Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, November 20, 2010

நாடாமை..தீர்ப்ப மாத்திச் சொல்லு...

நாத்து 8:சட்டம் ஒரு இருட்டறை என்பது பெரும்பாலும் அனைவரும் கூறும் ஒன்று. காரணம், நீதி சாட்சிகளையும், சந்தர்ப்பங்களையும் மட்டும் கணக்கில் கொண்டு தன் கடமையைச் செய்யும். உணர்ச்சிகளுக்கு அங்கே வேலையில்லை. சில நேரம் நிஜம் ஒரு பக்கம் சாட்சியின்றி பூதாகாரமாய்த் தெரியும். சாட்சியுடன் இன்னொரு நிஜமும் சட்டத்தின்படி பொய்யாய் வெருட்டும். இரண்டு நிஜத்தில் எதைத் தள்ள முடியும்? அங்கேதான் நீதிபதியின் திறமையும் மனிதமும் வெளிப்படும் தருணம். அத்தகையதோர் நிகழ்வு இது.

திருவாளர் ’எக்ஸ்’ ஒரு மெயில் டிரைவர். சென்னையில் பணிபுரிகிறார். மனைவியின் பெயர் ’ஒய்’. இந்து சாஸ்திரீய முறைப்படி நடைபெற்ற திருமணம். ஆதாரமாக மனைவி திருமதி ‘ஒய்’ என்று திரு. ‘எக்ஸ்’ அலுவலகத்தில் கொடுத்த தகவல்கள் இருக்கிறது. திருமணம் ரிஜிஸ்தர் செய்யப்படவில்லை. இவர்களுக்கு குழந்தையில்லை.

பணி நிமித்தம் ஒரு ரயிலை ஓட்டிச் சென்று பாலக்காடில் ரிலீவ் ஆகி ஓய்வுக்குப் பின் சென்னை திரும்புவது வழக்கம். யாராவது ‘ஒய்’ என்ற பெயரில் கிடைப்பார்களா? அவரும் தன்னை விரும்புவாரா என்று விளம்பரம் கொடுத்தா தேடிப்பிடிக்க முடியும். விதி என்று சொல்லலாமா? அப்படி ஒருவர் கிடைத்தார். பரம ஏழை. சிறுவயது. பெயரும் ‘ஒய்’. அய்யா பணி முடிந்ததும் அவர்கள் வீட்டில் தங்குவார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து ரிஜிஸ்தரும் செய்துவிட்டார். திருமணத்துக்குப் பின் இரண்டு குழந்தைகள்.

ஒரு நாள் கடமை முடிந்து பாலக்காட்டில் இருக்கையில் மாரடைப்பில் இறந்துவிட்டார். அந்த மனைவி உடலைப் பெற்று அலுவலகம் தந்த இறுதிக் கிரியைக்கான அட்வான்சும் பெற்று தகனம் செய்துவிட்டார். சென்னையில் இருக்கும் மனைவி, பணிக்குப் போன கணவன் ஒரு வாரமாகியும் திரும்பாததால் அலுவலகத்தில் விசாரிக்க, அவர் மரணித்ததும் அவர் மனைவி உடலைப் பெற்று ஈமக் கிரியை செய்ததும் தெரியவந்தது.

பதறிப்போய் தான்தான் மனைவியென்றும், இன்னொரு பெண்மணி எப்படி மனைவியாக இருக்க முடியுமென்றும் மனுச்செய்ய விசாரணையில்தான் இருவரும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அலுவலகம் என்ன செய்யும்? சட்டத்தைக் காட்டி சக்ஸஷன் சர்ட்டிஃபிகேட் கோர்ட் மூலம் பெற்று வரப் பணித்தனர். முதல் மனைவி வசதியானவர். ஆனால் திருமணம் பதியப்படவில்லை. சாட்சியாக பத்திரிகை கூட இல்லை. இரண்டாம் மனைவி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் சட்டப்படியான விவாகப் பதிவு இருக்கிறது. சிறு குழந்தைகள். நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல் மனைவியின் திருமணத் தேதியை உறுதி செய்திருக்கக் கூடும். அதன் மூலம் இரண்டாவது திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடும்.

தெய்வம் போன்று செயல்பட்டார் நீதிபதி. அதைவிட முதல் மனைவியின் புரிதல் அபாரமானது. பரஸ்பர புரிதலில், பி.எஃப், கிராச்சுவிட்டித் தொகை முதல் மனைவிக்கும், கருணை அடிபடையிலான வேலையும் பென்ஷனும் இரண்டாம் மனைவிக்கும் என்ற ஒப்புதலின் பேரில் முதல்மனைவி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். குழந்தைகளுக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கும் நீதி கிடைத்தது.

நாத்து 9
: கோர்ட்டையே ஏமாற்றும் அளவுக்கு படிப்பறிவற்ற பெண்ணால் முடிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியம். ஓர் அதிகாரி அவர். மனைவியும் குழந்தைகளும் உண்டு. வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியுடன் தொடர்பிருந்ததைக் கண்டித்துப் பார்த்தும் கேட்காததால், குழந்தைகளின் நலன் கருதி மனைவி தனியாகப் போய்விட்டார். 

அதே வீட்டில் வேலைக்காரியுடன் அதிகாரி வாழ்ந்து ரிட்டயரும் ஆகிவிட்டார். பணிக்காலத்திலேயே மனப்பிறழ்வுக்காக மருத்துவ உதவி பெற்றிருப்பது தெரியும். கடைசிக் காலத்தில் கடனுக்கு பயந்து ஒரு நண்பரின் ரேடியோ ரிப்பேர் கடையில் தங்கியிருந்ததும், அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வாழ்ந்ததும், இந்தம்மணி பென்ஷனை ஆட்டையைப் போட்டுக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவரின் மறைவுக்குப் பிறகு செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷனுக்கான விண்ணப்பத்தில் மனைவி என்று வேலைக்காரம்மாள் விண்ணப்பிக்கிறார். பணியில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தகவலைக் கொடுத்திருந்தார் அவர். அதில் இவரின் பெயரைக் குறித்து வேலைக்காரி என்றே குறிப்பிட்டிருந்தார். 

