரவில்லை.

காலையில் பாலுக்குப் போய், சாம்பலாக் கிடக்காரேடா உங்கப்பா என்று மாமா கட்டிக்கொண்டு அழுதார். அப்போதும் அழுகை வரவில்லை. ஸ்கூலெல்லாம் பரவாயில்லை. கருமம் பண்ணவன் வெளியில் போகக்கூடாது. காயம் படக்கூடாது என்றபோதும் அழுகை வரவில்லை. பத்தாம் நாள் காரியத்தின்போது அழு என்றபோதும் அழுகை வரவில்லை. கதறிய அம்மாவைக் கட்டிக் கொண்டு அம்மா அயாதம்மா என்று ரவி கூட அழுது தீர்த்தான்.

சரியான கல்லுளிமங்கன்! ஒரு பொட்டு கண்ணீர் வரலையே என்று அத்தை சொன்னது புரியவில்லை. ஒரு வழியாகக் காரியம் முடிந்து சகஜ நிலையில் பள்ளிக்குப் போகலாம் என்றதும், ஜெயிலிலிருந்து விடுதலையானாற்போல் ஒரு பாரம் போனது.

வகுப்புக்குப் போனதும் எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். சற்று இடைவெளியில் கொல்லென்று சிரித்தார்கள். இங்க பாருடா சட்டியக் கவுத்து முடி வெட்டிருக்காருடா என்று சிரித்தான் ஒருவன். பெஞ்சில் அமைதியாக அமர்ந்தான் ரங்கு. பின்னாடி பெஞ்சில் இருந்தவன் இங்க பாருடா டும்மி என்று கொத்து முடியை இழுத்தான். பெரியப்பா மேல் கோபம் வந்தது. புது ஆசிரியர் வந்தார்.

‘வாங்க தொரை! சாருக்கு மூணுமாசம் லீவு போதலையோ? ஏன் ஒருவாரம் காணோம். இது என்னா முன்மண்டைய நாய் நக்கியிருக்கு?’ என்றதும் பின்னாலிருந்தவன் மீண்டும் கொத்து முடியை இழுத்து, ‘இங்க பாருங்க சார் டும்மி’ என்று கத்தினான். எழுந்த சிரிப்பலையில் வகுப்பே அதிர்ந்தது.

அடிவயிற்றிலிருந்து ஒரு பந்து எழும்பி, நெஞ்சையடைத்தது ரங்குவுக்கு. விழுங்க விழுங்க மேலெழும்பியது. உதடு தனிச்சையாய்த் துடித்தது. கண்ணில் மெதுவே முதல் சொட்டு நீரிறங்கியது.  ‘சிரிப்பிற்கு நடுவே லேசான புன்னகையுடன் நின்றிருந்த ஆசிரியரைப்பார்த்தான்.

‘சார்! எங்கப்பா செத்துட்டாங்க சார். கொள்ளி போட்டா இப்படித்தான் இருக்கணும்னு எங்க பெரியப்பா வெட்டச் சொன்னாங்க சார்’ என்று சொல்லி முடிக்க அடைத்துக் கொண்டிருந்த பந்து அப்பா அப்பா என்ற விசும்பலோடு வெடித்துக் கிளம்பியது. சட்டெனெ வெளிறிய முகத்தோடு தோளை அழுத்தி அமர வைத்த நொடி மயான அமைதி வகுப்பில். சேர்த்து வைத்த துக்கமெல்லாம் பொங்கிவர மேசையில் கவிழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதான் ரங்கு. திடீரென அப்பாவின் இழப்பை உணரத்துவங்கியிருந்தான்.

Sunday, November 15, 2009

மனுஷி!

கிராமமுமின்றி நகரமுமின்றி டவுன் என்றழைக்கத்தகுந்த ஊர் அது. பிரதானமாக ஒரு கோவில். ஓரளவு கூட்டம் வரும். அந்த ஊரின் பெரும்பாலான திருமணங்கள் அங்கு நடைபெறும். நுழைவாயில் ஓரம் இரு புறமும் பிச்சைக்காரகள். எப்பொழுதும் முதலில் அமர்ந்திருக்கும் பூவாயிக் கிழவி.

இனி சுருக்கம் விழ இடமில்லை எனும்படி கச்சலான தேகம். வெள்ளிக் கம்பி முடியை திருத்தமாகக் கட்டியிருப்பாள். வெடுக் வெடுகென ஆடிய தலையும், சற்றே கூன் விழுந்த உடலும், பூவிழுந்த கண்ணும் பாவமாய் இருக்கும். தருமம் பண்ணுங்க என்று கேட்க மாட்டாள். எதிரில் ஒரு நசுங்கிய அலுமினிய தட்டு. அதில் சில்லறையும் கொஞ்சம் இருக்கும்.

