Showing posts with label மரண மொக்கை. Show all posts
Showing posts with label மரண மொக்கை. Show all posts

Friday, April 1, 2011

பிலிமு காட்டிய பிலிமு.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒன்னர வருஷத்துக்கு அப்புறம் தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்னு ஒரு முடிவெடுத்தேன். அட நெட்ல புக் பண்ணலாமேன்னு தேடுனேன். அபிராமி தியேட்டர்ல 120ரூ டிக்கட்னு க்ளிக் பண்ணா, ஆடுற சேர், அதுக்கு 60ரூ தனியான்னு இருந்துச்சு. அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு. போடாங்கொய்யாலன்னு மூடிட்டேன். அதோடவா? காப்பி வேணுமா, ஸ்னாக்ஸ் வேணுமான்னு எல்லாம் ஆப்ஷன்.

காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு. படிக்கிறப்ப சினிமாவும் புத்தகமும்தான் பொழுது போக்கு. விளையாட்டு வேடிக்கை பார்க்க மட்டும்தான். சினிமாவும் எப்பவும் இல்லைன்னாலும் அனேகமா எல்லா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாம்பார்,முத்துராமன் படங்களும், சில ஜெய்சங்கர் படங்களும் (பத்தாம்பு படிக்கிறப்ப ஜாக்பாட் ஜாங்கோ பார்த்தா கெட்டு போயிடுவேன்னு காசு குடுக்கமாட்டன்னு திட்டுச்சு ஆத்தா).

படம் பார்க்கிறது ஒரு அனுபவம்னா நாம படம் பார்த்ததே அனுபவங்கள்தான். சயானி (ஒன்னரை கி.மீ), வீனஸ் (3 கி.மீ) நாதமுனி (4 கி.மீ), ராயல் (மூனரை) சரஸ்வதி/லக்ஷ்மி (4கி.மீ) மேகலா (3கி.மீ), புவனேஸ்வரி(4 கி.மீ), சரவணா/பாலாஜி (ரெண்டரை கி.மீ), உமா (3 கி.மீ). எல்லாம் நடைப் பயணம்தான். அப்போல்லாம் காலைக் காட்சி அபூர்வம். மேடினிதான். 3 மணிக்கு படம்னா 2 மணிக்கு டிக்கட் குடுப்பாங்க. நாம காலைல சாப்பிட்டு அம்மா கூட 10 மணிக்கு கிளம்பினா பதினொன்னு பதினொன்னரைக்கு அங்க கதவு திறக்க முன்ன க்யூல நிப்போம்.

கதவு திறந்ததும் குடுகுடுன்னு ஓடி முதல் இரண்டாவதா போய்ட்டு, யம்மா வரான்னு சொல்லி இடம் வைக்கணும். அப்பதான் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும். கையில ஒரு புத்தகம் வச்சிக்கிட்டா (பெரும்பாலும் தினமணிகதிர், ராணி) விசிறிக்க வாகு. டிக்கட்டு 42 பைசால இருந்து 52 பைசா வரைக்கும் வித்தியாசப்படும். யம்மா டப்பால தயிர்சாதம் கொண்டு வந்திருக்கும். டிக்கட் குடுத்ததும் வாங்கி  ஒரு டிக்கட்டை புடுங்கிட்டு தபதபன்னு ஓடி இருக்கறதுலயே பின்னாடி சீட்ல ஓர சீட்டுக்கும் மூணாவது சீட்டுக்கும் நடுவில உக்காந்து ரெண்டு கையும் விரிச்சி யம்மா வரா, தம்பி வாரான்னு சொல்லிட்டிருக்கணும். 

அப்புறம் சமத்தா தச்சி மம்மு சாப்பிட்டு டப்பாவை கழுவிட்டு வந்து உக்காந்தா ‘ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய். லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே’ல ஆரம்பிச்சி, வார் பிக்சர் (ஹி ஹி. நியூஸ்தான்)ல தொடர்ந்து சிவாஜி கூட அழுது, நாகேஷ் கூட சிரிச்சி, எம்.ஜி.ஆர்.க்கு வாஜ்யாரே, பின்னாடி ஒளிஞ்சிருக்கான் வாஜ்யாரேன்னு எல்ப் பண்ணி, ஜனகனமணக்கு நின்னா யம்மா தொலைஞ்சி போயிடுமுன்னு சாரி சொல்லிட்டு கூடவே ஓடி ‘டொங்கட்டான் டொங்கட்டான்னு’ பராக் பார்த்துட்டே நடந்து வந்த சொர்க்கம் பதினொன்னாம்புல போயே போச்சு.

