Friday, August 2, 2013

பேனா


அப்பா ஒரு பேனாப் ப்ரியர். ப்ரியம் என்று சுளுவாக சொல்லிவிட முடியாது. பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் ஓவியம் போல அவைகளுக்கு ஒரு அந்தஸ்து உண்டு. பக்தி, பெருமிதம் இவற்றோடு தனக்குக் கிடைத்த வரம்போல ஒரு பணிவோடான ப்ரியம். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது. துருவழுக்கேறினாலும் மேலிருக்கும் படம் தேயாமல் துருவேறாமல் சோப்புத்தண்ணீரில் நனைத்த துணியால் துடைத்து தேங்காய் எண்ணெயும் கெரசினும் நனைத்த பஞ்சால் துடைத்து ஓரளவு காக்கப்பட்ட ஆல மரத்து ஊஞ்சலில் ஆடும் ராதா க்ருஷ்ணன் படம் போட்ட பாரி மிட்டாய் டப்பா. 

உள்ளே புதுக்கருக்கழியாத பார்க்கர்கள், ப்ளூபர்ட்கள், வாடர்மென், ஒரு ஷீஃபரும்கூட. இன்னும் எத்தனையோ பேர்கள், கவனமில்லை. பலப்பம் கனத்தில் விரல் நீட்டு பேனா. ஒரு பேரா எழுதுவதற்குள் விரலைச் சொடுக்கெடுக்க வைக்கும் குண்டு பேனா. ராணுவ வீரன் தொப்பி போல் கருப்பு தட்டை நிற மேல் பாகத்தின் தொப்பிக்கு காண்ட்ராஸ்ட் சிவப்பு நிறத்தில் பேனா. மினு மினுக்கும் தங்கக் கலர் க்ளிப்பின் முனையில் அர்ச்சுனன் அம்பு, பீமன் கதை போல் கூர்ப்பும் குண்டுமாய். கழுத்தே இல்லாமல் ஜாண் நீளத்துக்கு மரத்தாலான ஒரு வாடர்மென். கீழே பட்டன் மாதிரி இருக்கும். கவர் கட்டைவிரலில் பாதி.  திறந்தால் நிப் தெரியாது. கவரை பின்புறம் சொருகி திருகினால் நிப் மேலே வரும். நிப் உள்ளே இருக்கும்போது படுக்க வைத்தாலும், தலைகீழாய் வைத்தாலும் இங்க் கொட்டாது. அப்பாவின் ஃபேவரிட் இந்தப் பேனா. இங்க் பாட்டிலில் முனை முக்கி க்ளாக் வைசில் திருகி ஆண்டி க்ளாக் வைசில் திருகினால் இங்க் நிறப்பிக் கொள்ளும் ஷீஃபர். மேலிருக்கும் க்ளிப் போலவே சற்று நீளமாக பதிந்தாற்போல ஒரு க்ளிப்பை விரலால் தூக்கி விட்டால் ட்யூபில் இங்க் ஏற்றிக் கொள்ளும் ஒரு ப்ளூபர்ட். 

ஒரு ஓவியக்காரனின் கைத்துணி போல் கருப்பு, கருநீலம், சிவப்பு, பச்சை, பிங்க் என்று பல இங்க் கறையோடு ஆனால் கசங்காமல் சுருக்கமின்றி மடித்து வைக்கப்பட்ட ஒரு வேஷ்டித் துண்டு, கடித்துக் கொண்டிருக்கும் பேனாக் கழுத்தைத் திறக்க அளவாக நறுக்கிய சைக்கிள் ட்யூப், வெள்ளையில் சிவப்பு டைமண்ட் நடுவே வெள்ளெழுத்தில் பாரத் பெயர் தாங்கிய சவர ப்ளேட், மிக மெல்லியதாய் லீக் அடிக்கும் பேனாக் கழுத்து மரையில் தேய்த்து லீக் அடிக்காமல் மூட விறல் கணுவளவு தேன் மெழுகு எல்லாம் டப்பாவுக்குள் அடக்கம். 

ஞாயிறு மதியங்கள் காஃபிக்குப் பிறகு அப்பாவின் அடுத்த வார பேனாக்கள் தேர்வு. அப்பாவுக்கு எப்போதும் பார்க்கர் இங்க்தான். ஏதோ பிடித்த பேனா எடுத்து இங்க் போட்டு வைத்துக் கொள்வதெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு கணக்கில் 4 பேனா செலக்ட் ஆகும். சிவப்பு, கருநீலம், கருப்பு, நீல இங்க் புட்டிகள் எதிரில். ஒரு புறம் வழவழப்பாய் மறுபுறம் சொரசொரப்பாய் அரையடி நீளம் நாலங்குல அகலத்துக்குக் அப்பாவே பைண்ட் செய்த ஸ்க்ராப் புக். மேற்புறம் மடித்து தொடைமேல் வைத்துக் கொண்டு பேனாவைப் பிடித்து சண்டைக்குப் போகும் மன்னன் கத்தி வாகு பார்ப்பது போல் கையில் பேனாவோடு ஒரு பார்வை, பேப்பர் மேல் வைத்து ஒரு பார்வை, இங்க் இல்லாமல் ஒரு கையெழுத்து, பேப்பரில் கீறியிருக்கிறதா என்று நோட்டில் ஒரு பார்வை. அதன் பிறகு கருப்பு இங்க் பாட்டில் திறந்து நிப் முனை மட்டும் நனைய எடுத்து மூன்று கையெழுத்து. 

