Showing posts with label வலி. Show all posts
Showing posts with label வலி. Show all posts

Tuesday, May 18, 2010

அஞ்சலி..

ஆண்டொன்று ஓடிவிட்டது! பருவங்கள் மட்டுமே மாறின

பதவி, பவிசு, பட்டம், விழா, கொண்டாட்டம், இலவசம், பொய்,  துரோகம், பணம், மறதி, பழிவாங்கலில் எதுவுமே மாறவில்லை.

மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.

பச்சைத்துரோகத்தின் பரிசாய் புதையுண்ட பல லட்சம் உயிர்களை மறந்துபோகவும் தலைப்பட்டோம். யார் சரி யார் தவறுக்கு அப்பாற்பட்டு அப்பாவியாய் அத்தனை உயிர்கள் போனது நிஜம். பச்சிளம் குழந்தைகள், முதியோர் என மொத்தமாய் செத்தவர்க்கு ஓர் அஞ்சலி சொல்லக்கூட மனமில்லை நம்மவர்க்கு.

பத்திரிகைகள் மறக்காமல் சத்தீஷ்கர் நிகழ்வுக்கு யாரையோ நினைவு கூறுகின்றன.

ஒரு புறம் நினைத்தால் அவமானமாய் உணர்கிறேன். மறுபுறம் நான் மட்டுமே இப்படியிருக்கிறேன். என் உறவுகள் தமிழுக்காய் இன்னும் தலை நிமிர்ந்தேயிருக்கிறார்கள் என்ற பெருமிதம் சற்றே ஆறுதலாயிருக்கிறது.

நிர்க்கதியாய் நிற்பவனை ஆயுதம் ஏந்தி ஒரு கூட்டம் மிரட்டுகிறதென்றால் உண்மையில் ஆயுதம் இருப்பது யாரிடம்? பயந்தவன் தானே மிரட்டுவான். ஏதிலி யார்? வலையம் வலையம் என்று முதலைக் கண்ணீர் விட்டோம். அவர்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள். அல்லது சுதந்திரமாய் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

சுதந்திரமாய் இருப்பதாய் மாயை கொண்டு கண்ணுக்குத் தெரியா இலவச, செய்தி இருட்டடிப்பு, போதையில் ஆழ்த்தும் தொலைக்காட்சிகள், மிரட்டல் என பல வலயங்களுக்குள் அகப்பட்டு உணராமல் இருக்கிறோமே! ஏதிலி யார்?

சென்ற வருடம் இருந்த பதட்டம், இயலாமை, எல்லாம் முடிந்த துக்கம் நெஞ்சை நிறைக்கிறது. நாகரீக உலகம் என்று மார்தட்டி நிற்கும் உலகலில், மறைந்தவனின் சமாதி கூட இடித்தொழிக்கப்படும் அவலம். க்ளோபல் வில்லேஜ் என்று பெருமை பொங்கும் உலகில் ஒரு மூதாட்டிக்கு அனுமதி மறுக்கும் மனிதநேயம்.

அதை வைத்து அரசியல் வியாபாரமாக்கும் அவலங்கள். இடது கையால் நீர் கொடுத்தமையால் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவனின் பெருமையை எழுதிக் காசாக்கி உதவிக்கரம் நீட்டும் பொய்முகம்.

அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.

எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன்.

மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் மனிதர்களே.

Wednesday, April 21, 2010

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே..




சிறிது நாட்கள் முன்பாக இந்தக் காணொளிக்கான சுட்டி எனக்கு மின்னஞ்சலில் வந்தது. பார்த்துப் பரவசப்பட்டுப் போனேன். நண்பர்களுக்கு பகிர்ந்தேன். அதற்குள் அது நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு சுட்டியில் இது கவனத்துக்கு வந்தது. தேடித் தேடி கண்டுபிடித்தும் விட்டேன்.

தமிழுக்கு அமுதென்று பேர். செந்தமிழ்நாடெனும் போதினிலே என்றெல்லாம் சிலாகிக்கப்படும் மொழியின் அற்புதம் கண்டேன். எத்துணை அழகான தமிழில் எவ்வளவு உணர்வுபூர்வமாக கேட்போர் உருகும் வண்ணம் பேசுகிறார் திரு சுகி சிவம். கட்டிப் போடுகிறது தமிழ். உள்ளுணர்வு வரை போய் உலுக்கி எடுக்கிறது. 

என்னதான் காசுக்குப் பேசினாலும் இப்படியும் பேசமுடியுமா? மொழியின் அழகால் விஷம் ஊட்டும் அழகே அழகு. பெயரிலேயே சுகி! சுகித்திருப்பவர் என்றும் ஒரு அர்த்தம் உண்டல்லவா? யாரோ அழைத்து ஈழத்தைச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக யாழ்ப்பாணம் போனாராம். அவர்கள் சொல்லச் சொன்னதாகச் சொல்லி வேண்டுகிறார். சொல்லாததையும் சொல்லி வியக்க வைக்கிறார்.

