Friday, February 25, 2011

அஞ்சலை - வாசிப்பனுபவம்.

நாஞ்சில் நாடனின் பாராட்டு விழாக் காணொலியில்தான் முதலில் அவரைக் கண்டேன். சற்றும் பூச்சற்ற வட்டாரப் பேச்சுத் தமிழில் வயிறு நோக சிரிக்கப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சந்தலையில் நச்சென உளியாய் இறங்கும் விஷயங்கள் அவை.

புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுமிடத்தில் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்க அந்தப் புத்தகத்தை எடுத்தார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து எழுதப் போக ‘என்னுடையது’ என்று தவிர்க்க முனையும் நொடியில் ‘இவர்தாங்க ஆசிரியர்’ என்ற அறிமுகம் நடந்தது.

வெள்ளந்தியாய்ச் சிரித்த முகத்துடன் புத்தகத்தில் பெயர் கேட்டு கையெழுத்துப் போட்டு ‘நெல்லாருக்கும்! படிங்க’ என்று இரு கையாலும் எடுத்துக் கொடுத்தபோது தன் சிசுவை பெருமையுடன் கொஞ்சக் கொடுக்கும் வாஞ்சையிருந்தது முகத்தில்.

அப்படித்தான் வந்து சேர்ந்தாள் கண்மணி குணசேகரனின் அஞ்சலை.
அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிரிகளும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களுமே சனம். உடலின் ஒரு சிறு புண்ணை சொறிந்து சொறிந்து ரணமாக்கி புற்று நோயாக்குவதுபோல் சமூகத்தின் அங்கமாகிய பெண்ணை விரட்டி விரட்டி அவள் வாழ்வைப் பறிப்பதும் அச்சமூகமே.

துரத்தித் துரத்தி உறவு பறித்த வாழ்வின் மீதான ஆசையை கட்டிக் காக்கும் முன் பின் அறியா நட்பு. இழைய இழைய உறவாடி கடன் கொடுக்கவில்லை என்பதால் நாத்தெறிக்க அவமதிக்கும் நட்பு. தேள் கொட்டி விட்டதாய் நடித்து வலி போக்க சற்றும் தயங்காமல் தாலியைக் கழட்டி உதவும் பெண்ணின் மார்பகத்தைத் தடவும் பாலிய நண்பன், தன் சுகத்துக்காக தங்கையை பலிகடா ஆக்கும் அக்காள், இப்படி எங்கு நோக்கிலும் மனிதர்களின் (சனங்களின்) வக்கிரங்கள் இரையானவளைத் தேடிக் கிழிக்கும் அவலம்.

முதல் பக்கத்திலேயே வம்புக்கலையும் பெண்ணின் மூலமாகத்தான் அறிமுகமாகிறாள் அஞ்சலை. முடிக்கும் வரை அஞ்சலையை ஒரு கதாபாத்திரமாக உணரவே முடிவதில்லை. அவளோடு சிரித்து, அவளோடு அழுது, அவள் தவிக்கும் தவிப்பைப் பூரணமாய் உள்வாங்கி ஏதும் செய்ய இயலாமல் கை பிசைந்திருக்கமட்டுமே முடிகிறது நம்மால்.

விதவை பாக்கியத்துக்கு மூன்றாவது பெண்ணாக அழகாய்ப் பிறந்து தொலைத்தது மட்டுமே அவள் செய்த பாவம். ஆளில்லாத (ஆம்பிள்ளை) குடும்பத்தைக் கட்டித் தூக்கி இரண்டு பெண்களை கரை சேர்த்து கடைக்குட்டி மகனைப் படிக்க வைத்து எப்படியோ பிறப்பைக் கழிக்கும் பாக்கியத்துக்கு ஆணுக்கும் மேல் ஆதரவாய் உழைத்துக் கை கொடுக்கிறாள் அஞ்சலை.

ஊர் வாய்க்கு அஞ்சியே அவளை ‘ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க’ ஆசைப்படும் பாக்கியத்துக்கு ஆரம்பமே இரண்டாவது மருமகனால் விழுகிறது அடி. வஞ்சமும் வார்த்தையாகவுமே அல்லல் படுகிறது அஞ்சலையின் வாழ்வு.

விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைகிறது கதை. துள்ளலும் கேலியுமாய் கார்குடல் வயல் காட்டில் அஞ்சலையோடு அத்தனை வேலைகளையும் அவளோடு செய்யும்போது தெரிகிறது சோற்றில் விவசாயியின் வியர்வை மணம். திருமணமாகி மணக்கொல்லை போய் முந்திரிக்காட்டின் உழைப்பை உணர்கையில் பாயசத்தில் மிதக்கும் முந்திரி கசக்கக் கூடும்.

பாழாய்ப் போன சமுதாயம் சொல்லிக் கொடுத்த ’ஒருத்தனை புருசன்னு நினைச்சிட்டு அவனோடு மனசார வாழ்ந்து திருமணத்தில் அவன் தம்பியை கட்ட வச்சு ஏமாத்திப்புட்டானுவளே! என்னுமா அவனுக்கு முந்தி விரிக்கிறது’ என்பதில் கலைகிறது அவள் வாழ்க்கை.

’நானு போயிட்டா நீ தனியாக் கெடந்து என்னா பண்ணுவ எம்மா?’ என்று யாருக்காக கவலைப் பட்டாளோ அந்தத்தாயே முதல் எதிரியாகிறாள். அவள் வாழ்க்கையை  விதவிதமான வாளாய், ஈட்டியாய், நெருப்பாய், விஷமாய் சனத்தின் நாவு கூறு போடுகிறது.

