Showing posts with label பர்கின்ஸன்ஸ். Show all posts
Showing posts with label பர்கின்ஸன்ஸ். Show all posts

Thursday, April 15, 2010

இட்ட அடி நோக..

‘ராணி! இங்க வாம்மா. வாயெல்லாம் வறண்டு போவுது. ஜில்லுன்னு ஃபிரிட்ஜ்ல இருந்து தண்ணியெடும்மா. இங்க வா! குனி! ம்ம்ம்ம்.ப்ச்.ப்ச்ச்.ப்ச்ச். நல்லாயிருப்படிம்மா. ஒரு குறையும் இருக்காது உனக்கு. மணி பத்தாக போகுதே. சாப்புடும்மா.
‘ஏ வேலக்கார முண்ட. நீயாருடி என்ன தடுக்கறது? கொன்னு போட்டுடுவேன் தெரிஞ்சிக்கோ. குளிப்பாட்ட, சாப்பாடு குடுக்கத்தான் உன்ன கூலிக்கு வச்சிருக்கு. என்னைஅதிகாரம் பண்ற வேல வெச்சிக்காத! 
‘ஏம்மா? கலியாணமாகி 3 வருஷமாச்சிங்கறியே. டாக்டர்ட போய் பாரும்மா. வயசானா புள்ள நிக்கறது கஷ்டம் ராணி.’

இது ஒரு உதாரணம். என்றோ எப்போதோ பேசியவை அல்ல. குறைந்தபட்சம் 2 நிமிட இடைவெளிமுதல் 20 நிமிஷ இடைவேளைகளில் பேசியவை.

டேய்! எழுந்திருடா. திருடன் வந்து பணத்தையெல்லாம் எடுத்துண்டு போய்ட்டாண்டா. நான் பார்த்து சத்தம் போட்டேன். சன்னலுக்கா பூந்து ஓடிட்டான்.

அம்மா தூங்கும்மா. யாரும் வரலை. சன்னல் வழியா எப்படிம்மா ஓடுவான். இது மாடிம்மா. கனவு கண்டிருப்ப தூங்கு.

கட்டேல போறவனே. பொணமாட்டம் தூங்குவ. உனக்கென்ன தெரியும். எடுத்த காச வீசிட்டு போயிட்டான் பாரு. நான் பொய்யா சொல்றேன்.

உடனே எழுந்து, விளக்குப் போட்டு பார்த்து, இல்லைம்மா. எங்கையும் காசு இறையலம்மா. நீயே பாரு. கனவுதான் கண்டிருக்க என்றாலே ஒழிய தூங்க முடியாது. ஒரு நாள், இரண்டுநாள் இந்த விளையாட்டு விளையாடலாம். தினமும் என்றால்? தோ! சத்தம் போடாம படு. எல்லாரும் சண்டைக்கு வராங்க. அம்மால்ல! முடியலைம்மா எனக்கு. கொஞ்சம் தூங்கணும்மா என்றாவது தூங்கத் தோணும்.

ஒரு நாள் ரகசியமாக, ஏய்! இங்க வாடா. திருட்டுக் கடங்காரன் நான் தூங்கறேன்னு என் செயினைத் திருடி வெளிய போட்டு ஒளிஞ்சிருக்கான். அசந்தா ஓடிடுவான். மெதுவா அறைக்கதவை இழுத்து பூட்டிட்டு கத்து என்பவளை என்ன சொல்ல? விடிய விடியக் காத்திருந்து சர்வீஸ் ஏரியாவில் பார்த்தால் செயின் கிடக்கும். தானே போட்டிருப்பாள். அடுத்த நாள் கழுத்தில் செயின் இருக்கும் போதே நாசமாப் போறவனே. என் செயினைத் திருடி வித்துட்டியே. நீ உருப்படுவியா என்றழுபவளை எப்படி சமாதானம் செய்ய?

ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. நிற்க முடியாது. சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லத் தெரியாது. ஏதோ ஒரு நொடியில், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய், சீராக நடந்து, ஸ்டூல் இழுத்துப் போட்டு, தாழ்ப்பாளைத் திறந்து விட்டு லேட்ச் திறக்கத் தெரியாத, முடியாத தருணங்களில், என் பொண்ணு கலியாணத்துக்கு போகவிடாம அடைச்சி வெச்சிருக்காளே இந்த வேலைக்கார முண்ட இவளைக் கேட்பாரே இல்லையா என்று அலறியபடி வெட்டிய மரமாய் விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயம் உண்டாகும்.

