Showing posts with label ஆணாதிக்கம். Show all posts
Showing posts with label ஆணாதிக்கம். Show all posts

Wednesday, June 2, 2010

வீர சுதந்திரம் வேண்டி..

நட்புகளே!

முதலிலேயே கை கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனுதாபம் தேடியல்ல இந்த இடுகை. ஆணாதிக்கத்தை நொறுக்குகிறேன் என்ற பெயரில் ஒரு பெண்ணை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள விட்டு சுத்தி நின்று அடித்த இந்த ஆதிக்கத்துக்கு பெயரென்னவென்றாவது கூறுங்கள் நண்பர்களே.

எத்தனை பெண் பதிவர்கள் இருக்கிறார்கள். எல்லாருமா நர்சிம்மை கண்டித்தார்கள். அல்லது அவர்கள் எவருமே ஏதோ ஒரு பொது விசயத்தைக் குறித்து இடுகை இடவில்லையா?

தோழி கலகலப்ரியாவை தனிமைப்படுத்தி அவரின் தன்னிலை விளக்கத்துக்கு பின்னூட்டமாக கேவலப் படுத்தியபோது நாம் யார் எதிர்த்தோம்? யார் பேசினார்கள்? யார் கண்டித்தார்கள். 

சந்தனமுல்லையின் மன உளைச்சலைப் பற்றி, அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றி உணராதவன் மனிதனில்லை. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமும் இல்லை. ஆனால், அது பின்விளைவை எதிர் பார்க்காமல் ஏதோ ஒரு விதத்தில் அவரே தேடிக் கொண்டது என்பதும் மறுக்கவியலாதது. 

கலகலப்ரியா செய்தது என்ன? என்ன தெரியும் அவரைப் பற்றி உங்களுக்கு? இங்கு சுமஜ்லாவுக்கு எதிராக எழுதிவிட்டார் என இரண்டு பக்கமும் சொம்படித்த ஈனப்பிறவிகளும், புரிதலின்றி தாக்கிய பெரிய மனிதர்களுக்கும் தெரியுமா, அந்த நேரம் அவர்கள் இருக்கும் ஊரில் மசூதிக்கு பாங்கு கூவும் ஸ்தூபிகள் வைக்க விதிக்கப்பட்ட தடைக்கெதிராக அவர்கள் மத சுதந்திரத்தை ஆதரித்து வாக்களித்தவள். 

நணபர்கள் மாதவராஜ், செந்தழல் ரவி, காமராஜ், இன்னும் எத்தனையோ பேர் தோழி சந்தனமுல்லை குறித்த அவதூறுக்கு கண்டனம் தெரிவித்தது தவறென யாரேனும் கூறமுடியுமா? நர்சிம் எழுதிய அசிங்கத்தை கண்டிப்பதுதானே சரியெனப்பட்டது. அதைத்தானே கலகலப்ரியா செய்தார். பர்தா அணிந்தவர்கள் மட்டுமே நற்குடி என்ற வார்த்தையை எதிர்த்து தன் ஊரில் பர்தா அணியாத ஒரு தோழியும் தாழ்ந்தவளல்ல என்பது தானே அவரது கவிதை?

அதற்காக இப்போது ஏன் கண்டிக்கவில்லை எனக் கேட்பது தவறில்லை எனில், நான் கேட்கிறேன் ஏன் கலகலப்ரியா ஒரு பெண்ணில்லையா? ஆணாதிக்கத்துக்கு பாதிக்கப் படவில்லையா? எங்கே சொல்லுங்கள்? 

நேற்றைய இடுகையில் எத்தனை வார்த்தைகள் இருந்ததோ அவையெல்லாம் உங்களுக்கு திமிராகத் தோன்றலாம். அதன் பின்னான வலி எனக்குத் தெரியும். சந்தனமுல்லையின் வலியும் வாதையும் உங்களுக்கெல்லாம் எப்படித் தெரியுமோ அப்படி எனக்குத் தெரியும்.

ரவி சார். காயப்பட்டு நிற்கிறேன். உங்களால். பகுத்தறிவுடன், பட்ச பாதம் இல்லாமல் உங்கள் எழுத்தைக் காதலித்ததால் உங்களை மதித்ததால் காயப்பட்டு நிற்கிறேன். சந்தனமுல்லையின் வலியுணர்ந்த உங்களுக்கு கலகலப்ரியாவின் வலி ஏன் தெரியவில்லை. என்ன கேட்டீர்கள்? கள்ள மவுனமா? மாதவராஜைப் படியுங்கள். காமராஜைப் படியுங்கள்.  என்ன சொன்னீர்கள்? வானம்பாடி பாட ஆரம்பித்து விட்டதா. அகோரத்தின் மடியில் நிற்கிறதா? என்ன அர்த்தம் என் எழுத்துலக ஆதர்ஸமே? 

நர்சிம் என்னை அறிமுகப்படுத்திய விஷயம் ஏன் வந்ததோ தெரியவில்லை. நர்சிம்மின் பார்வையில் நான் படும்போது 150க்கும் மேல் என் இடுகைகள் அது மொக்கையோ குப்பையோ வெளியாகி இருந்தன. அவரின் அறிமுகத்திலும் நான் எப்படி தவறவிட்டேன் என்றே குறிப்பிட்டிருந்தார். ஒரு பெண்ணுக்கு நீதி கேட்ட உங்களுக்கு மறு பெண்ணுக்கு நீதி கேட்க தோன்ற வேண்டாம். சீண்டும் எண்ணம் எப்படி வந்தது. இது ஆணாதிக்கம் இல்லையா?

உணமைத்தமிழன் இடுகையில் நீங்கள் பின்னூட்டமிடும்போது கொச்சையாய், பெண்பெயரில் ஒரு பின்னூட்டம் வந்ததே? கண்டித்தீர்களா? சொல்லலாம். அங்கு கலகலப்ரியா ஒரு பெண்போல் பேசவில்லை என்று? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம். அதென்ன சார் பெண் போல் பேசுவது? பெண் என்று நினைத்திருந்தீர்களானால் வினவில் அவரின் பெயரை, மிஸஸ் டவுட்டின் பெயரை நீக்கச் சொல்லியிருக்கலாமே? யார் செய்தீர்கள்?

நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறேன். என் தோழிக்கு எவர் ஆதரவும் தேவையில்லை. எந்த ஆறுதலும் தேவையில்லை. ஒரு தோழனாக உங்கள் முன் கேட்கிறேன். நீங்கள் கண்டிக்க வேண்டாம். தண்டிக்க வேண்டாம். நாங்கள் உன் பக்கம் தோழி என நிற்க வேண்டாம். அதற்கான தகுதியும், மன வளர்ச்சியும் நமக்கில்லை. 

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. ஒரு நண்பனாக என் கடமை இது. அறச்சீற்றம், அநியாயத்தை எதிர்த்து இடுகை, Pleading, roughing up இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனைக்கும் இடுகை இதையெல்லாம் செய்து கொண்டு அருமையாகச் சொன்னீர்களிலும், நச், போன்ற பின்னூட்டங்களிலும் புளகாங்கிதம் நாம் அடையும் நேரத்தில் என் தோழியெனும் தேவதையால் ஒரு தமிழின மன நோயாளிக்கு சரியான சிகிச்சை, ஒரு நோயாளிக்கு தன் நிலை குறித்த தெளிவு, ஒரு பெற்றோருக்கு தன் குழந்தையின் பிரச்சினை, ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோர், ஒரு புலம் பெயர்ந்தவருக்கு வாழ்வு, இன்னும் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நெறிப்படுத்திக் கொடுக்கும் வரம் அவளுக்கு கடவுள் கொடுத்தது. 

அதையும் மீறி எழுத வந்ததற்கு வலியும் அவமானமும் நாம் கொடுத்தது. வளர்க ஆணாதிக்க ஒழிப்பு. 

எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யவும், எது சரியில்லை எனத் தோன்றுகிறதோ அதை எதிர்க்க மட்டுமல்ல நிராகரிக்கவும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அதைத்தான் நான் செய்தேன். என்னைப் போல் பலரும் அப்படித்தான் இருந்தனர். அதனால் அப்படி இருப்பவர்கள் குற்றவாளிகளானால் இருந்துவிட்டுப் போகிறோம். 

மீண்டும் சொல்கிறேன். என் வார்த்தைகள் யாரையாவது காயப் படுத்தியிருப்பின் இதோ என்னை மன்னித்துவிடுங்கள்.

தயவு செய்து என் இந்த இடுகைக்காக எதுவும் செய்ய வேண்டாம். நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். மன்னிப்பல்ல. கண்டனமல்ல. ஆதரவல்ல. அங்கீகாரமல்ல. அனுதாபம் சத்தியமாய் அல்ல. 

தயவு செய்து அவரை சுதந்திரமாய் விடுங்கள். அவராய் இருக்க விடுங்கள். அவரில்லாமலும் பதிவுலகத்தில் நியாயம் தேவையெனில் கிடைக்கும். அனியாயம் வெருட்டப்படும். ப்ளீஸ்.  
~~~~~~~

(மன்னியுங்கள் தோழர்களே! மட்டறுத்தல் செய்திருக்கிறேன். குறைந்தபட்சம் வேறு யாரும் காயமுறாமல் இருக்க என்னால் செய்யக்கூடியது அவ்வளவே)