Showing posts with label விமரிசனம். Show all posts
Showing posts with label விமரிசனம். Show all posts

Wednesday, March 9, 2011

இலட்சுமணப் பெருமாள் கதைகள் - வாசிப்பனுபவம்.



"சில் என்ற வாழைமட்டையில் உட்கார வைத்து பளிங்குத்தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் இலட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். பஜனை மடங்களும் புராண இதிகாச சிந்தனைகளும் உள்ள எனது மக்களைப் பார்த்து எத்தனை வருசங்களாகிவிட்டன....”

புத்தகக் கண்காட்சியில் இலட்சுமணப் பெருமாள் கதைகளின் அட்டைப் பட ஓவியம் என்னையறியாமல் எடுக்கத் தூண்டியது. பின்னட்டையில் மேல் பத்தியில் இருந்த வரிகளின் கீழே கி.ராஜநாராயணன் என்ற பெயர். வேறென்ன வேண்டும். படிக்க எடுப்பதும், இருக்கட்டும் என்று தள்ளி வைத்துவிட்டு மற்றவற்றைப் படிப்பதுமாயிருந்தாலும், அட்டைக் கிழவனின் பார்வைத் துளைப்பில் ஆரம்பித்தேன்.

கரிசல் மண்ணுக்கும் எழுத்துக்கும் அப்படி என்ன காதலோ. ஒரு வேளை எழுத்துக்காகவே ஒரு கால கட்டத்தில் நிப்புத் தொழில் செழித்திருந்ததோ என்று கூட தோன்றும். கதையின் ஆழம் ஒரு பக்கம் என்றால் நடை...

கி.ரா.வை படிக்கிறது வேறே. அந்த மனுசன் தோள்ள தூக்கி வெச்சி திருவிழாபார்க்க கூட்டிப் போன கதையா பராக்கு காட்டுவார். மொதப்பக்கம் தாண்டியாச்சின்னா கதைக்குள்ள நாமும்ல இருந்து வேடிக்கை பார்ப்போம். முடிச்சா புத்தகத்தை மூடினா அந்த உலகத்துல இருந்து வெளிய வரணுமேன்னுல்ல தவிப்பா இருக்கும்.

இலட்சுமணப் பெருமாள் எழுத்தும் அப்படித்தான். என்ன, கி.ரா.காலத்து மொழியில்லை. அதுவும் மாறினாலும் அடிநாதம் மாறாத மொழி. இதெல்லாம் கதையில்லெ. ஒரு ஒரு கதையும் ஒரு மனுசன் அல்லது மனுசியோட வாழ்க்கெ. எதச் சொல்ல எத விட. சிறுகதைத் தொகுப்புன்னா அது எடுத்தாச்சோ முடிக்காம வச்சு பழக்கமில்லை. இதுல அந்த பப்பு வேகாது. சொல்லுற கதை அப்படி.

‘ஊமங்காடை’ன்னு ஆரம்பிக்குது கதை. பஞ்சாயத்து ஜனங்களின் கிண்டலும், தன் கணவன் ஒரு திருநங்கை என்பதைச் சொல்லவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஊராரின் சிரிப்புக் கிடையே வழக்கு வரும்போது யாரும் ஊகிக்க முடியுமா? தன்னைப் பெண்ணாகவே பாவித்து திருமணம் செய்யக் கோரியவளை மகனாக நினைத்து ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்ததும், அடித்து உதைத்து தன் கவுரவத்துக்கு தாலி கட்ட வைத்ததும்? பொன்ராசு அழுதானோ இல்லையோ, நமக்கு நெஞ்சு வெடிக்கும்.

‘அத்து விட்ட’ பிறகும் அவளுக்குத் தோழியாய், அவள் பிள்ளைக்குக் காவலாய், அது பசியில் அழுது பாலுக்கு முண்டுகையில் தன் மார்பை ஏக்கமாகத் தடவும் பொன்ராசை பார்த்த தங்ககிளிக்கு மட்டுமா சரஞ்சரமாய்க் கண்ணீர் வரும்? இப்படி ஒரு கதையை படித்துவிட்டு அடுத்த கதைக்கு எப்படிப் போக?

