Sunday, November 14, 2010

கேரக்டர் ராம்ஜி...

நம் எல்லோர் வாழ்விலும் ஒரு காலகட்டத்தில் திரும்பிப் பார்க்கையில் நம்மையறியாமலே நமக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நபர் இருப்பார். ஏதோ ஒரு வகையில் அவரின் தாக்கம் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள தூண்டுகோலாயிருந்திருக்கும். வேலையில் சேரும் வரை மாவட்ட நூலகத்தில் வாழ்க்கை என்றிருந்த காலம். வேலை கிடைத்தாலும் எதையோ பறிகொடுத்த தவிப்பிருந்தது. ஓரிரு மாதங்கள் அலுவலகம் பழக்கமாகி ஒரு நாள் கண்ணில் தென்பட்டது தலைமை அலுவலக ஊழியர் நூலகம் என்ற அறிவிப்பு. மெதுவே எட்டிப் பார்த்தால் சுவற்றோரம் எட்டடி உயர தேக்கு அலமாரியில் கண்ணாடிக்குப் பின்னால் பழுப்பேறி தடி தடியான பொக்கிஷங்கள். வெள்ளைக்காரன் விட்டுப் போனவை. அட்டை கிழிந்து பக்கம் தொங்கியபடி பழைய ஆங்கில நாவல்கள். புதுசும் பழசுமாய் தமிழ், தெலுங்கு,கன்னட, மளையாள நூல்கள்.

பத்தடி மேசையில் இறைந்து கிடந்த புத்தகங்களின் நடுவே அமர்ந்திருந்தார் அந்த மனிதர். தயங்கித் தயங்கி உறுப்பினராகப் படிவம் கேட்டேன். அமைதியாக எடுத்துக் கொடுத்த படிவத்தை நிரப்பி, மேலதிகாரி கையெழுத்துடன் அடுத்த நாள் கொடுத்து உறுப்பினராகி, கிடைத்த கிழிந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி ஓரிரு வாரம் சென்றது. திரும்ப வந்திருந்த புத்தகங்களில் ஏதேனும் தேறுமா என்று தேடுகையில் மொழிவாரியாக பிரித்து அடுக்கியது அவருக்கு வித்தியாசமாகப் பட்டிருக்க வேண்டும். முதல் முறையாக பேசினார். பெயர், அலுவலகம் விசாரித்து, தானும் அக்கவுண்ட்ஸ் என்றும் எமெர்ஜென்ஸி பீரியடில் ஸ்பெஷல் செல்லில் பணிபுரிவதாகவும் கூறினார்.

அடுத்து வந்த நாட்களில் பழகி, அன்றாடம் புத்தகம் அடுக்க உதவி, ஒன்றாகக் கிளம்பியபோது இருவரும் அயனாவரத்திலிருந்து வருவது தெரிந்தது. ஒரே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து காத்திருக்கையில் குடும்பம் குறித்த விசாரணையில் அடுத்த ஆச்சரியம் பூத்தது. எனக்கான வினோத அனுபவத்தின் முதல் அனுபவம் அது. என் தந்தையுடன் பணி புரிந்து என் சக ஊழியனாக, எனக்கு அதிகாரியாக, நான் அவர்களில் ஒரு சிலருக்கு அதிகாரியாக என்று இன்னமும் தொடரும் ஓர் சங்கடம் அது. விபரம் புரியாத வயதில் தொலைத்த தந்தையைப் பற்றி மனம் நிறைய சந்தோஷத்துடன் நினைவு கூறக் கேட்பதைப் போல் சுகமென்ன இருக்க முடியும்?

ராமச்சந்திரராவ் அப்படித்தான் எனக்கு அறிமுகமானார். ஆறடிக்கும் மேல் உயரம். செக்கச் செவேலென்ற நிறம். ராமனை வர்ணிக்கும்போது உள்ளங்காலும் கையும் தாமரை என்பார்களே அப்படி ஒரு சிவப்பு. சற்றே சிறுத்த தலை. முப்பத்தைந்து வயதிலேயே பின்பக்கம் மட்டும் கொஞ்சம் முடி. ஒல்லியான ஆனால் வலிமையான தேகம். காலில் ஸ்பிரிங் கட்டியதுபோல் துள்ளித்துள்ளி வேகமான ஒரு நடை. சில மாதங்களில் எங்கள் அலுவலகத்துக்கே மாற்றலாகி வந்தார்.

