Tuesday, November 30, 2010

அன்பான அப்பா?...

கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுலகில் சலசலப்பை ஏற்படுத்திய தலைப்பு ‘லிவிங் டுகெதர்’. நேர்மையான, வக்கிரமான, நகைச்சுவையான, புரிதலுடனான, அபத்தமான என்று பல பதிவுகள் வந்துவிட்டன. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. திரும்பவும் முதலிலிருந்தா என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவாதங்களில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விஷயம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது.

எதிர்ப்பவர்கள் அணியில் பிள்ளைகள் வன்முறையாளனாக, சமூக விரோதிகளாக வளரக்கூடும் என்ற அச்சம், பிள்ளைகளுக்காக வாழ்வது என்ற தியாகம் இருக்காது, பேஏஏஏர் சொல்லும் பிள்ளையாக இருக்காது என்ற அதி நவீன கண்டுபிடிப்பு (ங்கொய்யால தாத்தனுக்கு அப்பன் பேரு கேட்டா சொல்லத் தெரியாது இதுல குடும்பப் பேரை காப்பாத்தி சொல்ல வேற போகுது),விட்டுக் கொடுத்து வாழ்தல் என்ற மஹா உன்னதமான தியாகம் எல்லாம் பேசப்பட்டது.

அது அவரவர் விருப்பம், அடிப்படை உரிமை என்று பேசியவர்கள் குழந்தை வளர்ப்பு முறை, மேலை நாடுகளில் குழந்தைகளுக்கான உரிமைகள், சுதந்திரங்கள் போன்றவற்றை முன்வைத்தார்கள்.

எதிர்ப்பு, ஆதரிப்பு, இரண்டுமற்ற தனிப்பட்ட மனித உரிமை என்பது தாண்டி கருத்துக்களை மட்டும் பார்க்கும் போது முக்கியமாக தென்படும் விஷயம் பெற்றோர்களின் கடமை (பிள்ளைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது) பிள்ளைகளின் கடமை என்பது.

டமில் தந்தையோ, இந்தியத் தந்தையோ, கோணியைச் சுத்தி அடித்தாற்போல் பொத்தாம் பொதுவாக அயல்நாட்டுத் தந்தையோ எல்லாவற்றிலும் பொறுப்பற்ற தந்தைகள் (அது எந்த வகையிலானாலும்) இருக்கத்தான் செய்கிறார்கள். பொறுப்பான தந்தைகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

இன்று கலாச்சாரம், நம் பண்பாடு என்று சொல்லிக் கொண்டு நாம் பிள்ளை வளர்க்கும் முறை இருக்கும் லட்சணத்தைப் பார்த்தேயாக வேண்டும். வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற டகால்டி எஸ்கேபிஸம், வளர்ப்பு சரியில்லை என்ற ஒற்றை வரி விமரிசனத்தில் புறம்தள்ளும் மனோபாவம் எல்லாம் ஓரம் வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய விஷயம் இது.

இந்தியத் தந்தையிடம் (முக்கியமாக டமில் தந்தையிடம்) பெற்றோரின் கடமை என்ன என்று கேட்டுப் பாருங்கள். பையனை நல்லபடியா வளர்க்கணும். நல்லா படிக்க வைக்கணும். அவன் கால்ல அவன் நிக்கிறாமாதிரி செஞ்சுட்டா நம்ம வயசான காலத்துல குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்.

பெண்ணானால், அடக்க ஒடுக்கமாக வளர்க்கணும், படிக்க வைக்கணும், காலா காலத்துல ஒரு நல்ல இடத்துல புடிச்சி கொடுத்துட்டா ஒரு பாரம் குறையும். நாள பின்ன கண்ணக் கசக்காம நல்லா இருந்தா அதைவிட வேறென்ன வேண்டும். ஆக பிள்ளைகள் சுமையும் சுமைதாங்கியும்தானா?

முடிந்தது கடமை!!! இப்படியே நடந்துவிட்டால் குறை சொல்ல ஏதுமில்லைதான். ஆனால், வலிக்குமே என்று பயப்படாமல் சர்ஜரி மாதிரி கீறிப்பார்த்தால் தெரிவது அப்பட்டமான சுயநலம். இல்லை என மறுக்க முடியாது. சற்றே எதிர்பார்ப்பில் சறுக்கல் ஏற்படின் இந்தச் சுயநலம் வெளிப்படாமல் போகாது. அதற்கான அத்தாட்சி இன்று முளைத்திருக்கும் முதியோர் இல்லங்கள்.