ராமாயணத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம் யார்னு ஒரு கேள்வி வருது,  பாராயணம் கெங்கம நாயக்கர் கதையில. அவரே கேட்டு கதையச் சொல்றார். ராமன் வனவாசம் போகப் புறப்படவும், பின்னாடியே கிளம்பிட்டான் லட்சுமணன். ஊர்மிளைகிட்ட ஒரு வார்த்தையும் சொல்லல. வனவாசம் முடிஞ்சி வந்தப்பதான் கூட்டத்தில ஊர்மிளையை காணோம்னு கவனம் வருதாம். தேடிப் போறானாம். இவன் போனப்ப இருந்த உடையோட நகை அலங்காரத்தோட கட்டில்ல அவ எலும்புக் கூடு இருந்துச்சாம்.

இப்படிக் கதை சொல்ற கெங்கம நாயக்கருக்கு கெத்தும் அதிகம்தான். வீட்டுல தகராருன்னு இவரு மடத்துக்கு வந்துடுவாரு. வர முன்ன பொண்டாட்டிக்கு சாமான், பண்டம் வாங்கிக் கொடுத்து, கொட்டடி ஓரமா சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருன்னு வந்துடுவாரு. அந்த மவராசி ஊர்மிளை. செத்துக் கெடக்கான்னு தகவல் வந்து ஓடுறார் நாயக்கர். வாங்கிக் கொடுத்த பண்டம் எல்லாம் ஒரு மூலையில. அப்பா அம்மா கூட ஒத்து வரலைன்னு தனியா வந்தவங்களுக்கு நெஞ்சுல ஒரு மின்னல் வெட்டும்.

உள் பாவாடை கிழிஞ்சி போய் முடி போட்டு போட்டு ரிப்பன் மாதிரி இருக்கேன்னு ஒன்னுக்கு போகக் கூட தனியாப் போறா பாண்டியம்மா. கெரகம் அன்னேரம் பார்த்து ஒருத்தி வருவாளா? பொம்பளை கஷ்டத்த கூட்டத்துல சொல்லி சிரிப்பாளா? சோக்குக்கா பாண்டியம்மா உள்பாவாடை கட்டுறா.?நைலக்ஸ் சேல இடுப்புல நிக்க வேணாமா? இது புரியாம புது டிசைனான்னு கேலி பேசினா என்ன செய்ய? ஒரு வேகத்துல உருவி வேலிக்கு அந்தண்டை போடுறாள். டிபியில படுத்து கெடக்கிற புருசனுக்கு கைலிக்குள்ள அண்டர்வேர் இல்லாட்டிதான் என்னன்னு அதை உருவி தான் போட்டுகிட்டு போறா வேலைக்கு.

கும்பலோட போனா மானம் போகுமேன்னு அடக்கி அடக்கி வெடிச்சிடும் இனிமென்னு ஒத்தையாளா ஒன்னுக்கிருக்கப் போறா. சுத்தி முத்தி பார்த்து அண்டர் வேரை அவிழ்த்து ஒன்னுக்கிருக்கவா ஆளு வரணும். கிழிஞ்ச பாவாடைக்கே சிரிப்பா சிரிச்சாச்சே, கையில அண்டர்வேரோட சிக்க விதிக்குமா. வீசி எறிஞ்சிட்டு வந்து தீப்பெட்டி ஒட்டுறா. நேத்தைய பாவாடையும் இன்னைய அண்டர் வேரையும் சேர்த்து கொண்டுவந்து மொத்தமா கழுவேத்திட்டான் கணக்குப் பிள்ளை. வேலையும் போய் மானமும் போய் வீதிக்கு வர மூச்ச விட்டுட்டான் புருசன்னு ஆளு வருது.

கிழடுங்களுக்கு இருக்கிற பிரச்சனை, பாரமா நினைச்சி குழந்தையை மட்டுமில்ல கிழடுகளையும் கரை சேர்க்கிற புண்ணியவதி, பட்டாசு ஃபேக்டரியெல்லாம் எந்திரம்னும் மூடியாச்சேன்னு பொழப்பத்து போனதுல லாரி ட்ரைவர்களை நம்பி ஒரு வாழ்க்கை, அதிலும் அவமானம், அடி உதைன்னு படிக்க படிக்க அப்படி என்ன சாபம் வந்து சேர்ந்துச்சு இந்த மண்ணுக்குன்னு அழாம முடியுமா?