பத்தாம்பு முழு பரிட்சை லீவுல பொம்பள டிக்கட்டுல அனுமதிச்ச பாவி, பதினொன்னாம்பு கால் பரிட்சையில கண்டு புடிச்சிட்டான் நான் ஆம்பிள்ளை சிங்கம்னு. யண்ணா யண்ணா இந்த ஒரு தாட்டி உடுண்ணா. அடுத்தவாட்டி ஆம்பிளை ஆயிக்கறண்ணான்னு கெஞ்சி பார்த்த படம் மூன்று தெய்வங்கள்னு நினைக்கிறேன். அப்புறம் ஆம்பிளைங்க க்யூன்னு ஆகிப் போனதும்தான் 52 பைசா டிக்கட்டின் கோர முகம் தெரிஞ்சது.

கிட்டத்தட்ட ஒரு மிருகமாதான் மதிச்சிருக்கானுவ நம்மள. அப்ப புரியல. சயானில ஒரு ஒன்னரை அடி கதவு திறக்குமான்னு மூத்திர சந்துல க்யூல நிக்கணும். உசுரப் புடிச்சிட்டு ஓடிப்போய் முதல்ல நிப்பேன். நம்ம உருவத்துக்கு அம்புட்டு மதிப்பு. சின்னப் பசங்க ஏண்டா இந்த க்யூவுல வரீங்க ஒத்துன்னு ஒன்னு, படிக்கிற வயசுல சினிமா இன்னாடான்னு அட்வைஸ்லயே ஒன்னு, பேச்சு குடுத்துக்கிட்டே ஒன்னுன்னு நம்மள ரிவர்ஸ் அடிக்க வச்சுறுவானுவ. வெவரம் தெரியாம அழுவாச்சியா வரும். இங்க கூடுதல் கொடுமை என்னன்னா, புழுக்கத்தோட, சாராய நெடியில பொரட்டிகிட்டு வேற வரும்.

கவுண்டர் திறக்கற நேரம் பார்த்து வருவானுங்க கடைசியில இருந்து. தலைக்கு மேலதான் வருவானுங்க. கையில கீரக்கட்டு மாதிரி பூனக்காஞ்சான் செடி. யோவ் யாருய்யான்னு குரல் கிரல் விட்டா போச்சு. மூஞ்சில ஒரு தேய் தேச்சிட்டு போயிடுவானுவோ (நமக்கு அந்த பயமில்ல. அவன் தலை கீழா தொங்குனாதான் நம்மள ட்ட்டச் பண்ண முடியும். நேர கவுண்டர் கிட்ட போய் தலைமேலயே குதிப்பானுவ. நாம 5 வதா இருந்த ஆளு பத்தாவதா போனாலும் நம்மள தள்ளிட்டு போன அஞ்சு பேர தள்ளிட்டு குதிக்கவும் ஒரு அஞ்சு பேரு இருக்கானுவல்லன்னு ஒரு சந்தோஷம்.

மேகலா, சரவணா, வீனஸ் எல்லாம் ரிஸ்க். அவன் மேல கம்பி வலை வேற அடிச்சிருப்பான். பன்னாடைங்க நாலுகால் ஜந்து மாதிரி குனிஞ்சிக்கிட்டே வருவானுவ. தலைய குனிஞ்சிட்டு தரையோட உக்காந்துடணும். எவனாச்சும் சவுண்ட் விட்டா பூனை மாதிரி புசுக்கு புசுக்குன்னு ஒன்னுக்கு அடிப்பானுவ.