தினசரி அவருக்கு உதவுவதும் ஒன்றாய்க் கிளம்புவதும் வேறொரு விதத்தில் அனுகூலமானது. அலமாரியில் வைத்தால் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள் என்று மேசை அறைக்குள் இருந்து புதிய புத்தகங்கள் கிடைத்தது. ஆங்கிலப் புத்தகம் படி என்று முதன் முதலில் தேடி எடுத்துக் கொடுத்ததுதான் ‘Sesame and Lillies'. அதைப் படிக்க வைத்து, விவாதித்து, புரிய வைத்து ஆங்கில நூல்களின்பால் பைத்தியமாக்கிய புண்ணியவான்.

 சில மாதங்களில் அமீபியாஸிஸ் வந்து உடல் நிலை சரியில்லாமல் போக, துணைக்கு நான் காலையில் அவர் வீட்டிற்குப் போய் அவருடன் கிளம்பி, மாலையில் அவர் வீட்டில் விட்டு என் வீடு சேர்வது வழமையாயிற்று. அவர் நண்பர் ஒரு டெய்லர் இருக்கிறார். புதியதாகத் துணி வந்தால் ‘ராவ்! பாருய்யா என்பார்’. அலுவலகம் செல்லும் அவசரத்திலும் ஒரு துணியைத் தேர்ந்தெடுத்து விட்டு கிளம்பினால் மதியம் நாங்கள் இருவரும் அரை நாள் சி.எல்.

வீட்டுக்கு வரும் வழியில் தைத்து ரெடியாயிருக்கும் சட்டையை வாங்கிக் கொண்டு சாப்பிட்டு டெய்லரோடு கிளம்பினால் ஏதோ ஒரு புதிய ஆங்கிலப் படம் நிச்சயம். சென்னையின் பிரபல தியேட்டர்களில் படம் ரிலீசான முதல் இரண்டு நாட்களில் வார் பிக்சர் போட்டு 10 நிமிடம் வரை இவர்களுக்காக இரண்டு அல்லது மூன்று டிக்கட்டுகள் ப்ளாக்கில் விற்பவர்கள் வைத்திருக்கும் அளவு பிரசித்தம். ஒரு முறை ப்ளூ டைமண்டில் பத்துமணிக் காட்சி, ஆனந்தில் மாட்னி, தேவியில் மாலைக் காட்சி முடித்து காசினோ தியேட்டரில் இரவுக்காட்சியும் பார்த்தது உண்டு.

‘உங்கப்பாவிடம் கற்றுக் கொண்ட பைத்தியம் இது’ என்று  வகை வகையாக பேனா வாங்கியதைக் காட்டியபோது இழந்த என் இளம்பிராயம் மீண்டது எனக்கு. பாரிமுனையில் பென்ஸ் கார்னரின் நிரந்தர வாடிக்கையாளர்கள் நாங்கள். ஒரு கட்டத்தில் ரெடிமேட் பேனாக்கள் சலிப்பேற்படுத்த பூக்கடை வாசலில் பால் பேனா விற்பவர் ஒருவரைப் பிடித்து எங்களுக்கான பேனாக்களை டிசைன் செய்து வாங்கிய காலம் அது.

புதியதாக 20ம் எண் தடத்தில் எக்ஸ்ப்ரஸ் பஸ் சர்வீஸ் விட ஆரம்பித்ததும், ஒன்பது ஐம்பத்தைந்துக்கு பஸ் பிடித்தால் பத்து ஐந்துக்கெல்லாம் அலுவலகம் சேர்ந்துவிட முடிந்தது.  ‘நாளையில இருந்து ரெகுலர் பஸ்ல போலாம்யா. தினம் 2ரூபாய் வேஸ்ட்’ என்பார். எட்டரைக்கெல்லாம் அவர் வீட்டில் இருப்பேன். ‘போகலைய்யா. தோ கிளம்பிடலாம்’ என்று காலைக் கடன் முடித்து, குளித்து, பூசை செய்து சாப்பிட்டு அதே எக்ஸ்ப்ரஸில்தான் கிளம்புவோம்.

