Friday, March 18, 2011

கேரக்டர் - யூனியன் ராமமூர்த்தி.


சில மனிதர்களின் பரிச்சயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தடாலடியாக நடந்துவிடும். சில நிமிடமோ, சில மணி நேரமோ, சில நாட்களோ பரிச்சயமிருப்பினும், ஆழ்மனத்தில் ஆழமாக ஒரு தடம் விட்டுச் செல்வார்கள். அப்படி வந்த ஒருவர் யூனியன் ராமமூர்த்தி.

மதியத்திற்குள் கையொப்பமிடவேண்டிய அவசியத்தில் சட்டைத் துணி பண்டல்போல் இழுக்க இழுக்க வந்தபடியிருந்த கம்யூட்டர் செக்கில், நெருப்புக் கோழிபோல் தலை கவிழ்ந்தபடி கையொப்பம் பறந்து கொண்டிருந்த ஒரு வேனில் மதியம். பாதி சமாதியான அனார்கலிபோல் சுற்றிலும் ஃபைலும், பில்லும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

திடீரென்று சப்தமில்லாமல், கதவு திறந்தது கூட தெரியாமல் திறந்து ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஷ்ண ஷ்ண, ராமராம, ந்னப்பா முருகா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சப்தம் வந்தால் என்ன செய்ய? கையிலிருந்த பேனா தெறிக்க வெல வெலத்துப் போய் பதறி எழுந்தவனை, சாம்பல் ரெக்ஸின் பை தொங்கவிட்ட ஒரு கையும், கை வளைவில் குடை தொங்க விட்ட ஒரு கையும் ஒரு சேர்ந்து ‘நமஸ்காரம்’, என்றது. ‘நீ ஏம்பா எழுந்து நின்னுண்டு. மரியாதை மனசில இருந்தாப் போறும்’ என்ற போது பொத்துக் கொண்ட வந்த சிரிப்பை எப்படி அடக்கிக் கொண்டேன் என்று இப்போதும் வியப்பாய் இருக்கும். நம்ம சிரிப்பு அப்படி.

ஐந்தடி மூன்றங்குல உயரமிருக்கும். சற்றே பூசினாற் போன்ற உடல் வாகு. என்னையும் விட அடர்த்தியாகவே வெண்பஞ்சுத் தலை. களைத்த முகம் மீறிய தேஜஸ். வாழ்நாள் முழுதும் கண்ட சோகத்தைக் கோடு காட்டியும் ஏதோ ஒரு நெருக்கம் உண்டாக்கும் முகம். நிம்மதியாக சாப்பிட்டு வீட்டில் ஈஸிச் சேரிலோ, ஊஞ்சலிலோ அல்லது திண்ணையிருந்தால் அங்கோ சாய்ந்து ஓய்வெடுக்கும் வயது. அந்த மதிய வெயிலின் அயற்சி முழுதும் கண் காட்டியது. சற்றே சாய வாய்ப்பிருப்பின் தூங்கக் கெஞ்சும் தளர்ச்சி. 

துவைத்துச் சுத்தமான இஸ்திரி போடாத கசங்கலுடன் கூடிய முழுக்கைச் சட்டை. குனியமுடியாமலோ, கிடக்கிறது போ என்றோ மூன்றாவது பட்டனுக்கு இரண்டாவது கண்ணில் நுழைத்து கோணல் மாணலாக போட்டிருந்த சட்டை. முழுக்கையை மடிக்காமல், பட்டனும் போடாமல் விட்டிருந்தார். சட்டை பாக்கட்டைப் பிதுக்கிக் கொண்டு காகிதக் கற்றை அடைந்திருந்தது. ஏற்ற இறக்கமாகவே அள்ளிச் சுருட்டிக் கட்டிய நாலு முழ வேட்டி. மழையில் நனைந்தாற் போல் தலையும் முகமும் வியர்வை வழிந்தது. 

