Showing posts with label அனுபவம் கேரக்டர் வாழ்க்கை. Show all posts
Showing posts with label அனுபவம் கேரக்டர் வாழ்க்கை. Show all posts

Sunday, August 6, 2017

கேரக்டர் - யாரோ

ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்லை சீரியசாக நோண்டிக் கொண்டிருந்தார். எதிர் சீட்டுகளில் உட்கார்வது கூட டிஸ்ட்ராக்ட் செய்யாத ஆனால் அறிந்திருக்கிற முகபாவம்.

பச்சைக்கலர் காட்டனில் மாடர்ன் காலர்லெஸ் சட்டை. வலது கையில் பல கலர் கயிறுகளின் மேல் புத்தம் புதிய வெள்ளி கடா எனப்படும் கங்கணம். வலது கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். வேஷ்டியோ அல்லது ஜீன்ஸோ இருக்கவேண்டும் என்ற முன்முடிவு கள்ளப் பார்வையை ஏமாற்றிய காட்டன் முக்கால் ட்ராக் பேண்ட். கழுத்தைச் சுற்றி இறுக்கிய துளசி மணி. ஹரே ராமா கோஷ்டியாய் இருக்கவேண்டும் என்ற அடுத்த குறுகுறுப்பு தேடிய U அடையாளத்தை ஏமாற்றும் நெற்றி. ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும் குளிக்கவில்லை என்பது தெரிந்த ஒரு ஆச்சரியம்.

அதே சீரியஸ் முகபாவத்தோடு அரைக்கண் மூடிய நிலையில் யாருக்கோ ஃபோன்.
எத்தனை மணிக்கு ஆரம்பிக்கறது? ம்ம்? பத்தா?
டிஃபன்லாம் வந்தாச்சா?
குழந்தைகள் சாப்டாச்சா?
சரி நான் பத்துக்கு அங்க இருப்பேன்.
என்ன?
இல்லப்பா ஒரு சின்ன வேலை. ஒரு ப்ரொஃபைல் ஆடிட். முடிச்சுட்டு வந்துடுவேன். ஓக்கே
அணைத்து அஸால்டாக எறிந்த மொபைலின் கேஸிலும் ஸ்ரீ க்ருஷ்ண.

பக்கத்து டேபிளில் வந்தமர்ந்த எங்கள் ட்ரைவரை எதிரில் அமரச் சொன்னபோது வந்தமர்ந்து நோக்கிய விழிகளில் அவ்வளவு மகிழ்ச்சி.
வணக்கம் சார்! நல்லாருக்கீங்களா சார்? கவனிக்கல சாரி சார்.
வணக்கம்பா..நல்லாருக்கேன்..உட்காரு..வைஃப் எப்படி இருக்கா? பையன் என்ன பண்றான்..பேசறானா? இன்னைக்கு எங்க டூட்டி..நட்பாக அழுத்தி அமர வைக்கும் கரங்கள். ட்ரைவரின் கண்களில் பரவசம்.

நல்லாருக்காங்க சார். அப்பா, அம்மால்லாம் சொல்றான் சார்.

குட். நாளைக்கு சாயந்திரம் டூட்டியா?

இப்பதைக்கு புக்கிங் இல்ல சார்.

சரி ஃப்ரீயா இருந்தா சாயந்திரம் ஃபேமிலிய கூட்டிண்டு **** ஸ்கூல் க்ரவுண்டுக்கு வா. ஹெல்ப் தேவைப் படும். 150 பசங்களுக்கு யூனிஃபார்ம், புக்ஸ், சாப்பாடு..வேலை இருக்கும்.

வந்துடறேன் சார்!

புக்கிங் இருந்தா விட்டுண்டு வர வேண்டாம். ஃப்ரீயா இருந்தா வா.

சார் ஆதார் வந்துடுச்சு சார்.

குட். பேன் கார்ட் அப்ளை பண்ணு. ஒரு மாசம் ஆகும்னு சொல்லுவான். அக்னாலட்ஜ்மண்ட் இருந்தா போதும். நம்பர் இருக்கும். ஸ்டேட்பேங்க், கேவிபில்லாம் வேணாம். எல்விபி போ. அத வச்சு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கோ. அக்கா இங்க வாங்க. தம்பிக்கு என்ன வேணுமோ குடுங்க. பில் என் கணக்கு.

(ஐ வில் டேக் கேர் சொல்ல வந்த அகந்தையை அடக்கி, இந்த பக்கியும் வாய் தொறக்கலையே என்ற குறுகுறுப்பை அழுத்தி வந்த சர்வர் அக்காவிடம் எங்களுக்கு சொல்லி நீங்க என்ன வேணுமோ சொல்லிக்கோங்க என்ற போதும் திரும்பிக் கூட பார்க்காத தி(ஜ)டம்). பை தி வே மடப்பள்ளி ஹோட்டல் மற்றும் அவுட்லெட்டுகளில் கிச்சன் தவிர பெண்கள் மட்டுமே. பெண்களுக்கே ஆன பரிவு மட்டுமல்ல யார் முகத்திலும் சலிப்பே அற்ற உற்சாகமான கான்ஃபிடன்ஸான முகங்கள்)

இட்லி பரிமாறியவரிடம் அக்கா உன் சைக்கிள் வந்துடுச்சு. மணச்சநல்லூர்ல இருக்கு. எப்டி கொண்டு வரதுன்னுதான் தெரியல. குட்டியானைல போட்டு கொண்டு வரணும். உனக்கும் வந்தாச்சு அந்தக்காக்கும்.

xxxட சொல்லலாம்ல தம்பி.