தீப்பெட்டி பேக்டரி பத்திக்குது. அய்யோ எம் புள்ளகென்னு பதறி வாரா விறகு பொறுக்கப் போன சேர்மத்தாயி. நாலும் பொட்டப் புள்ளைக. தீ புடிச்சதுமே ஓடி வந்துட்டுதுக. கட்டிப் புடிச்சி அழுகறா. அப்புறம்? கூலியில்லாம எப்புடி கூழ் குடிக்க? பசியில குஞ்சுகள் அல்லாடுது. செத்தவங்களுக்கு மட்டும் நிவாரணம். இவளுக்கில்லே. பசிக்கிம்மான்னு அழுதா என்ன செய்வா? கைக்கொரு விறகா எடுத்து விளாசுறா. எந்த ஜமீன் கொள்ளப் போச்சுன்னு ஓடியந்தீங்கடி. ஒருத்தி பொசுங்கியிருக்கப்படாதான்னு.

ஓட முடியாம கடைசிப் புள்ள காலைக் கட்டிக்கிட்டு அழுவுது. ‘அம்மா! இனிமே தீப்பிடிச்சா ஒடீயாரமாட்டம்மா, அடிக்காதம்மான்னு.’ இப்படி குழந்தைகளுக்கு ஒரு வழி செய்யாமச் சும்மா சைல்ட் லேபர் ஆக்ட், பட்டாசு வெடிக்கத் தடைன்னு வெள்ளை வேட்டி கசங்காம சட்டம் போடுறவன வையறதா? இன்னும் மூனு வருசம் போனா எம்புள்ள தீப்பெட்டி ஃபேக்டரில வேலைக்குப் போவானாம். நான் காலாட்டிகிட்டு கஞ்சி குடிப்பனாம்னு கொஞ்சுற ஆத்தாளை வையறதா?

இலட்சுமணப் பெருமாளின் கதையை காலம் மீறி வாழும். ஏனெனில் இவை தன் போக்கில் வளரும் காட்டுச் செடிகள்னு அழகிய பெரியவன் சொல்லுறது ஒன்னு போதாதா? அவசியம் படிக்கணும்.

அருமையான கதைகள். இப்படி ஆழமா அடி நெஞ்சை உலுக்குற நிஜங்கள். அருமையான புத்தக அமைப்பு. ப்ச். எத்தனை பசியோட ருசியான சாப்பாடுன்னு அனுபவிச்சி சாப்பிடும்போது கடுக்குன்னு ஒரு கல்லு சிக்கினா பசி, ருசி எல்லாம் மீறி வந்து உக்காருதே ஒரு எரிச்சல். இந்த வம்சி பதிப்பகத்துல பிழை பார்க்க ஆளே இல்லையா? ஒரு கல்லுக்கே இப்படின்னா வாய்க்கு வாய் கல்லாயிருந்தா என்ன செய்ய?

ஆசை ஆசையா பின்னூட்டம் போட்டு இன்னைக்கு உங்களுக்கு முன்ன வாங்கிடுவேன்னு வாங்கின அடுத்த விருந்து தோழர் காமராஜின் கருப்பு நிலாக் கதைகள் காத்திருக்கு. 
-*-

Friday, February 25, 2011

அஞ்சலை - வாசிப்பனுபவம்.

நாஞ்சில் நாடனின் பாராட்டு விழாக் காணொலியில்தான் முதலில் அவரைக் கண்டேன். சற்றும் பூச்சற்ற வட்டாரப் பேச்சுத் தமிழில் வயிறு நோக சிரிக்கப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சந்தலையில் நச்சென உளியாய் இறங்கும் விஷயங்கள் அவை.

புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுமிடத்தில் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்க அந்தப் புத்தகத்தை எடுத்தார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து எழுதப் போக ‘என்னுடையது’ என்று தவிர்க்க முனையும் நொடியில் ‘இவர்தாங்க ஆசிரியர்’ என்ற அறிமுகம் நடந்தது.

வெள்ளந்தியாய்ச் சிரித்த முகத்துடன் புத்தகத்தில் பெயர் கேட்டு கையெழுத்துப் போட்டு ‘நெல்லாருக்கும்! படிங்க’ என்று இரு கையாலும் எடுத்துக் கொடுத்தபோது தன் சிசுவை பெருமையுடன் கொஞ்சக் கொடுக்கும் வாஞ்சையிருந்தது முகத்தில்.