நல்ல ஸ்கூலில் சேர்த்தேன். வருமானத்துக்கு மீறியதென்றாலும் ஓவர்டைம், சைட் பிசினஸ் என்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். அவனை இவனைப் பார்த்து காலில் கையில் விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தேன், அல்லது காசைக் கொட்டி தனியார் கல்லூரியில் காம்பஸ் இண்டர்வியூ இருக்குமென்றே அங்கு சேர்த்தேன். வேலை கிடைத்ததும் சாப்பாட்டுக்கு கொஞ்சம்னு குடுக்குறான். தங்கச்சி, அக்கா கலியாணத்துக்கு ஒரு பைசா கொடுக்கலை என்று குறைபாடுகள் தலை தூக்கும்போது வார்த்தைகள் தடிக்கும்.

உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் என்று சுயபுலம்பல் ஆரம்பிக்கும்போது, நீ வளர்த்தால் ஆச்சா. நான் பொறுப்பாக நடந்து கொண்டிராவிட்டால் இப்படி அலட்ட முடியுமா என்ற பதிலடி விழும். ஒரு கட்டத்தில் கொச்சையாக உன் இச்சைக்குப் பெற்றுப் போட்டுவிட்டு,  வளர்த்தேன் வளர்த்தேன் என்று அலட்டுகிறாயே. நாய் பூனை எல்லாம் கூட பெத்தா வளர்க்காமலா இருக்கு போய்யா ஜோலியப் பார்த்துகிட்டு வரைக்கும் போய், அப்பன்காரன் மடமடவென்று குளியல் அறையிலோ, சமையல் அறையிலோ ஒரு குடம் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நீ எனக்குப் பிள்ளையில்லை, நான் உனக்கு அப்பனில்லை என்பதில் கொண்டு விடுகிறது.

தன் விருப்பத்துக்கு படிக்கவைத்து, தன் விருப்பத்தை எதிர்காலமாகத் திணித்து, தன் விருப்பத்துக்கு திருமணம் செய்து, அதற்குப் பின்னும் ‘எம்மவன் என்னைக் கேக்காம ஒரு துரும்பு கூட எடுத்துப் போடமாட்டான்’ என்று பெருமை கொள்வது பெருமைப் படக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை.

'சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அடுத்தவனை மதிக்கத் தெரியும்’ என்ற வழக்கு எத்தனை ஆழமானது. பரம்பரை பரம்பரையாக சுயத்தை இழக்கப் பழக்கி அதையே பெருமை பேசுவதன் பலன் இன்று பரவலாக அறுவடையாகிறது. இல்லையேல் பெற்று வளர்த்தேன், இன்று வயதான காலத்தில் உதறிவிட்டான் என்று சுயமிழந்து புலம்பும் நிலை ஏன் வருகிறது?

இந்த அழகில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ற, அவர்களின் உள்வாங்கும் திறனுக்கேற்ற அவர்களின் விருப்பமான கல்வி, சுயநம்பிக்கை, அப்பன் காசு கடன் என்ற எண்ணம், சமூகத்துக்காக ஏதேனும் செய்கிறேன் என்ற ஆர்வம், கட்டுப் புத்தகம் தவிர கற்றுக் கொள்ள இப்பிரபஞ்சம் என்ற தெளிவு  என்று கற்றுக் கொடுத்து,  ஆரம்பம் முதலே கண்டிப்பான நண்பனாக நெறிப்படுத்தும் பாங்கு, உற்ற வயதில் உன் வாழ்க்கையின் ஆரம்பம் இது! உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி, இது என் கருத்து மட்டுமே! முடிவு உன்னுடையது என்று வழிகாட்டும் வெளிநாட்டுப் பெற்றோரை (வெளிநாட்டிலிருக்கும் இந்தியப் பெற்றோரையும் சேர்த்து) எள்ளிப் பேச எப்படி முடிகிறது? 
(தொடரும்?)

46 comments:

பிரபாகர் said...

முதலா பார்த்துட்டு படிக்கிறேன்...

பிரபாகர்...

Sethu said...

Hello Sir. Me No. 2

வானம்பாடிகள் said...

@Sethu
No. you no one sethu! ration kadaila kallu vaikkara maathiri pona idugaila potta pinnoottam kanakkil varum:)

பிரபாகர் said...

நீங்க கேக்கிற எல்லா கேள்விக்கும் ஒரு பதில் சட்டுனு வரும் கலாசாரம்னு... அவர்களைப்பற்றிய புரிதல் இருந்தால்தானே அடுத்தவர்களைப் புரிந்துகொள்ள முடியும்?

