Monday, March 28, 2011

நறுக்னு நாலுவார்த்த V 6.0

கடமை தவறினாலும், கண்ணியம் தவறினாலும் கழகத்துக்கு சிறிதளவு சேதாரம்தான் ஏற்படும்; கட்டுப்பாடு தவறினால் கழகம் முழுமையாக சேதமுற்றுவிடும்....கலிஞ்ஜர்.

தல! வாயத் தொறந்துறாதப்பான்னு ராசாவுக்கு எழுதின லெட்டரா. கன்பீஸன்ல இங்க வந்துருச்சு?
---------------------------------------------------------------------------------------------------------------------
சினிமாத் துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாகக் கூறுகிறார்கள் - கலிஞ்ஜர்

யோவ்! யாருய்யா வெண்ணை பங்கிட்டதுன்னு சொன்னது மொதலாளிய. இருக்கற பங்கு சண்டை போறாதுன்னு இது வேறயான்னு கலங்கி போவுதுல்ல?
----------------------------------------------------------------------------------------------------------------------
எனது குடும்பம் கலைத் துறையில் இருக்கக் கூடாதா?

கலைத்துறையே உங்க குடும்பமா கீதே தலீவா. அதான் காண்டு.
----------------------------------------------------------------------------------------------------------------------
சொத்து ஆவணங்களை சரியாக தாக்கல் செய்யாததால் பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் வேட்பு மனு தள்ளுபடியானது.

நியாயம்தானே. இருக்கிற சொத்துக்கு கணக்கிருந்தாதானே அடிச்ச சொத்து எம்புட்டுன்னு கணக்கு பாக்க. இது கூட தெரியாம என்னாத்த வேட்பாளரு.
------------------------------------------------------------------------------------------------------------------------
என்னிடத்தில் பட்டம் பெற்று என்னை எதிர்க்கிறார்கள் : கலைஞர்

எதிர்க்கமாட்டேன்னு எழுதி வாங்கிட்டு குடுத்திருக்கணும் தலீவரே. பட்டம் குடுத்த பாவத்துக்கு டீலுக்கு வரியானு கேக்குறானுவ நன்னாரிப் பசங்க.
------------------------------------------------------------------------------------------------------------------------
மா.கம்யூனிஸ்டுக்கும் அதிமுக தேர்தல் அறிக்கைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை: டி.கே.ரங்கராஜன்

தேர்தலுக்கு குடுக்குற பணத்துக்கு மட்டும்தான் சம்மந்தம் இருக்குன்னு தெரியாம கேக்குறானுவ டீட்டேயிலு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்: தொல். திருமாவளவன்

தலீவருக்கு ஓக்கேயா? இல்ல கண்டுக்காம உடு பாசுங்குறாரா?
------------------------------------------------------------------------------------------------------------------------
மயிலாப்பூரில் தங்கபாலு போட்டி

அப்புடி போடுங் தலைவரே. இதுலயும் ஊத்திக்கினா கவுன்ஸிலர்ல கலக்கிடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

புலிகளை கூண்டோடு ஒழிக்க அன்னை சோனியாவின்..ஓ நிஜப்புலியா.. தொங்கபாலு..
-----------------------------------------------------------------------------------------------------------------------
சிக்கன்,மட்டன்,மீன் விலை ஏற்றம். தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ் விலை சரிவு.

ஒருபக்கம் பிரியாணிக்கு கட்சி வாங்கும். இன்னோரு பக்கம் அவன் குடுத்த காசுக்கு ஜனங்க வாங்கும். ஆக மொத்தம் கால்நடைகளுக்கு கட்டம் சரியில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மதிமுக பொருளாளர் ஆவேசம்

நம்ம வேலைய புடுங்கி இன்னோருத்தருக்கு குடுத்தா கடுப்பாதான் இருக்கும். சைலண்டா சஃப்ஃபர் பண்ணனும். ச்ச்செரியா?
----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் மீது காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை; ஜெ.,

நடுவுல தாத்தா பிலிம் காட்ட ஸொல்லோ யக்கா வாயேன்னு இளிச்சப்ப  இது மறந்து போச்சுல்ல?
-----------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தலுக்குப் பின் தமிழ் நாட்டைப் பற்றிக் கவலைப் படமாட்டார் ஜெ. கொடநாட்டைப் பற்றித்தான் கவலைப் படுவார்...ஸ்டாலின்

அவங்க ரேஞ்சுக்கு அது போதும். நமக்கு தமிழ்நாடே காணாது.
----------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுகவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன் பிரச்சாரம்

சுறா படம் காட்டுவேன்னா வாக்காளர்களை மிரட்டிய குற்றத்துல வருமா?
----------------------------------------------------------------------------------------------------------------------
எங்களை தாக்கினால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய், அஜீத் ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் :சத்யராஜ்

ஹய்யோ ஹய்யோ. எங்கள உடு. ராஜபக்ஸேவ பச்சடி வைச்சிட்டு வரோம்னு கூவுச்சி இந்த கொய்யால. த்த்த்த்த்தூ
----------------------------------------------------------------------------------------------------------------------
குற்றச்சாட்டுகளை முறியடிப்போம்: கனிமொழி

ராசா கைய வச்சாஆஆஆஆஆ..அது ராங்கா போனதில்லேஏஏஏஏ
----------------------------------------------------------------------------------------------------------------------
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர் கார்த்திக்

அதுக்கு அவரு எருமையால்ல இருக்கணும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
சுவரொட்டி, ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குத் தடை -- தேர்தல் ஆணையம்.

ங்கொய்யால. அப்பறம், காதுக்குள்ள வாக்கு கேக்குறோம்னு மெரட்டுவானுங் தல..அவ்வ்வ்வ்
----------------------------------------------------------------------------------------------------------------------
விஜயகாந்த் முதல்வர்னா நான் பிரதமர்..போ..வடிவேலு

அப்ப நானு?...பன்னி.
----------------------------------------------------------------------------------------------------------------------

Friday, March 25, 2011

தேர்தல் 2011 - ஒரு சமூக அக்கறைப் பதிவு.

தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் குறித்தான ஊகங்கள், சரி, தப்பு, சொம்பு, ஜமுக்காளம், அரசமரம் எல்லாம் அயற்சி தருவனவாயிருக்கின்றன. ‘தம்பி! டீ இன்னும் வரலை’ ரேஞ்சுக்கு சொன்னாலும் யாரும் டி.வி. தரப்போறதில்லை என்ற வருத்தம் ஒரு புறம். மகள் படிப்பு முடியறதுக்குள்ள காண்ட்ராக்ட் போட்டு லேப்டாப்பாவது வருமா என்ற ஏக்கம் ஒரு புறம். ‘அரை நாள் உண்ணாவிரதம்’, அந்தர் பல்டி ‘தனி ஈழம்’ எல்லாம் கடந்து முதலில் ஹிந்துவை ஒழித்தாலும், ஓசிப்பேப்பருக்கு ஒட்டக் காத்திருந்த காலமும், அரசியல் தவிர்த்து ‘சதக்! சதக்! என்று கத்தியால் குத்தினான், கணியூரைச் சேர்ந்தவர் பேபி, வயது 63, அழகி’ போன்ற முக்கியமான தகவல்களின் ஈர்ப்பினாலும் ‘தினத்தந்தி’ மட்டும் தொடர்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் அரசியல் பதிவிடாவிட்டால், கும்மிப் பதிவர், சமூக சிந்தனையற்றப் பதிவர் போன்ற அவச்சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதாலும், யார் ஜெயித்து வந்தாலும் தேர்தல் குறித்து ஒரு இடுகையாவது இட்டவர்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு சலுகை என்ற அறிவிப்பு வருமேயானால் ‘வட போச்சே’ என்று சொல்லாமல் தவிர்ப்பதற்காகவும் ஒரு இடுகை போட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் கொள்ளலாம்.

முதல் முதலான தேர்தல் அனுபவம் வருடம் நினைவு கொள்ளத் தக்கதல்ல. விக்கியில் தேடி தேதி போடும் அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் அல்ல. கஞ்சி போட்டு கத்தி விரைப்பாக இஸ்திரி செய்த டவுஜர், அது நழுவி விடாமல் பட்டி, கோழிக் கூடு மார்பும், பாக்கட்டில் ரெண்டு கையும் சொருகியபடி படி தாண்டா பாலகனாக இருந்த நாட்களில், சினிமா நோட்டீசுக்கு மட்டுமே வரும் செனாயும், மேளமும் முழங்க ஒரு 30 பேர் சூழ கை கூப்பியபடி வரும் வேட்பாளர், அதற்கு முன்னால் வினியோகிக்கப் படும் நோட்டீசு (கப்பல்,கத்திக்கப்பல், பறக்கும் கப்பல், இங்க் பாட்டில், ராக்கெட்டு செய்ய உதவும். ரஃப் நோட்டில் கிழித்தாலும் டங்குவார் அறுந்துடும்) இவற்றையும் தாண்டி

பாட்டம் அறுக்கப்பட்ட கெரஸின் அளக்கும் பாத்திரம் போன்ற ஒன்றை வாயில் வைத்து ‘காளைச் சின்னத்தப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு!’ , ‘நமது சின்னம் காளைச் சின்னம்’ போன்ற கலை நயமிக்க பாடல்களால் ஈர்க்கப் பட்டு பராக் பார்த்த காலத்தில் ஆரம்பிக்கிறது கொசுவத்தி.

அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியபோது மக்கிய அரிசி, நாத்த அரிசிகளால் கடுப்புண்ட காலத்தில் உணவுப் பஞ்சத்தால் விவசாயிகள் வயல் எலிகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கேட்ட கேள்விக்கு ‘எலியில் ப்ரோட்டீன் அதிகம்’ என்று நக்கலாய் பதில் சொன்னதற்காக சி. சுப்பிரமணியம் கழகக் கண்மணிகளிடம் நாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் விட இன்னும் தமாஷாக

‘பக்த வத்சலக் குரங்கே! பதவிய விட்டு எறங்கே’
‘காமராஜர் அண்ணாச்சி! காப்பி வெல என்னாச்சி’
’பூவராகன் அண்ணாச்சி! பூவா துன்னு நாளாச்சி’
’வெற்றி எங்கள் லட்சியம்! படி அரிசி நிச்சயம்!’
‘நமது சின்னம் சூரியச் சின்னம்’

என்று குதித்து குதித்துக் கத்திக் கொண்டு போவதும், எம்.ஜி.ஆர். வரார் ஓட்டுக் கேட்க புரளியும், கழகக் கண்மணிகளின்பால் ஈர்ப்புக்கு காரணமாயிற்று. முக்கியமாக ‘ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.’ என்று தமிழ் வளர்த்த பாங்கும் ஒரு காரணம்.

தேர்தல் என்றால் எதிர்ப்பார்ப்பு அதிகமானதற்குக் காரணங்கள் வேறு. கலர்க் கொடிகள் கிடைக்கும். சில நேரம் துணிக் கொடியும் கூட. அங்கங்கே வைக்கப் பட்டிருக்கும் தண்ணீர்ப் பந்தலில் தாக சாந்தி செய்துக் கொள்ளும் போது, ஓய்விலிருக்கும் மெகா ஃபோனில் ’ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.வும், நமது சின்னம் காளைச்சின்னம்’ கத்த ஒரு வாய்ப்பு.

ஆவினுக்கு முன்னால் தமிழ்நாடு பால் வள நிறுவனத்தின் அலுவலகம் வேப்பேரி வெடரினரி காலேஜுக்கு முன்னால் இருந்த ஒரு இத்துப் போன கட்டிடத்தில் இயங்கியது. அங்குதான் போய் பால்கார்ட் வாங்க வேண்டும். ஒரு ரூபாய் 5 காசுக்கு அரை லிட்டர் டோண்ட் மில்க், அதையும் வாங்கிய கையோடு குலுக்கிய படியே வந்தால், திரளும் வெண்ணையை ஸ்பூன் பிடியில் வழித்துச் சேர்த்தால் ஒரு வாரத்தில் அடுத்த வாரத்துக்கான நெய்யும், நெய் காய்ச்சிய வாணலியில் கேசரியும் போனஸ். அதற்காக அயனாவரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் வேப்பேரிக்கு போகத்தான் வேண்டும்.

பஸ்ஸில் போனால் பத்தும் பத்தும் 20 பைசா போய்விடும் என்பதால், பொடிநடையாக போய் வரலாம். தேர்தல் காலங்களில் வெயிலோ, நடந்த களைப்போ இராது. காரணம் சுவரெங்கும் நக்கலும் நையாண்டியுமாக கரியில் வரைந்த கார்ட்டூன் படங்கள். பாவம், வாலில்லாத பக்தவத்சலத்தைப் பார்க்கவே முடியாது. பதிலுக்கு அண்ணாவை தொப்பையும், பீரங்கி மூக்குமாக காங்கிரஸ்காரர்கள் வரைந்திருப்பார்கள். முண்டாசு கட்டியபடி மூணு எலியைக் கையில் பிடித்தபடி ‘இன்னைக்கு எங்கூட்ல விருந்து’ என இளிக்கும் சி.சு., ‘கஞ்சிக்கு வழியில்லங்கேன். இவன் காப்பிக்கு வெலை கேக்குதாண்ணேன்’ என்ற காமராசரும், செய்திகளை காமெடியாக்கி, தேர்தல் அறிக்கையை நக்கலடித்து சுவர் நிறைத்திருக்கும் கார்ட்டூன்கள்.

முக்கியமானது படிப்பகங்கள். தெருவுக்கு தெரு பத்தடிக்குப் பத்தடி எதிரும் புதிருமாக பந்தல் போட்டு காங்கிரஸ் பதிப்பகங்கள் (சுதேசமித்திரன், தினமணி, நவசக்தி) திமுக(தினத்தந்தி, முரசொலி, விடுதலை, நாத்திகம், மாலை முரசு) கம்யூனிஸ்டு (ஜனசக்தி, சோவியத் யூனியன், ஸ்புத்னிக்) இப்படி ஓசிப் பேப்பர் படிக்க எங்கே கிடைக்கும் வாய்ப்பு? நம்ம ஸ்பீடுக்கு படிக்க முடியாமல், காஆஆஆம ராஆஆஆஆஆசர்..... இன்ன்ன்ன்ன்ன்ன்ன்று.....கட கட கட கடக்கரையில் (ற் எப்புடி சொல்றதுன்னு குழப்பம்) என்று கூட்டிப் படிக்கும் கடுப்புப் பேர்வழியும், ஒரு வரி செய்தியைப் படித்துவிட்டு அதற்கு ஒன்னரை மணி நேரம் பேப்பரையும் தராமல் தோழரிடம் விவாதிக்கும் பன்னாடையையும் பொறுத்து பேப்பர் படிக்கும் சுகமே சுகம்.

கணக்குக் கேட்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க ஆரம்பித்த புதிதில் நாத்திகம் பத்திரிகையில் அவர் குறித்த கட்டுரையும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் ‘சரோஜாதேவி’ இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தது. கம்யூனிஸ்ட் தொண்டர்களின் சைக்கிள் ஊர்வலத்தை காப்பியடித்து, கழகத்தின் சைக்கிள் ஊர்வல பிரம்மாண்டமும், அதில் செய்யும் சர்க்கஸ் வேலைகளும் பெரிய ஈர்ப்பு தந்தது. டாப்பில்லாத ஜீப்பில் புகுந்து கை கூப்பியபடி வரும் கலாச்சாரமும் அப்போதுதான் பார்த்த கவனம்.

தேர்தல் நாளில் அப்பாவுடனும், அம்மாவுடனுமாய் எந்த வரிசை முன்னால் போகிறதோ அங்கு ஓடி ஓட்டுப்போட்ட பிறகு, க்யூவில் நிற்கும் தோழனுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக ‘டேய்! எங்கம்மா காங்கிரசுக்கு போட்டாங்கடா. எங்கப்பா சூரியனுக்கு குத்தினாருடா’ என்றலறி முடிக்கும் முன் நடு முதுகில் விழும் பேயறையும், பேயறைந்தார் போல் அவர்களின் முகமும் அப்போது புரிந்ததில்லை.

ரேடியோ, டி.வி. கட்சிப் பத்திரிகை, கட்சி சேனல் என்றான பிறகு இந்த சுகமெல்லாம் போயே போச்சு. இதுல என்னாத்த தேர்தலைப் பத்தி சொல்றது. ஆட்டோ வரும்னு பயப்படுறதா, உன் மூஞ்சிக்கு ஆட்டோ வேறையான்னு கிண்டலுக்கு பயப்படுறதா? எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி.
 

Friday, March 18, 2011

கேரக்டர் - யூனியன் ராமமூர்த்தி.


சில மனிதர்களின் பரிச்சயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தடாலடியாக நடந்துவிடும். சில நிமிடமோ, சில மணி நேரமோ, சில நாட்களோ பரிச்சயமிருப்பினும், ஆழ்மனத்தில் ஆழமாக ஒரு தடம் விட்டுச் செல்வார்கள். அப்படி வந்த ஒருவர் யூனியன் ராமமூர்த்தி.

