Saturday, December 25, 2010

கேரக்டர்-தலைவர்...

தானே உட்கார்ந்த தானைத் தலைவர்னு ஒரு காமெடி பீஸ் பார்த்து சிரிச்சோம்ல. அப்படி தன்னைத் தானே தலைவர்னு சொல்லிக் கேட்க ஆசைப்பட்ட மனுசன் நம்ம தலைவர். வில்லங்கமான காமெடி பீசு. ஒரு புரியாத புதிரும் கூட.

‘அந்தக் காலத்துல நான் ரோட்ல எறங்கி நடந்தா நான் தெரு முனைக்கு போவுற வரைக்கும் பார்ப்பாளுங்க. ‘சார்பட்டா’ பரம்பரை குத்துச் சண்டை வீரன். பாடி அப்படி இருக்கும். அப்படியே அடிச்சி பார்ப்பாங்க’ என்று அலப்பறை செய்யும்போது ஆறடிக்கும் மேலான உருவம். அகலமான முகம். எண்ணை தடவி பஃப் எடுத்து வாரிய முடி. முள்ளம் பன்றி முதுகு போல் முடியடர்ந்த காதுகள். பூதக்கண்ணாடியை கண்ணில் மாட்டினாற்போல் கனமான கண்ணாடி. ‘பாதி பரமசிவம்’ வேறு. பாக்ஸிங்கில் நசுங்கி காதுக்கும் காதுக்கும் பரந்த மூக்கு. மீசை மழித்திருந்தாலும், ஷேவிங் ப்ரஷ் சொருகினார்போல் முடியடர்ந்த மூக்கு. தடித்துப் பருத்த உதடுகள். நெற்றியில் சாந்து வைத்து அதன் மேல் அளவாக வைத்த குங்குமம்.

காலர் இருப்பதால் கழுத்தென்று ஒன்று இருக்கலாம் என ஊகிக்கலாம். பானை வயிறு. ஒரு கை அரை மடித்து மறுகை அவிழ்ந்து பட்டன் போடாத முழுக்கை சட்டை. வேட்டி. யானை அடியெடுத்து வைப்பது போல் நிதானமான வித்தியாசமான நடை. தமிழ் ஆர்வலர். அலுவலகத்தின் இரண்டு தொழிற்சங்கங்களில் ஒரு சாத்வீக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். ஆனால் தலைவர் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆசை.

 மிகவும் நிதானமான பேச்சு. தொழிலாளர் பிரச்சனைகளைக் குறித்த ஆர்வம் அதிகம். ஆனால் பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்ற குறைக்கு மட்டும் உடனே கிளர்ந்து எழுந்து விடுவார் தலைவர். ‘வாங்கம்மா! அதிகாரியும் பெண் தானே! போராடினால்தான் இதற்கு விடிவு என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அணி திரட்டிக் கொண்டு செல்வார். அதிகாரியின் அறை வாயிலில் நிறுத்திவிட்டு, முதலில் நான் போய் சொல்கிறேன். பிறகு அழைக்கிறேன் என்று தான் மட்டும் செல்வார்.

 உள்ளே நுழைந்ததும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, கத்தைக் கடுதாசி அடங்கிய மேற்சட்டைப் பையில் தேடி, மஞ்சள் ஊறிய ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். காஞ்சீவரம், அல்லது மதுரை அல்லது ஏதோ அம்மனுக்கு பிரசித்தமான ஊர் பேர் சொல்லி, அங்கு போயிருந்தேன். உங்கள் பேரில் அர்ச்சனை செய்த பிரசாதம்மா, என்று நீட்டுவார். ‘அடிங்கொய்யால’ என்று நினைத்தாலும் வேண்டாமென்றா சொல்ல முடியும். பிறகு தொழிற்சங்க தலைவராவார். ஆரோக்கியம்,அது இது என்று ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டு, அம்மா நிர்வாகத்தில் தொழிலாளர் எல்லாம் ‘குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா’ மன நிலையில் இருக்கிறார்கள்.

 பெண்கள் கழிப்பறையில்தான் சில நேரம் தண்ணீர் வருவதில்லை. நீங்களும் ஒரு பெண் என்பதால் அந்த கஷ்டம் புரியும்மா. பார்த்து சரி பண்ணனும்மா. வரட்டுங்களா என்று கிளம்புவார். எப்போது வந்தாலும் இந்தப் பிரச்சனையே சொல்லுவதாலோ என்னமோ அதைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் இழு இழு என்று இழுத்துவிட்டு வெளியே வந்து, ‘கோவிச்சிக்கிட்டாங்க. ஏன் தினம் வந்து பார்க்கறதில்லைன்னு. நம்ம மேல ஒரு தனி மரியாதை. காஃபி சாப்பிட்டுதான் போகணும்னு கம்பெல் பண்ணாங்க. பிரச்சனைய சொல்லிட்டேன். அவங்களே தலைமை எஞ்சினியரை கூட்டிட்டு வந்து பார்த்து சரி பண்றேன்னு சொல்லிட்டாங்க என்பார்.