தானே எழுதினாரோ, எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ தெரியாது. என்ன ஒரு சிந்தனை? என்ன ஒரு தெளிவு? சுகி சிவம் ஐய்யா! மனிதனுக்கு மறதி வரம்தான். ஆனால் இது மறக்ககூடிய வலியில்லை ஐயா! ஊடகத்தைப் பாருங்கள். அத்தனை உயிர்கள் போனபோது ஒரு செய்தியும் காட்டாத ஊடகம் உருகி உருகி இப்படி ஒரு நிகழ்ச்சியைத் தருகிறது பாருங்கள்.

ஐயா சுகி சிவம் அவர்களே! யாழ்ப்பாணம் போனீர்கள் சரி. சண்டைக் காலத்திலேயே அங்கு ஓரளவு சகஜ நிலை இருந்ததே ஐயா. இப்போதும் அவர்கள் பயப்படுகிறார்கள் என்கிறீர்களே. என்ன ஒரு கொடுமை இது. அவர்கள் பூமி. அவர்களும் ப்ரஜைகள். பயந்து வாழும் அவலம். அப்படியென்றால் என்ன ஒரு ஆட்சி நடக்கிறது அங்கே. 

சண்டை முடிந்த பிறகும் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால் என்ன கொடுமை இது? பழைய கதையைப் பேசக்கூடாதாம். சுகி அய்யா சொல்கிறார். வாஸ்தவம். பேசிவிட முடியுமா? எத்தனை உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் சுகிசிவம். முதல்வர் கூட பார்வதி அம்மாள் விடயத்தில் டெசோ, சந்திரகாந்தன் பற்றியெல்லாம் பேசித் தொலைகிறார். சண்டிவியையோ உங்கள் பொன்னான கருத்தையோ அவரே மதிப்பதில்லை.

மன்னன் எவ்வழி! மக்கள் அவ்வழி! ஆல் த மீஜிக் ஸ்டார்ட்.

எப்படி எப்படி சுகி சார். ஓடிப் போனவர்களா? ஒரே ஒரு புலம் பெயர்ந்த தமிழனிடம் பேசி இருக்கிறீரா? விரும்பியா ஓடினார்கள்? இருக்கும் இடம் சொர்க்கமேயானாலும், அவர்கள் மனதில் அவர்கள் மண்ணுக்கான ஏக்கமல்லவா இருக்கிறது? ஒரு புனிதத் தலத்துக்கு போவதற்காக தவமல்லவா இருக்கிறார்கள்.

அட போராட்ட காலத்தில் சின்னஞ் சிறுசுகளின் பேட்டி பார்த்தீர்களா?அந்த மண்ணைப் பார்த்தேயிராத பிஞ்சுகள். உணர்வு பூர்வமாக எம்மண்ணுக்குத் திரும்புவோம் என்றபோது சிலிர்த்துப் போயிற்று.

சண்டைக்காலத்தில் ஓடிப்போனவர்களாம். என்ன ஒரு எள்ளல். உங்கள் தெருவில் ஒரு சோடாபாட்டில் உடைத்தால் நடுத்தெருவுக்கு வந்து என்னவென்று கேட்பீர்களா ஐயா? முதலில் கதவடைத்துவிட்டு உள்ளேயல்லவா இருப்போம். 

பாதி வகுப்பில் குண்டு வீச்சு, சந்தேகத்தின் பேரில் கடத்தல், விசாரணையென்ற பேரில் சித்திரவதை, வயது வந்த குழந்தையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ திருமணம் செய்து கொடுப்பது என்ற கட்டாயச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்டால், ஓடாமல் என்ன ஐயா செய்ய முடியும்?

என்னதான் மூன்று தலைமுறையாக நகரத்தில் பிழைத்தாலும், உங்கள் பூர்வீக கிராமத்தில் அல்லது ஊரில் இருக்கும் நிலமோ, வீடோ உங்களுக்காக உழைத்த, அட வேண்டாம் ஊரென்றிருந்தால் உறவொன்றிருக்குமே வழியின்றி! அதற்கு கொடுத்துவிட்டீர்களா? பூர்வீக கிராமத்தில் நிலம் வீடெல்லாம் இருக்கிறது. விடுமுறைக்கு போய் வருவது என்று ஒரு வழமையே இருக்கிறதே நம்மிடம். 

அதையெல்லாம் கொடுக்க மறுக்கிறார்களாம். யாரிடம் கொடுப்பது? சமூக அமைப்புகளிடம். சமூக அமைப்புக்கு. ஐ.நா. போன்ற அமைப்புக்களிடம் அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமாம். அவர்கள் அங்கிருப்பவர்களுக்கு உதவுவார்களாம்.

மருந்து கிடைக்கவில்லை அங்கே என்று வருத்தப் பட்டீர்களே. ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்க சார். உலகெங்குமிருந்து மருந்தும் உணவும் வந்ததே. கொடுக்க விட்டார்களா? யாராவது முன்னெடுத்து கொடுக்கத்தான் செய்தார்களா?

செஞ்சிலுவைச் சங்கத்தையே ஆட்டிப்படைத்ததய்யா. மக்களுக்காக உழைத்த அமைப்புக்களுக்கு முத்திரை குத்தி விரட்டியது. இவர்களிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் போகுமாம். நீர் தருகிறீரா உத்திரவாதம்? ஏன் அங்கிருக்கிறவர்கள் போருக்குமுன் எங்கிருந்தார்கள்? ஆகாசத்திலிருந்தா குதித்து விட்டார்கள்? இருந்த இடத்தில் அவர்களை வாழவிட என்ன தடை?

