Sunday, April 17, 2011

நிழலின் அருமை வெயிலில்

வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களின் அருமையை அப்போது நாம் உணர்வதில்லை. பின்னெப்போதோ அதுகுறித்து படிக்கும்போது இதை நாம் அப்போது உணரவில்லையே என்ற வருத்தம் நீங்காமல் நின்றுவிடும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரிலிருந்து ரயில்வே ட்ரெக், மற்றும் ஃபோட்டோ போட்டி என்று ஒரு செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட ரூ12000 என்று கவனம். அந்த ஊரில் ராமர் வனவாசம் மாதிரி 14 மாதங்கள் இருந்ததாக கருதியிருந்ததன் மதிப்பும், அந்த கொடுப்பினையை ரசிக்காத அப்போதைய மன நிலையும் தந்த படிப்பினைதான் மேலிருக்கும் பத்தி.
ஹாசனிலிருந்து மங்களூருக்கு செல்லும் ரயில்பாதையில் அமைந்திருக்கிறது சக்லேஷ்பூர். இந்திய ரயில்வேயின் திறனுக்கு ஒரு அத்தாட்சி அந்த ரயில்பாதை. சக்லேஷ்பூர் தாண்டிய சிறிது தூரத்திற்குப் பிறகு கபகா புத்தூர் வரை மலைகள், அதற்கிடையேயான அதல பாதாளங்கள். மலையைக் குடைந்தும், பாதாளத்திலிருந்து தூண்கள் எழுப்பியும் அமைத்த பாதை அது. எடக்குமாரி என்ற ஒரு ஸ்டேஷனில் ப்ளாட்ஃபார்மை ஒட்டிய டீஸ்டாலில் டீ வாங்கிக்கொண்டு ஒரு அடி நகர்ந்தால் பாதாள லோகம்தான். அதே போல் டோனிகல் ஸ்டேஷன் வரும் முன் ஒரு ரயில்பாதை தெரியும். அந்த வழியாகத்தான் வந்திருப்போம். ஆனால் பார்ப்பதற்கு அதன் வழியாகப் போகப் போவது போல் தோற்றம்.
அந்த மலைப்பாதையில் ட்ராக் போட, இதர தளவாடங்கள், சிமெண்ட், இரும்புக்கம்பி எல்லாம் எப்படிக் கொண்டு போவது? எங்கள் அரக்கோணம் வொர்க்‌ஷாப் இஞ்சினியர்களின் புதிய கண்டுபிடிப்பாக இந்திய ரயில்வேயில் முதன் முறையாக ரயில் சக்கரங்களை மாட்டி தண்டவாளத்தில் லாரி ஓடியது. 
கிட்டத்தட்ட 52 பெரிய பாலங்கள், 35க்கும் மேற்பட்ட டன்னல்கள், 150க்கு மேற்பட்ட சிறிய பாலங்களின் மீதே அமைந்த ரயில்பாதை அது. சக்லேஷ்பூர் உலகப் புகழ்பெற்றது. ஏலக்காயின் உலகச் சந்தை அது. சக்லேஷ்பூர் கூட்டுறவுச் சங்கத்தின் தேனுக்கு நிகராக எங்கேயும் பார்க்க முடியாது. ஆனாலும் குடகுத் தேன் என்றே எப்படியோ பெயர். காஃபி, தேயிலைத் தோட்டங்கள். எஸ்டேட் ஓனர்கள், அதில் பணிபுரிபவர்கள் என்ற இரண்டேதட்டு மக்களிடையே ரயில்வே வந்த பிறகுதான் நடுத்தட்டு மக்கள் வர்க்கமே வந்ததாகச் சொல்வார்கள்.
இந்த ஊரை அனுபவிக்க என்ன தடை என்று நினைக்கலாம். முதன் முறையாக வீட்டை விட்டு பாஷை அவ்வளவு தெரியாத ஊரில் போய் பிழைப்பு என்ற முதல் காரணம். 1985ல் ரூ800 சம்பளத்தில் சென்னையில் அம்மாவும் தம்பியும், நான் சக்லேஷ்பூரில் என்று இரண்டு குடித்தனங்கள் என்பது ப்ரமோஷன் என்ற மகிழ்ச்சியைவிட பனிஷ்மெண்ட் என்ற அயற்சி இரண்டாவது காரணம். சென்னையிலிருந்து இரவு கிளம்பி பெங்களூர் போய், உடனே அடுத்த வண்டி பிடித்து அரிசிக்கரை போய், அங்கிருந்து வேறு ஒரு பேசஞ்சர் பிடித்து ஹாசன் போய், அங்கு பஸ்பிடித்து ஒரு மணிக்கும் மேல் பயணம் செய்து சக்லேஷ்பூர் சேரலாம் என்பது மாதம் ஒருமுறை கூட வீட்டிற்கு வந்து போவது கடினம் என்பது பெரும் காரணம்.

வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனி மாலை வீட்டிற்குவந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி திங்கள் அலுவலகத்தில் இருந்தாகவேண்டும். ஊர் என்பதே கொத்துக் கொத்தாக மலைகளின் இடையே. ஒரு மலையின் மேலிருக்கும் என் வீட்டிலிருந்து இறங்கி இன்னோரு மலையில் ஏறினால் டவுன். தூரம் என்னமோ ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர்தான். மதியம் டவுனில் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆஃபீஸ் வந்தால் பசிக்கும்.

செப்டம்பரிலிருந்து மெதுவே முதுகுத்தண்டை உறைக்கும் குளிர், டிசம்பரிலிருந்து ஃபெப்ருவரி வரை அப்படிக் குளிரும். குளிரென்றால் மழையோடு கூடிய குளிர். இரவில் பெங்களூரில் ஏறி மேல் பர்த்தில் படுத்து, கனத்த போர்வையை போர்த்துக் கொண்டால், காலையில் சக்லேஷ்பூரில் இறங்கும்போது பிழிந்தால் இரண்டு பக்கெட் நீர் வரும். ஃபெப்ருவரி கடைசில் லேசாக உறைக்கும் சூரியன் ஏப்ரலில் உச்சத்தில் இருக்கும்போதே, ‘மளே யாவாக பருத்தே? பேப்பரல்லி டேட் ஹாக்கிதானா? ஒந்து வாரா லேட்டா?’ (‘மழை எப்போ வருதாம். பேப்பரில் தேதி கொடுத்திருக்கானா? ஒருவாரம் லேட்டா?)  என்று எழவு விசாரிப்பதுபோல் கேட்டால் ஓவென்று அழவேண்டும் போல் வரும். வருஷத்தில் பத்துமாதம் நச நசவென்று மழையில் வாழ்வது சென்னை மாதிரி ஊரில் இருக்கும்போது வேண்டுமானால் சொர்க்கமாகத் தெரியலாம். உண்மையில் அனுபவிக்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும்.
ஆஃபீஸ் ஒரு குன்றில். குவார்ட்டர்ஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி இன்னோரு மலை முகட்டில். மழையென்றால் பலமாதங்களில் பூந்தூறலாக இருக்கும். வானத்துக்கும் பூமிக்கும் டாட்லைன் போட்டாற்போல். மண்ணோ பூமண். புல்லிருக்கிறதே என்று கொஞ்சம் கவனப் பிசகாக காலை வைத்தால் அப்படியே வாரி விடும். செருப்பு அணிந்திருந்தால் பின்பக்கம், போடாவிட்டால் முன்பக்கம் எப்படி விழமுடிகிறது என்பது இது வரை புரிந்ததில்லை. அதுவும் ஆஃபீஸ் அருகில் போய் வழுக்கி விழுந்து, சேறு பூசிக் கொண்டு திரும்ப மலை இறங்கி ஏறி வேறு உடை அணிந்து போவது என்பது எவ்வளவு கொடுமை? சரி வெயில் காலமாவது அனுபவிக்கலாம் என்றால் சரியாக 6லிருந்து 7 வரை கொள்ளைக்காரன் வருவது போல் எல்லா வீட்டிலும் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துவிட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

அந்த ஊர் கொசுவார் அவ்வளவு வில்லன். அங்கே இங்கே என்று கடிக்கும் வேலையே கிடையாது. சரியாக கண் இமை, மேல் உதடு, காது, மூக்கு மடல் போல் சாஃப்ட் டார்ஜட்தான். ஒரு கடி ஒரு உறிஞ்சு அவர் போய்விடுவார். காதில் கடித்தால் யானைக்காது மாதிரி, மூக்கில் கடித்தால் மூணு இஞ்சு அகலத்துக்கு, உதட்டில் கடித்தால் மூக்கைத்தாண்டி தெரியும்படி வீங்குவது கொடுமை என்றால், கண் இமையில் போட்டதோ, டாம் அண்ட் ஜெர்ரியில் டாம் மாதிரி வத்திக் குச்சி வைத்தாலும் கண் திறக்காது.

போத்தி மெஸ்ஸில் சாப்பாடு மூன்று ரூபாய்தான். சுரைக்காய், பீர்க்கங்காய் என்று நீர்க்காயாக இருக்கும். சாதத்தில் சாம்பார் ஊற்றிவிட்டு போனால் சாதம் வெள்ளையாகவே இருக்கும். பருப்பே இல்லாமல் அப்படி ஒரு சாம்பார் எப்படி வைக்க முடியும் என்று விளங்கியதே இல்லை. ரசம் பாயசம் போல் இனிக்கும். தயிரும், மலை நாரத்தை ஊறுகாயும் சொர்க்கம். ராயர் மெஸ்ஸில் அபாரமாக இருக்கும். ஆனால் கெடுபிடி அதிகம். அக்கி ரொட்டி (அரிசி ரொட்டி) சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?