தகவலைக் குறிப்பிட்டு, மனைவி இன்னார், தங்கள் பெயர் வேலைக்காரியாக பதிவாகி இருக்கிறது திருமணத்துக்கு அத்தாட்சி ஏதும் இருக்கிறதா எனக்கேட்டு எழுதியவுடன் எப்படியோ முதல் மனைவிக்கு டைவர்ஸ் ஆன தீர்ப்பு நகல், அவர்களின் குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது என்பதுடன் தான் குருவாயூர்க் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அலுவலகத்துக்கு அது குறித்த தகவல்கள் இல்லை. பிள்ளைகளுக்கு பென்ஷன் பெறும் தகுதியிருப்பதால் இவருக்குப் பென்ஷன் வழங்க முடியாது என்ற பதிலுக்குப் பின்னான அவரின் நடவடிக்கை பேரதிர்ச்சியானது. கோவிலில் திருமணம் நடந்த தகவல்களைக் கொடுத்து எந்த கோர்ட் டைவர்ஸ் கொடுத்ததோ அதே கோர்ட்டில் சட்ட பூர்வ மனைவியாக பாவித்து பென்ஷன் தரப்பட வேண்டும் என்ற ஆர்டரையும் பெற்று அனுப்பினார். 

அப்பீலில் டைவர்ஸ் குறித்தான தகவலைச் சொல்லாமல் விட்டிருந்தது தெரியவந்தது. அதைவிட திருமணம் நடந்த தேதி டைவர்சுக்கு முற்பட்டதானதால் சட்டப்படி செல்லாது. கொடுமை என்னவென்றால் இரண்டு தீர்ப்புக்கும் இடையில் மிகக் குறைந்த கால இடைவெளி. இரண்டுக்கும் ஒரே நீதிபதி.

முரண்களைச் சுட்டிக்காட்டி, கோர்ட்டுக்கும் அம்மணிக்கும் கடிதம் எழுதப்பட்டது. அப்புறம் தகவலேதுமில்லை.  

இவை அனைத்தும் பல்வேறு கால கட்டங்களில்  பல்வேறு கலாச்சாரச் சூழல்களில் நடந்த திருமணங்கள். ஆனாலும் பொதுவான ஒன்று திருமணம் அது பதிவுடனோ இல்லாமலோ  ஒரு பாதுகாப்பு இல்லை . எல்லா அலுவலக நாட்களிலும் திருமணப் பதிவு அலுவலகத்தில்  காசுக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுவதையே பிழைப்பாய் நம்பியிருக்கிறது ஒரு கும்பல். பெண்ணுக்கு சித்தப்பன், பெரியப்பன், மாமன் என்று மாற்றி மாற்றிக் கையெழுத்துப் போடுபவன்  வேறொரு பையனுக்கும் அதே போல் சாட்சி போட்டால் போதும் என்ற அமைப்பு இருக்கிறது.

அது  பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணமோ, காதல் திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ எதுவாயினும் சம்பந்தப் பட்ட இருவரை வைத்தே அவர்களின் நல் வாழ்வு அமைகிறது. திருமணம் பெரிய பாதுகாப்பு ஒன்றும் கொடுத்துவிடவில்லை. ஏமாற்றுபவன் சட்டத்தையும் ஏமாற்ற முடிகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பெரும்பான்மையானோருக்கு இதில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடிகிறது. பலருக்கு இயலாமையால் சகித்துக் கொண்டு காலம் தள்ள அமைகிறது. மிகச் சிலருக்கு திருமண முறிவு தேட அவசியமிருக்கிறது. அதற்குப் பின்னான புரிதலோ மற்றொரு திருமணமோ வெகு சிலருக்கே அமைகிறது.

இருபது வருடங்களுக்கு முன் குசு குசுவென்று இன்னாரின் மகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள் என்று ஏளனமாகப் பேசப்பட்டது இன்று எந்தத் திருமணமானாலும் பதியப் படவேண்டும் என்றதும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எப்படி வந்தது? சட்டத்திற்கு முன் என்ன கேவலமிருந்தது சட்டமயமானதும் தொலைந்து போக? 

மூன்று தலைமுறைக்கு முன்னால் உறவுகள் முன்னிலையில் தாம்பூலம் மாற்றி உரக்கச் சொன்னால் நிச்சயமான ஒரு திருமணம், இன்று காகிதத்தில் எழுதி பெற்றோர் மற்றும் சாட்சிகளின் கையெழுத்தோடுதானே உறுதியாகிறது? இதில் நமக்கு உறுத்தல் இருக்கிறதா?