எப்புடியோ டிக்கட்ட வாங்கி தல தெறிக்க ஓடி நாம புடிக்கிற இடம் முதல் வரிசை, இல்லாட்டி அடுத்த வரிசையில ஓரமா ரண்டு சீட்டு. டிக்கட்டு கிழிக்கிறவன் லூசான்னு ஒரு பார்வை பார்ப்பான். அவனுக்கென்ன தெரியும்? என்னதான் ஓடி கடைசி வரிசைல புடிச்சாலும், பூனைய புடிக்கிறா மாதிரி என்னை காலர புடிச்சி தூக்கி முன்ன போய் உக்காருன்னு எனக்குன்னே ஒரு வில்லன் வருவான்னு. நீ சொல்லி நான் என்னடா போறதுன்னு நாமளே போயிடுவோம்ல. அப்பவும் பக்கத்து சீட்டை புடிச்சி வச்சிக்கிறது. அல்லாடுற ஒரு ஜீவன இங்க உக்கார்ணான்னு இடம் குடுத்தா, கொஞ்சம் சீட் பார்த்துக்கண்ணா ஒன்னுக்கு உட்டுட்டு வரேன்னு இன்சூர் பண்ற டெக்கினிக்கு அது. பெருங் கொடுமை தச்சி மம்மு கட். காய காய உக்காந்து படம் பார்க்கணும்.

பி.யூ.சி. படிக்கிறப்ப, மொத மொத இங்க்லீஸ் படம் பார்த்தமுல்ல. ஒன்னார்ரூவா டிக்கட்டு. இங்லீஸ் படம்னா கெட்ட நெனைப்புல்லாம் வேணாம். ஆப்ரிகன் சஃபாரி. அதுக்கு போஸ்டர காட்டி, பாரும்மா புலி, சிங்கம் படம்மான்னு கெஞ்சி கெஞ்சி பர்மிஷன் வாங்க பட்ட பாடு இருக்கே. காலம் அப்புடி. வேலைக்கு வந்து கொஞ்ச நாள் வரைக்கும் ‘தோ ரஹா’ அப்படின்னா ஹிந்தில கற்பழிப்புன்னு தினத்தந்தி தப்பு தப்பா சொன்னத நம்ம்ம்ம்பி வாழ்ந்த காலம். எல்லாப் பத்திரிகையும் கற்பழிக்கறதுன்னு போட்டா பத்திரிகையோட கற்பு போயிடும்னு ‘தோ ரஹா பண்ணிட்டான் வில்லன்’னு போடுற காலம். எப்புடியோ முத முதல்ல 5ரூ கூட சினிமா போன மிதப்பு. பொட்டிக் கடையில ஒரு பன்னீர் சோடா குடிச்சா என்னன்னு ஒரு அரிப்பு.

நம்ம போறாத காலம் நமக்கு முன்னாடி ஒருத்தன் கமர்கட்டுன்னு 3ரூபாய நீட்டி ஒரு கமர்கட்டு வாங்கி வாய்ல இடுக்கிட்டு போனா வயசு பையனுக்கு பத்து பைசா கமர்கட்டு இருக்கும்போது 3ரூக்கு கமர்கட்டு வாங்குறானேன்னு தோணுமா தோணாதா? எனக்கு ஒரு கமர்கட்டுன்னா பொளிச்சுன்னு மண்டைல போட்டு ஓடுன்னு விரட்டிட்டான். அப்புறம் பெரிய பசங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டது அந்த்த்த கமர்கட்டுன்னா அபின்னு.

எம்.ஜி.ஆரை வெரட்டி விட்ட பிறகு வந்த முதல் படம் நேற்று இன்று நாளை. படத்த ஓட விடமாட்டோம்னு இவனுவ. நிறுத்துடா பாக்கலாம்னு அவனுவ. கலவர பூமியாப் போச்சு. எப்படியோ ஒரு நிலைக்கு வந்தப்புறம் சயானி மூத்திர சந்துல நின்னு க்யூல நின்னாச்சு. நமக்கு முன்னாடி ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரு. தலை தொங்க தொங்க தண்ணி. ‘டாய்!னு சவுண்ட் விட்டு கருணாநிதியை திட்டிட்டு தலை தொங்கிடுவாரு’. டிக்கட் குடுக்க ஆரம்பிக்கவும் தள்ளாடி தள்ளாடி போய், கவுண்டர் கிட்ட லுங்கிய தூக்கி டவுசர்ல விட்ட கை வெளிய வர மாட்டிங்குது.

