Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, August 22, 2013

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


பிறந்து வளர்ந்தது அம்பத்தூர் என்றாலும் மெட்ராஸ் அப்போது பட்டணம்தான். பட்டணத்தோடான என் முதல் நினைவு லீவில் சேலம் அல்லது ஈரோட்டுக்குப் போவதற்காக செண்ட்ரல் ஸ்டேஷன் போவதுதான். ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் (இப்போதைய வெஸ்ட்கோஸ்ட்) எப்போதும். தேர்ட் க்ளாஸ் பெட்டியில் இடம் கிடைக்கும். பேஸின் ப்ரிட்ஜ் தாண்டும் வரை சிறுசுகள் உட்கார்ந்ததாக சரித்திரம் கிடையாது. முண்டியடித்து இடது வலது என்று பாய்ந்து பக்கிங்காம் கனாலில் போட்டில் போகும் சவுக்கு, உப்பு மூட்டைகளைப் பார்ப்பதில் அத்தனை குஷி.


தீபாவளிக்கு பாரிஸ் கார்னரில் இப்போதைய சரவணபவன் இருக்கும் இடத்தில் சுபைதா டெக்ஸ்டைல்ஸில் ரெடிமேட் பட்டி டவுசர், ஸ்லாக்‌ஷர்ட் தீபாவளி பொங்கலுக்கு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். அப்போதெல்லாம் தள்ளுபடிக்கு பாய்பவர்கள் இல்லை வாடிக்கையாளர்கள். கொத்தவால் சாவடி காய்கறிக்கென்றால் ட்ரஸ்ட் ஸ்கொயர் மளிகைக்கு.



நகைக்கடைகள் செட்டியார்களிடமிருந்தது. குடும்ப வைத்தியர் மாதிரி குடும்ப செட்டியார்கள். தலை முறை உறவுகள். இன்னாரின் பேரன் என்றால் கல்லாவில் இருக்கும் பெரிய செட்டியார் மற்ற உறவுகளை விசாரிப்பார். 



பட்டுக்கு காஞ்சீபுரம் போக முடியாவிட்டால் கந்தசாமி கோவில் தெரு மணிசங்கர் தவே. ஆரிய பவன் தோசை. இப்ரஹீம் கரீம் குடை. ரெயின் கோட், ஸ்வெட்டருக்கு யூனூஸ் சேட்/யூசுஃப் சேட் கடை, புடவைக்கு மங்காராம். சீக்கோ வாச்சுக்கு பர்மா பஜார். பல் நோவுக்கு ரத்தன் பஜார் சீன டாக்டர்கள்.



மூர்மார்க்கட் தனி உலகம். பேனா பேர் படிக்க சொல்லிவிட்டு சொக்காயை பிடித்து வாங்க வைப்பது, 30ரூ தோல் செருப்புக்கு பித்தளை ஆணி 5 பைசை என்று ரோபோ வேகத்தில் டிசைன் கட்டி அடித்துவிட்டு 50ரூ கேட்டு மிரட்டும் வியாபாரம், குச்சி பால் ஐஸ்/சர்பத் ஒன்னு பத்துபைசா என்று சொல்லி  கெத்தாக பத்து சொன்ன பிறகு ஒரு ரூ பத்துபைசா என்ற மோசடியெல்லாம் வாசலோடு. 



கிழக்குப் புறம் செண்ட்ரலை ஒட்டி இரும்பு சாமான்கள், கத்தி கபடாக்கள், தெற்குப் புறம் மிலிடரி யூனி ஃபார்ம்கள், மேற்கே சூட்கேசுகள்/ரெக்ஸின் பைகள் பார்டர் தாண்டி மெயின் காம்ப்ளக்சுக்கு வந்தால் சுற்றிலும் புத்தகக் கடைகள்.



கப்புசாமி என்று பில்லில் கையெழுத்துப் போடும் கடைக்காரருக்கு மேற்கத்திய புதினங்கள், மருத்துவப் புத்தகங்கள், எஞ்சினியரிங் புத்தகங்கள் அத்தனையும் அத்துப்படி. பேட்லிபாய் அக்கவுண்டன்ஸி இன்று அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பேர் எழுதாமல் புதுக்கருக்கழியாமல் கொடுத்தால் அன்றைக்கு என்ன விலையோ அதற்கு வாங்கிக் கொள்வார்கள்.



உள் வளைவில் பொம்மைகள், பைகள், ஃபேன்ஸி ஐட்டம்கள். அடுத்த கட்டத்துக்கு குடும்பஸ்தர்கள் போக மாட்டார்கள். விடலைகள் அங்கு விட்டு வரமாட்டார்கள்.  வேடிக்கை மட்டும் பார்த்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும் மாமாக்கள் காசு பிடுங்கி விடுவார்கள் என்பதால் ஓரக் கண்ணால் பார்த்தபடி  ஒரு நோக்காக/நேக்காக சுத்தி வந்து மையப் பகுதிக்கு வந்தால் இன்றைய அல்லிகுளம். இறைக்காத நீறூற்று. ஹார்லிக்ஸ்/ஹமாம் அட்டை பெட்டியில் பாஸ்போர்ட்/பணம்/மாற்று அழுக்கு உடையுடன் கஞ்சா/சப்பி/ஆர்.எஸ்.பவுடர்/அபின் மயக்கத்தில் வெளிநாட்டு ஹிப்பிகள். 



லுங்கி கட்டிக் கொண்டு வந்தால் டிக்கட் கொடுக்காத மினர்வா தியேட்டர், விசிலடித்தால் வெளியே இழுத்துப் போடும் காசினோ, பிட்டுப் படத்துக்கு கெயிட்டி, இளஞ்சோடிகள் படம் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு ஒதுங்க ப்ளூடைமண்ட் கண்டினுவஸ் ஷோ, நேப்பியர் பாலம் அருகில் சுராங்கனி ரெஸ்டாரண்ட் பின்புறம் நடந்தால் சண்டைப் பயிற்சி செய்வதாக சீன் போடும் ரவுடிகள். தாண்டிச் சென்றால் மணலில் தடுப்பு தடுப்பாக செய்த லவ் ஸ்பாட், ஜோடியோடு வராவிட்டால் ஜோடிக்கு காசு, வேடிக்கை பார்க்க வந்தால் பொளேரென்று அறை, மீட்டர் கேஜ் ரயில் நிலைய 15 பைசா மசால் தோசை 10 பைசா சாதா தோசை, 15 பைசா 2 இட்லி, இட்லி தெரியாம சாம்பார், 12 பைசா காஃபி, 8 பைசா டீ. 

பட்டணம் வந்தா உயிர்காலேஜ் செத்த காலேஜ் பாக்காம போனா ஒரு மருவாதி இருக்குமா. இன்னைக்கும் சபர்பன் ஸ்டேஷன் 14வது ப்ளாட்ஃபார்ம் முடியற இடத்துல இருக்க காடுதான் உயிர்காலேஜ். எவ்வளவு பசுமை. ஜூன் மாசமே உள்ள குளிரும். முக்கியமான அட்ராக்‌ஷன் எம்.ஜி.ஆர் சிங்கம், சிவாஜி புலி. அதையொட்டிய கதைகள், சண்டைகள். பெரிய தூக்குகளில் புளிசாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு மரத்தடி விருந்து. படிக்காத ஜனங்கள் பெரும்பாலும். அதனால் இலைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள். பிற்பாடு மினி ட்ரெயின் வந்தது.

சென்னைக்கு எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்தது. மனுசன் நிலாவில கால் வச்சான். டெலிவிஷன் வந்தது. 14 மாடி கட்டிடம் எரிந்தது. நேரு ஸ்டேடியத்திலிருந்து கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போச்சு. இப்படி எவ்வளவோ மாற்றங்கள். மாறாதது ஒன்னு இருக்கான்னா இருக்கு. ஜெமினி சர்க்கஸ். 14வது ப்ளாட்ஃபார்ம் பக்கத்துல இருக்க அதே இடம். கிறிஸ்துமசையும் சேர்த்தா மாதிரியா ஆரம்பிச்சி பொங்கல் தாண்டி ஃபிப்ரவரி 2ம் வாரம் வரைக்கும். அதே டெண்ட், அதே காட்சிகள். அதே விஐபிகளுக்கு ஓசி பாஸ்கள். 

காசு இருக்கவன் சபாக்கு போய் கச்சேரி கேப்பான். காசில்லைன்னா கார்பரேஷன் வாசல் புல் தரையில 4.30லிருந்து கூட்டம் சேரும். 5 மணிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். சுத்தமான கர்நாடக சங்கீதம். ஆபட்ஸ்பரி கலியாணத்துக்கு நாதமுனி பேண்ட் இருந்தா அன்னாடங்காச்சிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். இப்பதான் சினிமாப்பாட்டு வச்சாதானே மரியாதை.  சமீப காலம் வரை கார்ப்பரேஷன்ல பணம் கட்டினா கலியாணத்துக்கு புக் பண்ணிக்கலாம். மாப்பிள்ளை அழைப்புக்கு கார்ப்பரேஷன் பேண்ட் செவப்பு வெள்ளை யூனிஃபார்ம்ல என்னா கெத்து தெரியுமா.

பாக்ஸிங் டே தெரியுமா?  கிறிஸ்மசுக்கு அடுத்த நாள். வெள்ளைக்காரன் போயிட்டாந்தான். பாக்ஸிங்கும் போச்சு. ஆனா இன்னைக்கும் சென்னைல மத்திய அரசு ஊழியர்களுக்கு அன்னைக்கு விருப்ப ஓய்வு நாள். கண்ணப்பர் திடலில் சார்பேட்டா பரம்பரை, வைத்தியர் பரம்பரைன்னு சவால், போட்டி, பதக்கம். வட சென்னை மொத்தம் குவியும். ஆங்கிலோ இந்தியர்கள், முஸ்லீம்கள், போர்ட்டர்கள், நடிகர்கள் ஆதரவு. வால்டாக்ஸ் ரோடு, பெரிய மேடெல்லாம் போஸ்டர்கள். 

கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போனப்புறம் ஃபுட் பால் லீக் மேச் முன்னாடி யூரோ கப் எல்லாம் எம்மாத்திரம். கோடி ரூபா குடுத்தாலும் போர்ட்டர் வரமாட்டார். கூலி எப்போது வேண்டுமானாலும் வரும். முத்துராமன், ஜெய்சங்கர், நாகேஷ் லுங்கியோட வந்து க்ரவுண்ட்ல உக்காரும்போது கூட விசிலும் கும்மாளமுமா மேச் வருமா. 

கமெண்ட் கேக்கணும். த்த்தா! டாய்! ரெப்ரீ! கண்ல இன்னாடா கீது? கார்னல் கண்ணு தெர்ல கெயப்பொட்ட!!

ஆப்புல அட்சாம்பா! பிகிலட்றா நாயே!

ஃபவுல் பண்ணா பிகிலுக்கெல்லாம் காத்திருக்க முடியாது. ரண்டு கை தூக்கி சாலி சொல்லி கட்டி புட்சிக்கணும். கோல் போட்டா கொத்தவரங்கா நாகேஷ் தூக்க பார்ப்பார். லைன் மேன் பாடு திண்டாட்டம். பால் அவுட்னு கரெக்டா சொல்வில்லை என்றால் டவுசர் போயிடும். தொடர்ந்து தப்பு பண்ணா ரத்தகாயம்தான். 

அந்தக் கோலாகல இடத்தில்தான் இன்று நடிகர்கள் நடிகைகள் பாராட்டு விழாவும் நடக்கிறது. 

ஏனோ ஆங்கிலோ இந்திய இளைஞர்களும், முஸ்லீம்களும் ஹாக்கியையும், பாக்சிங்கையும் புறக்கணித்து விட்டார்கள். 

சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 மணி ஆனதும் வீட்டுக்கு கிளம்புமுன்னர் அந்தந்தத் துறை தலைமை அதிகாரிகள் ஆஃபீசைச் சுற்றி வருவார்களாம். வீட்டுக்கு கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இளைஞர்கள் என்றால் கஸ்ரத்துக்கு போ மேன், போய் விளையாடு. குடும்பஸ்தர்கள் என்றால் குடும்பத்தோடு நேரம் செலவழி என்று விரட்டுவார்களாம். 

ம்ம்ம்..போதும்..சொல்லி மாளாது.

Friday, August 2, 2013

பேனா


அப்பா ஒரு பேனாப் ப்ரியர். ப்ரியம் என்று சுளுவாக சொல்லிவிட முடியாது. பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் ஓவியம் போல அவைகளுக்கு ஒரு அந்தஸ்து உண்டு. பக்தி, பெருமிதம் இவற்றோடு தனக்குக் கிடைத்த வரம்போல ஒரு பணிவோடான ப்ரியம். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது. துருவழுக்கேறினாலும் மேலிருக்கும் படம் தேயாமல் துருவேறாமல் சோப்புத்தண்ணீரில் நனைத்த துணியால் துடைத்து தேங்காய் எண்ணெயும் கெரசினும் நனைத்த பஞ்சால் துடைத்து ஓரளவு காக்கப்பட்ட ஆல மரத்து ஊஞ்சலில் ஆடும் ராதா க்ருஷ்ணன் படம் போட்ட பாரி மிட்டாய் டப்பா. 

