Friday, July 30, 2010

கேரக்டர்-மூர்த்தி.

கர்நாடகாவின் வனப்பகுதியில் இருக்கும் ஸக்லேஷ்பூருக்கு பதவி உயர்வோடு மாற்றம் என்றதும் வேளா வேளைக்கு வக்கணையாய்த் தின்று கொழுத்து, பாரீஸ் கார்னர் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மினர்வா தியேட்டரில் 12.00 மணி காட்சி பார்த்து, தினம் ஒரு நாவல் படிக்கும் சுகவாழ்வுக்கு வந்தது கேடு.

ஹூம்! டிவிஷனல் அக்கவுண்டண்டா? ஜாக்கிரதை. எஞ்ஜினீயர் எப்படி விசாரிச்சியா என்று எழவு வீட்டில் துக்கம் கேட்கிறார்போல் அக்கரையாக சுமையேற்றினார்கள்.

விசாரித்ததில் அதிகாரி நல்லவர்தான், ஆனால் லீவ் கொடுக்க மாட்டார், சொல்லாமல் எங்கேயும் போகமுடியாது, கொஞ்சம் முறைத்தால் கான்ஃபிடென்ஷியல் ரிப்போர்ட்டில் கை வைத்து விடுவார் என்றெல்லாம் கேட்ட பிறகு ஊரைப்பற்றியும், அதிகாரியைப் பற்றியும் ஒரு உருவகம் பயமுறுத்தியது.

திங்கள் காலை ராகுகாலம் பார்த்து, கையோடு கொண்டு போயிருந்த யாமிருக்க பயமேனிடம் மனு போட்டு சரியாக 9.01க்கு கிளம்பி அலுவலகம் சென்றால் அப்படி ஒரு வரவேற்பு. அந்தப் பதவிக்கு அப்படி ஒரு மரியாதையா என்ற வியப்பு முதல் முறை உறைக்க ஆரம்பித்தபோது பயமும் கூடவே வந்து தொலைத்தது. சள சளவென்றிருந்த அலுவலகம் ‘பந்த்பிட்டா நன்ன மக’ என்ற நக்கலான எச்சரிப்பில் மரண அமைதியானது.

வந்து நின்ற ஜீப்பில் இருந்து இறங்கிய உருவத்துக்கும், என் மனதில் இருந்த வில்லனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஏறக்குறைய என் உசரம், என்னை விட தீய்ந்த நிறம், குறுகுறுவென அலைபாயும் குரங்குக் கண்கள், அதைப் போலவே வெடுக் வெடுக்கென எட்டிப்பார்த்து உள்ளே போகும் நாக்கும். எப்படி சிரிக்காமல் இருந்தேன் என்பது இன்று வரை புரியவில்லை. அவர்தான் மூர்த்தி.

போய் வணங்கி, புதிதாக வந்திருக்கும் அக்கவுண்டண்ட் என்றவுடன்,

‘நின்னெசுரு ஏனு?’ (பெயர் என்ன?)

 ‘எல்லிந்த?’ (எங்கேயிருந்து வந்திருக்கிறாய்)

‘நினகே கன்னட கொத்தாகத்தா’ (உனக்கு கன்னடம் தெரியுமா?)

பேரும், சென்னையும், ‘சொல்பவும்’ சொல்லி ஜாயினிங் ரிப்போர்ட்டும், ட்ரான்ஸ்ஃபர் அப்ளிகேஷனும் ஒரு சேர நீட்ட வந்தது வினை.

‘நனிக ட்ரான்ஸ்ஃபர் பேடாந்த பருது கொட்ரீ! ஹாங்காதரே தொகள்தினீ!இல்லாந்தரே நிம்ம ஆஃபிசரத்தர மாத்தாட்தினி’ (எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வேண்டாம் என எழுதிக் கொடு! அப்படியானால் சேர்த்துக் கொள்கிறேன். இல்லையெனில் உன் அதிகாரியிடம் பேசுகிறேன்) என்றார்.