பின்னாடி இருக்கிறவன் யோவ் போங்கய்யான்னு தள்ளுறான். நாமதான் ரெடியா சில்லர வச்சிருக்கமேன்னு கவுண்டர்ல நீட்டிட்டேன். தப்பாய்யா? டபார்னு ஷட்டர அடிச்சான். துட்டு உள்ள மாட்டிக்கிச்சி. அப்புறம் போனா போவுதுன்னு டிக்கட்ட குடுத்தானேன்னு வாங்கிட்டு உள்ள வந்தா, ப்ளாக்ல விக்க வாங்கினவன உட்ட போலீசு, அவ்ளோ அவசரம் என்னான்னு பொளேர்னு கன்னத்துல குடுத்துட்டான். அப்புடி என்ன மானம் கெட்டு சினிமா பாக்குறதுன்னு டிக்கட்ட கிழிச்சி போட்டு வெளிய வந்துட்டேன்.

அப்புறம் எட்டு வருஷம் தியேட்டர் பக்கம் போனதில்லை. ஐ.சி.எஃப். இன்ஸ்டிட்யூட்ல 25 பைசாவுக்கு சனி, ஞாயிறுல பழைய படம் போடுவாங்க. அது மட்டும் கொஞ்ச நாள் ஓடுச்சு. அப்புறம் ஆரம்பிச்சது ஆங்கிலப் பட மோகம். ஒரே நாள்ள 4 படம், மொத நாள் மொத ஷோன்னு போனது. அப்பவும் 3ரூ டிக்கட்டுக்கு 11 மணிக்கு க்யூதான் பெரும்பாலும்.

அப்புறம் கலியாணம் ஆகி அம்மிணி ஆசை பட்டுச்சுன்னு வேட்டகாடு சினிமாக்கு போனது. என்.டி.ஆர். ஸ்ரீ தேவிய வெரட்டி வெரட்டி பாடின டூயட்டுல அரண்டு போய் மண்டை இடி வந்துடுச்சி. நாம சங்கராபரணம் மாதிரி சாஃப்ட் படம் பாக்குற ஆளு. அப்புறம் நம்ம விருப்பத்துக்கு ஹிஸ்டரி ஆஃப்த வர்ல்ட் பார்ட் 3 க்கு கூட்டிட்டு போனா ஒரு காமெடி சீனுக்கு விளக்கம் கேட்டுச்சு அம்மணி. சொன்னதும் ஒரே அழுகை. இந்த மாதிரி எழவு படத்துக்கெல்லாமா கூட்டிட்டு வருவீங்கன்னு.

சரி இனிமே சினிமாவே வேணாம்னு ஒரு டீலு. டி.வில படம் பார்க்கலாம்னா பக்கத்துல உக்காந்து காமெடி சீன் வந்தா யானை முட்டுனா மாதிரி விலாவில முழங்கையால ஒரு இடி, அப்புறம் சிரிப்பு, இல்லைன்னா டப்பாக் கட்டு கட்டிக்கிட்டு உக்காந்திருந்தா வெறும் தொடையில படார்னு ஒரு அடி, அப்புறம் சிரிப்புன்னு ஒரு ரெண்டு படம் ஓடிச்சி. அப்புறம், மொக்கை காமெடிக்கெல்லாம் இந்த டார்ச்சர் தொடரவும், ரைட்ட்டு, இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு.

அது என்ன படம் இருக்கட்டுமே, நாம அமைதியா ஒரு புக்கை வச்சிக்கிட்டு செட்டில் ஆயிடுவோம். அப்பப்ப தியேட்டர்னு முனகல் வரும். அதுக்கு அரை நாள் லீவ் போட்டு டிக்கட் ரிஸர்வ். அப்புறம் படம் பார்க்க லீவுன்னு எகிறி எஸ்ஸாயிடுவோம்ல. இந்த முப்பது வருசத்துல ஒரு ஆறேழு படம் தியேட்டர்ல பார்த்திருந்தா அதிகம்.

