Monday, June 14, 2010

கேரக்டர்-பஞ்சு

நான் வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் அந்த மனிதர் எனக்கு அறிமுகமானார். டே அம்பி! இஞ்ஜ வா என்றழைத்து என் பின்னணி முழுதும் விசாரித்து, சின்ன வயசு! சம்பளம் கைக்கு வரதுன்னு விரயம் பண்ணாத. பொறுப்பா இருக்கணும். ஆபீஸ் பரிட்சையெல்லாம் மடமடன்னு பாஸ் பண்ற வழியப்பாரு. யார்ட்டையும் சேரப்படாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும். நல்ல பேர் எடுக்கணும் தெரிஞ்சதா? நான் உன்னை வாட்ச் பண்ணிண்டே இருப்பேன் என்றார். அவர் என்னை கவனித்தாரோ இல்லையோ, நான் அவரை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். 

ஐந்தடிக்கு கொஞ்சமே கொஞ்சம் உயரம் இருக்கலாம். மாநிறத்துக்கும் சற்றே குறைந்த நிறம். நெற்றியில் சின்னப் பிறையாய் சந்தனக் கீற்று. வழுக்கைத் தலை. குண்டான உடம்பு. வேட்டி சட்டை, பெரும்பாலும் செருப்பணிவதில்லை. சம்பள நாள், வேறு ஏதாவது அரியர்ஸ் தொகை வரும் நாட்கள், அது தொடர்ந்த ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டும் செருப்போடு பேண்டும் போட்டுக் கொண்டு வரும் மர்மம் உறுத்துமா இல்லையா?

நண்பனின் தந்தையும் இவரும் நண்பர்கள் என்பதால் அதிகம் சிரமப்படாமல் துப்பு துலங்கியது. பஞ்சு மாமா வட்டிக்கு பணம் கொடுப்பவர். வசூல் காலங்களில் பட்டாபட்டி ட்ரவுசரில் பணம் வைக்க, எடுக்க சிரமம் என்பதால் பேண்ட் போடுவார். அதிலும், பேண்ட் பாக்கட்டை நன்கு நீளமாக முட்டிவரை வைத்துத் தைத்திருப்பார். பணம் குனிந்து எடுக்கையில் முழங்கை வரை உள்ளே போகும். பஸ்ஸில் போகும் போது பிக்பாக்கட் அடிப்பவன் உட்கார்ந்துதான் ப்ளேட் போட வேண்டும். 

பஞ்சு மாமாவுக்கு அவசரத்துக்கு கடன் வாங்கி உடனே அடைப்பவர்களை அவ்வளவு பிடிக்காது. அப்படி வருபவரை, என்ன? இதுக்கென்ன அவசரம். வேற செலவு இருந்தா நிதானமா குடு. உன்கிட்ட பணமிருந்தா பேங்கில இருக்கா மாதிரி என்பார். பெரும்பாலும், ரொம்ப நன்றி சார் என்று சிக்கிக் கொள்பவர்கள் அதிகம்.

நிஜமோ பொய்யோ தெரியாது. முதல் வட்டியை வாங்கி உப்புக்குள் வைத்துவிடுவார் மாமா என்பது ஒரு பேச்சாக இருந்தது. அப்படி வைத்தால் கடன் அடையாமல் வட்டி கொழிக்கும் என்பது ஒரு ஐதீகமாம். பலரும் சலித்துக் கொள்ளக் கேள்விப் பட்டிருக்கிறேன். கொடுக்கலாம்னு தேடிட்டு போனேன்யா. அப்புறம் வாங்கிக்கறேன்னாரு. சரின்னு வந்து உட்கார வீட்டில் இருந்து ஃபோன். பையன் சைக்கிள்ள இருந்து விழுந்து ஃப்ராக்சர் ஆயிடிச்சாம். கொடுக்கப் போன பணத்துக்கு மேல இருநூறு கடன் வாங்கறதாப் போச்சு என்று புலம்புவார். 

மாமாவுக்கு ப்ரோகிதமும் உபதொழிலாயிருந்தது. விசேஷங்களில் வைத்துக் கொடுக்கும் வேஷ்டியையும் கடை விலைக்கு சற்றே குறைந்த விலையில் (இன்ஸ்டால்மெண்டில் கூட) விற்றுக் காசாக்கி விடுவார். பொதுவாக குதிரை ரேஸில் காசைத் தொலைப்பவர்கள்தான் அதிகம். 

