Wednesday, June 23, 2010

கேரக்டர் - திருவேங்கடம்.

சில நேரங்களில் குயிலுக்குத் தோகை அமைந்தாற்போல் அமைந்து விடுகிறது சிலரது வாழ்க்கை. குயிலாகக் கூவவும் முடியாமல், மயிலாக இருக்கவும் முடியாமல் பேரிழப்பாய் அமைந்து விடுகிறது.

இல்லையென்றால், எக்மோர் யார்ட் அருகிலிருக்கும் ஒரு சேரிச் சிறுவனுக்கும் டென்னிசுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இரவெல்லாம் குடியும், கஞ்சாவுமாய் இருந்து காலை 7 மணிக்கு எழும்பூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் நகரத்துப் பெரிய ஆஃபீஸர்களுக்கு,  ‘..த்தா! இன்னா சார் ராக்கட் புடிக்கிற! பொண்மாட்டி கரண்டி புடிக்கிறா மாதிரி! இஸ்டடியா புடி சார்!’..   ‘யோவ் சார்! இந்த ஜென்மத்துல உனுக்கு பேக் ஹேண்ட் சாட் வராது’ என்று கோச்சிங் கொடுக்க முடியுமா?

ஒருத்தருக்காவது நான் எவ்வளவு பெரிய அதிகாரி, என்னை இந்தப் பொடியன் இப்படி அழைக்கிறானே என்று கோவமோ, வெறுப்போ இருக்காது. அவன் திறமை அப்படி.  நீ போய் விம்பிள்டன் ஆடப் போறதில்லனு தெரியும் சார். ஆனா காச கெடாசிட்டா இவன் சொல்லி தருவான்னு கனா கூட காணாத! இருப்பானுங்க எடுப்பு சோத்து பசங்க அதுக்குன்னு. அவனுங்கிட்ட போய்னே இரு! என்பவனை என்ன செய்ய முடியும்?

பள்ளி கண்டறியான்! சிறுவயது முதல் தகப்பனுடன் ஸ்டேடியத்தை சுத்தம் செய்வதும், கோடு போட்டு தயார் நிலையில் வைப்பதும், பந்து பொறுக்கிப் போடுவதும் வாழ்க்கையாகிப் போனது. அப்பனை விட பிரமாதமாய் ராக்கெட்டுக்கு கட்ஸ் இழுக்கக் கற்றுக் கொண்டான். 

பந்து பொறுக்கிப் போடுவது வேலையானாலும், கண்பார்வையில் நுட்பங்கள் அறிந்து கொண்டான். சுவர்தான் எதிராளி. ஒரு முறை பந்தை அடித்தால் மீண்டும் அது அவன் விடும்போதுதான் தரையைத் தொடும். டென்னிஸில் எத்தனை ஷாட்டுகள் உண்டோ அத்தனையும் சுவர் கொடுக்கும் அவனுக்கு.

இளம் கன்று பயமறியாதல்லவா?   ‘அடப் போ சார்! பேக்கேண்ட் சக்குனு ஒரு வெட்டு வெட்டணும்’ என்று கையை ராக்கெட்டாக்கி காட்டி ‘பால் மட்டும் ஆப்பனண்ட் ரிடர்ன் பண்ணா நானு இனிமே க்ரவுண்ட் பக்கம் வரமாட்டன் சார்’ என்னும் பொடியனை யாருக்குத்தான் பிடிக்காது?

பதின்ம வயதிலேயே தனக்குத் தெரிந்து கொஞ்சமாவது திறமை இருக்கும், ஆர்வம் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் எதிராட்டக்காரனாக, கோச்சாக இருப்பான். சிறுவன் என்பதால், சம்பளம் அப்பாவிடம் போய்விடும். மாலையில் இதர நண்பர்களுடன் மெதுவே போதை வந்தேறிக் கொண்டது.  அதற்குக் காசு?