உலகெங்கும், அவர்களின் மீள் குடியமைப்புக்கு கொடையாக, கடனாகவென்று வாங்கிய காசெல்லாம் எங்கே போயிற்று? அருமையாயகச் சொன்னீரைய்யா. அவர்கள் வாழ கோழி, ஆடு, மாடு, வலை எல்லாம் வேண்டுமாம். ஏன் அங்கு படித்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு வேலைத் தரச் சொல்லுங்களேன். படிக்க பள்ளி கட்டித் தரச் சொல்லுங்களேன். தமிழர் பிள்ளைகளுக்கு கல்வியை இலவசமாக வேண்டாம், சலுகையில் தரச் சொல்லுங்களேன். ஆடு கோழி வளர்த்துதான் தமிழன் வாழ வேண்டுமா?

அஞ்சி அஞ்சி வாழ்கிறார்களாம். அரசோடு ஒத்துப் போக வேண்டுமாம். எப்படி? இப்படி அச்சத்திலேயே வாழவிடு. நாங்கள் கொட்டிக் கொடுக்கிறோம். அவர்களைக் கொல்லாமல் விட்டால் சரியென்றா? 

கடைசியில் சொன்னீர்களே! சீனாக்காரன் அங்கு உறவாடுகிறான். நம் எல்லை குறித்த அவதானிப்பு மிக முக்கியம். அதனால் அரசியல் பேச வேண்டாமென்று. அதனால் அங்கிருக்கும் தமிழர் பலிகடாவாக இருக்கத்தானே வேண்டும். ஆட்டை வளர்த்துத்தானே அடித்து விருந்து வைக்கவேண்டும். இப்படி ஓர் வாழ்க்கைக்காகத்தானே இவ்வளவு போராட்டமும் இல்லையா ஐயா. 

காசு வாங்கியாச்சி. பேசியாச்சி. அந்த நாள் உங்களுக்கு இனிய நாளாகப் போச்சு. நல்லா இருங்கய்யா. உங்களை வளர்த்த தமிழும், உங்கள் வாழ்வாதாரமான ஆன்மீகமும் உங்களை வாழ்த்தும். என்ன எழவு. பாரதி குறித்தெல்லாம் பொங்கி பொங்கி பேசியிருக்கிறீர்களே. உறுத்தாது? பாரதி கண்முன் வந்தால் இந்த பேச்சுக்கப்புறம் தின்னும் சோறு நரகலாயிருக்காது?

ஹி ஹி. ஒரு கேள்வி. இந்த நிகழ்ச்சியை பதிர்வதற்கு கார் வராவிட்டால், காசு தராவிட்டால் போயிருப்பீர்களா? அதென்ன சார் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் சன் டிவியில் மட்டும்தான் பேசவேண்டும் எனச் சத்தியம் வாங்கிக் கொண்டார்களா என்ன? 

 ஐயா அவர்களை அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு அழைத்திருக்கிறீர்களாமே. இந்தியத் தமிழரோ ஈழத் தமிழரோ அய்யாவோடு ஒரு சந்த்திப்புக்கு வழி செய்து புலம்பெயர் வாழ்வின் வலியைப் புரியச் சொல்லுங்கள். புண்ணியமாய்ப் போகும்.