கட்டுக்கோப்பாய் பிள்ளைகளை வளர்த்தவர்கள் மரியாதையின்றியும், கட்டுப்பாடாய் வளர்ந்தவர்கள் தகப்பனை மதிக்காமல் இருப்பதுவும் நிறைய கண்ணுற்றிருக்கிறேன்...

மீன் பிடித்து தருவதைவிட பிடிக்கக் கற்றுத்தருவதே சால சிறந்தது. சொல்லப்போனால், அவன் அவனது பிள்ளைக்கு பிடித்து தரட்டும், நான் அவனுக்கு பிடித்துத் தான் தருவேன் எனப்பேசுவது எதில் சேர்த்தியென்று தெரியவில்லை... கலாசாரம்?

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

வானம்பாடிகள் said...

ஓ!! நன்றி கார்த்திக். அப்படியே கருத்தையும் சொன்னா தெரிஞ்சிக்க வாய்ப்பா இருக்குமே!!

Sethu said...

Awesome writing.

நீங்க கடைசி பாராவில சொன்னதை இந்தியாவிலிருக்கும் பெற்றோரும் செய்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் குறைந்து இருக்க வேறு காரணங்களும் உண்டு.

இங்கு சிறு குழந்தைக்கே அவர்களது அடிப்படை உரிமைகளை பள்ளியில் (டே-கேர், pre ஸ்கூல், elementary ) சொல்லித் தருகிறார்கள். இங்கு பெற்றோர் தவறு செய்ய முற்படும் முன்னேயே உங்கள் குழந்தை உங்கள் தவறை சுட்டிக் காட்டி விடும். தன்னைக் காத்துக்கொள்ள அவசர உதவி எண்ணை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று மூன்று வயது சிறுவனுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அக்குழந்தை சுயமாக தேர்ந்தெடுக்கக் கூடிய நிலையை ஒரு சமுதாய அமைப்பு உருவாக்கியுள்ளது.

நம் குழந்தை தவிர வீட்டிற்கு வந்து விளையாடும் மற்ற குழந்தைகள் கூட ' Am I allowed to do it ? ', என்று கேட்டு செய்யும் போது, ஒரு நல்ல சமுதாய அமைப்பில் வளரக்கூடிய குழந்தையின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

ஆதலால் இங்கு பெற்றோரும் சேர்ந்தே வளர்க்கப் படுகிறார்கள்.

வானம்பாடிகள் said...

@Sethu

ஆமாம் சேது. அது தவிர்க்க முடியாதது.ஆனால் சொன்னார்போல் பெற்றோர்களும் வளரச் சம்மதிக்க வேண்டுமே:))

பிரபாகர் said...

சரியான புரிதல் இல்லாததால்,
தகப்பன் முகத்தை நேருக்கு நேர் பார்க்காத (பயம், தொன்றுதொட்ட பழக்கம்) மகன்கள், திருமணத்திற்குப் பின் பார்ப்பதே இல்லை அவன் ஒரு தகப்பனாய் ஆனபோது.

இந்த உறவில் என்ன இருக்கிறது? கடைசி காலத்தில் உணவுக்கு வழியின்றி தனிமையில் புலம்புவதைத் தவிர இப்படிப் பட்ட தந்தைகளுக்கு வேறு வழியில்லை...

பிரபாகர்...

பிரபாகர் said...

அழகாய் ஆரம்பித்திருக்கிறீர்கள்... தொடருங்கள் ஆசான். ஆர்வமாய் அடுத்ததற்கு...

பிரபாகர்...

கும்மி said...

//இந்த அழகில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ற, அவர்களின் உள்வாங்கும் திறனுக்கேற்ற அவர்களின் விருப்பமான கல்வி, சுயநம்பிக்கை, அப்பன் காசு கடன் என்ற எண்ணம், சமூகத்துக்காக ஏதேனும் செய்கிறேன் என்ற ஆர்வம், கட்டுப் புத்தகம் தவிர கற்றுக் கொள்ள இப்பிரபஞ்சம் என்ற தெளிவு என்று கற்றுக் கொடுத்து, ஆரம்பம் முதலே கண்டிப்பான நண்பனாக நெறிப்படுத்தும் பாங்கு, உற்ற வயதில் உன் வாழ்க்கையின் ஆரம்பம் இது! உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி,//

இதுவல்லவோ வளர்ப்பு முறை!

மொத்தப் பதிவும் கடைசி பத்தியில் அடங்கிவிட்டது.

dr suneel krishnan said...