எக்மோரில் சம்பாதிக்கவா வழியில்லை? அன்ரிசர்வ்ட் ரயில் பயணிகளை, யார்டில் கூட்டிக் கொண்டு போய் சீட் பிடித்துக் கொடுப்பது, ரயில் இல்லாத சமயங்களில், வா! திர்ச்சி திர்ச்சி, மதுரை, என்று ஆம்னி பஸ்ஸுக்கு ஆள் பிடிப்பது என்று எத்தனை வழிகள் இல்லை?

கஞ்சா போக, குடி போக, மிஞ்சியிருக்கும் காசை பேங்கிலா போட முடியும்? சொல்ல மறந்துவிட்டேனே! நம்ம ஹீரோ மங்காத்தா மன்னன்! சீட்டு வெட்டிய உடன், இன்னான்ற? நுப்பத்தி மூணாவது சீட்டு, உள்ளோ என்று மேல் பந்தயம் கட்டி, சொல்லி அடிப்பான். பட படவென்று உள்ளேயும் வெளியேயும் சீட்டைப் போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தி, உள்ள கட்றதுன்னா கட்டுங்கப்பா என்று சில நிமிடம் காத்திருந்து அடுத்த சீட்டு உள்ளே அடித்துச் சிரிப்பான்.  அந்த ஆட்டத்திலும் நேர்மை! ஐந்து ரூபாய்த் தாளுக்குள் நூறு ரூபாய் பொதிந்து ‘மாஸ்’ பந்தயம் கேட்பவன் அன்றைக்கு வாங்கும் அடியில் பிறகு சீட்டைப் பார்க்கும்போதே ஜன்னி கண்டு போகும்.  

டென்னிஸ் ஆடக் கற்றுக் கொடுத்த அதிகாரியில், ஒரு மனிதருக்கு இந்த வைரத்தின் அழுக்கைத் தாண்டிய மதிப்பு தெரிய, ஆபீசுக்கு வந்து பாரு என்று சொல்லிட்டுப் போனார். இரண்டு மூன்று அழைப்புக்குப் பிறகு, வேண்டா வெறுப்பாக வந்தவனை, வலுக்கட்டாயமாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர்த்தார்.

வாழ்க்கை வசந்தமாகிப் போனது. பரிமளித்தான் ஆட்டத்தில். மற்றைய ஜோன்களின் தாதாகிரி ஆட்டக்காரர்கள் கூட இந்தப் பிசாசை எங்கிருந்து பிடித்தார்கள் என்று வியந்து போனார்கள். வங்கிகளும், கம்பெனிகளும் வீசிய வலைக்கு ‘...ம்மால! அன்னிக்கு தெர்ல இல்லடா உங்களுக்கு. ஒரு மனுசன் கைதூக்கி விட்டு, கொஞ்சம் பேரு வந்து பேப்பர்ல வந்தாதான் கண்ணு தெரியுமா உங்களுக்கு? துட்டுக்கு பால் மார்ற பரதேசி நானில்லடா’ என்று திட்டிவிட்டுப் போவான்.

விதி விடுமா? யாரோ ஒரு அதிகாரியின் மகளைச் சேர்ப்பதற்காக, இவனை ஒரு நேஷனல் லெவல் டோர்னமெண்டில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். போனான். ஏற ஏறக் குடித்தான். விர்ரென்று தெய்வமாக மதித்த அதிகாரியின் அறைக்கு வந்தான். தடுத்த ப்யூனுக்கு ஒரு அறை விட்டு உள் நுழைந்தான்! 

என்ன நடக்குமோ என்று ஸ்டெனோ, ப்யூன் என்று கூடி நிற்க, கண் கலங்க உதடு துடிக்க, ‘நீ அதிகாரியா இருந்து இது நடந்துச்சி பாரு! எங்கே! நீ சொல்லு சார்! டீம்ல இருக்கிறவங்கள விடவா நான் ஃபிட் இல்லை? நான் சேரிதான் சார்! கேக்க நாதியில்லாதவந்தான். ஆனா விசுவாசம் இருக்குசார்.

