Tuesday, November 16, 2010

சரியா தவறா?

நாத்து 1: எங்கள் அலுவலகத்தின் மூத்த அதிகாரி அவர். பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகிறார் மனைவி. ஆண்குழந்தை. முதல் குழந்தை. குறிப்பிட்ட காலம் சென்றும் தன் வீட்டிற்கு வரும் பிரயத்தனமே தெரியாததால் கேட்கிறார். பெரிய அதிர்ச்சி. மனைவியை இழந்த வயதான தகப்பனையும், பால்ய விவாகத்தில் கணவனை இழந்து தம்பியோடு இருந்த அத்தையையும் உதறிவிட்டு தனிக்குடித்தனம் வந்தாலேயொழிய சேர்ந்து வாழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் மனைவி.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் சேர்ந்து வாழ அழைப்பதும், மறுத்தாலும் செலவுக்கும், பிள்ளையின் படிப்புக்கான அனைத்து செலவையும் செய்து வருகிறார். ஒன்றல்ல இரண்டல்ல, 17 வருடங்களுக்குப் பின் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தன்னை நிராதரவாக விட்டதாகவும், தனக்கும் தன் குழந்தையின் பராமரிப்புக்கும் ஏதும் செய்யவில்லை என்றும் காரணம் காட்டி விவாகரத்து வழக்கு தொடுக்கிறார் மனைவி. 

கொடுமையிலும் கொடுமையாக ஃபீசுக்கும், துணிக்கும், இதர தேவைக்கும் வந்து பணம் வாங்கிச் செல்லும் கல்லூரி வயது மகனே குடும்ப நல கோர்ட்டில் தன் தந்தை தன் படிப்புக்கு ஏதும் உதவவில்லை என சாட்சி சொன்ன பிறகு சட்டம் விவாகரத்தும் மாதாந்திர ஜீவனாம்சம், மகனுக்கான கல்விச் செலவு என்று பல நிவாரணங்களும் அளிக்கிறது.

அந்த காலகட்டத்தில்,பாரிசவாயுவினால் படுத்த படுக்கையாகிவிட்ட தகப்பனுக்கும், பர்கின்ஸன்ஸ் அத்தைக்கும் குளிப்பாட்டி,மலம் மூத்திரம் சுத்தி செய்து, சமைத்து, அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, நிரம்பவும் பொறுப்பான அலுவலக வேலையும் செய்ய வேண்டிய சூழல். 

பச்சையேறிய பித்தளை செயினும், இத்துப் போன கவரிங் தோடுகளுமாய் பரிதாபமாக வருவார் அம்மணி, சம்பளப் பிடித்தம் செய்தாகிவிட்டதா, செக் நம்பர் கொடுங்கள் என்று. ஒரு முறை அலுவலக மாடிப்படி அருகில் நகைகளைக் கழற்றி பர்சுக்குள் வைத்துக் கொண்டு, ஈயம் பித்தாளை நகைகளை அணிந்து கொண்டு சற்று நேரத்தில் செக் நம்பர் கேட்டு வந்ததும் திகைத்துப் போனேன்.

என்ன சொல்லி என்ன, மனைவிக்கும் குழந்தைக்கும் கொடுக்கும் காசுக்கு சாட்சியா வைக்கமுடியும். சுப்ரீம் கோர்ட் வரை போயும் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

நாத்து 2: சைவ வேளாளர் பையன் சைவ நாயுடு பெண்ணைக் காதலிக்கலாமோ? பெற்றோருக்கு பிடிக்கவில்லை. நல்ல வேலையில் இருந்த மகன். இரண்டு தம்பிகளின் எதிர்காலம் என்னாவது. மூத்த அண்ணன் ஓடுகாலி என்று தெரிந்தால் அவர்களுக்கு யார் பெண் கொடுப்பார்கள். பையன் வேலைக்குப் போகாமல் வீட்டில் அடைந்தான். ஜாதகம் காட்டியதில் கலியாணம் செய்த பின் சரியாகிவிடுவான் என்று ஜாதகம் சொல்லிவிட்டது. 