பஞ்சு மாமா அங்கும் வட்டித் தொழிலில் சாதனை படைத்தவர். எங்கள் அலுவலகத்தில் பணி செய்துப் பின்னர் குதிரை பழக்குபவராகப் போனவர் இவருக்கு நண்பராம். ரேசுக்கு முன்னர் குதிரைகளை ரவுண்டுக்கு அழைத்து வருவார்களாம். எப்படியோ தகவல் பறிமாற்றத்தில் டிப்ஸ் கிடைக்கும் மாமாவுக்கு.

அப்போதெல்லாம் ரயிலில் சம்பாதித்து குதிரைக்குக் கொள்ளு வாங்க க் கொடுத்தவர்கள் அதிகம். மாமா முதல் ரேஸில் ஒரு குதிரையின் மேல் அதிகப் பணம் கட்டுவாராம். கேட்பவர்களுக்கும் சொல்லுவாராம். அந்தக் குதிரை ஜெயிக்குமாம்.

வந்தப் பணத்தை (நன்றாக கவனியுங்கள்) கட்டும் குதிரையின் மேல் நண்பர்கள்  சொந்தப் பணத்தைக் கட்டுவார்களாம். மாமா ஒரு தொத்தல் குதிரை மேல் சொந்தப் பணத்தைக் கட்டுவாராம் தொத்தல் குதிரை ஜெயிக்குமாம். மாமாவுக்கு வந்த பணம்தான் நஷ்டம். மற்றவர்களுக்கு வெறியாகிவிடும். 

அடுத்த ரேசுக்கு, மாமாவின் கருப்புப் பையிலிருந்து வெள்ளைக்காகிதக் கத்தை வெளிவரும். கடன் தொகை எழுதி கையெழுத்துப் போட்டு வாங்கிய காசை, மாமா கட்டும் குதிரைக்கு மாற்றுக் குதிரையில் கட்டித் தொலைப்பார்களாம். திங்கட்கிழமை வந்து மீள்பார்த்தலில் குற்றச்சாட்டும், மாமாவின் சமாளிப்பும் தமாஷாக இருக்கும். ரொம்பவும் எகிறுபவரை, ஏண்டா! என் காசு நான் எப்படி வேணா நாசம் பண்ணுவேன். நீ கடன் வாங்கி ஆடச் சொன்னேனாடா என்பார்.

ஒரே மகன். பிஸினஸ் செய்கிறேன் என முடிவு செய்ததும், கடன் கொடுப்பது குறைந்தாலும், பழைய கடன் வசூலும், வட்டிப் பணத்தில் ரொட்டேஷனுமாக ஓடியது. பையன் பிஸினெஸில் கொடிகட்டிப் பறக்கிறான். இனிமே எனக்கென்ன என்றாரே ஒழிய வட்டித் தொழில் மட்டும் நிற்கவேயில்லை. 

ஐந்நூறு ரூபாய் வாங்கி அடைக்க முடியாமல், ஐந்தாயிரம் வட்டிகட்டி ஒரு வழியாக கடன் திருப்புகையில் கூட வட்டி தள்ளுபடி செய்யமாட்டார். வட்டி கட்டாவிட்டால் வையும் வசவில் காதில் புகை வரும். ரிட்டையர் ஆன பிறகு வந்த செட்டில்மெண்ட் தொகையிலும் கணிசமாக வட்டிக்கு கொடுத்திருந்தார். 

கடன் மிஞ்சிப் போனவன் என்ன செய்வான். அதுவும் சிறு தொகைகள் அதிகம். பத்திரம் பவர் எதுவுமில்லை. கிறுக்கிய கையெழுத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். ஒன்றிரண்டு பேர் ஆனதைப் பார்த்துக்க. அசலுக்கு மேலேயே பத்து மடங்கு வட்டி அழுதாச்சி என்பது மெதுவே பரவ, ஆளாளுக்கு சந்தனப் பிறைக்கு பதில் நாமத்தைச் சாத்தினார்கள். 

ஒரு பக்கம் மகனுக்கும் பிஸினஸ் படுத்துவிட, இவரைப் பணம் கேட்டு பெரும் போராகிவிட்டது. ஒரு கட்டத்தில் பிஸினஸ் மேன், வேறு வேலைக்குப் போவதை விட அப்பாவின் பென்ஷனில் குடும்பத்தோடு சாப்பிடுவது கவுரவம் என பையன் முடிவெடுத்துவிட ரொம்பவே நொடித்துப் போனார். 

