Showing posts with label சமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ். Show all posts
Showing posts with label சமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ். Show all posts

Thursday, September 9, 2010

கம்ப்யூட்டர் அல்லது சொ.கா.சூ...

(டிஸ்கி: கணினியா, கனிணியா, கணிணியா என்ற பல குழப்பங்கள் இருப்பதால் வாசகரின் வசதிக்காக கம்ப்யூட்டர் என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்)

கம்ப்யூட்டருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு 1975ம் ஆண்டு எதிர்பாராமல் நடை பெற்றது. அதுவும் இந்தியாவிலேயே முதல் முதல் பயன்பாட்டுக்கு வந்த IBM மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டர், என்பதெல்லாம் அடுத்தடுத்தான எமது சந்திப்புகளின் போது சேகரித்த தகவல். என் அலுவலகத்தில் ராபர்ட் கிளைவ் காலத்து சுவர்க்கடிகாரம் சாவி கொடுக்கப்படாததால், நின்று விட்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் அது. அனெக்ஸ் பில்டிங் பக்கத்தால போனா ஒரு சந்து வரும். அது பக்கத்துல கடிகார மெகானிக் இருப்பார். போய் கம்ப்ளெயிண்ட் கொடு என்பது எனக்கிடப்பட்ட பணி.

கம்ப்யூட்டருக்கும் எனக்கும் விதி போட்டிருந்த முடிச்சு அப்போது இறுகி, முதல் சந்தில் நுழைந்தால் ஒரு கதவு இருந்தது. தள்ளித் திறந்தவுடன் நடுக்கும் குளிரில், ஒரு இயந்திரத்தில் ஒருவர் கட்டுக் கட்டாய் அட்டைகளை வைக்க, அது மாவுமில் சப்தத்துடன் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தது. அடுத்து ஒரு கண்ணாடி அறையில் கதவில்லாத பீரோ மாதிரி சில, கண்ணாடிப் பெட்டியில் பெரிய நாடாக்கள் விர்ர்ர்ர்ரென சுழல்வதும், நிற்பதுமாய் கனவுலகாய் இழுத்தது. உள்ளிருந்த ஒருவர் செருப்பை அவிழ்த்துவிட்டு வர சைகை காட்ட, தூக்கத்தில் நடப்பவன்போல், கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். 

என்ன வேண்டும் என்றவரிடம், குளிரில் பற்கள் தந்தியடிக்க, கடிகாரம் ஓடவில்லை சாவி கொடுக்க வேண்டும் என்று சொன்னதும்  அவர் திகைத்துப் போய் நிற்பதும், விர்ரென பறந்து கொண்டிருந்த நாடா சக்கென நிற்பதும் ஒரு சேர நடந்தது. செவ்வாய்கிரகத்து ஜீவராசியா, கீழ்ப்பாக்கத்து கேசா என்ற குழப்பத்துடனே நிதானமாகப் பார்த்து, சரியான வழிகாட்டிவிட்டு தன் வேலைக்கு திரும்பவும், கம்ப்யூட்டர் நாடா மீண்டும் சுழலவும் மீண்டும் ஒரு சேர நடந்தது. 

முதல் மாத சம்பளத்தில் பிராவிடண்ட் ஃபண்ட் நூறு ரூபாய் பிடித்துக் கொள்ள எழுதிக் கொடுத்து விட்டு காத்திருக்க சம்பளப் பட்டியலில் அது ஒரு ரூபாய் பிடித்திருந்தது. கணக்கரிடம் கேட்டபோது  ‘அது கம்ப்யூட்டர் மிஸ்டேக்’ அடுத்த மாதம் சரி செய்து விடலாம் என்றார். நூறை ஒன்றாக்குவதற்கு எதற்கு கம்ப்யூட்டர் என்ற குழப்பத்துடனே விசாரித்ததில், கணக்கர் பைசாவையும் சேர்த்து 10000 என்று கொடுப்பதற்கு பதில் 100 என்றே கொடுத்ததால் கடைசி இரண்டு இலக்கத்தை அது பைசாவாக்கிய துரோகம் புலப்பட்டது. 

சில காலம் கழித்து ரிசர்வேஷனிலும் கம்ப்யூட்டர் வந்து சேர்ந்தது. அதற்கு முன், தடி தடியான ரிஜிஸ்டரில் விண்ணப்பத்தைப் பார்த்து சீட் இருந்தால் சொல்லி, இல்லையெனில் தேதி மாற்றி என்பதோடு சுலபமாக முடியும். அதைவிட, இந்த இந்த ஊர்களுக்கு என்று அளவாக கவுண்டர் இருக்கும். வரிசையில் நின்று கொண்டிருக்க, திடீரென 5ம் எண் கவுண்டரில் இருப்பவர்கள் 32ம் எண் கவுண்டருக்கு வரிசை கலையாமல் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு முடியுமுன்னரே ஓடிப்போய், கடைசியில் இருந்த ஆள் முதல் நபராக பதிவது மரத்துப் போன காலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஒரு உற்சாகம் கிடைக்கும். 