ஆக ஒரு சட்டம் வந்து எந்த ஒன்றையும் அங்கீகரிக்கும் வரை நமக்கு ஏற்பு இல்லை. ஏற்பு என்று கூட சொல்ல முடியாது. சட்டத்தின் பாதுகாப்பிருக்கிறது. அவர்களைச் சீண்டினால் சட்டம் நம் மீது பாயும் என்ற பயத்துக்கு மட்டுமே அடங்கியிருப்போம்.  

~~~~~~~

Thursday, November 18, 2010

அப்ப இது என்னங்க?...

நாத்து 4: நாமக்கல் பக்கதுல பாலப்பட்டின்னு ஒரு சின்ன கிராமம். முன்சீப்புக்கு பெரிய பொண்ணு பிச்சம்மா. ஏழு வயசுல கலியாணமாச்சி. புருஷனுக்கு 13 வயசாம். அஞ்சு நாள் கலியாணம். கலியாணம் முடிஞ்சி ஊருக்கு போன புருஷன் ஒரு மாசத்துல தர்பப்புல்லு அறுக்கப் போய் பாம்பு கடிச்சி போய் சேர்ந்துட்டான். சாவுக்கு போனவள துக்கிரி முண்ட காலு வச்ச நேரம் (அவுங்க ஊட்டுக்கே போவல பொண்ணு) எம் புள்ளைய சாவடிச்சிட்டான்னு மாமியாக்காரி சாத்து சாத்துன்னு சாத்துச்சாம். மாமி அடிச்சிட்டான்னு கதற தெரிஞ்ச பிச்சம்மாக்கு புருஷன் போய்ட்டான். படிப்புதான் போச்சு. இனி அம்மா வீட்டுல ஒரு மூலையில ஒண்டணுமேன்னு எல்லாம் அழத் தெரியாத வயசு.

பிச்சம்மாளுக்கு மொட்டையடிக்கணுமுன்னு ஒத்தக்கால்ல நின்ன மாமியா வீட்டுக்காரங்களையும், அப்பனையும் பிச்சம்மாவோட தம்பியும் ஆத்தாக்காரியும் செத்துடுவோம்னு போராடி மொட்டையடிக்க விடாம செஞ்சுட்டாங்க. அம்மா வீட்டுல ஒரு இருட்டு ரூம்தான் உலகம் அவளுக்குன்னு ஆகிப்போச்சு. அதான் கஷ்டமிருக்கிறவங்களுக்கு பட்டு கழி நாயேன்னு ஆயுசு குடுப்பானே. அது இருந்துச்சு 79 வயசு வரைக்கும். அண்ணந்தம்பியே காப்பாத்தாத காலத்துல தம்பிங்க ரெண்டு பேரையும் பறி கொடுத்தப்புறம் என்னதான் தம்பி பசங்கள வளர்த்தாலும், தம்பி பொண்டாட்டி வச்சி காப்பாத்துமா என்ன. அதுவே பாவம் ஒரு ஊட்ல சமையல் செஞ்சி பொழைக்குது. புள்ளைல ஒருத்தன் படிப்பு வரலைன்னு ஹோட்டல்ல சர்வர். நீ போ தாயின்னு விட்டுட்டாங்க.

அதும் எங்கயோ கடைசி வரைக்கும் ஒரு ஊட்ல சமயல், எடுபிடின்னு சாப்பாட்டுக்கும் புடவைக்கும்னு உழைச்சி செத்துப்போச்சி. ஏன் பிச்சம்மா? உங்க வீட்டுக்காரர் பேரு கவனமிருக்கா எப்புடி இருப்பாருன்னு கேட்டேன். பேரெல்லாம் தெரியாது. ராஜான்னு கூப்புடுவாங்கன்னு கவனம். அஞ்சு நாள் கலியாணத்துல ஒரு நாள் பல்லாங்குழி ஆடுறப்ப ‘சோ’ தட்டிட்டாள்னு சண்டைல அடிச்சிட்டான்னு அவங்கூட ரெண்டு நாள் பேசலைன்னு சொல்லி சிரிச்சது.

நாத்து 5: பதிமூணு வயசு அலமேலுவுக்கு கலியாணம் ஆகும்போது அவ புருசனுக்கு வயசு 38க்கு மேல். மவளுக்கு 15 வயசு. கலியாணம் ஆகிப் போச்சு. அடுத்த மவளுக்கு 11, புள்ளைங்களுக்கு 5, 3. அவங்களுக்கு பொறந்தது பன்னெண்டு. அப்பல்லாம் ரிஜிஸ்டர் பண்றதில்லை. 70ம் வருஷம் புருஷன் போய்ட்டாரு. பாவி மனுசன் ஆஃபீஸில ரெண்டாம் கலியாணம் பண்ணத பதியல. புள்ளைங்க பென்ஷன் வராதுன்னு சொல்லிட்டு இருந்துட்டாங்க. தனி மனுஷியா போராடி போராடி எங்கயோ கிடந்த ஒன்னு ரெண்டு ஆவணங்கள கொடுத்து கோர்ட் அத்தாட்சி வாங்கி 15 வருஷத்துக்கு அப்புறம் குடும்ப பென்ஷன் வாங்கிச்சி. அந்த பதினஞ்சி வருஷ நரக வாழ்க்கை? அது பண்ண புண்ணியம் கிழவர் போனப்ப இது கிழவி ஆயிடுச்சி. சின்ன வயசுல போயிருந்தா?

நாத்து 6:ஒரு அம்மணிக்கு ரயில்வேல வேலை செஞ்ச வீட்டுக்காரர் இறந்துட்டாரு. பிள்ளைக்கு வேலை வேணும்னு இந்தம்மா தனக்கு கேக்கலை.  ரெண்டாவது கலியாணம் பண்ணலாம்னு பொண்ணு வீட்ல முடிவெடுத்தாங்க. கொஞ்ச மாசத்துல ஒரு டாக்டர் வந்து கலியாணம் பண்ணிக்கறேன்னு வந்தாரு. ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோட கலியாணம் நடந்துச்சு. கலியாணம் பண்ணதால பென்ஷன் போச்சு. பசங்க பொண்ணோட அம்மா வீட்டில விட்டு குடித்தனம் ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச மாசத்துலயே ஒரு விபத்துல போய் சேரவும் ஆரம்பமாச்சி பிரச்சன. குழந்தைங்க வரக்கூடாதுங்கறான் புருஷன். அதுங்களுக்கு பணமும் தரமாட்டேன்னு சொல்லிட்டான். படிக்கிற பசங்க. அந்தம்மணி வந்து பசங்களுக்காவது பென்ஷன் குடுங்கன்னு கேட்டுச்சு. சட்டப்படி நேச்சுரல் கார்டியன் நீங்க உயிரோட இருக்கீங்க. அதனால கிடையாதுன்னு சொல்லிடுச்சி சட்டம். டைவர்ஸ் பண்ண முடியாது பெர்சனல் ரீஸன்னு அழுவுது. போலீசுல கம்ப்ளெயிண்ட் குடுங்க. அவங்க சட்டப்படி கோர்ட் ஆர்டர் வாங்கி கொடுப்பாங்கன்னா அதுக்கு டைவர்ஸ் பண்ணமாட்டனான்னு அழுது. டைவர்ஸ் பண்னாலும் ஒன்னும் கிடைச்சிருக்காது.