ப்ச். வண்டி வந்து சேராதுக்கா..அவரத் தேடி அலையணும். என்னவெல்லாம் பண்ணியாச்சு. இந்த வயசுல தெரிஞ்சே குடிச்சி குடும்பத்த நாசமாக்கறார். விடுக்கா பாத்துக்கலாம்.

நோண்டிக் கொண்டிருந்த செல்லிலிருந்து கண்ணெடுக்காமலே பின்னாடி கடந்த அக்காவிடம் அக்கா ஒரு காஃபி. வரதராஜன இன்னும் காணோம்.

கொண்டு வந்த அக்கா ஆத்திக் கொடுத்த பரிவு. சத்தியமா வயத்தெரிச்சல். அடேய், நீ யார்ரான்னு பொங்கி வந்தது. கொஞ்சம் கூட சூடா இருக்குமோ என்ற சந்தேகமே இல்லாமல் வாயில் வைத்து உறியும் அவர்மேல் பொறாமையும் கூட. அதற்குள் வரதராஜன் வந்து விட ‘நீ வரலன்னுதான் காஃபி சொன்னேன்..இத எடுத்துக்கோ’. டபரா காஃபி வரதனுக்கு.

கேஷியரண்ணா! (கணக்குக்கு காற்றில் கிறுக்கல்)

அலைச்சலில் மறந்து விட்டாலும், ராத்திரி சங்கீதாவில் டிஃபன் சாப்பிடும்போது

காலைல ஹோட்டல்ல பார்த்தமே ஒரு பச்ச சட்ட! என்ன பண்றார்?

டிசிபி ஆஃபீஸ்ல வொர்க் பண்றார் சார். எங்க போறதுன்னாலும் என் வண்டிலதான் போவார். முன்னாடியே சொல்லீடுவார். எனக்கு புக்கிங்னா மாத்தி வச்சுக்குவார்.

நிறைய சோஷியல் சர்வீஸ் பண்ணுவாரா?

ஹோட்டல்ல பாத்தீங்கல்ல சார், அந்த குண்டு அக்கா, அப்புறம் காஃபி குடுத்தாங்களே அந்த ஒல்லி அக்கா. ரெண்டு பேருக்கும் சொந்த காசுல நகையெல்லாம் போட்டு கலியாணம் செஞ்சு குடுத்தார் சார். வேத பாட சாலைல கொஞ்சம் பசங்களுக்கு பீசு துணிமணி, இஸ்கூல் ஃபீசெல்லாம் இவருதான். அப்பப்ப எதுனா நிகழ்ச்சி வச்சி நல்ல சாப்பாடா போடுவார் சார். யார்கிட்டயும் வாங்கமாட்டாரு. சொந்தக் காசுதான்.

குடும்பம்?

ஆன்மீகத்துல நாட்டம் சார். கலியாணம் கட்டல. யார் போய் உதவின்னு நின்னாலும் ஹெல்ப் பண்ணுவார் சார். நல்ல மனுஷன் சார்.

*இத விட ஆன்மீகம் என்னத்த பெருசா கொண்டு தரப் போகுது?*

Sunday, May 13, 2012

கேரக்டர்: கன்னீப்பா

சொல்வனத்தில் வெளிவந்த ரோமாக்கள் குறித்தான கட்டுரையைத் தொடர்ந்து தென்றல்’ஸ் ப்ளஸ்ஸில் ஜிப்சிக்கள் குறித்தான விவாதம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு ஜிப்சிகள் குறித்தும் பேசப்பட்டது. என் பள்ளி நாட்களில் ஏறக்குறைய 8 வருடம் அவர்களை அவதானித்திருக்கிறேன். விடுமுறையில் பெரியம்மா வீட்டிற்கோ மாமா வீட்டிற்கோ செல்லும்போதெல்லாம் அவர்கள் ஊரைத் தவிர ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே. வண்டி ப்ளாட்ஃபார்மில் நுழையுமுன்னே சிற்றெறும்புக் கூட்டங்களாகச் சிதறி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ஓடிப் பதப்படுத்திய அணில் விற்கும் குறத்திகள். சின்னப் பலகையில் பாய்ந்தேரத் தயார் நிலையில் சற்றும் அழகு கெடாத அணிலின் குண்டுமணிக் கண்ணில் எப்படி உயிர் கொண்டுவரமுடியும்? ‘சாம்யோ! ரண்ட்ரூப்பா சாம்யோவில் ஆரம்பித்து வண்டி புறப்படும்போது கூடவே ஓடி வர்ருப்பா குடுசாம்யோவில்’ முடியும் பேரம். முன் தோள் ஒன்று புடைக்க ஒரு கால் முன்வைத்து, பின்னங்கால் இரண்டும் சற்றே மடிய இரை பிடிக்கும் பார்வையோடு பதுங்கி நிற்கும் பதப்படுத்திய நரியின் கோலிக் கண்ணில் அத்தனை கள்ளம் எப்படி வைத்தான் ‘பத்ருப்பா குடு சாமி! காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி! நரிக்கொம்பு சாமி! ராசி சாமி! அஞ்ச்ரூப்பா குடு சாமி’ என்று கெஞ்சும் அந்தக் குறவன்? அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை? கிளிக்குஞ்சும், மைனாக் குஞ்சும் மட்டும், சமைப்பதற்கு கொளுத்திய டயர் கம்பியில் அவர்களே பின்னி, அலுமினிய பெயிண்ட் அடைத்த கூடையில் வைத்து விற்பது ஏன்?