உனக்கு கெட்ட பேரு வரக்கூடாதுன்னு ஒன்னியும் பேசாம வந்தேன்! நல்லா இருங்க சார்! இனி என்னிக்குனா என் கையில டென்னிஸ் ராக்கட்டோ, பாலோ பார்த்த! ஒரு அப்பனுக்கு பிறந்தவனில்லை இந்த திருவேங்கடம்! இது விசயமா என்கிட்ட எதுவும் பேசாத சார்! உன்ன மரியாதையில்லாம திட்டிடுவனோன்னு பயமா இருக்கு சார்!’ என்று உதடு துடிக்கச் சொல்லிவிட்டு வெளியில் வந்து உடைந்து அழுதான். 

தாளாத சோகம். சாதிக்கும் நேரத்தில் இழுத்து விட்டார்களே என்ற வேதனை. அந்த நேரம் கூட தேடி வந்த வாய்ப்புக்களை உதறிய நேர்மை. மீண்டும் குடி பழக்கியது! நட்பாய் எது வேண்டுமானாலும் செய்வான். அதிகாரத்தை அவனிடம் காட்ட முடியாது! வேலை போய் விடும் என மிரட்டியவரை அப்படி ஒரு சிரி சிரித்து, யோவ்வ்வ்வ்வ்வ்வ்! வேலை போனா எக்மோர் டேஷன் சோறு போடும்யா! உன்ன நம்பியா பொறந்தேன்! ஆனதப் பார்த்துக்க என்று போனான். 

குடி, பால்வினை நோய், போறாத குறைக்கு ஆசை மகன் 2 வயதில் தாய் கவனிக்காத நேரத்தில் அடுப்பிலிருந்த ரசத்தை இழுத்து தேர்ட் டிக்ரீ பர்னில் இறந்ததும் காரணமாய்ப் போனது. ஒரு திறமை உடல் துறந்தது.

மண்ணாகிப்போன ஓரிரு தினங்களில், அவன் மனைவி சொன்னதாக ஒரு அலுவலக நண்பர், திருவேங்கடத்தைத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் சென்று கடன் வாங்கியிருக்கிறானா என்று கேட்டு எழுதிக் கொண்டு போனார். 

செட்டில்மெண்ட் தொகை வந்ததும் அவன் மனைவி ஒவ்வொருவராய்த் தேடி வந்து பணத்தைக் கொடுத்து நன்றி சொல்லி, யாருக்காவது கொடுக்க விட்டுப் போயிருந்தா சொல்லுங்கண்ணே. சாவரப்போ, திருவேங்கடம் ஏமாத்திட்டான்னு ஒருத்தன் சொல்லக் கூடாதுடி. எல்லார் காசும் கொடுத்துடுன்னு சொல்லியிருக்காருண்ணே என்றபோது கலங்காத கண்களில்லை.

திருவேங்கடம் மானஸ்தன் சார்! மனுஷன்!

(டிஸ்கி: சில சொற்கள் முகம் சுளிக்க வைத்திருக்கலாம். யாருக்காகவும் மாறாமல் அப்படி வாழ்ந்து மறைந்த திருவேங்கடத்தை மாற்ற நான் யார்?)

72 comments:

Unknown said...

அருமையான கேரக்டர் சார்..

கடைசி பாராவில கண்ணு கலங்கினதைத் தடுக்க முடியலை.. நாலு விதமான மனுசங்களையும் சந்திச்சிருக்கீங்க..

Romeoboy said...

தல பின்னிடிங்க ..

நாடோடி said...

ம‌ன‌தில் நிற்கும் கேர‌க்ட‌ர்...

Chitra said...

...... வாசித்து முடித்த பின், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த தோன்றியது. எத்தனை முத்துக்கள், இப்படி மாய்ந்து போகின்றன ..... ம்.

ராஜ நடராஜன் said...

பாலாண்ணா!செம்மொழி தினத்தில் ராவணனில் தொண்டைக்குழி அடைத்துக்கொள்வது மாதிரியான உணர்வுகளுடன் மனதை என்னவோ செய்வதும் என்று சொன்னது இதுதான்.படத்துக்கான டயலாக் இப்ப எழுத்துக்கும் சொல்லிக்கிறேன்.

ஜெயகாந்தன் வீட்டுல உட்கார்ந்துகிட்டாலும் கேரக்டர் சொல்லும் யுத்திகளின் வேரை இங்கேயும் பரவ விட்டமாதிரி இருக்குது.