இடைவெளி இல்லாமல், பட்டை அடிக்காமல், கீறாமல் சீராக இருக்க வேண்டும். வழவழ பக்கத்தில் எப்படி ஓடுகிறதோ அப்படியே சொர சொரப்பிலும் ஓட வேண்டும். இல்லை எனில் நாதசுர வித்துவான் சீவாளியைப் பதப் படுத்துவது போல ப்ளேட் பிளப்பில் புகுந்து நாக்குக்கும் நிப்புக்கும் நடுவில் நர்த்தனமாடி ஸ்ருதி சேர்க்கும். 

ஷீஃபருக்கும், பார்க்கருக்கும் என்ன மாதிரியான ராயல் ட்ரீட்மெண்டோ அதேதான் 3 ரூபாய் என் கேம்லின் பேனாவுக்கும். ரைட்டர் பேனாவுக்கும். ‘எங்கேடா உன் பேனா’வுக்கே விரல் தந்தியடிக்கும். தொடையில் அப்போதே லேசான எரிச்சல் ஆரம்பிக்கும். க்ளிப்பைக் கடிக்காமல் கணக்கு போட முடியுமா? பக்கத்துப் பையனுக்கு பத்து சொட்டு இங்க் கடன் கொடுக்க வேண்டுமானால் ட்யூப் துண்டுக்கு எங்கே போக. பல்லால் கடிக்காமல் திறக்கவா பேனாக் கழுத்து இருக்கிறது?

பேனா சரஸ்வதி. வாய்ல வச்சி எச்சில் பண்ணாதன்னா தெரியாது? ஒற்றை விரல் இழுப்பில் 30 டிகிரி கோணல் போய் தெத்துப்பல் தூக்கல் போய் மூடியில் க்ளிப் உட்காரும். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாதலால் நிஜமாகவே மூச்சா முட்டும். தப்பிக்க முடியாது. அத்தனை குழியில் புதிதாகப் பதிந்த பல்லடையாளம் கண்டு பிடிக்க சிரமப்பட்டதே இல்லை. போனவாரம்தானே கடிக்காதன்னு சொன்னேனுக்கு ‘இல்ல பழசு’  என்றால் போனஸ் நிச்சயம் என்பதால் அநிச்சையாக இறுகி கை தொடையில் இறங்கும் நேரத்தில் தளர்ந்து அடியின் தாக்கத்தைக் குறைக்க தொடை பழகிவிட்டிருந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் போய்ச்சேர்ந்த அப்பாவுக்காக யாருமே தொடாமல் பொக்கிஷமாய் ஞாயிறுக்காய் காத்திருந்தன பேனாக்கள். ஒரு மிக நெருங்கிய சொந்தத்திடம் பதினெட்டு வயதானால்தான் வேலைக்கு அப்ளை செய்ய ஆறுமாதம் இருந்ததால் செலவுக்காக வாங்கிய கடனுக்கு வேலை கிடைத்த அதே வாரத்தில் கொடுத்த பணம் வேண்டும் என்ற பிடிவாதத்தில் திகைத்துப் போனாள் அம்மா.

கண்ணீர் தளும்ப பேனாப் பெட்டி வெளியெடுக்கப்பட்டது. பழைய ட்ரங்குப் பெட்டியிலிருந்து. கூடவே ஒரு சின்ன மஞ்சள் எல்.ஜி. பெருங்காய டப்பாவும். அம்மாவின் ஒரு சிவப்புக் கல் மூக்குத்தி, மூன்று முனை உடைந்த நிப் பொதிந்த ரோஸ் கலர் பட்டர் பேப்பர் பொட்டலம். ஷீஃபர், பார்க்கர், வாடர்மேன்களின் க்ளிப்புகள், 14 கேரட் என்று பொறிக்கப் பட்ட நிப்புகள் எல்லாம் கழற்றி எடுத்து என்.எஸ்.ஸி போஸ்ரோடு போய் நகைக் கடையில் கேட்டு எதிரில் இருந்த அரசாங்க உருக்குச் சாலையில் கொடுத்து பாதி சப்பிய சாக்லேட் போல் சுத்த தங்கம் ஒரு சின்ன கட்டியாக்கிக் கொடுத்து கிடைத்த ஆயிரத்து ஐந்நூத்தி சொச்சத்தில் ஆயிரம் ரூபாய் அசல் போக மிச்சத்துக்கு ஒரு புடவை ரவிக்கை, பேண்ட் ஷர்ட் மங்காராமில் வாங்கித் தாம்பூலத்தில் வைத்து கடன் அடைத்தபோது அப்பா பெருமைப் பட்டிருப்பார்.