மதியத்திற்குள் கையொப்பமிடவேண்டிய அவசியத்தில் சட்டைத் துணி பண்டல்போல் இழுக்க இழுக்க வந்தபடியிருந்த கம்யூட்டர் செக்கில், நெருப்புக் கோழிபோல் தலை கவிழ்ந்தபடி கையொப்பம் பறந்து கொண்டிருந்த ஒரு வேனில் மதியம். பாதி சமாதியான அனார்கலிபோல் சுற்றிலும் ஃபைலும், பில்லும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

திடீரென்று சப்தமில்லாமல், கதவு திறந்தது கூட தெரியாமல் திறந்து ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஷ்ண ஷ்ண, ராமராம, ந்னப்பா முருகா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சப்தம் வந்தால் என்ன செய்ய? கையிலிருந்த பேனா தெறிக்க வெல வெலத்துப் போய் பதறி எழுந்தவனை, சாம்பல் ரெக்ஸின் பை தொங்கவிட்ட ஒரு கையும், கை வளைவில் குடை தொங்க விட்ட ஒரு கையும் ஒரு சேர்ந்து ‘நமஸ்காரம்’, என்றது. ‘நீ ஏம்பா எழுந்து நின்னுண்டு. மரியாதை மனசில இருந்தாப் போறும்’ என்ற போது பொத்துக் கொண்ட வந்த சிரிப்பை எப்படி அடக்கிக் கொண்டேன் என்று இப்போதும் வியப்பாய் இருக்கும். நம்ம சிரிப்பு அப்படி.

ஐந்தடி மூன்றங்குல உயரமிருக்கும். சற்றே பூசினாற் போன்ற உடல் வாகு. என்னையும் விட அடர்த்தியாகவே வெண்பஞ்சுத் தலை. களைத்த முகம் மீறிய தேஜஸ். வாழ்நாள் முழுதும் கண்ட சோகத்தைக் கோடு காட்டியும் ஏதோ ஒரு நெருக்கம் உண்டாக்கும் முகம். நிம்மதியாக சாப்பிட்டு வீட்டில் ஈஸிச் சேரிலோ, ஊஞ்சலிலோ அல்லது திண்ணையிருந்தால் அங்கோ சாய்ந்து ஓய்வெடுக்கும் வயது. அந்த மதிய வெயிலின் அயற்சி முழுதும் கண் காட்டியது. சற்றே சாய வாய்ப்பிருப்பின் தூங்கக் கெஞ்சும் தளர்ச்சி. 

துவைத்துச் சுத்தமான இஸ்திரி போடாத கசங்கலுடன் கூடிய முழுக்கைச் சட்டை. குனியமுடியாமலோ, கிடக்கிறது போ என்றோ மூன்றாவது பட்டனுக்கு இரண்டாவது கண்ணில் நுழைத்து கோணல் மாணலாக போட்டிருந்த சட்டை. முழுக்கையை மடிக்காமல், பட்டனும் போடாமல் விட்டிருந்தார். சட்டை பாக்கட்டைப் பிதுக்கிக் கொண்டு காகிதக் கற்றை அடைந்திருந்தது. ஏற்ற இறக்கமாகவே அள்ளிச் சுருட்டிக் கட்டிய நாலு முழ வேட்டி. மழையில் நனைந்தாற் போல் தலையும் முகமும் வியர்வை வழிந்தது. 

அமரச் சொல்லி, ப்யூனை அழைத்து தண்ணீர் கொடுக்கச் சொன்னதும் விகசித்தது முகம். வென்னீர் வேண்டுமா என்றேன். ‘ஐஸ் வாட்டர்’ என்று குழந்தையைப் போல அவசரமாக சொல்லிவிட்டு, திரும்பவும், உஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ் என்று மூச்சு வாங்கிக் கொண்டார். காலர் கர்ச்சீஃபை உருவி, முகம் தலை என்று துடைத்து, தண்ணீர் அருந்தி மீண்டும் உஸ்ஸ்ஸ்ஸிய பிறகு அமைதியாய் அமர்ந்திருந்தார்.

‘என் பேர் ராமமூர்த்தி. இங்கதான் சீனியர் க்ளார்க்கா ரிட்டயர் ஆனேன். முரளியெல்லம் என்னிட்ட வேலை கத்துண்ட பையன். அவன பார்க்கலாம்னு வந்தேன். லீவாம். அதான் உன்னைப் பார்க்க வந்தேன்’ என்றார்.
(முரளி என் அதிகாரி)

‘காஃபி, ஜூஸ் எதாவது சாப்ட்ரீங்களா?’ என்றேன்.

‘ஒன்னும் வேண்டாம்பா. கார்த்தால சாப்பிட்டுதான் வந்தேன். கார்த்தால ஒரு காஃபி, ஒரு வேளை சாப்பாடு, ராத்திரிக்கு கஞ்சி, தலை வலிச்சா மதியான காஃபிக்கு ஒரு சாக்கு. அல்மோஸ்ட் தினமும் தலவலி வந்துடும்’ என்று சிரித்தார்.

‘நான் ஏதாவது உதவ முடியுமா’ என்றேன்.

‘என்ன கேழ்விடாப்பா கேக்கற? எனக்கு நீங்கள்ளாம் ஹெல்ப் பண்ணாம யாரு பண்ணுவா?’ என்று முடிப்பதற்குள் ஆயாசம் கண்ணைச் சொக்கியது அவருக்கு.

‘நான் ஹார்ட் பேஷண்ட். ஸ்பெஷல் மாத்திரை டாக்டர் எழுதிருக்கான். பார்மஸிஸ்ட் அது இல்லைன்னு மாவு மாத்திரை நீட்ரான்.  லோக்கல் பர்ச்சேஸ் பண்ணிக் குடுன்னா, ஓவரா பேசரான். இதுங்கள்ளாம் போய்ச் சேராம மாத்திரை மருந்துனே தின்னு உசிர எடுக்குதுங்கன்னு முனகினான். கெழவனுக்கு காது டும்முன்னு நெனச்சிண்டான் போல’

‘என்னடா நினைச்சிண்டிருக்க நீ. கெழவன்னா எளப்பமா போச்சா? குடுக்க முடியாதுன்னா எழுதிக் கொடு. நீ பெரியவனா, டாக்டர் பெரியவனான்னு பார்க்கறேன்னு வாசப்படில உக்காந்துட்டேன். ஆடிப் போயிட்டான் ஆடி. ஆனாலும் ஈகோ. குடுத்துட்டு போ. ரண்டு நாள் கழிச்சி வந்து பாருன்னான். மாத்ர போடாட்டா மார் வலி வந்துடும்டா எனக்கு. மடிப்பாக்கத்துல இருந்து வரேன்னா, சரி சாமி, போய் டாக்டர் கிட்டயே லோக்கல் பர்ச்சேஸ்னு எழுதி வாங்கிண்டு வான்னு விரட்டிட்டான். அதான் முரளிய தேடிண்டு வந்தேன். நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் என்றார்.’

இதைச் சொல்லும் வரையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதராய் இருந்தார் அவர். சட்டென்று ஒரு வாலிபனின் மிடுக்கும், போராட்ட குணமும் தொற்றிக் கொண்டு ’ஹெல்ப் பண்ணேன்’ என்றபோது காணாமல் போயிருந்தது. டாக்டரிடம் பேசி, சீட்டை வாங்கி அனுப்பிவிட்டு மெதுவே ‘இந்த வயசுல இவ்வளவு கோவப்படலாமா? ஹார்ட் பேஷண்டுன்னு சொல்றீங்க? என்றேன். 

‘சட்டென்று மீண்டும் கண்ணில் ஒரு மின்னல். முடியாமல் ‘ஹூம்’ என்றதிலும் ஒரு கம்பீரம். 

‘அப்போ நீ படிச்சிண்டிருந்திருப்ப. ஐ.பி.எம் மெயின் ஃப்ரேம் கொண்டு வரான். எத்தன பேருக்கு வேலை போகுமோ? எத்தனை பேருக்கு வேற வேலைன்னு தொறத்தறானோன்னு ஒரு பதைப்பு. தலைவரு மயிராண்டி எனக்கென்னன்னு இருக்கான். வேலை எல்லாம் போகாது. மாற்றலுமிருக்காதுன்னு உறுதி வாங்கணும்னு முடிவு பண்ணா லெட்டர் எழுதிட்டு உக்காந்திருக்கான்.’ 

’நான் காத்தால காபி சாப்டுட்டு தயிர்சாதம் கட்டிண்டு வந்துடுவேன் எட்டுக்கெல்லாம். நம்ம வேலையை முடிச்சி வச்சசாதானே நாம நாலு தொழிலாளி பிரச்சனைக்கு போய் பேசலாம். கப்பல்ல இருந்து பெரிய ட்ரெயிலர்ல கொண்டு வரான். ஸ்பெஷலா ட்ராஃபிக் ப்ளாக் வாங்கி ஜி.ஹெச். வழியா வந்து நம்ம அவுட்கேட் வழியா உள்ள வரான்னு தெரிஞ்சது.’

‘சரியா காத்துண்டிருந்தேன். ட்ரெயிலர் லாரி மெமோரியல் ஹால் தாண்டி மிண்ட் ஸ்ட்ரீட் எண்டர் ஆரான். வெளிய படுத்தா போலீஸ் புடிச்சிண்டு போயிடுவான். ஆஃபீசுக்குள்ள படுத்தா ஆர்.பி.எஃப். தூக்கிண்டு போயிடுவான். பாதி உள்ளையும் பாதி வெளியவுமா கேட் நடுவுல படுத்துட்டேன். தொழிலாளரின் வேலைக்கு உத்தரவாதம் கொடு. இயந்திரமயமாக்காதேன்னு கத்திட்டு கண்ண மூடிண்டு படுத்துட்டேன்.’ 

