Friday, July 30, 2010

கேரக்டர்-மூர்த்தி.

கர்நாடகாவின் வனப்பகுதியில் இருக்கும் ஸக்லேஷ்பூருக்கு பதவி உயர்வோடு மாற்றம் என்றதும் வேளா வேளைக்கு வக்கணையாய்த் தின்று கொழுத்து, பாரீஸ் கார்னர் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மினர்வா தியேட்டரில் 12.00 மணி காட்சி பார்த்து, தினம் ஒரு நாவல் படிக்கும் சுகவாழ்வுக்கு வந்தது கேடு.

ஹூம்! டிவிஷனல் அக்கவுண்டண்டா? ஜாக்கிரதை. எஞ்ஜினீயர் எப்படி விசாரிச்சியா என்று எழவு வீட்டில் துக்கம் கேட்கிறார்போல் அக்கரையாக சுமையேற்றினார்கள்.

விசாரித்ததில் அதிகாரி நல்லவர்தான், ஆனால் லீவ் கொடுக்க மாட்டார், சொல்லாமல் எங்கேயும் போகமுடியாது, கொஞ்சம் முறைத்தால் கான்ஃபிடென்ஷியல் ரிப்போர்ட்டில் கை வைத்து விடுவார் என்றெல்லாம் கேட்ட பிறகு ஊரைப்பற்றியும், அதிகாரியைப் பற்றியும் ஒரு உருவகம் பயமுறுத்தியது.

திங்கள் காலை ராகுகாலம் பார்த்து, கையோடு கொண்டு போயிருந்த யாமிருக்க பயமேனிடம் மனு போட்டு சரியாக 9.01க்கு கிளம்பி அலுவலகம் சென்றால் அப்படி ஒரு வரவேற்பு. அந்தப் பதவிக்கு அப்படி ஒரு மரியாதையா என்ற வியப்பு முதல் முறை உறைக்க ஆரம்பித்தபோது பயமும் கூடவே வந்து தொலைத்தது. சள சளவென்றிருந்த அலுவலகம் ‘பந்த்பிட்டா நன்ன மக’ என்ற நக்கலான எச்சரிப்பில் மரண அமைதியானது.

வந்து நின்ற ஜீப்பில் இருந்து இறங்கிய உருவத்துக்கும், என் மனதில் இருந்த வில்லனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஏறக்குறைய என் உசரம், என்னை விட தீய்ந்த நிறம், குறுகுறுவென அலைபாயும் குரங்குக் கண்கள், அதைப் போலவே வெடுக் வெடுக்கென எட்டிப்பார்த்து உள்ளே போகும் நாக்கும். எப்படி சிரிக்காமல் இருந்தேன் என்பது இன்று வரை புரியவில்லை. அவர்தான் மூர்த்தி.

போய் வணங்கி, புதிதாக வந்திருக்கும் அக்கவுண்டண்ட் என்றவுடன்,

‘நின்னெசுரு ஏனு?’ (பெயர் என்ன?)

 ‘எல்லிந்த?’ (எங்கேயிருந்து வந்திருக்கிறாய்)

‘நினகே கன்னட கொத்தாகத்தா’ (உனக்கு கன்னடம் தெரியுமா?)

பேரும், சென்னையும், ‘சொல்பவும்’ சொல்லி ஜாயினிங் ரிப்போர்ட்டும், ட்ரான்ஸ்ஃபர் அப்ளிகேஷனும் ஒரு சேர நீட்ட வந்தது வினை.

‘நனிக ட்ரான்ஸ்ஃபர் பேடாந்த பருது கொட்ரீ! ஹாங்காதரே தொகள்தினீ!இல்லாந்தரே நிம்ம ஆஃபிசரத்தர மாத்தாட்தினி’ (எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வேண்டாம் என எழுதிக் கொடு! அப்படியானால் சேர்த்துக் கொள்கிறேன். இல்லையெனில் உன் அதிகாரியிடம் பேசுகிறேன்) என்றார்.

அய்யா! சாமி! இது ரிஜிஸ்டர் செய்வதற்குத்தான். முறை வரும்போதுதான் டிரான்ஸ்ஃபர் கிடைக்கும் என்று கெஞ்சினாலும், ‘நீவு ஒரகட இர்ரீ! கரீத்தினி’ (நீ வெளியே இரு! கூப்பிடுகிறேன்) என்பது பதிலானது. அரைமணி கழித்து உனக்கு வேறு இடத்தில் உன் அதிகாரி போஸ்டிங்க் தருவார், நீ பெங்களூர் போய்ப் பாரு என்று அலைக்கழித்து நான் திரும்ப இவரிடமே சேர நேர்ந்தது பெரிய சோகக்கதை.

திரும்ப வந்ததும், ‘ஏனு மனஸ்னல்லி இட்கோபேடா காணோ! லெட்ஸ் வர்க் அஸ் அ டீம்’ என்றால் அப்பவேண்டும் போல் வருமா வராதா? சார்! வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி ஊருக்கு போய்விட்டு திங்கள் காலையில் வந்து விடுகிறேன் சார் என்றால், ‘கல்ஸா இத ரீ! ஹோகக்காகல்லா’ (வேலையிருக்கிறது போக முடியாது என்பார்). சனிக்கிழமை காத்துக் காத்து விசாரித்தால், இவர் ஊரிலேயே இருக்கமாட்டார்.

லீவ் அப்ளிகேஷன் தனியே நீட்டினால், ரிஜக்டட்தான், அலுவலகத் தபாலோடு சேர்த்து அனுப்பினால் சேங்ஷனாகி வரும். அப்படி சாங்க்‌ஷன் செய்ததையும் வாங்கி கிழித்துப் போட்டு விடுவது தெரிந்து, ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு அய்யா எகிறும்போது நீட்டி பல்ப் வாங்கினாலும், அசராமல், சிரித்தபடி லீவுக்கு பொறுப்பான அலுவலரை ஒரிஜினல் எங்கே என்று திட்டுவார்.

பெரும்பாலும் காண்ட்ராக்டர் பில், இரவு 12 மணிக்கு மேல் கையொப்பமிட்டு, ப்யூன், லாரியில் போய் அரிசிக்கரையில் இறங்கி, பின் ரயிலில் போய் பெங்களூரில் சேர்க்க வேண்டும். ஒரு முறை கன மழையில் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து விட, ஜீப் ஹெட்லைட்டை ஆன் செய்து அதன் முன் டேபிளை இழுத்துப் போட்டு பில்லை அனுப்ப வைத்த கடமை வீரர். அதன் பிறகு பில் என்றாலே, டேலைட்டா, ட்யூப்லைட்டா ஹெட்லைட்டா என்று கேட்குமளவுக்கு ஆனது.


குடித்திருப்பவரைக் கண்டால் பயமென்பதால், குடிப்பழக்கம் இல்லாதவர் கூட கொஞ்சம் சாராயத்தைத் தெளித்துக் கொண்டு, ‘பங்ளூர் ஹோபேக்கு! டூட்டி கொட்ரீ சார்’ (பெங்களூரு போக வேண்டும். டூட்டி கொடுங்கள் சார்) என்றால், பதைத்து எழுந்து, ‘டி.ஏ.! இவனிக டூட்டி கொட்டு கள்ஸி பிட்ரீ! ஒளகட யாக்க பிடுத்தீரா!(இவனுக்கு டூட்டி கொடுத்து அனுப்பிடுங்க. ஏன் உள்ள விடுறீங்க) என்று அலற வெளியே வந்தவன், கண்ணடித்து சிரித்தபடி போவான்.


நான்கு மகள்களும் ஒரு மகனும் அவருக்கு. மூத்த மகளுக்கு 28 வயதாகியும் திருமணமாகவில்லை. பள்ளி செல்லும் நேரம் தவிர கடைசி பெண்ணும் வீட்டை விட்டு எங்கும் வரமுடியாது. அவ்வளவு கட்டுப்பாடு. ட்ரைவர் மூலம் விபரம் கசிந்ததும் நம்பவே முடியவில்லை. இத்தனைக்கு மாதம் இரண்டு பேராவது வந்து பெண்பார்த்துப் போவார்கள்.

பெண்பார்த்து முடித்ததும், அய்யா பையன் வீட்டுக்குச் செல்லும் நேரம் இரவு 11 மணி. (அந்த நேரத்தில் பையன் தூக்கத்திலிருந்து எழுந்து வர வேண்டும்.)