அமரச் சொல்லி, ப்யூனை அழைத்து தண்ணீர் கொடுக்கச் சொன்னதும் விகசித்தது முகம். வென்னீர் வேண்டுமா என்றேன். ‘ஐஸ் வாட்டர்’ என்று குழந்தையைப் போல அவசரமாக சொல்லிவிட்டு, திரும்பவும், உஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ் என்று மூச்சு வாங்கிக் கொண்டார். காலர் கர்ச்சீஃபை உருவி, முகம் தலை என்று துடைத்து, தண்ணீர் அருந்தி மீண்டும் உஸ்ஸ்ஸ்ஸிய பிறகு அமைதியாய் அமர்ந்திருந்தார்.

‘என் பேர் ராமமூர்த்தி. இங்கதான் சீனியர் க்ளார்க்கா ரிட்டயர் ஆனேன். முரளியெல்லம் என்னிட்ட வேலை கத்துண்ட பையன். அவன பார்க்கலாம்னு வந்தேன். லீவாம். அதான் உன்னைப் பார்க்க வந்தேன்’ என்றார்.
(முரளி என் அதிகாரி)

‘காஃபி, ஜூஸ் எதாவது சாப்ட்ரீங்களா?’ என்றேன்.

‘ஒன்னும் வேண்டாம்பா. கார்த்தால சாப்பிட்டுதான் வந்தேன். கார்த்தால ஒரு காஃபி, ஒரு வேளை சாப்பாடு, ராத்திரிக்கு கஞ்சி, தலை வலிச்சா மதியான காஃபிக்கு ஒரு சாக்கு. அல்மோஸ்ட் தினமும் தலவலி வந்துடும்’ என்று சிரித்தார்.

‘நான் ஏதாவது உதவ முடியுமா’ என்றேன்.

‘என்ன கேழ்விடாப்பா கேக்கற? எனக்கு நீங்கள்ளாம் ஹெல்ப் பண்ணாம யாரு பண்ணுவா?’ என்று முடிப்பதற்குள் ஆயாசம் கண்ணைச் சொக்கியது அவருக்கு.

‘நான் ஹார்ட் பேஷண்ட். ஸ்பெஷல் மாத்திரை டாக்டர் எழுதிருக்கான். பார்மஸிஸ்ட் அது இல்லைன்னு மாவு மாத்திரை நீட்ரான்.  லோக்கல் பர்ச்சேஸ் பண்ணிக் குடுன்னா, ஓவரா பேசரான். இதுங்கள்ளாம் போய்ச் சேராம மாத்திரை மருந்துனே தின்னு உசிர எடுக்குதுங்கன்னு முனகினான். கெழவனுக்கு காது டும்முன்னு நெனச்சிண்டான் போல’

‘என்னடா நினைச்சிண்டிருக்க நீ. கெழவன்னா எளப்பமா போச்சா? குடுக்க முடியாதுன்னா எழுதிக் கொடு. நீ பெரியவனா, டாக்டர் பெரியவனான்னு பார்க்கறேன்னு வாசப்படில உக்காந்துட்டேன். ஆடிப் போயிட்டான் ஆடி. ஆனாலும் ஈகோ. குடுத்துட்டு போ. ரண்டு நாள் கழிச்சி வந்து பாருன்னான். மாத்ர போடாட்டா மார் வலி வந்துடும்டா எனக்கு. மடிப்பாக்கத்துல இருந்து வரேன்னா, சரி சாமி, போய் டாக்டர் கிட்டயே லோக்கல் பர்ச்சேஸ்னு எழுதி வாங்கிண்டு வான்னு விரட்டிட்டான். அதான் முரளிய தேடிண்டு வந்தேன். நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் என்றார்.’

இதைச் சொல்லும் வரையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதராய் இருந்தார் அவர். சட்டென்று ஒரு வாலிபனின் மிடுக்கும், போராட்ட குணமும் தொற்றிக் கொண்டு ’ஹெல்ப் பண்ணேன்’ என்றபோது காணாமல் போயிருந்தது. டாக்டரிடம் பேசி, சீட்டை வாங்கி அனுப்பிவிட்டு மெதுவே ‘இந்த வயசுல இவ்வளவு கோவப்படலாமா? ஹார்ட் பேஷண்டுன்னு சொல்றீங்க? என்றேன். 