‘போலீசுக்கும், ஆர்.பி.எஃபுக்கும் தகராரு. மந்திரி, ஜட்ஜெல்லாம் வர நேரம். ட்ராஃபிக் அடைக்குது. இழுத்து போடுய்யாங்கறான் போலீஸ். வெளிய கெடக்கான் நீ தூக்கி போட்டுட்டு போய்யாங்கறான் ஆர்.பி.எஃப். மட மடன்னு ந்யூஸ் பரவி, யூனியன் ஆளெல்லாம் வந்து கோஷம் போட்டாங்க. அப்புறம் குசு குசுன்னு தலைவர் ஜி.எம். கிட்ட பேசப் போறார். நீ இப்படி பண்ணா தப்பு. எழுந்து வாங்கறான்.’

‘அட போடான்னு, ஜி.எம். வரணும். இங்க வாய் மொழி உறுதி கொடுக்கணும். அப்பதான் எழுந்திருப்பேன். ஆனதைப் பாருன்னு கெடந்தேன். வந்தாண்டா பையா! ஜி. எம். தேடிண்டு வந்து சொன்னான். யாருக்கும் வேலை போகாது. புரியாம போராட வேண்டாம். பேசலாம் எழுந்திருன்னு கூப்புட்டான்.’

‘ஒத்தை ஆளா யூனியனுக்கு சொல்லாம போராடினது தப்பாம். தலைவருக்கு கோவமாம். வந்து பார்க்கச் சொல்றார்னு சொன்னானுவ. போடா மயிராண்டிகளா. நான் வாழ்கன்னு கத்திண்டேனா. இல்ல போட்டி சங்கம் ஆரம்பிச்சேனா. அதே யூனியன். அதே தலைவன் வாழ்கன்னு தானே கத்திண்டு வந்தேன். முடிஞ்சா வெளியேத்தச் சொல்லு. நான் எவனையும் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.’ 

‘எந்த மீட்டிங்குக்கும் போறதில்லை. வருஷா வருஷம் சந்தா வாங்கி கட்டணும். எவன் குடுக்கறான் தானா? நான் போய் கெஞ்சிண்டிருக்க மாட்டேன். பாதி பேரு தருவான். மீதிய நான் கட்டிண்டிருந்தேன். இப்ப அதும் லாபம். நம்ம ஆஃபீஸ்ல இருந்து பத்து பைசா பேறலை. டிபார்ட்மெண்ட் வித்தியாசம் இல்லாம எல்லாருக்காகவும் போய் பேசுவேன். அடாவடி கேசுக்கெல்லாம் காசு வாங்கிண்டு போக ஆரம்பிச்சானுங்க. நம்ம கிட்ட அந்த வேலையெல்லாம் கிடையாது.’

‘ஜெனூயின் கேஸ்னா போய் சொல்லுவேன். பெரும்பாலும் என்னைத் தெரியும். உடனே முடிச்சி குடுப்பாங்க. தெரியாம எவனாவது சீண்டினா செத்தான். பாத்ரூம் போனாலும் பின்னாடியே போய் பேசுவேன். வாசப்படில உக்காந்து பதிலச் சொல்லிட்டு போன்னா பதறிண்டு பண்ணிக் குடுப்பான்.’ என்று சிரித்தார்.

‘பசங்க என்ன பண்றாங்க? என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன். காற்றுப் போன பலூனாகிவிட்டார். இன்னும் இரண்டு வயதும் இரண்டு மடங்கு ஆயாசமும் கூடிவிட்டது. ப்ச். யூனியன் யூனியன்னு இருந்துட்டேன். ஒரு பையன். எஸ்.எஸ்.எல்.சி. தாண்டலை. சமத்து போறாது. உடம்பு வேற அடிக்கடி படுத்தும். 32 வயசாறது. வேலை வெட்டிக்கு போகணும்னே தோணலை. ரெண்டு மூணு இடத்துல சொல்லி வேலை வாங்கி குடுத்தேன். தலைய வலிக்கறதுன்னு சேர்ந்த அன்னிக்கே பாதில வந்துடுவான்.’

‘இந்த வயசுல, பகவானே, இந்த மாத்திரை மருந்தெல்லாம் வேண்டாமேன்னு போய்ச் சேரலாமேன்னு தோணும். பாதி பென்ஷன் போயிடுமே. வர காசுல ஒத்தப் பொம்பளைக்கு காணுமா. இதுல பையன் வேற. அவளுக்கு லோகாதயம் தெரியாது. புள்ளைக்கு கலியாணம் பண்ணா சரியாயிடுவான்னு என்னைத் திட்டிண்டிருப்பா.நான் போனப்புறம் இவனுக்கு சோறு போடவே முடியாதுடி உன்னால . இதுல இன்னொரு பொண்ணு வயத்தெரிச்சலும் சேரணுமான்னு சண்டை வரும், என்று உடைந்து அழுதுவிட்டார்.’

அதற்குள் மாத்திரை வந்துவிட பல முறை நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். நடு மதிய வெயிலா இருக்கே. கொஞ்சம் வெயில் தாழப் போகலாமே ஸார் என்றேன். கிழவி வாசலுக்கும் உள்ளுக்குமா அல்லாடிண்டிருப்பாடா காணோமேன்னு. நான் மெதுவா போயிடுவேன் என்று கிளம்பினார். 

துணைக்கு ஒரு ஆளை அனுப்பி ஆட்டோவில் ஏற்றி பார்க் ஸ்டேஷனில் ரயிலேற்றி விடுவது மட்டுமே என்னால் அந்த சுயநலமற்ற தொழிற்சங்க நண்பருக்கு செய்ய முடிந்த மரியாதை. கழுத்துப் பட்டியுடன் கதவு வரை போய் அரை மார்போடு திரும்பி, ‘தாங்ஸ்டா அம்பி. வரேன்’ என்று கையாட்டிய முகம் நினைவை விட்டகலாது. 
  -:o:-

Sunday, March 13, 2011

ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி...

என்னமோ போங்க. லோகத்துல மத்தவங்களுக்கெல்லாம் நார்மலா நடக்கற விஷயம் எனக்கெதிரா மட்டும் ரொம்பவே சதி பண்ணுது. ஏன்யா! தெரியாமத்தான் கேக்குறேன், ஒரு ஜீவனை படைக்கிறதுன்னு முடிவு பண்ணப்புறம் கொஞ்சம் நிதானமாதான் ஸ்கெட்ச் போட்டு ப்ளூப்ரிண்ட் போட்டு படைச்சாத்தான் என்ன? நான் கடவுள். எனக்கே க்வாலிடி கண்ட்ரோலான்னு அப்படி ஒரு திண்ணக்கம்.

இல்லாட்டி அதுக்கு சரி இல்லை, இதுக்கு சரியில்லைன்னு தானே புடுங்கி போட்ட ஸ்பேர்பார்ட்ஸை வச்சி என்னைப் படைச்சிட்டான் போல. அட! இம்புட்டுதாண்டா உசரம் உனக்குன்னு டிசைட் பண்ணதாவே இருக்கட்டுமே. மேல கொஞ்சம் குறைச்சு காலை கொஞ்சம் நீட்டி அதே ஒசரம் மேண்டேன் பண்ணா என்ன குறைஞ்சு போகும். அதென்ன செருப்புக்கு போனா ஏழும் இல்லாம ஆறும் இல்லாம ஒரு சைசு, சட்டைக்கு போனா 39, பேண்டுன்னு போனா 27 இப்புடி இல்லாத சைசாவே ஒரு பொறப்பு?

படைச்சப்புறமும் எல்லாருக்கும் வளர்றதுன்னு முடியும் நகமும் இருக்கில்ல. அதக்கூடவாய்யா சோதிக்கணும். எல்லாருக்கு முடி வளரும் வயசுல எனக்கு தேஞ்சிகிட்டே போச்சே. கோவிலுக்கு போய் எனக்கு மசுறகுடு. உனக்கு மொட்டையடிக்கிறேன்னு யாராச்சும் வேண்டியிருக்காங்களா? அந்தக் கொடுமையையும் மவுனமா தாங்கிக்கிட்டு எம்பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கனா இல்லையா?

வகுத்துல என்ன வெளையாட்டு சின்னப் புள்ளத்தனமா? எல்லாருக்கும் தின்னப்புறம் ஊதிக்கும் வகுறுன்னா எனக்கு பசில ஊதிக்கிற வரம் நான் கேட்டனா? இல்ல நான் கேட்டனாய்யா? ஏதோ நம்ம உருவத்துக்கு டெய்லர்தான் சரிப்படும்னு ரெடிமேட் ஆசையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு துணி எடுத்துதான் தைக்கிறது 45 வயசு வரைக்கும். அது என்னமோ கலியாணம் காதுகுத்துன்னு ஓசில தர இத்துப் போன துணியைக் குடுத்து டெஸ்டு பண்ணா அம்புட்டு அளவாத் தைப்பான். இனி சாவுற வரைக்கும் நீதாண்டா டைலருன்னு அலசி ஆராய்ஞ்சி மேட்சிங்லாம் பார்த்து நல்ல துணியா பேண்ட் சர்ட்டுக்கு வாங்கிட்டு போய் குடுப்பேன்.