இத்தனை சோகத்திலும் ஒரு நாள் நாலணாவுக்கு வாங்கித் தின்ற காரமான வெங்காய பிஸ்கட்டில் மயங்கி, 5ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு இது போதும் என்று  வீட்டிற்குப் போய் தின்று, ஒரு மணி நேரத்தில் வயிறு தீப்பிடித்தது போல் எரிய திரும்பவும் மலையிறங்கி, ராத்திரி ஒரு மணிக்கு 4 இட்டிலி தின்றதும், மூன்று ரூபாய்க்கு அரைப் பலாப்பழம் வாங்கி, சுளையைத் தேனில் ஊறப் போட்டு, நானும் அறை நண்பனும் திகட்டத் திகட்ட தின்று அடுத்த நாள், பிடுங்கிக் கொண்டு யார் லெட்ரீனுக்கும் வீட்டுக்கும் அலைவது என்று லெட்ரீன் அருகிலேயே குத்தவைத்து நொந்ததும், விடாமல் 103-104 என்று அடித்த ஜூரத்துக்கு மாத்திரை மருந்தில்லாமல், இளநீரும் கோல்ட் ஸ்பாட்டும் மட்டுமே உணவாக்கி ஒரே நாளில் சரியாகப் போனதும், ராம நவமியில் ராமர் கோவிலில் வாலில்லாத அனுமார் மாதிரி எங்கள் மூத்த எஞ்ஜினீயர் ஜிங் ஜிங் என்று குதித்துச் செய்த காலட்சேபமும், பாதி சினிமாவை நிறுத்தி, டிவிஷனல் அக்கவுண்டண்ட் உடனடியாக ஆஃபீஸ் வரவும் என்ற ஸ்லைட் வாங்கிய பெருமிதமும், ராமன் கடை சப்பாத்தி, தோசை சாம்பாரும், நேத்ராவதியில் வெள்ளம் வரும்போது ஜெலடின் குச்சியில் கொளுத்தி வீசி ஆளாளுக்கு பெட்ஷீட்டில் பொதி பொதியாய் மீன் பிடிக்கும் காட்சியும்...ஸ்டாக் டேக்கிங்கில் 2 தண்டவாளம் அதிகம் என்றால், போன வருட மழையில் புதைந்தது இந்த வருட மழையில் மண் அரிப்பில் கிடைத்தது என்றும், 2 குறைவு என்றால், அதிக மழையில் மண் சரிவில் மூடியிருக்கலாம் அல்லது கரையான் அரித்துவிட்டது என்றும் எழுதும் காமெடி...

சக்லேஷ்பூர்..ஐ மிஸ் யூ ரியல்லி:)
டிஸ்கி: புகைப்படம் கூகிளார் தயவு:)
--:o:--

21 comments:

Thekkikattan|தெகா said...

enjoyed reading, vasu saarey!

nellai அண்ணாச்சி said...

அருமையான நடை-- நானும் மழையில் நனைந்து சேற்றில் விழுந்தது போல் அனுபவித்தேன்

ராஜ நடராஜன் said...

//வருஷத்தில் பத்துமாதம் நச நசவென்று மழையில் வாழ்வது சென்னை மாதிரி ஊரில் இருக்கும்போது வேண்டுமானால் சொர்க்கமாகத் தெரியலாம். உண்மையில் அனுபவிக்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும்.//

திரைப்படங்கள் காமிராக் கண் காட்டி மக்களை ஏமாற்றி விடுகிறார்கள்.மலைப்பிரதேச வாழ்க்கை தனிமைப்பட்ட வாழ்க்கையும்,மக்கள் முன்னேற வழிவகுக்காததும் கூட.காஷ்மீர் கூட எல்லை,போர் மேகம் காரணமாக தனியுரிமைகளில் சிறந்து காணப்பட்டாலும் கூட சவாலான வாழக்கை முறையே.

காமராஜ் said...

அன்பின் பாலாண்ணா...
எழுதும்போது எப்படியோ படிக்கும் போது
ஒவ்வொரு வரிக்குள்ளேயும் வாசகன் நடந்து போவது போன்ற உணர்வு தரும் எழுத்து.

படங்கள்: எட்டிப்பார்க்கும் போது அடிவயிறு குறு குறுக்குமே அப்படி உணர்வுகள் தருகிறது.

இது பயண சுகம்.கூடவே நிகழ்வின் அச்சலாத்தி.

Rathnavel said...

அருமையான அனுபவங்கள். நல்ல பதிவு. எல்லா பதிவுகளையும் நன்கு ரசித்து எழுதுகிறீர்கள். நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

அருமை.