நாத்து 7: அந்தம்மணி புருஷன் ஒரு தத்தாரி. கலியாணம் ஆன புதுசுலயே சீட்டாடி, கல்லால கை வச்சி நகை நட்ட வச்சி கேசுல மாட்டாம காப்பாத்தினாங்க. வேலைக்கு போகாம பொண்டாட்டி சம்பளத்துல சாப்பாடு. அடிச்சி, உதைச்சி, காச புடுங்கி இல்லைன்னா திருடி சீட்டாட்டம். ஒரு பையன் ஒரு பொண்ணு. மாசம் இவ்வளவு தரேன். அதுக்குமேல சாவடிக்காதன்னு, அந்தம்மா குழந்தைங்களோட சென்னைக்கு வந்துடுச்சி. அந்தாளு ஊர்ல. சொந்த வீட்டுல இருந்தாரு. அந்தம்மா ஹார்ட் அட்டாக் வந்து மண்டைய போட்டப்ப பையனுக்கு 27 வயசு. படிப்பு முடிச்சும் வேலை கிடைக்கல. பொண்ணுக்கு கலியாணம் ஆயிடுச்சி.

அய்யா வந்தாரு. கொள்ளி போட்டாரு. நகையை அடமானம் வச்சு காரியம் பண்ணாரு. மனுஷன் கில்லாடி. அப்பன் தறுதலை. எங்கம்மாதான் வளர்த்துச்சி. பணம் குடுக்காதீங்கன்னா ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. சட்டப்படி நாந்தான் புருஷன். எங்களுக்கு அப்ஜக்‌ஷன் இல்லைன்னு கையெழுத்து போட்டுக் குடுங்கன்னு பொண்ணு பையங்கிட்ட டீல் போட்டாரு. இன்சூரன்சு, நகை நட்டு எல்லாம் பொண்னுக்கு. பி.எஃப்.,க்ராச்சுவிடி பணம் பையன் பேருல போட்டு மாச வட்டி. அதுக்கு மேல மாசாமாசம் கொஞ்ச பணம் பென்ஷன்ல இருந்து குடுக்கறதா பேச்சு.

எல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சி, செட்டில்மெண்டும் வாங்கிட்டாரு. அப்பவும் ஒரு நப்பாசை. பையனுக்கு கருணை அடிப்படையில வேலை கிடைக்க சான்ஸ் இருக்கான்னு. ஏன்னா வேலை கிடைச்சா க்ராச்சுவிட்டியும் ஆட்டைய போட்டுக்கலாம்னு டீலு. ப்ச். சட்டத்துல வழியில்லை. பே கமிஷன் அரியர்ஸ் வந்தப்ப அந்தப் பணத்துக்கும் பங்கு கேக்குறாங்க சார். என்னா அனியாயம்னு தெனாவட்டா அந்தாளே சொன்ன தகவல் இது.  

(இதுவும் உண்மைச் சம்பவங்கள்தானுங்க. அந்த மூணும் நாத்தில்ல களைன்னு சொல்லிட்டீங்க. இதாச்சும் தேறுமா பாருங்க)

Tuesday, November 16, 2010

சரியா தவறா?

நாத்து 1: எங்கள் அலுவலகத்தின் மூத்த அதிகாரி அவர். பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகிறார் மனைவி. ஆண்குழந்தை. முதல் குழந்தை. குறிப்பிட்ட காலம் சென்றும் தன் வீட்டிற்கு வரும் பிரயத்தனமே தெரியாததால் கேட்கிறார். பெரிய அதிர்ச்சி. மனைவியை இழந்த வயதான தகப்பனையும், பால்ய விவாகத்தில் கணவனை இழந்து தம்பியோடு இருந்த அத்தையையும் உதறிவிட்டு தனிக்குடித்தனம் வந்தாலேயொழிய சேர்ந்து வாழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் மனைவி.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் சேர்ந்து வாழ அழைப்பதும், மறுத்தாலும் செலவுக்கும், பிள்ளையின் படிப்புக்கான அனைத்து செலவையும் செய்து வருகிறார். ஒன்றல்ல இரண்டல்ல, 17 வருடங்களுக்குப் பின் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தன்னை நிராதரவாக விட்டதாகவும், தனக்கும் தன் குழந்தையின் பராமரிப்புக்கும் ஏதும் செய்யவில்லை என்றும் காரணம் காட்டி விவாகரத்து வழக்கு தொடுக்கிறார் மனைவி. 

கொடுமையிலும் கொடுமையாக ஃபீசுக்கும், துணிக்கும், இதர தேவைக்கும் வந்து பணம் வாங்கிச் செல்லும் கல்லூரி வயது மகனே குடும்ப நல கோர்ட்டில் தன் தந்தை தன் படிப்புக்கு ஏதும் உதவவில்லை என சாட்சி சொன்ன பிறகு சட்டம் விவாகரத்தும் மாதாந்திர ஜீவனாம்சம், மகனுக்கான கல்விச் செலவு என்று பல நிவாரணங்களும் அளிக்கிறது.

அந்த காலகட்டத்தில்,பாரிசவாயுவினால் படுத்த படுக்கையாகிவிட்ட தகப்பனுக்கும், பர்கின்ஸன்ஸ் அத்தைக்கும் குளிப்பாட்டி,மலம் மூத்திரம் சுத்தி செய்து, சமைத்து, அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, நிரம்பவும் பொறுப்பான அலுவலக வேலையும் செய்ய வேண்டிய சூழல். 

பச்சையேறிய பித்தளை செயினும், இத்துப் போன கவரிங் தோடுகளுமாய் பரிதாபமாக வருவார் அம்மணி, சம்பளப் பிடித்தம் செய்தாகிவிட்டதா, செக் நம்பர் கொடுங்கள் என்று. ஒரு முறை அலுவலக மாடிப்படி அருகில் நகைகளைக் கழற்றி பர்சுக்குள் வைத்துக் கொண்டு, ஈயம் பித்தாளை நகைகளை அணிந்து கொண்டு சற்று நேரத்தில் செக் நம்பர் கேட்டு வந்ததும் திகைத்துப் போனேன்.