மெதுவாக பேச்சுக் கொடுப்பார். (குழறாமல் பேசுகிறானா என்று கண்டு பிடிக்கிறாராம்.) சற்று நேரம் பேசிவிட்டு, வீடு சொந்த வீடா? கடன் இருக்கிறதா? இத்தியாதி விசாரணையாவது பரவாயில்லை. ‘நோடப்பா! குடித்தியா?சிகரட் அப்யாசா?பேக்காடுத்தியா?’(பாருப்பா, குடிப்பியா? சிகரட் பழக்கமிருக்கா? சீட்டாடுவியா?) என்றெல்லாம் கேள்வி கேட்டால் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டாமல் என்ன செய்வார்கள்?

ஒரு முறை இன்ஸ்பெக்‌ஷன் வந்த அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அவர் கிளம்பிப் போனதும் அரையிருட்டில், ட்ராக்கில் விடுவிடுவென கிளம்பி நடந்தார். கூட இருந்தவர்கள் பின் தொடர்ந்து நடக்க, ஹேமவதி ஆற்று ப்ரிட்ஜில் பாதி உடம்பை நுழைக்கவும் பதறிப்போய் இழுத்துப் போட்டால், குழந்தை மாதிரி அழுதார்.

‘நன்ன கர்மா! மனேகே ஹோதரே ஹெண்ட்தி பொய்த்தாளே. இல்லி சாயபவரு பொய்த்தார! சத்தோக்தினி பிட்ரீ’(என் கருமம். வீட்டுக்கு போனால் பெண்டாட்டி திட்டுறா. இங்க அதிகாரி திட்டுறார். சாவரேன் விட்டுடுங்க) என்று சீன் போட்டதை பிற்பாடு சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.

சார்! எனக்குத் திருமணம். 15 நாள் லீவ் வேண்டுமென பத்திரிகையோடு போய் நிற்கிறேன். வாங்கிப் பார்த்துவிட்டு, ‘லீவ் கொடக்கில்லா ரீ, கல்ஸா இத’ என்று கிளம்பிப் போய் விட்டார். செய்வதறியாது திகைத்திருக்க, இரவு எட்டு மணி வாக்கில் வீட்டிலிருந்து ஆள் விட்டு அழைத்தார்.

‘யாவாக மதுவே!’(எப்போது கலியாணம் என்று கேட்டு) இரண்டு நாளுக்கு மட்டும் லீவ் அப்ளிகேஷன் தரச் சொன்ன போது கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. விதியே என்று எழுதிக் கொடுத்தவுடன், சாங்ஷன் செய்து விட்டு, நமட்டுச் சிரிப்போடு பார்த்தார்.

பிறகு, தன்னுடைய வீட்டுக் கடன் அப்ளிகேஷனை எடுத்துக் கொண்டு இன்றே கிளம்பி, அடுத்த நாள் பெங்களூரில் ஒரு கையெழுத்து வாங்கி, மதியம் புறப்பட்டு சென்னை சேர்ந்து கலியாண வேலை நடுவே, இதையும் சேங்ஷன் செய்து பெங்களூரில் சேர்ப்பது வரையிலான காலகட்டம் டூட்டியாக சேங்ஷன் செய்கிறாராம். இதில் ‘சந்தோஷவாய்த்தேன் ரீ” என்ற கேள்வி வேறு.

பெங்களூர் அருகில், தன் சொந்த வீடு கட்டிய பிறகு, இதர அலுவலர்களின் கவலையேதுமின்றி, அலுவலகம் ஸக்லேஷ்பூரில் தேவையில்லை, பெங்களூருக்கே மாற்றி விடலாம் என்று மாற்ற வைத்த நல்லாத்மா. எனக்கு வசதியாக ஒரு நாலு மாதம் கழிந்தாலும், மற்றவர்கள் பட்ட தவிப்பைச் சொல்லி மாளாது.

என் முறைக்கு பணிமாற்றம் வந்தும் என்னைப் போலவே என்னை ரிலீவ் செய்ய வந்தவனை காத்திருக்க வைத்து, இவன் சூப்பரா ஆணி புடுங்கறான். இவனை விட முடியாது என்றெழுதி வாங்கிக் கட்டிக் கொண்டுதான் விடுவித்தார்.

யாருக்கும் பெரும் பாதிப்பின்றியே அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகவே இருந்து விட்டார். ரிடையர்ட் ஆகி சிறிது காலத்தில் இறந்தும் போனார். கடைசி வரை ஒரு மகளுக்கும் திருமணம் செய்யவில்லை. மகனும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.

Tuesday, July 27, 2010

வடை கொத்திப் பறவை!...

(டிஸ்கி: திரையுலக காமெடி பீசும், பதிவுலக காமெடி பீசும் [என்னையச் சொன்னேன் என்னையச் சொன்னேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.
டிஸ்கிக்குள்ளையே டிஸ்கி போட விட்டாய்ங்களே..]  சந்திச்சி ரொம்ப நாளாச்சா அதான்)

வடிவேலுவைப் பார்த்து ஆளத்தேளப் புடிச்சி, தொடர் எழுதணுமிங்கற நப்பாசை வந்தா படும் பாடு இது. அப்பாயிண்டு வாங்கி அண்ணன பார்க்க ஆட்டோ பிடிச்சி போய்ட்டிருக்க

( செல்லில் பெல்லடிக்கிறது)

கதிர்: வணக்கமண்ணே.

வா.பா: வணக்கம் கதிர். எங்க வெளிய இருக்கீங்களா. காலைல இருந்து காணோம்.

கதிர்: இஃகி இஃகி. உங்க ஊர்ல இருக்கமண்ணே. 

வா.பா. அப்படியா? எங்க?

கதிர்: அசோக்நகர்ல இறங்கி ஃபோன் பண்ணேன். நீங்க எங்க. 

வா.பா. ஹி ஹி. வடிவேலுவை பார்க்க கிளம்பிட்டிருக்கேன். ஒரு டீ சாப்டு நில்லுங்க பில்லர் கிட்ட. பிக்கப் பண்ணிக்கறேன்.

(அடையாளம் கண்டு ஆட்டோவில் ஏத்த, ஆரூரன்)

ஆரூரன்: தென்னுங் நாட்டாம. ஈரோட்டில இருந்து பின்னாடியே வரேன். என்றா யாரோ வர மாதர இருக்கேன்னு செத்த அக்கம் பக்கம் பாக்க மாட்டிங்களா? ஏனுங் பாலாண்ணா. இந்த நாயத்த கேளுங்க.

கதிர்: அட! நம்மள யாரு ஃபாலோ பண்ணப் போறாங்கன்னு தேமேனு நான் வந்து சேர்ந்தேன். நீங்க எங்க மொதலாளி?

ஆரூரன்: தான் சொன்னேன்ல. உங்க பின்னாடியே வந்துட்டேன். எங்க போறீங்க?

வா.பா: வடிவேலுவை பார்க்க.

ஆரூரன்: அட! நானும் வாரனுங்ணா. 

(போய் இறங்க, பின்னாடியே ஒரு கால் டாக்ஸியில் பழமை)

பழமை: அட என்னுங் மாப்பு. டீக்கடையில மாப்பு மாப்புன்னு கூப்பிட்டிட்டிருக்கேன் கண்டுக்காம மூணு பேரும் கிளம்பிட்டீங்க. எங்க வந்தீங்க மூணு பேரும்?

வா.பா. வாங்க வாங்க. நீங்க எங்க இந்த பக்கம். இது வடிவேலு வீடு பார்க்கலாம்னு வந்தா நீங்க இங்க எப்படி?

பழமை: சரியாஆஆப் போச்சி போங்க. நானு அப்துல்லா, ரம்யாக்காவல்லாம் பார்த்து அழைப்பு கொடுத்துட்டு அப்புடியே வடிவேலு அண்ணனையும் பார்க்கலாம்னு அப்துல்லாட்ட கேட்டுகிட்டிருக்க தானா வந்தாச்சி. சரி வாங்க போவம்.

வடிவேலு: ஆஆஆக்கா. வாங்க வாங்க. எம்புட்டு நாளாச்சி பார்த்து. எல்லாம் ஒன்னா வந்திருக்கீங்க. என்னா விசயம். வாங்க உள்ள உக்காந்து பேசுவம்.

வடிவேலு: உக்காருங்கப்பா. என்னா விசயமண்ணே. எல்லாம கூடி வந்திருக்கீங்க. அண்ணன் என்னமோ உதவின்னாரு. மொத்தமா வந்திருக்கறத பார்த்தா டொனேசனு அது இதுன்னு...

வா.பா: ஏண்ணே! சொன்னேன்ல துட்டு, சான்செல்லாம் இல்லைண்ணே.  நான் எனக்காக கேக்க வந்தேன். வழியில இவங்கள எல்லாம் பார்த்தேன். சரி அண்ணன பார்த்துட்டு போலாம்னு பாசமா கூட்டிட்டு வந்தேண்ணே.