அப்படித்தான் வந்து சேர்ந்தாள் கண்மணி குணசேகரனின் அஞ்சலை.
அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிரிகளும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களுமே சனம். உடலின் ஒரு சிறு புண்ணை சொறிந்து சொறிந்து ரணமாக்கி புற்று நோயாக்குவதுபோல் சமூகத்தின் அங்கமாகிய பெண்ணை விரட்டி விரட்டி அவள் வாழ்வைப் பறிப்பதும் அச்சமூகமே.

துரத்தித் துரத்தி உறவு பறித்த வாழ்வின் மீதான ஆசையை கட்டிக் காக்கும் முன் பின் அறியா நட்பு. இழைய இழைய உறவாடி கடன் கொடுக்கவில்லை என்பதால் நாத்தெறிக்க அவமதிக்கும் நட்பு. தேள் கொட்டி விட்டதாய் நடித்து வலி போக்க சற்றும் தயங்காமல் தாலியைக் கழட்டி உதவும் பெண்ணின் மார்பகத்தைத் தடவும் பாலிய நண்பன், தன் சுகத்துக்காக தங்கையை பலிகடா ஆக்கும் அக்காள், இப்படி எங்கு நோக்கிலும் மனிதர்களின் (சனங்களின்) வக்கிரங்கள் இரையானவளைத் தேடிக் கிழிக்கும் அவலம்.

முதல் பக்கத்திலேயே வம்புக்கலையும் பெண்ணின் மூலமாகத்தான் அறிமுகமாகிறாள் அஞ்சலை. முடிக்கும் வரை அஞ்சலையை ஒரு கதாபாத்திரமாக உணரவே முடிவதில்லை. அவளோடு சிரித்து, அவளோடு அழுது, அவள் தவிக்கும் தவிப்பைப் பூரணமாய் உள்வாங்கி ஏதும் செய்ய இயலாமல் கை பிசைந்திருக்கமட்டுமே முடிகிறது நம்மால்.

விதவை பாக்கியத்துக்கு மூன்றாவது பெண்ணாக அழகாய்ப் பிறந்து தொலைத்தது மட்டுமே அவள் செய்த பாவம். ஆளில்லாத (ஆம்பிள்ளை) குடும்பத்தைக் கட்டித் தூக்கி இரண்டு பெண்களை கரை சேர்த்து கடைக்குட்டி மகனைப் படிக்க வைத்து எப்படியோ பிறப்பைக் கழிக்கும் பாக்கியத்துக்கு ஆணுக்கும் மேல் ஆதரவாய் உழைத்துக் கை கொடுக்கிறாள் அஞ்சலை.

ஊர் வாய்க்கு அஞ்சியே அவளை ‘ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க’ ஆசைப்படும் பாக்கியத்துக்கு ஆரம்பமே இரண்டாவது மருமகனால் விழுகிறது அடி. வஞ்சமும் வார்த்தையாகவுமே அல்லல் படுகிறது அஞ்சலையின் வாழ்வு.

விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைகிறது கதை. துள்ளலும் கேலியுமாய் கார்குடல் வயல் காட்டில் அஞ்சலையோடு அத்தனை வேலைகளையும் அவளோடு செய்யும்போது தெரிகிறது சோற்றில் விவசாயியின் வியர்வை மணம். திருமணமாகி மணக்கொல்லை போய் முந்திரிக்காட்டின் உழைப்பை உணர்கையில் பாயசத்தில் மிதக்கும் முந்திரி கசக்கக் கூடும்.

பாழாய்ப் போன சமுதாயம் சொல்லிக் கொடுத்த ’ஒருத்தனை புருசன்னு நினைச்சிட்டு அவனோடு மனசார வாழ்ந்து திருமணத்தில் அவன் தம்பியை கட்ட வச்சு ஏமாத்திப்புட்டானுவளே! என்னுமா அவனுக்கு முந்தி விரிக்கிறது’ என்பதில் கலைகிறது அவள் வாழ்க்கை.

