Friday, December 31, 2010

தயார்....

ஒரு வழியாக அனைத்துத் தரப்பிலும் ஒரு வித ஏமாற்றத்தையும் எப்போதும் போல் அடுத்த ஆண்டு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையும் தந்து 2010 விடை பெறப் போகிறது. 
புதுவருடம் அன்று ஒரு கர்ச்சீப்பாவது வாங்கினால் கோவணமாவது மிஞ்சி இருக்கும் என்ற மக்களின் பகுத்தறிவு நம்பிக்கையை வீணாக்காமல் 2 நாள் முன்பிருந்தே ‘தள்ளு’ படி விற்பனை ஆரம்பித்து விட்டது. ஒன்றாம் தேதி அன்று வேலை வெட்டியில்லாமல் அதிகாலையிலிருந்தே வரிசையில் நிற்காமல் இன்றைக்கே பணம் கட்டிவிட்டால், நாளை அலுங்காமல் கசங்காமல் பொருளை வாங்கிச் செல்லும் வசதியைத்தர வியாபாரத் தியாகிகள் தயாராகிவிட்டார்கள். 
இனி எந்திரன் சாதனையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ‘ஒரு மொபைலுக்கு மைக்ரோவேவ் அவன்’ இலவசமாக் கொடுத்தவன் உலகத்துலயே டமிலேண்டா என்று மார்தட்டிக் கொள்ளலாம். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு சொல்லிச் சொல்லி புடுங்குங்க புடுங்க புடுங்கிக்கிடே இருங்க என்று நம்மையும் சொல்லாமல் சொல்ல வைத்து செல்ஃபோன் எல்லாம் அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது. பத்து நாட்களுக்கு முன் ரூ 9000க்கு விற்ற செல்ஃபோன்கள் ரூ 6600 அதுவும் கன்னா பின்னா இலவசங்களுடன்.
வழமை போலவே இதற்காகவே அடிக்கப்பட்ட அதிகபட்ச MRP ஸ்டிக்கர்களுடன் நமக்கு தள்ளுபடி செய்வதற்காகவே பிறப்பெடுத்த வியாபாரிகளால் ஸ்பூன் முதல் லேப்டாப் வரை விழாக்கால தள்ளுபடி சலுகை பொருட்கள் தயார்.

புத்தாண்டு கேளிக்கை விருந்துகளுக்கு மக்களும், அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க போலீசும் தயார். நள்ளிரவு கோவில் திறந்தால் போராட்டம் என்று டரியலாக்க ராம கோபாலனும் தயார். இரண்டு நாள் விடுமுறையில் வருவதால் டி.வி. (செருப்பு) சிறப்பு நிகழ்ச்சிகளோடு கழிக்க டமிலன் தயார்.
பக்கத்து ஊட்டுல ஃப்ளாட் டி.வி. நாம மட்டும் என்னா போடு சட்டையை, பொறப்படு டி.வி.வாங்க என்ற அதிரடியை விட மெதுவா கிளப்பி மகாபலிபுரம், வண்டலூர் ஜூன்னு எஸ்ஸாயிட்டு ஹோட்டல் சாப்பாடுன்னு அலைக்கழிச்சி கூட்டிட்டு வரது லாபமா? அல்லது அத்தனையும் முடிஞ்சும் பழைபடி ‘பக்கத்தூட்டுல’ என்பதும் தப்பாதா என்ற குழப்பத்தில் மக்கள்சும் தயார்.
பெசண்ட் நகர் ஃப்ளாட்டில் இருந்து கொண்டு, ‘யூஸ்லெஸ் இர்ரெஸ்பான்ஸிபிள் கவர்ன்மெண்ட். பொங்கல் பை இன்னும் தராம என்ன பண்றான்? அமெரிக்காவில இதெல்லாம் சிஸ்டமாடிக் தெரியுமோ? நாம வீட்ல இல்லைன்னாலும் ஸ்டிக்கர் ஒட்டிட்டு போயிடுவான். வந்து வாங்கிக்கோன்னு’ என்று அலட்டவும் தயார்.

நித்தியானந்தாதாம்பா ஃப்ராடு! இவரு சத்தியானந்தா! பொறந்ததுமே அம்மான்னுதான் அழுதாராம். அந்நேரம் கோவில்ல இருந்த அம்மன் கண்ணுல தண்ணி வந்துச்சாம். அவருக்கா யாருக்கு தோணுதோ இழுத்து வச்சி முத்தம் குடுப்பாரு. அதோட அவங்க அதிர்ஷம் எங்கயோ போயிடும். நாளைக்கு ஸ்பெஷல் தரிசனம். ரூ 5000 டிக்கட் கட்டினா, சாமியாரை கிட்ட பார்க்கலாம். ரூ10000 டிக்கட் குடுத்தா முதுகை சொறியலாம் என்ற பசப்பலுக்கு மயங்கவும் டமிலன் தயார்.
நமக்கு மட்டுமா? எல்லாருக்கும்தான் வெங்காயம் ரூ60. அதுக்காக வாங்காம இருக்க முடியுமா என்று வாங்கவும், பெட்ரோலைத் தொடர்ந்து காஸ் விலை ரூ 40 உயரும் என்பதை ஜீரணிக்கவும் தயார்.

ரைட்டு! பெட்ரோல் 60ரூ, காஸ் ரூ 40, வெங்காயம் ரூ 60. கத்திரிக்காய் ரூ 50. கீரைக் கட்டு ரூ 15. கலைஞர் டிவி இலவசம். பொங்கல் பை இலவசம். புடவை வேட்டி இலவசம். எப்புடியும் இந்த வாட்டி டி.ஏ. 10 சதம் ஏத்துவான். 50 சதவீதம் தாண்டினதால அதுவும் பேசிக் பே. வட்டிக்கு வட்டி மாதிரி டி.ஏ.க்கு டி.ஏ. மொத்தமா எவ்வளவு சம்பளம் ஏறும் என்று கணக்கு பார்த்து கோட்டை கட்ட கோவணாண்டி அரசு ஊழியனும் தயார்.

எப்பவும் கிழிக்கிற கிழிக்கே சரக்கில்லாம இப்படி எதையோ ஒப்பேத்த நானும் தயார். அதைப் படிக்க நீங்களும் தயார்.  வாங்க கொண்டாடலாம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.  
2011 உங்கள் கனவுகளை நனவாக்கட்டும்.
அன்புடன் 
பாலா...

Saturday, December 25, 2010

கேரக்டர்-தலைவர்...

தானே உட்கார்ந்த தானைத் தலைவர்னு ஒரு காமெடி பீஸ் பார்த்து சிரிச்சோம்ல. அப்படி தன்னைத் தானே தலைவர்னு சொல்லிக் கேட்க ஆசைப்பட்ட மனுசன் நம்ம தலைவர். வில்லங்கமான காமெடி பீசு. ஒரு புரியாத புதிரும் கூட.

‘அந்தக் காலத்துல நான் ரோட்ல எறங்கி நடந்தா நான் தெரு முனைக்கு போவுற வரைக்கும் பார்ப்பாளுங்க. ‘சார்பட்டா’ பரம்பரை குத்துச் சண்டை வீரன். பாடி அப்படி இருக்கும். அப்படியே அடிச்சி பார்ப்பாங்க’ என்று அலப்பறை செய்யும்போது ஆறடிக்கும் மேலான உருவம். அகலமான முகம். எண்ணை தடவி பஃப் எடுத்து வாரிய முடி. முள்ளம் பன்றி முதுகு போல் முடியடர்ந்த காதுகள். பூதக்கண்ணாடியை கண்ணில் மாட்டினாற்போல் கனமான கண்ணாடி. ‘பாதி பரமசிவம்’ வேறு. பாக்ஸிங்கில் நசுங்கி காதுக்கும் காதுக்கும் பரந்த மூக்கு. மீசை மழித்திருந்தாலும், ஷேவிங் ப்ரஷ் சொருகினார்போல் முடியடர்ந்த மூக்கு. தடித்துப் பருத்த உதடுகள். நெற்றியில் சாந்து வைத்து அதன் மேல் அளவாக வைத்த குங்குமம்.

காலர் இருப்பதால் கழுத்தென்று ஒன்று இருக்கலாம் என ஊகிக்கலாம். பானை வயிறு. ஒரு கை அரை மடித்து மறுகை அவிழ்ந்து பட்டன் போடாத முழுக்கை சட்டை. வேட்டி. யானை அடியெடுத்து வைப்பது போல் நிதானமான வித்தியாசமான நடை. தமிழ் ஆர்வலர். அலுவலகத்தின் இரண்டு தொழிற்சங்கங்களில் ஒரு சாத்வீக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். ஆனால் தலைவர் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆசை.

 மிகவும் நிதானமான பேச்சு. தொழிலாளர் பிரச்சனைகளைக் குறித்த ஆர்வம் அதிகம். ஆனால் பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்ற குறைக்கு மட்டும் உடனே கிளர்ந்து எழுந்து விடுவார் தலைவர். ‘வாங்கம்மா! அதிகாரியும் பெண் தானே! போராடினால்தான் இதற்கு விடிவு என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அணி திரட்டிக் கொண்டு செல்வார். அதிகாரியின் அறை வாயிலில் நிறுத்திவிட்டு, முதலில் நான் போய் சொல்கிறேன். பிறகு அழைக்கிறேன் என்று தான் மட்டும் செல்வார்.

 உள்ளே நுழைந்ததும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, கத்தைக் கடுதாசி அடங்கிய மேற்சட்டைப் பையில் தேடி, மஞ்சள் ஊறிய ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். காஞ்சீவரம், அல்லது மதுரை அல்லது ஏதோ அம்மனுக்கு பிரசித்தமான ஊர் பேர் சொல்லி, அங்கு போயிருந்தேன். உங்கள் பேரில் அர்ச்சனை செய்த பிரசாதம்மா, என்று நீட்டுவார். ‘அடிங்கொய்யால’ என்று நினைத்தாலும் வேண்டாமென்றா சொல்ல முடியும். பிறகு தொழிற்சங்க தலைவராவார். ஆரோக்கியம்,அது இது என்று ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டு, அம்மா நிர்வாகத்தில் தொழிலாளர் எல்லாம் ‘குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா’ மன நிலையில் இருக்கிறார்கள்.

 பெண்கள் கழிப்பறையில்தான் சில நேரம் தண்ணீர் வருவதில்லை. நீங்களும் ஒரு பெண் என்பதால் அந்த கஷ்டம் புரியும்மா. பார்த்து சரி பண்ணனும்மா. வரட்டுங்களா என்று கிளம்புவார். எப்போது வந்தாலும் இந்தப் பிரச்சனையே சொல்லுவதாலோ என்னமோ அதைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் இழு இழு என்று இழுத்துவிட்டு வெளியே வந்து, ‘கோவிச்சிக்கிட்டாங்க. ஏன் தினம் வந்து பார்க்கறதில்லைன்னு. நம்ம மேல ஒரு தனி மரியாதை. காஃபி சாப்பிட்டுதான் போகணும்னு கம்பெல் பண்ணாங்க. பிரச்சனைய சொல்லிட்டேன். அவங்களே தலைமை எஞ்சினியரை கூட்டிட்டு வந்து பார்த்து சரி பண்றேன்னு சொல்லிட்டாங்க என்பார்.

 அது என்னமோ நடக்கிற போதுதான் நடக்கும். ஆனாலும், போட்ட போட்டில் அரண்டு போய் சரி பண்ணிவிட்டதாக அலட்டிக்காமல் சொல்லுவார். அவர் செக்‌ஷனில் பெண்கள் அதிகம். அவ்வப்போது ஒரு ரவுண்ட் வந்து நூறு ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா என்று கேட்டு டரியலாக்குவார். இருந்தாலும் இல்லவே இல்லை என்று மறுத்து விடுவார்கள். அசந்து மறந்து இருக்கு என்றுவிட்டால், படக்கென வேஷ்டியை ஒதுக்கி பட்டாபட்டி நிஜாருக்குள் 100ரூ தேடும் எழவை யார் சகிப்பார்கள்?

 தபால் வாங்கி அனைத்து எழுத்தர்களுக்கும் கொடுக்கும் வேலை இவருடையது. அய்யா ரிஜிஸ்டருடன் எழுந்தாலே ஒருவருக்கு ஒருவர் கூப்பிட்டு உஷாராகிக் கொள்வார்கள். வேலை மும்முரத்தில் இருந்தால் கண் தெரியாத சாக்கில் கன்னத்தில், மார்பில் இடித்துவிடுவார். இதற்காகவே, அவர் தபாலை எடுக்கும்போது ரிஜிஸ்டரில் இருக்கும் மற்ற தபால்களை உருவி விட்டு விடுவார்கள். அது காற்றுக்கு பறக்காமல் ஓடி ஓடி இவர் பிடிப்பதற்குள் சம்பந்தப் பட்ட எழுத்தர் அவர் தபாலுக்கு கையொப்பமிட்டு விடுவார்.

 எல்லார் டேபிளிலும் இப்படி நடந்தாலும் இது எப்படி சாத்தியம் என்று யோசித்ததே இல்லை. தமிழ்ப் பாடல்களில் கூட அபிராமி அந்தாதி மாதிரி பெண் தெய்வங்களின் பாடல்கள் அத்துப்படி.ஆனாலும் பேசுகையில் மனைவி குறித்து மிகவும் சிலாகித்து, ஒரு பெரிய கொடுப்பினை என்ற அளவில் பேசுவதால் நல்ல மரியாதையும் இருந்தது. பல இலக்கிய கூட்டங்களில் ப்ளேடு போட்டாலும், ஒரு திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசிய பேச்சுக்கு ஈடு இணையே இல்லை.

 விடாப் பிடியாக மைக்கைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துரை என்ற போதே அவரவர்க்கும் கழுத்து தொங்கிவிட்டது. கலியாண வீட்டில் அரசியல் வியாதிகள் பேசுகிறேன் பேர்வழி என்று எதிர் கட்சியைக் கிழித்து ஒட்டி எப்படியோ ஒரு லிங்கில் அதைப்போல் மணமக்கள் என்று முடிப்பார்களே அதெல்லாம் இதற்கு முன் கால் தூசி பெறாது.

 ‘பெரு மதிப்பிற்குறிய அதிகாரிகளே, சக ஊழியர்களே, சகோதர சகோதரிகளே, மற்றும் பெரியோர்களே தாய்மார்களே! செல்வன்....திருநிறைச் செல்ல்வி.... அவர்களின் இந்த இனிய திருமண நாளில் அவர்களை வாழ்த்தி உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்........மணமக்கள் மனமொத்த தம்பதிகளாக வாழவேண்டும். இதற்கு எடுத்துக் காட்டாக என் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கு கூற ஆசைப்படுகிறேன். என் முதல் மனைவி அவர்கள் இறக்கும் தறுவாயில் என் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார்கள்.’

‘என்னிடம், தனக்குப் பிறகு தனியாக இருக்கக் கூடாது. உடனடியாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு உயிர் நீத்தார். அவருக்கு கொடுத்த வாக்குப்படியே நானும் அவர் இறந்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துக் கொண்டேன். என் இரண்டாவது மனைவியும் சிறந்த குடும்பத் தலைவியாக அன்னியோன்னியமாக இருந்து வருகிறோம். எங்களைப்போலவே மணமக்கள் ஒருவரை ஒருவர் மதித்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்’ என்று முடித்து ஏன் யாரும் கைதட்டவில்லை என்று பார்த்த பார்வை இருக்கிறதே, அட அட.

பொதுவாக ஊழியரின் வாரிசு ஒருவருக்கு வேலை என்பது தொழிற்சங்கங்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளில் ஒன்று. தன் மகனை எப்படியோ பளுதூக்கும் பயிற்சியில் மாவட்ட அளவில் வென்றதை வைத்து ஒரு ப்யூன் வேலை வாங்கிய தலைவர் இவர். ரிட்டையரான பிறகும் அடிக்கடி அலுவலகம் வந்து தொழிலாளர் குறை கேட்டு, தான் இருக்கும்போது எப்படி உடனடியாக மேலதிகாரிகளிடம் பேசி குறை தீர்த்தார் என்பதையும், இப்போது உள்ளவர்கள் சுயநலமாக இருப்பதையும் குறித்து வருந்தும்போது சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனாலும், முடியாததை முடித்துத் தருகிறேன் என்ற வெற்று வாக்குறுதியோ, பணம் சம்பாதிக்கும் நோக்கமோ அற்ற நேர்மையான தலைவர். 


இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!!

Thursday, December 23, 2010

பிதற்றல் கவிதைகள் -1
காதல் கவிதை கேட்டாய்
உன்னைக் கண்ணாடி முன் நிறுத்தினேன்
சிவந்த உன் கன்னம் சொன்னது
உனக்குப் புரிந்ததென்பதை.

-*-

என்னைக் கூட்டுப் புழுவாக்கிவிட்டு
பிரிந்து செல்கிறாய்
உன் வரவில் பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கிறேன்.


-*-

நிமிடங்களால் கடந்து போவதில்லை
என் நாட்கள்
உன் நினைவுகளால்
கடந்து போகின்றன


-*-

குளத்தருகே போகாதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன் கண்ணைக் காதலிக்க
எத்தனை மீன்கள் சண்டையிடுகின்றன?


-*-

உன்னிடம் தீபாராதனை வந்த நொடியில்
சிலிர்த்துக் கை கூப்பினேன்
உள்ளுக்குள் சிரித்து உன் கண்ணில்
கனன்ற காதல் கன்னத்தில் சிவந்தது.

-*-

பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது
என் கன்னம்.

-*-

உனக்குக் காய்ச்சலா
என்று காதலாய்ப் பார்த்தாய்
உதறியபடி உளறிக் கொட்டினேன்
ஜன்னியென்று.

-*-

Wednesday, December 22, 2010

நறுக்னு நாலு வார்த்த V 5.6

பொன்சேகாவைப் போர்க்குற்றவாளியாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

ஹி ஹி. நீ அவனக் காட்டு. அவங்கோத்தபாய காட்டுவன். அவன் அண்ணனைக் காட்டுவான். உன்னால நான்கெட்டேன்னு சாவுங்கடா.
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைப் பிரச்சினையில் மிக விரைவில் நேரடியாகத் தலையிடுவேன்: ராகுல் காந்தி

அய்யோ! மிச்சமும் போச்சா?
--------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து! வெறும் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக கட்டப்படுமாம்

அடிச்ச காசுன்னா பூஜ்யம் குறையும். குடுக்கறதுன்னா பூஜ்யம் கூடும். பரதேசிங்க.
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியைப்பிடிக்க விரும்பவில்லை : ராகுல்

ஆஹா. அதான் ஈழம் வழியா வர்ரீங்களோ?
 
--------------------------------------------------------------------------------------------------------------
ரஜினிகாந்த் சினிமாவில் மட்டும் தான் வீரத்தை காட்டுவார் : சு.சாமி

அடிங்கொய்யால. அடிக்கறா அடிக்கறான்னு ஜட்ஜ் நாற்காலி கீழ ஒளிஞ்சிட்டு சவுண்டப்பாரு.
 
--------------------------------------------------------------------------------------------------------------
கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் பெற முடியும்: ராகுல்

ஆமாப்பா. தொண்டருங்க ஒழைங்க. இவரு வந்து ஆச்சிய புடிச்சுக்குவாரு.
 
--------------------------------------------------------------------------------------------------------------
வெங்காயத்தை பிரதமர் பார்த்துக்கொள்வார்: ராகுல்

பாவம்யா. அதையாச்சும் உரிக்க உரிமையில்லையா. பார்த்துக்கற வேலைதானா?
 
--------------------------------------------------------------------------------------------------------------
கொள்கை பிடிப்புள்ள ஒரே கட்சி பாமக: ராமதாஸ்

‘மவனே மந்திரி’ கொள்கைப் பிடிப்புதானே. கொரங்குப் பிடியில்ல அது.
 
--------------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் ஊழல் முறைகேடுகளை விளக்கி ஊருக்கு ஊர் கூட்டம்: கலைஞர்

எல்லாத்தையும் மாதிரி உங்க ஊழலையும் ஒப்பிட்டு சொல்லிடுங்கதல. வயிறெரிஞ்சி சாவட்டும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------
ராகுல்காந்தி படி ஏறிப்போய் யாரையும் பார்க்கமாட்டார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதான் காவடி தூக்க நீ இருக்கியே பன்னாட.
 
--------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க.வுக்கு சோதனையை ஏற்படுத்தலாமா என்று கனவு காண்கிறார்கள்: கலைஞர்

அவங்களாச்சும் கனவு காண தூங்குறாய்ங்க. நமக்கு அதும் போச்சே தலை.
 
--------------------------------------------------------------------------------------------------------------
சங்கரராமன் கொலை வழக்கு: சாட்சி பல்டி

அது என்ன கோர்ட்டா இல்லை சர்க்கஸா. அதேன்னாது பல்டி பல்டின்னு.
 
--------------------------------------------------------------------------------------------------------------
வெங்காயம் விலை படிப்படியாக குறையும்: பவார்

அய்ங். உங்கூர்ல படில அளந்தா விக்கிறாய்ங்க?
 
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைத் தமிழர்களின் நிலை கவலையளிக்கிறது: ராகுல்காந்தி

மம்மீ! சன் பாவம் சன் பாவம். தமிலன் பாவம் தமிலன் பாவம்.ஆடு நனையுறது ஓநாய் அழுவறதுன்னு கண்டதும் கவனம் வந்து தொலையுது.
 
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழக மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

இந்த இலங்கை விஷயத்துல தமிழக அரசியல் வியாதிகள் கும்பகர்ணனுங்க. தேர்தலுக்கு தேர்தல்தான் முழிச்சுக்குவாங்க போல.
 
--------------------------------------------------------------------------------------------------------------

Thursday, December 16, 2010

இந்த நாள்..இனிய நாள்..

சிறு பூந்தூறல், ஒரு நொடி சில்லென முகம் தழுவிப் போகும் காற்று, உயர்தர செண்டை ஓரம் கட்டும் உழைப்பின் வியர்வை வாசம், நகர இறுக்கமோ கிராமத்தின் அமைதியோ விசுக்கென மரம்தாவும் கிளி ,களைத்த மனத்தை கண நேரம் களிப்புறச்  செய்ய தவறியதேயில்லை இவை.

ஆல விருட்சம் போல் தலைமுறை கலந்த ஒரு வீட்டின் திருமண விழா பார்த்திருக்கிறீர்களா? உறவு யார், நட்பு யார், ஊர்க்காரர் யார் ஒன்றும் தெரியாது. அவரவருக்கும் யாரும் எதுவும் சொல்லாமலே ஏதோ ஒரு கடமையில் ஒன்றுகூடி சிறப்பிக்கும் நிகழ்வு அது. ஒன்றிரண்டு சலம்பலையும் ‘விட்றா மாப்ள. நம்மூட்டுக் கலியாணம். நம்ம பஞ்சாயத்த அப்புறம் பார்க்கலாம். எலையப் போடலாமான்னு பாரு போ’என்று நீர்த்துப் போகச் செய்யும் லாவகம்.

சற்றும் புறமாய் உணரவிடாமல், ஆத்மார்த்தமாய் கை பிடித்து எங்களில் ஒருவன் நீ என செயலால் உணர்த்தும் மாயம்.

எழுத்தைப் படித்து எண்ணத்தில் வரைந்த கோட்டோவிய மனிதர்கள் சற்றும் ஒத்துப் போகாமல் புதிய பரிமாணத்தில் இதயம் புகும் இன்ப அதிர்ச்சி.

மொக்கையோ, மொண்ணையோ, அறச்சீற்றமோ, அரைவேக்காடோ, இலக்கியமோ, இலக்கணமோ, கும்மியோ, கருத்துப் பரிமாற்றமோ  உள்ளங்கை பொத்தி உற்றுக் கண்பார்த்து நட்பாய், உரிமையாய், உறவாய்ச் சிலாகிக்கும்/கண்டிக்கும்/நெறிப்படுத்தும் உணர்வு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நேரம்.

ஆம்! இதில் எதுவொன்றையும் திட்டமிட்டுச் செய்யமுடியுமா? அந்த நொடியின் நிகழ்வல்லவா அவை? எத்தனை வருடமானாலும் நினைவோடும் தருணங்களில் அதே சிலிர்ப்பைத் தரத் தவறுமா அவை? வாய்க்க வேண்டும். வாய்த்திருக்கிறது.

ஈரோடு பதிவர் சங்கமம் 2010ன் அழைப்பிதழைக் கண்டவுடன் என் அனுபவத்தின் நனவோடை இது. ஒரு இனிய விழாக்கால விடுமுறையை கூடினோம்,பேசினோம், பிரிந்தோம் என்றில்லாமல் பயனுள்ளதாக, பொறுப்புள்ளதாக அமைத்திருக்கும் பாங்கைப் பயன்படுத்திக் கொள்ளக் கசக்குமா என்ன? 

சங்கத்தினரின் அழைப்பிதழ் இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்

கடந்த ஆண்டு இதே மாதத்தில் எழுத்தால் மட்டும் சந்தித்து மகிழும் நண்பர்களை நேரில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தில் உருவான சங்கமம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மிக அழகிய வெற்றியை ஈட்டித் தந்தது.

இப்பொழுதுதான் கைகள்
பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.
சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.

ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்
நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்


காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர்கூடி இழுக்கும் தேர் இது.

சந்திப்போமா?

Wednesday, December 15, 2010

கேரக்டர் - ராஜன்...

உழைத்துக் கரம்பேறிய உலக்கைக் கைகளும், முரட்டு முகமும், சாராய வாடையுமாய் ஒருவன் அவரை நெருங்குகிறான். அவர், கிள்ளியெடுக்க சதையின்றி, கொஞ்சம் அதி வெளிச்சமான ஆர்க் லேம்ப் போட்டால் ஸ்கேனிங் இல்லாமலே உடலுறுப்புக்களைப் பார்க்கலாம் போன்ற செக்கச் சிவந்த ஒல்லியான தேகம். துறுத்தி நிற்கும் நெஞ்சுக்கூட்டில் ஒற்றை ருத்திராட்சம். தாடி என்றே குறிப்பிடும் அளவுக்கு அடையாளமான வெண் தாடி. தலைமுடியை இறுக்கி பின்னிழுத்துப் போட்ட ரப்பர் பேண்ட். ஆண்களில் அதிகம் காணமுடியாத செக்கச் சிவந்த உதடுகள். தீர்க்கமான நாசி. அதைவிட ஊடுருவித் துளைக்கும் பார்வை. நெற்றியில் காமாட்சி குங்குமம். பார்க்கும் யார்க்கும் கும்பிடத்தோன்றும் உருவம்.

‘சாமி! ஃபி எப் போட்டுக்குறேன் சாமி. ஐந்நூறு ரூபாய்தான். வந்துகினே கீது சாமி. கொய்ந்தைக்கி பீஸ் கட்டணும். ஆப் டே சி.எல். போட்டுக்கிறேன். மன்ஸு வை சாமி’ என்கிறான்.

நெற்றிக் குங்குமம் மாதிரியே சிவந்த முகத்துடன் “த்தா! ஏண்டா என் தாலியறுக்கறீங்க. மனுஷனா மாடா. வந்ததையெல்லாம் செக் போட்டு கொண்டு கொடுத்துட்டு இப்பதானே உக்கார்றேன். ஃபீஸ் கட்றானாம் குடிகார நாயி. ஒரு நிமிஷம் நின்னா பளார்னு அறைஞ்சிடுவேன்” என்ற பதிலுக்கு அந்தச் சண்டியனின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

முகமெல்லாம் மலர, ‘டாய்ங்ஸ் சாமி! மச்சான் போலாம். வா! சாமி கெட்ட வார்த்தைல திட்டிடிச்சி. ஒரு டீ சாப்டு வந்தா துட்டு வாங்கிக்கலாம்’ என்று போவான். தலை எழுத்துடா என்று குழந்தை மாதிரி சிரித்தபடி மதிய உணவைப் புறம் தள்ளித் தேடிப்போவார். ‘ஒரு செகண்ட்ல திட்டிட்டேன். பாவம். நம்பிண்டு போறான். போட்டுக் கொடு’ என்று கேட்டு வாங்கி, செக் எழுதி, கேஷியரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்து சாப்பிடுவார். அவர்தான் ராஜன்.

நாலு முழக் கதர்வேட்டி, அண்ணன் மகன்கள் போதவில்லை என்று கொடுத்த சட்டை, தடியான இங்க் பேனா, பாக்கட் கொள்ளாக் காகிதங்கள், செக் எழுது்ம் நேரம் தவிர ஓய்வின்றி நடையும் உழைப்பும். செங்கல்பட்டில் வீடு. காலை முதல் பேசஞ்சரில் வந்துவிடுவார். இரவு  பாண்டியனில் திரும்பினால்  சீக்கிரம். அப்போதும் பை நிறைய பில்லும், செக்கும், ஸ்டேட்மெண்டுமாய் வேலை பார்த்தபடி போவார். ராஜனிடம் பில் போனால் செக் நிற்காது என்று நம்பிப் போவார்கள்.

இரவு ஏழரை மணிக்குக் கிளம்புவார். டேபிள் அடிகளில் ஏதாவது செக் தாள் பறந்திருக்கிறதா என்று பார்த்து, காந்தி படத்தின் முன் கை கூப்பி வணங்கி ‘ராமச்சந்திர மூர்த்தி! கிளம்பலாம்’ என்று கிளம்பி பறக்க பறக்க வண்டி பிடிக்க ஓடுவார். ராஜன் திட்டினார் என்று ஒரு முகம் சுணங்கியதில்லை. சாரி சொல்லிவிட்டுப் போவார்கள். சம்பளப் பட்டுவாடாவுக்கு  விரட்டி விரட்டி பில்லை பாஸ் செய்ய வைத்து இரண்டு நாள் முன்பாகவே செக்கை அனுப்பிவிட்டு, மலர்ந்த முகத்துடன் எல்லா செக்கும் அனுப்பியாச்சுப்பா. நம்பிண்டு போய் சம்பளம் வரலைன்னா கஷ்டம் என்று போவார்.

சில நேரங்களில் கடவுளையே நீ இருக்கிறாயா என்று கேட்கத் தோன்றும் தருணங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும். இவர் விஷயத்தில் ரொம்பவே அப்படியான தருணங்கள் அமைந்தது. வாய் ஓயாமல் ஸ்லோகம் சொல்லிக் கொண்டு, கீர்த்தனங்கள் பாடிக் கொண்டு, செய்யும் தொழிலில் நேர்மை, அன்பு, இடையறா உழைப்பு என்று இருக்கும் ஒருவனை விட வேறே மனிதனை எங்கே தேட? லக்ஷ்மணனைப் போல அண்ணன் மீது அவ்வளவு மரியாதை. பாசம். அவரின் குழந்தைகளைத் தன் பிள்ளைகளாக வளர்த்தார் என்றோ அவருக்கு பிள்ளை இல்லாமல் போகும்?

மனைவிக்கு மன நலம் அவ்வளவு சரியில்லை. சுயமாக ஒன்றும் செய்யத் தெரியாது. பயந்த நாட்களில் அறையை விட்டு வெளியே கூட வரமாட்டார். காலையில் எழுந்து, பூஜை புனஸ்காரங்களோடு சமையலும் செய்து, மனைவிக்குச் சாப்பிடக் கொடுத்து, மதியத்துக்கும் எடுத்து வைத்து, அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளச் சொல்லி முதல் காஞ்சிவரம் பாஸஞ்சர் பிடித்து ஒன்பதரைக்கு ஆஃபீஸில் இருக்க முடியுமா? ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 35 வருடம் இந்த நெறியில்தான் வாழ்க்கை என்றால் மனிதனுக்கு சலிப்பு தட்டாதா?


ரிடயராகி பத்து வருடமிருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தேன். வெளியுருவில் சற்றும் மாற்றமில்லை. முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். கையைப் பிடித்துக் கொண்டு ‘எப்படி இருக்க பாலு’ என்ற நொடியில், ஒரு நல்ல சங்கீதத்தில், கோவில் ஹாரத்தியின் போது, அமைதியான ஒரு நொடியில் அலை அலையாய் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுமே! உடலின்றி கனமின்றி பரப்பது போல், கனவா நனவா என்று ஒரு உணர்வு வருமே, அப்படி வந்தது. மனமெல்லாம் துடைத்துவிட்டது போல் இருந்தது. அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு.