நாய் கடித்துக் குதறி குற்றுயிராய் குப்பைத்தொட்டியில் முடங்கிய நோஞ்சான் பூனைக்குட்டியை புதையல் மாதிரி அள்ளி எடுத்து தெருக்குழாயில் குளிப்பாட்டி, காயத்துக்கு தினத்தந்தி பேப்பர் கிழித்து ஒட்டி, டால்டா டப்பாவில் நேற்று இரவு முறை வைத்து வீதிகளில் ராப்பிச்சம்மா என்று வாங்கிய வெங்காய சாம்பார்,ரசம்,கறிக்குழம்பு,மீன் குழம்பு எல்லாம் ஒன்றாகக் கொட்டிக் கலந்து அதிலிருந்து ஒரு துண்டு மீனோ கறியோ பகிர்ந்து   கொழுகொழுவென்று வளர்த்த அந்தப் பூனையை மடியில் வைத்து ஒரு கையால் தடவிக் கொண்டே மறுகையால் கூராகச் சீவப்பட்ட மூங்கிலை அதன் ப்ருஷ்டத்தில் ஒரே சொருகாகச் சொருகி டயர் கொளுத்திய ரப்பரில் சுட்டு கும்பலாக உட்கார்ந்து பிய்த்துத் தின்ன எப்படி மனம் வரும்?

மருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் காட்டி, எட்டணாவை நீட்டி ’புள்ளக்கி கண்ணு தொர்க்காத ஜொரம் சாமி! நோவால்ஜின் குடு சாமி என்றோ, பத்ருப்பா சில்ற குடுசாமி என்றோ கெஞ்சும் குறத்தியை பெரிய கழியோடு ஏன் கடைக்காரர் விரட்டுகிறார்?

எல்லாம் விட ஐம்பதுக்கும் குறையாத ஆணும், பெண்ணும், குழந்தையுமான கூட்டத்தில் ஆண்களெல்லாம் ‘கன்னீப்பாவாகவும்’ பெண்களெல்லாம் ‘கன்னீமா’வாகவும் இருக்க யாரோ ஒரு கன்னீப்பாவோ கன்னீமாவோ கூப்பிடும்போது எப்படி சரியான கன்னீமாவோ கன்னீப்பாவோ புரியாத பாஷையில் பதில் சொல்கிறார்கள்?

ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அயனாவரம் ஜாயிண்ட் ஆஃபீஸ் ஓரம், பள்ளிக்கூட மைதான நிழலில் என்று இவர்களை அவதானிப்பதே பெரிதும் படித்த படிப்பு எனலாம். ஏழாவது வகுப்பு படிக்கும்போது பதினொண்ணாம் வகுப்பு அண்ணன்மார் சொல்லிக் கொடுத்தபடி கும்பலாக போய் குறத்திகளின் எதிரில் மூக்கைச் சொரிந்தால் ‘போசடிகெ, மாதர்சோத்’ என்ற இன்ன பிறவு வசவுகளுக்கான காரணம் பதினொன்றாம் வகுப்புக்குப் சென்றபோது புரிந்து கோபம், பயம், வெட்கம், அருவெறுப்பு என்று கலவையான உணர்ச்சிகளுக்கு ஆளானது சரிதானா?

நாலணாவுக்கு தம்பிடி குறையாது என்று லோலோ என்று கத்தும் கன்னீமா, பிச்சைக்காரியின் குழந்தை கழுத்தில் கருகுமணி போட்டுவிட்டு கொஞ்சுவாள். பேறு வீடுகளில் பேரம் பேசாமல் குழந்தைக்கு கருப்பு வளவியும், கருப்பும் வெளுப்புமான மணிகோத்த கால் கயிரும் கொடுப்பாள். குடலேற்றம் கண்டு துடிக்கும் குழந்தையை இரண்டுகாலை விரலிடுக்கில் பிடித்து தூளி மாதிரி மூன்று வீச்சு வீசி சிரிக்கச் சிரிக்கத் திரும்பத் தருவாள். கையில் நிற்காமல் துடிக்கும் குழந்தையை பார்த்த மாத்திரம் எங்கோ சுளுக்கென்று முறத்தில் இட்டு புடைக்கும் மாயத்தில் அது ‘ஙே’ என்று இளிக்கும். கொஞ்சம் போல சோறோ, குழம்போ, இரண்டு வெற்றிலையோ, ஒரு இணுக்கு கட்டைப் புகையிலையோ கொடுத்தால் போதும். நரம்புச் சிலந்தி எடுத்துக் கொளுத்தி புதுத்துண்டும், கிழிந்த சட்டையும், கவுளி வெத்தலையில் வைத்துக் கொடுத்த 5ரூ தட்சணையோடு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து முடித்த சர்ஜனின் களைப்போடும் பெருமிதத்தோடும் ‘வ்ர்ரேஞ்சாமி’ என்று போகும் கன்னீப்பா கிழவன் அடுத்த அரைமணியில் ஏழாம் நம்பர் சாராயக் கடையில் ஏற்றிக் கொண்டு கன்னீமாவோடு கோவணம் அவிழ மல்லுக் கட்டுவான். கன்னீமாக்கு கொடுக்காமல் மொத்தமும் குடித்த குடிக்கு சண்டை.