(பொறுப்பி: ஏதோ எழுத ஒன்றுமில்லாமல் எழுதியதில்லை இது. உலகின் மனிதர்கள் இருக்கும் ஒரு மகோன்னத தேசத்தில் எந்தக் கவலையும் இன்றி சுகித்து வாழும் வழியிருந்தும் தன் மண்ணை, தன் மக்களை நொடியும் மறவாமல் அவர்களுக்காக அழுது, அவர்களுக்காக உழைத்து, அவர்கள் நல் வாழ்வுக்கு தன் சுகத்தை அர்ப்பணித்து, முடிந்தவரை அவர்களுக்கு உதவும் கலகலப்ரியாவுக்கும் அவரைப் போன்ற இதரப் புலம் பெயர்ந்தும் தன் மண்ணை நேசிக்கும் சொந்தங்களுக்கு, இப்படி ஒன்றுமறியாமல் கூலிக்கு மாரடிப்பவர்களின் சார்பில் நான் கோரும் மன்னிப்பு இது)
~~~~~~~~~~

Tuesday, April 20, 2010

கேடு வரும் பின்னே..மதி கெட்டு வரும் முன்னே...

மதிப்பிற்குரிய (?) டோண்டு அவர்களுக்கு,

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் என்னும் உங்கள் விஷத்தைப் படிக்க நேர்ந்தது என் துர்பாக்கியம். முதன்முறையாக உங்களுக்கு பின்னூட்டமும் மைனஸ் ஓட்டும் போட்டேன். என் எதிர்ப்பைத் தெரிவித்தாகிவிட்டது என்று மட்டு மட்டாக நான்கு மணி நேரம் இருந்து பார்த்தேன். முடியவில்லை.

சோவுடன் கை கோர்த்து எங்கே பிராமணன் என்று அப்புறம் தேடலாம். அதைப் பார்த்தும், இப்படி ஒரு வக்கிரமான இடுகை எழுதி என்ன கண்டீர்கள்?  ஒரு பசுமாடு வயலில் மேய்வதை தடுக்கக் கூடாது என்று சொல்லும் அதே மனுஸ்ம்ருதி எப்போது அதைத் தடுப்பது பாவம் இல்லையென்றும் சொல்லியிருக்கிறது.

/அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்./

இது உங்கள் பிரமாணம். நம்பியிருப்பீர்கள் இதில் ஒவ்வொரு வார்த்தையையும் என நம்புகிறேன். அப்படியானால் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்வினைக்கு இப்போதே கவலைப் படுங்கள்.

/புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்./

இப்போது நீங்கள் சொல்லும் ஆதரவாளர்கள் ப்ரஸ்மீட் வைப்பதே இல்லையா சார்? ஒரு தனிப்பட்ட மனுஷிக்கு மருத்துவ உதவி தேவை எனில் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? கார்கிலில் சண்டை துவக்கிய முஷாரஃப் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்றா இங்கு வரவிட்டீர்கள்?

சீக்கியர்கள் ப்ரஸ்மீட் வைப்பதில்லையா? இந்திராவைக் கொலைசெய்தது தவறில்லை என வாதிடும் சீக்கிய மதத்தினருக்கு இந்தியாவில் வைத்தியம் கிடையாது என்றா சொல்லுவீர்கள்?

/தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்/

உங்கள் வயதுக்கு இப்படி ஒரு எள்ளல் அழகா? வார்த்தைகளுக்கு சக்தி உண்டு . அபலையான ஒரு வயதான மூதாட்டியை நீங்கள் செய்த இந்த எள்ளலுக்கு எங்கு போய் முட்டிக் கொண்டாலும் பரிகாரம் கிடையாது.

/அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்./

ஒரு மொள்ளமாறி முடிச்சவிக்கி கேடிக்கும், கோவிலில் கூத்தடித்த நாய்க்கும் இந்த அரசு தான் செலவு செய்கிறது மிஸ்டர் டோண்டு. பிள்ளையார் ஊர்வலம் என இல்லாத ஒரு சம்பிரதாயத்துக்கு எத்தனை கோடி செலவாகிறது. சொல்லுங்களேன் உங்கள் ராமகோபாலனுக்கு.

/ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்./

அனுமதியோடு வந்தவரை மறுக்க முடியும். அனுமதிகாலம் முடிந்த பிறகு அனுப்புவதா கடினம்? இல்லை அடைக்கலம் கேட்டால் மறுக்க என்ன காரணம் வைத்திருக்கிறீகள். அதைச் செய்ய யார் தடுக்க முடியும்? ஊகத்தால் ஒரு அவமானத்துக்கு சப்பை கட்டு கட்டப் பார்க்காதீர்கள்.

/எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்./

இப்போதைய அரசியல் தலைவர் யாருமே வேண்டாமா? யாருக்குதான் சம்பந்தமில்லை. தெரியாமல் கேட்கிறேன், உங்களுக்கு யார் சார் இந்த அதிகாரம் கொடுத்தது?

/நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள்./

இவ்வளவு வக்கிரம் பிடித்தவரா நீங்கள்? ஒரு படிப்பறிவில்லாத, நாகரீகம் அறியாத மனிதன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு உயிரினம் கூட சத்தியமாக இப்படி நினைக்காது.

/இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்./