நல்லகாலம் இப்ப மாதிரி உக்காந்த இடத்துல டிக்கட்டு, வேண்டிய சீட்டு, தின்னுற தீனி எல்லாத்துக்கும் வழின்னு அப்போ இருந்திருந்தா? இடி வாங்கி அடி வாங்கி, நம்ம உசரத்துக்கும் உருவத்துக்கும் நசுங்கின சொம்பு உருண்டு வராமாதிரியே இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


டிஸ்கி: இம்புட்டு நீளமா? ஸ்ஸ்ஸப்பான்னு அலுத்துக்கிறவங்களுக்கு. அந்த காலத்துல படம் வந்ததும் எத்தன ரீலுன்னு கேக்கணும். 18/20ன்னா அப்பாடான்னு ஒரு திருப்தி. 16 ரீலுன்னா சின்ன படம்பான்னு ஒரு சலிப்பு. இதும் அப்படித்தான்.
-:o:-

Tuesday, February 15, 2011

கதிர் கீச்சுக்கு பதில் கீச்சு

கதிர் கீச்சுன கீச்சு இங்கே
ஒருவரின் நெருடல், மற்றொருவருக்குச் சாதகமானது. மற்றொருவருக்குச் சாதகமானது இன்னொருவருக்கு நெருடல். # மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?

ப.கீ: ஆசனூர் போனப்ப பின் சீட்டுல கும்க்கியும் ஆரூரனும் இவர நடுவுல உட்டு அமுக்கிட்டாங்க போல#மனுசப்பய கேக்கற கேள்வியா இது?
-0-
வார்த்தைகளுக்குள் அடங்குவதா காதல்? # கொசு@பிப்14.காம்

ப.கீ:ங்கொய்யால. பேச்சுவார்த்தயில்லாம காதல் சொன்னா கைய புடிச்சி இழுத்தியான்னு சொம்பு தூக்க அலையுது நாட்டாம#மூட்டைப் பூச்சி@பிப்.15.காம்
-0-
 
எந்த அரிப்பும் ஒற்றைச் சொறிதலில் அடங்கிவிடுவதில்லை. சொறியச்சொறிய இன்னும் கொஞ்சம் எனக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது
ப.கீ:அல்லோ! யாருட்ட? மொதல் அரிப்புக்கு மொதல் சொறிதல் சரியாப் போச்சி. திரும்ப அரிக்கமாட்டேன்னு அக்ரீமெண்ட் இருக்கா? அது கேட்டா யாரு சொறியச் சொன்னா?
-0-
ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டு அதையே வடிகட்டி, சுத்திகரித்துக்(!) குடிக்கும் மேம்பட்ட தலைமுறை நாம்!

ப.கீ:அடப்பாவி மனுசா! அப்ப மறு சுழற்சின்னு இடுகை இடுகையா போட்டு ஓட்டு தேத்தினதெல்லாம் பொய்யா?
-0-
வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

ப.கீ:ம்கும். இவருக்கு யார்னா காசு குடுக்க வேண்டி இருந்து, இந்தாங்க சாமி உங்க துட்டுன்னு ஒரு செக்கு (தகவல் தாங்கும் எழுத்து) குடுக்காம, அய்யா சாமி எனக்கு இம்புட்டு கஷ்டமா இருக்குன்னு ஓன்னு அழுது லெட்டர் (உணர்வைத் தாங்கும் எழுத்து) குடுத்தா இதுலயா கீச்சுவாரு? அவன கீச்சுடுவாரு.
-0-
சிக்னலில் நிற்கும்போது மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அவசரம் இருப்பது எப்படி

ப.கீ:அட கிளம்ப முன்ன ‘போகாம’ கிளம்பிட்டிருப்பாங்க. இதுக்கு வேற வெளக்கணுமோ?
-0-
 
ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் என்பதெல்லாம் நிலைமைகளைப் பொறுத்து பெரிய தொகை என்று தெரிகிறது. ஆனால் 300 கோடி, 2000 கோடி, 40000 கோடி என்பதெல்லாம் சர்வசாதாரணாமா சொல்ல வருது... # என்னாச்சு எனக்கு? எனக்கு மட்டும்தான் இப்படியா?