‘சட்டென்று மீண்டும் கண்ணில் ஒரு மின்னல். முடியாமல் ‘ஹூம்’ என்றதிலும் ஒரு கம்பீரம். 

‘அப்போ நீ படிச்சிண்டிருந்திருப்ப. ஐ.பி.எம் மெயின் ஃப்ரேம் கொண்டு வரான். எத்தன பேருக்கு வேலை போகுமோ? எத்தனை பேருக்கு வேற வேலைன்னு தொறத்தறானோன்னு ஒரு பதைப்பு. தலைவரு மயிராண்டி எனக்கென்னன்னு இருக்கான். வேலை எல்லாம் போகாது. மாற்றலுமிருக்காதுன்னு உறுதி வாங்கணும்னு முடிவு பண்ணா லெட்டர் எழுதிட்டு உக்காந்திருக்கான்.’ 

’நான் காத்தால காபி சாப்டுட்டு தயிர்சாதம் கட்டிண்டு வந்துடுவேன் எட்டுக்கெல்லாம். நம்ம வேலையை முடிச்சி வச்சசாதானே நாம நாலு தொழிலாளி பிரச்சனைக்கு போய் பேசலாம். கப்பல்ல இருந்து பெரிய ட்ரெயிலர்ல கொண்டு வரான். ஸ்பெஷலா ட்ராஃபிக் ப்ளாக் வாங்கி ஜி.ஹெச். வழியா வந்து நம்ம அவுட்கேட் வழியா உள்ள வரான்னு தெரிஞ்சது.’

‘சரியா காத்துண்டிருந்தேன். ட்ரெயிலர் லாரி மெமோரியல் ஹால் தாண்டி மிண்ட் ஸ்ட்ரீட் எண்டர் ஆரான். வெளிய படுத்தா போலீஸ் புடிச்சிண்டு போயிடுவான். ஆஃபீசுக்குள்ள படுத்தா ஆர்.பி.எஃப். தூக்கிண்டு போயிடுவான். பாதி உள்ளையும் பாதி வெளியவுமா கேட் நடுவுல படுத்துட்டேன். தொழிலாளரின் வேலைக்கு உத்தரவாதம் கொடு. இயந்திரமயமாக்காதேன்னு கத்திட்டு கண்ண மூடிண்டு படுத்துட்டேன்.’ 

‘போலீசுக்கும், ஆர்.பி.எஃபுக்கும் தகராரு. மந்திரி, ஜட்ஜெல்லாம் வர நேரம். ட்ராஃபிக் அடைக்குது. இழுத்து போடுய்யாங்கறான் போலீஸ். வெளிய கெடக்கான் நீ தூக்கி போட்டுட்டு போய்யாங்கறான் ஆர்.பி.எஃப். மட மடன்னு ந்யூஸ் பரவி, யூனியன் ஆளெல்லாம் வந்து கோஷம் போட்டாங்க. அப்புறம் குசு குசுன்னு தலைவர் ஜி.எம். கிட்ட பேசப் போறார். நீ இப்படி பண்ணா தப்பு. எழுந்து வாங்கறான்.’

‘அட போடான்னு, ஜி.எம். வரணும். இங்க வாய் மொழி உறுதி கொடுக்கணும். அப்பதான் எழுந்திருப்பேன். ஆனதைப் பாருன்னு கெடந்தேன். வந்தாண்டா பையா! ஜி. எம். தேடிண்டு வந்து சொன்னான். யாருக்கும் வேலை போகாது. புரியாம போராட வேண்டாம். பேசலாம் எழுந்திருன்னு கூப்புட்டான்.’

‘ஒத்தை ஆளா யூனியனுக்கு சொல்லாம போராடினது தப்பாம். தலைவருக்கு கோவமாம். வந்து பார்க்கச் சொல்றார்னு சொன்னானுவ. போடா மயிராண்டிகளா. நான் வாழ்கன்னு கத்திண்டேனா. இல்ல போட்டி சங்கம் ஆரம்பிச்சேனா. அதே யூனியன். அதே தலைவன் வாழ்கன்னு தானே கத்திண்டு வந்தேன். முடிஞ்சா வெளியேத்தச் சொல்லு. நான் எவனையும் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.’ 