சுருட்டி வைத்த உதிர்ந்த முடி பறந்து போய் அவள் சீலத்தை எள்ளி நகையாட வைக்கிறது. பேசினாலே இந்த இழவில் முடியும் என்று ஒதுங்கிப் போனாலும் விடாமல் துரத்துகிறது. தாயிடம் கொடுத்த சத்தியத்தினால் சாகவும் முடியாமல், ஓட இடமின்றி ஓடி, ஒளிய இடமின்றி ஒளிந்து, ‘இனியாவது’ என்ற நம்பிக்கையில் கிடைத்த வாழ்வை வாழத் தலைப் படுகையில் அதைத் தேடிக் குலைப்பதில்தான் சனத்துக்கு எத்தனை முனைப்பு?

ஏதோ ஒரு குக்கிராமத்து பறத்தெருவின் மனிதர்கள் மட்டுமல்ல இவர்கள். படித்ததாய், நாகரீகமானவர்களாய் வேஷம் போடும் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது சனம். சனம், சமூகம் என்று சொறிந்து சொறிந்து மேன்மேலும் நகைப்புக்கு இலக்காக்கி எந்த வழியும் போகவிடாமல் சுழட்டி சுழட்டி அடிப்பது ஒன்றே சமூகமா?

போக இடம் தெரியாமல் போய் நின்றவளை வழி நடத்தி வாழவைக்கும் வள்ளியும் இதே சமூகம்தானே! வள்ளியைப் போல் ஆங்காங்கே புண்ணுக்கு மருந்திடும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது. யாரைச் சொல்ல யாரை விட?

’ஆனது ஆகிப் போச்சு! அமைஞ்சதுதான் வாழ்க்கைன்னு’ வாழ வேண்டியதுதான என்று சனம் சொல்லும். சொல்கிறது. ‘உருவத்தைப் பார்த்து வெறுத்து வெள்ளைத் தோலுக்கு மயங்கியவள்’ என்று ஒரு கோணல் பார்வையும் பார்க்கக் கூடும். அவளுக்கு வாழத் தெரியவில்லை என்று ஒற்றை வார்த்தையில் புறம் தள்ளலாம் சமூகம். அவள் வாழ்வை அவளை வாழவிடவில்லை என்பதே உண்மை.

வஞ்சிக்கப் பட்டவளை ’ஆறுதலாய் ஏற்றிருக்குமேயானால்’ போன்ற பல ஆனால்களால் அழிபடுகிறது அவள் வாழ்க்கை. சமூகமே எள்ளினாலும் புறந்தள்ளி அவளை  ‘மீண்டுமேற்றுக்’ கொண்ட மண்ணாங்கட்டியே ‘நீ தேவுடியாதானடி’ என்று இயலாமல் சொல்லிய சொல்லுக்கு ஊரையே எதிர்த்து நின்றவள் நொறுங்கிப் போகிறாள்.

‘ஒரு தடவ சொன்னாலும் அதான். ஓராயிரம் தடவ சொன்னாலும் அதான். செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போகுது?பொறந்தது பொறந்தாச்சி. என்னா ஆயிடுங்கற. பத்துப் பொழுது இந்த சனங்க கிட்ட இருந்து, என்னா ஏதுன்னு வாழ்ந்து பாக்காம, செத்துப் போறதுதானா பெரிசு?’. ஞானாசிரியனான பெற்றமகளின் கைத்தாங்கலில் நம்பிக்கையோடும், ‘இன்னும் என்ன சின்னாபின்னப் படப்போறனோ’ என்ற பயத்துடனும்அடியெடுத்து வைக்கும் அஞ்சலைக்கு, ‘வா! வா! நீயும் தானே நான்’ என்று  சனம் உச்சி முகருமா இனியாகிலும்?

வேஷமற்ற எழுத்து! வேஷமற்ற மனிதர்கள்! இன்னொரு முறை கண்மணி குணசேகரனைக் காண நேர்ந்திடின், அஞ்சலைக்காக இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே தரமுடியும்.

Tuesday, February 22, 2011

பதிவேண்டாஆஆஆஆஆஆஆ!!!!

நண்பர்: உங்களுக்கு எத்தன பசங்கங்க?

பதிவர்: ரெண்டுதாங்க. மூத்தவ ப்ளாக்ஸ்பாட், இளையவன் வேர்ட்ப்ரஸ்.
------------------------------------------------------------------------------------------------------------------
விருந்தினர்: இது என்ன ஐட்டங்க? கூட்டு மாதிரியும் இல்ல, குழம்பு மாதிரியும் இல்ல, ரசம் மாதிரியும் இல்ல ஆனா எல்லா மாதிரியும் இருக்கு?

பதிவர்: அது எளக்கிய குழம்புங்க. சாப்புட்டு பாருங்க. பின் நவீனத்துவ ப்ரச்சனையே இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------------------
தோழி:
என்னடி உங்கப்பா அடுத்த கட்டத்துக்கு நகர ஐடியா இல்லையான்னு கேக்குறாரு?

பதிவர் மகள்:ம்கும். படிக்காம டி.வி. பாக்கறனாம். ஃபெயிலாவப் போறன்னு அவங்க பாஷைல திட்டுறாரு.
-----------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்: ஏங்க நேத்து ஆடிட்டிங்னு லேட்டா போனதுக்கா உங்கூட்டம்முணி அந்த போடு போட்டுச்சு. சொல்ல வேண்டியதுதானே?

பதிவர்: இதெல்லாம் கண்டுக்காம கடந்து போய்ட்டே இருக்கணுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
பதிவர்: ஏம்மா! பொடவ வாங்கிட்டு வந்து குடுத்தா பின்னூட்டமே போடாம போற?

பதிவர் மனைவி: ம்கும். சொல்லீட்டாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம்னு வம்பிழுப்பீங்க.
-------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்: என்னங்க அவருட்ட நேத்து பதிவுக்கு செம ஹிட்டுன்னு சொல்லிட்டிருந்தீங்க?