அய்யா! சாமி! இது ரிஜிஸ்டர் செய்வதற்குத்தான். முறை வரும்போதுதான் டிரான்ஸ்ஃபர் கிடைக்கும் என்று கெஞ்சினாலும், ‘நீவு ஒரகட இர்ரீ! கரீத்தினி’ (நீ வெளியே இரு! கூப்பிடுகிறேன்) என்பது பதிலானது. அரைமணி கழித்து உனக்கு வேறு இடத்தில் உன் அதிகாரி போஸ்டிங்க் தருவார், நீ பெங்களூர் போய்ப் பாரு என்று அலைக்கழித்து நான் திரும்ப இவரிடமே சேர நேர்ந்தது பெரிய சோகக்கதை.

திரும்ப வந்ததும், ‘ஏனு மனஸ்னல்லி இட்கோபேடா காணோ! லெட்ஸ் வர்க் அஸ் அ டீம்’ என்றால் அப்பவேண்டும் போல் வருமா வராதா? சார்! வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி ஊருக்கு போய்விட்டு திங்கள் காலையில் வந்து விடுகிறேன் சார் என்றால், ‘கல்ஸா இத ரீ! ஹோகக்காகல்லா’ (வேலையிருக்கிறது போக முடியாது என்பார்). சனிக்கிழமை காத்துக் காத்து விசாரித்தால், இவர் ஊரிலேயே இருக்கமாட்டார்.

லீவ் அப்ளிகேஷன் தனியே நீட்டினால், ரிஜக்டட்தான், அலுவலகத் தபாலோடு சேர்த்து அனுப்பினால் சேங்ஷனாகி வரும். அப்படி சாங்க்‌ஷன் செய்ததையும் வாங்கி கிழித்துப் போட்டு விடுவது தெரிந்து, ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு அய்யா எகிறும்போது நீட்டி பல்ப் வாங்கினாலும், அசராமல், சிரித்தபடி லீவுக்கு பொறுப்பான அலுவலரை ஒரிஜினல் எங்கே என்று திட்டுவார்.

பெரும்பாலும் காண்ட்ராக்டர் பில், இரவு 12 மணிக்கு மேல் கையொப்பமிட்டு, ப்யூன், லாரியில் போய் அரிசிக்கரையில் இறங்கி, பின் ரயிலில் போய் பெங்களூரில் சேர்க்க வேண்டும். ஒரு முறை கன மழையில் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து விட, ஜீப் ஹெட்லைட்டை ஆன் செய்து அதன் முன் டேபிளை இழுத்துப் போட்டு பில்லை அனுப்ப வைத்த கடமை வீரர். அதன் பிறகு பில் என்றாலே, டேலைட்டா, ட்யூப்லைட்டா ஹெட்லைட்டா என்று கேட்குமளவுக்கு ஆனது.


குடித்திருப்பவரைக் கண்டால் பயமென்பதால், குடிப்பழக்கம் இல்லாதவர் கூட கொஞ்சம் சாராயத்தைத் தெளித்துக் கொண்டு, ‘பங்ளூர் ஹோபேக்கு! டூட்டி கொட்ரீ சார்’ (பெங்களூரு போக வேண்டும். டூட்டி கொடுங்கள் சார்) என்றால், பதைத்து எழுந்து, ‘டி.ஏ.! இவனிக டூட்டி கொட்டு கள்ஸி பிட்ரீ! ஒளகட யாக்க பிடுத்தீரா!(இவனுக்கு டூட்டி கொடுத்து அனுப்பிடுங்க. ஏன் உள்ள விடுறீங்க) என்று அலற வெளியே வந்தவன், கண்ணடித்து சிரித்தபடி போவான்.


நான்கு மகள்களும் ஒரு மகனும் அவருக்கு. மூத்த மகளுக்கு 28 வயதாகியும் திருமணமாகவில்லை. பள்ளி செல்லும் நேரம் தவிர கடைசி பெண்ணும் வீட்டை விட்டு எங்கும் வரமுடியாது. அவ்வளவு கட்டுப்பாடு. ட்ரைவர் மூலம் விபரம் கசிந்ததும் நம்பவே முடியவில்லை. இத்தனைக்கு மாதம் இரண்டு பேராவது வந்து பெண்பார்த்துப் போவார்கள்.

பெண்பார்த்து முடித்ததும், அய்யா பையன் வீட்டுக்குச் செல்லும் நேரம் இரவு 11 மணி. (அந்த நேரத்தில் பையன் தூக்கத்திலிருந்து எழுந்து வர வேண்டும்.)