‘எந்த மீட்டிங்குக்கும் போறதில்லை. வருஷா வருஷம் சந்தா வாங்கி கட்டணும். எவன் குடுக்கறான் தானா? நான் போய் கெஞ்சிண்டிருக்க மாட்டேன். பாதி பேரு தருவான். மீதிய நான் கட்டிண்டிருந்தேன். இப்ப அதும் லாபம். நம்ம ஆஃபீஸ்ல இருந்து பத்து பைசா பேறலை. டிபார்ட்மெண்ட் வித்தியாசம் இல்லாம எல்லாருக்காகவும் போய் பேசுவேன். அடாவடி கேசுக்கெல்லாம் காசு வாங்கிண்டு போக ஆரம்பிச்சானுங்க. நம்ம கிட்ட அந்த வேலையெல்லாம் கிடையாது.’

‘ஜெனூயின் கேஸ்னா போய் சொல்லுவேன். பெரும்பாலும் என்னைத் தெரியும். உடனே முடிச்சி குடுப்பாங்க. தெரியாம எவனாவது சீண்டினா செத்தான். பாத்ரூம் போனாலும் பின்னாடியே போய் பேசுவேன். வாசப்படில உக்காந்து பதிலச் சொல்லிட்டு போன்னா பதறிண்டு பண்ணிக் குடுப்பான்.’ என்று சிரித்தார்.

‘பசங்க என்ன பண்றாங்க? என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன். காற்றுப் போன பலூனாகிவிட்டார். இன்னும் இரண்டு வயதும் இரண்டு மடங்கு ஆயாசமும் கூடிவிட்டது. ப்ச். யூனியன் யூனியன்னு இருந்துட்டேன். ஒரு பையன். எஸ்.எஸ்.எல்.சி. தாண்டலை. சமத்து போறாது. உடம்பு வேற அடிக்கடி படுத்தும். 32 வயசாறது. வேலை வெட்டிக்கு போகணும்னே தோணலை. ரெண்டு மூணு இடத்துல சொல்லி வேலை வாங்கி குடுத்தேன். தலைய வலிக்கறதுன்னு சேர்ந்த அன்னிக்கே பாதில வந்துடுவான்.’

‘இந்த வயசுல, பகவானே, இந்த மாத்திரை மருந்தெல்லாம் வேண்டாமேன்னு போய்ச் சேரலாமேன்னு தோணும். பாதி பென்ஷன் போயிடுமே. வர காசுல ஒத்தப் பொம்பளைக்கு காணுமா. இதுல பையன் வேற. அவளுக்கு லோகாதயம் தெரியாது. புள்ளைக்கு கலியாணம் பண்ணா சரியாயிடுவான்னு என்னைத் திட்டிண்டிருப்பா.நான் போனப்புறம் இவனுக்கு சோறு போடவே முடியாதுடி உன்னால . இதுல இன்னொரு பொண்ணு வயத்தெரிச்சலும் சேரணுமான்னு சண்டை வரும், என்று உடைந்து அழுதுவிட்டார்.’

அதற்குள் மாத்திரை வந்துவிட பல முறை நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். நடு மதிய வெயிலா இருக்கே. கொஞ்சம் வெயில் தாழப் போகலாமே ஸார் என்றேன். கிழவி வாசலுக்கும் உள்ளுக்குமா அல்லாடிண்டிருப்பாடா காணோமேன்னு. நான் மெதுவா போயிடுவேன் என்று கிளம்பினார். 