சில நாட்கள் மாலையில், ‘இன்னைக்கு நடந்து போலாம்யா வீட்டுக்கு. பஸ்ஸுக்கு குடுக்கிற காசில் ஒரு ஆப்பிள் சாப்பிட்டபடி நடந்தால் போச்சு’ என்று கிளம்புவார். மூர்மார்க்கட்டில் இரண்டு ஆப்பிள் வாங்கிக் கொறித்தபடி தாசப்ரகாஷ் வரை நடந்ததும், ‘லேசா பசிக்குது வா! என்று க்ரீன்பீஸ் மசாலா, ரோஸ்ட், காஃபி என்று கொள்ளைக் காசு தண்டம் அழுது, ‘ஹெவியாயிடிச்சில்ல. ஆட்டோ பிடி’ என்று வீடு சேர்வோம் பல நாள்.

எப்படியோ, பத்மா சுப்ரமணியம் குழுவில் வயலினிஸ்டாக இருந்த பாபு என்பவர் இவருடைய அத்தைமகன் என்பது தெரிய வந்ததும் ஆஃபீஸிலிருந்து அடிக்கடி மந்தவெளி பஸ் ஸ்டேண்ட் எதிரில் இருந்த மேன்ஷனுக்கு போவது என்றானது. பிரபல வயலின் வித்துவான் டி.என். கிருஷ்ணனின் சீடர் அவர். போதாத காலத்துக்கு நம்மாளுக்கு வயலின் கற்றுக் கொள்ள ஆசை பிறந்தது. என்கேயோ சொல்லி, ஒரு ஸ்டாடிவேரி வயலினை வாங்கி, கச்சேரி வீதியில் பிரித்து ஒட்டி, வயலினும் ரெடியானது. வாரம் ரெண்டு நாள் மேன்ஷனில். ஞாயிறு காலை பாபு இவர் வீட்டில் வந்து சாப்பிட்டு, வயலின் கற்றுக் கொடுத்து, இரவு உணவு முடித்து திரும்புவது என்று ஏற்பாடானது.

பூவோடு சேர்ந்த நாரும் என்பது போல் நானும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, சரளி வரிசை, ஜண்ட வரிசை தாண்டி, மோகன நின்னுக்கோரி தந்த தைரியத்தில், நாட்டக் குறிஞ்சி ‘சல மேல ஜேசேவய்ய’வில் ஸ்வரம் வராமல் அவர் வாயிலிருந்து எச்சில் வயலினில் வழிந்ததுதான் கண்டபலன். வயலின் வாசிக்க வந்ததோ இல்லையோ, ரயில்வே கன்ஸஷன் டிக்கட் ரிஸர்வ் செய்து கொண்டு போய் கொடுக்கும் சாக்கில், என்னால் நாட்டியம், கச்சேரி ஓசியில்  மேடையில் கேட்க முடிந்தது.

அருமையான ஆங்கிலத்தில் அடித்தம் திருத்தம் இன்றி எழுதுவார். அதுவும் ஸ்க்ரிப்ட் ஃபாண்ட் போல் வெகு அழகாக இருக்கும் எழுத்து. பல சட்ட நுணுக்கங்களைப் பற்றி சொல்லிச் சொல்லி எனக்குள் என்னையறியாமல் பல நுணுக்கங்களை ஏற்றிவிட்ட புண்ணியவான். அதன் மீதான ஆர்வமே என் முன்னேற்றத்துக்குக் காரணம் என்பதை மறுப்பதற்கேயில்லை. பின்னாளில் அவருக்கு அடுத்த பதவியில் இருக்கையில் அவருடனான வாதத்தின் போது ‘ங்கபார்ரா! நான் சொல்றப்ப வாய்ல ஈ பூந்தது தெரியாம கேட்டுண்டிருந்த பய எனக்கு சொல்லித்தரியா?’ என்று சிரிக்கையில் ஒரு வாஞ்சையிருக்கும்.