ஒரு முறை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்த்தேன். நீர்காவி வேட்டி, மேலும் கீழுமாய் பட்டன் போட்ட சட்டை. சட்டை பாக்கட்டில் கற்றைப் பேப்பர். கருத்துப் போய் வெறுங்காலுடன் பஞ்சடைந்த கண்களுடன் தடுமாறியபடி போய்க் கொண்டிருந்தார் பஞ்சு. 

41 comments:

VELU.G said...

நல்ல படைப்பு

நல்ல அறிவுரை கூறுபவர்களே அதை பின்பற்றுவதில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

இது போன்ற பஞ்சு கள் நிறைய இருக்காங்க:))

க.பாலாசி said...

கையப்புடுச்சி இழுத்துக்கொண்டுபோய் இவரப்பாத்துக்கடான்னு காட்டுறீங்க... அவர் நல்லவரா கெட்டவரான்னுதான் அனுமானிக்க முடியல...

ஒண்ணு நிச்சயம் ‘பேராசை பெரும் நஷ்டம்‘

நேசமித்ரன் said...

ம்ம் தந்திரங்கள் உயிர்ப்புடன் இருப்பது ரத்தம் சத்தம் இடும் வரைதான் போலும்

பிறகு இரை கிடைக்காத முனியாக திருப்பி அடிக்கத் துவங்குகின்றன

cheena (சீனா) said...

கதை / கற்ப்னை / கேரக்டர் அறிமுகம் - எப்படியாயினும் சரி - இடுகை அருமை. நங்கு முடித்திருக்கிறீர்கள். பாவம் பஞ்சு ......

அன்பின் பாலா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

அகல்விளக்கு said...

நாடிச்சத்தத்தின் அதிர்வுகளில்தான் ஆட்டம் எல்லாம்...

இறுதியாக மனது கனத்துப்போகிறது...

அழுத்தமாக முடித்திருக்கிறீர்கள்...

D.R.Ashok said...

எங்கப்பாவும் கவர்மெண்ட்டுதான் சார்.. இது மாதிரி கேரக்டருகல சின்ன வயசுல பாத்துயிருக்கேன்.. (அதுவும் பத்துவட்டி.. 20years back... அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியனும்.. பேரு வெங்கடசலாபதி, தெலுங்குகாரர்.. மைலாப்பூர், போஸ்டாபிஸ்) தெரிஞ்சவங்க சொல்லலாம் :) லேபிள்: அனுபவம்

இராமசாமி கண்ணண் said...

நல்ல பாத்திரப் படைப்புங்கய்யா. நிரைய மனுசங்க பிறருக்குத்தான் வாத்தியாரா இருக்காங்க.

K.B.JANARTHANAN said...

சுவையாக இருந்தது படிக்க...

Subankan said...

//ஒண்ணு நிச்சயம் ‘பேராசை பெரும் நஷ்டம்‘
//

அதேதான்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மனித போதையிலேயே கொடூரமானது காசு பணம்தான் போல இருக்கு சார்!

தேவையான ஒரு பகிர்வு!

ஈரோடு கதிர் said...

ப்ச்!

Chitra said...

ஒரு பக்கம் மகனுக்கும் பிஸினஸ் படுத்துவிட, இவரைப் பணம் கேட்டு பெரும் போராகிவிட்டது. ஒரு கட்டத்தில் பிஸினஸ் மேன் வேறே வேலைக்குப் போவதை விட அப்பாவின் பென்ஷனில் குடும்பத்தோடு சாப்பிடுவது கவுரவம் என பையன் முடிவெடுத்துவிட ரொம்பவே நொடித்துப் போனார்.

...... பாவம் சார்....

சி. கருணாகரசு said...

பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய படைப்பு.
நன்றிகைய்யா.

கலகலப்ரியா said...

||T.V.ராதாகிருஷ்ணன் said...
இது போன்ற பஞ்சு கள் நிறைய இருக்காங்க:))||

ரிப்பீட்டு...

எனக்குத் தெரிஞ்சு ஒருத்தங்க நூத்துக்கு நூறு வட்டி வாங்கி... ஜே ஜேன்னு இருக்காங்க.. இப்டி நிலமை அவங்களுக்கு வர வேணாம்..

நல்லா பந்தி பிரிச்சு எழுதி இருக்கீங்க சார்... கண்டினியூ...

ஸ்ரீராம். said...

வெறுங்காலுடன் பஞ்சடைந்த கண்களுடன் தடுமாறியபடி போய்க் கொண்டிருந்தார் பஞ்சு//

அதிகமாய் ஆசைப் படுபவன் ஐயோ என்று போவான்...!