துணைக்கு ஒரு ஆளை அனுப்பி ஆட்டோவில் ஏற்றி பார்க் ஸ்டேஷனில் ரயிலேற்றி விடுவது மட்டுமே என்னால் அந்த சுயநலமற்ற தொழிற்சங்க நண்பருக்கு செய்ய முடிந்த மரியாதை. கழுத்துப் பட்டியுடன் கதவு வரை போய் அரை மார்போடு திரும்பி, ‘தாங்ஸ்டா அம்பி. வரேன்’ என்று கையாட்டிய முகம் நினைவை விட்டகலாது. 
  -:o:-

27 comments:

ஓலை said...

Hello Sir

முகிலன் said...

அருமை. நானும் அந்த ஆஃபிஸில் உட்கார்ந்து பார்த்த மாதிரியே இருக்கு.

ஓலை said...

சார்! அருமையான கேரக்டர் சார். இன்னிக்கு தான் உங்க கேரக்டர் பதிவுகள் ஞாபகம் வந்தது. உடன் ஒரு தொழிற்சங்க ஊழியர் பற்றி.

இராமசாமி said...

மனச அழுத்தி பாக்கற எழுத்து சார் உங்க கேரக்டர் பதிவுகள். இந்த பதிவும் அப்படியே...

இருந்தாலும்

//என்னையும் விட அடர்த்தியாகவே வெண்பஞ்சுத் தலை.//

இந்த ஒரு இடத்துல என்னயும் மீறி ஏனோ சிரிப்பு வந்தது.

bandhu said...

பார்க்கறதை எல்லாம் நினைவடுக்கில் புகைபடமாக்கிக்கொண்டு பின்னால் அழகாக எழுதும் கலையை எங்கு கற்றீர்கள்?

யூர்கன் க்ருகியர் said...

ஹ்ம் ... நல்லவங்கதான் அதிகமா கஷ்டப்படறாங்க !!

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very nice and detailed narration about each of the characters that you are writing.

Casual writing is gifted to you Bala Sir.

People like 'Union rama murthy' are rare to come and easy to miss.

காமராஜ் said...

அபாரம் அண்ணா

DrPKandaswamyPhD said...

பையன் உருப்படலைன்னு சொன்னார் அல்லவா. ஏன் என்று யோசித்தேன்? பொறுப்பு பத்தலைன்னு தோணித்து. இவரே குடும்பப் பொறுப்ப கவனிக்காததாலதான் அப்படி நேர்ந்ததோன்னு தோண்றது.

Rathnavel said...

நல்ல பதிவு. தொழிலில் முழுக்கவனத்துடன் இருந்தால் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது.
நன்றி.
kindly visit my blog 'Srivillipuththuuril Thirumukkulam' (my first tamil blog) about Tank belonging to Sri Andal Temple of Srivilliputtur (Birth Place of Sri Andal) & have your comments & guidance.
rathnavel-natarajan.blogspot.com
email id: rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com
Thanks.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தப்பிப் பிறந்த தொழிற்சங்க உறுப்பினரோ?
(நானும் பல யூனியன் தலைவர்கள்/தொண்டர்களைப் பார்த்தவன்தான்.)
உங்கள் எழுத்துக்கு ரொம்ப வசீகரம் இருக்கிறது, சார்!

சேட்டைக்காரன் said...

//குனியமுடியாமலோ, கிடக்கிறது போ என்றோ மூன்றாவது பட்டனுக்கு இரண்டாவது கண்ணில் நுழைத்து கோணல் மாணலாக போட்டிருந்த சட்டை.//

இடுகை முழுக்க இழையோடுகிற ஐயாவின் முத்திரைகளுக்கு ஒரு சாம்பிள்.

இப்படியும் தொழிற்சங்கக்காரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதனை ஒரு கேரக்டர் மூலம் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஸ்ரீராம். said...

முதல் பாரா அறிமுகம் சூப்பர்.
சட்டைத் துணி பண்டல் போல உவமை அழகு.
மாத்திரைக்கும் மாவு மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?
அவ்வளவு விவரமான ஆள் சட்டைப் பொத்தானை மாற்றிப் போட்டிருப்பாரா என்ற கேள்வி வந்தது. டாக்டர் முரளி உங்கள் அதிகாரி என்றால் நீங்கள்?