உள்ளே புதுக்கருக்கழியாத பார்க்கர்கள், ப்ளூபர்ட்கள், வாடர்மென், ஒரு ஷீஃபரும்கூட. இன்னும் எத்தனையோ பேர்கள், கவனமில்லை. பலப்பம் கனத்தில் விரல் நீட்டு பேனா. ஒரு பேரா எழுதுவதற்குள் விரலைச் சொடுக்கெடுக்க வைக்கும் குண்டு பேனா. ராணுவ வீரன் தொப்பி போல் கருப்பு தட்டை நிற மேல் பாகத்தின் தொப்பிக்கு காண்ட்ராஸ்ட் சிவப்பு நிறத்தில் பேனா. மினு மினுக்கும் தங்கக் கலர் க்ளிப்பின் முனையில் அர்ச்சுனன் அம்பு, பீமன் கதை போல் கூர்ப்பும் குண்டுமாய். கழுத்தே இல்லாமல் ஜாண் நீளத்துக்கு மரத்தாலான ஒரு வாடர்மென். கீழே பட்டன் மாதிரி இருக்கும். கவர் கட்டைவிரலில் பாதி.  திறந்தால் நிப் தெரியாது. கவரை பின்புறம் சொருகி திருகினால் நிப் மேலே வரும். நிப் உள்ளே இருக்கும்போது படுக்க வைத்தாலும், தலைகீழாய் வைத்தாலும் இங்க் கொட்டாது. அப்பாவின் ஃபேவரிட் இந்தப் பேனா. இங்க் பாட்டிலில் முனை முக்கி க்ளாக் வைசில் திருகி ஆண்டி க்ளாக் வைசில் திருகினால் இங்க் நிறப்பிக் கொள்ளும் ஷீஃபர். மேலிருக்கும் க்ளிப் போலவே சற்று நீளமாக பதிந்தாற்போல ஒரு க்ளிப்பை விரலால் தூக்கி விட்டால் ட்யூபில் இங்க் ஏற்றிக் கொள்ளும் ஒரு ப்ளூபர்ட். 

ஒரு ஓவியக்காரனின் கைத்துணி போல் கருப்பு, கருநீலம், சிவப்பு, பச்சை, பிங்க் என்று பல இங்க் கறையோடு ஆனால் கசங்காமல் சுருக்கமின்றி மடித்து வைக்கப்பட்ட ஒரு வேஷ்டித் துண்டு, கடித்துக் கொண்டிருக்கும் பேனாக் கழுத்தைத் திறக்க அளவாக நறுக்கிய சைக்கிள் ட்யூப், வெள்ளையில் சிவப்பு டைமண்ட் நடுவே வெள்ளெழுத்தில் பாரத் பெயர் தாங்கிய சவர ப்ளேட், மிக மெல்லியதாய் லீக் அடிக்கும் பேனாக் கழுத்து மரையில் தேய்த்து லீக் அடிக்காமல் மூட விறல் கணுவளவு தேன் மெழுகு எல்லாம் டப்பாவுக்குள் அடக்கம். 

ஞாயிறு மதியங்கள் காஃபிக்குப் பிறகு அப்பாவின் அடுத்த வார பேனாக்கள் தேர்வு. அப்பாவுக்கு எப்போதும் பார்க்கர் இங்க்தான். ஏதோ பிடித்த பேனா எடுத்து இங்க் போட்டு வைத்துக் கொள்வதெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு கணக்கில் 4 பேனா செலக்ட் ஆகும். சிவப்பு, கருநீலம், கருப்பு, நீல இங்க் புட்டிகள் எதிரில். ஒரு புறம் வழவழப்பாய் மறுபுறம் சொரசொரப்பாய் அரையடி நீளம் நாலங்குல அகலத்துக்குக் அப்பாவே பைண்ட் செய்த ஸ்க்ராப் புக். மேற்புறம் மடித்து தொடைமேல் வைத்துக் கொண்டு பேனாவைப் பிடித்து சண்டைக்குப் போகும் மன்னன் கத்தி வாகு பார்ப்பது போல் கையில் பேனாவோடு ஒரு பார்வை, பேப்பர் மேல் வைத்து ஒரு பார்வை, இங்க் இல்லாமல் ஒரு கையெழுத்து, பேப்பரில் கீறியிருக்கிறதா என்று நோட்டில் ஒரு பார்வை. அதன் பிறகு கருப்பு இங்க் பாட்டில் திறந்து நிப் முனை மட்டும் நனைய எடுத்து மூன்று கையெழுத்து. 

இடைவெளி இல்லாமல், பட்டை அடிக்காமல், கீறாமல் சீராக இருக்க வேண்டும். வழவழ பக்கத்தில் எப்படி ஓடுகிறதோ அப்படியே சொர சொரப்பிலும் ஓட வேண்டும். இல்லை எனில் நாதசுர வித்துவான் சீவாளியைப் பதப் படுத்துவது போல ப்ளேட் பிளப்பில் புகுந்து நாக்குக்கும் நிப்புக்கும் நடுவில் நர்த்தனமாடி ஸ்ருதி சேர்க்கும். 

ஷீஃபருக்கும், பார்க்கருக்கும் என்ன மாதிரியான ராயல் ட்ரீட்மெண்டோ அதேதான் 3 ரூபாய் என் கேம்லின் பேனாவுக்கும். ரைட்டர் பேனாவுக்கும். ‘எங்கேடா உன் பேனா’வுக்கே விரல் தந்தியடிக்கும். தொடையில் அப்போதே லேசான எரிச்சல் ஆரம்பிக்கும். க்ளிப்பைக் கடிக்காமல் கணக்கு போட முடியுமா? பக்கத்துப் பையனுக்கு பத்து சொட்டு இங்க் கடன் கொடுக்க வேண்டுமானால் ட்யூப் துண்டுக்கு எங்கே போக. பல்லால் கடிக்காமல் திறக்கவா பேனாக் கழுத்து இருக்கிறது?

பேனா சரஸ்வதி. வாய்ல வச்சி எச்சில் பண்ணாதன்னா தெரியாது? ஒற்றை விரல் இழுப்பில் 30 டிகிரி கோணல் போய் தெத்துப்பல் தூக்கல் போய் மூடியில் க்ளிப் உட்காரும். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாதலால் நிஜமாகவே மூச்சா முட்டும். தப்பிக்க முடியாது. அத்தனை குழியில் புதிதாகப் பதிந்த பல்லடையாளம் கண்டு பிடிக்க சிரமப்பட்டதே இல்லை. போனவாரம்தானே கடிக்காதன்னு சொன்னேனுக்கு ‘இல்ல பழசு’  என்றால் போனஸ் நிச்சயம் என்பதால் அநிச்சையாக இறுகி கை தொடையில் இறங்கும் நேரத்தில் தளர்ந்து அடியின் தாக்கத்தைக் குறைக்க தொடை பழகிவிட்டிருந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் போய்ச்சேர்ந்த அப்பாவுக்காக யாருமே தொடாமல் பொக்கிஷமாய் ஞாயிறுக்காய் காத்திருந்தன பேனாக்கள். ஒரு மிக நெருங்கிய சொந்தத்திடம் பதினெட்டு வயதானால்தான் வேலைக்கு அப்ளை செய்ய ஆறுமாதம் இருந்ததால் செலவுக்காக வாங்கிய கடனுக்கு வேலை கிடைத்த அதே வாரத்தில் கொடுத்த பணம் வேண்டும் என்ற பிடிவாதத்தில் திகைத்துப் போனாள் அம்மா.

கண்ணீர் தளும்ப பேனாப் பெட்டி வெளியெடுக்கப்பட்டது. பழைய ட்ரங்குப் பெட்டியிலிருந்து. கூடவே ஒரு சின்ன மஞ்சள் எல்.ஜி. பெருங்காய டப்பாவும். அம்மாவின் ஒரு சிவப்புக் கல் மூக்குத்தி, மூன்று முனை உடைந்த நிப் பொதிந்த ரோஸ் கலர் பட்டர் பேப்பர் பொட்டலம். ஷீஃபர், பார்க்கர், வாடர்மேன்களின் க்ளிப்புகள், 14 கேரட் என்று பொறிக்கப் பட்ட நிப்புகள் எல்லாம் கழற்றி எடுத்து என்.எஸ்.ஸி போஸ்ரோடு போய் நகைக் கடையில் கேட்டு எதிரில் இருந்த அரசாங்க உருக்குச் சாலையில் கொடுத்து பாதி சப்பிய சாக்லேட் போல் சுத்த தங்கம் ஒரு சின்ன கட்டியாக்கிக் கொடுத்து கிடைத்த ஆயிரத்து ஐந்நூத்தி சொச்சத்தில் ஆயிரம் ரூபாய் அசல் போக மிச்சத்துக்கு ஒரு புடவை ரவிக்கை, பேண்ட் ஷர்ட் மங்காராமில் வாங்கித் தாம்பூலத்தில் வைத்து கடன் அடைத்தபோது அப்பா பெருமைப் பட்டிருப்பார்.

பின்னாளில் அப்பாவின் நண்பரான ராம்ஜி என்ற பேனா பைத்தியத்தோடு போர்ட் ட்ரஸ்ட் கதிரி பாயிடம் இன்ஸ்டால்மெண்டில், ஃப்ளவர் பஜார் யூனூஸ் சேட் கடை முன்னால் ப்ளாட்ஃபார்மில் பேனாக் கடை வைத்திருந்து பிறகு மௌண்ட்ரோட் பேட்டா வாசலில் கடை வைத்திருந்த முதலியாரிடம் சிந்தாதரிப் பேட்டையில் கடைந்தெடுத்து வாங்கிய எபொனைட் பேனாக்கள் கலெக்‌ஷன் என்னிடம் இருந்தது. 

இரண்டு நாள் முன்பு திடீரெனத் தோன்றியது. தாத்தாவுடையது இல்லை என்றாலும் என் பிள்ளைகளுக்கு ஷீஃபரும், வாடர்மென்னும் அவர் நினைவாகக் கொடுக்க வேண்டுமென்று. அமேசானில் முன்னூறும் ஐன்னூருமாய் இருக்கிறது விலைகள். அதுவும் ஏதோ கேட்ரிஜாம். 

பொறுப்பிருக்கிறபோது, கடன் வாங்கி ஹஜ்ஜுக்கு போகக் கூடாதாமே. அந்த மாதிரி கடமையெல்லாம் முடித்து, பென்ஷனாவது மிச்சம் பிடித்து சாதாரணமான இங்க் போடுகிற ஒரு ஷீஃபரும், வாடர்மென்னும் முடிந்தால் ஒரு பார்க்கரும் வாங்க வேண்டும். 

Tuesday, January 10, 2012

கேரக்டர் : வைத்தி மாமா

வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு.

வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம்.

பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள்.

வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும்.

பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார்.

‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது.

பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று.

வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு.

மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும்.

அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார்.

சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று.

திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.

Friday, September 30, 2011

கேரக்டர் - அப்துல்லா குட்டி

அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று கூடத் தோணலாம். எனக்குமே கூட அந்த வயதில் அவரின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததாக உணர்வில்லை. ஆனாலும் அவரில் ஏதோ ஒன்று இருந்தது. இல்லையெனில் பதவிக்காகவேயன்றி ஒரு மனிதனாக அத்தனை பேரின் நேசிப்புக்கும் ஆளாயிருக்க முடியாது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு குட்டியை நான் வேறு விதமாக புரிந்துக் கொள்ள முடிகிறது. குட்டி அப்படி ஒன்றும் கவர்ச்சியான மனிதனும் இல்லை. நல்ல உயர அகலம். அதற்குச் சற்றும் பொருந்தாத சிறிய வட்டமுகம், பெரிய வாய், கருத்துத் துருத்திய கனத்த உதடுகள், பரந்த மூக்கு, பரந்த நெற்றியில் மேலேறித் தொடங்கும் சுருள் சுருளான முடிகள் என்று ஒரு கற்கால மனிதனை நினைவூட்டக் கூடும் உருவம். ஆனாலும், கலகலவென்ற பேச்சும், நொடிக்கு நொடி பகடியும் சிரிப்புமாக சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் மனிதன்.

முதல் சந்திப்பின் அறிமுகத்திலேயே அவரின் வயிற்றுக்கு சற்றே உயர்ந்திருந்த என்னை கிண்டல் செய்தபடிதான் அறிமுகமானார். பதவியில் எனக்கு அடுத்த உயர்நிலையானாலும், அதிகாரத்தில் எனக்கு கட்டுப்பட வேண்டிய நிலை. ‘சாரே! நிங்கட ஹைட்டுக்கு எனிக்கு உக்காந்து குட்மார்னிங் சொன்னா போறே! ஆனா அது மரியாதையில்லை கேட்டோ. பின்னே ஞான் சார்னு பிள்ளார்னு தூக்குன்னது மாதிரி தூக்கி கொஞ்சி குட்மார்னிங் பறயட்டே’ என்றால் சிரிக்காமலா இருக்க முடியும்? முதல் சந்திப்பில் முதல் டீயோடு மனைவியும், முதலாண்டு இஞ்சினியரிங் படிக்கும் மகனும் ‘நாட்டில்’ இருப்பதாகச் சொன்னார்.

குட்டி சார் வந்தால் அலுவலகம் கலகலப்பாகிவிடும். ஒவ்வொருவராக போய் வம்பிழுத்து சிரிக்கவைத்து எல்லோரோடும் ஒரு அன்னியோன்னியத்தை உருவாக்கியிருந்தார். பலரின் உடல் மொழியில் ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவருடைய அலுவலர்கள் மத்தியில் அவர் ஒரு தேவன். குளிர் பிரதேசம். பெரும்பாலும் அந்தக் காட்டைச் சேர்ந்த மக்கள். குடி என்பது அவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. சில நேரம் போதையில் விபத்துக்கு ஆளாவார்கள். ரூல் படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும், குடிபோதையில் பணியில் இருந்ததற்காக வேலை போகும் அபாயமும் உண்டு. குட்டி அப்படியான தண்டனைகளை நிகழவிட்டதே இல்லை என்பார்கள். அவசர சிகிச்சைக்குப் பின், மைசூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டரிடம் பேசி இஞ்சுரி ஆன் டூட்டி கொடுத்துவிடுவார். தேறி வரும் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். 