தினமும் பார்த்துப் பார்த்து எந்தக் கன்னீமாவுக்கு எந்தக் கன்னிப்பா புருஷன், எந்தக் கன்னீமா மகள், எந்தக் கன்னிப்பா மகன், எந்தக் கன்னிமா அத்தை, சித்தி போன்ற உறவுகள் புரிந்தது. வாரம் ஒருமுறை செங்கல் அடுப்பில் அலுமினிய டேக்ஸா ஏறுகையில் இன்னைக்கு எந்தப் பூனைக்கு ஆயுசு முடியும் என்று பெட் கட்டும் அளவு புரிந்து வைத்திருந்தோம். கருக்கலில் பால் வாங்கிக் கொண்டு வருகையில் கன்னீப்பா கிழவன் காக்கா அடிக்கத் தயாரானால் அன்றைக்கு வீட்டில் திட்டுதான். பால் வண்டி லேட்டு என்று சொல்லிவிடலாம். அதற்காக ‘கன்னீப்பா கிழவன்’ காக்கா அடிக்கும் காட்சியை விட முடியுமா என்ன?

விரலளவு அடிக்கணுவில் ஆரம்பித்து சிறுத்துக் கொண்டே வந்து மெலிதாக முடியும் முனையில் சின்னக் கோலிக் குண்டு அளவு தார் உருட்டி வைத்திருப்பான். டால்டா டப்பாவிலிருந்து இரண்டுகை சோறு விசுறுவான். ‘க்ராவோவ்வ்வ்வ்வ்க்ரா’ என்று ஒரு குரலுக்கு இருபது முப்பது காக்கைகள் வந்திறங்கும். மறைவிலிருந்தபடியே அந்த மூங்கிலின் வீச்சுக்கு பத்து காகமாவது சுருண்டு விழும். பாய்ந்து அள்ளிப் பிடித்து றெக்கை முறுக்கி வலைக்கூடையில் வைக்க ஆரம்பிக்க வொர்க்‌ஷாப் ஆட்கள் எனக்கு உனக்கு என்று போட்டியிடுவார்கள். அந்த ஒரு வீச்சுதான். கிடைத்தவர்களுக்கு சந்தோஷம். கிடைக்காதவர்களுக்கு வருத்தம். ஏதேதோ வியாதிக்கு ரத்தம் கறி என்று மருத்துவப் பக்குவம் வேறு இலவசம்.

காலையில் எட்டரைக்கெல்லாம் தொழில் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். மைடப்பா, சாந்து புட்டி, பாசி மணி, ஊசி மணி, கருப்பு வளவி, திருஷ்டி மணி, ப்ளாஸ்டிக் மோதிரம், ப்ளாஸ்டிக் வாச், சீப்பு இதர சாமான்களோடு. ரிட்டையரான பெருசுகளும், அன்றைக்கு சமைக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களும் மட்டும் இருக்கும். எட்டாவது முழுப்பரிட்சை முடியும்போதுதான் அந்தக் கன்னிம்மா சிறுமி படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. வலது கை முழுதும் ரத்தக் களறியாய்க் கொப்புளங்கள். ஓயாது அழுகை. என்னமோ எண்ணெய் போடுவாள் ஒரு கிழவி. முழுப்பரிட்சை முடிந்து திரும்பவும் பள்ளிக்குச் சென்றபோது பார்த்தால் பேரதிர்ச்சி. கையில் சதை என்பதே இல்லை. மஞ்சளும் சிவப்புமாய் எலும்பும், சதையுமாய் அரை மயக்க நிலையில் கிடப்பாள். எல்லாரும் போனதும் ‘கன்னீப்பா கிழவன்’ வீதியோர வெள்ளை கருப்பு கல்லைக் கழுவுவான். ஏதோ இலைகள், கொடிகள், மஞ்சள் கிழங்கு அதைத் தட்ட உடைந்து போன ஒரு குழவி. அதில் அரைத்து ஏதோ எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அவள் கையில் பற்றுப் போட்டு வலியில் அவள் கதற, அவளை அடக்க இவன் கத்த என்று ஒரு கூட்டம் சேர்ந்துவிடும்.