 அது என்னமோ நடக்கிற போதுதான் நடக்கும். ஆனாலும், போட்ட போட்டில் அரண்டு போய் சரி பண்ணிவிட்டதாக அலட்டிக்காமல் சொல்லுவார். அவர் செக்‌ஷனில் பெண்கள் அதிகம். அவ்வப்போது ஒரு ரவுண்ட் வந்து நூறு ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா என்று கேட்டு டரியலாக்குவார். இருந்தாலும் இல்லவே இல்லை என்று மறுத்து விடுவார்கள். அசந்து மறந்து இருக்கு என்றுவிட்டால், படக்கென வேஷ்டியை ஒதுக்கி பட்டாபட்டி நிஜாருக்குள் 100ரூ தேடும் எழவை யார் சகிப்பார்கள்?

 தபால் வாங்கி அனைத்து எழுத்தர்களுக்கும் கொடுக்கும் வேலை இவருடையது. அய்யா ரிஜிஸ்டருடன் எழுந்தாலே ஒருவருக்கு ஒருவர் கூப்பிட்டு உஷாராகிக் கொள்வார்கள். வேலை மும்முரத்தில் இருந்தால் கண் தெரியாத சாக்கில் கன்னத்தில், மார்பில் இடித்துவிடுவார். இதற்காகவே, அவர் தபாலை எடுக்கும்போது ரிஜிஸ்டரில் இருக்கும் மற்ற தபால்களை உருவி விட்டு விடுவார்கள். அது காற்றுக்கு பறக்காமல் ஓடி ஓடி இவர் பிடிப்பதற்குள் சம்பந்தப் பட்ட எழுத்தர் அவர் தபாலுக்கு கையொப்பமிட்டு விடுவார்.

 எல்லார் டேபிளிலும் இப்படி நடந்தாலும் இது எப்படி சாத்தியம் என்று யோசித்ததே இல்லை. தமிழ்ப் பாடல்களில் கூட அபிராமி அந்தாதி மாதிரி பெண் தெய்வங்களின் பாடல்கள் அத்துப்படி.ஆனாலும் பேசுகையில் மனைவி குறித்து மிகவும் சிலாகித்து, ஒரு பெரிய கொடுப்பினை என்ற அளவில் பேசுவதால் நல்ல மரியாதையும் இருந்தது. பல இலக்கிய கூட்டங்களில் ப்ளேடு போட்டாலும், ஒரு திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசிய பேச்சுக்கு ஈடு இணையே இல்லை.

 விடாப் பிடியாக மைக்கைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துரை என்ற போதே அவரவர்க்கும் கழுத்து தொங்கிவிட்டது. கலியாண வீட்டில் அரசியல் வியாதிகள் பேசுகிறேன் பேர்வழி என்று எதிர் கட்சியைக் கிழித்து ஒட்டி எப்படியோ ஒரு லிங்கில் அதைப்போல் மணமக்கள் என்று முடிப்பார்களே அதெல்லாம் இதற்கு முன் கால் தூசி பெறாது.

 ‘பெரு மதிப்பிற்குறிய அதிகாரிகளே, சக ஊழியர்களே, சகோதர சகோதரிகளே, மற்றும் பெரியோர்களே தாய்மார்களே! செல்வன்....திருநிறைச் செல்ல்வி.... அவர்களின் இந்த இனிய திருமண நாளில் அவர்களை வாழ்த்தி உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்........மணமக்கள் மனமொத்த தம்பதிகளாக வாழவேண்டும். இதற்கு எடுத்துக் காட்டாக என் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கு கூற ஆசைப்படுகிறேன். என் முதல் மனைவி அவர்கள் இறக்கும் தறுவாயில் என் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார்கள்.’

‘என்னிடம், தனக்குப் பிறகு தனியாக இருக்கக் கூடாது. உடனடியாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு உயிர் நீத்தார். அவருக்கு கொடுத்த வாக்குப்படியே நானும் அவர் இறந்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துக் கொண்டேன். என் இரண்டாவது மனைவியும் சிறந்த குடும்பத் தலைவியாக அன்னியோன்னியமாக இருந்து வருகிறோம். எங்களைப்போலவே மணமக்கள் ஒருவரை ஒருவர் மதித்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்’ என்று முடித்து ஏன் யாரும் கைதட்டவில்லை என்று பார்த்த பார்வை இருக்கிறதே, அட அட.

