Thursday, August 22, 2013

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


பிறந்து வளர்ந்தது அம்பத்தூர் என்றாலும் மெட்ராஸ் அப்போது பட்டணம்தான். பட்டணத்தோடான என் முதல் நினைவு லீவில் சேலம் அல்லது ஈரோட்டுக்குப் போவதற்காக செண்ட்ரல் ஸ்டேஷன் போவதுதான். ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் (இப்போதைய வெஸ்ட்கோஸ்ட்) எப்போதும். தேர்ட் க்ளாஸ் பெட்டியில் இடம் கிடைக்கும். பேஸின் ப்ரிட்ஜ் தாண்டும் வரை சிறுசுகள் உட்கார்ந்ததாக சரித்திரம் கிடையாது. முண்டியடித்து இடது வலது என்று பாய்ந்து பக்கிங்காம் கனாலில் போட்டில் போகும் சவுக்கு, உப்பு மூட்டைகளைப் பார்ப்பதில் அத்தனை குஷி.


தீபாவளிக்கு பாரிஸ் கார்னரில் இப்போதைய சரவணபவன் இருக்கும் இடத்தில் சுபைதா டெக்ஸ்டைல்ஸில் ரெடிமேட் பட்டி டவுசர், ஸ்லாக்‌ஷர்ட் தீபாவளி பொங்கலுக்கு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். அப்போதெல்லாம் தள்ளுபடிக்கு பாய்பவர்கள் இல்லை வாடிக்கையாளர்கள். கொத்தவால் சாவடி காய்கறிக்கென்றால் ட்ரஸ்ட் ஸ்கொயர் மளிகைக்கு.நகைக்கடைகள் செட்டியார்களிடமிருந்தது. குடும்ப வைத்தியர் மாதிரி குடும்ப செட்டியார்கள். தலை முறை உறவுகள். இன்னாரின் பேரன் என்றால் கல்லாவில் இருக்கும் பெரிய செட்டியார் மற்ற உறவுகளை விசாரிப்பார். பட்டுக்கு காஞ்சீபுரம் போக முடியாவிட்டால் கந்தசாமி கோவில் தெரு மணிசங்கர் தவே. ஆரிய பவன் தோசை. இப்ரஹீம் கரீம் குடை. ரெயின் கோட், ஸ்வெட்டருக்கு யூனூஸ் சேட்/யூசுஃப் சேட் கடை, புடவைக்கு மங்காராம். சீக்கோ வாச்சுக்கு பர்மா பஜார். பல் நோவுக்கு ரத்தன் பஜார் சீன டாக்டர்கள்.மூர்மார்க்கட் தனி உலகம். பேனா பேர் படிக்க சொல்லிவிட்டு சொக்காயை பிடித்து வாங்க வைப்பது, 30ரூ தோல் செருப்புக்கு பித்தளை ஆணி 5 பைசை என்று ரோபோ வேகத்தில் டிசைன் கட்டி அடித்துவிட்டு 50ரூ கேட்டு மிரட்டும் வியாபாரம், குச்சி பால் ஐஸ்/சர்பத் ஒன்னு பத்துபைசா என்று சொல்லி  கெத்தாக பத்து சொன்ன பிறகு ஒரு ரூ பத்துபைசா என்ற மோசடியெல்லாம் வாசலோடு. கிழக்குப் புறம் செண்ட்ரலை ஒட்டி இரும்பு சாமான்கள், கத்தி கபடாக்கள், தெற்குப் புறம் மிலிடரி யூனி ஃபார்ம்கள், மேற்கே சூட்கேசுகள்/ரெக்ஸின் பைகள் பார்டர் தாண்டி மெயின் காம்ப்ளக்சுக்கு வந்தால் சுற்றிலும் புத்தகக் கடைகள்.கப்புசாமி என்று பில்லில் கையெழுத்துப் போடும் கடைக்காரருக்கு மேற்கத்திய புதினங்கள், மருத்துவப் புத்தகங்கள், எஞ்சினியரிங் புத்தகங்கள் அத்தனையும் அத்துப்படி. பேட்லிபாய் அக்கவுண்டன்ஸி இன்று அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பேர் எழுதாமல் புதுக்கருக்கழியாமல் கொடுத்தால் அன்றைக்கு என்ன விலையோ அதற்கு வாங்கிக் கொள்வார்கள்.உள் வளைவில் பொம்மைகள், பைகள், ஃபேன்ஸி ஐட்டம்கள். அடுத்த கட்டத்துக்கு குடும்பஸ்தர்கள் போக மாட்டார்கள். விடலைகள் அங்கு விட்டு வரமாட்டார்கள்.  வேடிக்கை மட்டும் பார்த்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும் மாமாக்கள் காசு பிடுங்கி விடுவார்கள் என்பதால் ஓரக் கண்ணால் பார்த்தபடி  ஒரு நோக்காக/நேக்காக சுத்தி வந்து மையப் பகுதிக்கு வந்தால் இன்றைய அல்லிகுளம். இறைக்காத நீறூற்று. ஹார்லிக்ஸ்/ஹமாம் அட்டை பெட்டியில் பாஸ்போர்ட்/பணம்/மாற்று அழுக்கு உடையுடன் கஞ்சா/சப்பி/ஆர்.எஸ்.பவுடர்/அபின் மயக்கத்தில் வெளிநாட்டு ஹிப்பிகள். லுங்கி கட்டிக் கொண்டு வந்தால் டிக்கட் கொடுக்காத மினர்வா தியேட்டர், விசிலடித்தால் வெளியே இழுத்துப் போடும் காசினோ, பிட்டுப் படத்துக்கு கெயிட்டி, இளஞ்சோடிகள் படம் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு ஒதுங்க ப்ளூடைமண்ட் கண்டினுவஸ் ஷோ, நேப்பியர் பாலம் அருகில் சுராங்கனி ரெஸ்டாரண்ட் பின்புறம் நடந்தால் சண்டைப் பயிற்சி செய்வதாக சீன் போடும் ரவுடிகள். தாண்டிச் சென்றால் மணலில் தடுப்பு தடுப்பாக செய்த லவ் ஸ்பாட், ஜோடியோடு வராவிட்டால் ஜோடிக்கு காசு, வேடிக்கை பார்க்க வந்தால் பொளேரென்று அறை, மீட்டர் கேஜ் ரயில் நிலைய 15 பைசா மசால் தோசை 10 பைசா சாதா தோசை, 15 பைசா 2 இட்லி, இட்லி தெரியாம சாம்பார், 12 பைசா காஃபி, 8 பைசா டீ. 