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் சார். நினைவாலயம் வைக்க குறைந்த பட்ச தகுதி எதுசார்? நினைவாலயம் இருக்கிறவர்கள் எல்லாம் அதற்குட்பட்டவர்கள் என்று சொல்லுவீர்களா? எந்த விதத்தில் அந்த மனிதன் நினைவாலயத்துக்கு தகுதியில்லாமல் போனார்? இத்தனை வெறுப்புக்கு காரணம் என்ன சார்?

/ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்./

இது உங்கள் ஊகமா சார். விசா கொடுக்குமுன்னர் இந்த ஞானம் இல்லையா? உங்கள் எழவு நியாயம் நியாயமாகவே இருக்கட்டுமே. அலைக்கழிக்காமல் இருந்திருக்கலாமில்லையா? ரொம்ப சாமர்த்தியமாக இது பற்றி வாயே திறக்கவில்லையே நீங்கள்?

/மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது./

பாருங்கள் சார். உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் சொல்லவில்லை என்றால் , முதல்வர் இது குறித்து தனக்கோ தன் அரசுக்கோ தெரியாது என்று சொன்னதை நம்பித் தொலைத்திருப்போம். அதென்ன சார் அசம்பாவிதம். எனக்குத் தெரிந்து இதில் நடந்த பெரிய அசம்பாவிதம் இப்படி ஒரு அரைவேக்காட்டு விஷம் கக்கினதுதான். இல்லை இது சம்பாவிதமோ? ஓரளவு துணிச்சலான, உண்மைக்கு போராடும், ஒரு மனிதன் என்று நினைத்திருந்த ஒருவருக்குள் எவ்வளவு வக்கிரம் இருக்கிறது என வெளிக்காட்டியது இச்சம்பவம்.

/சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்./

உண்ணாவிரத நாடகம் நடந்தபிறகு நீங்கள் இப்படி கொண்டாடியோ கண்டித்தோ எழுதினது கவனமில்லை சார். நாடகமில்லாத அரசியல் இருக்கா சார்?

கொஞ்சம் யோசித்தால், அந்தம்மணியை திருப்பி அனுப்பியதற்கு காரணம் நீங்கள் சொன்னபடியே பார்த்தாலும் அவர்கள் இல்லை. நாம்தான் இல்லையா சார். இதற்கு அவர்களைத் திருப்பி அனுப்பியதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டுமா இல்லை வெட்கப்பட வேண்டுமா?

ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.

பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். பெத்த பிள்ளைக்கு கிடைச்சாலும் புடுங்கித் தின்ன சொல்லும் கொலை செய்தாவது.

மனுசனா இருக்கப் பார்க்கலாமே சார். இடுகை போட எவ்வளவோ விஷயம் இருக்கு. இந்தப் பிழைப்பு ஏன்? சத்தியமாக உங்கள் வாரிசுகள் படித்தால் உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை கொஞ்சமாவது காணாமல் போயிருக்கும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் கொஞ்சம் மனிதம் கற்றிருக்கிறார்கள் சார். நாம் அதை நாசம் செய்யாமலாவது இருப்போமே. இந்த அற்ப சிந்தனை நம்மோடு போகட்டுமே!

வருத்தத்துடன்

வானம்பாடிகள். 

Sunday, April 18, 2010

பத்திரிகாவிரதை...

தலைவர் பதிவிரதாத்தனத்தை சுட்டி யாரை வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம். கால் நக்கும் ஊடகங்கள் காட்டும் பதிவிரதாத்தனத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒருமுறை பார்வதி அம்மாளை முன்வைத்து கல்லாக்கட்ட தொடங்கிவிட்டன கட்சிகள். போராட்டங்கள், பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் என்று தொடங்கி விட்டார்கள். கோமாளி கூட குரல் எடுத்து அலறிவிட்டான். பதில் சொல்ல வேண்டியவர்களோ வாயே திறக்கவில்லை.

யார் வீட்டு படுக்கையறையிலோ புகுந்து நம் வீட்டு ஹாலில் சல்லாபக் காட்சியைக் கட்டவிழ்க்கும் ஊடகமோ, பாலியல் குற்றங்கள் எங்கே எப்படி நடைபெறுகின்றன என்று விலாவரியாகச் சொல்லிக் கொடுக்கும் ஊடகமோ, இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பதைக் கொச்சைப் படுத்தி நீலப்படம் விற்கும் நியாயவாதிகளோ சசி தரூரைக் கவிழ்ப்பதிலும், சாமியார் சல்லாபக் கணக்கிலும் மும்முரமாகி விட்டார்கள்.

அய்யகோ! என்னை மரியாதையின்றி கருணாநிதி என்று சொல்லிவிட்டார் என்று யாரும் கேட்காவிட்டாலும் தானே கேள்வி கேட்டு பதில் சொல்பவர் ஐ.பி.எல். மேட்ச் குத்தாட்டம் ரசிப்பதில் வாயடைந்து விட்டார்.

தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று அந்தர் பல்டியடித்தவர் ஒன்றும் கேட்டதாகக் காணோம்.