அந்தக் கடவுளே கத்திரியப் புடுங்கி கட்டிங் பண்ணுவானோ, இல்லை தைக்கிறப்ப வந்து குந்திக்குவானோ. ஆசை ஆசையாத் தேடி வாங்கின பேண்டோ சட்டையோ, கவட்டிலையும் கக்கத்துலையும் புடிப்பான் பாருங்க ஒரு பிடி.

வாதம் வந்த மாடு மாதிரி பத்தடிக்கு ஒரு வாட்டி ஒத்தக்காலை ஒரு வாகா வெச்சி இழுத்து இழுத்து விட்டுகிட்டு ஒரு மனுசன் நடக்க ஏலுமா? அந்தச் சட்டை! அஞ்சு நிமிசத்துக்கு ஒரு வாட்டி கோழி றெக்கைய அடிச்சிட்டு அங்கயே நிக்கிறாமாதிரி ரெண்டு கையும் படக் படக்னு அடிச்சாத்தான் ஒரு வேல வெட்டி பார்க்க முடியும்.

இப்புடியே போனா அவனவனும் கையில சாவியைத் திணிச்சுறுவாங்கன்னு மொதல்ல ரெடிமேட் ஷர்ட்க்கு தாவுனேன். ஒரு ப்ராண்ட்ல முப்பத்தெட்டுன்னா ஒன்னுல நாப்பது. சரி ட்ரையல்னு முப்பத்தாறு வாங்கினா திரும்ப கோழி. முப்பத்தெட்டு வாங்கினா தோள்பட்டை இறங்குது. ஏன்யா இப்புடின்னா நீ ஏன்யா 39ஆ வளர்ந்தங்குறான். இதுல வேற இந்த தோராயமான தையலுக்கு லூஸ்ஃபிட்டுன்னு பேரையும் வச்சி, இதான் ஃபேஷனுங்குறான்.

சரின்னு பேண்டுக்கு போனா, பாலிஸ்டரா காட்டானான்னு ஒரு கேள்வி. சரி காட்டனே காட்டுன்னேன். என்னா ரேஞ்சுன்னான். காட்டன்ல என்னடா ரேஞ்சு கம்னாட்டின்னு, நீ எடுத்து போடு ராசான்னேன். ரூ 650ன்னு கொஞ்சம் எடுத்து போட்டான். பார்வை ஒரு மாதிரியா இருந்ததால வேறன்னேன். ஒரு மார்க்கமா பார்த்தபடியே ரூ 900 -1200னு கைக்கு ஒன்னா புடுங்கி போட்டான். காட்டன்ல கூட ஏழை காட்டன் பணகார காட்டன்னு கண்டு புடிச்சிட்டாய்ங்க போலயேன்னு என்ன ராசா வித்தியாசம்னேன். இது ரிங்கிள் ஃப்ரீன்னான். அட அப்ப இஸ்திரி செலவுல விட்டத புடிக்கலாமேன்னு மைய்யமா ஒரு ரூ1000 பேண்டை எடுத்து வச்சிட்டு ஷோகேஸைப் பார்த்தேன்.

சாமி வந்தவன் மாதிரி ரூ 1500-2000னு எடுத்து கடாசினான். இதுக்கு என்னாப்பா வித்தியாசம்னா இதும் ரிங்கிள் ஃப்ரீதான். நனைச்சி உலர்த்தி அப்புடியே போட்டுகிட்டு போயிறலாம்னான். அப்ப அது என்னன்னு கேக்க வந்தாலும் ரொம்பவும் கேனையா நெனச்சிரப்படாதேன்னு அந்த 1000மே எடுத்தேன்.

இடுப்பு அளவ மட்டும் எடுத்துட்டு இதான்னு ஒன்ன நீட்டுனான். இடுப்பு அளவு வச்சி பார்த்தா சரியாத்தான் இருக்கு. ஆனா பாதி பேண்ட் தரையில கிடக்கு. தூக்கி பிடிச்சிதான் பார்ப்பமேன்னு தூக்குனா தலைக்கு மேல தூக்கியும் தரையில மடியுது. அடப்பாவி, இதுல முட்டிக்கு கொஞ்சம் கீழ வெட்டினாலே எனக்கு சரியா இருக்குமேய்யா. மிச்ச துணி இன்னோரு பேண்ட் ஆகுமேன்னு தோணுது. ஆல்ட்ரேஷன் ஃப்ரீன்னான்.

நாமதான் ஃப்ரீன்னா ஃபினாயில் கூட குடிப்பமே. எட்றா அளவன்னேன். நின்ன வாக்குலயே குனிஞ்சி ஒரு அளவச் சொன்னான். நாம அம்புட்டு ஒசரம். தச்சி வந்துச்சு. ஆவலா பிரிச்சா, மாவு மில்லுல மாவு பறக்காம கட்டி விட்ட துணி மாதிரி ஒரு ஷேப்பு. கலவரமானத பார்த்து ஃப்ரீயா இருக்கும்னு ஒரு கமெண்ட் வேற.

எதோ ஒரு காம்ப்ரமைஸ்ல ஓட்டிட்டிருந்திச்சி கதை. சேல்ஸ் எழவுதான் இப்படின்னு இருந்தா ஆஃப்டர் ஸேல் சர்வீஸ் அதாங்க இஸ்திரிக்காரம்மா. அது ரெண்டு வாரமா வராம ஸ்ட்ரைக்கு. அட போம்மா, நாமதான் ரிங்கிள் ஃப்ரீ வாங்கியிருக்கமேன்னு எடுத்து பார்த்தப்பதான் தெரிஞ்சுது. பய புள்ளைக ரிங்கிள் ஃப்ரீன்னா, சுருக்கம் ஃப்ரீயா சகட்டு மேனிக்கு இருக்கும்னு சொல்லி வித்திருக்கான் போல. நல்லகாலம் இன்னும் காஸ்ட்லியா வாங்கியிருந்தா நிறைய சுருக்கம் இருந்திருக்கும்.

தன் வசதிக்கு அந்தம்மா வந்து நின்னப்போ வூட்டுல இருக்கிற ஸ்டீம் அயர்ன் கவனம் வர, அதெல்லாம் தரமுடியாது. போய்ட்டே இரு. நானே பண்ணிக்குவேன்னு சொல்லிடுவேன். அது ஒரு மார்க்கமா, இந்த இடுப்பா வளையும்னு போயிரும். இது அப்பப்ப நடக்கறதுதான். கொஞ்சம் வருமானம் கொறைஞ்சா தேடிட்டு வரும். துணி தராட்டி போய்க்கோ. பசிக்குது சாப்பாடு குடுன்னு கேட்டு சாப்புடும். அதுக்கப்புறமும் எப்புடி குடுக்காம இருக்கிறதுன்னு சாப்புட்டப்புறம் இனி ஒழுங்கா வந்து துணி எடுத்துட்டு போணும்னு கண்டிசனா பேசி துணியக் குடுக்கறதுதான்.

அப்புடி வரலைன்னா, ரொம்ப கெத்தா நாமளே கொண்டு போய் நீ பெரிய டாட்டாவா? என்னமோ குடுக்காட்டி போன்னு போய்டுவியா? தொலைன்னு மருவாதியா கொண்டு போய் குடுத்துர்றது. இப்பிடியே போய்க்கிருந்துச்சு பொழப்பு. அட இத ஏன்யா இடுகையா போட்டு எங்க உசுர வாங்குறன்னு கேக்குறீயளோ. நேத்து கொஞ்சம் வீம்பு அதிகமா போயி நானே இஸ்திரி போட உக்காந்தேன்.

அஞ்சு கிலோ பொட்டிக்கே அங்க இங்க சுருக்கம் தெரியும். அரை கிலோ கூட இல்லாம ஸ்டீம் இருந்தாமட்டும்? என்னன்னாலும் நம்ம உழைப்புன்னு ஒரு மதர்ப்புல வலப்பக்கத்துல இருந்து இஸ்திரி பெட்டிய தூக்குனேன். ஓஓஓஓஓஓஓஓஒரம்தான், ஒரு சில செகண்ட்தான், ஒரு 4 இஞ்சுக்கு கோடு போட்ருச்சி தொடைல. அந்த எரிச்சல்தான். சரியா பர்னால் போடும்போது வந்து நிக்குது அந்தம்மா. ஒரு கேவலமான குறுஞ்சிரிப்போட துணி தராட்டி போற, சோறுன்னா போடுன்னு.  இந்த வங்கொடுமைய உங்க கிட்ட சொல்லாம எங்க போய் சொல்றது.
---:{}:---

Wednesday, March 9, 2011

இலட்சுமணப் பெருமாள் கதைகள் - வாசிப்பனுபவம்."சில் என்ற வாழைமட்டையில் உட்கார வைத்து பளிங்குத்தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் இலட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். பஜனை மடங்களும் புராண இதிகாச சிந்தனைகளும் உள்ள எனது மக்களைப் பார்த்து எத்தனை வருசங்களாகிவிட்டன....”

