Showing posts with label நசரேயன். Show all posts
Showing posts with label நசரேயன். Show all posts

Monday, May 16, 2011

நசரேயனுக்கு கலைஞர் கடிதம்

நசரின் கடிதம் இங்கே

அன்பு உடன் கருப்பே சே சே பிறப்பே,

துண்டு போட நீ எழுதும் கடிதமெல்லாம் பட்டாணி மடிக்கப் போனாலும், நீ வீசிய துண்டெல்லாம் தீரும்பிவந்தாலும், சற்றும் மனம் தளராமல் துண்டு வீசியபடியே இருப்பது இந்தக் கடிதத்தை எழுதும் முழுத்தகுதியும் உனக்கு உண்டு என்பதை உலகறியச் செய்தாலும், உன் ஆறுதலில் என் துண்டு நனைந்து விட்டது.

/ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது./

இந்த வரிகள் என்னை மெய் சிலிர்க்கச் செய்துவிட்டன. இதைத்தானே உன் கவசமாய்க் கொண்டு உள்ளூர் வளவளத்தா முதல், வெளியூர் கருப்பு, சிவப்பு, ப்ரவுன், உறிச்ச கோழி, சோகை வெள்ளை என்று பாய்ந்து பாய்ந்து துண்டு வீசி மனமுடைந்த போதெல்லாம் கடந்திருப்பாய்.

‘காதல்’ மூன்றெழுத்து. ‘ஜொல்லு’ மூன்றெழுத்து. அதற்கு நீ வீசும் ‘துண்டு’ மூன்றெழுத்து. அதற்கு விழும் ’வசவு’ மூன்றெழுத்து. அப்போது உடையும் உன் ‘மூக்கு’ மூன்றெழுத்து. நீ தின்ன அலையும் ‘நொங்கு’ மூன்றெழுத்து. அதை வைத்து நீ போடும் ‘பதிவு’ அல்லது ‘இடுகை’ மூன்றெழுத்து. அதன் வகை ‘மொக்கை’ மூன்றெழுத்து. அதற்கு நீ வாங்கும் ‘ஓட்டு’ மூன்றெழுத்து. படிப்பவர்களிடம் நீ எடுக்கும் ‘உயிர்’ மூன்றெழுத்து. அதற்கு வாங்கும் ’திட்டு’ மூன்றெழுத்து.  அந்தப் பத்தியில் வேண்டுமென்றே அந்தக் கனியை, கனியை என்று இழுத்த உன் ‘லொல்லு’ மூன்றெழுத்து. நீ மட்டும் சிக்கினா நான் வைக்கப் போகும் ‘ஆப்பு’ம் மூன்றெழுத்து.

ஏனோ இதைப் படிக்கையில், நீ எழுதாமலே கடந்த ஆட்சியில் நான் கொண்ட ‘திமிர்’ மூன்றெழுத்து. கொடுத்துக் கொண்ட ‘விருது’ மூன்றெழுத்து. நானே கொடுத்துக் கொண்ட ‘பேட்டி’ மூன்றெழுத்து.  வந்து சேர்ந்த ‘குஷ்பு’ மூன்றெழுத்து. நம்பி மோசம் போன ‘அன்னை’யும் ‘சோனியா’வும் மூன்றெழுத்து. செய்த ‘ஊழல்’ மூன்றெழுத்து. ராசா போன ‘ஜெயில்’ ‘திஹார்’ கூட மூன்றெழுத்து. குடைச்சல் கொடுக்கும் ‘சி.பி.ஐ’ மூன்றெழுத்து. போன ‘ஆட்சி’ மூன்றெழுத்து. வந்து சேர்ந்த ‘சோகம்’ மூன்றெழுத்து. ‘காமெடி’ என்ற மூன்றெழுத்தால் ‘வெற்றி’ என்ற மூன்றெழுத்து கிட்டும் என்பதும் ‘கனவு’ என்ற மூன்றெழுத்தாயிற்றே என்றெல்லாம் நீ சொல்லாமலே சொன்னாற்போல் தோன்றுகிறது.

வாலிப வயதிலே காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப் போவதில்லைதான். அதற்காக கள்ளும் காஜாபீடியும் அடித்து அடுத்த துண்டு வீச்சுக்கு காத்திருக்கும் களமில்லை இது. ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். நீ இடுகை போடும்போது வரும் பிழை மாதிரி இல்லை இது. நொங்கு நொங்கு என்று நீ இந்த வயதில் பறப்பதைப் போல் இந்த வயதில் என்னை நோண்டி நொங்கெடுப்பார்களோ என்று பயந்து தொலைய வேண்டியிருக்கிறது.

கண்ணை மூடிக் கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம் என்ற உன் வரியில் பின்லேடனை விட பெரிய குண்டு வைத்திருப்பதை நான் அறிவேன். இதைப் பாராட்டி நான் எழுதப் போக காண்டிலிருக்கும் தங்கபாலு சொக்குவிடம் போட்டுக் கொடுத்து கூட்டணியை உடைக்க வழி செய்கிறாயா உடன் பிறப்பே? அழிவில்லா விதைகளா? விதை அழியாமல் செடி எப்படி முளைக்கும்? இதில் மரமாகி விண்ணை முட்டும் என்று உன் பதிவின் வரிகளைச் சேர்த்து விளம்பரம் வேறு தேடுகிறாய்.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும். பொறுத்திரு என்கிறாயே. குப்பை கூட்டி குளிர்காயச் சொல்லி நக்கலடிக்கிறாயா? ராத்தூங்கும் நம்மோடா? நான் தூங்கி எத்தனை நாளாயிற்று தெரியுமா? ஆனாலும் உடன் பிறப்பே இத்தனை வேலையிலும் ஆட்டையை போடலாம் என்ற ஆசையில் பொன்னர் சங்கர் படத்தை வெளியிட்டதை எள்ளல் செய்து நமக்காகக் காத்திருக்கிறது சரித்திரமும், சாதனையும் என்று நொந்த புண்ணில் நூடில்ஸ் வேக வைக்கிறாயே.

உன் கடிதம் மூலம் ஒன்று மட்டும் தெரிகிறது. என் கடிதம் என்று அழைப்பும் இல்லாமல் முடிவும் இல்லாமல் உன் பாணியில் துண்டு வீச எழுதும் உசார் மொட்டைக் கடிதப் பாணியில் எழுதியதிலிருந்தே உன் துண்டு ஏன் விலை போகவில்லை என்று தெரிகிறது. ‘பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சன் பிள்ளைக்காரி பத்தியம் சொன்னது போல்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் மூணு துண்டு வீசி வெற்றி பெற்ற எனக்கு ஒரு துண்டு கூட போணியாகாத உன் ஆறுதல் இந்தச் சோகத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.

அன்புள்ள

மு.க. (முழுதும் கற்பனை)

(பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்.)