நீங்க எப்படி இருக்கீங்க சார் என்று கேட்கவே தொண்டையடைத்தது.  ‘ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாயிருக்கேண்டா. பூஜை கோயில்னு போயிடுறது பொழுது. இனி என்ன தேவையிருக்கப் போறது சொல்லு’ என்று ஆசி கூறிப் பிரிந்தார்.
 

எத்தனையோ உருப்படாத கேஸ்களுக்கு சற்றும் தகுதியில்லாவிடினும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து உதவ முடிந்திருக்கிறது. உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை.

செய்யக் கூடியவர்கள் ‘ப்ச்! ரூஊஊஊல் அப்படி இருக்கிறது என்பதற்கு மேல் செய்யத் தயாரில்லை. தீர்வாணையத்தில் ஒரே ஹியரிங்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு பெறக்கூடிய எளிய கேஸ். இத்தனைக்கு அவரின் உறவினர் அங்கே குமாஸ்தா. பல தேர்ந்த வழக்கறிஞர்களும் அனுமதி கட்டத்திலேயே தீர்ப்பாகிவிடும் என்று சொன்ன வழக்கு. ஒரு பகல் போதில் அரசு ஆணை! விசாரணைக்குத் தகுதியற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்ட போது அதிர்ந்து போனேன். உயர் நீதி மன்றத்துக்குப் போகலாம் சார் என்று எவ்வளவோ சொன்னேன்.
என் பெரிய தோல்வி இதிலிருக்கிறது.

தளர்ந்த மனதுடன்,  ‘இது எனக்கு இல்லை பாலு. நீ சொன்னாய். அத்தனை வக்கீல்மாரும் சொன்னார்கள். அப்படியும் இப்படி ஆகிறதென்றால் எனக்கு இது விதிக்கலைடா. எனக்குப் போராட தெம்பில்லைடா. என்ன ஒரு அம்பது ரூபா பென்ஷன்ல வருமா? உழைச்ச உழைப்பை இல்லைடான்னு பதினஞ்சாயிரம் என் வயித்தில அடிச்சானா? இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, December 13, 2010

மெடல் அள்ளலாம்...

சும்மானாச்சும் இந்த கல்மாடி, மண்மாடி, சிங்குங்களை நம்பி விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து ஒலிம்பிக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டின்னு அனுப்பி வடை போச்சேன்னு இருந்தா ஊழல்தான் மிச்சம். திறமை எங்க இருக்குன்னு தேடிக் கண்டு பிடிக்கணும். முக்கியமா இவங்களுக்கு எல்லாம் பயிற்சின்னு தண்ட செலவு செய்ய வேண்டியிருக்காது. அதையும் கணக்குல எழுதி ஆட்டையைப் போட நல்ல வாய்ப்பு. முதலமைச்சர்தான் எப்படியாவது இத புரிய வச்சு தமிழக டீமை தேர்ந்தெடுத்து அடுத்த ஒலிம்பிக்குக்கு வழி செய்யணும். ஏதோ என்னால முடிஞ்ச ஒத்தாசை இதோ:

100மீ, 200மீ, 4x100 ரிலே: நந்தனம், பச்சையப்பா, நியூ காலேஜ் கல்லூரி மாணவர்கள், ஓட்டேரி, வியாசர்பாடி ஏரியாவில் வேலைக்குப் போகும் இளைஞர்கள், அரக்கோணம் போன்ற தூர இடங்களிலிருந்து வந்து ட்ரெயினில் பயணிக்கிற இளைஞர்கள் இவங்கள தேர்ந்தெடுத்தா மூணு மெடலும் நமக்குத்தான். பஸ் கூடவே ஓடி, அக்கம்பக்கத்துல வண்டி ஓட்டுறவன டரியலாக்கி, நல்ல பீக் ஸ்பீடுல ஏர்ற அழகும், அதை விட எங்க இறங்கினா பஸ் கூடவே ஓடி பஸ்ஸோட சேர்ந்து ப்ரேக் அடிச்சா மாதிரி நின்னு பஸ்ஸுக்குள்ள இருக்கிற பொண்ணுங்கள ஒரு லுக்கு விடலாம்னு தெரிஞ்சி இறங்கி ஓடியார அழகும், சொல்லத் தரமா? அதுவும் ரிலே ரேஸ் பார்ட்டிங்க, பஸ் ஸ்பீடு அதிகம்னா பக்கத்துல வர பைக்குல தொத்திக்கிட்டு விரட்டிப் புடிப்பாய்ங்க. பாருங்க.  கண்கொள்ளாக் காட்சி.

டென்னிஸ், பிங்பாங்,பாட்மிண்டன்: விம்பிள்டன் வகையறாக்கும் அனுப்பலாம் இவங்களை. எப்பேர்ப்பட்ட சேம்பியனா இருக்கட்டும். ஏஸ், வால்லி, பேக் ஹேண்ட் ஷாட், ஃபோர் ஹேண்ட் ஷாட், ட்ராப் எது வேணா இருக்கட்டும். நம்மூரு 5 வயசு பையங்கிட்ட தோத்துடுவாய்ங்க. பின்ன, ஆறு மணியானா டென்னிஸ் பேட் மஸ்கிடோ கேச்சர வெச்சிகிட்டு ஒரு நாளைக்கு டன்னு கணக்குல இல்ல விடிய விடிய ப்ராக்டிசு. பசங்க ஆளுக்கு ஒரு மட்டை ஆளுக்கு ஒரு ரூம்புன்னு இல்ல ப்ராக்டிஸ் பண்றாய்ங்க.

ஜாவலின்: மைலாப்பூர், மாம்பலம் மாதிரி பாஷ் லொகாலிட்டி பேப்பர் போடுற பசங்க. ங்கொய்யால அஞ்சாவது மாடி பால்கனிக்கு போற போக்குல சுருட்டி அடிப்பானுவ பேப்பர. அது பிரியறதுக்குள்ள போய் லேண்ட் ஆவும். நீள வாக்குலயும் சரி. கேட்டுக்கும் போர்ட்டிகோவுக்கும் அரை கிலோமீட்டர் இருந்தாலும் அர்ச்சுனரு அம்புதேன்.

ஸ்விம்மிங், போலோ, ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:
வியாசர்பாடி கன்னிகாபுரம், கோட்டூர்புரம் மக்கள விட்டா இதுக்கு வேற யாரு. மழைக்காலத்துல தொறந்து வச்ச மேன் ஹோலுக்குள்ள முங்கினாலும் ஒரு எத்துல மேல வந்து முன்னேறி போய்க்கிட்டே இருப்பாய்ங்க. முன்னாடி போனவன் முங்கினானேன்னு பின்னாடி வர ஆளு உசாராவானான்னா அவனும் அப்படியே முங்கி மேல வருவான்.

ஹைஜம்ப்: செண்ட்ரல், ஈஸ்ட்கோஸ்ட் ரோடு, இன்னும் எங்கல்லாம் மெரிடியன் இருக்கோ அங்க புடிக்கலாம் ஆளுங்கள. பொசுக்குன்னு ஓடி ஒரு எத்துல தாவி மத்த பக்கம் வர காருக்கு முன்னாடி பாஞ்சு, அஞ்சாறு பைக் காரனை குடை சாய்ச்சுட்டு  போய்க்கிட்டே இருப்பான்.

லாங் ஜம்ப், ட்ரிப்பிள் ஜம்ப்:
இதுக்கு எல்லா ஏரியாலையும் ஆளப் புடிக்கலாம். அங்கங்க தேங்கி நிக்கிற குட்டையை பேண்டும் சாரியும் நனையாம தூக்கிப் பிடிச்சி பேலன்ஸ் கூட இல்லாம தாண்டுற நம்மாளுக மாதிரி ஒளக சேம்பியனுங்க தாண்டி காட்டட்டும் பார்க்கலாம். முக்கியமா சட்டமன்ற, நாடாளுமன்ற எம்.எல்.ஏ, எம்.பிக்களை விட்றப்படாது.

கால்பந்து: மாமூல் குடுக்காம ரோட்டோரம் கடை வச்சிருக்கிறவங்கிட்ட தகறாரு பண்ற தாதா. எத்துற எத்துல கடைக்காரன் வேணாம் வேணாம்னு கையைப் பிரிச்சிகிட்டு மடக்கினாலும்,  கோசு, கருணைக் கிழங்கு, குண்டான் சட்டி, தட்டுக் கூடைன்னு மீன்பாடி வண்டில நச்சுன்னுல்ல போய் உக்காருது.

மல்யுத்தம்: ராயபுரம், மாதவரம்,மூலக் கொத்தளம்,ஆட்டு தொட்டி, ஓட்டேரி இங்க கிடைக்காத சேம்பியனா? ஆர்மி டேங்க் சைஸ்ல இருந்துகிட்டு சுண்டு விரலை மட்டும் நுழைச்சி,  ‘அய்ய உள்ள போயேன்’னு சவுண்டு விட்டு அரக்கி அரக்கி, காலரு, கழுத்துன்னு புடுச்சி தொங்கி புளியம்பழம் மாதிரி உலுக்கி விழுத்தி, உள்ள போய் நின்னுகிட்டு, ‘ஏம்ப்பா! லேடீசுக்கு இடம் விட்டு ஒதுங்கி நிக்கமாட்டியா’ன்னு சவுண்டு விடுவாங்க பாருங்க அந்த வார்த்தைக்கே ரெண்டடி பின்னாடி போவாய்ங்க அக்கம் பக்கத்து ஆளுங்க.

சைக்ளிங்: லாரிய, பஸ்ஸ புடிச்சிகிட்டு மிதிக்க சோம்பேரித்தனப்பட்டுகிட்டு ஒத்தக்கைல ஹேண்டில் பாரோட பறக்குறானுவளே. இதுலயும் டிவி கேமரா வண்டிய புடிச்சிட்டு வந்துருவாய்ங்க.

வட்டெறிதல்: வேற யாரு. பஸ்ஸ்டேண்டு பரோட்டா கடை மாஸ்டரு. சுத்தாம திரும்பாம சரியா டேபிளுக்கு வீசுவாருல்ல.

குண்டெறிதல்: கூலிக்காசை டாஸ்மாக்ல தொலைச்சிட்டு சவுண்ட் விடுறவருக்கு நச்சுன்னு வந்து மண்டைய தாக்குறா மாதிரி குண்டான வீசுறவய்ங்கள விட முடியுமா? கேட்டுப் பாருங்க. அவிங்க வீட்டு அம்மணி டேலண்டப் பத்தி சொல்லுவாரு.

மராத்தான்:
நம்ம பிக்பாக்கட் அண்ணாச்சிங்கதான். மவுண்ட்ரோடுல விரட்டினா மந்தவெளி, பெசண்ட் நகர் வரைக்கும் ஓடுவாய்ங்க.

கூடைப் பந்து: நம்ம சரவணா ஸ்டோர் துணிக்கடை பசங்க.

துப்பாக்கி சுடுதல்: ஹி ஹி. நம்ம என்கவுண்டர் போலீசுங்கதேன்.

கராத்தே: பஸ்ஸுல நின்னுட்டு வரப்ப கழுத்துக்கு முட்டு குடுத்து பிக்பாக்கட் கும்பல் பாக்கட்டுல ஆட்டையப் போடாம குனிஞ்சி நெளிஞ்சி அவன் கைக்கு தடுப்பு குடுத்து பயணிக்கிற பொதுஜனம்.

இது போக, பாரா ஜம்பிங், பங்கீ ஜம்பிங், மோட்டோக்ராஸுக்கெல்லாமும் ஆளுங்க இருக்கு நம்மகிட்ட. ஹூம். நமக்குத் தெரியுது. விளையாட்டுத் துறைக்கு தெரியலையே. 