கோவிலின் காவலாளி சரவணன். ஆட்கள் வரும்போது, ஓரமா உக்காரு, வழியடைக்காத என்று குரல் விடுவதும், வரிசையில போங்க என்று அதட்டுவதுமாயிருப்பான்.

அன்றைக்கு ஒரு கலியாணம். பூவாயிக் கிழவி மேள சத்தம் கேட்டு, ஏம்பா சரவணா! யாரு கண்ணாலம் இன்னைக்கு என்றாள்.பொட்டிக் கட மாணிக்கம் பொண்ணுக்கு ஆத்தா. அவன் அக்கா பையனுக்கு குடுக்குறான் என்றான். யாருடா செல்வி பொண்ணா? எனக்கு சொல்லலப்பா அவன். நல்ல பொண்ணுப்பா அது. கோவிலுக்கு வரசொல்ல எல்லாம், என் கிட்ட பேசாம, நாலணா குடுக்காம போவாது என்றாள்.

ம்கும். துட்டு குடுக்கிற பார்ட்டி மட்டும் கவனமிருக்கும் உனக்கு. உங்கூட பேச நேரமில்ல நீ கெட என்றபடி, ஓரமா உக்காரு, வழிய அடைக்காத, வரிசையா போங்க என்று தன் வேலையைத் தொடர்ந்தான். திடீரென மேள சப்தம் நிற்க கச முசவென்று ஆரம்பித்து அழுகையும், வசவுமாய் கேட்கத் தொடங்கியது.

இன்னாடி நடக்குது. சண்டையா என்றபடி, ஏப்பா சரவணா என்னா பாருப்பா என்றாள் கிழவி. பதிலில்லாமல் போகவே பேசாமலிருந்தாள். சிறிது நேரத்தில் திரும்பவும் ஓரமா உட்காரு என்று குரல் வர, சரவணா, என்னாவாம் என்றாள். போ கிழவி, மாணிக்கம் கெடந்து அழுவுறான். கடன உடன வாங்கி கலியாணம் பண்றான். தங்கம் விலை எங்கயோ போயிடிச்சி. 2 சவரன் குறையுதாம். அவன் மாமன் கலியாணத்த நிறுத்திட்டு காசு வந்தப்புறம் வெய்யின்னு பேசுறான் புறம்போக்கு.

யாரு சொல்றதும் கேக்க மாட்டங்குறான். மாமா அக்காவ குடுத்துருக்கேன். பொண்ணையும் உன் வீட்டுக்குதான் அனுப்புறேன். கொஞ்சம் பொறுத்துக்க மாமா. ஊருக்குள்ள மானம் போய்டும்னு அழுறான். அவன் கேக்கமாட்டன்னு அடம் புடிக்கிறான். மனுசனா இவன்லாம் என்றபடி ஓரம், வரிசை என தன் வேலையைப் பார்த்தான்.

தட்டுத் தடுமாறி எழுந்தாள் கிழவி. காலடியில் கிடக்கும் அழுக்குப் பையைத் தூக்கிக் கொண்டாள். சரவணா என்ன இட்டுனு போ அவனாண்ட என்றாள். தோ! கம்னு கெட. ஊரு பெருசுங்க சொன்னாலே கேக்க மாட்றான்! நீ போயி என்னா பண்ணப் போற? என்றான். அப்பிடி சொல்லாதப்பா, கண்ணு தெரிலன்னு தானே கேக்குறேன், இட்டுனு போப்பா என்றாள்.

மணியக்கார் பார்த்தா என் வேலைக்கு ஓலை கிழவி. கிட்ட கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவேன். அங்க போய் பிச்ச கேட்டு எனக்கு வேட்டு வெச்சிடாத என்றபடி பம்மி பம்மி கொண்டு போய் விட்டான். என்னாப்பாஅங்க கூச்சலு, எங்க மாணிக்கம் என்றபடி வந்த கிழவியை ஏளனமாக பார்த்தது கும்பல்.

மாணிக்கம் பேச முடியாமல் விம்மி வெடித்து அழுதான். மாணிக்கம் அழுவாத. எங்க உம்மாமன்? கூப்பிடு என்றது கிழவி. ஏ கிழவி. பிச்சைக்காரி சொல்லி கேக்குற அளவுக்கு இங்க யாருமில்ல. உன் லிமிட்ல ஒழுங்கா போயிடு. இது எங்கூட்டு பிரச்சினை என்றான் மாமன்காரன்.