நாடோடி said...

ப‌ஞ்சு கேர‌க்ட‌ர்க‌ள் நிறைய‌ பேர் இருக்காங்க‌ சார்... தொட‌ருங்க‌ள்..

Software Engineer said...

17 வோட்டு இருந்தப்ப நான் பதிவை படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்து வோட்டு போடுகையில் 19 ஆகி விட்டது. அப்படின்னா பதிவோட பரபரப்பை பாத்துக்கோங்க! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
பகிர்வுக்கு நன்றி!

இராகவன் நைஜிரியா said...

அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்.

அதிக வட்டி வாங்கும் பலரும் இப்படித்தான் கடைசி காலத்தில் கஷ்டப் பட்டு இருக்கின்றனர்.

ப்ரின்ஸ் said...

இப்படியும் சில மனிதர்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////அவர் என்னை கவனித்தாரோ இல்லையோ, நான் அவரை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன் /////////


இப்படி ஏதாவது சொல்லி நம்மையும் பயமுறுத்துவது. இதெல்லாம் நடக்குமா நம்மக்கிட்ட !

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்.
//

ஆமாங்கண்ணே... நீங்க இன்றைய அரசர்களைத்தானே சொல்றீங்க... எவ்வளவு கொண்டாலும் அவங்களுக்குப் போதலையாமே? நெசமா??

பழமைபேசி said...

// ஈரோடு கதிர் said...
ப்ச்!
//

இப்படிப் பொது இடத்துல குடுக்குறது நம்ம கலாசாரம் இல்லையே? இஃகி!

இப்படிக்கு நிஜாம் ..., said...

அண்ணே! பஞ்சு கேரக்டரும் நான் கண்டவர்களில் ஒருவர் போலவே! ஆமா இந்த வட்டிக்காச உப்புக்குள்ள வெக்கிற கத புதுசால்ல இருக்கு!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்ல சிலேடை ஐயா

முகிலன் said...

//அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்.
//

தெய்வம் நின்று கொண்டே இருந்தால் கால் வலிக்காதா?

முகிலன் said...

நல்ல கேரக்டர் சார். நீங்க எனக்குக் காட்டினவரில்லையே இவரு? அவரு எப்ப வெளியீடு?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சின்ன வயசு! சம்பளம் கைக்கு வரதுன்னு விரயம் பண்ணாத.//
என்று அப்போது புத்தி சொன்னவர்,

//கருத்துப் போய் வெறுங்காலுடன் பஞ்சடைந்த கண்களுடன் தடுமாறியபடி போய்க் கொண்டிருந்தார்//

என்றால், தன் மகனுக்கு சரியான வழியைக் காண்பிக்கவில்லை என்றுதானே பொருள்? அதுபோக,

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

என்பது குறள்.

பஞ்சு திருடவில்லை என்றாலும், அவர் நல்வழியில் பணம் சேர்க்கவில்லை என்பதால்தான் அவருக்கு இப்படி ஒரு முடிவு என்று புரிந்து கொண்டால் நாம் நல்லபடி வாழ உதவும் என்று நான் நினைக்கிறேன்.

பின்னோக்கி said...

கேரக்டரை ஆரம்பித்த விதமும், வர்ணனையும், முடிவு வரிகளும் அருமை.

காமராஜ் said...

//நான் உன்னை வாட்ச் பண்ணிண்டே இருப்பேன் என்றார். அவர் என்னை கவனித்தாரோ இல்லையோ, நான் அவரை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன்.//

//நான் உன்னை வாட்ச் பண்ணிண்டே இருப்பேன் என்றார். அவர் என்னை கவனித்தாரோ இல்லையோ, நான் அவரை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன்.//

வாசகனை வாரிச்சுருட்டிக்கொள்ளும் டெக்னிக் இது. ஆஹா...அப்றம் வருகிற பஞ்சுமாமாவைப்பற்றி பாலாண்ணா ஒண்ணுமே சொல்லவில்லை. அதனே நாம ஏஞ்சொல்லணும்?. இதுவும் கூடரொம்பச் சமத்தான வடிவம்.
கிறங்கடிக்குது பாலாண்ணா.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அறிவுரைக்கு நன்றி சார்!

அழகா பத்தி பிரிச்சு அருமையா தொடுத்திருக்கிறீர்கள்.. அட்டகாசம்!!!