(டிஸ்கி: இந்த இடுகை கூட ஒரு கைல மஸ்கிட்டோ கேச்சர சுத்தி சுத்தி கொசுவதம் பண்ணிக்கிட்டே எழுதிட்டேன். அதனால கொசுத்தொல்லை தாங்கல நாராயணான்னு சொன்னா எனக்கொன்னும் இல்லை)
~~~~~~~~~~~~~~

Saturday, December 11, 2010

மத்தாப் பூ

ஒரு வழியாய் மழை கொஞ்சம் ஓய்ந்தது போலிருக்கிறது. கொசுக்கள் புகை பிடிக்கக் கற்றுகொண்டு விட்டன. கொசுவத்திச் சுருளில் உட்கார்ந்து நக்கலடிக்கின்றன. இனி ரோடு காண்ட்ராக்டில் போகிற போக்கில் அடிக்க வாய்ப்பு. தேர்தல் வேறு வருவதால் மந்திரிமார் சொகுசுப் பயணத்துக்காக விரைவில் ‘முக்கிய’வீதிகளில் ரோடு போடப்படும். வட சென்னைக் குழிகள் நிரப்பப்படலாம்.
*********
வெள்ளிக்கிழமை நண்பர் ராஜநடராஜனைச் சந்திக்க வாய்த்தது. கூடவே அவரின் சகோதரி மகனையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. காரணமிருக்கிறது. இளைஞர் மத்தியில் ஈழ உறவுகளைப் பற்றிய அக்கறையும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமுமிருப்பதைக் காணமுடிந்தது. அலுவலக ஃபோரமின் மூலம் சில தடவை முயன்று தோற்றதைச் சொல்லமாட்டாமல் சூசகமாகச் சொன்னேன். சொன்னாற் போலவே அரசியல் வியாதிகளின் காலை நக்குவதை விட சிறந்த வழிமுறையில்லை என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பதை அறிய வருத்தமே.

எழுத்தில் தெரியும் அதே அக்கறையுடன் மென்மையாக திரு ராஜநடராஜன் வருந்திய விஷயங்களுக்கு என்ன பதில் சொல்ல? தன் கூடு என்று தேடிவரும் பறவைகளுக்கு வெளிப்பூச்சில் மினுக்கினாலும் உள்ளே இத்துப் போயிருக்கிறோம் என்பதைச் சொல்லச் சங்கடப்படுவதைத் தவிர வேறென்ன சொல்ல. 

2ஜி ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா, குருமூர்த்தி படிச்சியா, தமிழன்னு சொல்லிக்கவே வெக்கப்படுறேன் என்று ட்ரெண்டியாகப் பேசிக் கொண்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்போம்.
*************
இசைவிழா சீசன் ஆரம்பமாகிவிட்டது. குண்டஞ்சி வேஷ்டியிலும், ரங்காச்சாரிப் புடவையிலும் வரும் வெளிநாட்டவருக்கு கூசாமல் முழம் 25ரூ என்று முக்கால் முழம் அளக்கும் பூக்காரியிடம் ரூ20க்கு பேரம் பேசி 30ரூபாயாகக் கொடுத்து கச்சேரி கேட்கவரும் ரசிகர்களுடன், ஒருமாசம்  சபா கேண்டீனில் தாவித் தாவி வக்கணையாகத் தின்று கச்சேரியை விட தீனியை விமரிசிக்கும் பெருசுகள், அரைப் பரீட்சை விடுமுறையில் பள்ளி மைதானத்தையும், அசெம்ளி ஹாலையும் கச்சேரிக்கு வாடகைக்கு விட்டு ஆட்டையைப் போடும் பள்ளிகள், இந்தக் கச்சேரிகளுக்காகவாவது மாம்பலமோ மைலாப்பூரோ குடி போகவேண்டும் என 30 வருடமாய்க் கனவு கண்டு, ஜெயா டி.வி.யின் மார்கழி மகோற்சவம் யூடியூபில் வருமா என்று காத்திருக்கும் என்னைப் போன்ற பரதேசிகள் என்று சென்னை ஒரு மார்க்கமாய் மாறிவிடும்.
*************
சரவணபவன் அண்ணாசாலையில் 29 வருடத்தில் 29ம் கிளை திறந்து கல்லாக் கட்டப் போகிறார்கள். செண்ட்ரல் சரவணபவனில் நம்மவர் கை துடைத்துப் போட்ட பேப்பர் டவலை எடுத்துச் சுத்தம் செய்யாமல் பரபரப்பான உணவு வேளையில் ஒரு டேபிளில் வாடிக்கையாளரைக் காக்க வைக்கும் சூபர்வைசர்கள், இடுப்பில் ஹைடெக் பில்லிங் மெஷின் இருந்தாலும், வாடிக்கையாளரை லோக்ளாஸாக நடத்தும் பண்புமிருந்தும் இந்த வளர்ச்சிக்கு காரணமான நம்மைத் துப்பிக் கொள்ளத்தான் தோன்றுகிறது.
**************
இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படும் போர்க்குற்ற ஊழல் பற்றி மூச்சே விடாமல், இசைப்பிரியாவின் மரணம் குறித்த செய்திகளை ஒரு பத்தி கூட எழுதாமல், நடிகர் விஜயகுமாரின் குடும்ப விவகாரத்தை பக்கம் பக்கமாக எழுதி தமிழ் வளர்க்கும் பத்திரிகைகளை ஏதாவது பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம். இந்த அழகில் வரலாற்றுச் சுவடுகளுக்கு விளம்பரம் வேறு.
*************
நம்ம ஊர் ஆஸ்பத்திரி லேப்களில் சிறுநீர் பரிசோதனை ரிஸல்ட் மாறி ஆணுக்கு கர்ப்பம் உறுதி செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் ஒன்று. ஒன்று எங்கள் சாதியே என்பது போல், இங்கிலாந்தின் ஹில்டனுக்கு லண்டன் நார்விச் மருத்துவமனையிலிருந்தும், பிறப்பு விகிதத் துறையிலிருந்தும் வந்த கடிதங்களின் பேரில் மருத்துவமனைக்குச் சென்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்த பிறகு வந்த ரிஸல்டில் மிஸ்டர் ஹில்டன் இரண்டு குழந்தைகளைக் கருவில் சுமப்பதாக சரியான பெயர், பிறந்ததேதி, இன்சூரன்ஸ் தகவலோடு கொடுக்கப்பட்ட ரிப்போர்டினால் நண்பர்களின் கேலிக்கு ஆளாகி இருக்கிறார். கொடுமை என்னவெனில் 20 வருடங்களுக்கு முன் சிறுநீரகக் கற்களுக்காக சிகிச்சை எடுத்தாராம். கிட்னிக்கும் கருப்பைக்கும் வித்தியாசம் தெரியாமலா ஸ்கேனிங் இருக்கும்?
**************
இன்று பாரதியின் பிறந்த நாள். அவன் தந்த உணர்வுகளைக் கிடாசிவிட்டு அவன் பூணூலில் பார்ப்பனீயம் தேடும் அளவு முன்னேறியிருக்கிறோம். தத்தளிக்கும் மனதை சோகம் சோய்த்த தமிழில், ஜெயஸ்ரீயின் மயிலிறகுக் குரலில் கேட்டு நினைவு கூர்வோம்.
“குணம் உறுதியில்லை
 எதிலும் குழப்பம் வந்ததடி
 கணமும் உள்ளத்திலே
 சுகமே காணக் கிடக்கைவில்லை”
 **************** 
கவுஜ கார்னர்!!!!!
சுட்டுக் கொண்ட விரலைச்
சிற்றுதடு குவித்து ஊதுகிறாய்
பற்றியெறிகிறதென் தேகம்..

நினைவு இழைகளால்
சுற்றி நெய்த வலையில்
இரையானது மனது..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, December 7, 2010

கஸ்ஸ்ஸ்ஸியும் கவிதைகள்..தூண்டில்

கவிஞர்கள் கண்ணை மீனென்றல்லவா சொல்வார்கள்
உனக்கு மட்டும் ஏனடி தூண்டிலானது
பார் என் இதயம் சிக்கித் தவிக்கிறது.
***
வாசம்

குளித்து நடந்த உன் கால்தடத்தை
இணைத்துக் கூந்தல் கசிந்த நீர் கோலம் போட்டது
நிமிடத்தில் கோலம் காய்ந்தாலும்
நீ விட்டுச் சென்ற மஞ்சள் வாசம் நிறைத்திருக்கிறது
***
மூச்சு

ஓடி வராதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன்னைப் பார்த்தவருக்கெல்லாம்
மூச்சிறைக்கிறது.
***
முத்திரை

பேரழகி நீ என்று வாக்களித்தேன்
கள்ள ஓட்டுப் போடாமல் மார்பில்
நீ கடித்த தடம் இன்னும் இனிக்கிறது.
***

 


இமைகள்

கருவண்டுக் கண்களென்றா
படபடவென
இமையடித்துப் பார்க்கிறாய்?

***
புள்ளி

புள்ளிகள் இணைத்து
பிரமன் வரைந்த ஓவியம் நீ
இணைக்காமல் விட்ட புள்ளிகளில்
இன்னும் அழகாயிருக்கிறாய்!
***

இதழ்கள்

உன் இதழ்கள்
எனக்காகப் படைக்கப்பட்டவை
நீ சுவைப்பதற்கல்ல!~~~~~~~~~~~~~~~~

Monday, December 6, 2010

கேரக்டர் - அவன்..

கேரக்டர் எழுத ஆரம்பித்ததிலிருந்து இவரை எழுதுவதா வேண்டாமா என்று ஒவ்வொரு முறையும் ஒரு சின்னப் போராட்டமே நடைபெறும் என்னுள். அப்படி ஒரு மனிதன். அவனின் சாதனை என்பதை விட இப்படி ஒருவனை கணவனாக வரித்து பிள்ளைகளை உன்னதமாக ஆளாக்கிய அந்தச் சகோதரியை சொல்லாமல் போனால் இவன் முழுமையில்லை. அதற்கு இவன் குறையையும் சொல்லியாக வேண்டிய நிர்பந்தம். பெயர் சொல்லிப் பாராட்டமுடியாத நிலை. மன்னித்துக் கொள் நண்பனே.

அவன் என் செக்‌ஷனுக்கு மாற்றலாகி வருமுன் அவனைப் பற்றிய விவரம் மாற்றலாகி வந்தது. என் அதிகாரி, என்னிடம், இவனை உன் கண்ட்ரோலில் வைத்துக் கொள். ரேஸ் பைத்தியம். அந்த மூத்த அதிகாரி சொன்னார். எங்கேயும் சுத்தவிடாடாதே. ஸ்ரிக்டா இருக்கணும். ஏதாவதுன்னா என்னிடம் சொல்லு என்றார். கண்டிப்புக்கும் எனக்கும் வெகுதூரம். நட்பாய்ச் சொன்னால் எல்லாம் நடக்கும் பாலிசி நம்முடையது. எனக்கு வந்ததடா வில்லங்கம் என்று ஒரு பூதத்தை எதிர் நோக்கியிருந்தேன்.

என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம். களையான சிரித்தமுகம். செக்கச் சிவக்க ஒற்றைத் திருமண். கருகருவென அடர்த்தியாய் அலையலையாய் வாரிய கூந்தல். வெற்றிலை பாக்கு புகையிலை மென்று பல் என்பது வெள்ளை நிறம் என்று ஒரு முறை கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். ஒரு காற்றுக்குப் பறந்து விடுவேன் என்பது போன்ற ஒல்லியான உடல்வாகு. சிரித்த முகத்துடன் வந்து அறிமுகம் செய்து கொண்டு ஆர்டரை நீட்டிய போது தெரியாது இவன் என்னை எப்படி பாதிக்கப் போகிறானென்று.

தேனீதான். பரபரவென்று சுற்றிச் சுழன்று வேலை செய்வான். கையெழுத்து கோழி கிண்டினாற் போலிருக்கும். கேட்டுக் கேட்டுச் செய்வான். பரோபகாரி. யாராவது முதியவர் பென்ஷன் விஷயமாக அல்லது அட்ரஸ் கேட்டு வந்தால், இருக்கும் வேலையை விட்டுவிட்டு அவருக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான்.

கொஞ்ச நாளிலேயே மிகவும் நம்பிக்கைக்குரியவனாகி விட்டிருந்தான். நெருக்கமும் கூட. ஒரு நாள் தேனீர் அருந்துகையில் ரொம்பவும் யதார்த்தமாக, தன்னுடைய ரேஸ் பழக்கத்தைச் சொன்னான். ரொம்ப அழிஞ்சிட்டேன் சார். பெரிய ஆஃபிஸர் கிட்ட கூட போட்டு பார்த்துட்டாங்க. எக்மோர் பின்னாடி ஆஃபீஸா. மச்சான் கொஞ்சம் பாத்துக்கடா லெட்ரீன் போய்ட்டு வரேன்னு ஒரு வண்டி பிடிச்சி மாம்பலம் இறங்கி புக்கியிடம் பணம் கட்டிவிட்டு அடுத்த வண்டியில் வந்துவிடுவேன். இப்போதுதான் திருந்தி நன்றாக இருக்கிறேன் என்று சொன்னபோது கொஞ்சம் பெருமையாய்த்தானிருந்தது.

நாதாரி சார் நானு. நினைச்சா ச்சீன்னு சாவணும் போல வரும்சார். அர்பன் பேங்க் லோன் போட்டு ஆயிரக் கணக்கில கையில இருக்கும். பொண்டாட்டி புள்ளதாச்சி. காலைல ஒரு பன், டீ வாங்கி குடுத்துட்டு க்ளப்புல மொத்த துட்டும் தொலைச்சிட்டு போயிருக்கேன் சார். ராத்ரி வரைக்கும் ஒன்னும் சாப்பிடாம தூங்கியிருப்பா சார் என்று சொல்லும்போது கண்கலங்கும். கொஞ்சம் கடன் இருக்கு சார். அது முடிச்சிடலாம் என்ற போது நம்பிக்கையும் வந்தது.

திருவேங்கடம், ஜனா வகையறாவுடன் மங்காத்தா ஆடுவான். வெறும் பத்து ரூபாயோடு. பல நேரம் மொத்தம் உருவி விடுவான். ஆட்டம் முடிந்ததும், டமாஷ்கு ஆடினதுய்யா. இந்தா புடி என்று பெருந் தொகையை கொடுத்து விடுவான். இவனால் பல்ப் வாங்கிய சமயம் பல உண்டு. எலுமிச்சம் சாதம், காண்ட்ராஸ்டாக வெண்டைக்காய் பொரியல். ஒரு தீய்ந்த அடையாளம் இன்றி பச்சு பச்சென்று இருக்கும். சாதம் முழுதும் பரவலாக முந்திரிப் பருப்பு. பெரிய ராஜ பரம்பரை இவரு. முந்திரி கேக்குதோ என்றால், அட சை, 2 ரூ குடுத்தா இவ்வளவு முந்திரி குடுப்பான். இதுக்கு ராஜாவா இருக்கணுமா என்றதை நம்பி, ஒரு பண்டிகையன்று என் அம்மா பக்கதுக் கடையில் முந்திரி வாங்கி வரச்சொன்னபோதுதான் தெரிந்தது 5ரூபாய்க்கு 5 முந்திரி என்று. அப்படியொரு தில்லாலங்கிடி ஆசாமி.

‘த்தா’ இல்லாமல் பேச வராது. ஆனால் நெற்றியில் ஒத்தையை நம்பி, சில நேரம் ஏதோ விசேஷத்துக்கு கூப்பிட வருபவர்கள் இது பழைய பஞ்சாங்கம் என்று ‘அந்த’ பாஷையில் பேசினால் நொந்து நூலாகிப் போவார்கள். யாராவது இறந்தால் முதல் வருட திதியை ‘வருஷாப்திகம்’ என்று சொல்வார்கள். குழந்தை பிறந்து முதல் வருட பிறந்த நாளை ‘ஆயுஷ் ஹோமம்’ என்பார்கள். ஒரு பெரியவர் தன் பேரனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு அழைக்க வருகிறேன் என்று ட்ரெயினில் சொல்லும்போது ‘ஆயுஷ் ஹோமம்’ என்று சொன்னதை மறந்து, பத்திரிகை கொண்டு வந்தவரிடம் ‘என்ன மாமா! பேரனுக்கு வருஷாப்தின்னு சொன்னீங்களே. அந்த பத்திரிகையா என்றதும் அவர் பதறின பதறல் இருக்கிறதே.

எம்.ஜி.ஆர் மறைந்த தினம். சம்பள பில் போயாக வேண்டும். ஊரெங்கும் கடையடைப்பு. கல் வீச்சு. ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். சார் போலாமா என்று. பயந்து பயந்து டபுள்ஸ் போய், ஓட்டேரியில் கல்வீச்சில் சிதறி ஓடி, எப்படியோ சேர்ந்து நடந்தே போனோம். அடுத்த நாள் சைக்கிளும் வேண்டாம் நடந்தே போகலாம் என்று வந்துவிட்டான். மொத்த பில்லும் முடித்து, அடுத்த செக்‌ஷன் பில்லும் பெரும்பாலும் முடித்துப் போட்டோம் இருவரும். அடுத்த வேலை நாளில், சம்பளம் பெரிய பிரச்சனையாய் பேசப்பட்டு, எல்லாருக்குமே கேஷிலும், ஆடிட்டிங் பிறகு செய்து கொள்ளலாம் என்று அதிகாரி சொன்னபோது மொத்த பில்லும் ரெடி என்றதில் அசந்து போனார்.

ஜாதி என்னய்யா ஜாதி. என்னமொ பொறந்துட்டோம். எங்கப்பன் பூணூல் போட்டு விட்டான். ஒத்தை போடாட்டி என்னமோ போல இருக்கும். செத்தா அரணாக் கயிறைக் கூட அறுத்துட்டுதானே அனுப்பறாங்க என்பது அவரின் தத்துவம். மூலக் கொத்தளச் சாவுக்கு தப்பாட்டத்துடன் ஜோதியாவான். பிணத்தைத் தூக்குவதிலோ, குழிக்குள் வாங்க மற்றவர் தயங்குகையில் முதலில் குதிப்பதோ கொஞ்சமும் தயக்கமிருக்காது. ‘மொகம் பாக்கறவங்க பார்க்கலாம், மூடப் போராங்கவும், உடன் பாலேய் உடன் பலேயிலும்’ அதகளம் பண்ணுவான். பார்ப்பனர் வீட்டு சாவில் தர்ப்பை வாங்கி பேண்டில் சொருகிக் கொண்டு ரொம்பவும் ஐதீகமாக எல்லா சாங்கியமும் செய்வான்.

