Friday, March 25, 2011

தேர்தல் 2011 - ஒரு சமூக அக்கறைப் பதிவு.

தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் குறித்தான ஊகங்கள், சரி, தப்பு, சொம்பு, ஜமுக்காளம், அரசமரம் எல்லாம் அயற்சி தருவனவாயிருக்கின்றன. ‘தம்பி! டீ இன்னும் வரலை’ ரேஞ்சுக்கு சொன்னாலும் யாரும் டி.வி. தரப்போறதில்லை என்ற வருத்தம் ஒரு புறம். மகள் படிப்பு முடியறதுக்குள்ள காண்ட்ராக்ட் போட்டு லேப்டாப்பாவது வருமா என்ற ஏக்கம் ஒரு புறம். ‘அரை நாள் உண்ணாவிரதம்’, அந்தர் பல்டி ‘தனி ஈழம்’ எல்லாம் கடந்து முதலில் ஹிந்துவை ஒழித்தாலும், ஓசிப்பேப்பருக்கு ஒட்டக் காத்திருந்த காலமும், அரசியல் தவிர்த்து ‘சதக்! சதக்! என்று கத்தியால் குத்தினான், கணியூரைச் சேர்ந்தவர் பேபி, வயது 63, அழகி’ போன்ற முக்கியமான தகவல்களின் ஈர்ப்பினாலும் ‘தினத்தந்தி’ மட்டும் தொடர்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் அரசியல் பதிவிடாவிட்டால், கும்மிப் பதிவர், சமூக சிந்தனையற்றப் பதிவர் போன்ற அவச்சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதாலும், யார் ஜெயித்து வந்தாலும் தேர்தல் குறித்து ஒரு இடுகையாவது இட்டவர்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு சலுகை என்ற அறிவிப்பு வருமேயானால் ‘வட போச்சே’ என்று சொல்லாமல் தவிர்ப்பதற்காகவும் ஒரு இடுகை போட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் கொள்ளலாம்.

முதல் முதலான தேர்தல் அனுபவம் வருடம் நினைவு கொள்ளத் தக்கதல்ல. விக்கியில் தேடி தேதி போடும் அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் அல்ல. கஞ்சி போட்டு கத்தி விரைப்பாக இஸ்திரி செய்த டவுஜர், அது நழுவி விடாமல் பட்டி, கோழிக் கூடு மார்பும், பாக்கட்டில் ரெண்டு கையும் சொருகியபடி படி தாண்டா பாலகனாக இருந்த நாட்களில், சினிமா நோட்டீசுக்கு மட்டுமே வரும் செனாயும், மேளமும் முழங்க ஒரு 30 பேர் சூழ கை கூப்பியபடி வரும் வேட்பாளர், அதற்கு முன்னால் வினியோகிக்கப் படும் நோட்டீசு (கப்பல்,கத்திக்கப்பல், பறக்கும் கப்பல், இங்க் பாட்டில், ராக்கெட்டு செய்ய உதவும். ரஃப் நோட்டில் கிழித்தாலும் டங்குவார் அறுந்துடும்) இவற்றையும் தாண்டி

பாட்டம் அறுக்கப்பட்ட கெரஸின் அளக்கும் பாத்திரம் போன்ற ஒன்றை வாயில் வைத்து ‘காளைச் சின்னத்தப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு!’ , ‘நமது சின்னம் காளைச் சின்னம்’ போன்ற கலை நயமிக்க பாடல்களால் ஈர்க்கப் பட்டு பராக் பார்த்த காலத்தில் ஆரம்பிக்கிறது கொசுவத்தி.

அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியபோது மக்கிய அரிசி, நாத்த அரிசிகளால் கடுப்புண்ட காலத்தில் உணவுப் பஞ்சத்தால் விவசாயிகள் வயல் எலிகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கேட்ட கேள்விக்கு ‘எலியில் ப்ரோட்டீன் அதிகம்’ என்று நக்கலாய் பதில் சொன்னதற்காக சி. சுப்பிரமணியம் கழகக் கண்மணிகளிடம் நாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் விட இன்னும் தமாஷாக

‘பக்த வத்சலக் குரங்கே! பதவிய விட்டு எறங்கே’
‘காமராஜர் அண்ணாச்சி! காப்பி வெல என்னாச்சி’
’பூவராகன் அண்ணாச்சி! பூவா துன்னு நாளாச்சி’
’வெற்றி எங்கள் லட்சியம்! படி அரிசி நிச்சயம்!’
‘நமது சின்னம் சூரியச் சின்னம்’

என்று குதித்து குதித்துக் கத்திக் கொண்டு போவதும், எம்.ஜி.ஆர். வரார் ஓட்டுக் கேட்க புரளியும், கழகக் கண்மணிகளின்பால் ஈர்ப்புக்கு காரணமாயிற்று. முக்கியமாக ‘ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.’ என்று தமிழ் வளர்த்த பாங்கும் ஒரு காரணம்.