மெதுவாக பேச்சுக் கொடுப்பார். (குழறாமல் பேசுகிறானா என்று கண்டு பிடிக்கிறாராம்.) சற்று நேரம் பேசிவிட்டு, வீடு சொந்த வீடா? கடன் இருக்கிறதா? இத்தியாதி விசாரணையாவது பரவாயில்லை. ‘நோடப்பா! குடித்தியா?சிகரட் அப்யாசா?பேக்காடுத்தியா?’(பாருப்பா, குடிப்பியா? சிகரட் பழக்கமிருக்கா? சீட்டாடுவியா?) என்றெல்லாம் கேள்வி கேட்டால் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டாமல் என்ன செய்வார்கள்?

ஒரு முறை இன்ஸ்பெக்‌ஷன் வந்த அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அவர் கிளம்பிப் போனதும் அரையிருட்டில், ட்ராக்கில் விடுவிடுவென கிளம்பி நடந்தார். கூட இருந்தவர்கள் பின் தொடர்ந்து நடக்க, ஹேமவதி ஆற்று ப்ரிட்ஜில் பாதி உடம்பை நுழைக்கவும் பதறிப்போய் இழுத்துப் போட்டால், குழந்தை மாதிரி அழுதார்.

‘நன்ன கர்மா! மனேகே ஹோதரே ஹெண்ட்தி பொய்த்தாளே. இல்லி சாயபவரு பொய்த்தார! சத்தோக்தினி பிட்ரீ’(என் கருமம். வீட்டுக்கு போனால் பெண்டாட்டி திட்டுறா. இங்க அதிகாரி திட்டுறார். சாவரேன் விட்டுடுங்க) என்று சீன் போட்டதை பிற்பாடு சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.

சார்! எனக்குத் திருமணம். 15 நாள் லீவ் வேண்டுமென பத்திரிகையோடு போய் நிற்கிறேன். வாங்கிப் பார்த்துவிட்டு, ‘லீவ் கொடக்கில்லா ரீ, கல்ஸா இத’ என்று கிளம்பிப் போய் விட்டார். செய்வதறியாது திகைத்திருக்க, இரவு எட்டு மணி வாக்கில் வீட்டிலிருந்து ஆள் விட்டு அழைத்தார்.

‘யாவாக மதுவே!’(எப்போது கலியாணம் என்று கேட்டு) இரண்டு நாளுக்கு மட்டும் லீவ் அப்ளிகேஷன் தரச் சொன்ன போது கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. விதியே என்று எழுதிக் கொடுத்தவுடன், சாங்ஷன் செய்து விட்டு, நமட்டுச் சிரிப்போடு பார்த்தார்.

பிறகு, தன்னுடைய வீட்டுக் கடன் அப்ளிகேஷனை எடுத்துக் கொண்டு இன்றே கிளம்பி, அடுத்த நாள் பெங்களூரில் ஒரு கையெழுத்து வாங்கி, மதியம் புறப்பட்டு சென்னை சேர்ந்து கலியாண வேலை நடுவே, இதையும் சேங்ஷன் செய்து பெங்களூரில் சேர்ப்பது வரையிலான காலகட்டம் டூட்டியாக சேங்ஷன் செய்கிறாராம். இதில் ‘சந்தோஷவாய்த்தேன் ரீ” என்ற கேள்வி வேறு.

பெங்களூர் அருகில், தன் சொந்த வீடு கட்டிய பிறகு, இதர அலுவலர்களின் கவலையேதுமின்றி, அலுவலகம் ஸக்லேஷ்பூரில் தேவையில்லை, பெங்களூருக்கே மாற்றி விடலாம் என்று மாற்ற வைத்த நல்லாத்மா. எனக்கு வசதியாக ஒரு நாலு மாதம் கழிந்தாலும், மற்றவர்கள் பட்ட தவிப்பைச் சொல்லி மாளாது.

என் முறைக்கு பணிமாற்றம் வந்தும் என்னைப் போலவே என்னை ரிலீவ் செய்ய வந்தவனை காத்திருக்க வைத்து, இவன் சூப்பரா ஆணி புடுங்கறான். இவனை விட முடியாது என்றெழுதி வாங்கிக் கட்டிக் கொண்டுதான் விடுவித்தார்.