வடிவேலு: ச்செரி ச்செரி சொல்லுங்க. நான் என்ன யெல்ப் பண்ணனும்.

வா.பா: ஒன்னுமில்லண்ணே. வடை கொத்திப் பறவைன்னு ஒரு தொடர் எழுதப் போறண்ணே. அது ஆவில வரதுக்கு வழி பண்ணனும்னே.

வடிவேலு: அட காக்கான்னு சொல்லிட்டு போவேண்டியதுதானே. அதென்ன வடை கொத்திப் பறவை. அது ஆவில வரதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்.

வா.பா. இல்லண்ணே. நீங்க மனசு வெச்சா முடியும்ணே. எனக்கு பீலா பீலாவா வருதுண்ணே. அத இப்புடித்தாண்னே தீத்துக்க முடியும். 

வடிவேலு: யோவ். என்னமோ மாட்டத் தண்ணிக்குள்ள எறக்கி வெல பேசிட்டிருக்க? அது என்ன ஏதுன்னு சொன்னாத்தானே யெல்ப் பண்ண முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.

வா.பா.: இந்தாங்கண்ணே. மூணு வார ஆ.வி. இதப் படிங்கண்ணே. 

வடிவேலு: (படித்துவிட்டு) ஏப்பா? இப்புடியெல்லாமா எழுதுவாய்ங்க? எனக்கு ஒரு பத்து படத்துக்கு காமெடி சீன் கிடைச்சிடும் போலயே. ச்சரி நீ சொல்லு. நீ என்ன பீலா உடப்போற?

வா.பா. பீலால்லாம் இப்புடி உட்டாலக்கிடி பீலா இல்லண்ணே. கொஞ்சமாச்சும் ட்ரூத் வேணும்னே. மணிரத்னம் சார் கால்ஃப் ஆடுறப்ப என்னையும் அங்க கூட்டிப் போங்கண்ணே. நான் பந்து பொறுக்கி போட்டுட்டு மணியும் நானும் கால்ஃப் ஆடினோம். பெனால்டில ஜெயிச்சிட்டாருன்னு சொல்லிப்பேண்ணே. 

வடிவேலு: கால்ஃப்! நீய்யி!! அந்த மட்டை உயரமிருப்பியா. நீ ஆடினன்னா எவன் நம்புவான்.

வா.பா. தோ பாருண்ணே. எனக்கும் தொப்பையிருக்குண்ணே. அப்புறம் நான் கூட ஒரு இங்கிலீசு புக்கு படிச்சிட்டு அதுக்கு மொழி பெயர்ப்பு போட்டேண்ணே. அப்புறம் ஜெர்மன் மொழில டங்கே, உந்த், ஷோன், சண்டாக் எல்லாம் தெரியும்ணே. மதுராந்தகத்துக்கு போய்ட்டு மாண்டி நீக்ரோ போனேன்னு சொல்லிக்குவண்ணே. ப்ளீஸ்ணே.

வடிவேலு: இருய்யா இருய்யா. நீம்பாட்டுக்கு என்னமோ அடுக்கிக்கிட்டு போற. 

கதிர்: அல்லோ! அப்புறம் நாங்கல்லாம் எதுக்கு வந்திருக்கோம். சொல்லியாச்சில்ல. அப்புடி மவுனமா உக்காருங்க. நம்ம பிட்ட கேக்கட்டும். அண்ணே! சும்மா கால்ஃப வெச்சி படைப்பாளின்னு சொல்றதில்லண்ணா. தோற்றம் முக்கியம். இந்தாளு ஜீன்ஸ் போட்டிருக்காரா? டி.ஷர்ட் போட்டு இன் பண்ணியிருக்காரா?

அத விடுங்க. கார்த்தி கிட்ட கேட்டு கை கொள்ளாம ஒளகப் படம் ஆட்டையப் போட்டு சப்டைட்டில பார்த்து விமரிசனம் எழுதியிருக்காரா? இல்ல தண்ணியடிப்போர் நலவாழ்வுக்கு வழிகாட்டி இடுகை போட்டிருக்காரா? இந்தாளுக்கு தெரிஞ்சதெல்லாம் சீட்டுகட்டுல இருக்கிற க்ளப்பு. அந்தாளு மாதர யூத்தா இருக்காரா? வேணும்னா தலைப்புக்கு நன்றின்னு போட்டுக்குறேன். நான் எழுதறத போட சொல்லுங்கண்ணா.

வடிவேலு: அதும் நியாயமாத்தான் படுது. அப்ப எல்லாரும் இதுக்குதான் வந்திருக்கியளா? ஏந்தம்பி!என்னமோ கண்ண உருட்டிகிட்டு குறுகுறுனு பார்த்துட்டிருந்தா எப்புடி. நீங்க சொல்லுங்க.

ஆரூரன்: இல்லீங்ணா! இவங்க என்ன தகுதியிருக்குன்னு போட்டிக்கு வராங்கன்னு தெரியல. டி சர்ட்டு போட்டா சரியாப் போச்சா? மைனர் மாதிரி பட்டன தொறந்து விட்டுகிட்டு உள்ள போட்டிருக்கிற செயின் தெரிய வேணாமா? பாலாண்ணன் மூஞ்சப் பாருங்க! திருவிழால தொலைஞ்சா மாதர ஒரு லுக்கு. நாட்டாமைய கேக்கவே வேணாம். அவரு பாப்பாவ ஸ்கூல்ல விடப் போனா, ஒண்ணாப்பு டீச்சர் புடிச்சி க்ளாசுக்கு போவாம எங்க சுத்தறன்னு மெரட்டுச்சு. அந்தாளு மாதிரி ஒரு கரடு முரடான லுக்கு வேணாமா? என்னைய விட்டா வேற யாருக்கு சரி வரும் சொல்லுங்க?

அத விடுங்ணா. இவங்களுக்கு நாயைப் பத்தி தெரியுமா? நான் காலையில டீ குடிக்கலாம்னு இறங்கினா எந்த நாய் வாலாட்டும், எந்த நாய் தலைய தூக்கி பார்த்துட்டு அட சீ! நீதானான்னு படுக்கும், எந்த நாய் குலைச்சு குட்மார்னிங் சொல்லும், ஊட்டுக்குள்ள இருக்கிற நாய் அவசரப்பட்டு குலைச்சிட்டு கதவிடுக்கு வழியா பார்த்து சாரி சொல்லும்னு நாயோஃபோபியா தெரியுமா? 

வடிவேலு: ஒருத்தனுக்கு ஒருத்தன் வாங்கலில்லாம பாயிண்ட புடிக்கிறாய்ங்களே. நான் என்ன பண்ணுவேன். தம்பி! பழமை தம்பி நீங்க சொல்லுங்க.

பழமை: ஒரு மணித்துளி அண்ணே. அமெரிக்காவில இருந்து அழைப்புண்ணே. நம்ம தளபதிண்ணே. சொல்லுங்க தளபதி! என்ன விசயம்? என்னுங்? ஆமாங். வடிவேலு அண்ணன் குரல்தான். அவங்க கிட்ட பேசணுமா? இருங்! கொடுக்கிறேன். ‘அண்ணே! நம்ம நசரேயன் தளபதிண்ணே’

வடிவேலு: அல்லோ! சொல்லுங்கண்ணே. அமெரிக்கால்லாம் எப்புடியிருக்கு. ஹாலிவுட்ல ஒரு காமெடி சீனு வாங்கிக் கொடுங்கண்ணே. கழுத ஆஸ்கார் ஒன்ன வாங்கிப் போட்டா கெடக்கும். என்னண்ணே? நான் எல்ப் பண்ணனுமா? சொல்லுங்கண்ணே. மனுசன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவாம முடியுமா?

நசரேயன்: அண்ணே! வரலாறு முக்கியம்ணே. ஒரு பாண்டியனுக்கு இன்னோரு பாண்டியன் உதவாம, சேர, கொங்கு, பல்லவ பரதேசிக்களுக்கு உதவினான்னு ஆயிரும்ணே. அவிய்ங்களுக்கு என்ன தகுதியிருக்குண்ணே. அந்தாள மாதிரி தோழியிருக்கா? துண்டு போடத் தெரியுமா? மெக்ஸிகோகாரி  ‘ஓலா’ன்னு சொன்னா கெட்ட வார்த்தைன்னு சண்டைக்கு போவாய்ங்கண்ணே. 

ஒரு பயலுக்கும் நொங்கு தின்னத் தெரியாதுண்ணே. என் நண்பன் சொறிவுஜீவி என்னய ஜொள்ளோமேனியாக்குன்னு சொல்லுவாண்ணே. நொங்காலஜின்னு புதுசா ஒரு சப்ஜக்ட் சேர்க்குறோம். நீதான் தலைன்னு நியூயார்க் யூனிவர்சிடில கெஞ்சுறாய்ங்க. அதனால 'துண்டு தூக்கி நண்டு'ன்னு நான் எழுதறத போட சொல்லுங்கண்ணே.