தேர்தல் என்றால் எதிர்ப்பார்ப்பு அதிகமானதற்குக் காரணங்கள் வேறு. கலர்க் கொடிகள் கிடைக்கும். சில நேரம் துணிக் கொடியும் கூட. அங்கங்கே வைக்கப் பட்டிருக்கும் தண்ணீர்ப் பந்தலில் தாக சாந்தி செய்துக் கொள்ளும் போது, ஓய்விலிருக்கும் மெகா ஃபோனில் ’ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.வும், நமது சின்னம் காளைச்சின்னம்’ கத்த ஒரு வாய்ப்பு.

ஆவினுக்கு முன்னால் தமிழ்நாடு பால் வள நிறுவனத்தின் அலுவலகம் வேப்பேரி வெடரினரி காலேஜுக்கு முன்னால் இருந்த ஒரு இத்துப் போன கட்டிடத்தில் இயங்கியது. அங்குதான் போய் பால்கார்ட் வாங்க வேண்டும். ஒரு ரூபாய் 5 காசுக்கு அரை லிட்டர் டோண்ட் மில்க், அதையும் வாங்கிய கையோடு குலுக்கிய படியே வந்தால், திரளும் வெண்ணையை ஸ்பூன் பிடியில் வழித்துச் சேர்த்தால் ஒரு வாரத்தில் அடுத்த வாரத்துக்கான நெய்யும், நெய் காய்ச்சிய வாணலியில் கேசரியும் போனஸ். அதற்காக அயனாவரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் வேப்பேரிக்கு போகத்தான் வேண்டும்.

பஸ்ஸில் போனால் பத்தும் பத்தும் 20 பைசா போய்விடும் என்பதால், பொடிநடையாக போய் வரலாம். தேர்தல் காலங்களில் வெயிலோ, நடந்த களைப்போ இராது. காரணம் சுவரெங்கும் நக்கலும் நையாண்டியுமாக கரியில் வரைந்த கார்ட்டூன் படங்கள். பாவம், வாலில்லாத பக்தவத்சலத்தைப் பார்க்கவே முடியாது. பதிலுக்கு அண்ணாவை தொப்பையும், பீரங்கி மூக்குமாக காங்கிரஸ்காரர்கள் வரைந்திருப்பார்கள். முண்டாசு கட்டியபடி மூணு எலியைக் கையில் பிடித்தபடி ‘இன்னைக்கு எங்கூட்ல விருந்து’ என இளிக்கும் சி.சு., ‘கஞ்சிக்கு வழியில்லங்கேன். இவன் காப்பிக்கு வெலை கேக்குதாண்ணேன்’ என்ற காமராசரும், செய்திகளை காமெடியாக்கி, தேர்தல் அறிக்கையை நக்கலடித்து சுவர் நிறைத்திருக்கும் கார்ட்டூன்கள்.

முக்கியமானது படிப்பகங்கள். தெருவுக்கு தெரு பத்தடிக்குப் பத்தடி எதிரும் புதிருமாக பந்தல் போட்டு காங்கிரஸ் பதிப்பகங்கள் (சுதேசமித்திரன், தினமணி, நவசக்தி) திமுக(தினத்தந்தி, முரசொலி, விடுதலை, நாத்திகம், மாலை முரசு) கம்யூனிஸ்டு (ஜனசக்தி, சோவியத் யூனியன், ஸ்புத்னிக்) இப்படி ஓசிப் பேப்பர் படிக்க எங்கே கிடைக்கும் வாய்ப்பு? நம்ம ஸ்பீடுக்கு படிக்க முடியாமல், காஆஆஆம ராஆஆஆஆஆசர்..... இன்ன்ன்ன்ன்ன்ன்ன்று.....கட கட கட கடக்கரையில் (ற் எப்புடி சொல்றதுன்னு குழப்பம்) என்று கூட்டிப் படிக்கும் கடுப்புப் பேர்வழியும், ஒரு வரி செய்தியைப் படித்துவிட்டு அதற்கு ஒன்னரை மணி நேரம் பேப்பரையும் தராமல் தோழரிடம் விவாதிக்கும் பன்னாடையையும் பொறுத்து பேப்பர் படிக்கும் சுகமே சுகம்.