பதிவர்:
நேத்து லேட்டா போனதுக்கு ஊட்ல சொன்ன ரீஸனுக்கு விழுந்த அடிப்பா. கண்டுக்காத.
-------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்:
ஏங்க சோகமா இருக்கீங்க?

பதிவர்: பின்ன என்னங்க. கொஞ்சம் எதாச்சும் தகராருன்னா ஊட்டம்முணி பொதுவெளியில நின்னு கத்துது. ஆளாளுக்கு கருத்து சொல்றாய்ங்க
---------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்: என்னங்க ஊட்ல விருந்தாளிங்க வந்திருக்காங்க போலருக்கு.

பதிவர்: நீ வேறப்பா! ஊட்டுக்காரிகிட்ட கொஞ்சம் தகராரு. அது எப்பதான் ட்வீட்டுவாளோ, விடியறதுக்குள்ள அவங்கப்பன் சொம்ப தூக்கிட்டு வந்துடுறான்.
----------------------------------------------------------------------------------------------------------------------
ராமு: என்னங்க நம்ம பதிவன் தலைய நட்டுகிட்டு நடக்குறான்?

கதிர்:
வேலையப் பாருப்பா! ஏன்னு கேட்டா வாங்கின சார்ஜ் ஷீட்ட கூட வாசகர் கடிதம்னு சலம்புவான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கதிர்: எதுக்குங்க பதிவன் என்னமோ அலெக்ஸா ரேட்டிங் ஏறிப்போச்சுன்னு இன்னைக்கு பார்ட்டி குடுக்குறாரு?

ராமு: அட பக்கியே! அப்புடியா சொன்னான். இந்த மாசம் எரநூறு ரூபா இன்கிரிமெண்ட் போட்டாங்க. அதுக்கு அலட்டறான் போல.
-------------------------------------------------------------------------------------------------------------------------

ராமு: ஏங்க எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டுட்டிருக்கீங்க. 

பதிவர்: யோவ்! அத சண்டைன்னு சொல்லாதய்யா! அறச்சீற்றம்னு சொல்லு
-------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, February 21, 2011

நறுக்னு நாலு வார்த்த V 5.7

அன்புமணி ராமதாஸின் முன்னாள் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

மேலதிகத் தகவல் சிறப்புச் செய்தில வருமோ?
-------------------------------------------------------------------------------------
வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்கு

பதிலுக்கு வெடிக்காத குண்டுன்னு அவரு தாக்குவாரோ?
_____________________________________________________
திருப்திப்படும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் : திருமாவளவன்

திருப்பதி’போகும் வகையில் வாக்களிக்கப்படும்.
_____________________________________________________
புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு

பின்ன! எந்த பழசு இருக்கறதையும் இழக்கறதுக்கு ஏங்கும்.
_____________________________________________________
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன்

ஆட்டைய போடுறதுலையா?
_______________________________________________________
மீனவர்களை திரட்டிகொண்டு கச்சத்தீவில் போராட்டம் நடத்த தேமுதிக முடிவு .

கேப்டன் செல்ஃபோன்லயே போராட்டத்துக்கு தலைமை வகிப்பார்.
______________________________________________________
முதல் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது : தங்கபாலு

இதை நீங்க தலைய தடவிக்கிட்டே சொல்லலைங்களே?
______________________________________________________
இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு: தா.பா.

தலைவரே! மொதல்ல தோள்ள இருக்கிற துண்டை போட்டு வைங்க. கடைசியா போடலாம்னு இருந்தா துண்டுதான் மிஞ்சும்.
_________________________________________________________
கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன : ஜெ. குற்றச்சாட்டு

இது நிவிசா? எவிடன்ஸா? கிசு கிசுவா?
___________________________________________________________
1 போதாது; எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் : நடிகர் கார்த்திக் .

பெறவி காமெடியன்யா? என்னமா கலக்குறாரு.
_________________________________________________________
கலைஞர் டி.வி. அலுவலகத்தில் நடந்த ரெய்டு கூட்டணியை பாதிக்காது :காங்கிரஸ்

கட்டிங் கரெக்டா வந்துச்சான்னு தெரிஞ்சிக்கதானா?
_________________________________________________________
ரவுடியாக இல்லாவிட்டால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது : மகாராஸ்டிரா துணைமுதல்வர்

அப்ப துணை முதல்வர், முதல்வர் எல்லாம் அங்க எத்தினி கேஸ் பெண்டிங்னு பார்த்துதான் செலக்ட் பண்றாய்ங்களோ?
__________________________________________________________
காமன்வெல்த் ஊழல் புகாரையும் ஜேபிசி விசாரிக்க வேண்டும்: சுரேஷ் கல்மாடி

செம ஐடியா பாஸ்! ஜேபிக்குள்ள ‘சி’யை போட்டா கேஸ் முடிஞ்சிடும்.
___________________________________________________________
குமாரசாமியின் ஜாதகம் என் கையில்: எடியூரப்பா

ஏங்க? என்ன பரிகாரம் பண்ணா உங்கள கவுக்கலாம்னு கேட்டாரா?
_____________________________________________________________
போபர்ஸ் வழக்கில் இருந்து குவாத்ரோச்சி விடுவிக்கப்படுவாரா?

எவன்யா அவன் இப்புடியெல்லாம் கேனத்தனமா கேள்வி கேக்குறது?
_______________________________________________________________
எடியூரப்பா பாதுகாப்பு அதிகாரி குத்திக் கொலை

அரசு செலவில் யாகம் நடத்தப்படும்.
_______________________________________________________________
தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : பழ. நெடுமாறன்

நடத்தி?!
________________________________________________________________

Wednesday, February 16, 2011

கேரக்டர் - அய்யர்.

