Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

Friday, November 5, 2010

தேவன் கோவில் மணியோசை..

இன்று தீபாவளி! நரகாசுரனை அழித்து மக்கள் வாழ்வில் நல்லொளி பரப்பிய நாள். அசுரன் அழிந்தானோ இல்லையோ நரகம் மட்டும் சிலருக்கு வாழ்க்கையாய் அமைந்துவிடுகிறது. எத்தனை விதமான நரகங்கள்? வேண்டாச் சிசுவாய், உழைக்க வழியின்றி ஊனமாய்,சுமையாய் முதியோர் இல்லத்திலென்று எத்தனை எத்தனை. இவர்களையெல்லாம் எதோ ஒரு விதத்தில் காப்பாற்றி வாழவைக்க மனிதர்களும் அமைப்புக்களும் இருக்கின்றன. வாழ்க்கைப் புயலில் எதிர்நீச்சலிட்டுக் களைத்து கை சோர்ந்து நினைவு தொலைத்த ஜீவன்கள் தெருவோரம் மயங்கியிருக்கிறார்களா, மரித்திருக்கிறார்களா என்றே தெரியாமல் ஈமூடி, நாய் குதறி, மேலாடையின்றி கிடக்க மூக்கைப் பொத்தியபடி நாம் கடந்து போன ஜீவன்கள் ஒன்றாவது இருக்கும் நம் வாழ்வில்.

நம்மில் அந்த நரகாசுரன் இல்லாமலா போய்விட்டான்? குப்பை அள்ள வரும் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கூட இது குறித்து ஏதேனும் செய்ய வழியிருக்கிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைப் பிரிவிருக்கிறதே. இத்தகையோரைப் பற்றி தகவல் பெறவோ மீட்கவோ வழியிருக்கிறதா? இவர்களுக்குச் செய்யக்கூடியது பெரியதாக ஒன்றுமில்லை. அதிகபட்சம் போராடி ஒரு வாரமோ இருவாரமோ மனிதனாய் வாழ்ந்து, மனிதனாய் மரித்து, மனிதனாய் அடக்கம் பெற ஒரு வாய்ப்பு.

அழுக்கும் கழிவும் பூசி, அருகில் செல்லவே முடியாத நிலையில் இருக்கும் இவர்களை மருத்துவமனையில் அல்ல எந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்வார்கள். இத்தகையோரைத் தேடித் தேடி அலைந்து, தெருவோரம் சுத்தம் செய்து, ஆடையுடுத்தி, ஆதரவான இல்லங்களில் சேர்த்தோ, மருத்துவ உதவியோ செய்ய எத்தனை தெரசாக்கள் வேண்டும்.? ஒரு அமைப்பால் கூட இதைச் செய்வது எத்தனை பெரிய காரியம்.

தீபாவளிதான். கொண்டாட்டம்தான். இனிப்பும், பட்டாசும், ஒளியும், சத்தமும் என்று மகிழ்ச்சிதான். ஆனாலும் தீபாவளியின் முக்கியமான அம்சம் இதெல்லாம் செரிக்க காரமாய், கசப்பாய் சற்றே இனிக்கவும் செய்யும் தீபாவளி மருந்து. இந்த இடுகையும் அத்தகையதே.

இதோ முதல் படத்தில் இருக்கிறாரே சுப்பிரமணி. ஒரு குப்பைத்தொட்டியோரம் கண்டுபிடிக்கப்பட்டவர். டிமெண்ஷியாவில் துன்புற்றவர். இடுப்பில் துணியில்லை என்ற நினைப்புக் கூட இல்லை. எந்த உணர்வு மறந்தாலும் அன்னை இட்ட தீ பசி இருக்கிறதே. அது மட்டுமே அறிந்தவர். அந்தக் குப்பை தொட்டி அருகே மரித்துப் போயிருக்கக் கூடும். குப்பையையாவது அள்ளி அதற்குரிய இடத்தில் சேர்க்க இருக்கும் அமைப்பு கூட இவரைத் தொடுமா?


