"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டைக் கெடுத்தான்" என்பது சொலவடை. பாமரன் ப்ளஸ் இரண்டு புள்ளிகளில் தொடங்கி, பாலா பிளஸ் டூ புள்ளிகளாக பரிணமித்து வானம்பாடிகளா பதிவைக் கெடுக்காம ஏதோ எழுதிட்டிருக்கேன்னு இருந்தேன். இந்தக் கலகலப்ரியா நாம எழுத வந்த
வரலாற்றை எழுதுங்கன்னு இழுத்து விட்டுச்சு. அதனோட விளைவு....
படிக்கிற காலத்துல அது பள்ளியின் குறையா? அல்லது என் கவனக் குறைவா தெரியவில்லை. எழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி என்று எதுவும் நடந்ததாகக் கவனமில்லை. சொல்லிக் கொடுத்தவற்றை கிளிபோல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுடன் சரி. ஐந்தாம் வகுப்பு வரை கற்பலகையில்தான் பரீட்சையே. ஆறாவதில் பேனாவைக் கையால் தொடும் பாக்கியம் கிடைத்தது. அது வரை ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கையெழுத்துப் பழகத் துணையிருந்தன.
கட்டுரையும், இலக்கணமும் ஒன்பதாவது வகுப்பில் திடீரெனத் திணிக்கப்பட்டது. திருவள்ளுவரும், புத்தரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தமிழாசான் எழுதிய புத்தகம் பற்றி விவாதித்தது ஒன்றே கிளிப்பிள்ளை பாடம் தவிர்ந்த ஒரு புது முயற்சி. பதினோராம் வகுப்பில் 'போட்டி' நம் பள்ளிக்கும் அறிமுகம் ஆனபோது, பாரதியார் கவிதையை குழந்தை மாதிரி ஒப்பித்து, கிடைத்த பரிசை வாங்கச் செல்ல வழி தெரியாத காரணத்தால் பேசாதிருந்து விட்டேன்.
ஐந்தாவது படிக்கையில் தினமணிக்கதிர் வாயிலாக என் தந்தை மகற்காற்றிய பேருதவி.. மஞ்சரி, கல்கி, கலைமகள், அமுத சுரபி, ஆனந்த விகடன் என்று விரிந்த.. அந்த உலகமே பள்ளி தவிர்த்த என் வாழ்க்கையானது. அதனூடாக கல்கி, கோ.வி. மணிசேகரன், சாண்டில்யன், அகிலன், ஸ்ரீ வேணுகோபாலன் ஆகியோர் எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்தது.
கி.ரா, ஜெயகாந்தன், தேவன் ஆகியோரைப் படிக்கையில் இயல்பாக உணர்ந்தேன். கண்ணதாசன் கவிதைகளும், வாலி, வைரமுத்து, பாரதி ஆகியோரின் கவிதைகளும் மெதுவே எழுதினால் என்ன என்ற ஆசையைத் தூண்டி விட்டது. இலக்கணம் சற்றுப் பயமுறுத்தியது.
ப்ரியாவின் அறிமுகமும், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய விவாதமும், அவளின் எழுத்துக்களும், இவளைப் போல் நாமும் முயன்றால் என்ன என்ற ஒரு மனோதைரியத்துடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தின.
எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கவிதையை படித்துப் பாராட்டி அவள் ஊக்குவித்ததில் நானும் கிறுக்கினேன். நன்றாக இருப்பதை பாராட்டும் அதே தருணம் குறையென்று கூறாமல், நளினமாக ஒரு வார்த்தை மாற்றினால் என்று ஆலோசனை கூறும்போது அது மிக அழகாய் மாறிவிடுவது என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது.
செய்திகளின் தாக்கத்தில் புழுங்கி, பதிவுலகம் பக்கம் வந்தபோது என் மன அழுத்தத்தைப் போக்க இது ஒரு வாய்ப்பு என்ற எண்ணம்தான், என் எழுத்தின் உடனடி உந்துகோலாக இருந்தது. என் மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதும் பதிவர்களுக்கு, பின்னூட்டம் இடுவதில் ஆரம்பித்தது என் எழுத்துப் பயணம். "தலையா போய் விடும்" என்று, இலக்கணப் பிழைகள் பற்றியெல்லாம் கவலைப் படாது, மன அழுத்தத்தின் வடிகாலாய் மொட்டு விட ஆரம்பித்ததே, இப்போது பூத்துக் கொண்டிருக்கும் என் வலைப்பூ.
கவிதை, சொந்தக் கதை, பார்த்த கதை, பாராத கதை எல்லாவற்றுக்குமிடையே.. "நறுக்குன்னு நாலு வார்த்தை" என் அழுத்தத்தின் வெளிப்பாடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது..
பாராட்டுதல், பிழை எடுத்துக் கூறல் என்று பழமைபேசியின் பங்களிப்பும், ஆரம்பம் முதலே ஊக்குவிக்கும் ராஜ நடராஜன், ராகவன் போன்ற அன்புள்ளங்களும் என் எழுத்தின் தூண்டுகோல்கள்.
இந்த தொடர்பதிவுக்கான அழைப்பை ஏற்று நீங்க எழுத வந்த கதையும் எழுதுங்களேன்.