Friday, July 1, 2011

கேரக்டர் மீனாட்சி.


அறைக்கு வெளியே சிவப்பு விளக்கைப் போட்டுவிட்டு மதிய உணவிற்குப் பின் சாய்ந்திருந்தேன். மெதுவே கதவைத் தட்டும் ஓசை. சற்றே திறந்த கதவிடுக்கில் எட்டிப் பார்த்தது ஒரு பெண் முகம். மலர மலர தொந்தரவு பண்ணிட்டேனாடா கோந்தே! ஒன்னாம்படையாளப் பார்த்தேன். இங்க இருக்கன்னு சொன்னா. பார்க்காம போக மனசு வரலை என்றபடி மூச்சிரைக்க வந்தார் மீனாட்சி மாமி. 

மீனாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் பெரிய போராட்டமே நடக்கும். பேசும்போதே ஒரு குற்ற உணர்ச்சி தொத்திக் கொள்ளும். இந்த வாத்ஸல்யம் காட்டக் கூடியவனா நான் என்ற குறுகுறுப்பு வந்தடையும்.

14 வயதில் அந்தத் தெருவில் குடி போனபோது ஒரு மாமிச மலை போல் வீட்டின் வாசற்படியருகில் உட்கார்ந்த மாமி கேட்டார், “புதுசா வந்துருக்கேளாடா அம்பி?”. அம்மாவிடம் வந்து சொன்னபோது நான் வைத்த பெயர் குண்டு மாமி. குண்டு மாமியின் பெரிய மகள் மீனாட்சி மாமி. அப்பாவின் அலுவலகத்தின் இன்னோரு ப்ரான்ச்சில் டைப்பிஸ்டாக இருந்தார். 4 வயதிலும் ஒரு வயதிலும் மகள்கள். அவர் தங்கை கல்யாணி என் பள்ளியில் ஒரே வகுப்பு. இரண்டு தம்பிகள். இரண்டாவது மகள் பிறந்து ஒரு வாரத்தில் மார்பில் வலி வர தனக்கு இதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது மீனாட்சிக்கு.

திருவல்லிக்கேணியில்தான் புகுந்தவீடு. கூட்டுக் குடும்பம். மாமியார், விதவை நாத்தனார், அவர் மகன், கலியாணமாகாத இன்னோரு நாத்தனார். கணவரும் ரயில்வேதான். குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துப் போனவர். புண்ணியாசனத்துக்கூட வரவில்லை. இருதய நோய். ஹார்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும். குழந்தை பிறந்திருப்பதால் 3 மாதம் கழித்துச் செய்யலாம் என்பது மருத்துவரின் முடிவு.

எங்கே வந்தால் ஒரு வேளை ஆபரேஷனில் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு பெண்களைத் தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்தாரோ அல்லது அம்மாவின், நாத்தனாரின் அட்வைஸோ தெரியவில்லை. வரவேயில்லை. பெற்றோர் போய் அழைத்தபோது சீக்காளிப் பெண்ணைத் தலையில் கட்டிவிட்டதாக மாமியாரும் நாத்தனாரும் போட்ட கூப்பாட்டில் நொறுங்கிப் போய் வந்தார்கள் பெற்றவர்கள். 

மகளிடம் சொல்லவும் முடியாமல், அறுவைச்சிகிச்சைக்கு முடிவெடுக்கவும் முடியாமல் தவித்த தவிப்பு யார் அறியக்கூடும். வெள்ளந்தியான மனுஷியானாலும் கட்டினவளுக்குத் தெரியாதா கணவனின் அந்தரங்கம்? உறங்க முடியாத ஒரு இரவில் அப்பாவைக் கேட்டாளாம். நோவாளிப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாளாப்பா? விடுப்பா, பகவான் இருக்கான். போய்ச் சேரணும்னு விதியிருந்தா ஒனக்கு காலம் கெட்ட காலத்துல இன்னும் ரெண்டு கொழந்தைன்னு வளர்த்து விடுப்பா. எப்படியும் என் பென்ஷன் வரும். அதுக்காவது யாராவது வளர்த்து விடுவா என்று பொட்டுக் கண்ணீரில்லாமல் பேசறா மாமி என்று குண்டு மாமி அழுதாள். 

ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளே வாழ்க்கையாய் இருந்தாள். போய்விடும், வேறு பெண்ணைக் கட்டலாம் என்று காத்திருந்த ஏமாற்றமோ, அம்மா மண்டையைப் போட்டதும் சொந்த வீட்டை விற்று பங்கு வேண்டும் என்று மல்லுக் கட்டிய சகோதரி மேல் வெறுப்போ, ஏழு வருடங்களுக்குப் பிறகு தேடிவந்தான் புருஷன்.

தனியாகப் போகும் வரை வீட்டோடு இருக்கவும் சம்மதம் என்று வந்தபோது இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது மகளின் வாழ்க்கையில் வசந்தம் என்ற பூரிப்பில் இருந்தனர் பெற்றவர்கள். இரண்டு மாதம்தான். சாயம் வெளுத்தது. ரேஸில் கடன். சம்பளம் வட்டிக்குப் போதவில்லை. பிரிந்த சோகத்தை சேர்த்து வைத்து கொட்டிய பிரியத்தில், மீனாட்சி மீண்டும் கர்ப்பமானாள். தாலி ஒன்றை விட்டு மொத்த நகையும் அடமானத்துக்கு என்று கொண்டு சென்றவன் சென்றவன்தான்.

ஏமாந்தோம் என்பதை விட, காலம் கெட்ட காலத்தில் வயிற்றில் பிள்ளையோடு என்ன செய்வாள் மீனாட்சி? இதய அறுவைச்சிகிச்சை ஆன உடம்பு. முதிர்ந்த வயது கர்ப்பம். பிரசவிப்பதில் ரிஸ்க் கம்மி என்பது டாக்டர்களின் அறிவுரை. அதையும் தாங்கியது அந்த இதயம்.

பிள்ளை பிறந்தான். ஒற்றை ஃபோனில், ஒரு ரூபாய் காசில் புருஷனைக் காலரைப் பிடித்து உலுக்கலாம். அதிகாரிகளிடம் முறையிடலாம். டைவர்ஸ் கேஸ் போடலாம். எதற்கும் தயாரில்லை அவள். பொறுப்பான பிள்ளைகள். நன்கு படித்தார்கள். மூத்தவளுக்கு போர்ட் ட்ரஸ்டில் வேலை கிடைத்தது. அடுத்தவள் ப்ளஸ் ஒன் போனாள். பையனும் பள்ளியில். 

கடன் கட்ட வேறு வழியின்றி வீட்டை விற்று அக்காளின் அடாவடிக்கு மீதியைக் கொடுத்து திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூமில் இருந்தவருக்கு பெண்டாட்டி பிள்ளைகள் கவனம் வந்தது. சிகரட்டின் பரிசாக டி.பி.யும் வந்து போயிருந்தது. வீடு தேடி வந்து அழுதார். நகைக்காக வந்திருந்தா சாரி! பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா. அவ சம்பளத்த சேர்த்து வச்சி கரையேத்தணும். அவ சம்பளத்துக்கும் சேர்த்து ஆசைப்பட்டு வந்திருந்தா இப்படியே வெளியே போங்கோ என்று அவ்வளவு நிதானமாக பேசினாள் மீனாட்சி.