‘காக்கா கிழவன்’ என்று பேர்தானே தவிர நரைத்தாலும் தலை கொள்ளாத முடியும் குடுமியும் எங்கிருந்தோ வித்தியாசமான தேன் கலர் சருமமும், வழக்கமான தூசும், டயர்கரியுமற்ற உருவம். நல்ல உயரம். கையில் மார்பில் கிளி, கன்னமா (கன்னீம்மா) பெயர், ஒரு வாளைச் சுற்றிப் படர்ந்த இரண்டு பாம்புகள், நெற்றியில் மூன்று புள்ளிகள் என்று பச்சை குத்தியிருப்பான். கரண்டை கரண்டையாக காலும் கையும் ஒட்டிய வயிறும் கிண்ணென்றிருக்கும். கையில் வாட்ச் இல்லாத ஸ்ட்ராப் மட்டும். எல்லா விரலிலும் ஸ்டீல் அல்லது செம்பு மோதிரம். நரிப்பல் கோர்த்த பவளமணி. எம்.ஜி.ஆர் படம் வைத்த ரெக்ஸின் பர்ஸ். பல வண்ண ஒட்டுப் போட்ட ரெக்ஸின் பை. அதற்குள் ப்ளையர், மணிகள், மணி கோர்க்கும் அலுமினிய செம்பு கம்பிகள்.  எப்போதும் புதிதாக இருக்கும் சிவப்பு அரணாக் கயிற்றில் அழுக்குக் கோவணம். வெற்றிலை குதப்பிய வாய். கொச்சைத் தமிழில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு. சாயந்திரமானால் சாராயம், கன்னீமாவோடு பஞ்சாயத்து.

அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் என்பதாலோ அல்லது ஆஃபீஸ் வாசலிலே கடையும் போடுவதாலோ காக்காக் கிழவன் வேறெங்கும் போவதில்லை. நாளாக நாளாக அந்தப் பெண்ணின் புண் ஆறுவதாகவும் தெரியவில்லை. அந்தக் கிழவனின் வைத்தியமும் நிற்கவில்லை. ஒன்பதாவது பரீட்சை முடிந்தபோது அந்தச் சிறுமி பிழைக்காது என்ற நிலையில் கிடந்தாள். விடுமுறை முடிந்து வந்தபோது காயங்கள் முற்றிலும் ஆறி செம்புண்ணாக உரித்த கோழி நிறத்தில் இருந்தது கை. சிரிப்பும் சுளிப்புமாக கிழவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டு தூசும் அழுக்குமாக இருப்பாள். எப்படியோ பள்ளி முடிந்து போகும்போது கன்னீமா வளர்ந்துவிட்டிருந்தாள். அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது. பின்பு படிப்பு முடிந்து வேலை என்றோடி அவர்களை அவதானிக்கும் வாய்ப்பே அற்றுப் போனது.

ஐந்தாறு வருட இடைவெளி இருக்கும். ஆஃபீஸ் முடிந்து கேரேஜ் ஸ்டேஷனில் இறங்கி ஜாயிண்ட் ஆஃபீஸ் வழியாக வரும்போது பழைய இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு கிழவனும். அந்த தேன் நிறம் சட்டென்று பார்க்க வைத்தது. மடிப்பு மடிப்பாக தடித்து கிடந்ததது தேகம். காது சுருங்கி, மூக்கிருந்த அடையாளமாக இரண்டு ஓட்டைகள், உதடற்ற பற்கள், விரலற்ற இரண்டு உள்ளங்கைகளில் அழுந்தப் பிடித்த அலுமினிய டம்ப்ளர். ஊதிக் கூட குடிக்க முடியாததால் சூடாக இருந்ததாலோ என்னவோ விரலற்ற கால்களுக்கிடையில் டம்ப்ளரை இறுக்கியபடி இரண்டு உள்ளங்கைககளாலும் ஆரஞ்சு சைசில் இருந்த ஒரு கல்லை எடுத்து அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தவளின் முதுகில் வீசினான். எழுந்து வந்து டம்ப்ளரில் இருந்ததை ஆற்றிக் கொடுத்துப் போனாள். சாப்பிட்ட பிறகு ஒரு கம்பியை வளைத்து பீடியை சொருகி, அடுப்புக் கங்கில் கொளுத்திக் கொடுத்தாள். இரண்டு உள்ளங்கையிலும் பிடித்து பல்லில் கடித்து கைகொண்டு பொத்தி எப்படியோ உறிஞ்சி புகைத்தபடி திரும்பியவன் நிமிர்ந்தான். இமைகளும் சுருங்கி பிதுங்கிய வெண்ணிறக் கோளமாக கண்கள். மெதுவே கை பிடித்து அழைத்துப் போய் கால்வாயோரம் போன கன்னீமாவின் கழுத்தில் கருகமணி.

திடீரென வந்தது போலவே திடீரென ஓரிரு மாதங்களில் காணாமல் போனார்கள். கும்பலிலிருந்து எப்படி இவர்கள் மட்டும் பிரிந்து வந்தார்கள்? ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா? புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந்தில்லையா? திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ? இதை எழுதும்போது கூட அன்றெழுந்த இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அப்புறம் அவர்கள் எவரையும் பார்க்கவும் முடியவில்லை.

Thursday, September 15, 2011

கேரக்டர்..சித்ராங்கி

அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை பெய்து கொண்டேயிருக்கும். எப்போதாவது ஒரு நாள் விட்டு சில மணி நேரம் சூரியன் தலைகாட்டும். அப்படி ஒரு நாளில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு அபூர்வமான குடியமைப்பு அந்தப் பகுதி. காஃபி, ஏலக்காய் தோட்ட அதிபர்கள், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்யும் கூலிக்காரர்கள் என்று மலையும் மடுவுமான குடிகள். தோட்ட அதிபர்களின் வீட்டுப் பெண்களை வெளியில் காண்பதே அரிது. கூலிக் குடியில் இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்த்திருக்கவே முடியாது.