கணக்குக் கேட்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க ஆரம்பித்த புதிதில் நாத்திகம் பத்திரிகையில் அவர் குறித்த கட்டுரையும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் ‘சரோஜாதேவி’ இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தது. கம்யூனிஸ்ட் தொண்டர்களின் சைக்கிள் ஊர்வலத்தை காப்பியடித்து, கழகத்தின் சைக்கிள் ஊர்வல பிரம்மாண்டமும், அதில் செய்யும் சர்க்கஸ் வேலைகளும் பெரிய ஈர்ப்பு தந்தது. டாப்பில்லாத ஜீப்பில் புகுந்து கை கூப்பியபடி வரும் கலாச்சாரமும் அப்போதுதான் பார்த்த கவனம்.

தேர்தல் நாளில் அப்பாவுடனும், அம்மாவுடனுமாய் எந்த வரிசை முன்னால் போகிறதோ அங்கு ஓடி ஓட்டுப்போட்ட பிறகு, க்யூவில் நிற்கும் தோழனுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக ‘டேய்! எங்கம்மா காங்கிரசுக்கு போட்டாங்கடா. எங்கப்பா சூரியனுக்கு குத்தினாருடா’ என்றலறி முடிக்கும் முன் நடு முதுகில் விழும் பேயறையும், பேயறைந்தார் போல் அவர்களின் முகமும் அப்போது புரிந்ததில்லை.

ரேடியோ, டி.வி. கட்சிப் பத்திரிகை, கட்சி சேனல் என்றான பிறகு இந்த சுகமெல்லாம் போயே போச்சு. இதுல என்னாத்த தேர்தலைப் பத்தி சொல்றது. ஆட்டோ வரும்னு பயப்படுறதா, உன் மூஞ்சிக்கு ஆட்டோ வேறையான்னு கிண்டலுக்கு பயப்படுறதா? எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி.
 

43 comments:

பழமைபேசி said...

அண்ணா... அந்த மாதிரி பாட்டுகளை எல்லாம் ஒரு இடுகையா தேத்துங்க... குஜாலா இருக்கும்!

பழமைபேசி said...

உப்புமாக் கிண்டி வையடி இந்திரா --- நேயர் விருப்பம்!

பிரபாகர் said...

//கணியூரைச் சேர்ந்தவர் பேபி, வயது 63, அழகி//

அப்பப்பா!... கண்ணைக் கட்டுதே...! உஸ்......

பிரபாகர்...

பிரபாகர் said...

//‘ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.’ என்று தமிழ் வளர்த்த பாங்கும் ஒரு காரணம்//

ஆசான் ராக்ஸ்...

பிரபாகர்...

Unknown said...

இப்பல்லாம் தேர்தல் சுவாரஸ்யங்கள் குறைவுதான்..

எங்கூர்ல ஒவ்வொரு தேர்தல்லயும் குறைந்தது பத்து பேருக்காவது அரிவாள் வெட்டு விழும்..

இப்ப ரெண்டு கட்சிலயும் பாகுபாடு இல்லாத பணவெட்டால் டாஸ்மாக்தான் நிரம்பி வழியுது..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா,,ஹா,, என்னண்ணே.அந்தகாலத்திலும் இப்படித்தான் அடிக்சுக்கிட்டி இருந்திருக்காங்களா?

:-(

..
ஆகா.. இப்பதான் நாறியிருக்குனு கொதிச்சுப்போய் எழுதிக்கிட்டு இருக்கோம்..

ம்.. பழைய சரித்திரத்தை புரட்டிப்பார்க்கிறேன்.. ஹி..ஹி

Unknown said...

ஹி ஹி பழைய ஞாபகங்கள் அருமையா இருக்கன்னே, அதுசரி இது என்ன சமூக அக்கறை பதிவு :-)

settaikkaran said...

//இந்த இக்கட்டான நிலையில் அரசியல் பதிவிடாவிட்டால், கும்மிப் பதிவர், சமூக சிந்தனையற்றப் பதிவர் போன்ற அவச்சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதாலும்//

நியாயம்தான்; வெறும் வாய்க்கு அவல் உப்புமா கொடுக்கக்கூடாது தான்.

settaikkaran said...