என்னவானாலும் பெண்தானே. நொறுங்கிப் போய் அழுதவனை உள்ளே போங்கோ என்றாள். கஷ்டகாலம் தொலைந்தது என்று விட்டால் கடவுள் இருப்பதை யார் நினைப்பார்? இரண்டாவது மகள் ப்ளஸ் டூ வந்தும் வயதுக்கு வரவில்லை. எத்தனை ஹார்மோன் ஊசி, மருந்து எதுவும் பலிக்காமல் இன்னோரு குண்டுமாமியாக வளர்ந்தாள் அவள். மூத்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தாலும் இவள் பெரிய பாரமாகிவிட்டாள். இரண்டு வருடத்தில் கணவனும் போய்ச் சேர்ந்தான். கருணை அடிப்படையில் சின்னவளுக்கு வேலை கிடைத்தது. 

இப்படி ஒரு சூழலில்தான் என்னைத் தேடி வந்தார். கணவனின் பென்ஷனோடு கொடுத்த அகவிலைப்படி தவறு என்று பெரிய தொகையை பிடித்தம் செய்து வந்தார்கள். அதை எதிர்த்து மனு கொண்டு வந்தார். பிடித்தம் செய்யக் கூடாது என்று ஆணை வழங்கும் இடத்தில் நான். எத்தனை நம்பிக்கை இருந்திருக்கும்? எத்தனை சுலபமான வேலை என்று வந்திருக்கக் கூடும்.

நான் பெரிய ரூல் புடுங்கி என்று பெயரெடுத்திருந்த காலம் அது. தேவையே இன்றி வக்கீல் குமாஸ்தாபோல் சுப்ரீம் கோர்ட் கேஸ்களைப் படித்து பெட்டிஷன் நம்பர், யார் வாதி, என்ன ஜட்ஜ்மெண்ட் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டலும் சொல்லும் திமிர். என் மேதாவித்தனத்தை மீனாட்சி மாமியிடம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம். என் வேலைக்கு உண்மையாய் இருப்பதா, மீனாட்சி மாமியின் கஷ்டம் உணர்ந்து கண்ணடைத்துக் கொள்வதா என்ற ஒரு நிலை. 

ஒரு சுப்ரீம் கோர்ட் ஆணையின் அடிப்படையில் ரூல் இருந்தது. மனைவி தன் முயற்சியால் வேலை தேடி அதே மத்திய அரசில் பணியில் இருந்தால், அகவிலைப் படி கொடுக்கலாம். கணவன் மூலமாக கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால் கொடுக்கக் கூடாது என்று இருந்தது. மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தது எனக்குத் தெரியும். என் இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ஆனாலும், ஆவணங்களில் வேலை கொடுத்த விபரங்கள் இருக்கும்.

தவித்துத் தவித்து ‘சாரி மாமி! எனக்கு வேற வழி தெரியலை. என் கடமை எனக்கிருக்கில்லையா? ரூலை மறைக்க முடியாது. அதே நேரம் எனக்குத் தெரியும் என்றும் சொல்லமாட்டேன். வேறு யாருக்கும் வேலை பெறவில்லை என்று ஒரு சர்டிஃபிகேட் இருந்தால் கண்ணை மூடிக் கொள்கிறேன். இல்லையென்றால் ஒரு கேஸ் போட்டு மேஜர் மகளுக்கு வேலை கொடுத்தால் என் பென்ஷனில் எப்படிப் பிடிக்கலாம் என்று வாதாடலாம்’ என்று சொன்னபோது, கொஞ்சமும் சுணங்காமல், ‘புரியறதுடா கோந்தே. இனிமே கேஸ் போட்டு எப்போ வரும் அது? விதின்னு இருக்க வேண்டியதுதான்’ என்று தளர்ந்து போனபோது என் மேல் எனக்கே கோபம் வந்தது.

வேண்டிய யாருக்கோ உதவுவதற்கு, கொடுக்கக் கூடாது என்று கேஸ் போட்டு வென்ற அரசாங்கம், கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தாலும் அகவிலைப்படி கொடுக்கலாம் என்று பல்டி அடித்து ஆர்டர் வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக அவர் மகளை அழைத்து அவரை வரவழைத்து, அப்ளிகேஷன் வாங்கி உத்தரவைக் கொடுத்தபோது அதே வாஞ்சையுடன் ‘நன்னாருப்பேடா கோந்தே. எத்தனையோ வேலை நடுவில இதப் பண்ணிக் கொடுத்தியே’ என்று வாழ்த்திவளை என்ன சொல்ல?