பொதுவாக ஊழியரின் வாரிசு ஒருவருக்கு வேலை என்பது தொழிற்சங்கங்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளில் ஒன்று. தன் மகனை எப்படியோ பளுதூக்கும் பயிற்சியில் மாவட்ட அளவில் வென்றதை வைத்து ஒரு ப்யூன் வேலை வாங்கிய தலைவர் இவர். ரிட்டையரான பிறகும் அடிக்கடி அலுவலகம் வந்து தொழிலாளர் குறை கேட்டு, தான் இருக்கும்போது எப்படி உடனடியாக மேலதிகாரிகளிடம் பேசி குறை தீர்த்தார் என்பதையும், இப்போது உள்ளவர்கள் சுயநலமாக இருப்பதையும் குறித்து வருந்தும்போது சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனாலும், முடியாததை முடித்துத் தருகிறேன் என்ற வெற்று வாக்குறுதியோ, பணம் சம்பாதிக்கும் நோக்கமோ அற்ற நேர்மையான தலைவர். 


இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!!

18 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

Unknown said...

Good morning sir.

ஸ்ரீராம். said...

அவரைப் பற்றி அங்க அடையாளங்கள் கொடுத்து வரும்போது மனதில் ஒவ்வொரு அடையாளமாக ஏறி உருவம் எழுகிறது...!

//"அசந்து மறந்து இருக்கு என்றுவிட்டால், படக்கென வேஷ்டியை ஒதுக்கி பட்டாபட்டி நிஜாருக்குள் 100ரூ தேடும் எழவை யார் சகிப்பார்கள்"//

ஹா...ஹா...

க ரா said...

another good one sir :)

க.பாலாசி said...

ஹா..ஹா.. கலக்கல் பேர்வழி... இன்னும் இன்னும் காட்டுங்க.. தெரிஞசிக்க வேண்டி மனுஷனுங்க நிறையப்பேரு இருக்காங்க..

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..

suneel krishnan said...

ஊருக்கு ஒருத்தர் இந்த மாறி அலப்பறை கொடுப்பாங்க போல இருக்கு ,எனக்கு எங்கள் ஊரு ஆள் ஒருவர் நினைவுக்கு வந்தார் .

Unknown said...

ஹா ஹா ஹா மிகவும் நண்றாக உள்ளது :-)

ரிஷபன் said...

//ஆனாலும், முடியாததை முடித்துத் தருகிறேன் என்ற வெற்று வாக்குறுதியோ, பணம் சம்பாதிக்கும் நோக்கமோ அற்ற நேர்மையான தலைவர். //
கலகலப்பாய் கொண்டு போய் கடைசியில் பெருமூச்சு விட வைத்து விட்டீர்களே!

கலகலப்ரியா said...

வழக்கம் போல நல்ல நடை சார்...

அந்த திருமண வீட்டு மேடைப் பேச்ச தனியா டிஸ்கில போட்டிருக்கலாமோ... திருமணத்தில் அவர் பேச்சு ஒட்டாத மாதிரியே இந்தப் போஸ்ட்லயும் ஒட்டலை... (தாழ்மையான கருத்து..)

vasu balaji said...

@கலகலப்ரியா

கொஞ்சம் தம்பட்டம். அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வார்னு இது போட்டது.

அப்றம் இந்த தாழ்மையான எல்லாம் வேணாம்மா ப்ளீஸ்.

vasu balaji said...

@Sethu
good morning sethu:)

Philosophy Prabhakaran said...

கெட்டவர் மாதிரி ஆரம்பிச்சு நல்லவரா முடிச்சிட்டீங்க... கலக்கல்...

வல்லிசிம்ஹன் said...

நல்ல மனம் திறந்த மனிதராகத் தான் இருக்கிறார்.
அவர் வழி அப்படி. ஏதோ நல்லது செய்யணும்னாவது நினைக்கிறாரே..
இந்த மாதிரி சுவையான கேரக்டர்கள் இல்லாத சமுதாயம் டல்லடிக்கும்:)

'பரிவை' சே.குமார் said...

நல்ல மனம் திறந்த மனிதராகத் தான் இருக்கிறார்.

வழக்கம் போல நல்ல நடை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களுடைய கேரக்டர் புதிதான ஆள் இல்லை.. நமக்கு பரிச்யம் போல ஒரு ப்ரமை என்னுள்!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#

எம் அப்துல் காதர் said...

சார்!! உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

பா.ராஜாராம் said...

அருமை பாலா அண்ணா! :-))

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி. சற்றே உடல்நலம் சரியில்லாமல் போனதால் தாமதம். மன்னிக்கவும்.