திரும்பவும் ஆள் அவ்வபோது காணாமல் போக ஆரம்பித்ததும், கேட்கும் போதெல்லாம் அங்கே போனேன் இங்கே போனேன் என்று சாக்கு வரும். ஒரு நாள் கேட்டேவிட்டேன். ஆரம்பிச்சாச்சா திரும்ப என்று. ‘இனியும் ரேசுக்கு போறதை விட’ என்று மோசமான ஒரு வாசகம் சொன்னான். டீக்கு போகையில் ஒரு சக ரேசரை பார்த்த ஆர்வ மிகுதியில், ‘இன்னா மாமா! நேத்து செம அடியாமே’ என்று கேட்க அவர் நீ எங்க முதல் ரேசுக்கப்புறம் ஆளைக் காணோம் என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அப்படியும் அவர் சும்மா சொல்றார் சார் என்றாலும் கடன், வீட்டுக்கு சரியாக சம்பளம் போவதில்லை என்பது தெரிய வந்தது.

ஒரு கட்டத்தில் எப்படியோ வசதியான வேறொரு அலுவலகத்துக்கு மாற்றலாகிப் போனதும் தொடர்பில்லாமல் போனது. சில காரணங்களினால் மனவருத்தமும் கூட. ஆனாலும் அங்கேயும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல் வேலையில் அவ்வளவு நல்ல பெயர். எப்போதாவது பார்த்தால் தயக்கமின்றி பேச முடிந்தாலும் அந்த வலி மறையாமல் ஊமையாய் வலிக்கும்தான்.

கடைசியாக, ஒரு அதிகாரியின் தாயின் இறப்பில் பார்த்து ஒன்றாய்க் கிளம்பியபோது மகன் எஞ்சினியரிங் முடித்து எம்.பி.ஏ. படிப்பதும், மகள் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பதும் பெருமையாகச் சொன்னபோது அந்தச் சகோதரியைக் கும்பிட வேண்டும்போலிருந்தது. இல்லையென்றால் இப்படி ஒரு நாதாரியுடன் வாழ்ந்து இது சாத்தியமா?

இப்போதும் அன்று பார்த்தார்போல் அதே உருவம், ஒரு நரைமுடியில்லை, மூப்பு தட்டாத அதே இளம் முகம். மனுஷனுக்கு வீக்னெஸ் இருந்தால் என்ன ? இப்படி மனுஷனாய் எல்லோருடனும் ஒட்டுறவாய்ப்  பழக முடிந்து, எதானாலும் பார்த்துக்கலாம் என்ற மனோதிடமும் இருந்தால் மூப்பு வராதோ?

Saturday, December 4, 2010

நறுக்னு நாலு வார்த்த V5.5

போர்க்குற்றவாளி ஒருவர் தப்பிவிட்டார்: பிரிட்டிஸ் டெஸ்லி காடியன். 

மத்தவைங்கள புடிச்சி தொங்க விட்டாச்சு. ஒருத்தருதான் சிக்கலையாம். போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாமல் தோற்றிய பரீட்சைத் தாள் முன்கூட்டியே வெளியானது: அப்பன் ஆட்சியில் மகன் தப்புத்தாளம். 

ஒரு ஜனாதிபதி மகன் கேள்வித்தாளை முன்னாடியே பார்த்து கஷ்ட்ட்ட்டப்பட்டு எழுதியிருக்கே. அந்த நேர்மையப் பாராட்டுங்கப்பா. லெக்ச்சரர விட்டு எழுதச் சொல்லைலைல்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் சுயாதீன விசாரணைக்குட்படுத்த வேண்டும்: அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

இதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம். பதிலுக்கு அவனும் கேப்பான்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல் 

அப்பப்ப உசிரோடதான் இருக்கோம்னு காட்டிக்க இது ஒரு பொழப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரித்தானிய இலங்கை தூதுவராலயத்தில் மகிந்த தஞ்சம் - ஈழத்தமிழர்கள் முற்றுகை

இப்பவாச்சும் இந்தக் கொடுமை எப்படின்னு உணர்ந்திருப்பானா நாதாரி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலைஞர் வீட்டு வசதி திட்டம்: மதுரையில் மு.க.அழகிரி தொடங்கி வைக்கிறார்

கலைஞர் வீட்டு வசதி எவ்வளவுன்னு  குத்து மதிப்பான்னாலும் எல்லாருக்குமே தெரியுமே. திரும்பவும் அடுத்த ரவுண்டா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை, திருச்செந்தூர் கோயிலில் எடியூரப்பா வழிபாடு

ஆஹா! நேர்த்திக்கடன் ரவுண்டு ஆரம்பிச்சிடுச்சா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயலலிதாவுக்கு ஊழல் பற்றி பேச தகுதி உண்டா? பொன்முடி கேள்வி

அதானே. அதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சு வேணாம்? உங்க லெவலுக்கு முடியுமாங்கோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியதே நாங்கள் தான்: கலைஞர்

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா. நாளைக்கு 3 வேளை பேரைச் சொல்லிகிட்டா வயிறு நிரம்பிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்

அதானே! வாங்கினப்ப வாய் பார்த்துட்டிருந்துட்டு குடுக்குறப்ப தடுக்குறது கேவலமாயில்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அருண்ஷோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? திருமாவளவன் ஆவேசம்! 

‘குடுக்கப் போற சீட்டுக்கு மேல கூவறாண்டாங்கொய்யாலே’ன்னு ராசாவே சிரிப்பாருங்ணா!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஜக ஊழல்களை மக்கள் மறக்கவில்லை: காங்.

பரதேசிங்களா! பத்து ரூபாயை கீழ போட்டுட்டு காசு விழுந்துடுச்சின்னு காட்டி பையில இருக்கிற காசுக்கு ஆட்டய போடுறவன மாதிரியே பொழப்பாப் போச்சடா உங்களுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விவாதம் நடத்த தயார்: பிரணாப் முகர்ஜி

ம்கும். நீங்க பேசி, அது மத்தவனுக்கு புரிஞ்சி விவாதம் வேற நடந்துடுமோ? தூங்கிடுவானுங்கன்னு தில்லு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குஜராத் கலவரம்: நரேந்திர மோடி மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையாம்!

ராஜபிச்சகூட இப்புடித்தான் சொல்றான். ஆமா ஆமான்னு சொல்றாய்ங்கல்ல காங்கிரசு..பாஜக மட்டும் எளப்பமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போர்க்குற்றம் தொடர்பான வீடியோ:ஐநா அதிர்ச்சி

தாயத்து கட்டுங்கப்பா. ஜன்னி கண்டுடப் போகுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும்: வனிதா

பாவம்யா. ஏதோ சீரியல் டயலாக்க சொல்லிட்டுது போல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அப்படின்னா கல்விக் கட்டணத்தைக் கண்டுக்கப்பிடாது, ச்செரியா# பள்ளி வைத்து கொள்ளையடிப்போர் சங்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, December 3, 2010

சான்றோனாக்குதல்...

‘எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்’

இது வெறும் சினிமாப் பாட்டு அல்ல. பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பும் இவ்வளவுதான். என்னை விட நல்லாருந்தா நல்லது.( அந்த நல்லாக்கு விளக்கம் தெரியாது). இல்லைன்னா என்ன மாதிரி அமைதியா வாழ்ந்தா போதும். படிப்பு, முடிஞ்சதும் ஒரு வேலை, அப்புறம் நாம பார்த்து வச்சி கலியாணம், அப்புறம் அவன்பாடு.

ஒரு கஷ்டம் தெரியாம வளர்த்தம்பா புள்ளைய. இன்னைக்கு என்ன பார்த்து எனக்கு என்ன செஞ்சிட்டன்னு கேட்டுட்டான்பா என்று வருந்தாத பெற்றோர்கள் மிகக் குறைவு. அவர்களாக விரும்புவது, ஆத்தா அப்பன் விருப்பத்துக்கு என்று சீராட்டி, ஏதானாலும் கேட்கப் பிறந்தவர் நாம். கொடுக்க வேண்டியவர்கள் அவர்கள் என்ற மனப்பாங்குடன் வளர்கிறது பிள்ளைகள்.

ராஜு சைக்கிள் வச்சிருக்கான். எனக்கும் வேண்டுமென்றால் எப்படியோ வாங்கிக் கொடுத்து விடுவோம். கம்ப்யூட்டர் வேண்டுமென்றாலும் அப்படியே. வளர்ந்து பைக் என்றாலும் வாங்கலாம். கார் என்று நின்றால்? முடியாது என்ற நிலை வருமானால்? அங்கே முளைக்கும் மோதல். புறத்தேவைகளை மட்டும் நிறைவேற்றி மனதால் ஒன்றாமல், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் வருகையில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாகிறார்கள்.

ஒரு குதிரைக் குட்டி வாங்கி, செழுமையாக வளர்த்து, ரேஸில் ஓடவிட்டு, கமான் கமான் என்று கத்திக் கத்தி ஜெயித்தால் பெருமைப்பட்டு, தோற்றால் கடுமையாகி, தடுக்கி விழுந்தால் சுட்டுவிடுவதற்கும், ஒரு எதிர்பார்ப்பில் ஏமாற்றம் வரும்போது கை மீறிய நிலையில் புலம்பி வார்த்தையால் கொல்லுவதற்கும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு.

செலவுக்குக் கொடுக்கும் காசு செலவு செய்வதற்காக மட்டுமே அல்ல. உன்னிடம் உன் வாழ்க்கைக் கணக்கைச் சரியாய்த் துவக்கத் தரப்படும் வாய்ப்பு என்பதை சொல்லிக் கொடுக்கிறோமா? இன்றைக்கு வீடெல்லாம் சுத்தம் செய்கிறாயா? உனக்கு 20ரூபாய் தருகிறேன். உழைப்புக்கு ஊதியம் கேவலமில்லை என்று சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். விடுமுறை நாட்களில் ஏதாவது வேலை பாரேன். ஒரு தொழிலைத் தெரிந்து கொள்ளலாமே. உனக்கு வேண்டியதை அது வேண்டுமா வேண்டாமா என்று நீயே தீர்மானிக்கலாமே. உன்னால் முடியும் எனில் அவசியம் எனில் உன் உழைப்பில் வாங்கியது என்ற உணர்வு அதன் மதிப்பை எவ்வளவு உயர்த்தும் எனச் சொல்லிக் கொடுக்கிறோமா?

இந்த வாரம் 20ரூ பாக்கட் மணி. உன்னிடம் 5ரூதான் இருக்கிறதா? நண்பனின் பிறந்த நாளுக்கு கிஃப்ட் வாங்க வேண்டுமா? சரி இன்னொரு 5ரூ தருகிறேன். அடுத்த வார பாக்கட் மணியில் கழித்துக் கொள்வேன் என்றால் உலகில் எதுவும் இலவசமாய்க் கிடைப்பதில்லை என்ற பாடம் படிப்பிக்கலாம். கல்லூரியில் சேர்ந்ததும் அந்த மூன்று அல்லது நான்கு வருடங்கள் யவ்வனத்தின் கடைவாயில். இது முடித்தபின் மகிழ்ச்சி என்பது இருக்கப் போவதில்லை. பொறுப்பு என்ற சுமை வந்து சேரும் என்பதுதானே இன்றைய இளைஞர்களின் மனோபாவமாக இருக்கிறது? பெற்றோருடன் உரசல் வெடிக்கும் காலமும் இதுதானே?

எத்தனை முன்னோக்கு சிந்தனையுள்ள பெற்றோராயினும், கல்லூரி முடித்தபின் வெளிநாட்டில் படிக்க ஆசையாயிருக்கிறது என்று பிள்ளைகள் சொல்லும்போது பளிச்சென மனதில் தோன்றுவது, கையில் புட்டியும், வெளிநாட்டு பாலியல் சுதந்திரத்தால் கெட்டுப் போய்விடுவார்களோ என்ற பயமும், எல்லாம் விட ஏதோ ஒரு நாட்டுக்காரி மருமகளாகவோ மருமகனாகவோ வரக்கூடும் என்ற திடீர் தேசபக்தியும்தானே.

பட்டப் படிப்பை முடித்து வெளிநாட்டில் மேற்படிப்புக்குச் செல்லும் ஒரு பிள்ளையையும் இங்கே மேல் படிப்பு படிக்கும் ஒரு பிள்ளையையும் ஒப்பு நோக்கினால், எத்தனை வியத்தகு மாற்றம். மனது கொள்ளாச் சந்தோஷத்துடன், கேண்டீனில் வேலை கிடைத்திருக்கிறது. பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறேன். எனக்கு செலவுக்குத் தாராளமாயிருக்கிறது. நானே சமைத்துக் கொள்கிறேன். இரண்டு நாளைக்கு வைத்திருந்து சாப்பிட்டால் செலவு குறைவு. ஸ்காலர்ஷிப் கிடைக்கும். நன்றாக முயற்சி செய்தால் போதும் எனக் கேட்கும் பெற்றோர்கள் மனதில் ஒரு வியப்பு. ஒரு ஆச்சரியம், எல்லாம் தாண்டிய ஒரு பெருமையும், நிம்மதியும் வருகிறதா இல்லையா?

என் மகனா? ரூ 2500க்கு கார்கோ பேண்ட் வாங்கவில்லை எனில் கல்லூரி மாணவன் என்று எப்படிச் சொல்ல என்று சண்டை போட்ட பிள்ளையா இது? பிறந்த நாள் பார்ட்டிக்கு 1000ரூ கேட்டு 2 நாள் சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்ததா இது? தினம் சாம்பாரா என்று பிட்ஸாவுக்கு ஃபோன் செய்த பிள்ளையா இது? பஸ்ஸில் கூட்டம், ட்ரெயினில் போனால் தூரம் என்று ஆட்டோ தேடிய குழந்தையா? எப்படி வந்தது இந்த மாற்றம். தான் சம்பாதிக்கிறோம். நான் யார் தயவிலும் இல்லை என்ற எண்ணம் தந்தது இறுமாப்பா? இல்லையே, முன்னை விட பெற்றோர்களை நட்பாக, மரியாதையுடன் இன்னும் நேசமாகப் பேச முடிகிறதே.

எதையும் நேரிடைப் பேச, தயக்கமின்றி விவாதிக்க, என் கருத்து இது, என் முடிவு இது என்று சொல்லும்போது பெருமையாய்த்தானே இருக்கிறது? அதே நேரம் இங்கே மேல் படிப்பு படிக்கும் பிள்ளைகளில் பெரும்பாலும் இந்த மாற்றங்கள் இல்லையே? அப்படியே ஒன்றிரண்டு பேசிவிட்டாலும், உனக்கென்ன உலகம் தெரியும் என்ற எண்ணத்தோடுதானே இருக்கிறோம்.

ஆக இந்த அடிப்படை மாற்றத்துக்கு காரணம் என்ன? பொறுப்புணர்ந்த சுதந்திரம், சுயத்தை உணரும் வாய்ப்பு, அதை மதிக்கும் ஒரு சமூகம் அது கொடுத்த வாய்ப்பல்லவா? சம்முவம் பையன் அமெரிக்காவில் ப்ளேட் கழுவிப் படிக்கிறான் என்று எள்ளலாய் யாராவது சொல்வார்களா? இதே இங்கே ஒரு பிள்ளை விடுமுறை நாளில் ஒரு ஹோட்டலில் சர்வராய் இருந்தால், என்னப்பா? படிப்பு நிறுத்திட்டியா? அந்த ஓட்டல்ல சர்வரா இருந்தானே உன் பையன் என்று யாரோ ஒருவர் பொரணி பேசும் சமுதாயமும், அதற்குப் படும் அவமானமும் யாருடைய தவறு? அவர் கல்லூரிச் செலவுக்கு அவர் உழைத்துச் சம்பாதிப்பாராம் என்று பெருமையாய்ச் சொல்ல முடிவிதில்லையே? காரணம் யார்? சொசைட்டி? கவுரவம்?

ஆக ஒரு நல்ல பிள்ளை என்பது பெரும்பாலும் பிள்ளைகளால் அமைவதில்லை. நாம் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பும், நாமே அமைத்துக் கொண்ட குறிக்கோளும், அதில் தோல்வி எனில் நிராகரிப்பும், வெற்றி பெற்றால் அதற்கான முழுப் பெருமையும் நமக்கே என நினைப்பதுவுமே அல்லவா? சரியாக வழிகாட்ட, சரியான புரிதலை கற்றுக் கொடுக்க, எல்லாவற்றையும் விட சுயமரியாதை என்பது புறப் பூச்சுக்களால் அல்ல, உன்னை நீ மதிப்பது என்பதைக் கற்றுக் கொடுக்காத எந்தப் பெற்றோரும் எவ்வளவு உயர்ந்த கல்லூரிப் படிப்புக்கு வழி செய்தாலும், சுக வாழ்க்கைக்குத் தியாகம் செய்தாலும், அது தன்னுடைய நலம் கருதிய ஒரு முதலீடு என்றே நினைக்கிறேன். அதற்குக் கொடுக்கும் விலை தன் பிள்ளைகளின் சுயமரியாதையை. ஒரு பிள்ளையை அடிமையாக்கும் இழிசெயல்.  


(பொறுப்பி: இது சம்பந்தமான விவாதங்களுக்கும், சில கையேடுகளுக்கும் நன்றி ப்ரியாவுக்கு)
~~~~~~~~