பட்டணம் வந்தா உயிர்காலேஜ் செத்த காலேஜ் பாக்காம போனா ஒரு மருவாதி இருக்குமா. இன்னைக்கும் சபர்பன் ஸ்டேஷன் 14வது ப்ளாட்ஃபார்ம் முடியற இடத்துல இருக்க காடுதான் உயிர்காலேஜ். எவ்வளவு பசுமை. ஜூன் மாசமே உள்ள குளிரும். முக்கியமான அட்ராக்‌ஷன் எம்.ஜி.ஆர் சிங்கம், சிவாஜி புலி. அதையொட்டிய கதைகள், சண்டைகள். பெரிய தூக்குகளில் புளிசாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு மரத்தடி விருந்து. படிக்காத ஜனங்கள் பெரும்பாலும். அதனால் இலைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள். பிற்பாடு மினி ட்ரெயின் வந்தது.

சென்னைக்கு எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்தது. மனுசன் நிலாவில கால் வச்சான். டெலிவிஷன் வந்தது. 14 மாடி கட்டிடம் எரிந்தது. நேரு ஸ்டேடியத்திலிருந்து கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போச்சு. இப்படி எவ்வளவோ மாற்றங்கள். மாறாதது ஒன்னு இருக்கான்னா இருக்கு. ஜெமினி சர்க்கஸ். 14வது ப்ளாட்ஃபார்ம் பக்கத்துல இருக்க அதே இடம். கிறிஸ்துமசையும் சேர்த்தா மாதிரியா ஆரம்பிச்சி பொங்கல் தாண்டி ஃபிப்ரவரி 2ம் வாரம் வரைக்கும். அதே டெண்ட், அதே காட்சிகள். அதே விஐபிகளுக்கு ஓசி பாஸ்கள். 

காசு இருக்கவன் சபாக்கு போய் கச்சேரி கேப்பான். காசில்லைன்னா கார்பரேஷன் வாசல் புல் தரையில 4.30லிருந்து கூட்டம் சேரும். 5 மணிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். சுத்தமான கர்நாடக சங்கீதம். ஆபட்ஸ்பரி கலியாணத்துக்கு நாதமுனி பேண்ட் இருந்தா அன்னாடங்காச்சிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். இப்பதான் சினிமாப்பாட்டு வச்சாதானே மரியாதை.  சமீப காலம் வரை கார்ப்பரேஷன்ல பணம் கட்டினா கலியாணத்துக்கு புக் பண்ணிக்கலாம். மாப்பிள்ளை அழைப்புக்கு கார்ப்பரேஷன் பேண்ட் செவப்பு வெள்ளை யூனிஃபார்ம்ல என்னா கெத்து தெரியுமா.

பாக்ஸிங் டே தெரியுமா?  கிறிஸ்மசுக்கு அடுத்த நாள். வெள்ளைக்காரன் போயிட்டாந்தான். பாக்ஸிங்கும் போச்சு. ஆனா இன்னைக்கும் சென்னைல மத்திய அரசு ஊழியர்களுக்கு அன்னைக்கு விருப்ப ஓய்வு நாள். கண்ணப்பர் திடலில் சார்பேட்டா பரம்பரை, வைத்தியர் பரம்பரைன்னு சவால், போட்டி, பதக்கம். வட சென்னை மொத்தம் குவியும். ஆங்கிலோ இந்தியர்கள், முஸ்லீம்கள், போர்ட்டர்கள், நடிகர்கள் ஆதரவு. வால்டாக்ஸ் ரோடு, பெரிய மேடெல்லாம் போஸ்டர்கள். 

கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போனப்புறம் ஃபுட் பால் லீக் மேச் முன்னாடி யூரோ கப் எல்லாம் எம்மாத்திரம். கோடி ரூபா குடுத்தாலும் போர்ட்டர் வரமாட்டார். கூலி எப்போது வேண்டுமானாலும் வரும். முத்துராமன், ஜெய்சங்கர், நாகேஷ் லுங்கியோட வந்து க்ரவுண்ட்ல உக்காரும்போது கூட விசிலும் கும்மாளமுமா மேச் வருமா. 

கமெண்ட் கேக்கணும். த்த்தா! டாய்! ரெப்ரீ! கண்ல இன்னாடா கீது? கார்னல் கண்ணு தெர்ல கெயப்பொட்ட!!

ஆப்புல அட்சாம்பா! பிகிலட்றா நாயே!

ஃபவுல் பண்ணா பிகிலுக்கெல்லாம் காத்திருக்க முடியாது. ரண்டு கை தூக்கி சாலி சொல்லி கட்டி புட்சிக்கணும். கோல் போட்டா கொத்தவரங்கா நாகேஷ் தூக்க பார்ப்பார். லைன் மேன் பாடு திண்டாட்டம். பால் அவுட்னு கரெக்டா சொல்வில்லை என்றால் டவுசர் போயிடும். தொடர்ந்து தப்பு பண்ணா ரத்தகாயம்தான். 

அந்தக் கோலாகல இடத்தில்தான் இன்று நடிகர்கள் நடிகைகள் பாராட்டு விழாவும் நடக்கிறது. 

ஏனோ ஆங்கிலோ இந்திய இளைஞர்களும், முஸ்லீம்களும் ஹாக்கியையும், பாக்சிங்கையும் புறக்கணித்து விட்டார்கள். 

சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 மணி ஆனதும் வீட்டுக்கு கிளம்புமுன்னர் அந்தந்தத் துறை தலைமை அதிகாரிகள் ஆஃபீசைச் சுற்றி வருவார்களாம். வீட்டுக்கு கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இளைஞர்கள் என்றால் கஸ்ரத்துக்கு போ மேன், போய் விளையாடு. குடும்பஸ்தர்கள் என்றால் குடும்பத்தோடு நேரம் செலவழி என்று விரட்டுவார்களாம். 

ம்ம்ம்..போதும்..சொல்லி மாளாது.

Friday, August 2, 2013

பேனா


அப்பா ஒரு பேனாப் ப்ரியர். ப்ரியம் என்று சுளுவாக சொல்லிவிட முடியாது. பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் ஓவியம் போல அவைகளுக்கு ஒரு அந்தஸ்து உண்டு. பக்தி, பெருமிதம் இவற்றோடு தனக்குக் கிடைத்த வரம்போல ஒரு பணிவோடான ப்ரியம். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது. துருவழுக்கேறினாலும் மேலிருக்கும் படம் தேயாமல் துருவேறாமல் சோப்புத்தண்ணீரில் நனைத்த துணியால் துடைத்து தேங்காய் எண்ணெயும் கெரசினும் நனைத்த பஞ்சால் துடைத்து ஓரளவு காக்கப்பட்ட ஆல மரத்து ஊஞ்சலில் ஆடும் ராதா க்ருஷ்ணன் படம் போட்ட பாரி மிட்டாய் டப்பா. 

உள்ளே புதுக்கருக்கழியாத பார்க்கர்கள், ப்ளூபர்ட்கள், வாடர்மென், ஒரு ஷீஃபரும்கூட. இன்னும் எத்தனையோ பேர்கள், கவனமில்லை. பலப்பம் கனத்தில் விரல் நீட்டு பேனா. ஒரு பேரா எழுதுவதற்குள் விரலைச் சொடுக்கெடுக்க வைக்கும் குண்டு பேனா. ராணுவ வீரன் தொப்பி போல் கருப்பு தட்டை நிற மேல் பாகத்தின் தொப்பிக்கு காண்ட்ராஸ்ட் சிவப்பு நிறத்தில் பேனா. மினு மினுக்கும் தங்கக் கலர் க்ளிப்பின் முனையில் அர்ச்சுனன் அம்பு, பீமன் கதை போல் கூர்ப்பும் குண்டுமாய். கழுத்தே இல்லாமல் ஜாண் நீளத்துக்கு மரத்தாலான ஒரு வாடர்மென். கீழே பட்டன் மாதிரி இருக்கும். கவர் கட்டைவிரலில் பாதி.  திறந்தால் நிப் தெரியாது. கவரை பின்புறம் சொருகி திருகினால் நிப் மேலே வரும். நிப் உள்ளே இருக்கும்போது படுக்க வைத்தாலும், தலைகீழாய் வைத்தாலும் இங்க் கொட்டாது. அப்பாவின் ஃபேவரிட் இந்தப் பேனா. இங்க் பாட்டிலில் முனை முக்கி க்ளாக் வைசில் திருகி ஆண்டி க்ளாக் வைசில் திருகினால் இங்க் நிறப்பிக் கொள்ளும் ஷீஃபர். மேலிருக்கும் க்ளிப் போலவே சற்று நீளமாக பதிந்தாற்போல ஒரு க்ளிப்பை விரலால் தூக்கி விட்டால் ட்யூபில் இங்க் ஏற்றிக் கொள்ளும் ஒரு ப்ளூபர்ட். 