வடிவேலு: அவ்வ்வ்வ்வ். ஏன்யா? ஏன்? 

பழமை : இஃகிக்கிக்கிக்கீ. என்னண்ணே கொழப்பிட்டாய்ங்களா? நானும் இவய்ங்க பழமைய கேட்டுகிட்டுதான் இருந்தேன். மாப்பு என்ன சொன்னாரு? ஜீன்ஸ்! அங்க பாருங்க. இவங்க சைசுக்கு ஜீன்ஸ் கிடைக்கலன்னு கிடைச்சத வாங்கி முட்டி வரைக்கும் வெட்டி ஆல்டரேசன் பண்ணி, மாவு மிசினுக்கு கட்டிவிட்ட துணி மாதர போட்டுகிட்டு நவீனம்னு சொல்லுறாய்ங்க. 

இந்த இடுகையப் பாருங்க. கோவைக்கு விமானமேறப் போனா காப்பிக் கடை தோழி கலியாணமாயிருச்சிங்களான்னு கேட்டுச்சி.சும்மா கால்ஃப் கால்ஃப்னு பேசினா ஆச்சா? என்னைய மாதிரி தொப்பி யாராச்சும் போட்டிருக்காங்களா. இவிங்கள்ளாம் கால்ஃப் குச்சிய இப்புடி புடிச்சா சுவத்துக்கு ஒட்டரை அடிக்கிறா மாதரயிருக்கும். 

கதிர்: ம்கும். காலையில நாலரை மணிக்கு தொப்பிய போட்டுகிட்டு திரிஞ்சா அய்யோ பாவம்னு கேட்டிருக்கும்.

வடிவேலு: அட இருங்க. வெள்ளையா இருக்கிறவரு பொய் சொல்ல மாட்டாரு. 

பழமை: இவிங்கள்ள யாரும் எழுத்தாளரில்ல. என்னோட புத்தகம் அமெரிக்கால ரிலீஸ் ஆகி, இப்ப இந்தியால ரிலீசாக போகுது. அதெல்லாம் உடுங்க. எங்கப்புச்சிகிட்டயே, கதவத் தொறந்து வச்சாலும் நீலமலைக் காத்து வரமாட்டிங்குதுன்னு சொன்னவன் நானு. இப்பச் சொல்லுங்க. ஒழுங்கு மரியாதைக்கு ‘பழமை பேசும் வழமைன்னு’ நான் எழுதறத போடச் சொல்லுங்கண்ணே. 

வடிவேலு: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. கண்ணகட்டுதே.  ச்சேரி! இருங்க பக்கிகளா. கேட்டுப் பார்க்கிறேன். நானே சிந்திச்சி யார ரெகமன்சன் பண்ணலாம்னு பார்க்கிறேன். அப்புறம் அண்ணன் மேல கோவிச்சிக்கக் கூடாது சரியா?

(எழுந்து போய் சிறிது நேரம் கழித்து)

வடிவேலு: சக்ஸஸ். சக்ஸஸ். தம்பிகளா! அண்ணன் நல்லா யோசனை பண்ணேன். உங்கள்ள ஒருத்தர ரெகமன்சன் பண்றத விட, நானும் பதிவர்தானே! 'மீ உருட்டி வண்டுன்னு’ நானே எழுதறேன்னு கேட்டேன். சரின்னுட்டாங்க.

வானம்பாடிகள், கதிர்,ஆரூரன்,பழமை,(ஃபோனில் நசரேயன்): ‘வட போச்சே’

வடிவேலு:  அத்த்த்த்த்த்து! பதிவரா லட்சணமா அதச் சொல்லிக்கிட்டே போய்க்கிருங்க.  போய் புள்ள குட்டிய படிக்கவைங்க போங்க. பேமஸ் பேமஸ்னு அலையாதீங்க. எனக்கு சூட்டிங்க் இருக்கு. வர்ட்டா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இடுகையைப் படித்த பிறகு)
அது சரி: போற போக்கப் பார்த்தா நான் ‘அய்யாங்..டொய்ங் தொடர்ந்து எழுதணும்னு ஆ.வில இருந்து மெயில் வருமோ:O))

Friday, July 23, 2010

நிஜங்கள் பிரசவிக்கும் அதிசுவாரசியம்


பிம்பங்கள் பிரசவிக்கும் சுவாரசியம் இங்கே


உறக்கம் தேடும் இரவுகளில் நெரிசல் இல்லாப் பயணங்களை விரும்பினாலும், உறங்கிப் பழகாப் பகல் பொழுதுப் பயணங்களில் ஒருவித சுவாரசியத்தை தொடர்ந்து தக்கவைப்பவர்கள் புதிது புதிதாய் தவிர்க்க முடியாமல் நாம் சந்திக்கும் மனிதர்களே. 

(பாலாசி: அதுக்குத்தான் குடுக்கிற காசுக்கு குறையில்லாம பகல் பஸ்ஸுல போறீங்களா? சைட்டடிக்கிறத என்னமா சொல்றாரு பாருங்க)

சில நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தருவது எதிர்பார்த்த நபர்களை சந்திக்க முடியாமல் போவது, அதே போல் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விதவிதமாய்த் தருவது எதிர்பாராத நபர்களை பொருந்தாத தருணங்களில் சந்திப்பது.

(வானம்பாடி: வாக்கிங் போறேன்னு போயி மொதலாளிய கழட்டி விட்டுட்டு ரயில்வே ஸ்டேஷன்ல சுத்தின கதை வந்தப்பவே நினைச்சேன். யார்ட்ட மாட்னீங்க மாப்பு?)

நம்மைச் சுற்றி மனிதர்களாக குவிந்து கிடக்கும் தேசத்தில், நம்மை எத்தனை பேருக்குத் தெரியும், நமக்கு எத்தனை பேரை நேரிடையாக அடையாளம் தெரியும். எங்கும் மனிதர்களாகத்தானே வியாபித்துக் கிடக்கின்றனர். ஆனாலும் அதில் எத்தனை சதவிகிதம் நம்மையும், நமக்கு பரிச்சயம் இருக்கின்றது.

(பாலாசி: இந்த நெனப்புதான் பொழப்ப கெடுக்கறது. என்னதான் நமக்கு தெரிஞ்ச மூஞ்சி யாருமில்லைன்னு உறுதிப்படுத்திகிட்டு லுக்கு விட்டாலும், தவறாம நம்மளத் தெரிஞ்சவன் ஆனா நமக்குத் தெரியாதவன் போட்டு குடுத்துடுவான்.)

நம் வீட்டின் அருகில் இருப்பவர்கள், அடுத்து நம் வீதியின் முதல் திருப்பம் திரும்பும் வரையில் இருக்கும் வீடுகளில் அதிகப் படியாக வீதியில் புழங்கும் நபர்கள், அதைத் தாண்டி பெரிய வீதிக்கோ, முக்கிய சாலைக்கோ வரும் போது, அதில் இருப்பவர்களில் பெரும்பாலும் நாம் முன்பின் அறியாத நபர்களாக இருக்கின்றனர்.

(வானம்பாடிகள்: ஹி ஹி. அது அப்புடியில்லடி மாப்பு. பாலாசி சொன்னா மாதிரி அவிங்கள உங்களுக்கு தெரியாது. ஊட்ல போய் போட்டு குடுப்பானுவோ. தங்கமணி வந்து வத்தி வச்சிடும். எத்தன வாட்டி இப்புடி மாட்டிகிட்டு வாங்கி கட்டிகிட்டு இங்க பேசறத பாரேன்)

தொடர்ந்து மனிதர்களைச் சந்திப்பது, மனிதர்களே இல்லாத நிசப்த தனிமை இதில் எது சுகம்? தெரிந்தவர்களைச் சந்திப்பதைக் காட்டிலும், காணும் இடம்தோறும் பல மடங்கு தெரியாத நபர்களை புதிதாய் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றோம். முன்பின் பார்த்திராத ஒரு மனிதரை புதிதாய் பார்க்கும் சுவாரசியத்திற்கு இணை ஏது?