Tuesday, November 30, 2010

அன்பான அப்பா?...

கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுலகில் சலசலப்பை ஏற்படுத்திய தலைப்பு ‘லிவிங் டுகெதர்’. நேர்மையான, வக்கிரமான, நகைச்சுவையான, புரிதலுடனான, அபத்தமான என்று பல பதிவுகள் வந்துவிட்டன. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. திரும்பவும் முதலிலிருந்தா என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவாதங்களில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விஷயம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது.

எதிர்ப்பவர்கள் அணியில் பிள்ளைகள் வன்முறையாளனாக, சமூக விரோதிகளாக வளரக்கூடும் என்ற அச்சம், பிள்ளைகளுக்காக வாழ்வது என்ற தியாகம் இருக்காது, பேஏஏஏர் சொல்லும் பிள்ளையாக இருக்காது என்ற அதி நவீன கண்டுபிடிப்பு (ங்கொய்யால தாத்தனுக்கு அப்பன் பேரு கேட்டா சொல்லத் தெரியாது இதுல குடும்பப் பேரை காப்பாத்தி சொல்ல வேற போகுது),விட்டுக் கொடுத்து வாழ்தல் என்ற மஹா உன்னதமான தியாகம் எல்லாம் பேசப்பட்டது.

அது அவரவர் விருப்பம், அடிப்படை உரிமை என்று பேசியவர்கள் குழந்தை வளர்ப்பு முறை, மேலை நாடுகளில் குழந்தைகளுக்கான உரிமைகள், சுதந்திரங்கள் போன்றவற்றை முன்வைத்தார்கள்.

எதிர்ப்பு, ஆதரிப்பு, இரண்டுமற்ற தனிப்பட்ட மனித உரிமை என்பது தாண்டி கருத்துக்களை மட்டும் பார்க்கும் போது முக்கியமாக தென்படும் விஷயம் பெற்றோர்களின் கடமை (பிள்ளைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது) பிள்ளைகளின் கடமை என்பது.

டமில் தந்தையோ, இந்தியத் தந்தையோ, கோணியைச் சுத்தி அடித்தாற்போல் பொத்தாம் பொதுவாக அயல்நாட்டுத் தந்தையோ எல்லாவற்றிலும் பொறுப்பற்ற தந்தைகள் (அது எந்த வகையிலானாலும்) இருக்கத்தான் செய்கிறார்கள். பொறுப்பான தந்தைகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

இன்று கலாச்சாரம், நம் பண்பாடு என்று சொல்லிக் கொண்டு நாம் பிள்ளை வளர்க்கும் முறை இருக்கும் லட்சணத்தைப் பார்த்தேயாக வேண்டும். வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற டகால்டி எஸ்கேபிஸம், வளர்ப்பு சரியில்லை என்ற ஒற்றை வரி விமரிசனத்தில் புறம்தள்ளும் மனோபாவம் எல்லாம் ஓரம் வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய விஷயம் இது.

இந்தியத் தந்தையிடம் (முக்கியமாக டமில் தந்தையிடம்) பெற்றோரின் கடமை என்ன என்று கேட்டுப் பாருங்கள். பையனை நல்லபடியா வளர்க்கணும். நல்லா படிக்க வைக்கணும். அவன் கால்ல அவன் நிக்கிறாமாதிரி செஞ்சுட்டா நம்ம வயசான காலத்துல குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்.

பெண்ணானால், அடக்க ஒடுக்கமாக வளர்க்கணும், படிக்க வைக்கணும், காலா காலத்துல ஒரு நல்ல இடத்துல புடிச்சி கொடுத்துட்டா ஒரு பாரம் குறையும். நாள பின்ன கண்ணக் கசக்காம நல்லா இருந்தா அதைவிட வேறென்ன வேண்டும். ஆக பிள்ளைகள் சுமையும் சுமைதாங்கியும்தானா?

முடிந்தது கடமை!!! இப்படியே நடந்துவிட்டால் குறை சொல்ல ஏதுமில்லைதான். ஆனால், வலிக்குமே என்று பயப்படாமல் சர்ஜரி மாதிரி கீறிப்பார்த்தால் தெரிவது அப்பட்டமான சுயநலம். இல்லை என மறுக்க முடியாது. சற்றே எதிர்பார்ப்பில் சறுக்கல் ஏற்படின் இந்தச் சுயநலம் வெளிப்படாமல் போகாது. அதற்கான அத்தாட்சி இன்று முளைத்திருக்கும் முதியோர் இல்லங்கள்.

நல்ல ஸ்கூலில் சேர்த்தேன். வருமானத்துக்கு மீறியதென்றாலும் ஓவர்டைம், சைட் பிசினஸ் என்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். அவனை இவனைப் பார்த்து காலில் கையில் விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தேன், அல்லது காசைக் கொட்டி தனியார் கல்லூரியில் காம்பஸ் இண்டர்வியூ இருக்குமென்றே அங்கு சேர்த்தேன். வேலை கிடைத்ததும் சாப்பாட்டுக்கு கொஞ்சம்னு குடுக்குறான். தங்கச்சி, அக்கா கலியாணத்துக்கு ஒரு பைசா கொடுக்கலை என்று குறைபாடுகள் தலை தூக்கும்போது வார்த்தைகள் தடிக்கும்.

உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் என்று சுயபுலம்பல் ஆரம்பிக்கும்போது, நீ வளர்த்தால் ஆச்சா. நான் பொறுப்பாக நடந்து கொண்டிராவிட்டால் இப்படி அலட்ட முடியுமா என்ற பதிலடி விழும். ஒரு கட்டத்தில் கொச்சையாக உன் இச்சைக்குப் பெற்றுப் போட்டுவிட்டு,  வளர்த்தேன் வளர்த்தேன் என்று அலட்டுகிறாயே. நாய் பூனை எல்லாம் கூட பெத்தா வளர்க்காமலா இருக்கு போய்யா ஜோலியப் பார்த்துகிட்டு வரைக்கும் போய், அப்பன்காரன் மடமடவென்று குளியல் அறையிலோ, சமையல் அறையிலோ ஒரு குடம் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நீ எனக்குப் பிள்ளையில்லை, நான் உனக்கு அப்பனில்லை என்பதில் கொண்டு விடுகிறது.

தன் விருப்பத்துக்கு படிக்கவைத்து, தன் விருப்பத்தை எதிர்காலமாகத் திணித்து, தன் விருப்பத்துக்கு திருமணம் செய்து, அதற்குப் பின்னும் ‘எம்மவன் என்னைக் கேக்காம ஒரு துரும்பு கூட எடுத்துப் போடமாட்டான்’ என்று பெருமை கொள்வது பெருமைப் படக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை.

'சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அடுத்தவனை மதிக்கத் தெரியும்’ என்ற வழக்கு எத்தனை ஆழமானது. பரம்பரை பரம்பரையாக சுயத்தை இழக்கப் பழக்கி அதையே பெருமை பேசுவதன் பலன் இன்று பரவலாக அறுவடையாகிறது. இல்லையேல் பெற்று வளர்த்தேன், இன்று வயதான காலத்தில் உதறிவிட்டான் என்று சுயமிழந்து புலம்பும் நிலை ஏன் வருகிறது?

இந்த அழகில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ற, அவர்களின் உள்வாங்கும் திறனுக்கேற்ற அவர்களின் விருப்பமான கல்வி, சுயநம்பிக்கை, அப்பன் காசு கடன் என்ற எண்ணம், சமூகத்துக்காக ஏதேனும் செய்கிறேன் என்ற ஆர்வம், கட்டுப் புத்தகம் தவிர கற்றுக் கொள்ள இப்பிரபஞ்சம் என்ற தெளிவு  என்று கற்றுக் கொடுத்து,  ஆரம்பம் முதலே கண்டிப்பான நண்பனாக நெறிப்படுத்தும் பாங்கு, உற்ற வயதில் உன் வாழ்க்கையின் ஆரம்பம் இது! உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி, இது என் கருத்து மட்டுமே! முடிவு உன்னுடையது என்று வழிகாட்டும் வெளிநாட்டுப் பெற்றோரை (வெளிநாட்டிலிருக்கும் இந்தியப் பெற்றோரையும் சேர்த்து) எள்ளிப் பேச எப்படி முடிகிறது? 
(தொடரும்?)

Monday, November 29, 2010

விடியா மூஞ்சி வேலைக்குப் போனா...

இன்று ஒரு பழைய சக ஊழியர், சீனியர் வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகளின் பின் அவரவர் குடும்பம் பற்றிய விசாரிப்பு தொடர்ந்தது. மிக நல்ல மனிதர். கடும் உழைப்பாளி. மகனுக்கு சரியான வேலையில்லை. பிஸினஸ் செய்கிறேன் என்று செட்டில்மெண்ட் பணத்தையும் சேர்த்துக் கரைத்ததுதான் மிச்சம்.

நேர்மையான நடுத்தரக் குடும்பக்காரன், அதுவும் ஒரு பெண்ணைப் பெற்றவன் அது பிறந்த நாளிலிருந்தே நகை, நட்டு, பாத்திரம் பண்டம் என்று எல்லாம் சேர்த்து வைத்து, கலியாணத்துக்கும் கொஞ்சம் காசு சேர்த்தாலும் கடன் இல்லாமல் முடியாது என்பது விதி அல்லவா. மகளுக்கு ஏதோ கம்பெனியில் நல்ல உத்தியோகம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தமும் முடிந்த மாப்பிள்ளை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், போனால் திரும்புகையில் சூட்கேஸில்தான் பணம் கொண்டு வரமுடியும் எனவும் போட்ட போட்டில் மனிதர் என்ன செய்வார்.

ரொக்கம் கொஞ்சம் குறைவதாக மறைமுக பேரத்தில் பட்ஜெட் எங்கேயோ பிய்த்துக் கொண்டு போனதாம். 2 வருடத்தில் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்காமல் இனி வெளிநாடு சரிப்படாது என்று வேலையை விட்டுவிட்டு, இங்கே இருந்த வேலையும் போய், இவரும் பிஸினஸ் என்று மாமனாரைச் சார்ந்தால் என்ன செய்வார்? இனி பிஸினஸுக்கு இருக்கும் வீட்டை விற்க முடியாது என்ற விழிப்பில் கை விரிக்க, எதோ வேலை என்று தாவித் தாவி போவதும் வருவதுமாக இரண்டு குடும்பங்களும் அவரைச் சார்ந்தேயிருப்பதாக வருத்தப்பட்டார்.

கஷ்டப்படுபவருக்கு இப்படி மேல்மேலும் கஷ்டம்தான் என்றாலும், அதெப்படியோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி சேர்த்து வைத்ததெல்லாம் செல்லாத காசு என்பது போல அமைந்துவிடுகிறது. அப்படி அமைந்த இரண்டு கேஸ்களை நினைவு கூர்ந்தேன். கொஞ்சமும் அசூயையின்றி ரசித்துச் சிரித்தவரைப் பார்க்க பாவமாய் இருந்தது.

முதலாமவருக்கு மைலாப்பூரில் சொந்தவீடு. அஃபீசில்  பேண்ட் ஷர்ட் பிட் தவணை வியாபாரமும் செய்துவந்தார். மூக்கு அபாரம். மதியம் லஞ்ச் நேரத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘என்னம்மா லக்ஷ்மி! எலுமிச்சம் சாதமா? உருளைக்கிழங்கும் சேர்த்து வாசனை தூக்குதே’ என்பார். ஆமாம் என்று சொல்லிவிட்டு சாப்பிடவா முடியும்? டிஃபன் பாக்ஸ் மூடியில் கொஞ்சம் ஷேர் வரும். கூட சாப்பிடுபவர்களும் தங்கள் பங்குக்கு படையல் வைப்பார்கள். இப்படியே பெரும்பாலான நாட்கள் ஓடிவிடும்.

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் புலம்பலும் ஆரம்பித்தது. வசதிக்குத்தக்க மாப்பிள்ளையும் வேணும், காசும் கரிசனமாயிருக்கணுமென்றால் முடியுமா? வரதட்சிணை, வைரத்தோடு கேட்ட சம்பந்தியம்மா இவர் திட்டியது கேட்டிருந்தால் தற்கொலை பண்ணிக் கொண்டிருப்பார். மாப்பிள்ளை எனக்கு கலியாணமே வேண்டாம் என்று சன்னியாசியாய் போயிருப்பான்?

வந்தார் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை. முன்னதாக ஃபோன் செய்து தான், தன் பெற்றோர், தன் தமக்கை மற்றும் அவள் கணவர் ஐந்து பேர்தான். இன்ஃபார்மல் மீட் என்று சொன்னதும், மனுசனுக்கு சினிமா கவனம் வந்துவிட்டது போல. மாப்பிள்ளை வந்தார். பெண்ணைப் பார்த்தார். பிடித்திருக்கிறது என்று பட்டென்று சொல்லிவிட்டு தான் 3 மாத விடுமுறையில் வந்திருப்பதாகவும், திருமணம் விரைவில் முடிய வேண்டும் வசதிப்படுமா என்றதும், மனதில் உட்கார்ந்திருந்த வண்டு குடைய ஆரம்பித்தது.

அம்மா, அப்பா, அக்கா என்று இழுத்ததும் என் விருப்பம் அவர்களுக்கு சம்மதம் என்று கத்தரி நறுக்கிற்று. வாய்தா வாங்க முடியாமல், சரி ஒரு நல்ல நாள் பார்த்து லௌகீகம் பேச வருகிறோம் என்றதும், மாப்பிள்ளை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சீர் மண்ணாங்கட்டி எதுவும் தேவையில்லை. உங்கள் மகளுக்கு என்ன நகை போடுவீர்களோ உங்கள் இஷ்டம். பாத்திரம் பண்டம் வாங்கி வைத்திருந்தால் யாராவது ஏழைப் பெண்ணுக்கு திருமணத்துக்கு கொடுத்துவிடுங்கள். எங்கள் உறவினர்கள் என்று ஐம்பது பேர் வரக்கூடும். நல்ல சத்திரமாக இருக்க வேண்டும் என்றதும், இது ஃப்ராடு கேசு என்ற பயமே வந்துவிட்டது.

மனதைப் படித்தவன் போல் மாப்பிள்ளை, என்ன சந்தேகமா இருக்கா? எனக்கு முதல் கலியாணம்தான். ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னா பண்ணிக்கலாம். ஐ வில் பே ஃபார் இட். மெடிக்கல் செக்கப்புக்கும் ரெடி என்று ஆப்பு வைத்தான். ஒரு பக்கம் பயமிருந்தாலும் விடவா முடியும்? துணிந்து ஒப்புக் கொண்டு கலியாணமும் முடித்து அனுப்பி ஆறு மாதத்தில் பாஸ்போர்ட் வாங்கணும்யா! மாப்பிள்ளை வந்தே ஆகணுமுன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான் என்று வாயெல்லாம் பல்லாக நின்றார்.

அடுத்த பார்ட்டி ரெம்ம்ம்ம்ம்ம்ப நல்ல மனுஷன். நல்லவர்தான். ஆனால் நல்லது என்பதை வாயால் சொன்னாலும் சந்தோஷப்பட்டு விடுவார்களே என்பதால் சொல்லமாட்டார். ப்ரொமோஷன் வந்தால் ஒரு ஐம்பது ரூபாய் கூட சம்பளம் வருமென்று காத்திருப்பவர் போய் கேட்பார். ‘அதெல்லாம் இப்ப வராதுய்யா! இன்னும் டைம் ஆகும்!’ என்று சொல்லுவார். கேட்டவர் நொந்து போய் சீட்டுக்குத் திரும்பினால் ப்ரோமோஷன் ஆர்டர் காத்திருக்கும்.

கேட்டபோதே இப்போதான் போட்டு அனுப்பியிருக்கிறேன் என்று சொல்லிச் சந்தோஷப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அவ்வளவு நல்ல மனிதர். இவருக்கும் ஒரு மகள். ச்ச்சும்மா வாக் இன் இண்டர்வ்யூவில் சிடி பேங்கில் உடனடியாக வேலை கிடைத்தது. அப்பாடா, இன்னும் வசதியாகப் பார்க்கலாம் என்று இருந்தபோது மேனேஜராக ப்ரொமோஷனும் கிடைத்தது. ஏதோ மீட்டிங்கில் பார்த்த இன்னோரு மேனேஜருக்குப் பிடித்துவிட பெண் கேட்டு வந்தார்கள். ஜாதகம் இத்தியாதி பொருந்திப் போக, ஆசைப் பட்ட பெண்ணாயிற்றே! அது இது என்று கேட்காமல் போட்டது போதும் என்று அதிக செலவில்லாமல் திருமணமாகிவிட்டது.

இருங்க இருங்க! இனிமேல்தான் க்ளைமாக்ஸே. ரிட்டையர் ஆகி 15 வருடம் கழித்து, தி. நகரில் ரெண்டரை க்ரவுண்டு நிலத்தில் பெரிய வீட்டை  மண்டையைப் போடுமுன் மகளுக்கு எழுதி வைக்கும் மாமியார் வாய்க்கும் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு  இருக்கும்? நம்மவருக்கு அதுவும் வாய்த்தது.