ஆயிற்று பதினைந்து வருடங்களுக்கு மேல். இப்போது மருத்துவப்படி நிறுத்தி விட்டார்கள் என்று மனு கொண்டு வந்திருந்தாள். கொடுத்திருக்கேன். நிறைய வேலை இருக்காம். ரெண்டு வாரம் கழித்து வரச் சொன்னார்கள். உன்னைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். பையனுக்கு கலியாணம் ஆயிடுத்து. ஒன் கொழந்தேள் என்ன பண்றா என்று பேசிக் கொண்டிருந்தார். அவருக்கே தெரியாமல், ப்யூன் மூலம் சிட்டை எழுதி அனுப்பி, ஆர்டர் காப்பியைக் கொடுத்தபோது கண்கள் விரிய எப்படிடா கோந்தே என்ற போது, ஒரு பிராயச்சித்தம் செய்த நிம்மதி. 

20 comments:

ஈரோடு கதிர் said...

கேரக்டர் கோந்தேனு கூட வைச்சிருக்கலாம்.

மனிதர்கள் குறித்து நல்லவிதமாய் வாசிக்கும் போது அன்பு கூடுகிறது.

மீண்டு(ம்) வந்ததுக்கு நிறைய அன்பு!

Mahi_Granny said...

மனிதர்கள் குறித்து நல்லவிதமாய் வாசிக்கும் போது அன்பு கூடுகிறது.

மீண்டும் வந்ததுக்கு நிறைய அன்பு!i repeat the same

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
நிறைய இடைவெளி விழுந்து விட்டது என்று நினைக்கிறேன்.
நன்றி.

சத்ரியன் said...

ஒரு மாத இடைவெளி விட்டு எழுதினாலும், அந்த இடைவெளி காலத்தை நிறப்பி விட்டது...!

sriram said...

பாலாண்ணா
இது மாதிரி எதிர் நீச்சல் போட்டு ஜெயித்த பாசிடிவ் கேரக்டர்கள் எழுதுங்க, அழுகாச்சிகள் வேண்டாமே.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எல் கே said...

நெகிழ வைத்தது :)

creativemani said...

Loveliest பாலா சார்!!!

ம.தி.சுதா said...

////ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளே வாழ்க்கையாய் இருந்தாள். போய்விடும், வேறு பெண்ணைக் கட்டலாம் என்று காத்திருந்த ஏமாற்றமோ, ////

உணர்வுடன் தோய்ந்த வரிகள் அருமை..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

க.பாலாசி said...

இந்த கேரெக்டர் மட்டுமில்ல இந்த பிராயச்சித்தமும் நெகிழ்வு.. அறியாமல் கண்கள் கலங்குகிறது...

நல்லாருப்பீங்க கோந்தே..

ஸ்ரீராம். said...

நெகிழ்வான பதிவு. மீனாட்சி மாமி ப்ராக்டிகல் மாமியாகத் தெரிகிறார். இவ்வளவு பெரிய இடைவெளி ஏனோ...?

பெசொவி said...

// நகைக்காக வந்திருந்தா சாரி! பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா. அவ சம்பளத்த சேர்த்து வச்சி கரையேத்தணும். அவ சம்பளத்துக்கும் சேர்த்து ஆசைப்பட்டு வந்திருந்தா இப்படியே வெளியே போங்கோ என்று அவ்வளவு நிதானமாக பேசினாள் மீனாட்சி.//

வியந்து போனேன்,பாலா சார்!

ஓலை said...