அய்யரை நீங்கள் பார்த்திருக்கலாம். ஐந்தடி ரெண்டங்குலம் உயரம். கட்டையான சுமாரான பருமன். நல்ல நிறம். சிலர் நகம் வளர்ப்பார்கள். சிலர் மீசை வளர்ப்பார்கள். அய்யருக்கு மூக்கிலும், காதிலும் முடி வளர்ப்பதில் தனி ஈடுபாடு. காதில் உள்ளே வெளியே என்று பொசு பொசுவென்று காதை அடைத்துக் கொண்டு அப்படி ஒரு முடியென்றால் மூக்கில் ஷேவிங் ப்ரஷ்ஷை சொருகினார்போல் இருக்கும்.

பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம். இறுக்கி இறுக்கி தடித்த உதடுகள். மினுமினுக்கச் சிரிக்கும் கண்கள். மீசை வைத்தால் ஷேவிங் பிரஷ்ஷை மறைக்கும் ஷூ பாலிஷ் போடும் ப்ரஷ் போல் இருக்கும் என்பது போல் அகலமாக மூக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடைவெளி.

பொதுவாக சிலர் வெற்றிலை போடுவார்கள். சிலர் மூக்குப் பொடி போடுவார்கள். இதிலும் நம்ம அய்யர் தனி. ரெண்டும் உண்டு. அந்தக் காட்டுக்குள் மூச்சு போய் வருவதே கஷ்டம். இதில் பொடி வேறு எப்படி உள்ளே போகிறது என்ற சந்தேகத்துக்கே விடை தெரியாதபோது, வெற்றிலை குதப்பி இடுக்கிக் கொண்டு உம்ம்ம்ம்ம் மென்றிருக்கையில் வாயிலும் இல்லாமல் மூக்கிலும் இல்லாமல் மீன் போல் காதினாலும் இல்லாமல் எப்படித்தான் சுவாசிக்கிறார் என்ற கேள்விக்கு விடையேயில்லை.

பொதுவாக வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள் உம்மணா மூஞ்சிகளாக இருப்பது வழக்கம். புகையிலை எச்சில் ஊற ஊற கன்னம் கொள்ளாமல் பிதுக்கிக் கொண்டு, வாயோரம் கசியாமல் உதடு கூட்டிக் கொண்டு எழுதுவதும், ஏதாவது கேட்டால் அமாவாசை இரவில் ஊளையிடும் நரி போல் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ‘அடெல்லாம் எழ்ழ கேட்டா டெரியாடு! அங்ஙடாழ் இழுக்கும் டேழு’ என்ற பதில் வரலாம். தானாக ஜோக் அடிப்பதோ அடிக்கப்படும் ஜோக்குக்கு சிரிப்பதோ இயலாத காரியம்.

ஆனால் அய்யர் அப்படியில்லை. ஒட்டகம் நீரைச் சேமிப்பதுபோல் புகையிலை நீரை சேர்த்து வைக்க தனி பை இருந்திருக்குமோவென்ற சந்தேகம் எப்போதும் உண்டு. காதைத் தீட்டிக் கொண்டு சுற்றிலும் நடப்பதைக் கேட்டுக் கொண்டு சிரிப்பு வந்தால் தேன் தடவிய குழந்தை போல் உதட்டைக் கூட்டிச் சுழித்து உப்பென்று நின்றால் கண்கள் கலகலவென சிரிக்கும்.

புகையிலை நீர்ப்பையில் பதுக்கினாற்போல் பெரும்பாலும் புகையிலை உருண்டை மட்டும் அடங்கி புடைத்த கன்னத்தோடு பளிச்சென வெடிச்சிரிப்பு கமெண்ட் அடித்து வாய் கூட்டிய மறு நொடி இரண்டு கன்னமும் உப்பிக் கொள்ளும்.

சாப்பிட்டுவிட்டு ஆஃபீஸ் வந்ததும் ஒரு முறை கொப்பளித்த கையோடு வெற்றிலை போட்டால் காஃபி வரும் வரை தாங்க முதல் கச்சேரி. வெற்றிலை போடுபவர்கள் சாதாரணமாக மேம்போக்காக காம்பு நீக்காமல், சீவல், பின்னால் ரெண்டு வெற்றிலை காம்பு கிள்ளி சுண்ணாம்பு அப்பி இடுக்கிக் கொண்டு, ஒரு உருண்டை பன்னீர் புகையிலை திணித்துக் கொள்வார்கள். அய்யருக்கு அது தவம்.

நெய் சீவல் இருந்தால் முகத்தில் தெரியும் வாஞ்சையே தனி. இல்லாவிட்டாலும் சீவலை விரலால் எடுக்கும்போதே அளவாய் வரும். ‘பாப்பான் நண்டு பிடிக்கிறார்போல்’ என்ற சொலவடை செல்லாது. சரியான அளவில் விரல் பிரிந்து சரியான அளவை அள்ளும். ஒரு முறை போட்டால் இன்னும் கொஞ்சம் என்ற பேச்சே இல்லை. அப்புறம் ரோஸ் சுண்ணாம்பை வழித்து ஆள்காட்டி விரல் முனையில் வைத்துக் கொண்டு துளிர் வெற்றிலையாக எடுத்து ஒரு உதறு. பிறகு ஒன்றொன்றாக முன்னும் பின்னும் பார்த்து சட்டையிலோ உட்கார்ந்திருந்தால் பேண்டிலோ துடைப்பார்.

துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.

அந்த கேப்பில் விரலிடுக்கில் வெற்றிலையை வைத்துக் கொண்டு கட்டளைகள், விளக்கங்கள் சொல்லி ஒன்றொன்றாய் உள்ளே அனுப்புவதற்குள் சீவல் ஊறி பதமாய் இருக்கும். வெற்றிலை உள்ளே போனதும் புகையிலை உருட்டுவதெல்லாம் கிடையாது. அது ஒரு சீராக அரைபட்டு சீவலோடு கலந்தபிறகு, கண்ணாடித்தாள் பையிலிருந்து பன்னீர் புகையிலை அளவாக விரலிடுக்கில் சிக்கும். உள்ளேயே உருட்டி பந்தாக்கி வாய்க்குள் போட்டால் ஆலாபனை முடிந்த கச்சேரிபோல் முகத்தில் ஒரு எக்ஸ்டஸியோடு அமைதியும் சேரும்.