இதைச் சொன்னவர், அதே தி. நகரில் தன் சொந்த வீட்டை ஃப்ளாட் ப்ரமோட்டருக்கு விற்று, தனக்கும் தன் ஒரே மகனுக்கும் ஆளுக்கு ஒரு ஃப்ளாட்டும் கணிசமான தொகையும் பெற்றவர். சர்வீஸ்ல ஒருத்தனுக்கு நல்லது பண்ணவனில்லை அவன். அவனுக்கு அடிச்ச அதிர்ஷடத்தப் பார்த்தியா? ரிட்டையராகி 15 வருஷம் கழிச்சு  அடிச்சான் பாரு ப்ரைஸ். கிட்டத்தட்ட 2 கோடி பெறும் அந்த வீடு! ஹூம்! நாமளும்தான் பொறந்திருக்கோம் என்று அவர் என்னிடம் சலித்துக் கொண்டபோது நான் 900ரூ வாடகையில் வாயைத் திறந்து படுத்தால் காரை விழுந்து நிரப்பும் ஒரு வீட்டில் குடியிருந்தேன்.
~~~~~~~~

Saturday, November 27, 2010

நறுக்னு நாலு வார்த்த V5.4

தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு:ராஜபக்சே உறுதி
யாரு எச்ச? கருணாவும் பிள்ளையானும் டகுள்ஸுமா?
~~~~~~~~~~~~~~~~~~
அதிகார பகிர்வு திட்டம் பரிசீலனையில் உள்ளது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்
அண்ணன், தம்பி, பிள்ளைங்களுக்குள்ளயா?
~~~~~~~~~~~~~~~~~~
ராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம்
அதுவே பிச்சை எடுத்த பெருமாளு. இதுல இவரு ஒதவி வேற..
~~~~~~~~~~~~~~~~~~
மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா
மிச்சமெல்லாம் தோட்டம் தொறவுன்னு மாளிகை கட்டி போய்ட்டாங்களா கிச்சு?
~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்
அடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்
குடிக்கறது கஞ்சி தண்ணி..கொப்புளிக்கறது பன்னீராம்..இங்க ரயில் உடுங்கடான்னா துட்டுல்லன்றான். எவனுக்கோ தானம்.
~~~~~~~~~~~~~~~~~~
தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஏன் குடியேறக்கூடாது? கேள்வி எழுப்புகிறார் ராஜபக்சே!
சிங்களவன் என்ன? சைனாக்காரன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா யார் வேணுமானாலும் குடியேறலாமே. உனக்கு துட்டு வந்தா சரி.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை தமிழர் புனரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறதா? கனிமொழி
யக்கா! யக்கோஓஓவ். பதினஞ்சு நாள்ள திரும்பி வருவேன். கம்பிக்குள்ள இருக்குறவங்கல்லாம் கட்டடத்துக்குள்ள இருக்கணும்னு சவுண்ட் உட்டியேக்கா? கேக்குது பாரு கேள்வி. இந்தியாக்கு திருப்தியாவாம். சொக்கு சோக்கா ஆமாம்னா நைனாவின் சாதனைன்னு பீத்திக்கலாம். த்த்த்த்த்தூஊஊஉ
~~~~~~~~~~~~~~~~~~
பாராளுமன்றம் முடக்கம்:79 கோடி இழப்பு
ஆயிரம் கோடில ஊழல் பண்றவனுங்களுக்கு இது சரக்குக்கு ஊறுகா மாதிரி.
~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்? காங். கேள்வி
தினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~
பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்
மம்மி கிட்ட சொன்னா இலங்கை மாதிரி இனிமே ஜனாதிபதிதான் பிரதமரு. பிரதமர்தான் ஜனாதிபதின்னு சொல்லிட்டு போறாய்ங்க..மம்மீஈஈஈஈ
~~~~~~~~~~~~~~~~~~
தேவேகவுடா குடும்பத்தின் ஊழல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வேன்: எடியூரப்பா
அவரு பதிலுக்கு உங்க கதைய எடுத்து உடுவாரு. இதெல்லாம் பார்த்தா ஓட்டு போடுறோம்.
~~~~~~~~~~~~~~~~~~
அரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது:ஜெ.
கூட்டி கழிச்சி பார்த்ததில ஓட்டுக்கு எவ்ளோங்க?
~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றுமை இருந்தால் வீழ்த்த முடியாது: கலைஞர்
கொள்ளையடிக்கப் போனா கூட்டு ஆவாதுன்னு சொல்லுவாங்களே தல.
~~~~~~~~~~~~~~~~~~
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி திமுக ஆட்சியில் பொருத்தமாக இருக்கிறது: ஜெ.
யம்மோவ். பையனூரும் உங்க பையன் கலியாணமும் கூடத்தான் பொருத்தமா இருந்திச்சின்னு நாளைக்கு அந்த மனுசன் சொல்லுவாரு.
~~~~~~~~~~~~~~~~~~
ஏழைகளுக்கு கல்வி செல்வம் அளிக்கும் கனவு நிறைவேறியுள்ளது: கலைஞர் பெருமிதம்
ஏழைகளுக்கு செல்வம் கனவுதாம்யா. 
~~~~~~~~~~~~~~~~~~
ஆண்கள், பெண்கள் கபடியில் இந்தியாவுக்கு தங்கம் ..
ஒருத்தர் கால ஒருத்தர் வார்ற விளையாட்டுல இது கூட வாங்கலைன்னா நாம ஆணியே புடுங்க வேணாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, November 26, 2010

கேரக்டர் சிட்நாநா...

சில நேரம் ஒரு மனிதரை ஒரு பருவத்தில் கண்டிருப்போம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரைச் சந்திக்கும்போது அந்தப் பருவத்துக்கான புரிதலில் ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அதிலும் மிக அபூர்வமாக ஒரு சிலர் நம் மனதில் இருக்கும் உருவத்தை விசுவரூபமாக்கி மெய் சிலிர்க்கச் செய்வார்கள். அந்த அனுபவம் அலாதியானது. ‘சிட்நாநா’(சிட்டி நாயனா என்கிற சித்தப்பா) அத்தகையதோர் அற்புத மனிதர்.

முதன் முறை அவரைச் சந்தித்தபோது எனக்கு 11 வயது. மனிதர்களைப் பிடிக்கும் பிடிக்காது என்பதற்குப் பெரிய காரணங்கள் ஏதும் இருந்துவிட முடியாது. பழகும் விதம், குழந்தைகளோடான அந்நியோன்னியம், பரிசுகள் போன்றவையே அவற்றைத் தீர்மானிக்கும். அதையும் தாண்டிய ஏதோ ஒன்றை உணர்வது வெகு சிலருக்கு வாய்க்கும். அது என்னவென்று புரியாமல் இருக்கலாம். ஆனால் அதனாலெல்லாம் அந்தத் தாக்கம் குறைந்துவிடப் போவதில்லை. அவர்களின் ஒரு குணம், ஏதோ ஒரு சிறப்பு நம்மையறியாமல் நம்மை வழிநடத்தும் விதையாக அமர்ந்துவிடும்.

நான் 11 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் 19 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் புற மாற்றங்கள் இருந்தனவே தவிர பெரியதாக அவரிடம் ஒன்றும் மாற்றமில்லை. ஆனால் என் வயதின் முதிர்ச்சி, அனுபவம், மனிதர்களைப் படித்த சற்றே விரிந்த மன விசாலம்,அந்த மனிதரில் புதிய கோணங்களைக் காட்டத் தவறவில்லை. மீண்டும் என்னைச் செதுக்கிக் கொள்ள ஒரு பெரிய நிகழ்வு அது.

எங்கள் வீட்டு மாடியில் புதியதாய் விசாலமான ஒரு அறையும், ஒரு ஓரம் கழிப்பறை/குளியலறையும் கட்ட ஆரம்பித்தபோதுதான் என் தோழன் ‘பெத்த நானாவின்’ மகன் முரளி சொன்னான், இது ‘சிட்நாநா’வுக்கென்று. பரபரவென வேலை முடிந்து மேலே தளத்துக்குப் பதில் அஸ்பெஸ்டாஸ் போடப்பட்டதும் அந்த வயதுக்கேயான புரிதலில் சிட்நாநா மற்றவர்களை விட கொஞ்சம் வசதி குறைந்தவர், அல்லது ஏழை என்ற ஓர் எண்ணம்.

சிட்நானாவும், தீபாவளியும் ஒன்றாய் வரும் நாள் நெருங்கியது. பெத்தநாநாவின் பிள்ளைகள், ஹரி, முரளி, சுந்தருடன் இன்னொரு சிட்நாநாவின் மகன்களுக்கு சிட்நாநாவின் வருகை தீபாவளியை விட அதிக எதிர்பார்ப்பைத் தந்தது. இவர்கள் ஒவ்வொருவர் மூலமும் கிடைத்த தகவலின் படி சிட்நாநா பம்பாயிலிருந்து வருகிறார், பெரிய பணக்காரர், நல்ல செல்வாக்குள்ளவர், குடும்பம் இல்லை, அவருடை வீடுதான் நாங்கள் குடியிருக்கும் தொகுப்பு, சென்னையில் அவருக்கு 15க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் ஓடிக் கொண்டிருப்பது, எல்லாம் விட வரும்போதெல்லாம் சொந்தம் மட்டுமின்றி மற்ற குழந்தைகளுக்கும் பரிசோ, அவை தீர்ந்து விட்ட தருணத்தில் காசோ, எல்லாம் விட மாலைகளில் அவர்களுடன் விளையாட்டுப் பேச்சோ கதைகளோ கதைப்பது போன்ற அரிதான குணம் கொண்டவர் என்பது அவருக்காகக் காத்திருப்பவர்களை விட, இப்படி ஒரு மனிதர் எப்படியிருப்பார் என்ற எதிர்பார்ப்பை என்னிடம் உருவாக்கியது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன் ஒரு அதிகாலைப் பரபரப்பில் காலை மெயிலில் சிட்நாநா வந்துவிட்டதை அறிய முடிந்தது. அவருக்காக ஃப்ளாஸ்கில் காஃபி கொண்டு சென்ற சுந்தர், ‘சிட்நாநா’ வந்துட்டாங்கடா என்று ஓடியபோது நானும் ஓடினேன். பெத்த நாநாவைப் போன்று அலை அலையான முடி, கோதுமை நிறம், ஒரு வேளை பணக்காரர் என்பதால் குண்டாக இருக்கலாம், பம்பாய் என்பதால் பைஜாமா ஜிப்பா இப்படியாக இருந்தது நான் வரைந்திருந்த மன ஓவியம்.

உள்ளே அமர்ந்திருந்த மனிதரைக் கண்டதும் பெரிய அதிர்ச்சி. ஒரு பயம். திகைப்பு. ‘பரிகெத்தொத்துரா நான்னா. படுதாவு. எவரிதி?’ (ஓடி வராதே, விழுவாய், யார் இது) என்ற கேள்வியைத் தொடர்ந்த ஒரு சிரிப்பு இன்றும் என் மனதில் பசுமையாய் நினைவிருக்கிறது. என்னையறியாமல் கை கூப்பி வணங்கியது அவரை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். ‘நீ பேரேமிடிக்கு’ நாக்கு புரள மறுத்தது. சுந்தர்தான் பேரைச் சொன்னான்.

ஆஜானுபாகுவான உடலும் உயரமும். தும்பைப்பூ வேட்டியில் வெள்ளை முழுக்கைச் சட்டையுடன் அமர்ந்திருந்தார் மனிதர். கருத்துச் சிவந்து மினுமினுத்த பெரிய காது. தடித்த இமைகளும், உதடும். மடிப்பு மடிப்பாய் செதில் செதிலான முகம். மூக்கு உள்ளடங்கி துளை மட்டும் வித்தியாசமாக இருந்தது. உதவியாளன் ஆற்றிக் கொடுத்த காஃபியை இரண்டு கரங்களால் பற்றிய போது கரிக்கட்டைகளாய் விறைத்து நுனி சற்றே வளர்ந்த விரல்கள். அத்தனையும் அந்த வயதில் ஒரு பயம் தந்திருக்க வேண்டும். மாறாக வாத்ஸ்ல்யமான குரலும், அந்த தடித்த உதடுகளில் தவழ்ந்த புன்னகையும், நெற்றியில் ஸ்ரீசூர்ண ஒற்றையும், அதையும் மீறிக் கண்ணில் இருந்த ஏதோ ஒன்றும் கட்டிப் போட்டது.

பிள்ளைகளுக்காக மாலையில் வந்திறங்கிய பட்டாசும், இனிப்புப் பாக்கட்டுகளும், தீபாவளி இனாமும்( ஹி ஹி வாழ்க்கையில் முதன் முதலில் எனக்கெ எனக்காக ஒரு பத்துரூபாய்த் தாள்) விட ‘இப்புடு வீடு’ (இப்போது இவன்) என்று ஒன்றொன்றாக ஒரு பிள்ளைகளையையும் விடாமல் முறைவைத்து குழந்தைகளோடு குழந்தையாய் வேட்டு விட்டதும், ரசித்ததும் மறக்கவே மறக்காது. பட்டாசு வெடிப்பதை விட நான் அவரை உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

தீபாவளியன்று அதிகாலையில் தன் உதவியாளருடன் ஒவ்வொரு குடித்தனமாக வந்து வெளியே நின்றபடியே உதவியாளர் மூலம் இனிப்பைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துச் சொல்லி விறைத்த கைககளைக் கூப்பியபோது நெகிழ்ந்து போகாதவர் யார்? ஒரு சிலர் உள்ளே அழைத்தபோதும், அந்த அழகிய சிரிப்புடன் மறுத்து அடுத்த வீட்டுக்கு நகர்ந்தபோது அவர் பின்னால் ஒரு வாண்டுப் படையே போனது. பட்டாசாவது மண்ணாவது.

மதிய உணவுக்கு பெத்தம்மா கேரியரில் கொண்டு வந்து, ‘வத்து வதினாவை’ (வேண்டாம் அண்ணி) புறந்தள்ளிப் பரிமாரியபோதும், சாப்பிட வாகாக உள்ளங்கையில் உருட்டி வைத்தபோதும், பெத்தம்மாவின் முகம் எப்போதையும் விட கொள்ளையழகு. அதைவிட அழகு, போதுமென வாய் சொல்ல நீண்ட கையுடன் சிட்நானாவின் கண்கள். அதன் பிறகு நாங்கள் வீடு மாறிப் போனதும் பிறகு எனக்கு வேலை கிடைத்தபின் அதே வீட்டில் குடி வந்ததும் ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.

ஹரி மெர்ச்சண்ட் நேவியில், முரளி படிப்பை நிறுத்தி ஏதோ கடையில், சுந்தர் கல்லூரியில். எங்கள் நட்போ ஹாய், ஹலோவில். இந்த முறை சிட்நாநா வருவதை பெத்தநாநாதான் சொன்னார். கேட்டதும் மனதில் எப்படி இருக்கிறாரோ என்ற ஒரு வருத்தம் தோன்றியது. டாக்ஸியில் வந்து இறங்கிய சிட்நாநாவுக்குப் பின்னே ஒரு யுவதியும், ஒரு குழந்தையும். இன்னொரு டாக்ஸியில் உதவியாளர்கள் வந்திறங்கினர். ரொம்பவே மாறியிருந்தார் சிட்நாநா. புருவம் அறவே இல்லை. இமைகளோ ஒரு கோடாய். மூக்கிருந்த இடத்தில் இரு துவாரங்கள். கூப்பிய கைகளில் ஓரிரண்டு விரல்கள் மட்டும். ஆனால், அந்தச் சிரிப்பும், கண்ணும் மாறவேயில்லை.

‘அரேரே! பாலாஜிகாதுரா நுவ்வு? பாகுன்னாவா?’ என்ற விசாரிப்பில் அதிர்ந்துபோனேன். வெறும் இரண்டு நாள், அதுவும் எட்டு வருடங்களுக்கு முன் கூட்டத்தில் ஒரு சிறுவனை கவனம் வைத்துக் கொள்வது பெரியது. அதிலும் இன்னார் என அடையாளம் காணமுடிவது பெரிய ஆச்சரியம். அன்றைக்கு பெத்த நாநாவின் மகள் கஸ்தூரி அக்காவின் மூலம் சின்நாநாவின் முழுப் பரிமாணமும் புலப்பட்டது.

சிறு வயதில் வீட்டில் காசு திருடியதற்காக தாத்தையா அடித்த அடியில் மும்பைக்கு ஓடியவர். ஓடியவருக்குப் புகலிடம் வேறென்ன? எப்படியோ வாலிபத்திலேயே தமிழர் வாழும் ஒரு பகுதிக்கு தாதா. கடவுள். பல பிள்ளைகளுக்கு கல்வி, திருமணங்கள், மருத்துவ உதவி. மதம் மொழி வேறுபாடின்றி தந்த ‘நாராயண் பாயி’ கடவுள். செல்வாக்கான மனிதர். அவர் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் ‘கண்பதி’ ஊர்வலமோ, சந்தனக் கூடோ, குருத்தோலை ஊர்வலமோ சிட்நாநாதான் ஸ்பான்ஸர்.

சிட்நானாவுடன் வந்திருப்பவர் அவருடைய உதவியாளர் ஒருவரின் காதலி. மதம் வேண்டாமே. இந்த நாய் அவளுக்குக் குழந்தையை கொடுத்துவிட்டுத் தலை மறைவானது. வீட்டை விட்டும் விரட்டப் பட்டிருக்கிறாள். இதெல்லாம் அறியாமலே ஓடியவனைத் தேடும் மும்முரத்தில் இருந்தவருக்கு அவன் வேறொரு குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏதோ கேஸில் சிக்கி ஜெயிலுக்கும் போய்விட்ட நிலையில் இவளைப் பற்றியத் தகவல் தெரிந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாம். ஒரு சேரியில் ஒரு தடுப்பில், கூலி வேலை, வீட்டு வேலை செய்து பிழைப்பதை அறிந்திருக்கிறார்.

பணக்காரர். தாதா. அவளை ஏமாற்றியவனும் இவருடனில்லை. யாருக்கான வாழ்வையோ யார் மூலமோ அமைக்கிறதே விதியோ, தெய்வமோ ஏதோ ஒன்று. பெற்றவர்கள் விரட்டியவளுக்கு தந்தையானார். பிறந்த பெண் குழந்தையை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். மனிதம் மொத்தமாகப் போய் விடவில்லையே. இவளுக்கு வாழ்வாதாரம் தர சிட்நாநா என்றால், அங்கம் சுருங்கி, அவயங்கள் இற்று விழ முடங்கிப் போன சிட்நாநாவுக்கு இவள் தாயானாள்.

சொந்த அண்ணன் வீட்டில் கூட நுழையாமல், தனித் தட்டு, டிஃபன் கேரியர் சாப்பாடு, அஸ்பெஸ்டாஸ் கூரையில் தங்கல் என்றிருந்தவரை யாரோ ஒரு பெண் தொட்டுத் துடைக்க, உணவூட்ட அனுமதித்திருப்பாரா என்ன? போராடி வென்றிருக்கிறாள் அவரை. ஒரு மாலை வேளையில், அவளையும் அவள் பிள்ளையையும் ‘நா கூதுரம்மா. நா மனவராலு’ (என் பெண்ணம்மா. இது என் பெயர்த்தி) என்று பெருமையோடு அறிமுகம் செய்தது அற்புதம். அந்தப் பெண்ணின் முகத்தில் ‘என் அப்பா’ என்ற பெருமை.

அடுத்த வருடம் சிட்நாநா இறந்து போனார். எப்போதும் சிரித்திருக்கும் பெத்தநாநா கண்கலங்கியது அந்த ஒரு முறைதான். அந்தக் குழந்தை டாக்டராக இருப்பதாக சில வருடங்களுக்கு முன் தன் மகனின் திருமணத்துக்கு அழைக்க வந்த கஸ்தூரி அக்கா சொன்னார். 
 ~~~~~~~~~~~~~