Good One!

Ahamed irshad said...

அருமைங்க...

அன்புடன் நான் said...

இறந்த பின்னும் இதயத்தில் நிற்கிறார்.... திரு திருவேங்கடம்.

ராஜ நடராஜன் said...

நல்ல ஓட்டு போட்டிருக்கிறேன்!

பின்னோக்கி said...

வித்தியாசமான மனிதர் தான் இந்த திருவேங்கடம். அருமையான அறிமுகம்.

ஸ்ரீராம். said...

// "........உன்ன மரியாதையில்லாம திட்டிடுவனோன்னு பயமா இருக்கு சார்!’ என்று உதடு துடிக்கச் சொல்லிவிட்டு வெளியில் வந்து உடைந்து அழுதான்"//

இந்த பாரா படிக்கும்போது கண்கள் கலந்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

Rithu`s Dad said...

அருமை அய்யா!! வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

நீங்கள் எழுதவது அனைத்தும் படிக்கிறேன்.. சிலவற்றிற்க்கு கமெண்ட் இடனும்னு நினைப்பேன்.. ஆனால் எதோ முடியாமல் விட்டு விடுவேன்.. இந்த முறை இந்த பதிவுக்கு உடனே கமெண்ட் இட்டு விட்டேன்..

இதே வாழ்த்துக்கள் உங்களின் சில முன் பதிவுகளுக்கும் உரித்தாகும்.

வல்லிசிம்ஹன் said...

அற்புதமான மனிதரை அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி சார்.வாழ்வில் எத்தனையோ விதமான உணர்ச்சிகளைச் சந்திக்கிறோம். ஆனால் இது போலக் கேட்டதில்லை.திருவேங்கடத்துக்கு அஞ்சலிகள்.

மணிஜி said...

//நுப்பத்தி மூணாவது சீட்டு,//


நல்ல பதிவு தலைவரே..ஆனா அவ்வளவு சீட்டு தேவையில்லை . 52 போதும். புள்ளி வச்சு அடிச்சிருக்கேன் நானு??

அனு said...

//திருவேங்கடம் மானஸ்தன் சார்! மனுஷன்!//

வறுமையிலும் செம்மை.. அற்புதமான அபூர்வமான கேரக்டர்..

இந்த மாதிரி திறமை இருந்தும் முன்னேற வாய்ப்பு கிடைக்காத திறமைசாலிகளை நினைக்க வைக்கிறது இந்த பதிவு..

vasu balaji said...

மணிஜீ...... said...
//நுப்பத்தி மூணாவது சீட்டு,//


நல்ல பதிவு தலைவரே..ஆனா அவ்வளவு சீட்டு தேவையில்லை . 52 போதும். புள்ளி வச்சு அடிச்சிருக்கேன் நானு??//

52 விட 33 பெருசோ:)). மங்காத்தாக்கு 40 சீட்டுதானே தலைவரே:))

பெசொவி said...

கண் கலங்க வைத்துவிட்டீர்கள், சார்!

//திருவேங்கடம் மானஸ்தன் சார்! மனுஷன்!
//

வழிமொழிகிறேன்!

க.பாலாசி said...

இந்த கேரக்டருக்கு முன்னாடி நாமல்லாம் என்ன மனுஷன்னு நினைக்கத்தோணுது.. மானஸ்த்தன்தான்... கடைசி மூன்று பத்திகளிலும் கலங்கியும்தான் போனேன்..

மணிஜி said...

5.2 அந்த புள்ளி.

க‌ரிச‌ல்கார‌ன் said...

வைக்கிர‌ய‌மான‌ கேர‌க்ட‌ர்
எங்கே சார் பிடிக்குறீங்க‌ இந்த‌ மாதிரி ம‌னித‌ர்க‌ளை?

பழமைபேசி said...

பாலாண்ணே.... பல உயிர்களாய் வாழும் ஓர் உயிர் நீர்!!!

நேசமித்ரன் said...