அந்த சுகத்தில் கொஞ்சம் திளைத்து விரல் சுண்ணாம்பைத் துடைத்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து திணித்த பிறகு மூலை மடித்த கர்ச்சீப்பால் மூக்கு ப்ரஷ்ஷுக்கு பாலிஷ். சன்னதம் வந்தவர் போல் ஆகிவிடுவார்.

அய்யர் குள்ளம் என்பதால் பெரும்பாலும் நின்றபடியேதான் வேலை செய்வார். நெடிய நோட் எழுத வேண்டும் என்றால் மட்டும் உட்காருவார். அரியர்ஸ் பில், மட்டமடித்ததால் சம்பளம் போடாத கேசுகளுக்குத் தெரியும். இந்த முயக்கத்தில் அய்யரிடம் போய் நின்றால் வரம்தான் என்று.

இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார். அப்படி ஆட்களையெல்லாம் நிறையச் சொல்லியாகிவிட்டது. அய்யரின் ஸ்பெஷாலிடி வேறு.

என்னதான் பேரை மாத்தி வச்சிக்கோ எனக்கென்ன போச்சு என்று இராயப்பேட்டையை கொலைகாரன் பேட்டை என்றுதான் சொல்லுவார். தன் பதின்ம வயதில் யாரோ யாரையோ வெட்டத் துரத்தி வந்ததற்குப் பயந்து தில்லகேணி வரை ஓடி திரும்பி வர வழி தெரியாமல் திகைத்த கதை எத்தனை கேட்டாலும் அலுக்காது. அலுவலக வேலையில் மூழ்கி லேட்டான காலங்களில் அடிவயிறு கலங்க வீடு திரும்புகையில் நம்ம அய்யருடா என்று ஆறுதல் அளிக்கும் குரல் பலத்தில் ஓடிப் போய் வீடு சேரும் காமெடியை புகையிலை எச்சையோடு மற்றவர் புரையேறச் சிரித்தாலும் கண்ணால் சிரித்தபடி சொல்லும் கலைஞர்.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த வடக்கத்தியான் கோஷ்டியை  “உன் ஜர்தா என்ன பெரிய கொம்பா? இதைப் போடு” என்று பன்னீர்ப் புகையிலை பீடா கொடுத்து, கடைசி நாளில், வந்ததற்கு ரெண்டு பேராவாவது எழுதணுமே அய்யர் என்று கண்கள் கலங்க கெஞ்சி அவர் விருப்பத்துக்கு ரெண்டு ஜுஜூபி அப்ஜக்‌ஷன் எழுத வைத்தவர். 

சோதனைபோல் ப்ரமோஷனில் பெங்களூரு கண்டோன்மெண்டில் போட்டுவிட்டார்கள். சவம் பெங்களூர் மெயிலில் 365 நாளும் கூட்டம்தான். அதனால், சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பினால் ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் முன்னதாக வந்து மேலே படுத்துவிடலாம். ஜோலார்பேட்டில் இறங்கி ஒரு பால் சாப்பிட்டு முடிக்க ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் காலியாக வரும். தூக்கம் தொடரலாம். திரும்பும் போதும் இப்படியே. வெள்ளி இரவு கிளம்பி சென்னை வந்து ஞாயிறு இரவு கிளம்பி பெங்களூர் சேருவது வழக்கம்.

அப்படி ஒரு முறை திரும்பும்போது ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் பாய்ந்து இடம் போட்டு ஏறியும் வண்டி கிளம்பவில்லை. கக்கூசில் தண்ணியில்லை என்று செயினை இழுத்ததால் நீர் நிரப்பும் வேளையில், ஆயில் துடைத்த துணிப்பந்தத்தைக் கொளுத்தி கோச்சின் அடியில் ப்ரேக் கட்டையை சரி பார்ப்பதை எண்ணெய்ப் புகையும் நெருப்பு வெளிச்சமும் பீதியைக் கிளப்ப, ‘அய்யய்யோ, வண்டியில் நெருப்பு’ என்று முதலில் பாய்ந்தவர் நம்ம அய்யர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் கோச்சில் இருந்தவர்கள் முழுதும் ப்ளாட்ஃபார்மில்.  அது நெருப்பில்லை, ப்ரேக் செக்கிங் எனத் தெரிந்து ஆசுவாசமாவதற்குள் விசில் ஊத அனைவரும் பாய்ந்தேறிய பிறகு பார்த்தால் நிற்க இடமில்லாமல் நின்றிருந்த அய்யர் லக்கேஜில் படுத்திருந்தார்.

படுத்திருந்தவர்கள் எல்லாம் நின்றபடியும், நிற்க இடமில்லாதவர்கள் வசதியாகவும் ஒரு நொடியில் மாற, ‘யார்யா சவுண்ட் விட்டது’ என்ற எரிச்சல் கேள்விகளுக்கு புகையிலை அடக்கியபடியே அய்யரால் மட்டும்தான் வெடிச்சிரிப்பு சிரிக்காமல் இருந்திருக்க முடியும்.

அய்யருக்கு இன்னோரு ஸ்பெஷாலிட்டியும் உண்டு. மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடித்துவிடும் என்றபயம். ஒரு நாளும் கையால் ஸ்விட்ச் போட்டதோ அணைத்ததோ இல்லை. இருப்பா! நானும் கிளம்பிட்டேன் லைட்டை அணைத்துவிடு என்று கிளம்புவார். வேறு வழியில்லை எனில் இதற்காகவே பதுக்கி வைத்திருக்கும் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு.