என்ன சொல்லி என்ன, மனைவிக்கும் குழந்தைக்கும் கொடுக்கும் காசுக்கு சாட்சியா வைக்கமுடியும். சுப்ரீம் கோர்ட் வரை போயும் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

நாத்து 2: சைவ வேளாளர் பையன் சைவ நாயுடு பெண்ணைக் காதலிக்கலாமோ? பெற்றோருக்கு பிடிக்கவில்லை. நல்ல வேலையில் இருந்த மகன். இரண்டு தம்பிகளின் எதிர்காலம் என்னாவது. மூத்த அண்ணன் ஓடுகாலி என்று தெரிந்தால் அவர்களுக்கு யார் பெண் கொடுப்பார்கள். பையன் வேலைக்குப் போகாமல் வீட்டில் அடைந்தான். ஜாதகம் காட்டியதில் கலியாணம் செய்த பின் சரியாகிவிடுவான் என்று ஜாதகம் சொல்லிவிட்டது. 

அப்புறமென்ன? சொந்த ஜாதியில், திருமணம் செய்து கொடுக்க வசதியற்ற பெண்ணைப் பெற்றவன் இல்லாமலா போய்விடுவான்? திருமணமானது. மன அழுத்தத்திலிருந்த அய்யாவும் வாழ்க்கையைத் தொடங்கினார். மனைவி ஓரிரு மாதத்திலேயே கருவுமுற்றார். திரும்பவும் அய்யாவுக்கு மன அழுத்தம் அதிகமாகி, முரட்டுத் தனமாக அடிப்பது, தன்னைக் காயப் படுத்திக் கொள்வது என்ற அளவுக்கு முத்திப் போக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கிட்டத் தட்ட பத்து வருட சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்ததாக ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறார். அடுத்த குழந்தைக்கும் அச்சாரம் போட்டாகிவிட்ட நிலையில் திரும்பவும் இன்னும் தீவிரமான மன அழுத்தம். மீண்டும் மனநல மருத்துவமனை. இந்த முறை சிகிச்சை எந்தப் பலனும் அளிக்காது என்ற நிலையில் நிரந்தர மருத்துவமனை வாசம்.

இடையில், மாமியார், மாமனார் இறந்துவிட மற்ற மகன்கள் வீட்டை விற்று பங்கு போட்டுக் கொள்கிறார்கள். படிப்பறிவற்ற அண்ணன் மனைவி குழந்தைகளுடன் தெருவில் நின்றால் யாருக்கென்ன போச்சு? கோர்ட் கேஸ் என்று அலைய எந்த நாதியிருக்கிறது? சரி மனநலம் குன்றிய மகனுக்கு பென்ஷனாவது கிடைக்குமா என்று வருகிறார் ஒரு நல்லிதயக்காரர்.

சட்டம் சொல்வது என்ன: தந்தை பணியில் இருக்கும்போதே மகனுக்கு சித்த சுவாதீனமில்லாமல் போயிருக்க வேண்டும். திருமணமாகி இருக்கக் கூடாது. வாஸ்தவம்தானே. அரசு என்ன மக்கள் பணத்தில் தான தருமமா செய்ய முடியும்? வெயிட்டீஸ்

நாத்து 3: திருமணமாகி, விதவையான, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாத வருமானமற்ற மகள் தாய்வீட்டுக்கு வருவாளேயானால், எத்தனை வயதானாலும், விதவையானது எப்போதானாலும், பெற்றோரின் மறைவுக்குப் பிறகு வேறு யாருக்கும் உரிமையில்லாத பட்சத்தில் அந்த மகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று சட்டம் வருகிறது. இதற்கு விளக்கம் வேறு, தாய்வீட்டிற்கு வரவேண்டும். மாமியார் வீட்டோடு இருந்தால் கிடையாது. 

ஹி ஹி. அப்பனும் போய், ஆத்தாளும் போய், வாடகை வீட்டில் இருந்தவங்களுக்கு தாய்வீடு எதுப்பா என்று யாரைப் போய் கேட்பது. மகனோ மகளோ கோடீஸ்வரியாக இருக்கலாம், இவருக்கே பங்களாக்கள் சொந்தமாக இருக்கலாம், ஆனால் தாய்வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு மாத வருமானம் இல்லை அல்லது இவ்வளவுதான் என்று அஃபிடவிட் கொடுத்துவிட்டால் போதும். ஆயுள் முழுதும் பென்ஷன் உண்டு.

சரி அது என்ன நாத்து அப்படிங்கறீங்களா? முதல்ல இந்த மூணுக்கும் உங்க தீர்ப்பைச் சொல்லுங்க. இது சரியா தவறா? என்ன செய்திருக்கலாம் அல்லது செய்திருக்க முடியும்? 



(டிஸ்கி: மேலே குறிப்பிட்ட மூன்றும் கற்பனையல்ல. நிஜமான கேஸ்களும், சட்டமும்)

Friday, November 5, 2010

தேவன் கோவில் மணியோசை..

இன்று தீபாவளி! நரகாசுரனை அழித்து மக்கள் வாழ்வில் நல்லொளி பரப்பிய நாள். அசுரன் அழிந்தானோ இல்லையோ நரகம் மட்டும் சிலருக்கு வாழ்க்கையாய் அமைந்துவிடுகிறது. எத்தனை விதமான நரகங்கள்? வேண்டாச் சிசுவாய், உழைக்க வழியின்றி ஊனமாய்,சுமையாய் முதியோர் இல்லத்திலென்று எத்தனை எத்தனை. இவர்களையெல்லாம் எதோ ஒரு விதத்தில் காப்பாற்றி வாழவைக்க மனிதர்களும் அமைப்புக்களும் இருக்கின்றன. வாழ்க்கைப் புயலில் எதிர்நீச்சலிட்டுக் களைத்து கை சோர்ந்து நினைவு தொலைத்த ஜீவன்கள் தெருவோரம் மயங்கியிருக்கிறார்களா, மரித்திருக்கிறார்களா என்றே தெரியாமல் ஈமூடி, நாய் குதறி, மேலாடையின்றி கிடக்க மூக்கைப் பொத்தியபடி நாம் கடந்து போன ஜீவன்கள் ஒன்றாவது இருக்கும் நம் வாழ்வில்.