யாருக்கும் பெரும் பாதிப்பின்றியே அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகவே இருந்து விட்டார். ரிடையர்ட் ஆகி சிறிது காலத்தில் இறந்தும் போனார். கடைசி வரை ஒரு மகளுக்கும் திருமணம் செய்யவில்லை. மகனும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.

57 comments:

ஈரோடு கதிர் said...

அட 401க்கு புது சட்டையா?

அழகாயிருக்கு

இராமசாமி கண்ணண் said...

கொஞ்சம் டிபரென்டான பெர்சனாலிட்டியா இருந்துருப்பாரு போல..

பத்மா said...

இப்படியும் சிலர் ....கொஞ்சம் கஷ்டம் தான் கூட இருந்தவர்களுக்கு ...

ஈரோடு கதிர் said...

அடடா... அந்த மனுசன் இறந்துட்டாரா...

இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ரெபிடெக்ஸ்ல தமிழ் கத்துக்கொடுத்து, நீங்க போடற எதிர்கவிதைக்கு பின்னூட்டம் போடச் சொல்லியிருபேன்

Anonymous said...

இப்படியான குணாதியசங்கள் உள்ளவர்களைப் பார்க்கும் போது பரிதாபமே மேலிடுகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கேரக்டர் பாலா எப்ப வரும் :)))

DrPKandaswamyPhD said...

மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இதுவரை எனக்குப் பதால் தெரியவில்லை.

நிகழ்காலத்தில்... said...

தன் சொந்த வாழ்வில் வெற்றிபெறத் தெரியவில்லை எனில் எது இருந்தும் வீண் என்பதற்கு இவர் நல்ல உதாரணம்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Swami said...

"இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ரெபிடெக்ஸ்ல தமிழ் கத்துக்கொடுத்து, நீங்க போடற எதிர்கவிதைக்கு பின்னூட்டம் போடச் சொல்லியிருபேன்"

I don't think Vaanambadi Sir will ever write in blogs when he is around. Oh! No!. We will miss the fun.

Swami said...

I had also come across people like this. Passing clouds. Get used to all sorts of people.

சே.குமார் said...

//யாருக்கும் பெரும் பாதிப்பின்றியே அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகவே இருந்து விட்டார். ரிடையர்ட் ஆகி சிறிது காலத்தில் இறந்தும் போனார். கடைசி வரை ஒரு மகளுக்கும் திருமணம் செய்யவில்லை. மகனும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.//

அவரு வித்தியாசமான மனிதராக இருந்தாலும் வாழ்க்கையிலும் வித்யாசமாக இருந்து விட்டார் போல...
அவரது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது உங்களது கடைசி பாராவில் தெரிகிறது.
இதுபோல் மனிதர்கள் நிறைய உண்டு.
உங்கள் வலைப்பூவில் எழுத்துக்கள் சரியாக இல்லாமல் வருகிறது. எனக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமா என்று தெரியவில்லை. காப்பி செய்து நோட்பேடில் போட்டு படித்து பின்னூட்டமிட்டுள்ளேன்.

dheva said...

பலதரப்பட்ட மனிதர்கள்..சிலர்....எப்போதும் நினைவில் இருப்பவர்களாய்......

பகிர்வுக்கு நன்றி பாலாண்ணே!

ஆரூரன் விசுவநாதன் said...

கேரக்டர் படிக்க படிக்க , ஆச்சரியப்பட்டுப் போனேன்....

அதைவிட உங்க எழுத்து நடை, விறுவிறுப்பு, அட....அட.....

ஜோதிஜி said...

தளம் இப்போது படிக்க சிறப்பாய்
இருக்கிறது

4000 வரைக்கும் இப்படியே போகட்டுமே....

Sangkavi said...

வித்தியாசமான மனிதர் ஐயா....

உங்கள் எழுத்து அவரை கண்முன் நிக்க வைக்கிறது....

Chitra said...

யாருக்கும் பெரும் பாதிப்பின்றியே அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகவே இருந்து விட்டார். ரிடையர்ட் ஆகி சிறிது காலத்தில் இறந்தும் போனார். கடைசி வரை ஒரு மகளுக்கும் திருமணம் செய்யவில்லை. மகனும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.