கொடுமை கொடுமை என்று அய்யரைப் பழிவாங்கவே அடிக்கடி ஜல்ப் என்னும் ஜலதோஷம் பிடித்து ஆட்டும். மூக்குப் பொடியும் போட முடியாமல், புகையிலை எச்சையும் அடக்க முடியாமல் தும்மிக் கொண்டே இருந்தால் மனுசனுக்கு வேறே நரகம் என்ன இருக்கிறது? அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில்தான் ப்ராந்தி கிடைக்கும். அதுவும் ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்க வேண்டும். அவுன்ஸ் க்ளாசில் ஊத்தி ராவாக கொடுப்பார்கள். அதை சிரப்பு என்று என்று நம்பிக் குடித்தவர் அய்யர்.

பெங்களூர் குளிருக்கு ஜல்பின் தொல்லை அதிகமாக ப்ரிஸ்க்ரிப்ஷனோடு மருந்துக் கடைக்குப் போனபோதுதான் அது சிரப்பில்லை ப்ராண்டி எனத் தெரிந்து கொண்டு, ஜல்பா ப்ராண்டியா என்று பட்டி மன்றம் நடத்தி ஒரு வாய் ஊற்றிக் கொண்டு மிச்சத்தை அப்படியே வைத்து விட்டு  வருவதை சொன்னதற்கு சிரிக்கவா? அல்லது  ‘அதுவரைக்கும் எனக்கு போதைன்னே தோணினதில்லை! ப்ராண்டிக் கடையில் குடித்தால் மட்டும் பறக்கறாமாதிரி கால் பின்னும்’ என்று குழந்தை மாதிரி சொல்வதற்கு சிரிக்கவா?

எட்டாம் நம்பர் சாராயக் கடையில் 50 மில்லி வாங்கி பன்னீர் சோடாவில் கலந்து மிளகு போட்டுக் கொண்டு வரச்சொல்லி அதை ஃபாரின் சிரப்பு என்று ஏமாற்றிக் கொடுத்து அய்யரின் அலம்பல் தாங்காமல் அவர் நண்பர் நொந்து போனது வேறு காவியம்.

இப்படிக் குழந்தையாகவே இருந்து ரிட்டையர் ஆகி கொஞ்ச வருடங்களுக்கு முன் இறந்து போனார் அய்யர்.
-:o:-

Tuesday, February 15, 2011

கதிர் கீச்சுக்கு பதில் கீச்சு

கதிர் கீச்சுன கீச்சு இங்கே
ஒருவரின் நெருடல், மற்றொருவருக்குச் சாதகமானது. மற்றொருவருக்குச் சாதகமானது இன்னொருவருக்கு நெருடல். # மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?

ப.கீ: ஆசனூர் போனப்ப பின் சீட்டுல கும்க்கியும் ஆரூரனும் இவர நடுவுல உட்டு அமுக்கிட்டாங்க போல#மனுசப்பய கேக்கற கேள்வியா இது?
-0-
வார்த்தைகளுக்குள் அடங்குவதா காதல்? # கொசு@பிப்14.காம்

ப.கீ:ங்கொய்யால. பேச்சுவார்த்தயில்லாம காதல் சொன்னா கைய புடிச்சி இழுத்தியான்னு சொம்பு தூக்க அலையுது நாட்டாம#மூட்டைப் பூச்சி@பிப்.15.காம்
-0-
 
எந்த அரிப்பும் ஒற்றைச் சொறிதலில் அடங்கிவிடுவதில்லை. சொறியச்சொறிய இன்னும் கொஞ்சம் எனக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது
ப.கீ:அல்லோ! யாருட்ட? மொதல் அரிப்புக்கு மொதல் சொறிதல் சரியாப் போச்சி. திரும்ப அரிக்கமாட்டேன்னு அக்ரீமெண்ட் இருக்கா? அது கேட்டா யாரு சொறியச் சொன்னா?
-0-
ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டு அதையே வடிகட்டி, சுத்திகரித்துக்(!) குடிக்கும் மேம்பட்ட தலைமுறை நாம்!

ப.கீ:அடப்பாவி மனுசா! அப்ப மறு சுழற்சின்னு இடுகை இடுகையா போட்டு ஓட்டு தேத்தினதெல்லாம் பொய்யா?
-0-
வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

ப.கீ:ம்கும். இவருக்கு யார்னா காசு குடுக்க வேண்டி இருந்து, இந்தாங்க சாமி உங்க துட்டுன்னு ஒரு செக்கு (தகவல் தாங்கும் எழுத்து) குடுக்காம, அய்யா சாமி எனக்கு இம்புட்டு கஷ்டமா இருக்குன்னு ஓன்னு அழுது லெட்டர் (உணர்வைத் தாங்கும் எழுத்து) குடுத்தா இதுலயா கீச்சுவாரு? அவன கீச்சுடுவாரு.
-0-
சிக்னலில் நிற்கும்போது மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அவசரம் இருப்பது எப்படி

ப.கீ:அட கிளம்ப முன்ன ‘போகாம’ கிளம்பிட்டிருப்பாங்க. இதுக்கு வேற வெளக்கணுமோ?
-0-
 
ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் என்பதெல்லாம் நிலைமைகளைப் பொறுத்து பெரிய தொகை என்று தெரிகிறது. ஆனால் 300 கோடி, 2000 கோடி, 40000 கோடி என்பதெல்லாம் சர்வசாதாரணாமா சொல்ல வருது... # என்னாச்சு எனக்கு? எனக்கு மட்டும்தான் இப்படியா?