அத்தனை திறமையிருந்தும் ஏனோ அவரால் அலுவலகப் பரிட்சையில் தேற முடியாமல் போய்விட்டது. நன்றாகத் தயார் செய்திருக்கும் காலங்களில் வெள்ளம் என்று தள்ளிப் போய்விடும் பரீட்சை. அல்லது இவருக்கு உடம்புக்கு முடியாமல் போகாமல் இருந்து விடுவார். ஆயினும் குறையொன்றுமில்லை மனோபாவம்தான்.

திநகர் மகாலக்ஷ்மி வீதியில் இருந்த குருஜி ஸ்வாமிகள் இவரது அத்தை மகன். அவருடனான அறிமுகம் என் சகோதரியின் வாழ்க்கையில் ஒரு வரம் மாதிரி நிகழ்ந்த நிகழ்வு. பின்னாளில் அவர் நீலாங்கரை அருகில் ஆஸ்ரமம் அமைத்துக் கொள்ள ரிட்டையர் ஆனபின் இவரும் அங்கே வீடு பார்த்துக் கொண்டு போய்விட்டார். அவர் மறைவுக்குப் பிறகு அவர் சமாதி, மற்றும் ஆலயத்தை இவர் பார்த்துக் கொள்வதாகக் கேள்வி. 

பார்த்து சில வருடங்களானாலும், இன்றைக்கு ஏதோ எழுதும் அலுவலகக் குறிப்புக்கள் பாராட்டப்படும்போதும், நல்ல சங்கீதத்தை ரசிக்கும்போதும்,  படிக்க புத்தகங்களைத் எடுக்கும்போதும் நன்றியுடன் நினைக்கத் தவறியதேயில்லை. இது அவர் கொடுத்த பிச்சை. ஒரு வேளை தந்தையிருந்து சொல்லிக் கொடுத்திருந்தாலும் வராத ரசனை, நண்பனாய் இருந்து சொன்னதால் பச்சென்று பிடித்துக் கொண்டதோ என்னவோ.

அவர் மனைவி திருமதி காவேரிபாய் அவருக்கு கிடைத்த பொக்கிஷம். ஜோசியத்தில் அபார தேர்ச்சி. நன்றாகப் பாடுவார். எனக்குச் சாலப் பரிந்தூட்டிய தாய் அவர். அவர் கை ரசம் போல் இன்று வரை சாப்பிட்டதில்லை.

‘ராம்ஜி சார்! என் நன்றிகள்’

51 comments:

ஈரோடு கதிர் said...

முதலில் 400க்கு வாழ்த்துகள் அண்ணே!

Sethu said...

Congrats for 400

கலகலப்ரியா said...

இப்படியான அனுபவங்கள் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும் சார்..

கலகலப்ரியா said...

||பின்னாளில் அவருக்கு அடுத்த பதவியில் இருக்கையில் அவருடனான வாதத்தின் போது ‘ங்கபார்ரா! நான் சொல்றப்ப வாய்ல ஈ பூந்தது தெரியாம கேட்டுண்டிருந்த பய எனக்கு சொல்லித்தரியா?’ என்று சிரிக்கையில் ஒரு வாஞ்சையிருக்கும். ||

பின்னாளில் உங்களப் பத்தி நான் இப்டிச் சொல்லணுமோ... ம்ம்... பாப்பம்..

வானம்பாடிகள் said...

@கலகலப்ரியா

/பின்னாளில் உங்களப் பத்தி நான் இப்டிச் சொல்லணுமோ... ம்ம்... பாப்பம்./

வாய்க்கணும். சந்தோஷமா இருக்கு:))

வானம்பாடிகள் said...

@ஈரோடு கதிர்
நன்றி கதிர்

வானம்பாடிகள் said...

@Sethu
நன்றி சேது

வானம்பாடிகள் said...

@கலகலப்ரியா

ஆமாம்மா.