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க வேலு
@@நன்றி டி.வி.ஆர்.சார்.
@@நன்றி பாலாசி
@@நன்றி அப்படித்தான் போல நேசன்.
@@நன்றிங்க சீனா
@@நன்றி ராஜா
@@நன்றி அசோக். கிடைச்சா சொல்லுங்க:)
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க ஜனா
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி ப்ச்:))
@@நன்றி சித்ரா

வானம்பாடிகள் said...

@@ நன்றி கருணாகரசு.
@@நன்றி ஸ்ரீராம்
@@ ஆமாண்ணே. . நன்றி அண்ணே
(அய்யா சாஃப்ட்வேர் உமக்கு தனியா சொல்றேன் இது இராகவன் அண்ணனுக்கு)
@@நன்றி ப்ரின்ஸ்
@@நன்றி பனித்துளி
@@நன்றி நிஜாம்
@@நன்றி கீதப்ரியன்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி சரவணக்குமார்

வானம்பாடிகள் said...

//Software Engineer said...

17 வோட்டு இருந்தப்ப நான் பதிவை படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்து வோட்டு போடுகையில் 19 ஆகி விட்டது. அப்படின்னா பதிவோட பரபரப்பை பாத்துக்கோங்க! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
பகிர்வுக்கு நன்றி!//

எது பிடிச்சிருந்தது பதிவோட பரபரப்பா?

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

//ஆமாங்கண்ணே... நீங்க இன்றைய அரசர்களைத்தானே சொல்றீங்க... எவ்வளவு கொண்டாலும் அவங்களுக்குப் போதலையாமே? நெசமா??//

ஆக்கா. துணைத் தலமையாசிரியருக்கே ஆப்பா?

/இப்படிப் பொது இடத்துல குடுக்குறது நம்ம கலாசாரம் இல்லையே? இஃகி!
/

தனியிடத்துல குடுத்தாலும் தப்புத்தானுங்களே:))

வானம்பாடிகள் said...

முகிலன் said...

//தெய்வம் நின்று கொண்டே இருந்தால் கால் வலிக்காதா?//

அட நின்ன இடத்துல கலெக்‌ஷன் பார்க்குறத சொல்லுறாரு அண்ணன்.

/நல்ல கேரக்டர் சார். நீங்க எனக்குக் காட்டினவரில்லையே இவரு? அவரு எப்ப வெளியீடு?/

சீக்கிரம்

வானம்பாடிகள் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பஞ்சு திருடவில்லை என்றாலும், அவர் நல்வழியில் பணம் சேர்க்கவில்லை என்பதால்தான் அவருக்கு இப்படி ஒரு முடிவு என்று புரிந்து கொண்டால் நாம் நல்லபடி வாழ உதவும் என்று நான் நினைக்கிறேன்.//

இந்தக் காலக் கட்டத்தில் சாமர்த்தியமாக இல்லை என்பதும் காரணம்.

வானம்பாடிகள் said...

காமராஜ் said...

//நான் உன்னை வாட்ச் பண்ணிண்டே இருப்பேன் என்றார். அவர் என்னை கவனித்தாரோ இல்லையோ, நான் அவரை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன்.//

வாசகனை வாரிச்சுருட்டிக்கொள்ளும் டெக்னிக் இது. ஆஹா...அப்றம் வருகிற பஞ்சுமாமாவைப்பற்றி பாலாண்ணா ஒண்ணுமே சொல்லவில்லை. அதனே நாம ஏஞ்சொல்லணும்?. இதுவும் கூடரொம்பச் சமத்தான வடிவம்.
கிறங்கடிக்குது பாலாண்ணா.//

நன்றிங்க காமராஜ்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||T.V.ராதாகிருஷ்ணன் said...
இது போன்ற பஞ்சு கள் நிறைய இருக்காங்க:))||

ரிப்பீட்டு...

எனக்குத் தெரிஞ்சு ஒருத்தங்க நூத்துக்கு நூறு வட்டி வாங்கி... ஜே ஜேன்னு இருக்காங்க.. இப்டி நிலமை அவங்களுக்கு வர வேணாம்.. //

ம்ம். கஷ்டப்பட வேணாம். உணர்ந்தா நல்லது.

//நல்லா பந்தி பிரிச்சு எழுதி இருக்கீங்க சார்... கண்டினியூ...//

:D. ரொம்ப நன்றிம்மா.

பழமைபேசி said...

//@@நன்றி ப்ச்:))//

இப்படி மாறி மாறி.... முடியலை!

~~Romeo~~ said...

ஹ்ம்ம் பணம் பணம்ன்னு அது பின்னால ஓடினா இது தான் கதி .