புத்தகக் கண்காட்சியில் இலட்சுமணப் பெருமாள் கதைகளின் அட்டைப் பட ஓவியம் என்னையறியாமல் எடுக்கத் தூண்டியது. பின்னட்டையில் மேல் பத்தியில் இருந்த வரிகளின் கீழே கி.ராஜநாராயணன் என்ற பெயர். வேறென்ன வேண்டும். படிக்க எடுப்பதும், இருக்கட்டும் என்று தள்ளி வைத்துவிட்டு மற்றவற்றைப் படிப்பதுமாயிருந்தாலும், அட்டைக் கிழவனின் பார்வைத் துளைப்பில் ஆரம்பித்தேன்.

கரிசல் மண்ணுக்கும் எழுத்துக்கும் அப்படி என்ன காதலோ. ஒரு வேளை எழுத்துக்காகவே ஒரு கால கட்டத்தில் நிப்புத் தொழில் செழித்திருந்ததோ என்று கூட தோன்றும். கதையின் ஆழம் ஒரு பக்கம் என்றால் நடை...

கி.ரா.வை படிக்கிறது வேறே. அந்த மனுசன் தோள்ள தூக்கி வெச்சி திருவிழாபார்க்க கூட்டிப் போன கதையா பராக்கு காட்டுவார். மொதப்பக்கம் தாண்டியாச்சின்னா கதைக்குள்ள நாமும்ல இருந்து வேடிக்கை பார்ப்போம். முடிச்சா புத்தகத்தை மூடினா அந்த உலகத்துல இருந்து வெளிய வரணுமேன்னுல்ல தவிப்பா இருக்கும்.

இலட்சுமணப் பெருமாள் எழுத்தும் அப்படித்தான். என்ன, கி.ரா.காலத்து மொழியில்லை. அதுவும் மாறினாலும் அடிநாதம் மாறாத மொழி. இதெல்லாம் கதையில்லெ. ஒரு ஒரு கதையும் ஒரு மனுசன் அல்லது மனுசியோட வாழ்க்கெ. எதச் சொல்ல எத விட. சிறுகதைத் தொகுப்புன்னா அது எடுத்தாச்சோ முடிக்காம வச்சு பழக்கமில்லை. இதுல அந்த பப்பு வேகாது. சொல்லுற கதை அப்படி.

‘ஊமங்காடை’ன்னு ஆரம்பிக்குது கதை. பஞ்சாயத்து ஜனங்களின் கிண்டலும், தன் கணவன் ஒரு திருநங்கை என்பதைச் சொல்லவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஊராரின் சிரிப்புக் கிடையே வழக்கு வரும்போது யாரும் ஊகிக்க முடியுமா? தன்னைப் பெண்ணாகவே பாவித்து திருமணம் செய்யக் கோரியவளை மகனாக நினைத்து ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்ததும், அடித்து உதைத்து தன் கவுரவத்துக்கு தாலி கட்ட வைத்ததும்? பொன்ராசு அழுதானோ இல்லையோ, நமக்கு நெஞ்சு வெடிக்கும்.

‘அத்து விட்ட’ பிறகும் அவளுக்குத் தோழியாய், அவள் பிள்ளைக்குக் காவலாய், அது பசியில் அழுது பாலுக்கு முண்டுகையில் தன் மார்பை ஏக்கமாகத் தடவும் பொன்ராசை பார்த்த தங்ககிளிக்கு மட்டுமா சரஞ்சரமாய்க் கண்ணீர் வரும்? இப்படி ஒரு கதையை படித்துவிட்டு அடுத்த கதைக்கு எப்படிப் போக?

ராமாயணத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம் யார்னு ஒரு கேள்வி வருது,  பாராயணம் கெங்கம நாயக்கர் கதையில. அவரே கேட்டு கதையச் சொல்றார். ராமன் வனவாசம் போகப் புறப்படவும், பின்னாடியே கிளம்பிட்டான் லட்சுமணன். ஊர்மிளைகிட்ட ஒரு வார்த்தையும் சொல்லல. வனவாசம் முடிஞ்சி வந்தப்பதான் கூட்டத்தில ஊர்மிளையை காணோம்னு கவனம் வருதாம். தேடிப் போறானாம். இவன் போனப்ப இருந்த உடையோட நகை அலங்காரத்தோட கட்டில்ல அவ எலும்புக் கூடு இருந்துச்சாம்.

இப்படிக் கதை சொல்ற கெங்கம நாயக்கருக்கு கெத்தும் அதிகம்தான். வீட்டுல தகராருன்னு இவரு மடத்துக்கு வந்துடுவாரு. வர முன்ன பொண்டாட்டிக்கு சாமான், பண்டம் வாங்கிக் கொடுத்து, கொட்டடி ஓரமா சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருன்னு வந்துடுவாரு. அந்த மவராசி ஊர்மிளை. செத்துக் கெடக்கான்னு தகவல் வந்து ஓடுறார் நாயக்கர். வாங்கிக் கொடுத்த பண்டம் எல்லாம் ஒரு மூலையில. அப்பா அம்மா கூட ஒத்து வரலைன்னு தனியா வந்தவங்களுக்கு நெஞ்சுல ஒரு மின்னல் வெட்டும்.

உள் பாவாடை கிழிஞ்சி போய் முடி போட்டு போட்டு ரிப்பன் மாதிரி இருக்கேன்னு ஒன்னுக்கு போகக் கூட தனியாப் போறா பாண்டியம்மா. கெரகம் அன்னேரம் பார்த்து ஒருத்தி வருவாளா? பொம்பளை கஷ்டத்த கூட்டத்துல சொல்லி சிரிப்பாளா? சோக்குக்கா பாண்டியம்மா உள்பாவாடை கட்டுறா.?நைலக்ஸ் சேல இடுப்புல நிக்க வேணாமா? இது புரியாம புது டிசைனான்னு கேலி பேசினா என்ன செய்ய? ஒரு வேகத்துல உருவி வேலிக்கு அந்தண்டை போடுறாள். டிபியில படுத்து கெடக்கிற புருசனுக்கு கைலிக்குள்ள அண்டர்வேர் இல்லாட்டிதான் என்னன்னு அதை உருவி தான் போட்டுகிட்டு போறா வேலைக்கு.

கும்பலோட போனா மானம் போகுமேன்னு அடக்கி அடக்கி வெடிச்சிடும் இனிமென்னு ஒத்தையாளா ஒன்னுக்கிருக்கப் போறா. சுத்தி முத்தி பார்த்து அண்டர் வேரை அவிழ்த்து ஒன்னுக்கிருக்கவா ஆளு வரணும். கிழிஞ்ச பாவாடைக்கே சிரிப்பா சிரிச்சாச்சே, கையில அண்டர்வேரோட சிக்க விதிக்குமா. வீசி எறிஞ்சிட்டு வந்து தீப்பெட்டி ஒட்டுறா. நேத்தைய பாவாடையும் இன்னைய அண்டர் வேரையும் சேர்த்து கொண்டுவந்து மொத்தமா கழுவேத்திட்டான் கணக்குப் பிள்ளை. வேலையும் போய் மானமும் போய் வீதிக்கு வர மூச்ச விட்டுட்டான் புருசன்னு ஆளு வருது.

கிழடுங்களுக்கு இருக்கிற பிரச்சனை, பாரமா நினைச்சி குழந்தையை மட்டுமில்ல கிழடுகளையும் கரை சேர்க்கிற புண்ணியவதி, பட்டாசு ஃபேக்டரியெல்லாம் எந்திரம்னும் மூடியாச்சேன்னு பொழப்பத்து போனதுல லாரி ட்ரைவர்களை நம்பி ஒரு வாழ்க்கை, அதிலும் அவமானம், அடி உதைன்னு படிக்க படிக்க அப்படி என்ன சாபம் வந்து சேர்ந்துச்சு இந்த மண்ணுக்குன்னு அழாம முடியுமா?

தீப்பெட்டி பேக்டரி பத்திக்குது. அய்யோ எம் புள்ளகென்னு பதறி வாரா விறகு பொறுக்கப் போன சேர்மத்தாயி. நாலும் பொட்டப் புள்ளைக. தீ புடிச்சதுமே ஓடி வந்துட்டுதுக. கட்டிப் புடிச்சி அழுகறா. அப்புறம்? கூலியில்லாம எப்புடி கூழ் குடிக்க? பசியில குஞ்சுகள் அல்லாடுது. செத்தவங்களுக்கு மட்டும் நிவாரணம். இவளுக்கில்லே. பசிக்கிம்மான்னு அழுதா என்ன செய்வா? கைக்கொரு விறகா எடுத்து விளாசுறா. எந்த ஜமீன் கொள்ளப் போச்சுன்னு ஓடியந்தீங்கடி. ஒருத்தி பொசுங்கியிருக்கப்படாதான்னு.