ப.கீ:ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம்லாம் நாம பார்த்து, தொட்டு, எண்ணி அனுபவிச்சது. இந்த கோடிய கண்டவன் எவன்? பத்தாயிரம் ரூபாய பாக்கட்ல போட்டுகிட்டு நடக்கலாம். பத்து கோடி ரூபாய செக்கா வெச்சிகிட்டு பட்டர் பிஸ்கட் கூட வாங்க முடியாது...# முன் மண்டை மினு மினுத்தா இப்புடிதான்.
-0-
எல்லாவற்றிலும் புதுசு வேணும்னு நினைச்சாலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ மட்டும் ஏன் 10 வருசமா மாற்றாமல் வெச்சிருக்கிறோம். # யூ டூ!?
ப.கீ:அடியே! இப்படியெல்லாம் பிட்டப் போட்டு அத வச்சி ‘புதுசா’ ஒன்னு தேடினா பழசா பிஞ்சி போனதுல பச்சு பச்சுனு விழும்டி.# ம்கும்! மத்ததுல வாங்கறதுக்கு சோடி சேர்க்குது சோடி.
-0-
 தொலைத்த இடத்தில் தேடுவதைவிட, கிடைக்காத இடத்தில் தேடுவது பல நேரங்களில் காரணம் சொல்லித் தப்பிக்க உதவுகிறது # ஆமா நான் ஏன் இப்படி ஆயிட்டேன்?

ப.கீ:ஒரு பக்கம் ட்விட்டரு, ஒரு பக்கம் ஜி டாக்கு, ஒரு பக்கம் ஃபேஸ்புக்குன்னு அலபாஞ்சா இப்புடித்தான்#முன்னாடி மட்டும் ஓக்கியமோ?
-0-
உள்ளடங்கிய ஒரு கிராம விவசாய நிலம் ஏக்கர் 40 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரின் கருப்புப்பணம் வெளுக்கப்படுகிறது.

ப.கீ:ஏன்யா ஏன்? மெயின் ரோடுல பங்களா கட்டினா மட்டும் வெள்ளைப் பணம்னா சொல்லப் போறீங்க. விக்கற விலையில வெள்ளப் பணத்துல கட்ட முடியுமாய்யான்னு அப்பவும் இதே தத்துவம்தானே.
-0-
ஒரே ஒரு நாளைக்காவது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிம்மதியா தூங்கப்போகனும் # கனவு

ப.கீ:டிவிட்ட மறந்து போய் தூங்கிட்டா மாதிரி கனவு கண்டு படக்குன்னு எழுந்து ட்வீட்டிருக்கு பய புள்ள.
-0-
இணையத்தில் எழுதுவதாலேயே கூடுதல் சமூகப் பொறுப்பு வந்திடுச்சா!? இணையத்தில் எழுத வராமலிருந்தால் அறச்சீற்றத்தை எங்கே கரைத்திருப்போம்?

ப.கீ:இணையத்துல எழுதுனாலும் ஊட்டுக்குள்ள கத்தினாலும் பத்து பேரு சுத்தி நின்னு பராக்கு பார்க்கதான் செய்வாங்க. என்ன, ஊட்டுல ஓவரா போனா தே! கம்னு கெடன்னு உச்சி மண்டையில சொடேர்னு ஒன்னு உழும்!
-0-
மக்களைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கூட்டணிக்காக மட்டுமே மானங்கெடும் இந்த அரசியல் தலைகள்தான் நாளையும் இந்த நாட்டை ஆளவேண்டுமா?

ப.கீ:நாளன்னைக்கு ஆண்டா ஓக்கேயா பாஸ்?
-0-
 மனிதர்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும்போது நாம் மனிதர்கள் அல்லவோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

ப.கீ:சந்தேகம் மனுசனுக்கு மட்டுமே இருக்கிற வியாதின்னு சொன்னா நம்பாம சந்தேகப்பட்டா இப்படியெல்லாம் சந்தேகம் வரும்தான்.
-0-
எல்லா மக்களையும் சமமாக நடத்தி, சுறுசுறுப்பாக மக்களுக்காகவே இயங்கும் ஒரே அரசுத் துறை(!) டாஸ்மாக்

ப.கீ:டாஸ்மாக் அரசுத் துறையில்லை. அது கொம்பேனி.
-0-
எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே ஒற்றுமை வெள்ளைச் சட்டை, மற்றும் மாசுபட்ட மனசு
ப.கீ:குசும்பப் பாரு. ஒருத்தன் வேட்டிய ஒருத்தன் உருவிட்டான்னு குறியீடா சொல்றாராமா.
-0-
ங்கொய்யாலே..... எம்.ஜி.ஆரு ஒரு ஆளு மட்டும்தான் முழுக்கைச் சட்டை, தழையக் கட்டிய வெள்ளை வேட்டியோடு ஏர் ஓட்டமுடியும் போல # உரிமைக்குரல்
ப.கீ:ங்கொய்யால நீரும் ஓட்டிப் பாரும்! அடுத்த நாள் உம்மைக் கட்டி ஊட்டம்முணி ஏர் ஓட்டுவாங்க# அடிமைக் குரல்.
-0-
 அரசியல் சார்பு எடுத்ததின் விளைவாக மட்டுமே அடிப்படை மனிதநேயம், மாண்பு, மனிதத்தன்மை செத்தொழிவது ஏன்? எல்லாமே காசுதானா?

ப.கீ:அவுங்கூட்டு  மனுசா மேல நேயம், அவரோட மாண்பு, அவுங்க மனுசங்களுக்கு நல்லது செய்யணும்னு தன்மையா இருக்கும்போது செத்துப் போச்சுன்னு எப்புடி சொல்லுவீங்ணா? சே சே அப்புடி காசுன்னு எல்லாம் கராரா இருக்க மாட்டாங்ணா? நெலம் புலம், காரு, கம்பேனின்னு எது குடுத்தாலும் சரிங்ணா.
-0-

பொறுப்பி: அவ்வப்போது  ‘ட்விட்டரில்’ கிறுக்காத ’ பதில் கீச்சுகள்’. ஏன்  போடலைன்னு ஏங்கி நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும்  கொட்டைஎழுத்துல போட்டுடுவோம்)

Monday, February 14, 2011

பகவத் கீதை - அத்யாயம் 19

பகவத் கீதை
அத்தியாயம் 19
ஜங்க் மெயில் யோகா.