ஒரு நடிகையைப் போல மேக்கப்புடன், சிவப்பு நைலக்ஸ் சேலை, ஹீல்ஸ் செருப்பு, கையில் அந்த வெயிலுக்கே விரித்த குடையுடன் இறங்கி வந்துக் கொண்டிருந்தாள். அக்கம் பக்கத்து குவார்டஸ் பெண்களின் கன்னட வசவும், உமிழ்தலும் பிடிபடத்தான் இல்லை. அப்போதுதான் அவளைக் கடந்து போகிற இருவரை ‘நம்ஸ்காரா அண்ணா, நம்ஸ்காரா ரீ’ என்று அவள் வணங்குவதும், ‘நம்ஸ்காரம்மா’ என்ற சொல்லோடு கடந்த அடுத்த நொடியில் ‘ஹேங்கிதாள நோடு சூளே நன்னமகா (எப்படி இருக்கிறாள் பார் விலைமாதுக்குப் பிறந்தவள்)’ என்ற சொல் அவளைக் காயப்படுத்திற்றோ இல்லையோ, என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்ததாலும், மொழிப் பிரச்சனையோடு, வயதும் சேர மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை.
அடுத்த நாளில், அவசரமாக வீட்டிற்குக் கடிதம் எழுதவேண்டியிருந்ததால், ப்யூனிடம் போஸ்டாஃபீஸ் எங்கே என்று விசாரித்தபோது, அலுவலகத்துக்கு மேலேயே லைசன்ஸ் செல்லர் இருப்பதாகத் தெரியவந்தது. இடம் விசாரித்துப் போனபோது, ஒரு டேபிளில் ட்ரேயில், கார்டு, கவர், இன்லண்ட் லெட்டர், மணியார்டர் ஃபாரம் இத்தியாதியோடு, அந்தப் பெண் அமர்ந்திருந்தார். சித்ராங்கி, லைசன்ஸ் போஸ்டல் செல்லர் என்ற போர்டும் இருந்தது. ‘ஏனு பேக்கு தம்மா (என்ன வேண்டும் தம்பி?)’ என்ற கேள்வியோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துச் சிரித்தாள். ரண்டு இன்லண்ட் லெட்டர், ரண்டு கவர் என்று காசை நீட்டியபடியே கவிழ்த்து வைக்கப் பட்ட புத்தகத்தின் மீது கண்ணை ஓட்டினேன். மைசூர் யூனிவர்சிடியின் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு புத்தகம் அது.

மாதம் ஒரு முறை மணியார்டர் அனுப்புவதற்கு மட்டும் மலையிறங்கி மெயின் போஸ்டாஃபீஸ் போனால் போதும் என்பதால், தபால் தேவைகளுக்கு அவள் வீட்டில் வாங்குவது எளிதானது. அப்படிப் போகையில், ஒரு நாள் அவளில்லாமல் போக காத்திருந்தபோது, உள்ளிருந்து, ‘ஏனு பேக்கு? (என்ன வேண்டும்) என்ற குரல் மட்டும் வந்தது. இன்லண்ட் லெட்டர் என்ற போது காசை வைத்துவிட்டு எடுத்துச் செல் என்ற அவளின் குரல் மட்டும் கேட்டது. பல நாட்களில் இப்படி நடக்கவும், தவிர அந்த ட்ரேயில் இருந்த கணிசமான காசும் அதெப்படி இப்படி ஒரு நம்பிக்கை. யாராவது காசு போடாமல் எடுத்துக் கொண்டு போனாலோ, அல்லது ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டு போனாலோ என்ன செய்வாள்? காசு வேறு இப்படி கிடக்கிறதே என்ற கேள்விகள் எழத்தான் செய்தன.

அப்படி ஒரு நாளில், கவரோடு வந்து, கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் உடன் பணிபுரியும் ரகோத்தமராவிடம் கேட்டேன். நமட்டுச் சிரிப்போடு, நீ இனிமேல் அங்கே போய் வாங்க வேண்டாம். எப்போதாவது டவுனுக்குப் போகும்போது வாங்கி வைத்துக் கொள் என்றாரே ஒழிய விஷயம் வெளிவரவில்லை. வயதில் மிக மூத்தவராதலால், தயக்கத்துடனே மாலையில் மீண்டும் கேட்டேன். நீ அங்கே போறது நல்லதில்லைப்பா. பொறுப்பான பதவியில் இருக்கிறாய். ஊரில் ஒரு மாதிரி பேச்சு வரும் என்று மேலும் தயங்கியபோது லேசாக புரிந்தது. அவரே தொடர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு பெற்றவர் யாரும் இல்லையாம். மாமன் வீட்டில் இருக்கிறாளாம். தேயிலைத் தோட்ட அதிபர்கள் எந்தப் பெண்ணைக் கை காட்டினாலும், அது அவளுடைய புருஷனே ஆனாலும், அழைத்துக் கொண்டு போய்விட வேண்டுமாம். அப்படி அவள் மாமனால் அழைத்துச் செல்லப் பட்டாளாம் படிக்கும் காலத்திலேயே. மாறி மாறி அவர்களுக்கு விருந்தாகி, ஒரு கட்டத்தில் செக்ஸ் தொழிலாளியாக மாறியவளாம்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், திருந்தி ஒரு ஆரம்பப் பாடசாலையில் டீச்சர் வேலை கிடைத்ததும் இதிலிருந்து ஒதுங்கியிருந்தாளாம். பட்டதாரி ஆனால் பிறகு உயர்வகுப்புக்கு ஆசிரியையாகச் செல்லலாம் என்ற கனவில் இருந்தவளை, ஒன்றாவது இரண்டாவது படிக்கும் பிள்ளைகளுக்கு இவள் பாடம் சொல்வதை விட வேறு ஏதோ சொல்லிக் கொடுப்பாள் என்ற ஊர் மக்களின் பிராது மீண்டும் தொழிலுக்கே தள்ளியதாம். அப்படி ஆட்கள் இருக்கும்போதுதான் ட்ரேயில் காசு போட்டு விட்டு கார்டோ கவரோ கொண்டு போகச் சொல்லுவாள் என்று கிண்டலாக அவர் சொன்னபோது அருவருப்பாய்த்தான் இருந்தது.