அப்புறமென்ன? சொந்த ஜாதியில், திருமணம் செய்து கொடுக்க வசதியற்ற பெண்ணைப் பெற்றவன் இல்லாமலா போய்விடுவான்? திருமணமானது. மன அழுத்தத்திலிருந்த அய்யாவும் வாழ்க்கையைத் தொடங்கினார். மனைவி ஓரிரு மாதத்திலேயே கருவுமுற்றார். திரும்பவும் அய்யாவுக்கு மன அழுத்தம் அதிகமாகி, முரட்டுத் தனமாக அடிப்பது, தன்னைக் காயப் படுத்திக் கொள்வது என்ற அளவுக்கு முத்திப் போக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கிட்டத் தட்ட பத்து வருட சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்ததாக ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறார். அடுத்த குழந்தைக்கும் அச்சாரம் போட்டாகிவிட்ட நிலையில் திரும்பவும் இன்னும் தீவிரமான மன அழுத்தம். மீண்டும் மனநல மருத்துவமனை. இந்த முறை சிகிச்சை எந்தப் பலனும் அளிக்காது என்ற நிலையில் நிரந்தர மருத்துவமனை வாசம்.

இடையில், மாமியார், மாமனார் இறந்துவிட மற்ற மகன்கள் வீட்டை விற்று பங்கு போட்டுக் கொள்கிறார்கள். படிப்பறிவற்ற அண்ணன் மனைவி குழந்தைகளுடன் தெருவில் நின்றால் யாருக்கென்ன போச்சு? கோர்ட் கேஸ் என்று அலைய எந்த நாதியிருக்கிறது? சரி மனநலம் குன்றிய மகனுக்கு பென்ஷனாவது கிடைக்குமா என்று வருகிறார் ஒரு நல்லிதயக்காரர்.

சட்டம் சொல்வது என்ன: தந்தை பணியில் இருக்கும்போதே மகனுக்கு சித்த சுவாதீனமில்லாமல் போயிருக்க வேண்டும். திருமணமாகி இருக்கக் கூடாது. வாஸ்தவம்தானே. அரசு என்ன மக்கள் பணத்தில் தான தருமமா செய்ய முடியும்? வெயிட்டீஸ்

நாத்து 3: திருமணமாகி, விதவையான, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாத வருமானமற்ற மகள் தாய்வீட்டுக்கு வருவாளேயானால், எத்தனை வயதானாலும், விதவையானது எப்போதானாலும், பெற்றோரின் மறைவுக்குப் பிறகு வேறு யாருக்கும் உரிமையில்லாத பட்சத்தில் அந்த மகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று சட்டம் வருகிறது. இதற்கு விளக்கம் வேறு, தாய்வீட்டிற்கு வரவேண்டும். மாமியார் வீட்டோடு இருந்தால் கிடையாது. 

ஹி ஹி. அப்பனும் போய், ஆத்தாளும் போய், வாடகை வீட்டில் இருந்தவங்களுக்கு தாய்வீடு எதுப்பா என்று யாரைப் போய் கேட்பது. மகனோ மகளோ கோடீஸ்வரியாக இருக்கலாம், இவருக்கே பங்களாக்கள் சொந்தமாக இருக்கலாம், ஆனால் தாய்வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு மாத வருமானம் இல்லை அல்லது இவ்வளவுதான் என்று அஃபிடவிட் கொடுத்துவிட்டால் போதும். ஆயுள் முழுதும் பென்ஷன் உண்டு.

சரி அது என்ன நாத்து அப்படிங்கறீங்களா? முதல்ல இந்த மூணுக்கும் உங்க தீர்ப்பைச் சொல்லுங்க. இது சரியா தவறா? என்ன செய்திருக்கலாம் அல்லது செய்திருக்க முடியும்? (டிஸ்கி: மேலே குறிப்பிட்ட மூன்றும் கற்பனையல்ல. நிஜமான கேஸ்களும், சட்டமும்)

39 comments:

கலகலப்ரியா said...

உண்மையா... பொய்யான்னு தலைப்பு வச்சிருக்கலாமே...

தலைக்குள்ள நிறைய சக்கரம் சுழலுது.. வெயிட்டு... வந்து படிச்சுக்கறேன்..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சட்டம் ஒரு இருட்டறை...ஆழ்ந்த சிந்தனை.......செய்கிறீர்கள்..அதெல்லாம் வேலைக்காவாது.....சட்டம் சொல்லறதைத்தான் கேட்க முடியும் கண்ணையும், காதையும் பொத்திக்கிட்டு.....நானும் இதுபோல் பலமுறை யோசித்து மண்டை காய்ந்ததுதான் நிசம்........ஒன்றும் செய்ய முடியாது......