பிரபாகர் said...

இருநூறை நெருங்க திணறிக்கொண்டிருக்கும் சிஷ்யனின் வாழ்த்துக்கள் நானூறை நெருங்கியிருக்கும் என் ஆசானுக்கு...

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.எனக்கும் அந்நாளில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து..வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திய அம்பத்தூர் லைப்ரரியன் ராமானுஜம் என்பவரை ஞாபகப் படுத்தி விட்டீர்.நன்றி.
400க்கு வாழ்த்துகள்

பிரபாகர் said...

//விபரம் புரியாத வயதில் தொலைத்த தந்தையைப் பற்றி மனம் நிறைய சந்தோஷத்துடன் நினைவு கூறக் கேட்பதைப் போல் சுகமென்ன இருக்க முடியும்?//

ஆஹா, இந்த வரிகளைப் படித்து கொஞ்சம் மனதுள் அசைபோட்டு உள்வாங்கிப் பின் தொடர்ந்தேன்.

//‘உங்கப்பாவிடம் கற்றுக் கொண்ட பைத்தியம் இது’ என்று வகை வகையாக பேனா வாங்கியதைக் காட்டியபோது இழந்த என் இளம்பிராயம் மீண்டது எனக்கு. //

பேனா வாங்கும் பழக்கம் இந்த சிஷ்யனுக்கும் இருக்கிறது என எண்ணும்போது கொஞ்சம் மகிழ்ச்சியாயிருக்கிறது..

//‘ங்கபார்ரா! நான் சொல்றப்ப வாய்ல ஈ பூந்தது தெரியாம கேட்டுண்டிருந்த பய எனக்கு சொல்லித்தரியா?’//

குருவை மிஞ்சிய சிஷ்யனாக என் ஆசானால் மட்டும் தான் முடியும்...

எழுதிய கேரக்டர்களில் மிகக் கவர்ந்தவர் என் ஆசானின் தந்தையாருக்கு அடுத்து இந்த ராம்ஜி அவர்கள்தான்... என் ஆசானுக்கே ஆசான் என்பதாலோ?

பிரபாகர்...

பிரபாகர் said...

இப்படித்தான் எழுதவேண்டும் என பாடம் நடத்துவதற்கேற்ற நடை... அழகிய விவரிப்பு... வயலின் கற்றலைச்சொல்லும் போது மெலிதான நகைச்சுவை... நடந்து சென்ற மிச்சத்தில் ஆப்பிள் என ஆரம்பித்து ஆட்டோவில் செல்லுவது... ஆசான், என்ன சொல்ல? இதையெல்லாம் படிக்கும்போது மனம் லேசாகி, என்னவோ செய்கிறது. உங்களின் அறிமுகம், எழுத்தைப் படிப்பது என் பாக்கியம்...

பிரபாகர்...

ராஜ நடராஜன் said...

நானூறா?வாழ்த்துக்கள் அண்ணா!

வானம்பாடிகள் said...

@ராஜ நடராஜன்

நன்றி. Sesame and lillies padichchingala:)

philosophy prabhakaran said...

இது வழக்கமான உங்கள் நடையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டிருப்பது போல தெரிகிறது.... பர்சனல் டச் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நானூறா....வாழ்த்துக்கள் சார்.
ராம்ஜி அய்யாவை நன்றியுடன் நினைத்து வாழ்த்தி, திரும்ப்வும் மற்றுமொரு படி மேலேறிவிட்டீர்கள்.

இராமசாமி கண்ணண் said...

நன்றி சார்.. நான் கொடுத்து வெச்சிருக்கேன் இன்னொரு நல்ல மனிதரை உங்க மூலமா தெரிஞ்சிக்க.

ஆரூரன் விசுவநாதன் said...

உங்க கேரக்டர்களைப் படிக்கும்போதெல்லாம், இப்படியான மனிதர்களையெல்லாம் நாம் சந்திக்க வில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது.

வாழ்த்துக்கள்

LK said...

அய்யா நானூறா? இல்லை நானூற்று ஐம்பதா ???