நம்மில் அந்த நரகாசுரன் இல்லாமலா போய்விட்டான்? குப்பை அள்ள வரும் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கூட இது குறித்து ஏதேனும் செய்ய வழியிருக்கிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைப் பிரிவிருக்கிறதே. இத்தகையோரைப் பற்றி தகவல் பெறவோ மீட்கவோ வழியிருக்கிறதா? இவர்களுக்குச் செய்யக்கூடியது பெரியதாக ஒன்றுமில்லை. அதிகபட்சம் போராடி ஒரு வாரமோ இருவாரமோ மனிதனாய் வாழ்ந்து, மனிதனாய் மரித்து, மனிதனாய் அடக்கம் பெற ஒரு வாய்ப்பு.

அழுக்கும் கழிவும் பூசி, அருகில் செல்லவே முடியாத நிலையில் இருக்கும் இவர்களை மருத்துவமனையில் அல்ல எந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்வார்கள். இத்தகையோரைத் தேடித் தேடி அலைந்து, தெருவோரம் சுத்தம் செய்து, ஆடையுடுத்தி, ஆதரவான இல்லங்களில் சேர்த்தோ, மருத்துவ உதவியோ செய்ய எத்தனை தெரசாக்கள் வேண்டும்.? ஒரு அமைப்பால் கூட இதைச் செய்வது எத்தனை பெரிய காரியம்.

தீபாவளிதான். கொண்டாட்டம்தான். இனிப்பும், பட்டாசும், ஒளியும், சத்தமும் என்று மகிழ்ச்சிதான். ஆனாலும் தீபாவளியின் முக்கியமான அம்சம் இதெல்லாம் செரிக்க காரமாய், கசப்பாய் சற்றே இனிக்கவும் செய்யும் தீபாவளி மருந்து. இந்த இடுகையும் அத்தகையதே.

இதோ முதல் படத்தில் இருக்கிறாரே சுப்பிரமணி. ஒரு குப்பைத்தொட்டியோரம் கண்டுபிடிக்கப்பட்டவர். டிமெண்ஷியாவில் துன்புற்றவர். இடுப்பில் துணியில்லை என்ற நினைப்புக் கூட இல்லை. எந்த உணர்வு மறந்தாலும் அன்னை இட்ட தீ பசி இருக்கிறதே. அது மட்டுமே அறிந்தவர். அந்தக் குப்பை தொட்டி அருகே மரித்துப் போயிருக்கக் கூடும். குப்பையையாவது அள்ளி அதற்குரிய இடத்தில் சேர்க்க இருக்கும் அமைப்பு கூட இவரைத் தொடுமா?


வாழ்நாள் முழுதும் நோயுற்றவருக்கு தாதியாய் நோய் குறைக்கும் பணி நர்ஸ் அல்லவா. நம் உலகின் தேவதைகள் அல்லவா? அவர்களுக்குமா சாபம் இருக்கும். உழைக்கும் காலம் முழுதும் தாதியாய் பணிசெய்த ஒருத்தி, பணி மூப்பு பெற்று பென்ஷன் கூட பெறும் நிலையில் உள்ள ஒருத்தி, கருப்பை சரிந்து காளான் பூத்து தன் நினைவின்றிக் கிடக்கும் சாபம் கொடுத்த தெய்வமோ இயற்கையோ நிந்திக்கத் தோன்றுகிறதா? இருங்கள் இருங்கள். இந்த லீலாவதியை மாதந்தோறும் ஆட்டோவில் ஏற்றி பென்ஷன் வாங்க வைத்து பிடுங்கிக் கொண்டு திரும்ப சைதாப்பேட்டை சுரங்கப் பாதையருகே போட்டுப் போகும் ஐந்து நல்லாத்மாக்களும் நம்மிடையே இருக்கிறார்கள். 

இதோ முனியம்மா. அந்தக் கண்ணை ஒரு நிமிடம் பார்க்க முடியுமா நம்மால். எத்தனை அவலம். எத்தனை வலி. பிரிந்த கைகளில் எத்தனை இயலாமை. வயது எழுபது. ஆனாலும் பெண். இந்த வயதிலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நரகம் தருகிறது நாம் தொண்டை கிழியப் பேசும் சமூகமும் கலாச்சாரமும்.


கடைசியாக தனம். எறியும் உணவில் எங்களுடன் உனக்கென்ன போட்டியென நாய்கள் போட்ட சண்டையில் தோற்று தன் சதையை உணவாக்கியவள். உடலில் மட்டுமே ஆடையில்லை. உடலில் மட்டுமே அழுக்கு. மனம் பளிங்கு போன்றது. இல்லையேல் தன்னையும் கரைசேர்க்க வந்த ஜீவனிடம் நான் பிழைக்கமாட்டேன் தம்பி. நீ வாழ வேண்டியவன். என்னைத் தொடாதே என்று சொல்லும் மனம் எப்படி வாய்க்கும்?

படிக்கவே அயற்சி தருகிறதே. ஒரு குற்ற உணர்ச்சிகூட வரலாம். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். நம்மிலும் ஒரு தேவன் மனிதனாகப் பிறந்திருக்கிறான். தனி மனிதனாக இத்தகையோரை மனிதராய்ப் பார்த்து, மனிதனாய் உதவி, மனிதம் காக்கும் இல்லங்களில் சேர்த்து, மனிதனாய் மரித்தோருக்குக்கான மரியாதை செய்யும் இவரை அடையாளம் காட்ட எனக்கு வாய்த்ததே என் வரம். ஓரிருவரை இப்படிக் கரை சேர்த்தாலே பெரிய விஷயம். ஒற்றை மனிதனாய் ஒன்றிரண்டல்ல ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களை தேடித் தேடி காப்பாற்றிய இவர் பெயர் வெங்கடேஷ்.