Sethu said...

முதல்ல காலை வணக்கம்.
மத்தது அப்புறம்.

Sethu said...

No 1 : என்னைப் பொறுத்தவரை, அந்தப் பெண் தனியாகப் போய் தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டது பல விதத்தில் சிறந்தது. சட்டப் படி எப்பிடியும் கொடுத்து தான் ஆகவேண்டும். கூடவே இருந்திருந்தால், தந்தைக்கும் அத்தைக்கும் இன்னும் ஒரு நரகமான வாழ்கை ஆகியிருக்கும். அந்த மனிதரது வாழ்வு இன்னும் கொடுமையாகி இருக்கும். அட்லீஸ்ட் தன தந்தைக்கு பேரு செய்த திருப்தி அந்த மனிதர் கடைசி வரை நினைக்க முடியும். இல்லாத ஒன்னை நினைத்து வருந்துவதை விட, கூட இருப்பவர்க்கு செய்ய முடிவதே சிறந்தது.

இங்குள்ள கலாசாரத்தில் மனைவியின் விருப்பம் இல்லாமல் தந்தை தாய் மற்ற உறவை வீட்டில் வைத்திருப்பது கடினம்.

Sethu said...

வேணாம் சார். இதுக்கு மேல இதில் நான் பங்கு எடுக்கவில்லை. படிக்கவே மனசு கஷ்டமா இருக்கு. போதும் சார்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முதல் நாத்து..

டையக்னோசிஸ்: ரெம்ப நல்லவரா இருக்காரு.. அதான் பிரச்சனை..

ட்ரீட்மென்ட்: நம்ம ஊர் அரசியல்வாதிங்க கிட்ட கவுன்சலிங்..

இரண்டாவது..

என்ன சொல்றதுன்னு தெரியல..

மூணாவது..

வாடகைத்தாய்.. ஐ மீன்.. வாடகைக்கு ஒரு அம்மாவப் பிடிச்சிக்கலாம்.. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

philosophy prabhakaran said...

நான் ஒரு கேரக்டர் பதிவு எழுதியிருக்கிறேன்... (முயற்சி செய்திருக்கிறேன்) அது எப்படி இருக்கிறது என்று நீங்கள் படித்து கருத்து சொன்னால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/18.html

சைவகொத்துப்பரோட்டா said...

படிக்கவே மனதிற்கு, கஷ்டமா இருக்கே.

நசரேயன் said...

மழை இல்ல ஊரிலே, அதனாலே நாத்து நட முடியாது, மழை பெய்த உடனே வாரேன்

நசரேயன் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
Present//

Absent

Anonymous said...

படிக்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கே =(

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சரி அது என்ன நாத்து அப்படிங்கறீங்களா? முதல்ல இந்த மூணுக்கும் உங்க தீர்ப்பைச் சொல்லுங்க.//

சாரி சார். நான் என் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டேனென்று உறுதி அளித்திருக்கிறேன்!!

ஜோதிஜி said...

சாரி சார். நான் என் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டேனென்று உறுதி அளித்திருக்கிறேன்!

மயக்கமென்ன
மவுனமென்ன
இது என் தாய் நாடு ஷங்கர்.

இதை மீண்டும் வசந்த மாளிகை சிவாஜி பாணியில் கொண்டு போகலாம் தானே.......

கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...

யதார்த்தங்களுக்கும், சட்ட ரீதியிலான தீர்வுகளுக்கும் கொஞ்சமும் சம்மந்தமேயில்லை என்பதை மூன்று உண்மைகளுமே சொல்கின்றன..

அது சம்மந்தப்பட்ட மனிதர்களின் வாழ்வு நிலைகளை பொறுத்து...ஏற்றுக்கொள்வதும், எதிர்த்து போராடுவதும்..

இதுவே அடித்தட்டு மக்களாக இருப்பின் தீர்வு சட்டப்படி இருந்திருக்காது...தமக்கான நியாயங்களின் அடிப்படையில் தாமாகவே தீர்த்துக்கொண்டிருப்பர்..