பால குமாரனிடம் ஒரு டீடெய்லிங்கும் நேட்டிவிட்டியும் இருக்கும் அது மனசுக்கு பக்கத்துல உக்காரவைக்கும் இந்த இடுகைல அது இருந்தது

மழை பெய்யுது சார் இங்க ... இங்கையும் திருவேங்கடங்கள் இருப்பாங்க போல

VELU.G said...

அருமை திருவேங்கடம் மனசிலேயே நிற்கிறான்

க ரா said...

சார் மெய்யாலுமே கண்ணு கலங்குது சார்.

அகல்விளக்கு said...

கலங்கிய கண்களால் கணிணித்திரை மங்குகிறது....
திருவேங்கடம் மட்டும் தெளிவாக...

அவர் ஒரு உன்னதன்...

Paleo God said...

மறக்க முடியாத கேரக்டர்!!!

கலங்க வைத்து விட்டது.

பா.ராஜாராம் said...

பாலாண்ணா,

ஒவ்வொரு பாராவிலும் கசிந்தேன். மனிதர்களை படிக்கலாம் பாலாண்ணா. அதை அப்படியே படைக்க ஒரு இலை வேணும். பசிய, தண்ணி உதறிய இலை.

இவ்விலை உங்களுக்கு வாய்ச்சிருக்கு.

கேரக்டர், தொகுப்பாகனும் பாலாண்ணா.

Unknown said...

சார், அந்த கேரக்டர் உண்மையிலேய நடந்த நிகழ்ச்சியா! அற்புதமான எழுத்தோவியம் உங்களது. நன்றி

Thenammai Lakshmanan said...

உண்மை.. பாலா சார்.. இப்படி எத்தனை திறமைசாலிகளை இழந்திருக்கிறோம்..:((

Subankan said...

மறக்க முடியாத கேரக்டர்!

காமராஜ் said...

பாலாண்ணா...
சென்னை எனக்கு ஒருநாள் ரெண்டுநாள் பழக்கம்தான்.அடுத்தமுறை வரும்போது முகம் மாறியிருக்கும்.ஆனால் இந்தக்கேரக்டர், எப்ப நினைத்தாலும் அப்படியே எழுந்துவரும்.அசத்தல் கலக்குங்க.

மங்குனி அமைச்சர் said...

டச்சிங் கேரக்டர் சார்

தாராபுரத்தான் said...

மனம் பாரமாய் இருக்கிறது..

நசரேயன் said...

//மணிஜீ...... said...
//நுப்பத்தி மூணாவது சீட்டு,//


நல்ல பதிவு தலைவரே..ஆனா அவ்வளவு சீட்டு தேவையில்லை . 52 போதும். புள்ளி வச்சு அடிச்சிருக்கேன் நானு??//

52 விட 33 பெருசோ:)). மங்காத்தாக்கு 40 சீட்டுதானே தலைவரே:))
//

மூணு சீட்டு போதும்

நசரேயன் said...

//சில சொற்கள் முகம் சுளிக்க
வைத்திருக்கலாம். //

சுளிச்சி இருந்தா சுளிப்பு எடுக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

நசரேயன் said...

//திருவேங்கடம் மானஸ்தன் சார்!//

ஆமா என்னையே மாதிரி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மனிதர்களில் சில மாணிக்கங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஈரோடு கதிர் said...

//செட்டில்மெண்ட் தொகை வந்ததும் அவன் மனைவி ஒவ்வொருவராய்த் தேடி வந்து பணத்தைக் கொடுத்து நன்றி சொல்லி//

அய்யோ...

மனசு கலங்கிப்போனது..

இப்படியுமா மனிதர்கள்

செ.சரவணக்குமார் said...

பாலா சார்..

என்ன சொல்றதுன்னே தெரியல..

இந்த நிமிஷம் மனசுல திருவேங்கடம் மட்டுமே நெறஞ்சிருக்கார்.

அந்த சமையல்கார மணியண்ணாவுக்கு அப்புறம் இந்த திருவேங்கடம் கேரக்டரும் நெகிழ வைத்துவிட்டது.

சிநேகிதன் அக்பர் said...

மனசுல நிக்கிறாரு.

vasu balaji said...