ஓட முடியாம கடைசிப் புள்ள காலைக் கட்டிக்கிட்டு அழுவுது. ‘அம்மா! இனிமே தீப்பிடிச்சா ஒடீயாரமாட்டம்மா, அடிக்காதம்மான்னு.’ இப்படி குழந்தைகளுக்கு ஒரு வழி செய்யாமச் சும்மா சைல்ட் லேபர் ஆக்ட், பட்டாசு வெடிக்கத் தடைன்னு வெள்ளை வேட்டி கசங்காம சட்டம் போடுறவன வையறதா? இன்னும் மூனு வருசம் போனா எம்புள்ள தீப்பெட்டி ஃபேக்டரில வேலைக்குப் போவானாம். நான் காலாட்டிகிட்டு கஞ்சி குடிப்பனாம்னு கொஞ்சுற ஆத்தாளை வையறதா?

இலட்சுமணப் பெருமாளின் கதையை காலம் மீறி வாழும். ஏனெனில் இவை தன் போக்கில் வளரும் காட்டுச் செடிகள்னு அழகிய பெரியவன் சொல்லுறது ஒன்னு போதாதா? அவசியம் படிக்கணும்.

அருமையான கதைகள். இப்படி ஆழமா அடி நெஞ்சை உலுக்குற நிஜங்கள். அருமையான புத்தக அமைப்பு. ப்ச். எத்தனை பசியோட ருசியான சாப்பாடுன்னு அனுபவிச்சி சாப்பிடும்போது கடுக்குன்னு ஒரு கல்லு சிக்கினா பசி, ருசி எல்லாம் மீறி வந்து உக்காருதே ஒரு எரிச்சல். இந்த வம்சி பதிப்பகத்துல பிழை பார்க்க ஆளே இல்லையா? ஒரு கல்லுக்கே இப்படின்னா வாய்க்கு வாய் கல்லாயிருந்தா என்ன செய்ய?

ஆசை ஆசையா பின்னூட்டம் போட்டு இன்னைக்கு உங்களுக்கு முன்ன வாங்கிடுவேன்னு வாங்கின அடுத்த விருந்து தோழர் காமராஜின் கருப்பு நிலாக் கதைகள் காத்திருக்கு. 
-*-

Tuesday, March 8, 2011

கூட்டணி பேட்டி

நிருபர்: என்னங்க நடந்துச்சு?

கலீஞ்சர்: ஹெ ஹெ. யார்ட்ட. அறுவத்தி மூணாம்ல அறுவத்தி மூணு. இருந்த எடத்துல இருந்து பில்லக்கா பசங்கள விட்டு கேட்டா பொத்தினாப்புல கொடுத்துறவமோ. கெளப்பிட்டம்ல பீதிய. மூணு நாளு தூக்கமில்லாம ஃபோன்மேல ஃபோன் போட்டு கெஞ்ச விட்டம்ல. இத மொதல்லியே பண்ணியிருந்தா அறுவத்தி மூணு என்ன நீயாப்பாத்து எதுனாலும் தந்தாச் சரின்னு சொல்லியிருப்பம்ல. நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. என்னைய யாரும் கிள்ளுக்கீரையா நெனச்சிரப்படாது. நானாத்தான் சரண்டராவேன்.
(ரை ரை..இப்புடியே மேண்டேன் பண்ணி போய்க்கேயிர்ரா சூனாபானா..உன்ன அடிச்சிக்கிறமுடியாது)

நிருபர்:
என்ன சொன்னீங்க?

கலீஞ்சர்: நான் என்னையச் சொன்னேன் என்னயச் சொன்னேன். மனசுக்குள்ள கூட பொலம்ப விடமாட்டேங்குறாங்களே...நான் என்ன செய்வேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: மருத்துவர் ஐய்யா. உங்க கிட்ட இருந்து ஒரு சீட்ட புடுங்கிட்டாரே கலைஞர்.

மருத்துவர்: கலைஞர் ஒன்னொன்னா எத்தனை சீட்டை வேணுமானாலும் புடுங்கட்டும் எம்மவனுக்கு அந்த ஒத்த சீட்டு கிடைச்சா சரி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: காங்கிரசை சுமந்தது போதும்னு எல்லாம் சொன்னீர்களே. இப்போது...

வீரமணி: தவறாகப் புரிந்து கொண்டீர்கள். தோளில் சுமப்பது என்பது பார்ப்பனக் கொள்கை. திருவிழாக்களில் சாமியைத் தூக்கி வருவது போல் என்ற அர்த்தத்தில் சொன்னேன். திராவிட பாரம்பரியம் புரிந்த கலைஞர் சரியான முடிவெடுத்து 3 நாட்கள் இறக்கிவிட்டு இப்போது கை கோர்த்து நடந்து செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: உங்களை தன்மானம் மிக்கவர்னு அழகிரி சொன்னாரே.

விஜயகாந்த்: அடுத்த படத்துல தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை தன்மானம்னு ஒரு பஞ்ச் டைலாக் வச்சிடுவேன்ல!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: காங்கிரஸ் திமுக கூட்டணி மீண்டும் உறுதியாகிவிட்டதே.

ஜெ: நிம்மதி. ஒரு வேளை எங்கள் கூட்டணியில் நின்று ஜெயித்தால் அந்த மனுசன் தனி ஈழம் ஏன் கேட்கவில்லைன்னே கொடச்சல் குடுப்பாரு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: சிபிஐ..சிபிஎம்..என்ன முடிவெடுத்திருக்கிறது.

கூட்டாக: ம்கும். தொகுதி கொடுத்தா தோள்ள, தோத்துப் போனா தலையிலன்னு வசதியா துண்டு வச்சிருக்கோம்ல. இதுல முடிவு என்னாத்த எடுக்கறது போங்க தோழரே அங்குட்டு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமா: ஏங்க ஏங்க நிருபரே! என்ன மட்டும் ஒன்னும் கேக்காம போறீங்க?

நிருபர்: கேக்கலைன்னாலும் சொல்லாமலா இருக்கப் போறீங்க. பழசுல இருந்தே தேத்திக்குவோம். பஸ்ஸ புடிக்கணும். வர்ட்டா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: அல்லோ அல்லோ நக்கீரன் நிருபர் சார்! நில்லுங்க.

நக்கீரன் நிருபர்:
அட போய்யா நான் மாட்டேன். எவனப் பார்த்தாலும் இன்னைக்கு இஷ்யூல திமுக கூட்டணி முறிவு..வெளிவராத மர்மங்கள்னு போட்டாங்களே..என்னா மர்மம் சொல்லுன்னு உசிரெடுக்கறாய்ங்க. இப்ப பீலாவும் விட முடியாம போட்டதையும் மறுக்க முடியாம பல்பு குடுத்துட்டாரு கலைஞரு.
----------------------------------------------------------------------------------------------------------------
பொதுஜனம்: யோவ் நிருபரே! என்னமோ வெரட்டி வெரட்டி அவங்கள எல்லாம் கேக்குற. நான் ஓட்டு போட்டாதான்யா கேள்வி கேக்க அவங்க ஆளு. என்ன கேக்க மாட்டியா?

நிருபர்: ஙே!....
__________________________________________________________________________________

Sunday, March 6, 2011

நறுக்னு நாலு வார்த்த V 5.9 (வடிவேலு பெசல்)

கம்யூனிஸ்டுகள் வரவேண்டும்: கூடுதல் இடங்கள் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. திருமா..

அய்யா! சரியாத்தான் பேசுறனா?
--------------------------------------------------------------------------------------------------------------
கலைஞரின் முடிவை உள்ளூர் முதல் உலகத் தமிழர் வரை பாராட்டுகின்றனர்: கி.வீரமணி.

என்னையச் சொன்னேன். என்னயச் சொன்னேன். அவ்வ்வ்.
--------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க.உரிய மரியாதை அளித்தது:கொ.மு.க.

தட்சிணையக் கூட மருவாதின்னுதான் சொல்லுவாய்ங்க. எம்புட்டுக்கு முடிச்சீங்ணா. திருமாட்ட சொல்லிறாதிய. கெஞ்சி கேப்பாக. அப்பவும் சொல்லிறாதிய.
--------------------------------------------------------------------------------------------------------------
கலைஞரின் சாதனை மக்களின் மனதில் நிற்கிறது: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி

கலைஞர வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.
--------------------------------------------------------------------------------------------------------------
பீகார் தேர்தலைப் போல கலைஞருக்கு மக்கள் வெற்றியை தேடி தருவார்கள்: சுப.வீரபாண்டியன்

டேய்! யார்ரா எங்க தலைவன்கிட்ட சீட்டுக்கு தகராரு பண்ணது. தைரியமா இருந்தா சி.பி.ஐ.ய அனுப்பி பாருடா. நீங்க என்னண்ணே. யார்கிட்ட?
---------------------------------------------------------------------------------------------------------------
திமுக அறிவிப்பு எதிரொலி: பிரணாப், குலாம் நபி ஆசாத் சென்னை வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு?