ஒரு ஓவியக்காரனின் கைத்துணி போல் கருப்பு, கருநீலம், சிவப்பு, பச்சை, பிங்க் என்று பல இங்க் கறையோடு ஆனால் கசங்காமல் சுருக்கமின்றி மடித்து வைக்கப்பட்ட ஒரு வேஷ்டித் துண்டு, கடித்துக் கொண்டிருக்கும் பேனாக் கழுத்தைத் திறக்க அளவாக நறுக்கிய சைக்கிள் ட்யூப், வெள்ளையில் சிவப்பு டைமண்ட் நடுவே வெள்ளெழுத்தில் பாரத் பெயர் தாங்கிய சவர ப்ளேட், மிக மெல்லியதாய் லீக் அடிக்கும் பேனாக் கழுத்து மரையில் தேய்த்து லீக் அடிக்காமல் மூட விறல் கணுவளவு தேன் மெழுகு எல்லாம் டப்பாவுக்குள் அடக்கம். 

ஞாயிறு மதியங்கள் காஃபிக்குப் பிறகு அப்பாவின் அடுத்த வார பேனாக்கள் தேர்வு. அப்பாவுக்கு எப்போதும் பார்க்கர் இங்க்தான். ஏதோ பிடித்த பேனா எடுத்து இங்க் போட்டு வைத்துக் கொள்வதெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு கணக்கில் 4 பேனா செலக்ட் ஆகும். சிவப்பு, கருநீலம், கருப்பு, நீல இங்க் புட்டிகள் எதிரில். ஒரு புறம் வழவழப்பாய் மறுபுறம் சொரசொரப்பாய் அரையடி நீளம் நாலங்குல அகலத்துக்குக் அப்பாவே பைண்ட் செய்த ஸ்க்ராப் புக். மேற்புறம் மடித்து தொடைமேல் வைத்துக் கொண்டு பேனாவைப் பிடித்து சண்டைக்குப் போகும் மன்னன் கத்தி வாகு பார்ப்பது போல் கையில் பேனாவோடு ஒரு பார்வை, பேப்பர் மேல் வைத்து ஒரு பார்வை, இங்க் இல்லாமல் ஒரு கையெழுத்து, பேப்பரில் கீறியிருக்கிறதா என்று நோட்டில் ஒரு பார்வை. அதன் பிறகு கருப்பு இங்க் பாட்டில் திறந்து நிப் முனை மட்டும் நனைய எடுத்து மூன்று கையெழுத்து. 

இடைவெளி இல்லாமல், பட்டை அடிக்காமல், கீறாமல் சீராக இருக்க வேண்டும். வழவழ பக்கத்தில் எப்படி ஓடுகிறதோ அப்படியே சொர சொரப்பிலும் ஓட வேண்டும். இல்லை எனில் நாதசுர வித்துவான் சீவாளியைப் பதப் படுத்துவது போல ப்ளேட் பிளப்பில் புகுந்து நாக்குக்கும் நிப்புக்கும் நடுவில் நர்த்தனமாடி ஸ்ருதி சேர்க்கும். 

ஷீஃபருக்கும், பார்க்கருக்கும் என்ன மாதிரியான ராயல் ட்ரீட்மெண்டோ அதேதான் 3 ரூபாய் என் கேம்லின் பேனாவுக்கும். ரைட்டர் பேனாவுக்கும். ‘எங்கேடா உன் பேனா’வுக்கே விரல் தந்தியடிக்கும். தொடையில் அப்போதே லேசான எரிச்சல் ஆரம்பிக்கும். க்ளிப்பைக் கடிக்காமல் கணக்கு போட முடியுமா? பக்கத்துப் பையனுக்கு பத்து சொட்டு இங்க் கடன் கொடுக்க வேண்டுமானால் ட்யூப் துண்டுக்கு எங்கே போக. பல்லால் கடிக்காமல் திறக்கவா பேனாக் கழுத்து இருக்கிறது?