அதை ஒழிப்பதற்காகவே கம்ப்யூட்டர் வந்து தொலைய, எந்த கவுண்டரில் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கேட்க நன்றாக இருந்தாலும், 15ம் தேதி ராக்ஃபோர்டில் இடமில்லையெனில் 14க்கோ 16க்கோ இருக்கிறதா என்பதோடு முடிந்த விஷயம், கம்ப்யூட்டர் வந்ததும், ராமேஸ்வரத்துல பாருங்க, பாண்டியன்ல பாருங்க என்று அதிக நேரம் எடுத்தது. சரியாக என் முறை வருகையில் ஒன்று ப்ரிண்டரோ, இல்லை நெட்வொர்க்கோ சதி செய்யும். 

ஆசுபத்திரியில் கம்ப்யூட்டர் பதிவு வந்து தொலைத்து புறப்பிணியாளர் சீட்டுக்கு அட்டையை நீட்டினால் வாசுதேவமூர்த்தி பாலாஜியை வாசுதேவமூ என்று அடித்துக் கொடுக்கும். அட்டண்டர் வாசுதேவமூ என்று அழைக்கையில் சாவலாம் போல் இருக்கும். எத்தனை பெரிய இலக்கமானாலும் கூட்டத்தெரிந்த கம்ப்யூட்டராய் இருந்தென்ன. பெயரை மட்டும் 15 எழுத்துக்கு மேல் படிக்கமாட்டேன் என்ற பிடிவாதம் என்னத்துக்கு?

ஒரு வேளை நான் அதன்பால் நாட்டம் கொள்ளவில்லை என்ற கோவமோ என்னவோ என்று சுயமாக டாஸ், ஃபாக்ஸ்ப்ரோ என்று பல மொழிகளில் பேசிப் பழகி, நல்ல புரிதலுடன் இருந்த காலத்தில், விடுமுறைக் கணக்குக்கு ஒரு ப்ரோக்ராம் எழுதி, ஒவ்வொரு ஜனவரி, ஜூலைக்கும் கணக்கிலிருக்கும் விடுப்போடு 15 நாள் கூட்ட வேண்டும். மொத்தக் கணக்கு 195 நாட்களுக்கு மிகாமல் பார்த்துக் கொண்டு 180க்குள் இருந்தால் அந்த எண்ணிக்கை, அதற்கு மேல் என்றால் 180+ வித்தியாசம், உச்சமாக 195 நாட்கள் இருப்பின் 180+15 என்று காட்டவேண்டும் என்று விபரமாக சொல்லிக் கொடுத்தேன். பல சோதனைகளுக்குப் பின், டெமோக்கு அதிகாரியிடம் காட்ட அந்தப் பாவி மனுஷன் 180 நாள் ஆரம்பக் கணக்காகக் கொடுத்துத் தொலைய கம்ப்யூட்டர் இருப்பை பூஜ்ஜியமாகக் காட்டி மானத்தை வாங்கியது.

அழமாட்டாக் குறையாக அதனோடு கெஞ்சி கொஞ்சி என்ன புரியவில்லை உனக்கு என்றால் பதில் சொன்னால்தானே? பிறகு ஒரு வழியாக, ஓ! 180க்கு கீழேயும், அதற்கு மேலேயும் இருந்தால் இப்படிச் செய் என்று சொல்லிவிட்டு 180ஆக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. சாரி! சாரி! என்று மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தேன். இது கூட புரியாத ஒரு கம்ப்யூட்டரை ஏன் எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

அய்யா! ஒரு பத்திரம் பதிய வேண்டுமானால், பதிவாளர் அலுவலக மரத்தடியில் ட்ரங்க் பெட்டி வைத்துக் கொண்டு அல்லது மேசையில் டைப்ரைட்டர் வைத்துக் கொண்டிருப்பவரிடம் போனால், அளவான ஒரு தொகை பேசி முகூர்த்த நேரம் மாறாமல் பதிந்து, ஓரிரு நாளில் பத்திரம் வாங்க முடிந்தது. இப்போது பாருங்கள், அங்கேயும் சனியன் கம்ப்யூட்டர் வந்து தொலைத்துவிட்டது. பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்று ஜெராக்ஸ் எடுத்த பத்திரத்தை, ஐம்பது ரூபாய் கொடுத்தால், பதிவேற்றி இரண்டு நாளில் கொடுத்த காலம் போய், இருனூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் ஐந்து நாட்கள் கழித்துதான் தருகிறார்கள். கேட்டால், ஸ்கேனிங் செய்து கம்ப்யூட்டரில் நம்பர் கொடுக்க வேண்டுமாம். ஏசியா வச்சிக்கிறானுங்கோ? ரெண்டு டாக்குமெண்ட் ஸ்கேன் செஞ்சா 10 நிமிசம் கூலாவணும். என்ன இன்னா பண்ண சொல்ற என்ற பதிலுக்கு எரிச்சல் வராமல் என்ன செய்யும்? எவன் கேட்டான் இந்த கம்ப்யூட்டரை?