உறவுச்சிக்கல்களின் எண்ணிலடங்கா பரிமாணங்களை புதிது புதிதாக கேள்விப்படும்போதெல்லாம் இப்படிக்கூட நடக்குமா என அயற்சியாகத்தான் இருக்கிறது...என்ன செய்ய மனித மனங்களின் நியாய தர்மங்கள் மனசுக்கு மனம் வேறு வேறாக இருந்து தொலைக்கிறதே....

(காலங்கார்த்தால குழப்பம் விளைவித்தமைக்கு மன்னிக்கவும்...எதோ தோணுச்சுங்க சார்)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இதை மீண்டும் வசந்த மாளிகை சிவாஜி பாணியில் கொண்டு போகலாம் தானே....//

இப்ப மட்டும் என்ன ஜோ? (TASMAC) :))

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்றைய நிலையில் பலரின் வாழ்க்கை நீதி மன்றங்களில்தான் கழிந்து கொண்டிருக்கிறது .பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி

முகிலன் said...

//சரி அது என்ன நாத்து அப்படிங்கறீங்களா? முதல்ல இந்த மூணுக்கும் உங்க தீர்ப்பைச் சொல்லுங்க. இது சரியா தவறா? என்ன செய்திருக்கலாம் அல்லது செய்திருக்க முடியும்//

எங்க சொம்பு எங்க சொம்பு?

ஜோதிஜி said...

இப்ப மட்டும் என்ன ஜோ? (TASMAC) :))

இதென்ன அக்கிரமம். பாட்டு பாடச் சொன்ன குடுச்சுட்டு வாந்தி எடுக்கனுமா? எல்லாமே டூப்பு. பேசமா பவண்டோ குடிக்கலாலங்க என்கிறார்கள்.

எப்பூடி?

நர்சிம் said...

ஹும்ம்ம்ம்ம்.

ஈ ரா said...

நாத்து 1 . : பெண்வீட்டார் ஆரம்பத்திலிருந்தே பிரச்சினை செய்திருப்பார்கள் போலும்..

கல்லூரி செல்லும் மகன் நன்றாக படித்து கடவுள் புண்ணியத்தில் நல்ல வேலைக்கு சென்று நல்ல (???) ஒரு மனைவியைத் திருமணம் செய்து கொள்ளட்டும்.. இந்த அம்மாள் அப்புறம் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்...

நாத்து 2 : //மாமியார், மாமனார் இறந்துவிட மற்ற மகன்கள் வீட்டை விற்று பங்கு போட்டுக் கொள்கிறார்கள்// இப்படி செய்ய முடியுமா, புத்தி சுவாதீனம் இல்லாத மகனுக்கு பங்கு ஒதுக்காமல் பதிவு செய்ய முடியுமா.? இப்படி செய்தால் அவர் சார்பில் வேறு யாராவது கிரிமினல் வழக்கு போட முடியாதா? (ஆனால் சொல்வது ஈசி...நீங்கள் கூறி இருப்பது போல் இது போன்ற பெண்கள் சாதாரணமாக தமக்கு வரவேண்டிய உரிமையைக் கேட்பதற்கே பயப்படுவார்கள், இவர்கள் எங்கே போராடுவது.. பரிதாபம்தான். இது போன்ற விஷயங்கள் தாம் அதிகம் நடக்கின்றன... எனக்கு தெரிந்து வீடு வேலை செய்து கஷ்டப்படும் பல பெண்கள் கணவர் குடி அல்லது ஏதாவதொரு விதத்தில் சரியில்லாதவர்களே..

நாத்து 3 : //பெற்றோரின் மறைவுக்குப் பிறகு வேறு யாருக்கும் உரிமையில்லாத பட்சத்தில் அந்த மகளுக்கு கொடுக்கப்படவேண்டும்// இந்த "வேறு யாருக்கும் உரிமை இல்லாத பட்சத்தில்" என்றால் புரியவில்லையே..

என்னவோ போங்க, நம்ம சுத்தி இந்தமாதிரி ஆயிரக்கணக்கில் நடக்கிறது.. ஆனால் எங்கெங்கேயோ நாற்பதாயிரம் கோடி, ஒன்னரை லட்சம் கோடி ன்னு சைபர் தெரியாத அளவுக்கு பணம் எங்கெங்கேயோ போயிட்டிருக்கு..