..... ///யாருக்கும் பெரும் பாதிப்பின்றியே அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகவே///// .....உண்மையிலேயே ஒரு வித்தியாசமான மனிதர் தான்....

அரசூரான் said...

ஒரு டைட்டான கேரக்டர்கிட்ட லைட்டா "டேலைட்டா, டியூப்லைட்டா ஹெட்லைட்டா"-ன்னு ரவுசு பண்ணியிருக்கீங்களே அது ரைட்டா?

Mahi_Granny said...

எல்லோரைச் சுற்றிலும் இப்படியான மனிதர்கள் இருக்ககூடும் . நீங்கள் நினைவு படுத்தி எழுதியுள்ளீர்கள் . தெலுகு கன்னடம் ஹிந்தி சகல மொழியும் சரளமாய் வருது.வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

'கேரக்டர் பாலாண்ணா' வென உங்களை கூப்பிட நிறைய சான்ஸ் இருக்கு பாலாண்ணா. :-)

மனிதர்களை அவர்கள் போக்கிலேயே பார்க்கலாம். பகிரனுமே?

உங்களால் முடிந்திருக்கிறது., கேரக்டர் பாலாண்ணா. :-)

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

ஸ்ரீதர் நாராயணன் said...

நீங்கள் எழுதியிருந்த விதம் (கன்னட வசனங்கள் உட்பட) ஒரு கதை படிப்பது போலவே இருந்தது. நான் ரசித்தது ‘டே லைட்டா, ட்யூப்லைட்டா, ஹெட் லைட்டா’ :))

பகிர்விற்கு நன்றிகள்!

கே.ஆர்.பி.செந்தில் said...

இதுபோன்ற சுவாரஸ்யமான கேரக்டர்களால் அவர்களின் குடும்பம் பதிக்கப்படுவது வேதனை..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வழக்கம் போல் இந்தக் கேரக்டரும் 'நச்'. எழுதிய விதம், கன்னடத்தைக் கலந்து நன்றாக இருந்தது.

புது சொக்கா நன்றாக இருக்கிறது.

400க்கு 'லேட்' வாழ்த்துகள்.

சூர்யா ௧ண்ணன் said...

400 பயனுள்ள, சிந்திக்கும்படியான, ரசிக்கும்படியான, வாய்விட்டு சிரிக்கும்படியான சிறந்த இடுகைகளுக்கு நன்றி தலைவா! வாழ்த்துக்கள்..

ஸ்ரீராம். said...

வித்யாசமான கேரக்டர் பற்றி சுவாரஸ்யமான பதிவு.

ஸ்ரீ said...

நல்ல இடுகை.பாராட்டுகள்.

அக்பர் said...

//யாருக்கும் பெரும் பாதிப்பின்றியே அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகவே இருந்து விட்டார்.//

ஏண்ணே இதைவிட பாதிப்பு கொடுக்க வேறு என்ன இருக்கு.

மனிதர்களின் சின்ன சின்ன சந்தோசங்களை கொல்வதில் சந்தோசப்படுபவர்கள் அனைவராலும் வெறுக்கப்படுவது யதார்த்தம்தானே.

சி. கருணாகரசு said...

கரடு முரடான அந்த மனிதரையும் மிக மென்மையாய எழுத்தால கையாண்ட விதம் மிக அழகு..... வணக்கங்கைய்யா.

முகிலன் said...

வித்தியாசமான கேரக்டர்.

எம்.எம்.அப்துல்லா said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
கேரக்டர் பாலா எப்ப வரும் :)))

//

:)))

thenammailakshmanan said...

அதன் பிறகு பில் என்றாலே, டேலைட்டா, ட்யூப்லைட்டா ஹெட்லைட்டா என்று கேட்குமளவுக்கு ஆனது//

இப்படியும் சிலர் படுத்துவது உண்மைதான் பாலா சார்..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மூர்த்தி மிக வித்தியாசமான கேரக்டர்தான். உங்கள் எழுத்து நடை மிக அருமையாக உள்ளது, பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

பிரபாகர் said...