இரண்டு கல் விழுந்தவுடன் ’அய்யோ! அடிக்கறா! காப்பாத்துங்கோ’ என்று நீதிபதியின் பின் ஒளிந்த ஜந்து உளறிக் கொட்டியதை கட்டம் கட்டிப் போட்டு பெருமைப் படுத்தியாகிவிட்டது.

மிசா காலத்தில் எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனக் கதறிய ஊடகங்கள் இப்போது எதற்கு அடிமைப்பட்டுப் போயின? தேடித் தேடி அமைதிப் படையின் அத்துமீறலையும், ஃபோஃபார்ஸ் ஊழலையும் பத்தி பத்தியாய் விற்று இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்று மார்தட்டிக் கொண்ட பத்திரிகைகளுக்கு ஏன் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிடத் தோன்றவில்லை.

அது அவர்கள் தார்மீகக் கடமை என்பதை விட அவர்கள் போராடிய உரிமையல்லவா? சிண்டு முடிந்து பேட்டி எடுத்து கல்லாக் கட்டுவதுதான் பத்திரிகை தருமமா? அரசு தடை விதித்தால், அடக்குமுறை எனக் கொதித்துப் போகும் ஊடகங்கள், அத்தனை பேரும் எந்த அடிப்படையில் செய்தியை மறைக்கிறார்கள்?

ஊடகங்களின் எஜமானர்கள் மக்களல்லவா? செய்திகளைத் திரட்டிக் கொடுப்பது மட்டுமே அவர்கள் வேலை. அதற்காக பொறுப்பற்ற முறையில் அனைத்தையும் சொல்லியாக வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின், ஒரு ஊரின் அல்லது ஒரு அப்பாவிக் குடிமகனின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும் செய்திகளைத் தவிர மற்ற எந்தச் செய்தியையும் மறைப்பதற்கோ, திரிப்பதற்கோ பத்திரிகைகளோ ஊடகங்களோ யார்?

மக்களின் கவனத்தைச் சிதறடிக்கவும், சிற்றின்பத்தில் மூழ்கடிக்கவும், விளம்பர கல்லாக் கட்டலும் தாண்டி நம்மை முன்னிறுத்தி, கவர் கலாச்சாரம் வரை போய்விட்டதாக ‘வடை போச்சே’ ஊடகங்களின் மூலமாவது தெரியவருகிறது.

நாமும் யாருக்கு என்ன நடந்தால் என்ன?  எவனாவது எதையாவது கொடுக்கிறானா? அது குறித்த தகவல் வந்திருக்கிறதா? எந்த ஊர் தேர்தலில் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது குறித்தே படித்துப் பழகிவிட்டோம்.

ஒரு காலத்தில் கட்சியின் கொள்கைகளைச் சொல்ல கட்சிப் பத்திரிகைகள் நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. இப்போதோ ஆளும் கட்சியின் பொது ஜனத் தொடர்பாளர்களாகவே அனைத்து ஊடகங்களும் மாறியதோடல்லாமல் நம்மையும் மூளைச் சலவை செய்யும்  வேலையில் போட்டி போடுகின்றன.

நான் கொடுக்கிற காசுக்கு நன்றாக மலமிளக்கும் பத்திரிகையைத் தேர்வு செய்வது நானாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, மனச்சிக்கலும் அதனால் மலச்சிக்கலுக்கும் ஆளாகும் துர்பாக்கியம் தமிழனுக்கு ஏன்?

நேற்றைய பேப்பரை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறானே அண்டை மானிலத்தவன், அவன் பத்திரிகை இப்படியா ஜால்ரா அடிக்கிறது? நித்தியானந்தர் வீடியோ மீண்டும் ஒளிபரப்பும் நேரம் என டிக்கர் ஓட்டிய ஊடகம், இந்த விடயத்தை எத்தனை முறை நினைவு படுத்தியது?

நமக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில் எத்தனை அடிப்படை உரிமை இருக்கிறதோ நமக்குத் தேவையான செய்தியை தேர்ந்தெடுப்பதிலும் அதே உரிமை நமக்கு வேண்டாமா?

யேய்! நீ கேளேன். நீ கேளேன் மாதிரியாவது தெரிந்தவர் தெரியாதவர் அனைவரிடமும், ஒரு நாள் பத்திரிகை வாங்காமல் இருங்களேன் என்று போராடிப் பார்த்தால் என்ன? கவரையும், விளம்பரத்தையும் இன்ன பிற கிளுகிளுப்பையும் நம்பி ஊடகம் யாருக்கென்று நடத்த முடியும், நாம் புறக்கணித்தால்?

(டிஸ்கி: ஈயத்தப் பார்த்து இளிச்சதாம் பித்தளைன்னு எங்கள சொல்ல வந்துட்டியா வானம்பாடி! நித்தியானந்தனையும், சாருவையும் சாடி எத்தனை பதிவு வந்தது? பார்வதி அம்மாளுக்கு நடந்த கொடுமைக்கு எத்தனை பேரு இடுகை போட்டீங்கன்னு துப்புங்க எசமான் துப்புங்க)

Thursday, April 15, 2010

இட்ட அடி நோக..

‘ராணி! இங்க வாம்மா. வாயெல்லாம் வறண்டு போவுது. ஜில்லுன்னு ஃபிரிட்ஜ்ல இருந்து தண்ணியெடும்மா. இங்க வா! குனி! ம்ம்ம்ம்.ப்ச்.ப்ச்ச்.ப்ச்ச். நல்லாயிருப்படிம்மா. ஒரு குறையும் இருக்காது உனக்கு. மணி பத்தாக போகுதே. சாப்புடும்மா.