ஓலை said...

அருமையான கன்னட நாட்டுப் பயணம்.

வெயிலின் அருமை மழையிலும், மழையின் அருமை வெயிலிலும் .... ம்ம்ம்ம்

இங்கே ஏற்கனவே ஒரு கேரக்டர் சந்தித்திருக்கோமில்ல ? ஒரு சிடு சிடு கேரக்டர்.

ஓலை said...

ஒவ்வொன்னிலும் நகைச்சுவை பலாசுளை கணக்கா இருக்கு.
அருமை சார்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

குறும்படத்தை படிச்சா மாதிரி இருக்கு!

கேரக்டர் இடுகைகள் போலவேயே, இந்த மாதிரி பரவலா அறியப்படாத இடங்களையும் எழுதுங்க சார்.

அருமையான கொசுவத்தி சுத்திட்டிங்க! :))

bandhu said...

மலை பிரதேச வாழ்க்கை ஓரிரு நாட்களுக்கு மட்டுமே சொர்க்கம். அதன் பின் நரகம்! பனி பிரதேசத்தில் இருப்பது போலத்தான். அங்கு முதல் நாள் மட்டுமே (பார்க்க அழகாக இருக்கும்) சொர்க்கம். பின் எல்லா நாளும் நரகமே!

சுந்தர்ஜி said...

என்ன ஒரு அற்புதமான நினைவுதிரும்பல் பாலாண்ணா.

அடிக்கடி இப்படி ஒரு இடுகையைப் படிக்கமுடியாது.ஏதோ ஒரு கால் மணி நேரத்துல படிக்கவெச்சிட்டீங்களே தவிர அங்கிருந்த ஒவ்வொரு நாளையும் எப்பிடிக் கழிச்சிருப்பீங்கன்னு யூகிக்க முடியுது.

ஒரு காதலி மனைவியான மாதிரியான ஒரு சந்தோஷமும் துக்கமும் இடுகை பூராவும் ஓடியது.

மறக்க முடியாதபடி எழுதிய எழுத்து.காரணம் உங்களால் மறக்கமுடியாதபடிக்கான அனுபவங்கள்.

அஹமது இர்ஷாத் said...

நான் அந்த ஊருக்கு போய்ட்டு வந்துட்டேன் ... அஞ்சு நிமிஷத்துல :))

ஈரோடு கதிர் said...

சூப்பர்!!!

லைலேண்ட் பஸ், ட்ராக்கில் ஓடுவதை கொங்கனில் பார்த்திருக்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. உங்கள் எழுத்தில் சிறிது நேரத்திலே படித்து முடித்தாலும், உங்கள் அனுபவங்களை உணர முடிகிறது.

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்பதான் ஒரு சுற்றுலா போய்விட்டு வந்தோம். அடுத்த பயணம் இங்குதான்..

அருமையான விவரனை..

Bharathi said...

உண்மையில் ஒரு சிறிய கதை/கட்டுரை படித்து போல் இருக்கிறது. சாக்லேச்பூர் போய் வந்த அனுபவம். இதைப் படிக்கப் படிக்க நானும் போய் வந்த கோடை விடுமுறை வந்து வந்து போகிறது நினைவில்.

மாதேவி said...

சக்லேஷ்பூர் நல்ல அனுபவம்.

நாடோடி இலக்கியன் said...

அருமையான நடை.ரசித்து படித்தேன்.

மணிஜீ...... said...

கேஆர்பியை ரிப்பீட்டுகிறேன் (நானும் அவர் கூட போயிருந்தேன்)

பா.ராஜாராம் said...

இது ஒரு வகையான எழுத்தாக இருக்கிறது பாலாண்ணா. என்னன்னு சொல்லத் தெரியல. சிற்சில இடங்கள் தவிர, மொத்தமாக வேறு தளம்.

வேறு மாநிலம் காரணமோ, ஊர் சுற்றி பாலாண்ணா? :-)

வானம்பாடிகள் said...

நன்றி தெ.கா. :)
நன்றிங்க நெல்லை அண்ணாச்சி
ஆமாங்க ராஜண்ணா:(
நன்றி காமராஜ்
நன்றிங்க ரத்தினவேல்.
நன்றி ஸ்ரீராம்
நன்றி சேது
நன்றி ஷங்கர்
நன்றி பந்து. சரியாச் சொன்னீங்க.:)
நன்றி சுந்தர்ஜி
நன்றி இர்ஷாத்
நன்றி கதிர்
நன்றி வெங்கட்
நன்றி செந்தில்
நன்றிங்க பாரதி
நன்றிங்க மாதேவி
நன்றிங்க நாடோடி இலக்கியன்
நன்றி மணிஜீ
நன்றி பா.ரா.