என் தனிப்பட்ட உதவிக்காக இருந்த நஞ்சப்பன் கூறிய தகவல்கள் இவை.  ‘சார், கல்யாணம் வச்சிருக்கேன்னு போய் நின்னா போதும் சார். அவங்க அவங்களுக்கு ஏத்தாமாதிரி தேவையானது கிடைக்கும். கலியாணத்துக்கு முதல் நாள் கூப்பிட்டு என்னவாச்சும் வேணுமான்னு கேப்பாரு. அண்ணன் தம்பி இல்லைன்னே கவலை இல்ல சார். ஆளுங்கள கூப்புட்டு நீ இது பண்ணு, அந்த வேலை பாருன்னு சொல்லீடுவாரு. பேச்சு வார்த்தை இல்லாதவன் கூட குட்டி சார் சொன்னா செய்யாம இருக்கமாட்டான். ஒரு அஞ்சாரு வருஷம் இருக்கும் சார். குட்டி சாருக்கு ட்ரான்ஸ்ஃபர் போட்டாங்க. கூலி வேலை செய்யறவன் கூட வரலை சார். ஒரு நாள் முழுக்க வேலை செய்யாம கேன்ஸல் பண்ண வச்சிட்டோம்.’

ஆனாலும் குட்டியை இரண்டு பேருக்கு மட்டும் பிடிக்காது. தன்னைத் தவிர மற்றவரெல்லாம் ’அரிசிக்கரே கள்ளரு’ என்ற அபிப்பிராயம் கொண்ட அக்கவுண்ட்ஸ் லக்ஷ்மி நரசிம்மன், லட்சம் என் அப்பா சேர்த்தது, அதுக்காக நான் சம்பளத்தை மட்டும் நம்ப முடியுமா என்றிருந்த டைப்பிஸ்ட் கிருஷ்ண மூர்த்தி. எல்லாம் திருடனுங்க. பினாமில காண்ட்ராக்ட் எடுத்து நம்மளுக்கு ப்ரஷர் குடுப்பாங்க என்ற சலிப்பு லக்ஷ்மி நரசிம்மனுக்கு என்றால், பில், அக்ரிமெண்ட் டைப் பண்ண 50ரூபாய்க்கு மேல் தருவதில்லை என்ற கடுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு. 

லக்‌ஷ்மி நரசிம்மனின் பார்வையில், ’குடித்தான்ரீ அவனு! கிளப்பினல்லி ஹோகி, சன்னாகி குடுதுபிட்டு பாக்கி ஆடுத்தான. லோஃபர் நன்ன மகா.. கேஷுவல் லேபர் ஹுடுகிகளு லீவ் பேக்கு சாரந்த்ரே ரெஸ்ட் ஹவுசிகெ பாந்த ஹேள்தான. அவனு சகவாசா பேடாரீ நிம்மகே (குடிப்பாங்க அவன். க்ளப்பில் போய் குடித்துவிட்டு, சீட்டு ஆடுவான். பெண் பித்தன். தினக்கூலிப் பெண்கள் லீவ் கேட்டால் ரெஸ் ஹவுசுக்கு வான்னு சொல்லுவான். அவன் சகவாசம் உங்களுக்கு வேண்டாம்) என்றார். 

பின்னொரு நாள், ராமன் நாயர் கடை வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மூன்று பெண்கள் வந்தனர். கேஷுவல் லேபர்கள்தான். குட்டி சாருக்கு வணக்கம் சொன்னதும், எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி, வழக்கமான இடிச்சிரிப்போடு,  ‘சினிமால நடிக்கப் போறீங்களா? மேக்கப்பெல்லாம் பலமா இருக்கு?’ என்றவருக்கு நாணிக் கோணி,  ‘இல்லா சார்,  சினிமாக ஹோக்திவி சார். லீவ் பேக்கு சார்’ (சினிமாக்கு போகிறோம் சார். லீவ் வேண்டும் சார்) என்றார்கள். ‘ஹோகாணா ஹோகாணா! ரெஸ்ட் ஹவுஸிக ஹோகுரி பர்த்தினி’ (போலாம் போலாம் ரெஸ்ட் ஹவுஸுக்கு போங்க வரேன்) என்று அனுப்பிவிட்டு, உடலை முறுக்கி ‘பின்ன நோக்காம் சாரே. நன்னாயிட்டு ஒரு மஸாஜ் எடுத்து குளிச்சிட்டு, வீட்டினு போயால், மீன் கறியும், கோழியும் இருக்கும்’ என்று கண் சிமிட்டிவிட்டுப் போனார். சரிதான். லக்ஷ்மி நரசிம்மனுக்கு காமாலைக் கண் இல்லை போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.

பின்பொரு நாள் டவுனில், குட்டியின் ஸ்கூட்டரில் ஒரு இளம்பெண்ணோடும் நான்கு வயது சிறுவனோடு பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி ‘சாரோட சின்ன வீடு’ என்று அறிமுகம் செய்தான். குட்டி சார் இன்னும் இரண்டு படி கீழிறங்கினார். வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகியும், குவார்ட்டர்ஸ் கிடைக்காமல் சமைக்க முடியாமல் மழையில் மெஸ்ஸுக்கு போவதும் முடியாமல், நஞ்சப்பன் கொண்டு வரும் ஆறிப்போன சாப்பாடுமாய் இருந்த நிலையில் ஒரு குவார்ட்டர்ஸ் கிடைத்தது. கிருஷ்ணமூர்த்தியும் பேச்சிலர் என்பதால் ஷேர் செய்து கொள்வது வசதியாக இருந்தது. அடுத்த குவார்ட்டர்ஸ் குட்டியின் நெருங்கிய நண்பரான ராமச்சந்த்ரன் நாயருடையது.

அது கட்டுமான அலுவலகம் என்பதால், எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர் காலையில் சைட் இன்ஸ்பெக்‌ஷன், அது இது என்று அலைந்து விட்டு அலுவலகம் வருவதே பெரும்பாலும் மாலை ஐந்து மணி ஆகிவிடும். அதன் பிறகுதான் அலுவலகம் வேலை தொடங்கி இரவு ஒன்று இரண்டு என்று நடக்கும் என்பதால், பகல் போதில் அவரவர் வசதிக்கு வந்து வேலை பார்ப்பது வழக்கம். பெரும்பாலும் பக்கத்து குவார்ட்டர்சில் சீட்டுக் கச்சேரி காலை பத்து மணிவாக்கில் தொடங்கிவிடும். சும்மாவே அதிரச் சிரிக்கும் குட்டி சாரின் குரல், சரக்கும் சேர்ந்துவிட்டால் குவார்ட்டர்ஸ் அதிரும். முன்னூரு ரூபாய் அதிகம் வருமென்று இந்தக் காட்டிற்கு ப்ரோமோஷனில் வந்த எனக்கு, ஒரு ஆட்டத்துக்கு 200, 500 என்று ஆட்டம் நடப்பது நம்ப முடியாததாகவிருந்தது.

அதிக பட்சம் 50ரூ கேம் ஆடுவான் கிருஷ்ணமூர்த்தி. ஒரு நாள் இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது குட்டி சாரின் கிளப் கதையோடு சின்ன வீட்டின் கதையும் சொன்னான். நகரின் பெரிய பணக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப் அது. ரெஸ்ட் ஹவுஸ் குட்டி சாரின் பராமரிப்பில் இருந்ததாலும், மத்திய அரசின் ஒரு மூத்த அதிகாரி என்ற சலுகையும் அவரை உறுப்பினராக்கியது. சீட்டாட்டம் என்பது அங்கே வெறும் ஆட்டம் மட்டுமில்லை. அந்தஸ்தோடு சேர்ந்த விஷயம். பிஸினஸ் போலவே அங்கும் நாணயம் முக்கியம். குறைந்த எண்ணிக்கை சீட்டு எடுப்பவர் போடுவதுதான் பந்தயம். முடியாது என்று எழுந்திருந்தால் ஒரு மாதம் சஸ்பெண்ட் என்பதோடு, இன்ஸால்வென்ஸி கொடுத்ததற்குச் சமமான சமூக மதிப்பு. கையில் காசில்லை என்றால் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தால் போதும். பணம் கொடுக்க அடுத்த நாள் வரை டயம் தருவார்கள். தவறினால் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பதான காட்டு விதிகளுடன் கூடிய க்ளப்பாம். 

சபிக்கப்பட்ட ஒரு நாளின் இறுதியில் குட்டிசாருக்கு ரூ 50000 கடன் ஆனது. அடுத்த நாள் கொடுத்தாக வேண்டுமாம். வங்கியிலும் இருப்பில்லை. செய்வதறியாது வீட்டில் இருந்தவரை வீட்டுச் சொந்தக்காரரின் மகள் காரணம் கேட்டிருக்கிறாள். போதையில் நடந்ததைச் சொல்லி அழுதவரை தன் நகைகளைக் கொடுத்து விற்றுக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாளாம். அவள் ஒரு செக்ஸ் ஒர்க்கராக இருந்தாள் என்றும் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. நகையை விற்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, மிகுந்த பணத்தில் சீட்டாட உட்கார்ந்த குட்டியின் மடியில் அதிர்ஷ்டதேவதையும் அமர்ந்தாள் போலும். அன்றைய ஆட்டத்தின் முடிவில் குட்டியின் வெற்றி தந்த பரிசு இரண்டரை லட்சமாம். தான் அந்த ஊரில் இருக்கும் வரை தன்னோடு மட்டுமே இருக்க வேண்டும் என்ற உடன் படிக்கையில் அந்தப் பெண்ணுடன் இருப்பதாகச் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. 

சோம்பலான ஒரு ஞாயிறன்று ராமன் நாயர் கடைக்கு காலை டிஃபனுக்குப் போனபோது பத்து மணியிருக்கும். ’தோசா இல்லா சாரே. இரிக்கு. அஞ்சு மினிட்டில சப்பாதி தரும்’ என்று  காத்திருந்தபோது ‘எடோ நாயரே!’ என்ற குட்டியின் குரல். அதிகபட்ச போதை. கையில் ஒரு பை. வழக்கமான, இடி சிரிப்புடனான குட் மார்னிங் டி.ஏ. சார் இல்லை. நான் இருப்பதைக் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘இதில் கரி மீனும், கோழியும் உண்டு. ச்சோறு இவிடதன்னே. கேட்டோ. ஞான் இப்பத்தன்னே வராம்’ என்று கொடுத்துவிட்டுப் போனார்.

என்ன ராமண்ணா, காலையிலயே இன்னைக்கு என்றேன். எண்ட குருவாயூரப்பண்ட களி சாரே. இன்னு ஞான் மாட்டி. எப்பவோ செத்திருக்கணும் இந்தாளு. போயிருந்தா நன்னாயிட்டிருக்கும். பெரிய ப்ரிட்ஜிலிருந்து விழுந்து கால் மட்டும் உடையுன்னது இப்படி ஜீவிக்கான் வேண்டியோ சாரே. ரண்டு வாரம் ஊர் முழுக்கத் தேடி சாரே. பின்னே நொண்டி நொண்டி வந்தது ஆளு. காட்டிலிருக்குன்ன ஜனங்கள் வைத்தியம் பார்த்தது கொண்டாணு ஆயாளு ஜீவிச்சு. பின்னே கொறே விஷயம் நடந்து போயி.

உடம்பு முழுக்க ரோகம் சாரே. ரண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்நு. குடலும் கெட்டுப் போயி. பீப்பீ, சக்கரா எல்லாமுண்டு. உப்பு கூடாது, சக்கரை கூடாது. மாமிசம் கூடாது. குடிக்கக் கூடாது. சொன்னாக் கேட்டாதானே. ‘பின்னெந்தாடா ஜீவிக்கணும்’ என்னு களியாக்கும் சாரே. நாட்டிலிருந்து மோன் வந்திருக்கும். காசு வேண்டி. அதாணு இப்பமே ஆரம்பிச்சு. இனி வந்து குடியும் அழுகையும் எண்டே ஈஸ்வரா. சாரு அறியுமல்லே. இவிட உள்ள பெண்குட்டி சார்னு சின்ன வீடுன்னு பறையும் மக்களு. அதல்லா சாரே நிஜம். அது ஒரு பாவப்பட்ட குடும்பம். பெரிய மோளுக்கு தீராத்த ஒரு ரோகம். இவள் சின்ன வயசிலேயே தெற்றிப் போயி. அச்சனுக்கு சுகக்கேடாணு. குட்டி சார் இவிட வரும்போ என்னொத்த பிராயம். 

ஆபீசு பணியல்லல்லே. எப்பவோ போகும். எப்பவோ வரும். தாமசிக்கான், சோறுண்ணான் வேண்டி அவருடே வீட்டில் கேறி. சாரு அறியுல்லே குட்டி சாரிண்டே சீட்டுக் களியிண்டே பிரபாவம். அது நிஜமாணு. பின்னே ஆ பெண்ணு யாரோடோ கர்ப்பமாயி. அவளுக்கு அபார்ஷன் செய்யானு வழியில்லான்னு பறஞ்சு டாக்டர்மாரு. இவனுக்கெந்தா பற்றி சாரே. மணிப்பாலிலே கொண்டு எத்தி. ப்ராந்தணாணு சாரே இவன். கலியாணம் கழிச்சில்லா. அவளினு கூட்டிக் கொண்டு போய் ஒரு வீடு உண்டாக்கி கொடுத்து அவிடயா தாமசிக்குண்ணு. இவிட எல்லாரும் பேசுன்னது ஆயாளு அறியும். பின்னே யாரும் நேரே சம்சாரிக்கானில்லல்லோ. அத்தர பயமா குட்டி சாருனு கண்டெங்கில். பின்னே நூறு கதை சம்சாரிக்கும். தூ. 

எனிக்கறிஞ்சி பின்ன ஒரே ஒரு தரம் நாட்டிக்கு போயி சாரே. எந்தாயி, ஏது சமாச்சாரம் ஒன்னும் பறையில்லா ஆயாளு. ‘நாயரே. இனி ஞான் நாட்டிக்கு போகுல்லடே’ன்னு மாத்ரமா பறஞ்சது. பின்னே ஆரம்பிச்சதாணு தினம் குடி. மோன் வரும். வெறும் ஃபீஸ், ட்ரெஸ்ஸுக்கு மாத்திரம் அம்மை சொன்ன எமவுண்ட் வேண்டிப் போகும். சொந்த மகனல்லே. அவன் வந்நு போயால் இவிடத்தன்னே சாரிண்டே களி. நீ போய்க்கோ சாரே. ஒரு பாடு ஜோலியுண்டு. வரும்போ மீன் கறி ரெடியாட்டிருக்கணும் என்றனுப்பி வைத்தார்.

