Showing posts with label ஏக்கம். Show all posts
Showing posts with label ஏக்கம். Show all posts

Wednesday, May 12, 2010

மனம் விரும்புதே..

ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு

விரலில் மாட்ட வாகாய் மூலையில்
உடைத்த கல்லு சிலேட்டு

காலிகாட் பல்பொடி டப்பாவில்
சேர்த்து வைத்த பலப்ப சொத்து

வெட்டும்புலி, குயிலென
விதவிதமாய் மேச்சஸ் லேபில்

ஒருபுறம் தலை சாய்த்து, நாக்கு துருத்தி
ஒரு மூக்கொழுக வீட்டுப்பாடமெழுதியபடி வரும் நண்பன்

இழைப்புளியில் தேய்த்த ஐஸ் தூளில்
கலர் சர்பத் தெளித்த சிறுகிண்ணம்

கொடுக்காப்புளி, புளியம்பழம்,
மரவள்ளி, பனம்பழம், கிழங்கு

சேமியா பாலைஸ், பஞ்சுமிட்டாய்
கமருகட்டு, கல்ல உருண்டை

வாச்சு, பிளேனுக்கு வழியின்றி
இரண்டு காசுக்கு மோதிரமேனும் சவ்வு மிட்டாயில்

தள்ளுவண்டிப் பொட்டியில் ரெண்டு வரி
எம்ஜியார் பாட்டு முடிய தேம்பியழும் சிவாஜி படம்

மீதியை வெள்ளித்திரையில் காணச் சொல்லும்
கலர் நோட்டீஸ் வீசும் மாட்டுவண்டியின் பின் ஓட்டம்

ஐஸ்பாய், ஏழாங்கல், முதுகு பஞ்சர்
பச்சக் குதிரை, கில்லி, பாண்டியாட்டம்

பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
மணியொலிக்க வரும் சோன்பப்டி

மணலும் வயரும் வலை ஏரியலும்
கொண்டு செய்த டெலிஃபோன் இயர்பீஸ் ரேடியோ

முழுப் பௌர்ணமி இரவு மொட்டைமாடியில்
மூணு வீட்டு குழம்பு கலந்த மொத்தைச் சோறு

காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்

கஞ்சி மொட மொடப்பில் கரிப்பொட்டி வாசனையுடன்
காக்கி வெள்ளை டவுசரும் சட்டையும்

வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து
பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்

ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!

பலப்பம்=ஸ்லேட்டுக் குச்சி, ஐஸ்பாய்= ஐ ஸ்பை மேச்சஸ் லேபில்=வத்திப் பெட்டி மேல் ஒட்டும் படம்.
~~~~~~~~~~~~