ஏழ்மையான குடும்பம் எத்தனை எதிர்ப்பார்ப்பு வைத்திருக்கும் மகன்மேல்? சிறுவயது முதலே சேவை செய்யவே நான் பிறந்தேன் என அலையும் மகனை ஊக்குவிக்கும் நிலையிலா இருக்கும்? படித்தது பத்தாவது. அந்த வயது இளைஞனுக்கு சமுதாயத்தில் பிழைக்கவோ பொறுக்கவோ எத்தனை வழிகள்? தன் பாதை இதுவென்று தீர்மானிக்கும் வயதா அது? கட்டிட வேலை, கம்பவுண்டர் வேலை, கூரியர் டெலிவரி, சமூகச் சேவை அமைப்புகளிலே கூட சம்பளத்துக்காக வேலை என்று அத்தனையும் பார்த்து பின்பு உதறி உதவ மட்டுமே பிறந்தவன் நான் என்ற நோக்கோடு வாழும் இவர் இருப்பது திருவான்மியூர்.

தப்பித் தவறி நம்மில் இருக்கும் மனிதம் விழித்து இத்தகையோரைக் காக்க இருக்கும் அவசர உதவிக்கு அழைத்தாலுமே கூட வெங்கடேஷின் கைபேசி எண் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொல்லும் அளவு திறமையாகச் செயல்படுபவர். ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், நினைவிழந்தவர்களை அங்கேயே சுத்தம் செய்து அவரவர்களுக்கான இடம் தேடிச் சேர்ப்பதே வாழ்க்கை எனச் சலிப்பில்லாமல் வாழ்வதே பெரிய விஷயம்.  ‘அதை அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், அந்த ‘ருசி’ எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்’  என வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறார்.

‘அநாதைன்னு யாருமே இல்லைங்க! ஆதரவில்லாதவங்கன்னு சொல்லுங்க’ என்று சிரித்தபடி கடிந்து கொள்ளும் இவர் செய்யாத சமூக சேவையென்று ஒன்று இருக்கிறதா தெரியவில்லை. பாலியல் தொழிலாளரிடையே விழிப்புணர்வு, தற்காப்பு முறை விளக்கம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ விரும்புபவர்களுக்கு வழிகாட்டி என சதாவதாரம் எடுக்கிறார்.

காவல்துறை, சமூக ஆர்வலர்களிடையே இவருக்கான பெருமதிப்பும் அங்கீகாரமும் போதுமா? ‘அகல்’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி தானே இவர்களுக்கான இல்லத்தை நடத்தவேண்டும் என்ற கனவு சுமந்த தேவன் இவன்.  ‘அது தானே நடக்கும் சார்’ என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ‘செத்தப்புறமும் கூட நம்மால மனுசனுக்கு எதுனாச்சும் உபயோகம் இருக்கணும் சார். எங்கயாவது ஒரு ஆஸ்பத்திரியில் மனித எலும்புக்கூடாகவாவது மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவுவேன்’ என்று சிரிக்கும் இவர் தன் கண்ணையும் உடலையும் தானம் கொடுத்திருக்கிறார். முடிந்த போதெல்லாம் ரத்ததானமும். 

தன் பையில் சட்டநிமித்தம் சுமக்கும் ஆவணங்களின் சோகம் தாங்கவொண்ணாதது. சமீபத்தில் மன நிலை குன்றியவர் போல் காணப்பட்ட ஒரு இளைஞன் என்னுடன் பணிபுரியும் நண்பர் தினமும் அளிக்கும் உணவை மட்டும் உண்டு வந்த ஒருவன், ஒரு நாள் அழுக்கடைந்த கையுடன் சாப்பிடுவதைப் பொறுக்காமல் கையாவது கழுவி விடுவோம் என்று இவருடன் முயன்றபோது வாய் திறந்து பேசினான். ரயில்வேயில் வேலைக்குப் பரிட்சை எழுத வந்த கல்கத்தா வாலிபன். நண்பர்கள் எல்லாம் விட்டுச் சென்றுவிட கலங்கிப் போய் இருந்திருக்கிறான் பிரமை பிடித்தாற்போல். ‘குளிக்கவேண்டும்’ என்ற அவன் பேச்சு அவனுக்கு வாழ்க்கை தந்தது.

வால்டாக்ஸ் ரோடிலிருக்கும் மாநகராட்சி குளியலறையில் குளிக்க வைத்து, அலுவலகத்தில் இதற்காகவே சேகரித்து வைத்திருக்கும் பழைய பேண்ட் சட்டைகளை அணியச் செய்து, உணவளித்து, வீட்டிலிருந்து சப்பாத்தியும், ட்ரெயின் டிக்கட்டும், வழிச் செலவுக்குக் காசும் கொடுத்து அவன் குடும்பத்தோடு சேர வழி செய்ய முடிந்தது நண்பர் சுரேந்திரனால். அதற்குப் பெரிதும் உதவியவர் வெங்கடேஷ். இல்லையெனில் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு குப்பைத் தொட்டி அருகில் ஆதரவின்றி காப்பாற்றப் பட்டிருக்கக் கூடுமோ?

நண்பர் வெங்கடேஷ் குறித்த மேலதிக தகவலுக்கு அவரின் முகவரியும் தொடர்பு எண்ணும் கீழே:

S.M.Venkatesh
No 74/55 South Mada Street, 
Thiruvanmiyur, Chennai 600 041.
email: agalvenkat@yahoo.co.in
Mobile 93801 85561
__/\__

Wednesday, April 7, 2010

பச்சை நிறமே! பச்சை நிறமே!