அருமையான கருத்துக்கள் .இதை இன்னும் பகுத்தாய்ந்து பார்க்கலாம் .பிள்ளைகள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வந்த தேவதைகள் அல்ல ,அவர்களுக்கென்று சில திறன்கள் இருக்கிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் ,என் நண்பனின் மகன் இதை படித்தான் அவன் இன்று லட்ச லட்சமாக சம்பாதிக்கிறான் என்று சொல்லி நீயும் அதையே படி ,இது முக்கியமாக மென்பொருள் துறையில் இன்று இத்தகைய போக்கை நாம் காண்கிறோம் ,மேலும் குழந்தை வளர்ப்பை பார்க்கும் போது அதில் எத்தனை கூறுகள் சம்பந்த படுகின்றன என்பது ஆச்சர்யமாக இருக்கு ,dignity of labor- இது இங்கு பிரட்ச்ச்சனை ,ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்குமான ஊதிய வித்யாசம் பூதாகரமானது ,இதனால் நமது பெற்றோர்களிடையே stereotype behavior காணப்படுகிறது ,நம் பெற்றோர்களின் தவறுகளால் நாம் தவற விட்ட கபில் தேவ்களும் ,பீ.டி.உஷாக்களும் ,ஆனந்த்களும் ,கலாம்களும் ,ரவி வர்மாக்கலையும் ,எம்.எஸ் அம்மாக்களையும் மிக மிக மிக அதிகம் .இன்னும் இதில் யோசிக்க யோசிக்க நெறைய விஷயம் புலப்படுகிறது .பெற்றோர்களின் இத்தகைய போக்குக்கு பல சங்கிலி தொடர் காரணங்கள் தென்படுகிறது .

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

'சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அடுத்தவனை மதிக்கத் தெரியும்’ என்ற வழக்கு எத்தனை ஆழமானது.//

இதுதான் சார் மேட்டரே.

NIZAMUDEEN said...

//உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி, இது என் கருத்து மட்டுமே! முடிவு உன்னுடையது//

அலசல் கட்டுரை!
நல்ல வழிகாட்டல்!!

Sethu said...

Amazing சார். நீங்க ஒரு பெற்றோரிடம் எதிர்பார்க்கிற எல்லாமே எங்க அப்பா எங்களுக்கு இந்தியாவில் செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் ஒரு சிறு டவுன்ல் இருந்துகொண்டு, வெகு குறைந்த மாத சம்பளத்தில். அவர் தான் வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த ஊர் மற்றும் பாக்டரி இதற்கு பெரிதும் உதவியுள்ளது. நீங்க எழுதியிருக்கிறது எல்லாம் படிக்கும் போது மனதில் அப்பிடியே rewind ஆகுது.

கலகலப்ரியா said...

அட ஏன் சார்... நீங்க வேற...

தொடரும் வேறயா...

ஹூம்...

கலகலப்ரியா said...

அப்புறம் சாரே... மனுஷன்னு நினைச்ச ஒன்னு அதில்லாமப் போகும் பட்சத்தில்... அதனோட எந்த ஆக்‌ஷனுக்கும் ரியாக்‌ஷன் காட்டாதிருப்பதே... மனுஷங்களுக்கு நல்லது...

அதனால.... அப்டியே இடது கையால தள்ளி... வேலையப் பாருங்க...

இலவச ஆலோசனை...

அனுஷ்கா said...

நல்ல ஆரம்பம். தொடருங்கள்

பழமைபேசி said...

எங்க கிராமத்துல, எந்த பெற்றோரும் யாரையும் வளர்க்கலை... அப்படி அப்படியே நாங்களே வளர்ந்துட்டோம்.. வேற வழி?! இஃகி!!

பழமைபேசி said...

@Sethu

நான் எங்க ஊட்டுல மூணாவது!!!

தெய்வசுகந்தி said...

கடைசி பத்தி அருமை!. இங்கே நிறைய பேரு கலாச்சாரத்தைப் பற்றிய புரிதல் இல்லாம குழப்பிக்கறாங்களோன்னு தோணுது.

Sethu said...

பழமைபேசி said...
@Sethu

நான் எங்க ஊட்டுல மூணாவது!!!


--நானும்.

செல்வநாயகி said...

wonderful post, thank you.

அமர பாரதி said...

பின்னீட்டீங்க அய்யா. பெத்து வளத்தேன் வளத்தேன்னுக் கிட்டு. //நாய் பூனை எல்லாம் கூட பெத்தா வளர்க்காமலா இருக்கு// அதுதானே. கலக்கல். எல்லோரும் பிள்ளைகளை குறை சொல்லியே பழக்கப் பட்டு விட்டார்கள். பொதுப் புத்தி. இந்த லட்சனத்தில் ஒரு கண்ணுக்கு வெண்ணையையும் ஒரு கண்ணுக்கு சுன்னாம்பையும் தடவுபர்கள் வேறு.