ஆமாங்கய்யா! இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இந்த மாதிரி நபர்களின் இல்வாழ்க்கை பெரும்பாலும் சரியில்லாமல் தான் இருக்கிறது...

பிரபாகர்...

கலகலப்ரியா said...

ம்ம்.. ரொம்ப வினோதமான நடவடிக்கை... நல்லா சொல்லி இருக்கீங்க சார்... ஆனா இப்டிச் செய்தார்.. அப்டிச் சொன்னார்.. இது காரக்டர்ல எப்டி வருது... காரக்டர் தொகுக்கறப்போ... ஒன்னுக்கு ஒன்னு சம்மந்தமில்லாம இடிக்க போறது... சாக்கிரத...

ரிஷபன் said...

உங்கள் ‘கேரக்டர்’ பகுதி தனி இலக்கிய ரசனை..

பழூர் கார்த்தி said...

ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கீங்க.. இப்படியான மனிதர்களால்தானே வாழ்க்கை சுவாரசியாமா இருக்கு :-)

ஈ ரா said...

எதோ நினைப்பில் சாதாரணமாக படிக்கத் துவங்கி போகப் போக சடாரென்று தூக்கி ஒரு உலுக்கு உலுக்கும் எழுத்தோட்டம் தங்கள் பதிவுகளில் "கேரக்டர் " பதிவுகளில் அசாதாரணமாக இருக்கும்.. தங்கள் தந்தை பற்றிய வரைவு, நரசிம்மன், கண்ணன், திருவேங்கடம் என்று என்னை பாதித்த கேரக்டர்கள் அதிகம்..

அனாயாசமான நடை.. வாழ்த்துக்கள்

திகழ் said...

நல்ல இடுகை

கன்னடத்தைக் கண்டு இரசித்தேன்.

வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

@@நன்றி கதிர்.
@@ஆமாங்க ரொம்பவே. நன்றி இராமசாமி கண்ணன்
@@ஆமாங்க பத்மா. நன்றி

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
அடடா... அந்த மனுசன் இறந்துட்டாரா...

இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ரெபிடெக்ஸ்ல தமிழ் கத்துக்கொடுத்து, நீங்க போடற எதிர்கவிதைக்கு பின்னூட்டம் போடச் சொல்லியிருபேன்//

ஏன் இந்தக் கொலை வெறி

வானம்பாடிகள் said...

veyilaan said...
இப்படியான குணாதியசங்கள் உள்ளவர்களைப் பார்க்கும் போது பரிதாபமே மேலிடுகிறது.//

நன்றிங்க வெயிலான், முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்

வானம்பாடிகள் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
கேரக்டர் பாலா எப்ப வரும் :)))


அதான் நீங்க எழுதிட்டீங்களே:))

வானம்பாடிகள் said...

DrPKandaswamyPhD said...

மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இதுவரை எனக்குப் பதால் தெரியவில்லை.//

ஆமாங்கையா. நன்றிங்க கருத்துக்கு.

வானம்பாடிகள் said...

நிகழ்காலத்தில்... said...

//தன் சொந்த வாழ்வில் வெற்றிபெறத் தெரியவில்லை எனில் எது இருந்தும் வீண் என்பதற்கு இவர் நல்ல உதாரணம்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

Swami said...
"இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ரெபிடெக்ஸ்ல தமிழ் கத்துக்கொடுத்து, நீங்க போடற எதிர்கவிதைக்கு பின்னூட்டம் போடச் சொல்லியிருபேன்"

I don't think Vaanambadi Sir will ever write in blogs when he is around. Oh! No!. We will miss the fun.

Swami said...
I had also come across people like this. Passing clouds. Get used to all sorts of people.//

:)). Yes. you are right swamy:)))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க குமார்
@@நன்றிங்க தேவா
@@நன்றி ஆரூரன்
@@நன்றி ஜோதிஜி
@@நன்றிங்க சங்கவி
@@நன்றி சித்ரா

வானம்பாடிகள் said...

அரசூரான் said...
ஒரு டைட்டான கேரக்டர்கிட்ட லைட்டா "டேலைட்டா, டியூப்லைட்டா ஹெட்லைட்டா"-ன்னு ரவுசு பண்ணியிருக்கீங்களே அது ரைட்டா?//

லைட்ட்ட்ட்டா:))

வானம்பாடிகள் said...