//முக்கியமாக ‘ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.’ என்று தமிழ் வளர்த்த பாங்கும் ஒரு காரணம்.//

வெரி இம்ப்ரஸிவ்...!

settaikkaran said...

//ஒரு வரி செய்தியைப் படித்துவிட்டு அதற்கு ஒன்னரை மணி நேரம் பேப்பரையும் தராமல் தோழரிடம் விவாதிக்கும் பன்னாடையையும் பொறுத்து பேப்பர் படிக்கும் சுகமே சுகம். //

ஓசிப்பேப்பர் மேட்டர் அப்பவும் அப்படித்தானா? :-)

settaikkaran said...

//எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி.//

இந்த அக்கறைப் பதிவு காரணமாக இனி எக்கறையும் உங்கள் மீது படியவே முடியாது. :-)

ஓலை said...

நல்ல கிண்டல் சார். பழசை ரசிக்க முடியுது.

இன்னும் ஒண்ணுல ஒத்துமை இருக்கு. உணவு கிடங்கில தானியங்கள அழுகினாலும் அழுகலாம் . ஆனா காசு பாக்காம எவனுக்கும் போய் சேர்ந்துடக் கூடாதுன்னு CS காலத்திலிருந்து உறுதியாய் இருக்காங்க. வாழ்க.

ஆரூரன் விசுவநாதன் said...

aasaane......kalakkkungga.......

க.பாலாசி said...

ம்ம்ம்.. அந்தக்காலமெல்லாம் மலையேறிப்போச்சுங்க. நம்மளமாதிரி வயசானவங்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்... சரிவிடுங்க.. இப்ப லேப்டாப் கெடைக்குதான்னு பாப்போம்..

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு சாரே... சுவாரஸ்யமான எழுத்து நடை...

Chitra said...

எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி.

....... சமூக அக்கறையோடு தேர்தல் வரும் காலம் எப்போ? :-(

DR.K.S.BALASUBRAMANIAN said...

//முதல் முதலான தேர்தல் அனுபவம் வருடம் நினைவு கொள்ளத் தக்கதல்ல.//

வயசாகிபோச்சுல்ல.!!!.....
தேர்தல் கால மலரும் நினைவுகள் அருமை!!!!!!!!!!

ராஜ நடராஜன் said...

//பாட்டம் அறுக்கப்பட்ட கெரஸின் அளக்கும் பாத்திரம் போன்ற ஒன்றை வாயில் வைத்து ‘காளைச் சின்னத்தப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு!’ , ‘நமது சின்னம் காளைச் சின்னம்’ போன்ற கலை நயமிக்க பாடல்களால் ஈர்க்கப் பட்டு பராக் பார்த்த காலத்தில் ஆரம்பிக்கிறது கொசுவத்தி. //

வர்ணனை செம கலை நயம்!அதுவும் கெரோசின் அளக்கும் பாத்திர ஒப்பீடு:)

ரிஷபன் said...

ஒரு கோழி முட்டையை (என் பள்ளி நாட்களில்) நூறு ரூபாய்க்கு ஏலம் விட்டு.. ‘இப்பொது இது வெறும் கோழி முட்டை அல்ல.. உன் தலைவன் கை பட்ட பொன் முட்டை’..
அதை ஒரு கூமுட்டை வாங்கிப் போனதை இப்போது நினைத்தாலும் ‘எப்படி எல்லாம் ஏமாற்றத் தொடங்கி விட்டார்கள் அப்போதே.. என்கிற பெருமூச்சுதான்..

ராஜ நடராஜன் said...

//ஹி ஹி பழைய ஞாபகங்கள் அருமையா இருக்கன்னே, அதுசரி இது என்ன சமூக அக்கறை பதிவு :-)//

அது நசரேயன்கிட்டேயிருந்து கடன் வாங்கியது:)அவர்தான் அத்தி பூத்தாற் போல ஒரு அரசியல் பதிவு போட்டு அதற்கு சமூக அக்கறை பதிவுன்னு விளம்பரம் போட்டார்.

ராஜ நடராஜன் said...

//ம்.. பழைய சரித்திரத்தை புரட்டிப்பார்க்கிறேன்.. ஹி..ஹி//

கிடைச்சா மேடைப் பேச்சுக்களையும் தேடுங்க பட்டு!

ராஜ நடராஜன் said...