அகல்விளக்கு said...

அருமை... உடனிருந்து பார்த்தது போல தோன்றுகிறது அண்ணா...

பா.ராஜாராம் said...

அற்புதம் பாலாண்ணா! கைல தூக்கி வச்சுக்கிட்டு அப்படியே கொஞ்சலாம் போல வர்றது. கிரேட்! :-)

ராஜ நடராஜன் said...

மறுபடியும் வாரேன்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அருமை சார்! எங்காவது தேவைப் படறவங்களுக்கு யாரையாவது உதாரணமா சொல்லும்போது இதெல்லாம் வந்துடுமோன்னு பயமா இருக்கு! :))

மதுரை சரவணன் said...

அருமை...கண்முன் நிறுத்தியது நிகழ்வை உங்கள் எழுத்து..வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

அருமை...கண்முன் நிறுத்தியது நிகழ்வை உங்கள் எழுத்து..வாழ்த்துக்கள்

sriram said...

பாலாண்ணா
1-2 மணி நேரம் மட்டுமே பார்த்த ஒருவரைப் பத்தி இவ்வளவு விரிவா, வர்ணனையோடு எழுத முடியுமா?
Amazing பாலாண்ணா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ரிஷபன் said...

ஒரு கேரக்டரைக் கவனிப்பது மட்டுமல்ல.. அப்படியே உள்வாங்கி வாசிப்பவருக்கும் அதே உணர்வு வரும் வகையில் எழுத்தில் பதிவிட்டு ட்ரான்ஸ்பர் செய்வது பெரிய கலை.
ம்ம்.. அது உங்களுக்கு வெகு இயல்பாய் கை வருகிறது

கே.ஆர்.பி.செந்தில் said...

திரு.ராமமூர்த்தி ஐயாவுக்கு என் வந்தனம்,, உங்களை வெறுமனே பாராட்டிவிட்டு செல்லமுடியவில்லை.. விரைவில் சந்திக்கிறேன்..

க.பாலாசி said...

மனிதர்களை படிக்க இங்குதான் வரவேண்டும் போலிருக்கிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம்.. ஒரு படிப்பினை கற்றுக்கொடுப்பது இந்த கேரக்டர் பதிவுகள்.

ஆமாம் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான தொழிற்சங்கங்களைவிட இந்த ரயில்வே பணியாளர்களுக்கான தொழிற்சங்கங்களில் நிறைய அரசியல் இருக்கும்போலிருக்கிறதே. நானும் நிறைய கவனித்திருக்கிறேன். அதை பற்றியும் எழுதமுடிந்தால் எழுதுங்களேன்.

Kathir said...

அருமையிலும் அருமை!

கேரக்டர் புத்தகம் வெளியீடு எப்போ!?

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க சேது
@@நன்றி முகிலன்
@@நன்றிங்க இராமசாமி
@@நன்றி பந்து
@@ஆமாம் யூர்கன். நன்றி
@@நன்றிங்க அருள் சேனாபதி
@@நன்றி காமராஜ்
@@ஆமாங்க கந்தசாமி அய்யா.
@@நன்றிங்க ரத்தினவேல் அய்யா. ப்ளாக் அட்ரஸ் குடுங்க ப்ளீஸ்
@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி ஸ்ரீராம். முரளியும் நானும் டாக்டர் இல்லை. அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸர்ஸ்தான். நாங்க வாங்கிட்டு இம்ப்ரஸ்ட்ல வாங்கிக்கலாம்.:)
@@நன்றி சேட்டை
@@நன்றி ராஜா
@@நன்றி பா.ரா
@@நன்றி ஷங்கர்
@@நன்றி சரவணன்
@@நன்றி ராஜண்ணா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி ரிஷபன்
@@நன்றி செந்தில்
@@நன்றி பாலாசி

வானம்பாடிகள் said...

/Kathir said...

அருமையிலும் அருமை!

கேரக்டர் புத்தகம் வெளியீடு எப்போ!?/

நன்றிங் மேயர். இந்த குசும்புதானே:)