பேனா சரஸ்வதி. வாய்ல வச்சி எச்சில் பண்ணாதன்னா தெரியாது? ஒற்றை விரல் இழுப்பில் 30 டிகிரி கோணல் போய் தெத்துப்பல் தூக்கல் போய் மூடியில் க்ளிப் உட்காரும். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாதலால் நிஜமாகவே மூச்சா முட்டும். தப்பிக்க முடியாது. அத்தனை குழியில் புதிதாகப் பதிந்த பல்லடையாளம் கண்டு பிடிக்க சிரமப்பட்டதே இல்லை. போனவாரம்தானே கடிக்காதன்னு சொன்னேனுக்கு ‘இல்ல பழசு’  என்றால் போனஸ் நிச்சயம் என்பதால் அநிச்சையாக இறுகி கை தொடையில் இறங்கும் நேரத்தில் தளர்ந்து அடியின் தாக்கத்தைக் குறைக்க தொடை பழகிவிட்டிருந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் போய்ச்சேர்ந்த அப்பாவுக்காக யாருமே தொடாமல் பொக்கிஷமாய் ஞாயிறுக்காய் காத்திருந்தன பேனாக்கள். ஒரு மிக நெருங்கிய சொந்தத்திடம் பதினெட்டு வயதானால்தான் வேலைக்கு அப்ளை செய்ய ஆறுமாதம் இருந்ததால் செலவுக்காக வாங்கிய கடனுக்கு வேலை கிடைத்த அதே வாரத்தில் கொடுத்த பணம் வேண்டும் என்ற பிடிவாதத்தில் திகைத்துப் போனாள் அம்மா.

கண்ணீர் தளும்ப பேனாப் பெட்டி வெளியெடுக்கப்பட்டது. பழைய ட்ரங்குப் பெட்டியிலிருந்து. கூடவே ஒரு சின்ன மஞ்சள் எல்.ஜி. பெருங்காய டப்பாவும். அம்மாவின் ஒரு சிவப்புக் கல் மூக்குத்தி, மூன்று முனை உடைந்த நிப் பொதிந்த ரோஸ் கலர் பட்டர் பேப்பர் பொட்டலம். ஷீஃபர், பார்க்கர், வாடர்மேன்களின் க்ளிப்புகள், 14 கேரட் என்று பொறிக்கப் பட்ட நிப்புகள் எல்லாம் கழற்றி எடுத்து என்.எஸ்.ஸி போஸ்ரோடு போய் நகைக் கடையில் கேட்டு எதிரில் இருந்த அரசாங்க உருக்குச் சாலையில் கொடுத்து பாதி சப்பிய சாக்லேட் போல் சுத்த தங்கம் ஒரு சின்ன கட்டியாக்கிக் கொடுத்து கிடைத்த ஆயிரத்து ஐந்நூத்தி சொச்சத்தில் ஆயிரம் ரூபாய் அசல் போக மிச்சத்துக்கு ஒரு புடவை ரவிக்கை, பேண்ட் ஷர்ட் மங்காராமில் வாங்கித் தாம்பூலத்தில் வைத்து கடன் அடைத்தபோது அப்பா பெருமைப் பட்டிருப்பார்.

பின்னாளில் அப்பாவின் நண்பரான ராம்ஜி என்ற பேனா பைத்தியத்தோடு போர்ட் ட்ரஸ்ட் கதிரி பாயிடம் இன்ஸ்டால்மெண்டில், ஃப்ளவர் பஜார் யூனூஸ் சேட் கடை முன்னால் ப்ளாட்ஃபார்மில் பேனாக் கடை வைத்திருந்து பிறகு மௌண்ட்ரோட் பேட்டா வாசலில் கடை வைத்திருந்த முதலியாரிடம் சிந்தாதரிப் பேட்டையில் கடைந்தெடுத்து வாங்கிய எபொனைட் பேனாக்கள் கலெக்‌ஷன் என்னிடம் இருந்தது. 

இரண்டு நாள் முன்பு திடீரெனத் தோன்றியது. தாத்தாவுடையது இல்லை என்றாலும் என் பிள்ளைகளுக்கு ஷீஃபரும், வாடர்மென்னும் அவர் நினைவாகக் கொடுக்க வேண்டுமென்று. அமேசானில் முன்னூறும் ஐன்னூருமாய் இருக்கிறது விலைகள். அதுவும் ஏதோ கேட்ரிஜாம். 

பொறுப்பிருக்கிறபோது, கடன் வாங்கி ஹஜ்ஜுக்கு போகக் கூடாதாமே. அந்த மாதிரி கடமையெல்லாம் முடித்து, பென்ஷனாவது மிச்சம் பிடித்து சாதாரணமான இங்க் போடுகிற ஒரு ஷீஃபரும், வாடர்மென்னும் முடிந்தால் ஒரு பார்க்கரும் வாங்க வேண்டும். 