முதன் முதலாக பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்திருப்பதன் மூலம் சாதனை நிகழ்த்திய சென்னை மாநகராட்சி இன்னொரு வறவேற்கத்தக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இன்றைய தேதியில் சென்னை மற்றும் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் மிக அத்தியாவசியமான நடவடிக்கை இது. விரைவில் இதர நகராட்சிகளும் பின்பற்றவேண்டிய முன் உதாரணமாக இது அமைய வேண்டும். மாநகராட்சிக் கமிஷனர் நடத்திக்காட்டுவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

ஆம்! சென்னையில் இனிமேல் மரங்களை வெட்டுவது தடை செய்யப் பட்டிருக்கிறது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வெட்டவேண்டுமாயின், முன் அனுமதி பெறவேண்டும். அப்போதும் கூட 25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்த முழு செய்தி இங்கே:



வரவேற்கப் படவேண்டிய இத்திட்டத்தில் மக்களாக பங்கேற்க ஊக்குவிப்பதும், குறைந்தபட்சம் இந்த விஷயத்திலாவது ரெகம்மண்டேஷன், லஞ்சத்துக்கு வழி வகுக்காமலும் பார்த்துக் கொண்டாக வேண்டும். எத்தனை காசிருந்தாலும், நல்ல காற்றும் தண்ணீரும் வாங்கி மாளாது. ஆயின் மாநகராட்சி மட்டுமே இதில் பங்கு கொள்வது சாத்தியமில்லை. மக்களும், அதனுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் பங்குபற்றியாக வேண்டிய ஓர் நடவடிக்கையாகும் இது.

  • இனிமேல் வரைபடத்துக்கு ஒப்புதலுக்கு வரும்போது சுற்றுப்புறம் விட வேண்டிய அடிப்படை காலி மனைகளில் குறிப்பிட்ட அளவு வெறும் மண் இருக்குமாறு அமைந்திடல் வேண்டும்.
  • மழைநீர் சேகரிப்புக்கு வழி செய்திருப்பதுடன் இந்த மண்ணில் வீடுகளின் அமைப்புக்கேற்ப மரங்கள் நட்டிருக்க வேண்டும்.
  • பெரிய தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி வீடுகள் அமைக்கப் படும்போது அதிக அளவில் மரங்களுக்கு வழி செய்திருக்க வேண்டும்.
  • குடியிருப்பு சங்கங்களைப் பதியும் போது குறைந்த பட்ச மரங்கள் அதன் பராமரிப்பு குறித்த விதிகள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும்.
  • தனி வீடுகளில் மரவளர்ப்பும், பராமரிப்பும் கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.
  • மாநகராட்சியில் இது குறித்த ஆலோசனை மற்றும் உதவிக்கு ஒரு தனி அலுவலகம் செயல் படுதல் வேண்டும்.
  • இலவச டிவி கொடுப்பதை விட இப்படி மரம் வளர்ப்பவர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரியில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி கொடுப்பது கட்டாயம் பலனளிக்கும்.
  • இப்போது இருக்கும் கட்டிடங்கள், பொது அமைப்புகள், கலியாண மண்டபங்களில், கான்கிரீட்டால் மூடப்பட்ட பகுதிகளை ஓரங்களில் நீக்கி, மரக்கன்று நடுவதும், மழைநீர் சேகரிக்கவும், கார்ப்பரேஷனே மேற் கொள்ளவேண்டும். இதற்கான நோட்டீஸ் கொடுத்தபின் இதற்கான செலவை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தத் தவறினால் மேல் முறையீடின்றி ஜப்தி செய்ய ஏதுவாக சட்டம் கொண்டு வரப்பட்டேயாக வேண்டும்.
  • அழகுக்காக கல்பனை, கல்வாழை, கத்தாழை போல் நிலத்தடி நீர் உறிஞ்சும் மரங்களை தடை செய்ய வேண்டும். அல்லது அதற்குச் சரியான விகிதத்தில் தூங்குமூஞ்சி, வேம்பு, அசோக மரங்கள் நடப்பட வேண்டும்.
  • மாநகராட்சி வார்டுகளில் வார்டு வாரியாக சிறப்பாக செயல் படுத்தும் கவுன்சிலர்களுக்கு அரசின் பாராட்டும் அந்த வார்டுக்கு சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வார்டுகளுக்கு மாநகராட்சியின் சிறப்பு உதவி போன்றவை செயல்படுத்தப் படவேண்டும்.
  • இதற்கான நடவடிக்கையோ நாட்டமோ இல்லாத கவுன்சிலர்கள் கட்சி வேறுபாடின்றி பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
  • சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியில் குறைந்தபட்ச பிடித்தம் செய்யப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த தொகுதியில் மரவளர்ப்புக்கு இந்த நிதி செலவிடப்படுதல் வேண்டும்.
  • சாலையோரங்களில் மரம் வளர்த்துப் பாதுகாக்க முன்வரும் பெரிய நிறுவனங்களுக்கு நடைபாதை விளம்பரம் அழகாக அமைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

எந்த எதிர்ப்புக்கும் ஈடு கொடுத்து கமிஷனர் அவர்களும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. செய்தாக வேண்டும்.