பின்னெப்போதும் குட்டி சாரை தரக்குறைவாக நினைக்கத் தோன்றியதில்லை. ட்ரான்ஸ்ஃபரில் கிளம்பி வரும்போது, ஸ்டேஷனுக்கு வந்து கிளம்பும் சமயம் இறுகக் கட்டிக் கொண்டு, ‘சாரே! என்னே மாத்ரம் மறக்கரிது கேட்டோ! வி ஹேட் அ நைஸ் டைம்’ என்றபோது உடைந்துவிட்டேன். ‘இதெந்தினா அய்யே! சாரு வரும்போ செறிய குட்டியாணு. இப்போ கல்யாணம் கழிஞ்சல்லே சார்னு. அழுன்னது கண்டால் பெண்டாட்டி சிரிக்கும்’ என்று இடிச்சிரிப்போடு அனுப்பி வைத்தார்.

நஞ்சப்பன் மட்டும் வரும்போதெல்லாம் சந்திப்பான். இரண்டு வருடம் கழித்து சந்தித்தபோது வழக்கம் போல் குட்டி சாரை விசாரித்தேன். ‘தேவுரு இல்லா சாரே. சாரு சத்தோகிபிட்ரு’ என்றான். சாவா அது. பெரிய பாலத்திலிருந்து விழுந்து காப்பாற்றிய உயிரை இப்படிப் பறிக்கத்தானா? மோட்டார் ட்ராலியில் சரிவில் போகும்போது ஒரு ஜெர்க்கில் வீசி எறியப்பட்ட குட்டி சாரையும், அவரைக் காப்பாற்றப் பாய்ந்த ராமச்சந்திரன் நாயரையும் கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிற கரும்பு மாதிரி சிறுகச் சிறுக சிதைத்ததாம் ட்ராலி. . ‘சார் மாடித்து ஏனில்லா சாரே. குட்டி சார் ஹெண்த்தி பந்தவரே. செட்டில் மெண்ட் ஹணா மொத்தம் இவளிக கொட்டோகிபிட்ரு சார்’(சார் பண்ணினது ஒன்னுமில்லை சார். அவர் மனைவி கிடைத்த செட்டில்மெண்ட் பணம் மொத்தம் இந்தம்மாவுக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க சார்). கம்பாஷ்னேட் அப்பாயிண்ட்மெண்ட்டு பேடாந்துபிட்ரு சார் (அவர்களுக்கோ பையனுக்கோ அனுதாப அடிப்படையில் வேலை கூட வேண்டாமென்று விட்டார்கள் சார்)’ என்றான்.

அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? இத்தனை வெறுப்பு ஏன்? குட்டிக்கு ஏன் இப்படி ஒரு முடிவு? இப்படி ஒரு வாழ்க்கை? ஒரு வேளை ‘தேவுரு இல்லவா சாரே?’

Friday, July 1, 2011

கேரக்டர் மீனாட்சி.


அறைக்கு வெளியே சிவப்பு விளக்கைப் போட்டுவிட்டு மதிய உணவிற்குப் பின் சாய்ந்திருந்தேன். மெதுவே கதவைத் தட்டும் ஓசை. சற்றே திறந்த கதவிடுக்கில் எட்டிப் பார்த்தது ஒரு பெண் முகம். மலர மலர தொந்தரவு பண்ணிட்டேனாடா கோந்தே! ஒன்னாம்படையாளப் பார்த்தேன். இங்க இருக்கன்னு சொன்னா. பார்க்காம போக மனசு வரலை என்றபடி மூச்சிரைக்க வந்தார் மீனாட்சி மாமி. 

மீனாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் பெரிய போராட்டமே நடக்கும். பேசும்போதே ஒரு குற்ற உணர்ச்சி தொத்திக் கொள்ளும். இந்த வாத்ஸல்யம் காட்டக் கூடியவனா நான் என்ற குறுகுறுப்பு வந்தடையும்.

14 வயதில் அந்தத் தெருவில் குடி போனபோது ஒரு மாமிச மலை போல் வீட்டின் வாசற்படியருகில் உட்கார்ந்த மாமி கேட்டார், “புதுசா வந்துருக்கேளாடா அம்பி?”. அம்மாவிடம் வந்து சொன்னபோது நான் வைத்த பெயர் குண்டு மாமி. குண்டு மாமியின் பெரிய மகள் மீனாட்சி மாமி. அப்பாவின் அலுவலகத்தின் இன்னோரு ப்ரான்ச்சில் டைப்பிஸ்டாக இருந்தார். 4 வயதிலும் ஒரு வயதிலும் மகள்கள். அவர் தங்கை கல்யாணி என் பள்ளியில் ஒரே வகுப்பு. இரண்டு தம்பிகள். இரண்டாவது மகள் பிறந்து ஒரு வாரத்தில் மார்பில் வலி வர தனக்கு இதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது மீனாட்சிக்கு.

திருவல்லிக்கேணியில்தான் புகுந்தவீடு. கூட்டுக் குடும்பம். மாமியார், விதவை நாத்தனார், அவர் மகன், கலியாணமாகாத இன்னோரு நாத்தனார். கணவரும் ரயில்வேதான். குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துப் போனவர். புண்ணியாசனத்துக்கூட வரவில்லை. இருதய நோய். ஹார்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும். குழந்தை பிறந்திருப்பதால் 3 மாதம் கழித்துச் செய்யலாம் என்பது மருத்துவரின் முடிவு.

எங்கே வந்தால் ஒரு வேளை ஆபரேஷனில் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு பெண்களைத் தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்தாரோ அல்லது அம்மாவின், நாத்தனாரின் அட்வைஸோ தெரியவில்லை. வரவேயில்லை. பெற்றோர் போய் அழைத்தபோது சீக்காளிப் பெண்ணைத் தலையில் கட்டிவிட்டதாக மாமியாரும் நாத்தனாரும் போட்ட கூப்பாட்டில் நொறுங்கிப் போய் வந்தார்கள் பெற்றவர்கள். 

மகளிடம் சொல்லவும் முடியாமல், அறுவைச்சிகிச்சைக்கு முடிவெடுக்கவும் முடியாமல் தவித்த தவிப்பு யார் அறியக்கூடும். வெள்ளந்தியான மனுஷியானாலும் கட்டினவளுக்குத் தெரியாதா கணவனின் அந்தரங்கம்? உறங்க முடியாத ஒரு இரவில் அப்பாவைக் கேட்டாளாம். நோவாளிப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாளாப்பா? விடுப்பா, பகவான் இருக்கான். போய்ச் சேரணும்னு விதியிருந்தா ஒனக்கு காலம் கெட்ட காலத்துல இன்னும் ரெண்டு கொழந்தைன்னு வளர்த்து விடுப்பா. எப்படியும் என் பென்ஷன் வரும். அதுக்காவது யாராவது வளர்த்து விடுவா என்று பொட்டுக் கண்ணீரில்லாமல் பேசறா மாமி என்று குண்டு மாமி அழுதாள். 

ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளே வாழ்க்கையாய் இருந்தாள். போய்விடும், வேறு பெண்ணைக் கட்டலாம் என்று காத்திருந்த ஏமாற்றமோ, அம்மா மண்டையைப் போட்டதும் சொந்த வீட்டை விற்று பங்கு வேண்டும் என்று மல்லுக் கட்டிய சகோதரி மேல் வெறுப்போ, ஏழு வருடங்களுக்குப் பிறகு தேடிவந்தான் புருஷன்.

தனியாகப் போகும் வரை வீட்டோடு இருக்கவும் சம்மதம் என்று வந்தபோது இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது மகளின் வாழ்க்கையில் வசந்தம் என்ற பூரிப்பில் இருந்தனர் பெற்றவர்கள். இரண்டு மாதம்தான். சாயம் வெளுத்தது. ரேஸில் கடன். சம்பளம் வட்டிக்குப் போதவில்லை. பிரிந்த சோகத்தை சேர்த்து வைத்து கொட்டிய பிரியத்தில், மீனாட்சி மீண்டும் கர்ப்பமானாள். தாலி ஒன்றை விட்டு மொத்த நகையும் அடமானத்துக்கு என்று கொண்டு சென்றவன் சென்றவன்தான்.

ஏமாந்தோம் என்பதை விட, காலம் கெட்ட காலத்தில் வயிற்றில் பிள்ளையோடு என்ன செய்வாள் மீனாட்சி? இதய அறுவைச்சிகிச்சை ஆன உடம்பு. முதிர்ந்த வயது கர்ப்பம். பிரசவிப்பதில் ரிஸ்க் கம்மி என்பது டாக்டர்களின் அறிவுரை. அதையும் தாங்கியது அந்த இதயம்.

பிள்ளை பிறந்தான். ஒற்றை ஃபோனில், ஒரு ரூபாய் காசில் புருஷனைக் காலரைப் பிடித்து உலுக்கலாம். அதிகாரிகளிடம் முறையிடலாம். டைவர்ஸ் கேஸ் போடலாம். எதற்கும் தயாரில்லை அவள். பொறுப்பான பிள்ளைகள். நன்கு படித்தார்கள். மூத்தவளுக்கு போர்ட் ட்ரஸ்டில் வேலை கிடைத்தது. அடுத்தவள் ப்ளஸ் ஒன் போனாள். பையனும் பள்ளியில். 

கடன் கட்ட வேறு வழியின்றி வீட்டை விற்று அக்காளின் அடாவடிக்கு மீதியைக் கொடுத்து திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூமில் இருந்தவருக்கு பெண்டாட்டி பிள்ளைகள் கவனம் வந்தது. சிகரட்டின் பரிசாக டி.பி.யும் வந்து போயிருந்தது. வீடு தேடி வந்து அழுதார். நகைக்காக வந்திருந்தா சாரி! பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா. அவ சம்பளத்த சேர்த்து வச்சி கரையேத்தணும். அவ சம்பளத்துக்கும் சேர்த்து ஆசைப்பட்டு வந்திருந்தா இப்படியே வெளியே போங்கோ என்று அவ்வளவு நிதானமாக பேசினாள் மீனாட்சி.

என்னவானாலும் பெண்தானே. நொறுங்கிப் போய் அழுதவனை உள்ளே போங்கோ என்றாள். கஷ்டகாலம் தொலைந்தது என்று விட்டால் கடவுள் இருப்பதை யார் நினைப்பார்? இரண்டாவது மகள் ப்ளஸ் டூ வந்தும் வயதுக்கு வரவில்லை. எத்தனை ஹார்மோன் ஊசி, மருந்து எதுவும் பலிக்காமல் இன்னோரு குண்டுமாமியாக வளர்ந்தாள் அவள். மூத்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தாலும் இவள் பெரிய பாரமாகிவிட்டாள். இரண்டு வருடத்தில் கணவனும் போய்ச் சேர்ந்தான். கருணை அடிப்படையில் சின்னவளுக்கு வேலை கிடைத்தது. 

இப்படி ஒரு சூழலில்தான் என்னைத் தேடி வந்தார். கணவனின் பென்ஷனோடு கொடுத்த அகவிலைப்படி தவறு என்று பெரிய தொகையை பிடித்தம் செய்து வந்தார்கள். அதை எதிர்த்து மனு கொண்டு வந்தார். பிடித்தம் செய்யக் கூடாது என்று ஆணை வழங்கும் இடத்தில் நான். எத்தனை நம்பிக்கை இருந்திருக்கும்? எத்தனை சுலபமான வேலை என்று வந்திருக்கக் கூடும்.

நான் பெரிய ரூல் புடுங்கி என்று பெயரெடுத்திருந்த காலம் அது. தேவையே இன்றி வக்கீல் குமாஸ்தாபோல் சுப்ரீம் கோர்ட் கேஸ்களைப் படித்து பெட்டிஷன் நம்பர், யார் வாதி, என்ன ஜட்ஜ்மெண்ட் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டலும் சொல்லும் திமிர். என் மேதாவித்தனத்தை மீனாட்சி மாமியிடம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம். என் வேலைக்கு உண்மையாய் இருப்பதா, மீனாட்சி மாமியின் கஷ்டம் உணர்ந்து கண்ணடைத்துக் கொள்வதா என்ற ஒரு நிலை. 

ஒரு சுப்ரீம் கோர்ட் ஆணையின் அடிப்படையில் ரூல் இருந்தது. மனைவி தன் முயற்சியால் வேலை தேடி அதே மத்திய அரசில் பணியில் இருந்தால், அகவிலைப் படி கொடுக்கலாம். கணவன் மூலமாக கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால் கொடுக்கக் கூடாது என்று இருந்தது. மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தது எனக்குத் தெரியும். என் இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ஆனாலும், ஆவணங்களில் வேலை கொடுத்த விபரங்கள் இருக்கும்.

தவித்துத் தவித்து ‘சாரி மாமி! எனக்கு வேற வழி தெரியலை. என் கடமை எனக்கிருக்கில்லையா? ரூலை மறைக்க முடியாது. அதே நேரம் எனக்குத் தெரியும் என்றும் சொல்லமாட்டேன். வேறு யாருக்கும் வேலை பெறவில்லை என்று ஒரு சர்டிஃபிகேட் இருந்தால் கண்ணை மூடிக் கொள்கிறேன். இல்லையென்றால் ஒரு கேஸ் போட்டு மேஜர் மகளுக்கு வேலை கொடுத்தால் என் பென்ஷனில் எப்படிப் பிடிக்கலாம் என்று வாதாடலாம்’ என்று சொன்னபோது, கொஞ்சமும் சுணங்காமல், ‘புரியறதுடா கோந்தே. இனிமே கேஸ் போட்டு எப்போ வரும் அது? விதின்னு இருக்க வேண்டியதுதான்’ என்று தளர்ந்து போனபோது என் மேல் எனக்கே கோபம் வந்தது.