அருமை சார். இது மாதிரி உதவுபவர்கள் கம்மி சார். நல்லா இருப்பீங்க கொழந்தே!


பிரச்சனைகள பெண்கள் சமாளிக்கும் விதம் மிகவும் அலாதியானது. மீனாட்சி மாமிக்கு ஒரு வணக்கம்.

settaikkaran said...

பொதுவாக, உங்களது கேரக்டர்களைப் பற்றி வாசிக்கும்போது, உங்களது இயல்பான நகைச்சுவையின் சுவாரசியமும் சேர்ந்துவிடும். "அவர் எப்படியிருப்பார்?" என்று சிரித்தபடியே கற்பனை செய்யத்தோன்றும். மீனாட்சியைப் பற்றி வாசிக்க வாசிக்க, ’அடடா,’ என்று விசனம் ஏற்பட்டது. ’பாவம், அப்புறம் என்ன ஆனார்கள்?’ என்று ஒரு விதமான அக்கறையுடன் தான் மேலே படிக்க முடியும் என்று தோன்றுகிறது.

மீனாட்சி கேரக்டர் மனதில் மிதமான ஒரு வலியை ஏற்படுத்தியது போலிருக்கிறது. வழக்கம்போல, உங்களது சொல்வீச்சு அபாரம்! நிறைய எழுத நினைத்தாலும், இந்த மீனாட்சி போல யாரையோ எங்கோ எப்போதோ சந்தித்த ஞாபகம் வருவதால், தூசி தட்டப் போகிறேன்.

பிரமாதம் ஐயா! உங்களுக்கு எல்லா வண்ணங்களும், எல்லாத் தூரிகைகளும் சர்வசாதாரணம் என்று நிரூபித்திருக்கிறீர்கள்!

'பரிவை' சே.குமார் said...

நெகிழ வைத்தது.

சிநேகிதன் அக்பர் said...

நீங்க பிராயச்சித்தம் மட்டும் பண்ணியிருக்கலைன்னா உங்க மேல கடுங்கோவப்பட்டிருப்பேன். தப்பிச்சிட்டிங்க.

வாழ்க்கை பாடம்.

ரிஷபன் said...

அவருக்கே தெரியாமல், ப்யூன் மூலம் சிட்டை எழுதி அனுப்பி, ஆர்டர் காப்பியைக் கொடுத்தபோது கண்கள் விரிய எப்படிடா கோந்தே என்ற போது, ஒரு பிராயச்சித்தம் செய்த நிம்மதி.

என்னதான் சொல்லு(ங்கோ) கோந்தே.. மனுஷாளக் கொண்டாடுற பதிவைப் படிக்கையில கண்ணுல ஜலம் தானாக் கட்டிக்கிறது..

காமராஜ் said...

ஆமாம் அண்ணா கதிர் சொல்றாப்போல மனிதர்களை நல்லவர்களாகப்பர்க்கும் போது கூடுதல் நம்பிக்கை வருகிறது வாழ்க்கைமேல்.

நீங்கள் எழுதாமல் இருந்தது.
இயல்பான தேக்கமா இல்லை இந்த ப்ளாக் எழுத்தில் இருக்கும் மொத்த தேக்கமா தெரியவில்லை.

ஆனாலும் திரும்ப வந்தது நிறைந்த சந்தோஷம். ஆரம்பியுங்கள் கதிரும் எதிருமாக.

காத்துக்கிடக்கோம்.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் கேரக்டர் கதைகள் படிக்கும்போது அவர்கள் அப்படியே கண் முன் நிற்பது போல உணர்வு....

நெகிழ வைத்தது உங்கள் பகிர்வு...

Unknown said...

சார்! ஏனிந்த இடைவெளி?

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் புத்தகங்கள் சேர்ந்து போச்சு. படிச்சி தீர்த்துடணும்னு இருந்தது. இன்னும் முடிஞ்ச பாடில்ல அவ்வ்வ்:(. அன்புக்கு நன்றி.