கோவப்படாதப்பா. மாணிக்கம் ஏமாத்தமாட்டான். சிறுசுங்களைப் பிரிக்காத என்றபடி இருக்க, கும்பலில் ஒரு இளவட்டம், ஏன் நீ குடுப்பியா? அவருக்கா கேக்குறாரு. நாளைக்கு நாலு இடம் போக வர ஒரு மருவாதி வேணாம். ஒரு செயினுக்கு கதியில்லைன்னா கலியாணம் பண்ண ஏமாளிங்களா நாங்க என்றான்.

எங்கிருந்துதான் வ‌ந்ததோ கிழவிக்கு ஆவேச‌ம். நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி. வ‌ய‌த்துக்கு இல்லாம‌ இருட்டில‌ நின்னு உட‌ம்ப‌ விக்கிற‌வ‌ளுக்கு பேரு விப‌ச்சாரி.அவ பண்றது விபச்சாரம்.  பட்ட பகல்ல ஊரைக்கூட்டி உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?

இந்தாடா இதைப் பிடி என்று ந‌சுங்கிய‌ த‌ட்டை நீட்டினாள். மிர‌ண்டு போய் வாங்கிய‌வ‌னின் த‌ட்டில் அழுக்குப் பையிலிருந்து நூறும் ஐந்நூறுமாய் நோட்டுக்க‌ளைக் கொட்டினாள். எடுத்துக்கடா! எதுக்குன்னே தெரியாம சேர்த்து வச்சது. பிச்சை எடுத்த‌ காசுன்னு பொன்னு குடுக்காம‌ போயிட‌ மாட்டான். எவ்வ‌ள‌வு வ‌ருதோ வாங்கிக்க‌. மிச்ச‌ம் மீதி இருந்தா என் செல்விக்கு மொய்யின்னு எழுதிக்க‌.

முகூர்த்த‌ம் தாண்ட‌ முன்ன‌ க‌லியாண‌த்த‌ ந‌ட‌க்க‌ விடு. மாணிக்க‌ம்! என்ன‌ வாச‌ல் வ‌ரைக்கும் கொண்டு போய் விடுப்பா. ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ணிகினு இருந்தா ம‌த்யான‌ம் பூவாவுக்கு நீ என்னா க‌லியாண‌ சாப்பாடா குடுக்க‌ போற‌ என்ற‌வ‌ளின் காலைக் க‌ட்டிக்கொண்டு க‌த‌றினான் மாணிக்க‌ம்.

Saturday, November 7, 2009

பசி!


 யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளியான என் சிறுகதை.

அலுவலகம் செல்லுவதற்காக பஸ் நிறுத்ததில் நின்றிருந்தான் ராஜா. அலுவலக நேரத்துக்கு வந்தால் பஸ்ஸில் தொங்கக் கூட இடம் கிடைக்காது என்பதால் எட்டு மணிக்கே கிளம்பி வந்திருந்தும் கூட்டம் இருந்தது. பள்ளிக்கூட பஸ் வருவதற்காக சற்று தள்ளி ஒரு சிறுவர் சிறுமியர் கூட்டமும் நின்றிருந்தது. கூச்சலும் கும்மாளமும் கலாய்த்தலுமாய் இருந்த அவர்கள் மேல் ஒரு கண்ணும், பஸ் வருகிறாதா என்பதில் குறியாக ஒரு கண்ணுமாய் காத்திருந்தான்.

திடீரென‌, ப‌க்க‌த்திலிருந்த‌ பெருசு, ஏய்! போடா! இவ‌னுங்க‌ தொல்ல‌ தாங்க‌ முடிய‌ல‌. கொழுப்பெடுத்து பெத்து போட்டு தெருவுல‌ உட்டுடுவாங்க‌ என்று அல‌ற‌வும், திரும்பிப் பார்த்தான் ராஜா. 4 வ‌ய‌திருக்கும். அழுக்காக‌, க‌ளையாக‌ ஒரு சிறுவ‌ன் சினேக‌மாய்ச் சிரித்த‌ப‌டி, கை ஏந்திய‌ப‌டி ராஜாவிட‌ம் வ‌ந்தான். காணாத‌து போல் முக‌த்தைத் திருப்பிக் கொண்டு ப‌ஸ் வ‌ருகிற‌தா என‌ப் பார்த்தான் ராஜா.