Monday, June 17, 2013

பக்கோடா புராணம்

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது  சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டு பிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா? அதற்குச் சற்றும் குறையாத தரத்தில் ஒரு குழம்பை வைத்துவிட்டு உருளைக்கிழங்கு ஃப்ரை உங்களுக்கு பிடிக்கும்னு செஞ்சனா. அப்பதான் ஃபோன் பண்ணீங்களா? லைட்டா தீஞ்சிடுச்சுங்க என்று 7வது டிகிரி பர்ன் என்ற அளவுக்கு நிலக்கரி பொரியலிலிருந்து கொலைக்கேசில் தப்புவித்து தம்பதியரைக் காப்பாற்றும் சமய சஞ்சீவியல்லவா அது?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச்சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொரிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால் சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

பல்லிருக்கவன் பகோடா திங்கான் என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான், பகோடாவைத் தின்னவும் முடியாமல் அதற்காக ஏங்குவதை தவிர்க்கவும் முடியாமல் தவிப்பவர்கள் செய்த கூட்டுச்சதி காலிஃப்ளவர் மற்றும் பனீர் பக்கோடா. மேற்படி எதுவுமே மூலப் பொருளோடு சுருதி சேராமல் பக்கோடா மாவு டேஸ்ட், மூலப் பொருள் டேஸ்ட் என்று அபஸ்வரமான கலியாணக் கச்சேரி மாதிரிதான் இருக்கும்.

ஒரு தேவ ரகசியம் சொல்லட்டுமா? கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கும் மிகப் பிடித்தது பக்கோடாவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் பள்ளியிலேயே விடைத்தாளைக் கொடுக்கும் ஆசிரியர் பக்கோடா மடிக்கத்தான் லாயக்கு என்று ஆசீர்வதித்துக் கொடுப்பார். இதப் பகடி என்போர் சயனைட் கவுஜ சரஸ்வதி, கல்வியைத் தன்பேரில் சுமந்திருக்கும் வித்யா என்கிற விதூஷ் தன்னுடைய படைப்புக்களை பக்கோடா பேப்பர் என்ற வலை மனையில்தான் மடித்துத் தருகிறார் என்பதற்கு வேறேதும் மறுப்பு சொல்லக் கூடுமோ?

‘ன்னாச்சி’ என்று திரும்பத் திரும்ப வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தவர்கள், அறிவார்களா? இது ஒன்றும் புதுமையில்லை. மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் ‘அப்பா பக்கோடா’ என்ற ஒரே வசனத்தை படம் முழுதும் பேசி பக்கோடா காதர் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை அளித்த ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

சும்மா கண்ட மானிக்கு வெங்காயம் நறுக்கி, கடலை மாவில் பிரட்டி எருமைமாடு நடந்து கொண்டே சாணி போடுவது போல் வாணலிக்குள் விழுவதல்ல பக்கோடா. பக்கோடாவின் பெயரைக் கெடுத்து

“நசுகு பித்து பித்தி நா கொம்ப கூல்ச்சேவு
டர்ருமனி பித்தரா நா பாக்ய சாலுடா”
 என்று கவி வேமனவை அலறவைத்த சதி அதில் எழவெடுத்த பூண்டைப் போடுவது.

நல்ல கடலை மாவில் (கோதுமை அரைத்த பிறகு அரைக்கலாகாது) அளவாக அரிசி மாவு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், புதிதாய்க் காய்ச்சிய சுட்டெண்ணெய் (பஜ்ஜி, அப்பளம் எல்லாம் காய்ச்சி ட்ரான்ஸ்ஃபார்மர் ஆயில் கணக்காய் கரேலென்றிருக்கும் சுட்டெண்ணெய் அல்ல) கொஞ்சம் விட்டு உப்பு போட்டு பிசிறி வைத்து விட்டு, வெங்காயம் நீள நீளமாய் நறுக்கி உதிர்த்து விட்டு பச்சை மிளகாய் வட்ட வட்டமாக மெல்லிசாய் நறுக்கிஅதில் போட்டு கலந்து, பின்னும் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசிறிவிட்டு பத்து நிமிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் விட்டு பிசைந்து கெட்டியான பதத்திலேயே பின்னும் ஒரு பத்து நிமிடம் விட்டு, கருவேப்பிலை உருவிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஒரு சிட்டிகைப் பெருங்காயப் பொடியிட்டு தண்ணீர் அளவளவாகச் சேர்க்கவேண்டும். ஒரு கை மாவெடுத்து பிசிறி விட்டால் மொத்தையாக கொஞ்சம், தூள்தூளாக மீதி விழக்கூடாது. அப்படிப் பிசிறுவது பரதநாட்டிய அடவு மாதிரி அத்தனைக் கலை நயத்தோடும் பதமாகத் தண்ணீர் சேர்ப்பது ஒரு விஞ்ஞானியின் கவனத்தோடும் செய்யப்பட வேண்டியது. Practice brings perfection.