(பாலாசி: ஆமா! ஆமா! ஒரே ஃபிகர எத்தன நாளைக்குதான் லைன் போடுறது. ஏனுங்க நீங்கள்ளாம் இப்புடி போட்டிக்கு வந்து கைடெல்லாம் போட்டா எங்க பொழப்பு என்னாறது)

நேரம் வாய்க்கும் போதெல்லாம் நீண்ட காலமாய் இருக்கும் அலுவலக வாசலில் நின்று வேகமாய் இயங்கும் சாலையில் பார்வையை ஏதோவொரு சுவாரசியம் தேடி மிதக்க விட்டுப்பார்த்தால், காலை நேரத்தில் கடந்து பல ஆயிரத்தில் ஓரிரண்டு பேர் மட்டும் ஏற்கனவே பார்த்த முகம் போல் தோன்றும்.

(வானம்பாடிகள்: காலையில ஆஃபீசில வேல வெட்டி பாக்கறத உட்டுபுட்டு தெருவில பராக்கு பார்க்கறது என்னங்கறேன். என்னாத்த சுவாரசியம் தேடுறது கார்த்தால. அது அது தின்னும் தின்னாம, ஊட்ல சண்ட, புள்ளைங்கள வெரட்டி அனுப்பிட்டு வேகு வேகுன்னு ஓடுனா இவருக்கு ஸ்வாரஸ்யம் கேக்குது. குளிக்க தண்ணியில்லாம முகம் கழுவிட்டு ஓடுறது இவருக்கு பார்த்த முகமாமா?)

அது தவிர்த்த நேரங்களில் புதிய புதிய முகங்கள் கண்களுக்குள் கலந்து.... கலைந்து போகின்றன. ஆச்சரியம் அதில் பெரும்பாலும் ஒரு முகம் போல் இன்னொரு முகம் இருப்பதில்லை., அதிகபட்சம் முக்கால் சதுர அடிக்குள் அடங்கிப் போகும் முகத்திற்குள் எத்தனையெத்தனை வகைகள்.

(பாலாசி: அதான் பொழுதன்னிக்கும் ஜிமெயில்ல ஆரஞ்சுல இருக்கோ? இவருக்கு அளந்துக்கோன்னு யாரு மூஞ்சிய காட்டுனா? )

நெட்டையோ குட்டையோ, பருமனோ ஒல்லியோ, சிவப்போ கருப்போ, பார்க்கும் விநாடியே கண்கள் அந்த நபரிடம் இருக்கும் குறிப்பிட்ட சிலவற்றை திருடி மூளைக்கு கடத்தி. அதனடிப்படையில் மனதிற்குள் இவர் இப்படிப் பட்டவராக இருக்கலாம் என்று வேகவேகமாய் ஒரு ஓவியம் படியும். சில நேரம் மிகத் தெளிவாக, சில சமயம் கலங்கலாக.

(வானம்பாடி:அட கண்றாவியே! ரகம் பிரிச்சில்லய்யா சைட்டடிக்கிறாரு. இதுல வேற குறிப்பிட்ட சிலத திருடறதாம். யப்பே! இது கசியறத விட கேவலமா இருக்குடி! மவனே ஒரு வாரத்துக்கு கட சோறுதாண்டியேய். வேல வேலன்னு சொல்லி பம்மாத்து பண்ணிட்டு ஆபீஸே கதின்னு இருக்கிற ரகசியம் இப்பல்ல தெரியுது)

முடி, காது, மூக்கு, கண்ணாடி, நரை, கன்னக் கதுப்பு, கழுத்து, பருத்த-வதங்கிய வயிறு, கைக்கடிகாரம், செல்போன், உடையணிந்த விதம், வெட்டப்பட்ட(படாத) நகம், காலுக்கு பொருந்தாத செருப்பு என எதையாவது மனதிற்குள் பதித்து அதையொட்டி ஒரு கணக்கு உள்ளுக்குள் மிக மிக வேகமாக எழுதப்பட்டு, பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலே அழிந்து போகும். அந்தக் கண நேர சுவாரசியம் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும்.

(பாலாசி: மொதல்ல இவருகிட்ட எது இல்லையோ அத பார்க்கிறாரு பாருங்க. வடிவேலு சொல்றா மாதிரி வால்ல்லிப்ப்ப்ப்ப்ப்ப வயசுதான் வேணுமாம். நரைச்சி, முடி குட்டையா, கன்னம் ஒட்டிப்போய், கழுத்தே இல்லாம, தொப்ப கேசு, ஷேப்பில்லாத வகுறெல்லாம் பதிவே செய்யாம எரேஸ் பண்ணிடுவாராம்)

மனிதர்களே இல்லாத நாட்களும், வீதிகளும், சாலைகளும், பயணங்களும் சிறிது நேரம் மனதிற்குள் அமைதியை பரவச் செய்யலாம், அந்த அமைதி கெட்டிப்படும் நேரத்தில், அமைதி அளித்த சுகம் நீர்த்துப்போய், மனிதர்களைச் சந்திக்காத தனிமை ஒரு வித வெற்றிடத்தை மனதிற்குள் கருவாக்கும், அந்த வெற்றிடம் கனமாக உருவெடுக்கும், அந்தக் கனமான தனிமை ஏதோ ஒரு இனம் புரியா பயத்தை மனதிற்குள் தோற்றுவிக்கும்.

(வானம்பாடிகள்: ங்கொய்யால. அன்னைக்கு மேம்பாலத்துக்கு பந்த்ன்னு ஆஃபீஸ்ல வந்து உக்காந்து காஞ்சி கருவாடாகி, மதியானம் சோத்துக்கு வழியில்லாம ராத்திரி உலை ஏத்த முன்ன போய் துண்ட போட்ட சோகக்கதை இதுதானா? பந்தன்னிக்கு வேலை புடுங்கறேன்னு புளுகிட்டு ஊட்டுக்கு போறதுன்னா பயம் வராம இருக்குமா)

எதன் பொருட்டேனும் அவ்வப்போது துளிர்க்கும் சுவாரசியமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