வேண்டிய யாருக்கோ உதவுவதற்கு, கொடுக்கக் கூடாது என்று கேஸ் போட்டு வென்ற அரசாங்கம், கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தாலும் அகவிலைப்படி கொடுக்கலாம் என்று பல்டி அடித்து ஆர்டர் வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக அவர் மகளை அழைத்து அவரை வரவழைத்து, அப்ளிகேஷன் வாங்கி உத்தரவைக் கொடுத்தபோது அதே வாஞ்சையுடன் ‘நன்னாருப்பேடா கோந்தே. எத்தனையோ வேலை நடுவில இதப் பண்ணிக் கொடுத்தியே’ என்று வாழ்த்திவளை என்ன சொல்ல?

ஆயிற்று பதினைந்து வருடங்களுக்கு மேல். இப்போது மருத்துவப்படி நிறுத்தி விட்டார்கள் என்று மனு கொண்டு வந்திருந்தாள். கொடுத்திருக்கேன். நிறைய வேலை இருக்காம். ரெண்டு வாரம் கழித்து வரச் சொன்னார்கள். உன்னைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். பையனுக்கு கலியாணம் ஆயிடுத்து. ஒன் கொழந்தேள் என்ன பண்றா என்று பேசிக் கொண்டிருந்தார். அவருக்கே தெரியாமல், ப்யூன் மூலம் சிட்டை எழுதி அனுப்பி, ஆர்டர் காப்பியைக் கொடுத்தபோது கண்கள் விரிய எப்படிடா கோந்தே என்ற போது, ஒரு பிராயச்சித்தம் செய்த நிம்மதி. 

Friday, May 13, 2011

கேரக்டர் - சீனுமாமா

சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக் கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல் தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான். ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்‌ஷன் ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார்.  

சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக் கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும். விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு. அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும். பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ் ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும் சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும்.  

எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும் ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும் மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும் சீண்டுவார்.  

இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன். இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில் வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம். எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன் அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப் போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார். வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும் வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை செய்வார்.  

ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம். சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல் என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது.  

சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின் சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள். 

மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய் கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம் நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார். அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன் இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு வித்தியாசமான சீனுவானார்.  

திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில் புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில் அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன் பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள். கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற? அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன் இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய வைத்தோம்.  

திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா. அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு, இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி வாங்கோ என்று வழிந்தார்.  

வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக் கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள் ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில் ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ. கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர் ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று மிரட்டிவிட்டார்.  

வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு. கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும் இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன் சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’ என்றேன்.  ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?  

ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன் செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும், அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை.  

அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப் பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான் பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார். பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு.  ‘மாமா நிஜம்மா சொல்லு. உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச!  பூனைய மடியில கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார்.  

சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும் அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே. 
-:{}:-

Saturday, April 23, 2011

அன்புள்ள மம்மி

ஆமாம். உனக்கு மம்மின்னு கூப்புட்டா பிடிக்காதுன்னு தெரிஞ்சிதான் கூப்புடுறேன். சின்னத்தம்பி படத்துல கவுண்டரு அவுங்கப்பாகிட்ட பொலம்பனத பார்த்து கிக்கிக்கீன்னு சிரிச்சல்ல. இதும் அப்புடி படிச்சிக்கோ. ஆனா சிரிக்காத! வகுறு எரியுது.

ஏதோ மொதப் பொறப்புன்னா பரவால்ல. யக்காக்கும் எனக்கும் நடுவுல பொறந்து செத்தது செத்து பொறந்ததுன்னு நீ சொன்ன கணக்குல மூணோ நாலோதானே நான் வரேன். ஒரு ஒழுங்கான சைசுல பெத்துக்கத் தெரியாது? பொறக்கறது நம்மகையிலயா இருக்குன்னு எஸ்ஸாவ பார்க்காத. எரிய எரிய மொட்டைய போட்டுட்டு, கொடங்கொடமா ரெண்டு கையிலயும் தண்ணிய வாங்கி அடிச்சி மண்டைய பாரு கவுத்து வெச்ச சொம்பாட்டம்னு ஷேப் பண்ணியிருக்கேன்னு அலட்டிக்குவல்ல. குப்புறபோட்டு மண்டைய ஷேப் பண்ண சரி, மல்லாக்க போட்டு மூக்கு பிடிச்சி விட்டேன். இல்லைன்னா சப்பைமூக்கா இருக்கும்னு பெரிய சாதனை மாதிரி வேற சொல்லுவியே, என் மம்மி.

ஒரு நாளாச்சும் ஸ்கூல்ல காக்கா மூக்கான்னுவானுவோ, டீச்சருங்களுக்கு பிடிமானமா ஆகிப் போவுமேன்னு யோசிச்சிருக்கியா நீயி. தெரியாமத்தான் கேக்குறேன். மண்டையிலயும், மூக்குலயும் மூடுறதுக்கோ அலங்காரம் பண்ணவோ ஒன்னுமில்லையே. அப்புறம் அத எதுக்குப் போய் வேல மெனக்கெட்டு பட்டி பார்த்த? அதெல்லாம் செஞ்சியே, பாதத்தை பிடிச்சி விடணும்னு, எம் புள்ளைக்கு காமாச்சி பண்ணுச்சே. நீ ஏன் பண்ணல? வாத்துக் காலு மாதிரி பப்பரப்பானு ஒரு பாதம்.

யம்மா! எங்கூட எத்தினி செருப்புகடைக்கு வந்துருப்ப. ஒரு வாட்டியாச்சும் என் சைசுக்கு கிடைச்சிருக்கா யம்மா? அட ஏதோ ஒரு வயசுல ஒரு வருசமாச்சுமா சரியா சைஸ் கெடக்காம வளப்ப? ஆறாம் நம்பர் வாங்குனா காலு வெளிய, ஏழாம் நம்பர் வாங்குனா செருப்பு வெளியன்னு என்னா பொழைப்பு இது. சரி ஷூ வாங்கலாம்னு போனா, சின்ன சைஸ் எடுத்தா கட்டை விரலுக்கு ஓட்டை போடுடாங்குது. கொஞ்சம் பெருசான்னா கால முன்ன நவுத்தி வச்சி நடந்தா பாத்ரூம் ஸ்லிப்பர் மாதிரி படக் படக்னு அடிக்குது. பின்னுக்கு தள்ளி நடந்தா முன்னாடி மடங்குது. இத்தனையும், அந்த வாத்துக்காலு உள்ள போறமாதிரி அம்பாசிடர் கார் மூஞ்சு மாதிரி அகலமான ஷூ வாங்குனாத்தான். இத்தினி வயசுல ஒரு ஷூ கூட போட வாய்க்கலையே யம்மா.

சரி, உடு. கண்ணு பொட்டயா போச்சுன்னு டாக்டர்கிட்ட போனமே. ரெண்டு கண்ணையும் ஒன்னாதான பெத்த? சோத்த மென்னு தின்னாலாவது வலப்பக்கம் மெண்ட, அதான் வலக்கண்ணு ஸ்ட்ராங்குன்னு கத சொல்லுவ. நாந்தான் குருட்டு கோழி தவுட்ட முழுங்குறாமாதிரி முழுங்குற கேசாச்சே. அதெப்பிடி ஒரு கண்ணு மைனஸ் மூணர, ஒன்னு மைனஸ் மூணுன்னு ஆவும் சொல்லு? அந்தாளு என்னா சொன்னான் கவனமிருக்கா? பதினாறு வயசுலயே இவ்வளவு பவரு கூடாது. நெறய கேரட் சாப்புடுன்னு சொன்னான். எனக்குதான் காய்கறியே பெரும்பாடாச்சே. இதுல கேரட்டுமட்டுமா சாப்புடப் போறேன்னு இருந்தேன்.

ஊர்ல உலகத்துல கண்ணாடி போட்டா ஒரு ரெண்டு வருசம் கழிச்சி ஒன்னு அப்படியே இருக்கும், இல்ல கொஞ்சம் கூடும். எம் பொழப்ப பார்த்தியா? தலைய வலிக்குதேன்னு போய் கண்ணு செக்பண்ணா, பவர் கம்மி ஆகியிருக்கே, எப்புடின்னு தாடிய சொறிஞ்சி சொறிஞ்சே வேற கண்ணாடி எழுதுவானுவோ. அத வாங்கிப் போட்டு ஆறுமாசத்துக்கெல்லாம் திரும்ப தலை வலிக்கும்.

போன வருசம் செக் பண்ணப்ப வலக்கண்ணுல மைனஸ் ஒன்னு இடக்கண்ணுல மைனஸ் முக்கால்னுச்சி டாக்டரு. இதுல வேற படிக்கறதுக்கு ஒரு கண்ணு ஓக்கே ஒன்னுக்கு ப்ளஸ் கால்னுச்சி. கவலையா நான் சரித்திரம் சொல்லி, ஏங்க வயசானா கண்ணு பார்வை குறையுமா ஏறுமா? இத்தனைக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல கம்ப்யூட்டர மொறைக்கற ஆளுன்னா, கொஞ்ச நாள்ள கண்ணாடி போடவே தேவையில்லாம போகலாம் நல்லதுதானேங்குது. அடுத்ததா போட்டுச்சு ஒரு பிட்டு. இடக்கண்ண விட வலக்கண்ணுக்கு வேலை அதிகம் குடுக்கறனாம். அதென்னா ஏர் மாடா? ஒரு பக்கம் அடிச்சி ஓட்டுறதுக்கு.

சட்ட வாங்கப் போனா அவன்கிட்ட 38ம் 40ம் இருந்தா எனக்கு 39. பேண்டு வாங்கலாம்னு போனா 26ம் இல்லாம 28ம் இல்லாம ஒரு சைசு. நீளம் வேற பாதி பேண்டு துணிக்கு காசு வேஸ்டு. டெய்லர்கிட்ட தைக்கலாம்னு போனா, ஆறடி இருந்தாலும் 1.20மீ என் சைசுக்கும் 1.20மீ அப்படிங்குறான். நீ பி யூ சி சேர்க்குறப்ப 1.10மீ வாங்கிட்டு, பையன் குள்ளம்தானே மிச்ச துணில ரெண்டு ஜட்டி தச்சுடுங்கன்னு கேட்டு தச்சாமாதிரி நான் கேக்க முடியுமா?

சரி வயசானா ரோகம் வரும். அதாச்சும் ஒரு மொறையா வர வேணாமா? கழுத்து வலின்னு போனா தலகாணி இல்லாம தூங்குன்றான். நெஞ்செரிச்சல்னா ஃப்ளாட்டா தூங்காத மூணு தலகாணி வச்சி சாஞ்சாமாதிரி தூங்குன்றான்.

இப்ப ஏண்டா இந்த பொலம்பலுங்கறியா? பொலம்பாம என்ன செய்யச் சொல்லுற? ஆபீசுலதான் நாள் முச்சூடும் குடைராட்டினத்துல உக்காந்தவன் மாதிரி கால் நிலத்துல படாம உக்காந்து கால் வலிக்குது, முதுகு பொளக்குதே. மனுசனுக்கு ஒரு ரெக்ளைனர் சேர் வேணும்னு ஆசைப் படக்கூடாதா? நான் என்னா எண்பத்தேழு வயசானாலும் வீல் சேரானாலும் முதல் மந்திரி சேரா இருக்கணும்னா கேட்டேன். சாஞ்சிக்க ஒரு ரெக்லைனர் அம்புட்டுதானே.

போனேன் கடைக்கு. நல்ல குவாலிட்டில வேணுமான்னுச்சு. நாலுமுழம் வேட்டியோட போனா இம்புட்டுதான் மருவாதின்னு, ஆமாம்மான்னேன். பொட்டிய உருவி, குஷன் போட்டு ஒரு ரெக்லைனர் காட்டுச்சு. ஏழு ஸ்டேஜுங்கன்னு உக்காந்து, பிடியை ஆட்டி ஆட்டி கிட்டதட்ட ஒரு பெட் மாதிரியே படுக்கலாம்னு டெமோ வேற. இதத்தானே தேடிக்கிட்டிருந்தேன்னு பில்லப் போடுன்னேன்.


உக்காந்து பாருங்கன்னு சொன்னுச்சே. ஏழு ஸ்டேஜும் எப்படி இருக்குன்னு பார்த்து வாங்கமாட்டாம கூச்சம்.  வாங்கதான் போறமேன்னு போட்ட மேனிக்கு உக்காந்து பார்த்துட்டு வாங்கிட்டு வந்துட்டேன். முதுகுபக்கம் ஒரு கர்வ் வேற. முதுகு ஷேப்புக்கு, முதுகு வலியே வராதுன்னு வேற சொல்லுச்சேன்னு சந்தோசம். நெலைச்சுதா? இல்ல நெலைச்சுதான்னு கேக்குறேன். 

வந்து ஊட்ல உக்காந்தால்ல தெரியுது. கால சரியாத் தொங்க விடணும்னா கொஞ்சம் சரிஞ்சி உக்காரணும். அந்த பொடப்பு நடு முதுகுல முட்டுக் குடுத்து வகுத்த துருத்திக்கிட்டு எம்புட்டு நேரம்தான் உட்கார முடியும்? சரின்னு அணங்கி சுணங்கி அந்த புடைப்பு எங்க வரணுமோ அங்க உக்காந்தா பாதி ஆடு சதை கால் மடியற எடத்துல வருது. அப்புறம் எங்க மடக்க? சின்னக் குழந்தைய சலூன்ல உக்கார வெச்சாமாதிரி கால அந்தரத்துல நீட்டிக்கிட்டு எப்படி உட்கார?

கிட்ட கிட்ட நாலாயிரம் தண்டம் அழுதப்புறம்தான் கவனம் வருது. ஏண்டாடேய், முடிவெட்டப் போய் என்னைக்குன்னாச்சும் அந்த சீட்ல இருந்து கால் வைக்கிற ஸ்டேண்ட்ல கால் எட்டியிருக்காடா? ட்ரெய்ன்ல ஏசி கோச்சுல வீம்புக்குன்னாலும் எதிர் சீட் கீழ கால் வைக்கிற எடத்துல வைக்கிறேன்னு சாச்சி வச்ச ஏணிமாதிரி இருந்து முதுகு புடிச்சிகிச்சின்னு செத்தியேன்னு என்ன நானே கேட்டு என்ன பண்ண?