புகையாமல் நன்றாகச் சுட்ட எண்ணெயில் ஒரு சுண்டைக்காய் மாவு போட்டால் ஒலிம்பிக் வீரர் பெல்ப்ஸ் மாதிரி போட்ட வேகத்தில் மேலே வந்து சுவாசிக்க வேண்டும். அதே சூட்டை கடைசி வரை மெயிண்டெய்ன் செய்வதும், பக்கோடா, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாமே பொன்னிறத்தில் வரும்போது சுவாசம் மட்டுப் பட்டிருக்கும் போது சரியான பதத்தில் எடுப்பதும் பழக்கத்திலேயே வரும்..

பக்கோடா செய்வது மட்டுமல்ல. தின்பதும் கலையே. சுடச்சுட ஹாவு ஹாவு என்று தின்பதோ நமர்த்துப் போய் தின்பதோ பக்கோடாவுக்குச் செய்யும் அவமரியாதை. கை பொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக வாயிலிட்டால் பொறபொறவென உதிர்ந்து மெத்தென்ற உள்ளொளி காட்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கடலைமாவு எல்லாம் உமிழ்நீரின் தம்பூராச் சுருதி சேர்ந்து ஆத்மானுபவம் அளிக்கும்.

கடைப் பக்கோடா என்பது வணிக நோக்குடன் செய்யப்படுவது. அது ஒரு ரசிகனுக்கு உகந்ததல்ல. அத்தகைய பக்கோடாவைத் தின்பதன் மூலம் ஒருவன் உப்புசம், ஏப்பம், லிஃப்ட், மீட்டிங்கில் பங்கேற்க முடியாத அவஸ்தை, மண்ணைத் தின்றது போன்ற புறவயமான அனுபவங்களை மட்டுமே பெறவியலும். நல்ல பக்கோடா என்பது செவ்விலக்கியத்துக்கு ஒப்பானதாகும். ஒரு தேர்ந்த பக்கோடாக் கலைஞர் ஒரு யோகியின் அர்ப்பணிப்போடு, யாகத்தின் கவனத்தோடு, கலை ரசனையோடு செய்யும்போது கிட்டும் தரிசனம். அதை உண்ணும் ரசிகனும் அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும்போதே பக்கோடா முழுமை பெறுகிறது.

மாறாக வணிகநோக்கு பக்கோடாக் கலைஞனை மட்டுமல்ல அது மடிக்கும் பேப்பரையும் காலம் புறந்தள்ளி ஏதோ ஒரு கடையில் முழங்கை வரை மாவைக் கலக்கி வேர்வையும், தூசுமாய் கரேலென்று வழித்து விட்டு வருடக்கணக்காய் ஊறிய சோடாமாவை ஊற்றி ட்ரான்ஸ்ஃபார்மர் எண்ணெயில் பஜ்ஜி போடவும், அதைப் பிழிந்து விட்டெறியவும் வைக்கும்.

Tuesday, January 22, 2013

தினத் தந்தி - ஒரு வாசிப்பனுபவம்

பள்ளியில் படிப்பேறவில்லை என்று ஒன்னாப்புலேயே நிறுத்திக் கொண்டவர்களைக் கூட எழுத்துக் கூட்டி படிக்கவைத்த பெருமை வாய்ந்த பத்திரிகை என்பதோடு கடும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இசப்கோல் கூட தரவியலாத நிவாரணத்தை அளித்து தமிழரின் உணவோடும் உணர்வோடும் கலந்துவிட்ட பத்திரிகை என்றால் அது தினத்தந்திதான். எல்லாப் பத்திரிகைகளையும் போலன்று தினத்தந்தி வாசிப்பு. அது ஒரு நவரசானுபவம்.

இன்றைய தினத்தந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி கர்நாடகா மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட உத்தரவிட்ட முதலமைச்சரின் செய்தி. படிக்கும்போதே வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கி உண்மையான தமிழ்ப்புத்தாண்டுக்கு முன்பாக ஏழை விவசாயிகளுக்கு பங்கிடப்படும் என நம்பிக்கை தருவதோடு, இழுத்தடிப்பதற்கு இது ஒன்றும் சொத்துக் குவிப்பு வழக்கில்லை என்ற உண்மையும் தாயுள்ளத்தோடு செயல்படும் முதல்வரின் நடவடிக்கை மனதோடு மலத்தையும் இளக்குவதாக உள்ளது.

இதற்கெல்லாம் அசையமாட்டோம் என்று பிடிவாதக்கார மலச்சிக்கல் ஆசாமியா நீங்கள்? இதோ தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வும், ரெயில் கட்டண உயர்வு காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுண்டர்கள் அமைத்துள்ள செய்தியும் எப்பேற்பட்ட பாறையையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.

அடுத்த பக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டு பிடிபட்ட செய்தி ஒரு கையால் கலங்கும் வயிற்றைப் பிடித்துக் கொண்டே நம்மிடம் இந்த மாதக் கடைசியில் எங்காவது 500/1000ரூ நோட்டு இருந்து தொலைக்குமோ என்ற பீதியைக் கிளப்புகிறது..