ராஜ நடராஜன் said...

எனக்கு தெரியல.நாட்டாமை முடிவை ஏத்துக்கிறேன்.

சேட்டைக்காரன் said...

பதிலோ, விளக்கமோ சொல்வதற்கு பதிலாக, இவை உண்மைச் சம்பவங்கள் என அறிந்து ’ஏன்?’ என்ற கேள்வி எழுகிறதே ஐயா!

ஈரோடு கதிர் said...

||இந்த மூணுக்கும் உங்க தீர்ப்பைச் சொல்லுங்க||

நாம தீர்ப்புச் சொன்னா, நீதிமன்ற அவமதிப்பு ஆயிடாதா!!!

ஆமா, சட்டம் ஏன் இம்புட்டு டேமேஜா இருக்கு!!!?? # டவுட்டு

க.பாலாசி said...

மொத ரெண்டையும் படிக்கிறச்ச பரிதாபமாத்தான் இருக்கு.. வேறவொன்னும் தோணல... மூணாவது.. ம்ம்கூம்...சட்டம் தன் கடமையை செய்யும்...

ஸ்ரீராம். said...

மனசு சொல்வதற்கும் சட்டத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லை!

கே.ஆர்.பி.செந்தில் said...

சட்டம் ஒரு இருட்டறை என்பது சரிதான் போல, அங்கு வாதங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பே.. என்னத்த சொல்ல.. இந்தியாவுல இப்புடித்தான் இருக்கும்.. சரின்னு சிலரும், தப்புன்னு சிலரும் சொல்லிட்டுதான் இருப்பாக ( அதாவது தங்கள் பக்கத்தை தக்கவைக்க)...

சே.குமார் said...

மூணு நாத்துமே மனசுக்குள்ள என்னவோ செய்யுது.

அரசூரான் said...

நாத்து 1: அவரு ஏமாளி
நாத்து 2: பாவம் கோமாளி
நாத்து 3: சவாலே சமாளி

அய்யா, விவசாயம் (குடும்பம் நடத்துரது) பண்ணறது ரொம்ப சிரமமான வேலை, இந்த மூன்று நாற்றும் வெள்ளாமை காணுமா?

வானம்பாடிகள் said...

@கலகலப்ரியா

அதுவும் பொருத்தமாய்த்தானிருக்கும். படி படி.

வானம்பாடிகள் said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

சிந்தனைல்லாம் இல்லைங்க. இப்படியெல்லாமும் நடக்குதேன்னு ஒரு ஆதங்கம்.

வானம்பாடிகள் said...

@Sethu
அட கவனிக்காட்டியும் இப்ப சரியா காலை வணக்கம் சொல்லுவோமில்ல.

ரிஷபன் said...

என்னத்த சொல்ல.. ஊருக்கு ஊர் ஏமாளிங்க இருக்காங்கன்னு புரியுது..

விந்தைமனிதன் said...

இது கற்காலமா இல்லை கலிகாலமா?! சட்டமும் சமூகமும் வியாக்கியானம் பாட நாக்கைக் கூர் தீட்டிக் கொண்டிருக்கின்றனவேயன்றி இரங்கவோ, அணைக்கவோ, சொட்டுக்கண்ணீர் சிந்தவோ தயாராயிருப்பதில்லை பல பொழுதுகளில்

ராஜவம்சம் said...

மூன்றுமே தவறானது தான்

1 பண்புமிக்கவர்.

2 அபளைப்பெண்.

3 ஏமாற்றும் வழி.

வானம்பாடிகள் said...

கொஞ்சம் அக்கப்போருல போது வெட்டியாப் போச்சு. மன்னிக்கணும். அல்லாருக்கும் நன்றி.

Sethu said...

'கொஞ்சம் அக்கப்போருல போது வெட்டியாப் போச்சு."

-ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்கலாம் இந்நேரம்.

என் கேள்விகளுக்கான கொஞ்சம் பதில் சொல்லியிருக்கலாம்.

ரோஸ்விக் said...

சட்டம் தன் கடைமையை கடைமைக்கு செய்துகொண்டு இருக்கிறது/கும்.