பின்னாளில் அப்பாவின் நண்பரான ராம்ஜி என்ற பேனா பைத்தியத்தோடு போர்ட் ட்ரஸ்ட் கதிரி பாயிடம் இன்ஸ்டால்மெண்டில், ஃப்ளவர் பஜார் யூனூஸ் சேட் கடை முன்னால் ப்ளாட்ஃபார்மில் பேனாக் கடை வைத்திருந்து பிறகு மௌண்ட்ரோட் பேட்டா வாசலில் கடை வைத்திருந்த முதலியாரிடம் சிந்தாதரிப் பேட்டையில் கடைந்தெடுத்து வாங்கிய எபொனைட் பேனாக்கள் கலெக்‌ஷன் என்னிடம் இருந்தது. 

இரண்டு நாள் முன்பு திடீரெனத் தோன்றியது. தாத்தாவுடையது இல்லை என்றாலும் என் பிள்ளைகளுக்கு ஷீஃபரும், வாடர்மென்னும் அவர் நினைவாகக் கொடுக்க வேண்டுமென்று. அமேசானில் முன்னூறும் ஐன்னூருமாய் இருக்கிறது விலைகள். அதுவும் ஏதோ கேட்ரிஜாம். 

பொறுப்பிருக்கிறபோது, கடன் வாங்கி ஹஜ்ஜுக்கு போகக் கூடாதாமே. அந்த மாதிரி கடமையெல்லாம் முடித்து, பென்ஷனாவது மிச்சம் பிடித்து சாதாரணமான இங்க் போடுகிற ஒரு ஷீஃபரும், வாடர்மென்னும் முடிந்தால் ஒரு பார்க்கரும் வாங்க வேண்டும். 

10 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு அப்பா.தம்பி நிமிட்டாம்பழம் வாங்கி இருக்கிறான்.
அருமையான பகிர்வு.எல்லாத்தந்தைகளும் இப்படிதானோ.
அம்மாவின் அந்த நாளைய கலக்கம் சுடுகிறது.அப்பாவின் பேனாக்களும் அவரோடு ஐக்கியமாகிவிட்டன.நன்றி ஸ்ரீ வாசு பாலாஜி.

ராஜி said...

நெஞ்சை கனக்க செய்தது வரிகள்

ஆரூரன் விசுவநாதன் said...

ஆசானே....வணக்கம்.......நீண்ட நாளைக்கு பிறகு எழுதியிருக்கீங்க...மகிழ்ச்சியா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க. நம்ம மேயர் அன்னைக்கு ஆசனூரில ரொம்ப வருத்தப் பட்டார். +க்கு போயி ஆசான் எழுத்தை மறந்திட்டாருன்னு...

ஆரூரன் விசுவநாதன் said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு...மனசு கொஞ்சம் பாரமாகவும் இருக்கு

ரிஷபன் said...

அரசாங்க உருக்குச் சாலையில் கொடுத்து பாதி சப்பிய சாக்லேட் போல் சுத்த தங்கம் ஒரு சின்ன கட்டியாக்கிக் கொடுத்து கிடைத்த ஆயிரத்து ஐந்நூத்தி சொச்சத்தில் //

வலிக்க வைத்த நிஜத்தை வார்த்தைகளாக்கிய சாமர்த்தியம்.

பேனாக்களுடனான உலகம் இப்போது தொலைச்சாச்சு. இழந்த எத்தனையோ விஷயங்களில் அதுவும் ஒன்றாய்.

Unknown said...

கடனை திருப்பி கொடுக்க பட்ட வேதனை பதிவில் தெரிகிறது.

நெகிழ்ச்சியான பதிவு.

சென்னை பித்தன் said...

பொக்கிஷத்தை விற்றுப் பொருள்தேடும் நிலை வேதனை தான்!

என் தாயார் பள்ளிப்பருவத்தில் தேர்வுக்கு முன், பேனாவைக் கழுவித் துடைத்து புது மை போட்டுத்தயராகும் வைபவத்தை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்
இப்போதோ!

இரசிகை said...

arumai ya irukku

Unknown said...

Hey....the article reminded me of my husband.....

SPGR. said...

I do all that your father did :-). My collection is limited to GAMA, Wality, Camlin and Hero pens... Even now I use Ink(fountain) pens for my daily work... What your father did after Sunday coffee, I do on the last day of the month... I wish to see your Dad's collection, if any of them is available now... spgr.

www.spgr.blogspot.com