Monday, February 23, 2009

மறக்க முடியுமா?

மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய கலைஞர் அவர்களுக்கு,

தமிழினக் காவலர் என்று உங்களைக் கொண்டாடும் தமிழ்க்குடியில் ஒரு குடி. என்னைப் போல் பலரின் மனதிலும் இந்த வருத்தம் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. சாதனையாளர் பட்டம் ஏற்க மறுத்துப் பின்பு வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்ட போதும் இலங்கை குறித்த உங்கள் ஆதங்கம், அந்த இயலாமை, ஏதாவது செய்ய வேண்டுமே என்ற வெளிப்பாடு, அதன் பிறகு சட்ட சபையில் தீர்மானம் என்ற நிகழ்சிகள் பிரமிக்க வைத்ததும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்ததும் உங்களைக் குறித்த பெருமிதம் நிஜம். அதன் பிறகு எங்கே காணாமல் போனீர்கள். எங்கு தொலைத்தீர்கள் கொள்கைக்காக வளைந்து கொடுக்கா உங்கள் தனித் தன்மையை.

நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில் வலுவான ஒரு அழுத்தமான வேண்டுகோள் ஆம் வேண்டுகோள் மட்டுமே போதும் இன்று எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கக் கூடும். கூட்டணித்தலைவர்களின் போக்கு குறித்து வருந்திய நீங்கள் அது சொன்ன செய்தியை ஏன் உணரவில்லை. உங்களோடு இணைந்து உங்கள் வழி காட்டுதலில் செயல் பட ஒப்புக்கொண்ட பிறகு தனியாக ஏதோ செய்கிறார்கள் என்றால் அது உங்கள் செயல்பாட்டில் அவர்களுக்கிருக்கும் நம்பகமற்ற தன்மையின் வெளிப்பாடு என்பது உங்களுக்கு புரியாமலா இருக்கும். அப்போதாவது நீங்கள் ஏன் ஒரு தீர்மானமான முடிவெடுக்க வில்லை. காங்கிரசின் குரலாக ஏன் மாறிப் போனீர்கள். மூலத்தை விட்டு வெளிப்பாட்டைக் கண்டிப்பதால் என்ன பயன்.

அங்கு நடக்கும் போராட்டம் நியாயமானதென்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் கேட்பதெல்லாம் என்ன. எங்களையும் சமமாக நடத்து. எங்களை இரண்டாம் தரக்குடிமகனாக நடத்த வேண்டாம் என்பது தானே? இதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும். ஆயுதம் காகிதம் என்றெல்லாம் பேசாமல், நாம் சொன்னால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யத் தயாராய் இருக்கும் ஒரு அதிபரிடம், அவர்கள் கேட்பது இது, இதில் உங்களுக்கென்ன பிரச்சினை, இல்லை என்றால் என்ன தர முடியும் (இதில் குறைத்து கொடுப்பது என்றாலே தமிழர்கள் அங்கு மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை என்று தானே அர்த்தம்) என்று கேட்டிருக்க முடியாதா? அடிப்படை உரிமைகள் வழங்கப்படும் என்ற உறுதி மொழி எத்தனை தடவை கிழித்தெறியப்பட்டது. இருந்தாலும் அப்படி ஒரு உறுதியை பெற நாம் என்ன செய்தோம். அது கிடைத்திருந்தால் போர் ஏன் தொடரப்போகிறது. அது கிடைக்கும் பட்சத்தில் ஆயுதத்திற்கு அவசியமென்ன. மக்களே எதிர்ப்பார்களே? என்னைப்போல் பாமரர்கள் பத்திரிகைகளைத் தானே பார்க்கிறோம். ஒரு நாள் ராடார் கொடுக்கிறோம் என்கிறார்கள். மற்றொரு நாள் டாங்கிகள் அனுப்புகிறோம் என்று புகைப்படம் வருகிறது. நீங்கள் ஏன் இது குறித்து எதுவும் சொல்வதில்லை. இவை உண்மை யிலை என்ற ஒரு உறுதியாவது ஏன் பெற‌ப்படவிலை. வங்காள தேசம் குறித்த ஒரு நேர்காணலில் இந்திரா அம்மையாரின் முகபாவம் பாருங்கள். வலை மனையில் இருக்கிறது. அந்த மனித நேயம் எங்கே? கலியாணம் விசாரிக்கிறார் போல் பூரிப்போடு அந்தக் கொலைகாரனின் கைகோர்த்த படி வந்த புகைப்படம் ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திட வில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