கல்லூரிக்குப் போன மாணவி எரித்துக் கொலை, கலெக்‌ஷனுக்கு போன தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக் கொள்ளை, டெல்லி கற்பழிப்பு வழக்கில் விசாரணை ரகசியமாக நடைபெறும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் செய்தி, மாமனார் நடுரோட்டில் படுகொலை, மனைவி மாமியாரும் வெட்டிச் சாய்ப்பு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை, மகளுடன் கிணற்றில் குதித்த தாய் சாவு, ரெயிலில் அடிபட்டு மாணவி உள்பட இரண்டு பேர் சாவு போன்ற இழவுச் சிறப்புச் செய்திகள்..பக்கத்துக்குப் பக்கம் விரவிக்கிடக்கும் இத்தகைய உற்சாகமூட்டும் செய்திகள் அதிகாலையில் கொடுக்கும் புத்துணர்ச்சி சொல்லத் தரமன்று.

இன்றைய பத்திரிகையின் சிறப்புச் செய்திகள் இரண்டு. 27ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணம் நடந்தால் தூக்கில் தொங்குவேன் என்று மாப்பிள்ளை மிரட்டும் காரணம் என்னவென்றே தெரியவில்லை என்று முதல் பத்தியில் கமிஷனரிடம் மனு கொடுக்கும் பெண் இரண்டாம் பத்தியில் மணமகனின் தாய் அந்தப் பெண் ஏற்கவே ஒருத்தரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடியதை வேறொருத்தியுடன் திருமணமான அவரின் முன்னாள் காதலனே மணமகனிடம் தெரிவித்ததாக கூறியதை நேர்மையோடு ஒப்புக் கொண்டு அவன் மீதும் போலீஸில் கேஸ் கொடுக்க இருப்பதாகவும், முருகனை என் கணவனாக கனவு கண்டுவிட்டேன், எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் அவரைக் கைப்பிடித்தே ஆவேன் என்று கண்ணீர் பொங்க ஆவேசப் பட்டதைப் படிக்கையில் நமது கண்ணிலும் கண்ணீர் வழிகிறது. சவாலில் ஜெயித்து முருகனை மணப்பாரா என்று (என்பதை வெள்ளித் திரையில் காண்க என்று பாட்டு புத்தக பாணியில் எழுதாத குறையாக) எழுதியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அடுத்ததாக கிளுகிளுவோடு நகைச்சுவையும் தளும்பும் வால்பாறை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த காட்சி இணைய தளத்தில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மூணாப்பு சிறுவர்களை வைத்து நடத்திய மறியல் செய்தி படத்துடன் வெளியிட்டது. சிறுவர்கள் முகத்தில் ததும்பும் சிரிப்பைப் பார்த்தால் செய்தியின் தாக்கம் புரிகிறது. இதற்கு முன் பாலியல் கல்வியால் சிறுவர்கள் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போகத்தான் முடியும் என்ற ஆசிரியரின் தலையங்கத்தை நினைவு கூர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

விளையாட்டுப் பகுதியில் டென்னிஸ் போட்டி புகைப்படங்கள் வாசகர்களின் மனதில் அதெப்படி டென்னிஸ் போட்டி கேமிராக்கள் பெண் ஆட்டக்காரர்களை மட்டும் டாப் அல்லது பாட்டம் ஆங்கிளில் மட்டுமே புகைப்படம் எடுக்கிறது என்ற புதிரைத் தோற்றுவிக்கும்.

இறுதியில் சினிமா விளம்பரங்கள் பகுதிக்கு வருகையில் காதல் வலி, கில்லி பசங்க, நேசம் நெசப்படுதே, ஆதி பகவன், பத்தாயிரம் கோடி போன்ற திரைக்காவியங்களுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் விமரிசனம் எழுதிவிட்டால் என்று நினைக்கும்போதே உபாதை நீங்கி உடல்பறப்பது போன்ற உணர்வு திண்ணம்.

வெறும் 400 காசில் இணையற்ற இந்த அனுபவங்களுக்குப் பின்னால் தினத்தந்தி அளிக்கும் சேவை சொல்லில் அடங்காது. ஒரு சில இங்கே:

*தினத்தந்தி இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு பயலும் பஜ்ஜி சாப்பிட முடியாது.

*சாப்பாடு கட்டிக் கொண்டு போய் பீச்சை குப்பை மேடாக்கியதில் பெரும்பங்கு தினத்தந்திக்கே.

*தினத்தந்தியை துண்டு துண்டாக கிழித்து பெட் பாட்டில், ஃப்ளாஸ்க் ஆகியவற்றில் போட்டு நீறூற்றி ஒரு இரவு ஊறவைத்து அடுத்த நாள் நன்றாகக் குலுக்கி கழுவிப் பாருங்கள். கறை என்பதே இருக்காது.

*துணிகளில் எண்ணெய்க் கறை இருப்பின் தினத்திந்தி பேப்பரை அதன் மேல் வைத்து அயர்ன் செய்தால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.