@@நன்றி முகிலன்
@@நன்றி ரோமியோ
@@நன்றி நாடோடி
@@நன்றிங்க சித்ரா

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

//பாலாண்ணா!செம்மொழி தினத்தில் ராவணனில் தொண்டைக்குழி அடைத்துக்கொள்வது மாதிரியான உணர்வுகளுடன் மனதை என்னவோ செய்வதும் என்று சொன்னது இதுதான்.படத்துக்கான டயலாக் இப்ப எழுத்துக்கும் சொல்லிக்கிறேன்.

ஜெயகாந்தன் வீட்டுல உட்கார்ந்துகிட்டாலும் கேரக்டர் சொல்லும் யுத்திகளின் வேரை இங்கேயும் பரவ விட்டமாதிரி இருக்குது.

Good One!//

நன்றிண்ணா. அது முழுமையில்லை. அவன் இன்னும் அதிசயமானவன்.

vasu balaji said...

@@நன்றி இர்ஷாத்
@@நன்றி கருணாகரசு
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

Rithu`s Dad said...
அருமை அய்யா!! வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

நீங்கள் எழுதவது அனைத்தும் படிக்கிறேன்.. சிலவற்றிற்க்கு கமெண்ட் இடனும்னு நினைப்பேன்.. ஆனால் எதோ முடியாமல் விட்டு விடுவேன்.. இந்த முறை இந்த பதிவுக்கு உடனே கமெண்ட் இட்டு விட்டேன்..

இதே வாழ்த்துக்கள் உங்களின் சில முன் பதிவுகளுக்கும் உரித்தாகும்.//

ரொம்ப நன்றிங்க. சந்தோஷமாயிருக்கு.

vasu balaji said...

வல்லிசிம்ஹன் said...
அற்புதமான மனிதரை அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி சார்.வாழ்வில் எத்தனையோ விதமான உணர்ச்சிகளைச் சந்திக்கிறோம். ஆனால் இது போலக் கேட்டதில்லை.திருவேங்கடத்துக்கு அஞ்சலிகள்.//

நன்றிங்க வல்லிசிம்ஹன். அபூர்வமானவன் திரு

vasu balaji said...

@@நன்றிங்க அனு
@@நன்றிங்க பெ.சொ.வி
@@நன்றி பாலாசி. ஆமாம்.

vasu balaji said...

Venkat M said...
Hi Sir,

Neenga thaan திருவேங்கட tthukku vaazkkaai kodutha officer-a?//

இல்லைங்க. அவரும் ஒரு நாள் வருவாரு.:)

vasu balaji said...

மணிஜீ...... said...

5.2 அந்த புள்ளி.//

அய்யோ அதுவா. அப்படித்தான் சொல்லுவாங்க. இந்தா நீ குலுக்கி கொடுன்னு கொடுத்துட்டு சொல்லி அடிப்பான்ஜி.

vasu balaji said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

/வைக்கிர‌ய‌மான‌ கேர‌க்ட‌ர்
எங்கே சார் பிடிக்குறீங்க‌ இந்த‌ மாதிரி ம‌னித‌ர்க‌ளை?//

படிச்சிக்க இவங்களன்னு விதிச்சது நினைக்கிறேங்க.

vasu balaji said...

பழமைபேசி said...

//பாலாண்ணே.... பல உயிர்களாய் வாழும் ஓர் உயிர் நீர்!!!//

ம்ம். நன்றி:)

vasu balaji said...

நேசமித்ரன் said...

பால குமாரனிடம் ஒரு டீடெய்லிங்கும் நேட்டிவிட்டியும் இருக்கும் அது மனசுக்கு பக்கத்துல உக்காரவைக்கும் இந்த இடுகைல அது இருந்தது

மழை பெய்யுது சார் இங்க ... இங்கையும் திருவேங்கடங்கள் இருப்பாங்க போல//

நெகிழ்ச்சியா இருக்கு நேசமித்ரன். நன்றி.

vasu balaji said...

VELU.G said...

/அருமை திருவேங்கடம் மனசிலேயே நிற்கிறான்/

நன்றிங்க. அவனுக்கு தகும்.