இப்ப புரியுதா ஏன் புலம்புறேன்னு. இப்புடி பட்டி பார்க்க உடம்பு ஃபுல்லா இருக்கறப்ப என் மண்டைய ரவுண்டாக்கிட்டேன். சப்ப மூக்க நீட்டாக்கிட்டேன்னு என்னா அலட்டு அலட்டுன? இதெல்லாம் கேக்காம எப்புடி இருக்கறது.

என்னாது?

இங்கபாரு, நானே வயத்தெரிச்சல்ல புலம்புறேன். இப்ப மட்டும் என்ன? லூசு கூட முழு லூசு இல்லைடா நீ, அரை லூசுன்னு சொல்லுறியே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
-:x:-

Friday, April 22, 2011

கேரக்டர் - ராவணதாஸ்

1975. எப்போதடா ஜூன் வரும், 18 வயது நிறையும், கருணை அடிப்படையில் வேலைக்கு மனு செய்யலாம் என்று காத்திருந்த காலம். அம்புட்டு சீக்கிரமாவா உன்னோடான என் விளையாட்டு முடிஞ்சிடும் என்று விதி சதி செய்தது. எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை என்ற இடி வந்து விழுந்தது. கலங்கிப் போய் அப்பாவின் அலுவலகத்தில் போய் அவர் நண்பர்களிடம் வழி கேட்டபோது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலைமை அதிகாரியைப் போய்ப் பார். கலாசியோ, ப்யூனோ, ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் ஊற்றுகிற வேலையோ, ஏதோ ஒன்றுக்கு வழியிருக்கும் என்ற ஆலோசனை கிடைத்தது. 

தயங்கித் தயங்கி அந்தப் பெரிய அறையில், யாரோ சொல்ல கலாசி வேலையாவது தரும்படி மனுவை எடுத்துக் கொண்டு கால்கள் தொய்ய ஒரு ஒல்லியான குள்ள உருவம் கலாசி வேலைக்கு மனுவை நீட்டினால் அந்த அதிகாரிதான் என்ன செய்வார்? நமட்டுச் சிரிப்போடு 7 அடிக்கு 5 அடி டேபிளை அறை மூலைக்கு இழுத்துப் போடமுடியுமா என்று கேட்டபோது நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  ‘சரி, நீ போப்பா கடிதம் வரும்’ என்றபோது ஆவலோடு காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அதிகம் காக்க விடாமல் அக்டோபரில் என் பிறந்தநாள் அன்று(ஷ்ஷ்ஷ் அக்டோபரில் எப்படி என்று எல்லாம் கேக்கப்படாது) பரிசாக கேஷியருக்கு பணப்பெட்டி தூக்கும் ப்யூனாக உத்தியோக நியமனம் வந்தது.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு போய் வேலையில் சேரப் போய் எல்லாம் முடிந்து வேலையில் சேர்ந்தபோது பெட்டி தூக்க வேண்டாம், தபால் வாங்கும் பிரிவில் வேலை பார் என்று சொன்னார்கள். என்னைப் போன்றே நிறையப் பேர்கள் இருந்தாலும், அநேகம் பேரின் முகத்தில் ஒரு அசூயையும், எங்கு திரும்பினாலும் என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்வியுமாகவே இருந்தது. இரண்டாவது நாளே அதற்கான காரணமும் புரிந்தது. 


பி.எஸ்.ஸி ஜூலாஜியும், பி.ஏ. எகனாமிக்சும், பி.எஸ்.ஸி ஸ்டாடிஸ்டிக்சும் யாரோ ஒரு அதிகாரிக்கு ப்யூனாய், ஃப்ளாஸ்கில் டீ வாங்கிக் கொண்டும், டீ கப்பும், சாப்பிட்ட தட்டு கழுவும் வேலையிலும், ஆஃப்டர் ஆல் ஒரு பி.யூ.சி. தபால் பிரிவில் இருப்பதும் அவமானமாக உணரப்பட்டது. எதிர்ப்பதற்கு சுலபமாக ஒரு காரணமும் கிடைத்தது. போஸ்டிங் போடுபவரும், நானும் பார்ப்பனர் என்ற காரணம் கிடைத்தது. எதிர்ப்பதற்கு ஜாதி ஒன்று போதாதா என்ன?

இருப்பதிலேயே சீனியர், தைரியமாக இதையே காரணம் சொல்லிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார் அதிகாரி. உடனடியாக அவர் இடத்தில் என்னை வேலைப் பார்க்கச் சொல்லி உத்தரவாயிற்று. ரொம்பவும் பெருமையாக ‘தைரியமாக கேட்டாதான் நியாயம் கிடைக்கும்’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த அதிகாரியிடம் இன்றிலிருந்து இவந்தான் உங்களுக்கு ப்யூன். நான் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

கனிவான முகம். ஐந்தரை அடிக்கு மேல் உயரம். அகன்ற மார்பு. திரண்ட தோள்கள். மீசையின்றி நட்பாய்ப் புன்னகைக்கும் உதடுகள். பசுவைப் போல் கருணை ததும்பும்  கண்கள். காதை மூடிய, நடுவில் வகிடு தெரியாமல் பிரித்த தலை முடி ஸ்டைல். நட்பாய்ப் புன்னகைத்து, பெயர் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார். 


என் சீனியருக்கோ வாய் கொள்ளாச் சிரிப்பு. கப் எங்கே கழுவ வேண்டும், சாப்பாடு எங்கே இருந்து கொண்டு வர வேண்டும். மிகுந்திருக்கும் சாப்பாட்டை கேரியரில் போட்டு சாப்பாடு கொண்டு வரும் பெண்மணியிடம் எப்போது கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

தான் சாப்பிடப் போகுமுன், என்னை விசாரித்து, சாப்பிட்டுவிட்டு வரச் சொல்லி ராவணதாஸ் சாப்பிடப் போனார். அள்ளி அடைத்துக் கொண்டு, அவர் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தேன். பெல் அடித்து, ’சாப்பிட்டாயிற்று, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கேரியரைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அவர் சாப்பிடும் மறைவுக்குப் போய் பார்த்தபோது குழப்பம் வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கிருந்தவற்றில் முட்டைமட்டுமே எனக்கு அடையாளம் தெரியும். மீனிலும், கறியிலும் எது எறிய வேண்டியது? எதை திரும்ப டிஃபன் கேரியரில் வைக்க வேண்டியது என்பது ஒன்றும் பிடிபடவில்லை.

திரும்பவும் சீனியரிடம் ஓடி, ‘சாமி எனக்கு எது என்னாண்ணு தெரியல. கொஞ்சம் வந்து சொல்லிக் கொடு’ என்று நின்றேன். அவனுக்கோ படு குஷி. என்னையும் அழைத்துக் கொண்டு, உள் நுழைந்து, ‘அய்யரு பையன். எது என்னான்னு தெரியலை. சொல்லிக் கொடுக்கிறேன்’ என்றவனை பதறித் தடுத்தார். இன்னைக்கு நீயே எல்லாம் க்ளீன் பண்ணி கொடுத்துவிடு என்றவர் ‘சாரி! தம்பி. சைவம்னு சொல்லியிருக்கலாமே? நீங்க போங்க’ என்றவர் சீனியரிடம் என் அதிகாரியைக் கூப்பிடச் சொன்னதும் அடி வயிறு கலங்கியது.

சீனியருக்கோ ‘சிக்கினாண்டா சின்ராசு’ என்ற களிப்பு. என் அதிகாரியிடம் போய் ’ஐயா கூப்டுறாரு. இவன ப்ளேட் எடுக்கச் சொன்னா என்னைக் கூப்பிட்டான். ஒன்னும் தெரியலை’ என்று மொட்டையாக ஒரு பிட்டைப் போட்டு பெருமையாய் என்னைப் பார்த்தான். பயத்தில் கலங்கிப் போய் தின்ன சோறு வெளியே வந்துவிடுவேன் என்று பயம்காட்ட, ‘என்னடா பண்ணித் தொலஞ்ச?’ என்ற அதிகாரியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் நின்றேன்.  வெற்றி வீரனாய் சீனியரும், பூசாரியாக அதிகாரியும், பலியாடாக இன்னமும் குறுகி நடுங்கி நானும் போய் நின்றோம்.

மிகவும் சாந்தமாக ‘அந்தப் பையன் சைவம்னு உங்களுக்கு தெரியுமா?’ என்றார்.

’தெரியும் சார். ப்ராமின் பாய். வேலைக்குன்னு வந்தப்புறம் அதெல்லாம் பார்த்தா முடியுமா? புதுசு சார். பழகிக்கணும்’ என்று சொன்னவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தார்.

‘சாரிங்க பத்மநாபன். நாம எல்லாரும் இந்த வயத்துக்காகதான் வேலை பார்க்கிறோம். அவருக்குப் பழக்கமில்லாத ஒன்னை அவர் செய்ய நேரிடும்னா அது பழகும்னாலும் மனசு வருத்தம் இருக்கும். எனக்கு அப்படி யாரையும் வருத்தி சாப்பிட அவசியமில்லை. என் கூட உட்கார்ந்து உங்களால இயல்பா சாப்பிட முடியுமா? அவரு அடிமை இல்லைங்க என்றவர், என்ன தம்பி படிச்சிருக்கீங்க’ என்றார். 

அழமாட்டாக் குறையாக, ‘சார்! எனக்கு எது என்னாண்ணு தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புன்னா மன்னிச்சிருங்க சார். பழகிக்குவேன் சார்’ என்று சொல்லும்போதே இதோ அழுதுவிடுவேன் போல் ஆகிவிட்டேன். சட்டென்று எழுந்தவர், தோளை அழுத்தி, ’என்ன படிச்சிருக்கீங்க தம்பி’ என்றார்.

‘பி.யூ.சி. சார். மூனு டிஸ்டிங்க்‌ஷன் சார்’ என்று சொல்லி வாய் மூடுமுன், அந்த சாந்தமான முகத்தில் ஒரு சிடு சிடுப்பு. ’யூஸ் ஹிம் ப்ராபர்லி ஐ சே. க்ளெரிகல் போஸ்டுக்குதான் ஆளில்லாம இருக்குல்ல. இந்த மாதிரி பசங்களுக்கு சின்ன சின்ன வேலை கொடுத்து பழக்கலாம். டெஸ்பாட்ச்ல போடுங்க, என்றவர்  சீனியரைப் பார்த்து ‘இன்னைக்கு ஒரு நாள் க்ளீன் பண்ணிடுங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. அதனால நீங்க இருக்கணும்னு சொல்லமாட்டேன். வேற யாராவது கிடைச்சா போடுங்க. இல்லாட்டி நானே பார்த்துக்கறேன்’ என்றார்.

இப்போது சீனியருக்கு நடுக்கம் தொற்றிக் கொண்டது. ’இல்லை சார். நானே இருக்கிறேன் சார்’ என்றவரை இடை மறித்து ‘எனக்கு கோவம் இல்லைங்க பாபு. விருப்பமில்லைன்னு தெரியும்போது நான் கட்டாயப் படுத்த விரும்பலை’, என்று அமர்ந்தார். ‘சாரிங்க தம்பி என்று மீண்டும் என் தோள் பிடித்தழுத்தி, ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பி வைத்தவர்தான் ராவணதாஸ்.

எளிமையென்றால் அப்படி ஒரு எளிமை. நேரம் தவறாமை. நேர்மை. அவரின் ஆங்கிலத்துக்காகவும், பண்புக்காகவுமே அந்தகாலத்து ஆட்கள் வெள்ளக்காரனுக்கப்புறம் இப்படி ஒரு மனுசன பார்த்ததில்லை என்று பெருமைபடச் சொல்லுவார்கள். பந்தாவாக ஆங்கிலத்தில் ஆரம்பித்த சக அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் முதல் பதிலில் அப்பீட்டாகி தமிழுக்கோ இந்திக்கோ தாவி விடுவார்கள். நடையா அது? நிதானமாக ஆனால் ஒரு சிங்கத்தின் நடைபோல் அப்படி ஒரு கம்பீரம்.

பாரிச வாயு வந்த தகப்பனார். தன் வீட்டில் பணி செய்ய ஒரு ப்யூன் இருந்தபோதும், காலையில் எழுப்பி குளிப்பாட்டுவது முதல், பத்திரிகை படித்து செய்தி சொல்லி, உணவூட்டி, மாலை பங்களா லானில் வீல் சேரில் சுற்றி வந்து, திரும்பவும் குளிப்பதோ உடல் துடைப்பதோ கைப்படச் செய்து, இரவு உணவு கொடுத்து, டி.வி. முன்னால் அமர்த்தி, தான் டென்னிஸ் உடையணிந்து கிளம்பும்போது மாலை மணி 7 என்று கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

அவருக்கு மாற்றல் வந்தபோது ‘நல்லது. அப்பா இருந்திருந்தா கஷ்டம்’ என்றாரே தவிர அதை மாற்றிக் கொள்ள முயற்சித்ததே இல்லை. அது அப்படி ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. காரணம் கடைசி வரியில். பல வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதற்கடுத்த பதவியில் அதே அலுவலகத்துக்கு வந்தபோது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.

ஒரு சக ஊழியர் பாவப்பட்டவர். ஒரு கிட்னி பழுதாகி மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர். போதாததற்கு இடுப்பெலும்பு நொறுங்கும் நிலையில் இருந்ததால் ஏதோ ஒரு தொண்டார்வ நிறுவனத்தின் மூலம் ஸ்விட்ஜர்லாந்தில் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டது. திரும்ப வந்தவருக்கு பொருத்தப்பட்ட கிட்னியும் செயலிழந்து போக ஒரு கிட்னிக்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் நிலையில் ஒரு சகோதரன் கிட்னி தானம் அளித்தார். ஒவ்வாமை நீக்க மருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணம் கூட வரவு செலவு திட்டத்தில் இருக்கும்.