வாழ்நாள் முழுதும் நோயுற்றவருக்கு தாதியாய் நோய் குறைக்கும் பணி நர்ஸ் அல்லவா. நம் உலகின் தேவதைகள் அல்லவா? அவர்களுக்குமா சாபம் இருக்கும். உழைக்கும் காலம் முழுதும் தாதியாய் பணிசெய்த ஒருத்தி, பணி மூப்பு பெற்று பென்ஷன் கூட பெறும் நிலையில் உள்ள ஒருத்தி, கருப்பை சரிந்து காளான் பூத்து தன் நினைவின்றிக் கிடக்கும் சாபம் கொடுத்த தெய்வமோ இயற்கையோ நிந்திக்கத் தோன்றுகிறதா? இருங்கள் இருங்கள். இந்த லீலாவதியை மாதந்தோறும் ஆட்டோவில் ஏற்றி பென்ஷன் வாங்க வைத்து பிடுங்கிக் கொண்டு திரும்ப சைதாப்பேட்டை சுரங்கப் பாதையருகே போட்டுப் போகும் ஐந்து நல்லாத்மாக்களும் நம்மிடையே இருக்கிறார்கள். 

இதோ முனியம்மா. அந்தக் கண்ணை ஒரு நிமிடம் பார்க்க முடியுமா நம்மால். எத்தனை அவலம். எத்தனை வலி. பிரிந்த கைகளில் எத்தனை இயலாமை. வயது எழுபது. ஆனாலும் பெண். இந்த வயதிலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நரகம் தருகிறது நாம் தொண்டை கிழியப் பேசும் சமூகமும் கலாச்சாரமும்.


கடைசியாக தனம். எறியும் உணவில் எங்களுடன் உனக்கென்ன போட்டியென நாய்கள் போட்ட சண்டையில் தோற்று தன் சதையை உணவாக்கியவள். உடலில் மட்டுமே ஆடையில்லை. உடலில் மட்டுமே அழுக்கு. மனம் பளிங்கு போன்றது. இல்லையேல் தன்னையும் கரைசேர்க்க வந்த ஜீவனிடம் நான் பிழைக்கமாட்டேன் தம்பி. நீ வாழ வேண்டியவன். என்னைத் தொடாதே என்று சொல்லும் மனம் எப்படி வாய்க்கும்?

படிக்கவே அயற்சி தருகிறதே. ஒரு குற்ற உணர்ச்சிகூட வரலாம். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். நம்மிலும் ஒரு தேவன் மனிதனாகப் பிறந்திருக்கிறான். தனி மனிதனாக இத்தகையோரை மனிதராய்ப் பார்த்து, மனிதனாய் உதவி, மனிதம் காக்கும் இல்லங்களில் சேர்த்து, மனிதனாய் மரித்தோருக்குக்கான மரியாதை செய்யும் இவரை அடையாளம் காட்ட எனக்கு வாய்த்ததே என் வரம். ஓரிருவரை இப்படிக் கரை சேர்த்தாலே பெரிய விஷயம். ஒற்றை மனிதனாய் ஒன்றிரண்டல்ல ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களை தேடித் தேடி காப்பாற்றிய இவர் பெயர் வெங்கடேஷ்.

ஏழ்மையான குடும்பம் எத்தனை எதிர்ப்பார்ப்பு வைத்திருக்கும் மகன்மேல்? சிறுவயது முதலே சேவை செய்யவே நான் பிறந்தேன் என அலையும் மகனை ஊக்குவிக்கும் நிலையிலா இருக்கும்? படித்தது பத்தாவது. அந்த வயது இளைஞனுக்கு சமுதாயத்தில் பிழைக்கவோ பொறுக்கவோ எத்தனை வழிகள்? தன் பாதை இதுவென்று தீர்மானிக்கும் வயதா அது? கட்டிட வேலை, கம்பவுண்டர் வேலை, கூரியர் டெலிவரி, சமூகச் சேவை அமைப்புகளிலே கூட சம்பளத்துக்காக வேலை என்று அத்தனையும் பார்த்து பின்பு உதறி உதவ மட்டுமே பிறந்தவன் நான் என்ற நோக்கோடு வாழும் இவர் இருப்பது திருவான்மியூர்.