வந்து ‘வட போச்சே’ சொல்லுவாய்ங்களோ?
---------------------------------------------------------------------------------------------------------------
கூட்டணி பற்றி கருத்துகூற வேண்டாம்: காங்.

எத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும். ப்ளான் பண்ணாம பண்ணப்படாது.
----------------------------------------------------------------------------------------------------------------
எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை திமுக சந்தித்ததில்லை: கலைஞர்

சொந்த வீட்டுக்கே வாச்மேனா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
-------------------------------------------------------------------------------------------------------------
பிரச்சனைகள் உருவாக காங்கிரஸ் காரணமாகியது ஆச்சிரியத்தை அளித்தது: கலைஞர் அறிக்கை

ஆஹா! எப்புடி போனாலும் கேட் போடுறாய்ங்களே..
----------------------------------------------------------------------------------------------------------
கலைஞர் இமயமாய் உயர்ந்து நிற்கிறார்: திருமா

தில்லிருந்தா எங்கண்ணன ஒரசிப்பாருங்கடா.
-------------------------------------------------------------------------------------------------------------
அமைச்சரவையில் இருந்து விலகினாலும் காங்கிரசுடன் நட்பு தொடரும்: டி.ஆர்.பாலு

அய்யா..கலைஞர்..அய்யா...காமெடி பீசுய்யா நானு..நீங்கபாட்டுக்கு அறிக்கை விட்டுற்றீங்க..ராசா ஃபோன் பண்ணி அடியே திஹார்ல பக்கத்து ரூம் ரெடின்னு ஃபோன் பண்றான்யா..நா என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
திமுக வின் முடிவு குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி அவசர ஆலோசனை

என்னது? மீன் பாடி வண்டில போட்டு அனுப்பிவிடவா..சரிங்கம்மா..
---------------------------------------------------------------------------------------------------------------
தெளிவான மாற்றத்தை மக்கள் கொடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரதராஜன்

நீ வா சுருதி...(யோவ்! யாராச்சும் கைய நீட்டுங்கப்பா புடிச்சிக்கணும்ல)
---------------------------------------------------------------------------------------------------------------
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப் பட்டால் ஜெயில் தண்டனை: பிரவீண்குமார்

அடப் பாவி பாவி! இன்னும் திருடவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள ஊரு ஃபுல்லா போஸ்டர் ஒட்றீங்களேடா.
----------------------------------------------------------------------------------------------------------------

பெயர்ப் பொருத்தம்

டாக்டர் -- வைத்திய நாதன்
பல் டாக்டர் -- பல் லவன்
வழக்கறிஞர் -- கேஸ வன்
ஃபைனான்சியர் -- தன சேகரன்
இருதய நிபுணர் -- இருதய சாமி
குழந்தை வைத்தியர் -- குழந்தை சாமி
மனோதத்துவ நிபுணர் -- மனோ கரன்
கல்யாணத் தரகர் -- கல்யாண சுந்தரம்
கண் டாக்டர் -- கண் ணப்பன்
காது மூக்கு தொண்டை நிபுணர் -- நீல  கண்டம்
நீரிழிவு நிபுணர்  -- சக்கரபாணி
சத்துணவு நிபுணர் -- ஆரோக்கிய தாஸ்
ஹிப்னாடிஸ்ட் -- சொக்க லிங்கம்
பேயோட்டுபவர் -- மாத்ரு பூதம்
மேஜிக் நிபுணர் -- மாயா ண்டி
கொத்தனார் -- செங்கல்  வராயன்
பெயிண்டர் -- சித்திர குப்தன்
வானிலை நிபுணர் -- கார்மேகம்
விவசாயி -- பச்சை யப்பன்
பூந்தோட்ட நிபுணர் -- புஷ்ப வனம்
லேண்ஸ்கேபர் -- பூமி நாதன்
முடிதிருத்துபவர் -- கொண்டை ய்யா
பிச்சைக்காரன் -- பிச்சை யப்பன்
டாஸ்மாக் ஊழியன் -- மது சூதனன்
நடிகன் -- அம்பல வாணன்
எழுத்தாளர் -- நாவலன்
மேக்கப் நிபுணர் -- சிங்காரம்
பால்காரர் -- பசு பதி
நாய் பழக்குபவர் -- நாயகம்
பாம்பாட்டி -- நாக ராஜன்
மலையேறுபவர் -- ஏழு மலை
ஈட்டி எறி வீரர் -- வேலாயுதம்
உயரம் தாண்டுபவர் -- தாண்ட வராயன்
எடை தூக்குபவர் -- பல ராமன்
மல்யுத்த வீரர் -- குண்டு ராவ்
கராத்தே வீரர் -- கை லாசம்
கிக் பாக்ஸர் -- எத்தி ராஜ்
பௌலர் -- பாலாஜி
ஸ்பின் பௌலர் -- திருப்பதி
பெண் ஸ்பின் பௌலர் -- திருபுர சுந்தரி
ஓட்டுனர் -- சாரதி
கவனமாய் ஓட்டுபவர் -- பார்த்த சாரதி
(மின்னஞ்சலிலிருந்து)

Friday, March 4, 2011

நறுக்னு நாலு வார்த்த V 5.8

கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்

ரோடு போட வாங்கின காச கன்ஸல்டேஷன்ல கழிச்சிக பேரமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை - இந்தியா அதிருப்தி

ஹி ஹி. கொத்து கொத்தா கொல்லுறப்ப உக்காந்து பேச சொன்னாருல்ல சிதம்பு. அவர போய் பேசச் சொல்லுங்கலே.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமைகள் பேரவையின் கேள்விகளுக்கு மெளனம் காத்த மஹிந்த சமரசிங்க : பொய் கூறியதாக குற்றச்சாட்டு

பொழுது போவாத கேக்குறானுவன்னு தெரியும். இதுக்கு பதிலு வேற மசிரான்னு இருப்பான். அதனால என்ன போச்சு?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜயகாந்த்

ரண்டு பேரும் திரும்ப நடிக்க போறாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர் வீட்டை எட்டி பார்க்கும் செயலை தொடர வேண்டாம்: S.V.சேகருக்கு இளைஞர் காங்.கண்டனம்.

ஆமா பின்ன! இவனுவ உரிமை மீறல் பிரச்சினையில்ல
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் அமைச்சராக கலைஞர் 6வது முறையாக பதவி ஏற்க நிபந்தனையற்ற ஆதரவு: பாமக

இதுல ஏதோ உள்குத்து இருக்கே! எப்புடியும் புட்டுக்கும். புள்ளைங்க கொடச்சல் தாங்க முடியலன்னு பொலம்ப தோதா இருக்கும்னு பிட்ட போடுறாரோ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
விஜயகாந்த் எனது நண்பர்: தன்மானம் மிக்கவர்: மு.க.அழகிரி அதிரடி பேட்டி

விருதகிரிக்கு விருதாகிரி சர்ட்டிபிகேட்டா? வெளங்கீரும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
10 ஆயிரம் விருப்ப மனுவை தேமுதிகவினர் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்: சுதீஷ்

என்னதான் கேப்டன் கட்சி பந்தான்னாலும் இது ரெம்ப ஓவராயில்ல? அம்புட்டு உறுப்பினராவது இருக்காங்களாப்பு?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் கடைசி அல்லது மே தொடக்கத்தில் தேர்தலை நடத்தலாம்: தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா ஆலோசனை

கூடவே கூட்டுத் தொகை 9 இல்லைன்னா 6 வர தேதின்னும் சொல்லியிருக்கலாம்ல. ஏதும் கெரக பெயர்ச்சி இருக்கோ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கே.ஜி. பாலகிருஷ்ணன் குடும்ப சொத்து கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

‘சொத்து கூடுதலுக்கு’ ஆதாரமெல்லாம் வச்சிருப்பாராய்யா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் காரியகமிட்டி மாற்றம்: வீரப்பமொய்லி நீக்கம் 

அத்து! காரியத்துல மொய்க்கு என்ன வேலை?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
குவாத்ரோச்சி விடுவிப்பு

ங்கொய்யால சும்மா விடுவிக்காதீங்கடா! சத்ய கீர்த்தி சன்மான்னு ஒரு விருது குடுத்து அனுப்புங்கவே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காமன்வெல்த் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரசார்பாரதி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ சோதனை

இந்த நிவிஸ் ஆல் இண்டியா ரேடியோல வந்துசோ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ.50 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த அசன் அலியை விசாரிக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

கண்டுக்காம இருக்க கட்டிங்கும் குடுத்து வரியும் கட்டுவாங்களா? #அசன் அலி
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மன்மோகன்சிங், ப.சிதம்பரம் பதவி விலக தேவையில்லை- காங்கிரஸ்

ராசா! காங்கிரசுல சேர்ந்துடுப்பா. திரும்ப மந்திரி ஆயிடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------