Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Sunday, June 13, 2010

இரங்கல்

நேற்றைய காலை ஓர் அதிர்ச்சியுடன் தொடங்கியது. பின்னிரவில் சிரித்தபடி பேசி விடைபெற்ற சிங்கை பிரபாகரின் உடைந்த குரல் பதற வைத்தது. 

ஆம்! இரண்டு வாரங்களுக்கு முன் தொலைபேசியில் பேசியபோது முன்பின் அறிமுகமில்லாவிடினும், வாஞ்சை கலந்த மரியாதையோடு ‘அண்ணன் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்கைய்யா, பேசியதில் மிக்க மகிழ்ச்சிங்கைய்யா’ என்று உரையாடிய, பிரபாகரின் இடுகை மூலம் நம் அனைவருக்கும் அறிமுகமான திவாகர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என அறிந்தபோது நம்பவே முடியவில்லை.

மூளை ரத்தக் கசிவு, இரைப்பை செயலின்மை காரணங்களால் தம்பி திவாகர் பிரபாகரின் குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். 


திவாகர்

பிரபாகருக்கு என்ன ஆறுதல் சொல்ல? தொலை பேசியில் பேசும்போதெல்லாம் ஒரு முறையாவது “தம்பி இருக்கான்யா! அவன் எல்லாம் பார்த்துக்குவான்யா” என்று தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற சொலவடையை வாழ்க்கையாய் வாழ்ந்தவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல? தந்தையை இழந்து வாடும் மூன்று சிறுமொட்டுக்களுக்கு என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும். 

ஆனாலும், இந்த நிலையில் இச்சிறுவயதில் இறைவனடி சேர்ந்த அந்த நல்லாத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் பிரபா அவர்களின் குடும்பத்துக்கு நம் ஆறுதலையும் சொல்லிக் கொள்வோம்.

 “இன்றைய இழப்பைத்தாண்டி எதையும் அறிவது கடினம்
  இனிய நினைவுகள் உன்னை அமைதிப் படுத்தும் நண்பா”

மீண்டு வா பிரபாகர்! திவாகர் உன் எழுத்துக்களில் உயிரோடுதான் இருக்கிறான். 

 உன் இழப்பின் வேதனையோடு
வலையுலக நண்பர்கள்.