பாலாசி: என்னாது அடுத்த கட்டம். இப்புடி சைட்டடிச்சத வச்சி வசதிக்கு 11.30 மணிக்கு கஸ்ஸ்ஸ்ஸ்ஸிய விடுறதா
~~~

Monday, July 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V4.7


அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்...ப.சிதம்பரம்.

ஹி ஹி. அவரு என்னா அரசியல்வியாதியா? இதுக்கு ராஜீவ் என்னா? ஜெயவர்த்தன சொன்னத கேட்டிருந்தா போறாது?
_________________________________________________________________
இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். ப.சிதம்பரம்.

அட மொத்த கணக்க உடுங்க. கடைசி நாள் எத்தனபேரு? யாரெல்லாம் காரணம்னு சொல்லலாம்லங்க. வரலாறு முக்கியம் அமைச்சரே:)
_________________________________________________________________
இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... அவரேதான்.

அண்ணோவ். வெவரம் ப்ளீஸ். ராடார் வச்ச கணக்கெல்லாமும் சேர்த்தா?
_________________________________________________________________
 ஆக்கிரமிக்கப்படவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய செயற்படுமாறும் அவர்கள் வடக்கு கிழக்கு அரச அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்... அண்ணனேதான்.

ங்கொய்யால. குந்த குடிசையில்ல. அத புடுங்கிட்டு துட்டு தருவாராம். கோவணத்துல சொருகி வச்சாலும் ஆமிக்காரன் புடுங்கிட்டு உட்டுடுவானே. அகுடியா குடுக்குறாரு.
_________________________________________________________________
அவர்களது சொந்த வங்கிக் கணக்குக்களுக்கு நேரடியாகவே பணத்தினை அனுப்ப முற்பட்ட வேளை அவ்வாறு அனுப்ப முடியாது என்றும் பணம் தமது அரசின் ஊடாகவே கையளிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்தி.

அத்த்த்து! இவன் என்ன கேனையா. இவன் அடிச்சது போக மிச்சம் குடுப்பான். அத ஆமிக்காரனும், கோடாரிக்காம்பும் புடுங்கிட்டு உட்டுரும்.
_________________________________________________________________
இலங்கை தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்பவேண்டிய அவசியம் தற்போது இல்லை ...டலஸ் அழகப்பெரும.

பருப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையால் யாரும் காசு தரவேணாம்னு சொல்லுவானுங்களா பரதேசிங்க?
_________________________________________________________________
ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்

இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியல. உங்களை எவனாவது அடமானம் கேட்டான். வாங்கிக்கங்கடான்னு எல்லாரும் கால நக்குற திமிரு பேசச் சொல்லுது.
_________________________________________________________________
ஜெ., வாயில் வந்ததையெல்லாம் பேச வேண்டாம் : கலைஞர் எச்சரிக்கை

ஏனுங்க? எழுதி வச்சி படிச்சா பரவால்லையா? இல்ல அதும் ஆளும்கட்சிதான் பேசலாமா?
_________________________________________________________________
மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு

இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி.
_________________________________________________________________
புகாரை நிரூபிக்க ஜெ. தயாரா? கலைஞர் கேள்வி

அட ஏன் தலைவரே அவங்கள கேட்டுகிட்டு. பொய்ப்புகார்னு நாம நிரூபிச்சிட்டு போறது.
_________________________________________________________________
காங்., உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு

வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தாலும் இவரு கொடுக்கமாட்டாரு போலயே! இந்தாளு பேசாம இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.
_________________________________________________________________
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 

பதில் இருக்கும். அதில் நிஜமிருக்குமா?
_________________________________________________________________
மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா

சே போங்கப்பா ஜோக்கடிச்சிகிட்டு. அவுங்க இத்தாலிக்கே திரும்பி போனாலும் அவுங்கதான் காங்கிரசு. காங்கிரசுதான் அவுங்க. 
_________________________________________________________________
திருப்பதி நகைகள் மாயமாகவில்லை!

இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? உட்டா சாமி சேட்டுகிட்ட அடமானம் வெச்சிட்டு சீட்டாடி தோத்துட்டாரு மீட்டுகிட்டு வந்தோம்னு சொல்லுவானுங்க.
_________________________________________________________________
எந்த மந்திரி ஓட்டலில் பேருந்தை நிறுத்துவது: அரசு டிரைவர்கள் கேள்வி?

அட இது ஒரு பிரச்சனையா? போகும்போது ஒருத்தரு ஓட்டல் , வரும்போது ஒருத்தரு ஓட்டல். உங்களுக்கு ஓசில கெடைக்குதா அதப்பாருங்கப்பு. 
****************************

Saturday, July 17, 2010

அலெக்சா ரேட்டிங்கும் அல்லக்கைகளும்.

பதிவுலகம் நம்மில் பலருக்கும் ஒரு குறிப்பாக, நம் சிந்தனையைப் பகிரும் தளமாக, பொழுது போக்காக அமைகிறது. என்னதான் அறச்சீற்றம், சமூக சிந்தனை என்று எழுதினாலும், உண்மையில் அனைவருக்கும் பயன்படும் விதம் இந்த ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள் வெகுசிலரே. அதிலும், பதிவர்களுக்கு மட்டுமன்றி, கணினி பயன்படுத்துவோருக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கும், பயன்பாட்டுக்கும் உதவும் இடுகைகளை மட்டுமே வெளியிடுவோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதற்குப் பின்னான உழைப்பு நமக்குத் தெரிவதில்லை. தன்னுடைய நாளாந்த வேலைகளிடையே தேனீ மாதிரி தேடித்தேடி நமக்குத் தரும் இடுகைகள் அடுத்த சில நிமிடங்களில் வேறொரு பதிவரின் தளத்தில் தன் சொந்த இடுகையாக வெளிவரும் அவலமும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. 

திரு சூர்யாகண்ணனின் கணினி பயன்பாட்டு இடுகைகளைப் படித்து பயன் பெற்றவர்கள் ஏராளம். அவரின் இடுகைகள் காபி பேஸ்ட் செய்யப்பட்டதுடன், தினத்தந்தியில் அவருக்குத் தெரியாமலே யாரோ அனுப்பியிருந்த அவலமும் கூட நடந்தது. இத்தனையும் மீறி, அவர் தளராமல் இடுகைகளைப் பகிர்ந்து வந்திருக்கிறார். அலெக்ஸா ராங்கிங்கில் வெகு விரைவில் ஒரு லட்சம் இலக்கை அடைய சமீபித்திருக்கும் நேரம் இது. 92237 என்பது ஒன்றே போதும் இதன் பின்னான உழைப்பைக் கூற.

அடுத்தவர் உழைப்பைச் சுரண்டுவது வேறு. அதன் பலனை அழிப்பது என்ன ஒரு நீச்சத்தனம். 

மின்னஞ்சல் என்பதும் நம் அனைவருக்கும் உயிர்நாடி போல் ஆகிவிட்டது. இன்று காலை சூர்யாவிடமிருந்து வந்த மெயில் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஆம். அவரின் பதிவு மட்டுமல்ல, ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று மெயில் செய்தார். 

அவருடைய இமெயில் முகவரிக்கு மெயில் செய்தால் அத்தகைய பயனர் கணக்கில்லை என்று திரும்புகிறது. இது குறித்து யாராவது விடயமறிந்தவர்கள் உதவுங்களேன். திரு உண்மைத்தமிழனின் பதிவு முடக்கப்பட்டு பிறகு கிடைத்தது போல் இதுவும் கிடைத்தால் பயன் பெறப்போவது நாம்தான். அதிலும் சூர்யாகண்ணனின் மின்னஞ்சல் மிக முக்கியமானதாகும். அவருடைய பல தகவல்கள் அதில்தான் இருப்பதாகக் கூறுகிறார். 

இத்தனை அதிர்ச்சியிலும் தன்னுடைய பேக்-அப்பிலிருந்து கணினி சம்பந்தமான இடுகைகளைப் பகிர http://sooryakannan.blogspot.com/ இந்த வலைத்தளத்தை தொடங்கியிருக்கிறார். 

இத்தருணத்தில், அவருக்கு உதவுவது நம் கடமை. இழந்த அவரது கணக்குகளை மீளப்பெற உதவக்கூடியவர்கள் வழிமுறையையோ, தொடர்பு கொள்ளவேண்டிய தகவலை கொடுங்களேன். 

மற்ற பதிவர்களும், இந்த இடுகையின் சுட்டியையோ இது குறித்தோ தன் பதிவில் குறிப்பது பலரையும் சென்றடைவதன் மூலம் சூர்யாவுக்கு உதவமுடியும்.


Thursday, July 15, 2010

நனவாகவே..


பொறந்த மூணும் பொட்டையாப் போன துக்கத்துல
மூணுவட்டிக்கு வாங்கின கடன்
கருவாச்சி கருப்புன்னா செங்கருப்பு பார்த்தாலே தள்ளாடுற மாதிரி
பாட்டில் சரக்கும், வறுத்த கோழியும், நெறய சிப்சும்
பந்தாவா ஊரு கண்ணு ஒன்னாப் பட

மொத ரவுண்டு மூணு கட்டிங் புண்ணியத்துல
மூத்தவ குத்த வச்சப்ப வாங்கின குண்டுமணியளவு தோடு முழுகிப்போச்சு
ரெண்டாவது ரவுண்டு நாலு கட்டிங்குல சேக்காளிக்கு ஒன்னு போக
சின்னவனோட பழய சைக்கிளும், இசுகோலு பீசும்கூட
மூணாவது வாங்கின நாலு ரவுண்டுல ஓவராப்போயி
வாந்தியெடுத்து விழுந்து இன்னும் கடனும் ஆசுபத்திரியும் மிச்சம்

அறுத்த வகுறும், காரமில்லாச் சாப்பாடும்
எப்படியும் இனிமே காசு சேர்த்து எப்புடியாவது பொழைக்கலாம்னு
மொதப்பா இருந்த நெனப்புல பொசக்கெட்ட பய
பெரியாத்தா சாவுல ஊத்திக்கிட்டு போட்ட ஆட்டத்துல போய்ச் சேர
மண்ணள்ளிப் போட்டது அவன் சவத்து மேல மட்டுமில்ல
புள்ள குட்டிகளோட வாழும் இவ நனவிலயும்தான்

கனவாகவே இங்கே

(டிஸ்கி: இது ஒரு சமுதாய அக்கறைக் கவுஜ!)

Tuesday, July 13, 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

நண்பர் புலிகேசி அழைத்திருந்த தொடர்பதிவு இது. அழைப்புக்கு நன்றி புலிகேசி. இந்தத் தலைப்பு மற்றவர்கள் சொல்லியல்லவா நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்வியை எழுப்பினாலும். ஒரு வேளை வேறு மாதிரி புரிதலிருப்பினும் இது உதவக்கூடுமோ என்ற ஒரு நப்பாசையுடன்:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

     வானம்பாடிகள். 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

     இல்லை.  ஆரம்பத்தில் பாமரன் என்ற பெயரில் எழுதினேன். பிரபல எழுத்தாளர் பாமரனோ என்ற குழப்பம் பின்னூட்டத்தின் மூலம் தெரிய வந்ததும், பாலா என்ற பெயரில் மாற்றம் செய்தும், ஏற்கனவே இரண்டு பாலாக்கள் இருந்ததால் வானம்பாடிகள் என்று மாற்றம் செய்தேன். காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதுதான். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

     என் பதிவின் விளக்கமாக சொல்லியிருப்பதுதான். என் மன அழுத்தத்தை பாரத்தை, என்னை பாதித்த விடயத்தை நான் எழுதிவைக்கும் ஆவணமிது. என் டைரி. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

    இது வரை எதுவும் செய்யவில்லை. நான் பதிவெழுத ஆரம்பித்தபோது வெகு நாட்கள் திரட்டியில் கூட இணைத்ததில்லை. பிறகு திரட்டியில் இணைத்த பின்னரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் வரும். பதிவுலகம், பிரபலம் என்றெல்லாம் தெரிந்திராததாலோ என்னவோ அது குறித்து எந்தத் தாக்கமும் இல்லை. நிறைய பதிவர்களைப் படிப்பதும் வாக்களிப்பதும் வழமையாகிப் போனது. ஒரு வேளை ’நறுக்குன்னு நாலு வார்த்தை’ என்ற ஒரே தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகளை ஒரே தீமில் அளித்தது எனக்கான வாசகர்களை உருவாக்கித் தந்திருக்கலாம். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
    
    பதின்மவயது அனுபவங்கள் தொடர் இடுகை அழைப்பைத் தவிர்த்து, என் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். பல நகைச்சுவையுடனிருந்ததால் பெரிதும் ரசிக்கப்பட்டது. மற்றவை முக்கியமாக என் துறை சம்பந்தப்பட்டவை, பொது விஷயங்கள் பலராலும் புரிதலுக்கு உதவியதாகப் பாராட்டப்பட்டது. 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

     போக்க என்னிடம் பொழுதிருந்தாலும், சரக்கில்லையெனில் ஒரு வரியும் எழுதமுடியாது என்பது அனைவரும் அறிந்ததே. தோன்றும்போது அது எந்த மொக்கையோ, உருப்படாத எதிர் கவுஜயோ உடனே எழுதிவிடுவேன். இதுக்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்ன? 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

    டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒன்று, நான் படிக்கும் பதிவர்களின் பட்டியலுக்காக ஒன்று (அவர்கள் தளத்தில் வைரஸ் இருந்தால் என் பதிவு தப்பிக்கும் என்ற நல்ல எண்ணம்தான்), என் பதிவின் பேக்கப்புக்காக ஒன்று. இவையன்றி, நான் கிறுக்கும் கவிதைகளுக்காக பகிர்தலுக்கின்றி கிணற்றுத்தவளை என்ற ஒரு பதிவு. எல்லாமே தமிழ்ப் பதிவுகள்தான். ஆக கணக்கில் வருவது பாமரன் பக்கங்கள்... ஒன்று மட்டுமே.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

உண்டு. கோபமும் பொறாமையும் எந்த அர்த்தத்தில் கேட்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, அத்தகைய நல்ல தமிழ் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம், அதுசரியின் மிகத் தெளிவான வாதமும், கட்டிப் போடும் எழுத்துத்திறனும், மணிஜி ஒற்றை வரியில் புரட்டிப் போடும் திருப்பம், காமராஜின் மண்வாசனையுடனான எழுத்து, பா.ரா. போகிற போக்கில் தலைகோதிப் போகும் கவிதை, பாலாசியின் வானவில் எழுத்து, ரிஷபன்,நர்சிம்,அகநாழிகை வாசுதேவன்,  வாழ்க்கையில் கடந்து போகின்றவைகளைக் கவலையுடன் பகிரும் கதிர் இப்படிப் பலரும் தொடர்ந்து பிரமிக்க வைப்பதால். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

திரு பழமைபேசி. இன்றைக்கு வலையுலகில் நல்ல தமிழில் எழுதுவது மட்டுமின்றி, மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் மனிதர். வழக்கொழிந்து போன கிராமத்து விடயங்கள், சொற்கள், என்று எழுதாத விடயமில்லை. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா நடந்தாலும், பங்கேற்று ‘நிற்க அதற்குத் தகவாக’ இருப்பவர். அவரின் முதல் பின்னூட்டம் ‘எழுத்து நடை கனகச்சிதம்’ . 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

அப்படி எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. பல இடுகைகளில் சொல்லியிருப்பது போதுமென நினைக்கிறேன். இனிப் பகிர இருப்பின் பகிர்வேன். 

நண்பர் சிங்கை பிரபாகர் தொடர்வார் என்ற நம்பிக்கையுடன்.....