Wednesday, November 24, 2010

பாரம்பரியக் கோவணம்...

இழுத்துக் கட்டிய கம்பியில்
வந்து விழுந்தது துவைத்த அரையாடை
சற்றே முகம் சுளித்து யார் நீ என்றது
பக்கத்திலிருந்த பழந்துணி..

நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிர்வாணம் தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது..

‘கட்டவே’ முடியாத நீயெல்லாம்  காவலனா சீச்சீ

பாட்டனின் பட்டாயிருந்து
பாதி பாதியாய்க் கிழிபட்டுப்பட்டு
இற்றுப் போயிடினும் இனி தைக்க
இடமின்றிப் போயிடினும்

ஒட்டுப் போட்டாலும்
ஓட்டையே விழுந்தாலும்
‘கறை’யே இருந்தாலும்
‘கரை’ உண்டென்ற

கோபுரம் உண்டெனக்கு
கோவணம் எனது பெயர்.
பகட்டுக்கு என்னருகில் இடமில்லை
பறந்துவிடு என்றது..

சுழன்றடித்த காற்றில்
நழுவியது அரையாடை
படபடத்த பட்டுக் கோவணம்
பாதி பிரிந்த கம்பியில் சிக்கிக் கிழிந்தது..

சேதாரமில்லையெனக்கென  சிரித்தது அரையாடை

பாதியாய்க் கிழிந்தாலும் வரும்
பரம்பரைக்கும் காவலன் நான்
படபடத்துச் சிரித்தது
பாரம்பரியக் கோவணம்..

~~~~~~~~~~~~~~~

Saturday, November 20, 2010

நாடாமை..தீர்ப்ப மாத்திச் சொல்லு...

நாத்து 8:சட்டம் ஒரு இருட்டறை என்பது பெரும்பாலும் அனைவரும் கூறும் ஒன்று. காரணம், நீதி சாட்சிகளையும், சந்தர்ப்பங்களையும் மட்டும் கணக்கில் கொண்டு தன் கடமையைச் செய்யும். உணர்ச்சிகளுக்கு அங்கே வேலையில்லை. சில நேரம் நிஜம் ஒரு பக்கம் சாட்சியின்றி பூதாகாரமாய்த் தெரியும். சாட்சியுடன் இன்னொரு நிஜமும் சட்டத்தின்படி பொய்யாய் வெருட்டும். இரண்டு நிஜத்தில் எதைத் தள்ள முடியும்? அங்கேதான் நீதிபதியின் திறமையும் மனிதமும் வெளிப்படும் தருணம். அத்தகையதோர் நிகழ்வு இது.

திருவாளர் ’எக்ஸ்’ ஒரு மெயில் டிரைவர். சென்னையில் பணிபுரிகிறார். மனைவியின் பெயர் ’ஒய்’. இந்து சாஸ்திரீய முறைப்படி நடைபெற்ற திருமணம். ஆதாரமாக மனைவி திருமதி ‘ஒய்’ என்று திரு. ‘எக்ஸ்’ அலுவலகத்தில் கொடுத்த தகவல்கள் இருக்கிறது. திருமணம் ரிஜிஸ்தர் செய்யப்படவில்லை. இவர்களுக்கு குழந்தையில்லை.

பணி நிமித்தம் ஒரு ரயிலை ஓட்டிச் சென்று பாலக்காடில் ரிலீவ் ஆகி ஓய்வுக்குப் பின் சென்னை திரும்புவது வழக்கம். யாராவது ‘ஒய்’ என்ற பெயரில் கிடைப்பார்களா? அவரும் தன்னை விரும்புவாரா என்று விளம்பரம் கொடுத்தா தேடிப்பிடிக்க முடியும். விதி என்று சொல்லலாமா? அப்படி ஒருவர் கிடைத்தார். பரம ஏழை. சிறுவயது. பெயரும் ‘ஒய்’. அய்யா பணி முடிந்ததும் அவர்கள் வீட்டில் தங்குவார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து ரிஜிஸ்தரும் செய்துவிட்டார். திருமணத்துக்குப் பின் இரண்டு குழந்தைகள்.

ஒரு நாள் கடமை முடிந்து பாலக்காட்டில் இருக்கையில் மாரடைப்பில் இறந்துவிட்டார். அந்த மனைவி உடலைப் பெற்று அலுவலகம் தந்த இறுதிக் கிரியைக்கான அட்வான்சும் பெற்று தகனம் செய்துவிட்டார். சென்னையில் இருக்கும் மனைவி, பணிக்குப் போன கணவன் ஒரு வாரமாகியும் திரும்பாததால் அலுவலகத்தில் விசாரிக்க, அவர் மரணித்ததும் அவர் மனைவி உடலைப் பெற்று ஈமக் கிரியை செய்ததும் தெரியவந்தது.

பதறிப்போய் தான்தான் மனைவியென்றும், இன்னொரு பெண்மணி எப்படி மனைவியாக இருக்க முடியுமென்றும் மனுச்செய்ய விசாரணையில்தான் இருவரும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அலுவலகம் என்ன செய்யும்? சட்டத்தைக் காட்டி சக்ஸஷன் சர்ட்டிஃபிகேட் கோர்ட் மூலம் பெற்று வரப் பணித்தனர். முதல் மனைவி வசதியானவர். ஆனால் திருமணம் பதியப்படவில்லை. சாட்சியாக பத்திரிகை கூட இல்லை. இரண்டாம் மனைவி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் சட்டப்படியான விவாகப் பதிவு இருக்கிறது. சிறு குழந்தைகள். நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல் மனைவியின் திருமணத் தேதியை உறுதி செய்திருக்கக் கூடும். அதன் மூலம் இரண்டாவது திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடும்.

தெய்வம் போன்று செயல்பட்டார் நீதிபதி. அதைவிட முதல் மனைவியின் புரிதல் அபாரமானது. பரஸ்பர புரிதலில், பி.எஃப், கிராச்சுவிட்டித் தொகை முதல் மனைவிக்கும், கருணை அடிபடையிலான வேலையும் பென்ஷனும் இரண்டாம் மனைவிக்கும் என்ற ஒப்புதலின் பேரில் முதல்மனைவி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். குழந்தைகளுக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கும் நீதி கிடைத்தது.

நாத்து 9
: கோர்ட்டையே ஏமாற்றும் அளவுக்கு படிப்பறிவற்ற பெண்ணால் முடிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியம். ஓர் அதிகாரி அவர். மனைவியும் குழந்தைகளும் உண்டு. வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியுடன் தொடர்பிருந்ததைக் கண்டித்துப் பார்த்தும் கேட்காததால், குழந்தைகளின் நலன் கருதி மனைவி தனியாகப் போய்விட்டார். 

அதே வீட்டில் வேலைக்காரியுடன் அதிகாரி வாழ்ந்து ரிட்டயரும் ஆகிவிட்டார். பணிக்காலத்திலேயே மனப்பிறழ்வுக்காக மருத்துவ உதவி பெற்றிருப்பது தெரியும். கடைசிக் காலத்தில் கடனுக்கு பயந்து ஒரு நண்பரின் ரேடியோ ரிப்பேர் கடையில் தங்கியிருந்ததும், அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வாழ்ந்ததும், இந்தம்மணி பென்ஷனை ஆட்டையைப் போட்டுக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவரின் மறைவுக்குப் பிறகு செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷனுக்கான விண்ணப்பத்தில் மனைவி என்று வேலைக்காரம்மாள் விண்ணப்பிக்கிறார். பணியில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தகவலைக் கொடுத்திருந்தார் அவர். அதில் இவரின் பெயரைக் குறித்து வேலைக்காரி என்றே குறிப்பிட்டிருந்தார். 

தகவலைக் குறிப்பிட்டு, மனைவி இன்னார், தங்கள் பெயர் வேலைக்காரியாக பதிவாகி இருக்கிறது திருமணத்துக்கு அத்தாட்சி ஏதும் இருக்கிறதா எனக்கேட்டு எழுதியவுடன் எப்படியோ முதல் மனைவிக்கு டைவர்ஸ் ஆன தீர்ப்பு நகல், அவர்களின் குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது என்பதுடன் தான் குருவாயூர்க் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அலுவலகத்துக்கு அது குறித்த தகவல்கள் இல்லை. பிள்ளைகளுக்கு பென்ஷன் பெறும் தகுதியிருப்பதால் இவருக்குப் பென்ஷன் வழங்க முடியாது என்ற பதிலுக்குப் பின்னான அவரின் நடவடிக்கை பேரதிர்ச்சியானது. கோவிலில் திருமணம் நடந்த தகவல்களைக் கொடுத்து எந்த கோர்ட் டைவர்ஸ் கொடுத்ததோ அதே கோர்ட்டில் சட்ட பூர்வ மனைவியாக பாவித்து பென்ஷன் தரப்பட வேண்டும் என்ற ஆர்டரையும் பெற்று அனுப்பினார். 

அப்பீலில் டைவர்ஸ் குறித்தான தகவலைச் சொல்லாமல் விட்டிருந்தது தெரியவந்தது. அதைவிட திருமணம் நடந்த தேதி டைவர்சுக்கு முற்பட்டதானதால் சட்டப்படி செல்லாது. கொடுமை என்னவென்றால் இரண்டு தீர்ப்புக்கும் இடையில் மிகக் குறைந்த கால இடைவெளி. இரண்டுக்கும் ஒரே நீதிபதி.

முரண்களைச் சுட்டிக்காட்டி, கோர்ட்டுக்கும் அம்மணிக்கும் கடிதம் எழுதப்பட்டது. அப்புறம் தகவலேதுமில்லை.  

இவை அனைத்தும் பல்வேறு கால கட்டங்களில்  பல்வேறு கலாச்சாரச் சூழல்களில் நடந்த திருமணங்கள். ஆனாலும் பொதுவான ஒன்று திருமணம் அது பதிவுடனோ இல்லாமலோ  ஒரு பாதுகாப்பு இல்லை . எல்லா அலுவலக நாட்களிலும் திருமணப் பதிவு அலுவலகத்தில்  காசுக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுவதையே பிழைப்பாய் நம்பியிருக்கிறது ஒரு கும்பல். பெண்ணுக்கு சித்தப்பன், பெரியப்பன், மாமன் என்று மாற்றி மாற்றிக் கையெழுத்துப் போடுபவன்  வேறொரு பையனுக்கும் அதே போல் சாட்சி போட்டால் போதும் என்ற அமைப்பு இருக்கிறது.

அது  பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணமோ, காதல் திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ எதுவாயினும் சம்பந்தப் பட்ட இருவரை வைத்தே அவர்களின் நல் வாழ்வு அமைகிறது. திருமணம் பெரிய பாதுகாப்பு ஒன்றும் கொடுத்துவிடவில்லை. ஏமாற்றுபவன் சட்டத்தையும் ஏமாற்ற முடிகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பெரும்பான்மையானோருக்கு இதில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடிகிறது. பலருக்கு இயலாமையால் சகித்துக் கொண்டு காலம் தள்ள அமைகிறது. மிகச் சிலருக்கு திருமண முறிவு தேட அவசியமிருக்கிறது. அதற்குப் பின்னான புரிதலோ மற்றொரு திருமணமோ வெகு சிலருக்கே அமைகிறது.

இருபது வருடங்களுக்கு முன் குசு குசுவென்று இன்னாரின் மகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள் என்று ஏளனமாகப் பேசப்பட்டது இன்று எந்தத் திருமணமானாலும் பதியப் படவேண்டும் என்றதும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எப்படி வந்தது? சட்டத்திற்கு முன் என்ன கேவலமிருந்தது சட்டமயமானதும் தொலைந்து போக? 

மூன்று தலைமுறைக்கு முன்னால் உறவுகள் முன்னிலையில் தாம்பூலம் மாற்றி உரக்கச் சொன்னால் நிச்சயமான ஒரு திருமணம், இன்று காகிதத்தில் எழுதி பெற்றோர் மற்றும் சாட்சிகளின் கையெழுத்தோடுதானே உறுதியாகிறது? இதில் நமக்கு உறுத்தல் இருக்கிறதா?

ஆக ஒரு சட்டம் வந்து எந்த ஒன்றையும் அங்கீகரிக்கும் வரை நமக்கு ஏற்பு இல்லை. ஏற்பு என்று கூட சொல்ல முடியாது. சட்டத்தின் பாதுகாப்பிருக்கிறது. அவர்களைச் சீண்டினால் சட்டம் நம் மீது பாயும் என்ற பயத்துக்கு மட்டுமே அடங்கியிருப்போம்.  

~~~~~~~