’நானு போயிட்டா நீ தனியாக் கெடந்து என்னா பண்ணுவ எம்மா?’ என்று யாருக்காக கவலைப் பட்டாளோ அந்தத்தாயே முதல் எதிரியாகிறாள். அவள் வாழ்க்கையை  விதவிதமான வாளாய், ஈட்டியாய், நெருப்பாய், விஷமாய் சனத்தின் நாவு கூறு போடுகிறது.

சுருட்டி வைத்த உதிர்ந்த முடி பறந்து போய் அவள் சீலத்தை எள்ளி நகையாட வைக்கிறது. பேசினாலே இந்த இழவில் முடியும் என்று ஒதுங்கிப் போனாலும் விடாமல் துரத்துகிறது. தாயிடம் கொடுத்த சத்தியத்தினால் சாகவும் முடியாமல், ஓட இடமின்றி ஓடி, ஒளிய இடமின்றி ஒளிந்து, ‘இனியாவது’ என்ற நம்பிக்கையில் கிடைத்த வாழ்வை வாழத் தலைப் படுகையில் அதைத் தேடிக் குலைப்பதில்தான் சனத்துக்கு எத்தனை முனைப்பு?

ஏதோ ஒரு குக்கிராமத்து பறத்தெருவின் மனிதர்கள் மட்டுமல்ல இவர்கள். படித்ததாய், நாகரீகமானவர்களாய் வேஷம் போடும் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது சனம். சனம், சமூகம் என்று சொறிந்து சொறிந்து மேன்மேலும் நகைப்புக்கு இலக்காக்கி எந்த வழியும் போகவிடாமல் சுழட்டி சுழட்டி அடிப்பது ஒன்றே சமூகமா?

போக இடம் தெரியாமல் போய் நின்றவளை வழி நடத்தி வாழவைக்கும் வள்ளியும் இதே சமூகம்தானே! வள்ளியைப் போல் ஆங்காங்கே புண்ணுக்கு மருந்திடும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது. யாரைச் சொல்ல யாரை விட?

’ஆனது ஆகிப் போச்சு! அமைஞ்சதுதான் வாழ்க்கைன்னு’ வாழ வேண்டியதுதான என்று சனம் சொல்லும். சொல்கிறது. ‘உருவத்தைப் பார்த்து வெறுத்து வெள்ளைத் தோலுக்கு மயங்கியவள்’ என்று ஒரு கோணல் பார்வையும் பார்க்கக் கூடும். அவளுக்கு வாழத் தெரியவில்லை என்று ஒற்றை வார்த்தையில் புறம் தள்ளலாம் சமூகம். அவள் வாழ்வை அவளை வாழவிடவில்லை என்பதே உண்மை.

வஞ்சிக்கப் பட்டவளை ’ஆறுதலாய் ஏற்றிருக்குமேயானால்’ போன்ற பல ஆனால்களால் அழிபடுகிறது அவள் வாழ்க்கை. சமூகமே எள்ளினாலும் புறந்தள்ளி அவளை  ‘மீண்டுமேற்றுக்’ கொண்ட மண்ணாங்கட்டியே ‘நீ தேவுடியாதானடி’ என்று இயலாமல் சொல்லிய சொல்லுக்கு ஊரையே எதிர்த்து நின்றவள் நொறுங்கிப் போகிறாள்.

‘ஒரு தடவ சொன்னாலும் அதான். ஓராயிரம் தடவ சொன்னாலும் அதான். செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போகுது?பொறந்தது பொறந்தாச்சி. என்னா ஆயிடுங்கற. பத்துப் பொழுது இந்த சனங்க கிட்ட இருந்து, என்னா ஏதுன்னு வாழ்ந்து பாக்காம, செத்துப் போறதுதானா பெரிசு?’. ஞானாசிரியனான பெற்றமகளின் கைத்தாங்கலில் நம்பிக்கையோடும், ‘இன்னும் என்ன சின்னாபின்னப் படப்போறனோ’ என்ற பயத்துடனும்அடியெடுத்து வைக்கும் அஞ்சலைக்கு, ‘வா! வா! நீயும் தானே நான்’ என்று  சனம் உச்சி முகருமா இனியாகிலும்?

வேஷமற்ற எழுத்து! வேஷமற்ற மனிதர்கள்! இன்னொரு முறை கண்மணி குணசேகரனைக் காண நேர்ந்திடின், அஞ்சலைக்காக இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே தரமுடியும்.