தி.மு.க வின் விளம்பரம்
‘பக்த வத்சலக் குரங்கே! பதவிய விட்டு எறங்கே’
‘காமராஜர் அண்ணாச்சி! காப்பி வெல என்னாச்சி’
’பூவராகன் அண்ணாச்சி! பூவா துன்னு நாளாச்சி’
’வெற்றி எங்கள் லட்சியம்! படி அரிசி நிச்சயம்!’
‘நமது சின்னம் சூரியச் சின்னம்’
----------------------------------------------
தேர்தல் ஆணையத்தின் விளம்பரம்

மக்களாட்சிக்கு வாக்களிப்போம்,
மனசாட்சிப்படி வாக்களிப்போம்,
உங்கள் வாக்கு உங்கள் சக்தி,
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிட மிருந்தே தொடங்கட்டும்,
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்

எது சிறந்தது ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்!

Mahi_Granny said...

டயரி எழுதி அதிலிருந்து எழுதிய இடுகை போல் இவ்வளவு சரியாய் ஞாபகமாக எழுதியிருப்பதால் இது சமுக அக்கறை பதிவே தான்

ஈரோடு கதிர் said...

||டாப்பில்லாத ஜீப்பில் புகுந்து கை கூப்பியபடி வரும் கலாச்சாரமும் அப்போதுதான் பார்த்த கவனம்.||

நேத்து ஜே-வோட ஏசி கூண்டு பாத்தீங்க தானே!!! காலம் மாறிப்போச்சு, காட்சியும் மாறிப்போச்சு


ஆமா, அதென்ன
ஆத்தா, மொதலாளி எல்லாம் பின்னூட்டம்ஸ்!!!? எதும் கூட்டணியா? :)))

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...

ஆமா, அதென்ன
ஆத்தா||

அட... நாமளும் இருக்கிறோம்ன்னு அப்ப அப்ப தலையக் காட்டி சொல்லிக்கிறோம் கதிரு...

நசரேயன் said...

//கலகலப்ரியா said...
||ஈரோடு கதிர் said...

ஆமா, அதென்ன
ஆத்தா||

அட... நாமளும் இருக்கிறோம்ன்னு அப்ப அப்ப தலையக் காட்டி சொல்லிக்கிறோம் கதிரு...//

கடை வச்சி இருந்தா சரக்கு வச்சி விக்கணும்

Yoga.s.FR said...

இதுல என்னாத்த தேர்தலைப் பத்தி சொல்றது. ஆட்டோ வரும்னு பயப்படுறதா, உன் மூஞ்சிக்கு ஆட்டோ வேறையான்னு கிண்டலுக்கு பயப்படுறதா? எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி.))))))))))))))))):!!!!!!

ஸ்ரீராம். said...

அந்தக் கால தேர்தல் நினைவுகள்....படி அரிசியிலிருந்து எது வரை வந்திருக்கிறார்கள்...அடேங்கப்பா...

vasu balaji said...

@@ ரசனை மாறிப் போச்சுங்க. நேயர் விருப்பம் போட்டா என்னக் கிண்டிருவாங்க:))

vasu balaji said...

@@நன்றி பிரவு
@@ஆமாங்க செந்தில்:(
@@வாங்க பட்டா. ஆமாங்க:))
@@நன்றிங்க இரவு வானம். கடைசி வரில சொல்லிருக்கேன்ல. எலவசம்னு எதுவுமில்லாத தேர்தல் நடந்துச்சின்னு. அதான்.
@@சேட்டை:)) சமூகப் பருப்பை விடவா:))
@@வாங்க சேது. அப்போ நிஜமாவே விளைச்சல் இல்லை. அப்புறம்தான் பசுமைப் புரட்சி வந்தது.
@@அடடே!! வாங்க மொதலாளி. அன்புடன் ஆரூரன் மட்டும் வரமாட்டிங்குது:))

vasu balaji said...

@@ சில்லுவண்டு பாலாசி வர வர லொல்லு வண்டா மாறிட்டு வர.

vasu balaji said...

/கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு சாரே... சுவாரஸ்யமான எழுத்து நடை...//

வாம்மா. நன்றிம்மா.

vasu balaji said...

@@ தேர்தல் அக்கறையாதாங்க வருது. வேட்பாளருங்கதான் சுய அக்கறைல வராய்ங்க. நன்றிங்க சித்ரா.