தப்பித் தவறி நம்மில் இருக்கும் மனிதம் விழித்து இத்தகையோரைக் காக்க இருக்கும் அவசர உதவிக்கு அழைத்தாலுமே கூட வெங்கடேஷின் கைபேசி எண் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொல்லும் அளவு திறமையாகச் செயல்படுபவர். ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், நினைவிழந்தவர்களை அங்கேயே சுத்தம் செய்து அவரவர்களுக்கான இடம் தேடிச் சேர்ப்பதே வாழ்க்கை எனச் சலிப்பில்லாமல் வாழ்வதே பெரிய விஷயம்.  ‘அதை அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், அந்த ‘ருசி’ எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்’  என வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறார்.

‘அநாதைன்னு யாருமே இல்லைங்க! ஆதரவில்லாதவங்கன்னு சொல்லுங்க’ என்று சிரித்தபடி கடிந்து கொள்ளும் இவர் செய்யாத சமூக சேவையென்று ஒன்று இருக்கிறதா தெரியவில்லை. பாலியல் தொழிலாளரிடையே விழிப்புணர்வு, தற்காப்பு முறை விளக்கம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ விரும்புபவர்களுக்கு வழிகாட்டி என சதாவதாரம் எடுக்கிறார்.

காவல்துறை, சமூக ஆர்வலர்களிடையே இவருக்கான பெருமதிப்பும் அங்கீகாரமும் போதுமா? ‘அகல்’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி தானே இவர்களுக்கான இல்லத்தை நடத்தவேண்டும் என்ற கனவு சுமந்த தேவன் இவன்.  ‘அது தானே நடக்கும் சார்’ என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ‘செத்தப்புறமும் கூட நம்மால மனுசனுக்கு எதுனாச்சும் உபயோகம் இருக்கணும் சார். எங்கயாவது ஒரு ஆஸ்பத்திரியில் மனித எலும்புக்கூடாகவாவது மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவுவேன்’ என்று சிரிக்கும் இவர் தன் கண்ணையும் உடலையும் தானம் கொடுத்திருக்கிறார். முடிந்த போதெல்லாம் ரத்ததானமும். 

தன் பையில் சட்டநிமித்தம் சுமக்கும் ஆவணங்களின் சோகம் தாங்கவொண்ணாதது. சமீபத்தில் மன நிலை குன்றியவர் போல் காணப்பட்ட ஒரு இளைஞன் என்னுடன் பணிபுரியும் நண்பர் தினமும் அளிக்கும் உணவை மட்டும் உண்டு வந்த ஒருவன், ஒரு நாள் அழுக்கடைந்த கையுடன் சாப்பிடுவதைப் பொறுக்காமல் கையாவது கழுவி விடுவோம் என்று இவருடன் முயன்றபோது வாய் திறந்து பேசினான். ரயில்வேயில் வேலைக்குப் பரிட்சை எழுத வந்த கல்கத்தா வாலிபன். நண்பர்கள் எல்லாம் விட்டுச் சென்றுவிட கலங்கிப் போய் இருந்திருக்கிறான் பிரமை பிடித்தாற்போல். ‘குளிக்கவேண்டும்’ என்ற அவன் பேச்சு அவனுக்கு வாழ்க்கை தந்தது.

வால்டாக்ஸ் ரோடிலிருக்கும் மாநகராட்சி குளியலறையில் குளிக்க வைத்து, அலுவலகத்தில் இதற்காகவே சேகரித்து வைத்திருக்கும் பழைய பேண்ட் சட்டைகளை அணியச் செய்து, உணவளித்து, வீட்டிலிருந்து சப்பாத்தியும், ட்ரெயின் டிக்கட்டும், வழிச் செலவுக்குக் காசும் கொடுத்து அவன் குடும்பத்தோடு சேர வழி செய்ய முடிந்தது நண்பர் சுரேந்திரனால். அதற்குப் பெரிதும் உதவியவர் வெங்கடேஷ். இல்லையெனில் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு குப்பைத் தொட்டி அருகில் ஆதரவின்றி காப்பாற்றப் பட்டிருக்கக் கூடுமோ?

நண்பர் வெங்கடேஷ் குறித்த மேலதிக தகவலுக்கு அவரின் முகவரியும் தொடர்பு எண்ணும் கீழே:

S.M.Venkatesh
No 74/55 South Mada Street, 
Thiruvanmiyur, Chennai 600 041.
email: agalvenkat@yahoo.co.in
Mobile 93801 85561
__/\__