அதோடு அங்கு போவதையும் நிறுத்திக் கொண்டு அவர் சொன்னபடி மொத்தமாக கார்டு, கவர் வாங்கி வைத்துக் கொண்டாயிற்று. வழியில் பார்க்க நேரும்போது ‘ஏனு தம்மா பரோதில்லா’ (என்ன தம்பி வருவதே இல்லை) என்று சிரித்தபடி கேட்கையில் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பதைப்பும் அருவருப்பும் கூட வந்து தொலைந்ததே தவிர, அவள் நரகத்தைப் புரிந்து கொள்ள புத்தியில்லாமல் போனது.

ஏட்டு கெங்கண்ணா அலுவலகத்தின் மேல் புறம் அமைந்துள்ள டீக்கடையில்தான் டீக்குடிக்க வருவார். டீக்குடிப்பது ஒரு சாக்கென்பதும், அவளிடம் மாமூல் வாங்க வந்திருந்த நேரம் சரியில்லையென்பதால் டீக்குடித்துக் காத்திருப்பதும், டீக்கடை ராமன் நாயர் பின்பு சொல்லித்தான் தெரியும். புழுவை விடக் கேவலமாக, ‘அவனுக்க நாயி மேலல்லா சாரே! அவளே விதியில்லாம உடம்ப விக்கிறா. இந்த வேசிமகன் அதுக்க காசும் வேண்டிட்டு அவளுக்க சுகமும் கேப்பான். பட்டிமகன்’ என்று உமிழ்வார். ஒரு நாள், ‘சூளே முண்டே! நன்னத்தர ஆட்டவாடுத்தியா (தேவடியா முண்டை, என்னிடமே விளையாடுகிறாயா)’ என்ற குழறலான கெங்கண்ணாவின் மிரட்டலும் ’(அண்ணா பிட்டு பிடண்ணா, நினக தேவரு ஒள்ளேது மாடலி (அண்ணா விடு அண்ணா, கடவுள் உனக்கு நல்லது செய்யட்டும்)’ என்ற அவள் கதறலும் அலுவலகம் முழுதையும் வெளிக் கொணர்ந்தது. அவிழ்த்துத் தோளில் போட்ட சட்டையோடு, அவளைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் கெங்கண்ணா. இரண்டு கையாலும் புடவையை மார்பைச் சுற்றி இருக்கிக் கொண்டு நாய் போல் இழுபட்டுக் கதறிக் கொண்டிருந்தாள் சித்ராங்கி.

‘விடய்யா கெங்கண்ணா அவளை’ என்று வந்த ராமன் நாயரை ஒரே தள்ளில் விழுத்திக் கொக்கரித்தான் கெங்கண்ணா. காசும் கொடுக்காமல் உடம்பு சரியில்லை என்று அவனோடு படுக்கவும் மறுத்தாளாம் அவள். அத்தனை பேரிருந்தும் ஒருவரும் அவளுக்காக பேச வரவில்லை. சுற்றிலும் குவார்ட்டர்ஸ். பெண்களெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்காக பேசி குடும்பத்தில் குழப்பம் வருமென்ற பயமும் ஆண்களும் ஒதுங்கியிருக்க ஒரு காரணம். அப்போது பார்த்து அவள் நல்லகாலம், எங்கள் இன்ஸ்பெக்டர் அப்துல்லா குட்டி வந்து சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் என்றால் போலீஸ் இல்லை. பில்டிங் இன்ஸ்பெக்டர். கோட்டை அறையாய் ஒரு அறை கொடுத்தார் கெங்கண்ணனுக்கு. அவன் மேலிருந்த சட்டையை பிடுங்கி தன்னிடம் பணி புரிபவனிடம் கொடுத்து, ‘ஹேமவதி ஆத்தில் கொண்டு போய் போடுடா’ என்றார்; ’தாயி! நீனு மனேக ஹோகம்மா (தாயீ நீ வீட்டுக்கு போம்மா) என்றார். சிங்கம் போல் கர்ஜித்த கெங்கண்ணா நாயை விடக் கேவலமானான். காலில் விழுந்தான். பேட்ஜ் போனால் சஸ்பெண்ட் பண்ணி விடுவார்கள் என்று அழுதான்.