அருமையான அனுபவங்கள்

ஆர்.ராமமூர்த்தி said...

முதலில் நானூறுக்கு வாழ்த்துக்கள்.இதே போல் தான் நான் ஃப்ளூட் கத்துக்க ஆரம்பிச்சு, சரளி, ஜண்டை வரிசை,அலங்காரம் முடித்து,
‘கல்யாண வசந்தம்’ வர்ணம் வரை வந்தேன். கடைசி வரை அந்த கமகம் வரவே இல்லை என விட்டு விட்டேன்.
பழைய நினவுகளை கிளறியதற்கு நன்றி!!

“ஆரண்ய நிவாஸ்”

முகிலன் said...

நல்லாருக்கு சார். நானூறுக்கு வாழ்த்துகள்.

sriram said...

வழக்கம் போல சூப்பரா இருக்கு பாலாண்ணா..
நான் ஃபாலோயர் லிஸ்ட்ல கிடையாது, ஆனா கண்டிப்பா ஃபாலோ பண்றேன், எல்லா இடுகைகளையும் (கவுஜ தவிர்த்து) படிக்கிறேன். கேரக்டர் பதிவு அடிக்கடி எழுதுங்க பாலாண்ணா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ரிஷபன் said...

வழக்கமான உங்கள் ‘கேரக்டர்’ இல்லை.. முழுக்க முழுக்க நெகிழ்ச்சியும் கலவையான உணர்வுகளுமாய் பர்சனல் டச்! எங்கள் ஊர் லைப்ரரியில் நான் பார்த்த ‘ராஜு’ ஞாபகம் வந்தார். அப்படியே லைப்ரரிக்குள் போய் வந்த திருப்தி முதல் பாராவில்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்லதொரு மனிதர் உங்கள் வாழ்வில்.........

dr suneel krishnan said...

நெகிழ்ச்சியான விவரிப்பு :)

நர்சிம் said...

400 க்கு வாழ்த்துகள்.

நான் சந்தித்த நான்கைந்து கேரக்ட்டர்களை ஒன்றாக உருக்கி ஒரு கேரக்ட்டர் என்பது போல் இருக்கிறது.. பிரமிப்பாய் இருக்கிறது உங்கள் நெகிழ்வான நடை.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நானூறுக்கு வாழ்த்துகள் மா.
நான் இப்போதே சொல்கிறேன் ,எனக்கு மனதுக்குப் பிடித்த தோழர் இந்தப் பதிவில் எழுதுகிறார். மனதைத் தொடும் மனிதர்கள் அரிது.வேறு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

சே.குமார் said...

உங்கள் அன்பை எழுத்தில் அழகாய் பதியமிட்டிருக்கிறீர்கள் ஐயா...
நேசத்தை சொல்லும் போது பேசும்போது நமது மனசுக்குள் சொல்லவொன்னா சந்தோஷம் வரும். அது இங்கு அப்படியே தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

400 க்கு வாழ்த்துகள் சார்.

கேரக்டர் வழியாக அறிமுகமாகும் மனிதர்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். அற்புதமான நடையில் இந்த மனிதர்களை வாசிப்பது சுகானுபவம். நன்றி பாலா சார்.

VISA said...

400 க்கு வாழ்த்துகள் சார்.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒரு திரைக்கதையை போல் நகரும் வர்ணனைகளுடன் கூடிய நடக்கும், ராம்ஜி சாருக்கும் என வந்தனங்கள்..

//இன்னைக்கு நடந்தே போகலாம் வீட்டுக்கு//..சுவாரஸ்யமும், அன்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...

காமராஜ் said...

பாலாண்ணா....
ஒரு மனிதனின் சூழல் எப்படியோ அப்படியே செயல்களுமாகிப்போகும். புத்தகம் இசை அலுவலக நுணுக்கம் எல்லாம் அடக்கிவைத்த பொக்கிஷம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.இவ்வளவு நாளா தெரியாத ஒரு தகவலையும் சொலிட்டீங்க.வயலின் வாசிப்பீங்களா?. உங்கள் கையிலும் ரசம் மணக்குதண்ணா.