‘ஏ வேலக்கார முண்ட. நீயாருடி என்ன தடுக்கறது? கொன்னு போட்டுடுவேன் தெரிஞ்சிக்கோ. குளிப்பாட்ட, சாப்பாடு குடுக்கத்தான் உன்ன கூலிக்கு வச்சிருக்கு. என்னைஅதிகாரம் பண்ற வேல வெச்சிக்காத! 
‘ஏம்மா? கலியாணமாகி 3 வருஷமாச்சிங்கறியே. டாக்டர்ட போய் பாரும்மா. வயசானா புள்ள நிக்கறது கஷ்டம் ராணி.’

இது ஒரு உதாரணம். என்றோ எப்போதோ பேசியவை அல்ல. குறைந்தபட்சம் 2 நிமிட இடைவெளிமுதல் 20 நிமிஷ இடைவேளைகளில் பேசியவை.

டேய்! எழுந்திருடா. திருடன் வந்து பணத்தையெல்லாம் எடுத்துண்டு போய்ட்டாண்டா. நான் பார்த்து சத்தம் போட்டேன். சன்னலுக்கா பூந்து ஓடிட்டான்.

அம்மா தூங்கும்மா. யாரும் வரலை. சன்னல் வழியா எப்படிம்மா ஓடுவான். இது மாடிம்மா. கனவு கண்டிருப்ப தூங்கு.

கட்டேல போறவனே. பொணமாட்டம் தூங்குவ. உனக்கென்ன தெரியும். எடுத்த காச வீசிட்டு போயிட்டான் பாரு. நான் பொய்யா சொல்றேன்.

உடனே எழுந்து, விளக்குப் போட்டு பார்த்து, இல்லைம்மா. எங்கையும் காசு இறையலம்மா. நீயே பாரு. கனவுதான் கண்டிருக்க என்றாலே ஒழிய தூங்க முடியாது. ஒரு நாள், இரண்டுநாள் இந்த விளையாட்டு விளையாடலாம். தினமும் என்றால்? தோ! சத்தம் போடாம படு. எல்லாரும் சண்டைக்கு வராங்க. அம்மால்ல! முடியலைம்மா எனக்கு. கொஞ்சம் தூங்கணும்மா என்றாவது தூங்கத் தோணும்.

ஒரு நாள் ரகசியமாக, ஏய்! இங்க வாடா. திருட்டுக் கடங்காரன் நான் தூங்கறேன்னு என் செயினைத் திருடி வெளிய போட்டு ஒளிஞ்சிருக்கான். அசந்தா ஓடிடுவான். மெதுவா அறைக்கதவை இழுத்து பூட்டிட்டு கத்து என்பவளை என்ன சொல்ல? விடிய விடியக் காத்திருந்து சர்வீஸ் ஏரியாவில் பார்த்தால் செயின் கிடக்கும். தானே போட்டிருப்பாள். அடுத்த நாள் கழுத்தில் செயின் இருக்கும் போதே நாசமாப் போறவனே. என் செயினைத் திருடி வித்துட்டியே. நீ உருப்படுவியா என்றழுபவளை எப்படி சமாதானம் செய்ய?

ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. நிற்க முடியாது. சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லத் தெரியாது. ஏதோ ஒரு நொடியில், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய், சீராக நடந்து, ஸ்டூல் இழுத்துப் போட்டு, தாழ்ப்பாளைத் திறந்து விட்டு லேட்ச் திறக்கத் தெரியாத, முடியாத தருணங்களில், என் பொண்ணு கலியாணத்துக்கு போகவிடாம அடைச்சி வெச்சிருக்காளே இந்த வேலைக்கார முண்ட இவளைக் கேட்பாரே இல்லையா என்று அலறியபடி வெட்டிய மரமாய் விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயம் உண்டாகும்.

பணிப்பெண் என்ன செய்வாள்? குழந்தை மாதிரி தூக்கியெடுத்து துடைத்து மருந்திட்டு ஏம்மா இப்புடி காயம் பட்டுக்கறீங்க? எவ்வளவு வலிக்கும் என்றால் அழுவதோ அல்லது சலிப்பாய் திட்டிவிட்டால் அடியேய்! ஆடதடி. ஒரு நிமிஷம்! ஒரே ஒரு நிமிஷம். ஊரக்கூட்டி என்ன தடியால அடிச்சி மண்டைய பொளந்துட்டான்னு கத்தினா போலீஸ் என்னைத்தான் நம்பும். தெரிஞ்சிக்கோ என்பவளை என்னதான் செய்ய?

கால் ஊன்றி நிற்பதைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கும். சுவற்றில் ஊன்றியிருக்கும் கை மெதுவே தொட்டாற்போல்தான் இருக்கும். அந்தக் கையை அசைப்பதோ, காலை நகர்த்துவதோ இயலாத காரியம். பின்புறமாக அணைத்து, பாதங்களின் கீழ் மண்ணுளிப் பாம்புபோல் நம் பாதத்தை நுழைத்துத் தாங்கி ஒரே ஒரு இஞ்ச் நகர்த்திவிட்டால் போதும். அப்புறம் நம் பாதத்தை நகர்த்திக் கொண்டுவந்து படுக்கையில் விடலாம்.
ஒரு புறம் ப்ரயத்தனத்தாலும், மறுபுறம் நைந்து நாரான உடம்பை, எங்கேயோ விழுந்து எங்கு ஊமைக்காயம் பட்டுக் கொண்டு, எங்கு வலிக்கிறது என்று கூடச் சொல்லத் தெரியாதவளை குண்டுக்கட்டாய் இப்படி தூக்கிப் போட வேண்டியிருக்கிறதே என்ற வலியாலும், நெஞ்சுக்கூடு வெடிக்கும்.

நம்மையறியாமலே தினம் சிமிட்டுகிறார்போல் ஆயிரக்கணக்கில் எச்சில் கூட்டி முழுங்குகிறோமே. தொண்டைக்குக் கீழ் ஒன்று ஏறி இறங்குகிறதே, அப்படி அந்த தசையை இயங்க மூளை கட்டளையிட மறுத்தால் என்னாகும்? பசிக்குது என்று அழத்தெரியும். வாயில் சோற்றையோ, கஞ்சியையோ வைத்தால் விழுங்கத் தெரியாது. முடியாது. அடைத்துக் கொண்ட குழாய்க்கு பைபாஸ் மாதிரி ஏதோ செய்து அதில் கஞ்சி, ஹார்லிக்ஸ் என்று ஊற்றி எத்தனை வருடங்கள் காப்பாற்ற?