கட்டுடா அவனை என்று லாம்ப் போஸ்டில் கட்டவைத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் போட்டு இன்ஸ்பெக்டரை வரவழைத்தார். வீடு புகுந்து பெண்ணை நடு ரோட்டிற்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்தியதாக புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார். ஒரு வழியாக கெங்கண்ணா இனி தொல்லை கொடுக்கமாட்டான் என்ற உத்தரவாதத்தின் பேரில் கெங்கண்ணா விடுவிக்கப்பட்டான். ‘அண்ணா, அண்ணா என்று இரு கை கூப்பி உதடு துடிக்க அழுதவளை போம்மா’ என்று அனுப்பிவிட்டு, ‘வா சாரே, நமுக்கு ஒரு டீ குடிக்காம் என்று என்னை அழைத்துக் கொண்டு போனார் அப்துல்லா குட்டி.
ஒரு சில மாதங்களில் பஞ்சாயத்து எலக்‌ஷன் வந்தது. தோட்டத்து முதலாளிகள் ஆதரவில் ஆளுங்கட்சிக்கு ஒருவரும், அவனின் பரம எதிரியான ஒருவனும் வேட்பாளராவதாகப் பேச்சு இருந்தது. அப்போதே ஏதாவது வெட்டு குத்து நடக்கும் என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. அதற்கும் பகடைக்காய் ஆணாள் சித்ராங்கி. 

எதிர்க்கட்சி ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு, கன்னாபின்னாவென்று காயப்பட்டு, ஆளும்கட்சி வேட்பாளர் கடத்திச் சென்று அடித்ததாக கேஸ் கொடுக்க வைத்தார்கள். கொடுத்த கேசை வாபஸ் வாங்கச் சொல்லி ஆளும் கட்சி ஆட்களிடமும் அடியும் உதையும் விழுந்தது. தேர்தல் இருந்ததால் உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டு கோர்ட்டில் உடனடியாக கேஸ் வந்தது.
யாரும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் சித்ராங்கி. ஆளும் கட்சி ஆளைக் கவிழ்ப்பதற்காக அடித்து உதைத்து புகார் கொடுக்க வைத்ததைச் சொன்னாள். புகாரை வாபஸ் வாங்க ஆளும் கட்சி ஆட்கள் அடித்ததையும் சொன்னாள். அதையும் விட ஊர் முழுதும் பேச்சானது அவளின் சாட்சி. ‘எஜமானரே! உங்கள் முன் பல முறை விபச்சாரத்துக்காக ஃபைன் கட்டியிருக்கிறேன். டீச்சராக இருந்தேன். இந்தத் தொழிலைச் சொல்லி என்னை அதில் நிலைக்க விடவில்லை. இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சுயமாகத்தான் நான் முன்னேற முடியும். நானும் ஒரு வேட்பாளராக களமிறங்கப் போகிறேன். எனக்குப் பாதுகாப்பு வேண்டும். யாருக்காகவோ பலிகடா ஆக்கப்பட்டேன். அவர்கள் மேல் வருத்தம் மட்டுமே இருக்கிறது. கேசை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றாளாம். .

அதே கெங்கண்ணா பாதுகாவலுடன், ‘அம்மா,, அவ்வா,,அண்ணா,,தாத்தா’ என்று வயதுக்கேற்றவாறு கால் பிடித்து கை பிடித்து ஓட்டுக் கேட்டாள். இதற்குள் எனக்கு ட்ரான்ஸ்ஃபராகி சென்னை வந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அங்கிருந்து வந்த ஒரு ஊழியர் நஞ்சப்பன் என்னைச் சந்தித்தபோது கேட்டேன். அவளின் தைரியத்தை மெச்சியோ, கவுன்சிலரானால் தன் வீட்டு ஆண்மகன்கள் இவளிடம் இனி காசைத் தொலைக்க மாட்டார்கள் என்றோ விழுந்த ஓட்டுகள் போக, ஆளும் கட்சி வேட்பாளர் கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கியதால் அந்த ஒட்டும் கிடைத்ததாம்.

சித்திராங்கி பெருத்த வாக்கு வித்தியாசத்தில் கவுன்ஸிலராகிவிட்டாளாம். தன்னை வேலையிலிருந்து தூக்கிய பள்ளிக்கு நிதி திரட்டி நல்லதாகக் கட்டிக் கொடுத்தாளாம். ஊரில் பெருமதிப்பாம் அவளுக்கு. எல்லாம் விட ‘நம்ம ஊரிந்த ஒந்தே ஒந்து ஹெண்ணுகே கண்ணாக்தக்கே பிடல்லா ஆ எஸ்டேட் சூளே நன்ன மக்க சாயபுருக்கே சார். (நம்ம ஊர் பெண்கள் ஒருத்தி மேலும் அந்த எஸ்டேட் அதிபர்கள் கண்ணெடுத்துப் பார்க்க விடுவதில்லை சார்)’ என்று சொன்னபோது குரல் கம்மியது நஞ்சப்பனுக்கு

(பண்புடன் செப்டம்பர் 15 மின்னிதழில் வெளியானது)