அது ஒரு திரவ மருந்து. இளம் சூடான வென்னீரில் கலந்து அருந்த வேண்டும். அப்போது சிறுநீரக மாற்றுக்கு சி.எம்.சி தான் போக வேண்டும். அப்போது புதிதாக இந்த மருந்துக்கு பதில் மாத்திரை வந்திருந்ததாகக் கேள்விப்பட்டு, மனைவியுடன் வந்து பார்த்தார். அந்த மருந்துக்கு பதில், மாத்திரையாக வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தார் மனைவியை. மிகவும் பொறுமையாக, ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும், மாத்திரையை விட மருந்து உடனடியாக உதவும் என்று சொன்னபோது, அந்தம்மிணி, அடிக்கடி கை தவறி உடைந்து விடுவதாக ஒரு காரணம் சொன்னார்.

முதன் முறையாக ராவணதாசிடம் கோவத்தைப் பார்க்க முடிந்தது. ’அது மருந்தில்லீங்க. ஒரு மனுசனோட உசிருன்னு கவனமிருந்தா அதெப்படிங்க கை தவறும்? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தாதான் நேரத்துக்கு மருந்து வந்து சேரும். என்ன பேசறீங்க’ என்றவுடன் ஓவென அழத்தொடங்கிவிட்டது அந்தம்மணி.

5 நிமிடம் அமைதியாக இருந்தார். மருத்துவ அதிகாரிக்கு ஃபோன் செய்தார். ஆர்டரைக் கேன்ஸல் செய்ய முடியுமா என்று உறுதி செய்து கொண்டார். அவரிடமே சி.எம்.சி. டாக்டர்களிடம் பேசி மாத்திரைக்கும் வழி செய்தார். அந்தம்மணி காலில் விழப்போனபோது தானும் சக மனிதந்தான் என்றும் காலில் விழவேண்டிய அவசியமென்னவென்றும் கோவப்பட்டார். அடுத்த நொடி சாந்தமாகி, உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வரலாம் என்று சொன்னபோது அவருக்கேயான சாந்தமும் அமைதியும் நிறைந்திருந்தது.

பல கோடி ரூபாய் திட்டங்களையும், செயலாக்கத்தையும் கண்காணித்தவர். திறமையான அதிகாரி. எல்லாவற்றையும் விட உன்னதமான மனிதர். விதிக்கு இதைவிட விளையாட வேறு ஆள் கிடைப்பார்களா என்ன? ரிட்டையர் ஆன பிறகு, அந்த காலத்தில் மிகவும் பிரசித்தமாக இருந்த, தேக்கு, சந்தனம், எலுமிச்சை வகையறா முதலீட்டில் தானும் பார்ட்னராகி, கூட்டாளி ஓடிவிட கையிலிருந்து அனைவருக்கும் கொடுத்து முடித்தார். ஒருவருக்கும் குறைவில்லை.

ஏதோ ஒரு நாள் அவர் இறந்துபோன தகவல் வந்தது. கடைசி வரியில் காரணம் சொல்கிறேன் என்றேனே. திரு ராவணதாசின் மாமியார் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமாயிருந்த திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்.

Thursday, April 21, 2011

சாரா! சாரா!

கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?

சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.

இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.

பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள்.

சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.

உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள்.

முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன்.

சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.

நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள்.

எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?

ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.

இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?

இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?

இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?

இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன்.

இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும்.

இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்
வானம்பாடிகள்.

சாராவின் கடிதம்.


--:::--

Sunday, April 17, 2011

நிழலின் அருமை வெயிலில்

வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களின் அருமையை அப்போது நாம் உணர்வதில்லை. பின்னெப்போதோ அதுகுறித்து படிக்கும்போது இதை நாம் அப்போது உணரவில்லையே என்ற வருத்தம் நீங்காமல் நின்றுவிடும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரிலிருந்து ரயில்வே ட்ரெக், மற்றும் ஃபோட்டோ போட்டி என்று ஒரு செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட ரூ12000 என்று கவனம். அந்த ஊரில் ராமர் வனவாசம் மாதிரி 14 மாதங்கள் இருந்ததாக கருதியிருந்ததன் மதிப்பும், அந்த கொடுப்பினையை ரசிக்காத அப்போதைய மன நிலையும் தந்த படிப்பினைதான் மேலிருக்கும் பத்தி.
ஹாசனிலிருந்து மங்களூருக்கு செல்லும் ரயில்பாதையில் அமைந்திருக்கிறது சக்லேஷ்பூர். இந்திய ரயில்வேயின் திறனுக்கு ஒரு அத்தாட்சி அந்த ரயில்பாதை. சக்லேஷ்பூர் தாண்டிய சிறிது தூரத்திற்குப் பிறகு கபகா புத்தூர் வரை மலைகள், அதற்கிடையேயான அதல பாதாளங்கள். மலையைக் குடைந்தும், பாதாளத்திலிருந்து தூண்கள் எழுப்பியும் அமைத்த பாதை அது. எடக்குமாரி என்ற ஒரு ஸ்டேஷனில் ப்ளாட்ஃபார்மை ஒட்டிய டீஸ்டாலில் டீ வாங்கிக்கொண்டு ஒரு அடி நகர்ந்தால் பாதாள லோகம்தான். அதே போல் டோனிகல் ஸ்டேஷன் வரும் முன் ஒரு ரயில்பாதை தெரியும். அந்த வழியாகத்தான் வந்திருப்போம். ஆனால் பார்ப்பதற்கு அதன் வழியாகப் போகப் போவது போல் தோற்றம்.
அந்த மலைப்பாதையில் ட்ராக் போட, இதர தளவாடங்கள், சிமெண்ட், இரும்புக்கம்பி எல்லாம் எப்படிக் கொண்டு போவது? எங்கள் அரக்கோணம் வொர்க்‌ஷாப் இஞ்சினியர்களின் புதிய கண்டுபிடிப்பாக இந்திய ரயில்வேயில் முதன் முறையாக ரயில் சக்கரங்களை மாட்டி தண்டவாளத்தில் லாரி ஓடியது. 
கிட்டத்தட்ட 52 பெரிய பாலங்கள், 35க்கும் மேற்பட்ட டன்னல்கள், 150க்கு மேற்பட்ட சிறிய பாலங்களின் மீதே அமைந்த ரயில்பாதை அது. சக்லேஷ்பூர் உலகப் புகழ்பெற்றது. ஏலக்காயின் உலகச் சந்தை அது. சக்லேஷ்பூர் கூட்டுறவுச் சங்கத்தின் தேனுக்கு நிகராக எங்கேயும் பார்க்க முடியாது. ஆனாலும் குடகுத் தேன் என்றே எப்படியோ பெயர். காஃபி, தேயிலைத் தோட்டங்கள். எஸ்டேட் ஓனர்கள், அதில் பணிபுரிபவர்கள் என்ற இரண்டேதட்டு மக்களிடையே ரயில்வே வந்த பிறகுதான் நடுத்தட்டு மக்கள் வர்க்கமே வந்ததாகச் சொல்வார்கள்.
இந்த ஊரை அனுபவிக்க என்ன தடை என்று நினைக்கலாம். முதன் முறையாக வீட்டை விட்டு பாஷை அவ்வளவு தெரியாத ஊரில் போய் பிழைப்பு என்ற முதல் காரணம். 1985ல் ரூ800 சம்பளத்தில் சென்னையில் அம்மாவும் தம்பியும், நான் சக்லேஷ்பூரில் என்று இரண்டு குடித்தனங்கள் என்பது ப்ரமோஷன் என்ற மகிழ்ச்சியைவிட பனிஷ்மெண்ட் என்ற அயற்சி இரண்டாவது காரணம். சென்னையிலிருந்து இரவு கிளம்பி பெங்களூர் போய், உடனே அடுத்த வண்டி பிடித்து அரிசிக்கரை போய், அங்கிருந்து வேறு ஒரு பேசஞ்சர் பிடித்து ஹாசன் போய், அங்கு பஸ்பிடித்து ஒரு மணிக்கும் மேல் பயணம் செய்து சக்லேஷ்பூர் சேரலாம் என்பது மாதம் ஒருமுறை கூட வீட்டிற்கு வந்து போவது கடினம் என்பது பெரும் காரணம்.

வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனி மாலை வீட்டிற்குவந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி திங்கள் அலுவலகத்தில் இருந்தாகவேண்டும். ஊர் என்பதே கொத்துக் கொத்தாக மலைகளின் இடையே. ஒரு மலையின் மேலிருக்கும் என் வீட்டிலிருந்து இறங்கி இன்னோரு மலையில் ஏறினால் டவுன். தூரம் என்னமோ ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர்தான். மதியம் டவுனில் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆஃபீஸ் வந்தால் பசிக்கும்.

செப்டம்பரிலிருந்து மெதுவே முதுகுத்தண்டை உறைக்கும் குளிர், டிசம்பரிலிருந்து ஃபெப்ருவரி வரை அப்படிக் குளிரும். குளிரென்றால் மழையோடு கூடிய குளிர். இரவில் பெங்களூரில் ஏறி மேல் பர்த்தில் படுத்து, கனத்த போர்வையை போர்த்துக் கொண்டால், காலையில் சக்லேஷ்பூரில் இறங்கும்போது பிழிந்தால் இரண்டு பக்கெட் நீர் வரும். ஃபெப்ருவரி கடைசில் லேசாக உறைக்கும் சூரியன் ஏப்ரலில் உச்சத்தில் இருக்கும்போதே, ‘மளே யாவாக பருத்தே? பேப்பரல்லி டேட் ஹாக்கிதானா? ஒந்து வாரா லேட்டா?’ (‘மழை எப்போ வருதாம். பேப்பரில் தேதி கொடுத்திருக்கானா? ஒருவாரம் லேட்டா?)  என்று எழவு விசாரிப்பதுபோல் கேட்டால் ஓவென்று அழவேண்டும் போல் வரும். வருஷத்தில் பத்துமாதம் நச நசவென்று மழையில் வாழ்வது சென்னை மாதிரி ஊரில் இருக்கும்போது வேண்டுமானால் சொர்க்கமாகத் தெரியலாம். உண்மையில் அனுபவிக்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும்.
ஆஃபீஸ் ஒரு குன்றில். குவார்ட்டர்ஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி இன்னோரு மலை முகட்டில். மழையென்றால் பலமாதங்களில் பூந்தூறலாக இருக்கும். வானத்துக்கும் பூமிக்கும் டாட்லைன் போட்டாற்போல். மண்ணோ பூமண். புல்லிருக்கிறதே என்று கொஞ்சம் கவனப் பிசகாக காலை வைத்தால் அப்படியே வாரி விடும். செருப்பு அணிந்திருந்தால் பின்பக்கம், போடாவிட்டால் முன்பக்கம் எப்படி விழமுடிகிறது என்பது இது வரை புரிந்ததில்லை. அதுவும் ஆஃபீஸ் அருகில் போய் வழுக்கி விழுந்து, சேறு பூசிக் கொண்டு திரும்ப மலை இறங்கி ஏறி வேறு உடை அணிந்து போவது என்பது எவ்வளவு கொடுமை? சரி வெயில் காலமாவது அனுபவிக்கலாம் என்றால் சரியாக 6லிருந்து 7 வரை கொள்ளைக்காரன் வருவது போல் எல்லா வீட்டிலும் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துவிட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

அந்த ஊர் கொசுவார் அவ்வளவு வில்லன். அங்கே இங்கே என்று கடிக்கும் வேலையே கிடையாது. சரியாக கண் இமை, மேல் உதடு, காது, மூக்கு மடல் போல் சாஃப்ட் டார்ஜட்தான். ஒரு கடி ஒரு உறிஞ்சு அவர் போய்விடுவார். காதில் கடித்தால் யானைக்காது மாதிரி, மூக்கில் கடித்தால் மூணு இஞ்சு அகலத்துக்கு, உதட்டில் கடித்தால் மூக்கைத்தாண்டி தெரியும்படி வீங்குவது கொடுமை என்றால், கண் இமையில் போட்டதோ, டாம் அண்ட் ஜெர்ரியில் டாம் மாதிரி வத்திக் குச்சி வைத்தாலும் கண் திறக்காது.

போத்தி மெஸ்ஸில் சாப்பாடு மூன்று ரூபாய்தான். சுரைக்காய், பீர்க்கங்காய் என்று நீர்க்காயாக இருக்கும். சாதத்தில் சாம்பார் ஊற்றிவிட்டு போனால் சாதம் வெள்ளையாகவே இருக்கும். பருப்பே இல்லாமல் அப்படி ஒரு சாம்பார் எப்படி வைக்க முடியும் என்று விளங்கியதே இல்லை. ரசம் பாயசம் போல் இனிக்கும். தயிரும், மலை நாரத்தை ஊறுகாயும் சொர்க்கம். ராயர் மெஸ்ஸில் அபாரமாக இருக்கும். ஆனால் கெடுபிடி அதிகம். அக்கி ரொட்டி (அரிசி ரொட்டி) சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?