முக்கியமாக, பெட்சோர் வராமல் அவ்வப்போது புரட்டிவிட்டு, நனைத்து விட்ட உடுப்பை மாற்றி, படுக்கையை சரிசெய்து தூங்கச் செய்யும் வேளைகளில், உதடு பிதுங்க முகம் வருடி பாவம்டா நீ என்னும்போது யார் பாவத்துக்கு அழ?

பர்கின்ஸன்ஸ் டிஸீஸ் என்று நடந்து வருவதைப் பார்த்தே கண்டுபிடிக்கும் மருத்துவர் இருக்கத்தான் செய்கிறார். இந்த இழவு அதுதான் எனத்தெரிந்து அவரிடம் நேரத்தே அழைத்துச் செல்லத்தான் நமக்குத் தெரிவதில்லை. நின்னா தள்ளுதுடா என்றால் பி.பி. மாத்திரை போட்டியா, ராத்திரி தூங்கினியா எனக்கேட்கவும், கால் கை எல்லாம் மறத்துப் போகுதுக்கு கோடாரித் தைலமும் வாங்கிக் கொடுத்தால் முடிந்ததா என்ன?

முழங்கால், முழங்கையை மடக்க முடியலை என்றால் ருமாடிசம்!. வயசாச்சின்னா அப்படித்தான். தென்னமரக்குடி எண்ணெய் தேய்ச்சா சரியாயிடும் என்று வேலையைப் பார்க்கத்தானே அய்யா தெரியும் நமக்கு . இப்படியெல்லாம் நோயிருக்கிறதென்று யாருக்கு தெரியும்?

(தொடரும்)

Friday, April 2, 2010

ரெட் ரிப்பன் ரயில்

ஒரு பத்திரிகைன்னா குறைஞ்ச பட்சம் மலச்சிக்கல் இருக்கிறவங்க கழிப்பறைக்கு கொண்டு போய் படிக்கவாவது உதவணும். காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது.

சம்பளமோ, போனசோ எதுனாலும் திநகர்ல கொண்டு கொட்டினாதான் நமக்கு விடியும். ரோட்டோரம் மரங்களும் அங்கனதான் இருக்கு. மரத்து கீழதான் ஹேர்கிளிப், ஸ்டிக்கர் பொட்டு கடைகளும் இருக்கு. நான் நிறைய பார்த்து நொந்து போயிருக்கேன். வயசு புள்ளைங்க மரத்திலிருக்கும் ஒரு விளம்பரத்தை கண்ணு விரியப் பார்த்து திகைத்து நிற்பதை.

மரத்துக்கு மரம் ஒரு பிரபல மருத்துவமனையின் விளம்பரம்.  “அரை மணி நேரத்தில் வலியின்றி கருக்கலைப்புச் செய்யப்படும். ஒரு நெருங்கிய உறவினருடன் வரவும்.” இன்னும் ஐம்பது வருடமானாலும் நாம் இப்படித்தான் இருப்போம் போலும்.

எங்கம்மா 16 வயசுலதான் வேண்டாத தெய்வத்த வேண்டி பெரிய மனுசியாச்சி. நாம்பதினஞ்சு. எம்பொண்ணும் என்னய மாதிரிதான்னு இருந்துட்டு அது 12 வயசுல பள்ளியில் வயதுக்கு வந்து பயந்து அழுது வந்தாலும் உறைக்காது நம்மவர்க்கு. தெரிஞ்சிக்க வேண்டியதை சொல்லிக் கொடுக்கக் கூச்சம் என்பதா? சொல்லத் தெரியாது என்பதா?

ஏன் பொங்குறன்னு கேக்கறீங்களா? பல லட்சம் ப்ரதிகள் விற்பனையாகும் ஒரு எழவெடுத்த தினசரி செய்யும் சமூக சேவையை பாருங்கள்.


பல கோடி ரூபாய் செலவில், அரசுத்துறை எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்ச்சிக்கு ரெட் ரிப்பன் ரெயில் என்ற ஒரு இரயில் மூலம் தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் காட்டப்படும் படங்கள் மாணவ மாணவிகளைக் கெடுத்து விடுமாம். கருத்தடைச் சாதனம் பற்றிக் கேட்டு மாணவிகள் வெட்கப்பட்டு ஓடி விட்டார்களாம்.

ஒரு அதி மேதாவி சொன்னதாம். எய்ட்ஸ் குறித்து, உடல் உறுப்பு குறித்து யாருக்கு சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குதான் விழிப்புணர்வு தேவை. அது குறித்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகளுக்கு இது தேவையில்லையாம்.

ஆமாம். இது குறித்தெல்லாம் தெரிந்துவிட்டால் சாமியார் சல்லாப வியாபாரம் நடக்காதே. விழிப்புணர்வு வந்துவிடுமே.

சரி! ஒரு வேளை தான் எழுதுவதிலாவது ஒரு நேர்மையான நம்பிக்கையுடன் தொழில் தர்மம், கொள்கை, கலாச்சாரக் காவலன் முத்திரையாவது இருக்கிறதா என்றால் காசுக்கு இவன் செய்யும் சேவை இது


ரயிலாவது இவன் சொல்கிறார்போல் தேடிப் போய் கெட்டுப் போகும் வழி. இவன் பத்திரிகையை வாங்கி வீட்டில் வைத்தாலே பிள்ளைகள் கெட்டுப் போகுமே.

அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெற்றோர்களாக நம் பிள்ளைகளை இதற்கு ஊக்குவிப்பது நம் கடமை. சென்னை செண்ட்ரலில் 11ம் ப்ளாட்பாரத்தில் இந்த ரயில் இருக்கிறது.