நண்பர் புலிகேசி அழைத்திருந்த தொடர்பதிவு இது. அழைப்புக்கு நன்றி புலிகேசி. இந்தத் தலைப்பு மற்றவர்கள் சொல்லியல்லவா நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்வியை எழுப்பினாலும். ஒரு வேளை வேறு மாதிரி புரிதலிருப்பினும் இது உதவக்கூடுமோ என்ற ஒரு நப்பாசையுடன்:
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வானம்பாடிகள்.
2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை. ஆரம்பத்தில் பாமரன் என்ற பெயரில் எழுதினேன். பிரபல எழுத்தாளர் பாமரனோ என்ற குழப்பம் பின்னூட்டத்தின் மூலம் தெரிய வந்ததும், பாலா என்ற பெயரில் மாற்றம் செய்தும், ஏற்கனவே இரண்டு பாலாக்கள் இருந்ததால் வானம்பாடிகள் என்று மாற்றம் செய்தேன். காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதுதான்.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
என் பதிவின் விளக்கமாக சொல்லியிருப்பதுதான். என் மன அழுத்தத்தை பாரத்தை, என்னை பாதித்த விடயத்தை நான் எழுதிவைக்கும் ஆவணமிது. என் டைரி.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
இது வரை எதுவும் செய்யவில்லை. நான் பதிவெழுத ஆரம்பித்தபோது வெகு நாட்கள் திரட்டியில் கூட இணைத்ததில்லை. பிறகு திரட்டியில் இணைத்த பின்னரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் வரும். பதிவுலகம், பிரபலம் என்றெல்லாம் தெரிந்திராததாலோ என்னவோ அது குறித்து எந்தத் தாக்கமும் இல்லை. நிறைய பதிவர்களைப் படிப்பதும் வாக்களிப்பதும் வழமையாகிப் போனது. ஒரு வேளை ’நறுக்குன்னு நாலு வார்த்தை’ என்ற ஒரே தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகளை ஒரே தீமில் அளித்தது எனக்கான வாசகர்களை உருவாக்கித் தந்திருக்கலாம்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
பதின்மவயது அனுபவங்கள் தொடர் இடுகை அழைப்பைத் தவிர்த்து, என் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். பல நகைச்சுவையுடனிருந்ததால் பெரிதும் ரசிக்கப்பட்டது. மற்றவை முக்கியமாக என் துறை சம்பந்தப்பட்டவை, பொது விஷயங்கள் பலராலும் புரிதலுக்கு உதவியதாகப் பாராட்டப்பட்டது.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போக்க என்னிடம் பொழுதிருந்தாலும், சரக்கில்லையெனில் ஒரு வரியும் எழுதமுடியாது என்பது அனைவரும் அறிந்ததே. தோன்றும்போது அது எந்த மொக்கையோ, உருப்படாத எதிர் கவுஜயோ உடனே எழுதிவிடுவேன். இதுக்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்ன?
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒன்று, நான் படிக்கும் பதிவர்களின் பட்டியலுக்காக ஒன்று (அவர்கள் தளத்தில் வைரஸ் இருந்தால் என் பதிவு தப்பிக்கும் என்ற நல்ல எண்ணம்தான்), என் பதிவின் பேக்கப்புக்காக ஒன்று. இவையன்றி, நான் கிறுக்கும் கவிதைகளுக்காக பகிர்தலுக்கின்றி கிணற்றுத்தவளை என்ற ஒரு பதிவு. எல்லாமே தமிழ்ப் பதிவுகள்தான். ஆக கணக்கில் வருவது பாமரன் பக்கங்கள்... ஒன்று மட்டுமே.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
உண்டு. கோபமும் பொறாமையும் எந்த அர்த்தத்தில் கேட்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, அத்தகைய நல்ல தமிழ் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம், அதுசரியின் மிகத் தெளிவான வாதமும், கட்டிப் போடும் எழுத்துத்திறனும், மணிஜி ஒற்றை வரியில் புரட்டிப் போடும் திருப்பம், காமராஜின் மண்வாசனையுடனான எழுத்து, பா.ரா. போகிற போக்கில் தலைகோதிப் போகும் கவிதை, பாலாசியின் வானவில் எழுத்து, ரிஷபன்,நர்சிம்,அகநாழிகை வாசுதேவன், வாழ்க்கையில் கடந்து போகின்றவைகளைக் கவலையுடன் பகிரும் கதிர் இப்படிப் பலரும் தொடர்ந்து பிரமிக்க வைப்பதால்.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
திரு பழமைபேசி. இன்றைக்கு வலையுலகில் நல்ல தமிழில் எழுதுவது மட்டுமின்றி, மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் மனிதர். வழக்கொழிந்து போன கிராமத்து விடயங்கள், சொற்கள், என்று எழுதாத விடயமில்லை. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா நடந்தாலும், பங்கேற்று ‘நிற்க அதற்குத் தகவாக’ இருப்பவர். அவரின் முதல் பின்னூட்டம் ‘எழுத்து நடை கனகச்சிதம்’ .
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
அப்படி எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. பல இடுகைகளில் சொல்லியிருப்பது போதுமென நினைக்கிறேன். இனிப் பகிர இருப்பின் பகிர்வேன்.
நண்பர் சிங்கை பிரபாகர் தொடர்வார் என்ற நம்பிக்கையுடன்.....
~~~~~~~~~~~~