இத்தனை சோகத்திலும் ஒரு நாள் நாலணாவுக்கு வாங்கித் தின்ற காரமான வெங்காய பிஸ்கட்டில் மயங்கி, 5ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு இது போதும் என்று  வீட்டிற்குப் போய் தின்று, ஒரு மணி நேரத்தில் வயிறு தீப்பிடித்தது போல் எரிய திரும்பவும் மலையிறங்கி, ராத்திரி ஒரு மணிக்கு 4 இட்டிலி தின்றதும், மூன்று ரூபாய்க்கு அரைப் பலாப்பழம் வாங்கி, சுளையைத் தேனில் ஊறப் போட்டு, நானும் அறை நண்பனும் திகட்டத் திகட்ட தின்று அடுத்த நாள், பிடுங்கிக் கொண்டு யார் லெட்ரீனுக்கும் வீட்டுக்கும் அலைவது என்று லெட்ரீன் அருகிலேயே குத்தவைத்து நொந்ததும், விடாமல் 103-104 என்று அடித்த ஜூரத்துக்கு மாத்திரை மருந்தில்லாமல், இளநீரும் கோல்ட் ஸ்பாட்டும் மட்டுமே உணவாக்கி ஒரே நாளில் சரியாகப் போனதும், ராம நவமியில் ராமர் கோவிலில் வாலில்லாத அனுமார் மாதிரி எங்கள் மூத்த எஞ்ஜினீயர் ஜிங் ஜிங் என்று குதித்துச் செய்த காலட்சேபமும், பாதி சினிமாவை நிறுத்தி, டிவிஷனல் அக்கவுண்டண்ட் உடனடியாக ஆஃபீஸ் வரவும் என்ற ஸ்லைட் வாங்கிய பெருமிதமும், ராமன் கடை சப்பாத்தி, தோசை சாம்பாரும், நேத்ராவதியில் வெள்ளம் வரும்போது ஜெலடின் குச்சியில் கொளுத்தி வீசி ஆளாளுக்கு பெட்ஷீட்டில் பொதி பொதியாய் மீன் பிடிக்கும் காட்சியும்...ஸ்டாக் டேக்கிங்கில் 2 தண்டவாளம் அதிகம் என்றால், போன வருட மழையில் புதைந்தது இந்த வருட மழையில் மண் அரிப்பில் கிடைத்தது என்றும், 2 குறைவு என்றால், அதிக மழையில் மண் சரிவில் மூடியிருக்கலாம் அல்லது கரையான் அரித்துவிட்டது என்றும் எழுதும் காமெடி...

சக்லேஷ்பூர்..ஐ மிஸ் யூ ரியல்லி:)
டிஸ்கி: புகைப்படம் கூகிளார் தயவு:)
--:o:--

Friday, April 15, 2011

கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..

கேரக்டர் தொடரில் ஏன் இது மட்டும் திருமதி ராஜம் ஆறுமுகம் என்ற கேள்வி எழலாம். இது உண்மையில் இரண்டு கேரக்டர்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் அவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாமையா? அல்லது இன்றைய ராஜத்தின் நிலையா என்பதை முடிவில் நீங்களாக முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

அயன்புரம் மார்க்கட் வீதியும் நெட்ட முத்தியால் கான் வீதியும் சந்திக்கும் முனையில் இடது ஓரம் ராஜத்தை இன்றும் பார்க்கலாம். இந்த ராஜத்தை நான் தவிர்த்துவருகிறேன். ஓரிருமுறை கடக்க நேர்கையில் அவசரமாகப் பாராதது போல் கடக்கப் போய் அத்தனை கும்பலிலும் அடையாளம் கண்டு ‘டேய் அய்யிரே’ என்று அழைத்து பாசமாய்க் கேட்ட கேள்வியில் உடையாமல் பதில் சொல்வது என்பது முடியாத காரியமாகிப் போய்விட்டது. என் மனதில் இருக்கும் ராஜம் இவரல்ல.

என்.எம்.கே.ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் நெட்ட முத்தியால் கான் தெருவில் முதல் பிரிவில் வலது பக்கம் இருப்பது திருப்பாச்சூரான்  தெரு எனப்படும் திருப்பச்சீஸ்வரர் தெரு. இதன் முனையில் இருந்தது ‘அறிஞர் அண்ணா வாடகை மிதிவண்டி நிலையம் உரிமையாளர்: கா.ஆறுமுகம்’.

எண்ணெய் தடவி பின் தூக்கி வாரிய கிராப்பு, பென்சிலால் வரைந்தாற்போல் ஜெமினி கணேசன் மீசை, கவிழ்த்துப் போட்ட ஆங்கில எழுத்து ‘வி’ போல முட்டி தட்டும் கால்கள், நிரந்தரமான வாயோர மைனாப் புண், அதிர்ந்து பேசாமலே எதிராளியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு பார்வை, ஐந்தரை அடிக்கும் சற்றே குள்ளமான உருவம் கொண்ட ஆறுமுகத்துக்கும்

ஆறடிக்கு சற்றேறக்குறைய உயரம், உயரத்துகேற்ற உடல்வாகு, உடல்வாகுக்கேற்ற உயர்ந்த குரல், இரண்டு நத்தைகளைத் தொங்க விட்டாற்போல் மூக்குத்தி, அகலமான தோடு, நெற்றில் சிக்னல் போல் ஒரு ரூபாய் அளவு குங்குமம், எண்ணெய் காணாத செம்பட்டைத் தலை, எப்போவாவது விசேஷகாலங்களில் லேசாகத் தலைகாட்டும் ஒரு இணுக்குப் பூவோடு பூக்கடை வைத்திருக்கும் ராஜத்திற்கும் என்ன பொருத்தம் இருந்திருக்கிறது?

காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து முதல் பஸ் பிடித்து பூக்கடை போய் பூவாங்கி வந்து, இரவு மிகுந்த பூக்களை எடுத்துக் கொண்டு போய் கடை போடுவாள் ராஜம்.

ஏழு மணிக்கு குளித்து மைனர் போல் இஸ்திரி செய்த மல்வேட்டியுடன் பளபளா வெள்ளைச் சட்டையும், எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் சுருட்டலான முழுக்கைச் சட்டைச் சுருட்டலும், சன்னல் பனியனின் மேல் அண்ணா படம் போட்ட இரட்டைப் புலி நக செயினும், வலது கையில் அண்ணா பரிசளித்ததாகச் சொல்லப்படும் உதய சூரியன் படம் போட்ட மோதிரத்துடன், பளபள புது சைக்கிளில் ஏறி, 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் போவார் ஆறுமுகம்.

பத்து மணியளவில் பூக்கடையை ஏறக்கட்டி வரும்போது குழம்பு செலவுக்கு காசுக்கு மல்லுக்கு நிற்பாள் ராஜம். பெரும்பாலும் மறுவார்த்தையின்றி ஒரு பத்தோ இருபதோ கொடுத்துவிடுவார் ஆறுமுகம். இல்லை எனச் சொல்லப்படும் நாட்களில் அசந்த நேரத்தில் டவுசர் பாக்கட்டில் கைவிட்டு ராஜம் மொத்தமாக லவட்டப் பார்ப்பதும், டவுசரின் மேல் கையை இறுகப் பிடித்து ‘உடுமே உடுமே’ என்று சல்லாபிப்பதும் கடந்து செல்பவர்களின் கடைவாயோரப் புன்னகையை வரவழைப்பவை.

பத்துமணிக்கும் இரண்டுமணிக்கும் உண்டான இடைவெளியில் எப்போது சமைக்கிறாள், எப்போது காலை வாங்கி வந்த பூவைக் கட்டி வைக்கிறாள், மீண்டும் மாலை உதிரிப் பூ வாங்கப் போய் வருகிறாள், நான்கு மணிக்கு தவறாமல் எப்படி கடை போடுகிறாள், இரவு ஒன்பதரை அளவில் வந்து எப்போது சாப்பிட்டு, எப்போது பேசி, எப்போது தூங்கப் போகிறாள் என்பதை யாரும் கணிக்க முடியாது.

தி.மு.க.வில் முக்கியப் புள்ளியான ஆறுமுகத்துக்கு கட்சி தாண்டிய மதிப்பு கண்கூடு. வீதியில் சண்டை போடுபவன், பெண்டாட்டியை நடு வீதியில் போதையில் கும்முகிறவன், கட்சி மீட்டிங்கில் பிகிலடித்து கலாட்டா செய்ய நினைக்கும் புதிய இளைஞன், கள்ள ஓட்டு போட வந்து, போ என்று சொன்ன பிறகும் நிற்பவன் யாராயிருந்தாலும் ‘ஏய்! போ!!’  என்ற ஒற்றைச் சொல்லில் போகாவிட்டால் விழும் ஒற்றை அறையில் ஒன்று தரையில் இருப்பார்கள் அல்லது தள்ளாடி நடப்பார்கள்.

மற்றவரைப் போல் கூவி அழைத்துக் கூட பூ விற்கமாட்டாள் ராஜம். அவள் கடையில் யாரும் பேரம் பேசுவது கிடையாது. பாத்திமாவோ, ரெஜினாவோ, மங்களமோ, ராணியோ கர்ப்பிணிப் பெண்கள் யாரும் தலையில் ஒரு விறக்கடை பூவில்லாமல் தாண்டிப் போக முடியாது. கூடவே புருஷனும் இருந்தால் ஜென்மத்துக்கு சாப்பிட மறந்தாலும் மறப்பான், பெண்டாட்டியை பூவில்லாமல் ராஜத்தின் கடை தாண்ட அனுமதிக்கமாட்டான். பெண்டாட்டிக்கு வைத்து விட்டாளே என்று கடனே என்று யாரும் உடனே ஒரு முழம் பூ வாங்கிக் கொடுக்க முடியாது. அவள் வைத்து விட்டதுதான்.
 
மார்க்கட்டில் பெண்களை இடிப்பவர், குடித்துவிட்டு மிரளவைப்பவர், மீன் வெட்டும் கத்தியை உயர்த்திப் பிடித்தபடி சண்டைபோட்டு கலங்கடிப்பவர்களுக்கு, ஒற்றை இழுப்பில் சுருண்டு விழுந்து ராஜத்தின் காலால் இடுப்பில் மிதிபட்ட வலியா அல்லது மூன்று நான்கு தலைமுறையை சேர்த்து இழுத்து வைத்து திட்டும் திட்டில் நாளை எப்படி இந்த வீதியில் நடப்போம் என்ற வலியா எது பெரிது என்று புரியாது. குறைந்தது அரைமணி நேரம் ஓயமாட்டாள்.

ஏதோ ஒரு விசேஷ நாளில், தலை குளித்து தலையாற்றி, லேசாக எண்ணெய் பூசி ஒரு விறக்கடை மல்லிப்பூ சுத்திவிட்டால், ஆறுமுகம் மாலை ஆறுக்கெல்லாம் கடையடைத்துவிட்டு பத்தாம் நம்பர் சாராயக் கடைக்குப் போய்விடுவார். இரண்டு மகள்களும் இரு மகன்களும் அத்தகைய ஒரு நாளில் வந்து பிறந்திருக்க வேண்டும்.


மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து, அதே மார்க்கட்டில் பூக்கடை வைக்க இடம் பிடித்துக் கொடுத்து ஒரு வழியாக ஒப்பேற்றினாலும், மூத்த மகன் சண்டியனாகவும் இளைய மகன் சுமாராகப் படிப்பவனாகவும் அமைந்து போனான். வசதி கருதி பெரம்பூருக்கு நான் குடி பெயர்ந்தபின்னும் வீட்டு விசேஷம் என்றால் மூன்று கிலோமீட்டருக்கு ஆட்டோவாகிலும் வைத்துக் கொண்டு போய் ராஜம் கடைப் பூதான் வாங்குவது.

அப்படிப் போன ஒரு நாளில் அவளின் மூத்தமகனின் படம் தாங்கிய போஸ்டரைக் காண நேர்ந்தது. என்ன கேட்கவென்றே தெரியாமல் தடுமாற, ஒரு வார்த்தை பேசமுடியாமல் விழியோரம் முந்தானையால் துடைத்துக் கொண்டு கைவந்த போக்கில் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு வந்தேன். அடுத்த முறை போனபோது இன்னொரு மகனின் போஸ்டரின் முன்னால் முகம் கொள்ளாச் சிரிப்போடு அமர்ந்திருந்தாள் ராஜம்.

பட்டப்படிப்பை முடித்து, எம்.ஏ.வில் சேர்ந்ததைப் பாராட்டி நண்பர் குழாம் அடித்த போஸ்டர் அது. மறக்காமல் போஸ்டர் உபயம் கா.ஆறுமுகம் என்பதைச் சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் கடை கண்ணிக்குப் போவது என் தம்பியாதலால், சில வருட இடைவெளிக்குப் பிறகு ராஜத்தின் கடை முன் நின்று தேடினேன்.

வாடி வதங்கி, முற்றிலும் பொலிவிழந்து, மூக்குத்தியும் தோடும் மட்டுமே அடையாளம் காட்ட ‘வா அய்யரே’ என்றவள் நொறுங்கிப் போனாள். ‘அப்பா போய்ட்டாருய்யா. ராஜம் தண்ணி எட்தாமேன்னாரு. ரண்டு நிமிட்டு இல்ல அய்யரே. தல தொங்கிடிச்சி. பாவி மனுசன், என்ன விட்டு எப்புடி போனாரு தெரியல அய்யரே. ஒரு திட்டு, ஒரு அடி நினைச்சி கோவப்படக்கூட ஒன்னுமில்லாம போய்ட்டாருப்பா அப்பா’ என்று கதறியவள் ஒரு மூக்குச் சீந்தலில் சாதாரணமாகிப் போனாள்.

சரசு அக்கா, லட்சுமி, காந்தி எல்லாம் எப்படி இருக்காங்கம்மா என்றேன். லச்சுமிக்கு 2 சவரன் கூட போட்டேன்னு சரசு பேசறதில்ல, லச்சுமி மச்சினிச்சிய காந்திக்கு கட்டலைன்னு அவளும் பேசறதில்ல. படிச்சவரு, லவ் பண்ணிக்கினு கண்ணாலம் கட்டிக்கினாரு. பூக்காரியவும், சைக்கிள் கடைக்காரனையும் அம்மா அப்பான்னு சொல்லிக்க முடியுமா? அவரும் பிச்சிக்கினாரு.

எனக்கு விதிச்சது, இதோ பூவும், நானுமா ஓடுது பொயப்பு. அம்மா திதியா? மல்லிப்பூ எடுத்தும்போ. மவராசி, உங்கப்பா இருக்க சொல்ல மல்லியில்லாம இருக்கமாட்டா. என்னாதான் நான் இறுக்கமா கட்டினாலும் அவ கட்டி வச்சிகிட்டாதான் அதுக்கு சந்தோசம் என்று ஏதோ கணக்கில்லாமல் கொடுத்தாள். எவ்வளவென்றே கேட்காமல் ஏதோ காசு கொடுத்தேன். அன்றிலிருந்து அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன். அவரவர் பிழைப்பு அவரவர்க்கு என்று இருந்தவர்களிடையே இத்தனை காதலா? அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது.

-:o:-