உழைத்து ஓடாய்த்தேய்ந்து ஒன்னேகாலணா வருமானத்துக்கு பைசா சுத்தமாக வருமான வரி பிடித்துத் தொலைக்கிறான். அமிதாப் பச்சன் 500 கோடி வரி பாக்கி, கும்பானி ஆயிரம்கோடி வரி பாக்கி என்று பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வாய் நிறைய புன்னகையும் நட்புமாய் கை குலுக்கும் நிதி மந்திரிக்கு என்னைப் பார்த்தால் மட்டும் என்ன இளக்காரம்?  ஆன்லைனில் வரி விபரங்களைப் பதியலாம் என்று விளம்பரம் படித்து, அப்பாடா, இந்த கம்ப்யூட்டர் இழவால் குறைந்தது அலைச்சலாவது மிச்சம் என்று கட்டம் கட்டமாக நிரப்பி சேமித்துக் கொள் என்ற பொத்தானை அழுத்தினால், பாழாப் போன கம்ப்யூட்டர் அதன் புத்தியைக் காட்டி பழி தீர்த்துச் சாவடித்தது.

ஆம்! ப்ரிண்டரை தயாராக வைத்துக் கொண்டு, ப்ரிண்ட் எடுத்து, அதை தபால் மூலமோ, நேரடியாகவோ கொண்டு வந்து ஒப்புச்சீட்டு பெற்றாலொழிய, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக ஒப்புக் கொள்ளப்படமாட்டாதாம். இந்த இழவுக்கு, கையால் நிரப்பி நேரில் கொண்டு போய் கொடுக்க மாட்டேனா?

கடவுச் சீட்டு வாங்க அடிபிடி சண்டை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் ஆன்லைனில் உங்களுக்குச் சவுகரியமான தேதியில் நேரத்தில் வரலாம் என்று ஆசை வார்த்தைக்கு மயங்கி, எல்லாத் தகவலும் கொடுத்து, தேதி, நேரம் முடிவு செய்து, எல்லா ஆவணத்துடனும் போய் நின்றால், அலசி ஆராய்ந்து அது நொட்டை, இது நொள்ளை, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டுவா என்று அலைக்கழிப்பதும், ஒன்னுமே இல்லாவிடினும், போலீசுக்கு வெரிஃபிகேஷன் என்ற பெயரில் மாசக் கணக்காவதும் மாறவேயில்லை.

40 கே.பி. இணைப்போடு ஒரு மின்னஞ்சல் செய்தால், இழு இழு என்று இழுத்து பிழை காட்டுகிறது. அனுப்பிவிட்டு தகவல் சொன்னால் எதிராளி வரலையே என்று அலறுகிறார். பஸ்ஸில், ட்விட்டரில் தகவல் போட்டால் கண்ணாமூச்சி ஆடுகிறது. 4 ஜி.பி டவுன்லோட் செய்து கொண்டிருக்க 3.99ல் கனெக்‌ஷன் போச்சு என்று மீண்டும் ஆரம்பத்திலிருந்து வந்து பில்லை ஏத்தி விடுகிறது. 

பேயைக் கட்டிக் கொண்டு புளியமரம் ஏற மறுக்க முடியுமா என்று அத்தனையும் சகித்து, இப்படி மொக்கைப் பதிவைப் போட்டு ஆற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்மணத்தில் இணைத்தால் சாணி மாதிரி அப்படியே  ‘அனுப்பு’ என்று நிற்கிறது. தமிழ்மணம் சரியாகச் சேர்த்தாயிற்று என்று அலறினாலும், பிடிவாதமாக அனுப்புவிலேயே நிற்கிறது. ஒரு வழியாக கட்டை விரல் தெரிந்தால், பட்டி மேலே இருந்தால் ஓட்டு போட விடமாட்டேன,  இண்டிலி கூட ஜோடியா இருந்தால் எடுப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது.

ஹூம். பார்க்கலாம். என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~