அர்ச்சுனன்: ஹே வாசுதேவா! மிகக் கேவலமானதும் மன்னிக்க முடியாததுமான  ஜங்க்  மெயில்களை என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் அனுப்பி வைக்கும் ஈனச் செயலை நான் எப்படிச் செய்வேன்?

க்ருஷ்ணன்: ஹே பார்த்தா! இந்த நொடி யாரும் உன் நண்பனோ எதிரியோ, உறவோ பகையோ, இளையோரோ முதியோரோ, நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை. உன்னுடைய வலை தர்மத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது. உடனடியாக வலைமனை புகுந்து ஜங்க் மெயிலை அனைவருக்கும் அனுப்பு. அதுவே உன் கடமையும் நீ கடைப் பிடிக்க  வேண்டிய தருமமும் ஆகும்.

அர்ச்சுனன்:
ஹே முராரி! என் மனசாட்சியை உறுத்தும், என் ஆன்மாவை வதைக்கும் எச்செயலையும் என்னைச் செய்யத் தூண்டாதே!

க்ருஷ்ணன்: ஹே குந்தியின் மைந்தனே! மாயையின் கொடுமையான பிடியில் சிக்கித் தவிக்கிறாய் நீ. இந்த மெய்நிகர் உலகில் உனக்கும், உன் தர்மத்துக்கும், உன் மௌசுக்கும் தவிர நீ யாருக்கும் கடமைப்பட்டவனல்ல. ஜங்க் மெயில்கள் கடந்த 25 வருடங்களாக இருக்கின்றன. உனக்குப் பிறகும் கல்ப கோடி காலம் இருக்கும். மாயையிலிருந்து எழுந்து வா! உன் கடமையைச் செய்.

அர்ச்சுனன்:
க்ருஷ்ணபகவானே! ஜங்க் மெயில் எப்படி மாயையாகும் எனத் தெளிவு படுத்தும்படி ப்ரார்த்திக்கிறேன்.

க்ருஷ்ணன்:
வத்ஸ! ஜங்க் மெயில் என்பது ஆறாவது பூதமாகும். நிலம், நீர், வாயு, நெருப்பு, ஆகாசம், ஜங்க் மெயில் என்பவை அவை. அசைவோடும் அசைவின்றியும், உயிரோடும் உயிரின்றியும் இருப்பவை அவை. உன் சிஸ்டத்தையும் ஹார்ட் டிஸ்கையும் அளவுக்கதிகமாக நிரப்பும். ஆனால் அது ஒரு சிறந்த பலனைத் தருவதாகும். அது மக்களை அவர்களின் நேரத்தை இத்தகைய ஜங்க் மெயில்களைப் படிப்பதிலும், முன்னனுப்புவதிலும் அறிவைத் தேடும் செயலாக நம்ப வைக்கிறது. அது அவர்களின் அறிவையோ முயற்சியையோ பயன்படுத்தாமல் ஒரு சாதனையைப் படைத்ததான நிறைவைத் தருகிறது. எப்படி ஆன்மா ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறதோ அதுபோல் ஜங்க் மெயிலும் ஒரு சிஸ்டத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுமே தவிர அதற்கு அழிவோ சாவோ இல்லை.

அர்ச்சுனன்:
அருமை கிரிதாரி! ஜங்க் மெயிலின் லட்சணங்களைக் கூறுவாயாக

க்ருஷ்ணன்:
அதை நெருப்பு அழிக்க முடியாது. காற்றில் கரைந்து போகாது. அதை வெல்லவோ அடிமைப்படுத்தவோ இயலாது. அது உன் ஆன்மாவைப் போல் எங்கும் நிறைந்திருப்பது. அழிவற்றது.  உன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பல நேரங்களில் நீ அனுப்பிய ஜங்க் மெயில் உன்னிடமே சில மாதங்களுக்கு , ஏன் சில வருடங்களுக்குப் பிறகு கூட வந்து சேர்ந்து நீ மீண்டும் அவர்களுக்கே அனுப்ப வகை செய்யும்.

அர்ச்சுனன்:
அருமை அருமை சாரதி! என் வணக்கங்கள். ஜங்க் மெயில் கலாச்சாரத்தை எனக்குக் காட்டினாய். நான் இந்த மாயையில் சிக்கி என் இதர கடமைகளை மறந்து இந்த ஜங்க் மெயில்களை சிரத்தையாய் படித்துவந்தேன். இனி, படிக்காமலே முன்னனுப்பும் பொத்தானை அழுத்தி நட்பு, பகை, உறவு, எதிரி, இளைஞர் முதியோர் அனைவருக்கும் அனுப்பிவிடுவேன். இந்த குருக்ஷேத்திரப் போரில் அது அவர்களை என் முன் மண்டியிடச் செய்யும்.

க்ருஷ்ணன்:
அர்ச்சுனா வெற்றியோ தோல்வியோ உன் கையில் எதுவுமில்லை. உன் செயலுக்கான பலனைக் குறித்து கவலைப்படாதே. ஜங்க் மெயிலை முன்னனுப்பி அனைவரும் அதைப் படித்து பைத்தியம் பிடிக்க வைப்பதோடு உன் கடமை முடிந்தது. ததாஸ்து!!

இவ்வாறு க்ருஷ்ணன் உபதேசித்தான். 

(மின்னஞ்சல்: யாரோ!!                                  மொழியாக்கம்: நாந்தேன்)