இந்த வரிகள் கவனமிருக்கிறதா ? ஆம்! மறக்க முடியுமா? உங்கள் கைவண்ணத்தில் உருவாகிய மறக்க முடியுமா படத்தின் பாடல். உலகத்தின் சோகமெல்லாம் ஒன்று திரட்டி எழுதிய பாடல். இப்படித்தானே எம்மினம் அங்கு தவிக்கிறது. இந்த நிலையிலும் மத்திய அரசை வாழ விடுங்கள் என்று எப்படி பேசுகிறீர்கள். நீங்கள் முன்னெடுத்தால் மொத்த தமிழினமும் உங்கள் பின் நிற்காதா? நீங்களுமா தமிழரை நம்பவில்லை. எங்களை விடுங்கள். நாளை உங்கள் கொளுப் பேரனோ பெயர்த்தியோ உங்கள் முன் நின்று பக்கத்துக் குழந்தை சொன்னது. உன் தாத்தா ஏதாவது செய்திருந்தால் ஈழத்தில் இன்று நம் போல் எத்தனையோ பேர் படித்துக் கொண்டிருப்பார்கள். செய்யவில்லை. அதனால் மடிந்து போனார்கள் என்று. நிஜமா என்று கேட்டால் கண் பார்த்து என்ன சொல்லுவீர்கள்.

இன்னும் உங்களில் எங்கள் நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா? இல்லை எனில்

கோலம் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் பூட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் தீர்த்து வதைக்கவும் செய்தான்.

ஆம் இதுவும் அதே பாடல்தான். தமிழரென்று யாராவது மீதமிருந்தால் இப்படித்தான் நின்று போவீர்கள்

இப்படிக்கு
பாமரன்


6 comments:

சக்(ங்)கடத்தார் said...

அதன் பிறகு எங்கே காணாமல் போனீர்கள். எங்கு தொலைத்தீர்கள் கொள்கைக்காக வளைந்து கொடுக்கா உங்கள் தனித் தன்மையை.//

ம்...இதெல்லாம் கலைஞ்சருக்கு அப்பப கனவிலை வாற விசயங்கள் பிள்ளையள்??
உதுகளைக் கண்டுக்கப் படாது??

சக்(ங்)கடத்தார் said...

ஒருக்கால் இரக்கப்பட்டுப் பாட்டெழுதுவார்? பிறகு இரங்கற்பா எழுதுவார் கலைஞர்? இந் நேரம் பிரபாகரனுக்குமிரங்கற்பா எழுத றெடியாகிடுவார் கலைஞர்??

அப்பு ராசா ஏன் உம்மடை பதிவைத் தமிழ் மணத்திலை இணைக்கக் கூடாதோ?

தமிழ் மணத்திலை இணைத்தால் நிறைய வாசகர்கள் வருவீனை?/
இந்த பக்கத்தைப் போய்ப் பாரும்? ஏதாவது உதவி தேவை எண்டால் கேளும்?? என்ன சுகமாய் இருக்கிறீரெ பாலா??? www.tamilmanam.net

vasu balaji said...

அது செரி. ஸ்விஸ் குளிர் இன்னும் விடலை போல பெருசுக்கு. தமிழ்மணப் பட்டை காணுதில்லை போல. நம்ம நலத்துக்கென்ன சக்கடத்தார். ஒண்ணும் பண்ண முடியாம கையை பிசைஞ்சி கொண்டு இவனுவள் அடிக்கிற கூத்தேல்லாம் காணேலாமல் எரிச்சலா வருது.

S.R.Rajasekaran said...

\\நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில் வலுவான ஒரு அழுத்தமான வேண்டுகோள் ஆம் வேண்டுகோள் மட்டுமே போதும் இன்று எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கக் கூடும். \\


தொடக்கத்தில் விட்ட எச்சரிக்கைன் படியே M.P களை ராஜினாமா செய்ய வைத்திருந்தால் கொஞ்சமாவது சூழ்நிலையின் வீரியம் புரிந்திருக்கும் .இப்போது மிரட்டினால் கூட யாரும் அசட்டை செய்வது இல்லை .கடிதம் மட்டும் தான் எழுத முடிகிறது

S.R.Rajasekaran said...

கூட்டணி தர்மத்தை மதிக்க தெரிந்த இவருக்கு கூட்டணி கொடுத்த மதிப்பு என்ன .அப்படி பட்ட கூட்டணியில் நீடிக்க வேண்டுமா .அந்த நாட்டு பெண்மணியே இங்கே வந்து அப்பாவிமக்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய பிறகும் நம்ம "ஜீ" க்கள் பழைய ரிக்கார்டு தட்டு மாதிரி புலம்புவதை பார்த்த பின்னுமா உங்களுக்கு புரியவில்லை அய்யா

ஜோதிஜி said...

மிக மிக அற்புதம். உங்கள் வயது கொடுத்த அனுபவத்தில் வடிக்க முடிந்த காவியம் இது. இது போல நானும் எழுதி வைத்து உள்ளேன். அது வெறும் ஆதங்கம் என்பதால் முதலில் நம் தங்கங்களை உள்வாங்கி விடுவோம் என்று அமைதி காத்து இருக்கின்றேன். வருகைக்கு நன்றி ஐயா.