ப.கீ:ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம்லாம் நாம பார்த்து, தொட்டு, எண்ணி அனுபவிச்சது. இந்த கோடிய கண்டவன் எவன்? பத்தாயிரம் ரூபாய பாக்கட்ல போட்டுகிட்டு நடக்கலாம். பத்து கோடி ரூபாய செக்கா வெச்சிகிட்டு பட்டர் பிஸ்கட் கூட வாங்க முடியாது...# முன் மண்டை மினு மினுத்தா இப்புடிதான்.
-0-
எல்லாவற்றிலும் புதுசு வேணும்னு நினைச்சாலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ மட்டும் ஏன் 10 வருசமா மாற்றாமல் வெச்சிருக்கிறோம். # யூ டூ!?
ப.கீ:அடியே! இப்படியெல்லாம் பிட்டப் போட்டு அத வச்சி ‘புதுசா’ ஒன்னு தேடினா பழசா பிஞ்சி போனதுல பச்சு பச்சுனு விழும்டி.# ம்கும்! மத்ததுல வாங்கறதுக்கு சோடி சேர்க்குது சோடி.
-0-
 தொலைத்த இடத்தில் தேடுவதைவிட, கிடைக்காத இடத்தில் தேடுவது பல நேரங்களில் காரணம் சொல்லித் தப்பிக்க உதவுகிறது # ஆமா நான் ஏன் இப்படி ஆயிட்டேன்?

ப.கீ:ஒரு பக்கம் ட்விட்டரு, ஒரு பக்கம் ஜி டாக்கு, ஒரு பக்கம் ஃபேஸ்புக்குன்னு அலபாஞ்சா இப்புடித்தான்#முன்னாடி மட்டும் ஓக்கியமோ?
-0-
உள்ளடங்கிய ஒரு கிராம விவசாய நிலம் ஏக்கர் 40 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரின் கருப்புப்பணம் வெளுக்கப்படுகிறது.

ப.கீ:ஏன்யா ஏன்? மெயின் ரோடுல பங்களா கட்டினா மட்டும் வெள்ளைப் பணம்னா சொல்லப் போறீங்க. விக்கற விலையில வெள்ளப் பணத்துல கட்ட முடியுமாய்யான்னு அப்பவும் இதே தத்துவம்தானே.
-0-
ஒரே ஒரு நாளைக்காவது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிம்மதியா தூங்கப்போகனும் # கனவு

ப.கீ:டிவிட்ட மறந்து போய் தூங்கிட்டா மாதிரி கனவு கண்டு படக்குன்னு எழுந்து ட்வீட்டிருக்கு பய புள்ள.
-0-
இணையத்தில் எழுதுவதாலேயே கூடுதல் சமூகப் பொறுப்பு வந்திடுச்சா!? இணையத்தில் எழுத வராமலிருந்தால் அறச்சீற்றத்தை எங்கே கரைத்திருப்போம்?

ப.கீ:இணையத்துல எழுதுனாலும் ஊட்டுக்குள்ள கத்தினாலும் பத்து பேரு சுத்தி நின்னு பராக்கு பார்க்கதான் செய்வாங்க. என்ன, ஊட்டுல ஓவரா போனா தே! கம்னு கெடன்னு உச்சி மண்டையில சொடேர்னு ஒன்னு உழும்!
-0-
மக்களைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கூட்டணிக்காக மட்டுமே மானங்கெடும் இந்த அரசியல் தலைகள்தான் நாளையும் இந்த நாட்டை ஆளவேண்டுமா?

ப.கீ:நாளன்னைக்கு ஆண்டா ஓக்கேயா பாஸ்?
-0-
 மனிதர்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும்போது நாம் மனிதர்கள் அல்லவோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

ப.கீ:சந்தேகம் மனுசனுக்கு மட்டுமே இருக்கிற வியாதின்னு சொன்னா நம்பாம சந்தேகப்பட்டா இப்படியெல்லாம் சந்தேகம் வரும்தான்.
-0-
எல்லா மக்களையும் சமமாக நடத்தி, சுறுசுறுப்பாக மக்களுக்காகவே இயங்கும் ஒரே அரசுத் துறை(!) டாஸ்மாக்