~~~~~~~~~~~~

Saturday, July 10, 2010

கேரக்டர் - நரசிம்மன்.

குறைந்தது ஒரு நூறு பேராவது தினமும் சாப்பிடும்போது அந்த புண்ணியவானால் இன்றைக்கு நானும் என் குடும்பமும் சோறுண்கிறோம் என நினைக்க வாழ முடியுமா? ஒரு ஐந்நூறு பேராவது அந்தய்யா மட்டும் இல்லைன்னா என் குடும்பம் நடுத்தெருவில் என பல நேரங்களில் நினைக்கும்படி வாழ்வது சாத்தியமா? 

இவை எதுவும் என்னால் என்று ஒரு நொடியும் எண்ணாது, “Its good! We could do it" என்று மகிழ்ச்சி பொங்க அனைவரையும் அரவணைக்கும் மனது சாத்தியமா? மிகச் செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தும் கடைமட்ட ஊழியனின் பிரச்சனையை அவன் பார்வையில் பார்க்கும் மனதென்பது மிக அரிதான ஒன்று.

அவர் மகானல்ல. சாமானியர். ஆனால் மனிதன். நெடு நெடுவென்று ஆறடி தாண்டிய உயரம். மெல்லிய உடல்வாகு. படபடவென்று சிமிட்டும் கண்கள். பேசியபடி சிரிக்கிறாரா, சிரித்தபடி பேசுகிறாரா என்றறியாப் பேச்சு. அவர்தான் தென்னக இரயில்வேயின் ஜெனரல் மேனேஜராக இருந்து காலமான திரு நரசிம்மன் அவர்கள்.

“அய்யாவ பாரு! அவரு மனசு வெச்சி எதுனா செஞ்சா உண்டு. அவரு முடியாதுன்னு சொல்லிட்டா கடவுளாலயும் முடியாது” என்ற நம்பிக்கைக்குச் சொந்தக்காரர். எளிமையானவர். 

பொதுவாக தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு ஆணை வந்தால், நமக்கென்ன போயிற்று? அரசாணையை நடைமுறைப்படுத்துவது மட்டுமே வேலை என்ற மனப்பான்மை சாதாரணம். அதைத் தவறென்றும் சொல்லவியலாது. இவர் மட்டும் விதிவிலக்கு. 

“என்னமோ சரியில்லை பாருய்யா! கீழ்மட்டத்தில் அவனுக்கு தெரிஞ்ச இங்கிலீஷ் எழுதி வைப்பான். மேல இருக்கிறவனுக்கு புரிஞ்சதோ இல்லையோ. இதோட விளைவு என்னவாகும் பாரு” என்பார். பெரும்பாலும் அத்தகைய கடிதங்களில் “I” (இம்ப்ளிகேஷன்ஸ்) என்ற குறியோடு அவரின் கையெழுத்திருக்கும். அலசி ஆராய்ந்து, அவரின் பரிசீலனைக்குத் தரும்போது அந்த ஆணை தவறாகவோ, தொழிளாளருக்கு பாதகமாகவோ இருப்பின் வரிந்து கட்டிக் கொண்டு பிரித்து மேய்வார். 

ஒரெ ஒரு சொல் அனாவசியமாக இராது. ஒன்றல்ல இரண்டல்ல, எத்தனை அத்தகைய ஆணைகள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன? சூத்திரதாரி அவர்தான். ஆனாலும்,  “திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்று கடிதம் வரும்போது பொறுப்பான கீழ் அலுவலரை அழைத்து, “தேங்க்ஸ் டு யு, தே ஹாவ் வித்ட்ரான் தட் இடியாடிக் ஆர்டர்” எனும் போது ஒரு அரசு ஊழியனுக்கு வேறென்ன வேண்டும்?

அவர் சென்னைக் கோட்ட அதிகாரியாக இருந்தபோது லெவல் கிராசிங் கேட்டில் இருந்த ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்து விட்டார்கள். குற்றம், வேலை நேரத்தில் போதையில் தூங்கி ட்ரெயின் போன பிறகும் கதவை திறக்கவில்லை என்பது.

உண்மையில் அந்த ஊழியர் ரிலீவர் வராததால் தொடர்ந்து ஓய்வின்றி 3 நாட்கள் பணியில் இருத்தப்பட்டிருக்கிறார். காய்ச்சலோடு இருந்தபோதும், அவரின் அதிகாரி, லீவ் தர மறுத்துவிட்டிருக்கிறார். குடிப்பழக்கமே இல்லாத அவரை, ஒரு சக ஊழியர், சாராயத்தில் மிளகுத்தூள் போட்டு அடித்தால் சரியாகிவிடும் என தான் குடிக்க வழி பார்த்துக் கொண்டு இவருக்கும் கொடுத்திருக்கிறார். பழக்கமின்மை, உடல் அசதி, ஜூரம் வேறு இருந்ததால் மயங்கிவிட்டிருக்கிறார். 