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

/சார் மெய்யாலுமே கண்ணு கலங்குது சார்./

நன்றிங்க.

vasu balaji said...

@@நன்றி ராஜா
@@நன்றி ஷங்கர்

vasu balaji said...

பா.ராஜாராம் said...

//பாலாண்ணா,

ஒவ்வொரு பாராவிலும் கசிந்தேன். மனிதர்களை படிக்கலாம் பாலாண்ணா. அதை அப்படியே படைக்க ஒரு இலை வேணும். பசிய, தண்ணி உதறிய இலை.

இவ்விலை உங்களுக்கு வாய்ச்சிருக்கு.

கேரக்டர், தொகுப்பாகனும் பாலாண்ணா.//

நேசனும் நேசனின் நேசனும் நெகிழ வச்சிட்டீங்க. பார்க்கணும் பா.ரா. இன்னும் நிறைய குறையிருக்கே:). கூடி வரட்டும் பண்ணுவோம்.

vasu balaji said...

Sethu said...

/சார், அந்த கேரக்டர் உண்மையிலேய நடந்த நிகழ்ச்சியா! அற்புதமான எழுத்தோவியம் உங்களது. நன்றி//

ஆமாங்க. என்னோடு பணிசெய்தவர்.

vasu balaji said...

@@ஆமாங்க தேனம்மை.
@@நன்றி சுபாங்கன்

vasu balaji said...

காமராஜ் said...

//பாலாண்ணா...
சென்னை எனக்கு ஒருநாள் ரெண்டுநாள் பழக்கம்தான்.அடுத்தமுறை வரும்போது முகம் மாறியிருக்கும்.ஆனால் இந்தக்கேரக்டர், எப்ப நினைத்தாலும் அப்படியே எழுந்துவரும்.அசத்தல் கலக்குங்க.//

ஆச்சு 15 வருஷத்துக்கு மேல. என் மனசில எங்க உக்காந்திருந்தான்னு தெரியல. ஏனோ ஒரு நொடி அவன் சிரிப்பு மனதில் வந்து போனது. இறக்கி வச்சேனா? திரும்ப சுமக்கிறேனா தெரியலைங்க காமராஜ். மொத்த ஆஃபீசுக்கும் சண்டிமாடு. எனக்கும் இன்னொருத்தருக்கும் கன்னுகுட்டி.

vasu balaji said...

@@நன்றிங்க மங்குனி
@@நன்றிண்ணே. கோவை போகலையா?

vasu balaji said...

நசரேயன் said...
//மணிஜீ...... said...
//நுப்பத்தி மூணாவது சீட்டு,//


நல்ல பதிவு தலைவரே..ஆனா அவ்வளவு சீட்டு தேவையில்லை . 52 போதும். புள்ளி வச்சு அடிச்சிருக்கேன் நானு??//

52 விட 33 பெருசோ:)). மங்காத்தாக்கு 40 சீட்டுதானே தலைவரே:))
//

மூணு சீட்டு போதும்//

தோடா! :)))

// நசரேயன் said...
//சில சொற்கள் முகம் சுளிக்க
வைத்திருக்கலாம். //

சுளிச்சி இருந்தா சுளிப்பு எடுக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?//

சுளிப்பு என்ன சுளுக்கு எடுக்க கூட ஆட்டோ ரெடி. COD Terms:)) ரெடியா?

நசரேயன் said...
//திருவேங்கடம் மானஸ்தன் சார்!//

ஆமா என்னையே மாதிரி//

அப்ப துண்டு?

vasu balaji said...

@@நன்றிங்க நாய்குட்டி மனசு

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
//செட்டில்மெண்ட் தொகை வந்ததும் அவன் மனைவி ஒவ்வொருவராய்த் தேடி வந்து பணத்தைக் கொடுத்து நன்றி சொல்லி//

அய்யோ...

மனசு கலங்கிப்போனது..

இப்படியுமா மனிதர்கள்//

ம்ம். இருக்காங்க:(

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...
பாலா சார்..

என்ன சொல்றதுன்னே தெரியல..

இந்த நிமிஷம் மனசுல திருவேங்கடம் மட்டுமே நெறஞ்சிருக்கார்.