பணிப்பெண் என்ன செய்வாள்? குழந்தை மாதிரி தூக்கியெடுத்து துடைத்து மருந்திட்டு ஏம்மா இப்புடி காயம் பட்டுக்கறீங்க? எவ்வளவு வலிக்கும் என்றால் அழுவதோ அல்லது சலிப்பாய் திட்டிவிட்டால் அடியேய்! ஆடதடி. ஒரு நிமிஷம்! ஒரே ஒரு நிமிஷம். ஊரக்கூட்டி என்ன தடியால அடிச்சி மண்டைய பொளந்துட்டான்னு கத்தினா போலீஸ் என்னைத்தான் நம்பும். தெரிஞ்சிக்கோ என்பவளை என்னதான் செய்ய?

கால் ஊன்றி நிற்பதைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கும். சுவற்றில் ஊன்றியிருக்கும் கை மெதுவே தொட்டாற்போல்தான் இருக்கும். அந்தக் கையை அசைப்பதோ, காலை நகர்த்துவதோ இயலாத காரியம். பின்புறமாக அணைத்து, பாதங்களின் கீழ் மண்ணுளிப் பாம்புபோல் நம் பாதத்தை நுழைத்துத் தாங்கி ஒரே ஒரு இஞ்ச் நகர்த்திவிட்டால் போதும். அப்புறம் நம் பாதத்தை நகர்த்திக் கொண்டுவந்து படுக்கையில் விடலாம்.
ஒரு புறம் ப்ரயத்தனத்தாலும், மறுபுறம் நைந்து நாரான உடம்பை, எங்கேயோ விழுந்து எங்கு ஊமைக்காயம் பட்டுக் கொண்டு, எங்கு வலிக்கிறது என்று கூடச் சொல்லத் தெரியாதவளை குண்டுக்கட்டாய் இப்படி தூக்கிப் போட வேண்டியிருக்கிறதே என்ற வலியாலும், நெஞ்சுக்கூடு வெடிக்கும்.

நம்மையறியாமலே தினம் சிமிட்டுகிறார்போல் ஆயிரக்கணக்கில் எச்சில் கூட்டி முழுங்குகிறோமே. தொண்டைக்குக் கீழ் ஒன்று ஏறி இறங்குகிறதே, அப்படி அந்த தசையை இயங்க மூளை கட்டளையிட மறுத்தால் என்னாகும்? பசிக்குது என்று அழத்தெரியும். வாயில் சோற்றையோ, கஞ்சியையோ வைத்தால் விழுங்கத் தெரியாது. முடியாது. அடைத்துக் கொண்ட குழாய்க்கு பைபாஸ் மாதிரி ஏதோ செய்து அதில் கஞ்சி, ஹார்லிக்ஸ் என்று ஊற்றி எத்தனை வருடங்கள் காப்பாற்ற?

முக்கியமாக, பெட்சோர் வராமல் அவ்வப்போது புரட்டிவிட்டு, நனைத்து விட்ட உடுப்பை மாற்றி, படுக்கையை சரிசெய்து தூங்கச் செய்யும் வேளைகளில், உதடு பிதுங்க முகம் வருடி பாவம்டா நீ என்னும்போது யார் பாவத்துக்கு அழ?

பர்கின்ஸன்ஸ் டிஸீஸ் என்று நடந்து வருவதைப் பார்த்தே கண்டுபிடிக்கும் மருத்துவர் இருக்கத்தான் செய்கிறார். இந்த இழவு அதுதான் எனத்தெரிந்து அவரிடம் நேரத்தே அழைத்துச் செல்லத்தான் நமக்குத் தெரிவதில்லை. நின்னா தள்ளுதுடா என்றால் பி.பி. மாத்திரை போட்டியா, ராத்திரி தூங்கினியா எனக்கேட்கவும், கால் கை எல்லாம் மறத்துப் போகுதுக்கு கோடாரித் தைலமும் வாங்கிக் கொடுத்தால் முடிந்ததா என்ன?

முழங்கால், முழங்கையை மடக்க முடியலை என்றால் ருமாடிசம்!. வயசாச்சின்னா அப்படித்தான். தென்னமரக்குடி எண்ணெய் தேய்ச்சா சரியாயிடும் என்று வேலையைப் பார்க்கத்தானே அய்யா தெரியும் நமக்கு . இப்படியெல்லாம் நோயிருக்கிறதென்று யாருக்கு தெரியும்?

(தொடரும்)