Mahi_Granny said...
எல்லோரைச் சுற்றிலும் இப்படியான மனிதர்கள் இருக்ககூடும் . நீங்கள் நினைவு படுத்தி எழுதியுள்ளீர்கள் . தெலுகு கன்னடம் ஹிந்தி சகல மொழியும் சரளமாய் வருது.வாழ்த்துக்கள்//

நன்றிங்க மஹி_க்ரான்னி.

வானம்பாடிகள் said...

பா.ராஜாராம் said...
'கேரக்டர் பாலாண்ணா' வென உங்களை கூப்பிட நிறைய சான்ஸ் இருக்கு பாலாண்ணா. :-)

மனிதர்களை அவர்கள் போக்கிலேயே பார்க்கலாம். பகிரனுமே?

உங்களால் முடிந்திருக்கிறது., கேரக்டர் பாலாண்ணா. :-)//

நன்றி பா.ரா.

வானம்பாடிகள் said...

ஸ்ரீதர் நாராயணன் said...
நீங்கள் எழுதியிருந்த விதம் (கன்னட வசனங்கள் உட்பட) ஒரு கதை படிப்பது போலவே இருந்தது. நான் ரசித்தது ‘டே லைட்டா, ட்யூப்லைட்டா, ஹெட் லைட்டா’ :))

பகிர்விற்கு நன்றிகள்!//

நன்றிங்க ஸ்ரீதர் நாராயணன்

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க செந்தில் வேலன்
@@நன்றி சூர்யா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி ஸ்ரீ

வானம்பாடிகள் said...

@@நன்றி அக்பர்
@@நன்றி கருணாகரசு
@@நன்றி முகிலன்
@@நன்றி அப்துல்லா:))
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி பிரபா.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//ம்ம்.. ரொம்ப வினோதமான நடவடிக்கை... நல்லா சொல்லி இருக்கீங்க சார்... ஆனா இப்டிச் செய்தார்.. அப்டிச் சொன்னார்.. இது காரக்டர்ல எப்டி வருது... காரக்டர் தொகுக்கறப்போ... ஒன்னுக்கு ஒன்னு சம்மந்தமில்லாம இடிக்க போறது... சாக்கிரத...//

நீ சொல்றது சரிதான்மா. எல்லா நிகழ்ச்சியும் பார்த்தா அடிப்படையில ஒரு சாடிஸ்ட். இன்னொரு பக்கம் நேர்மாரா பயம். சந்தேகம். இன்னும் பெட்டரா எழுதியிருக்கலாம்னு தோண்றது. நன்றிம்மா.

வானம்பாடிகள் said...

பழூர் கார்த்தி said...

ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கீங்க.. இப்படியான மனிதர்களால்தானே வாழ்க்கை சுவாரசியாமா இருக்கு :-)//

நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்

வானம்பாடிகள் said...

ரிஷபன் said...
உங்கள் ‘கேரக்டர்’ பகுதி தனி இலக்கிய ரசனை.

நன்றிங்க ரிஷபன்.

வானம்பாடிகள் said...

ஈ ரா said...
எதோ நினைப்பில் சாதாரணமாக படிக்கத் துவங்கி போகப் போக சடாரென்று தூக்கி ஒரு உலுக்கு உலுக்கும் எழுத்தோட்டம் தங்கள் பதிவுகளில் "கேரக்டர் " பதிவுகளில் அசாதாரணமாக இருக்கும்.. தங்கள் தந்தை பற்றிய வரைவு, நரசிம்மன், கண்ணன், திருவேங்கடம் என்று என்னை பாதித்த கேரக்டர்கள் அதிகம்..

அனாயாசமான நடை.. வாழ்த்துக்கள்//

நன்றிங்க ஈ.ரா.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

சரி..இறந்து விட்டார்.அவரைப் பற்றி நல்ல விதமாய் பேசுவோமே இனி!
---- ஓவ்வொரு கேரக்டர் எழுதும் போதும் எழுத்தின் முதிச்சி தெரிகிறது. ஒரு ஆசை.உங்கள் இந்த கேரக்டர் portrait க்கு கோபுலுவின்
படம் மட்டும் இருந்தால் ஆஹா..

அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.