கலகலப்ரியா,

//மனுஷன்னு நினைச்ச ஒன்னு அதில்லாமப் போகும் பட்சத்தில்... அதனோட எந்த ஆக்‌ஷனுக்கும் ரியாக்‌ஷன் காட்டாதிருப்பதே// புரியலயே.

சிநேகிதன் அக்பர் said...

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

Chitra said...

நிறைய யோசிக்க வைக்கும் இடுகை.

நசரேயன் said...

//

பழமைபேசி said...
@Sethu

நான் எங்க ஊட்டுல மூணாவது!!!


--நானும்.

//

இடுகையைப் பத்தி பேசாமா என்ன விளையாட்டு இது ?

Sethu said...

"இடுகையைப் பத்தி பேசாமா என்ன விளையாட்டு இது ?"

மறந்து போய்டுது.

ஆமா, எங்க 2 நாளா ஆளை காணும். எல்லாம் சுகம் தானே!

ம.தி.சுதா said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..


ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

விந்தைமனிதன் said...

இதான் செத்து செத்து வெள்ளாடுறதா!!!

பழமைபேசி said...

@நசரேயன்

அருமையான இடுகை இது.... முதல்ல படிச்சுப் பாருங்க சரியா? இந்த இமயமலை வேலை எல்லாம் ஆவாது!!

நசரேயன் said...

@பழமைபேசி

அப்பவே படிச்சிட்டேன்

நசரேயன் said...

@Sethu

நல்ல சுகம்

வானம்பாடிகள் said...

@நசரேயன்

வாங்க தளபதி. எங்க ஆளக் காணோம்.

வானம்பாடிகள் said...

@பழமைபேசி

/இமயமலை வேலை /

அதானே!! நாம யாரு? நெருப்புல்லா..ஹஹ ஹஹ்ஹ்ஹா

ரிஷபன் said...

//உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி, இது என் கருத்து மட்டுமே! முடிவு உன்னுடையது என்று //

அப்படித்தான் எங்க வீட்டுல..

Cable Sankar said...

///சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அடுத்தவனை மதிக்கத் தெரியும்’//


வெல் செட்..

ஸ்ரீராம். said...

இந்தப் பகுதி முடிக்கும்போது உள்ள வரிகள் பாராட்டப் பட வேண்டியவை. சொல்லும்போது சுலபமாக இருந்தாலும் நடைமுறையில் சற்றே கடினம். இருக்க வேண்டிய முறை அதுதான். முடிவதில்லை பலரால்.

தாராபுரத்தான் said...

கை தட்டுக்கள் காதை பொளக்கிறதுங்கோ..கேட்குதுங்களா.

வானம்பாடிகள் said...

@@நன்றி பிரபா
@@நன்றி சார்
@@நன்றிங்க கும்மி
@@நல்ல கருத்துக்கள் டாக்டர். நன்றி
@@நன்றி ஷங்கர்
@@நன்றிங்க நிஜாமுதீன்
@@வாவ். சந்தோஷமா இருக்கு சேது:)

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

// அட ஏன் சார்... நீங்க வேற...

தொடரும் வேறயா...

ஹூம்...//

பின்ன நீ பண்ண வேண்டிய வேலை இது. நான் பண்ணப் பார்க்கிறேன்.

/இலவச ஆலோசனை.../

வாலு:))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க அனுஷ்கா

வானம்பாடிகள் said...

@@அதனால என்ன ஆயிட்டுதுங்க. அந்த சுதந்திரம் தப்பா பயன்படுத்தலைங்களே. சொல்லாம சொல்லிக் குடுத்த பாடம் இல்லையா அது. நன்றிங்க பழமை.

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க தெய்வசுகந்தி
@@நன்றிங்க செல்வநாயகி
@@நன்றிங்க அமரபாரதி
@@நன்றிங்க அக்பர்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க தளபதி
@@நன்றிங்க ம.தி.சுதா.

வானம்பாடிகள் said...

விந்தைமனிதன் said...

//இதான் செத்து செத்து வெள்ளாடுறதா!!!//

நீங்க எப்படி கேட்டீங்கன்னு புரியலைங்க. ஆனா பிள்ளை வளர்ப்பு அப்படித்தான்.

வானம்பாடிகள் said...

@@சந்தோஷமா இருக்கு ரிஷபன்.நன்றி
@@நன்றி கேபிள்ஜி
@@நன்றி ஸ்ரீராம். இப்போ இப்படி இருக்கலாம். மாறியாகணும். மாறும்.
@@அண்ணே நன்றி.