ப.கீ:டாஸ்மாக் அரசுத் துறையில்லை. அது கொம்பேனி.
-0-
எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே ஒற்றுமை வெள்ளைச் சட்டை, மற்றும் மாசுபட்ட மனசு
ப.கீ:குசும்பப் பாரு. ஒருத்தன் வேட்டிய ஒருத்தன் உருவிட்டான்னு குறியீடா சொல்றாராமா.
-0-
ங்கொய்யாலே..... எம்.ஜி.ஆரு ஒரு ஆளு மட்டும்தான் முழுக்கைச் சட்டை, தழையக் கட்டிய வெள்ளை வேட்டியோடு ஏர் ஓட்டமுடியும் போல # உரிமைக்குரல்
ப.கீ:ங்கொய்யால நீரும் ஓட்டிப் பாரும்! அடுத்த நாள் உம்மைக் கட்டி ஊட்டம்முணி ஏர் ஓட்டுவாங்க# அடிமைக் குரல்.
-0-
 அரசியல் சார்பு எடுத்ததின் விளைவாக மட்டுமே அடிப்படை மனிதநேயம், மாண்பு, மனிதத்தன்மை செத்தொழிவது ஏன்? எல்லாமே காசுதானா?

ப.கீ:அவுங்கூட்டு  மனுசா மேல நேயம், அவரோட மாண்பு, அவுங்க மனுசங்களுக்கு நல்லது செய்யணும்னு தன்மையா இருக்கும்போது செத்துப் போச்சுன்னு எப்புடி சொல்லுவீங்ணா? சே சே அப்புடி காசுன்னு எல்லாம் கராரா இருக்க மாட்டாங்ணா? நெலம் புலம், காரு, கம்பேனின்னு எது குடுத்தாலும் சரிங்ணா.
-0-

பொறுப்பி: அவ்வப்போது  ‘ட்விட்டரில்’ கிறுக்காத ’ பதில் கீச்சுகள்’. ஏன்  போடலைன்னு ஏங்கி நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும்  கொட்டைஎழுத்துல போட்டுடுவோம்)

Tuesday, August 10, 2010

ப்ளடி ப்ளாகர்!...



குப்பு: இந்த ராமசாமி ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சான். பெரிய ரோதனையாப் போச்சுடா குப்பு!

சுப்பு:  என்ன செஞ்சான்?

குப்பு: நேத்து ஒரு கலியாணத்துல அவன் ஃபேமலியோட வந்து, இவதான் என் ப்ளாக், இதுங்க ரெண்டும் என் பின்னூட்டங்கள்னு அறிமுகம் பண்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ஏன்யா குப்பு, சாதாரண மனுசனுக்கும் ப்ளாக்கருக்கும் என்ன வித்தியாசம்?

குப்பு: மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: என்னடா குப்பு தலைல கை வச்சிட்டு உக்காந்திருக்க?

குப்பு: சென்னை மாநகர் நடுவில், இயற்கைச் சூழலில், புகழ் பெற்ற கல்லூரி அருகாமையில் மனை ஒரு கிரவுண்டு 25லட்சம்னு ராமசாமி சொன்னானேன்னு அட்வான்ஸ் பணத்தைக் கட்டிட்டேன். இடத்தைக் கூட பார்க்கலை. அது எங்கயோ திண்டிவனம் கிட்ட இருக்கு. ராமசாமியை ஏண்டா புளுகினன்னு கேட்டா, அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ஏண்டா ராமசாமி பத்திரிகைல வேலை கிடைச்சதுன்னு போனானே. இப்போ வேலைய விட்டு தூக்கிடாங்கன்னு கேள்விப்பட்டேன் என்னாச்சு?

குப்பு: பின்ன? முதலமைச்சர பேட்டி எடுத்து பத்திரிகைல போட்டு புனைவுன்னு போட்டுட்டான் பழக்க தோஷத்துல. தூக்கிட்டாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: இந்த ராமசாமி தொல்லை தாங்கலைடா சுப்பு.

சுப்பு: என்னாச்சு?

குப்பு: எலக்‌ஷன் கமிஷனருக்கு லெட்டர் போட்டு, நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ராமசாமி குழந்தைக்கு பேரு மாத்தப் போறேன்னானே! நியூமராலஜியா?

குப்பு: அதெல்லாமில்லை. ஒரு பொண்ணுக்கு தமிழிஷ்னு பேரு வச்சிருந்தானாம். அது இப்போ இல்லைன்னு இண்ட்லின்னு மாத்தணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுப்பு: இராமசாமி ரூமை எல்லாரும் கேரோ பண்ணிட்டிருக்காங்களே! என்னாச்சு?