@@வாங்க டாக்டர் பாலாஸ். ஆஹா இதுல இப்புடி ஒரு வில்லங்கம் இருக்கோ? இதுக்கே வயசாகிப் போச்சுன்னா கலைஞர என்னான்னு சொல்லுவீங்கன்னு நினைச்சா சிப்பு சிப்பா வருது:))

vasu balaji said...

@@ வாங்கண்ணா.
/சமூக அக்கக்கறைக்கு காரணம் வேறங்ணா. ஒரு பகடி:))
/கிடைச்சா மேடைப் பேச்சுக்களையும் தேடுங்க பட்டு!/

அவ்வ்வ். லுங்கி கட்டிக்கிட்டு வண்ணை ஸ்டெல்லான்னு ஒரு அம்முணி ம.போ.சி.க்கு சவால் விட்டுச்சு. அது என்னான்னு புரியாம ஒரு நண்பேண்ட கேக்கப் போய் என்னைய ஒரு புழுவப் பாக்குறாமாதிரி பார்த்தான்.

அட போங்கண்ணே ஒப்பிடுறதாவது.

vasu balaji said...

@@ரிஷபன். ஆஹா இது புது டெக்கினிக்கா இருக்கே.
@@நன்றிங்க மஹி க்ரானி
@@ அந்த கருமத்த நான் பாக்கலீங் மேயரே.

vasu balaji said...

நசரேயன் said...

// கடை வச்சி இருந்தா சரக்கு வச்சி விக்கணும்//

ம்கும். இவரு சூப்பர் மார்க்கட் தொறந்துட்டு ஒத்தை இடுகை போட்டுட்டு பூட்டிட்டு உக்காந்திருக்காரு. அட்வைசு:))

vasu balaji said...

@@நன்றிங்க யோகா
@@நன்றி ஸ்ரீராம்.

ரோஸ்விக் said...

கறை நல்லதுண்ணே... இந்த அக்கறை பதிவும்... :-)

vinthaimanithan said...

ஆத்தாடி, இருந்தாலும் மனுசனுக்கு இம்புட்டு சம்முவ அக்கற இருக்கப்பிடாதுய்யா. ஒடம்புக்கு ஆவாது :)

'பரிவை' சே.குமார் said...

நல்ல கிண்டல் சார்... பழசை ரசிக்க முடியுது.

கௌதமன் said...

அறுபத்தேழில் அண்ணாதுரை கூறிய உறுதிமொழி : 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி எங்கள் லட்சியம்; ஒரு படி நிச்சயம்'. தேர்தல் கோஷங்களில், காங்கிரஸ் மந்திரிகள் எல்லோரையுமே ஒரு பிடி பிடித்தார்கள் - 'கக்கா உனக்கு மக்கள் என்ன கொக்கா?' 'சர்க்கரை அண்ணாச்சி சர்க்கரை விலை என்னாச்சி?' 'ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?' இத்யாதி கோஷங்கள். எம் ஜி யார் கட்சி தொடங்கிய புதிதில் நான் புரசவாக்கம் சுந்தரம் பிள்ளைத் தெருவில் வாடகை வீட்டில் அண்ணனோடு தங்கியிருந்தேன். அப்பொழுது கூட்டம் ஆரம்பிக்குமுன்பு ஒரு கலை நிகழ்ச்சியில், ஒரு கோஷ்டி, மேரே சப்நோம்கி என்ற ஆராதனா படப் பாடல் மெட்டில் பாடிய, "இந்த நொள்ளைக்கண்ணன் ஆட்சியில நீதி இல்லே, நம்மை ஆளுகின்ற மந்திரிக்கு மூளையில்லே! சரியா, சீச்சீ முறையா" என்ற பாடல் இன்னமும் ஞாபகம் இருக்கின்றது! தேர்தல் பிரச்சார யுக்திகள் நாளுக்கு நாள் மெருகேறுகின்றுகினவா அல்லது மலிவானவை ஆகின்றனவா என்று பட்டிமன்றம் நடத்தலாம் என்று தோன்றுகிறது!

vasu balaji said...

@@நன்றி ராஜாராம்
@@நன்றி சே.குமார்
@@நன்றிங்க கவுதமன் சார். :)). சரியாச் சொன்னீங்க.

Paleo God said...

சார் சாமிப் படத்துல சத்தியம் வாங்கி ஓட்டுக்கேட்ட பகுத்தறிவுக் கதையெல்லாம் கேட்டு பேஸ்தடிச்சிப் போயிருக்கேன் :))

கலக்கிட்டீங்க! :)