அவன், அருகில் வ‌ந்து மெதுவாக‌க் காலைச் சுர‌ண்டிய‌ப‌டி, அண்ணே! ப‌சிக்குத‌ண்ணே என்ற‌து. அந்த‌ப் பெருசு ந‌ல்லா ருசி க‌ண்டுட்டானுங்க‌. கை நீட்டினா காசு வ‌ரும்னு. பேப்ப‌ர் பார்த்திங்க‌ளா சார். ஒரு நாளைக்கு 1000ரூ ச‌ம்பாதிக்கிறாங்க‌ளாம். இதுக்காக‌வே பிள்ளைக‌ளை பெத்த‌வுங்க‌ பிச்சை எடுக்க‌ விடுறாங்க‌ளாம். என்னா அநியாய‌ம் பாருங்க‌ என்ற‌தில், இல்லையென்றும் சொல்லாம‌ல், காசும் த‌ராம‌ல் ச‌ற்று தள்ளி ப‌ள்ளி ப‌ஸ்ஸுக்கு காத்திருந்த‌ பிள்ளைக‌ளின் அருகாமையில் சென்றான்.

அந்த‌ச் சிறுவ‌னும் மெதுவே ந‌க‌ர்ந்து அவ‌னை விட‌ கொஞ்ச‌ம் பெரிய‌ ஒரு சிறுவ‌னைப் பார்த்து சிரித்தபடி கடக்க‌ அந்த‌ச் சிறுவ‌ன் இங்கே வா என்றான். அவ‌னும் அருகில் வ‌ர, ப‌சிக்குதா என்றான். ஆமாண்ணே என்ற‌து அந்த‌ வாண்டு. இங்கே வா என்று ஓர‌மாக‌ கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டுப் பையிலிருந்து த‌ண்ணீர் பாட்டிலை எடுத்து , கை க‌ழுவிக்கோ என்று ஊற்றினான்.

மிர‌ண்ட‌ப‌டி, கையைக் க‌ழுவி உத‌றி பார்த்துக் கொண்டிருக்க‌, த‌ன்னுடைய‌ ட‌ப்ப‌வைத் திற‌ந்து, நூடில்ஸ் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அவ‌ன் கையில் வைக்க‌ அடுத்த‌ நொடி காணாம‌ல் போய் கை நீண்ட‌து. சிரித்த‌ப‌டியே அடுத்தடுத்து அவ‌னுக்கு கொடுக்க சில‌ நிமிட‌ங்க‌ளில் ட‌ப்பா காலியான‌து. கை க‌ழுவாம‌ல் அப்ப‌டியே அழுக்குச் ச‌ட்டையில் துடைத்த‌ப‌டி, த‌ண்ணி குடுண்ணே என்று கை குவித்து வாங்கிக் குடித்த‌ சிறுவ‌னின் முக‌ம் அழ‌கா, அவ‌னுக்கு சாப்பிட‌க் கொடுத்த‌ சிறுவ‌னின் முக‌த்தில் இருந்த‌ ச‌ந்தோஷ‌த்தில் இவ‌ன் முக‌ம் அழ‌கா என்று திகைத்தபடி நின்றான் ராஜா.

ஏதும் பேசாம‌ல் பையை எடுத்துக் கொண்டு வ‌ந்த‌ சிறுவ‌னிடம்,  உனக்கு நூடில்ஸ் பிடிக்காதா? உன் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டாயே, ம‌திய‌ம் என்ன‌ செய்வாய்? என‌க் கேட்டான் ராஜா. இல்லண்ணா, ஸ்னாக்ஸ் இருக்கு. அது ல‌ஞ்சுக்கு சாப்பிட்டுக்குவேன். இல்லைன்னாலும் ஃப்ர‌ண்ட்ஸ் ஷேர் ப‌ண்ணுவாங்க‌. அவ‌னுக்கு யாரு த‌ருவா என்ற‌தும் ஒரு ப‌க்க‌ க‌ன்ன‌ம் ஜிவு ஜிவு என்ற‌து.

குற்ற‌ உண‌ர்ச்சி குறு குறுக்க‌, அந்த‌ச் சிறுவ‌னை அழைத்து ஒரு 5ரூ நாண‌ய‌த்தை நீட்ட‌, வேணாண்ணே அந்த‌ண்ண‌ன் சாப்பாடு குடுத்தான். இப்போ ப‌சிக்க‌லைண்ணே என்று சிரித்த‌ப‌டி ந‌க‌ர்ந்தான் அவ‌ன். இன்னொரு க‌ன்ன‌மும் ஜிவு ஜிவு என்ற‌து ராஜாவுக்கு. கூசிக் குறிகிப்போய் ப‌ஸ் வ‌ருகிற‌தா எனப் பார்க்க‌, த‌ன்னைத்தான் பார்க்கிறானோ என்று த‌ரையைப் பார்த்தார் பெரிய‌வ‌ர்.