அவரின் உயரதிகாரி, இன்ஸ்பெக்‌ஷனில் பிடித்து, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, சஸ்பெண்ட் செய்துவிட்டார். மருத்துவ சோதனை முடிவில், ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும், பணி நேரத்தில் போதையில் இருந்ததும் உறுதியாயிற்று. பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். 

அதற்கெதிரான, அப்பீல் மனுவைக் கொடுத்து, அந்த ஆள், மனைவி குழந்தையுடன் கதறி, அய்யா! நான் குடித்ததே இல்லை. அன்றைக்கு முடியாமல் வருத்தம், களைப்பு புத்தி கெட்டுப் போனேன். வாழ்க்கை கொடுங்கைய்யா என்று கைகூப்பி நின்றான். சத்தியமாய், வேறு யாராயினும், சாட்சியம் இருக்கிறது, முதலோ கடைசியோ பணி நேரத்தில் குடித்திருந்திருக்கிறாய். நான் என்ன செய்ய முடியும் என்றுதான் சொல்லத் தோன்றியிருக்கும். பார்க்கலாம் போப்பா என்று அனுப்பிவிட்டார்.

தகுந்த விசாரணைகளுக்குப் பிறகு, அவர் குடிப்பழக்கமற்றவர் என்பதும், சொன்னது உண்மை என்றும் தெரிந்தது. நாங்கள் (நான் அப்போது செக்‌ஷன் ஆஃபீஸர், என் அதிகாரி, இன்னோர் அதிகாரி) அப்போது அவருக்குக் கீழ் வேலை செய்யவில்லை எனினும், அழைத்து, விபரம் கூறி,  பாவம்பா! ஏதாவது வழியிருக்கும் பாருங்க. ஹி ஈஸ் ஒன்லி அ விக்டிம். நல்லகாலம், கேட் திறக்காம பூட்டி வச்சிட்டான். திறந்து வெச்சிருந்தா ஒன்னும் பண்ண முடியாது. எங்காவது சந்து பொந்து கண்டு பிடிப்பீங்களே பாருங்க என்று அனுப்பிவிட்டார். 

சட்டங்கள் தெளிவாயிருக்கின்றன. சாட்சியங்கள் அசைக்க முடியாததாக இருக்கிறது. தினசரி கிடைத்ததா கிடைத்ததா என்பதே கேள்வியாகிப் போனது எங்களுக்கு. அத்தனை வேலைகளுக்கிடையேயும் மறக்காமல் தினம் ஒரு முறை என்னாச்சு என்று கேட்கத் தவறியதில்லை அவர். நடைமுறைப் பிழை ஏதேனும் இருப்பின் மட்டுமே வழியென்பது தெரிந்திருந்தது.

எத்தனை புரட்டினாலும் ஒன்றும் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டிய கேசில் ஒரு ஒளிக்கீற்று தோன்றியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என்னால் மறக்க முடியாத ஒரு அற்புத தருணமது. நான் துள்ளியபடி என் அதிகாரியிடம் அலட்டிக் கொள்ள பத்து அடி நடந்திருப்பேன். எதிரில் என் அதிகாரி சிரித்தபடி, புடிச்சிட்டியா என்று வருகிறார். சரியாக அதே நேரம் அலுவலகத்தின் மறுகோடியில் இருந்த மற்ற அதிகாரி, க்ருஷ்ணமூர்த்தி புடி பட்டுடுத்துய்யா என்று வருகிறார். மூவருக்கும் ஒரே நேரம் கிடைத்தது அந்த ஒளிக்கீற்று.

எந்த அதிகாரி, இவர் போதையில் மயங்கியிருந்ததைக் கண்டு பிடித்து, மருத்துவ சோதனைக்கு அனுப்பி, சஸ்பென்ஷனில் வைத்தாரோ அவரே ஒழுக்க அதிகாரியாக விசாரணை செய்து பணிநீக்கம் செய்திருந்தார். ஒழுங்கு முறைச் சட்டப்படி, அவர் அவருடைய மேலதிகாரிக்கோ, அல்லது மேலதிகாரியை வேறோர் அதிகாரியை நியமனம் செய்யச் சொல்லியோ கேட்டிருக்க வேண்டும்.

சாரிடம், குஷியாகப் போய் சொன்னபோது, “ ஐ நோ யூ பீபிள் ஆர் கேபபிள், எனிவே தேங்க் யூ” என்று சொல்லி, அந்த அதிகாரியை அழைத்து வறுத்தெடுத்தார். தன்னுடைய அடிப்படைக் கடமை தெரியாமல் ஒருவனின் மேல் நடவடிக்கை எடுத்ததுமின்றி, அவனின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் தண்டனை என்ற போதும் தகுந்த அக்கறையின்றி ஆணை வழங்கியமையைச் சுட்டிக் காட்டினார்.  சட்டத்துக்குப் புறம்பான அந்த ஆணையை ரத்து செய்து, அப்பீலின் மேல் தன் அதிகாரத்துக்குட்பட்டு, மிகக் கடுமையான சம்பளக் குறைப்பை தண்டனையாக்கினார்.

அவருடைய காலத்தில்தான் தென்னக இரயில்வே மருத்துவமனையில், வெளி ஆட்களும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற வழி செய்ய முடிந்தது. பலவிதமான இதய நோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடிந்தது. மறைமுகமாக இரயில்வேத் தொழிலாளர்களுக்கும் அனுபவம் காரணமாக எங்கள் மருத்துவர்களால் சிறந்த சிகிச்சை அளிக்க முடிந்தது.

இதய நோய் அறுவை சிகிச்சைக்கு குறைந்த கட்டணம், சிறந்த சிகிச்சை என்ற அளவுக்கு புகழ் வளர்ந்தது. இன்றும் இதய நோய் அறுவை சிகிச்சையில் தலை சிறந்த முன்னோடிகளாய் தனியாய் மருத்துவம் பார்ப்பவர்களில் ஆகச்சிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் இரயில்வேயில் பணிபுரிந்தவர்களே. அத்தகைய ஓர் வாய்ப்பமைத்துத் தந்தவர் திரு நரசிம்மன்.

ரூல் இப்படிச் சொல்கிறது சார் என்று சொல்லிவிட முடியாது. எனக்குப் படிக்கத் தெரியாமலா உன்னிடம் கேட்டேன். ஏன், எதற்கு என்று யோசி. அப்புறம் வந்து சொல், என்பார். அப்படிப் படிக்கும் போது அதன் உள்ளர்த்தம் புரியும். அடுத்த முறை, இதற்காகத்தான் என்று விளக்கும் போது வாதம், பிரதிவாதம் என்று புரியவைப்பார். நாளடைவில், புரிதல் எளிதாகிப் போகும்.

பணிமூப்பு பெற்ற பிறகும் அடிக்கடி பேசுவார். பழைய நாட்களுக்காக மனம் ஏங்கிப்போகும். தவறாமல், ‘இட் வாஸ் ப்ளஸண்ட் டு வர்க் வித் யூ பீப்பிள்.’ எனும் போது, இல்லை சார் அந்த சந்தோஷத்தைக் கொடுத்தவர் நீங்கள் என்றிருக்கிறேன்.

ஒரு நாள் தொலைபேசியில், பாலா ‘ஐம் நாட் வெல், எலும்பு மஜ்ஜையில் ஏதோ ப்ராப்ளமாம். ஒரு ஊசி போடுவான் பாரு எலும்பில், செத்துப் போறது பெட்டர்.  வி டோண்ட் ஹாவ் த ஃபெஸிலிடி. அதனால வெளியில் பார்த்தது. பில் அனுப்பியிருக்கேன், பார்த்து அனுப்பிவிட்டு தகவல் சொல்’ என்றபோது அதிர்ந்து போனது மனது.

எத்தனை பேரின் கண்ணீர் துடைத்த ஒரு மனிதனுக்கு தன் கடைசிக் காலம் வலியில் துடித்துச் சாகவா? எப்படியோ, அதிக காலம் வலிபடாமல், சீக்கிரமே விடுதலை பெற்று விட்டார். வாராது வந்த மாமணி அவர்.

சொல்ல மறந்து விட்டேனே. எக்மோர் குப்பத்து திருவேங்கடத்தை தென்னக இரயில்வே டென்னிஸ் ப்ளேயராக்கியவர் இவர்தான்.

We miss you Sir!