அந்த சமையல்கார மணியண்ணாவுக்கு அப்புறம் இந்த திருவேங்கடம் கேரக்டரும் நெகிழ வைத்துவிட்டது.//

நன்றிங்க சரவணா

vasu balaji said...

@@நன்றி அக்பர்

nellai அண்ணாச்சி said...

எக்மோர் பக்கம் போனால் திருவேங்கடம்தான் நினைவில் வர்றான்

கலகலப்ரியா said...

ம்ம்.. படிச்சிட்டேன்..

வாழ்க்கை இப்டித் தடம் புரண்டு போறதுக்கு... நாட்டுக்கும் நாடு மக்களுக்கும் எவ்ளோ பங்குன்னு தெரியுது..

||விதி விடுமா? யாரோ ஒரு அதிகாரியின் மகளைச் சேர்ப்பதற்காக, இவனை ஒரு நேஷனல் லெவல் டோர்னமெண்டில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். போனான். ஏற ஏறக் குடித்தான். விர்ரென்று தெய்வமாக மதித்த அதிகாரியின் அறைக்கு வந்தான். தடுத்த ப்யூனுக்கு ஒரு அறை விட்டு உள் நுழைந்தான்! ||

ம்ம்... பொறுமை மற்றும் முயற்சி இருந்திருந்தால் ஒரு வேளை... இன்னும் ஒரு நல்ல மனிதத்தைக் கண்டுபிடித்திருக்கலாமோ...

______________________________

ம்ம்.. எழுத்து நடை எளிமை... நல்லாருக்கு சார்...

கலகலப்ரியா said...

||நாடு மக்களுக்கு||

நாட்டு*.. spello... hihi..

vasu balaji said...

nellai அண்ணாச்சி said...
எக்மோர் பக்கம் போனால் திருவேங்கடம்தான் நினைவில் வர்றான்

நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ம்ம்.. படிச்சிட்டேன்..

வாழ்க்கை இப்டித் தடம் புரண்டு போறதுக்கு... நாட்டுக்கும் நாடு மக்களுக்கும் எவ்ளோ பங்குன்னு தெரியுது..//

வாஸ்தவம்தான்மா.

||விதி விடுமா? யாரோ ஒரு அதிகாரியின் மகளைச் சேர்ப்பதற்காக, இவனை ஒரு நேஷனல் லெவல் டோர்னமெண்டில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். போனான். ஏற ஏறக் குடித்தான். விர்ரென்று தெய்வமாக மதித்த அதிகாரியின் அறைக்கு வந்தான். தடுத்த ப்யூனுக்கு ஒரு அறை விட்டு உள் நுழைந்தான்! ||

ம்ம்... பொறுமை மற்றும் முயற்சி இருந்திருந்தால் ஒரு வேளை... இன்னும் ஒரு நல்ல மனிதத்தைக் கண்டுபிடித்திருக்கலாமோ... //

இல்லைம்மா. அவனுக்கும் வயது கடந்துவிடும். கடைசி வாய்ப்பு. அதுவுமில்லாம அவன் அப்படித்தான்.

______________________________

//ம்ம்.. எழுத்து நடை எளிமை... நல்லாருக்கு சார்...//

ம்ம்ம். ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.

மணிநரேன் said...

திருவேங்கடம் - பகிற்விற்கு நன்றிங்க.

"உழவன்" "Uzhavan" said...

ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்து :-)

Meeran said...

கேரக்டர் ஐ கண் முன்னாலே நிறுத்திடேங்கே சார், ரொம்ப அருமை!

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கேரக்டர் - திருவேங்கடம் - அருமையான இடுகை. கன்னுக்குட்டியாப் பழகின் - சண்டி மாடு பற்றிய இடுகை. நன்று நன்று. உலகில் சிலர் நம் மனதில் பச்ச்சக்கென்று ஒட்டிக் கொண்டு விடுகின்றனர். மறக்காவே இயலாது.

மறைந்த பின்னும் அவர் கூறியதை நிறைவேற்றிய அவரது மனைவியின் செயல் பாராட்டத்தக்கது.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா