Monday, June 17, 2013

பக்கோடா புராணம்

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது  சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டு பிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா? அதற்குச் சற்றும் குறையாத தரத்தில் ஒரு குழம்பை வைத்துவிட்டு உருளைக்கிழங்கு ஃப்ரை உங்களுக்கு பிடிக்கும்னு செஞ்சனா. அப்பதான் ஃபோன் பண்ணீங்களா? லைட்டா தீஞ்சிடுச்சுங்க என்று 7வது டிகிரி பர்ன் என்ற அளவுக்கு நிலக்கரி பொரியலிலிருந்து கொலைக்கேசில் தப்புவித்து தம்பதியரைக் காப்பாற்றும் சமய சஞ்சீவியல்லவா அது?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச்சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொரிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால் சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

பல்லிருக்கவன் பகோடா திங்கான் என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான், பகோடாவைத் தின்னவும் முடியாமல் அதற்காக ஏங்குவதை தவிர்க்கவும் முடியாமல் தவிப்பவர்கள் செய்த கூட்டுச்சதி காலிஃப்ளவர் மற்றும் பனீர் பக்கோடா. மேற்படி எதுவுமே மூலப் பொருளோடு சுருதி சேராமல் பக்கோடா மாவு டேஸ்ட், மூலப் பொருள் டேஸ்ட் என்று அபஸ்வரமான கலியாணக் கச்சேரி மாதிரிதான் இருக்கும்.

ஒரு தேவ ரகசியம் சொல்லட்டுமா? கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கும் மிகப் பிடித்தது பக்கோடாவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் பள்ளியிலேயே விடைத்தாளைக் கொடுக்கும் ஆசிரியர் பக்கோடா மடிக்கத்தான் லாயக்கு என்று ஆசீர்வதித்துக் கொடுப்பார். இதப் பகடி என்போர் சயனைட் கவுஜ சரஸ்வதி, கல்வியைத் தன்பேரில் சுமந்திருக்கும் வித்யா என்கிற விதூஷ் தன்னுடைய படைப்புக்களை பக்கோடா பேப்பர் என்ற வலை மனையில்தான் மடித்துத் தருகிறார் என்பதற்கு வேறேதும் மறுப்பு சொல்லக் கூடுமோ?

‘ன்னாச்சி’ என்று திரும்பத் திரும்ப வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தவர்கள், அறிவார்களா? இது ஒன்றும் புதுமையில்லை. மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் ‘அப்பா பக்கோடா’ என்ற ஒரே வசனத்தை படம் முழுதும் பேசி பக்கோடா காதர் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை அளித்த ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

சும்மா கண்ட மானிக்கு வெங்காயம் நறுக்கி, கடலை மாவில் பிரட்டி எருமைமாடு நடந்து கொண்டே சாணி போடுவது போல் வாணலிக்குள் விழுவதல்ல பக்கோடா. பக்கோடாவின் பெயரைக் கெடுத்து

“நசுகு பித்து பித்தி நா கொம்ப கூல்ச்சேவு
டர்ருமனி பித்தரா நா பாக்ய சாலுடா”
 என்று கவி வேமனவை அலறவைத்த சதி அதில் எழவெடுத்த பூண்டைப் போடுவது.

நல்ல கடலை மாவில் (கோதுமை அரைத்த பிறகு அரைக்கலாகாது) அளவாக அரிசி மாவு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், புதிதாய்க் காய்ச்சிய சுட்டெண்ணெய் (பஜ்ஜி, அப்பளம் எல்லாம் காய்ச்சி ட்ரான்ஸ்ஃபார்மர் ஆயில் கணக்காய் கரேலென்றிருக்கும் சுட்டெண்ணெய் அல்ல) கொஞ்சம் விட்டு உப்பு போட்டு பிசிறி வைத்து விட்டு, வெங்காயம் நீள நீளமாய் நறுக்கி உதிர்த்து விட்டு பச்சை மிளகாய் வட்ட வட்டமாக மெல்லிசாய் நறுக்கிஅதில் போட்டு கலந்து, பின்னும் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசிறிவிட்டு பத்து நிமிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் விட்டு பிசைந்து கெட்டியான பதத்திலேயே பின்னும் ஒரு பத்து நிமிடம் விட்டு, கருவேப்பிலை உருவிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஒரு சிட்டிகைப் பெருங்காயப் பொடியிட்டு தண்ணீர் அளவளவாகச் சேர்க்கவேண்டும். ஒரு கை மாவெடுத்து பிசிறி விட்டால் மொத்தையாக கொஞ்சம், தூள்தூளாக மீதி விழக்கூடாது. அப்படிப் பிசிறுவது பரதநாட்டிய அடவு மாதிரி அத்தனைக் கலை நயத்தோடும் பதமாகத் தண்ணீர் சேர்ப்பது ஒரு விஞ்ஞானியின் கவனத்தோடும் செய்யப்பட வேண்டியது. Practice brings perfection.

புகையாமல் நன்றாகச் சுட்ட எண்ணெயில் ஒரு சுண்டைக்காய் மாவு போட்டால் ஒலிம்பிக் வீரர் பெல்ப்ஸ் மாதிரி போட்ட வேகத்தில் மேலே வந்து சுவாசிக்க வேண்டும். அதே சூட்டை கடைசி வரை மெயிண்டெய்ன் செய்வதும், பக்கோடா, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாமே பொன்னிறத்தில் வரும்போது சுவாசம் மட்டுப் பட்டிருக்கும் போது சரியான பதத்தில் எடுப்பதும் பழக்கத்திலேயே வரும்..

பக்கோடா செய்வது மட்டுமல்ல. தின்பதும் கலையே. சுடச்சுட ஹாவு ஹாவு என்று தின்பதோ நமர்த்துப் போய் தின்பதோ பக்கோடாவுக்குச் செய்யும் அவமரியாதை. கை பொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக வாயிலிட்டால் பொறபொறவென உதிர்ந்து மெத்தென்ற உள்ளொளி காட்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கடலைமாவு எல்லாம் உமிழ்நீரின் தம்பூராச் சுருதி சேர்ந்து ஆத்மானுபவம் அளிக்கும்.

கடைப் பக்கோடா என்பது வணிக நோக்குடன் செய்யப்படுவது. அது ஒரு ரசிகனுக்கு உகந்ததல்ல. அத்தகைய பக்கோடாவைத் தின்பதன் மூலம் ஒருவன் உப்புசம், ஏப்பம், லிஃப்ட், மீட்டிங்கில் பங்கேற்க முடியாத அவஸ்தை, மண்ணைத் தின்றது போன்ற புறவயமான அனுபவங்களை மட்டுமே பெறவியலும். நல்ல பக்கோடா என்பது செவ்விலக்கியத்துக்கு ஒப்பானதாகும். ஒரு தேர்ந்த பக்கோடாக் கலைஞர் ஒரு யோகியின் அர்ப்பணிப்போடு, யாகத்தின் கவனத்தோடு, கலை ரசனையோடு செய்யும்போது கிட்டும் தரிசனம். அதை உண்ணும் ரசிகனும் அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும்போதே பக்கோடா முழுமை பெறுகிறது.

மாறாக வணிகநோக்கு பக்கோடாக் கலைஞனை மட்டுமல்ல அது மடிக்கும் பேப்பரையும் காலம் புறந்தள்ளி ஏதோ ஒரு கடையில் முழங்கை வரை மாவைக் கலக்கி வேர்வையும், தூசுமாய் கரேலென்று வழித்து விட்டு வருடக்கணக்காய் ஊறிய சோடாமாவை ஊற்றி ட்ரான்ஸ்ஃபார்மர் எண்ணெயில் பஜ்ஜி போடவும், அதைப் பிழிந்து விட்டெறியவும் வைக்கும்.