காமராஜ் said...

அண்ணா நாணூறா. க்ரேட்.
வாழ்த்துக்கள் அண்ணா.

K.B.JANARTHANAN said...

நெகிழ வைக்கிறது. இப்படி ஒரு வழிகாட்டி எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. வாய்ப்பை எல்லாரும் உங்களைப்போல பயன் படுத்துவதுமில்லை.

dheva said...

400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!

வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்....மனிர்களை படித்தலும் அவர்களின் அருமை உணரலும். உங்கள் உணர்வினை எங்களுகு எழுத்தாக்கி விருந்து படைக்கிறீர்கள்....உங்கள் கேரக்டர்...பக்கத்தின் தீவிர ரசிகனாயிருப்பதில் சந்தோசமடைகிறேன் அண்ணா....!

வானம்பாடிகள் said...

@dheva
பதிவு நானூறு இல்லை. ஃபாலோயர்:)

மணிஜீ...... said...

அண்ணா ! என் நன்றிகளும்...ஒரு நல்ல இடுகைக்காக

Mahi_Granny said...

நல்ல குரு அமைந்தது கூட கொடுப்பினை தான் . குருவுக்கும் சீடருக்கும் வாழ்த்துக்கள்

Sethu said...

அடடா சார்! என்ன ஒரு அழகான மொழி நடை உங்களது. காலையில் எழுந்து இதப் படிச்சப்போ, ஒரு தனி சுகானுபவமே! அருமை சார்.

Mrs.Menagasathia said...

400க்கு வாழ்த்துகள் சார்!!

ஈரோடு கதிர் said...

அசத்தல்

கேரக்டர் வரிசையில் இது கிரீடம்.

அனுபவித்து ரசித்து படித்தேன்

எழுத்து புகுந்து விளையாடுகிறது..

400 என்ன 4000 பேர் தொடர தகுதியான வலைப்பூதான்

நல்ல பகிர்வுக்கு நன்றி அண்ணா!

தாராபுரத்தான் said...

தொய்வின்றி தொடரட்டும்ங்க..

சூர்யா ௧ண்ணன் said...

400 க்கு லேட்டான வாழ்த்துகள் தலைவா!.. (நேத்து லீவு!..)

ஸ்ரீராம். said...

வழக்கம் போல அருமையான கேரக்டர் பதிவு.
நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மோகன் குமார் said...

அருமை. 400 Followers-க்கு வாழ்த்துக்கள்

THOPPITHOPPI said...

பல வலைத்தளங்களில் உங்கள் பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன் இன்றுதான் எனது முதல் வருகை ஒவ்வொரு பதிவும் அருமை

வானம்பாடிகள் said...

@@நன்றி பிரபா
@@நன்றிங்க பிலாசபி பிரபாகரன்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி இராமசாமிகண்ணன்
@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க LK 400 followers:)
@@நன்றி ராமமூர்த்தி சார்:) ஆஹா சேம் ப்ளட்
@@நன்றி முகிலன்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி ரிஷபன்
@@யோகேஷ்
@@நன்றி டாக்டர்
@@நன்றி நர்சிம்

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க வல்லிசிம்ஹன்
@@நன்றிங்க சே.குமார்
@@நன்றிங்க சரவணக்குமார்
@@நன்றி விசா
@@நன்றி காமராஜ்:))
@@நன்றிங்க செந்தில்
@@நன்றி தேவா
@@நன்றி மணிஜி.

வானம்பாடிகள் said...

@@நன்றி மஹி_க்ரான்னி
@@நன்றி சேது
@@நன்றிங்க மேனகா
@@நன்றி கதிர்
@@நன்றி அண்ணா
@@நன்றி சூர்யா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி மோகன்குமார்
@@நன்றிங்க தொப்பி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

பத்மா said...

நன்றி சொல்லவும் ஒரு பக்குவம் வேணும்

ரோஸ்விக் said...

இந்த மாதிரி நண்பர்கள் குருவாகவும்.... குரு நண்பனாகவும் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் பாலாண்ணே.