பதிவுலகம் நம்மில் பலருக்கும் ஒரு குறிப்பாக, நம் சிந்தனையைப் பகிரும் தளமாக, பொழுது போக்காக அமைகிறது. என்னதான் அறச்சீற்றம், சமூக சிந்தனை என்று எழுதினாலும், உண்மையில் அனைவருக்கும் பயன்படும் விதம் இந்த ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள் வெகுசிலரே. அதிலும், பதிவர்களுக்கு மட்டுமன்றி, கணினி பயன்படுத்துவோருக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கும், பயன்பாட்டுக்கும் உதவும் இடுகைகளை மட்டுமே வெளியிடுவோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இதற்குப் பின்னான உழைப்பு நமக்குத் தெரிவதில்லை. தன்னுடைய நாளாந்த வேலைகளிடையே தேனீ மாதிரி தேடித்தேடி நமக்குத் தரும் இடுகைகள் அடுத்த சில நிமிடங்களில் வேறொரு பதிவரின் தளத்தில் தன் சொந்த இடுகையாக வெளிவரும் அவலமும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
திரு சூர்யாகண்ணனின் கணினி பயன்பாட்டு இடுகைகளைப் படித்து பயன் பெற்றவர்கள் ஏராளம். அவரின் இடுகைகள் காபி பேஸ்ட் செய்யப்பட்டதுடன், தினத்தந்தியில் அவருக்குத் தெரியாமலே யாரோ அனுப்பியிருந்த அவலமும் கூட நடந்தது. இத்தனையும் மீறி, அவர் தளராமல் இடுகைகளைப் பகிர்ந்து வந்திருக்கிறார். அலெக்ஸா ராங்கிங்கில் வெகு விரைவில் ஒரு லட்சம் இலக்கை அடைய சமீபித்திருக்கும் நேரம் இது. 92237 என்பது ஒன்றே போதும் இதன் பின்னான உழைப்பைக் கூற.
அடுத்தவர் உழைப்பைச் சுரண்டுவது வேறு. அதன் பலனை அழிப்பது என்ன ஒரு நீச்சத்தனம்.
மின்னஞ்சல் என்பதும் நம் அனைவருக்கும் உயிர்நாடி போல் ஆகிவிட்டது. இன்று காலை சூர்யாவிடமிருந்து வந்த மெயில் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஆம். அவரின் பதிவு மட்டுமல்ல, ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று மெயில் செய்தார்.
அவருடைய இமெயில் முகவரிக்கு மெயில் செய்தால் அத்தகைய பயனர் கணக்கில்லை என்று திரும்புகிறது. இது குறித்து யாராவது விடயமறிந்தவர்கள் உதவுங்களேன். திரு உண்மைத்தமிழனின் பதிவு முடக்கப்பட்டு பிறகு கிடைத்தது போல் இதுவும் கிடைத்தால் பயன் பெறப்போவது நாம்தான். அதிலும் சூர்யாகண்ணனின் மின்னஞ்சல் மிக முக்கியமானதாகும். அவருடைய பல தகவல்கள் அதில்தான் இருப்பதாகக் கூறுகிறார்.
இத்தனை அதிர்ச்சியிலும் தன்னுடைய பேக்-அப்பிலிருந்து கணினி சம்பந்தமான இடுகைகளைப் பகிர http://sooryakannan.blogspot.com/ இந்த வலைத்தளத்தை தொடங்கியிருக்கிறார்.
இத்தருணத்தில், அவருக்கு உதவுவது நம் கடமை. இழந்த அவரது கணக்குகளை மீளப்பெற உதவக்கூடியவர்கள் வழிமுறையையோ, தொடர்பு கொள்ளவேண்டிய தகவலை கொடுங்களேன்.
மற்ற பதிவர்களும், இந்த இடுகையின் சுட்டியையோ இது குறித்தோ தன் பதிவில் குறிப்பது பலரையும் சென்றடைவதன் மூலம் சூர்யாவுக்கு உதவமுடியும்.