குப்பு: நெகடிவ் வோட் போட்டான்னு அவன் ஸ்டெனோவ ஸஸ்பெண்ட் பண்ணிட்டானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் குப்பு! வர வர ராமசாமி அட்டகாசம் தாங்க முடியலைய்யா.

குப்பு: இன்னைக்கென்ன கூத்தடிச்சான்?

சுப்பு: ஆஃபீஸ் கரஸ்பாண்டன்ஸ்ல ரிமார்க்ஸ் ப்ளீஸ்னு போடுறதுக்கு, பின்னூட்டம் பெறன்னு போட்டு அனுப்பறான்யா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: ராமசாமி! நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்லை.

ராமசாமி: என்னாச்சுய்யா?

குப்பு: ஒரு நோட் எழுதி ஆர்டர் கேட்டா அக்ரீட்னோ நாட் அக்ரீட்னோ போடணும். என் நோட்ல இருந்து அங்கங்க நான் எழுதினத மார்க் பண்ணி கீழ எழுதி,  “கலக்கிட்ட”,  “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு எல்லாம் போட்டா நல்லாவா இருக்கு? 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ராமசாமிக்கு செம டோஸாமே காலைல. என்னாச்சு?

குப்பு: நம்ம கம்பெனி டெண்டர் ரிஜக்ட் ஆன லெட்டரைக் கொண்டு போய் முதலாளிகிட்ட “வடை போச்சே”ன்னு சொல்லி நீட்டினானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் குப்பு. என்னய்யா ராமசாமிக்கு ஆக்ஸிடண்டா? எங்க பார்த்தாலும் கட்டு?

குப்பு: இல்லைய்யா! கிருஷ்ணனோட ரெண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டு விழாக்கு போனப்ப, பெரிய மனுஷனாச்சேன்னு பேரு வைக்கச் சொன்னா ‘மீள் பதிவு’ன்னு வெச்சானாம். டின்னு கட்டிட்டாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: சார்! இந்த ராமசாமிய கொஞ்சம் வார்ன் பண்ணுங்க சார்.

அதிகாரி: என்னய்யா பண்ணான்?

குப்பு: அவன் வேலையை அறைகுறையா பண்ணிட்டு, இதைத் தொடர குப்புவை அழைக்கிறேன்னு ஸ்லிப் எழுதி என் டேபிள்ள போட்டுட்டு போறான் சார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுப்பு: குப்பு! நேத்து சென்ஸஸ் எடுக்க வந்தவங்கள டரியலாக்கிட்டான்யா ராமசாமி!

குப்பு: என்ன தகராறு அவங்க கூட.

சுப்பு: குடும்ப உறுப்பினர் பெயர் சொல்லுன்னா, தன்னோட எண்பத்து மூணு ஃபாலோயர் பேரையும் சேர்த்தாவணும்னு சண்டை போடுறான்யா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிஸஸ் ராமசாமி: இங்க பாருங்க. நீங்களும் உங்க ப்ளாகும் பாழாப்போங்க. அதுக்காக கவிதாங்கற என் பேரை கவுஜா கவுஜான்னு கூப்பிட்டா நடக்கறது வேற.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் சுப்பு. ராமசாமி கிரகப்பரவேச பத்திரிகை பார்த்தியா?

குப்பு: பார்த்தேன்! படுபாவி, புது வீட்டுக்கு ‘திரட்டி’ன்னு பேரு வச்சிருக்கானேய்யா, லூசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மன நல மருத்துவர்: ஸோ மிஸ்டர் ராமசாமி! ப்ளாக் ஒரு ஹாபின்னு புரிஞ்சிண்டீங்கன்னா ஒரு பிரச்சனையும் வராது. வேற ஏதாவது உங்களுக்கு கேக்கணுமா?

ராமசாமி: டாக்டர்! இன்னைக்கு இடுகைக்கு சரக்கே இல்லை டாக்டர்.  “மருத்துவ உலகில் நான் எப்படிப்பட்டவன்”னு ஒரு பத்து கேள்வி தரேன். பதில் சொன்னா இடுகை தேத்திடுவேன், ப்ளீஸ்.

மன நல மருத்துவர்: அய்யய்ய்யோ! டொய்ங்....
*********************************************